நமது நலனுக்காக மனிதராகப் பிறந்த மூவொரு இறைவனின் இரண்டாவது நபராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றெடுத்ததால், கன்னி மரியா உண்மையிலேயே ‘இறைவனின் தாய்’ என்று எபேசு திருச்சங்கமானது கற்பிக்கின்றது.
1. மீட்பரது
பிறப்பின் மறைபொருளைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தோமானால், அது கிறித்தவர்கள் கன்னி மரியாவை இயேசுவின் தாயாக அழைப்பதோடு மட்டுமல்லாமல், அவரை ‘இறைவனின் தாய்’ என்று அங்கீகரிக்கவும் வழிவகுத்திருக்கிறது. கி.பி. 431-இல்
எபேசு திருச்சங்கத்தால் ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்று ஆர்ப்பரிப்போடு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கிறித்தவத்தின் தொடக்க கால நூற்றாண்டுகளிலிருந்தே இந்த மறையுண்மையானது கிறித்தவ நம்பிக்கையின் பாரம்பரியத்தைச் சார்ந்தது எனக் கருதப்பட்டது.
முதல்
கிறித்தவக் குழுமத்தில், இயேசு தந்தையாம் கடவுளின் மகன் என்பதைச் சீடர்கள் அதிகம் அறிந்ததால், கன்னி மரியா இறைவனின் தாய் அதாவது ‘Theotókos’ என்பது அவர்களுக்கு
மிகவும் தெளிவானது. இப்பெயரானது நற்செய்திகளில் வெளிப்படையாகத் தெரியவில்லையென்றாலும், அவற்றில் ‘இயேசுவின் தாய்’ என்பது குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இயேசுவே கடவுள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
(யோவா 20:28; ஒப்பிடுக 5:18; 10:30-33). எப்படியாயினும் கன்னி மரியா ‘கடவுள் நம்மோடு’
(மத் 1:22-23) என்ற பொருளில் ‘இம்மானுவேலின் தாய்’ என்றும் வழங்கப்படுகின்றார். ஏற்கெனவே மூன்றாம் நூற்றாண்டில், பழங்காலத்தில் எழுதப்பட்டதோர் ஏட்டிலிருந்து, பின்வரும் செபத்தை எகிப்திலிருந்த கிறித்தவர்கள் அன்னை மரியாவை நோக்கிச் செபித்ததாக அறியலாம்.
Theotókos என்ற சொல்லானது இந்தப் பழமையான ஆவணத்தில் முதல்முறையாக வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற சமயங்களின் புராண இலக்கியங்களில், ஒரு குறிப்பிட்ட பெண் தெய்வமானது ஏதாவதொரு தெய்வத்தின் தாயாகக் காண்பிக்கப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக, சேயுஸ் (Zeus) எனப்படும்
தெய்வமானது ‘ரேயா’
(Rhea) என்னும்
பெண் தெய்வத்தை அதன் தாயாகக் கொண்டிருந்தது. இந்த வழக்கமானது, இயேசுவின் தாயான கன்னி மரியாவுக்கு Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்கிற பெயரைக் கொடுக்கப் பெரிதும் உதவியது. எனினும், ‘இறைவனின் தாய்’ என்னும் பெயரானது அதற்குமுன் யாருக்கும் கொடுக்கப்பட்டதில்லை.
எபேசு திருச்சங்கமானது
மரியாவை
இறைவனின்
தாயாக
அறிவித்தது
2. நான்காவது
நூற்றாண்டில் Theotókos அதாவது
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளில் அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டு வந்தது. வெகு மக்கள் பக்தியிலும் இறையியலிலும் வெகுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல்லாடலானது இன்று திரு அவையினுடைய நம்பிக்கையின் மிகப்பெரிய சொத்தாகிவிட்டது. ஆகவே,
கி.பி. 5-வது நூற்றாண்டில் ‘இறைவனின் தாய்’ என்ற தலைப்பின் சரியான தன்மை குறித்து நெஸ்டோரியுஸ் சந்தேகம் எழுப்பியபோது எழுந்த பெரும் எதிர்ப்பு இயக்கத்தை (protest movement) ஒருவரால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில், மரியா மனிதராகிய இயேசுவின் தாய் மட்டுமே என்ற நிலைப்பாட்டின் பக்கமாக, மரியா ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது மட்டுமே கோட்பாட்டு முறையில் சரியானதொரு பொருளாக இருக்க முடியும் என்பதில் நெஸ்டோரியுஸ் உறுதியாய் இருந்தார். கிறிஸ்துவின் ஒற்றுமையை ஒப்புக்கொள்வதில் அவருக்கிருந்த சந்தேகமும், தெய்வீக மற்றும் மனித இயல்புகளுக்கிடையேயான வேறுபாட்டைப் பற்றிய அவரின் தவறான விளக்கமும் நெஸ்டோரியுஸ் இப்பிழையைச் செய்ய வழிவகுத்தது. கி.பி. 431-இல்
கூடிய எபேசு திருச்சங்கமானது அவரது ஆய்வறிக்கையைக் கண்டித்ததுடன், இயேசு கிறிஸ்துவில் உள்ள தெய்வீக மற்றும் மனித இயல்புகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி மரியாவை, ‘இறைவனின் தாய்’ என்று அறிவித்தது.
3. Theotókos என்ற சொல்லாடலானது ‘இறைவனைப் பெற்றெடுத்தவர்’ என்று
பொருள்படும். முதல் பார்வையில், இது நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ‘உண்மையில் ஒரு மனித உயிரினம் எவ்வாறு இறைவனைப் பெற்றெடுக்க முடியும்?’ என்ற கேள்வியையும் நம்மில் எழுப்புகின்றது. இக்கேள்விக்கான திரு அவையின் நம்பிக்கை சார்ந்த பதில் தெளிவாக உள்ளது. அதாவது, மரியாவின் தெய்வீகத் தன்மை என்பது இறைமகனைப் பெற்ற பெண்ணை மட்டுமே குறிக்கின்றதேயொழிய, அவரது தெய்வீகப் பிறப்பைக் குறிக்கவில்லை.
இறைமகன்
தந்தையாம் கடவுளால் அற்புதமான விதத்தில் படைக்கப்பட்டார் மற்றும் எல்லா விதத்திலும் அவருடன் ஒத்திருக்கிறார். இந்த உண்மையில், இயேசுவின் இந்த அற்புதமான பிறப்பில் மரியாவுக்கு எந்தவிதமான பங்குமில்லை. இருப்பினும், 2000 வருடங்களுக்கு முன்பாக இறைமகன் நமது மனித இயல்பை ஏற்று மரியாவின் கருவில் உருவாகிப் பிறந்தார் என்பது முக்கியக் கருத்தாகும். இவ்வாறாக, ‘இறைவனின் தாய்’ என்று மரியாவை அறிவிப்பதில் திரு அவையானது ‘கடவுளாம், வார்த்தை மனுவுருவானவரின் தாய் அவர்’
(Mother of the Incarnate Word, who is God) என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது. எனவே, அவரது தாய்மையானது மூவோர் இறைவனுக்கும் விரிவுபடுத்தப்படவில்லை. மாறாக, இரண்டாவது ஆளாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உரியது. மனித அவதாரம் எடுப்பதில், அம்மனித இயல்பை அவர், அவரிடமிருந்தே (மரியாவிடமிருந்தே) எடுத்தார்.
தாய்மை
என்பது இரு நபர்களுக்கிடையே உள்ள உறவாகும். ஒரு தாய் என்பவள் ஒரு நபருக்கு அவரது உடலைக் கொடுத்த தாய் மட்டுமல்ல; மாறாக, அவரைத் தோற்றுவித்தவர் (அதாவது, அவரைப் பெற்றெடுத்தவர்). இவ்வாறாக, இயேசுவுக்கு அவரது மனித இயல்புக்கேற்ப அவரைப் பெற்றெடுத்ததனால் மரியா இறைவனின் தாயாவார்.
ஆசிர்வதிக்கப்பட்ட
கன்னி
மரியாவின்
ஒப்புதலானது
இயேசுவின்
மனுவுருவாதலுக்கு
முந்தியுள்ளது!
4. மரியாவை
‘இறைவனின் தாய்’ என்று அறிவிக்கும் இந்த ஒரே சொல்லாடலில் மகனையும் தாயையும் பற்றிய தமது நம்பிக்கையைத் திரு அவை வெளிப்படுத்துகிறது. இந்த ஒற்றுமையை மரியாவின் தெய்வீகத் தாய்மையை அறிவிப்பதில், ஏற்கெனவே எபேசு திருச்சங்கத்தில் பங்கெடுத்த திருச்சங்கத் தந்தையர்கள் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையின் மீதான தங்களது நம்பிக்கையை வலியுறுத்த விரும்பியதில் காணலாம்.
இந்தச்
சொல்லாடலால் மரியாவை அங்கீகரிப்பதற்கான தகுதியைப் பற்றிய பண்டைய மற்றும் அண்மையில் மறுப்புகள் இருந்தபோதிலும், எல்லாக் காலத்திலும் உள்ள கிறித்தவர்களுக்கும் இந்தத் தாய்மையின் அர்த்தத்தைச் சரியாக விளக்கியதன் வழியாக, கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மை மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி மரியா மீதான அவர்களது நம்பிக்கையின் சிறப்புமிக்கதொரு வெளிப்பாடாக இச்சொல்லாடலை உருவாக்கினர்.
ஒருபுறம்,
திரு அவையானது Theotókos-ஐ
மனுவுருவாதலின் உண்மைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அங்கீகரிக்கின்றது. ஏனெனில், புனித அகுஸ்தினார் கூறுவதைப்போல, “தாய் கற்பனையாக இருந்தால், கிறிஸ்துவின் சதையும் உயிர்த்தெழுதலின் வடுக்களும் கற்பனையானதாகவே இருந்திருக்கும்” (Tract. in Ev. Ioannis, 8, 6-7); மறுபுறம், திரு அவையும் அவரது மகனாக இருக்க விரும்பியவரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட மகத்துவமிக்க மாண்பை ஆச்சரியத்துடன் சிந்திக்கவும் கொண்டாடவும் செய்கின்றது.
‘இறைவனின் தாய்’ என்ற சொல்லாடலானது மனுவுருவாதல் வழியாகத் தாழ்நிலையில் இருந்த மனிதனை, இறைமகன் என்னும் தெய்வீக நிலைக்கு உயர்த்திய கடவுளின் இறைவார்த்தையைக் குறிக்கின்றது. நாசரேத்து மரியாவுக்கு வழங்கப்பட்ட உயர் மதிப்பின் வெளிச்சத்தில் இந்தச் சொல்லாடலானது பெண்ணின் பெருமையையும், அவர் பெற்ற உயர்ந்ததோர் அழைத்தலையும் பறைசாற்றுகின்றது. இறைவன் உண்மையில் மரியாவை ஒரு
சுதந்திரமுள்ள மற்றும் பொறுப்பானதொரு நபராகக் கருதுகிறார்; மேலும், அவர் அவரது சம்மதத்தைப்
பெறுகின்றவரை அவரது மகனின் மனுவுருவாதலை நிறைவேற்றவில்லை. எகிப்தில் வாழ்ந்த பண்டைய கிறித்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, இறைமக்கள் தங்களை அவரிடம் ஒப்படைப்பார்களாக; ஏனெனில், இறைவனின் அன்னையாகத் திகழும் அவர், தமது இறைமகனிடமிருந்து தீமையிலிருந்து விடுதலை பெறும் அருளையும், முடிவில்லா மீட்பையும் பெற்றுத் தர வல்லவர் ஆவார்.
மூலம்:
John Paul II, Church proclaims Mary Mother of God, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 4 December
1996, p. 11.
உறவுக்குக் கைகொடுத்தார்; மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார்; அன்புக்கு ஒளி கொடுத்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார்; மீட்புக்கு உயிர் கொடுத்தார்; இறையாட்சிக்கு விதை விதைத்தார்.
“உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல; தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்” என்கிறது யோவான் நற்செய்தி. மீட்பு என்பதற்கு உண்மையான பொருளே முழுமையான விடுதலை என்பதுதானே! கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மரித்தது எல்லாமே மானுட மீட்புக்காகத்தான்.
இறைத்தூதராக
மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரசக் குலத்திலேயே அவதரித்திருக்கக் முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான் ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அறியாமை
இருளிலிருந்து மீண்டு, மனிதர் ஞானஒளி பெற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயருக்கும் பரிசேயருக்கும் தமது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்துப் பதிலடி கொடுத்தார். பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஒரு விபச்சாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயருக்கு, “உங்களில் பாவம் செய்யாதவன், முதலில் இவர்மீது கல் எறியட்டும்” என்று
கண்டனம் தெரிவித்தார்.
யூதக்குலம்
என்ற உயர் குடியில் பிறந்தாலும் அடிமைத்தளையிலிருந்து மனிதரை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட பிற இனத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளியரோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார். இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரியிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய
அந்தக் கொள்ளையருக்குச் சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார்.
பகைமை,
வெறுப்பு வேற்றுமைகளிலிருந்தெல்லாம் மனிதகுலத்தை மீட்டு, அவர்களிடையே
அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளைத் தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்! மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடைமைச் சிந்தாத்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்துதாம் என்பதை யாரும் மறுக்க முடியுமா? பசியிலிருந்தும் பட்டினியிலிருந்தும் மனிதரை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும் மீனையும் ஆசிர்வதித்து, அதை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கக் கூறினார். இவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில்; இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில்; திருமுழுக்கு யோர்தான் நதியில்; தமது சீடரைத் தேர்ந்தெடுத்தது கடற்கரையில்; கெத்சமெனித் தோட்டத்தில்தான் செபித்தார்; கெடுதலான அலகையை மலையில்தான் சபித்தார்; வானத்துப் பறவைகளைப் பார்க்கக் கூறினார்; வளர்ந்து நிற்கும் நெற்கதிரை
நோக்கக் கூறினார்; இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை
நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.
அநீதிகள்,
அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும் நேர்மையையும் நியாயத்தையும் மீட்கத்தானே அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, ‘நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய்?’ என்று போர்க்குரல் எழுப்பினார்.
கயவரின்
நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே
கொடூரமான முள்முடியையும், அவமானகரமான சிலுவைச் சாவையும் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க ஏற்றுக்கொண்டார். இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில்,
“அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என்று கூறப்பட்டிருக்கிறது.
குறைந்த
வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும்,
உயர்ந்த சமூகப் போராளியாகவும், குவலயத்தில் வாழ்ந்து காட்டியவர் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும்
பெறுவோம்.
1. இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியில் லூக்கா நற்செய்தியாளர் அந்நிகழ்வின் மறைபொருளை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய வகையில் நமக்கு எடுத்துக் கூறுகிறார்.
முதலில்,
நற்செய்தியாளர் தாவீதின் வழிமரபினரான யோசேப்புவையும், அவரின் மனைவி மரியாவையும் “கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு...” (லூக் 2:5) செல்லப் பணித்த அகுஸ்துஸ் சீசரால் ஆணையிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அந்தப்
பயணமும் இயேசுவின் பிறப்பும் எத்தகைய சூழலில் நிகழ்ந்தவை என்பதைப் பற்றி நமக்குக் கூறுகையில், நற்செய்தியாளர் லூக்கா மெசியாவின் அரசைப் பற்றிய சில அடிப்படைப் பண்புகளாகிய துன்பம் மற்றும் ஏழ்மை போன்ற சூழ்நிலையோடு நமக்குக் கூறுகின்றார். அதாவது, அவரின் அரசு பற்றி அவரே அவரது பொதுவாழ்வில் கூறுகின்றவாறு, எந்தவிதமான உலகுசார்ந்த மரியாதையோ அல்லது அதிகாரமோ இல்லாததோர் அரசாகும்: “மனுமகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை”
(லூக் 9:58).
2. இயேசுவின்
பிறப்பு பற்றிய நற்செய்தியாளர் லூக்காவின் விவரிப்பானது ஒருசில முக்கியமில்லாத குறிப்புகளைக் கொண்டிருக்கின்றது. அவை
இயேசுவினுடைய பிறப்பின் மறையுண்மைகளையும் மற்றும் இறைமகனைப் பெற்றெடுத்தவரின் உணர்வுகளை நன்றாகப் புரிந்துகொள்ளவும், வாசிப்பவர் களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும் எழுதப்பட்டிருக்கலாம்.
பிறப்பு
பற்றிய விவரிப்பானது சாதாரண முறையில் கூறப்பட்டிருந்தாலும், மரியாவை அவர் மனத்தில் இருத்தித் தியானிப்பவராக மற்றும் கிறிஸ்துவின் மறையுண்மைகளில் மிக நெருக்கமாகப் பங்கெடுப்பவராகப் பதிவுசெய்கின்றது. “அவர்தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத்தொட்டியில் கிடத்தினார்...” (லூக் 2:7). மரியாவின் இச்செயலானது
ஏற்கெனவே கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது வெளிப்படுத்தப்பட்ட “உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்
1:38) என்ற வார்த்தைபடி கடவுளின் திட்டத்தில் துணை நிற்பதற்கான அவரின் தீர்க்கமான மனநிலையைக் குறிக்கின்றதொன்றாகவே இருக்கின்றது.
மரியா தனது
மகனின்
மீட்புப்
பணியைப்
பகிர்ந்து
கொள்கின்றார்
மரியா
மகப்பேற்றை ஒரு முழுமையான ஏழ்மை கோலத்தில் அனுபவிக்கின்றார். புதிதாகப் பிறக்கின்ற ஒரு குழந்தைக்குத் தாய்மார்கள் வழக்கமாகக் கொடுக்கின்ற ஒன்றைக்கூட அவரால் இறைமகனுக்குக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக ‘மிக மிக உயர்ந்தவரின் மகன்’ என்ற கௌரவத்திற்கு மாறான புதுமையானதொரு தொட்டிலாகிய ‘ஒரு தீவனத் தொட்டியில்’ மரியா
அவரைக் கிடத்த வேண்டியதாயிற்று.
3. “விடுதியில் அவர்களுக்கு
இடமில்லை” (லூக்
2:7) என்று லூக்கா நற்செய்தி கூறுகின்றது. இந்த வார்த்தையானது, யோவான் நற்செய்தியின் முகவுரையை நமக்கு நினைவுபடுத்துகின்றது: “அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவா
1:11). மேலும் இது அவர் தமது பூவுலக வாழ்வின் பொழுது எதிர்கொள்ளப் போகின்ற அநேகப் புறக்கணிப்புகளை முன்னறிவிக்கின்றதொன்றாகவே அமைகின்றது. “விடுதியில்
அவர்களுக்கு இடமில்லை”
(லூக் 2:7). இங்கு ‘அவர்களுக்கு’ என்ற
சொல் மகன் மற்றும் தாயை இந்தப் புறக்கணிப்பில் இணைக்கின்றது. மேலும், மரியா எவ்வாறு ஏற்கெனவே அவரது மகனின் பாடுகளோடு இணைக்கப்படுகின்றார் மற்றும் மீட்புப் பணியைப் பகிர்கின்றார் என்பதையும் காட்டுகின்றது.
‘தமக்குரியவர்களாலேயே’ புறக்கணிக்கப்பட்டு
ஒன்றும் அறியாதவர்கள், காட்டுமிராண்டிகள் மற்றும் கரடுமுரடானவர்கள் என்று கூறப்பட்ட ஆனால், மெசியாவின் பிறப்பு பற்றிய நற்செய்தியை முதலில் பெற கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆடு மேய்ப்பவர்களால் வரவேற்கப்படுகின்றார். வானதூதர் அவர்களுக்குக் கொடுக்கின்ற செய்தியானது மகிழ்ந்து களிகூர்வதற்கானதோர் அழைப்பாகும். ‘அஞ்சாதீர்கள்’ என்று
சொல்லி அனைத்து பயங்களையும் வெற்றிகொள்ளுங்கள் என்ற அழைப்போடு, “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்
2:10) என்றும் கூறுகின்றார்.
உண்மையில்,
கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியாவுக்கு இருந்ததைப்போலவே மனிதர்களுக்கான கடவுளது நல்லெண்ணத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாகவே இயேசுவின் பிறப்பு, ஆடு மேய்ப்பவர்களுக்கு (இடையர்களுக்கு) அமைகின்றது. பெத்லகேம் குகையின் ஏழ்மையில் தியானிக்கப்படும் தெய்வீக மீட்பரில், மனுக்குலத்தின் நம்பிக்கையாக இருக்கின்ற ஒருவரை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்கான ஓர் அழைப்பாக இதை நாம் காணமுடியும்.
வானதூதரின் பாடல்:
“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கூறுகின்றது. இது “நல்லெண்ணம் கொண்ட மனிதர்கள்”
(லூக் 2:14) என்றும் மொழிபெயர்க்கப்படலாம். இப்பாடல் மரியா அவரது பாடலில் (Magnificat) கூறியதை
இடையர்களுக்கு வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பிறப்பு கடவுளின் இரக்கம் நிறைந்த அன்பின் அடையாளமாக இருக்கிறது. அதுவே தாழ்நிலையில் இருந்தோருக்கும் ஏழைகளுக்கும் சிறப்பான விதத்தில் காட்டப்படுகின்றது.
4. இடையர்கள்
வானதூதரின் அழைத்தலுக்கு ஆர்வத்தோடும் உடனடியாகவும் பதிலளிக்கிறார்கள்: “வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்” (லூக்
2:15).
அவர்கள் வீணாகத்
தேடவில்லை:
“மேலும் அவர்கள்.... மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்” (லூக்
2:16). அவர்களுக்குத்
திருச்சங்கம் நினைவுகூர்வதைப் போன்று, “இறைவனின் தாய் அவரின் தலைச்சன் மகனை மகிழ்ச்சியோடு காண்பித்தாள்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 57). இதுதான் அவர்களது வாழ்வின் முக்கியமானதொரு தருணமாக இருந்தது.
மரியா இந்த
நிகழ்வுகளை
அவரது
மனத்தில்
தியானித்தார்
“பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை...” (லூக் 2:17) தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இடையர்களுக்கு இயல்பாகவே இருந்தது. தாயை அவரது மகனோடு சந்தித்த அந்த அற்புதமான அனுபவத்திற்குப் பிறகு, அந்த இடையர்கள் எல்லாக் காலத்தையும் சார்ந்த நற்செய்தி அறிவிப்பாளர்கள் இயேசுவை நன்கு தெரிந்துகொள்வதற்கும் மற்றும் அவரது மீட்பின் நற்செய்தியை அறிவிக்கின்ற மகிழ்ச்சியான அறிவிப்பாளர்களாக மாறுவதற்கும் உரிய வழிமுறைகளையும், அவர்கள் மரியாவோடு ஆழமான ஆன்மிக உறவு கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அதன் அவசியத்தையும் பரிந்துரைக்கிறார்கள்.
இத்தகைய
வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகளோடு, நற்செய்தியாளர் லூக்கா “மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்” (லூக்
2:19) என்று கூறுகின்றார்.
இடையர்கள்
பயத்திலிருந்து வியப்பிற்குக் கடந்து சென்றபொழுது, நம்பிக்கையின் காரணமாக மரியா அவரது மகனோடு தொடர்புடைய நிகழ்வுகளின் பதிவுகளை மனத்தில் வைத்திருந்தார். மேலும், அவைகளைப் பற்றி இதயத்தில் அதாவது, அவரது இதயத்தின் ஆழத்தில் தியானித்ததனால் அவைகளைப் பற்றிய அவரின் புரிதலை ஆழப்படுத்தினார்.
இவ்வகையில்,
மீட்பின் மறைபொருளைச் சிறப்பாக ஏற்றுக்கொள்வதற்கும், அதனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், அனைத்துக் காலங்களைச் சார்ந்த மக்களிடமும் புதுப்பிக்கப்பட்ட முயற்சியுடன் அதனைப் பறைசாற்றுவதற்கும் ஏதுவாக மற்றொரு தாயான திரு அவையானது தியானம் மற்றும் இறையியல் சிந்தனை ஆகிய கொடையையும் பணியையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மூலம்:
Pope John Paul II, Nativity shows Mary’s closeness to Jesus, in
«L’Osservatore Romano», 27 Novembre 1996, p.11.
திருவிவிலியத்தில் உள்ள புதிய ஏற்பாட்டு நூல்கள், ஆண்டவர் இயேசுவின் வாழ்வைத் தெளிவாகவும் நேரடியாகவும் பேசுகின்றன. அந்த முறையில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய கூற்றுகளை ஆய்ந்தறியும்போது, அவரைப் பற்றிய வெளிப்பாடுகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இத்தூண்டுதலின் விளைவாக ஏற்பட்ட எண்ண அலைகள்தான் இக்கட்டுரை.
இயேசுவின் முதல்
முகம்,
துன்புறும்
கிறித்தவர்கள்
அக்காலத்தில்
சவுல் கிளர்ந்தெழுந்து கிறித்தவர்களைத் துன்புறுத்தவும், கைது செய்யவும் தமஸ்குவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஓர் ஒளி அவரைச் சூழ்ந்து வீசியதால் தரையில் விழுந்த சவுலிடம், “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் கேட்டது. அதற்கு அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என்ற
பதில் கிடைத்தது (திப 9:1-6).
இயேசுவின்
இக்கூற்று நம்மை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுகிறது. ஏனெனில், கிறித்தவர்கள் துன்புறும்போதெல்லாம் இயேசுவே துன்புறுகிறார் என்று பொருளாகிறது. எனவேதான், துன்புறும் கிறித்தவர்களை ஆண்டவர் இயேசுவின்
முதல் முகம் என்கிறோம். அண்மைக் காலத்தில் வடஇந்தியாவில் பல இடங்களில் கிறிஸ்துமஸ்
கொண்டாட்டத்தின் போது கிறித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் துன்புறுவது கிறித்தவர்களல்லர்; மாறாக, இயேசு ஆண்டவர்தாம் என்பது புலனாகிறது. கிறித்தவர்களின் கூட்டத்தைத் திரு அவை என்கிறோம். திரு அவைக்குக் கிறிஸ்துவின் மறையுடல் என்னும் ஓர் இறையியல் கருத்து உள்ளது. திரு அவைக்கு இயேசுவே தலையாக உள்ளார் (கொலோ 1:18). எனவேதான் கிறித்தவர்கள் துன்புறும்போது கிறிஸ்துவே துன்புறுகிறார். கிறித்தவர்கள் பிளவுபட்டிருக்கும் போதும் கிறிஸ்துவே பிளவுபட்டிருக்கிறார்.
இயேசுவின் இரண்டாவது
முகம்
- துன்புறும்
மக்கள்
மத்தேயு
நற்செய்தியாளர் உலக முடிவைப் பற்றி 25-ஆம் அதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். உலக முடிவின்போது மானிட மகன் உயிரோடிருப்பவர்களையும் இறந்தோரையும் தீர்ப்பிட வருவார். நல்லவர்கள் அவரது வலது பக்கம் நிற்பர். தீயவர்கள் அவரது இடது பக்கம் நிற்பர். நல்லவர்களைப் பார்த்து, “நான் பசியாக இருந்தேன், உணவு தந்தீர்கள்; தாகமாய் இருந்தேன், தண்ணீர் தந்தீர்கள்.....” என்றெல்லாம் கேட்பார். அப்பொழுது நல்லவர்கள், “ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாக இருந்தீர், உமக்கு உணவு அளித்தோம்? தாகமாய் இருந்தீர், தண்ணீர் தந்தோம்?.....” என்றெல்லாம் கேட்பார்கள் (மத் 25:31-46). அதற்கு மானிட மகன், “மிகச் சிறியவராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத்
25:40) எனப் பதில் கூறுவார். இக்கூற்றை ஆய்வு செய்கையில் இயேசு ஆண்டவரின் இரண்டாவது முகம், துன்புறும் மக்கள் எல்லாரும் ஆவர். துன்புறும் மக்கள் சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றையும் கடந்து நிற்கும் மக்களாவர். அத்தகைய துன்புறும் மக்களுக்கு உதவி செய்கின்றபோதெல்லாம் இயேசுவுக்கே உதவி செய்கிறோம். துன்புறும் மக்களைப் புறக்கணிக்கும் போதெல்லாம் இயேசுவையே புறக்கணிக்கிறோம்.
இயேசுவின் மூன்றாவது
முகம்
- இயற்கை
புனித
பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் ஆழ்ந்த கிறிஸ்தியல் இருக்கிறது. இப்பின்புலத்தில் புனித பவுல் கூறுகின்ற வார்த்தை நம்மை வியக்க வைக்கிறது: “இந்நாள் வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கிறது” (உரோ
8:22).
இங்கே
படைப்பு என்னும் வார்த்தை இயற்கையைச் சுட்டிக் காண்பிக்கிறது என்று பொருள் கொள்ளலாம் அல்லவா! அப்படியானால், இயற்கை சுரண்டப்படும் பொழுதெல்லாம் இயேசுவே சுரண்டப்படுகிறார் என்பதுதானே பொருள்! ஆகவேதான் இயேசு ஆண்டவரின் மூன்றாவது முகம் இயற்கை என்கிறோம். மேலும் புனித பவுல், “விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையும் கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஒன்று சேர்க்கவேண்டும்” (எபே
1:10) என மொழிகிறார். அதாவது, இயற்கையை அல்லது படைப்பு அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்க்கவேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்று உறுதியாக உரைக்கிறார்.
ஆகவே,
இயற்கையை அழிக்கும்போது இயேசுவையே அழிக்கிறோம் என்பதுதானே பொருள்! இயற்கையை நிறைவுபெற விடாமல் அதனை அழித்து, கனிம வளங்களைக் கொள்ளையடித்து நாசம் செய்கிறோம். இது கடவுளுக்கு எதிரான துரோகச் செயலாகும். “நிலம் என்னுடையது; நீங்களோ என்னைப் பொறுத்தவரையில் அந்நியரும் இரவற்குடிகளுமே” (லேவி
25:23) என்கிறது திருவிவிலியம்.
மனிதர்கள்
நிலத்தின் காவலாளிகள். கடவுள் மட்டுமே நிலத்தின் உரிமையாளர். எனவே, இயற்கையை அழிப்பது, சுரண்டுவது கடவுளுக்கு எதிரான பாவமாகும். இயற்கை ஆண்டவர் இயேசுவின் மூன்றாவது முகம்.
இயற்கையின்
அம்சங்களாகிய நிலம், நீர், காற்று இவைகளை மாசுபடுத்தும் பொழுது இயேசுவையே மாசுபடுத்துகிறோம். ஆதலால் இயற்கையைப் பேணுவோம், பாதுகாப்போம். ஏனெனில், இயற்கையை அன்பு செய்வதே இறைப்பணியாகும்.
சுயநலமும் வன்முறையும் பிரிவினை வாதமும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்ற இன்றைய உலகச் சூழலில், திரு அவையாகிய நாம், ஒரு மாற்றுப் பண்பாட்டை நற்செய்தியாய் எடுத்துரைக்கின்ற சமூகமாக மலர அழைக்கப்படுகின்றோம். அதன்படி, திரு அவைத் தலைவர்களும் துறவியரும் பொதுநிலையினரும் இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்து (Spiritual Discernment) வாழ்வாக்குகின்ற கூட்டியக்கமாகத் திரு அவை மலரவேண்டும். அக்கனவை நனவாக்கிடவே, கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாமன்றத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அமைத்தார். இம்மாமன்றம் வழக்கமான ஆயர் மாமன்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. திரு அவைத் தலைவர்கள், துறவியர், இறையியலாளர்கள், துறை வல்லுநர்கள், பொதுநிலையினர் என அனைவரையும் உள்ளடக்கியதாக அமைந்தது.
இதற்கு
அடிப்படையாக அமைவது திருத்தூதர் பணிகள் நூலில் அமைந்துள்ள எருசலேம் முதற் சங்கத்தைப் பற்றிய பகுதியாகும் (திப 15:5-21). விருத்தசேதனம் செய்துகொள்வது பற்றிய கேள்வி எழுந்தபோது, திருத்தூதர்களும் திரு அவை மூப்பர்களும் இறைமக்களும் இணைந்து ஒருவர் மற்றவருக்குச் செவிகொடுத்து இறைவனின் விருப்பத்தைக் கண்டுணர்கின்றனர். அதே வழியில், இன்றைய திரு அவையானது, கடவுளோடும் சக மனிதர்களோடும் இயற்கையோடும்
உடன் நடந்து, உணர்வுகளுக்கும் சிந்தனைகளுக்கும் செவி கொடுத்து, இணைந்து இறைத்திருவுளத்தைத் தெளிந்து தேர்ந்திட அழைக்கப்படுகின்றது. அத்தகைய செயல்பாடு வழியாக உலகத்தின் பிரச்சினைகளுக்குப் பதிலிறுப்புச் செய்வதே கூட்டொருங்கியக்க மாமன்றம் வெளிப்படுத்திய நம்பிக்கை. ஆனால், இக்கனவு ஆயர் மன்றத்தோடு நிறைவுபெற்றுவிட இயலாது. இதன் உண்மையான பலன், நமது குடும்பங்கள், இயக்கங்கள், பங்குக் குழுமங்கள், துறவற அமைப்புகள், திரு அவை அமைப்புகள் அனைத்தும் அதே வழியில் சிறு சிறு கூட்டியக்கங்களாக மாறுகின்றபோதுதான் முழுமையடையும். அதற்கான அமைப்புமுறை மற்றும் செயல்முறை மாற்றங்களோடு, நம்மில் உள்ளார்ந்த பண்பியல் மாற்றமும் நிகழ, திரு அவையானது ஒரு தொடர் திருப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வாழும் கடவுளின்
திருவுளம்:
இறைத்திருவுளம் என்பது நிறைவுசெய்யப்பட்ட கோட்பாட்டுக் கருவூலம் அல்ல; அது உயிரோட்டமான இயக்கமாகும். படைத்துக் காக்கும் இறைவன் தொடர்ந்து சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் சூழலில் உடன் நடந்து, நம்மைத் தூய ஆவியார் வழியாக வழிநடத்துகிறார். “என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்”
(எரே 31:33) எனக் கூறிய கடவுள், நமது உள்ளார்ந்த ஏக்கங்கள், நீதி மற்றும் ஒப்புரவுக்கான சமூகக் குரல்கள் வழியாகத் தம் கட்டளைகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார். எனவே, தனிப்பட்ட வாழ்விலும் குழுவாகவும், நமது முயற்சிகளிலும் முடிவுகளிலும் இறைத்திருவுளத்தைத் தேர்ந்து செயல்படுவதை வாழ் வாக்கவேண்டும்.
உறவு ஒன்றிப்பு:
தெளிந்து தேர்தல் என்பது கடவுளின் திருவுளத்தினைக் கண்டறிவதற்கான மனித முயற்சி மட்டுமல்ல; அது தூய ஆவியாரின் கொடை என்கிறது திருவிவிலியம் (1கொரி 2:12-14, 12:10-11). அவரே நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துகிறார். வரப்போகிறவற்றை அறிவித்து, தகுந்த முடிவுகளை எடுக்க உதவுகிறார் (யோவா 16:13). எனினும், அவர் தனித்துச் செயல்படுவதில்லை. அவர் மூவொரு இறைவனின் அன்பிலிருந்து பிறக்கின்ற இறையாட்சிக்கான கனவிலிருந்தே நமக்கான இறைத்திட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனவே, இறைத்திருவுளம் என்பது மூவொரு இறைவன் தமக்குள் கொண்டிருக்கும் உறவை மையமாகக்கொண்டது.
மூவொரு
இறைவனின் உறவில் இணைக்கப்பட்டவர்களாக, இறையாட்சிக்கான திட்டத்தில் நம்மையும் பங்குபெறச் செய்வதே தெளிந்து தேர்தல் முறையாகும். எனவே, அது அறிவுத்தளத்தில் நிகழ்கின்ற மனிதச் செயல்பாடு அல்ல; இறைநம்பிக்கையையும் உறவு ஒன்றிப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆன்மிகச் செயல்பாடு என்பதைப் புரிந்துகொள்ளலாம். எனவே, செபச் சூழலில், சுயநலங்களைக் கடந்து, அனைவருக்கான நன்மையை நாடி கருத்துகளைப் பகிர்வது இதன் அடிப்படையாகும்.
காலத்தின் அறிகுறிகள்:
மாறிவரும் காலச்சூழலில், தகுந்த பதிலிறுப்பைத் தெளிந்து தேர்ந்திட, இன்றைய சமூகத்தைச் சார்பின்றி அறிவார்ந்த முறையில் ஆய்ந்தறிவது அவசியமாகும். இன்றைய சமூகத்தின் போக்கினை நான்கு அடிப்படைப் பண்புகளைக் கொண்டதாக அறிஞர்கள் விளக்குகின்றனர். அதன்படி, இன்றைய உலகமானது நிலையற்றது, நிச்சயமற்றது, குழப்பமானது, தெளிவற்றது. இந்த உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றது. எத்தகைய மாற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றது என்று யூகிக்க முடியாத அளவு குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது. பல பிரச்சினைகள் ஒன்றோடு
ஒன்று பின்னிப்பிணைந்ததாக, எளிதாகத் தீர்வுகள் காணமுடியாத அளவு சிக்கலானதாகவும் தெளிவற்றதாகவும் விளங்கின்றன. எனவே, இன்றைய சமூகத்திற்கான தீர்வுகளை ஒற்றைப் பார்வையின் அடிப்படையில் கண்டறிந்திட முடியாது என்பதே உண்மை. எனவே, குழுமத்தில் உள்ள யாவரும் பொறுப்பினையேற்று, ஒரு கூட்டியக்கமாக அனைவருடைய பார்வைகள், கருத்தியல்கள், அனுபவங்கள், உணர்வுகள், அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, நிகழ்த்துகின்ற உள்ளார்ந்த தேடலே தகுந்த முடிவுகளை நோக்கி நகர்த்தும்.
மாற்றுக்
கருத்துகளும், தூய ஆவியாரின் தூண்டுதலில் வெளிப்படுகின்றன என்கிற நம்பிக்கையில், மாண்போடு அவற்றை உள்ளத்தில் ஏற்றுச் சிந்திக்கவும் அதில் வெளிப்படுகின்ற உண்மையைக் கண்டுணரவும் முயல்வது நம்மை உண்மையை நோக்கி வழிநடத்தும். இவ்வாறு, நாம் கருத்தளவில் வேறுபட்டாலும், இறைநம்பிக்கையிலும் இறைத்திருவுளத்தை நாடித் தேடுகிற அடிப்படை முயற்சியிலும் ஒரே மனமும் உள்ளமும் கொண்டவர்களாய் விளங்க முடியும்.
திறந்த மனம்:
முதல் ஏற்பாட்டில், இறைவாக்கினர் எலியா குழப்பத்தோடு இருந்தபோது, இறைவன் அவரைக் குகைக்கு வெளியே வருமாறு அழைக்கிறார் (1அர 19: 9-18). அவர் வெளியே வந்ததும், புயல் காற்றும், பூகம்பமும் நெருப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. ஆனால், அவற்றில் எல்லாம் கடவுள் இல்லை. இறுதியாக, மெல்லிய தென்றல் காற்றில் கடவுளின் குரலை எலியா கண்டுகொள்கிறார். குழப்பம் தெளிந்து, இறைத்திருவுளத்தை உணர்ந்து செயல்படுகிறார். இந்நிகழ்வு, தெளிந்து தேர்தலுக்கான பல இறையியல் உண்மைகளை
வெளிப்படுத்துகிறது. குகையிலிருந்து கடவுள் அவரை வெளியே அழைப்பதன் வழியாக, நாமும் நமது முற்சார்பு சிந்தனைகள், கவலைகள், எதிர்பார்ப்புகள், கருத்தியல்கள் ஆகியவற்றில் முடங்கிவிடாமல், திறந்த மனத்தோடு இறைவனின் உடனிருப்பை உணர்ந்து இறைத்திட்டத்தை நாட அழைக்கப்படுகிறோம். புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் துன்புறுத்தும் வெளியிருந்து வரும் அழுத்தங்கள், உள்ளார்ந்த பலவீனங்கள், உள்மனப் போராட்டங்கள் ஆகியவற்றை ஒதுக்கி, அமைதி நிறைந்த உள்ளத்தோடு நாடும் போது கடவுளின் குரலை உணர முடியும்.
குழுமத்
தெளிந்து தேர்தல் முயற்சியில், அரசியல் செல்வாக்கு, செல்வம், புகழ், பெருமை ஆகியவற்றை நாடும் அதிகாரத்தின் குரலும், அவற்றிற்கு அடி பணிந்து, அச்ச உணர்வினால் தங்களைத் தற்காத்துக்கொள்ள முற்படும் சமரசக் குரல்களும் வெறுப்பும் வன்முறையும் நிறைந்த குரல்களும் புயல் காற்றாகவும் பூகம்பமாகவும் நெருப்பாகவும் நம்மைத் திசை திருப்பலாம். அத்தகைய நிலைகளில் மெல்லிய காற்றாக வீசுகிற ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர், அகதிகள் போன்றோரின் குரல்களே கடவுளின் குரலாக அமையலாம். விளிம்பு
நிலையில் வாழ்வோரின் குரலையும் உள்ளடக்கிய தேடலே இறையாட்சியின் பாதையில் நம்மை வழிநடத்தும்.
எதிர்நோக்கு நிறைந்த
உள்ளம்:
எல்லாரும் எதிர்பார்க்கிற முடிவுகளைக் குழுமமாக விவாதித்து ஏற்பது அல்ல தெளிந்து தேர்தலின் நோக்கம். இஸ்ரயேல் மக்கள் தங்களை மீட்க வரும் மெசியா, அரசராக வந்து தங்களை அரசியல் அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்கிற தீர்வினை நாடிக் காத்திருந்தனர். ஆனால், இறைத்திட்டமோ அரசியல் அடிமைத்தனத்தையும் கடந்து உள்ளார்ந்த விடுதலையைத் தருகின்ற மீட்பினை நோக்கியதாக இருந்தது.
மேலும்,
அம்மீட்பினைத் தர, இறைமகன் தம்மையே சிலுவையில் அர்ப்பணிப்பது என்பது மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. அதைப்போல, நம்முடைய வாழ்வுக்கான இறைத்திட்டமும் நமது பார்வைகளின் எல்லைகளைக் கடந்ததாக அமையலாம். எதிர்நோக்குக் கொண்ட பரந்த பார்வையோடு இறைத்திட்டத்தை நாடித் தெளிந்து தேர்ந்திட தூய ஆவியார் நம்மை வழிநடத்துவார். எனவே, நமது சிறிய ஞானத்திற்குள் முடங்கிவிடாமல், இறைஞானத்தின்மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம்.
அத்தகைய
நம்பிக்கையோடு, கூட்டடொருங்கியக்கத் திரு அவையை வாழ்வாக்கும் எதிர்நோக்குடன் திருப்பயணிகளாக இணைந்து பயணிப்போம்.
பேரொளியாக இறைவன் வியத்தகு செயல்களைச் செய்து நம்மோடு வாழ்கின்றார் என்ற எதிர்நோக்குடன் வாழும்போது அற்புதங்கள், அதிசயங்கள் தொடர்ந்து நிகழும் என்பது நிதர்சனமான உண்மை. கத்தோலிக்க நம்பிக்கையை நம் இறை அனுபவங்கள் ஆழமாக்கும். பிற சபைகளுக்கு மாறி மாறிச் சென்று அற்புதங்களுக்காக அலைந்து கொண்டிருக்கத் தேவையில்லை. நம் உன்னதமும் உயர்ந்ததுமான திருப்பலிக்கு நிகர் வேறு எந்த வழிபாடும் இல்லை. அதனால்தான் நாம் பாடுகிறோம், ‘பூசைபலி போல் பாக்கிய செல்வம் புவியில் இல்லையே! புவி நிரம்ப பொன் தந்தாலும் இப்பலிக்கு ஈடில்லையே!’ என்று.
இயேசுவோடு
நம்மைப் பலியாக இறைத்தந்தையிடம் ஒப்புக்கொடுக்கும் பொழுது, இயேசுவின் பாடுகளில் குறைவாய் இருப்பதை நம் உடலில் தாங்கிக்கொள்ளும் உறுதி பெறுகின்றோம்.
இறைவனுக்கு நன்றி கூறுவது மீட்பு தரும் செயல் என்று திருப்பலியில் செபிக்கின்றோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்: “ஒரு நாளில் பலமுறை நான்கு வார்த்தைகளைக் கூறுவது சிறப்பானது; ‘தயவுசெய்து’,’ நன்றி’, ‘மன்னியுங்கள்’ இவை
அனைத்தும் இறையாட்சி மலரச் செய்து அன்புறவை நிலைப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமல்லாமல், நம் வாழ்க்கையைப் பொருள் நிறைந்ததாகவும் சிறப்பாகவும் மாற்றுகின்றன.”
முப்பது
ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் குடும்பத்தோடு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். உடனிருந்த சிறுமி மிட்டாய் வாங்கினாள். கடைக்காரரிடம் ரூபாய் கொடுத்து, ‘தயவுசெய்து மிட்டாய் தாருங்கள்’
என்று கேட்டாள். வாங்கிய பின் ‘நன்றி’ என்று கூறினாள். உடனிருந்த அனைவரும் அவளை மட்டுமல்லாமல், அவளுடைய பெற்றோரையும் வாழ்த்தினர்.
குற்றங்களுக்கு
மன்னிப்புக் கேட்டு, பெற்றவைக்கு நன்றி கூறுவது மீட்பு தரும் செயல் என்று திருப்பலியில் செபிக்கின்றோம். மன்னிப்புக் கேட்பது மட்டுமல்ல; மன்னிப்புக் கொடுப்பதும் இயேசுவின் நெருக்கமான தோழமையை அனுபவித்து, அவரின் அன்புச் சீடராக வாழும் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவதாகும். நன்றி உணர்வுடன் அவரிடம் சரணடைவது இயேசுவுக்கு உகந்த செயல்.
“உலகின் ஒளி நானே; என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவா 8:12) என்ற இயேசுவின் கூற்று நம்மை ஒளியாக உருமாற்றம் பெறச் செய்யும் ஆற்றல் நிறைந்தது. மத்தேயு 5:14-இல் இயேசு இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூறுகின்றார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாக இருக்கிறீர்கள்.” ஒளியாகச் சுடர்விட்டு இயேசுவுக்கு உரியவர்களாக நிலைத்து நிற்கும் நிலையில், நாம் இயேசுவின் குரலைக் கேட்டு அகமகிழ்வோம். அவர்
அடியொற்றி நடக்கும் அவரின் அன்புச் சீடராக வாழும் உன்னத நிலைக்கு உயர்வோம்.
மண்ணுலகில்
ஒளியாக நம்மை வாழவைக்கும் “விண்ணுலகின் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு”
(திபா 136:26). இந்த உயிரினும் மேலான பேரன்பில் (திபா 63:3) நிலையாக நம்பிக்கை வைத்து வாழும் வாழ்க்கை, ஒளியின் மக்களை உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது கத்தோலிக்கக் கிறித்தவ நிறுவனங்கள் இத்தகைய ஒளியின் மக்களை உருவாக்கி உலகில் சுடர்விடும் விண்மீன்களாகத் துலங்கச் செய்கின்றன.
ஒருநாள்
காலையில் கால் வலியுடன் மிகவும் மெதுவாகச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு பைக் என் அருகில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த இளைஞர் என்னிடம், ‘சிஸ்டர், நீங்கள் செல்லும் இடத்தில் கொண்டு வந்து சேர்க்கிறேன்’ என்று
அழைத்தார். நானும் இடத்தைச் சொல்லி பைக்கில் அமர்ந்தேன். நான் சேரவேண்டிய இடம் சென்றதும் ‘நன்றி’ கூறினேன். அவர், “நான் இராஜகெம்பீரத்தில் உங்கள் பள்ளியில் அருள்சகோதரிகளிடம்தான் படித்தேன், இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்” என்று
மகிழ்வோடு கூறினார். அறிமுகம் இல்லாதவருக்கும் நன்றியுடன் நன்மை செய்யும் நன்மனம் உள்ளவர்களை நம் பள்ளிகளில் உருவாக்க, இறைவனின் அருள் ஒளி நம்மில் ஒளியாக ஒளிர்வது அவரது வல்லமை நிறைந்த வழிநடத்துதல்தான்.