‘கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை
மேற்கொள் பவர்க்கு’
(குறள் 981)
என்ற
குறள் வரிகளுக்கு ஏற்ப, நன்மைகளையே வாழ்வின் கடமையாய் ஆற்றி சான்றாண்மையாளராக வாழ்ந்து, ‘நீதிமான்’
என்ற ஒற்றைச் சொல்லில் ஓராயிரம் கருத்துகளைப் பதித்தவர் புனித யோசேப்பு.
யார் இந்த
யோசேப்பு?
திருமறை
நூல் மற்றும் திரு அவையின் பாரம்பரிய போதனைகளின்படி இவர் 1. தாவீதின் வழிமரபிலே வந்தவர் (லூக் 1:27); 2. கன்னி மரியின் கற்புள்ள காவலர் (மத் 1:25); 3. இயேசுவின் வளர்ப்புத் தந்தை (மத் 2:13-15, 19-23); 4. திருக்குடும்பத்தைப் பேணி வளர்த்தவர் (லூக் 2:41-52); 5. திரு அவையின் நம்பிக்கையின் பாதுகாவலர் என்று திருத்தந்தை 9-ஆம் பத்திநாதரால் அறிவிக்கப்பட்டவர்; 6. இறைத்திட்டத்திற்கு எப்போதும் பணிந்தவர் (மத் 1:24); 7. கற்புக்கும் நற்படிப்பிற்கும் பாதுகாவலர்; 8. திருவிவிலிய நற்செய்தியில் நீதிமான் (மத் 1:49); 9. உழைக்கும் மக்களின் முன் மாதிரி (மத் 13:55).
புனித
யோசேப்பு திருவிவிலியத்தில் ஒரு வார்த்தைகூட பேசாதவர். ஆனால், திரு அவையில் அன்னை மரியாவிற்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்டு வணங்கப்படும் புனிதர். இவரது குழந்தை இவருக்குச் சொந்தமானது இல்லை; வெறுமனே இவரது அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் இறைச் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அன்னை மரியாவையும், குழந்தை இயேசுவையும் தன் அரவணைப்பில் இறுதி வரை கண்ணின் மணிபோல் பாதுகாத்தவர். இவ்வுலகில் வேறு எந்த மனிதராலும் இதுபோல் செய்ய முடியாது. இதில்தான் புனித யோசேப்பின் மாண்பும் நேர்மையும் அடங்கியிருக்கிறது.
“புனித யோசேப்பு ஒரு தந்தையின் இதயத்தோடு இயேசுவை அன்பு செய்தார்”
என்று மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். இயேசுவுடனான தன் உறவில் புனித யோசேப்பு விண்ணகத் தந்தையின் மண்ணக நிழலாக இருந்தார். ஓசேயா 11:3-4-இல் கூறப்பட்டுள்ளது போல் அவருக்கு நடை பயிற்றுவித்தார்; அவரைக் கையில் ஏந்தினார்; அவரது கன்னங்களை ஆரத் தழுவி குனிந்து அவருக்கு உணவு ஊட்டினார்.
‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே;
சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே’
என்ற
புறநானூற்றுப் பாடல் கூறுவதைப் போல் இயேசு பெற்றிருந்த ஞானத்திற்கும் அறிவுத்தெளிவிற்கும் அடிப்படைக் காரணம் புனித யோசேப்பின் தந்தைக்குரிய அக்கறையும் வளர்ப்பும்தான். “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? இவர் தச்சருடைய மகனல்லவா?” (மத் 13:54-55) என்று மக்கள் வியந்து போற்றும் அளவிற்கு யோசேப்பின் வளர்ப்பு இருந்துள்ளது. மேலும், நான்கு நற்செய்தியாளர்களும் இயேசுவை யோசேப்பின் மகன் என்று அழைக்கத்தக்க விதமாக, ஒரு தந்தையின் பாசத்தையும் கடமைகளையும் செய்துள்ளார்.
சாதாரணமாக,
அதிகம் செய்தித்தாள்களில் இடம்பெறாத, மேடைகளில் தோன்றாத, புகழ் வெளிச்சத்தில் மின்னாத நிழல் பணியாளர்கள் பலர் உள்ளனர். முக்கியமாக மருத்துவமனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உழைத்து உருக்குலைந்து அனைவருக்கும் உணவு விளைவித்துக் கொடுக்கும் விவசாயிகள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுபவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் போன்ற இவர்கள்தாம் சாதாரண மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளனர் எனலாம். இவர்கள்தான் அதிகம் வெளிச்சத்திற்கு வராதவர்கள். நிழலின் மறைவில் பணியாற்றுபவர்கள். ஆனால், இவர்கள் பணிசெய்யாவிட்டால் வீடும் ஊரும் உலகமும் நாற்றமெடுத்துவிடும்.
இவர்கள்தாம்
மக்களின் வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாகச் சுழல அச்சாணியாக இருக்கின்றனர். அதேபோல்தான் புனித யோசேப்பும், வெளிப்படாத மறைந்த வாழ்வில்தான் மீட்பின் வரலாற்றில் ஒப்புயர்வற்ற பங்களிப்பை வழங்கியுள்ளார்.
‘ஏழையாகப் பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்;
துன்பத்தில்
துவண்டாலும்
தூய்மையான
வாழ்வு வாழ்ந்தவர்;
கஷ்டங்களுக்கு
மத்தியிலும் கண்ணியமாக வாழ்ந்தவர்.’
உழைத்து
வாழவேண்டும் என்ற உழைப்பின் உன்னதத்தை உணர்த்தியவர் புனித யோசேப்பு. அதனால்தான் இவர் அகில உலகத் திரு அவையின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கற்பிற்கு, கல்விக்கு, திருமணம், குடும்பங்கள், நல்ல மரணம், தொழிலாளர்கள், கர்ப்பிணிகள் பயணம் செய்வோர், புலம்பெயர்ந்தோர், அகதிகள் இவர்களுக்கெல்லாம் பாதுகாவலராக இருக்கிறார். இவர்களெல்லாம் புனித யோசேப்புவிடம் வரங்களைக் கேட்டு தவறாமல் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புனித
யோசேப்பிடம் வரம் கேட்டு எவரும் அடையாமல் போனதில்லை என்று புனித தெரேசம்மாள் கூறியதை நினைத்து, நாமும் நமது செபங்களை, வேண்டுதல்களை, விண்ணப்பங்களை, நம் குடும்பங்களை வரம் தரும் வளனாரிடம் சமர்ப்பிப்போம்.
கேட்ட
வரங்களைப் பெற்று இறை மகிமையில் திளைப்போம்.
“மனுவுருவான இறைமகனின் தாயாக இருப்பதற்குத் தாழ்ச்சி மிகுந்த அடியவளை அழைத்த இறைவனின் பெருந்தன்மையை நினைவுகூர்ந்து ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடலில்’ (Magnificat) கன்னி மரியா எடுத்துரைக்கிறார்” என்று மரியா பற்றிய தனது மறைக்கல்வி போதனையில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் ‘மரியாவின் புகழ்ச்சிப் பாடல்’ என்று அழைக்கப்படுகின்ற Magnificat பற்றிக் கூறுகின்றார்.
1.
பழைய ஏற்பாட்டுப் பாரம்பரியத்தினால் தூண்டப்பட்டு, மரியா அவர் வழியாகக் கடவுள் செய்த
அற்புதங்களைப் புகழ்ச்சிப் பாடல் பாடிக் கொண்டாடுகின்றார். இப்பாடல் கிறிஸ்து பிறப்பு
அறிவிப்பிற்கான கன்னி மரியாவின் பதிலாக இருக்கின்றது: வானதூதர் தனது உரையாடலில் மரியாவை
மகிழ்வதற்கு அழைக்கின்றார். ஆகவே, தனது ஆன்மாவின் புகழ்ச்சியை அவரது மீட்பராம் கடவுளுக்கு இப்பொழுது வெளிப்படுத்துகின்றார்.
அவரது மகிழ்ச்சியானது வரலாற்று முக்கியத்துவமில்லாத ஒரு சாதாரண பெண்ணான அவரை நோக்கி
இறைவனின் கருணைமிக்க பார்வை திரும்பியதன் சொந்த அனுபவத்திலிருந்து பெருக்கெடுக்கின்றதொன்றாகும்.
‘Magnificat’ என்ற சொல்லானது, உடன்படிக்கையின் மக்களது
நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் மனித ஆன்மாவின்
உன்னதமான ஆசையையும் கடந்துசென்று, வானதூதர் வழியாக இறைவனின் எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படுத்தும்
அவரது மேன்மையைக் கொண்டாடுதல் என்ற பொருள் கொண்ட கிரேக்க வார்த்தையின் இலத்தீன் மொழிபெயர்ப்பாகும்.
‘வல்லவராம்
கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்’
வல்லமை
மற்றும் இரக்கமுள்ள ஆண்டவருக்கு முன், இப்பாடல் வழியாக மரியா அவரது தாழ்ச்சியின் உணர்வை
வெளிப்படுத்துகின்றார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என்
மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்” (லூக் 1:47-48). ‘Tapeinosis’ என்ற
கிரேக்கச் சொல்லானது ஒருவேளை சாமுவேலின் தாயாகிய அன்னாவின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.
இது தனது துன்பங்களைக் கடவுளிடம் நம்பி ஒப்படைக்கின்ற ஒரு மலடியின் ‘அவமானம்’ (humiliation) மற்றும் ‘இழிநிலையை’ (misery) (ஒப்பிடுக. 1சாமு 1:11) நம்முடைய
கவனத்திற்குக் கொண்டு வருகின்றது. இதற்கு ஒத்ததோர் உணர்வோடு, தனது அற்ப நிலையை உணர்ந்து
அவரது ஏழ்மை நிலையை ஒரு சுதந்திரமான தீர்மானத்தின் வழியாக நாசரேத்தைச் சார்ந்த ஓர்
எளிய பெண்ணைக் கண்ணோக்கி, மீட்பரின் தாயாக அழைத்த இறைவன்முன் வெளிப்படுத்துகின்றார்.
2.
“இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்” (லூக் 1:48) என்ற வார்த்தைகளானது முதன் முதலாக மரியாவை
‘பேறுபெற்றவர்’ என்று அழைத்த எலிசபெத்தின் வாழ்த்துச்
செய்தியிலிருந்து (லூக் 1:45) எழுந்ததொன்றாகும். அந்த அறிவிப்புச் செய்தியானது ஒரு
தளராத உத்வேகத்தோடு எந்தவித தயக்கமுமில்லாமல் இன்னும் அதிகமாக எங்கும் எடுத்துச் செல்லப்படும்
என்பதை இப்பாடல் முன்னறிவிக்கின்றது. அதேநேரத்தில், திரு அவையின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே
வழக்கத்திலிருக்கின்ற இயேசுவின் தாய்க்கான சிறப்பு வணக்கத்திற்கும் சான்றுபகர்கின்றது.
மரியாவின் புகழ்ச்சிப் பாடல்தான் நாசரேத்து கன்னி மரியாவுக்கான திரு அவையின் அன்பை
வெளிப்படுத்த, ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்ட பல்வேறுபட்ட
பக்தி வடிவங்களின் முதல் கனியாக இருக்கின்றது.
3.
“ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே
அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி
வருகிறார்” (லூக் 1:49-50).
மரியாவில்
இறைவன் செய்த அந்த அரும்பெரும் செயல்கள் யாவை? பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது
எகிப்து அல்லது பாபிலோனியாவிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்ததைக் குறிப்பதற்குப்
பயன்படுத்தப்படுகிறது. மரியாவின் புகழ்ச்சிப் பாடலில், வானதூதரின் கிறிஸ்து பிறப்பு
அறிவிப்பு நிகழ்விற்குப் பிறகு நாசரேத்தில் நிகழ்ந்த மறையுண்மையான இயேசுவின் கன்னிக்
கருத்தரிப்பைக் குறிக்கின்றது.
மரியாவின் புகழ்ச்சிப் பாடல், உண்மையில் ஓர் இறையியல் பாடல்.
ஏனென்றால், அது மரியாவின் தாழ்நிலையைக் கண்ணுற்ற
கடவுள் கபிரியேல் தூதர் அறிவித்தவாறு எல்லாம் செய்ய வல்லவர் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனிடமும்
நம்பிக்கை மற்றும் கனிவு கொண்ட இரக்கமுள்ள கடவுளாகவும் இருக்கிறார்.
“அவர்தம்
தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து
வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார்” (லூக் 1:51-53).
அறிவார்ந்த
அவரின் வரலாற்றுப் பார்வையோடு, கடவுளின் புரிந்துகொள்ள இயலாத செயலின் அர்த்தத்தைக்
கண்டுபிடிப்பதில் மரியா நம்மை வழிநடத்திச் செல்கின்றார். உலகத்தின் தீர்ப்புகளைத் தலைகீழாக மாற்றி, பணக்காரர்
மற்றும் அதிகாரம் படைத்தவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு
உதவ வருகின்றார். மேலும், அவரிடம் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கு மிதமிஞ்சிய
வகையில் நலன்களால் அவர் நிரப்புகிறார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 37).
இத்தகைய
வார்த்தைகள் மரியாவைத் திடமான மற்றும் உயர்வானதொரு மாதிரியாகக் காட்டுகின்றன. மேலும்,
கடவுளின் கருணையை ஈர்ப்பது தாழ்ச்சிமிகுந்த இதயமே
என்பதையும் நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.
கடவுள் அவரது வாக்குறுதிகளை
அபரிமிதமான தாராள குணத்தோடு மரியாவில் நிறைவேற்றுகின்றார்!
5.
இறுதியாக, மரியாவின் புகழ்ச்சிப் பாடலானது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குக் கடவுளது வாக்குறுதிகள், அவரது நம்பிக்கைத்தன்மையின் நிறைவை
உயர்த்திப்பிடிக்கின்றது: “மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக
இருந்து வருகிறார்” (லூக் 1:54-55).
தெய்வீகக்
கொடைகளால் நிரப்பப்பட்ட மரியா, தன் பார்வையைத் தனது வாழ்வில் நிகழ்ந்த சொந்த நிகழ்வுகளோடு
நிறுத்திக்கொள்ளவில்லை; மாறாக, இந்தக் கொடைகள் எவ்வாறு கடவுளின் கருணையை அவரது மக்கள்
அனைவரிடமும் காட்டுகின்றன என்பதையும் உணர்ந்தாள். அவளில், கடவுள் தனது வாக்குறுதிகளை
நம்பகத்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையுடன் நிறைவேற்றுகிறார்.
பழைய
ஏற்பாட்டாலும், சீயோனின் மகளின் ஆன்மிகத்தாலும் ஈர்க்கப்பட்டு, மரியாவின் புகழ்ச்சிப் பாடல் அதன் அடிப்படையிலான இறைவாக்கினர்
நூல்களை (prophetic texts) மிஞ்சி, இஸ்ரயேலின் மீட்பர் பற்றிய
நம்பிக்கைகளைவிட (messeianic hopes)
அதிகமாக இறைத் தலையீட்டின் தொடக்கத்தை ‘அருளால் நிறைந்தவளாகிய’ அவரில் வெளிப்படுத்துகிறது; இது வார்த்தை மனுவுருவாதலின்
புனிதமிக்க மறைபொருள் ஆகும்.
மூலம்:
John Paul II, Mary sings the praises of
God’s mercy, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 13 November
1996, p.11.
மே மாதம் என்றதும் உங்கள் மனத்தில் எழும் சொல் என்ன? ‘மாதா வணக்கம்’ என்றால் நீங்கள் நல்ல கத்தோலிக்கர் என்று பொருள். உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் நமது பங்குகளில் மாதாவின் வணக்க மாதம் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. ‘தேவதாயின் மாதம் இதுவல்லவோ! அதைச் சிறப்பாய்க் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா’ என்றொரு சிறப்புப் பாடல் அக்காலத்தில் பாடப்பட்டது தெரியுமா? இன்றைய தலைமுறையினர் அறியாத அருமையான பாடல் அது.
முன்பெல்லாம்
வணக்க மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழா போலவே கொண்டாடப்பட்டது. மரியன்னைக்கு நம் அன்பை, நன்றியை, பாசத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கோவில்களிலும் இல்லங்களிலும் நடத்தப்பட்டன. அத்துடன், அன்னையிடம் காணப்படும் நற்பண்புகள், நல்லியல்புகளை நாமும் பின்பற்ற அறைகூவல் விடுக்கும் நாள்களாகவும் அந்நாள்கள் அமைந்தன.
இன்றோ
பெரும்பாலும் கிராமங்களில் மட்டுமே வணக்க மாதம் கொண்டாடப்படுகிறது. அங்கே இன்னும் மக்கள் மாலை நேரங்களில் கோவிலுக்குச் செல்கிறார்கள். செபமாலை, மரியன்னைப் பாடல்கள், மன்றாட்டு, மாதாவின் புதுமைகளை வாசித்தல், நிறைவாக நற்கருணை ஆசிர் நடைபெறுகிறது, சில இடங்களில் இனிப்போ, சிற்றுண்டியோ வழங்கப்படுகிறது. இன்னும் சில பங்குகளில் ஒவ்வொரு நாள் வணக்கத்தை ஒரு குடும்பத்தினர் சிறப்பிக்கின்றார்கள். இவையெல்லாம் கடந்த காலத்தின் எச்சங்களாகவே பார்க்கப்படவேண்டும். இன்னும் எவ்வளவு காலம் இவை நீடிக்கும் என்பதுவும் கேள்விக்குறியே.
ஊரக
மற்றும் நகரப் பங்குகளில் இந்தப் பழக்கங்கள் இல்லை. மே மாதம் என்றாலே
விடுமுறை மாதம். எனவே, பலரும் பயணங்களில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள்கூட மே மாதம் நடைபெறுவதில்லை
என்றாகிவிட்டது. குடும்ப இறைவேண்டல் போலக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் பக்தி முயற்சிகளுள் வணக்க மாத நிகழ்வுகளும் சேர்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது. எனவே, குடும்ப இறைவேண்டல் போலவே, மாதா வணக்கத்தையும் நாம்
மறு ஆய்வு செய்து புதுப்பிக்கவேண்டும்.
ஆண்டு
முழுவதுமே அன்னையின் மாதங்கள்தானே! நம் திரு அவையின் திருவழிபாட்டுக் காலண்டரை உற்றுநோக்கினால், சனவரி 01 ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ பெருவிழாவிலிருந்து, டிசம்பர் 08 ‘மரியன்னையின் அமல உற்பவம்’ பெருவிழாவரை எல்லா மாதமும் ஏதோ ஒரு வகையில், ஒரு பெயரில் அன்னைக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இருப்பினும், மே மாதம் மட்டும்
சிறப்பான விதத்தில் அன்னையின் வணக்க மாதம் என்று கொண்டாடப் படுவது ஏன்? என்ற கேள்வி சிலரிடம் எழலாம்.
13-ஆம்
நூற்றாண்டிலிருந்தே மே மாத வணக்கம்
நடைபெற்று வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலிருந்துதான் இப்போது நாம் கொண்டாடும் முறைகள் அறிமுகமாயின. மரியன்னை திருத்தந்தையான ஆறாம் பவுல், 1965-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் ‘மே மாதம்’ (Mense Maio) என்ற தலைப்பிலேயே ஒரு சுற்றுமடல் வெளியிட்டு மே மாத வணக்கத்தை
ஊக்குவித்தார். ‘மரியாவைக் கொண்டாடுபவர், அவர் மகன் இயேசுவை அறியாமல் இருப்பாரா?’ என்பது அவரது கேள்வி.
அந்தச்
சுற்றுமடல் வெளிவந்த நேரம் நம் கவனத்திற்குரியது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இறுதி அமர்விற்கு முன்னால் அது வெளியிடப்பட்டது. வியட்நாம் போர், அமெரிக்கா-சோவியத் இரஷ்யா இடையே பனிப்போர் நிகழ்ந்த காலகட்டம் அது. எனவே, அமைதியின் தேவையை வலியுறுத்தி ‘அமைதியின் அரசியான மரியாவின் பாதுகாப்பையும் பரிந்துரையையும்’ (மடல்
எண். 10) மன்றாடி, அன்னை மரியாவிடம் நம்மை ஒப்படைக்க அழைத்தது அந்த மடல்.
அந்த
மடலின் வழியாக மே மாதம் முழுவதும்
உலகெங்குமுள்ள கத்தோலிக்கர் அன்னை மரியாவைச் சிறப்பான விதத்தில் கொண்டாட வேண்டும். வீடுகளில் குடும்பமாகச் செபமாலை செபிக்கவேண்டும். அமைதியின் அரசியான அன்னையிடம் உலக அமைதிக்காக மன்றாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை ஆறாம் பவுல். இந்தச் சுற்றுமடல் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், வணக்க மாதத்தைக் கொண்டாடும் தேவையில் மாற்றமில்லை. இன்றும் உலகைப் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இன்றும் நம் குடும்பங்களில் அமைதியும் ஒற்றுமையும் தேவைப்படுகின்றன. எனவே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மே மாதத்தில் நாம்
அன்னையை அண்டி வருவோமாக.
ஆனால்,
வணக்க மாதத்தைக் கொண்டாடும் விதத்தில்தான் மாற்றங்கள் தேவை. முன்பு அன்னையின் திருச்சுரூபத்திற்கு மாலை அணிவித்து, மலர்க்கிரீடம் சூட்டி, சப்பரத்தில் பவனியாக அன்னையை அழைத்து வந்தோம். இன்றோ, சப்பரம், பவனி, மலர் மாலைகள், மெழுகுதிரிகள் போன்றவற்றிற்குத் தரும் அழுத்தத்தைக் குறைத்து, இன்றைய சூழலுக்கேற்ப வணக்க மாதத்தின் கொண்டாட்டத்தைத் தகவமைக்கவேண்டும். குறிப்பாக, மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக அன்னையிடம் மன்றாட இந்த வணக்க மாதம் உதவவேண்டும்...
1. பெருந்தொற்று, நோய்களிலிருந்து
பாதுகாக்கப்பட
மன்றாடுவோம்.
நமது உலகம் ‘கோவிட் 19’ நோயின் பேரச்சத்திலிருந்து விடுபட்டு, ஆசுவாசப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும், இன்னும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் இந்தக் கொள்ளை நோய் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்து, நம்மைக் குலைநடுங்க வைத்து விட்டது. இனிமேல் இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்று நம் உலகைத் தாக்காதபடி நாம் மன்றாட வேண்டும். அன்னையே நம் மிகப்பெரிய பரிந்துரையாளர். எனவே, பெருந்தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்பட அன்னையை நோக்கி மன்றாடுவோம்.
குறிப்பேடு
முதல் நூலில் தாவீது அரசர் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காகக் கடவுளிடம் பரிந்து மன்றாடும் ஒரு காட்சியை 21-ஆம் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஆண்டவர் இஸ்ரயேலின்மேல் கொள்ளை நோயை அனுப்பினார். அதனால், இஸ்ரயேலருள் எழுபதினாயிரம் பேர் மாண்டனர் (1குறி 21:14). அப்போது தாவீதும் பெரியோர்களும் சாக்கு உடை உடுத்தி, முகம் குப்புற விழுந்து மன்றாடினர். தாவீது கடவுளிடம், “என் கடவுளாகிய ஆண்டவரே, உமது கை என்மேலும்,
என் தந்தையின் வீட்டாரின் மேலும் இருக்கட்டும்; கொள்ளை நோய் மக்களிடமிருந்து விலகட்டும்” (1குறி
21: 17) என்று வேண்டினார்.
தாவீது
கடவுளுக்கு உகந்தவராய் இருந்தாலும், பாவங்கள் பல செய்தவர். அன்னை
மரியாவோ பிறப்பு நிலைப் பாவமின்றிப் பிறந்தவர். பாவமே அறியாதவர். எனவே, அவர் நமக்காகப் பரிந்து மன்றாடும்போது நிச்சயம் கொள்ளை நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம். எனவே, மிகவும் இரக்கமுள்ள நம் தாயை நோக்கி நாம் உருக்கமாக மன்றாடுவோம். அப்போது திருப்பாடல் 91-இல் ஆண்டவர் வாக்களித்தபடி, “இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும், நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்” (திபா
91:6) என்னும் வாக்குறுதிப்படி நாம் கொரோனா போன்ற பெருந்தொற்றுகளிலிருந்து காக்கப்படுவோம்.
2. அமைதியின் அரசியிடம் நம்
உலகையும்,
வீட்டையும்
ஒப்புக்கொடுப்போம்.
அன்னை மரியாவின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று ‘அமைதியின் அரசி.’ அவர் உலக நாடுகளிடையே அமைதி நிலவச் செய்கிறார். குடும்பங்களிலும் அமைதியைப் பெற்றுத் தருகிறார். எனவேதான், அன்னை மரியாவிடம் நாட்டையும் குடும்பத்தையும் ஒப்புக்கொடுத்து நாம் மன்றாட வேண்டும். குறிப்பாக, இஸ்ரயேல் - பாலஸ்தீனப் போர், இஸ்ரயேல் - ஈரான் போர், உக்ரைன் - இரஷ்யப் போர் போன்றவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டுமென்று உலக நாடுகளைத் திருத்தந்தையோடு இணைந்து மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுத்து உலக அமைதிக்காக அன்னையிடம் மன்றாடுவோமாக!
அமைதி
என்பது உயிர்த்த இயேசு நமக்கு வாக்களித்த கொடைகளுள் ஒன்று. இயேசுவே அமைதியின் அரசர். “அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார்” (எபே
2:14) என்பது இயேசுவைப் புகழ்ந்து பவுலடியார் எழுதிய இறைப்புகழ்ச்சி.
பிளவுபட்ட
நாடுகளை ஒன்றுபடுத்துபவர் இயேசுவே. நம் தாய் நமக்காகப் பரிந்து பேசும்போது, இயேசு இந்த அமைதியை நமக்கு வழங்குவார். எனவே, “இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள்” (1திமொ
2:2) என்ற பவுலடியாரின் பரிந்துரையை ஏற்று, நாம் அமைதியின் அரசியான அன்னை மரியாவிடம் மன்றாடுவோமாக. அப்போது நாடுகளும், நம் உலகமும் அமைதி என்னும் கொடையைப் பெற்றுக்கொள்வோம்.
3. குடும்ப ஒற்றுமைக்காக
மன்றாடுவோம்.
இன்று நம் குடும்பங்கள் சந்திக்கும் பல சிக்கல்களுக்கு ஒரு
காரணம், குடும்பங்களில் இறைவேண்டல் இல்லை என்பதே. முன்பெல்லாம் இரவு நேரங்களில் குடும்பமாக இறைவேண்டல் செய்த பின்னரே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. இன்றோ, வேலை, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு, நண்பர்கள் எனப் பல காரணிகளால் குடும்ப
இறைவேண்டல் மறைந்துவிட்டது. மரியன்னையின் வணக்க மாதம் மீண்டும் நம் இல்லங்களில் குடும்ப இறைவேண்டலைத் தொடங்க உதவட்டும். “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” (எபே
3:14-15) என்னும் பவுலடியாரின் மன்றாட்டு நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையட்டும்.
இறைத்தந்தையின்
ஆசியே நம் குடும்பங்களை ஒற்றுமையோடு வாழச் செய்கிறது. எனவே, இல்லங்களில் நாம் மண்டியிட்டு மன்றாடும் பழக்கத்தை மீண்டும் தொடரவேண்டும். “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்”
(யோசு 24:15) என்று சூளுரைத்த யோசுவாவைப் போல, ஒவ்வொரு குடும்பத் தலைவரும் குடும்ப இறைவேண்டல் வழியாக ஆண்டவருக்கு ஊழியம் செய்வார்களாக.
மே
மாதம் முழுவதும் குடும்பமாக இணைந்து இறைவேண்டல் செய்வது, அன்னையின் பரிந்துரையால் ஆசிகளை நமக்குப் பெற்றுத் தரும். கானாவூர் திருமணத்தில் பரிந்துரைத்ததுபோல, குடும்பமாய் இறைவேண்டல் செய்யும் அனைவருக்காகவும் நம் தாய் பரிந்து மன்றாடுவார். நமது மாதா வணக்கம் மேற்கண்ட மூன்று இலக்குகளையும் முன்வைத்து நடக்கட்டும். அன்னையின் மதிப்பீடுகளை வாழ்வாக்கும் நாள்களாக மாறட்டும்.
இறைவார்த்தையின் ஒளி
புனித
பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் குறிப்பிடுவதுபோல, “நீ கற்று, உறுதியாய்
அறிந்தவற்றில் நிலைத்து நில்”
(2திமொ 3:14). நம்பிக்கை என்பது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல, அது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாழ்வு பெறுவதாகும். அண்மையில் திருத்தந்தை அவர்கள் வழங்கிய புதன் மறைக் கல்வி உரையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் ‘இறைவெளிப்பாடு’ (Dei Verbum) ஆவணத்தின் வெளிச்சத்தில், கடவுள் இன்றும் மனித மொழியில் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை ஆழமாக வலியுறுத்தினார்.
1. மனித மொழியில் ஒலிக்கும்
கடவுளின்
வார்த்தை
திருத்தந்தை
வலியுறுத்திய மிக முக்கியமான உண்மை: மறைநூல் மனித மொழியில் எழுதப்பட்டுள்ளது. கடவுள் மனிதர்களிடம் பேசுவதற்காக, நம்முடைய பலவீனமான மொழியையே கருவியாகக் கொண்டார். Dei Verbum (எண் 13) கூறுவதுபோல, “மனித மொழியில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் வார்த்தை, மனிதர் பேசுவதைப் போல ஆனது.” இது இறைமகன் இயேசு மனித உருவெடுத்த (Incarnation) மறைபொருளுக்கு
நிகரானது.
திருவிவிலியம்
என்பது வெறும் கடந்த கால வரலாறு அல்ல; அது ஒரு வாழும் கடிதம். நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் தூய ஆவியானவரின் குரலைத் தேடவேண்டும். “ஆவி இல்லாமல் எழுத்து கொல்லும்”
(2கொரி 3:6) என்ற பவுலின் எச்சரிக்கை, நாம் மறைநூலை இதயத்தால் வாசிக்கவேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.
2. மீட்புக்கு வழிநடத்தும் ஞானம்
“திருமறைநூல் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழிநடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது”
(2திமொ 3:15). நற்செய்தி என்பது ஒரு தத்துவப் பாடம் அல்ல; அது ஒரு நபர் - அவரே இயேசு கிறிஸ்து. நாம் திருவிவிலியத்தைப் பயிற்றுவிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் பயன்படுத்துகிறோம் (2திமொ 3:16). ஆனால், இவை அனைத்தும் ‘அன்பால்’ செய்யப்பட வேண்டும். புனித அகுஸ்தினார் கூறுவதுபோல, “அன்பைக் கட்டியெழுப்பாத மறைநூல் விளக்கம் இன்னும் முழுமையல்ல.”
இன்றும்
நமது சூழலில், நாம் திருவிவிலியத்தை வாசிக்கும்போது, அது நம்மைச் சுற்றியுள்ள அநீதிகளையும் ஏழ்மையையும் கண்டுகொள்ளாமல் இருக்க அனுமதிக்காது. உண்மையான ஞானம் என்பது இறைவார்த்தையைச் செயலாக மாற்றுவதே.
3. இறை ஏவுதலும் மனித
ஆசிரியர்களும்:
ஒரு
சமநிலை
திரு
அவை மறைநூலின் முதன்மை ஆசிரியர் கடவுள் என்பதை உறுதியாக நம்புகிறது. அதே நேரத்தில், மனித ஆசிரியர்களும் உண்மையான கருவியாகச் செயல்பட்டனர். புனித தாமஸ் அக்குவினாஸ் கூறுவதுபோல, “அருள் இயல்பை அழிக்காது; அதனை நிறைவு செய்கிறது.” கடவுள் மனித ஆசிரியர்களின் அறிவையும் திறமையையும் பயன்படுத்தினார். எனவே, திருவிவிலியத்தை விளக்கும் போது அதன் வரலாற்றுச் சூழல், இலக்கிய வடிவங் கள் ஆகியவற்றை நாம் கவனிக்கவேண்டும். ஆனால், அதை வெறும் ஒரு வரலாற்று நூலாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது. அது இன்றும் நம் வாழ்வின் சவால்களுக்குப் பதில் அளிக்கும் உயிருள்ள வார்த்தை.
4. இன்றைய விசுவாசிகளின்
மனசாட்சியும்
சமூகப்
பொறுப்பும்
கத்தோலிக்கத்
திரு அவையின் மறைக்கல்வித் தொகுப்பு (CCC 2242) மற்றும்
திருத்தந்தையின் போதனைகளின்படி, ஒரு நம்பிக்கையாளர் தனது மனசாட்சிக்கு விரோதமான, நற்செய்தி விழுமியங்களுக்குப் புறம்பான அதிகாரங்களுக்குப் பணியத் தேவையில்லை. தமிழ்நாட்டில் நிலவும் ஊழல், போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல் போன்றவற்றுக்கு எதிராக இறைவார்த்தை நம்மை எச்சரிக்கிறது. “மறைநூல் அனைத்தையும் கடவுள் தூண்டினார்... அது நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்குப் பயனுள்ளது”
(2திமொ 3:16). நேர்மையான வாழ்வு என்பது தனிப்பட்ட தூய்மை மட்டுமல்ல; சமூக நீதியும் கலந்ததாகும்.
5. வார்த்தையால் ஊட்டமளிக்கும்
கடவுள்
திருத்தந்தை
தனது உரையை ஒரு நம்பிக்கையுடன் நிறைவு செய்தார்: “கடவுள் ஒருபோதும் தனது மக்களுக்கு வார்த்தையின் ஊட்டச்சத்தை வழங்கத் தவறுவதில்லை. மனிதன் அப்பத்தால் மட்டும் அல்ல; கடவுளின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ்கிறான்” (மத்
4:4).
தவக்காலத்தின்
இந்தச் சூழலில், நாம் வெறும் உணவைத் தவிர்ப்பதோடு நிறுத்தாமல், இறைவார்த்தையை உணவாகக் கொண்டு உருமாற்றம் அடைவோம். இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையில் வேரூன்றி, சமூகத்தில் ‘மண்ணிற்கு உப்பாகவும், உலகிற்கு ஒளியாகவும்’ திகழ்வோம்.
இதயத்தில் ஒரு
கேள்வி:
“இந்தத் தவக் காலத்தில், இறைவார்த்தை என் வாழ்வில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது? நான் வெறும் வாசகனா? வார்த்தையின்படி வாழ்பவனா?
“மரியா எலிசபெத்தைச் சந்தித்தது உண்மையில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கான தொடக்கமாகும். அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனின் மீட்புப் பணியில் ஒத்துழைப்பதில் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியை எங்கும் வாழ்கின்ற மக்களுக்கும் கொண்டு செல்பவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகின்றார்.”
1. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கின்ற நிகழ்வில் கிறிஸ்து பிறப்பின் அருளானது மரியாவை நிரப்பிய பிறகு, எலிசபெத்தின் இல்லத்தையும் நிரப்பியது என்று காட்டுகின்றது. அவரது தாயின் கருவில் சுமக்கப்பட்ட மனுக்குல மீட்பர், உலகிற்கு அவர் வந்த தன் தொடக்கத்திலிருந்தே அவரை வெளிப்படுத்தி தூய ஆவியைப் பொழிகின்றார்.
மரியா
யூதேயாவிற்குப் புறப்பட்டுச் சென்றதை விவரிக்கையில் நற்செய்தியாளர் ‘எழுதல்’ அல்லது ‘புறப்படுதல்’ என்று
பொருள்படுகின்ற ‘anístemi’ என்ற கிரேக்க வினைச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த வினைச்சொல்லானது இயேசுவின் உயிர்ப்பை (மாற் 8:31; 9:9,31; லூக் 24:7,46) அல்லது ஆன்மிக முயற்சியைக் குறிக்கின்ற உடல்சார் செயல்களைக் (லூக் 5:27-28; 15:18,20) குறிப்பதற்கும், நற்செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு நற்செய்தியாளர் லூக்கா, தூய ஆவியாரின் உந்துதலின் கீழ் உலகத்திற்கு அதன் மீட்பரைக் கொடுப்பதற்காக மரியாவைச் செயல்புரியத் தூண்டிய உறுதியானதோர் ஆர்வத்தைக் கோடிட்டுக்காட்ட விரும்பி இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார் என்பதை நாம் யூகிக்க முடியும்.
மரியா எலிசபெத்தைச்
சந்தித்தது
மகிழ்ச்சிமிக்கதொரு
மீட்பின்
நிகழ்வாகும்
2. லூக்கா
நற்செய்தியானது மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு ‘விரைந்து சென்றார்’
என்று கூறுகின்றது (லூக் 1:39). லூக்கா நற்செய்தியின் சூழலில் ‘மலைநாட்டிலுள்ள’ என்ற
குறிப்பும் கூட, இது எசாயா புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட நற்செய்திகளின் தூதுவரை நினைவிற்குக் கொண்டுவர
அழைப்பதால், ஒரு சாதாரண இட அமைப்பு விவரக்
குறிப்பு (topogrphical indication) என்பதையும் தாண்டி, அதற்கு மேலானதொன்றாகத் தோன்றுகின்றது: “நற்செய்தியை அறிவிக்கவும், நல் வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும் சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாள்கின்றார்’ என்று
கூறவும் வருவோரின் பாதங்கள் மலைகள் மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன” (எசா
52:7).
நற்செய்தி
அறிவிப்பில் இந்த இறைவாக்கு ஏடானது நிறைவேறியதைக் கண்டுகொண்ட புனித பவுலடியாரைப் போன்று, புனித லூக்காவும் மரியாவின் இறைமகனது மறைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நற்செய்தியைப் பரப்புகின்ற முதல் நற்செய்தியாளராக மரியாவைக் காண்பதற்கு நம்மை அழைப்பதாகத் தோன்றுகின்றது.
இறுதியாக,
கன்னி மரியாவின் பயணத்தின் திசையானது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதாவது, இயேசுவின் மறைப்பணியைப் போன்றே இதுவும் கலிலேயாவிலிருந்து யூதேயாவை நோக்கியதொரு பயணமாக இருக்கின்றது (ஒப்பிடுக. 9:51).
உண்மையில்,
மரியா எலிசபெத்தைச் சந்தித்தது இயேசுவின் பணிக்கானதொரு தொடக்கமாக இருந்தது. அவரது தாய்மையின் தொடக்கத்திலிருந்தே மகனது மீட்புப் பணியில் பங்கெடுப்பதில், அவர் திரு அவையில் ஒவ்வொரு காலத்தின் மற்றும் இடத்தின் மக்களுக்கும் கிறிஸ்துவின் ஒளி மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு செல்ல குறிக்கப்பட்டுள்ளோருக்கு ஒரு முன்மாதிரியாகின்றார்.
3. மரியா
எலிசபெத்தைச் சந்திக்கும் நிகழ்வானது குடும்ப உணர்வின் இயல்பான உணர்ச்சிகளுக்கு அப்பால் செல்கின்ற மகிழ்ச்சியான மீட்பு நிகழ்வின் தன்மையைக் கொண்டுள்ளது. அவநம்பிக்கையின் குழப்பமானது சக்கரியாவின் பேச முடியாத தன்மையில் வெளிப்படுத்தப்படுவதாகத் தோன்றுகையில், மரியா அவரது உயிரோட்டமான மற்றும் உடனடியான நம்பிக்கையின் மகிழ்வோடு இவ்வாறு ஆர்ப்பரிக்கின்றார்: “அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்” (லூக்
1:40).
தூய
லூக்கா, “மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது, அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று” (லூக்
1:41) என்று விவரிக்கின்றார். மரியாவின் வாழ்த்தொலியானது எலிசபெத்தின் மகன் மகிழ்ச்சியினால் துள்ளக் காரணமாயிற்று. மரியாவின் செயலால், எலிசபெத்தின் இல்லத்தில் இயேசுவின் வருகை, பழைய ஏற்பாடு மெசியாவின் உடனிருத்தலின் அடையாளமாக முன்னறிவிக்கின்ற அந்த மகிழ்ச்சியை, இன்னும் பிறக்காத அந்த இறைவாக்கினர் (திருமுழுக்கு யோவான்) கொண்டு வந்துள்ளது என்றும் பொருள் கொள்ளலாம்.
மரியாவின்
வாழ்த்தில், மீட்பின் மகிழ்ச்சியானது எலிசபெத்திற்கும் வருகின்றது. “எலிசபெத்து தூய ஆவியாரால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப்போது அவர் உரத்த குரலில், ‘பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!” (லூக் 1:41-42) என்றுரைத்தார். அச்சந்திப்பின்பொழுது
இறையொளியால் எலிசபெத்து மரியாவின் மகத்துவத்தைப் புரிந்துகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் மரியாவை முன் குறித்து உணர்த்திய எஸ்தர் மற்றும் யூதித் இவ்விருவரைவிட, அவரது வயிற்றின் கனியாகிய இயேசு என்னும் மெசியாவின் பொருட்டு அவர் பெண்களுக்குள் பேறுபெற்றவராக இருக்கின்றார்.
4. உரத்த
குரலில் எழுப்பப்பட்ட எலிசபெத்தின் வியப்பொலி (exclamation) இன்றும் நம்பிக்கையுள்ளோரின் உதடுகளால் செபத்தில் மீண்டும் மீண்டும் மிகவும் உயர்ந்தவரான அந்த இறைவனது மகனின் தாயில் நிறைவேற்றப்பட்ட அரும்பெரும் செயல்களுக்காகத் திரு அவையின் புகழ்பாடலாக ‘அருள்நிறை மரியே’ என்று தொடர்ந்து ஒலிக்கக் கூடிய, உண்மையான ஓர் ஆன்மிக ஆர்வத்தைக் காட்டுகின்றது.
‘பெண்களுக்குள் பேறுபெற்றவர்’ என்று
அவரை அழைப்பதில், எலிசபெத்து மரியாவின் நிறைவளத்திற்கான (blessedness) காரணமாக அவரது நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றார்: “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்
1:45). இவ்வாறு, மரியாவின் பெருமையும் மகிழ்ச்சியும் அவர் ‘நம்பிக்கை கொண்டவர்’
என்ற உண்மையிலிருந்து எழுகின்றன.
மரியாவின்
தனித் தகுதியினிமித்தம், அவரது சந்திப்பின் பெருமையானது எத்தகையது என்பதை எலிசபெத்தும் புரிந்துகொள்கின்றார்: “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”
(லூக் 1:43). ‘என் ஆண்டவர்’ என்ற சொல்லாடல் வழியாக எலிசபெத்து அரசருக்குரிய மற்றும் மெசியாவிற்குரிய மாண்பை மரியாவின் மகனில் கண்டுகொள்கின்றார். பழைய ஏற்பாட்டில் இந்தச் சொல்லாடலானது உண்மையில் அரசனை அழைப்பதற்கு (ஒப்பிடுக. 1அர 1:13,20,21) மேலும், மெசியாவாகிய அரசரை அழைப்பதற்குப் (திபா 10:1) பயன்படுத்தப்பட்டது. கபிரியேல் தூதர் இயேசுவைப் பற்றிக் கூறியது: “அவர் பெரியவராயிருப்பார்; உன்னதக் கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்”
(லூக் 1:32). ‘ஆவியானவரால் நிரப்பப்பட்டு’ எலிசபெத்தும்
அதே உள்ளுணர்வைப் (insight) பெற்றிருக்கிறார். இவ்வாறு, ஆழ்நிலை புலனுணர்வின் அடிப்படையில் (transcendent sense) இந்தச் சிறப்புப்
பட்டமானது எவ்வாறு புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதைக் கிறிஸ்துவின் பாஸ்கா மகிழ்ச்சியானது வெளிப்படுத்துகின்றது (ஒப்பிடுக. யோவா 20:28; திப 2:34-36).
தெய்வீக மீட்பின்
அனைத்துப்
பணியிலும்
மரியா
உடனிருக்கின்றார்
ஆச்சரியத்துடன்
வியந்து பாராட்டுகிற எலிசபெத்து, கன்னியின் உடனிருப்பானது ஒவ்வொரு நம்பிக்கையாளரின் வாழ்க்கைக்கும் ஒரு பரிசாகக் கொண்டுவரும் அனைத்தையும் பாராட்ட நம்மை அழைக்கிறார். மரியாவின் சந்திப்பில், தூய ஆவியாரைப் பொழியும் கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவானின் தாயிடம் அவர் கொண்டுவருகிறார். இந்த இடைமீட்பாளர் பங்கானது (role of mediatrix) எலிசபெத்தின் வார்த்தைகளினால் கொண்டு வரப்படுகின்றது: “உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று” (லூக்
1:44). தூய ஆவியாரின் கொடையால், மரியாவின் உடனிருப்பானது தூய ஆவியாரின் வருகைக்கான தொடக்கமாகப் (prelude to Pentecost)
பயன்படுகிறது. இவ்வாறு, மரியாவின் பங்கானது இயேசுவின் பிறப்பில் தொடங்கிய ஒத்துழைப்பை உறுதிசெய்து, இறை மீட்பின் ஒட்டுமொத்த செயலிலும் வெளிப்படுத்தப்படுவது முன்பே தீர்மானிக்கப்படுகிறது.
மூலம்:
John Paul II, Visitation is prelude to Jesus’ mission, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 9 October 1996, p.11.
பாஸ்கா காலத்தினுடைய நான்காம் ஞாயிறு ‘நல்லாயன் ஞாயிறு’ என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாண்டு ஏப்ரல் 26, 2026 அன்று இந்தத் தினம் உலக இறை அழைத்தல் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு சவால்கள் மத்தியில் வாழ்கின்ற திருநிலையினர், அழைத்தல் வாழ்வில் அனுபவிக்கும் நெருக்கடித் தருணங்களை எதிர்கொள்ள ஆற்றல் பெறுவதற்காக இறை வேண்டல் செய்யவும் ஏப்ரல் (2026) மாதத் திருத்தந்தையின் கருத்து நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இப்பின்னணியில் கடவுளின் இலவசக் கொடையான இறை அழைத்தலின் அகத்தைக் கண்டறிவது, ஆழ்ந்து தியானிப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
1. ஆண்டவரின் சீடரே அழகானவர்
‘நல்ல ஆயன் நானே’ என்று கூறிய இயேசுவைப் பின்பற்றும்போது நம் வாழ்வு அழகாகிறது. மேய்ப்பரின் பார்வையோடு நம் பார்வையை இணைத்து, அவருக்குச் செவிசாய்த்து நடந்தால் மட்டுமே அழகின் பாதையில் பயணிக்க முடியும். உண்மையில் அழகானவர் யார் என்றால், இயேசுவின் வழியைப் பின்பற்றும் சீடர்தாம்!
இறையியலாளர்
பாவெல் பிளாரன்ஸ் எழுதியது போல, துறவறம் வெறுமனே ’நல்ல’ நபரை உருவாக்குவதில்லை; மாறாக, ஓர் ‘அழகான’ நபரை உருவாக்குகிறது. அந்த அழகு கிறிஸ்துவின் வாழ்வில் இருந்து வெளிப்படும் வெளிச்சமான ஆன்மிக அழகாகும். இப்பின்னணியில் கிறித்தவ அழைப்பு என்பது இயேசுவின் வாழ்வில் பங்கேற்பதும், அவர் பணியில் பங்குகொள்வதுமாக அமைகிறது. புனித அகுஸ்தினார் தனது ஒப்புரவு அறிக்கையில் தனது இளமையின் பாவங்களை அறிக்கையிட்டாலும், கடவுளை ‘எனது மிக ஆழமான பகுதியை விடவும் ஆழமானவர்’
என்று குறிப்பிடுகிறார். சுய அறிவைவிட மேலாக, இருளில் தன்னை வழிநடத்தும் தெய்வீக ஒளியின் அழகைப் புனித அகுஸ்தினார் கண்டறிகிறார். அழைத்தலின் அகவாழ்வைப் பேணிக்காப்பதுதான் கிறிஸ்துவைச் சந்திக்கும் தளம் என்கிறார். இந்த உறவு இறை வேண்டலையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பயணம் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த சாகசப் பயணம். இங்குதான் கடவுளின் அழகையும் நன்மைத்தனத்தையும் நாம் அனுபவிக்கின்றோம்.
குடும்பங்களிலும்
பங்குத்தளங்களிலும் அழைத்தல் வாழ்வு ஆழப்படவேண்டும். நமது சூழல்கள் நம்பிக்கையால் ஒளியூட்டப்பட்டு, இடைவிடா இறைவேண்டலில் நிலைநிறுத்தப்பட்டு, சகோதரத்துவத் தோழமையால் செழுமைப்படுத்தப்படும் பொழுது கடவுளின் அழைப்பு மலர்ந்து, முதிர்ச்சி அடைந்து, தனி நபர்களுக்கும் உலகுக்கும் மகிழ்ச்சியான மீட்பின் பாதையாக அது மாறுகிறது.
2. இறையன்பின் விழிப்புணர்வு
அழைப்பு
என்பது இறையன்பைப் பற்றிய விழிப்புணர்வே ஆகும். “நம் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டு இருக்கின்றன” (மத்
10:30). அக்கறையாய் காக்கும் இறையன்பை இது வெளிப்படுத்துகிறது. இறைவேண்டல், இறைக்குரலுக்குச் செவிசாய்ப்பது, அருளடையாளங்கள், திரு அவையின் வாழ்வு முறை, அறச்செயல்கள் மூலம் கடவுளை அறிய அழைக்கப்படுகின்றோம். இரவில் எதிர்பாராத விதமாக ஆண்டவரின் குரலைக் கேட்டு ஏலியின் உதவியுடன் அதை அடையாளம் காண கற்றுக்கொண்ட இளம் சாமுவேலைப் போல, நாமும் இறைக்குரலைக் கேட்க அக அமைதிக்கான ஓர்
இடத்தைக் கண்டறியவேண்டும். இந்தச் சந்திப்பு வாழ்வை மாற்றும் தனிப்பட்ட சந்திப்பாக மாறும்.
அழைப்பு
என்பது உலகின் செவியை அடைக்கும் இரைச்சலையும் மீறி உண்மையான மகிழ்ச்சியுடனும், தாராள மனத்துடனும் பதிலளிக்க நம்மை அழைக்கும் ஒருவருடன் நெருக்கமான உரையாடலை உருவாக்குவதே ஆகும். “உங்களை விட்டு வெளியேற வேண்டாம்; உங்களுக்குள் திரும்புங்கள்; உண்மை உள் மனத்தில் வாழ்கிறது”
எனக் கூறும் புனித அகுஸ்தினார், இயேசுவின் குரலைக் கேட்பதற்காக இரைச்சலான வாழ்வின் மத்தியில் இடைநிறுத்தம் செய்யவும், உள் அமைதிக்கு இடம் அளிக்கவும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம் என்பதைப் புனிதர் நினைவூட்டுகிறார்.
நம்
திறமைகளைப் பயன்படுத்தவும், நம் பலவீனங்களைக் கிறிஸ்துவின் சிலுவையோடு இணைக்கவும் அவர் நம்மை அழைக்கிறார். ஆகவே, நற்கருணை ஆராதனைக்கு நேரம் ஒதுக்குவோம்; இறைவார்த்தையை ஆழமாய்த் தியானிப்போம்; அதைக் கடைப்பிடிப்போம்; அருளடையாளக் கொண்டாட்டங்களை வாழ்வாக்குதன் வழியாக ஆண்டவரை நாம் ஆழமாக அறிந்துகொள்வோம். ஒவ்வோர் அழைப்பும் ஒரு கொடையே. அவரை அறிந்துகொள்வது என்பது அவருடைய பராமரிப்பில் நம்மை நாம் ஒப்படைப்பதற்குச் சமமாகும்.
3. கடவுளின் வாக்குறுதியில்
நம்பிக்கை
அறிவு
தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை நம்பிக்கையிலிருந்து எழும் ஒரு மனநிலையாகும். கீழ்ப்படிந்த அன்னை மரியின் இதயம், குழந்தை இயேசுவைக் காப்பாற்றிய புனித யோசேப்பின் பராமரிப்பு இவையெல்லாம் நம்பிக்கைக்கு அருமையான உதாரணங்கள். தன்னைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற இருளான சூழலிலும், தங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கும் அற்புதமான அனுபவத்தை அன்னை மரியிலும் யோசேப்பிலும் பார்க்கின்றோம்.
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு பெற்ற மரியின் அனுபவமும், இரத்த வியர்வை சிந்திய இயேசுவின் கெத்சமனி அனுபவமும், புனித யோசேப்பின் அனுபவமும் கடவுளின் வாக்குறுதிகளில் நாம் கொள்ளக்கூடிய நம்பிக்கையை பலப்படுத்த வேண்டும். எந்தச் சூழலிலும் விரக்திக்கு உள்ளாகாமல், உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொண்டு நம் அச்சங்களை நாம் வெல்லவேண்டும். நிழல் என்னும் இருள் கூட நம்மைச் சூழாதபடி வெளிச்சத்தோடு நம்மைக் காக்க நம் கடவுள் நம்மோடு பயணிக்கிறார்.
4. கிறிஸ்துவை நெருங்குவதே முதிர்ச்சி
அழைத்தல்
என்பது நம் ஆண்டவருடனான நெருக்கத்தால் நிலைநிறுத்தப்படும் ஓர் ஆற்றல் மிக்க முதிர்ச்சி செயல்முறையாகும். அழைப்பில் வளர்வது என்பது இயேசுவுடன் இருப்பதையும், தூய ஆவியார் நம் இதயங்களிலும் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலும் செயல்பட அனுமதிப்பதையும், இந்த வரத்தின் ஒளியில் எல்லாவற்றையும் மறுவிளக்கம் செய்வதையும் குறிக்கிறது.
திராட்சைக்
கொடியையும் அதன் கிளைகளையும் போல (யோவா 15:1-8), நம்முடைய முழு வாழ்வும் ஆண்டவருடனான ஒரு வலிமையான மற்றும் உயிரோட்டமான பிணைப்பில் வேரூன்றியிருக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய சோதனைகள் மற்றும் தேவையற்றவற்றை அகற்றுதல் ஆகியவற்றின் ஊடாக அவருடைய அழைப்பிற்கு நாம் இன்னும் முழு மனத்துடன் பதிலளிக்க முடியும். இறை விருப்பம் மிகவும் வெளிப்படும் இடங்களும், அவருடைய எல்லையற்ற அன்பை நாம் அனுபவிக்கும் இடங்களும், பெரும்பாலும் நம் வாழ்நாள் முழுவதும் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உண்மையான சகோதரத்துவப் பிணைப்புகளாகவே இருக்கின்றன. நமது அழைப்பைக் கண்டறிவதிலும் வளர்ப்பதிலும் நம்முடன் துணைபுரிய ஓர் உண்மையான ஆன்மிக வழிகாட்டி இருப்பது எவ்வளவு விலைமதிப்பற்றது!
தூய
ஆவியாரின் தூண்டுதல்களைத் தெளிந்து தேர்வதுதான் அழைத்தலின் அழகுக்கு நற்பயனாய் அமைய முடியும். எனவே, ஓர் அழைப்பு என்பது ஒருமுறை நிரந்தரமாகக் ‘கொடுக்கப்படும்’ ஒன்றல்ல;
மாறாக, அது வாழ்க்கையைப் போலவே விரிவடையும் ஒரு பாதையாகும்.
நாம்
பெற்ற வரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது வளர்ந்து கனி தருவதற்காக இறையுறவில் ஆழப்படவேண்டும். அழைத்தல் நம் முழு வாழ்வையும் நம்மை நேசிக்கும் கடவுளுடன் தொடர்புபடுத்துகிறது. எதுவும் வெறும் தற்செயலின் விளைவு அல்ல; மாறாக, நம் வாழ்வில் உள்ள அனைத்தும் நமக்காக ஓர் அற்புதமான திட்டத்தைக் கொண்டுள்ள ஆண்டவருக்குப் பதிலளிக்கும் ஒரு வழியாக மாறக்கூடும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.
அன்றாட
இறைவேண்டல் மூலமாகவும், இறை வார்த்தையைத் தியானிப்பதன் மூலமாகவும், கடவுளுடனான நம் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டு சற்று நிதானித்து, செவிகொடுத்து, நம்மை அவரிடம் அர்ப்பணிப்போம். இவ்வழியில், நம் அழைப்பின் கொடை முதிர்ச்சியடைந்து, நமக்கு மகிழ்வைத் தந்து, திரு அவைக்கும் உலகுக்கும் மிகுந்த கனிகளை அளிக்கும்.