news
ஆன்மிகம்
கிறிஸ்துவில் வேரூன்ற அழைக்கும் தவக்காலம்!

ஆணவம், அகந்தை, அலட்சியம், அச்சம் ஆகியவை ஆதிக்கம் செலுத்தும்  இக்காலகட்டத்தில், நாம் தவக்காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். அன்பையும் அமைதியையும் வாழ்வின் வழியாகக் கொண்ட கிறிஸ்துவில் வேரூன்ற அழைக்கும் இத்தவக்காலம், நம் அழுக்குச் சிந்தனைகளைக் களைந்து அர்த்தமுள்ள வாழ்வுக்கு வழிகாட்டுகிறது. இறைவேண்டல், நோன்பு, அறப் பணிகள் போன்ற நல்ல பண்புகள் கிறிஸ்துவில் வேரூன்ற, இத்தவக்காலம் துணையாக இருக்கும்.

1. இறைவேண்டல்

அன்றாட வாழ்வின் சத்தத்தில் மூழ்கியிருக்கும் இறைவனின் குரலை மீண்டும் கேட்க நம் இதயத்தைத் திறக்கிறது. எனவே, அமைதியில் ஆழப்பட வேண்டியது நமது கட்டாயக் கடமையாகிறது.

இறைவேண்டல் என்பது ஆன்மாவின் அகக் குளியல்  என்கிறார் புனித அகுஸ்தினார்ஆன்ம சோதனை செய்வது மிகவும் அவசியம். இறைவேண்டல் என்பது எல்லா நேரங்களிலும் உதடுகளால் செபங்களை உச்சரித்துக் கொண்டிருப்பது அல்ல; மாறாக, தியானங்கள் வழியாக நம்முடைய இதயத்தைச் சுய ஆய்வுக்கு உட்படுத்துகிற ஒரு காலம் என்பதை இத்தருணங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகளைப் போலவே இறைவேண்டல் அமையவேண்டும் என்பது அவசியம் இல்லை. இறைவேண்டல் நேரங்கள் இறைக்குரல் கேட்கும் தருணங்களாக மாறவேண்டும். இத்தருணங்கள் இறைவனோடு ஒன்றிணையும் தருணங்கள் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். அமைதியில் நாம் தவழும்போது நமது குறைகளையும் நிறைகளையும் இறைவன் நம் கண்முன் கொண்டுவந்து, சரி செய்பவற்றை அவர் சரிசெய்கிறார்; களைபவற்றைக் களைகிறார். “இறைவனோடு நாம் ஒன்றிணையும் பொழுது நம்மில் நல்ல பண்புகள் வளர்கின்றன. பாவங்கள் களையப்படுகின்றன. கோபம் விலகுகிறது; கருணை பிறக்கிறதுஎன்கிறார் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ். “இறைவனோடு ஒன்றிணையாத வாழ்வு, கடலில் இருந்து கரைக்கு வந்த மீனுக்குச் சமம்என்கிறார் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம். உலகம் காட்டக்கூடிய கவர்ச்சிகள் அனைத்தும் கானல் நீர் என்பதை உணர்த்துகிற இந்தக் காலத்தில், இறைவனோடு ஒன்றிணையும் நேரங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்வோம். நம்மைப் பல நேரங்களில் தனிமைப்படுத்தி அன்றாடம் தாங்குகிற கடவுளின் தரிசனத்தைக் காண்போம்.

2. நோன்பு

இக்காலகட்டத்தில் வெளிப்புற உடல் நலத்தைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்கும் காலமாகவும் இந்தத் தவக்காலத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

தவக்காலத்தில் பலர், மது அருந்தாமல் இருப்பது, புகை பிடிக்காமல் இருப்பது என்று நாற்பது நாள்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகு தங்கள் பழைய வாழ்க்கைக்குக் கடந்து செல்கிறார்கள். நமது வாழ்விலே பல வியத்தகு செயல்களை அனுபவிக்க இறைவேண்டலோடு கூடிய நோன்பும் தேவைப்படுகிறது.

தீய ஆற்றலால் நாம் பாதிக்கப்படும் பொழுது இயேசுவின் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்வோம். “இவ்வகைப் பேய், இறைவேண்டலினாலும் நோன்பினாலுமேயன்றி, வேறு எதனாலும் வெளியேறாதுஎன்றார் இயேசு (மத் 17:21).

ஆன்மாவின் அகக் குளியலுக்கும் தூய்மைக்கும் இந்த நோன்பு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது என்பதை உணர வைக்கிற காலம் இந்தத் தவக்காலம்.

ஒரு காலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் நோன்பு இருப்பார்கள். ஆனால், இப்பொழுது  பல்வேறு நோய்களால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி, அவர்கள் நோன்பு இருக்க முடியாத சூழ்நிலைஆனாலும், சற்று ஆரோக்கியமாக இருப்பவர்கள் கண்டிப்பாக வாழ்விலே இலக்கோடு பயணிப்பதற்கும், இறைவனோடு ஒன்றிணைவதற்கும் நோன்பு என்பது கட்டாயம் தேவை என்பதை உணர வேண்டும்.

3. தர்மம் அல்லது அறப்பணிகள்

நான் உன்மீது அன்பு செய்து வருகிறேன்என்கிற திருத்தூது ஊக்கவுரையில் திருத்தந்தை லியோ அவர்கள் அறப்பணிகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஏழை எளிய மக்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகள் என்றும், அவர்களே நற்செய்திப் பணியின் கதாநாயகர்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

திருவழிபாட்டில் நாம் ஏறெடுக்கும் இறைவேண்டல்கள் விண்ணகத்தைச் சென்றுசேர வேண்டுமென்றால் நாம் கொடுக்கக்கூடியதான தர்மங்கள் அதன் சிறகுகளாக அமைந்தால் மட்டுமே விண்ணகத்தைச் சேரமுடியும் என்பதைத் திருத்தந்தை பெரிய கிரகோரியாரின் எழுத்துகளில் பதிவிடுகிறார்.  “தானம் செய்வது நீதிக்குத் தலை வணங்குவதாகும்என்கிறார் புனித அம்புரோஸ்.

உடைமைகள் இழந்தவர்கள், உரிமைகளை இழந்தவர்கள், சுதந்திரத்தை இழந்தவர்கள், குரலற்றவர்கள், விளிம்புநிலையில் இருப்போர், கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மிக அளவில் கண்டுகொள்ளப்படாதவர்கள், சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டவர்கள்... என இவர்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவதுதான் நம்முடைய கிறித்தவர்களின் அவசியக் கடமையாக இருக்கிறது.

வன்முறைகளால் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் இரு மடங்கு ஏழைகளாய் மாறி இருக்கிறார்கள் என்பதைத் திருத்தந்தை  சுட்டிக்காட்டத் தவறவில்லை. செல்வராயினும் இயேசு ஏழையானார்; எளிய மக்களோடு வாழ்ந்தார்; தலைசாய்க்கக் கூட இடம் இல்லாத அளவுக்குப் பற்றற்றவராய் வாழ்ந்தார் என்று நற்செய்தியில் நாம் வாசித்தாலும், மீண்டும் மீண்டுமாய் மறுவாசிப்பு செய்து அதை ஏழை எளிய இயேசுவைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகின்றோம்.

2026-ஆம் ஆண்டை புனித பிரான்சிஸ் அசிசியார் ஆண்டாகத் திருத்தந்தை லியோ அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். செல்வராக இருந்தாலும் இயேசுவின் அடிச்சுவட்டில் ஏழையாகவே வாழத் தொடங்கி, தொழுநோயாளிகளை எல்லாம் தன்னுடைய கரங்களால் அரவணைத்து, ‘யாரும் சமூகத்தால் ஓரம் கட்டப்பட்டவர்கள் அல்லர்என்பதை உலகுக்கு உணர்த்திய புனித பிரான்சிஸ் அவர்களும் இத்தவக்காலத்தில் நம்முடைய முதன்மை மாதிரியாக நம் கண்முன் வலம் வரட்டும்

திரும்பத் திரும்ப நாம் மறையுரைகள் வழியாக, இறைவார்த்தையை வாசிப்பதன் வழியாக, ஏழை எளியவருக்குக் கைகொடுக்கவேண்டும் என்று நாம் வாசித்தாலும், ஏன் நம்முடைய இதயம் அவர்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது என்பதையும் திருத்தந்தை சாடுகிறார்.

கண்டுகொள்ளாமைமிகப்பெரிய பாவம் என்பதைச் சாடுகிற திருத்தந்தை, புலம்பெயர்ந்த சகோதரர்-சகோதரிகளை நாம் ஏற்றுக்கொள்ளவும், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவும், அனாதைகளுக்குப் புகலிடம் கொடுக்கவும் நம்மைக் கேட்டுக்கொள்கிறார்.

மருத்துவ வசதியின்றி, கல்வி வசதியின்றி வாடுகிற மக்களுக்குக் கல்வி செல்வத்தையும், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பதையும் நினைவில் கொண்டு மக்களுக்கு அறப்பணிகள் ஆற்றிட இந்தத் தவக்காலம் நமக்கு அறிவுறுத்தவேண்டும்.

ஒரே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாய், அந்தக் குழந்தையை எவ்வளவு கண்ணும் கருத்துமாய் நோய்களிலிருந்து பாதுகாப்பாளோ அதுபோல, திரு அவை உறுப்பினர்களாகிய நாம் நோயுற்ற ஒவ்வொருவரையும் கண்காணிக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் புனித கமில்லஸ்.

அனாதையாக, அந்நியனாக, அகதியாக அடைக்கலம் கேட்டு வரும் மக்களுக்கு இறைப் பிரசன்னத்தைக் கொடுக்கவே திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த அறப்பணிகள் வழியாக நாம் செய்தோம் என்றால், இந்தத் தவக்காலம் உண்மையான, அர்த்தமுள்ள காலமாக மாறும்.

கிறிஸ்துவில் வேரூன்றிய வாழ்வு என்பது, இறைவனோடு ஒன்றிணையும் தருணம், நோன்பிருக்கும் தருணம், அறப்பணிகள் ஆற்றுகின்ற தருணம் என்ற மூன்றையும் உள்ளடக்கியது என்பதை மனத்தில் கொண்டு அர்த்தமுள்ள விதத்தில் இந்தத் தவக்காலத்தைக் கொண்டாட முன்வருவோம்.

news
ஆன்மிகம்
பொதுநிலையினரின் பாதுகாவலர் புனித தேவசகாயம்

நமது தமிழ் மண்ணின் மறைச்சாட்சி புனித தேவசகாயத்திற்குஇந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்எனும் சிறப்புப்பெயர் சூட்டித் திரு அவை அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது. அதைக் கொண்டாடும் வகையில் அவர் மறைச்சாட்சியாக உயிர்நீத்த கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள தேவசகாயம் குன்றின் அடிவாரத்தில் இவ்வாண்டு சனவரி 14-ஆம் நாள் மாபெரும் விழா நடத்தப்பட்டது. பல்லாயிரம் மக்களும், ஒரு நூறு அருள்பணியாளர்களும், இரு பால் துறவியரும், தமிழ்நாட்டின் மூன்று பேராயர்களும் ஆயர்களும் பங்கேற்றனர். இவ்விழா திருப்பலியில் திருத்தந்தையின் இந்தியத் தூதர் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புனித தேவசகாயத்தைஇந்தியப் பொதுநிலையினரின் அருள்காவலர்எனும் அறிக்கையைப் படித்தார். திருப்பலி முடிவில்புனித தேவசகாயம் அருள்வாழ்வு இயக்கம்தொடங்கி வைக்கப்பட்டது. மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்தக் கொண்டாட்டம் தமிழ்நாடு திரு அவைக்குப் பெருமையும் பெரு மகிழ்வும் சேர்க்கிறது என்பதில் ஐயமில்லை.

மறைச்சாட்சி தேவசகாயம் ஓர் இல்லற வாழ்வு நடத்தியவர். பொதுவாழ்வில் நேர்மை மற்றும் நீதியோடு ஈடுபட்ட அரசு அலுவலர். அவரைப் போலவே இன்றைய நம் பொதுநிலையினரும் அவர்களுக்கு உரிய அழைப்பிற்கு ஏற்பத் திரு அவையிலும் சமூகத்திலும் சாட்சிய வாழ்வு வாழ்ந்திடவேண்டும்; அவர்கள் திரு அவையின் அனைத்துப் பணிகளிலும் இணைந்து செயல்படவும், தங்களுக்கே உரிய சமூகத்துறைகளில் நற்செய்தி உளப்பாங்குடனும் தலைமைப்பண்பு உள்ளவர்களாக ஆற்றலுடன் ஈடுபடவும்வேண்டும்.

பொதுநிலையினரும் இறையழைத்தல் பெற்றவர்களே!

இறையழைத்தல் என்பது அருள்பணியாளர் மற்றும் துறவியருக்கு மட்டுமே உரியது எனும் புரிதலே இன்றும் திரு அவையில் பரவலாகக் காணப்படுகிறது. இறையியல் படிப்பு, பங்கேற்பு அமைப்புகள் மற்றும் பணிக்குழுக்களின் தலைமை, அனைத்துத் திரு அவை நிறுவனங்களின் மேலாண்மை என்பன பெரிதும் திருநிலையினரது தனி உடைமையாகவே இருக்கின்றன. பொதுநிலையினர் - பணிப்பொறுப்பற்ற வெறும் பயனாளர்கள், உதவியாளர்கள் அல்லது ஆலோசகர்கள் எனும் புரிதலும் நடைமுறையுமே இன்றுவரை பெரிதும் மேலோங்கி நிற்கின்றன. இத்தகைய நடைமுறையால் திரு அவைக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பல. ஏனெனில், உலகிற்கு ஒளியாகவும் மலைமேல் நகரமாகவும் திகழ்ந்து (மத் 5:14), இறையாட்சிக்குச் சான்றுபகர்வதும், நிலத்தின் உப்பு (மத் 5:13), மாவோடு பிசைந்து வைக்கப்பட்ட புளிப்பு மாவு (மத் 13:33) என்பவைபோல அதைப் பரவலாக்கும் கருவியாகவும் செயல்படுவதே திரு அவையின் அழைப்பும் அலுவலும்.

நீங்கள்உலகின் கடை எல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் (திப 1:8) என்பது தம் சீடர்கள் அனைவருக்கும் இயேசு தந்த அழைப்பும் ஆணையும். இயேசுவின் இறையாட்சி இலட்சியத்தையும், அதன் விழுமியங்களையும் வாழ்வாக்கி, அவற்றின் சாட்சிகளாகத் திகழ்வதும், அவற்றிற்கேற்ப தங்களது சமூகத்தை வளர்த்தெடுப்பதே உண்மையான கிறித்தவச் சீடத்துவ வாழ்வு. திருமுழுக்கின் வழியாகப் பெறப்படும் இந்த அழைப்பும் பொறுப்பும் அனைத்து நம்பிக்கையாளருக்கும் உரியது என்றாலும், முதலிலும் முக்கியமாகவும் அவை பொதுநிலையினருக்கே உரியன.

திருமுழுக்குக் குருத்துவமே முதன்மையானது

இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையில், திரு அவை என்பது இறைமக்களின் ஒரே குலமே! ஏனெனில், திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இறைமக்கள் குலத்தவரும், குருக்களின் கூட்டத்தினருமே. இதனைப் புனித பேதுரு, “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர்; அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தார்; அவரது உரிமைச் சொத்தான மக்கள் (1பேது 2:9) என எடுத்துரைக்கின்றார். “தம் செயல்கள் அனைத்தின் வழியாக ஆவிக்குரிய பலிகளைப் படைக்கவும், உலகெங்கும் கிறிஸ்துவுக்குச் சான்றுபகரவும், அரச குருக்களின் கூட்டத்தினராகவும் (1பேது 2:4-10) இவர்கள் திருநிலைப்படுத்தப் பெறுகிறார்கள் (பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி 3; திரு அவை 10) என்பது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கூற்று

திருமுழுக்கில் பெறப்படுவதே முதன்மையான குருத்துவத் திருநிலைப்பாடு. அருள்பணியாளர் மற்றும் ஆயர் திருநிலைப்பாட்டில் பூசப்படும் அதே கிறிஸ்மா எண்ணெய்யே திருமுழுக்குப் பெறுபவரது உச்சந்தலையில் பூசப்படுவது இதை அடையாளப்படுத்துகிறது. அப்பொழுது கூறப்படும் பின்வரும் வாய்ப்பாடும் இதை உறுதிப்படுத்துகிறது: “அரசரும் குருவும் ஆசிரியருமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு ஓர் உடலாக ஒன்றித்திருந்து நிறைவாழ்வு பெறுவீர்களாக.”

திருமுழுக்கில் பெறப்படும் குருத்துவத் திருநிலைப்பாடு முதன்மையானது மட்டுமல்ல; அதுவே மிக முக்கியமானதும் அனைத்திலும் உயர்வானதுமாகும். ஏனெனில், திருமுழுக்கில் பெறப்படுவது இயேசு கிறிஸ்துவோடு ஓருடலாக்கம்; அருள்பணியாளர் திருநிலைப்பாட்டில் நிகழ்வதோ ஒத்துருவாக்கம். ஓருடலாக்கம் ஒத்துருவாக்கத்தைவிட அதிக நெருங்கிய ஒன்றிப்புதானே!

திருமுழுக்கின் வழியாக இயேசுவின் குருத்துவப் பணியில் பங்குபெற்று, அவருடைய சீடர்களாக வாழவும் செயல்படவும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பெற்றுள்ளது பொதுவானதும் அடிப்படையானதுமான அழைப்பு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய தனி அழைப்பும் உண்டு. அது தத்தம் தளங்களில் தாங்கள் பெற்றுள்ள பல்வேறு அருங்கொடைகளுக்கும், வெவ்வேறு தனி அழைத்தல்களுக்கும் ஏற்ப இறைவாக்கு உரைத்தல், புனிதப்படுத்துதல், தலைமையேற்றல் எனும் முப்பெரும் பணிகளை அவர்கள் ஆற்றுவதே. இதனால், அருள்பணியாளர் நிலையும் துறவு வாழ்வும் இறையழைத்தல்கள் என்றால் இல்லற வாழ்வும், அதற்கு இணையான இறையழைத்தலே. இவ்வழைத்தல் காரணமாக, குடும்பத்தில் பெற்றோரும், கல்விக் கூடத்தில் ஆசிரியர்களும், மருத்துவமனைகளில் மருத்துவரும் செவிலியருமே முப்பணிகளையும் ஆற்றும் முதல் நிலைக் குருக்கள். அவர்கள் தத்தம் தளங்களிலும் துறைகளிலும் நன்கு முப்பணிகளையும் ஆற்ற உதவுகின்றவரே அருள்பணியாளர்.

மேற்கூறிய பல்வேறு தனி அழைத்தல்களுக்கு இடையே மாண்பிலும் பணிப்பொறுப்பிலும் புனிதத்திற்கான அழைப்பிலும் உயர்வு தாழ்வு இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கப் படிப்பினையைப் பின்பற்றித் திரு அவைச் சட்டம் இதைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் பின்வருமாறு எடுத்துரைத்துள்ளது: “கிறிஸ்து இயேசுவுக்குள் திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மாண்பிலும் செயல்பாட்டிலும் சமமானவர்கள் (திரு அவைச் சட்டம் 208; 2வத். திரு அவை 32).

புனிதம் அடைவதற்கு அவர்கள் அனைவருக்கும் அருளப்பட்டிருக்கும் அழைத்தலிலும் உயர்வு-தாழ்வு இல்லை: “அனைத்து மனிதரின் பல்வேறு வாழ்க்கைமுறைகளிலும் பணிப்பொறுப்புகளிலும் ஒரேவகைத் தூய்மைநிலையே செயலாக்கம் பெறுகிறது (இரண்டாம் வத். திரு அவை 41). ஏனெனில், அன்பு மற்றும் தியாகத்தின் உயர்வால் மட்டுமே புனிதத்தில் உயர்வு வருமே அன்றி எவரும் பெறும் திருநிலைப்பாட்டாலோ வகிக்கும் பதவியாலோ, நிலையாலோ அல்ல.

பொதுநிலையினரின் பங்கேற்பையும் பணிகளையும் ஊக்கப்படுத்துவோம்

பொதுநிலையினர் முப்பணி ஆற்றும் முதல் தளம் அவர்களது குடும்பம். பெற்றோரே அங்கு முதன்மையான இறைவார்த்தை அறிவிப்பாளர்கள்; அவர்களைப் புனிதப்படுத்துபவர்கள், அவர்களை நன்நெறிப்படுத்துபவர்கள். சாதி, சமய, இன, மொழி, படிப்பு, பதவி, பணம் எனும் வேறுபாடு பாராது உற்றாருடனும் உறவினருடனும் அடுத்திருப்போருடனும் நல்லுறவு கொண்டு, விருந்தோம்பல் செய்து, ஏழைகளுக்கு உதவி வாழ்வதும் அவர்கள் முப்பணி ஆற்றும் முறைகளே. இவ்வாறு தங்கள் குடும்பத்தை இல்லத் திரு அவையாகயும் முதல்நிலை இறையாட்சிக் குழுமமாகவும், வளர்த்தெடுப்பதுவே அவர்களது குருத்துவப் பணி. அதுவே அவர்கள் புனிதம் அடையும் முதல் தளம்.

அவர்கள் முப்பணிகளை ஆற்றும் அடுத்தத் தளம் அவர்களது கிறித்தவக் குழுமம். அதன் வழிபாட்டிலும், பல்வேறு பணிகளிலும் தங்களால் இயன்ற முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பதன் வழியாக அவர்கள் இறையாட்சிப் பணி ஆற்றுகின்றனர். இவற்றுள் முக்கியமான ஒன்று, அவர்கள் தங்களது அன்பியத்தில் தன்னார்வ நற்பணிகளில் ஈடுபடுவது, பங்கில் உள்ள பணிக்குழுக்கள், திருத்தூதுக் குழுமங்கள் என்பனவற்றுள் ஒன்றில் இணைந்து ஆர்வமுடன் பணியாற்றுவது, பங்கு அருள்பணிப் பேரவை, நிதி குழு என்பவற்றின் உறுப்பினர்களாகச் செயல்படுவது என்பவையும் பொதுநிலையினரின் இறையாட்சிப் பணிமுறைகளே.

(தொடரும்)

news
ஆன்மிகம்
சிலுவையும் சிகரமும்! - சதுக்கத்தின் சப்தம் – 10

இன்றைய உலகம் வேகத்தையும் செயல்பாட்டையும் வாழ்க்கையின் அளவுகோலாக மாற்றியுள்ளது. எப்போதும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; எதையாவது சாதிக்கவேண்டும் என்ற அழுத்தம் மனிதனை அமைதியற்றவனாக மாற்றுகிறது. வெளிப்படையான வெற்றிகளுக்குப் பின்னாலும், உள்ளார்ந்த வெறுமையும் சோர்வும் அதிகரித்து வரும் இந்நிலையில், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ‘இயேசு கிறிஸ்து - நமது எதிர்நோக்குஎன்ற யூபிலி ஆண்டு சிந்தனையின் கீழ், மனித இதயத்தின் ஆழமான தேடலை மீண்டும் நம் கவனத்திற்குக் கொண்டு வரும் எண்ணத்தில் தனது புதன் மறைக்கல்வி உரையை நிகழ்த்தினார்.

துன்பத்தின் வழியே நற்செய்தி

கிறித்தவ வாழ்க்கை என்பது சுகமான பாதை அல்ல; இது அர்த்தமிக்க பயணமாகவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அர்த்தம் பல நேரங்களில் வெற்றியின் மேடைகளில் அல்ல; மாறாக, துன்பத்தின் நிழலில்தான் வெளிப்படுகிறது. நற்செய்திக்காக மகிழ்ச்சியுடன் துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை, உண்மையான கிறித்தவச் சீடத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

ஓர் இலக்கிற்காக ஏற்றுக்கொள்ளப்படும் துன்பம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஷ் வீராங்கனை ஆலிஸ் மார்பிள், தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நாளாக இருக்கும் என்று எண்ணிய விம்பிள்டன் இறுதிப் போட்டி நாளில், கடும் உடல் வலியுடன்தான் காலையில் விழித்தெழுந்தார். மருத்துவர் வயிற்றுத்தசை கிழிந்திருப்பதை உறுதி செய்தபோது, ‘விளையாடுவது புத்திசாலித்தனமல்லஎன்று அறிவுறுத்தினார். ஆனாலும், அவர் போட்டியிலிருந்து விலக மறுத்தார். ஒவ்வோர் அடியும் உடலின் வலியை அதிகரித்தபோதும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் முன்னிலையில் அவர் வெற்றியடைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிக்கோளுக்காக மனிதன் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் திறனை நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், கிறித்தவ நம்பிக்கையில் இந்தக் குறிக்கோள் உலகியலான புகழைத் தாண்டி, நிலையான வாழ்வை நோக்கி வழிநடத்துகிறது.

கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் துன்பத்தின் அர்த்தம்

கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்பப்பட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி வரும்படி ஒரு மாதிரியை விட்டுச் சென்றார் (1பேதுரு 2:21). துன்பம் என்பது கிறித்தவ வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அது தண்டனை அல்ல; மாறாக, மீட்பின் பயணத்தில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பு. கிறிஸ்துவின் சிலுவை, துன்பத்தின் வழியே வாழ்வும் நம்பிக்கையும் பிறக்க முடியும் என்பதற்கான உயர்ந்த சாட்சி.

உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ…’ - இத யத்தை நோக்கிய இயேசுவின் அழைப்பு

மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறுகிறார்: “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்(6:21). இந்த வார்த்தைகள், மனித வாழ்வின் மையத்தைத் தொடுகின்றன. உண்மையான செல்வம் என்பது வங்கிக் கணக்குகளிலும் சொத்துகளிலும் அல்ல; மாறாக, அது மனித இதயத்தில் சேமிக்கப்படுகிறது. இன்று பொருள் செல்வம் வழிபாட்டுப் பொருளாக மாறியிருக்கும் சூழலில், இந்த இறைவார்த்தை ஒரு வலுவான சவாலாக நம் மத்தியில் ஒலிக்கிறது.

நாம் இயந்திரங்கள் அல்ல; நாம் ஓர் இதயம்!

திருத்தந்தை வலியுறுத்தும் ஓர் அடிப்படை உண்மை: மனிதன் ஓர் இயந்திரம் அல்ல; அவன் ஓர் இதயம். இதயம் என்பது எண்ணங்கள், உணர்வுகள், ஆசைகள், கனவுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மனித ஆளுமையின் மையம். அதிகப்படியான செயல்பாடுகள் இதயத்தை நிரப்புவதில்லை; மாறாக, சிதறடிக்கின்றன. நாளின் முடிவில் தோன்றும் வெறுமை, ‘நான் எதற்காக வாழ்கிறேன்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியில் வாழ்க்கையைப் பார்ப்பது என்றால், இந்த இதயத்தை மீண்டும் கண்டுபிடிப்பதாகும்.

ஓய்வற்ற இதயம் - நிலையான உண்மை

புனித அகுஸ்தினார் தனதுConfessionsஎனும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகப் படைத்தீர்; எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறும் வரை ஓய்வற்றதாகவே இருக்கும்.” இந்த ஓய்வற்ற நிலை குழப்பத்தின் அறிகுறி அல்ல; மாறாக, மனிதன் தனது இறுதி இலக்கான கடவுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கான சாட்சி. மனிதன்வீடு திரும்பும்பயணத்தில் இருக்கிறான்; அந்த வீடு பொருளோ, அதிகாரமோ அல்ல; கடவுளின் அன்பில் அடையும் நிறைவு.

துன்பத்தின் வழியே நற்செய்தியின் பாதை

கிறித்தவ வாழ்க்கை துன்பமற்ற வாழ்க்கை அல்ல; ஆனால், அது அர்த்தமற்ற துன்பமும் அல்ல; இயேசு கிறிஸ்து தம்மை முழுமையாக மக்களுக்காக அர்ப்பணித்து, சிலுவை வரை சென்றார். அவரது உயிர்த்தெழுதல், துன்பத்திற்கு இறுதி வார்த்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. “சிலுவையில்லாக் கிறிஸ்துவை அறிவிப்பது, உயிரற்ற கிறித்தவத்தை அறிவிப்பதேஎன்றார் புனித இரண்டாம் யோவான் பவுல். நற்செய்திக்காக ஏற்றுக்கொள்ளப்படும் துன்பம், மனிதனை உடைக்காது; மாறாக, உள்ளார்ந்த மனிதனை உருவாக்குகிறது.

பலவீனத்தில் வெளிப்படும் வல்லமை

புனித பவுல், தனது சாதனைகளில் அல்ல; தனது பலவீனங்களில் பெருமை பேசுகிறார்: “நான் பலவீனமாக இருக்கும்போதுதான் வலிமையானவன் ஆகிறேன் (2கொரி 12:10). அவரது வாழ்க்கை, துன்பம் கடவுளின் அருளுக்கு இடையூறல்ல; அது அருளின் மேடையாக மாறமுடியும் என்பதற்கான சாட்சி. முழுமையான அர்ப்பணிப்பே உண்மையான திருத்தூதருக்கான தகுதி.

பிறரிடம் திறக்கும் இதயம் - உண்மையான செல்வம்

உண்மையான செல்வம் கடவுளின் அன்பிலும், சகோதரர்-சகோதரிகளின் உடனிருப்பிலும் கண்டுபிடிக்கப்படுகிறது. பிறர் நம்மை மெதுவாக நடக்கச் சொல்கிறார்கள், கேட்கச் சொல்கிறார்கள். சில நேரங்களில் நம் திட்டங்களை மாற்றச் சொல்கிறார்கள். அந்த இடையூறுகளுக்குள்ளேதான் கடவுளின் அழைப்பு மறைந்திருக்கிறது. “அன்பு கொடுக்கப்படும்போதுதான் அது மேலும் பெருகுகிறதுஎன்கிறார் புனித அன்னை தெரேசா.

கிறிஸ்துவில் நமது உறுதியான எதிர்நோக்கு

இயேசு கிறிஸ்து தமது மனுவுருவெடுத்தல், பாடுகள், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, மனித இதயத்தின் ஓய்வற்றத் தேடலுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கியுள்ளார். கிறிஸ்துவில் நமது வாழ்க்கை வெற்றி பெற்றுவிட்டது. அன்றாட வாழ்வின் சிறிய இழப்புகளிலும் அந்த வெற்றி தொடர்ந்து வெளிப்படுகிறது. துன்பமே தோல்வி அல்ல; துன்பத்தின் நடுவில் கடவுளை இழப்பதே உண்மையான தோல்வி; ஓய்வற்ற இதயத்தின் உண்மையான புகலிடம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே என்பதை உணர்வதே நம் கிறித்தவ வாழ்வு.

news
ஆன்மிகம்
மரியா கன்னியாக நிலைத்திருக்க உளமார விரும்பினார்! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 27)

1. கிறிஸ்துவின் கருத்தரிப்பு மற்றும் பிறப்பை அறிவிக்கின்ற வானதூதரிடம் மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” (லூக் 1:34) என்ற கேள்வியைக் கேட்கின்றார். குழந்தையே பெற இயலாத பெண்ணிற்கான வழக்கத்திற்கு மாறான பிறப்பு அறிவிப்பைத் தொடர்புப்படுத்துகின்ற திருவிவிலியக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டால், அவரின் இத்தகைய விசாரிப்பானது வியப்புக்குரியதாகத் தோன்றுகிறது. அத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் அவர்களின் கடுமையான தொடர் செபத்திற்கு (ஒப்பிடுக. தொநூ 15:2;30:22-23; 1சாமு 1:10; லூக் 1:13), முறையான திருமண வாழ்வு வழியாக (1சாமு 1:19-20) கடவுள் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து, இயல்பாகவே கருத்தரிக்கும் இயல்புடைய திருமணமான பெண்களோடு தொடர்புடையவை.

ஆனால், மரியா மாறுபட்டதொரு சூழ்நிலையில் வானதூதரின் செய்தியைப் பெறுகின்றார். அதாவது, அவர் கருத்தரிக்கும் தன்மை பிரச்சினைகளோடு இருந்த ஒரு திருமணமான பெண் அல்ல; மாறாக, அவரின் தன்னிச்சையானதொரு முடிவினால் கன்னியாக இருப்பதற்கு உளமார விரும்புகின்றார். எனவே, கடவுள் மீதான அவரின் அன்பின் கனியாகிய, கன்னித்தன்மைக்கான அவரின் எண்ணமானது, அவருக்கு அறிவிக்கப்பட்ட தாய்மைக்கு ஒரு தடையாகத் தோன்றுகின்றது.

மரியாவின் வார்த்தைகளை நாம் ஆராய்ந்தால், முதலில் அவை அவரின் இப்போதைய கன்னித்தன்மையின் நிலையை மட்டுமே வெளிப்படுத்துவதாகத் தோன்றலாம். மரியாகணவனை அறியவில்லைஎன்று கூறுவதன் வழியாக, அவர் ஒரு கன்னி என்று உறுதியாகக் கூறுகின்றார். எனினும், ‘இது எப்படி நிகழும்?’ என்று கேட்கப்படுகின்ற கேள்வியின் சூழலமைவு மற்றும் அதைத் தொடர்ந்து வருகின்றநான் கன்னி ஆயிற்றே!’ என்ற உறுதியானது, அவரின் அப்போதைய கன்னித்தன்மையையும் மற்றும் கன்னியாக நிலைத்திருப்பதற்கான அவரின் எண்ணத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன. நிகழ்காலத்தில் அவர் பயன்படுத்துகின்ற சொல்லாடலானது, அவரின் நிலைத்த மற்றும் நீடித்தக் கன்னித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மரியா கடவுளின் விருப்பத்தோடு முழுமையாக ஒத்துழைத்தார்

2. இந்தச் சிரமத்தைக் குறிப்பிட்டு, மரியா இறைவனின் திட்டத்தை ஒருபோதும் மறுக்கவில்லை; மாறாக, அதற்காகத் தன்னை உறுதிப்படுத்துவதற்கான அவரின்  எண்ணத்தை வெளிப்படுத்துகின்றார். மேலும், நாசரேத்தூர் பெண் இறைத்திட்டத்தோடு முழு இணக்கமாகவே எப்பொழுதும் வாழ்ந்தார்; ஆண்டவரைத் திருப்திபடுத்துகின்ற எண்ணத்தோடே கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுத்தார். உண்மையில் கன்னி வாழ்விற்கான அவரின் எண்ணமானது, “அவருடைய அனைத்து மனித மற்றும் பெண்தன்மையோடு (with all her human and feminine ‘I’) கடவுளின் விருப்பத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவரை ஒழுங்குபடுத்தியது. மேலும், நம்பிக்கையின் இந்தப் பதிலானதுமுன்னின்று உதவுகின்ற கடவுளின் அருள் மற்றும் தூய ஆவியாரின் செயலுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை (மீட்பரின் தாய், எண்.13) ஆகிய இந்த இரண்டையுமே உள்ளடக்கியதொன்றாகும்

யூதக் கலாச்சாரத்தில் கன்னித்தன்மையானது ஒரு மதிப்பீடாகவோ அல்லது தேடிப்பெற வேண்டியதோர் இலக்காகவோ கருதப்படாததால், மரியாவின் வார்த்தைகளும் எண்ணங்களும் இயல்பாக நிகழ முடியாததொன்றாகச் சிலருக்குத் தோன்றுகின்றது. அதே பழைய ஏற்பாட்டு ஏடுகள் பல, நன்கு அறியப்பட்ட நிகழ்வுகள் மற்றும் கருத்துகளில் இதை உறுதி செய்கின்றன. உதாரணமாக, நீதித் தலைவர்கள் புத்தகத்தில், இளம் வயதிலும் மற்றும் திருமணமாகாத நிலையிலும் இறப்பைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்த ஜெப்தாவினுடைய மகள் அவளின் கன்னித்தன்மை குறித்துப் புலம்புகின்றாள். அதாவது, திருமணம் செய்துகொள்ள அவளால் இயலவில்லையே என்பதற்காக அவள் புலம்புகின்றாள் (நீதி 11:38). மேலும், “பலுகிப் பெருகி...” (தொநூ 1:28) என்ற இறைக்கட்டளையினிமித்தம், திருமணமானது தாய்மையோடு தொடர்புபடுத்தப்படுகின்ற, இன்ப - துன்பங்களை உள்ளடக்கிய பெண்ணிற்கான இயற்கையானதோர் அழைப்பாகவே கருதப்படுகின்றது.

3. மரியாவின் முடிவானது எத்தகையதொரு சூழ்நிலையில் பக்குவமானதொரு நிலையை அடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, கிறித்தவம் தொடங்கப்பட்ட அடுத்த சில ஆண்டுகளிலேயே கன்னிமை பற்றியதொரு குறிப்பிடத்தக்க நேர்மறை எண்ணமானது சில யூதர்கள் மத்தியில் தோன்றத் தொடங்கியது என்பதையும் நாம் கட்டாயம் நினைவில்கொள்ளவேண்டும். உதாரணமாக, கும்ரானிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகளின் அடிப்படையில், எஸ்ஸீனியர்கள் குழும வாழ்வின் பொருட்டும், கடவுளோடு ஒரு நெருங்கிய உறவுகொள்வதன் பொருட்டும் திருமணப் பழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்தனர், மணத்துறவு வாழ்வை மேற்கொண்டனர்.

மேலும், எகிப்தில் இருந்த ஒரு பெண்கள் குழுமமானது, எஸ்ஸீனிய ஆன்மிகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டது மற்றும் தற்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தது. அலெக்சாந்திரியாவின் பிலோ என்பவரால் ஒரு சமயக் குழுவாக (sect) விவரிக்கப்படும்Therapeutaeஎன்கிற பெண்கள் குழுமமானது, ஆழ்நிலைத் தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டது மற்றும் ஞானத்தேடலை மேற்கொண்டது (De Vita Contemplativa, 21-90).

மணத்துறவு மற்றும் கன்னி வாழ்வின் முன்னுதாரணமாக இருந்த இத்தகைய யூதச் சமயக் குழுக்களைப் பற்றி மரியா அறிந்திருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், திருமுழுக்கு யோவான் துறவு வாழ்வு வாழ்ந்திருக்கலாம் என்கிற உண்மையும், அவரின் சீடர்களின் குழுமத்தில் இது மிகவும் உன்னதமாகக் கருதப்பட்டது என்பதும், மரியாவின் கன்னிமைக்கான தேர்வானது இந்தப் புதிய கலாச்சார மற்றும் சமயச் சூழலைச் சார்ந்தது என்கிற யூகக் கருத்திற்குத் துணையாகலாம்.

4. இருப்பினும், நாசரேத்துக் கன்னியின் இந்த வழக்கத்திற்கு மாறான நிகழ்வானது, அவரைச் சுற்றியிருந்தவர்களின் மனநிலையோடு அவருடைய உள்மனநிலையையும் தொடர்புபடுத்தி, அவரில் நிறைவேறிய மறையுண்மையின்  தனித்துவத்தை முற்றிலும் தவிர்க்கக்கூடிய தவற்றில் நம்மை விழவைக்கக்கூடாது. குறிப்பாக, அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்து பிறப்பு அறிவிப்புச் செய்தியின் பொழுது வானதூதரால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புமிக்கதோர் அருளை மரியா பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. “அருள்மிகப் பெற்றவரே (லூக் 1:28) என்ற வாழ்த்தொலியானது திரு அவையின் பொருள் விளக்கத்தின்படி, மரியா அவருடைய பிறப்பின் தொடக்கத்திலிருந்தே புனிதத்தின் முழுமையினால் வளப்படுத்தப்பட்டிருந்தார் என்பதன் பொருள் ஆகும். அமல உற்பவத்தின் தனிப்பட்ட சிறப்புச் சலுகையானது, அந்த நாசரேத்தூர் இளம்பெண்களின் ஒட்டுமொத்த ஆன்மிக வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மரியாவின்  ஏழ்மையை ஆண்டவர் வளமையாக மாற்றுகின்றார்

இவ்வாறாக, திரு அவையின் வரலாற்றில் கன்னிமை அர்ப்பண வாழ்விற்கு (Virginal Consecrationஅநேகப் பெண்களை ஈர்க்கின்ற அதே தூய ஆவியாரின்2 தூண்டுதலினால், கன்னித்தன்மைக்கான மாதிரியாக இருக்க மரியா வழிநடத்தப்பட்டார்.

மரியாவின் வாழ்வில் அருளினுடைய தனிப்பட்ட பிரசன்னமானது அந்த இளம் பெண்ணானவள் கன்னிமைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்திருந்தார் என்ற முடிவிற்கு இட்டுச்செல்கின்றது. அவருடைய வாழ்வின் தொடக்கத்திலிருந்தே ஆண்டவரின் அளப்பரிய கொடைகளால் நிரப்பப்பட்டு, கன்னியாக அவரையே கொடுப்பதில்  தன் உடல், ஆன்மா அனைத்தையும் கடவுளுக்கே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு முனைப்போடு இருந்தார்.

அதோடு, கன்னிமை வாழ்விற்கான அவரின் தீராத ஆசையானது, பழைய ஏற்பாடு மிகவும் உயர்வாகக் கருதுகின்ற கடவுளுக்கு முன்பான ஏழ்மை நிலையோடு இசைந்தே இருக்கிறது. இந்த வழியில் முழுமையாக அவரையே அர்ப்பணித்து, இஸ்ரயேலில் மிகவும் பாராட்டப்பட்ட, பெண்ணின் தனிப்பட்ட சொத்தாகிய தாய்மையையே மரியா விட்டுக்கொடுக்கிறார். இவ்வாறாக, அவர்துணிந்து நம்பி அவரிடமிருந்து மீட்பைப் பெறுகின்ற, ஆண்டவருடைய எளிய மற்றும் தாழ்ச்சி மிக்கவர்களிடையே உயர்ந்து நிற்கின்றார் (இறைத்திட்டத்தில் திருச்சபை , எண். 55). 

எவ்வாறாயினும், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் அவரை எளியவராகக் காண்பிப்பதிலும், ஆன்மிகக் கனிகளை மட்டுமே இலக்காகக் கொள்வதிலும், ஆண்டவர் அவரின் ஏழ்மையை வளமையாக மாற்றியிருக்கின்றார் என்பதை மரியா கண்டுகொள்கின்றார்மரியா உன்னதக் கடவுளுடைய மகனின் கன்னித் தாயாக இருப்பார். பின்னர், யாரையெல்லாம் மீட்க இந்த இறைமகன் வந்தாரோ, அந்த மனிதர்களையெல்லாம் நோக்கி அவருடைய தாய்மையானது அகலப்படுத்த வேண்டியுள்ளதையும் அவர் கண்டுகொள்வார் (ஒப்பிடுக. Catechism of the Catholic
Church, n.
501).

மூலம்: John Paul II, Our Lady intended to remain a virgin, in ‘L’Osservatore Romano’ Weekly Edition in English, 31 July 1996, p.7.

news
ஆன்மிகம்
பொய் பேசக்கூடாது! ஆனால், பாடலாமா?

அன்று மாமன்னர்களையும் மன்னர்களையும் அரசவைப் புலவர்கள் உண்மைக்குப் புறம்பாகவும், வானளாவப் புகழ்ந்தும் பாடியது ஒரு வரலாறு. இன்று அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றியோ குருக்கள்-துறவியர் பற்றியோ, அவரிடம் இல்லாத திறமைகள், குணங்கள் எல்லாம் உள்ளவராகப் பேசுவதும், அவருக்காக எதையும் செய்வோம் என்று வாழ்த்திப் பாடுவதும் உலகப் போக்கு. ஆனால், நமது எண்ணங்களை அறியும் ஆண்டவர் முன்பு, அப்படி மிகைப்படுத்திப் பேசுவதோ, பாடுவதோ சரியாகுமா?

நமது வழிபாடுகளில், நாம் பாடும் பாடல்களில் உள்ள சில வார்த்தைகள் சரியானவையா? உண்மையானவையா? என நாம் கவலைப்படுவதே இல்லை. ஏனெனில், அந்த வார்த்தைகள் நம்முடைய வார்த்தைகள் அல்ல; நாம் எழுதியதும் அல்ல; நாம் புரிந்துகொண்டு உச்சரிக்கும் வார்த்தைகளும் அல்ல; வேறு ஒருவரால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக எழுதப்பட்டவை. அத்தகைய சரியில்லாத வார்த்தைகள் உண்மையானவை அல்ல என்று அறிந்தும், நாம் பாடினால் அல்லது செபித்தால் அவைபொய்ஆகிவிடும் அல்லவா?

உதாரணமாக, ஒரு துறவற வார்த்தைப்பாடு நிகழ்வின் தொடக்கத்தில், கைகளில் தீபம் ஏந்தி அருள்சகோதரிகள் பவனியாக வரும்போது பாடியதீபத்தின் ஒளியினில் இணைவோம்என்ற பாடலை மற்ற இடங்களில்நேரங்களில் பவனியே இல்லாதபோதும் பாடுவது பொருத்தமானதா? அதேபோல் பெரிய ஆலயத்தின் உள்ளேயோ, துறவியரின் சிற்றாலயத்திலோ விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் மட்டும் சிலர் இருக்கும்போது, வருகைப் பவனியும் இல்லாத போது  ஒருசிலர் மட்டும்ஆலயத்தில் நாம் நுழை கையிலேஎன்றோ, ‘இங்கே இதயங்கள் பல கோடிஎன்றோ பாடுகின்ற வார்த்தைகளும்...

காணிக்கைப் பவனியே இல்லாதபோது நற்செய்தி விளக்கம் கூறி முடிந்தவுடன் அப்பத்தையும் இரசத்தையும் குரு ஒப்புக்கொடுத்துச் செபிக்கின்ற வார்த்தைகளுக்குஇறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராகஎன்ற பதிலுரையை  மறந்தவர்களாய், தொடர்ந்து வரும் செபங்களும் தங்கள் பெயரால்தான் எழுப்பப்படுகின்றன என்பதையும் பொருட்படுத்தாமல், ‘காணிக்கை தர நான் வருகின்றேன்என்றோ, உண்மைக்குப் புறம்பாகஇயற்கை ஈந்த மலர்கள் பறித்துத் தருவேன்என்றோ அதேசிலர்  பாடுகிற வார்த்தைகளும்...

திருவிருந்தில் பங்குகொள்ள ஒருசிலர் மட்டுமே இருக்கிறபோது தொடங்கிய பாடலின் முதல் அடியைப் பாடி முடிக்குமுன், திருவிருந்தே முடிகின்ற நிலையில் அவசரம் அவசரமாகப் பாடகர்கள் முந்தியும் பிந்தியுமாகஅவ்விருந்தை உண்டிடச் சென்றிடுவோம் இன்பம் பொங்கஎன்றும் பாடிக்கொண்டே திருவிருந்துக்கு வருவதும் அவ்வளவு சரிதானா? பொருத்தமானதா?

வருகை, காணிக்கை, திருவிருந்து பவனியே இல்லாதபோது பாடல் தேவையா? ‘ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம்என்பது கூட பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பாடலைப் பொருளுணர்ந்து பாடும்பொழுது மட்டும்தானே? வருகைப் பவனி, காணிக்கைப் பவனி, திருவிருந்துப் பவனி நடைபெறுகின்ற முக்கியமான விழா நாள்களில் கூட பாடுகின்ற பாடல்கள் அநேக நேரங்களில் பொருத்தமில்லாதவையாக இருப்பதை நாம் கண்டும் காணாமலே இருப்பது நடைமுறையாகிவிட்டது. குறிப்பாக, துறவற வார்த்தைப்பாடு விழா, ஆலயத் திருவிழா, யூபிலி விழா போன்ற நிகழ்வுகளுக்காக இயற்றப்பட்ட பாடல்களைக் குறுந்தகட்டிலோ (CD), பாட்டுப் புத்தகத்திலோ இருக்கின்ற ஒரே காரணத்திற்காகப் பாடுவது சரியாகுமா? என்று நினைக்காமலே பாடுவதும் வழக்கமாகி விட்டது.

ஏதோ பாடித்தான் ஆகவேண்டும் என்பதற்காக... உதாரணமாக, நற்செய்திக்கு முன்அல்லேலூயாபாடுகிற பொழுது, இசைக் கருவிகளே எதுவும் இல்லாத  போதும்மெல்லிசைக் கருவிகள் மீட்டிடுவோம்!’ என்றோ, ‘என்னென்ன இராகங்கள்என்றோ, இறைவார்த்தையை விட்டுவிட்டுப் பாடுவதோ சரியல்ல என்பதா? ‘பொய்என்பதா? பொருத்தமற்றது என்பதா?

நாம் எந்த வார்த்தைகளைச் சொல்லிப் பாடினாலும் நம் உள்ளத்தால் உணர்ந்து பாடாத பாடல் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல! எனவேதான் திரு அவை நாம் பாடும் பாடல்கள் மட்டும் அல்ல; வழிபாட்டின் (திருப்பலியின்) ஒவ்வொரு வார்த்தையையும் கூட  நாம் உணர்ந்து செபிக்கவேண்டும், பாட வேண்டும் என்பதற்காக அவரவரது தாய்மொழியிலேயே வழிபட அழைக்கிறது.

இப்படியிருக்க, திருப்பலியின் நற்கருணை மன்றாட்டின் தொடக்கத்தில் முகவுரையைத் தொடர்ந்துநீர் மெய்யாகவே தூயவர்என்ற வார்த்தைகளைக் குரு உபயோகித்தாலும், முகவுரை முடிவில்பரிசுத்தர்! பரிசுத்தர்என்ற வார்த்தைகளையே பயன்படுத்துவதும்அதே நேரத்தில், ‘தூயவர்! தூயவர்என்ற பாடலில் ஆண்டவரின் திருநாமத்தில்வந்தவரை வாழ்த்திப் பாடிடுவோம்என்பதற்குப் பதிலாகவல்லவரை வாழ்த்திஎன்று பாடுவதும் வாடிக்கையான, அனிச்சைச் செயல் போன்று பொருத்தமற்றதாக அமைவதில்லையா?

இயேசு மத்தேயு 12:36-இல்மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும்என்றும், மத்தேயு 15:8-இல்இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ வெகு தொலைவில் இருக்கிறதுஎன்ற எசாயாவின் இறைவாக்கைக் குறிப்பிட்டும் நமது செபங்களிலும் பாடல்களிலும் பயன்படுத்தும் வார்த்தைகள் பொருத்தமானவையாக, பயனுள்ளவையாக, உண்மையானவையாக  இருக்கவேண்டும் என்று எச்சரிக்கிறார்.

திருத்தூதர் பணி 5:45-இல் நேர்மையின்றி நடந்துகொண்ட அனனியாவிடம் பேதுரு, “நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்!” என்று கூற, அவன் கீழே விழுந்து உயிர்விட்டான் என்பதும் நமக்கு ஓர் எச்சரிக்கை. நாமோ வாடிக்கை, வழக்கம் என்றோ, ‘எல்லாரும் எல்லாக் கோவில்களிலும் இப்படித்தானே!’ என்ற போர்வையிலோ செபிக்கிற / பாடுகிற வார்த்தைகள் பொய்யானவை என்பது பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாமா?

திருப்பலி நேரத்தில் பாட வேண்டியிருந்தால் திருப்பலிக்கு முன்பே உரிய பாடல்களைத் தெரிவு செய்துகொண்டு பாடவேண்டாமா? திருப்பலியில் பாடுவது கட்டாயமில்லையே? உண்மைக்குப் புறம்பான வார்த்தைகளைச் சொல்லிச் செபிப்பதும் பாடுவதும் நம்மைத் தீர்ப்புக்கு உரியவர் ஆக்குமல்லவா?

செபப்புத்தகத்திலோ, பாட்டுப் புத்தகத்திலோ அச்சடித்திருந்தாலும் பொருத்தமற்ற, பொய்யான வார்த்தைகள் உள்ள செபங்கள் / பாடல்கள் தீர்ப்புக்கு உரியவையே. உதாரணமாக, புனித அந்தோணியார் மன்றாட்டு, நற்கருணை ஆராதனை (24) மன்றாட்டுகள் போன்றவை மாற்றி அமைக்கப்பட வேண்டியவை.

எனவே, தேவையற்ற நேரங்களில், தேவையற்ற பாடல்களுக்கோ செபங்களுக்கோ இடம்கொடாமல், அமைதியில் தனி (மௌன) செபத்திற்கு இடம் கொடுப்பது உள்ளத்தால் செபிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இறையருள் பெருகவும் உதவும் அல்லவா!

இதையெல்லாம் பெரிசுபடுத்தலாமா?’ என்ற விவாதம், “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத்தகுந்தவராய் இருப்பார் (லூக்கா 16:10) என்ற இறைவார்த்தைக்கு எதிரானதுதானே!

news
ஆன்மிகம்
நற்செய்தியும் நல்வாழ்வும் (2026, சனவரி 25 இறைவார்த்தை ஞாயிறு

2026, சனவரி 25-ஆம் நாள் அகில உலக 7-வது இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாடப்பட நம் திருத்தந்தை லியோ திரு அவைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2020-ஆம் ஆண்டு முதல் திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு, அகில உலக இறைவார்த்தை ஞாயிறாகக் (Sunday of the Word of God) கொண்டாடப்பட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு நல்கினார்.

அப்போது அவர்களுடைய கண்கள் திறந்தன (லூக் 24:31) என்ற புனித லூக்காவின் இறைவார்த்தையை மையப்படுத்தி, 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள் திருவிவிலியத்தின் பேரறிஞர் புனித ஜெரோமின் விழாவன்றுAPERUIT ILLISஎன்ற தன் திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அகில உலக இறைவார்த்தை நாளை அறிவிப்புச் செய்தார்.

இறைவார்த்தை நம் உள்ளத்தையும் வாழ்வையும் நல்வழிப்படுத்தி, அவநம்பிக்கையையும் அறியாமையையும் அகற்றி, புதிய ஒளியோடு பயணிக்க நம் கண்களைத் திறக்கவல்லது என்ற எம்மாவு அனுபவத்தை, உயிர்ப்பின் அனுபவமாகத் தரும் நாளாக அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்பட திரு அவை நமக்கு வழிகாட்டுகிறது. இயேசுவின் நற்செய்தியைக் கேட்பதும், வாசிப்பதும், தியானிப்பதும், வாழ்வாக்குவதும் நம்பிக்கையாளர் அனைவரின் இன்றியமையாதக் கடமை என்பதை இந்த இறைவார்த்தை ஞாயிறு மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையச் சிந்தனையை இறைவார்த்தையின் அடிப்படையில் முன்மொழிந்து, இறைவார்த்தையின் மேன்மையையும் புனிதத்தையும் போற்றும் நாளாகவும், இறைவார்த்தைக்கேற்ப நம் நம்பிக்கை வாழ்வு அமையவேண்டும் என அறிவுரை வழங்கும் ஆண்டவரின் நாளாகவும் அகில உலக இறைவார்த்தை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் 2026-ஆம் ஆண்டின் சனவரி 25-ஆம் நாள் இறைவார்த்தை ஞாயிறாக நாம் கொண்டாடப்பட அகில உலகமும் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாடு திரு அவையில் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் திருவிவிலிய மாதமாக நாம் சிறப்பாகக் கொண்டாடினாலும், அண்மை ஆண்டுகளில் அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்காகத் திருத்தந்தை முன்மொழியும் இறைவார்த்தையையே தமிழ்நாடு திரு அவையும் தன் சீரிய சிந்தனைக்கும் செயல்பாட்டுக்கும் அந்த ஆண்டின் மையக்கருத்தாக எடுத்துக்கொள்கிறது என்பதை இங்கே பணிவுடன் உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனவே, இந்த ஆண்டுக்கான அகில உலக இறைவார்த்தை ஞாயிறுக்கான திருத்தந்தையின் அழைப்பை இங்கே மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்ய விழைகிறேன்.

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) எனும் புனித பவுலின் அழைப்பே இந்த 2026-ஆம் ஆண்டின் இறைவார்த்தை ஞாயிறுக்கான முழக்கமாக, அறைகூவலாக விடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் நாளில் புனித பவுலின் (மனமாற்ற) அழைப்பு விழாவில், இறைவார்த்தை ஞாயிறாக இந்த நாள் கொண்டாடப்படுவது இன்னும் இந்த நாளுக்கு மெருகூட்டுகிறது. அத்துடன், அகில உலகக் கிறித்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளான ஜனவரி 25-ஆம் நாள், அகில உலக இறைவார்த்தை நாளாக இந்த ஆண்டு கொண்டாடப்படுவது கூடுதல் சிறப்பையும் இந்த நாளுக்கு வழங்குகிறது.

கிறிஸ்துவே நற்செய்தி (Christ and His Gospel at the Centre)

இந்த ஆண்டுக்கான இறைவார்த்தையை நாம் வாசிக்கிறபோது முதல் சிந்தனையாகநற்செய்தி என்பது என்ன? யார் என்பதைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்?’ இறைவார்த்தை என்பதைகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்திஎன்று புனித பவுல் அடையாளப்படுத்துகிறார். ‘கிறிஸ்துஎன்றாலே அது ஒருநற்செய்திஎன்பதும், ‘நற்செய்திஎன்றாலே அதுஇயேசு கிறிஸ்துவேஎன்பதும் திரு அவையில் திருப்பயணிகளாகிய அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆழமான உறுதிப்பாடு என்பதை மறுக்க இயலாது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற் 1:1) என்று முதல் நற்செய்தி நூலான மாற்கு நற்செய்தி தொடங்குவதை நாம் காணும்போது, இயேசு எனப்படும் வார்த்தையும் செயலும் நற்செய்தி என்பதாகவே நமக்குத் தரப்படுகிறது. இயேசு பேசியதும் செய்தவை அனைத்துமே நற்செய்திதான்.

இயேசு தம் போதனையாலும், நல்ல செயல்களாலும், வல்ல செயல்களாலும், தம் முன்மாதிரிகைச் செயல்களாலும் கொணர்ந்த இறையாட்சிப் பணியின் சாராம்சமே அவரின் நற்செய்தியாகும். “ஏழையருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்...” (லூக் 4:18) என்ற நாசரேத்தூர் இயேசுவின் தொழுகைக் கூட இறைவாக்கு வாசிப்பு அவரின் ஒட்டுமொத்தப் பணியையும்நற்செய்திஎனும் ஒற்றை வார்த்தையில் உள்ளடக்கி விடுகிறது. “இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியது ஆகும் (உரோ 1:3) என்ற பவுலின் வார்த்தைகள் அவரின் தீர்க்கமான நம்பிக்கையையும், அதன் அடிப்படையிலேயே தன் நற்செய்திப் பணியையும் வாழ்வையும் அமைத்துக் கொண்டதையும் நமக்கு அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. எனவே, நற்செய்தி என்பதையும் இயேசுவையும் நம்மால் பிரித்துப் பார்க்க இயலாது. இயேசுவே நற்செய்தி. நற்செய்தியே இயேசுதான். நமது வாழ்வும் நற்செய்தியாகவேண்டும் என்பது இதன் உள்ளீடு.

நற்செய்தியால் இயக்கப்படுதல் (New Way of Living by Word)

நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, ஒரு கிறித்தவன் தன் வாழ்வின் முதன்மையான வாழ்வுக் கடமையாக இயேசு தன்னில் தங்கவும் செயல்படவும் இயங்கவும், தன்னையும், தான் சார்ந்துள்ள சமூகத்தையும் இயக்கவும் இடம்தரவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இன்று உலகச் சிந்தனைகளாலும், போலியான மெய்யியல்களாலும், உலகத்தரமான கொள்கைகளாலும், ஆதிக்க அரசியலாலும் நாம் வழிநடத்தப்படும் சூழலில், நமது சுயநல எண்ணம், விருப்பு, கொள்கை, சுயநலம் ஆகியவற்றின் அடிப்படையில் பிறரையும் வழிநடத்தும் நிலையில், ‘கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி நம்மில் குடிகொள்ளட்டும்என்று புனித பவுல் அழைப்புவிடுக்கிறார்.

இறைவார்த்தையை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ள நம்மில் பலர், சில நேரங்களில் நம்மைப் பற்றியே அறிவிக்கிறோம். இயேசுவை அறிவிப்பதை விட்டுவிட்டு, அவரின் நற்செய்தியை முதன்மைப்படுத்துவதை மறந்துவிட்டு நம்மை எல்லாவற்றிலும் முன்னிலைப்படுத்துவது முரண்பாடான நம்பிக்கை வாழ்வாகும். பணியாளர்களுக்கும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் இந்த முரண்பாட்டு வாழ்வு அழகல்ல.

கிறிஸ்துவின் நற்செய்தியே நம் வாழ்வின் மையமாக மாறவேண்டும். “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) எனும் புனித யோவானின் வார்த்தைகள்குடிகொள்தல்என்பதன் பொருளை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. “நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா 15:7) என்ற இயேசுவின் அழைப்பு அவரின் வார்த்தையும் வாழ்வும் நம்மில் தங்கவேண்டும் (குடிகொள்ள வேண்டும்), நம்மை வழிநடத்தவேண்டும்; அதுவே நம் வாழ்வின் செயல்பாடாக, சாட்சியமாக வெளிப்படவேண்டுமென்பதை நமக்கு வலியுறுத்திக் கூறுகிறது. “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள் (யோவா 15:10) என்பதிலேயே, இயேசுவின் நற்செய்தி நம்மில் ஏன் குடிகொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தை, விளக்கத்தை இயேசுவின் வார்த்தைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.

நற்செய்தியால் மாற்றம் பெறுதல் (Transformation by Word)

நிறைவாகக் குடிகொள்வதாக (கொலோ 3:16) என்ற புனித பவுலின் அழைப்பு, யூபிலி ஆண்டினை நிறைவு செய்துள்ள நமக்கு, எதிர்நோக்கு வாழ்வுக்கான தொடர்ந்த பாதையைக் காட்டுகிறது. நற்செய்தியின் எதிர்நோக்கு நம்மை நிறைவுக்கு அழைக்கிறது. அனைவரும் இணைந்த கூட்டியக்கத் திரு அவையின் பயணத்திலும் நிறைவை நோக்கியே நாம் பயணிக்கிறோம். “இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டுமிருந்து, உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்; அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள் (யாக் 1:22) என்ற புனித யாக்கோபின் அறிவுரை, இந்த ஆண்டுக்கான நம்பிக்கைப் பயணத்தில் நமக்குத் தெளிவான பாதையைக் காட்டுகிறது. எனவே, நிறைவாகக் குடிகொள்ள வேண்டிய வாழ்வு தரும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்றுபகர நாம் இந்த ஆண்டில் அழைக்கப்படுகிறோம்.

நற்செய்திக்கு முரணானதைக் களைந்து கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்!

புனித பவுலின் அழைப்பான கொலோ 3:16- உள்ளடக்கிய பகுதிகிறிஸ்துவில் புதுவாழ்வுஎனப் பெயரிடப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானவற்றையும் முரணானவற்றையும் களைந்து விட்டு, கிறிஸ்துவையும் அவரின் நற்செய்தியையும் நமதாக்க வேண்டும். இன்னும் சாட்சியம் நிறைந்த நம்பிக்கை வாழ்வை வாழ்வாக்க 2026-ஆம் ஆண்டில் முன்வருவோம். இயேசுவின் நற்செய்திக்கு எதிரான மனநிலைகள், ஆதிக்கச் சிந்தனைகள், வேற்றுமை உணர்வுகள், போட்டி பொறாமைகளை விட்டு விலகுவோம். தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், அருள்பணி நிலையிலும், துறவற அழைப்பிலும் நற்செய்திக்குச் சான்று பகர்வோம்.

இந்த ஆண்டு முழுவதும் இறைவார்த்தை நம்மில் தங்கட்டும். இயேசுவே நம் பயணமாகட்டும்.