news
சிறப்புக்கட்டுரை
சமயச் சார்பின்மைக்கு நேர்ந்த சோகம்!

அண்மையில் அக்டோபர் 22 அன்று வெளிவந்த நாளிதழ்கள் சமயச் சார்பின்மை தொடர்பான மூன்று செய்திகளைத் தந்துள்ளன. மூன்றினுள் சமயச் சார்பின்மை பற்றிய நம்பிக்கை தரும் செய்தியும் உண்டு; அவநம்பிக்கையைத் தக்கவைக்கும் செய்தியும் உண்டு. ‘சமயச் சார்பின்மைஎன்பது வெறும் முழக்கமல்ல; சமயச் சார்பின்மை சமயச் சார்பற்ற சனநாயகச் சக்திகளின் தேர்தல் நேரத்து அறிவிப்புகளில் ஒன்றுமல்ல.

விடுதலை பெற்ற இந்தியா இரு நாடுகளாகப் (Two nations) பிரிக்கப்பட்ட நிலையிலும், இரு நாடுகளில் ஒன்று மத அடிப்படையில் உருவான போதும், இந்திய அரசியல் நிர்ணய சபைஅரசமைப்பின் மூலம்இந்தியாவை இறையாண்மையோடு கூடிய சனநாயகக் குடியரசாகவே அறிவித்தது. ஆம்! அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சமத்துவம் (Socialism) என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை என்பதும் உண்மைதான். இந்திய அரசமைப்பின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் சமயச் சார்பின்மை (Secular), சமத்துவம் (Socialism) என்ற இரண்டு சொற்களும் இணைக்கப்பட்டன.

விடுதலை பெற்ற இந்தியா சந்திக்கவிருக்கும் சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?” என்ற வினாவைப் பண்டித நேருவிடம் முன்வைத்தபோது அவர், “ஒரு சமயம் சார்ந்த நாட்டில் சமயச் சார்பற்ற சமூகத்தைக் கட்டுவதே (create a sender state in a religious society) என்று பதிலளித்தார். இச்சவாலைக் கையிலெடுத்து, சமயச் சார்பின்மையை வலிந்து நிலைநிறுத்தியவர்களில் முதன்மையானவருள் பண்டித நேரு என்றும் போற்றுதற்குரியவர். இரு வேறுபட்ட முரண்பட்ட கொள்கைகளில் வளர்ந்த தேசிய இயக்கத்துள் ஒன்றான இந்து தேசியர்கள் சமயச் சார்பின்மையையும், சமத்துவத்தையும் எப்போதுமே ஏற்காதவர்கள். இந்திய அரசியல் சாசனம் தந்த சமயச் சார்பின்மையைபோலி மதச்சார்பின்மை (Psecedo Secular) என்று கேலி செய்பவர்கள்; சமத்துவம் இவர்களின் முதல் எதிரி. ஆர்.எஸ்.எஸ். என்ற மூலஅமைப்பும், அதன் துணைப் பரிவாரங்களும் இவைகளோடு ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் முன்னணியான அன்றைய பாரதிய சனசங்கமும், இன்றைய பாரதிய சனதா கட்சியும் என்ன கூறி வந்தன?

நாங்கள் முழுப் பெரும்பான்மை அடையும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம்என்ற பாரதிய சனதா கட்சி, வாஜ்பாய் தலைமையில் ஆட்சியேற்றபோது, தாம் ஏற்கெனவே உறுதியளித்தபடி, அரசமைப்பை மாற்றியமைக்க நீதியரசர் வெங்கட செல்லையா தலைமையில் குழுவொன்று அமைத்தது. இக்காலத்தில் நல்வாய்ப்பாக இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு. கே.ஆர். நாராயணன். இக்குழு உருவாக்கத்திற்கு அனுமதியளித்த நாராயணன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றக்கூடாது என்பதில் உறுதி காட்டினார். இக்குழுவும் தன் பரிந்துரையை அடிப்படைக் கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யாமலேயே சமர்ப்பித்தது. ஆனால், இன்று அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலேறி ஆண்டுகள் பத்தான நிலையில், அரசமைப்பின் அடிப்படைக்கூறுகளை நாளும் சிதைத்து வருதலை இந்தியா பார்த்து வருகிறது.

இந்திய அரசமைப்பின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் ஏற்கெனவே இடம்பெறா நிலையில் இவ்வார்த்தைகள் அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் திரு. சுப்பிரமணிய சுவாமி. இவ்விரு கோட்பாடுகளும் மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதால் எதிர்த்த இவர்கள், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அரசியல் சாசன முகப்புரையில் இடம்பெறாமையால் நீக்கப்பெற வேண்டும் என்று பொய்க்காரணம் காட்டி வழக்காடினர். உச்ச நீதிமன்றம் இங்கும் சரியாகவே தீர்ப்பளித்தது.

சமயச் சார்பின்மை இந்திய அரசமைப்பின் மறுக்க முடியா அடிப்படைக் கூறுமீண்டும் மதச் சார்பின்மை எப்போதுமே அரசமைப்பின் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சமத்துவம்சகோதரத்துவம் போலவே சமயச் சார்பின்மையும் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சோசலிசம் என்ற கொள்கையை மேலைநாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தல் தவறு என்றும், சமவாய்ப்பு மற்றும் சமூக வளங்களைச் சமமாகப் பகிர்தலே இந்திய சோசலிசம் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் சனநாயகச் சக்திகள் பெருமகிழ்வு கொள்ளலாம். 2014-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஆட்சி பாரதிய சனதா வசம் சென்றபோது, ஏற்கெனவே எழுந்த அரசமைப்பின் முகப்புரையின் சாராம்சம் குறித்த அச்சம் மக்கள் சிலரிடம் இருந்தது. அவ்வச்சத்தை உண்மையாக்கும் வகையில் அவ்வாண்டு நடைபெற்ற குடியரசு விழாவுக்கான அரசின் அழைப்பிதழில், அரசமைப்பின் பிரதான கூறுகளான சமயச் சார்பின்மையும், சமத்துவமும் விடப்பட்டிருந்தன என்று சொல்வதைக் காட்டிலும், திட்டமிட்டுக் களவாடப்பட்டன என்றே சொல்லலாம். திட்டமிட்டு நடத்தப்பட்ட இக்களவாடலுக்குக் காரணமான அரசு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்மீது கைவைத்து உறுதி மொழியேற்று, பதவியேற்கும் சங்கப் பரிவாரங்கள், அரசமைப்பு முகப்புரையின் கூறுகள் அனைத்தையும் நாளும் மீறிக்கொண்டே அரசியல் அமைப்பு தினக் கொண்டாட்டத்தை அறிவிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை, தான் வேதமாகப் போற்றுவதாக மோடி கூறுகிறார். மதவாதப் பாரதிய சனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சனநாயகமும், அரசமைப்பும் பறிபோய்விடும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியது கண்டு, மோடி கோபம் கொண்டார். எதிர்க்கட்சிகளைக் கண்டபடி வசைபாடி கேலி செய்தார்.

சமயச் சார்பின்மை என்றால் என்ன?

சமயச் சார்பின்மை என்பது சமயத்தை மறுப்ப தல்ல; சமயம் முன்வைக்கும் கடவுளையும் மறுப்ப தல்ல! மாறாக, பன்முகச் சமயங்களை உடைய ஒரு நாட்டில் சமயங்களின் சமத்துவத்தை மதிப்பது மத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தாமல், பெரிய சமயங்களையும் சிறிய எண்ணிக்கையிலான சமயங்களையும் சமமாக மதிப்பது

மதச்சுதந்திரம் இங்குப் போற்றப்படும் உரிமையுள் மிகப்பெரிது. மதத்தைத் தழுவவும், தழுவிய மதத்தைக் கடைப்பிடிக்கவும், கடைப்பிடிக்கும் மதத்தைப் பரப்புரை செய்யவும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதேவேளை, இயங்கும் மதங்களுக்கும், ஆளும் அரசுக்கும் எத்தொடர்பும் இல்லை. மதம் அரசின் கொள்கையை வகுக்க முடியாது. சனநாயக அரசின் நிறுவனங்கள் எவற்றிற்கும் மதக்கொள்கைகள் ஆதாரமாக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

நான் சார்ந்த மதத்தை உளமார மதிக்கிறேன். என் மதத்தைக் காக்கும் வகையில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அரசுக்கும், இந்த நம்பிக்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அரசு குடிமக்களின் சமயச் சார்பற்ற நிலைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நலவாழ்வு, ஆரோக்கியம், சமூகத் தொடர்பு, வெளியுறவு என்பனவற்றில் அரசு கவனம் செலுத்தட்டும். என் மதத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லைஎன்றார் மகாத்மா காந்தி.

1945 -ஆம் ஆண்டில் நேருவோ, “நான் முழுமையாக நம்புகிறேன். நாம் அமைக்கவிருக்கும் அரசு உறுதியாகச் சமயச் சார்பற்ற அரசாகத்தான் இருக்கும். அந்த அரசு இந்த நாட்டின் எந்தச் சமயங்களோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது. ஆனால், அனைத்துச் சமயங்களும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்என்றார். தொடர்ந்து சொல்கிறார்... “சமயச் சார்பற்ற அரசு பெரும்பான்மை சமூகம்மீது வைக்கப்பெறும் ஒரு நம்பிக்கை என்பது பெரும்பான்மை சமூகம் மதச் சிறுபான்மையினரிடம் கரிசனையோடும் பரிவோடும் நடந்துகொள்வதில் இருக்கிறதுஎன்றார்.

மத நம்பிக்கையுடைய காந்தி, தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கையுடையவராயினும், அரசு சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். சமயச் சார்பற்ற அரசையே வரவேற்கிறார். பண்டித நேரு, காந்தியின் உற்றச் சீடனாக இருந்தாரெனினும், நேரு கடவுள் பற்றிய சிந்தனையற்றவர் (Gnostics); நிலவும் எச்சமயத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாதவர். அவர் சமயச் சார்பின்மையின் தேவையை வலியுறுத்துவதோடு, சமயங்களிடையே நிலவ வேண்டிய நல்லுறவு பற்றியும் பேசுகிறார். “இந்தியா சமயச் சார்பற்ற அரசாக மாற்றம் பெறுகையில் கடவுளையோ, மதங்களின் ஏற்புடைமையையோ மறுக்கிறோம் என்று பொருளில்லை. இந்தியப் பாரம்பரியம் எப்போதுமே ஏதோ ஒரு சமயத்தை ஏற்கும் குணமுடையது என்றாலும், இந்தியச் சமூகம் ஏதோ ஓர் ஒற்றைச் சமய கட்டுப்பாட்டிற்குள் அடங்காது என்பதுதான் உண்மை. எந்தக் குறிப்பிட்ட சமயத்திற்கும் அரசு தனி அங்கீகாரம் வழங்கக்கூடாது. அம்மாதிரியான சிறப்பு அங்கீகாரம் என்பது சனநாயகத்தையே அவமதிப்பதாகும் என்பதோடு மானுட உரிமைகளுக்கும் எதிரான போக்காகும். குடிமகன் ஒருவன் தான் சார்ந்த சமய நம்பிக்கையால் பாகுபடுத்தப்படக் கூடாது. பொது வாழ்வில் அனைத்துக் குடிமக்களும் தம் நம்பிக்கையின் சிறப்பைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்என்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர், முஸ்லிம்களின் மதராசா கல்விக் கூடங்கள் குறித்த தீர்ப்பு, சமயச் சார்பற்ற அரசு மதச் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியது அதிர்ச்சியைத் தருகிறது. ‘மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீதான சட்ட ஒழுங்குகள் சமயச் சார்பின்மைக்கு எதிரானதல்லஎன்ற நீதியரசர் சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, உருவாக்கவிருக்கும் விளைவு என்னவாயிருக்கும்? சிறுபான்மையினர் தாம் விரும்பியவாறு கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவுமான உரிமைகள் மதச் சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் கருவியாகக் கருதப்படுகையில், உச்ச நீதிமன்றத்தின் இப்பார்வை என்ன மாதிரி பாதிப்பைத் தரும்? சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும்.

சமயச் சார்பின்மையின் சோக முடிவு

விடுதலை பெற்ற இந்தியா கட்டிக்காத்த சமயச் சார்பின்மை இன்று மதத்தின் பெயரால் ஆளப் பெறுகிறது. பெரும்பான்மை இல்லாத மதத்தின் பெயரால் மதப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்பட்டு, மதச் சிறுபான்மையினர் அரசியல், சமூக ரீதியாக ஒதுக்கப்படுகின்றனர். அரசமைப்பின் முகப்புரை இந்தியத் தேசியத் தத்துவம் (National Philosophyஎனக் கருதப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், தேசம், தேசப்பற்று என்ற பெயரில்ஜெய் ஸ்ரீராம், ‘பாரத மாத்தா கீ ஜேபோன்ற முழக்கங்களே தேசிய முழக்கங்களாகி விட்டது. வாழ்த்துச் சொற்கள் பகைச் சொற்களாக நிலவும் அவலம். இராம சென்ம பூமியில் இராமருக்கான கோவில் கட்டி முடிப்பது சமயச் சார்பற்ற அரசின் தேர்தல் நிலைப்பாடாக இருக்க முடியாது. மதச்சிறுபான்மையினரின் 400 ஆண்டுகால வரலாற்றையுடைய வழிபாட்டுத் தலம் ஒன்று மதம் சார்ந்தபக்தர்களால்தகர்க்கப்பட்டதோடு, மதப்பகையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வுஇந்து தேசிய எழுச்சிஎன்று கொண்டாடப்படவும், அழிவின்மீது கட்டி எழுப்பப்பட்ட கோவிலுக்கான மதரீதியான சடங்கினைச் சமயச் சார்பற்ற அரசின் பிரதமரே பிரதமப் பூசாரியாய் நின்று செய்து முடிப்பதன் பொருள் என்ன?

இந்திய அரசமைப்பினை வேதமெனப் புகழ்ந்த இந்தியப் பிரதமர், மதத்தால் வேறுபட்டவர்களைசுதேச விரோதிகள்என்று வசைபாடுகிறார். குடியுரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாயிருக்க, குடியுரிமை பெற்ற குடிமக்கள் மதரீதியாகப் பாகுபடுத்தப்படுகின்றனர்.

சமயச் சார்பின்மையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பிரிக்கவியலாப் பண்புகளாயிருந்தன. மதவாதம் தூக்கிப் பிடிக்கப்படும் இந்நாட்டில், நாம் கண்ட சமயச் சார்பின்மைசமயங்களைச் சமமாக நடத்துவதுஎன்ற உயரிய நோக்கம் சிதைந்து வருகிறது.

சமூகத்தால் இயங்கும் சமயம் என்ற நிலை மாறி, சமயத்தால் இந்தியச் சமூகம் என்ற நிலை ஏற்பட்டு வருவது இன்றைய சோகத்தின் உச்சம்.

news
சிறப்புக்கட்டுரை
நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் (1975-2025) – 08

நேற்று மாதிரி இன்றில்லை; ஆகவே...

 தாய்வார இதழின் ஆசிரியர் திரு. வலம்புரி ஜான் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ‘நம் வாழ்வுவார இதழின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர். 20.12.1981 அன்று 1981- இல் வெளிவந்த கத்தோலிக்க இதழ்கள் பற்றி நம் வாழ்வில் அவர் எழுதிய அற்புதமான படைப்பு!

நான் எழுதுகிறவன், எழுத்தை ஆள்கிறவன் அல்லன். என் ஆட்சி ஆரம்பிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. இப்போது எனது எழுதுகோல் தொட்டிலில் கிடக்கிறது. என்றாலும், அது ஒரு நாள் சிம்மாசனம் ஏறும்.

நான் ஏன் எழுதுகிறேன்? எழுதாமலிருக்க முடியவில்லை. ஆகவே எழுதுகிறேன். குயிலுக்குப் பாடாமல் இருக்க முடியவில்லையே! மயிலுக்கு ஆடாமலிருக்க முடியவில்லையே! அதைப் போல...

நான் எழுதிய கவிதை வெளிச்சத்தைப் பார்த்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நாகர்கோவிலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்ததென் ஒலிஎன்கிற மாத இதழிலேதான் அந்தக் கவிதை வெளிவந்திருக்கிறது. அது வியாகுல மாதாவைப் பற்றியது.

அது ஒரு செப்டம்பர் மாதம் என்பது மாத்திரம் நினைவிலிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதில் நினைவில் நிற்பதற்கு ஒன்றுமில்லை. பூவும், பிஞ்சுமான எனது நினைவுகளால் புலர்வான முற்றத்தில் நான் போட்ட முதல் கோலம் அது.

அப்போதெல்லாம்சர்வ வியாபிஎன்றொரு பத்திரிகை வரும். அதிலிருந்த விவகாரங்களிலிருந்து எனது நினைவுகள் எப்போதோ தப்பித்து விட்டன. ஒன்று மாத்திரம் நினைவிருக்கிறது. அது நமக்குள் நாமே படித்துக்கொள்கிற பத்திரிகை. மற்ற சமயத்தினர் அதை மறந்தும் பார்க்கமாட்டார்கள். காரணம், அதன் கிட்டப் பார்வைதான்.

மறைதிருவெனிஷ் அடிகளார்நடத்தியநற்கருணை வீரன்என்ற பத்திரிகையை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை நான் பள்ளிப் பிள்ளைகளிடத்திலே விற்றதுண்டு. சிறுவர் இதழ்களில் சிறப்பாக வந்த கிறித்தவ இதழ் இதுதான். அதில் வந்த கதைகள் நலம் தரும் கனிகள்.

ஞான தூதன்நான் நீண்ட நாளாகப் பார்த்தும், சில வேளை படித்தும் வருகிற பத்திரிகை. எங்கெங்கே, எவரெவர்கள் இறந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரிகை ஒன்றே எனக்கு இப்போதும் உதவுகிறது. அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வருகிற பத்திரிகை இது. அதன் உள்ளடக்கம் வெகுவாக இப்போது மாறித்தான் இருக்கிறது!

ஞான தூதனில்உங்கள் கேள்விகள் - பதில்கள் வசந்த்என்கிறவர் தருகிறார். கடந்த பத்தாண்டு காலத்தில்தூதனின்முகம் வெகுவாக மாறியிருக்கிறது என்பதற்கு இந்தக்கேள்வி-பதில்அழுத்தமான எடுத்துக்காட்டாகும். இதிலே வருகிறகேள்வி-பதில்கள்கிறித்தவர்களுக்குப் பத்திரிகை நடத்தவரும், பதில் சொல்ல வரும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.

பாண்டிச்சேரியிலிருந்து, ‘வில்லியனூர் விடி வெள்ளிஎன்றொரு பத்திரிகை வருகிறது. இதில் பி.எல். சாமி போன்ற தமிழறிஞர்களெல்லாம் எழுதுகிறார்கள். இதில் வருகிற கவிதைகள்மரபுக் கவிதைகள்என்றாலும், மறக்க முடியாத கவிதைகள்!

சலேசியச் சகோதரர்கள் நடத்தும்அரும்புவிரும்பும்படி இருக்கிறது. ‘காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது. கவிஞனுக்கோ கவிதை படைக்கத் தோன்றுகிறதுஎன்று எப்போதோ நான் சொன்னதை எடுத்துப் போட்டிருந்தார்கள். கோலிக்குண்டாகக் குறுகிப்போன ஓர் உலகத்தில் ஆரஞ்சுப் பழமாக விரிந்த அற்புதமான மனிதர்கள் இவர்கள்!

கிறித்தவப் பத்திரிகைகள் எந்த அளவிற்கு மாறியிருக்கின்றன என்பதற்குநம் வாழ்வுஓர் உதாரணம். சட்டையாகிய அட்டையிலிருந்து சில விவகாரங்களும் இதிலே புதிதாக முளைத்திருக்கின்றன. வேர்கள் பழமையானவை, பூக்கள் புதுமையானவை என்பதற்குநம் வாழ்வுதான் வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.

காக்கைக் கூடுகள்எழுதி கவனத்தில் நிலைத்துவிட்ட ஐசக் அருமைராஜன், ‘விசப் பானங்கள்என்று எழுதுகிறார். ‘மேற்கே உதித்த சூரியன்தலைப்பே நன்றாக இருக்கிறது. ராசி. அழகப்பன் எழுதியஒரு புதிய தலைமுறை தோன்றும்போது...’ என்ற சிறுகதை நெஞ்சில் விதைக்கப்பட்ட நெருப்புத் துண்டு. ‘வாசகர் மேடைஎன்பதில்அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்து விடு, அழுத்தியிருக்கும் நுகத் தடிகளை இறக்கு - ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாக விடுதலை செய்என்ற வரிகளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் துளிர்த்தது.

மனை மலர், ‘தீபிகை, ‘பூக்கூடைஇப்படி எத்தனையோ கிறித்தவப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மீது தீர்ப்புச் சொல்லுகிற வேலை எனக்கு வேண்டாம். இருந்தாலும் பொதுவாக, கிறித்தவப் பத்திரிகைகளைப் பார்க்கிறபோது காலத்திற்கேற்றபடி அவை மாறி வந்திருக்கின்றன; மாற முடியாத பத்திரிகைகள் மறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.

மற்ற சமயத்தவர்களுக்கெல்லாம்கூட ஞானம் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னமும்கூட பாருங்கள், ‘மகாகவி பாரதிக்குஒரு நூற்றாண்டு விழா வருகிறது. நமது பத்திரிகைகள் அதைப் பற்றி எழுதியதாகத்  தோன்றவில்லை. ஒரு வேளை கவிஞர் பொ.. ராசா மணி எழுதியிருக்கிறாரோ என்னவோ?

நதி வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு காலநதி. அது மரங்களைக் கேட்டுக் கொண்டு போக இயலாது. அதில் ஒன்று நாம் மூச்சடக்கிக் கொண்டு மூழ்க வேண்டும். இல்லாவிட்டால் முயன்று நீந்த வேண்டும். இல்லாவிட்டால்  மிதந்தாவது போக வேண்டும். ஓரத்திலிருந்து கொண்டிருந்தால் ஒதுக்கப்பட்டவர்களாவோம்.

இதை நமது பத்திரிகைகள் உணர்ந்து கொண்டால் நல்லது! இல்லாவிட்டால் காலம் அந்த வேலைக்கு வந்துவிடும்!

மறைமாவட்ட ஆயரும், கன்னியர்கள் சிலரும் ஒருமுறை என்னிடம் பேச்சுக் கொடுத்தார்கள். ‘ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பத்திரிகையைவிட இரயில்வே கைடு படிக்கும்படியாயிருக்கிறதுஎன்று தெரிவித்தேன். இது நடந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. இப்போதும் அந்தப் பத்திரிகை தன்னை மாற்றிக்கொள்ளாமலே இருக்கிறது.

பொதுவாக நமக்குள் நாமே வாசித்துக் கொண்டிருப்பதற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமில்லை. நமது பத்திரிகைகள் எல்லாம் சந்தாதாரர்களுக்குச் சேர்கின்ற பத்திரிகைகளே! பெரும்பான்மையாகக் கடைகளுக்கு வருவது இல்லை. இயேசுவின் திருமறை எல்லாத் திசைகளிலும் இருப்பவர்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது நமது நோக்கம் என்கிறோம். நமது பத்திரிகைகள் அதற்கான கருவிகளாக இல்லை.

வாய்க்கால்கள் சரியில்லாமல் இருக்கிறபொழுது வயல்கள் வறண்டு போவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அதிகமான மறுவுலகச் சிந்தனைதான் நமது பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். நேற்று மாதிரி இன்றில்லை; ஆகவே, இன்று மாதிரி நாளை இராது என்பதில் நமக்கு அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது. நமது பத்திரிகைகளுக்குள் விரிவாகி வருகிற சமூகப் பார்வைவைகறை விடியலுக்குவிடிவெள்ளி போல முளைத்திருக்கிறது.”

news
சிறப்புக்கட்டுரை
உலக ஏழையர் தினம்-நவம்பர்-17

ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தும் ஆண்டவர்!

திருத்தந்தையின் சிந்தனைத் தாக்கம்

திரு அவை கொண்டாடும் எட்டாவது ஏழைகள் ஞாயிறுக்கான (17.11.2024) செய்தி மடலில்ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும் (சீராக் 21:5) என்பதை  மையச் சிந்தனையாகத்  திருத்தந்தை தந்திருக்கிறார்.

நமது இறைவேண்டல் இறை சன்னிதானத்தை அடையும் என்பது கிறித்தவர்களின் எதிர்நோக்கு. அதிலும் ஏழையின் இறைவேண்டல் நிச்சயம் இறைவனைச் சேரும். ஏழைகளுக்காக நாமும் மன்றாடும்போது, அவர்களின் துன்பங்களில் ஒன்றிக்கிறோம் என்பதையும் திருத்தந்தை இந்தச் சுற்றுமடல் வழியாகத் தெளிவுபடுத்துகிறார்.

சீராக் ஆசிரியர் பென்சீரா எருசலேமில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானமுள்ள மனிதர். தன்னுடைய ஞானத்தேடல் பயணத்தில்இறைவனின் இதயத்தில் ஏழைகள் சிறப்பிடம் பெறுகிறார்கள்என்கிற அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறார். ஏழைகளுக்கு நீதி வழங்கும் வரை பொறுமையின்றி இறைவன் இருக்கிறார் என்பதையும் பதிவு செய்கிறார்.

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார். ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார் (சீராக் 35:17-19).

அக்கறையுள்ள தந்தையாய் கடவுள் இருப்பதால் பிள்ளைகளின் துயரங்களை அறிகிறார். ஏழைகள், விளிம்புநிலையினர், துயரப்படுவோர், மறக்கப்பட்டோர் அனைவரின் நிலைகளையும் உணர்ந்து பாதுகாக்கிறார். கடவுளின் கண்களில் நாம் ஏழைகளாய் இருப்பதால் அவரது இதயத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுகிறோம்.

கடவுளின் முன்பு நாம் அனைவரும் பிச்சைக்காரர்கள் என்பதை மறந்து, தலைவர்கள் போல பலர் நம்மைக் காட்டிக்கொள்கிறோம். பெரியவன், பெயர் பெற்றவன், சொத்துகளுக்கு அதிபதி என்று அடையாளப்படுத்துகின்ற இந்த உலகில், ஏழைகளின் உரிமைகளையும் மாண்பையும் மதிக்காமல் இங்கு எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆற்றல் மிக்க தலைவர்கள் என்று நினைத்துப் போர்களை ஏற்படுத்தும் ஆணவமிக்கத் தலைவர்கள் கடவுளின் பார்வையில் ஏழையராகத்தான் இருக்கிறார்கள்.

போர் தளவாடங்களால் எவ்வளவு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்? எவ்வளவு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்? இவர்களும் இறைவனின் சாயலாக நமக்குத் தெரியவேண்டும்; நமது ஆதரவை அவர்கள் பெறவேண்டும்ஒவ்வொரு கிறித்தவரும் ஏழையின் விடுதலைக்காக, வளர்ச்சிக்காக, கடவுளின் கருவிகளாக இருக்குமாறு அழைக்கப்பட்டுள்ளோம். ஏழைகளின் அழுகுரலை வசப்படுத்தவும் கவனத்தோடு கேட்கவும், அவர்கள் உதவிக்கு வரவும் வேண்டுகிறது (நற்செய்தியின் மகிழ்ச்சி, 187).

இறைவேண்டல் ஆண்டில் ஏழைகளின் இறைவேண்டல் நமதாகவும், அவர்களோடு இணைந்து வேண்டுவதும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இன்று ஏழைகள் அனுபவிக்கிற மிக மோசமான நிலை என்பது அவர்களுக்கு ஆன்மிகக் கவனத்தைக் கொடுக்காததுதான். கடவுளின் நட்பை, இறையாசிரை, வார்த்தையை, அருளடையாளங்களின் கொண்டாட்டத்தை இறைநம்பிக்கையில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிகொண்ட ஒரு பயணத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்கக்கூடாது. ஏழைகளுக்கான தனிக்கவனம் அவர்களுக்குச் சிறப்பான சமயப் பராமரிப்பாக மாறவேண்டும் (நற்செய்தியில் மகிழ்ச்சி, 200)

ஏழை என்பதை ஏற்றுக்கொள்ளத் தாழ்ச்சி மிகவும் தேவை. “உண்மையான ஏழையாக வாழ்வதே சமூகத்தில் நல்லதுஎன்கிறார் புனித அகுஸ்தினார். ஊதாரி மகனைப் போல, ஏழையர் கடவுளின் இரக்கமிகு அன்புக்காக ஏங்கி நிற்கிறார்கள். கடவுள் அவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்னும் உறுதிப்பாட்டில் ஏழையர் நிலைத்திருக்கிறார்கள்.

நமது வேண்டுதல் கேட்கப்படாதபோது கடவுள் அக்கறையற்றவர் என நினைத்துவிடக்கூடாது. மாறாக, அவரது விருப்பத்திற்கு நம்மை நாம் கையளிக்க முன்வர வேண்டும். “இறைவனின் நீதித்தீர்ப்பு ஏழைகளுக்கு உரித்தானது (சீராக் 21:5) என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். வறுமையில்தான் எதிர்நோக்கின் பாடல் புலப்படும். எப்போதெல்லாம் நமது உள்ளார்ந்த வாழ்வு  சுயநல விருப்புகளால் நிறைந்திருக்கிறதோ அப்போது பிறருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு இடம் இருப்பதில்லை; கடவுளின் குரல் கேட்கப்படுவதும் இல்லை; நன்மை செய்வதற்கான விருப்பமும் மங்கி விடுகிறது (நற்செய்தியில் மகிழ்ச்சி, 2).

ஏழைகளின் உடனிருப்பை உணர்த்தும் அற்புதமான நாள் இந்த நாள். ஏழையரின் இறை விண்ணப்பத்திற்கு நாம் செவிசாய்த்துச் செயல்பட இந்த நாள் அழைப்பு விடுக்கிறது. ஏழைகளுக்காகச் செவிமடுக்கும் மனிதர்களுக்காக நன்றி சொல்வோம். அன்னை தெரேசா ஏழை எளியவருக்காக அவர்களின் துன்பத்தில் கூடவே நின்று பணியாற்றியதற்கு இறைவேண்டலும் ஓர் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் மறக்கக் கூடாது என்பதையும் திருத்தந்தை இங்கே நினைவூட்டுகிறார்.

உறுதியான செயல்பாடு இல்லாத இறைவேண்டல் வீணானது. “நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும் (யாக்கோபு 2:17). உண்மையான இறைவேண்டல் அனுதினமும் இல்லை என்றால், நமது செயல்கள் வெறுமையான ஒன்றாகவே மாறிவிடும் (திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட்).

பிரான்சிலிருந்து உரோமைக்குத் திருப்பயணியாக வந்த புனித பெனடிக்ட் ஜோசப் அவர்கள் துறவற இல்லங்களின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டாலும், ஏழைகளோடு ஏழையாக வாழ்ந்தவர். ‘கடவுளின் நாடோடிஎன்று அழைக்கப்பட்டவர். நற்கருணை முன் அதிக நேரம் செலவிட்டவர். புதிய ஏற்பாட்டையும், ‘கிறிஸ்துவழி வாழ்வுஎன்ற புத்தகத்தையும் ஆழமாய்ப் படித்து, தன் வாழ்வையே செபமாகக் கடவுள் முன் உயர்த்தி நின்றவர் இந்தப் புனிதர்.

எதிர்நோக்கின் திருப்பணிகளாகப் பயணிக்கும் நாம் அன்பின் சிறிய காரியங்களில் கவனம் செலுத்துவோம் (மகிழ்ந்து களிகூறு, 145). தேவையில் இருக்கும் மனிதர்களைக் கடந்து போகாமல், அவர்களை நின்று சந்திப்போம்; அவர்களை அரவணைப்போம்; புன்னகைப்போம்; ஆறுதலின் வார்த்தைகளை உதிர்ப்போம். இந்த அர்ப்பணமிகு செயல்பாடுகளுக்கு இறைவேண்டல் மிக அவசியம். போர்களால் சூழப்பட்ட உலகில் அமைதிக்காக மன்றாடுவோம். இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஏழைகளின் நண்பர்களாய் வாழும் நிலையை உருவாக்குவோம்.

ஏழைகளின் கன்னிஎன்று  பெல்ஜியம் நாட்டின் பேனக்ஸில் தன்னை அறிமுகப்படுத்திய அன்னை மரி ஏழைகளோடு தோள் கொடுக்கும் நம் பயணத்திலும் உடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் ஏழைகள் ஞாயிறை ஏழைகளோடு இணைந்து ஏழைகளாகக் கொண்டாடுவோம்.

news
சிறப்புக்கட்டுரை
சாரி... மை லார்ட்ஸ்!

அடுத்த சில தினங்களில் நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நீதிநாயகம் சஞ்சீவ் கன்னா பதவியேற்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நீதிநாயகம் தனஞ்சய யஷ்வந்த் சந்திர சூட் வரும் நவம்பர் 11 அன்று ஓய்வு பெற்றிருக்கிறார்.

இந்திய அரசியல் சாசனச் சட்டம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தானே உருவாக்கி வைத்திருக்கும் சனநாயக நிறுவனங்களுள் உச்சநீதிமன்றமே முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். இந்திய அரசியல் அமைப்பில் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தையும், அந்தச் சட்டங்களை நிறைவேற்றும் அரசு நிர்வாக இயந்திரத்தையும் கண்காணித்து, அவைகளின் செயல்பாடுகளை அரசியல் சட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து, நெறிப்படுத்தி, இந்திய நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் மகத்தான அதிகாரம் நமது உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

ஒரு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும்போதும், இருந்தவர் பணி ஓய்வு பெறும்போதும், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், அங்கே பணியாற்றும் நீதிபதிகளின் நடைமுறைகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் எதிர்காலம் குறித்தும் நம்மால் சிந்திக்காமலும், பேசாமலும் இருக்க முடியவில்லை.

இந்நாள்களில் வாழும் இந்தியர்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவர்கள்! நமது பிரதமரும், நமது தலைமை நீதிபதியும் தெய்வத்தோடு நேரில் பேசி, தெய்வத்தின் அருள் கடாட்சம் பெற்றபின்னரே தங்களது கடமைகளின் நிமித்தம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்கிறார்கள். “நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை; இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே இறைவனால் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்என்று நம் பிரதமர் கூறியபோது நாம் எல்லாரும் மெய்சிலிர்த்துப் போனோமே! அதைப்போல நமது தலைமை நீதிபதியும் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போதெல்லாம் ஸ்ரீராமனின் திரு உருவத்தின் முன் அமர்ந்து, தியானித்து அந்த வழக்கு சம்பந்தமாகத் தனக்கு என்ன அருளப்பட்டதோ அதையே தீர்ப்பாக எழுதுகின்ற தெய்வீக வல்லமை பெற்றவர். நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளிக்குமுன் பகவான் இராமரிடம், “இந்த வழக்கிற்குத் தீர்வு ஒன்று சொல்லுங்கள் தெய்வமே!” என்று அவர் மன்றாடினதாகவும், அவ்வாறு பெறப்பட்டதுதான் அந்தத் தீர்ப்பு என்றும் நமது தலைமை நீதிபதி கூறிய பின்னர்தான் நமக்குப் பல விசயங்கள் புரிந்தன.

வழக்கமாக உச்சநீதிமன்றம் பெரும் அமர்வாக அமர்ந்து தீர்ப்பளிக்கும்போது  பகிரப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பை எந்த நீதிபதி எழுதினார் என்பதும், அதில் உடன்பட்டவர்கள் யார் என்பதும் குறிப்பிடப்பட்டு, உடன்படாதவர்கள் தனியாகத் தங்களது தீர்ப்பினையும் வழங்குவதுதான் உச்சநீதிமன்றத்தின் நடைமுறை. ஆனால், பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை யார் எழுதினார் என்று தெரிவிக்கப்படவே இல்லை. ‘இறைவன் தந்த தீர்ப்புஎன்று எழுத முடியாதல்லவா?

ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் மிகச் சிறந்த நீதிபதி என அறியப்பட்ட நீதி அரசியார் சார்மா அவர்கள், தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்படியும், நியாயத்தின்படியும் தவறான தீர்ப்பின் பொறுப்பினை ஸ்ரீராமரின் மீது போட்டுவிட முயற்சிக்கும் அவர், அரசியல் சட்டத்தின் மீது தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறியதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராகவும் பெரும் துரோகத்தை இழைத்துள்ளார் என்று சந்திரசூட்டைப் பகிரங்கமாக அவர் கண்டித்தார்.

விடைபெறுகின்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடந்த சில நாள்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தனது பணிக்காலத்தின்போது தலைமை நீதிபதியாக மற்றும் நீதிபதியாகத் தனது செயல்பாடுகளைப் பற்றியும், உச்சநீதிமன்றத்திற்குத் தனது பங்களிப்பு பற்றியும் மிகவும் பெருமிதப்பட்டு, தனக்குத்தானே சிலாகித்துக் கொள்கிறார். அந்த உரிமை அவருக்கு உண்டு. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை அன்றாடம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்ற சட்ட விற்பன்னர்கள், மேனாள் உச்சநீதிமன்ற-உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள், அனுபவம் நிறைந்த ஊடகவியலாளர்கள், பொதுநல வழக்குகள் மூலம் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், ஆளும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரத் துரைத்தனத்தால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுயநலச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள்... இந்தத் தலைமை நீதிபதியின் பணிக்காலத்தில் அவரது செயல்பாடுகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் என்ன மதிப்பீடுகளை வைத்துள்ளனர் என்பதையும் நாம் பதிவு செய்ய வேண்டும் அல்லவா?

கடந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தனது  இல்லத்தில் நடந்த விநாயகர் ஆரத்திக்குத் தலைமை நீதிபதி பிரதமரை அழைத்தார். நீதிபதியும், அவரது மனைவியும் பிரதமரின் இருபுறமும் நின்றுகொண்டு, விநாயகருக்குப் பிரதமர் தீப ஆராதனை செய்வதும், நீதிபதியின் மனைவியார் சுலோகங்கள் சொல்வதும், தலைமை நீதிபதி அந்தப் பூஜைக்கு மணியடிப்பதுமான காட்சிகள் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடகங்களிலும் பெரும் வைரலாகி கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

தலைமை நீதிபதியின் வீட்டில் நடந்த அந்த நிகழ்வு குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கம் உள்பட பல மேனாள் நீதி அரசர்களும், பத்திரிகையாளர்களும்இது நல்ல மரபல்லஎன்று சுட்டிக்காட்டினார்கள்.

நரேந்திர மோடிக்கும், சந்திர சூட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெய்வ நம்பிக்கையும், வழிபாடு செய்யும் உரிமைகளும் இருக்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், பிரதமரும், தலைமை நீதிபதியும் தெய்வ வழிபாடு செய்யும்போது நான்கு காமெராக்கள் சுற்றிநின்று  படம் எடுத்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கும்போது, அதில் உள்ள நியாயத்தை நம்மால் மறுக்க முடியவில்லை. அதிலும், அதற்கு அடுத்த வாரம் மகாராஷ்டிராவில் பா... வையும், அவர்களது அரசையும் பாதிக்கக்கூடிய  சிவசேனா கட்சி வழக்குகள் உள்பட ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட பல முக்கியமான வழக்குகளில் தலைமை நீதிபதி தீர்ப்பு சொல்ல இருந்தபோது, இப்படிப் பிரதமருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பு சரியானதல்ல என்று சிலர் கூறுவதையும் மறுப்பதற்கில்லை.

சில நாள்களுக்குப் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் தனது இல்லத்திற்கு வந்தபோது இந்த வழக்குகள் சம்பந்தமாகத் தாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று பரிதாபமாக ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, தலைமை நீதிபதி தனது பதவியின் மாட்சிமைமிக்க கம்பீரத்தைச் சற்று இழந்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக் கூடியதுதானே!

உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து அந்த வளாகத்தில் நீதி தேவதையின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. கிரேக்க-எகிப்திய கலாச்சாரங்களில் நீதியின் தெய்வமாக வணங்கப்பட்டது இந்த நீதி தேவதையின் சிலை. உலகம் முழுவதும் நீதி வழுவாத நெறிமுறையின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பல நாடுகளின் நீதிமன்றங்களில் இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள்-வேண்டாதவர்கள், பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காமல், நீதி பரிபாலனம் செய்வது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை என்பதை உணர்த்துகின்ற வகையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும். ஒருபால் கோடாத நீதியின் தராசை ஒரு கையிலும், நீதியின் மாண்பையும், மாட்சிமைமிக்க அதன் அதிகாரத்தையும் விளக்குகின்ற வகையில் மற்றொரு கையில் ஓங்கிய வாளுடன் நிற்கும்.

இந்தச் சிலையை ஒரே நாளில் சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துவிட்டு, தனது விருப்பப்படி மற்றொரு சிலையைத்  தலைமை நீதிபதி சந்தர சூட் அங்கே வைத்து விட்டார். திறந்த கண்களுடன், நெற்றியில் திலகத்துடன், வாள் அகற்றப்பட்ட கையில் சட்டப் புத்தகத்துடனும், பட்டுச் சேலை கட்டிய ஒரு பெண் சிலை தற்போது அங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் தத்துவப் பின்னணியும், வரலாற்றுப் பின்புலமும் என்ன? என்று யாருக்கும் புரியவில்லை. நமது இதிகாசங்களிலும், கலாச்சாரத்திலும் இந்தத் தோற்றத்தில் ஒரு நீதி தேவதை இருந்ததாக எந்த இடங்களிலும் இல்லை. எந்த அடிப்படையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.

காலனி ஆதிக்கத்தின் எச்சமாக பழைய சிலை இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டு பாரத கலாச்சாரம் கொண்ட ஒரு பெண்ணின் சிலை வைக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய சிலை ஆங்கிலேய கலாச்சாரம் சார்ந்ததன்று. அது ஆசிய நாகரிகப் பண்பாட்டுக்கூற்றை உள்வாங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரபட்சமற்ற நீதிபரிபாலனத்தின் அடையாளமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுவது. அதனை எடுத்துவிட்டு தனது  சொந்தக் கற்பனையை இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக அவர் நிறுவியதைஉள்நோக்கமுடையதுஎன்றும், ‘நாட்டின் உச்சகட்ட நீதிபரிபாலன நிறுவனத்திற்கு ஒரு பண்பாட்டுச் சாயம் பூச அவர் முற்படுகிறார்என்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பலர் சொல்வதை உதாசீனப்படுத்தமுடியவில்லை.

இந்திய நாட்டின் அரசியல் வானில் வகுப்புவாத மதவெறி எனும் இருள்சூழ்ந்து, அரசியல் சாசனச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியும், மக்களாட்சித் தத்துவமும் அழிவின் ஆரம்பப் பாதையில் நிற்கும்போது, அதனைத் தடுத்து நிறுத்தி, இந்தியா என்று நாம் கொண்டாடும் தத்துவத்தைப் பாதுகாத்துத் தர பணிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்றத்தை, நீதிநாயகம் சந்திர சூட் எப்படி வழிநடத்தினார் என்ற கேள்வியை, வரும் தலைமுறைகள் கேட்குமல்லவா? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?                              

news
சிறப்புக்கட்டுரை
நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் (1975-2025)

நாங்கள் சொல்கிறோம்!’

(1981-ஆம் ஆண்டில் புத்தக வடிவில் வந்த நம் வாழ்வுக்கு வாழ்த்தொலி) – 07

பரிசு!

நம் வாழ்வைப் புத்தக வடிவில் வெளியிட்டமைக்கு நன்றி. பாதுகாக்கச் சிரமமில்லை. இதுவே வாசகர்களுக்குப் பரிசாக அமைந்துவிட்டது. கத்தோலிக்கக் கல்வி நிறுவனங்கள், சபையினர், பங்குத் தந்தையர் ஒரு கடமையாகக் கொண்டு வாசகர் எண்ணிக்கையைப் பெருக்குவார்கள் என்று எண்ணுகிறேன்!         

- ஜெ.பி. பெரஸ், ஆவடி

ஆசிரியருக்கு நன்றி!

புத்தக வடிவாக்கிய ஆசிரியருக்கு நன்றி! கட்டுரைகள் தேனாக இனித்தன. கதைகள் ஜோர்! ஏழையின் விழா சிந்திக்க வைத்ததுகவிதைகள் நினைவில் நிற்கும்படி இருந்தன. குறிப்பாகஅஞ்சலிகிறிஸ்துமஸ் பரிசாக அமைந்துவிட்டது.

- திரு. இமாகுலேட், பாளையங்கோட்டை

பொலிவோடு அமைகிறது!

புதிய வடிவில் சீரோடும் சிறப்போடும் எழிலோடும் பொலிவோடும் அமைந்திருக்கிறது நம் வாழ்வு. பாராட்டுகள்!

- பொ.. இராசமணி, பாளையங்கோட்டை

ராணிக்கு ராணியாக!

புத்தக வடிவில் அழகிய அட்டைப் படங்களுடன், அதிக பக்கங்களுடன் ராணிக்கும் ராணியாகநம் வாழ்வுஅமைந்திருப்பது போற்றத்தக்கது. உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், ‘நம் வாழ்வுஎன்றடெலிவிஷன்அனைத்தையும்பவர்கட்இன்றி படம்பிடித்துக் காட்டியது. அல்லி அக்காவின் தங்கைசுதாவைகொடுத்த உங்களுக்கு நன்றி

- திரு. S. அருள், சிவகங்கை

படுஜோர் - போங்கள்!

செய்திப் பத்திரிகையாக இருந்த நம் வாழ்வை வாரப் பத்திரிகையாக மாற்றினீர்கள். இப்போது கைகளுக்கு அடக்கமாக, கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண அட்டைப் படத்துடன் தந்துள்ளீர்கள். வாழ்க உங்கள் முயற்சி! தித்திக்கும் தேன் கவிதைகள், சின்ன கதைகள், அரசியல் அரங்கம், சுதாவின் பதில்கள்... படுஜோர் போங்கள்! நமக்கும் ஒரு சிறந்த வாரப் பத்திரிகை கிடைத்துவிட்டது.

- திரு. செல்வராஜ், சென்னை

டாப் மோஸ்ட்!’

எங்கள் செல்லரித்த எண்ணத்தைச் சிந்திக்க வைத்தது தாஸ் அவர்களின்புத்தாண்டே வருக!’ பயனுள்ள கட்டுரைகள்! ஷைலஜாவின் கதைகள் கண்ணீரை வரவழைக்கிறது. வந்ததே வந்தது நம் வாழ்வு புத்தக வடிவில்டாப் - மோஸ்ட்!’    

- திருமதி. ரஞ்சித மேரி, சேலம்

பூர்த்தி செய்வீர்களா?

நம் வாழ்வுபத்திரிகை கிறித்தவ இல்லங்கள் மட்டுமல்லாமல், அனைத்து இல்லங்களிலும் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய நீண்ட நாள் ஆவல். பூர்த்தி செய்வீர்களா?

- dr. அருள்தாஸ், கோழிப்பாறை, பாலக்காடு

பாராட்ட வார்த்தைகள் இல்லை!

நம் வாழ்வுபுத்தகத்தின் அட்டைதான் என்னே அழகு! இதுபோல் தொடர்ந்து வெளிவரும் என்று எதிர்பார்க்கலாமா? உண்மையிலேயே கிறிஸ்தவ உலகில் மறைந்து கிடக்கும் முத்துக்கள் ஏராளம். அவர்களை அறிமுகப்படுத்தும் நம் வாழ்வின் பணியை என்னவென்று சொல்ல! பாராட்ட வார்த்தைகளே இல்லை

- ரமேஷ் பெர்னாண்டோ, தூத்துக்குடி

இனிய நல்அரும்பு!

புத்தம் புதிய வழிகண்டு

புத்தக வடிவில் அமைந்தாயே

அழகிய அட்டைப் படம் கண்டு

அனைவரும் உன்னை விரும்பி விட்டார்

என்னரும் இனிய நம் வாழ்வை

இனியநல் அரும்பாய் திகழ்ந்து விட்டாய்!

- S. பிரகாசி, சிவகங்கை

வண்ண வண்ணக் கவிதைகள்!

நூல் வடிவில் மலரும்நம் வாழ்வுமலர் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். புதுப்புது கட்டுரைகளும், வண்ண வண்ணக் கவிதைகளும் வெளிவருவது குறித்து எண்ணிலா உவகையடைகிறேன். தாஸ் அவர்களின்பொங்கல் வடிப்போம்பகுதி மிக அற்புதமாக அமைந்துள்ளது. செம்பை சேவியரின்ஒரு வீடு விழித்துக் கொண்டதுபாராட்டுக்குரியது.

- M.L.E. மனோகரன், மணப்பாறை

துப்பாக்கிச் சூடு அரசியல் ஆளுமைகளின் எதிரொலி

1981-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள், மாலைப்பொழுதில் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திப்பதற்காகத் திறந்த வாகனத்தில் திருத்தந்தை சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, துருக்கி நாட்டு 23 வயதான முகமது அலி அஃகா (Mehmet Ali Agca) என்பவரால் திருத்தந்தை 2 -ஆம் ஜான்பால் துப்பாக்கியால் சுடப்பட்டார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தத் தாக்குதலைக் குறித்து உலகின் பல அரசியல் ஆளுமைகள் எழுப்பிய கண்டனக் குரல்கள்...

போப் ஆண்டவரைச் சுட்டது மனிதகுலமே வெட்கித் தலை குனிய வேண்டிய மிருகத்தனமான செயல். தமிழ்நாடு மக்களின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். உடல் நலம் அடையப் பிரார்த்திக்கிறேன்.”

- தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.

போப் ஆண்டவரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவன் முறையாளர்களின் கொடுஞ்செயல் கண்டிக்கத்தக்கது.”

- தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி

போப் ஆண்டவர் விரைவில் குணமடைய தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஎன்று நிதியமைச்சர் இரா. நெடுஞ்செழியன் கூறினார். சபாநாயகர் . ராஜாராம் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.

மனிதாபிமான உணர்வுகளை மதிக்கும் மக்களுக்கெல்லாம் இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். கொலை முயற்சியைக் கண்டிக்கிறேன்.” 

- கேரள முதல்வர் நாயனார்

இது அதிர்ச்சியளிக்கும் சம்பவம். போப்பாண்டவரை இவ்வாறு தாக்கியது கண்டனத்திற்குரியது. இந்திய அரசாங்கத்தின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் இறைவன் தங்களுக்குப் பூரண குணம் அருள வேண்டுகிறேன்.”

- ஜனாதிபதி சஞ்சீவரெட்டி

நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது.”                                                        

- பிரதமர் இந்திராகாந்தி

அனைத்துலகக் கிறித்தவ மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஆயர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் மிருகத்தனமாகச் சுடப்பட்ட வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஆழ்ந்த வேதனையும் துயரமும் அடைகிறோம்.”

- கிறித்தவக் குடியரசுக் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் ஜே.எக்ஸ். மார்க்பிறிஸ்

அதிர்ச்சியடைந்தேன். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.”                              

- .நா. சபைத் தலைவர் வால்டீம்

வன்முறையைக் கண்டிக்கிறேன். எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், விரைவில் குணமடைய விரும்புகிறேன்.”                        

- பிரான்சின் புதிய அதிபர் மி தார்ராள்

யாராவது உயர்ந்த மனிதர் இருந்தால் அவரைச் சுட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. இது மானக்கேடானது.”                                                                

- பிரான்சின் பழைய அதிபர் கிஸ்கார்ட்

பீதி அடைந்தேன்.”

- இங்கிலாந்து ராணி

வேதனை அடைந்தேன்.”

- மேற்கு ஜெர்மனி அதிபர் கார்ல் கார்டன்

 

 

 

 

news
சிறப்புக்கட்டுரை
நவம்பர் 14: குழந்தைகள் தின சிறப்புக் கட்டுரை

காயப்பட்ட சிறகுகள்!

தெருவோரக் குழந்தைகளின் போராட்டங்கள்

சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் போல முகமலர்ந்து சிரிக்கும் குழந்தைகளுக்கு நவம்பர் மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதம். ஏனெனில், நவம்பர் மாதத்தில் அவர்கள் இரண்டு முறை கொண்டாடப்படுகிறார்கள். நவம்பர் 14-ஆம் தேதி அன்று நம் நாட்டின் முதல் பிரதமரான பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளானது, நம் நாட்டில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. சில நாள்களுக்குப் பிறகு, நவம்பர் 20 அன்று, உலகளாவிய குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இந்தக் கொண்டாட்டங்கள், குழந்தைகள் சமுதாயத்தில் எத்தனை பெரிய அங்கம் வகிக்கின்றனர் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றது. குழந்தைகளின் மதிப்பீடுகளையும், அவர்களின் கள்ளமற்ற குணத்தையும் விண்ணகத்தின் திறவுகோலாக இயேசு குறிப்பிட்டு, தம்முடைய போதனைகளில் அவர்களுக்குச் சிறப்பிடம் அளிக்கின்றார். அதுபோல, பல இதிகாசங்களிலும், புராணங்களிலும் கடவுளாகப் போற்றப்பட்டவர்களின் குழந்தைப் பருவங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். ஏனெனில், ஒரு மனிதனின் வாழ்வில் குழந்தைப் பருவம் என்பது மிகவும் முக்கியமான பருவம். இந்தப் பருவம் அனைவருக்கும் சிறகடிக்கும் பருவமாக இருக்க வேண்டும்; ஆனால், சிலர் மட்டும் சிறகொடிந்து சிரமத்துடன் வாழ்கின்றனர்.

குழந்தைப் பருவத்தில், பிறரைப் பார்த்துமாதிரி கொள்தல் (Imitate) என்ற இயல்பான கற்றல் முறையின் மூலம் குழந்தைகள் தங்கள் கற்றல் முயற்சியைத் தாமாகத் தொடங்குகின்றனர். அவர்களின் கற்றல் ஆர்வத்தின் பலனாக, பெரியவர்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களைப் போல பேசுகின்றார்கள். பெரியவர்கள் செய்யும் வேலைகளைச் செய்ய முயற்சி செய்கின்றனர்இந்த முயற்சியில் குழந்தைகள் செய்யும் சுட்டிச்செயல்கள் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால், சில குழந்தைகள் மட்டும் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்த, பெரியவர்களைப் போலக் கடினப்பட்டு, உடலை வருத்தி வீதிகளில் உழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. பலருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியான, அமைதியான குழந்தைப் பருவம், சில குழந்தைகளின் வாழ்வில் கனவாக மட்டுமே இருக்கின்றது.

இந்த வண்ணத்துப் பூச்சிகளின் அழகிய சிறகுகள் சாலையோரத் தூசிகளால் மாசுபடுகின்றன. புத்தகங்களைச் சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், குப்பைகள் நிரப்பப்பட்ட பைகளைச் சுமந்துகொண்டு குப்பைக்கிடங்குகளில் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்துகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தெருக்களில் வாழ்ந்து கொண்டு தங்கள் குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ தெருக்களில் வசிக்கும் குழந்தைகளைத் தெருவோரக் குழந்தைகள் என .நா. அழைக்கின்றது.

ஆதரவின்றியும், அரவணைப்பின்றியும் வீதிகளில் வாழும் இந்தக் குழந்தைகள் சமூகத்தின் பல கேடுகளுக்குப் பலியாகின்றனர். கவனிப்பதற்கும், கண்டிப்பதற்கும் யாரும் இல்லாத இக்குழந்தைகள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக, புகை பிடிக்கின்றனர் மற்றும் பசை மோப்பம் செய்கின்றனர் (Glue Sniffing). பாலியல் சார்ந்த வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சிலர் போதைப்பொருள்கள் தயாரிக்கும் உற்பத்தியிலும், விற்பனை செய்வதிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு, உடை மற்றும் உறைவிடமின்றியும், சமூகப் பாதுகாப்பின்றியும் மிக ஆபத்தான சூழ்நிலைகளில் வாழும் தெருவோரக் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையைப் பல போராட்டங்களுடன் நகர்த்துகின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகளை முழுமையான உடல் வளர்ச்சியும், மன முதிர்ச்சியும் இல்லாத தெருவோரக் குழந்தைகள் சந்திக்கின்றனர். இதனால், மன அழுத்தம், வாழ்க்கையைக் குறித்த அச்சம், நம்பிக்கையின்மை, கோபம் போன்ற குணங்கள் இவர்களிடத்தில் மற்றக் குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. மனமகிழ்ந்து சிறகடிக்க வேண்டியவர்கள் சிறகிழந்து, சிக்கல்களின் நடுவில் வாழ்கின்றார்கள். எண்ணற்ற வாழ்க்கை அம்புகளால் துளைக்கப்படும் இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகின்றது. இவர்கள் வாழ்க்கையை உயர்த்த அரசு சாரா அமைப்புகளும், அரசும் பல முயற்சிகள் எடுத்தாலும், அவை பெரிதளவில் உதவுவதில்லை. 23.05.2022 அன்று அரசு வெளியிட்ட அரசாணை 17-இல் தெருவோரக் குழந்தைகளின் மறுவாழ்வு பற்றிப் பல அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், அவற்றை நடமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அதற்குக் காரணம், தெருவோரக் குழந்தைகள் என்றால் யார்? உலகில் மொத்தம் எத்தனை தெருவோரக் குழந்தைகள் உள்ளனர்? எதன் அடிப்படையில் தெருவோரக் குழந்தைகளைக் கணக்கிட வேண்டும் போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை சரியான பதில்கள் இல்லை. பல சமூக ஆர்வலர்களாலும், களப்பணியாளர்களாலும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியவில்லை. ஆயினும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம் (UNICEF – United nations Children’s fund) மிக முக்கியப் பங்களித்துள்ளது. அவர்களின் முயற்சிகள் தெருவோரக் குழந்தைகளைப் பற்றிய சில தெளிவை அளித்தாலும், அவையும் முழுமையானதாக இல்லை.

தெருவோரக் குழந்தைகளை, ‘யுனிசெப்அமைப்பு மூன்று வகைகளாக வகைப்படுத்துகின்றது. அவை, 1) தினசரி வேலைகளை முடித்து விட்டு இல்லம் திரும்பி, பெற்றோர்களோடு வாழும் குழந்தைகள். 2) தெருக்களில் வாழ்ந்து கொண்டு அரிதாகத் தங்கள் பெற்றோர்களைச் சந்திக்கும் குழந்தைகள். 3) யாரும் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் குழந்தைகள்.

மேற்குறிப்பிட்ட மூன்று வகைக் குழந்தைகளும் தெருக்களில் வேலை செய்வதற்கான காரணங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வெவ்வேறு விதமானவை. முதல் மற்றும் இரண்டாம் வகையைச் சார்ந்த பெரும்பாலான தெருவோரக் குழந்தைகள் அரசு சார்ந்த ஆவணங்கள் வைத்துள்ளனர். இவர்கள் அரசாங்கத்தால் அறியப்பட்டவர்கள்; மேலும், சட்ட விரோதமாகக் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர் அல்லது வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். மூன்றாம் வகைக் குழந்தைகள் முறையான அரசு ஆவணங்களும், பெற்றோரும் இல்லாதவர்கள். இவர்களைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் அரசிடத்தில் இல்லை. இந்தக் காரணங்களால் தெருவோரக் குழந்தைகளைக் கணக்கிடுவது சாத்தியமற்றதாகின்றது.

இருப்பினும், ‘யுனிசெப்உலகெங்கும் 18 மில்லியன் தெருவோரக் குழந்தைகள் இருப்பதாக 2000-ஆம் ஆண்டில் கணக்கிட்டது. இன்று இந்தியாவில் மட்டும் 18 மில்லியன் தெருவோரக் குழந்தைகள் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 1.3 சதவிகிதமாகும்.

இந்த மில்லியன் கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வில் சொல்ல முடியாத எண்ணற்ற பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். மார்ச் 2013-இல் கரண் என்ற தெருவோரச் சிறுவன் மும்பையிலும், மே 2014-இல் கார்த்திக் என்ற சிறுவன் பெங்களூருவிலும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரண்டு வழக்குகளிலும் சரியான தீர்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை.

2020-ஆம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் வழக்கில் இராஜஸ்தானில் 100 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவை நாம் அறிந்தவை. இதுபோன்று, வெளிவராத எத்தனையோ நிகழ்வுகள் இந்தக் குழந்தைகளைச் சுற்றி நடக்கின்றன.

இவர்களை ஆற்றுப்படுத்துவதற்கும் வழி நடத்துவதற்கும் சரியான வழிகாட்டிகள் தேவைப்படுகின்றார்கள்இந்த ஆதரவற்றக் குழந்தைகளுக்கு வாக்குரிமை இல்லாததால், சமூகத்தில் இவர்களுக்காகக் குரல் கொடுக்கவும், இவர்களின் நலம் காக்கவும் எவரும் முன்வருவதில்லை.

குழந்தைகள் தினத்தை வருடந்தோறும் கொண்டாடும் நாம், வீதியில் சிதறிக்கிடக்கும் உடைந்த சிறகுகளைத் தெரிந்தெடுத்து திடப்படுத்த முயல்வோம். வீழ்ந்த பட்டாம்பூச்சிகளுக்குப் புதுச் சிறகளித்துப் பறக்கவிடுவோம்.