தவக்காலத்தை அருளின் காலம், மீட்பின் காலம், மனமாற்றத்தின் காலம், மன்னிப்பின் காலம், ஒப்புரவின் காலம் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு நாம் வழக்கமாக அழைப்பதுண்டு. இந்த வரிசையில், ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்னும் பாடல் வரி சொல்வதைப் போன்று, தவக்காலத்தை திருவழிபாட்டு ஆண்டின் காலங்களில் வசந்த காலம் என்றும் விடுதலையின் காலம் என்றும் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கழுகு
சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், இந்த வயதை அடைய, கழுகு தனது 40-ஆம் வயதை எட்டுகையில் ஒரு மிகக் கடினமான முடிவை எடுக்கவேண்டும். ஆம், அந்த வயதில் அதன் வலிமையான நகங்கள் மிகவும் பலவீனமாகவும், அதன் நீண்ட கூர்மையான அலகு மிகவும் வலுவற்றும் மாறியிருக்கும். அதன் இறக்கைகள் தடித்தும் கனமாகவும் போயிருக்கும். இதனால் கழுகால் பறக்க இயலாமலும், தனது இரையைப் பிடிக்க இயலாமலும் ஆகி, வாழ்வின் இறுதிக்கட்டத்தை அது நெருங்கும். இச்சமயத்தில், கழுகு ஒரு கடினமானத் தேர்வை எதிர்கொள்கிறது. இறப்பது அல்லது புதுப்பிப்பது - இரண்டில் ஒன்றைக் கழுகு முடிவு செய்கிறது.
புதுப்பித்தலுக்குத்
தன்னை ஒப்படைக்கும் கழுகு சுமார் 150 நாள்கள் நீடிக்கும் ஒரு வலிமிகுந்த பயணத்தைச் சந்திக்கிறது. முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் கழுகு, காடு அல்லது மலைப் பகுதிக்குச் சென்று, தன் அலகுகளால் உடலெங்கும் குத்திக்கொண்டு இறகுகளைப் பிய்த்துவிடுகிறது. மேலும்,
பாறைகளில் தன் அலகுகளையும் நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும் நகங்களும் முளைக்கும்வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன் வெளியே வந்து முன்பைவிட உயரமாகப் பறக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கழுகு மேலும் 30 ஆண்டுகள்வரை வாழும்.
தவக்காலத்தைத்
தொடங்கியுள்ள நமக்கும் கழுகின் புதுப்பித்தல் பயணம் சிறந்ததோர் ஆன்மிகப் பாடமாக அமைகிறது. கழுகின் தவ நாள்கள் அதற்கு
ஆற்றல் ஊட்டியதைப் போலவும், அதன் இளமையைத் திரும்பக் கொணர்ந்ததைப் போலவும் நமக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள் அமைய வேண்டும். “உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்” (திபா
103:5) என்னும் திருப்பாடல் வரிகள் இத்தவக்காலத்தில் நம் புதுப்பித்தலுக்கு வழிவகுக்கின்றன.
இயேசுவின்
உயிர்ப்பிற்காகத் தயாரிக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள், நம்மையும் இயேசுவுடன் சேர்ந்து உயிர்க்கச் செய்யவேண்டும். நம்மைப் புதுப்பிப்பதன் வழியாக நாமும் இயேசுவோடும் - இயேசுவாகவும் உயிர்த்தெழ முடியும். அதுவே இத்தவக்காலத்தின் நோக்கமாகும். இப்புதுப்பித்தல் அனுபவம் வசந்தம், விடுதலை ஆகிய இரு சிறப்பான பயன்களை நமக்கு அளிக்கிறது.
தவக்காலம் ஒரு
வசந்த
காலம்
‘லெண்ட்’
(Lent) என்கிற
ஆங்கிலச் சொல்லுக்கு வசந்த காலம் (Spring) என்கிற
அர்த்தமுண்டு. பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகளும் மலர்களும் தளிர்க்கின்ற, பூக்கின்ற காலமே இவ்வசந்த காலம். இந்த அடிப்படையில் நம்முடைய பழைய பாவ எண்ணங்களையும் தீய நாட்டங்களையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் உதிர்த்து விட்டு, புதிய எண்ணங்களையும் நற்சிந்தனைகளையும் புனித விழுமியங்களையும் நம்முள் பூக்கச்செய்யும் தவக்காலமும் உண்மையில் ஒரு வசந்த காலமே.
நம்மிடமிருந்து
அகற்றப்பட வேண்டியவை எவை? களையப்பட வேண்டியவை எவை? என்று நன்கு ஆய்ந்தறிய இந்நாள்களில் நாம் முயல வேண்டும். தகாதவற்றை விலக்குவதும் தகுந்தவற்றை உள்வாங்குவதும் இத்தவக்காலத்தின் அழைப்பாகும். அல்லவை நீக்கிடவும் நல்லவை சேர்த்திடவும் இத்தவக்காலம் நமக்கு உதவிட வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஆன்மிக வாழ்வை இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. இதற்கு இத்தவக்காலம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ
21:5) என்று கூறும் கடவுளின் வாக்கிற்கேற்ப அவருடைய பேரன்பும் பெருங்கருணையும் இத்தவக்காலத்தின் நாள்களில் நம்மை உண்மையில் புதுப் படைப்பாக மாற்றட்டும்!
தவக்காலம் ஒரு
விடுதலையின்
காலம்
புகழ்பெற்ற
சிற்பியான மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு கூறுகிறார்: “ஒவ்வொரு கல்லிலும் ஒரு சிலை உள்ளது; அதைக் கண்டுபிடிப்பதே சிற்பியின் பணி.” மேலும் அவர் தொடர்ந்து சொல்வார்: “இந்தச் சலவைக்கல்லில் நான் ஒரு வானதூதரைப் பார்த்தேன்; நான் அவரை இதிலிருந்து விடுவிக்கும்வரை செதுக்கினேன்.” இவ்வாறே இத்தவக்காலமும் ஒரு சிற்பியைப்போல நாம் செயல்பட நம்மைத் தூண்டுகிறது.
கடவுள்
நம் எல்லாரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்துள்ளார் (தொநூ 1:26). ஆனால், இந்த இறைமையை நம்முடைய குற்றங்களால் இருட்டடிப்புச் செய்திருக்கிறோம். நம்முள் மறைக்கப்பட்ட இறைமையை வெளிக்கொணர இத்தவக்காலம் உதவிடவேண்டும். ‘நான்’ என்னும் சிறைக்குள் சிக்கிச் சிதையாமல், விடுதலை பெற்றவர்களாக நம்மை வாழப் பணிக்கும் காலமாக இத்தவக்காலம் உள்ளது. நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு வானதூதரை வெளிக்கொணரும் பொருட்டு, நம்மையே நாம் தொடர்ந்து செதுக்குவதற்கான காலமே இத்தவக்காலம்.
“ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம். பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே”
(கலா 4:7) என்னும் கூற்றுக்கு இணங்க, இத்தவக்காலம் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக, விடுதலை வாழ்வு பெற்ற மக்களாக இவ்வுலகில் வாழச் செய்யட்டும்.
நிறைவாக,
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் இறைவேண்டல், நோன்பு, பிறரன்புச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக நம்முடைய புதுப்பித்தல் வீரியமும் வேகமும் பெறட்டும்! இப்புதுப்பித்தலின் நாள்களின் நிறைவில் நமக்கு வசந்தமும் விடுதலையும் கிடைக்கட்டும்!
1. இறைவனின் மீட்புத் திட்டத்தில், அவரின் ஒரே மகன் கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பினார். இந்தத் தெய்வீகத் திட்டமானது, மரியாவின் கன்னிமைக்கும் வார்த்தை மனுவானதற்குமான ஆழமானதோர் உறவிற்கு அழைக்கின்றது. “கடவுள் அவரின் மீட்புத் திட்டத்தில், ஏன் அவருடைய மகன் ஒரு கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமென விரும்பினார் என்பதற்கான மறையுண்மையை நம்பிக்கையின் கண்ணோட்டத்தில் திருவெளிப்பாட்டின் முழுமையானதொரு சூழலில் உணரமுடியும். இந்தக் காரணங்கள் கிறிஸ்துவின் மனித நிலை, அவரின் பணி ஆகிய இரண்டிலும் எல்லா மனிதர்கள் சார்பாகவும் இந்தப் பணிக்கு மரியா கொடுத்த வரவேற்பையும் வெளிக்காட்டுகின்றது” (Catechism of the Catholic Church, n. 502).
மனித
தந்தையைத் தவிர்த்த இந்தக் கன்னி கருத்தரிப்பானது இயேசுவின் ஒரே தந்தை வானகத் தந்தை ஒருவரே என்பதையும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த மகனின் இந்தப் பிறப்பு அவரின் நிலையான பிறப்பையும் குறிக்கிறது. காலவரையறைக்கு உட்படாத மகனைத் தோற்றுவித்த தந்தையானவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரை மனிதனாகவும் தோற்றுவிக்கிறார்.
2. கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு நிகழ்வானது இயேசுவின் பிறப்பில் கடவுளுடைய இடையீட்டின் விளைவால் ‘கடவுளின் மகன்’ என்ற அவரின் நிலையை வலியுறுத்துகிறது. “தூய ஆவி உம்மீது வரும்; உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது; அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
(லூக் 1:35).
கன்னி கருத்தரிப்பானது
மரியாவினுடைய ஒத்துழைப்பின் பயனாக இருக்கின்றது
மரியாவிடமிருந்து
பிறந்தவர், அவரின் நிலையான பிறப்பின் காரணமாக ஏற்கெனவே
கடவுளின் மகனாக இருக்கின்றார். உன்னதமானவரால் வழங்கப்பட்ட கன்னியிடமிருந்தான அவரின் பிறப்பானது அவருடைய மனித இயல்பிலும் அவர் கடவுளின் மகனாகவே இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
கன்னியிடமிருந்தான
இயேசுவின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் அவருடைய நிலையான பிறப்பானது, அவரின் மனிதப் பிறப்பினால் “தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும், கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனுடைய...” (யோவா 1:18) பணியை, கட்புலனாகாத கடவுளுடைய வெளிப்பாட்டோடு தொடர்புபடுத்துகின்ற தூய யோவான் நற்செய்தியினுடைய முகவுரையின் வழியாகக் குறிப்பிடப்படுகின்றது: “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” (யோவா
1:14).
இயேசுவின்
பிறப்பை விவரிப்பதில், நற்செய்தியாளர்களான லூக்காவும் மத்தேயுவும் தூய ஆவியானவரின் பங்கையும் பற்றிப் பேசுகின்றனர். தூய ஆவியானவர் அந்தக் குழந்தையின் தந்தை அல்ல; தூய ஆவி வழியாக இந்த உலகிற்கு வந்து, அவரின் மனித இயல்பில் வார்த்தையைத் தோற்றுவிக்கின்ற என்றுமுள்ள தந்தையின் மகனாக மட்டுமே இயேசு இருக்கின்றார் (ஒப்பிடுக. லூக் 1:32-35). உண்மையில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் வானதூதர் தூய ஆவியாரை, மனித வாழ்வில் அற்புதச் செயல்களைச் செய்யவல்ல வேலைகளில் ஒரு தெய்வீகச் சக்தியாக முன்னிறுத்துகின்ற பழைய ஏற்பாட்டின் வழியில் “உன்னதக் கடவுளின் வல்லமை”
(லூக் 1:35) என்றே அழைக்கின்றார். மனுவுருவாதலின் மறைபொருளில் மிகச்சிறந்த வகையில் அதையே வெளிப்படுத்தி, மூவொரு கடவுளின் வாழ்வில் அன்பாக இருந்து செயல்படுகின்ற இந்தச் சக்தியானது, வார்த்தை மனுவுருவானவரை இந்த மனுக்குலத்திற்கு அளிக்கின்ற செயலைக் கொண்டுள்ளது.
3. குறிப்பாக,
தூய ஆவியானவர்தான் தெய்வீக வளங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிறார் மற்றும் கடவுளுடைய வாழ்வில் அவர்களையும் பங்குதாரர்களாக ஆக்குகின்றார். மூவொரு கடவுள் மறையுண்மையில் தந்தையையும் மகனையும் இணைக்கின்ற அவரே, இயேசுவின் கன்னியிடமிருந்தான பிறப்பின் வழியாகக் கடவுளோடு
மனுக்குலத்தை இணைக்கின்றார்.
மனுவுருவாதல்
மறைபொருளானது ஒப்பீடு செய்ய இயலாத மரியாவின் கன்னித்
தாய்மையினுடைய மேன்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இயேசுவின் கருத்தரிப்பானது, எல்லா வளங்களின் ஊற்றாகிய அன்பின் ஆவியாரினுடைய செயலோடு, அவருடைய தாராள ஒத்துழைப்பினால் விளைந்ததொரு கனியாக இருக்கிறது.
ஆகவே,
இந்த இறைமீட்புத்
திட்டத்தில், கன்னி நிலையில் கருத்தரிக்கும் நிகழ்வானது ஒரு புதிய படைப்பின் அறிவிப்பாக இருக்கின்றது. தூய ஆவியாரின் செயலால், புதிய ஆதாமாக இருக்கப் போகிறவர் மரியாவில் உருப்பெறுகிறார்.
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி நூல் குறிப்பிடுவதைப் போல, “இயேசு கன்னி மரியாவின் கர்ப்பத்தில் தூய ஆவியாரினால் கருவாக உருவானார்; ஏனென்றால், அவர்தான் புதிய படைப்பைத் தொடங்கவிருக்கின்ற புதிய ஆதாமாக இருக்கிறார் (Catechism of the Catholic Church, n.. 504).
நம்பிக்கையுள்ளோர்
கடவுளின்
குழந்தைகளாவதற்கான
ஆற்றல்
கொடுக்கப்படுகிறார்கள்
மரியாவினுடைய கன்னித்
தாய்மையின் பங்கானது இவ்வாறு புதிய படைப்பின் மறையுண்மையில் மிளிர்கின்றது. “கன்னியின் முதற்கனி”
(Ad Haer., 3,16,4) என்று
கிறிஸ்துவை அழைப்பதில் புனித எரோணிமுஸ் அவர்கள், கிறிஸ்துவின் புதுவாழ்வைப் பெறுகிறார்கள் என்ற அர்த்தத்தில் இயேசுவிற்குப் பின் கன்னியிடமிருந்து மற்றவர்களும் பிறந்தார்கள் என்பதை நினைவுகூர்கின்றார். “மரியாவின் ஒரே
மகன் இயேசுதாம். ஆனால், அவரின் ஆன்மிகத் தாய்மையானது உண்மையில் இயேசு யாரையெல்லாம் மீட்க வந்தாரோ அவர்களுக்கும் அகலப்படுத்தப்படுகின்றது. எந்த மகனை அவர் பெற்றெடுத்தாரோ அவரோடு, ஒரு தாயன்போடு ஒத்துழைத்து அவர் யாரையெல்லாம் பெற்றெடுத்து உருவாக்கினாரோ அந்த நம்பிக்கை கொண்டோருள் எல்லாச் சகோதரர்களுக்குள்ளும் முதன்மையானவராகக் கடவுள் அவரை வைத்தார்”
(Catechism of the Catholic Church, n. 501).
4. புது
வாழ்வின் பரிமாற்றமானது இறைமக்கள் ஆவதற்கானதொரு வழியாக இருக்கின்றது. இங்கு நற்செய்தியாளர் புனித யோவான் அவருடைய நற்செய்தியின் முகவுரையில் கூறியுள்ள கூற்றை நாம் நினைவிற்கொள்ளலாம்: “அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்லர்; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்” (ஒப்பிடுக.
யோவா 1:12-13). இவ்வாறு, கன்னியிடமிருந்தான பிறப்பானது இறைதந்தைக்கான நீட்சியை அனுமதிக்கின்றது; கன்னியின் மற்றும் இறைத்தந்தையின் மகனில் அனைத்து மனிதர்களும் தத்தெடுக்கப்பட்ட மக்களாக (adoptive children
of God) ஆகின்றனர்.
இவ்வாறு,
கன்னியிடமிருந்தான பிறப்பின் மறைபொருளைத் தியானிப்பதென்பது, கடவுள் அவரின் தந்தையன்பை மிகத் தாராளமாக மனுக்குலத்திற்கு வழங்குவதற்கு, அவருடைய மகனுக்கு ஒரு கன்னித் தாயைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்துகொள்ள நமக்கு உதவியாக இருக்கின்றது.
மூலம்:
John Paul II, Eternal son of God is also born of Mary, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 7/14
August 1996, p.7.
ஆணவம், அகந்தை, அலட்சியம், அச்சம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் இக்காலகட்டத்தில், நாம் தவக்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். அன்பையும் அமைதியையும் வாழ்வின் வழியாகக் கொண்ட கிறிஸ்துவில் வேரூன்ற அழைக்கும் இத்தவக்காலம், நம் அழுக்குச் சிந்தனைகளைக் களைந்து அர்த்தமுள்ள வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. இறைவேண்டல், நோன்பு, அறப் பணிகள் போன்ற நல்ல பண்புகள் கிறிஸ்துவில் வேரூன்ற, இத்தவக்காலம் துணையாக இருக்கும்.
1. இறைவேண்டல்
அன்றாட
வாழ்வின் சத்தத்தில் மூழ்கியிருக்கும் இறைவனின் குரலை மீண்டும் கேட்க நம் இதயத்தைத் திறக்கிறது. எனவே, அமைதியில் ஆழப்பட வேண்டியது நமது கட்டாயக் கடமையாகிறது.
“இறைவேண்டல் என்பது ஆன்மாவின் அகக் குளியல்” என்கிறார்
புனித அகுஸ்தினார். ஆன்ம
சோதனை செய்வது மிகவும் அவசியம். இறைவேண்டல் என்பது எல்லா நேரங்களிலும் உதடுகளால் செபங்களை உச்சரித்துக் கொண்டிருப்பது அல்ல; மாறாக, தியானங்கள் வழியாக நம்முடைய இதயத்தைச் சுய ஆய்வுக்கு உட்படுத்துகிற ஒரு காலம் என்பதை இத்தருணங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகளைப் போலவே இறைவேண்டல் அமையவேண்டும் என்பது அவசியம் இல்லை. இறைவேண்டல் நேரங்கள் இறைக்குரல் கேட்கும் தருணங்களாக மாறவேண்டும். இத்தருணங்கள் இறைவனோடு ஒன்றிணையும் தருணங்கள் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். அமைதியில் நாம் தவழும்போது நமது குறைகளையும் நிறைகளையும் இறைவன் நம் கண்முன் கொண்டுவந்து, சரி செய்பவற்றை அவர் சரிசெய்கிறார்; களைபவற்றைக் களைகிறார். “இறைவனோடு நாம் ஒன்றிணையும் பொழுது நம்மில் நல்ல பண்புகள் வளர்கின்றன. பாவங்கள் களையப்படுகின்றன. கோபம் விலகுகிறது; கருணை பிறக்கிறது” என்கிறார்
புனித பிரான்சிஸ் தே சேல்ஸ். “இறைவனோடு
ஒன்றிணையாத வாழ்வு, கடலில் இருந்து கரைக்கு வந்த மீனுக்குச் சமம்” என்கிறார் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம். உலகம் காட்டக்கூடிய கவர்ச்சிகள் அனைத்தும் கானல் நீர் என்பதை உணர்த்துகிற இந்தக் காலத்தில், இறைவனோடு ஒன்றிணையும் நேரங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்வோம். நம்மைப் பல நேரங்களில் தனிமைப்படுத்தி
அன்றாடம் தாங்குகிற கடவுளின் தரிசனத்தைக் காண்போம்.
2. நோன்பு
இக்காலகட்டத்தில்
வெளிப்புற உடல் நலத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்கும் காலமாகவும் இந்தத் தவக்காலத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தவக்காலத்தில்
பலர், மது அருந்தாமல் இருப்பது, புகை பிடிக்காமல் இருப்பது என்று நாற்பது நாள்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு தங்கள் பழைய வாழ்க்கைக்குக் கடந்து செல்கிறார்கள். நமது வாழ்விலே பல வியத்தகு செயல்களை
அனுபவிக்க இறைவேண்டலோடு கூடிய நோன்பும் தேவைப்படுகிறது.
தீய
ஆற்றலால் நாம் பாதிக்கப்படும் பொழுது இயேசுவின் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்வோம். “இவ்வகைப் பேய், இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்
இயேசு (மத் 17:21).
ஆன்மாவின்
அகக் குளியலுக்கும் தூய்மைக்கும் இந்த நோன்பு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை உணர வைக்கிற காலம் இந்தத் தவக்காலம்.
ஒரு
காலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பு இருப்பார்கள். ஆனால், இப்பொழுது பல்வேறு
நோய்களால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்கள் நோன்பு இருக்க முடியாத சூழ்நிலை. ஆனாலும்,
சற்று ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக வாழ்விலே இலக்கோடு பயணிப்பதற்கும், இறைவனோடு ஒன்றிணைவதற்கும் நோன்பு என்பது கட்டாயம் தேவை என்பதை உணர வேண்டும்.
3. தர்மம் அல்லது அறப்பணிகள்
‘நான் உன்மீது அன்பு செய்து வருகிறேன்’
என்கிற திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை லியோ அவர்கள் அறப்பணிகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஏழை எளிய மக்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்றும், அவர்களே நற்செய்திப் பணியின் கதாநாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
திருவழிபாட்டில்
நாம் ஏறெடுக்கும் இறைவேண்டல்கள் விண்ணகத்தைச் சென்றுசேர வேண்டுமென்றால் நாம் கொடுக்கக்கூடியதான தர்மங்கள் அதன் சிறகுகளாக அமைந்தால் மட்டுமே விண்ணகத்தைச் சேரமுடியும் என்பதைத் திருத்தந்தை பெரிய கிரகோரியாரின் எழுத்துகளில் பதிவிடுகிறார். “தானம்
செய்வது நீதிக்குத் தலை வணங்குவதாகும்” என்கிறார்
புனித அம்புரோஸ்.
உடைமைகள்
இழந்தவர்கள், உரிமைகளை இழந்தவர்கள், சுதந்திரத்தை இழந்தவர்கள், குரலற்றவர்கள், விளிம்புநிலையில் இருப்போர், கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மிக அளவில் கண்டுகொள்ளப்படாதவர்கள், சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள்... என இவர்கள் அனைவருக்கும்
உதவிக்கரம் நீட்டுவதுதான் நம்முடைய கிறித்தவர்களின் அவசியக் கடமையாக இருக்கிறது.
வன்முறைகளால்
பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இரு மடங்கு ஏழைகளாய் மாறி இருக்கிறார்கள் என்பதைத் திருத்தந்தை சுட்டிக்காட்டத்
தவறவில்லை. செல்வராயினும் இயேசு ஏழையானார்; எளிய மக்களோடு வாழ்ந்தார்; தலைசாய்க்கக் கூட இடம் இல்லாத அளவுக்குப் பற்றற்றவராய் வாழ்ந்தார் என்று நற்செய்தியில் நாம் வாசித்தாலும், மீண்டும் மீண்டுமாய் மறுவாசிப்பு செய்து அதை ஏழை எளிய இயேசுவைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகின்றோம்.
2026-ஆம் ஆண்டை
புனித பிரான்சிஸ் அசிசியார் ஆண்டாகத் திருத்தந்தை லியோ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். செல்வராக இருந்தாலும் இயேசுவின் அடிச்சுவட்டில் ஏழையாகவே வாழத் தொடங்கி, தொழுநோயாளிகளை எல்லாம் தன்னுடைய கரங்களால் அரவணைத்து, ‘யாரும் சமூகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்கள் அல்லர்’ என்பதை உலகுக்கு உணர்த்திய புனித பிரான்சிஸ் அவர்களும் இத்தவக்காலத்தில் நம்முடைய முதன்மை மாதிரியாக நம் கண்முன் வலம் வரட்டும்
திரும்பத்
திரும்ப நாம் மறையுரைகள் வழியாக, இறைவார்த்தையை வாசிப்பதன் வழியாக, ஏழை எளியவருக்குக் கைகொடுக்கவேண்டும் என்று நாம் வாசித்தாலும், ஏன் நம்முடைய இதயம் அவர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் திருத்தந்தை சாடுகிறார்.
‘கண்டுகொள்ளாமை’ மிகப்பெரிய
பாவம் என்பதைச் சாடுகிற திருத்தந்தை, புலம்பெயர்ந்த சகோதரர்-சகோதரிகளை நாம் ஏற்றுக்கொள்ளவும், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும், அனாதைகளுக்குப் புகலிடம் கொடுக்கவும் நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.
மருத்துவ
வசதியின்றி, கல்வி வசதியின்றி வாடுகிற மக்களுக்குக் கல்வி செல்வத்தையும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதையும் நினைவில் கொண்டு மக்களுக்கு அறப்பணிகள் ஆற்றிட இந்தத் தவக்காலம் நமக்கு அறிவுறுத்தவேண்டும்.
ஒரே
ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய், அந்தக் குழந்தையை எவ்வளவு கண்ணும் கருத்துமாய் நோய்களிலிருந்து பாதுகாப்பாளோ அதுபோல, திரு அவை உறுப்பினர்களாகிய நாம் நோயுற்ற ஒவ்வொருவரையும் கண்காணிக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் புனித கமில்லஸ்.
அனாதையாக,
அந்நியனாக, அகதியாக அடைக்கலம் கேட்டு வரும் மக்களுக்கு இறைப் பிரசன்னத்தைக் கொடுக்கவே திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த அறப்பணிகள் வழியாக நாம் செய்தோம் என்றால், இந்தத் தவக்காலம் உண்மையான, அர்த்தமுள்ள காலமாக மாறும்.
கிறிஸ்துவில்
வேரூன்றிய வாழ்வு என்பது, இறைவனோடு ஒன்றிணையும் தருணம், நோன்பிருக்கும் தருணம், அறப்பணிகள் ஆற்றுகின்ற தருணம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்பதை மனத்தில் கொண்டு அர்த்தமுள்ள விதத்தில் இந்தத் தவக்காலத்தைக் கொண்டாட முன்வருவோம்.
நமது தமிழ் மண்ணின் மறைச்சாட்சி புனித தேவசகாயத்திற்கு ‘இந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்’ எனும் சிறப்புப்பெயர் சூட்டித் திரு அவை அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் அவர் மறைச்சாட்சியாக உயிர்நீத்த கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் குன்றின் அடிவாரத்தில் இவ்வாண்டு சனவரி 14-ஆம் நாள் மாபெரும் விழா நடத்தப்பட்டது. பல்லாயிரம் மக்களும், ஒரு நூறு அருள்பணியாளர்களும், இரு பால் துறவியரும், தமிழ்நாட்டின் மூன்று பேராயர்களும் ஆயர்களும் பங்கேற்றனர். இவ்விழா திருப்பலியில் திருத்தந்தையின் இந்தியத் தூதர் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புனித தேவசகாயத்தை ‘இந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்’ எனும் அறிக்கையைப் படித்தார். திருப்பலி முடிவில் ‘புனித தேவசகாயம் அருள்வாழ்வு இயக்கம்’ தொடங்கி வைக்கப்பட்டது. மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்தக் கொண்டாட்டம் தமிழ்நாடு திரு அவைக்குப் பெருமையும் பெரு மகிழ்வும் சேர்க்கிறது என்பதில் ஐயமில்லை.
மறைச்சாட்சி
தேவசகாயம் ஓர் இல்லற வாழ்வு நடத்தியவர். பொதுவாழ்வில் நேர்மை மற்றும் நீதியோடு ஈடுபட்ட அரசு அலுவலர். அவரைப் போலவே இன்றைய நம் பொதுநிலையினரும் அவர்களுக்கு உரிய அழைப்பிற்கு ஏற்பத் திரு அவையிலும் சமூகத்திலும் சாட்சிய வாழ்வு வாழ்ந்திடவேண்டும்; அவர்கள் திரு அவையின் அனைத்துப் பணிகளிலும் இணைந்து செயல்படவும், தங்களுக்கே உரிய சமூகத்துறைகளில் நற்செய்தி உளப்பாங்குடனும் தலைமைப்பண்பு உள்ளவர்களாக ஆற்றலுடன் ஈடுபடவும்வேண்டும்.
பொதுநிலையினரும்
இறையழைத்தல்
பெற்றவர்களே!
இறையழைத்தல்
என்பது அருள்பணியாளர் மற்றும் துறவியருக்கு மட்டுமே உரியது எனும் புரிதலே இன்றும் திரு அவையில் பரவலாகக் காணப்படுகிறது. இறையியல் படிப்பு, பங்கேற்பு அமைப்புகள் மற்றும் பணிக்குழுக்களின் தலைமை, அனைத்துத் திரு அவை நிறுவனங்களின் மேலாண்மை என்பன பெரிதும் திருநிலையினரது தனி உடைமையாகவே இருக்கின்றன. பொதுநிலையினர் - பணிப்பொறுப்பற்ற வெறும் பயனாளர்கள், உதவியாளர்கள் அல்லது ஆலோசகர்கள் எனும் புரிதலும் நடைமுறையுமே இன்றுவரை பெரிதும் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய நடைமுறையால் திரு அவைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பல. ஏனெனில், உலகிற்கு ஒளியாகவும் மலைமேல் நகரமாகவும் திகழ்ந்து (மத் 5:14), இறையாட்சிக்குச் சான்றுபகர்வதும், நிலத்தின் உப்பு (மத் 5:13), மாவோடு பிசைந்து வைக்கப்பட்ட புளிப்பு மாவு (மத் 13:33) என்பவைபோல அதைப் பரவலாக்கும் கருவியாகவும் செயல்படுவதே திரு அவையின் அழைப்பும் அலுவலும்.
“நீங்கள்… உலகின் கடை எல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” (திப
1:8) என்பது தம் சீடர்கள் அனைவருக்கும் இயேசு தந்த அழைப்பும் ஆணையும். இயேசுவின் இறையாட்சி இலட்சியத்தையும், அதன் விழுமியங்களையும் வாழ்வாக்கி, அவற்றின் சாட்சிகளாகத் திகழ்வதும், அவற்றிற்கேற்ப தங்களது சமூகத்தை வளர்த்தெடுப்பதே உண்மையான கிறித்தவச் சீடத்துவ வாழ்வு. திருமுழுக்கின் வழியாகப் பெறப்படும் இந்த அழைப்பும் பொறுப்பும் அனைத்து நம்பிக்கையாளருக்கும் உரியது என்றாலும், முதலிலும் முக்கியமாகவும் அவை பொதுநிலையினருக்கே உரியன.
திருமுழுக்குக் குருத்துவமே
முதன்மையானது
இரண்டாம்
வத்திக்கான் சங்கப் படிப்பினையில், திரு அவை என்பது இறைமக்களின் ஒரே குலமே! ஏனெனில், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இறைமக்கள் குலத்தவரும், குருக்களின் கூட்டத்தினருமே. இதனைப் புனித பேதுரு, “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்; அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார்; அவரது உரிமைச் சொத்தான மக்கள்”
(1பேது 2:9) என எடுத்துரைக்கின்றார். “தம் செயல்கள்
அனைத்தின் வழியாக ஆவிக்குரிய பலிகளைப் படைக்கவும், உலகெங்கும் கிறிஸ்துவுக்குச் சான்றுபகரவும், அரச குருக்களின் கூட்டத்தினராகவும்… (1பேது
2:4-10) இவர்கள் திருநிலைப்படுத்தப் பெறுகிறார்கள்” (பொதுநிலையினரின்
திருத்தூதுப் பணி 3; திரு அவை 10) என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கூற்று.
திருமுழுக்கில்
பெறப்படுவதே முதன்மையான குருத்துவத் திருநிலைப்பாடு. அருள்பணியாளர் மற்றும் ஆயர் திருநிலைப்பாட்டில் பூசப்படும் அதே கிறிஸ்மா எண்ணெய்யே திருமுழுக்குப் பெறுபவரது உச்சந்தலையில் பூசப்படுவது இதை அடையாளப்படுத்துகிறது. அப்பொழுது கூறப்படும் பின்வரும் வாய்ப்பாடும் இதை உறுதிப்படுத்துகிறது: “அரசரும் குருவும் ஆசிரியருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஓர் உடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெறுவீர்களாக.”
திருமுழுக்கில்
பெறப்படும் குருத்துவத் திருநிலைப்பாடு முதன்மையானது மட்டுமல்ல; அதுவே மிக முக்கியமானதும் அனைத்திலும் உயர்வானதுமாகும். ஏனெனில், திருமுழுக்கில் பெறப்படுவது இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக்கம்; அருள்பணியாளர் திருநிலைப்பாட்டில் நிகழ்வதோ ஒத்துருவாக்கம். ஓருடலாக்கம் ஒத்துருவாக்கத்தைவிட அதிக நெருங்கிய ஒன்றிப்புதானே!
திருமுழுக்கின்
வழியாக இயேசுவின் குருத்துவப் பணியில் பங்குபெற்று, அவருடைய சீடர்களாக வாழவும் செயல்படவும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பெற்றுள்ளது பொதுவானதும் அடிப்படையானதுமான அழைப்பு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய தனி அழைப்பும் உண்டு. அது தத்தம் தளங்களில் தாங்கள் பெற்றுள்ள பல்வேறு அருங்கொடைகளுக்கும், வெவ்வேறு தனி அழைத்தல்களுக்கும் ஏற்ப இறைவாக்கு உரைத்தல், புனிதப்படுத்துதல், தலைமையேற்றல் எனும் முப்பெரும் பணிகளை அவர்கள் ஆற்றுவதே. இதனால், அருள்பணியாளர் நிலையும் துறவு வாழ்வும் இறையழைத்தல்கள் என்றால் இல்லற வாழ்வும், அதற்கு இணையான இறையழைத்தலே. இவ்வழைத்தல் காரணமாக, குடும்பத்தில் பெற்றோரும், கல்விக் கூடத்தில் ஆசிரியர்களும், மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியருமே முப்பணிகளையும் ஆற்றும் முதல் நிலைக் குருக்கள். அவர்கள் தத்தம் தளங்களிலும் துறைகளிலும் நன்கு முப்பணிகளையும் ஆற்ற உதவுகின்றவரே அருள்பணியாளர்.
மேற்கூறிய
பல்வேறு தனி அழைத்தல்களுக்கு இடையே மாண்பிலும் பணிப்பொறுப்பிலும் புனிதத்திற்கான அழைப்பிலும் உயர்வு தாழ்வு இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையைப் பின்பற்றித் திரு அவைச் சட்டம் இதைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளது: “கிறிஸ்து இயேசுவுக்குள் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் செயல்பாட்டிலும் சமமானவர்கள்” (திரு
அவைச் சட்டம் 208; 2வத். திரு அவை 32).
புனிதம் அடைவதற்கு
அவர்கள் அனைவருக்கும் அருளப்பட்டிருக்கும் அழைத்தலிலும் உயர்வு-தாழ்வு இல்லை: “அனைத்து மனிதரின் பல்வேறு வாழ்க்கைமுறைகளிலும் பணிப்பொறுப்புகளிலும் ஒரேவகைத் தூய்மைநிலையே செயலாக்கம் பெறுகிறது”
(இரண்டாம் வத். திரு அவை 41). ஏனெனில், அன்பு மற்றும் தியாகத்தின் உயர்வால் மட்டுமே புனிதத்தில் உயர்வு வருமே அன்றி எவரும் பெறும் திருநிலைப்பாட்டாலோ வகிக்கும் பதவியாலோ, நிலையாலோ அல்ல.
பொதுநிலையினரின் பங்கேற்பையும்
பணிகளையும்
ஊக்கப்படுத்துவோம்
பொதுநிலையினர்
முப்பணி ஆற்றும் முதல் தளம் அவர்களது குடும்பம். பெற்றோரே அங்கு முதன்மையான இறைவார்த்தை அறிவிப்பாளர்கள்; அவர்களைப் புனிதப்படுத்துபவர்கள், அவர்களை நன்நெறிப்படுத்துபவர்கள். சாதி, சமய, இன, மொழி, படிப்பு, பதவி, பணம் எனும் வேறுபாடு பாராது உற்றாருடனும் உறவினருடனும் அடுத்திருப்போருடனும் நல்லுறவு கொண்டு, விருந்தோம்பல் செய்து, ஏழைகளுக்கு உதவி வாழ்வதும் அவர்கள் முப்பணி ஆற்றும் முறைகளே. இவ்வாறு தங்கள் குடும்பத்தை இல்லத் திரு அவையாகயும் முதல்நிலை இறையாட்சிக் குழுமமாகவும், வளர்த்தெடுப்பதுவே அவர்களது குருத்துவப் பணி. அதுவே அவர்கள் புனிதம் அடையும் முதல் தளம்.
அவர்கள்
முப்பணிகளை ஆற்றும் அடுத்தத் தளம் அவர்களது கிறித்தவக் குழுமம். அதன் வழிபாட்டிலும், பல்வேறு பணிகளிலும் தங்களால் இயன்ற முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் வழியாக அவர்கள் இறையாட்சிப் பணி ஆற்றுகின்றனர். இவற்றுள் முக்கியமான ஒன்று, அவர்கள் தங்களது அன்பியத்தில் தன்னார்வ நற்பணிகளில் ஈடுபடுவது, பங்கில் உள்ள பணிக்குழுக்கள், திருத்தூதுக் குழுமங்கள் என்பனவற்றுள் ஒன்றில் இணைந்து ஆர்வமுடன் பணியாற்றுவது, பங்கு அருள்பணிப் பேரவை, நிதி குழு என்பவற்றின் உறுப்பினர்களாகச் செயல்படுவது என்பவையும் பொதுநிலையினரின் இறையாட்சிப் பணிமுறைகளே.
(தொடரும்)
இன்றைய உலகம் வேகத்தையும் செயல்பாட்டையும் வாழ்க்கையின் அளவுகோலாக மாற்றியுள்ளது. எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; எதையாவது சாதிக்கவேண்டும் என்ற அழுத்தம் மனிதனை அமைதியற்றவனாக மாற்றுகிறது. வெளிப்படையான வெற்றிகளுக்குப் பின்னாலும், உள்ளார்ந்த வெறுமையும் சோர்வும் அதிகரித்து வரும் இந்நிலையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ‘இயேசு கிறிஸ்து - நமது எதிர்நோக்கு’ என்ற யூபிலி ஆண்டு சிந்தனையின் கீழ், மனித இதயத்தின் ஆழமான தேடலை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டு வரும் எண்ணத்தில் தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.
துன்பத்தின் வழியே
நற்செய்தி
கிறித்தவ
வாழ்க்கை என்பது சுகமான பாதை அல்ல; இது அர்த்தமிக்க பயணமாகவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அர்த்தம் பல நேரங்களில் வெற்றியின்
மேடைகளில் அல்ல; மாறாக, துன்பத்தின் நிழலில்தான் வெளிப்படுகிறது. நற்செய்திக்காக மகிழ்ச்சியுடன் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, உண்மையான கிறித்தவச் சீடத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
ஓர் இலக்கிற்காக
ஏற்றுக்கொள்ளப்படும்
துன்பம்
பல
ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஷ் வீராங்கனை ஆலிஸ் மார்பிள், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நாளாக இருக்கும் என்று எண்ணிய விம்பிள்டன் இறுதிப் போட்டி நாளில், கடும் உடல் வலியுடன்தான் காலையில் விழித்தெழுந்தார். மருத்துவர் வயிற்றுத்தசை கிழிந்திருப்பதை உறுதி செய்தபோது, ‘விளையாடுவது புத்திசாலித்தனமல்ல’ என்று
அறிவுறுத்தினார். ஆனாலும், அவர் போட்டியிலிருந்து விலக மறுத்தார். ஒவ்வோர் அடியும் உடலின் வலியை அதிகரித்தபோதும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் அவர் வெற்றியடைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிக்கோளுக்காக மனிதன் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், கிறித்தவ நம்பிக்கையில் இந்தக் குறிக்கோள் உலகியலான புகழைத் தாண்டி, நிலையான வாழ்வை நோக்கி வழிநடத்துகிறது.
கிறிஸ்துவின்
அடிச்சுவடுகளில்
துன்பத்தின்
அர்த்தம்
“கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்பப்பட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும்படி ஒரு மாதிரியை விட்டுச் சென்றார்”
(1பேதுரு 2:21). துன்பம் என்பது கிறித்தவ வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அது தண்டனை அல்ல; மாறாக, மீட்பின் பயணத்தில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு. கிறிஸ்துவின் சிலுவை, துன்பத்தின் வழியே வாழ்வும் நம்பிக்கையும் பிறக்க முடியும் என்பதற்கான உயர்ந்த சாட்சி.
‘உங்கள் செல்வம்
எங்கு
உள்ளதோ…’ - இத யத்தை
நோக்கிய
இயேசுவின்
அழைப்பு
மத்தேயு
நற்செய்தியில் இயேசு கூறுகிறார்: “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்”(6:21).
இந்த வார்த்தைகள், மனித வாழ்வின் மையத்தைத் தொடுகின்றன. உண்மையான செல்வம் என்பது வங்கிக் கணக்குகளிலும் சொத்துகளிலும் அல்ல; மாறாக, அது மனித இதயத்தில் சேமிக்கப்படுகிறது. இன்று பொருள் செல்வம் வழிபாட்டுப் பொருளாக மாறியிருக்கும் சூழலில், இந்த இறைவார்த்தை ஒரு வலுவான சவாலாக நம் மத்தியில் ஒலிக்கிறது.
நாம் இயந்திரங்கள்
அல்ல;
நாம்
ஓர்
இதயம்!
திருத்தந்தை
வலியுறுத்தும் ஓர் அடிப்படை உண்மை: மனிதன் ஓர் இயந்திரம் அல்ல; அவன் ஓர் இதயம். இதயம் என்பது எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், கனவுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மனித ஆளுமையின் மையம். அதிகப்படியான செயல்பாடுகள் இதயத்தை நிரப்புவதில்லை; மாறாக, சிதறடிக்கின்றன. நாளின் முடிவில் தோன்றும் வெறுமை, ‘நான் எதற்காக வாழ்கிறேன்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் வாழ்க்கையைப் பார்ப்பது என்றால், இந்த இதயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதாகும்.
ஓய்வற்ற இதயம்
- நிலையான
உண்மை
புனித
அகுஸ்தினார் தனது ‘Confessions’எனும் நூலில்
இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகப் படைத்தீர்; எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறும் வரை ஓய்வற்றதாகவே இருக்கும்.” இந்த ஓய்வற்ற நிலை குழப்பத்தின் அறிகுறி அல்ல; மாறாக, மனிதன் தனது இறுதி இலக்கான கடவுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கான சாட்சி. மனிதன் ‘வீடு திரும்பும்’ பயணத்தில்
இருக்கிறான்; அந்த வீடு பொருளோ, அதிகாரமோ அல்ல; கடவுளின் அன்பில் அடையும் நிறைவு.
துன்பத்தின் வழியே
நற்செய்தியின்
பாதை
கிறித்தவ
வாழ்க்கை துன்பமற்ற வாழ்க்கை அல்ல; ஆனால், அது அர்த்தமற்ற துன்பமும் அல்ல; இயேசு கிறிஸ்து தம்மை முழுமையாக மக்களுக்காக அர்ப்பணித்து, சிலுவை வரை சென்றார். அவரது உயிர்த்தெழுதல், துன்பத்திற்கு இறுதி வார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. “சிலுவையில்லாக் கிறிஸ்துவை அறிவிப்பது, உயிரற்ற கிறித்தவத்தை அறிவிப்பதே” என்றார்
புனித இரண்டாம் யோவான் பவுல். நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ளப்படும் துன்பம், மனிதனை உடைக்காது; மாறாக, உள்ளார்ந்த மனிதனை உருவாக்குகிறது.
பலவீனத்தில் வெளிப்படும்
வல்லமை
புனித
பவுல், தனது சாதனைகளில் அல்ல; தனது பலவீனங்களில் பெருமை பேசுகிறார்: “நான் பலவீனமாக இருக்கும்போதுதான் வலிமையானவன் ஆகிறேன்”
(2கொரி 12:10). அவரது வாழ்க்கை, துன்பம் கடவுளின் அருளுக்கு இடையூறல்ல; அது அருளின் மேடையாக மாறமுடியும் என்பதற்கான சாட்சி. முழுமையான அர்ப்பணிப்பே உண்மையான திருத்தூதருக்கான தகுதி.
பிறரிடம் திறக்கும்
இதயம்
- உண்மையான
செல்வம்
உண்மையான
செல்வம் கடவுளின் அன்பிலும், சகோதரர்-சகோதரிகளின் உடனிருப்பிலும் கண்டுபிடிக்கப்படுகிறது. பிறர் நம்மை மெதுவாக நடக்கச் சொல்கிறார்கள், கேட்கச் சொல்கிறார்கள். சில நேரங்களில் நம் திட்டங்களை மாற்றச் சொல்கிறார்கள். அந்த இடையூறுகளுக்குள்ளேதான் கடவுளின் அழைப்பு மறைந்திருக்கிறது. “அன்பு கொடுக்கப்படும்போதுதான் அது மேலும் பெருகுகிறது” என்கிறார்
புனித அன்னை தெரேசா.
கிறிஸ்துவில்
நமது
உறுதியான
எதிர்நோக்கு
இயேசு
கிறிஸ்து தமது மனுவுருவெடுத்தல், பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, மனித இதயத்தின் ஓய்வற்றத் தேடலுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியுள்ளார். கிறிஸ்துவில் நமது வாழ்க்கை வெற்றி பெற்றுவிட்டது. அன்றாட வாழ்வின் சிறிய இழப்புகளிலும் அந்த வெற்றி தொடர்ந்து வெளிப்படுகிறது. துன்பமே தோல்வி அல்ல; துன்பத்தின் நடுவில் கடவுளை இழப்பதே உண்மையான தோல்வி; ஓய்வற்ற இதயத்தின் உண்மையான புகலிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே என்பதை உணர்வதே நம் கிறித்தவ வாழ்வு.
1. கிறிஸ்துவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பை அறிவிக்கின்ற வானதூதரிடம் மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்ற கேள்வியைக் கேட்கின்றார். குழந்தையே பெற இயலாத பெண்ணிற்கான வழக்கத்திற்கு மாறான பிறப்பு அறிவிப்பைத் தொடர்புப்படுத்துகின்ற திருவிவிலியக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டால், அவரின் இத்தகைய விசாரிப்பானது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. அத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் அவர்களின் கடுமையான தொடர் செபத்திற்கு (ஒப்பிடுக. தொநூ 15:2;30:22-23; 1சாமு 1:10; லூக் 1:13), முறையான திருமண வாழ்வு வழியாக (1சாமு 1:19-20) கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து, இயல்பாகவே கருத்தரிக்கும் இயல்புடைய திருமணமான பெண்களோடு தொடர்புடையவை.
ஆனால்,
மரியா மாறுபட்டதொரு சூழ்நிலையில் வானதூதரின் செய்தியைப் பெறுகின்றார். அதாவது, அவர் கருத்தரிக்கும் தன்மை பிரச்சினைகளோடு இருந்த ஒரு திருமணமான பெண் அல்ல; மாறாக, அவரின் தன்னிச்சையானதொரு முடிவினால் கன்னியாக இருப்பதற்கு உளமார விரும்புகின்றார். எனவே, கடவுள் மீதான அவரின் அன்பின் கனியாகிய, கன்னித்தன்மைக்கான அவரின் எண்ணமானது, அவருக்கு அறிவிக்கப்பட்ட தாய்மைக்கு ஒரு தடையாகத் தோன்றுகின்றது.
மரியாவின்
வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால், முதலில் அவை அவரின் இப்போதைய கன்னித்தன்மையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்துவதாகத் தோன்றலாம். மரியா ‘கணவனை அறியவில்லை’ என்று
கூறுவதன் வழியாக, அவர் ஒரு கன்னி என்று உறுதியாகக் கூறுகின்றார். எனினும், ‘இது எப்படி நிகழும்?’ என்று கேட்கப்படுகின்ற கேள்வியின் சூழலமைவு மற்றும் அதைத் தொடர்ந்து வருகின்ற ‘நான் கன்னி ஆயிற்றே!’ என்ற உறுதியானது, அவரின் அப்போதைய கன்னித்தன்மையையும் மற்றும் கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தில் அவர் பயன்படுத்துகின்ற சொல்லாடலானது, அவரின் நிலைத்த மற்றும் நீடித்தக் கன்னித்தன்மையை வெளிப்படுத்துகிறது.
மரியா கடவுளின்
விருப்பத்தோடு
முழுமையாக
ஒத்துழைத்தார்
2. இந்தச்
சிரமத்தைக் குறிப்பிட்டு, மரியா இறைவனின் திட்டத்தை ஒருபோதும் மறுக்கவில்லை; மாறாக, அதற்காகத் தன்னை உறுதிப்படுத்துவதற்கான அவரின் எண்ணத்தை
வெளிப்படுத்துகின்றார்.
மேலும், நாசரேத்தூர் பெண் இறைத்திட்டத்தோடு முழு இணக்கமாகவே எப்பொழுதும் வாழ்ந்தார்; ஆண்டவரைத் திருப்திபடுத்துகின்ற எண்ணத்தோடே கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். உண்மையில் கன்னி வாழ்விற்கான அவரின் எண்ணமானது, “அவருடைய அனைத்து மனித மற்றும் பெண்தன்மையோடு” (with all her human and feminine ‘I’)
கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவரை ஒழுங்குபடுத்தியது. மேலும், நம்பிக்கையின் இந்தப் பதிலானது ‘முன்னின்று உதவுகின்ற கடவுளின் அருள் மற்றும் தூய ஆவியாரின் செயலுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை’ (மீட்பரின்
தாய், எண்.13) ஆகிய இந்த இரண்டையுமே உள்ளடக்கியதொன்றாகும்.
யூதக்
கலாச்சாரத்தில் கன்னித்தன்மையானது ஒரு மதிப்பீடாகவோ அல்லது தேடிப்பெற வேண்டியதோர் இலக்காகவோ கருதப்படாததால், மரியாவின் வார்த்தைகளும் எண்ணங்களும் இயல்பாக நிகழ முடியாததொன்றாகச் சிலருக்குத் தோன்றுகின்றது. அதே பழைய ஏற்பாட்டு ஏடுகள் பல, நன்கு அறியப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கருத்துகளில் இதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, நீதித் தலைவர்கள் புத்தகத்தில், இளம் வயதிலும் மற்றும் திருமணமாகாத நிலையிலும் இறப்பைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்த ஜெப்தாவினுடைய மகள் அவளின் கன்னித்தன்மை குறித்துப் புலம்புகின்றாள். அதாவது, திருமணம் செய்துகொள்ள அவளால் இயலவில்லையே என்பதற்காக அவள் புலம்புகின்றாள் (நீதி 11:38). மேலும், “பலுகிப் பெருகி...” (தொநூ 1:28) என்ற இறைக்கட்டளையினிமித்தம், திருமணமானது தாய்மையோடு தொடர்புபடுத்தப்படுகின்ற, இன்ப - துன்பங்களை உள்ளடக்கிய பெண்ணிற்கான இயற்கையானதோர் அழைப்பாகவே கருதப்படுகின்றது.
3. மரியாவின்
முடிவானது எத்தகையதொரு சூழ்நிலையில் பக்குவமானதொரு நிலையை அடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, கிறித்தவம் தொடங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளிலேயே கன்னிமை பற்றியதொரு குறிப்பிடத்தக்க நேர்மறை எண்ணமானது சில யூதர்கள் மத்தியில் தோன்றத் தொடங்கியது என்பதையும் நாம் கட்டாயம் நினைவில்கொள்ளவேண்டும். உதாரணமாக, கும்ரானிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த சான்றுகளின் அடிப்படையில், எஸ்ஸீனியர்கள் குழும வாழ்வின் பொருட்டும், கடவுளோடு ஒரு நெருங்கிய உறவுகொள்வதன் பொருட்டும் திருமணப் பழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தனர், மணத்துறவு வாழ்வை மேற்கொண்டனர்.
மேலும்,
எகிப்தில் இருந்த ஒரு பெண்கள் குழுமமானது, எஸ்ஸீனிய ஆன்மிகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டது மற்றும் தற்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தது. அலெக்சாந்திரியாவின் பிலோ என்பவரால் ஒரு சமயக் குழுவாக (sect) விவரிக்கப்படும்
‘Therapeutae’ என்கிற பெண்கள் குழுமமானது, ஆழ்நிலைத் தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது மற்றும் ஞானத்தேடலை மேற்கொண்டது (De Vita Contemplativa, 21-90).
மணத்துறவு
மற்றும் கன்னி வாழ்வின் முன்னுதாரணமாக இருந்த இத்தகைய யூதச் சமயக் குழுக்களைப் பற்றி மரியா அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், திருமுழுக்கு யோவான் துறவு வாழ்வு வாழ்ந்திருக்கலாம் என்கிற உண்மையும், அவரின் சீடர்களின் குழுமத்தில் இது மிகவும் உன்னதமாகக் கருதப்பட்டது என்பதும், மரியாவின் கன்னிமைக்கான தேர்வானது இந்தப் புதிய கலாச்சார மற்றும் சமயச் சூழலைச் சார்ந்தது என்கிற யூகக் கருத்திற்குத் துணையாகலாம்.
4. இருப்பினும்,
நாசரேத்துக் கன்னியின் இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வானது, அவரைச் சுற்றியிருந்தவர்களின் மனநிலையோடு அவருடைய உள்மனநிலையையும் தொடர்புபடுத்தி, அவரில் நிறைவேறிய மறையுண்மையின் தனித்துவத்தை
முற்றிலும் தவிர்க்கக்கூடிய தவற்றில் நம்மை விழவைக்கக்கூடாது. குறிப்பாக, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்து பிறப்பு அறிவிப்புச் செய்தியின் பொழுது வானதூதரால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்கதோர் அருளை மரியா பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. “அருள்மிகப் பெற்றவரே”
(லூக் 1:28) என்ற வாழ்த்தொலியானது திரு அவையின் பொருள் விளக்கத்தின்படி, மரியா அவருடைய பிறப்பின் தொடக்கத்திலிருந்தே புனிதத்தின் முழுமையினால் வளப்படுத்தப்பட்டிருந்தார் என்பதன் பொருள் ஆகும். அமல உற்பவத்தின் தனிப்பட்ட சிறப்புச் சலுகையானது, அந்த நாசரேத்தூர் இளம்பெண்களின் ஒட்டுமொத்த ஆன்மிக வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மரியாவின் ஏழ்மையை ஆண்டவர்
வளமையாக
மாற்றுகின்றார்
இவ்வாறாக,
திரு அவையின் வரலாற்றில் கன்னிமை அர்ப்பண வாழ்விற்கு (Virginal Consecration) அநேகப்
பெண்களை ஈர்க்கின்ற அதே தூய ஆவியாரின்2 தூண்டுதலினால், கன்னித்தன்மைக்கான மாதிரியாக இருக்க மரியா வழிநடத்தப்பட்டார்.
மரியாவின்
வாழ்வில் அருளினுடைய தனிப்பட்ட பிரசன்னமானது அந்த இளம் பெண்ணானவள் கன்னிமைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது. அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஆண்டவரின் அளப்பரிய கொடைகளால் நிரப்பப்பட்டு, கன்னியாக அவரையே கொடுப்பதில் தன்
உடல், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு முனைப்போடு இருந்தார்.
அதோடு,
கன்னிமை வாழ்விற்கான அவரின் தீராத ஆசையானது, பழைய ஏற்பாடு மிகவும் உயர்வாகக் கருதுகின்ற கடவுளுக்கு முன்பான ஏழ்மை நிலையோடு இசைந்தே இருக்கிறது. இந்த வழியில் முழுமையாக அவரையே அர்ப்பணித்து, இஸ்ரயேலில் மிகவும் பாராட்டப்பட்ட, பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகிய தாய்மையையே மரியா விட்டுக்கொடுக்கிறார். இவ்வாறாக, அவர் “துணிந்து நம்பி அவரிடமிருந்து மீட்பைப் பெறுகின்ற, ஆண்டவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி மிக்கவர்களிடையே உயர்ந்து நிற்கின்றார்” (இறைத்திட்டத்தில்
திருச்சபை , எண். 55).
எவ்வாறாயினும்,
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் அவரை எளியவராகக் காண்பிப்பதிலும், ஆன்மிகக் கனிகளை மட்டுமே இலக்காகக் கொள்வதிலும், ஆண்டவர் அவரின் ஏழ்மையை வளமையாக மாற்றியிருக்கின்றார் என்பதை மரியா கண்டுகொள்கின்றார். மரியா
உன்னதக் கடவுளுடைய மகனின் கன்னித் தாயாக இருப்பார். பின்னர், யாரையெல்லாம் மீட்க இந்த இறைமகன் வந்தாரோ, அந்த மனிதர்களையெல்லாம் நோக்கி அவருடைய தாய்மையானது அகலப்படுத்த வேண்டியுள்ளதையும் அவர் கண்டுகொள்வார் (ஒப்பிடுக. Catechism of the Catholic
Church, n.501).
மூலம்:
John Paul II, Our Lady intended to remain a virgin, in
‘L’Osservatore Romano’ Weekly Edition in English, 31 July 1996, p.7.