சிறிது காலம் கழித்து அரசன் வீரன் ஒருவனை அனுப்பி தோமாவிடம், “அரண்மனை கட்டும் பணி எந்த நிலையில் இருக்கிறது?” என்பது குறித்து விசாரித்து வரக் கூறினான். தோமா அவனிடம் “அரண்மனைக்கான பெரும் பகுதி வேலைகள் முடிந்துவிட்டன. இன்னும் மேற்கூரை அமைக்க வேண்டியதுதான் பாக்கி” என்று கூறி அனுப்பினார். மனம் மகிழ்ந்த அரசன் மேலும் நிறைய பணத்தைக் கொடுத்தனுப்பினான். ஏழைகளுக்கு உதவ இறைவன் கொடுத்த வாய்ப்பாக இதனைக் கருதிய தோமா, இறைவனுக்கு நன்றி கூறினார். அப்பணத்தை எடுத்துக்கொண்ட தோமா, மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினார்.
ஏழைகள்,
அனாதைகள், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர், நோயுற்றோர் ஆகியோரைச் சந்தித்து உதவிகள் செய்யலானார். மேலும், அவர்களிடம் இறைவன்தாமே அந்த மக்களுக்கு உதவிகள் வழங்குகிறார் என்பதையும் அறிவுறுத்தினார். இயேசு
பற்றிய தோமாவின் போதனைகளால் ஏராளமான மக்கள் கிறித்தவச் சமயத்தைத் தழுவினர்.
அரண்மனைப்
பணி முடிவடைவதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. மன்னன் கொண்டோபரஸ் தோமாவைச் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகவிருந்தது. தோமா கட்டிய அரண்மனையைக் காண அவன் தலைநகருக்கு ஆவலோடு புறப்பட்டு வந்தான். தன் வீரர்களை அனுப்பி அரண்மனை எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்து வரக் கூறினான். அதற்குள் அரசன் வருகையை அறிந்த அவன் நண்பர்கள் சிலர் அரசனை அணுகி, “அந்த ஏமாற்றுக்காரன் உம்மை மோசம் செய்து விட்டான்”
எனக் கூறவும் கொண்டோபஸ் அதிர்ச்சியடைந்தான்.
“ஆம் அரசே, நீர் எதிர்பார்த்ததுபோல் அரண்மனை கட்டும் பணி எதுவும் அங்கே நடைபெறவில்லை. உங்களுக்கு அவன் வாக்களித்தபடி அரண்மனை கட்டவுமில்லை” என்றனர்
நண்பர்கள். “இது
உண்மையா? அந்த மனிதன் இப்பொழுது எங்கே? நான்
கொடுத்த பணத்தை என்ன செய்தான்? இத்தனை காலமாக இங்கே என்ன செய்து கொண்டிருந்தான்? என் பணத்தில் இன்பமாக வாழ்ந்து கொண்டிருக்கிறானா?” எனக் கோபத்தோடு அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.
“நீர் நினைப்பதுபோல் உம்முடைய பணத்தில் அந்த மனிதன் இன்பமாக வாழவில்லை; மாறாக, ஊர் ஊராகச் சென்று ஏழை மக்களுக்கு உங்கள் பணத்தில் உதவிகள் செய்கிறான். எளிமையான மனிதனாக அடிக்கடி உபவாசம் இருக்கிறான். வெயில் காலம், குளிர் காலம் இரண்டிலும் ஒரே உடைதான் உடுத்துகிறான். ரொட்டி மற்றும் உப்பு மட்டுமே உண்கிறான். மற்றவர்களிடமிருந்து ஒருபோதும் பணம் வாங்கியதில்லை. தன்னிடமிருக்கும் பணத்தைப் போகிற வழியிலெல்லாம் ஏழை மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறான். இதைவிட முக்கிய விசயம், அவன் ஊர் ஊராகச் சென்று ஒரு புதுக் கடவுளைப் பற்றிப் போதிக்கிறான். நோயாளிகளைக் குணப்படுத்துவதும், பேய்களை ஓட்டுவதுமாகப் புதுமைகள் செய்வதால், மக்கள் அவனைத் தேடிச் செல்கின்றனர். அவனைப் பார்த்தால் மந்திரவாதிபோல் தெரியவில்லை. அவன், தான் போதிக்கும் கடவுளின் முக்கியச் சீடனாக இருப்பான் போலிருக்கிறது” என்றனர்
அரசனின் நண்பர்கள்.
பொங்கி
வந்த சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட அரசன், தன் வீரர்களிடம் தோமாவை எங்கிருந்தாலும் அழைத்து வரக் கட்டளையிட்டான். தோமா வந்ததும், “நான் கேட்டுக் கொண்டபடி அரண்மனை கட்டப்பட்டு விட்டதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பினான். “ஆம்” என்றார் தோமா. ஒரு கணம் அரசன் குழம்பிப் போனான். இல்லாத ஒன்றை இந்த மனிதர் எந்த எண்ணத்தோடு உண்டு என்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை.
“அரண்மனையை இப்போது நான் பார்க்க முடியுமா?” எனக் கேட்ட அரசனிடம், “இப்போது முடியாது”
என்றார் தோமா. அரசனுக்குக் குழப்பம் மேலும் அதிகரித்தது. இந்த மனிதர் எந்தத் தைரியத்தில் இப்படிப் பொய் சொல்கிறார்? என்று
நினைத்தவனாய் தொடர்ந்து, “சரி, எப்போதுதான் நான் பார்ப்பது?” என்ற கேள்விக்கு தோமா கூறிய பதில் அரசனை கடுங்கோபம் அடையச் செய்தது.
“நீங்கள் உயிரோடு இருக்கும்வரை அரண்மனையைக் காண முடியாது. நீங்கள் இறந்த பின்னரே அதைக் காண முடியும்”
என்று தோமாவின் பதில் அளவுக்கதிகமான சினத்தை ஏற்படுத்த, தோமாவை உயிரோடு தோல் உரித்துக் கொன்று போட முடிவு செய்தான் கொண்டோபரஸ்.
சினம்
தலைக்கேறிய அரசன் தன் வீரர்களிடம் தோமாவைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அவ்வாறே வீரர்கள் தோமாவைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயல்கையில், “சற்றுப் பொறுங்கள்”
எனக் கூற, தாமதித்த வீரர்களிடம் “இந்த மனிதனை அயல்நாட்டிலிருந்து அழைத்து வந்தானே வணிகன் ஹப்பான், அவனையும் சிறையில் அடையுங்கள்; இருவருக்குமே ஒருசேர பாடம் புகட்டுகிறேன்” என்றான்
அரசன்.
அரசன்
கட்டளைப்படியே ஹப்பானும் சிறைக்குள் தள்ளப்பட, அஞ்சி நடுங்கிய அவனிடம் தோமா, “பயப்படாதே, இயேசு கிறிஸ்துவை நம்பு; எந்தத் தீங்கும் நேராது” என்று தைரியமூட்டினார்.
தோமாவும்
ஹப்பானும் சிறையில் அடைக்கப்பட்ட அன்றிரவு அரசன் கொண்டோபரஸ், வெகு
நாள்களாக நோயுற்றுப் படுக்கையில் கிடக்கும் தன் தம்பி காத் என்பவனைக் காணச் சென்று அவனுக்கு ஆறுதலும் தைரியமும் கூறிக் கொண்டிருந்தான். தன் அண்ணனிடம் சிரமப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த காத், திடீரென தன் பேச்சை நிறுத்தினான். கண்மூடிக் கிடந்த தன் தம்பியை அரசன் எழுப்பிப் பார்க்கையில், அவன் மூச்சு நின்று போயிருந்தது. தன் கண்ணெதிரேயே தன் தம்பியின் உயிர் பிரிந்து போனதைக் கண்ட அரசன் பயத்திற்குள்ளானான். அப்போது அவன் அடைந்த வேதனை அளவில்லாமல் போனது.
தன்
தம்பிமேல் அளவு கடந்த பாசம் கொண்ட அரசன் தங்கள் வழக்கப்படி மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடித்து நான்காம் நாள் அவனை அடக்கம் செய்ய பெரிய கல்லறை ஏற்பாடு செய்து கொண்டிருந்தான். பாத்தியா தேசமே சோகத்தில் ஆழ்ந்திருக்க, இளவரசன் காத் இறந்த நான்காம் நாள் அவனுடைய உடல் சுத்தம் செய்யப்பட்டு, புத்தாடை உடுத்தப்பட்டு, இறுதிப் பயணத்திற்குத் தயாரான நிலையில், அவன் மீண்டும் உயிர்ப்பெற்றெழுந்து அமர்ந்ததைக் கண்ட மக்களில் பலர் அச்சத்தால் அந்த இடத்தை விட்டு ஓடிப்போனார்கள். அதிசயித்துப் போய் நின்ற மக்களிடையே ஆச்சரியத்தால் அரசன் கொண்டோபரஸ் வாயடைத்துப் போயிருந்தான். இறப்பின் எல்லையைத் தொட்டு மீண்டும் வந்த காத், தன் அரசன் சகோதரனிடம் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்க, அரசனும் அதைக் கேட்கலானான்.
“நான் இறந்த பிறகு வானதூதர்கள் என்னை விண்ணகத்திற்குக் கொண்டு சென்று, அங்கே பொன்னாலும் வெள்ளியாலும், விலையுயர்ந்த கற்களாலும் கட்டப்பட்ட மிக நேர்த்தியான அரண்மனை ஒன்றைக் காண்பித்தார்கள். நான் அந்த அரண்மனையைப் பார்த்து வியந்து நிற்கையில், அவர்கள் என்னிடம் ‘இது தோமாவால் உன் சகோதரனுக்காகக் கட்டப்பட்ட அரண்மனை’ என்றனர்.” அவன் கூறிக்கொண்டே போகையில் இடைமறித்த அரசன், “என்ன சொல்கிறாய்? விண்ணகத்தில் எனக்கான அரண்மனையா? தோமா கட்டியதா?” என்று வினா எழுப்பியவனுக்கு மூளையில் பொறி தட்டியது போலிருந்தது. தான் கேட்டபோது அரண்மனையைக் கட்டி முடிந்து விட்டதாகவும், தான் உயிரோடு இருக்கும்வரை அதனைக் காண முடியாது, இறந்த பின்னரே காணமுடியும் என தோமா கூறியது
இதைத்தானோ? என்று யோசிக்கலானான். ஆவலைக்
கட்டுப்படுத்த முடியாமல், “பிறகு என்ன நடந்தது?” என்று தன் தம்பியிடம் வினவினான்.
காத்
தொடர்ந்தான்... “இந்த அரண்மனையில் நான் வாழ்வதற்கு ஓர் அறையை ஒதுக்கிக் கொடுங்கள் என்று வேண்டிக்கொண்டேன். ‘அது இயலாது’ என்று வானதூதர்கள் மறுத்துவிட்டனர்” என்றான்.
இதைக்
கேட்ட அரசன், “ஏன் முடியாது என்று கூறினார்கள்? காரணம் ஏதாவது கூறினார்களா?” எனக் கேள்வி எழுப்பினான். உடனே காத், “ஆம் கூறினார்கள். இப்போதைக்கு உன் சகோதரன் இந்த அரண்மனையை உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக இருக்கிறார். நீர் வேண்டுமானால் நேரில் சென்று உன் சகோதரரைச் சந்தித்து அவருக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்பை ஈடு செய்துவிட்டு அவரின் அனுமதி பெற்று வாரும், உண்மையில் நீர் உயிர் பிழைக்க வைக்க நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம் என்று கூறி என்னை உயிர் பிழைக்கவும் வைத்துவிட்டனர். கடவுளின் மனிதர் தோமா உனக்காகக் கட்டிய அரண்மனை உமக்கே சேரவேண்டும். உனக்காக அழகிய அரண்மனையைத் தயார் செய்து வைத்திருக்கும் தோமாவை நீர் சிறையில் அடைத்திருக்கிறீரே...” என்று சொல்லி முடித்தவன், அரசனின் அனுமதியையும் எதிர்பாராமல் தோமா அடைபட்டிருக்கும் சிறைச்சாலையை நோக்கி ஓடினான்.
(தொடரும்)
1. இயேசுவினுடைய சிலுவையின் அடியில் மரியா மற்றும் பிற பெண்கள் இருந்ததை நினைவுகூர்ந்த பிறகு நற்செய்தியாளர் யோவான், “இயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ‘அம்மா, இவரே உம் மகன்’ என்றார். பின்னர் தம் சீடரிடம், ‘இவரே உம் தாய்’ என்றார்” (யோவா 19:26-27) என்று கூறுகின்றார்.
நெஞ்சை
நெகிழவைக்கும் குறிப்பிடத்தக்க இந்த வார்த்தைகள் ஒரு திருவெளிப்பாட்டுக் காட்சியாக (Revelation Scene) இருக்கின்றன.
இவ்வார்த்தைகள் இறந்து கொண்டிருக்கின்ற கிறிஸ்துவின் ஆழமான உள்ளுணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. மேலும், கிறித்தவ நம்பிக்கை மற்றும் ஆன்மிகத்தின் அர்த்தத்திற்கானதொரு மிகப்பெரிய பொருளைக் கொண்டுள்ளன. தமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் தம் தாயிடமும், தாம் அன்பு செய்த சீடரிடமும் பேசுகின்றபோது, சிலுவையில் அறையப்பட்ட மீட்பர், மரியாவுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே ஒரு புதிய உறவை ஏற்படுத்துகின்றார்.
சில
வேளைகளில், இது இயேசு - தமக்குப் பிறகு யாரைத் தமது அன்புச் சீடரிடம் ஒப்படைக்கின்றாரோ, அது தன் தாய்மீது கொண்ட மகனுக்குரிய கடமையின் வெளிப்பாடு என்று மட்டுமே பொருள்படுத்தப்படுவதால் இந்த வார்த்தைகள் ஒரு குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிலையற்றத் தேவையையும் தாண்டிச் செல்கின்றது. உண்மையில், பல திரு அவைத்
தந்தையர்களின் விளக்கங்களாலும், பொதுவான திரு அவைக் கருத்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட இயேசு கூறிய வார்த்தைகளைக் கவனமாக ஆய்வு செய்யும்பொழுது, மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்கைப் புரிந்துகொள்வதற்கான மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இயேசுவின் இரண்டு வகையான ஒப்படைப்புகளுமே நமக்கு
அமைகின்றன.
இயேசு யோவானிடம்
மரியாவை ஒப்படைத்து அவரது
தியாகத்தை
முழுமையாக்குகின்றார்
தாம்
இறக்கும் நேரத்தில் இயேசுவின் வார்த்தைகள், உண்மையில் அவரின் முதல் நோக்கமானது அவரது அன்னையை யோவானிடம் ஒப்படைப்பது அல்ல; மாறாக, அவருக்கு ஒரு புதிய தாய்மைப் பங்கைக் (Maternal Role) கொடுக்கவே என்பதைக் காட்டுகின்றது. மேலும், இந்தப் பெயரெச்சமாகிய (Epithet) ‘பெண்ணே’ என்ற வார்த்தையை ‘தாய்’ என்ற அவரது நிலையின் ஒரு புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்ற நிகழ்வாகிய கானாவூர் திருமணத்திலும் இயேசு பயன்படுத்துகின்றார். இவ்வாறு மீட்பரின் வார்த்தைகள் தாய் - மகன் இவர்களுக்கு இடையேயான அன்பின் சாதாரணமானதோர் உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக, அவ் வார்த்தைகள் மரியாவை ஒரு மிக உயர்ந்த நிலையில் வைப்பதற்கே என்பதைக் காட்டுகின்றன.
2. இயேசுவின்
இறப்பு மரியாவுக்கு ஆழமான துக்கத்தை ஏற்படுத்தினாலும், அது அவரது அன்றாட வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை: உண்மையில், பொது வாழ்வைத் தொடங்குவதற்காக நாசரேத்திலிருந்து விலகிச் சென்றதன் வழியாக, இயேசு அவரின் தாயை ஏற்கெனவே தனிமையில் விட்டுவிட்டார். மேலும், சிலுவையின் அடியில் அவரது சொந்தச் சகோதரியும், குளோப்பாவின் மனைவியுமான மரியாவின் உடனிருப்பானது,
மரியா அவரது குடும்பத்தோடும் உறவினர்களோடும் நல்லதோர் உறவு வைத்திருந்தார். அவருடைய மகனின் இறப்பிற்குப் பிறகு அவர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு நம்மை
இட்டுச்செல்கின்றது.
அதேநேரத்தில்,
இயேசுவின் இந்த வார்த்தைகள் அவரது மீட்புப் பணியின் சூழலில் அவற்றின் உண்மையான அர்த்தத்தைப்
பெறுகின்றன. மீட்புப் பலியின் நேரத்தில் பேசப்பட்ட இந்த வார்த்தைகள் குறிப்பாக, இந்த உன்னதமான சூழலிலிருந்து அவற்றின் உயர்ந்த மதிப்பைப் பெறுகின்றன. உண்மையில், இயேசு தம் தாயிடம் கூறிய வார்த்தைகளுக்குப் பிறகு, நற்செய்தியாளர் ஒரு முக்கியமான சொற்றொடரைச் சேர்க்கிறார்: “அனைத்தும் நிறைவேறிவிட்டன என்பதை அறிந்த இயேசு...” (யோவா 19:28). இதன் மூலம் அவர் தம் தாயை யோவானிடமும், அவர் மூலமாக எல்லா மனிதர்களிடமும் ஒப்படைத்து, தம் தியாகத்தை நிறைவுசெய்தார் என்பதை வலியுறுத்த விரும்பியது போலும் உள்ளது.
3. இயேசுவின்
வார்த்தைகளில் வெளிப்பட்ட உண்மை யாதெனில், சீடருடனான உறவில் மரியா பெற்ற புதிய தாய்மை, எல்லா மக்களுக்காகவும் தம் உயிரை அர்ப்பணிக்க இயேசுவைத் தூண்டிய மாபெரும் அன்பின் மற்றோர் அடையாளமாகும். கல்வாரியில் இந்த அன்பு, ஒரு தாயை அதாவது அவரின் தாயைப்
பரிசாக அளிப்பதன் மூலம் வெளிப்படுகிறது. இவ்வாறு அவர் நமது தாயாகவும் ஆகிறார்.
மரபுப்படி,
புனித கன்னி மரியா உண்மையில் யோவானைத்தான் தன் மகனாக அங்கீகரித்தார் என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும்; ஆனால், இந்தச் சிறப்புரிமையானது, தொடக்கத்திலிருந்தே கிறித்தவர்களால் முழு மனிதகுலத்துடனான ஓர் ஆன்மிகப் பிறப்பின் அடையாளமாகவே பொருள்கொள்ளப்பட்டு வருகிறது.
மரியாவின்
உலகளாவிய தாய்மையானது, அந்த கானாவூர் திருமணத்தின் மற்றும் கல்வாரியின் பெண்ணான, வாழ்வோர் அனைவரின் தாயாகிய (தொநூ 3:20) அந்த ஏவாளை நினைவுபடுத்துகின்றது. இருப்பினும், ஏவாள் இந்த உலகில் பாவத்தைக் கொண்டுவரக் காரணமானபொழுது, புதிய ஏவாளாகிய மரியாவோ மீட்பின்
நிகழ்வில் ஒத்துழைக்கின்றார். இவ்வாறு, அன்னை மரியாவில் ‘பெண்ணானவள்’ மறுசீரமைக்கப்படுகின்றாள்
மற்றும் அவரது தாய்மையானது கிறித்தவர்கள் மத்தியில் புதிய வாழ்வை எடுத்துச் செல்கின்றது.
இந்தப்
பணியின் காரணமாக, அந்த அன்னை தன் ஒரே மகனின் மரணத்தை ஏற்கும் வேதனை மிகுந்த தியாகத்தைச் செய்யும்படி கேட்கப்படுகிறார். ‘அம்மா, இவரே உம் மகன்’ என்ற இயேசுவின் வார்த்தைகள், முந்தைய உறவை விரிவுபடுத்தி, விரிவாக்கவிருந்த புதிய தாய்மை உறவை மரியா உணர்ந்துகொள்ள உதவுகின்றன. எனவே, இந்தத் திட்டத்திற்கு அவர் அளித்த ‘ஆம்’ என்பது, இறைவிருப்பத்திற்கு இணங்குவதன் மூலம் அவர் தாராளமாக ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் தியாகத்திற்கான சம்மதமாகும். கடவுளின் திட்டத்தில் மரியாவின் தாய்மை ஆரம்பத்திலிருந்தே முழு மனிதகுலத்திற்கும் விரிவடைய விதிக்கப்பட்டிருந்தாலும், கல்வாரியில் கிறிஸ்துவின் தியாகத்தின் மூலமாக மட்டுமே அதன் உலகளாவிய பரிமாணம் வெளிப்படுகிறது.
மரியா அனைத்துச்
சீடர்களின்
தாயாகின்றார்
இயேசுவின்
‘அம்மா, இதோ உம் மகன்’ என்ற வார்த்தைகள், அவை குறிப்பிடுவதையே மெய்ப்பிக்கின்றன. அதன் மூலம் மரியா யோவானுக்கும், இறையருள் என்னும் கொடையைப் பெறவிருந்த சீடர்கள் அனைவருக்கும் தாயாகிறார்.
4. சிலுவையில்
இயேசு, மரியாவின் உலகளாவிய தாய்மையை முறைப்படி அறிவிக்கவில்லை. ஆனால், அவருக்கும் - அன்புக்குரிய சீடனுக்கும் இடையே ஓர் உறுதியான தாய் - மகன் உறவை ஏற்படுத்தினார். ஆண்டவரின் தெரிவில், இந்தத் தாய்மை தெளிவற்ற முறையில் விளக்கப்படக் கூடாது. அதற்கு மாறாக, தனிப்பட்ட முறையில் கிறித்தவர்களோடு மரியா கொண்டிருந்த நெருக்கமான, தனிப்பட்ட உறவைச் (Intense, personal
relationship) சுட்டிக்காட்டவேண்டும் என்ற அவரது அக்கறையை நாம் காணலாம்.
நாம்
ஒவ்வொருவரும், மரியாவின் உலகளாவிய தாய்மை எனும் உறுதியான உண்மையின் வழியாக, அவரைத் தமது சொந்தத் தாயாக முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவருடைய தாய்மை அன்பிற்கு நம்பிக்கையுடன் நம்மையே கையளிப்போம்.
மூலம்:
Pope John Paul II, To the disciple He said, “Behold your mother”,
in «L’Osservatore Romano», Weekly Edition in English, 30 April 1997, p.11.
1. கிறிஸ்துவினுடைய மீட்பின் தியாகத்துடன் தொடர்புள்ள மரியாவின் பங்களிப்பைத் தீவிரமாக ஆராய்ந்து, மீட்புப்பணியில் மரியாவின் ஒத்துழைப்பையொட்டிய சிந்தனையைத் திரு அவையானது பல நூற்றாண்டுகளாகச் சிந்தித்து வருகின்றது. புனித அகுஸ்தினார் ஏற்கெனவே கன்னி மரியாவுக்கு மீட்பராம் கிறிஸ்துவுடனான மரியாவின் ஒத்துழைப்பை வலியுறுத்துகின்ற மீட்பில் ‘இணை மீட்பாளர்’ என்ற அடைமொழியை வழங்கினார் (ஒப்பிடுக. De Sancta Virginitate, 6; PL 40, 399). ஆனால், இது கிறிஸ்துவாம் மீட்பருடனான கீழ்நிலைச் (subordinate) செயலை வலியுறுத்துகின்றது.
15-வது
நூற்றாண்டிலிருந்து இச்சிந்தனையானது உருவாகிய விதம் இதுதான். கன்னி மரியாவை கிறிஸ்துவின் நிலையில் வைக்க விரும்பியதைக் கண்டு சிலர் அஞ்சினர். உண்மையில் திரு அவையின் போதனையானது ‘மீட்பரின் ஒத்துழைப்பாளர்’ என்கின்ற
வகையில் மரியாவின் கீழ்
நிலையை விளக்கி, மீட்புப்
பணியில் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகின்றது.
மேலும்,
“நாங்கள் இறைவனின் பணியாளர்கள்” (1கொரி
3:9) என்று திருத்தூதரான புனித பவுல் கூறுவதிலிருந்து, கடவுளுடன் ஒத்துழைப்பதற்கான உண்மையான சந்தர்ப்பத்தை மனிதனுக்கு அவர் வழங்குகின்றார் என்பதை நாம் அறியலாம். எந்தவொரு சமத்துவத்தையும் வெளிப்படையாகவே புறந்தள்ளும் நம்பிக்கையாளர்களின் இத்தகைய ஒத்துழைப்பானது நற்செய்தி அறிவிப்பில் வெளிப்படுத்தப்பட்டு, அந்நற்செய்தியானது மனித இதயங்களில் வேரூன்றுவதற்கான அவர்களின் தனிப்பட்ட பங்களிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.
மரியாவின் ஒத்துழைப்பு யாராலும்
செய்ய
முடியாத
தனித்துவமிக்கது
2. எது
எப்படி இருப்பினும் மரியாவுக்கு உடன் உழைப்பாளர் அல்லது ஒத்துழைப்பாளர் (co-operator) என்கிற அடைமொழியானது மிகவும் பொருந்தும். மீட்புத் திட்டத்தில் கிறித்தவர்களின் ஒத்துழைப்பு கல்வாரி நிகழ்விற்குப் பிறகு நடைபெறுகிறது. அதன் பலன்களை அவர்கள் தங்கள் செபத்தினாலும் தியாகத்தினாலும் பரவச் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், மரியா தனது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளின்போதும் ‘கிறிஸ்துவின் தாய்’ என்கிற நிலையில் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு ஒத்துழைத்தார். இதனால் அவரின் ஒத்துழைப்பானது கிறிஸ்துவின் மீட்புப் பணிகளை முழுவதுமாகத் தாங்குவதாக அமைகிறது. மனிதகுலம் அனைத்திற்குமான மீட்பின் காரணமான கிறிஸ்துவின் மீட்பளிக்கும் தியாகத்துடன் ‘உடன் உழைப்பாளர்’ அல்லது
‘ஒத்துழைப்பாளர்’ என்கின்ற
நிலையில் மரியா மட்டுமே அதோடு தொடர்புடையவர் ஆகின்றார்.
கன்னி
மரியாவுக்கான ஒத்துழைப்பாளர் என்கிற பங்கானது அவர் இறைவனின் தாய் என்பதில் அடங்கியிருக்கின்றது. மனித மீட்பிற்குக் காரணமானவரைப் பெற்றெடுத்து, வளர்த்து, அவரைக் கோவிலில் அர்ப்பணித்து, அவர் சிலுவையில் இறந்தபொழுது அவரோடு துன்புற்றதன் வழியாக “மீட்பருடைய பணியில் முற்றிலும் தனிச்சிறப்புமிக்க வகையில் அவர் ஒத்துழைத்தார்” என்று
வத்திக்கான் சங்கம் குறிப்பிடுகின்றது (ஒப்பிடுக. இறைத்திட்டத்தில் திருச்சபை, எண். 61). இறைவனின் மீட்புப்
பணியில் அவருடன் ஒத்துழைப்பதற்கான அழைப்பானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் மீட்பரது தாயான மரியாவின் பங்களிப்பானது
யாராலும் செய்ய முடியாத தனித்துவமிக்க நிகழ்வாகும் (unique and unrepeatable fact).
மரியா
தனித்தன்மையோடு இருந்தபோதிலும், அவரும் இறைவனின் மீட்பைப் பெற்றுக்கொள்பவராக இருக்கின்றார். மரியா தூய ஆவியின் அருளால் நிரப்பப்பட்டு, அவரது அமல உற்பவத்தில் ‘சிறப்பானதொரு வகையில்’ (Bull Ineffabilis Deus,
in Pius IX, Acta, 1, 605) கிறிஸ்துவால்
மீட்கப்பட்டவர்.
3. இக்கூற்றானது,
இப்பொழுது நம்முள் ஒரு கேள்வியை எழுப்புகின்றது: மீட்புத் திட்டத்தில் மரியாவின் தனித்துவமான ஒத்துழைப்பின் பொருள் என்ன? இக்கேள்வியானது, கானாவூர் திருமண நிகழ்வு மற்றும் சிலுவையின் அடியில் இயேசு அவரை ‘பெண்’
(யோவா 24: 19-26) என்று அழைக்கும் இவ்விரு மிக முக்கிய நிகழ்வுகளிலும் மீட்பரின்
தாய்க்கான கடவுளின் குறிப்பிடத்தக்கதொரு நோக்கத்தின் பின்னணியில் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
மீட்புப் பணியில் மரியா ஒரு பெண்ணாக இணைக்கப்படுகின்றார். மனிதனை ஆணும்-பெண்ணுமாகப் படைத்த இறைவன் (தொநூ 1:27), புதிய ஆதாமுடன் ஒரு புதிய ஏவாளையும் மீட்பின் திட்டத்தில் இணைக்க விரும்புகிறார். நமது
முதல் பெற்றோர் பாவத்தின் வழியைத் தேர்ந்தெடுத்தனர். ஒரு புதிய இணையான அதாவது, இறைமகன் அவரது தாயின் ஒத்துழைப்போடு மனிதகுலம் முழுவதையும் அதன் தொடக்க மாண்பு நிலைக்கே மீண்டுமாக உருவாக்குகிறார்.
இவ்வாறு,
புதிய ஏவாளாகிய மரியா திரு அவையின் நிறைவான மற்றும் நிலையான சின்னமாகின்றார். இறைத்திட்டத்தில், இறைவனுடைய மீட்பின் தேவையில் இருந்த மற்றும் சிலுவையின் அடியில் மீட்கப்பட்ட மனிதகுலத்தை மரியா பிரதிபலிக்கின்றார் மற்றும் மீட்புப் பணியில் தன்னையே இணைத்துக்கொண்டு தனது பங்களிப்பை அளிக்கத் தூண்டப்படுகின்றார்.
அருள்நிலை அடிப்படையில்
மரியா
நம்
தாய்
4. இக்கோட்பாட்டை
மனத்தில் கொண்டே திருச்சங்கமானது தனது வரையறுக்கப்பட்ட படிப்பினை மற்றும் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் மீட்பரின் பிறப்பிற்கு மட்டுமல்லாமல், உலக இறுதிவரை கிறிஸ்துவின் மறையுடலாகிய திரு அவையின் வாழ்க்கைக்கும் இறைவனின் மீட்புத் திட்டத்திலே கன்னி மரியாவின் பங்களிப்பையும் தனித்துவமிக்க ஒத்துழைப்பையும் வலியுறுத்துகின்றது. திரு அவையில் ‘மரியா ஒத்துழைத்தார்’ (இறைத்திட்டத்தில்
திருச்சபை, எண். 63) மற்றும் இறைவனின் மீட்புப் பணியில் இன்றும் ‘ஒத்துழைக்கின்றார்’ (Ibid. எண்.
53).
கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு நிகழ்வில் கூட கன்னி மரியா, “பாவத்தடையின்றித் தன் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருவுளத்தை ஏற்று, தன் மகனுக்கும் அவரின் அலுவலுக்கும் தன்னையே ஆண்டவரின் அடிமையாக அவர் முற்றிலும் கையளித்தார்; இவ்வாறு கிறிஸ்துவுடனும் அவருக்குக் கீழும், எல்லாம்வல்ல கடவுளின் கையில் செயலற்ற ஒரு கருவியாக அல்ல; மாறாக, நம்பிக்கையாலும் கீழ்ப்படிதலாலும் மனித இனத்தின் நிறைவாழ்வுக்குத் தன்னுரிமையுடன் ஒத்துழைத்தவர்” (Ibid.எண். 56) என்று திருச்சங்கம் கூறுகின்றது.
இரண்டாம்
வத்திக்கான் சங்கமானது மரியாவை ‘இறைவனின்
தாய்’ என்று
மட்டும் கூறவில்லை; மாறாக, அவரது கீழ்ப்படிதல், நம்பிக்கை மற்றும் அவருள் எரிந்துகொண்டிருக்கும் அன்பு ஆகிய பண்புகளோடு ‘ஒரு தனித்துவமான வகையில் தாராளமான இணையாக’ அவரை முன்னிறுத்துகின்றது. ஒத்துழைப்பின் விழுமிய கனி என்பது மரியாவின் தாய்மையே
என்பதையும் திருச்சங்கம் பதிவு செய்கிறது: ‘இத்தகு காரணங்களால்தான் அன்னை மரியா நம் அனைவரின் தாயாக அருள்நிலையில் திகழ்கின்றார்’ (Ibid. எண். 61).
ஆகவே,
தனது வாழ்நாள் முழவதும் இறைவனது மீட்புத் திட்டத்தில் உடனுழைத்து, இன்னும் சிறப்பாகக் கல்வாரியின் இறுதிநிலை வரை இறைவனது மீட்புத்திட்டத்தில் தன்னையே கரைத்துக்கொண்ட கன்னி மரியாவின் உதவியை நாம் நம்பிக்கையோடு வேண்டி, அவர் பக்கம் திரும்பலாம். ஏனெனில், அவரே இறைவனால் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட தனித்துவமிக்க மாதிரி, மீட்பின் உடன் ஒத்துழைப்பாளர் மற்றும் உடன் உழைப்பாளர் ஆவார்.
மூலம்:
John Paul II, Mary’s co-operation is totally unique, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 16 April
1997, p. 7.
“ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” (மாற்கு 8:36)
அதிகாலை
ஐந்து மணி. விமான நிலையம் ஏற்கெனவே விழித்துவிட்டது. விலை உயர்ந்த பயணப்பைகள், கைகளில் நவீன கைப்பேசிகள், காதுகளில் வயர்லெஸ் இயர்போன்கள், அவசரமாக ஓடும் மனிதர்கள்... எல்லாம் இருந்தன. ஆனால், அந்தக் கூட்டத்தில் ஒன்றை மட்டும் காண முடியவில்லை... மனநிறைவு!
இன்று
நாம் வாழும் உலகம் வசதிகளால் நிரம்பியுள்ளது. முன்பு பல ஆண்டுகள் கனவாக
இருந்தவை இன்று ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கின்றன. உணவு வீட்டிற்கு வருகிறது. பணம் கைப்பேசியில் பரிமாறப்படுகிறது. உலகத்தின் எந்த மூலையிலும் இருப்பவருடன் ஒரு கணத்தில் பேச முடிகிறது. ஆனால், இந்த அளவுக்கு வசதிகள் பெருகியிருக்கும் போது, ஏன் மன அழுத்தமும் தனிமையும்
அதிகரிக்கின்றன? ஏன் சிரிப்புகள் குறைகின்றன? ஏன் பலரின் இதயங்கள் விளக்குகள் எரியும் வீடுகளைப் போல வெளியே ஒளிர்ந்தாலும், உள்ளே இருளாக இருக்கின்றன?
நாம்
எப்போதும் ‘இன்னும் கொஞ்சம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருப்பேன்’
என்று நினைக்கிறோம். நல்ல வேலை கிடைத்தால்... சொந்த வீடு வந்தால்... புதிய கார் வாங்கினால்... பதவி உயர்வு கிடைத்தால்... ஆனால், ஒவ்வோர் இலக்கையும் அடைந்த பிறகும், மற்றொரு வெற்றிடம் நம்மை எதிர்பார்த்து நிற்கிறது. காரணம் எளிது.
பொருள்கள்
நம் தேவைகளை நிறைவேற்றலாம்; ஆனால், இறைவனுக்காகப் படைக்கப்பட்ட இதயத்தை அவை ஒருபோதும் நிரப்ப முடியாது. புனித அகுஸ்தினார் கூறிய வார்த்தைகள் இன்று இன்னும் உண்மையாக ஒலிக்கின்றன: “ஆண்டவரே, உம்மில் இளைப்பாறும் வரை எங்கள் இதயம் அமைதியடையாது.” இயேசுவின் காலத்திலும் இதே உண்மை இருந்தது. செல்வம் இருந்தும் அமைதி இல்லாத இளைஞன் அவரிடம் வந்தான். கட்டளைகளையெல்லாம் கடைப்பிடித்திருந்தான். ஆனால், மனநிறைவு இல்லை. ஏதோ ஒன்று குறைந்திருந்தது. இயேசு அவனைச் செல்வத்தை மட்டும் விடக் கூறவில்லை; அதைவிட ஆழமாக “என்னைப் பின்பற்றி வா” என்றார். ஏனெனில், மனித இதயத்தின் வெற்றிடத்தை நிரப்புவது ஒரு பொருள் அல்ல; ஓர் உறவு! இறைவனோடு இருக்கும் உறவு! இன்று நாமும் அதே தவறைச் செய்கிறோம். தனிமையைச் சமூக வலைத்தளங்களால் நிரப்ப முயற்சிக்கிறோம். அன்பின் பற்றாக்குறையைப் பொருள்களால் மறைக்க முயற்சிக்கிறோம். அமைதியைப் பொழுதுபோக்கில் தேடுகிறோம். ஆனால், தாகத்தைக் கடல் நீரால் தீர்க்க முடியாதது போல, இறைவன் இல்லாத இதயத்தை உலகம் நிரப்ப முடியாது.
நிறைவைத் தரும்
மூன்று
வழிகள்
1. அமைதிக்கான
நேரத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் கைப்பேசியை விட்டு விலகி, இறைவனோடு அமைதியாக இருங்கள். பல நேரங்களில், இறைவன்
அமைதியில்தான் பேசுகிறார்.
2. நன்றியுணர்வை
வளர்த்துக்கொள்ளுங்கள்,
இல்லாததை எண்ணுவதற்குப்
பதிலாக, இறைவன் ஏற்கெனவே தந்துள்ள அருள்கொடைகளை எண்ணத் தொடங்குங்கள். நன்றியுள்ள இதயத்தில் வெறுமை குறையும்.
3. அன்பைப்
பகிர்ந்து வாழுங்கள். அன்பு பெறுவதற்காக மட்டுமல்ல; அன்பு கொடுப்பதற்காக வாழத் தொடங்குங்கள். பிறரின் கண்ணீரைத் துடைக்கும் கரங்கள், தங்களின் வெறுமையையும் மறந்துவிடுகின்றன.
நம்
வாழ்க்கையில் பல வெற்றிடங்கள் இருக்கலாம்.
அவற்றை பணம், புகழ், பதவி, வசதிகள் ஆகியவற்றால் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால், அவை அனைத்தும் தற்காலிகமானவை. இறைவன் மட்டுமே நிலையான நிறைவை அளிக்கிறார். அவரை மையமாகக் கொண்ட இதயம் எந்தச் சூழலிலும் நம்பிக்கையை இழக்காது; ஏனெனில், அதன் மகிழ்ச்சி உலகத்தின் நிலையற்ற பொருள்களில் அல்ல; மாறாத இறையன்பில் வேரூன்றியிருக்கிறது. நிறைந்த உலகத்தில் வாழ்வது பெரிய விசயமல்ல; இறைவனால் நிறைந்த இதயத்துடன் வாழ்வதே உண்மை ஆசிர்வாதம்!
1. கானாவூர் திருமணத்தில் மரியாவின் பரிந்துரையை நினைவுகூர்ந்த பிறகு, இரண்டாம் வத்திக்கான் சங்கமானது இயேசுவின் பொதுவாழ்வில் அவரது பங்களிப்பை இவ்வாறு வலியுறுத்துகின்றது:
“இயேசுவின் பொதுவாழ்வில் அவருடைய தாய் குறிப்பிடத்தக்க முறையில் தோன்றுகிறார். கலிலேயா நாட்டின் கானாவின் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து, அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டும் வேளையில் முதன்முறையாக மரியா தோன்றுகிறார். இரத்த உறவுகளையும், அவற்றின் பிணைப்புகளையும் கடந்ததே தமது ஆட்சி என்று கூறி, தம் அன்னை நம்பிக்கையோடு செய்து வந்தது போல் (லூக் 2:19) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றவர் என கிறிஸ்து பறைசாற்றியபோது
(மாற் 3:35, லூக் 11:27-28), இவ்வார்த்தைகளை அவர் ஏற்றுக்கொண்டார்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 58).
பணியின்
தொடக்கத்தில் பாலஸ்தீனத் தெருக்களில் இயேசுவினுடைய பயணத்தின்பொழுதெல்லாம் அவரைப் பின்தொடர முடியாததொரு சூழலானது, மரியாவிற்கு அவரின்
மகனிடமிருந்தான பிரிவையே குறிக்கின்றது. அவரைப் பின்பற்றுவதற்கும், இறையாட்சியை அறிவிப்பதற்காக அர்ப்பணிப்பதற்கும் அவரின் சீடர்களுக்கு அவர் கொடுத்த நிபந்தனைகளிலிருந்தும் இயேசு வேண்டுமென்றே அவரது தாயிடமிருந்தும் மற்றும் குடும்பப் பாசத்திலிருந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மரியா இயேசுவின்
வார்த்தைகளை
நம்பிக்கையோடு
வாழ்ந்து
காட்டுகின்றார்
மரியா
சில நேரங்களில் அவரது மகனின் மறையுரையைக் கேட்டார். குறிப்பாக, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவார்த்தையை வாசித்தபிறகு இயேசு அந்த ஏட்டிற்கான விளக்கத்தைக் கொடுத்து, அது தன்னைப் பற்றியதே என்று கூறியபொழுது அங்கே மரியாவும் இருந்ததாகக் கருதலாம் (லூக் 4:18-30). “அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று...” என்ற வார்த்தைகளில் உள்ள பொதுவான வியப்பை அவரும் அனுபவித்த பிறகு, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக நின்று அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னதையும், அவரைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதையும் மரியா கவனித்தபொழுது, அவர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பார்! அந்த நேரத்தில் அந்த இடத்தில் நடந்தவைகளுக்கு நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகளே சாட்சிகளாகும்: “அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்” (லூக்
4:29-30).
இந்த
நிகழ்விற்குப் பிறகு, மேலும் பல சோதனைகளும் இருக்கலாம்
என்பதை உணர்ந்தவராக மரியா, தாய் என்கின்ற முறையில் அவரது துன்பத்தையும் தனிமையையும் அவருக்கே அர்ப்பணித்து, தந்தையின் விருப்பத்திற்குத் தனது முழுமையான கீழ்ப்படிதலை உறுதிப்படுத்துகின்றார் மற்றும் ஆழப்படுத்துகின்றார்.
2. நற்செய்திகளின்படி,
மகனுடைய போதனைகளைக் கேட்பதற்கு மரியா வேறுபல சந்தர்ப்பங்களையும் பெற்றிருந்தார். முதலாவதாக, கானாவூர் திருமண நிகழ்விற்குப் பிறகு கப்பர்நாகூமில், “இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகூம் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்” (யோவா
2:12) என்று திருவிவிலியம் கூறுகின்றது. மேலும், பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக இயேசு தனது தந்தையின் வீடு என்றழைத்த மற்றும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எருசலேம் கோவிலுக்கு அவரைப் பின்தொடர்ந்து மரியாவும் ஒருவேளை சென்றிருக்கலாம் (யோவா 2:16-17). பெருங்
கூட்டத்தினிடையே அவரைக் கண்டதாலும் இயேசுவை மரியா நெருங்கமுடியாததாலும், இயேசுவிடம் மரியாவும் அவரது உறவினர்களும் அவரைக் காண அங்கு வந்துள்ளார்கள் என்று சொன்னவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”
(லூக் 8:21) என்று அவர் சொன்ன பதிலையும் அவர் தன் காதுபடக் கேட்கின்றார்.
இந்த
வார்த்தைகளோடு கிறிஸ்து அவரது குடும்பத்தோடு உள்ள தொடர்பைக் கூறினாலும் கூட, அவருக்கு அவரின் தாயோடு இருக்கும் அந்த ஆழமான உறவை உறுதி செய்கின்ற வகையில் அவரை
மிகவும் புகழ்ந்து பேசுகின்றார். உண்மையில், அவரது மகனுக்குச் செவிகொடுப்பதில் மரியா இயேசுவின் அனைத்து வார்த்தைகளையும் ஏற்று நம்பிக்கையோடு அவற்றைப் பின்பற்றுகின்றார்.
பிரிவு
என்பது இதயத்தின் தூரத்தைக் குறிக்கவில்லை; அது, நாசரேத்தில் இயேசுவின் மறைவான வாழ்க்கையின்போது மரியா தன் மகனை ஆன்மிக ரீதியாகப் பின்பற்றியதையும், அவரது போதனைகளைக் கடைப்பிடித்துத் தியானித்ததையும் தடுக்கவில்லை. உண்மையில்,
மரியாவின் நம்பிக்கையானது இயேசுவுக்கு நடக்கவிருந்த பாடுகளோடு தொடர்புடைய, அவரது போதனைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய இயேசுவின் சீடர்களைக் காட்டிலும், அவருக்கு இயேசுவினுடைய வார்த்தைகளின் அர்த்தத்தின் ஆழத்தை உள்வாங்க உதவியது (மத் 16: 21-23; மத் 9:32; லூக் 9:45).
3. தன்
மகனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் சிலரிடமிருந்து நிராகரிப்பை அனுபவித்த இயேசுவின் துயரத்தில் மரியாவும் பங்குகொண்டார். இந்த நிராகரிப்பு, அவர் நாசரேத்திற்குச் சென்ற பயணத்தின் போது முதன்முதலில் வெளிப்பட்டது; மேலும், மக்களுடைய தலைவர்களின் வார்த்தைகளிலும் மனப்பான்மைகளிலும் அது மேலும் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.
இந்த
வகையில், கன்னி மரியா அவரது வாழ்வில் தனது மகன் இயேசுவை நோக்கிய பலரது இத்தகைய விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாசரேத்திலும்
கூட இயேசுவைத் தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற (யோவா 7:2-5) மற்றும் அவரது பணியைத் தடுத்து நிறுத்த முயன்ற (மாற் 3:21) உறவினர்கள் மற்றும் நண்பர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் அடிக்கடி மனவருத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.
மிகுந்த
கண்ணியத்துடனும் மறைவாகவும் தாங்கிக்கொண்ட இந்தத் துன்பத்தின் வழியாக மரியா தன் மகனின் ‘எருசலேமிற்கான’ (லூக்
9:51) பயணத்தில் பங்குகொள்கிறார்; மேலும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவருடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து, மீட்புப் பணியில் அவரும் ஒத்துழைக்கிறார்.
கிறிஸ்துவின்
வார்த்தைகளை
ஏற்றுக்கொள்வோருக்கு
மரியா
ஒரு
முன்மாதிரி
4. இவ்வாறு,
கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோருக்கு கன்னி மரியா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். வானதூதர் மரியாவிற்குக் கிறிஸ்து பிறப்பை அறிவித்ததில் அந்த இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்தும், அவரின் மகனுக்கு முழுமையாகத் துணை நின்றும், மீட்பருக்கு நம்பிக்கையோடு செவிசாய்க்கவும் நம் வாழ்வை உருமாற்றிப் புதுப்பிக்கும் இறைவார்த்தையை அவரில் கண்டுகொள்ளவும் நமக்குக் கற்றுத் தருகின்றார். மேலும்,
கிறிஸ்துவுக்கு உண் மையாய் இருப்பதன் மூலம் வரும் சோதனைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளவும், தமக்குச் செவிசாய்த்துத் தமது வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இயேசு வாக்களித்த மகிழ்ச்சியின்மீது நமது பார்வையை நிலைநிறுத்தவும் மரியாவின் இந்த அனுபவமானது நம்மை ஊக்குவிக்கிறது.
மூலம்:
Pope John Paul II, Mary had role in Jesus’ public ministry, in
«L’Osservatore Romano», weakly edition in English», 19 march 1997, p. 11.
பெர்சியா அரசன் டேரியஸ் கி.மு. 515-இல் சிந்து சமவெளி மாகாணத்தைக் கைப்பற்றி, தட்சசீலத்தைத் தலைநகராக்கிக் கொண்டான். யூதர்கள் பலர் பெர்சியாவிலிருந்து வந்து இங்கு குடியேறலாயினர். இதனால் பெர்சியம், யூத மதங்கள் இவற்றோடு ஜொராஸ்ட்ரியத் (Zoroastrianism) தத்துவமும் இங்கே ஏற்பட்டது.
தட்சசீல
நகரின் வளமை மற்றும் செழுமை பற்றிக் கூறவேண்டுமானால் அதற்குரிய சான்றாக விளங்குவது கி.மு. 326-ஆம்
ஆண்டில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பாகும். அவன் முதலில் பெர்சியாவைக் கைப்பற்றிய பின்னர் சிந்து சமவெளிப் பகுதியை நெருங்கினான். அப்போது தட்சசீல மன்னன் ஹம்பி, அலெக்சாண்டரின் படைபலத்திற்கு அஞ்சி அவனிடம் சரணடைந்து ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அதன்படி அலெக்சாண்டருக்குப் பரிசாக ஏராளமான மாடுகள், ஆடுகள் மற்றும் படைவீரர்களை வழங்கினான். அந்த
அளவுக்கு மிகச் செழுமையான நகரமாக தட்சசீலம் விளங்கிற்று என அலெக்சாண்டருடன் வந்திருந்த கிரேக்க
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில
காலம் கழித்து, மௌரியர் ஆட்சியின் கீழ் வந்த தட்சசீலம் அவர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிற்று. கி.மு. 272-இல்
மகா அசோகரின் ஆட்சிக்கு இந்நகர் உட்பட்டு, இங்கே புத்த சமயக் கொள்கைகள் பரப்பப்பட்டன. புத்த விகார்கள், தூண்கள் பலவும் கட்டப்பட்டன. பின்னர் அரசுகள் மாறி, கி.மு. 19-இல்
பார்த்தியர்கள் ஆளத் தொடங்கினர்.
பார்த்தியர்கள்
தொடக்க காலத்தில் ஜொராஸ்டர் என்ற ஈரானிய தீர்க்கத்தரிசியின் தத்துவங்களையே தங்கள் சமயக் கொள்கைகளாகப் பின்பற்றினர். பாரசீகம், கிரேக்க மரபுகள் கலந்த கலைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். மிகச்சிறந்த குதிரை வீரர்களாகவும், வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் மிக்கவர்களாகவும் பாராட்டத்தக்கப் போர்வீரர்களாகவும் விளங்கினர். மேலும் கட்டடக் கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.
கட்டடக்
கலையில் பேரார்வம் கொண்ட அரசன் கொண்டோபரஸ், தலைநகர் தட்சசீலத்தில் 352 அடி நீளமும், 272 அடி அகலமும் கொண்ட பெரிய தோர் அரண்மனையை அமைத்து வாழ்ந்தாலும், எல்லாரும் வியக்கத்தக்க வகையில் உரோமானியக் கலைநயம் மிக்க மற்றொரு புதிய அரண்மனை தனக்குவேண்டும் என்று ஆசைப்பட்டான். அதன் பொருட்டே தன் நாட்டு வணிகரான ஹப்பானின் மூலம் சிறந்த கட்டடக் கலைவல்லுநரை வெளிநாடுகளில் தேடினான். அரசன் கட்டளைப்படியே ஹப்பானும் தோமாவைக் கண்டறிந்து அவரைத் தன்னோடு அழைத்து வந்திருந்தான்.
அரசன்
கொண்டோபரசைத் தலைநகர் தட்சசீலத்தில் ஹப்பான் அறிமுகத்துடன் சந்தித்தார் தோமா. தோமாவின் உயர்ந்த தோற்றம், சிவந்த நிறம், வலிமைமிகு கரங்கள், நுண்ணிய பார்வையுடைய கண்கள் இவற்றைக் கண்டதும் அரசனுக்குத் தோமாவின்பால் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நாள்களில் வணிகத்தால் பல நாடுகள் தொடர்புகளில்
இருந்தன. பல்வேறு நாடுகளில் வணிகத்தின் பொருட்டு வேற்று நாட்டினரும் நடமாடுவதால் தோமாவின் உருவத் தோற்றத்தை அவன் அதிசயமாகப் பார்க்கவில்லை.
“உம்மை நான் வரவழைத்த காரணத்தை ஹப்பான் கூறியிருப்பார். எல்லா நாட்டினரும் வியப்படையும்படிக்கு புதிய அரண்மனை ஒன்றைக் கட்ட விரும்புகிறேன். நீர் சிறந்த தச்சர் என்று கேள்விப்பட்டேன். மரம் மற்றும் கற்களைக் கொண்டு என்னென்ன செய்வீர்?” என்று கேட்டான் அரசன்.
தோமா
அமைதியான குரலில் “மரக்கட்டைகள், கற்களைப் பயன்படுத்தி பெரிய கோவில்கள், அரண்மனைகள், நினைவிடங்களை அமைக்க முடியும். கல்தூண்கள், மிகப்பெரிய வாயிற்கதவுகள், சன்னல்கள், மேல்மாடங்கள் கூடிய அரண்மனையை எழுப்பித் தரமுடியும்” என்று
கூற, “இத்தகைய அனுபவம் மிக்க தச்சரைத்தான் நான் தேடினேன்”
என்று மனம் மகிழ்ந்து போனான் அவன். தோமாவிடம் கட்டடக் கலைப் பற்றி உரையாடியவன் அவரை அரண்மனை கட்டவேண்டிய இடத்தைக் காட்ட ஊருக்கு வெளியே வரவழைத்தான்.
தான்
அரண்மனை அமைக்க விரும்பிய இடத்தைக் காட்டி, அது குறித்து அரசன் கேட்டபோது “அரண்மனை கட்டுவதற்கு இது மிகச்சிறந்த இடம்” என்று தோமா ஒப்புதல் அளித்தார். “அப்படியானால் உடனடியாக வேலையைத் தொடங்குங்கள்” எனக்
கேட்டுக்கொண்ட அரசனிடம் “குளிர் காலத்தில்தான் என் பணியை ஆரம்பிப்பேன்” என்று
தோமா கூறிய பதில் அவனுக்கு வியப்பாக இருந்தது.
“எல்லாரும் கோடைக்காலத்தில்தான் கட்டட வேலையைச் செய்வார்கள். நீர் குளிர்காலம் என்கிறீர். குளிர்காலத்தில் எப்படி அரண்மனை கட்ட இயலும்?” என்று அரசன் கேட்க, தோமாவோ “அப்போதுதான் என்னால் இயலும். குளிர்காலத்தில் தொடங்கி கோடைக்காலத்திற்குள் அரண்மனையைக் கட்டி முடிப்பேன்” என்றார்
உறுதியாக.
அயல்நாட்டாருக்கு
இந்தியப் பகுதிகளின் வெப்பம் எப்போதும் ஒத்துக்கொள்ளாது என்பது ஒருபுறமிருக்க, தோமாவின் உள்மனதிற்குள் ஏதோ எண்ணமும் இருந்தது.
தோமாவின்
உறுதியான பதில் குறித்துச் சிந்தித்த அரசன், “இப்போது நீங்கள் செல்லலாம்; இன்னும் சில நாள்களில் தங்களைச் சந்திப்பேன். அதற்குள் அரண்மனைக்கான வரைபடம் ஒன்றைத் தயாரித்துக் கொடுங்கள்”
என்றான். தோமாவும் ஒப்புக்கொண்டார். அரசனின் வேண்டுகோள்படியே தோமா வரைபடத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். அதற்காக இரும்பாலான ஓர் அளவுகோலைக் கொண்டு அரண்மனையின் சுற்று எல்லைகளை, உள் அளவுகளை அளக்கலானார்.
கோடைக்காலத்தில்
வெப்பம் தாக்காத வகையில் அறைகளைக் குறித்தார். குளிர்காலத்தில் நெருப்பு மூட்டிக் குளிர்காய புகைபோக்கிகளைக் குறிப்பெடுத்தார். சூரிய ஒளி பாயும்படிக்குக் கிழக்குப் பகுதியில் கதவுகள் அமைத்தார். வெளிச்சமும் குளிர்ந்த காற்றும் தாராளமாக வரக்கூடிய வகையில் மேற்கு நோக்கியபடி சன்னல்களுக்கு இடங்கள் கொடுத்தார். தெற்குப்பகுதியில் வெளிச்சமான சமையல் அறைகளுக்கு இடம் ஒதுக்கினார். வடக்கில் நீர்த்தேக்கங்களுக்கு வசதி செய்தார். அங்கிருந்து தண்ணீர் வரும் குழாய்களுக்குப் பாதைகள் வகுத்தார். அரண்மனையின் மையப்பகுதியில் புதையல் அறையை நிர்மாணித்தார்.
அரண்மனைக்
கலைஞர்கள் வசிக்க இடமும், அரண்மனைக்குச் சற்று தொலைவில் குதிரைகள், கழுதைகளுக்கான தொழுவங்களும் குறிக்கப்பட்டன. பணி முடியும்வரை பொன், வெள்ளி, கொல்லர்கள், மரவேலைப்பாடு செய்பவர்கள். வண்ணம் பூசுபவர்களுக்கான தங்குமிடங்களைக் குறித்தார். இவற்றையெல்லாம் அளவுகளோடு குறித்துக்காட்டி வரைபடத்தைத் தயாரித்த தோமா, அதனை அரசனிடம் அளித்தபோது வரைபடத்தைக் கண்ட அரசன் தோமாவின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு வியந்து போனான். தோமாவைப் பாராட்டியவன், “நீர் திறன் மிக்கவர் என்பதைப் புரிந்துகொண்டேன். என்னுடைய பணிச்சுமைகள் காரணமாக என்னால் அடிக்கடி இங்கே வரமுடியாது. வேறு மாநிலத்தில் தங்கவிருக்கிறேன். எனவே, தலைநகர் திரும்ப சில காலமாகலாம். உமக்குத் தேவையான அளவுக்கு பொன், வெள்ளிக்காசுகளை அளிக்கிறேன். கட்டடப் பொருள்களை வாங்கப் பயன்படுத்திக்கொள்ளும். மேலும், தேவைப்பட்டால் செய்தி அனுப்பும், ஏற்பாடு செய்கிறேன். நான் திரும்பி வருகையில் இந்த வரைபடத்தில் திட்டமிட்டுள்ளபடி அரண்மனையை முடித்துவையும்” என்றவன்,
அங்கிருந்து நம்பிக்கையோடு புறப்பட்டுப் போனான்.
அரசன்
புறப்பட்டுப் போனபின்பு, அவனுடைய நம்பிக்கையைத் தோற்கடிக்கும் விதமாக இறைநம்பிக்கையில் தோமா இயல்பாகச் செயல்பட ஆரம்பித்தார். அரசன் கொடுத்த பணத்தை அரண்மனை கட்டச் செலவிடாமல், அருகிலுள்ள நகர்ப்புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் கால்நடையாகச் சென்றவர், அரசன் வந்து கேட்டால் என்ன பதில் கூறுவது என்பது பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல், கையிலிருந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவிக்கொண்டே நடந்தார்.
அரசன்
கொண்டோபரஸ் அரண்மனை கட்டுவதற்காகத் தன்னிடம் கொடுத்த பணத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவிய தோமா, தான் செல்லும் இடமெங்கும் நற்செய்தியைப் போதிக்கலானார். அத்துடன் நோயாளர்களைக் குணப்படுத்துவதும், தீய ஆவிகளை ஓட்டுவதுமாக மக்களுக்கு நன்மைகள் புரிந்தார். அவர் இருக்குமிடம் தேடி மக்கள் வரத் தொடங்கினர். அவரோ ஓரிடத்தில் இல்லாமல் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
(தொடரும்)