news
ஆன்மிகம்
திருவிவிலிய தானியங்கள் (கண்டனையோ, கேட்டனையோ! – 26)

பொங்கல் திருவிழா! எனக்கு மிகவும் பிடித்த சமூகத் திருநாள் இது. பள்ளிக் காலத்தில் நடிகைகள் படம் போட்ட வாழ்த்து அட்டைகளைப் பகிர்ந்து கொள்வோம். அந்தப் பழக்கம் இப்போது வழக்கொழிந்து விட்டது. விளையாட்டுப் போட்டிகள் முன்பை விட உற்சாகமாகவும் விரிவாகவும் நடத்தப்படுகின்றன. எல்லா ஊர்களிலும் ஆண்கள் பானை உடைக்கிறார்கள். பெண்கள் கோலம் போடுகிறார்கள்.  போலிஸ் பாதுகாப்போடு, இளைஞர்கள் காளைகளை அடக்குகிறார்கள். ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு அரிசி, கரும்பு, சேலை, வேட்டி போன்ற பண்டங்கள் உள்ளடக்கிய பரிசுத் தொகுப்பு கொடுக்கின்றது. இந்த வருடம் 1000 ரூபாய் ரொக்கம் கிடையாதாமே? டிவியில் இப்போதுதான் சொன்னார்கள். அதைக் கேட்டதிலிருந்து என் வீட்டில் சமைக்கின்ற அம்மா பயங்கரஅப்செட்என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.

பொங்கலுக்குப் பல்வேறு நோக்கங்கள் கற்பிக்கப்பட்டாலும், ஆதாரமாக அது ஓர் அறுவடைத் திருவிழா. உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் அறுவடையைக் கொண்டாடும் மரபு இருக்கிறது, திருவிவிலியக் கலாச்சாரம் உள்பட. இயேசு பொங்கல் கொண்டாடினார். வருடத்திற்கு ஒரு முறை அல்ல; மூன்று முறை! இயேசுவும் சமகால யூதர்களும் கொண்டாடிய மூன்று முக்கியச் சமயத் திருவிழாக்கள் அடிப்படையில் மூன்று தானியங்களின் அறுவடையை ஒட்டி அமைந்தவைவிரிவாகப் பார்க்கலாம்.

பாஸ்காத் திருவிழா!

இதுதான் வருடத்தின் முதல் திருவிழா. வரலாற்று ரீதியாக இவ்விழா இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றதைக் கொண்டாடியது. இது வாற்கோதுமை (barley) அறுவடையின் முடிவில் நடைபெற்றதுஇஸ்ரயேல் நாட்டில் வருடத்தின் தொடக்கத்தில் மகசூலான தானியம் வாற்கோதுமை. வசந்தகாலத்தில் அறுவடை செய்யப்பட்டது. பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட எருசலேமுக்கு வந்த  மக்கள் எல்லாரும் தங்களோடு ஒரு கைப்பிடி அளவு வாற்கோதுமையைக் கொண்டு கடவுளுக்குப் படைத்தார்கள்பாஸ்காவிற்கு அடுத்த நாள் குரு, வாற்கோதுமை அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க்கட்டை எடுத்து ஆண்டவருக்கு முன் ஆரத்திப் பலியாகச் செலுத்தினார்.  ‘இவர் வழியாகசமயத்தில் நம் பிள்ளைகள் தூப, தீப ஆரத்தி காட்டுவது போல.

வாற்கோதுமை மிக விரைவில் விளையும் ஒரு தானியம். 6 முதல் 8 வாரங்கள் போதும் என்கிறார்கள். மிக வலிமையான தானியமும் கூட. சீக்கிரம் கெட்டுப் போகாது. வெப்பம், குளிர் போன்ற கால நிலைகளைத் தாங்கிப்பிடித்து நீண்ட காலம் இருக்கும். இறைவாக்கினர் எலிசா காலத்தில் மூன்று ஆண்டுகள் இஸ்ரயேல் நாட்டில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் உணவுக்கு வழியில்லாமல் தவித்தனர். அப்போது பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புதுத்தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தன் கோணிப்பை நிறைய முற்றிய தானியக் கதிர்களையும் கொண்டு வந்து எலிசாவிடம் கொடுத்தார் (2அர 4:42) என்று சொல்லப்பட்டுள்ளது. அவரிடம் உணவுப் பொருள் இருந்தது ஓர் இனிய ஆச்சர்யம்! பல நாள்களுக்கு முன் விளைந்து அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் அவை. இன்னும் கெட்டுப் போகாமல் இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பங்கள் செய்ய முடிந்தது. வாற்கோதுமையின்நிலைத்திருக்கும்பண்பு இங்கே குறிப்பிடத்தக்கது.

யோவான் 6-ஆம் பிரிவில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் புதுமையில், அவருடைய மூலதனமாக இருந்தது என்ன? ஒரு சிறுவன் கொடுத்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும்தான் (யோவான் 6:9).  எல்லாரும் வயிறார உண்டபின்ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்என்று இயேசு சொல்கிறார். அவை அடுத்த சில வேளைகளுக்கும் பயன்படும். கெட்டுப் போகா. நீதித்தலைவர்கள் கிதியோனும் அவருடைய படைவீரர்களும் ஒருவாற்கோதுமை அப்பம்என்று குறிப்பிடுகிறார்கள். மிதியானியருக்கு எதிரான போரின்போது, போர்க்களத்தில் ஒருவன் தன் தோழனிடம் தான் கண்ட கனவு பற்றிச் சொல்கிறான்: “நான் கனவு ஒன்று கண்டேன். வட்டமான ஒரு வாற்கோதுமை அப்பம் மிதியானியரின் பாளையத்திற்குச் சுழன்று வந்தது. அது கூடாரத்திற்கு வந்து அதன்மேல் மோதிக் கீழே விழுந்தது. அது கூடாரத்தைத் தலை கீழாகப் புரட்டியது. கூடாரம் கீழே விழுந்தது (நீதித் தலைவர்கள் 7:13). கிதியோனின் வலிமைமிகு வாள்தான் அந்த வாற்கோதுமை அப்பம்.

வாற்கோதுமை தானியத்தின் வலிமையும், விரைவில் விளையும் தன்மையும், நிலைத்திருக்கும் பண்பும், நம்பிக்கையளர்களின் ஆன்மிக முதிர்ச்சிக்கும், எந்தச் சூழ்நிலையிலும் தளராமல் இருந்து சான்று பகர்தலுக்கும் ஓர் உருவகமாக உள்ளது.

பெந்தகோஸ்து திருவிழா!

இது இரண்டாவது முக்கிய யூதத் திருப்பயணத் திருவிழா. பாஸ்கா விழா முடிந்து ஏழு வாரங்கள் கழித்து,  50-ஆம் நாள் கொண்டாடப்பட்டது. இது ஒரு கோடை விழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களுக்குச் சீனாய் மலையில் கடவுள் மோசே வழியாகப் பத்து கட்டளைகள் தந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. இது கோதுமை அறுவடையின் முடிவில் நடைபெற்றது. விழா நாளில் தலைமைக் குரு செலுத்த வேண்டிய முக்கியக் காணிக்கை இரண்டு கோதுமை அப்பங்கள். “ஏழாவது ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில், ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள். நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபதுபடி அளவுள்ள மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி, இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு முதற் பலனின் ஆரத்திப்பலியாகக் கொண்டு வாருங்கள் (லேவியர் 23:16-17).

நல்ல கோதுமை விளைச்சலைக் கொடுத்த கடவுளுக்கு பெந்தகோஸ்து நாளில் நன்றி செலுத்தப்படுகிறது. கோதுமை மத்திய தரைக்கடல் நாடுகளின் மிக முக்கிய உணவுப் பயிர். 10,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. நிலம் தானாகக் கோதுமையைக் கொடுக்காதுமனிதர் தங்கள் உழைப்பினாலும் கோதுமையை விளைவித்துவிட முடியாது. கடவுளின் ஆதரவு கோதுமை விளைச்சலுக்குத் தேவை என்று  மக்கள் நம்பினார்கள். திருப்பாடல் ஆசிரியர், “வைகறையில் விழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே (திபா 128:2) என்றும், அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார் (திபா 147:14) என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ‘கொழுப்பானகோதுமை ஆண்டவருடைய சிறப்பு அருளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. “பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் செம்மறிக்கிடாய், வெள்ளாட்டுக்கிடாய் ஆகியவற்றின் கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற முந்திரிச்சாற்றையும் அவர்கள் உண்ணும்படி ஆண்டவர் கொடுத்தார் (இணைச் சட்டம் 32:14).

திருவிலியத்தில் கோதுமை மடிதலுக்கும், மறு உயிர்ப்புக்கும் உருவகமாகச் செயல்படுகிறது. “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (யோவான் 12:24) என்று இயேசு சொல்கிறார்.

கூடாரத் திருவிழா!

இது இலையுதிர் காலத்தில் கொண்டாடப்பட்ட மூன்றாவது திருப்பயணத் திருவிழா. வரலாற்று ரீதியாக இந்நாள் இஸ்ரயேல் மக்களின் 40 ஆண்டு கால பாலைவனப் பயணத்தில், அவர்கள் கூடாரங்களில் தங்கியிருந்த நிகழ்வை நினைவுகூர்ந்தது. விவசாயப் பின்புலத்தில் இது திராட்சைப் பழங்களின் அறுவடைக்கு நன்றி செலுத்தும் விழா. வருடத்தின் ஏழாம் மாதத்தின் 15-ஆம் நாள் ஆரம்பித்து, தொடர்ந்து ஏழு நாள்களுக்குக் கொண்டாடப்பட்டது. எல்லா யூத ஆண்களும் இதில் பங்கெடுக்க எருசலேமுக்கு வரவேண்டும். எருசலேமைச் சுற்றி உள்ள பகுதிகளில், தற்காலிகமாகக் கூடாரங்கள் அமைத்து, அதில் தங்கி மக்கள் இவ்விழாவில் பங்கெடுத்தார்கள். ஏழு நாள்களும் ஆண்டவருக்குப் பலி செலுத்தப்பட்டது. அதில் முக்கியமானதுஒவ்வொரு நாளும் திரு உறைவிடத்தில் திராட்சை மதுபானத்தை ஊற்றிச் செய்யும் நீர்மப்படையல் (எண்ணிக்கை 28:7), எட்டாம் நாளில் நடைபெறும் ஒரு சிறப்புக் கூட்டத்தோடு (எண்ணிக்கை 29:35) விழா நிறைவுக்கு வந்தது. தலைமைக்குரு சிலோவாம் குளத்திலிருந்து ஒரு பொற்குடத்தில் தண்ணீர் மொண்டு வந்து, ஆடம்பரமாகப் பீடத்தின் மீது ஊற்றும் வழிபாடு இவ்விழாவின் மற்றொரு சிறப்பு அம்சம்.

திராட்சை இரசம், தண்ணீர் என்றுநீர்மைகூடாரத் திருவிழாவில் ஆதிக்கம் செலுத்துகிறது. மழைக்காலத்துக்குச் சற்றுமுன் கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில், நல்ல மழையைக் கடவுள் தர வேண்டும்; அடுத்த வருடமும் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் என்று மக்கள் வேண்டினார்கள்.

புதிய ஏற்பாட்டில் தண்ணீர் ஒரு மிக முக்கிய இறையியல் சொல்லாடல். யோவான் நற்செய்தியில் மட்டும்தண்ணீர்என்ற சொல் 22 முறை வருகிறது. சமாரியப் பெண்ணுடனான நீண்ட உரையாடலில் இயேசு தம்மைவாழ்வு தரும் தண்ணீர்என்று நிலைநாட்டுகிறார் (யோவான் 4:10). யோவான் நற்செய்தி 7-ஆம் பிரிவில், இரகசியமாகக் கூடாரத் திருவிழாவில் பங்கேற்கும் இயேசு, விழாவின் இறுதியான பெருநாளில் எழுந்து நின்று உரத்தக் குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்; மறைநூல் கூறுவது போல், அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வுதரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் (யோவான் 7:37-38) என்று கூறுகிறார். இயற்கை நீராதாரங்களைக் கொண்டாடிய ஒரு விழாவில், இயேசு வாழ்வு தரும் தண்ணீரை அறிமுகப்படுத்தினார்.

இந்தப் பொங்கல் திருநாளின்போது அரிசியோடும் கரும்போடும், மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று திருவிவிலியத் தானியங்களையும் நினைவுகூர்வோம்.

வாற்கோதுமை போல நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், கோதுமை மணி போல மடிந்து உயிர்த்தெழவும், திராட்சைப் பழம் சுட்டிக்காட்டும் வாழ்வின் ஊற்றில் மூழ்கி எழவும் பொங்கல் திருநாள் நமக்குக் கற்றுத் தரட்டும்.

பொங்கலோ பொங்கல்! இயேசுப் பொங்கல்!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
ஆன்மிகம்
கடவுள் எனும் ஆற்றல் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 08)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்: “தந்தையே, மனிதர்களின் ஆற்றல் உடல் பற்றியும், நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் ஆற்றல் உடல் பற்றியும் கடந்தவாரம் நாம் பேசினோம். ஆற்றல் உடல் பற்றிய சில ஆய்வுகள் என் நினைவிற்கு வருகின்றன. முக்கியமாக இரண்டு ஆய்வுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1963-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இருக்கும் சிராக்கூஸ் பல்கலைக்கழகத்தின் (Syracuse University) பேராசிரியர்களான கெர்கார்டு பாவுலே (Gerhard Baule)  மற்றும் ரிச்சர்டு மேக்ஃபீ (Richard McFee) என்பவர்கள் அறிவியல் முறையிலான ஆய்வுகள் வழியாக நம் இதயம் தொடர்ந்து மின்காந்த அலைகள் வெளியிடுவதையும், அவை உடலைச் சுற்றி ஓர் ஆற்றல் தளத்தை (energy field) உருவாக்குவதையும் நிரூபித்தனர். இரண்டாவதாக, அறிவியல் SQUID magnetometer என்றொரு கருவியை உருவாக்கியுள்ளது. இது மின்காந்த அலைகளை அளப்பதற்கான கருவி. 1970-ஆம் ஆண்டு மாசசூட் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massechutes Institute of Technology)  பேராசிரியரான டேவிட் கோகன் (David Cohen) மேற்கண்ட கருவியின் உதவியோடு நமது மூளை மின்காந்த அலைகள் வெளியிடுவதையும், அவையும் உடலில் ஆற்றல் தளத்தை உருவாக்குவதையும் நிரூபித்தார்.”

மார்த்தா: “மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே!”

அருள்பணி: “அது மட்டுமல்ல! இன்றைய அறிவியலின் மிக முக்கியப் பகுதியாக இருப்பவை Quantum Physics k‰W« Quantum Mechanics. இப்பிரிவுகளின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று, இவ்வுலகில் உள்ள அணு உள்பட எல்லா வகை பொருள்களும் ஆற்றலை உள்வாங்கியும் வெளியிட்டும் கொண்டே இருக்கின்றன என்பதாகும். மனித உடலும் பொருள் சார்ந்த ஒன்றுதானே! எனவே, அதுவும் ஆற்றலை உள்வாங்கியும் வெளியிடுவதும் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றி ஓர் ஆற்றல் உடலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.”

கிறிஸ்டினா: “தந்தையே,  இயேசுவின் படத்தைப் பார்க்கும்போது, அவரது தலையைச் சுற்றி ஒளி வட்டம் இருப்பதாக வரையப்படுகிறதே! அதற்கும் ஆற்றல் உடலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?”

அருள்பணி: “ஆம் உண்டு! இயேசுவின் ஆற்றல் உடல் உச்ச நிலையிலும் தூய்மை நிலையிலும் இருந்ததைச் சுட்டிக்காட்டுவதே ஒளிவட்டம். அத்தகைய ஆற்றல் வளையம் தலையைச்  சுற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலைச் சுற்றியும் உண்டு.”

மார்த்தா: “பாதர், பழைய ஏற்பாட்டில் கடவுள் மோசேவோடு பேசிய பின்பு அவரது முகம் ஒளிமயமாக இருந்தது குறித்தும், அதை மறைக்க அவர் முக்காடு போட்டுக்கொண்டது குறித்தும் (விப 34:29-33) நாம் வாசிக்கின்றோம். அப்படியென்றால் அவரது ஆற்றல் உடலும் மிகவும் வலிமையாக இருந்திருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”

அகஸ்டின்: “இயேசுவின் சதை உடல் மறைந்தாலும், அவரது ஆற்றல் உடல் நற்கருணை வழியே தொடர்ந்து செயல்படுவது இப்பொழுது எனக்குப் புரிகிறது தந்தையே! மேலும், ‘ஆற்றலை அழிக்க முடியாது என்பது அறிவியல் உண்மை. எனவே தம்மையே ஆற்றலின் உச்சமாக மாற்றிக்கொண்ட இயேசு என்றென்றும் வாழ்பவராக மாறிவிட்டார். அவரது பிரசன்னம்தான் ஆலயத்தில் உண்டு என்னும் உண்மை எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.” 

அருள்பணி: “ஆற்றல் உடல்  பற்றிய மற்றொரு செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 1920-களில் அமெரிக்காவின் ‘யேல் பல்கலைக் கழகத்தின் (Yale University) மருத்துவப் பிரிவில் புகழ்பெற்ற பேராசிரியராக விளங்கியவர் ஹரால்டு சாக்ஸன் பர் (Harold Saxon Burr) என்பவர். ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே அவர், நம் சதை உடலில் நோய் உருவாவதற்கு முன்பே அது நம் ஆற்றல் உடலில் உருவாகிறது என்ற கொள்கையை அறிவியல் உண்மையாக முன்மொழிந்தார். ஆற்றல் உடலைச் சரியாக்கினால் சதை உடல் சரியாகிவிடும் என்பது அவரது கருத்து.”

கிறிஸ்டினா: “தந்தையே, நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, திருவிவிலியத்தின் ஒரு பகுதி என் ஞாபகத்திற்கு வருகிறது. 12 ஆண்டுகளாக பெரும்பாடு நோயினால் துன்பப்பட்ட பெண், இயேசுவின் ஆடையைத் தொட்ட பின்பு குணமடைந்தாள். அப்போது இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து, ‘என் மேலுடையைத் தொட்டது யார்?’ (மாற் 5:30) என்கின்ற கேள்வியை எழுப்பினார். அப்படியானால், இயேசுவின் ஆற்றல் உடல் அப்பெண்ணின் ஆற்றல் உடலைத் தூய்மையாக்கியது என்றும், இது அப்பெண்ணின் உடல் தூய்மையாவதற்குக் காரணமாய் இருந்தது என்று நாம் புரிந்துகொள்ளலாமா?”

அருள்பணி: “ஆம்! இயேசுவின் ஆற்றல் உடல் மிகவும் உயர்வான தளத்தில் இருந்ததைத் திரு விவிலியம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இந்த ஆற்றலின் வல்லமையினாலேயே பிற மனிதர்களது ஆற்றல் உடலிலும், சதை உடலிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். நாம் அவற்றையே புதுமைகள் என்கின்றோம். ‘பிணி தீர்ப்பதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார் (லூக் 5:17), ‘அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர் (லூக் 6:19) என்ற வசனங்கள் இவ்வுண்மையை உறுதிப்படுத்துகின்றன. மேலும், நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் ‘அதிகாரம் என்கின்ற வார்த்தை அவரிடம் இருந்த ஆற்றலின் வலிமையைச் சுட்டிக் காண்பிக்கின்றன. ‘அதிகாரத்தோடு போதித்தார் என்கின்ற வார்த்தைகளை ‘ஆற்றலோடு போதித்தார் என்று நாம் பொருள் கொள்ளலாம்.” 

மார்த்தா: “அடேங்கப்பா! இயேசுவின் ஆற்றல் பற்றி இவ்வளவு விஷயங்கள் திருவிவிலியத்தில் உள்ளனவா?”

கிறிஸ்டினா: “தந்தையே, இயேசு தமது ஆற்றலை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்?”

அருள்பணி: “இயேசுவைப் பொறுத்த அளவில் இறைவேண்டல் (செபம்) என்பது பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஆற்றலால் தம்மை முழுமையாக நிரப்பிக் கொள்வதாகும்.”

அகஸ்டின்: “தந்தையே, பிரபஞ்சம் முழுவதும் விரவிக்கிடக்கிற இத்தகைய ஆற்றலுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?”

அருள்பணி: “இது குறித்து இரண்டுவிதமான பார்வைகள் உள்ளன. ஐன்ஸ்டைன் போன்ற அறிவியலாளர்கள் உள்பட பலர் பிரபஞ்சம் முழுவதும் விரவிக்கிடக்கின்ற ஆற்றலையே கடவுள்தன்மை என்கின்றனர். இவர்களைப் பொறுத்த அளவில் பிரபஞ்ச ஆற்றலும் கடவுளும் வேறு வேறு அல்ல! ஆனால், கிறித்தவ ஆன்மிகத்திலோ நாம் கடவுளை ஆற்றலாகப் பார்ப்பதைவிட, கடவுளிடமிருந்து புறப்படும் மாபெரும் கொடையாக ஆற்றலைப் பார்க்கின்றோம்.”

கிறிஸ்டினா: “எப்படிப் பார்த்தாலும், பிரபஞ்சம் முழுவதும் வி(ப)ரவிக்கிடக்கின்ற ஆற்றலுக்கும் கடவுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறீர்கள்?”

அருள்பணி: “ஆம்! கிறிஸ்துவைப் பொறுத்த அளவில், அவர் கடவுளாலும் அவருடைய வல்லமையினாலும் தம்மை நிரப்பிக் கொண்டதன் காரணமாக, ஆற்றலின் உச்சத்தில் தம்மை வைத்துக் கொண்டார். நற்கருணையில் இருக்கும் கிறிஸ்துவின் இத்தகைய ஆற்றல்தான் இன்றும் அருளடையாளங்கள் வழியாகச் செயல்பட்டு, மனிதர்களைக் குணமாக்குகிறது.” 

(தொடரும்)

news
ஆன்மிகம்
கொடுத்தலே இறைவேண்டல் (இறைவேண்டலின் பரிமாணங்கள் – 33)

இறைவேண்டல் என்றால் சொற்கள், செபங்கள், பாடல்கள், வழிபாடுகள் என்பதையும் கடந்து அது பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும். இறைவேண்டல் என்பதை நாம் புரிந்துகொள்ளும் பார்வையை விரிவாக்கி, நம் இறைவேண்டல் தளங்களைப் பெரிதாக்க அழைக்கிறது இறைவார்த்தை. அதன்படி கொடுத்தலும் இறைவேண்டலே.

கொடுப்பது என்பது அடிப்படையில் ஓர் இறையியல்பு. கடவுள்தாம் கொடுப்பவர். நாம் அனைவரும் அவரிடமிருந்து பெறுபவர்களே. “உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்என்று கூறும் யாக்கோபு, அதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்: “அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர் (யாக் 1:5).

இந்தக் கொடுத்தல் பண்பை இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டு இறைவனுக்கும் பிறருக்கும் கொடுப்பவர்களாக மாறவேண்டும். எனவேதான், “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்\" (லூக் 20:25) என்றார் இயேசு. கடவுளுக்கு உரிய ஆராதனை, இறைப்புகழ்ச்சி, அர்ப்பணம் ஆகியவற்றை நாம் கொடுக்க முன்வர வேண்டும். இந்தக் கொடுத்தலும் ஓர் இறைவேண்டலே. இந்தப் புரிதலின்படி எப்போதெல்லாம் நாம் கடவுளுக்கு ஆராதனை, புகழ்ச்சி, கையளிப்பு, காணிக்கை ஆகியவற்றைக் கொடுக்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.

இந்த உண்மையை எபிரேயர் திருமடல் விவரித்து நம்மை வியக்க வைக்கிறது. “அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக! அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும் (எபி 13:15) என்கிறது அம்மடல். பாருங்கள், இறைப்புகழ்ச்சியைஉதடுகள் செலுத்தும் காணிக்கைஎன்று அழகாக அழைக்கிறது இத்திருமடல். அதன்படி, நாம் உதடுகளால் காணிக்கை செலுத்தும்போது, அது கடவுளுக்கு உகந்த இறைப்புகழ்ச்சியாக மாறுகிறது.

கொடுத்தலும் ஓர் இறைவேண்டலே என்பதைச் சற்று ஆய்வு செய்யும்போது, அது இறைவேண்டலின் உயர்ந்த தளங்களுள் ஒன்று என்பதை நாம் உணர்கிறோம். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவா 15:13) என்பது இயேசுவின் அருள்வாக்கு. எனவே, இறைவேண்டலின் செயல் வடிவமான கொடுத்தலை நாம் நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் கடவுளுக்கு நம் நேரத்தை, அன்பை, ஆராதனையை, புகழ்ச்சியைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ‘செபிக்க நேரமில்லைஎன்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! நாம் இருப்பதும், இயங்குவதும், வாழ்வதும் கடவுளின் இரக்கத்தினால்தானே! நம் வாழ்வும், நம் நேரமும் கடவுளின் கொடைதானே! அவருக்கு நன்றி செலுத்தவும், அவரை ஏத்திப்போற்றவும் நேரமில்லை என்பது இறைநிந்தையல்லவா! எனவே, நம்மிடம் இருப்பவை அனைத்திலும் சிறந்தவற்றை நாள்தோறும் தவறாது கடவுளுக்குக் கொடுப்போமாக. அதுவே சிறந்த இறைவேண்டல்.

இந்தப் பார்வையைச் சற்று நீட்டித்தால், மனிதருக்குக் கொடுப்பதும் இறைவேண்டலே என்பதை நாம் காணலாம். எனவே, மனிதருக்கும் நமது நேரம், அன்பு, பாராட்டு, பணம், திறமைகள், ஆற்றல்கள், மன்னிப்பு என எவற்றையெல்லாம் கொடுக்க இயலுமோ, அனைத்தையும் கொடுப்போம். அதுவே நம் சிறந்த இறைவேண்டல் என்பதை உணர்வோம்.

கொடுப்பது ஓர் இறைவேண்டல் மட்டுமல்ல, அது ஓர் ஆசியும் கூட. பிறருக்கு நாம் கொடுக்கும்போதெல்லாம், கடவுள் நமக்குத் திருப்பித் தருகிறார். “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக் 6:38) என்ற இயேசுவின் அருள்மொழி, கொடுப்பதன் மேன்மையையும், ஆசியையும் எடுத்துச் சொல்கிறது. அது மட்டுமல்ல, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் (மத் 25:40) என்னும் இறைமொழி மனிதருக்குக் கொடுப்பவையெல்லாம், கடவுளுக்கே போய்ச்சேர்கின்றன என்கிறது.

எனவே, கொடுப்பதை ஒரு வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொள்வோம். உண்மையில் உழைப்பதன் நோக்கமே நலிவுற்றோருக்குக் கொடுக்கவே என்னும் வியப்பான செய்தியைப் பவுலடியாரிடம் கற்றுக்கொள்கிறோம். “பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன் (திப 20:35) என்கிறார் பவுல்.

கொடுக்கும்போது நாம் இரண்டு மனநிலைகளை நமதாக்க வேண்டும். ஒன்று, தேவைக்கு மேல் உள்ளவை அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். “உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்து விடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே (தோபி 4:16) என்பது தோபித்து தன் மகனுக்குக் கொடுத்த அறிவுரை. இரண்டாவது, “மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர் (2 கொரி 9:7).

கொடுப்பதே பேறு, கொடுப்பதே இறைவேண்டல், கொடுப்பதே இறையாசி. அதை முக மலர்ச்சியோடு, உளமாரச் செய்வோம்.

news
ஆன்மிகம்
அமைதியில் செயலாற்றுதலினுடைய முன்மாதிரி மரியா - Mary is model of persevering silence (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 06)

1. திரு அவை வாழ்வினுடைய மரியியல் கூற்றைப் பற்றிச் சிந்தித்த பிறகு, இப்பொழுது நாம் அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் திரு அவைக்கு அளவிட முடியாத ஆன்மிக வளத்தை மரியா வழங்குவதைப் பற்றிச் சிந்திக்கப் போகின்றோம்.

முதலாவதாக, நாம் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய சொந்த அழைத்தலை ஏற்றுக்கொள்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் விலைமதிப்பில்லாத வழிகாட்டுதலைத் தருகின்ற மரியாவினுடைய  ஆளுமையின் சில சிறப்புக் கூறுகளைப் (significant aspects of Mary’s personality) பற்றிச் சிந்திப்போம்.

நம்பிக்கையின் வழியில் மரியா நமக்கு முன் சென்றிருக்கின்றார்!

வானதூதருடைய செய்தியை நம்பி, மனுவுருவாகும் மறையுண்மையை முதலில் வரவேற்பவராக மரியா இருந்தார் மற்றும் மிகச் சரியாக அதை நிறைவேற்றினார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 13). ‘நம்பிக்கையாளர்என்ற நிலையில் அவருடைய பயணமானதுஇறைவனுடைய தாய்என்ற அவருடைய நிலைக்கு முன்பே தொடங்கியது. மேலும், அவருடைய பூவுலக அனுபவம் முழுவதும் மிக ஆழமான முறையில் அது வளர்ச்சியடைந்தது. அவருடைய நம்பிக்கையானது ஒரு துணிச்சலான நம்பிக்கையாக (daring Faith) இருந்தது. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் மனித நிலையில் முடியாத ஒன்றை அவர் நம்பினார்; மற்றும் இயேசுவினுடைய மெசியாவுக்கான ஆற்றல்களை (Messianic powers) வெளிப்படுத்த வேண்டி கானாவூர் திருமணத்தில் அவருடைய முதல் அற்புதத்தைச் செய்வதற்கு அவர்  இயேசுவைத் தூண்டினார் (ஒப்பிடுக. யோவா 2:1-5).

எல்லாச் சூழலிலும் தேவைப்படுகின்ற துணிச்சல் மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகளால் கிறித்தவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய நம்பிக்கையை  நீடித்த முழு ஈடுபாடு கொண்டதொரு பயணமாக என்றென்றைக்கும் வாழ்வதற்கு மரியா கற்றுத் தருகிறார்.

மரியாவின்  தாழ்ச்சிநிறை மறைமுக வாழ்வு!

2. இறை விருப்பத்திற்கான மரியாவினுடைய பணிவு அவருடைய நம்பிக்கையோடு இணைந்த ஒன்றாகும். கடவுளுடைய வார்த்தையை நம்பி கன்னி மரியா அவருடைய வாழ்வில் இறைத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. மேலும், கடவுளுடைய உயர்வான திட்டத்திற்கு ஏற்புடையவராகத் தன்னையே கையளித்து, இறைவனால் அவரிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவர் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இவ்வாறாக, திரு அவையில் கன்னி மரியாவினுடைய உடனிருப்பானது இறைவார்த்தைக்குச் செவிசாய்க்கவும், பல்வேறுபட்ட அன்றாட நிகழ்வுகளில் அவருடைய அன்பான திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் மற்றும் அதை நிறைவேற்றுவதில் நம்பிக்கையோடு ஒத்துழைப்பதற்கும் கிறித்தவர்களை ஊக்குவிக்கின்றது.

3. இவ்வாறு கடவுளிடம் தங்களையே முழுமையாகக் கையளித்து, தங்களுடைய எதிர்காலத்தைக் காண்பதற்கு, நம்பிக்கையாளர்களின் குழுமத்திற்கு மரியா கற்றுத்தருகிறார். மரியாவினுடைய  தனிப்பட்ட அனுபவத்தில், நம்பிக்கையானது எப்பொழுதும் புதிய காரணங்களோடு வளமையாக்கப்பட்டுள்ளது. இயேசுவினுடைய பிறப்பின் அறிவிப்பிலிருந்தே, அவருடைய கன்னித் திருவயிற்றில் மனுவுருவான இறைமகன் பற்றிய பழைய இஸ்ரயேலுடைய எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகின்றார். மரியாவினுடைய  நம்பிக்கையானது நாசரேத்தில் இயேசுவினுடைய வெளிப்படாத வாழ்வு மற்றும் அவருடைய மக்கள் பணி போன்ற தொடர் நிலைகளால் பலப்படுத்தப்பட்டது. சிலுவைப் பயண நிகழ்வுகளைச் சந்தித்தபோதுகூட தன்னுடைய இலக்கில் தடுமாறுவதிலிருந்துமூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்என்று அறிவித்த கிறிஸ்துவினுடைய வார்த்தைகளில் அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கையானது தடுத்தது. மீட்புப் பணியினுடைய நிறைவில் அவருடைய நம்பிக்கையைத் தக்கவைத்து, பெரிய வெள்ளியினுடைய இருளுக்குப் பின்னும் உயிர்ப்பின் நாளுக்காக உறுதியுடன் காத்திருந்தார்.

வரலாறு முழுவதுமே நம்பிக்கையாளர்களின் குழுமமானது அவர்களுடைய துன்பப் பாதையில், ‘ஏற்கெனவேபெற்றுக்கொண்ட மீட்பு மற்றும்இன்னும் அடையப்படாதஅதனுடைய நிறைவு இவைகளுக்கிடையேயும் அவர்கள்நம்பிக்கையின் அன்னையினுடைய உதவியில் நம்பிக்கை வைக்கலாம் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். இறப்பின் மீது கொண்ட  கிறிஸ்துவினுடைய வெற்றிக்குப்பின் கடவுளுடைய எதிர்காலத் திட்டத்திற்காகக் காத்திருப்பதற்கும் ஆண்டவருடைய வாக்குறுதிக்கு அவர்களையே கையளிப்பதற்கும் எப்பொழுதும் இல்லாததொரு புதிய ஆற்றலை அவர் அவர்களுக்குக் கொடுக்கின்றார்.

4. மரியாவினுடைய எடுத்துக்காட்டானதுஅமைதியின் அருமையைபாராட்டுவதற்கு, மிகச் சிறப்பாகத் திரு அவையைத் தூண்டுகிறதுமரியாவினுடைய அமைதியானது பேசுவதில் அடக்கமாக இருப்பதில் மட்டுமல்லாமல், சிறப்பாக நம்பிக்கையினுடைய ஒரே பார்வையில் மனுவுருவான வார்த்தையினுடைய மறைபொருள் மற்றும் அவருடைய பூவுலக வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்வதிலும் மற்றும் ஆர்வத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்வதிலும் இருந்த அனுபவச் செறிவுமிக்கதோர் ஆற்றலுமாகும்.

வார்த்தையை ஏற்றுக்கொண்டதன் விளைவாக, கிறிஸ்துவினுடைய மறையுண்மையைத் தியானிப்பதற்கான ஆற்றலைத் தருகின்ற இந்த அமைதியைத்தான் நம்பிக்கையாளர்களுக்கு அன்னை மரியா கொடுக்கின்றார். பல்வேறு வகையான செய்திகளாலும் நிறைந்திருக்கின்ற சத்தம் நிறைந்ததோர் உலகில், மரியாவுடைய எடுத்துக்காட்டான வாழ்வானது ஓர் ஆன்மிக  வளமையுள்ளதோர் அமைதியைப் பாராட்டுவதில் நமக்கு உதவுகிறது மற்றும் அமைதியில் தியானிக்கும் ஆற்றலை நம்மில் வளர்க்கின்றது.

மரியா தாழ்ச்சிநிறை மறைமுக வாழ்வினுடைய மதிப்பிற்குச் சான்றாகின்றார். வழக்கமாக, நாம் அனைவரும் நமது சொந்த ஆளுமை மற்றும் பண்புகளை அடைவதற்கு வற்புறுத்தப்படுவதும் உரிமை கோருவதும் என முயற்சிக்கின்றோம். எல்லாரும் மதிப்பிற்கும் பெருமைக்கும் ஆசைப்படுகின்றவர்களாக இருக்கின்றோம்.

திருத்தூதர்கள் இறையரசில் மிக முக்கியமான இடங்களைக் கேட்பவர்களாக இருந்தனர் மற்றும் அவர்களில்யார் மிகப் பெரியவர்?’ என்பதைப் பற்றியும் விவாதித்தனர் என்று நற்செய்திகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. இந்த விசயத்தில் இயேசு தாழ்ச்சி மற்றும் பணியின் தேவையை அவர்களுக்குக் கற்றுத்தந்தார் (ஒப்பிடுக. மத் 18:1-5; 20:20-28; மாற் 9:33-37; 10:35-45; லூக் 9:46-48; 22:24-27). அதற்கு மாறாக, மரியா பெருமையையோ அல்லது சிறப்புத் தகுதி நிலையினுடைய நிலையையோ ஒருபோதும் தேடாமல், தந்தையினுடைய மீட்புத் திட்டத்திற்கு இணங்கியதொரு வாழ்க்கை வாழ்ந்து, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றவே எப்பொழுதும் முயன்றார்அர்த்தமற்ற வாழ்வு போலத் தோன்றுவதனுடைய பாரத்தை அடிக்கடி உணர்கின்ற அனைவருக்கும், கிறிஸ்துவினுடைய அன்பிற்காக மற்றும் ஒருவருடைய சகோதர- சகோதரிகளுக்காக வாழ்கின்ற வாழ்வானது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மரியா வெளிப்படுத்துகிறார்

5. மேலும், மரியா தூய்மையான மற்றும் எல்லா மனிதர்களிடத்தும் கருணை நிறைந்ததொரு வாழ்வினுடைய மதிப்புக்குச் சான்றாகின்றார். முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவருடைய ஆன்மாவினுடைய அழகானது கிறித்தவ மக்களுக்கு வியப்பானதொன்றாக இருக்கின்றது. அன்பாலும் கருணையாலும் நிறைந்து, உடல் மற்றும் உள்ளத் தூய்மையில் வாழ்ந்ததன் காரணமாக மரியாவில் கிறித்தவக் குழுமமானது பெண்மைக்கான இலக்கணத்தை எப்பொழுதும் கண்டது.

கற்பினுடைய மதிப்பை நமது சமூகம் அங்கீகரிக்கவில்லையோ? தனிமனித மாண்பு மற்றும் கடவுளுடைய திட்டத்திலிருந்து பாலுணர்வைப் (sexuality) பிரித்ததன் காரணமாகக் கற்பானது மாண்பிழந்திருக்கிறதோ? என்று நாம் வாழும் காலச்சூழலில் எண்ணத் தோன்றுகின்றது. இப்படிப்பட்ட  ‘அவநம்பிக்கை (cynicismகொண்டதொரு கலாச்சாரத்தை நாம் சந்திக்கின்ற சூழலில், நமது மனசாட்சிக்கு ஒளியூட்டுகிற மற்றும் எல்லாப் படைப்புகளுக்கும் ஆண்டவருக்குமான எல்லையற்ற அன்பை நோக்கி வழிநடத்துகிற ஒழுக்கத் தூய்மையினுடைய சான்றாகக் கன்னி மரியா திகழ்கின்றார்.

6. மரியா என்றும் கிறித்தவர்களாக வாழ்பவர்களுக்கு மனுக்குலத்தினுடைய துன்பங்களுக்காக ஆழமான பரிவு கொண்டுள்ளவராகத் தோன்றுகின்றார். இந்த இரக்கம் உணர்வுப்பூர்வமான பரிவில் மட்டும் அடங்கியிருக்கவில்லை; மாறாக, மனுக்குலத்தினுடைய பொருள் சார்ந்த மற்றும் ஒழுக்க இழிநிலை சார்ந்தவைகளோடு நேர் எதிரே நிற்கின்றபொழுது இது வலுவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவைப்  பின்பற்றுவதில், திரு அவையானது பூமியிலுள்ள அனைத்து ஏழை மற்றும் துன்பப்படுபவரிடம் அதே மனப்பான்மையைக் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றது. குறிப் பாக, புத்தாயிரத்தினுடைய தொடக்கத்தில் ஆண்டவருடைய தாயினுடைய-தாய்மைக்குரிய பார்வையானது கண்ணீர், துயரங்களை அனுபவிக்கின்ற எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடைய துன்பங்களைக் கண்டு, இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் துன்பப்படுகின்ற மக்களை முன்னேற்றுகிற நிலையான மற்றும் கண்ணால் காணக்கூடிய அன்பின் அடையாளங்களை அதிகரிப்பதற்கும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பிறந்த புதிய உலகினுடைய வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்துகொள்வதற்கும் தூண்ட வேண்டும்.

7.  தாய் மீதான மனித அன்பு மற்றும் பக்தி நாம் காண்கின்ற திரு அவையினுடைய எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது மற்றும் மன்னிக்கும் மனநிலைகளை வளர்க்கிறது. தாய் என்ற வகையில், அவருடைய எல்லாக் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென மரியா விரும்புகிறார். திரு அவையில் மரியாவினுடைய  உடனிருப்பானது முதல் கிறித்தவக் குழுமத்தில் ஆட்சி செய்த அதே உள்ள-ஒன்றிப்பைப் பாதுகாப்பதற்கும் (ஒப்பிடுக. திப 1:14) மற்றும் அதன் காரணமாக நல்லெண்ணம் கொண்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களிடையேயும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வழியைத் தேடுவதற்குமான ஓர் அழைப்பாக இருக்கிறது.

அவருடைய மகனிடம் பரிந்து பேசுவதில், அன்பின் பண்பாட்டை (civilization of love) கட்டியெழுப்பிடவும், வேற்றுமைக்கான மனப்பான்மை, பழிவாங்குதல் மற்றும் பகைமைக்கான தூண்டுதல், வன்முறை மீதான அளவில்லாப் பற்று ஆகியவற்றை வென்றெடுத்திடவும், மனுக்குலம் அனைத்திற்குமான ஒற்றுமையினுடைய அருளை மரியா கேட்கின்றார்.

மரியா நம்முடைய மகிழ்ச்சியின் காரணமாக இருக்கின்றார்

8. நிறைய மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள மரியாவினுடைய உருவங்களில் (iconography), கன்னி மரியாவினுடைய தாயுள்ளம் கொண்ட புன்னகையானது பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய அருள் மற்றும் அமைதியினுடைய முழுமையை வெளிப்படுத்துகிறது. அவருடைய ஆன்மாவினுடைய இந்தச் சாந்தமான தோற்றமானது திரு அவைக்கு ஒரு மகிழ்ச்சியான முகத்தைக் கொடுப்பதில் பயனுள்ள வகையில் பங்காற்றுகின்றது

இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு அறிவிப்புச் செய்தியில்மகிழ்ந்திரு (khaire ஒப்பிடுக. லூக் 1:28) என்ற வானதூதருடைய அழைத்தலை வரவேற்று,  சீயோனின் மகளுக்கு (Daughter of Sion) இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட மீட்பின் மகிழ்ச்சியை (ஒப்பிடுக. எசா 12:6: செப் 3:15-15: செக் 9:9) முதலில் பகிர்ந்துகொண்டவராக மரியா இருந்தார் மற்றும் எல்லாக் காலத்திலும் மனுக்குலத்திற்கு அதைக் கொடுக்கிறார்.

கன்னி மரியாவைஎங்கள் மகிழ்ச்சியின் காரணமே (causa nostrae laetitiae) என்று அழைத்து, வாழ்க்கையினுடைய சோதனைகளுக்கு மத்தியிலும் கூட, நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்; மேலும், அவரிடம் தங்களையே அடைக்கலமாக ஒப்படைக்கிறவர்களை முடிவில்லாத மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்துவதற்குமான திறனைக் கிறித்தவர்கள் அவரில் காண்கிறார்கள்.

மூலம்: Pope John Paul II, Mary is model of persevering silence, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 29 November 1995, p.11.

news
ஆன்மிகம்
யூபிலி கொண்டாட்டம் (எதிர்நோக்குடன் பயணிக்கும் திரு அவை - 1)

திருக்காட்சிப் பெருவிழாவில் மையமான கதாபாத்திரங்களாக நம் கண்முன் நிற்பவர்கள்  மூன்று ஞானிகளும், அவர்களின் கரங்களில் சுமந்து வந்த பரிசுப் பொருள்களுமே. பரந்திருக்கும் உலகில் மெசியாவைக் காண தொலைதூர இடங்களிலிருந்து பயணித்து, பல இடர்ப்பாடுகள், தவறுகள், சோர்வு எனப் பல சூழ்நிலைகளை அனுபவித்துக் கடந்து இயேசுவின் திருக்காட்சியைப் பெற்றனர்.

புனித அகுஸ்தினார் திருக்காட்சிப் பெருவிழாவை எவ்வாறு குறிப்பிடுகின்றார்? “மனிதர்கள் வழியாகக் கடவுளை அடையும் வழியைத் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது.”

கடவுள் புத்தகங்களின் பக்கங்களில் வாழ்வதில்லை. மாறாக, மனுவுடல் ஏற்று நம் மத்தியில் வாழ்கின்றார். இறைவனின் திருக்காட்சியைப் பெற நம் அருகில் வாழும் நம் சகோதர-சகோதரிகளின் முகத்தில் இறைவனின் முகத்தைக் காணவேண்டும். நமது திரு அவையும், திரு அவையின் பணியாளர்களும் நம்பிக்கையாளர்களும் தங்களுக்குள் முடங்கிக் கிடந்தால் இறைவனின் திருக்காட்சியைக் காண இயலாது. கிறிஸ்துவின் மறையுடலாம் திரு அவை மக்களின் மத்தியில் வாழ்கின்றது; இயங்குகின்றது. எனவே, திரு அவையின் தலையாயக் கடமை இறைமக்கள் நம்பிக்கையாளர்கள் தங்களிடம் வரவேண்டும்; அருள் வாழ்விற்கு உதவியை, ஆலோசனையை, வழிகாட்டுதலைக் கூற வேண்டும் எனக் காத்திருக்காமல், மக்களைத் தேடிச்சென்று பயணித்து, செவிமடுத்து தங்களது நற்செய்தியின் பணியைச் செய்திட வேண்டும் (மத்தேயு 28:19). மூன்று ஞானிகளும் தங்களது இருப்பிடத்தை, சுகமான வாழ்வுச் சூழலைக் கடந்து பயணித்து திருக்காட்சியைப் பெற்று, பிறருக்கு மகிழ்ச்சியை அறிவித்தனர்.

நாம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெற்ற கூட்டொருங்கியக்கத் திரு அவையின் 16-வது ஆயர் மாமன்றம் இச்செய்தியினைக் கோடிட்டுக் காட்டி இருக்கின்றது. திரு அவை தன்னிடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று வீதிகளில் வாழ்வோரைச் சந்தித்து உரையாடி, செவிமடுத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இன்னும் அதிக உற்சாகத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பிக்கைக்குரிய செயல்பாடுடனுடன் பொதுநிலையினரையும் பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்திட அழைப்பு விடுக்கின்றது.

திருக்காட்சிப் பெருவிழாவில் சிந்தனைகளும் கூட்டொருங்கியக்கப் பரிந்துரைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்வதாக நான் உணர்கின்றேன். இப்பெரு விழாவின் ஒருசில சிந்தனைகளைத் திரு அவையின் செயல்பாடுகளில் பரவச் செய்வது சாலச்சிறந்தது.

கண்களை உயர்த்தி மற்றவர்களைக் காணுதல்!

மூன்று ஞானிகளின் பயணம்தங்களின் இருப்பிடத்திலிருந்து துவங்கிடக் காரணமாய் அமைந்திருந்தது அவர்கள் கண்ட விண்மீன். தங்கள் கண்களை உயர்த்திக் கண்ட, அவர்களின் திறந்த மனநிலை நமதாக வேண்டும். எனக்குள், என் சுயத்திற்குள் ஒளிந்து கொண்டு, என் சுகமான வாழ்வு வட்டங்களைக் கடந்து செல்லாமல், என்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மனநிலையைத் தவிர்த்து, இறைவனின் பிரசன்னத்தையும் கரை காணா அவரது அன்பையும் உணர்த்துகின்ற பிறரையும் குறிப்பாக, பல்வேறு சமூகச் சீர்கேட்டினால், வன்முறையினால், போர்களினால், அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஒடுக்கப்பட்டோர், புலம்பெயர்ந்தோர் இவர்களை நோக்கி நமது கண்கள் உயர்ந்து, நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைப் பற்றி நம்பிக்கையின் கண்களோடும் சகோதரத்துவத்துடனும் கண்டிட வேண்டும். இவ்வுலகையும் இயற்கையையும் காத்திட, நம் கண்களை உயர்த்திட வேண்டும்.

குழுவாகப் பயணித்தல்!

திருக்காட்சியின் மூன்று ஞானிகள் விண்மீன்களைப் பின்தொடர்ந்து சென்று சிறிய முயற்சிகளை நம்பிக்கையின் ஊன்றுகோலாக மாற்றி, பிறரிடம் கேட்டறிந்து, செவிமடுத்து பாலன் இயேசுவைக் கண்டனர். மூவரும் வெவ்வேறு இடங்களில் பிறந்திருந்தாலும், கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்திருந்தாலும், ஒருவர் மற்றவரை ஏற்று, மதித்து, உரையாடிப் பயணத்தின் பொழுது ஒருவரின் களைப்பில், நோயில், நம்பிக்கையற்ற சூழலில் பங்கேற்று, மற்றவருக்கு உதவி செய்து, உற்சாகமூட்டி, ஒன்றாக இணைந்து, இறுதிவரை பயணித்து பெத்லகேமின் குடிலை அடைந்தனர்.

நான் முன்னேறிச் செல்கின்றேன்; நீங்கள் சோர்வுற்று இருந்தால் இளைப்பாறிப் பின்னே வாருங்கள்என்று தன்னலத்தோடு செயல்படாமல், இணைந்து பயணித்த நிகழ்வு திரு அவைக்கு அற்புதமான செய்தியை வழங்குகின்றது. கூட்டொருங்கியக்கத் திரு அவையில் எவர் ஒருவரையும் விட்டு விடலாகாது. அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். திரு அவையை விட்டு விலகி இருப்போர், காயப்பட்டோர், விளிம்பு நிலையில் வாழ்வோர், பல்வேறு காலச்சூழலில் பாதிக்கப்பட்டோர், பல்வேறு வயதினர், திரு அவையில் பல்வேறு பணியினைச் செய்பவர் என அனைவரையும் அரவணைத்து, உடன் நின்று, சகோதரத்துவத்தை வெளிப்படுத்திப் பயணிக்கும் திரு அவையே திருத்தந்தையின் விருப்பத் திரு அவையாக உள்ளது. ஒன்றாய்ப் பயணிப்பது ஒரு சிறந்த சாட்சியமே. இன்று திரு அவைக்கு அது மிகவும் அவசியமானது.

பிழைகளைக் கண்டு பின்வாங்க வேண்டும்!

மூன்று ஞானிகள் தங்களின் தேடலில், தங்களின் பயணத்தில் பல தவறுகளைச் செய்தனர்; தவறான இடங்களில் (ஏரோது அரண்மனை, எருசலேம் நகரம்) பாலன் இயேசுவைத் தேடினர். இருப்பினும், சுதாரித்துக் கொண்டு தங்களின் தவறுகளில் - தவறான பாதையில் மூழ்கி விடாமல், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, மீண்டும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தங்களின் பயணத்தைத் தொடர்ந்து திருக்காட்சியைக் கண்டனர்.

கடந்த காலங்களின் திரு அவையின் சில நபர்களின் செயல்பாடுகளினால் திரு அவை காயப்பட்டது; நம்பிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். திரு அவையின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சீர்குலைந்தது. இப்பொழுது கூட்டொருங்கியக்கத் திரு அவை - அத்தவறுகளையெல்லாம் சரிசெய்து, பிழைகளிலிருந்து பாடம் கற்று, வெளிப்படைத்தன்மை கொண்ட திரு அவையாக உருவாக்க விரும்புவது தூய ஆவியின் செயல்பாடின்றி வேறில்லை. ஆயர்களின் மாமன்ற உரையாடல்களும் கருத்துச் செறிவுகளும் இறுதி ஆவணமும் இவற்றை வலியுறுத்துவதை நாம் உணர்ந்து, புத்தாக்கமும் புது தெம்பும் நம்பிக்கையும் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையும் கொண்ட திரு அவையையும், அதன் முடிவுகளில் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்துவது மிகவும் ஏற்ற செயலே.

கூட்டுப் பயணமே இறைவனுக்கு நாம் வழங்கும் பரிசு!

மூன்று ஞானிகளின் பரிசுப் பொருள்களைவிட, அவர்கள் சிரத்தையோடும் நம்பிக்கையோடும் பயணித்த சூழலே இறைவனுக்கு அவர்கள் வழங்கிய சிறப்புப் பரிசு.

திருக்காட்சியின் கூட்டொருங்கியக்கப் பயணமே இறைவனுக்கு நாம் வழங்கும் சிறப்புப் பரிசாக அமையும். யூபிலி ஆண்டில் எதிர்நோக்குடன் திரு அவை பயணிப்பதே இறைவனுக்கு நாம் வழங்கும் அன்புப் பரிசு!

news
ஆன்மிகம்
“மிலானுக்குப் போ!” (கண்டனையோ, கேட்டனையோ! – 25)

கடந்த டிசம்பர் 7-ஆம் நாள் உரோம், புனித பேதுரு பேராலயத்தில், போப் பிரான்சிஸ் புதிதாக 21 கர்தினால்களை உருவாக்கினார். தெஹ்ரான், டோக்கியோ, டொரோன்டோ என்று உலகின் பல்வேறு இடங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் புதிய உறுப்பினர்களில் கர்தினால்கள் அவையின் மிக வயதான கர்தினாலும் (ஆஞ்செலோ அச்செர்பி), மிக இளமையான கர்தினாலும் (மிக்கோலா பைச் சோக்) அடங்குவர். அச்செர்பிக்கு வயது 99. வத்திக்கானின் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிவிட்டு, 2001-இல் ஓய்வுக்குப் பின், வாசிப்பு, இறைவேண்டல் என்று இருந்தவரை கார் அமர்த்தி அழைத்து வந்து, கர்தினால் பட்டம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். 99 வயதில் ஒரு மனிதரின் அதிகபட்ச ஆசை, ‘இன்னும் ஒரு நாள் உயிரோடு இருப்பதுஎன்பதாகத்தான் இருக்கும். அச்செர்பிக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த ஆச்சர்ய கர்தினால் பட்டம், அவர் திரு அவைக்கு ஆற்றிய மிக நீண்ட கால தூதரகப் பணிகளுக்கான ஓர் அங்கீகாரம் என்று வத்திக்கான் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

கர்தினால் மிக்கோலாவிற்கு வயது 44 (நான் அந்த வயதில்தான்பங்குத்தந்தைஆனேன்). அவர் உரோமன் கத்தோலிக்கத் திரு அவையோடு முழு ஒன்றிப்பில் உள்ள உக்ரேனியன் கிரேக்கக் கத்தோலிக்கத் திரு அவையைச் சார்ந்தவர். உக்ரைன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு அருள்பணியாளராகப் பணியாற்றியவர். நான்கு வருடங்களுக்கு முன்புதான் பிரான்சிஸ் அவரை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஆயராக நியமித்தார். இப்போது கர்தினால் பட்டம். “இது எனக்கான பெருமை அல்ல; என்னுடைய துன்புறுத்தப்படும் திரு அவைக்குக் கிடைத்த பெருமைஎன்று மிக்கோலா கூறுகிறார். அவரின் கர்தினால் நியமனத்திற்கு ஓரங்களிலும், தூரங்களிலும் உள்ள திரு அவை மீது பிரான்சிஸ் கொண்டுள்ள கரிசனையே காரணம்  என்று சொல்லப்படுகிறது

ஒரு காலத்தில் கர்தினால்கள் அவையில் இத்தாலி நாட்டவரே ஆதிக்கம் செலுத்தினார்கள். திருத்தந்தையர்களில் நிறையப் பேர் இத்தாலி நாட்டவரே. பிரான்சிஸ்  இதை உத்திரவாதமாக மாற்றி அமைத்துள்ளார். கடந்த பதினோரு ஆண்டுகளில், அவர் உருவாக்கிய 142 கர்தினால்கள், 70 நாடுகளிலிருந்து வந்துள்ளார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற கண்டங்களின் மிஷனரி திரு அவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கின்றன. கர்தினால்கள் அவை உண்மையிலேயே ஓர் உலகளாவியத் தன்மை பெற்றுள்ளது. A truly global College of Cardinals!

தற்போது கர்தினால்கள் அவையில் மொத்தம் 253 பேர் இருக்கிறார்கள். இதில் 80 வயதுக்கு உள்பட்டவர்கள் 141 பேர். பிரான்சிசுக்கு அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமை பெற்றவர்கள் இவர்களே. இந்த 141 கர்தினால்களில், 111 பேர், அதாவது, நாளையே ஒரு கான்க்ளேவ் (conclave) கூட்டப்படுமானால், அதில் பங்கெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களில் 79% பேர் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். எனவே, பிரான்சிஸ் அவர்களின் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நம்பலாம்.

கர்தினால்கள் பற்றி சில பொதுவான தகவல்கள் இங்கே:

கர்தினால்கள் திரு அவையின்இளவரசர்கள்என்று குறிப்பிடப்படுகிறார்கள் (Princes of the Church). திரு அவையின் நிர்வாகத்தில் மிக முக்கியப் பங்கு  வகிப்பதாலும், அரசரைத் (திருத்தந்தையை) தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாலும் இந்தப் பட்டம். ‘Cardinalஎன்ற ஆங்கில வார்த்தைcardoஎன்ற இலத்தீன் வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. ‘Cardoஎன்றால்  ‘கீல்என்று அர்த்தம்கதவை நிலைச்சட்டத்தோடு இணைக்கின்ற hinge. உண்மையில் அதுதான் கர்தினால்களின் பணி. இணைப்பாளர்களாகவும் தாங்கிப் பிடிப்பவர்களாகவும் இருந்து அவர்கள் திரு அவையை இயக்கப் பணிக்கப்படுகிறார்கள்

கர்தினால் என்பது ஒரு கூடுதல் பொறுப்பு. அது ஓர் அருளடையாளம் கிடையாது. கர்தினால்கள் புதிதாக அருள்பொழிவு செய்யப்படுவதில்லை; நிறுவப்படுகிறார்கள். எல்லாக் கர்தினால்களும், ஏன் திருத்தந்தையும் கூட ஆதாரமாக ஆயர்களே

பதவியேற்கும் நிகழ்வில் திருத்தந்தை கர்தினால்களுக்கு மூன்று பொருள்களைக் கொடுக்கிறார்.

கணையாழி:இந்தக் கணையாழியைப் பேதுருவின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அவரு டைய அன்பில்  இணைந்து, திரு அவை மீதான உங் கள் அன்பு பலப்படுத்தப்படுவதாகஎன்று கூறி திருத்தந்தை ஒரு புதிய கணையாழியைப் பட்டம் பெறும் கர்தினாலின் கரத்தில் அணிவிக்கிறார்.

தலைப்பாகை: ஆயர்களின் நிறம் மென்சிவப்பு என்றால், கர்தினால்களின் நிறம் கருஞ்சிவப்பு. இது மறைச்சாட்சிகளின் அடையாளம். திரு அவை முன்னேற்றத்திற்காகவும், கிறித்தவ நம்பிக்கையின் பரவலுக்காகவும், கர்தினால்கள் இரத்தம் சிந்தி உயிர் துறக்கும் அளவுக்குத் தைரியத்துடன் உழைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக திருத்தந்தை அவர்களுக்குக் கருஞ்சிவப்பு நிறத் தலைப்பாகையை அணிவிக்கிறார். கர்தினால்கள் அணியும் கறுப்பு அல்லது வெள்ளை நிற அங்கியிலும், கருஞ்சிவப்புத் தீற்றல்களைப் பார்க்கலாம்.

ஆணை: கர்தினால் பணி நியமன ஆணை ஒரு சுருளேடாக அளிக்கப்படுகிறது.

கர்தினால்கள் ஒவ்வொருவருக்கும் உரோம் நகரில் இருக்கும் ஒரு கோவில் ஒதுக்கித் தரப்படுகிறது.  ‘Titular Churchஎன்று கூறுவார்கள். அந்தக் கோவிலுக்கு அந்தக் கர்தினால்தான் பொறுப்பாளர். பங்குத்தந்தை மாதிரி. உலகின் எந்த முனையில் ஒரு கர்தினால் பணி செய்தாலும் உரோம் நகரோடும், திருத்தந்தையோடும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த பிணைப்பை இந்தTitular Churchமுறை எடுத்துக் காட்டுகிறது.

தற்போது இந்தியாவில் ஏழு கர்தினால்கள் இருக்கிறார்கள். எல்லாரும் நன்கு அறிந்த மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியசுக்கு 79 வயதாகிவிட்டது. அவருக்கு வாரிசு ஆயரும் நியமித்துவிட்டார்கள். அடுத்த கான்க்ளேவில் அவர் பங்கெடுக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணிக்கும் (63 வயது),  கோவா பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரிக்கும் (71 வயது) வாய்ப்பிருக்கிறது. ஓட்டுப் போட போவார்கள். திருத்தந்தை ஆவார்களா? தெரியவில்லை. மற்ற நால்வரும் கேரளத்தவர்கள். பெரும்பாலும் கீழைத் திரு அவையைச் சார்ந்த பேராயர்கள். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு கர்தினால் மட்டுமே உருவாகியிருக்கிறார். மேமிகு கர்தினால் லூர்துசாமி அவர்கள். தற்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய தலைமுறை ஆயர்களிலிருந்து யாரேனும் கர்தினாலாகத் தேர்வு பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பெரிய நாயகியை வேண்டுகிறேன்.

மிலான் மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் கர்தினால் கார்லொஸ் மரிய மர்த்தினி, நான் மிகவும் வியந்து வாசிக்கின்ற, நேசிக்கின்ற ஒரு திரு அவைத் தலைவர்.

மர்த்தினி ஓர் இயேசு சபை அருள்பணியாளர். திருவிவிலிய வல்லுநர். 1979-ஆம் ஆண்டு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அது இரண்டாம் ஜான்பால் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதல் வருடம். அப்போது இத்தாலி நாட்டின் மிக முக்கிய மிலான் உயர் மறைமாவட்டம் காலியாக இருந்தது. ‘யாரை அங்கு நியமிப்பது?’ என்று திருத்தந்தை யோசித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் ஒரு நிகழ்வில் பங்கெடுக்க கிரகோரியன் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போப் ஜான்பாலுக்கு அந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அதிபர் மர்த்தினியைப் பிடித்துப்போனது. அவரைப் பற்றி விசாரித்தார். மர்த்தினி பற்றிக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் திருத்தந்தைக்கு மகிழ்வூட்டின. அவரையே மிலான் மறைமாவட்டப் பேராயராக நியமிப்பது என்று முடிவெடுத்தார். செய்தி மர்த்தினிக்குத் தெரிவிக்கப்பட்டது. மர்த்தினிக்கு இதில் சிறிதுகூட விருப்பம் இல்லை. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திருவிவிலிய ஆய்வு சம்பந்தப்பட்ட அறிவுத்துறையிலேயே தன் வாழ்வைச் செலவழித்திருந்தார். ஒருமுறை கூட பங்குத்தந்தையாகப் பணியாற்றியதில்லைகல்விப் புலம் வேறு, மேய்ப்புப் பணிச்சூழல் வேறு. ஐரோப்பாவின் மிகப்பெரிய உயர் மறைமாவட்டத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய pastoral leadershipதன்னிடம் இருக்கிறதா? என்று அவருக்குச் சந்தேகம். எனவே, தான் ஏன் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது? என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஒரு நீண்ட கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு போய் போப்பைச் சந்தித்தார். திருத்தந்தையின் முன் முழந்தாளிட்டு கடிதத்தைக் கொடுத்தார்.   ஜான்பால் அவர்கள் மர்த்தினியின் கடிதத்தைப் பொறுமையாக வாசித்தார். பின் அதை மடித்து, தன் பையில் வைத்துவிட்டு, மர்த்தினியை நோக்கி, “Thank you for the letter, Fr Martini. But go to Milanஎன்று கூறினாராம். அதன் பிறகு நிகழ்ந்தது வரலாறு. திருத்தந்தை ஜான்பால் அவர்களே மர்த்தினியை ஆயராக அருள்பொழிவு செய்தார். 1983-ஆம் ஆண்டு அவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 22 ஆண்டுகள் மிலான் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி, 2001-இல் ஓய்வு பெற்றார்.

மிலான் கத்தீட்ரலில் அவர் எடுத்த விவிலிய வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கடவுளை நம்பாதவர்களைக் கூட மர்த்தினி கவர்ந்தார். மிலான் மறைமாவட்டத்தின்  தலைசிறந்த பேராயராக மட்டுமல்ல, திரு அவையைச் சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திச் சென்ற ஓர் உலகத் திரு அவைத் தலைவராகவும் அவர் உருவெடுத்தார். இரண்டாம் ஜான்பாலின் இறப்புக்குப் பின் நடந்த கான்க்ளேவில் முதல் சுற்றில் ஜோசப் ராட்சிங்கரைவிட மர்த்தினிக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன என்று சொல்லப்படுகிறது.

2012, ஆகஸ்டு 31 அன்று அவர் இறந்த போது, மிலான் நகர மேயர், “Carlo Maria Martini illuminated the way for the entire city, not just for part of it. For this reason, today more than ever, Milan mourns its Archbishopஎன்று கூறினாராம்.

உண்மையில் இதுதான் ஒரு திரு அவைத் தலைவரின் பணி. ஓர் இடத்துக்காக மட்டுமல்ல, ஒரு குழுவுக்காக மட்டுமல்ல, ஓர் இனத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்காகவும் ஒளி வீசுவது.

அப்படித்தானே?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).