1491-இல் இஸ்பானிய நாட்டின் குஸ் பிஸ்கோவா பகுதியிலுள்ள இலயோலா அரண்மனை இல்லத்தில் பிறந்து, 1556-இல் உரோமையில் இறந்த புனித இஞ்ஞாசியார் இயேசு சபையைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்தவர். வீர சாகசங்கள் செய்து, பெரும் புகழ் பெற்று அழகிய இளவரசியை மணந்து ஆடம்பரத்தில் வாழ விரும்பிய இனிகோ இளைஞனுக்கு, இறைவன் வேறொரு திட்டத்தை வெளிப்படுத்தினார்.
1521-இல் தனது
நாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பாம்பலூனா கோட்டையில் பிரெஞ்சுப் படைகளுக்கு எதிராகத் தீவிரமாகப் போர் புரிந்த போர்வீரன் இனிகோவின் காலை அணுகுண்டு துளைத்தது. குணமாகிக் கொண்டிருந்தபோது இயேசுவிற்காகப் பணிபுரியும் போர்வீரனாக இனி மாறவேண்டும் என்ற மனமாற்றம் அவருக்கு ஏற்பட்டது. அரண்மனை வாழ்வைத் துறந்து, ஆண்டியாகத் துறவு மேற்கொண்டு, கடுந்தவம் புரிந்து, ஆழ்ந்த செபத்திலே இறைத் திருவுளத்தைக் கண்டுகொண்டு, திரு அவை வழியாக அகில உலகிற்கும் பலதரப்பட்ட பணிகள் வழியாக இறை-மனிதப் பணி செய்திட இயேசு சபையை நிறுவி வழிநடத்தினார்.
திரு அவையின்
ஆன்மிகப்
புதையல்:
நீண்ட காலமாகத் தான் பெற்ற ஆழ்ந்த இறையனுபவத்தை எல்லாரோடும் பகிர்ந்துகொள்ள ‘ஆன்மிகப் பயிற்சிகள்’ என்ற
நூலை வடித்தெடுத்து பொதுநிலையினருக்கும் துறவறத்தாருக்கும் குருக்களுக்கும் இறைவழி காட்டிடும் ஆன்மிகப் புதையலை விட்டுச் சென்றிருக்கின்றார். இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகள் வழியாக மலர்ந்துள்ளதுதான் புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகம். திரு அவையை வழிநடத்திடும் பலவகையான ஆன்மிகங்களில் சிறப்பான ஆன்மிகமாக 500 ஆண்டுகளைக் கடந்தும் பயனுள்ளதாகச் செயல்பட்டு வருகின்றது.
இயேசு சபையாருக்கு
மட்டுமல்ல;
இறை
மக்களுக்கும்
உரிய
ஆன்மிகம்:
இஞ்ஞாசியார் ஆன்மிகம் என்றால் ஏதோ இயேசு சபையாருக்கு மட்டுமே உரித்தான ஆன்மிகம் என்று சிலர் நினைக்கின்றனர். மாறாக, இந்த ஆன்மிகம் திரு அவையில் இருப்போர் அனைவருக்கும் கொடையாகப் புனித இஞ்ஞாசியார் விட்டுச் சென்றுள்ளார். இந்த ஆன்மிகப் பயிற்சிகளைத் தொடக்க காலத்தில் பொதுநிலையினரிடம்தான் அதிகமாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். இன்றும் இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை ஒரு மாதம், எட்டு நாள், மூன்று நாள் தியானமாகப் பல துறவற சபையினரும்
குருக்களும், சில பொதுநிலையினரும் செய்து ஆன்மிகத்தில் வளர்ந்து வருகின்றனர். மேலும், மேற்கத்திய நாடுகளிலே பொதுநிலையினர் இந்த ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல், அவர்களே அதில் பாண்டித்தியம் பெற்று இந்த ஆன்மிகப் பயிற்சிகளை வழிநடத்தி வருவது பெருமைக்குரியதாக உள்ளது.
தியானத்திற்கு
மட்டுமல்ல,
வாழ்வுமுறை
வழி
காட்டியாகவும்:
இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளை வெறும் ஒரு தியானச் சூழலுக்குள் மட்டும் சுருக்கி வைத்துவிட முடியாது. கிறித்தவ வாழ்வை நெறிப்படுத்தும் ஒரு வாழ்வு முறையாக இவ்வான்மிகம் பார்க்கப்படுகின்றது. இயேசுவை, அவரின் வாழ்வை, பணியை, விழுமியங்களை மையமாகக் கொண்டுள்ள இவ்வான்மிகப் பயிற்சிகள் கிறித்தவ வாழ்வை, ஏன் மனித வாழ்வையே வழிநடத்தும் ஒரு வழிமுறையாக உள்ளது.
மரியன்னையின்
மகத்தான
பக்தர்:
இந்த இஞ்ஞாசியார் ஆன்மிகத்தில் கடந்த 54 ஆண்டுகள் வளர்ந்து வந்த இயேசு சபையாளன் என்ற முறையில் இவ்வான்மிகம் முன்வைக்கும் சில முக்கியமான பார்வைகளை, வழிமுறைகளை, அணுகுமுறைகளைக் கிறித்தவர் அனைவரின் நலன்களுக்காகவும், குடும்ப-குழும வாழ்வின் வளர்ச்சிக்காகவும் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
மனித வாழ்வின்
மூலக்கோட்பாடும்
முக்கியக்
குறிக்கோளும்:
தனது ஆன்மிகப் பயிற்சி நூலின் 23-வது எண்ணிலே மனித வாழ்வின் மூலக்கோட்பாட்டையும் முக்கியக் குறிக்கோளையும் பதிவுசெய்துள்ளார். “கடவுளாகிய நம் ஆண்டவரைப் போற்றவும் வணங்கவும் அவருக்குப் பணிபுரியவும், அவ்வாறு செய்வதன் வழியாக நமது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கும் மனிதர் படைக்கப்பட்டுள்ளனர்.” நம்மைப் படைத்து, பராமரித்து, வழிநடத்திடும் இறைவனைப் போற்றுவதும் வணங்குவதும் வெறும் வழிபாடுகளில், செபங்களில், சடங்குகளில் மட்டும் நின்றுவிடாது, அவை நமது வாழ்வில் பணியாகப் பரிணமிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்.
எனவே,
மனிதரின் நலனுக்காக உலகில் படைக்கப்பட்டுள்ளவற்றை இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்தான் மனிதர் பயன்படுத்த வேண்டுமே ஒழிய, தமது சுயநலத்திற்காகவோ, பிறரது வாழ்வை அடிமைப்படுத்தி, அவர்களது நலன்களைப் பறித்துக்கொண்டு சுகமாக வாழ்வதற்கோ அல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு மிகவும் தேவையான அகச்சுதந்திரத்தில் (holy
indifference or interior freedom) செயல்பட
அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய
முதலாளித்துவச் சூழலில், தேவைகளைவிட ஆடம்பர வசதிகளுக்காக வாழ நிர்ப்பந்திக்கும் நுகர்வுவெறிக் கலாச்சாரத்தில், அதற்காக எதையும் எவரையும் காவுகொடுத்திடத் துடித்திடும் இச்சூழலில், மனிதர் எல்லாரையும் படைப்புகள் அனைத்தையும் மாண்புடன் நடத்திடும் வாழ்வுக்கு இஞ்ஞாசியார் ஆன்மிகம் சவால் விடுக்கின்றது.
ஆண்டவரின் அதிமிகு
மாட்சிக்கே:
இயேசு சபை நிறுவனங்களிலும் இல்லங்களிலும் பணித் தளங்களிலும் ‘ஆண்டவரின் அதிமிகு மாட்சிக்கே’ (AMDG: Ad Maiorm Dei Gloriam) எனும்
இலட்சினையைக் காணலாம். எதைப் போதித்தாலும், எதைச் செய்தாலும், எங்குப் பணி செய்தாலும் அனைத்தையும் கடவுளின் மாட்சிக்காகத்தான் செய்ய வேண்டும் எனும் உயர் இலட்சியத்தோடு வாழ்ந்த புனித இஞ்ஞாசியார், தனது சபையும் அப்படித்தான் வாழவேண்டும் எனப் பணித்தவர். தான் வடிவமைத்துக் கொடுத்துள்ள ‘இயேசு சபை சட்டச் சாசனத்தில்’ இந்த
ஏ.எம்.டி.ஜி. எனும்
சொல்லாடல் ஏறக்குறைய இருநூறு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளதிலிருந்து
இந்த நோக்கத்திற்காக இஞ்ஞாசியார் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது தெளிவாகின்றது. உலகின் படைப்பையே கடவுளின் மாட்சியாகக் கண்ட புனித இஞ்ஞாசியார், உலகில் நடக்கும் அனைத்தும் கடவுளின் மாட்சிக்காக நடக்கவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.
கடவுளின்
திருவுளத்தை, திட்டத்தைத் தெளிந்து தேர்ந்துகொண்டு, அதன்படி வாழ்வதும், வாழ வைப்பதும்தான் ‘கடவுளின் மாட்சி’ என நம்பிச் செயல்பட்டவர்
இஞ்ஞாசியார். ஒட்டுமொத்தமாக, கடவுளின் மாட்சி என்பது, அவரது படைப்புகளும் மானிடரும் மாண்போடு வாழ்வதுதான். புனித ஐரேனியுஸ் மொழிந்தபடி ‘மனிதர்கள் நிறைவாக வாழ்வதுதான் கடவுளின் மாட்சி’ ஆகும்.
‘தான்’,
‘தனது’, ‘தமது’ என்று
அனைத்தையும் பயன்பாட்டுப் பார்வையோடு நடத்துவதும், எதைச் செய்தாலும் சுயபாராட்டிற்காகவும் சுயகௌரவத்திற்காகவும் தன்னை மட்டும் முன்னிறுத்திப் பெருமை பெறுவதற்காகவும் செயல்படும் இன்றைய சமுதாயத்தில், பிறரும் படைப்புகளும் மாண்போடு வாழ்வதுதான் கடவுளின் மாட்சி எனும் வேரோட்டமான பார்வையை வழங்குகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்னும் அதிகமாக:
கடவுளுக்காகப் பணிபுரிவதில், பிறருக்காக வாழ்வதில் ‘இன்னும் அதிகமாக’ (MAGIS) எனும்
போக்கோடு செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் ஆன்மிகம் வழிகாட்டுகின்றது. ‘போதும்’,
‘குறைந்த அளவு’,
‘இவ்வளவுதான்’ எனும்
சொல்லாடல்களுக்கு இஞ்ஞாசியாரின் வாழ்விலும் பணியிலும் அகராதியிலும் இடமே இல்லை. கணக்கிடாமல் கொடுத்திட, காயத்தைக் கவனியாது போரிட, ஓய்வைத் தேடாது உழைத்திடத் தூண்டுகின்றது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
குறைவாக
உழைத்துவிட்டு மிகுதியாக ஆடம்பர வாழ்க்கை வாழும் போக்குகள் அதிகரித்து வரும் இச்சமுதாயத்தில், அன்பிற்கு அணை போடாமல், பிறர் பணிக்கு வேலி போடாமல் இன்னும் அதிகமாக... இன்னும் அதிகமாக என்று அன்பு செய்ய வேண்டும், பணி செய்யவேண்டும் என அறைகூவல் விடுப்பது
இஞ்ஞாசியார் ஆன்மிகமாகும். கணக்குப் பார்த்து, கைம்மாறு கருதி, பயன்பாட்டுப் பார்வையில் (Utilitarianism) தனது
சாதி, தனது சொந்தங்கள், தனக்குப் பிடித்தவர்கள் என்று மட்டும் அன்பு செய்திடும் சுயநலச் சூழலில் இஞ்ஞாசியார் காட்டும் ‘இன்னும் அதிகமாக’ எனும் ஆன்மிகப் பார்வை, புதிய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கொண்டு வந்து, சமத்துவத் தோழமை இறையாட்சிச் சமுதாயமாகக் கட்டி எழுப்பிவிடும்.
தெளிந்து தேர்ந்திடல்
- தீர்க்கமாகத்
தீர்மானித்திடல்:
எதைச் செய்தாலும் அது கடவுளின் திருவுளத்தின் வழியாகத் தெரிந்து கொண்டுதான் செய்யவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் இஞ்ஞாசியார். நமது தனிப்பட்ட, குடும்ப, குழும வாழ்விற்கும், இன்னும் பணிவாழ்விற்கும் பொது வாழ்விற்கும் நமது விருப்பங்களும் ஆசைகளும் முக்கியமல்ல; கடவுள் எதை விரும்புகிறார்? எதைச் செய்யச் சொல்கின்றார்? என்பதை அறிந்திட ‘தெளிந்து தேர்ந்திடல்’ (Discernment) எனும் ஆன்மிகப் பயிற்சியை, உத்தியை, வழிமுறையை வழங்கியுள்ளார்.
ஒவ்வொரு
நாளும் நாம் பல தீர்மானங்களை எடுக்கின்றோம்,
அவை இறைத் திருவுளத்தால் தூண்டப்பட்டு எடுக்கின்றோமா? அல்லது நமது சுயநலங்களை முன்னிறுத்தி எடுக்கின்றோமா? என்பதை ஆய்வுசெய்து செயல்பட இஞ்ஞாசியார் வழங்கியுள்ள ‘தெளிந்து தேர்ந்திடல்’ வழிமுறை
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இன்று மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் இவரின் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு வருகின்றன. எப்போதுமே நல்லதைச் செய்யச் சொல்லும் கடவுளின் திருவுளம் நாடி நமது முடிவுகளை, தீர்மானங்களை எடுத்தால் அது நமது வாழ்வையும் பிறரது வாழ்வையும் மேம்படுத்தும்.
எல்லாவற்றிலும்
எல்லாரிடமும்
கடவுளைக்
கண்டிட:
உடல்-ஆன்மா, பொருள்-ஆவி என மானுடத்தைக் கூறுபடுத்திய
ஆன்மிகப் பார்வைகளின் மத்தியில் ‘கடவுளை எல்லாவற்றிலும் கண்டிட, எல்லாவற்றிலும் கடவுளைக் கண்டிட’ எனும் புதிய, நேர்மறையான, ஆக்கப்பூர்வமான பார்வையைத் தருகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். புனிதம் புனிதமற்றது, தூய்மையானது, தீட்டுப்பட்டது என்று உலகையும் மானுடத்தையும் கூறுபடுத்திப் பார்க்கையில், ஏற்றத்தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் பிளவுபடுத்துதலும் பிரித்தாளுவதும் ஆதிக்கப்போக்கும் அடிமைத்தனமும் போட்டி போட்டு மனித சமுதாயத்தைக் காயப்படுத்தி வருகின்றன.
இறைவன்
படைத்திட்ட அனைத்தும் புனிதமானது. அவை அனைத்திலும் ஆண்டவர் பிரசன்னமாய் உள்ளார். ‘கடவுளின் அன்பை அடைந்திட’
எனும் காட்சித் தியானத்தில் ‘இறைவன் அனைத்திலும் அன்பிற்காக உழைத்துக் கொண்டு இருக்கின்றார்’ என்று
நம்மை உணர்வுப்பூர்வமாக உணர வைக்கின்றார். மேலும், இந்தப் பார்வையானது படைப்பையும் படைப்புயிர்களையும் மதித்து, மாண்போடு நடத்த வழிவகுக்கின்றது. நம்மோடு பிரசன்னமாய் இருந்து அன்புசெய்து கொண்டிருக்கின்ற கடவுளைப் போல, நாமும் பிறரது வாழ்வில் பிரசன்னமாக இருந்து அன்புசெய்திடத் தூண்டுகின்றது.
அனைவருக்கும்
துணை
நின்றிடும்
இஞ்ஞாசியார்
ஆன்மிகம்:
படைப்பாற்றலோடு நேர்மறையாக ஆக்கமுடன் வாழ்ந்திட வழிகாட்டும் இஞ்ஞாசியார் ஆன்மிகம் இயேசு சபையினருக்கும் துறவிகளுக்கும் குருக்களுக்கும் உரியன மட்டுமல்ல; ஒவ்வொரு கிறித்தவருக்கும் உரிய ஆன்மிகச் சொத்தாகும். பெரும்பாலும் நான்கு சுவர்களுக்குள் வாழப்பட்ட துறவற வாழ்வை மக்களை, சூழலை மையமாக வைத்து வாழவேண்டிய திருத்தூதுத் துறவாக மாற்றியுள்ளதில் இஞ்ஞாசியார் ஆன்மிகத்திற்குப் பெரும் பங்கு உள்ளதைத் திரு அவையில் யாரும் மறுக்க முடியாது.
மனித
வாழ்வின் மூலக்கோட்பாடு, முக்கியக் குறிக்கோள், ஆண்டவரின் அதிமிகு மாட்சி, இன்னும் அதிகமாக, எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பது போன்ற பார்வைகளை உள்ளடக்கியுள்ள இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் இன்று எல்லாக் கிறித்தவருக்கும் தேவையான ஒன்று. லூத்தர் கொணர்ந்த எதிர்ப்பு கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம் திரு அவையை வெகுவாகப் பாதித்துப் பிளவுபடுத்திய சூழலில், மாற்று மறுமலர்ச்சி இயக்கத்தை வளர்த்தெடுத்து, கத்தோலிக்கத் திரு அவையின் தூணாகத் தானும் தனது சபையும் தீவிரமாகச் செயல்பட உந்தித் தள்ளியுள்ளது இஞ்ஞாசியாரின் ஆன்மிகம்.
இன்றைய
சூழல்களில் நாம் சந்திக்கும் சவால்கள், போராட்டங்கள், மானிட உரிமை காத்திடச் சந்திக்கும் நெருக்கடிகள் மத்தியில் நீதி நிறைந்த சமத்துவம் போற்றிடும் இறையாட்சிச் சமுதாயமாக வாழ்ந்திட உதவுகின்றது இஞ்ஞாசியார் ஆன்மிகம். இயேசுவின்
உண்மையான சீடர்களாக உருவெடுத்திட இஞ்ஞாசியாரின் ஆன்மிகம் அனைத்துக் கிறித்தவர்கட்கும் துணை நிற்கும் எனும் எதிர்நோக்கில் தொடர்ந்து வாழ்ந்திடுவோம்.
இஞ்ஞாசியார்
ஆன்மிகம் அறிந்திடுவோம், இயேசுவின் உண்மைச் சீடராய் மலர்ந்திடுவோம்!
படைத்தான் படைப்பை மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்க’ என்பது முதுமொழி. இறைவன் உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்பதில் கிறித்தவர்களாகிய நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இருக்க இயலாது. ஏனெனில், திருவிவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்கநூலின் முதலிரு அதிகாரங்கள் இறைவன் எப்படி விண்ணையும் மண்ணையும், அதில் உள்ள யாவற்றையும் படைத்தார் என விளக்கிக் கூறுகின்றன. அப்படைப்புகளில் மனிதப் படைப்பானது தனித்துவமானதுதான். எனவேதான் தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் குருத்துவ மரபு படைப்புகளுக்கு மணிமுடியாக மனிதப் படைப்பை அமைக்கின்றது (தொநூ 1:26,27).
அதே
நூலின் இரண்டாம் அதிகாரத்தில் இறைவனது படைப்பை விவரிக்கும் யாவே மரபு, படைப்புகளுக்கெல்லாம் முதன்மையாக, சிகரமாக அல்லது தலைமையாக மனிதப் படைப்பை விளக்குகின்றது (தொநூ 2:7). மனிதப் படைப்பு வெறும் உயிருள்ள படைப்பு மட்டுமல்ல; இறைவன் மனிதரைத் தமது சாயலிலும் உருவிலும் படைத்தார் (தொநூ 1:26,27). ஆகவே,
மனித வாழ்வு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது இறைவனின் அரிய, மதிப்புமிக்க, புனிதமான கொடை. எனவே, ஒவ்வோர் உயிரும் மதிப்புக்குரியது, மாண்புக்குரியது மட்டுமல்ல; எல்லா உயிர்களையும் பொறுப்புடனும் சமத்துவத்துவத்துடனும் பேணி, அன்பு செய்து, பாதுகாக்கவேண்டியது தனது கடமை என்பதை மனிதப் படைப்பு உணர்ந்துகொள்ளவேண்டும்.
இன்றைய
உலகில் போர்கள், வன்முறைகள், கருக்கலைப்பு, முதியோர் புறக்கணிப்பு, சுற்றுச்சூழல் அழிவு, சாதி-சமய வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவை மனித வாழ்வின் மதிப்பைக் குறைக்கும் நிலையை உருவாக்கியுள்ளன. இத்தகைய சூழலில் திருவிவிலியம் ஒவ்வொரு மனித உயிரும் இறைவனுக்கு மதிப்புமிக்கது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மனித வாழ்வை மதிப்பதும் காப்பதும் வளர்ப்பதும் ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரின் கடமையாகும்.
1. படைப்பின் மேன்மை
இறைவனின்
படைப்புச் செயலை விவரிக்கும் தொடக்க நூல், ஒவ்வொரு படைப்பையும் படைத்த பிறகு ‘அது நன்று’ என்று கடவுள் கூறுவதாக அமைக்கிறது. ஆறு நாள்கள் நடைபெறும் படைப்புப் பணிகளில் ஏழு முறைகள் கடவுள் ‘நன்று’
(தொநூ
1:4,10,12,18,21,25,31) என்று
கூறும் சொல் இடம்பெறுகின்றது. ஆனால், ஆறாம் நாள் மனிதரைப் படைத்த பிறகு, படைப்பின் முழுமையை மற்றும் நிறைவைக் கண்ட இறைவன் ‘மிகவும் நன்று’ என்று கூறுவதாகத் தொடக்க நூல் கூறுகின்றது. இறைவனின் இக்கூற்று மனிதரின் மேன்மையையும் மாண்பையும் எடுத்துரைக்கிறது.
மனிதர்
இறைவனின் சாயலைத் தாங்கியவராக இருப்பதால் அவரை இன ரீதியாக, மொழி
ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக மட்டும் நாம் கூறுபோட்டுப் பார்ப்பதை விடுத்து, இவ்வுலகில் இறைவனைப் பிரதிபலிப்பவராகவும், இறைவனது பதிலாளாகவும் மனிதரைப் பார்ப்பது சிறப்பு. எனவே, எந்த மனிதரையும் இழிவாகக் கருதுவது இறைவனின் படைப்பை அவமதிப்பதாகும். தொடக்க நூல் 2:7-இல், “ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ‘உண்டாகுக!’ என்ற உடனே அவை படைப்புகளாக உருமாறிவிட்டன. ஆனால், மனிதனைப் படைத்த போது மட்டும் இறைவன் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவர் வடிவமைத்த அம்மனித உருவத்தின் நாசிகளில் தமது உயிர்மூச்சை ஊதி, அவனைச் சிறப்பான விதத்தில் படைக்கின்றார். இதனால் மனித வாழ்வு இறைவனிடமிருந்து வரும் கொடை. மனித உயிர் என்பது மனிதனின் தனித்துவமான சொத்து அல்ல; அது இறைவன் மனிதனுக்கு வழங்கிய அரும்பெரும் கொடை. இறைவன் மனிதருக்கு வழங்கிய கிடைத்தற்கரிய வரம்.
2. மனித வாழ்வு இறைவனின்
கொடை
ஒவ்வொரு
மனித வாழ்வும் இறைவனின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மனிதன் பிறப்பதற்கு முன்பே இறைவன் அவரை அறிந்திருக்கிறார். “என் தாயின் கருவிலே எனக்கு உரு தந்தவர் நீரே”
(திபா 139:13) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர். மனித வாழ்வின் தொடக்கம் முதல் இறைவனின் படைப்பாற்றல் மிக்க அன்பு செயல்படுகிறது என்பதைத் திருப்பாடல் ஆசிரியரின் இக்கூற்று உணர்த்துகிறது. கருவிலுள்ள குழந்தையும் இறைவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எண்ணப்பட வேண்டும். எனவே, மனித வாழ்வை அது கருவாக உருப்பெற்றது முதல் அதன்பின் உலகில் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து, மூப்பு எய்தி மண்ணுக்குத் திரும்பும்வரை மதிக்கவேண்டும். இறைவாக்கினர் எரேமியா அழைக்கப்பட்டபோது இறைவன் பின்வருமாறு கூறுகிறார்: “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன்” (எரே
1:5). இதன் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட அழைப்பும் நோக்கமும் இருப்பதை அறிகிறோம்.
3. மனிதன் இறைவனின் சாயல்
இறைவனின்
சாயலில் படைக்கப்பட்ட மனிதனின் மாண்பை யாராலும் அழிக்க முடியாது. இந்த மாண்பு பாலினம், வயது, சாதி, சமூகம், உடல்நிலை, கல்வி, செல்வம் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை. இயேசு தாம் வாழ்ந்த காலத்தில் எல்லா மனிதர்களையும் சமமாக மதித்தார். அவர் ஏழைகளை, பெண்களை, குழந்தைகளை, உடல்நலமற்றோரை, பாவிகளாகக் கருதப்பட்டவர்களை, வரிதண்டுவோரை, சமாரியர்களை அன்போடு ஏற்றுக்கொண்டார். “ஏழைகளே பேறு பெற்றோர்”
(லூக் 6:20) என்று அவர் கூறியபோது, ஏழைகள்பால் அவருக்கு இருந்த அக்கறையை நாம் அறிய முடிந்தது. பாவிப்பெண் ஒருவர் தமது காலடிகளில் நறுமணத்தைலம் பூசியதில் குறை கண்ட பரிசேயரான சீமோனிடம் அப்பெண் தம்மீது கொண்டிருந்த அன்பின் பெருமை குறித்துப் பேசியபோது (லூக் 7:37-47), பெண்கள்பால் அவருக்கு இருந்த மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்; அவர்களைத்
தடுக்காதீர்கள்\"
(மாற் 10:14) என்று அவர் கூறியபோது பச்சிளங் குழந்தைகளின் மாண்பை அவர் பேணும் தன்மையை நம்மால் உணர முடிந்தது. ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்கு வெளியே சூம்பிய கையுடன் நின்றுகொண்டிருந்த உடல் நலமற்ற ஒருவரை அழைத்துத் தொழுகைக்கூடத்தின் “நடுவே வந்து நில்” என்று கூறி அவரைக் குணப்படுத்தியபோது (லூக் 6:6-8), உடல் நலமற்றோரின்மீது அவருக்கு இருந்த கரிசனையை நாம் அறியமுடிந்தது. பாவியும் வரிதண்டுவோருமான சக்கேயுவின் வீட்டில் தங்க விரும்புவதாக இயேசு கூறியபோது (லூக் 19:1-10) பாவிகளான வரிதண்டுபவரோடு உறவு கொள்வதில் அவருக்கு இருந்த விருப்பத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது. இவ்வாறு சமூகத்தில் கீழ்நிலையில் இருந்த எல்லாரிடமும் இயேசு இறைவனின் சாயலைக் கண்டார் என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.
4. மனித உயிர் புனிதமானது
மனித
உயிரின் தொடக்கம் என்பது இறைவனின் மூச்சுக்காற்றே (தொநூ 2:7). இறைவனின் மூச்சுக்காற்றை உள்வாங்கியதும் மனிதன் உயிர் பெறுகிறான்; செயல்படுகிறான்; நடமாடுகிறான். மனிதனுக்கு உயிர் தந்து, அவனைச் செயல்பட வைப்பது இறைவனே. ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது நாம் அறிந்த முதுமொழி. இறைவனே மனித வாழ்வின் உயிராக, மனித வாழ்விற்கு மூச்சாக இருப்பதால் மனித உயிர் புனிதமானது. எனவே, மனித உயிருக்கான அதிகாரமும் பொறுப்பும் இறைவனிடமே உள்ளன. இந்தச் சிந்தனையின் பின்னணியில்தான் தொடக்கத்தில் மனிதன் உள்பட உயிரினங்கள் அனைத்தும் செடி, கொடிகள், தாவரங்கள் இவற்றின் கனிகளை உண்டதையும் (தொநூ 1:29), காயினின் முதல் இரத்தப்பலி மற்றும் பெருவெள்ளம் ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் இரத்தம் தவிர்த்து உயிரினங்கள் அனைத்தையும் இறைவன் மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் உணவாகக் கொடுத்ததையும் (தொநூ 9:3-4) நாம் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
உயிரினங்களின்
இரத்தத்தில் இறைவனின் மூச்சுக்காற்று இருப்பதாகத் தொடக்க காலத்தில் யூதர்கள் எண்ணியதால் இரத்தத்தை உண்ணலாகாது என்று வலியுறுத்தினர். “கொலை செய்யாதே”
(விப 20:13) என்பது மோசேயின் பத்துக் கட்டளைகளில் ஒன்று. இதன் அடிப்படையில், ஒருவரது உயிரை இன்னொருவர் பறிக்கவும் ஒருவரது உயிரை அவரே மாய்த்துக் கொள்ளவும் உரிமை இல்லை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
5. அன்பு மனித வாழ்வின்
அடித்தளம்
மனித
வாழ்வை நாம் மதிக்கவேண்டும் என்பதற்கான அடிப்படை நோக்கம் அன்பே ஆகும். மிகப்பெரிய கட்டளைகளாக இயேசு தமது போதனையின்போது வலியுறுத்தியது, “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து... உன்மீது நீ அன்பு கூர்வதுபோல
உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக”
(மத் 22:37-39) என்பதே. யூதர்களைப் பொறுத்தமட்டில் ‘அடுத்திருப்பவர்’ என்றால்
அது மற்றொரு யூதரைத்தான் குறிக்கும். ஆனால், இயேசுவைப் பொறுத்தமட்டில் அடுத்திருப்பவர் யார் என்பதை நல்ல சமாரியர் உவமை (லூக் 10:25-37) வழியாகத் தெளிவுபடுத்துகின்றார். சாலையோரத்தில் காயமடைந்திருந்த மனிதனை உதாசீனப்படுத்தாமல் உதவி செய்த சமாரியரே காயப்பட்டவருக்கு அடுத்திருப்பவர் என்று நல்ல சமாரியர் உவமையில் இயேசு கூறியதன் வழியாக, யூதருக்கு ஒரு சமாரியர் அடுத்திருப்பவராக இருக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றார்.
‘அப்பா, நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல்வேண்டும்’ என்றார்
வடலூர் வள்ளலார். ‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பு இல்லாதவர்களுடைய உடம்பு எலும்பின்மேல் தோலைப் போர்த்தி வைத்துள்ளதற்குச் சமம் என்பது இதன் பொருள்.
கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்தில், “நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலை சிறந்தது”
(1கொரி 13:13) என்கிறார் திருத்தூதர் பவுல். நாம் அன்பு செய்ய வேண்டியவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்ல; உலகில் உள்ள எல்லா மனிதர்கள் உள்பட அனைத்துப் படைப்புகளும் நம்மால் அன்பு செய்யப்பட வேண்டியவையே. இன்று நாம் தேவையில் உள்ள ஒவ்வொரு படைப்புக்கும் நமது உதவிக்கரங்களை நீட்டும்போது, மனித வாழ்வையும் இறைவனின் ஒவ்வொரு படைப்பையும் நாம் மதிக்கிறோம் என்பது பொருள்.
6. இன்றைய காலத்தில் மனித
வாழ்வை
மதிப்பதற்கான
நடைமுறைகள்
எவை?
இன்றைய
சமூகத்தில் மனித வாழ்வின் மதிப்பை வெளிப்படுத்த பல வழிகள் உள்ளன:
• சாதி, சமயம், மொழி, பாலின வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துதல்.
• கருவிலுள்ள குழந்தை முதல் முதியோர் வரை ஒவ்வோர் உயிரையும் மதித்தல்.
• ஏழைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலமற்றோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோருக்கு உதவுதல்.
• குடும்பத்தில் அன்பு, பரிவு, ஒற்றுமை, சமத்துவம், நட்புறவு மற்றும் மன்னிப்பு போன்ற இறையாட்சியின் விழுமியங்களை வளர்த்தெடுத்தல்.
• வன்முறையையும் வெறுப்பையும் தவிர்த்து, அமைதியைக் குடும்பங்களில், சமூகங்களில், ஊர்களில் நிலைநாட்ட முயற்சி செய்தல்.
• இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் மூலம் இறைவனின் படைப்பை மதித்தல் மற்றும் பல்லினப் பெருக்கத்திற்குத் துணை நிற்றல்.
• சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடுதல்.
முடிவுரை
மனித
வாழ்வு இறைவனின் அரிய கொடை. ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்களாக இருப்பதால் மனித உயிர்களின் மாண்பை யாராலும் அழிக்க இயலாது. அன்பு, இரக்கம், நீதி, சமத்துவம், மன்னிப்பு மற்றும் சேவை ஆகியவற்றின் வழியாக மனித வாழ்வை மதிக்க நாம் அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் போதனைகளும் ஒவ்வொரு மனிதரையும் அன்போடு ஏற்றுக்கொண்டு, அவர்களின் வாழ்வை உயர்த்தவேண்டும் என்பதை நமக்குக் கற்றுத்தருகின்றன.
மனித
உயிரைக் காப்பதும், வலிமை குன்றியவர்களைத் தாங்குவதும், படைப்பைப் பாதுகாப்பதும் இறைவனுக்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும். எனவே, ஒவ்வொரு மனித உயிரையும் இறைவனின் விலைமதிப்பற்ற கொடையாக ஏற்று, மதித்து, அன்பு செய்து, பொறுப்புணர்வுடன் வாழ்வோம். அப்போதுதான் இறைவனின் படைப்பின் மேன்மையை நம் வாழ்வில் வெளிப்படுத்த முடியும். உலகமும் மனிதநேயத்தாலும் இறையன்பாலும் புதுப்பிக்கப்படும்.
கானாவூர் திருமண நிகழ்வில் மரியாவின் வேண்டுகோளானது, அவரது மகனுடைய மீட்புப் பணியின் தொடக்கத்தில் அவர் எவ்வாறெல்லாம் ஒத்துழைக்கின்றார் என்பதற்கான மாதிரியாகும். மேலும், அந்நிகழ்வானது இயேசுவில் நம்பிக்கை கொள்வதில் அவரே முதன்மையானவர் என்பதையும் காட்டுகின்றது.
1. இயேசுவின்
பொதுவாழ்வில் மரியாவின் உடனிருப்பை விவரிக்கும் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது கானாவூரில் இயேசுவின் முதல் புதுமையின்போது அவர் எங்ஙனம் தன்னையே தனது மகனின் பணியில் ஈடுபடுத்திக்கொண்டார் என்பதையும் நினைவுகூர்கின்றது: “கலிலேயா நாட்டின் கானாவில் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டுகின்றார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 58). நற்செய்தியாளர் யோவானைப் பின்பற்றி, ஒரு தாய் தன் வார்த்தைகளால் தமது மகனை அவரது ‘முதல் அடையாளத்தை’ செய்யும்படி
வற்புறுத்தும்போது, அவரது விவேகமான மற்றும் பயனுள்ள பங்கை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் சுட்டிக்காட்டுகிறது. அவரது செல்வாக்கு விவேகமானதாகவும் தாய்மையுள்ளதாகவும் இருந்தாலும், அவரது பிரசன்னம் தீர்க்கமானதாக அமைகிறது.
மரியா
தன் வார்த்தைகளால்
தமது மகனை அவரது முதல் அருளடையாளத்தைச் செய்யும்படி வலியுறுத்தினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, நற்செய்தியாளர் யோவானைத் தொடர்ந்து இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவினுடைய அறிவுகூர்ந்த மற்றும் பயனுள்ள பங்கைச் சுட்டிக்காட்டுகின்றது. மரியாவினுடைய செல்வாக்கு விவேகம் மற்றும் தாயன்பு சார்ந்தது என்றாலும், அவருடைய உடனிருப்பானது தீர்க்கமானது என்பதையே இது நமக்கு
உணர்த்துகின்றது.
தாயன்பால் என்ன
செய்ய
முடியும்
என்பதை
மரியா
காட்டுகின்றார்
யூதச்
சமூகத்தில் பெண்களின் தாழ்ந்த நிலையைக் கருத்தில் கொண்டால், புனித கன்னி மரியாவின் இந்த முயற்சி இன்னும் வியப்பளிக்கிறது. உண்மையில், கானாவூர் திருமண நிகழ்வில் இயேசு பெண் ஆளுமைகளின் மாண்பு மற்றும் அவர்களுடைய பங்களிப்பை மட்டும் அங்கீகரிக்கவில்லை; தமது தாயின் பரிந்துரையை ஏற்பதன் வழியாக அவர் தமது மீட்புப் பணியில் அவரும் பங்கேற்பதற்கானதொரு வாய்ப்பைத் தருகிறார். ‘பெண்’
(யோவா 2:4) என்று இயேசு மரியாவை அழைக்கும் அடைமொழியானது, அவருடைய நோக்கத்திற்கு முரணானது அல்ல; உண்மையில் ‘பெண்’ என்னும் இவ்வார்த்தையில் எதிர்மறையான அர்த்தங்கள் எதுவும் இல்லை. சிலுவையின் அடியில் அவருடைய தாய் மரியா நிற்கும்போதும் அவரை அழைப்பதற்கு இதே சொல்லாடலைத்தான் அவர் பயன்படுத்துகின்றார் (யோவா 19:26). சில திருவிவிலிய விளக்கவுரைகளின்படி ‘பெண்’ என்று மரியாவை அழைக்கும் சொல்லாடலானது, அவரைப் புதிய ஏவாளாக, அதாவது அனைத்து நம்பிக்கையாளர்களின் தாயாக முன்வைக்கிறது.
நாம்
மேற்குறிப்பிட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டில் திருச்சங்கமானது ‘இரக்கத்தினால் உந்தப்பட்டு’ என்னும்
சொற்றொடரைப் பயன்படுத்துகின்றது. இதிலிருந்து அவ்விடத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போனதைக் கேள்வியுற்று, மரியா தனது இரக்கமுள்ள இதயத்தால் தூண்டப்பட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள திருச்சங்கம் நமக்கு உதவுகின்றது. திராட்சை இரசம் தீர்ந்து போனதால் புதுமணத் தம்பதியினருக்கும் விருந்தினர்களுக்கும் ஏற்படவிருந்த ஏமாற்றத்தை உணர்ந்த புனித கன்னி மரியா, இயேசுவிடம் அவரது மீட்பளிக்கும் வல்லமையைக் கொண்டு இக்குறையைத் தீர்க்குமாறு இரக்கத்துடன் பரிந்துரைக்கின்றார்.
சிலருக்கு
மரியாவின் வேண்டுகோள் வரம்பு மீறியதாகத் தோன்றலாம்; ஏனெனில், அது மீட்பரது புதுமைகளின் தொடக்கத்தை ஒரு தாய் பக்தி செயலுக்காகப் பின்னுக்குத் தள்ளுகிறது. இயேசுவே இந்தச் சிக்கலைக் கையாண்டார்; தம் தாயின் வேண்டுகோளுக்குச் சம்மதித்ததன் மூலம், மனித எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிப்பதில் ஆண்டவரின் அளவற்ற அருளை அவர் வெளிப்படுத்தினார். மேலும், ஒரு தாயின் அன்பால் என்ன செய்ய முடியும் என்பதையும் விளக்கினார்.
2. இங்கு
யோவானின் நற்செய்தியிலிருந்து திருச்சங்கம் எடுத்துக் கையாண்டுள்ள ‘அவரது புதுமைகளின் தொடக்கம்’
என்ற வார்த்தைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் பயன்படுத்தப்படும் ‘தொடக்கத்தில்’ என்ற
கிரேக்க வார்த்தையான ‘arche’ என்பதை யோவான்
தனது நற்செய்தியின் முன்னுரையில் (Prologue) பயன்படுத்துகிறார்:
“தொடக்கத்தில் வாக்கு இருந்தது”
(யோவா 1:1). இந்தக் குறிப்பிடத்தக்க ஒற்றுமையானது, கிறிஸ்துவின் எல்லையற்ற மாட்சிமையின் மூலத்திற்கும், அவரது பூவுலகப்
பணியில் அதே மாட்சிமையின் முதல் வெளிப்பாட்டிற்கும் இடையே ஓர் இணையைச் சுட்டிக்காட்டுகிறது.
தமது
முதல் புதுமையில் மரியாவின் முன் முயற்சியை வலியுறுத்துவதன் மூலமும், பின்னர் கல்வாரியில் சிலுவையின் அடியில் அவர் இருந்ததை நினைவுகூர்வதன் மூலமும், கிறிஸ்துவின் பணி முழுவதிலும் மரியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள நற்செய்தியாளர் நமக்கு உதவுகிறார். கன்னி மரியாவின் வேண்டுகோளானது, தெய்வீகமான மீட்புத் திட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது.
இயேசு
செய்த முதல் அடையாளத்தில், திரு அவைத் தந்தையர் ஒரு முக்கியமான குறியீட்டுப் பரிமாணத்தைக் கண்டனர்; தண்ணீர் திராட்சை இரசமாக மாறுவதை, பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்கு மாறுவதற்கான அறிவிப்பாக அவர்கள் கண்டனர். கானாவூர் திருமண விருந்தில், யூதர்களின் தூய்மையாக்கலுக்காகவும், சட்டக் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவும் (மத் 7:1-15) ஒதுக்கப்பட்டிருந்த குடங்களில் இருந்த தண்ணீரே, திருமண விருந்தின் புதிய திராட்சை இரசமாக மாறுகிறது; அது கடவுளுக்கும், மனிதகுலத்திற்கும் இடையிலான உறுதியான ஒன்றிப்பின் சின்னமாகும்.
3. இயேசு
தமது முதல் அற்புதத்திற்காகத் தேர்ந்தெடுத்த திருமண விருந்தின் சூழலானது, பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கும், அவருடைய மக்களுக்கும் இடையேயான உடன்படிக்கையைக் குறிக்கவும் (ஓசே 2:21; எரே 2: 1-8; திபா 44, இன்னும் பல), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவிற்கும் திரு அவைக்கும் இடையேயான ஒன்றிப்பைக் குறிக்கவும் (யோவா 3: 28-30; எபே 5: 25-32; திவெ 21:1-2, இன்னும் பல) அடிக்கடிப் பயன்படுத்தப்படும் திருமணக் குறியீட்டைக் குறிக்கிறது. கானாவூரில் இயேசுவின் உடனிருப்பு, திருமணத்திற்கான கடவுளின் மீட்புத்திட்டத்தின் ஓர் அடையாளமாகவும் விளங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், திராட்சை இரசம் இல்லாததை எதிர்பாராத விதமாகத் திருமண உறவுகளை அடிக்கடி அச்சுறுத்தும் அன்பின் பற்றாக்குறையின் ஒரு குறிப்பாகப் புரிந்துகொள்ளலாம். கடவுளை அடிப்படையாகக் கொண்ட அன்பினால் மட்டுமே துரோகம், தவறான புரிதல் மற்றும் பிரிவினை ஆகிய ஆபத்துகளிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய அனைத்துத் திருமணமான தம்பதியினருக்காகவும் தலையிடுமாறு மரியா இயேசுவிடம் வேண்டுகிறார். திருவருளடையாளத்தின் அருள், தம்பதியினருக்கு அன்பின் இந்த மேலான வலிமையை வழங்குகிறது; இது வாழ்வின் கடினமான சூழ்நிலைகளிலும்கூட, நம்பிக்கையில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலுப்படுத்த வல்லது.
திரு அவையின்
நம்பிக்கை
பயணத்தை
மரியா
தொடங்கி
வைக்கின்றார்
கிறித்தவ
எழுத்தாளர்களின் விளக்கத்தின்படி, கானாவூரில் நடந்த அற்புதமானது ஆழமான நற்கருணைப் பொருளையும் கொண்டுள்ளது. யூதர்களின் பாஸ்கா பண்டிகைக் காலத்திற்கு அருகில் இந்த அற்புதத்தைச் செய்வதன் மூலம் (யோவா 2:13) இயேசு அப்பங்களைப் பெருகச் செய்ததைப் போலவே (யோவா 6:4) உண்மையான பாஸ்கா விருந்தான நற்கருணைக்கு ஏற்பாடு செய்யவேண்டியதற்கான தமது நோக்கத்தை இங்கு வெளிப்படுத்துகின்றார். கானாவூர் திருமணத்தில் அவரது விருப்பம், புதிய உடன்படிக்கையின் இரத்தத்தைக் குறிக்கும் திராட்சை இரசத்தின் பிரசன்னத்தாலும், ஒரு விருந்தின் சூழலாலும் மேலும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.
இவ்வாறு,
திருமணக் கொண்டாட்டத்தில் இயேசுவின் பிரசன்னத்திற்குக் காரணமாக இருந்த பிறகு, உயிர்த்தெழுந்த தம் மகன் சீடர்களிடையே பிரசன்னமாக இருப்பதன் உன்னத அடையாளமான நற்கருணையை முன்னறிவிக்கும் புதிய திராட்சை இரசத்தின் அற்புதத்தை மரியா பெறுகிறார்.
4. தமது
தெய்வீக மகன்மீது ஆண்டவரின் அன்னை கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால் சாத்தியமான இயேசுவின் முதல் அற்புதத்தின் விவரிப்பின் முடிவில், நற்செய்தியாளர் யோவான் இவ்வாறு முடிக்கிறார்: “அவருடைய சீடர்களும் அவரிடம் நம்பிக்கை கொண்டார்கள்” (யோவா
2:11). இவ்வாறு, கானாவூர் திருமண நிகழ்வில் அவருடைய சீடர்கள் மற்றும் ஊழியர்களின் கவனத்தைக் கிறிஸ்துவின் பக்கம் திருப்பி, மரியா திரு அவையின் நம்பிக்கை பயணத்தைத் தொடங்கி வைக்கின்றார்.
மரியாவின்
தளராத பரிந்துரையானது, சில சமயங்களில் ‘இறைவனின் மௌனம்’ என்ற அனுபவத்தை எதிர்கொள்பவர்களையும் ஊக்குவிக்கிறது. எல்லா நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டு நம்பிக்கை வைக்குமாறும், எப்போதும் ஆண்டவரின் நன்மையில் நம்பிக்கை வைக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மூலம்:
John Paul II,
Mary is active in her son’s mission, in «L’Osservatore Romano», Weekly Edition
in English, 12 March 1997, p. 7.
அன்றிரவு ஆண்டிரோபோலிஸ் நகரிலேயே தங்கி அங்கு முகாமிட்டிருந்த மற்ற வணிகர்களுடன் மறுநாள் அதிகாலை புறப்பட்டு, தங்கள் பயணத்தைத் தொடர தோமாவும் ஹப்பானும் திட்டமிட்டனர். கடல் பயணத்தைத் தொடர விரும்பிய இருவரும் அன்றிரவு அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், அன்றுதான் திருமணம் மூலம் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய மணமகனும் மணமகளும் அன்றிரவு உறக்கமற்றுப் போனார்கள். ஆம், அன்று அந்த இளம் தம்பதியரின் இல்வாழ்வின் மனநிலை, தோமாவின் போதனையால் மாற்றம் கண்டுகொண்டிருந்தது.
மறுநாள்
காலைப்பொழுது புலர்ந்து, சூரியன் தன் ஒளியை மண்ணில் பாய்ச்சத் தொடங்கிய நேரம். தம்பதியர் இருவருமே அரசனைச் சந்தித்தனர். இளவரசியையும், அவள் கணவனையும் கண்ட மாத்திரத்தில் அரசன் மனத்தில் ஏதோ உணர்ந்தான். புதுத்தம்பதியருக்குள்ள மகிழ்ச்சி அவர்கள் முகத்தில் தென்படவில்லை. குழப்பத்தோடு அவர்களை நோக்கினான். “என்ன மகளே?” என்று பாசத்தோடு வினவியவனிடம், இருவரும் கூறிய பதிலால் அவன் சினத்தின் உச்சிக்கே போனான்.
தம்பதியர்
இருவரும் தணிந்த குரலில், “அரசே, சினம் கொள்ளவேண்டாம். நாங்கள் இருவரும் மணத்துறவு வாழ்வைத் தொடர விரும்புகிறோம். இதன்மூலம் கடவுளை மாட்சிமைப்படுத்த ஆசிக்கிறோம்” என்றனர்.
“கடவுளா? எந்தக் கடவுள்? அயல் நாட்டு மனிதன் அறிமுகப்படுத்திய கடவுளா?” என்று சீறினான் அரசன். கோபம் அடங்காதவனாய் தன் வீரர்களை அழைத்து, “வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் அந்த மந்திரவாதியை எங்கிருந்தாலும் உயிரோடு பிடித்து வாருங்கள்; நானே அவனைத் தண்டிக்கிறேன்” என்று
அவன் உத்தரவிட, வீரர்கள் அந்நகர் மற்றும் கடலோரப் பகுதிகளில் தோமாவை வலைவீசித் தேடினர். எங்குத் தேடியும் தோமா கிடைக்காததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அன்று
அதிகாலையிலேயே ஆண்டிரோபோலிஸ் பகுதியிலிருந்து புறப்பட்டிருந்த தோமாவின் பயணக்கப்பல் கடலுக்குள் வெகுதூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
ஆண்டிரோபோலிஸ்
நகரிலிருந்து புறப்பட்ட தோமாவும் ஹப்பானும் அரேபியத் தீபகற்பத்தில் சொகோட்டிரா என்ற தீவை அடைந்து கப்பல் பயணத்திற்கு ஏதுவான பருவநிலை மாற்றத்திற்காகக் காத்திருந்தனர். சுமூகமான சூழலில் அங்கிருந்து பயணித்த தோமா, சிந்து நதிக்கருகில் உள்ள பட்டாலா என்ற துறைமுக ஊரில் சில காலம் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டாலாவுக்கு ‘டாடா துறைமுகம்’
என்றொரு பெயரும் இருந்தது. சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமா நற்செய்தி போதித்ததற்கான ஆதாரமாகச் சொல்லப்படுகிறது தூமா பகத் (Thomas The Saint) என்ற
சபையினரைப் பற்றிய குறிப்புகள். பிரிவினை சபை கிறித்தவர்களான இவர்கள் புனித தோமாவைப் பின்பற்றியவர்களாகக் கருதப்பட்டனர். புனித மத்தேயு நற்செய்தி நூலையே பயன்படுத்தியதோடு, கிறித்தவச் சடங்குமுறைகள் பலவற்றைக் கடைப்பிடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சிந்து சமவெளிப் பகுதிகளில் தோமாவின் போதனைக்குப் பின்னர் இச்சபை உருவெடுத்ததால் தோமா இப்பகுதியில் தங்கியுள்ளது தெரியவருகிறது.
சிந்து
சமவெளிப் பகுதியிலிருந்து புறப்பட்ட இருவரும் கப்பலில் பயணித்து அட்டோக் என்ற ஊரின் கரையை வந்தடைந்தனர். கடல்வழி முடிவுற்ற நிலையில், 40 மைல்கள் நடந்து தென்கிழக்குப் பகுதியில் இந்தோ-பார்த்திய தேசத்தின் தலைநகராக விளங்கிய தட்சசீலத்திற்குள் வணிகர் ஹப்பானுடன் வருகை தந்தார் தோமா.
கி.மு. 138-ஆம் ஆண்டில் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளைப் பார்த்தியர்கள் ஆண்டனர். அவர்களின் முதல் அரசர் முதலாம் மித்ரிடேட்டஸ் என்பவர், காலப்போக்கில் அரசுகள் கைமாறிப் போய் இந்தோ-சிந்தியர்கள் வசம் ஆட்சி இருந்தபோது, கி.மு. 19-ஆம்
ஆண்டில் ஈரான் நாட்டு வம்சாவளியைச் சார்ந்த முதலாம் கொண்டோபரஸ் என்ற அரசர் சிந்தியர்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்று அரகோஷியா, செயிஸ்டான், சிந்து, பஞ்சாப், காபூல் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய இந்தோ-பார்த்தியா நாட்டை உருவாக்கித் தன்னை அரசருக்கெல்லாம் அரசராக அறிவித்துக் கொண்டார்.
அவருடைய
வழித்தோன்றலாக நான்காம் தலைமுறை அரசரான கொண்டோபரஸ் சாசஸ் என்பவரே தோமா வருகையின்போது தட்சசீலத்தைத் தலைநகராகக் கொண்டு பார்த்தியாவை ஆண்டு கொண்டிருந்தார். நான்காம் கொண்டோபரஸ் ஆட்சி கி.பி. 20-லிருந்து
கி.பி.50 ஆண்டுக்குள் நீடித்திருந்ததாகக் கருதப்படுகிறது.
சார்லஸ்
மேசன் என்ற ஆங்கிலேய தொல்லியல் ஆய்வு நிபுணர், 1834-ஆம் ஆண்டு தன் தொல்லியல் ஆய்வில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பக்ராம் என்ற இடத்தில் முதன்முதலாகக் கொண்டோபரஸ் பெயர்கள் பொறித்த நாணயங்களைக் கண்டுபிடித்தார். அங்கே பல இடங்களில் நாணயங்கள்
கிடைத்தன. இக்கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாக 1854-ஆம் ஆண்டு ஜெனரல் கன்னிங்காம் என்பவர் தன் ஆய்வுநூலில் காபூல், காந்தகார், செயிஸ் டான், மேற்கு மற்றும் தெற்கு பஞ்சாப் பகுதிகளில் அரசரின் பெயர்களும் உருவங்களும் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
1857-இல் பாகிஸ்தானின்
பெஷாவர் நகரின் வடகிழக்கில் கிடைக்கப்பெற்ற தாக்த்-இ-பாகி கல்வெட்டுகளிலும்
நாணயங்களிலும் அவ்விதமே அரசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் பெரும் பதவி வகித்து வந்த அவர் உறவினர்கள் பெயர்களும் உருவங்களும் பொறித்த நாணயங்களும் கிடைத்தன. இவையனைத்திலும் எழுத்துகள் இந்திய பாலி மொழியிலேயே இருந்தன.
பார்த்தியா
தேசத்தின் தலைநகராய் விளங்கிய தட்சசீலம் இன்றைய பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரிலிருந்து வடமேற்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. சமஸ்கிருத மொழியில் பண்டைய தட்சசீலம் நகரத்தை ‘தக்சசீலா’
என்றும், பாலி மொழியில் ‘தக்கசிலா’
என்றும் அழைப்பர். தட்சசீலம் நகரத்தில் கி.மு. 3,360 ஆண்டுகளுக்கு
முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
தட்சசீலத்தின் பெருமையைப் பற்றிக் கூற வேண்டுமானால், பண்டைக் காலத்தில் அங்கு நிறுவப்பட்டிருந்த பல்கலைக்கழகம் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வந்த ஆரியர்களின் குடியேற்றம் முதலில் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில்தான் நடந்தது. இந்துகள் வேதநூல்களின் கல்வி மையமாகத் திகழ்ந்த இப்பகுதியிலுள்ள தட்சசீல நகர் பல்கலைக்கழகத்தில் இளவரசர்கள் மற்றும் பிராமணர்கள் கல்வி பயில அனுப்பப்பட்டனர். தத்துவம், மொழி இலக்கியம், அறிவியல், மூலிகை மருத்துவம் முதலான பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
(தொடரும்)
தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ்நாடு-புதுவை ஆயர் பேரவைத் தலைவர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தொடக்க உரை
இறை
இயேசுவில் அன்பார்ந்த ஆயர் பெருமக்களே, அருள்தந்தையரே, துறவியரே, இறைமக்களே! தமிழ்நாடு மேய்ப்புப்பணிப் பேரவையின் இன்றைய இந்த முக்கியமான உரையாடலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன்.
திரு
அவை என்பது கட்டடங்களின் கூட்டுத் தொகுப்போ, நிறுவனங்களின் கூட்டமைப்போ அல்ல; அது மனிதர்கள் இணைந்து பயணிக்கும் இறைமக்களின் சமூகம். நம்பிக்கையில் ஒன்றுபட்டு, இறையாட்சியை நோக்கிப் பயணிக்கும் திருப்பயணிகளின் குடும்பம். வத்திக்கானின் ஏடு ‘Ad Gentes’ உணர்த்துவது
போல, இந்தப் பயணத்தில் நமது இன்றைய காலகட்டத்தின் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் நம்பிக்கைகளையும் ஏமாற்றங்களையும் குறிப்பாக, ஏழையர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை அனுபவங்களையும் முன்னிறுத்துவது நமது அழைப்பாகும். இந்த அழைப்பின் பார்வையில், நமது இந்த ஆண்டின் மேய்ப்புப்பணிப் பேரவையின் மையக்கருத்தாகத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு, ‘ஏழையரை
முன்னிறுத்தும்
திரு
அவை.’
இன்று நமது சிந்தனையை அறிமுகப்படுத்தும் வகையில் ஐந்து அடிப்படையான கேள்விகளை இந்தத் தொடக்க உரையில் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
1. ‘ஏழையரை முன்னிறுத்துதல்’- பணம் வைத்திருப்பவர்களுக்கு
எதிரான
நிலைப்பாடா?
ஏழையருக்கான
நிலைப்பாட்டைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அடிக்கடி எழும் கேள்விதான் இது. ‘ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை’ என்று நாம் கூறும்போது, திரு அவை செல்வந்தர்களை ஒதுக்குகிறதா? அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறதா? இதற்கான திரு அவையின் பதில் மிகவும் தெளிவானது: ‘இல்லை,
ஏழையரின்
சார்புநிலை,
பணம்
வைத்திருப்பவர்களுக்கு
எதிரான
பாகுபாடு
ஆகாது.’
திரு
அவை யாரையும் புறக்கணிப்பதில்லை. இறைவனின் அன்பு அனைவருக்கும் சமமானது. ஏழையராயினும் செல்வந்தராயினும் ஒவ்வொருவரும் இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். மனிதர்கள் எல்லாருமே புனித வாழ்விற்கும் மீட்பிற்கும் அழைக்கப்பட்டவர்கள். அப்படியானால், ஏன் திரு அவை ஏழையருக்கு முன்னுரிமை அளிக்கிறது?
அன்பார்ந்தவர்களே,
இங்குதான் நாம் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணரவேண்டும். திரு அவை வறுமையை உயர்த்திப் பேசுவதில்லை; வறுமையால் காயமடைந்த மனிதனை உயர்த்திப் பிடிக்கிறது. மனித மாண்பைச் சிதைக்கும் ஏழ்மை ஒருபோதும் இறைவனின் விருப்பமல்ல; ஆனால், அந்த ஏழ்மையால் மனித மாண்பை இழந்து வாழும் சகோதரர்-சகோதரிகளின் பக்கம் நிற்பதே திரு அவையின் அழைப்பாகும்.
எனவே,
திரு அவையின் சார்புத்தன்மை வறுமைக்கு
அல்ல;
வறியவர்களுக்கே.
இன்றைய
சமூக,
அரசியல்,
பொருளாதாரக்
காரணங்களால்,
வறுமையின்
பிடியில்
சிக்கியிருப்போரை
விடுதலை
செய்வதே
திரு
அவையின்
மறைப்பணி.
வறுமையைப் போதிக்க அல்ல; வறுமையிலிருந்து மனிதரை விடுவிக்கவே திரு அவை செயல்படுகிறது.
நற்செய்தி போதிக்கும்
ஏழ்மை
மற்றும் சமூகத்தில்
நிலவும்
ஏழ்மை
இரண்டும் ஒன்றல்ல. Gospel poverty is different from the reality of
poverty. Gospel\'s poverty is liberating, chosen out of free will. Poverty as a
social reality is dehumanising and forced by systematic violence and
indifference. We don\'t spiritualise poverty. We stand for the liberation of the
poor.
ஏழையரின் சார்புநிலையும்
முன்னுரிமையும், மற்றவர்களை ஒதுக்கும் மனப்பான்மை அல்ல; காயமடைந்தவர்களை முதலில் அணுகும் இறையன்பின் வெளிப்பாடு.
• 99 ஆடுகளைப் பாலைநிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போன ஓர் ஆட்டைத் தேடிச்செல்லும் நல்லாயனின் தேடல்.
•
அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர், முதலில் ஆபத்தான நிலையில் இருப்போருக்குச் சிகிச்சை அளிப்பது போல, மனித மாண்பும் வாழ்வுரிமையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பவர்களைத் திரு அவை முன்னிலைப்படுத்துகின்றது.
• இது பாகுபாடு அல்ல; நீதியின் அழைப்பு. இது ஒருதலைப்பட்சம் அல்ல; இறைஇரக்கத்தின் மொழி.
மனித
மாண்பு மறுக்கப்பட்ட இடத்தில் இறைவனின் அன்பு முதலில் சென்றடையவேண்டும் என்ற நற்செய்தியின் பார்வையை வாழ்வாக்கத் துடிக்கும் தேர்வு. The preferential option for the poor simply acknowledges a painful
reality: those who suffer deprivation, exclusion, injustice and marginalisation
require greater attention because their human dignity is more vulnerable.
இன்று
உலகம் வளர்ச்சியைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது. தொழில்நுட்பமும் பொருளாதாரமும் அறிவியல் தொலைத்தொடர்பு கண்டுபிடிப்புகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதேநேரத்தில், மனித சமூகத்தின் சரிபாதி அதாவது 50 விழுக்காடு மக்கள் இன்னும் பசியில், தனிமையில், அநீதியில், ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர்.
இந்த
அப்பட்டமான முரண்பாட்டைக் கண்டும் அமைதியாய் இருக்கத் திரு அவை மறுக்கின்றது. ஆகையால், ஏழையரை முன்னிறுத்துதல் என்பது நமது சமூக அக்கறை சார்ந்த நிலைப்பாடு மட்டுமல்ல, நமது நம்பிக்கையின் உயிர்த்துடிப்பும் கூட. “மிகவும் சிறியவர்களில் ஒருவருக்குச் செய்ததை எனக்கே செய்தீர்கள்” என்று
ஆண்டவர் இயேசு அறிவித்த நற்செய்தியை தினசரி வாழ்வியலில் செயல்படுத்தும் வழியாகும்.
2. திரு அவையின் ஏழையருக்கான
சார்பு
நிலைக்கு
அடித்தளம்
என்ன?
ஏழையரை
முன்னிறுத்தும் திரு அவையின் நிலைப் பாட்டிற்கு உறுதியான அடித்தளங்கள்:
• இறைவார்த்தையின் ஒளி,
• வறியவரின் முன்னேற்றத்திற்கான திரு அவையின் வரலாற்று சார்பு நிலை,
• கத்தோலிக்கச் சமூகப் போதனை
திரு
அவையின் வரலாறும், சமூகப் போதனையும்தான். The Church\'s
preferential option for the poor is rooted in God\'s saving love revealed
throughout Scripture, especially in the life and mission of Jesus Christ. It is
reflected in the witness of the early Christian community, developed by the
Church Fathers, and affirmed by Catholic social teaching. More than a social
concern, it is a Gospel imperative that places the dignity of the poor at the
heart of the Church\'s mission.
திருவிவிலியத்தில்
இறைவனின் சிறப்பான பாதுகாப்பிற்கு உரிய மக்களுக்கு என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு: அனாவிம்! (Anawim). யார்
இந்த அனாவிம்? கைம்பெண்கள், அனாதைகள், புலம் பெயர்ந்தோர், ஒடுக்கப்பட்டோர், உரிமையற்றோர் ஆகியோரே இறைவனின் அனாவிம். தமக்கு நீதி கிடைக்க வழியில்லாதவர்களின் நீதியாக இறைவன் நிற்கிறார். இந்த இறையன்பின் உச்ச வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது. தமது பொதுப்பணியைத் தொடங்கியபோது இயேசு அறிவித்த முதல் அறிவிப்பு இதுவே: “ஆண்டவரின் ஆவி
என்மேல்
உள்ளது;
ஏழைகளுக்கு
நற்செய்தியை
அறிவிக்க
அவர்
என்னை
அருள்பொழிவு
செய்துள்ளார்” (லூக்
4:18).
இயேசு
அரண்மனையில் பிறக்கவில்லை; எளிமையான தொழுவத்தில் பிறந்தார். அதிகார மையங்களில் வாழவில்லை; சாதாரண மக்களிடையே வாழ்ந்தார். சமூகம் விலக்கி வைத்த தொழு நோயாளியைத் தொட்டார். ‘பாவி’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களை அரவணைத்தார். பெண்களின் மாண்பைக் காத்தார். ஒதுக்கப்பட்டவர்களோடு உணவருந்தினார். சமூகம் மறுத்தவர்களுக்குள் இறைவனின் பிள்ளைகளைக் கண்டார். எனவே, ஏழையருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது இயேசுவின் பணிவாழ்வு முறையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
இந்த
நற்செய்திப் பார்வையைத் திரு அவை இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தனது சமூகப் போதனைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த நூற்றாண்டில், ‘Rerum Novarum’ முதல் ‘Laudato Si’ வரை,
அண்மையில் வெளிவந்த Magnificas Humanitas-லும்
கூட மனித மாண்பைப் பாதுகாப்பதும், ஏழையருக்கு நீதியை நிலைநாட்டுவதும் திரு அவையின் மறைப்பணியாகவே வலியுறுத்தப்படுகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் நமக்கு நினைவூட்டுகிறார்: “ஏழையருக்கான முன்னுரிமை
என்பது
சமூக,
அரசியல்
அல்லது
பொருளாதாரக்
கருத்தியல்
சார்ந்த
முடிவு
அல்ல;
அது
நமக்கு
அனைத்திற்கும்
மேலாக
ஓர்
இறையியல்
தேர்வு.”
அதாவது, இந்த முன்னுரிமை திரு அவையின் தன்னிச்சையான தேர்வு அல்ல; இறைவன் திரு அவைக்கு வகுத்த மறைப்பணியின் அடித்தளம். இப்போது நாம் மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்பவேண்டும்.
3. ஏழையருக்கான திரு அவையின்
தேர்வு
வெறும்
சமூகச்
சேவையா?
நிச்சயமாக
இல்லை. தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம்; சமூகச் சேவை முக்கியம்தான். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவரைப் பராமரிப்பதும், கல்வியற்றவருக்குக் கல்வி வழங்குவதும் கிறித்தவ அன்பின் வெளிப்பாடுகள். இவை அனைத்தும் தமிழ்நாடு திரு அவையின் மறைப்பணியின் அங்கம்தான். இவற்றை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனால்,
திரு அவை பேசும் ‘ஏழையரை முன்
னிறுத்தும்
தேர்வு’ அதைவிட
ஆழமானது. இது உதவி செய்வதற்கான செயல்முறை மட்டுமல்ல; நமது சமூகத்தை ஆராய்ந்து பார்க்க உதவும் புதிய பார்வை. ஏழையரின் கண்களைக் கொண்டு உலகைப் பார்க்கவும், அவர்களின் அனுபவங்களின் வழியே சமூகத்தின் உண்மைகளைப் புரிந்துகொள்ளவும் இது நம்மை அழைக்கிறது.
ஏழையருக்கான திரு
அவையின்
தேர்வு
வறுமையின் விளைவுகளைக் குறைப்பது மட்டும் அல்ல; வறுமையை உருவாக்கும் காரணிகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது. The Option for the Poor is a call to question the systematic
poverty that makes the rich richer and the poor poorer.
The Poor
are not objects of charity but subjects of their liberation. மேலும்
ஏழையர் இரக்கத்தின் பெறுநர்களாக மட்டும் இருக்கக்கூடாது. The poor are not just beneficiaries of our Charity programs. They
are active partners of our mission. அவர்கள்
திரு அவையின் வாழ்விலும், முடிவெடுப்பிலும், மறைப்பணியிலும் பங்குபெறும் சகோதர-சகோதரிகளாக மதிக்கப்படவேண்டும். ஏழைகள் நமது மறைப்பணியின் இலக்கு
அல்ல; அவர்கள் நமது துணைப் பயணிகள்
என்பதை Dilexit Te-இல்
திருத்தந்தை லியோ தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
ஏழையரின்
குரல் நமது பங்குகளில் ஒலிக்க வேண்டும்; அவர்களின் அனுபவம் நமது மேய்ப்புப் பணித் திட்டங்களை வடிவமைக்கவேண்டும்; அவர்களின் நம்பிக்கை நமது நம்பிக்கையை வளப்படுத்தவேண்டும். உண்மையில், ஏழையருக்கு நாம் நற்செய்தியை எடுத்துச்செல்கிறோம்
என்று நினைக்கிறோம். ஆனால், பல நேரங்களில், நற்செய்தியை
வாழ்ந்து காட்டுவது அவர்கள்தான். குறைவான வசதிகளோடு அதிக நம்பிக்கையுடன் வாழும் அவர்களிடமிருந்து, இறைவனை முழுமையாக நம்புவது எப்படி என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஆகவே, ஏழையரை முன்னிறுத்துதல் என்பது ‘அவர்களுக்காக’ செயல்படுவது
மட்டுமல்ல; ‘அவர்களோடு’
இணைந்து நடப்பதுமாகும்.
4. ஏழையருக்கான முன்னுரிமை நமது
மேய்ப்புப்பணியில்
எவ்வாறு
வெளிப்படவேண்டும்?
அன்பிற்குரியவர்களே,
ஏழையரை முன்னிறுத்தும் இந்த அழைப்பு அழகான கருத்தாக மட்டுமே இருந்துவிட்டால், அது நற்செய்தியின் ஆற்றலை இழந்துவிடும். ஏழையருக்கான
திரு
அவையின்
தேர்வு
நமது ஆவணங்களில் மட்டுமல்ல, நமது வாழ்விலும் மேய்ப்புப்பணியிலும் ஆளுமையிலும் வெளிப்படவேண்டும். எனவே, இந்தப் பேரவையில் நமது தமிழ்நாடு திரு அவை தன்னைத்தானே சில நேர்மையான கேள்விகளால் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
• நமது பங்குகளில் ஏழையர் உண்மையாகவே வரவேற்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தத் திரு அவை ‘தங்களை முன்னிறுத்தும் தங்களுடைய சொந்தக் குடும்பம்’
என்று உணர்கிறார்களா?
• நமது கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் விளிம்பு நிலைகளில் வாழும் குழந்தைகளுக்குப் போதிய இடமும் முன்னுரிமையும் இருக்கின்றதா? அல்லது கல்வி என்பது வசதி படைத்தவர்களின் உரிமையாக மட்டும் மாறிவிட்டதா?
• நமது பள்ளிகளின் தரத்தை எவ்வாறு தீர்மானிக்கின்றோம்? ‘எத்தனை பேர் நூற்றுக்கு நூறு வாங்கினார்கள்?’ என்ற எண்ணிக்கையை வைத்தா? அல்லது ‘எனது பள்ளி எத்தனை ஏழை மாணவரை உருவாக்கி, வளர்ச்சியின் பாதைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது?’ என்ற கேள்வியை வைத்தா?
• நமது மருத்துவ மற்றும் சமூகநல நிறுவனங்கள் தேவையில் இருக்கும் ஏழையரை முன்னிறுத்து கிறதா?
• நமது மேய்ப்புப்பணித் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உண்மையில் மாற்றுகின்றனவா? அல்லது பங்கு, மறைவட்ட, மறைமாவட்ட நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை மட்டுமே அதிகரிக்கின்றனவா?
இவை
வெறும் நிர்வாகக் கேள்விகள் அல்ல; நமது திரு அவையின் சாட்சிய வாழ்வை மதிப்பீடு செய்யும் ஆன்மிகக் கேள்விகள்.
• ஏழையரை முன்னிறுத்தும் திரு அவை என்பது உதவிகளை வழங்கும் திரு அவை மட்டுமல்ல; மனித மாண்பை மீட்டெடுக்கும் திரு அவை.
• அது தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும்.
• பெண்களின் மாண்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்.
• தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நீதிக்கான போராட்டத்தில் துணையாக நிற்கும்.
• புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்நியர்களாக அல்ல, சகோதர-சகோதரிகளாக வர வேற்கும்.
• மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள், தனிமையில் வாழ்பவர்கள் ஆகியோருக்கு அவர்கள் திரு அவையின் விளிம்பில் அல்ல, இதயத்தில் இருக்கிறார்கள் என்ற உணர்வை அளிக்கும்.
• மனித மாண்பு புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் சார்பாக நிற்கும்.
• வேலைவாய்ப்பிற்காகப் போராடும் இளையோருக்கும், எதிர்காலம் குறித்து அச்சத்தோடு வாழும் குடும்பங்களுக்கும் நம்பிக்கையின் துணையாக இருக்கும்.
இவ்வாறு
மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கிறிஸ்துவின் கரங்களாக மாறுவதே நமது மேய்ப்புப்பணியின் நோக்கமாக இருக்கவேண்டும். எனவே, நமது வெற்றி எத்தனை நிகழ்ச்சிகளை நடத்தினோம் என்பதில் இல்லை; எத்தனை வறியோர் கிறிஸ்துவின் அன்பை நமது வழியாக அனுபவித்தனர் என்பதில்தான் உள்ளது.
5. இன்றைய தமிழ்நாடு திரு
அவைக்கு
இந்த
‘ஏழையருக்கான
முன்னுரிமை’ அழைப்பின் பொருள்
என்ன?
தமிழ்நாடு
பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம். ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கத்தையும் நாம் காண வேண்டியுள்ளது.
• இன்றும் கடன் சுமையால் துன்புறும் விவசாயிகள் இருக்கிறார்கள்.
• வேலைவாய்ப்பின்றி எண்ணற்ற இளையோர் இருக்கிறார்கள்.
• கடலின் நிலையற்ற தன்மையோடு போராடும் மீனவக் குடும்பங்கள் இருக்கின்றன.
• புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உழைக்கிறார்கள்.
• தலித் மற்றும் பழங்குடியின மக்கள் இன்னும் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிலை தொடர்கிறது.
• பெண்களுக்கு எதிரான வன்முறையும் பாகுபாடும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
• முதியோர் பலர் தனிமையில் வாழ்கிறார்கள்.
• போதைப்பழக்கம் ஏராளமான இளையோரின் எதிர்காலத்தைப் பறித்துக்கொண்டிருக்கிறது.
• சுற்றுச்சூழல் சீரழிவு, காலநிலை மாற்றம், இயற்கை வளங்களின் அழிவு ஆகியவை ஏழை மக்களின் வாழ்வை மேலும் பாதிக்கின்றன.
இந்தச்
சூழலில், நமது திரு அவை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ்நாட்டின் திரு அவை கல்வி, மருத்துவம், சமூகநலம் ஆகிய துறைகளில் நூற்றாண்டுகளாக மகத்தான சேவையாற்றியுள்ளது. எண்ணற்ற மறைப்பணியாளர்கள், ஆயர்கள், அருள்தந்தையர், துறவியர், பொதுநிலையினர் தங்கள் வாழ்வையே இந்தப் பணிக்காக அர்ப்பணித்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நாம் நன்றியுடன் தலைவணங்குகிறோம். ஆனால், இன்று இறைவன் நம்மை இன்னும் ஆழமான மாற்றத்திற்கு அழைக்கிறார்.
• ஏழையருக்காகச் சில திட்டங்களைச் செய்வதற்கு மட்டுமல்ல; ஏழையரோடு சேர்ந்து நடப்பதற்கு.
• அவர்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டுமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதற்கு.
• அவர்களுக்காக முடிவெடுப்பதற்கு மட்டுமல்ல; அவர்களையும் முடிவெடுக்கும் பயணத்தில் பங்காளிகளாக மாற்றுவதற்கு.
இதுவே
நமது ‘ஒன்றிணைந்து பயணிக்கும்
திரு
அவை’ என்ற
கனவின் மையக்கருத்தாகும். எனவே, நமது மறைமாவட்டங்கள், பங்குகள், அன்பியங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகப்பணிக் கழகங்கள், இயக்கங்கள், பக்த சபைகள் அனைத்தும் ஒரே மனத்துடன் இந்தப் புதுப்பிப்புப் பயணத்தில் இணையவேண்டும்.
முடிவுரை
நமது
சிந்தனையை ஒரு முக்கியமான உண்மை யோடு நிறைவு செய்ய விரும்புகிறேன். ஏழையரை முன்னிறுத்தும் தேர்வு என்பது, இறுதியில் கிறிஸ்து வையே முன்னிறுத்தும் தேர்வாகும். புனித பவுல் கூறுகிறார்: “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளை நீங்கள் அறிவீர்கள். அவர் செல்வராக இருந்தும், உங்களுக்காக ஏழையானார்; அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வந்தராவதற்காக” (2கொரி
8:9).
நாம்
ஏழையரின் கண்ணீரைத் துடைக்கும் ஒவ்வொரு முறையும், கிறிஸ்துவின் முகத்தைத் தொடுகிறோம். ஒடுக்கப்பட்டோரின் மாண்பை மீட்டெடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், இறையாட்சியின் மதிப்புகளை உலகிற்கு அறிவிக்கிறோம். நம்பிக்கை இழந்தோருக்கு எதிர்நோக்கை அளிக்கும் ஒவ்வொரு செயலிலும், உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியைப் பிரதிபலிக்கிறோம். எனவே, இந்த மேய்ப்புப்பணிப் பேரவை வெறும் கலந்துரையாடலுக்கான அரங்கமாக மட்டும் இருக்கக்கூடாது. இது நமது திரு அவையின் மனமாற்றத்திற்கான ஒரு திருப்புமுனையாக அமையவேண்டும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
‘வெற்றி’ என்ற ஒரு வார்த்தையைக் கேட்டாலே போதும்; நம் கண்முன் பளிங்கு தட்டுகளும், கைத்தட்டல்களும், முதலிடப் பட்டியல்களும் வந்து நிற்கின்றன. பள்ளியில் முதல் மதிப்பெண், அலுவலகத்தில் பதவி உயர்வு, வீட்டில் ‘எல்லாம் சரியாக நடந்தது’ என்ற திருப்தி... இவை எல்லாமே நம் வாழ்வின் இலக்காகிவிட்டன. ஆனால், ஒரு மென்மையான கேள்வி நம் இதயத்தின் கதவைத் தட்டுகிறது. இறைவன் நம்மிடம் கேட்பது: ‘நீ வென்றாயா?’ அல்லது ‘நீ வளர்ந்தாயா?’
திருவிவிலியம்
முழுவதும் ஓர் உண்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி நிற்கிறது. கடவுள் முடிவை அல்ல; பயணத்தைக் கொண்டாடுகிறார். அவர் கிரீடத்தைத் தேடுவதில்லை, வேரைத் தேடுகிறார்.
திருத்தூதர்
பவுல் கொரிந்து சபையாருக்கு எழுதிய கடிதத்தில் ஓர் எளிய, ஆனால் ஆழமான ஒப்புமையைப் பயன்படுத்துகிறார்: “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை”
(1கொரி 3:6-7).
இதைவிட
நம் தலைப்பிற்குப் பொருத்தமான திருவிவிலிய வரி வேறு ஏதேனும் இருக்குமா? வெற்றியை அளவிடுவது நாம் அல்ல; விதையை நாம் இடலாம், நீரை நாம் ஊற்றலாம்... ஆனால், வளர்ச்சி கடவுளின் கையில்தான் இருக்கிறது.
“உங்களுள் நற்செயலைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதை நிறைவுறச் செய்வார்”
(பிலி 1:6).
கவனியுங்கள்...
‘தொடங்கினவர்... முடிக்க வைப்பார்’
என்கிறது; ‘வென்றார்’
என்று சொல்லவில்லை. வளர்ச்சி என்பது ஒரு நிகழ்வு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.
மூங்கிலின் பாடம்
சீனாவில்
ஒரு வகை மூங்கில் உண்டு. அதை நட்ட பின்பு நான்கு ஆண்டுகளாக மேலே எதுவும் தெரியாது. வெறும் மண் மேடு மட்டுமே. ஆனால், அந்த நான்கு வருடங்களில் அதன் வேர்கள் தரைக்கடியில் பல மீட்டர்கள் தூரம்
பரவிக் கொண்டிருக்கும். ஐந்தாம் ஆண்டில் அந்த மூங்கில் ஆறே வாரங்களில் இருபது அடி உயரம் வளர்ந்து விடுகிறது. அது அதிசயமல்ல; அது தயார்நிலையின் வெளிப்பாடு.
இயேசுவும்
இதையே கூறினார். கடுகு விதை ஓர் இரவில் மரமாவதில்லை. அது வளர்கிறது. மெதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல்! ஆனால், உறுதியாக நீங்கள் ‘இன்று ஒன்றும் நடக்கவில்லை’ என்று
நினைக்கும் காலகட்டத்தில் இருக்கலாம். வேலை தேடிக் கிடைக்காமல், திருமணம் தாமதமாகி, கனவுகள் தொலைதூரத்தில் தெரிய, உங்களைச் சுற்றியுள்ளோர் முன்னேறிக் கொண்டிருக்க நீங்கள் நிற்காமல், அமைதியாக ஓடிக் கொண்டிருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சியும் வளர்ச்சியே.
யாக்கோபு
தனது கடிதத்தில் ஆச்சரியமான ஓர் அறிவுரையைத் தருகிறார்: “பல்வேறு சோதனைகளில் விழும்போது, அதை மிகுந்த மகிழ்ச்சியாக எண்ணுங்கள்; ஏனெனில் சோதனை பொறுமையை உருவாக்குகிறது, பொறுமை முதிர்ச்சியை உருவாக்குகிறது” (யாக்
1:2-4).
தோல்வியைக்
கொண்டாடச் சொல்கிறாரா இவர்? இல்லை. தோல்வி வீணாகாது என்று கூறுகிறார். ஒவ்வொரு விழுதலும் ஒரு வாய்ப்பு; மீண்டும் எழ, இன்னும் ஆழமாக வேர் விட.
மின்விளக்கைக்
கண்டுபிடிக்கும் முன் ஆயிரக்கணக்கான முறை தோற்ற தாமஸ் ஆல்வா எடிசன் ஒருமுறை கூறினார்: “நான் தோல்வியடையவில்லை; வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளைக் கண்டுபிடித்தேன்.” அவருக்கு வெற்றி என்பது இறுதி விளக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு முயற்சியும் ஒரு படிக்கல்.
ஒரு
விவசாயியைப் பாருங்கள். வயலில் விதை தூவும்போது அன்றே அறுவடையை எதிர்பார்ப்பதில்லை. மண்ணை ஆழமாகக் கொத்தி, உரம் இட்டு, மழைக்காகக் காத்திருந்து, பல மாதங்கள் கடந்த
பின்னரே கதிர்களைக் கொண்டாடுகிறார். அவர் வேகத்தைக் குறித்துப் புகார் செய்வதில்லை; பருவத்தை மதிக்கிறார்.
ஒரு
தாயைப் பாருங்கள். தன் குழந்தை நடக்கக் கற்கும்போது எத்தனை முறை விழுகிறது? ஒவ்வொரு விழுதலையும் அவள் தோல்வியாகப் பார்ப்பதில்லை; வளர்ச்சியின் அடையாளமாகவே பார்க்கிறாள். குழந்தை விழுந்ததைப் பார்த்து அல்ல; மீண்டும் எழுந்து நடப்பதைப் பார்த்தே அவள் கைத்தட்டுகிறாள்.
ஒரு
மாணவனைப் பாருங்கள். தேர்வில் தோற்றுவிட்டான். உலகம் அவனை ‘தோல்வியாளன்’ என்று
முத்திரை குத்தலாம். ஆனால், அந்தத் தோல்வி அவனுக்குக் கற்றுத் தந்த பொறுமையும் கடின உழைப்பும் தாழ்மையும் அவன் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் மறையாத செல்வங்கள். அடுத்தத் தேர்வில் வென்றாலும் தோற்றாலும், அவன் ஒரு பக்குவமான மனிதனாக ஏற்கெனவே வளர்ந்திருப்பான்.
அன்னை
தெரேசா அடிக்கடி நினைவுபடுத்துவார்: “கடவுள் நம்மை வென்றவர்களாக இருக்கச் சொல்லவில்லை; உண்மையானவர்களாக, உண்மையான நம்பிக்கையுடன் இருக்கச் சொன்னார். வெற்றியைக் கடவுள் கணக்கிடுவதில்லை; நம்பிக்கையையே அவர் கணக்கிடுகிறார்.”
இடுக்கண்
வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது
அஃதொப்பது இல் (குறள் 621).
துன்பம்
வரும்போது சிரியுங்கள். உங்கள் இதயத்திற்குள் உண்மையான துன்பம் இல்லை என்று அதற்குச் சொல்லுங்கள் என்பது இதன் பொருள். இது வெறும் சமாதான வார்த்தைகள் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ் ஞானி கண்டடைந்த ஆழ்ந்த உண்மை.
திருத்தூதர் பவுல்
தன் வாழ்நாளின் முதிர்ச்சியில் எழுதுகிறார்: “கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு, பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன்”
(பிலி 3:13-14).
கவனியுங்கள்...
அவர் ‘வென்றேன்’
என்று சொல்லவில்லை; ‘ஓடுகிறேன்’
என்கிறார். அவருக்குக் கிறித்தவ வாழ்க்கை ஓர் ஓட்டப் பந்தயம்; அதுவும் முடிவை அடைவதற்காக மட்டுமல்ல, உண்மையாக ஓடுவதற்காகவே.
இன்று
உங்கள் வாழ்வைத் திரும்பிப் பாருங்கள். கடந்த ஆண்டில் நீங்கள் ‘வென்றது’ எத்தனை? ‘வளர்ந்தது’
எத்தனை? இரண்டும் ஒன்றல்ல என்பதை இன்று உணருங்கள்.
ஒரு
தேர்வில் தோற்றதையோ, ஒரு வேலையில் தவறியதையோ, ஒரு திட்டம் முடியாமல் போனதையோ எண்ணி இனி வேதனைப்படாதீர்கள். அதற்குப் பதிலாக இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ‘இதன் மூலம் நான் என்ன கற்றுக்கொண்டேன்? நான் எவ்வாறு வளர்ந்தேன்?’