எப்போது பேசினாலும், எங்கே பேசினாலும், என்ன பேசினாலும், எப்படிப் பேசினாலும் ‘விவகாரமாகவே’ பேசிவரும் ஆளுநர் ரவி, சமீபத்தில் குமரி மாவட்டத்தில் வித்யா ஜோதி வித்யா பூஷன் பட்டமளிப்பு விழாவில் ‘மதச்சார்பின்மை’ குறித்து பேசிய கருத்துகள், அநேகருடைய கவனத்தினை ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
“மதச்சார்பின்மை எனும் கோட்பாடு ஐரோப்பிய சரக்கு; நமது பாரத தர்மத்திற்கு ஒவ்வாதது, இந்தியாவுக்குத் தேவையற்றது” என்று
ஒரு பெரிய அரசியல் சிந்தனையாளர்போல அவர் பேசியிருந்தாலும், அந்த வார்த்தைகள் அவரது ‘சொந்தச் சரக்கல்ல’.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிதாமகரும், அந்த இயக்கத்திற்கான கொள்கைகளையும், தத்துவங்களையும் வடிவமைத்தவருமான எம்.எஸ். கோல்வாக்கருடைய கருத்துகள் தாம் அவை என்பதை அவராலேயே மறுக்க முடியாது.
கோல்வாக்கர்
எழுதிய ‘சிந்தனைக் கொத்து’
(Bunch of Thoughts) என்ற
நூலைப் படித்தவர்களுக்கு ஆர்.என். ரவி கூறி வருகின்ற எந்தச் செய்தியும் புதிதல்ல என்பது தெரியும். கோல்வாக்கரைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை மட்டுமல்ல; சனநாயகம், சோசலிசம், பாராளுமன்ற நடைமுறைகள், கூட்டாட்சித் தத்துவம் என்று நாம் கொண்டாடுகின்ற அனைத்துமே ஐரோப்பியச் சரக்குகள் என்பதுதான் அவரது கருத்து. அவரும், அவரைப் பின்பற்றியவர்களும் அரசியல் சாசன சட்டத்தைக்கூட ஐரோப்பிய இறக்குமதி சரக்காகத்தான் பார்த்தார்கள். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இன்றுவரை அவர்கள் அதனை மாற்றுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இங்கு
மதச்சார்பின்மையைப் பற்றி மட்டுமே பேசுவோம்.
மதச்சார்பின்மை
ஓர் ஐரோப்பியச் சிந்தனை என்று சொல்கிறவர்களுக்கு உலக வரலாறும் தெரியவில்லை, பாரதக் கலாச்சாரத் தொன்மையும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. மதச்சார்பின்மை என்று நாம் சொல்வதும், நமது அரசியல் சாசனச்
சட்டம் சொல்வதும் இந்த நாட்டின் தர்மத்திற்கு விரோதமானது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரவி உருவாக்க முயற்சிக்கிறார். அவரைப் போலவே வலதுசாரி வகுப்புவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளும் ‘மதச்சார்பின்மை’ என்பது இந்நாட்டின்
பெரும்பான்மையினர் பின்பற்றும் இந்து மதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, நாட்டில் உள்ள சிறுபான்மை மதங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கருத்தியல் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் மதச்சார்பின்மை என்பது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டது மட்டுமே. அரசு நிர்வாகத்தில் மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை என்பதும்,
அரசு, அரசியல் சாசன சட்டப்படி மட்டும்தான் செயல்படும் என்பதும், மதத்தின் அடிப்படையில் தன் குடிமக்களை வேறுபடுத்திப் பார்க்காது என்பதும்தான் நமது அரசியல் சட்டம் சொல்லும் மதச்சார்பின்மையின் தாத்பரியம். இந்தக் கருத்தியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே நமது நாடுதான்.
மதத்தையும்,
அரசையும் ஒன்றாகச் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஆட்சி நடத்தியவர்கள் இந்திய மன்னர்கள் மட்டுமே! இதற்கு நேர்மாறாக ஐரோப்பிய நாடுகளில் மத குருமார்கள்தாம் மன்னர்களை ஆட்டிப்படைத்து
வந்தார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு முடிசூடும் அதிகாரம் போப்பாண்டவரிடம் மட்டும்தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து முடிசூடாவிட்டால் மக்கள் அந்த மன்னர்களை, மன்னராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் மிக அதிகமாகப் பொன்னும் பொருளும் கொடுத்தார்களோ அவர்களுக்கு போப்பாண்டவர் முடிசூடிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இஸ்லாமிய மன்னர்களுக்கும், போப்பாண்டவரின் படைகளுக்கும் இடையில் நடந்த சிலுவைப் போர்கள் பற்றி ஆளுநர் அறிவாரா?
ஆனால்,
கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தவர் பேரரசர் அசோகர். புதிய மதங்களை, மார்க்கங்களைப் போதித்த சாக்ரடீஸ் போன்றவர்களை அந்நாட்டு அரசியல் அதிகார மையங்கள் விஷம் கொடுத்துக் கொன்றன. இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தன. முகமது நபியைக் கல்லால் எறிந்து ஊரைவிட்டே விரட்டின. ஆனால், நம் நாட்டு மன்னர்கள் புதிய மார்க்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்திய புத்தரையும், மகாவீரரையும், ஆதி சங்கரரையும் தடை செய்யவில்லை. அவர்கள் நாடு முழுவதும் வலம் வந்து தங்களது புதிய மதங்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
பேரரசர்
பாபர் தனது மகனுக்கு எழுதிய உயில் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. “என் அருமை மகனே! இந்துஸ்தான் என்ற இந்த தேசத்தில் பல மதங்களைச் சார்ந்த
மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாட்சியை நம் கரங்களில் தந்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். நம் இதயத்தில் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் அகற்றிவிட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது கலாச்சார, பண்பாட்டு மரபுகளின்படி நீதி வழங்கவேண்டும். பசு வதையினை அனுமதிக்காதே. அரசு நிர்வாகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் சேர்த்துக்கொள். நம்முடைய இராஜ்யத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்விதச் சேதமும் வராமல் பார்த்துக்கொள்” என்று
அவர் அந்த உயில் மூலம் தனது மகனுக்கான அறிவுரைகளை வழங்குகிறார்.
ஆறாவது
நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட பேரரசர் ஹர்ஷவர்த்தனா, பிரயாகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் அழைத்து, சர்வமத பிரார்த்தனைகள் நடத்திய வரலாற்றையும் ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும். சீக்கியக் குருவான குருநானக் இந்துகளையும், இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சீக்கிய மதநூலான ‘ஆதி கிரந்தத்தில்’ சீக்கியக்
குருக்களின் படைப்புகளோடு இந்து மற்றும் இஸ்லாமிய புனிதர்கள் இயற்றிய படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அசோகச்
சக்கரவர்த்தியின் 12-வது கல்வெட்டில் தனது குடிமக்கள் தங்களுக்குள் மத வேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது
என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் நல்ல பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளார். 18 மற்றும் 19-வது நூற்றாண்டுகளில் வாழ்ந்த மராட்டிய மற்றும் சீக்கிய மன்னர்களும் தங்களது ஆட்சியையும், இராணுவத்தையும் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களை வைத்தே நிர்வாகம் செய்துள்ளனர் என்பது வரலாறு.
நமது
தேசத்தின் கலாச்சார மரபணுக்களில் மண்டிக்கிடக்கும் மனிதநேயத்தையும், மாற்றாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அண்டிவந்தவரை அரவணைக்கும் தோழமையையும், அனைத்து மதங்களையும் போற்றி மதிக்கும் பண்பையும் 1893 -ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த அனைத்து மதங்களின் மாமன்றத்தில் உரையாற்றிய அருளாளர் விவேகானந்தர் எடுத்துரைத்தார்.
“அகில உலகிற்கும், சகிப்புத்தன்மையையும், எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கற்றுக்கொடுத்த ஒரு மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். உலகில், மதத்தின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளான அனைத்து நாட்டு மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவளித்த நாட்டைச் சார்ந்தவன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. உரோமானிய பேரரசின் அடக்குமுறையால் யூதர்கள் மிரட்டப்பட்டு அவர்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்ட அதே ஆண்டு உயிருக்குப் பயந்து எங்களது தென் இந்தியாவுக்கு அவர்கள் அடைக்கலம் தேடிவந்த வேளையில், பாசத்துடன் அவர்களை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நாடு எங்கள் நாடு. உலகெங்கும் அழிந்துபோன சௌராஷ்டிர மதத்தை முழுமையாக அழிந்து விடாமல் இன்றும் பாதுகாக்கும் நாடு எங்கள் நாடு. என்னுடைய சிறுவயதிலிருந்து நானும், என்னைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் சொல்லும் வேத மந்திரத்தை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்:
‘பரந்த நிலப்பரப்பில் பல இடங்களில் தோன்றும்
நீரோடைகள் பலப்பலவாக இருந்தாலும், அவைகளில் வடியும் நீரெல்லாம் எப்படி ஒன்றாகி ஒரே மகா சமுத்திரத்தில் கலக்கிறதோ, அதைப்போல எங்கள் இறைவனே! மனிதர்களாகிய நாங்கள் பெரிதும் சிறிதுமான பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இறுதியில் உன்னிடமே சங்கமிக்கிறோம்’ என்று
விவேகானந்தர் பேசி முடிந்தவுடன் அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் விழிநீர் ததும்ப கைகளைத்தட்டி ஆரவாரித்த காட்சியை வரலாறு ஒரு நாளும் மறக்காது.
நமது
முதல் பிரதமரை-மதச்சார்பின்மையின் மாண்பிற்கு இலக்கணமாக ஆட்சி செய்த பண்டித நேரு அவர்களை வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார். “இந்திய நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்றுள்ள உங்களை எதிர்நோக்கியுள்ள சவால்களில் எதனை மிக முக்கியமானதாக பார்க்கின்றீர்கள்? வறுமையா? அறியாமையா? அடிப்படை வசதிகள் இல்லாமையா?” என்று கேட்டபோது நேரு அவர்கள் கூறிய பதிலை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்: “மிகுந்த மத நம்பிக்கை கொண்ட
மக்கள் மிக அதிகமாக வாழும் இந்தத் தேசத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை உருவாக்கி நடத்துவதுதான் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால்” என்று நேரு கூறினார்.
மிக
அதிகமான மதநம்பிக்கை கொண்டவர்கள் எந்த நாட்டு மக்கள் என்றறிய சிகாகோ பல்கலைக்கழகம் ஓர் ஆய்வினை நடத்தியது. அதில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். அடுத்த இடம் இந்தியாவுக்கு. தங்களது மதங்களின் பேரில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த போதிலும், மற்ற மதங்களையும் மார்க்கங்களையும் மதித்துப் போற்றுகின்ற பண்பு இந்தியர்களின் மரபணுக்களில் இயற்கையாகவே இருப்பதுதான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய வலிமை.
ஆனால்,
இன்று பெரும்பான்மைவாதத்தை முன்னெடுத்து, வாக்கு வங்கி அரசியலை நடத்தும் வலதுசாரி பாசிச மதவாத சக்திகள், ‘மதச்சார்பின்மை’ என்பது
மதச்சிறுபான்மையினரிடம்
வாக்குகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு என்று நாள்தோறும் இடைவிடாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன.
140 கோடி மக்கள்,
600 மொழிகள், 6000-க்கும் அதிகமான இனக்குழுக்கள் மற்றும் சாதிகள்... 1947-இல் குண்டூசி கூட தயாரிக்க முடியாத நாடு... அமெரிக்காவின் பி.எல். 480 நிதியம்
மூலம் பெறுகின்ற கோதுமையை வைத்துதான் மக்கள் பசியாற வேண்டிய நிலை.
இன்று
75 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையினைத் தொடுவதற்காகக் காத்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். உலகின் மிகப்பெரிய செயல்படும் சனநாயகம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
இந்திய
இளைஞர்களை வரவேற்க உலக நாடுகள் கரம் விரித்துக் காத்திருக்கின்றன. உலக நாடுகளில் மிக அதிகமாக வாழ்கின்ற புலம்பெயர்ந்த மக்களில் இந்தியர்கள்தாம் முதலிடத்தில் இருக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் அவர்கள் உழைத்து அனுப்பும் டாலர்கள்தாம் நமது அந்நியச் செலாவணி கருவூலத்தை ஒவ்வொரு நாளும் நிரப்புகின்றன. இவை அனைத்திற்கும் காரணம், சுதந்திர இந்தியாவைத் தங்களது கனவுகளில் தேக்கி நிஜங்களாக உருவாக்கிய நமது முன்னோர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ‘மதச்சார்பற்ற நாடாக’ இந்தியாவை உருவாக்கியதுதான்.
நம்மோடு
சுதந்திரம் பெற்று, ஒரு மதம் சார்ந்த நாடாகத் தன்னை அவதானித்துக் கொண்ட பாகிஸ்தானின் நிலைமை என்ன என்பதை ஆளுநர் ரவி போன்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமீபத்தில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் அரசுக்கு ஒன்றை அறிவுறுத்தியுள்ளது: மெக்காவில் பிச்சையெடுப்பவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாம்! பாகிஸ்தான் அரசு ஐ.எம்.எப்.
இடம் பிச்சை எடுக்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் மதத்தோடு அரசு நிர்வாகத்தை இணைத்து ஆட்சி நடத்தும் எந்த நாட்டிலும் முன்னேற்றம் இல்லை. வளர்ச்சி இல்லை. சமூக அமைதி இல்லை. சனநாயகமும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை.
மதச்சார்பின்மை
என்பது சிறுபான்மை மக்களுக்கான ‘சமூகச் சலுகை’
(social concession) என்ற தவறான பிரச்சாரத்தை இந்திய இளைஞர்கள் விலக்கி ஒதுக்க வேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், இளம் தலைமுறையினரின் எதிர்கால பாதுகாப்புக்கும் நாம் உருவாக்கி வைத்திருக்கும் ‘காப்பீடு’
என்பதில் தெளிவு வேண்டும். அது மட்டுமல்ல, மதநல்லிணக்கமும், மனிதநேயமும், மாற்றுத் தத்துவங்களின் சிறப்புகளை ஏற்கும் பெருந்தன்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மண்ணில் விளைந்து நிற்கின்ற ‘கலாச்சாரக் கருத்தியல்கள்’ என்பதை
அறிய வேண்டும். உண்மை என்னவென்றால், ஆளுநர் ரவி போன்றவர்களின் கருத்துகள்தாம் ஐரோப்பிய இறக்குமதிகள். இவர்களின் முன்னோர்கள் இத்தாலியில் இருந்தும், ஜெர்மனியில் இருந்தும் இறக்குமதி செய்தார்கள்.
‘மதச்சார்பின்மை’ நமது
மண்ணின் மாறாத பெருமை! அதுதான் நமது தேசத்தின் வலிமை!
‘சாதி எனும் அழுக்கு’ என்றார்கள் சிலர். இல்லை! அது ‘நம் சமூகத்தின் சாபம்’ என்றார்கள் மற்றும் சிலர். கலைஞர் தனக்கே உரிய பாணியில் ‘சதிக்கு கால் முளைத்து சாதியானது’ என்று கூறினார். இதனை ‘தர்மம்’ என்று பிரச்சாரம் செய்யும் கூட்டமும் இங்கே உண்டு. சனாதனத் தர்மத்தின் உள்ளீடான வர்ணாசிரமத் தர்மம் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும், அது என்றென்றும் மாறாதது, மாற்ற முடியாதது, மாற்றக்கூடாதது என்றே பல தலைமுறைகளாக நமக்குப் போதிக்கப்பட்டது. இந்து மதத்தின்வழி முறையாக, அதன் பண்பாட்டுக் கூறாக அது வகுக்கப்பட்டிருந்தாலும், இந்திய மண்ணில் கால்பதித்த எந்த மதமும் இம்மண்ணில் சாதியை வெற்றிகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.
‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே’ என்று இறைவனை அழைக்க அனைத்து மக்களுக்கும் போதித்த கிறிஸ்தவம், இந்தியர்களிடம் இருந்த சாதி எனும் அழுக்கை அகற்ற முடியவில்லை. மதம் மாறிய இந்தியக் கிறிஸ்தவர்களும் தங்கள் சாதிய அடையாளங்களை அப்படியே பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டனர். இந்தச் சாதிய வேற்றுமைகளைக் களைவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட பௌத்தமும், சமணமும், சீக்கியமும் ‘சாதி’ எனும் ‘சதி’யிடம் தோற்றுப் போனதுதான் உண்மை.
சாதிய வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது இஸ்லாம் என்றுதான் நாம் நினைத்திருந்தோம். இன்று அவர்களையும் சாதிகளாய்ப் பிரிக்க வலதுசாரி பாசிச மதவாத சக்திகள் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளன. ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு, பட்டியலின மக்களிடமிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறியவர்களை ‘பஸ்மானந்தா முஸ்லிம்கள்’ என்று வகைப்படுத்துகின்றனர். இவர்களை அணுகி அவர்களை பா.ச.க.வில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் அடிக்கடி அவரது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றார். பா.ச.க. ஆளும் மாநிலங்களில் இவர்களுக்காகத் தற்போது தனி அமைப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் கூட அங்கே தங்களது சாதிச் சங்கங்களின் கிளைகளைத் துவங்கி தங்களது சாதிய அடையாளங்களைப் பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர். ‘விடாது கருப்பு!’ என்று எங்கள் கிராமத்தில் சொல்வதுபோல எங்கே போனாலும், என்ன செய்தாலும், எப்படி இருந்தாலும் இந்தப் பாழாய் போன சாதி நம்மை விடாது.
தந்தை பெரியாரிடம் கேட்டார்கள், ‘சாதி பெரிதா? மதம் பெரிதா?’என்று. அவர் கூறினார், “சாதிதான் பெரிது. மதத்தை மாற்றமுடியும், சாதியை மாற்ற முடியாது” என்றார். இதைத்தான் அவர்கள், ‘இது மாறாதது’ என்கிறார்கள். இதனை ஒழித்து விடவேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முயற்சிகள் நடந்தன; இன்னும் நடந்துகொண்டு வருகின்றன. பல மாபெரும் புரட்சியாளர்கள் இதற்கான இயக்கம் கண்டனர். ஆனால், சாதி எனும் சதியை இன்னும் நம்மால் வெற்றிகொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.
இந்தியச் சமூகத்தில் சாதியின் வீச்சுக்கும், தாக்கத்துக்கும் யாரும் தப்ப முடியாது. நாம் நமது தேசத்தின் தந்தை என்று கொண்டாடுகின்ற மகாத்மாவைக் கூட சாதி விட்டு வைக்கவில்லை. பால கங்காதர திலகர் இறந்தபோது அவரது பாடையைத் தூக்க அவரது உறவினர்கள் காந்தியடிகளை அனுமதிக்கவில்லை. ‘பிராமணரான திலகரது உடலை ஷத்திரியரான காந்தி தூக்க முடியாது’ என்று சொல்லிவிட்டது வருணாசிரம தர்மம். மயிலாப்பூர் அக்கிரகாரத்திலும், வைக்கத்தில் நம்பூதிரிகள் வீட்டிலும் காந்தியடிகள் வீட்டுக்கு வெளியேதான் அமர வைக்கப்பட்டார்.
அரசியல் உலகில் மட்டும் அல்ல, ஆன்மிக அரங்கிலும் சாதியின் வாடை இருந்தது. இந்து மதத்தின் மறுமலர்ச்சி நாயகர் என்று கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தர் மீதும் சாதியின் தாக்கம் இருந்ததைப் பார்க்கிறோம். 1892 -ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்த விவேகானந்தர் மனோன்மணியம் சுந்தரனாரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சுந்தரனார் வீட்டில் விருந்துண்ட விவேகானந்தர் சுந்தரனாரிடம் “உங்கள் கோத்திரம் என்ன?” என்று கேட்டுள்ளார். சுந்தரனார் தனது நாள்குறிப்பில் எழுதுகிறார்: “வேறு ஒரு தினமாகில் வினாவினைக் கேட்டவுடன் நான் வெகுண்டிருப்பேன். உறவின் விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என ஆத்திரமின்றி கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்” என்று தனது நாள்குறிப்பில் எழுதியுள்ளார்.
உள்நாட்டுத் துறவிகள் மட்டுமல்ல, வெளிநாட்டில் இருந்து வந்த துறவிகளையும் ‘சாதி’ விட்டு வைக்கவில்லை. இத்தாலியில் இருந்து வேத போதகத்திற்காகத் தமிழகம் வந்த இராபர்ட் டி நொபிலி என்ற கத்தோலிக்க அருள்பணியாளர் ‘சாதி இந்துகளை’ மதம் மாற்றுவதற்காகத் தன்னையே ‘உரோமாபுரி பிராமணர்’ என்றழைத்துக்கொண்டார். பூணூல் தரித்து, தலையில் குடுமியுடன் காவி உடையும் தரித்து முழு சைவராக மாறிவிட்டார். அக்கிரகாரத்தில் வீடு எடுத்துக் குடியேறி, சமஸ்கிருதம் பயின்று, சில பிராமணர்களையே மதம் மாற்றியதாக அவர் உரோமைத் திருச்சபையின் தலைவருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக அறிகிறோம்.
ஆன்மிக வளாகங்கள் மட்டுமல்ல, கல்வி நிறுவனங்கள்கூட சாதி பாராட்டின என்பதுதான் வரலாறு. நம் நாட்டின் பூர்வக் குடிகளான இன்றைய பட்டியலின மக்களைச் சாதியற்றவர்களாக வருணாசிரமம் வகைப்படுத்தியதால், அவர்களை இந்துகள் என்றுகூட சாதியக் கட்டமைப்புக்குள் இருந்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிடர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘இந்த அறக்கட்டளை இந்து தர்ம ஸ்தாபனம். ஆதி திராவிடர்கள் இந்துகள் அல்லர்; எனவே, அவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை’ என்றனர். நீதிபதி அவர்களைக் கடுமையாகக் கண்டித்து, ஆதிதிராவிடர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பின்னர்தான் அறக்கட்டளை அவர்களைக் கல்லூரியில் சேர்த்தது.
இதைத்தான் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். நாம் போராடிப் பெற்ற சுதந்திரமும், நமது அரசியல் சாசனச் சட்டமும் கூட இந்தச் சாதியிடம் தோற்றுப் போவதை அரசியல் சட்ட நிர்ணய சபையிலேயே வேதனையுடன் வெளிப்படுத்தினார். 1949, நவம்பர் 26 அன்று அரசியல் சாசனச் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
“1950, சனவரி 26 -ஆம் நாள் முரண்பாடுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையில் நாம் நுழைய இருக்கிறோம். இன்றிலிருந்து நம் இந்தியர்கள் அனைவருக்கும் அரசியல் சமத்துவம் இருக்கும். ஆனால், நமது சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக நம் மக்களிடையே சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவம் இருக்காது. ‘அனைவரும் சமம்’ என்ற கோட்பாடு நம்மில் பலருக்கு மறுக்கப்படும். இந்த முரண்பட்ட சூழலில் நாம் எவ்வளவு நாள் பயணிக்க முடியும்? சமூக, பொருளாதாரச் சமத்துவத்தை அவர்களுக்கு நாம் தொடர்ந்து மறுத்தால் அது நமது அரசியல் சுதந்திரத்தை விரைவில் கொன்று விடும். வெகுவிரைவில் இந்தச் சமத்துவமின்மை நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் இதனால் பாதிக்கப்படும் மக்கள், நமது நிர்ணய சபை, தியாகத்தாலும், கடின உழைப்பாலும் உருவாக்கியுள்ள அரசியல் சுதந்திரத்தை அடித்து நொறுக்கி விடுவர்” என்று கூறினார். முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும் அம்பேத்கர் கனவு கண்ட சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவ சனநாயகத்தை நம் மக்களுக்குத் தரமுடியவில்லை என்பதே யதார்த்தம்.
“சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்த பின்னர்தான் நாட்டுக்கு விடுதலை வேண்டும். அது உறுதி செய்யப்படும் வரை ஆங்கிலேயரே ஆளட்டும்” என்ற தந்தை பெரியார் போன்றவர்களின் நிலைப்பாட்டை அன்று பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்கள், அரசியல் சுதந்திரம் கிடைத்துவிட்டால் சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவத்தை நாமே நம் மக்களுக்கு உருவாக்கித் தரமுடியும் என்று உறுதியாக நம்பினர். ‘கல்வி, வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு அதிகார அமைப்புகளில் அனைத்துச் சமூகத்தினரும் சமமாகப் பங்கேற்கும் ஏற்பாட்டை உறுதி செய்யாதவரை அரசியல் சுதந்திரத்தால் பயன் ஏதுமில்லை’ என்ற பெரியாரின் நிலைப்பாட்டில் நியாயம் உள்ளது என்பதை இன்று நம்மில் பலர் ஏற்றுக்கொள்கிறோம்.
சமத்துவமான சமூகத்தைக் கட்டமைக்க இந்தியாவின் ஒவ்வோர் அரசியல் இயக்கத்தினரும் தங்களால் இயன்ற முயற்சிகளை முன்னெடுத்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நேருவின் அரசு தனது கொள்கை ‘சனநாயக சோசலிசம்’ என்று அறிவித்தது. பெரும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டி ‘பசுமைப் புரட்சி’ மற்றும் ‘வெண்மைப் புரட்சி’ என்று அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிகோலியது. பொதுவுடைமைக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக இடைவிடாமல் போராடினார்கள். கல்வி மற்றும் அரசு வேலைகளில் பிராமணர் மற்றும் இதர முன்னேறிய சமூகத்தினருக்குக் கிடைத்த வாய்ப்புகளைப்போல இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கான போராட்டங்களைத் திராவிடக் கட்சிகள் முன்னெடுத்தன.
தேர்தலில் போட்டியிடாத முற்போக்கு சமூக இயக்கங்களும், தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாத அரசியல் கட்சிகளும் சாதி ஒழிப்பைப் பற்றித் தொடர்ந்து பேசி வந்தாலும், வெகுசன அரசியல் கட்சிகளால் சாதிகளைத் தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் முடியவில்லை. சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் சாதியே ஊடாடுவதால், சாதியக் கட்டமைப்புகளை மீறி தேர்தல் வெற்றிகள் சாத்தியப்படவில்லை.
அரசியல் கட்சிகளில் பல்வேறு சாதிகளைச் சார்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிய காலங்கள் கடந்து, தற்போது ஒவ்வொரு சாதிக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சாதிக்கட்சிகளையே’ தங்களது கூட்டணியில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்று வெகுசனக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக மோடி அரசு மத்தியிலே அதிகாரத்திற்கு வந்த பின்னர் அனைத்துத் தேர்தல் பிரச்சாரங்களும் சாதி, மதப் பிரிவினைகளைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டன.
பெரும்பாலான மக்கள் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், சாதிப் பெருமை அல்லது இனப்பற்று உள்ளவர்களாகவும் இருப்பதால் அந்த உணர்வுகளை வெறியாக வளர்த்தெடுத்தப்பதன் மூலம் வாக்குவங்கிகளை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் வலதுசாரி பாசிச அரசியல் கட்சிகளின் தேர்தல் யுக்தியாக இருந்து வருகிறது. கொள்கை சார்ந்து இலட்சிய நோக்குடன் செயல்படும் அரசியல் கட்சிகளால், சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்திச் செயல்படும் கட்சிகளோடு தேர்தல் களத்தில் போட்டியிட்டு வெற்றிபெற இயலவில்லை. சாதி, மத மோதல்கள் இந்தியச் சமூகங்களுக்குப் புதிதல்ல என்றாலும், காலங் காலமாக அத்தகைய பிரிவினைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணப்பட்டாலும் இன்று சாதி-மத அரசியலுக்கு ஏற்பட்டுள்ள ‘புதிய பரிணாமம்’ நம்மைக் கவலையடையச்செய்கிறது.
நமது சமூகக் கட்டமைப்பின் அரசியல், பொருளாதார, கலாச்சார, அரசு நிர்வாகம் உள்பட அனைத்துக் கூறுகளும் இந்தச் சாதி, மத அரசியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அடையாள அரசியலுக்குப் பின்னால் இருந்து இயக்குகின்ற ‘ஆரிய - முதலாளித்துவ’ சக்திகளின் பாவக்கூட்டணியை அம்பலப்படுத்தி தோலுரிக்காமல் சனநாயகச் சக்திகள் களத்தில் வெற்றி பெறமுடியாது. தலித்துகள், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று நாட்டின் 95% மக்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய அதிகாரத்தையும், செல்வத்தையும், முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் ஒரு மிகச் சிறிய கூட்டம் அபகரித்துக்கொள்வதற்கான தந்திரமே இந்தச் சாதி, மத அரசியல் என்பதைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புரியவைப்பதே நமது முழுநேர அரசியல் செயல்பாடாக இருக்க வேண்டும். தங்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களைத் தோற்கடிக்கவே தங்களது எதிரிகளோடு சேர்ந்து நின்று போரிடுகிறோம் என்கிற புரிதலே இல்லாமல், களத்தில் காவு கொடுக்கப்படும் மக்களிடம் அவர்களது உண்மையான எதிரி யார் என்று சொல்ல வேண்டும். அதன் முதல் கட்டமாக மதமயமாக்கப்பட்டு, சாதி வெறியூட்டப்பட்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்த ‘பாசிச வகுப்புவாத வெறுப்பு அரசியல்’ மூலம் அவர்கள் எவற்றையெல்லாம் இழந்து நிற்கின்றனர் என்பதை ஆதாரங்களோடு உணர்த்தவேண்டும்.
ஏன் அவர்களுடைய கைகளில் மட்டும் தேன் கிண்ணங்கள்? ஏன் நம் மக்களிடம் மட்டும் பிச்சைப் பாத்திரங்கள்? எப்படி அவர்கள் மட்டுமே அனைத்து அதிகார நாற்காலிகளில் எப்போதும் அமர்ந்திருக்கிறார்கள்? நாம் ஏன் எப்போதுமே ‘அவர்களுக்கு’ ஏவல் செய்கின்றவர்களாகவே இருக்கிறோம்? சுதந்திரமும், சுதந்திரம் தந்துள்ள முன்னேற்றமும் வளர்ச்சியும் அவர்களுக்கு மட்டும் தானா? அதில் நமக்குப் பங்கில்லையா? வாக்களிக்க மட்டுமே வாழ்பவர்கள் நாம்! அதிகாரத்தில் இருந்து ஆட்சி செய்வது அவர்கள் மட்டுமே என்ற, நம் தலையில் விழுந்துள்ள சாபத்திற்குத் தீர்வே இல்லையா? என்ற கேள்விகளை நம் இளைஞர்களைக் கேட்கச் செய்வதன் மூலமே அம்பேத்கர் கனவு கண்ட சமூக, பொருளாதார சனநாயகத்தை வசப்படுத்த முடியும்.
இந்தியாவில் மட்டும்தான் சாதியும், வர்க்கமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கிடப்பதை அறிய வேண்டும். அது எப்படிப் பணக்காரர்களாக இருப்பவர்களில் மிகப்பெரும்பாலோர் ‘அவர்களாகவே’ இருக்கிறார்கள்? ஏன் ஏழைகளில் அநேகமாக எல்லாரும் ‘நம்மவர்களாகவே’ இருக்கிறார்கள்? எப்படி 125 நாடுகளிலே மிக உயர்ந்த பதவியான நம் நாட்டின் தூதர்களாகப் பணியாற்றும் அனைவரும் ‘அவர்களாகவே’ இருக்கிறார்கள்? ஆனால், இந்த நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் தெருக்களைச் சுத்தம் செய்யவும், மலம் அள்ளவும், சாக்கடை நீரை அப்புறப்படுத்தவும், சுடுகாட்டில் பிணம் எரிக்கவும் பணியமர்த்தப்பட்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களில் 92% தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களாக இருக்கிறார்களே ஏன்? (பட்டியல் இனங்கள் 68.9%, 14.7% பிற்படுத்தப்பட்டோர், 8.3% பழங்குடியினர், 8% மற்றவர்கள்) உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் நீதியரசர்களாக இருக்கின்றவர்களில் 80%க்கு மேல் ஒரே சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கின்றார்களே, எப்படி? அதேநேரத்தில் இந்தியச் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே பல்லாண்டு காலம் அடைபட்டுக் கிடக்கின்றவர்களில் அநேகமாக அனைவரும் தலித்துகளாகவும், பழங்குடியினராகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சிறுபான்மையினராகவும் இருப்பதன் பின்னணி என்ன?
ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், தொழிற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்துப் பேராசிரியர்களும் (90%) அனைத்து மாணவர்களும் (85%) ‘அவர்களாகவே’ இருக்கிறார்களே! அது இயற்கையாகவே நடந்ததா? அங்கே தப்பித் தவறி இடம் கிடைத்துச் சேர்கின்ற ‘அவர்களல்லாத’ மாணவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்களே, ஏன்? இதுபோன்ற கேள்விகளெல்லாம் நியாயமானவைகள்தானே!
இராகுல் காந்தி ஒரு கேள்வி கேட்டார். ‘பல்வேறு இடங்களில் இந்திய அழகியைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்துகின்ற அழகிப்போட்டிகளில் ஏன் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சார்ந்த பெண்கள் ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கப்படுவதில்லை?’ என்று. அவர்களது பெண்கள் அலங்காரப் பதுமைகளாக, அகில உலகமும் கொண்டாடக்கூடிய அழகின் அவதாரங்களாக நாகரிக தாழ்வாரங்களில் பவனி வரும் அதேவேளையில், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு அனாதைப் பிணங்களாய் பிணவறைகளில் கிடத்தப்பட்டிருக்கும் பெண்களில் அநேகர் ‘நமது பெண்களாக’ இருக்கிறார்களே... அது எப்படி?
சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க ஏன் அவர்கள் தயங்குகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? அது நடத்தப்பட்டால்தான் நம்மில் யாருக்கெல்லாம் எதுவெல்லாம், எப்படியெல்லாம், எவ்வாறெல்லாம், எங்கேயெல்லாம் மறுக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும். இதைத்தான் தந்தை பெரியார் அன்றே கூறினார்: “சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும், பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்புகள் பெற்ற குழந்தைகளே” என்று. இந்தச் சமூக அமைப்பை மாற்றி அமைப்போம்! உடைத்தெறிவோம்! அதன் துவக்கமே ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு!’
டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தார். நீண்ட சட்டப் போருக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்தார் கெஜ்ரிவால். மக்கள் தன்னை நேர்மையானவர் எனச் சான்றிதழ் வழங்கும் வரை நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்து, முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் செப்டம்பர் 17 -ஆம் தேதி ‘ஆம் ஆத்மி’ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிஷி பெயரை முதலமைச்சர் தேர்வுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். அதிஷி ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பர் 21 -ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்தியாவில் தற்போது இரண்டு பெண் முதலமைச்சர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோர் வரிசையில் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் பட்டியலில் அதிஷி இணைந்துள்ளார்.
இவர் ஜூன் 8, 1981 அன்று பிறந்தவர். அதிஷி மர்லேனா என்பதில் மர்லேனா என்பது மார்க்ஸ் மற்றும் லெனின் பெயர்களின் கலவையாகும். இவரது பெற்றோர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர். இவரது கல்விப் பயணம் டெல்லியில் தொடங்கியது, அங்கு பூசா சாலையில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி கல்வியை முடித்தார். 2001-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை மேம்படுத்தினார். 2003 -ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதிஷியின் அரசியல் வாழ்க்கை ஜனவரி 2013 -இல் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் சேர்ந்தபோது தொடங்கியது. 2015 -ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடந்த ஜல் சத்தியாக்கிரகத்தின்போது இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெற்றது. அங்கு போராட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த சட்ட சவால்களின்போது ஆம் ஆத்மி தலைவர் அலோக் அகர்வாலை ஆதரித்தார் அதிஷி.
2019 மக்களவைத் தேர்தலுக்காக அதிஷி டெல்லியின் கிழக்கு மக்களவைப் பொறுப்பாளராகவும் வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் பா.ச.க. வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2020 டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிட்டவர், பா.ச.க. வேட்பாளர் தரம்பீர் சிங்கை 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி டெல்லி அரசில் அவரை முக்கியத் தலைவராக்கியது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அதிஷி டெல்லி அரசாங்கத்தில் அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். 2022-23 காலகட்டத்தில் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் கல்வி உள்ளிட்ட பல குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் இராஜினாமா செய்த பிறகு காலியாக இருந்த பொறுப்புகளைக் கூடுதலாகக் கவனித்தார். நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் நீர் போன்ற 14 முக்கிய இலாகாக்களைக் கையாண்டார். இந்த விரிவான பொறுப்பு, அமைச்சரவையில் இவர் எவ்வளவு ஈடுபாடு காட்டியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை அதிகரிப்பதில் பெரிய பங்கையாற்றியுள்ளார் அதிஷி. அரசு ஆசிரியர்களின் பயிற்சியை மேம்படுத்த முயற்சித்துள்ளார், இதனால் ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க சிறந்த நிலையில் உள்ளனர். கற்பவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் வழங்கத் திட்டமிட்டார். இது மாணவர்களுக்கான சீருடைகளின் செலவுகளைக் குறைக்க பெரிதும் உதவியது. எனவே, ஏழை எளிய மாணக்கர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது. மாணவர்களின் நுண்ணறிவை மேம்படுத்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அதிஷி. அரசாங்கத்திற்கு நெருக்கடி வந்தபோது திறமையோடு கையாண்டார். கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். டெல்லியில் தண்ணீர் நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரங்களுக்குத் தலைமை தாங்கினார்.
மர்லேனா ஒரு கல்வி பின்னணியில் இருந்து டெல்லியின் முதல்வராக ஆனது வரையிலான பயணம், எளிமையான பயணமோ, இலகுவான பயணமோ கிடையாது. ஏழை, எளிய இந்தியக் குடிமகனின் / குடிமகளின் உரிமையை நிலைநாட்ட வந்த பயணம். பணமும் அதிகாரமும் நிறைந்த இந்திய அரசியலில் எளிமையான பின்னணியிலிருந்து வந்து உயர்ந்திருக்கும் டெல்லி முதல்வர் அதிஷி அவர்களின் ஆளுமை மிகப்பெரியது.
“ஒரு பொம்மை நபரை தற்காலிக டெல்லி முதல்வராக்க அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். அவருக்குத் தனது கட்சிமீது நம்பிக்கை இல்லை, அதனால்தான் கட்சியில் தன்னை விட பலவீனமான ஒருவரை முதல்வராக்க விரும்புகிறார்” என்று பா.ச.க. தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். பா.ச.க. செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ண அகர்வால், “கெஜ்ரிவாலின் சொந்தக் கட்சிக்குள்ளேயே அவரது வாரிசான அதிஷி ஒரு தீவிர வேட்பாளராகக் கருதப்படுவதைவிட ஒரு ‘டம்மி’ என்று கருதப்படுகிறார். டம்மி முதல்வர் அதிஷியை நான் வாழ்த்துகிறேன். இதற்குப் பிறகும் டெல்லியில் நிலைமை மாறாது; ஊழல் உச்சத்தில் இருக்கும். முன்கூட்டியே தேர்தலைப் பரிந்துரைக்குமாறு அதிஷிக்கு நான் சவால் விடுக்கிறேன்” என்று பா.ச.க. தலைவர் ஹரீஷ் குரானா தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அதிஷி தன்னுடைய செயல்களால் பதில் அளிப்பாரா? காலம் பதில் சொல்லட்டும்.
தான் காதலித்து மணந்த பெண்ணை, அவள் பிறந்த மூன்றாம் நாளிலேயே பார்த்த ஆண் இவர் என்றால் நம்புவீர்களா? ஜிம்மி கார்ட்டரின் தாய், இந்தப் பெண்ணின் தாய் பிரசவ வேதனையில் துடித்தபோது உடனிருந்து உதவி செய்து, எக்குறையுமின்றி குழந்தை பிறக்கச் செய்தவர். குழந்தை பிறந்த மூன்றாம் நாள், தன் மூன்று வயது மகன் ஜிம்மியை அழைத்துக் கொண்டு தாயும் பிள்ளையும் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்க அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது ஜிம்மி ரோஸலினை முதன்முறையாகப் பார்த்தார்.
இருவரும் வளர்ந்து இளமை எய்தியபோது, ஜிம்மியின் தங்கை ரூத்தும், ரோஸலினும் நெருங்கிய சிநேகிதிகளாக இருந்ததால் ரோஸலின் அடிக்கடி ஜிம்மியின் வீட்டுக்கு வந்தார். ரூத்தின் அறையில் இருந்த ஜிம்மியின் புகைப்படத்தைப் பார்த்ததுமே காதல் அரும்பி விட்டது.
ஜிம்மிக்கு 21 வயதும், ரோஸலினுக்கு 19 வயதும் ஆனபோது அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னாளில், ஜிம்மி கார்ட்டர் அரசியலில் நுழைந்து 1976-இல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக ஆனார். நாட்டு மக்களின் மனங்களை வென்ற மிக நல்ல மனிதரான ஜிம்மி கார்ட்டர் நான்காண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் தோற்று சொந்த ஊருக்குத் திரும்பினாலும், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பல்வேறு நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
அன்பு சிறிதும் குறையாத அதிசயத் தம்பதிகளாய் அவர்கள் இருந்தனர். அவர்களின் 77 ஆண்டுத் திருமண வாழ்வு 2023, நவம்பர் 19 அன்று ரோஸலின் இறந்தபோதுதான் முடிந்தது.
தனி மனிதராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமெரிக்க அதிபராக அவர் செய்து முடித்த சாதனைகளிலே மிகச்சிறந்த சாதனை எது என்று யார் கேட்டாலும், தனது திருமண வாழ்வே தனது மிகப்பெரிய சாதனை என்று சொன்னவர் ஜிம்மி கார்ட்டர்.
இருவரும் சேர்ந்து எங்கு சென்றாலும் அவர்களைப் பார்த்தவர்கள் எல்லாம், ‘என்ன ஜோடிப் பொருத்தம்!’ என்று சொல்லி வியந்தனர்.
பொருத்தம் என்றால் சமயம், சாதி, சமூக அந்தஸ்து, வயது, உயரம், நிறம் ஆகியவற்றைச் சார்ந்தது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இவற்றில் எல்லாம் பொருத்தம் இருந்தாலும், திருமண வாழ்வில் தோற்றுப் போனவர்களை நாம் அறிந்திருப்போம். இவற்றில் உள்ள பொருத்தம் திருமணம் வெற்றி பெற ஓரளவுக்குத்தான் உதவ முடியும்.
திருமணம் வெற்றிபெற இன்றியமையாதது மற்றொரு பொருத்தம். அது மனப் பொருத்தம். இந்த மனப் பொருத்தம் சிறிதும் இல்லாமல் மற்றக் காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொள்வோர் அன்றாடம் சண்டை சச்சரவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவை ஏற்படுத்துகிற மன உளைச்சல் மணமுறிவுக்கு இட்டுச் செல்லக்கூடும்.
நீதிமன்றம் தருகிற மணமுறிவைத் தேடாவிட்டாலும், மனம் முறிந்து வாழும் இணையர் பலர். எப்போதும் தங்கியிருக்கும் மனக் கசப்போடும், விரக்தியோடும் அவர்கள் காலம் தள்ளுகின்றனர். ‘இனிமேல் இந்தத் திருமணத்தில் எனக்கென்று எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. குழந்தைகளுக்காக இந்த நபரை விட்டுப் பிரிந்து போகாமல் இதே வீட்டில் இருப்பேன்’ என்று தீர்மானிப்போர் இருக்கிறார்கள். ‘என்மீது அக்கறை கொண்டோர் யாருமில்லை. பெற்றோர், உடன்பிறந்தோர் இருந்தாலும் இந்தத் திருமணத்தை முறித்துக் கொண்டு அவர்களிடம் போனால், என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’, ‘யார் இந்த வயதில் எனக்கு வேலை தருவார்கள்?’, ‘நான் எப்படிப் பிழைப்பேன்?’ என்று பல்வேறு காரணங்களுக்காக மண முறிவு தேடாவிட்டாலும், முறிந்த மனத்தோடு கசந்த வாழ்வு வாழ்வோர் பலர்.
இந்த இரண்டு முறிவுகளையும் தவிர்க்க திருமணத்திற்கு முன் இளையோரும், அவர்களைச் சார்ந்தோரும் மற்றொரு முக்கியமான பொருத்தம் இருக்கிறதா என்று தேட வேண்டும். அதுதான் மனப் பொருத்தம்.
மனப் பொருத்தம் எதைச் சார்ந்தது? இலட்சியங்கள் நமது வாழ்வின் இலக்குகளாக நாம் கருதுபவை. இவற்றை அடைவதே நமது வாழ்வின் குறிக்கோள் என நாம் எண்ணுகிறோம். எனவே மனப் பொருத்தம் முதலில் இருவரது இலட்சியங்களைச் சார்ந்தது. ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், எவ்வளவு சொத்தும் பணமும் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்து, எல்லா வசதிகளோடு செல்வச் செழிப்பில் வாழ்வதே என் இலட்சியம்’ என ஆண் இருக்கலாம். அவனை மணந்து கொண்ட பெண், ‘எதுக்குங்க இவ்வளவு சொத்து? உங்களுக்கு நான். எனக்கு நீங்க. நமக்கு ரெண்டு குழந்தைங்க. அதனால ஒரு சிறிய வீடு, தேவைகளை நிறைவேற்ற கொஞ்சம் பணம். இது போதாதா? ஏன் பணம், பணம்னு ஓடியோடி ஓய்ஞ்சு போகணும்? இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியா இருப்போமே!’ என்று நினைப்பவளாகப் பெண் இருந்தால் இவர்களுக்கிடையே மனப் பொருத்தம் இல்லை.
அடுத்து விழுமியங்கள். இவை நாம் எந்நாளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு முக்கியமான கோட்பாடுகள். எந்த ஒரு செயலும் உகந்ததா, இல்லையா என்பதை நமது விழுமியங்களின் அடிப்படையில்தான் நாம் தீர்மானிக்கிறோம்.
ஆணுக்கு நேர்மை ஒரு முக்கியமான விழுமியம் என்றால், ஒருபோதும் கையூட்டு தேட மாட் டான். வலிய வந்து பிறர் கொடுத்தாலும் இலஞ்சம் வாங்க மாட்டான். பெண்ணுக்கு நேர்மை ஒரு விழுமியமே இல்லை என்றால், இத்தகைய கணவனைப் பற்றி என்ன நினைப்பாள்? ‘இப்படிப் பிழைக்கத் தெரியாத ஓர் ஆளைப் போய்க் கல்யாணம் பண்ணியிருக்கேனே! இந்த ஆளோட தம்பி வீட்டைப் போய்ப் பார்த்துட்டு வந்து பேசுங்க. அரண்மனை மாதிரி வீடு கட்டியிருக்கான். எப்படிக் கட்டினான்? அவ்வளவும் கிம்பளம், இலஞ்சம்’ என்று பொருமிக் கொண்டே கணவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரை ஏளனம் பேசி, இகழ்ந்துகொண்டே இருப்பாள்.
மனப் பொருத்தத்தின் மற்றோர் அம்சம் உணர்வுகள் சார்ந்தது. உணர்வுகளில் பொருத்தம் இருந்தால் ஒரு நிகழ்வு அல்லது ஓர் அனுபவம் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். உணர்வுப் பொருத்தம் இல்லாத இணையருக்கு ஒரே நிகழ்வு முற்றிலும் எதிரான உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
ஒரே நிகழ்ச்சி, ஒரே அனுபவம் இணையர் இருவரில் மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றுவிப்பதற்கு ஒரு காரணம் அவர்களின் அடிப்படைக் குணநலன்கள் மாறுபட்டதாக இருக்கலாம். ஆண் சின்னச் சின்னக் காரியங்களுக்குக் கூட எரிச்சலும் கோபமும் கொள்கிறவன்; பெண் நல்லதே நடக்கும் என்று நம்பி பொறுமையாய், அமைதியாய் இருப்பவள் என்று வைத்துக்கொள்வோம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கார் ஓரிடத்திலேயே பதினைந்து நிமிடம் நிற்கிறது. கணவன் எரிச்சலடைந்து அனைவரையும் திட்டத் தொடங்குகிறான். மனைவி, “ஏங்க, நீங்கள் எரிச்சல்பட்டு இப்போ என்ன ஆகப் போகுது? இந்தாங்க. இந்தப் பென்ட்ரைவைப் போடுங்க. எல்லாம் அருமையான பாட்டு. கேட்டிருக்கவேமாட்டீங்க. பாட்டு கேட்குறதுக்குக் கடவுள் கொடுத்த வாய்ப்புன்னு நினைச்சுட்டு அமைதியா கேளுங்க. பாட்டு முடியறதுக்கு முன்னாடி போக்குவரத்து சரியாயிடும்” என்கிறாள்.
மற்றொரு வீட்டில் பெண் எல்லாவற்றிற்கும் பதறுபவள், ஆண் நிதானமிழக்காதவன் என்றால் என்ன நிகழும்? மகளுக்கு உடல் நலமில்லையென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். “ஏங்க, கொஞ்சம் வேகமா ஓட்டமாட்டீங்களா? என் பிள்ளைக்கு என்ன ஆகப் போகுதோ?’ என்று புலம்பத் தொடங்க, கணவன் என்ன சொல்லுவான்? “இங்க பாரு, நம்ம பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது. நம்மளைக் கடவுள் கைவிட மாட்டார். இப்படிக் கதறிக் கூப்பாடுபோட்டு, ஆஸ்பத்திரியில ஒரு கலவரத்தை ஏற்படுத்திடாதே!”
இப்படி அடிப்படைக் குணநலன்கள் மாறுபட்டிருப்பதால் உணர்வுகள் வேறுபடுகின்றன என்றால் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவரை நெறிப்படுத்த, அமைதிப்படுத்த மற்றொருவர் உதவலாம். ஆனால், உணர்வுகள் வேறுபடுவதற்கு விழுமியப் பொருத்தம் இல்லை என்றால், அது ஆபத்தானது. ‘வல்லுறவு என்பது பெண்ணுக்கெதிரான பெருங்குற்றம்’ என்று பெண்ணும், ‘இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை’ என்று ஆணும் நினைத்தால் அவர்களின் விழுமியங்களில், அறநெறிக் கண்ணோட்டங்களில் பெரும் வேறுபாடு உள்ளது எனப் பொருள். இதனால் அடுத்தவரின் மீதுள்ள மதிப்பும் அன்பும் குறைந்துகொண்டே வந்து, மனதளவில் அவரை விட்டு விலகத் தொடங்குவார்கள்.
மனப் பொருத்தத்தின் நான்காவது அம்சம் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது. மனப் பொருத்தம் இருந்தால் ஆண், பெண் இருவருக்கும் அதே நல்ல பழக்கங்கள் இருக்கும். ‘அவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னிடம் இல்லையே, அதை நானும் வளர்த்துக்கொள்ள வேண்டாமா’ என்ற முனைப்பு வரும். மனப் பொருத்தம் இல்லாத இணையரின் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும், முற்றிலும் மாறுபட்ட பழக்கங்களால் தனித்தனி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பர்.
இதனால்தான் திருமண வாழ்விற்குத் துணை அல்லது இணை தேடும் இளையோரும், அவர்களைச் சார்ந்தோரும் மனப் பொருத்தம் இருக்கிறதா எனத் தேடிக் காண வேண்டும். உயரம், நிறம், எடை இவை சார்ந்த பொருத்தத்தைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம். ஆனால், மனப் பொருத்தத்தைக் கணிப்பது எளிதல்ல. அவசரப்பட்டுச் செய்கிற திருமணங்களில் இதைக் கணிக்க வாய்ப்பே இல்லை. ஆண், பெண் இருவரின் பேச்சு, செயல்கள், பழக்கங்கள் இவற்றைக் கவனமாகப் பார்த்துதான் மனப் பொருத்தத்தைக் கணிக்க முடியும்.
கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்ன தெரியுமா? திருமணத்திற்கு முன்பு எப்படிப் பொருத்தம் பார்க்க வேண்டுமோ அப்படித் திருமணத்திற்குப் பிறகு பொருத்தம் வளர்க்க வேண்டும். ‘இவளது இந்த இலட்சியம் எனது இலட்சியமாகவும் மாறினால் என்ன? இவரது இந்த நல்ல விழுமியம், என் விழுமியமாக ஆனாலென்ன? இவரது இந்த நல்ல பழக்கம் எனக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று முயன்று, முனைந்து மற்றவரைப் போல் மாறுவதன் மூலமே மனப் பொருத்தத்தை வளர்க்க முடியும்.
‘எனது இலட்சியங்கள், விழுமியங்கள், பழக்க வழக்கங்களில் எந்தக் குறையும் இல்லை’ என்ற எண்ணத்தை இருவரும் கைவிட்டு, மற்றவரிடம் உள்ள நல்லவற்றைத் தானும் அடைய முயன்று கணவருக்கேற்றவராய் மனைவியும், மனைவிக்கேற்றவராய் கணவனும் நாளுக்கு நாள் மாறுவது வெற்றி பெறும் திருமணங்களில் நிகழும் மகிழ்ச்சியான அதிசயம்.
ஜிம்மி கார்ட்டர்-ரோஸலினைப் போன்று உலகெங்கும் பல தம்பதிகள் இருக்கிறார்கள். அவர்களின் திருமணம் நிலைப்பதற்கும், வாழ்வின் வலிகளையும் சுமைகளையும் தாண்டி அவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதற்கும் காரணம் அவர்களின் மனப் பொருத்தம்தான்.
(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்)