news
சிறப்புக்கட்டுரை
காரணம்... அவனும் மனிதன்!

பாய் அந்த டீ கடையை மிக சுத்தமாக வைத்திருப்பார். பெரும்பாலான பெரியவர்கள் காலை நடைப்பயணம் முடித்து அவர் டீ கடைக்கு வந்து பெஞ்சில் அமர்ந்து நாளிதழ் படித்து, அதிலுள்ள செய்திகளைச்  சக நண்பர்களோடு பேசிச் சிரித்து மகிழ்ந்து, அதன்பின்தான் வீட்டிற்கே போவார்கள்.    

அனைவருக்கும் அவர் மிக நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். காசு கொடுத்தாலும், ‘நாளைக்குத் தருகிறேன்என்று வாய்தா வாங்கினாலும் பொறுத்துக்கொள்வார். காலை சுமார் 9 மணிக்கே கடையைச் சாத்தி வீட்டிற்குச் சென்று விடுவார்.

ஒருமுறை பக்கத்து ஊரைச் சேர்ந்த முனுசாமி அவரது கடைக்கு வந்து டீ குடிக்க ஆரம்பித்தார். பாயின் அணுகுமுறை, பழகும்விதம் அனைத்தும் முனுசாமிக்கு மிகவும் பிடித்திருந்தது. பேச்சுவாக்கில்  முனுசாமி ஒரு வங்கி .டி.எம்.-இல் இரவுக் காவலராகப் புணிபுரிவதாகவும், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், அவர்கள் பள்ளிக்குச் செல்வதாகவும், மனைவி சுகவீனமாக வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்தது.

தினமும் வர ஆரம்பித்த முனுசாமி பாய்க்கு நெருங்கிய நண்பராகி, கடையில் அவரால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். பாயும் அவரிடம் பணம் ஏதும் வாங்காமல் காலைச் சிற்றுண்டியும்  டீயும் கொடுத்து வந்தார். இப்படியே ஒரு மாதம் கடந்தது.

திடீரென்று முனுசாமி கடைக்கு வருவது நின்று போனது. பாய்க்கு முனுசாமி பற்றிய எந்தவிதச் செய்தியும் தெரியவில்லை. வருகின்ற வாடிக்கையாளர்களிடமும் கேட்டுப் பார்த்தார். ஆனால், அவர்களுக்கும் முனுசாமி பற்றித் தெரியவில்லை. அதுவே அவருக்கு மிகுந்த கவலையை அளித்தது.

ஒருநாள் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்க பக்கத்து ஊருக்குச் சென்றார். அப்போதுதான் முனுசாமி அந்த ஊர் என்பதும், ‘முருகன் கோவில் பக்கத்தில்தான் என் வீடு இருக்கிறதுஎன்று முனுசாமி கூறியதும் நினைவிற்கு வந்தது. அந்த நேரத்தில் வந்த தபால்காரரிடம் முனுசாமி பற்றிக் கேட்டபோது அவர் கூறியது பாய்க்கு மிகுந்த வேதனை அளித்தது.

முனுசாமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரவு காவல் வேலைக்கு வங்கி .டி.எம்.முக்குச் சென்ற போது  நடுராத்திரியில் வந்த கொள்ளையர்கள் அவரை அடித்துப் போட்டுப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும், அதன் பிறகு அதிகாலை .டி.எம்.க்கு வந்தவர்கள் வங்கிக்கும் போலீசுக்கும் செய்தி சொன்னதும், பிறகு ஆம்புலன்ஸ் வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனதும் கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார்.

உடனே தபால்காரர் மூலம் முனுசாமியின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி, பிள்ளைகளுக்கு ஆறுதல்  கூறிகையிலிருந்த பணத்தையும் கொடுத்து மிகுந்த வேதனையோடு திரும்பினார்.

முனுசாமி பழகிய நாள்களை நினைத்துசே என்ன வாழ்க்கை இது? நேற்றிருந்தவர் இன்று இல்லையே!’ வேதனைப்பட்டார். அதோடு கூட தான் கிறித்தவப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டதால்சொத்து எதுவுமின்றி, விரட்டி அடிக்கப்பட்டதையும், முனுசாமி தன்னிடம் சொல்லி ஆறுதல் தேடிக்கொண்டதையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்த நாள் பாயின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. காலை 9 மணிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கடையை நடத்தாத பாய், மதியம் 3 மணிவரை கடையைத் திறந்து வைத்திருந்தார். வழக்கம்போல 9 மணிவரை காலை சிற்றுண்டி, டீ, காபி போடுவதைத் தொடர்ந்த பின்னர் மதியம் சூடான பிரியாணி சமைத்து விற்க ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வியப்பாய் இருந்தது. அதோடுகூட முனுசாமி இப்போதெல்லாம் வருவதில்லை என்பதும்  வாடிக்கையாளர்களுக்குத் தெரியவந்தது.

ஒருநாள் முனுசாமி பற்றி அவரிடமே கேட்டனர். அப்போது பாய் முனுசாமி பற்றிய விவரங்களை அவர்களுக்குத் தெரிவித்தார். டீ வியாபார வசூலைத் தான் வைத்துக்கொள்வதாகவும், பிரியாணி மூலம் வரும் வருமானத்தை முனுசாமியின் மனைவியின் உடல்நலத்திற்காகவும், அவரது பிள்ளைகளின் படிப்புச் செலவிற்காகக் கொடுக்கப்போவதாகவும் கூறினார்.

முனுசாமி பற்றிய சேதி கேட்டு அனைவரும் வருத்தப்பட்டனர். அவரவர் தங்களாலான பண உதவி செய்தனர்சமூக நலத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சகாயம், அரசாங்க மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுக்க முன்வந்தார். அதற்காகும் முன்பணம் மற்றும் அரசு மானியம் பெற வழிவகைகளைச் செய்வதாகவும், அதனால் முனுசாமியின் குடும்பத்தினருக்கு அவர்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு வழிவகுப்பதாகவும் கூறினார்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் சேர்ந்து குடும்பத்தினருடன் முனுசாமி வீட்டிற்குச் சென்றனர். குடும்பத் தலைவிகள் முனுசாமியின் பிள்ளைகளைக் குளிப்பாட்டி, தாங்கள் எடுத்து வந்திருந்த புத்தாடைகளை அணிவித்து அழகு பார்த்து பிள்ளைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர்.

இதையெல்லாம் பார்த்த முனுசாமியின் மனைவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. சாதி, மதம் மாறித் திருமணம் செய்ததால் எங்களைச் சொந்தபந்தங்கள் அனைவரும் ஒதுக்கி வைத்ததால் மனமுடைந்து தான் நோய்வாய்ப்பட்டதாகவும், நான் வணங்கும் கடவுள் என்னைக் கைவிடாமல் இன்று இத்தனை சொந்தங்களை எனக்குக் கொடுத்திருக்கின்றார் என்றும் கண்ணீர் மல்க அவர்கள் முன் மண்டியிட்டு தன் நன்றியினைத் தெரிவித்தாள்.

மும்மதத்தினரும் இணைந்ததால் அப்போது பக்கத்திலிருந்த தேவாலயத்திலிருந்து ஒலித்த  ‘ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்; ஒவ்வொரு மனிதனும் சகோதரன்என்ற பாடல் மிகவும் பொருளுள்ளதாக இருந்தது.

news
சிறப்புக்கட்டுரை
கறுப்பு தினம் - தலித் கிறித்தவர்களை SC பட்டியலில் சேர்க்கக் கோரி ‘கறுப்பு நாள்’உரிமைப் போராட்டப் பேரணி

ஆகஸ்டு 10-ஆம் தேதி இந்தியக் கிறித்தவர்கள் குறிப்பாக, தலித் கிறித்தவர்கள் 1950-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களின் உத்தரவால் (1950, பத்தி 3), பாராளுமன்றத்தில் முறையான விவாதத்துக்கு உட்படாமலே கையெழுத்தானது. ‘இந்துகள் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள் என எழுதப்பட்டிருந்தது. 1950-ஆம் ஆண்டு ஆகஸ்டு 10-ஆம் நாள் இச்சட்டத்தைத்  தனி அதிகாரத்தின் கீழ் கையெழுத்திட்டார் குடியரத் தலைவர். இந்த வரலாற்று அநீதிக்கு எதிராக ‘கறுப்பு நாள் என்ற பெயரில் நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டன.

தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவரை மீண்டும் பட்டியல் இனப் பிரிவிற்கு இணைத்தது. இதற்குப் பிறகு 1993-இல் பௌத்த மதத்தைச் சார்ந்த பட்டியல் இனத்தவர் பட்டியலினப் பிரிவில் இணைக்கப்பட்டனர். ஆனால், இன்றுவரை கிறித்தவ மற்றும் இசுலாமியப் பட்டியல் இனத்தவரைத் தங்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறுவதற்கு இந்த மதங்களைக் காரணம் காட்டிக் கடந்த 75 ஆண்டு காலமாக கிறித்தவப் பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

மேலும், 2005, இரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமையாலும், உச்ச நீதிமன்றத்தில் 2004 முதல் நடைபெறும் SC அந்தஸ்தைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமலும் தமிழ்நாடு அரசின் தனித்தீர் மானத்தைத் தாமதித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் போக்குக் கண்டிக்கத்தக்கது. இதனால் தலித் கிறித்தவர்கள் தலைமுறைதோறும் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சாரம், சட்டப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த அந்த நாள் தலித் கிறித்தவர்களின் வாழ்நாளிலே மறக்க முடியாத, மன்னிக்க முடியாத கறுப்பு நாள் எனக் கருத வேண்டியுள்ளது.

எனவே, ஒன்றிய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு, 1950 பத்தி 3-ஐ இரத்து செய்து தலித் கிறித்தவர், தலித் இசுலாமியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக ஆகஸ்டு 10 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்டு, பேரணிகளும் அறவழிப் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.

தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதம் என்பது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையை அங்கீகரிக்க இடையூறாக இருக்கக் கூடாது என்றும், சமத்துவத்திற்காக மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்துத் தலித் சமூகங்களும் ஒன்றுபடுவது அவசியம் என்றும் வலியுறுத்திய பேரணியில் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு வலியுறுத்துவது குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள், தென்னிந்தியத் திரு அவை பேராயர்கள், தமிழ்நாடு லூத்தரன் திரு அவை ஆயர்கள், பிற மதத் தலைவர்கள் (இந்து, முஸ்லிம், பௌத்த, சீக்கிய), அரசியல் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சமூக  இயக்கங்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள், இளையோர், மறைமாவட்ட  SC\\ST பணிக்குழுவின் செயலர் தந்தையர்கள், தலித் கிறித்தவ மக்கள், பொதுக்குழு, கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிர்வுகள் கூட்டமைப்பு, தோழமை அமைப்புகள்,  இயக்கங்கள்,  மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொதுக்கூட்டங்களைக் காவல்துறையினரின் ஒப்புதலோடு நடத்தி, அரசுக்கு நினைவூட்டல் கடிதங்களை வழங்கினார்கள்.

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில், இயக்குநர் அருள்தந்தை மரிய ஜான்போஸ்கோ (SC\\ST பணியகம்) அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் SC நிலைப்பாட்டைக் கோரும் வழக்கினை முடிவுக்குக் கொண்டு வராமல் இருப்பதோடு, தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தையும், கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரை உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் தலைமையேற்க, அருள்தந்தை ஹென்றி ஜெரோம் அவர்கள் வரவேற்புரை வழங்க, பணிக் குழுச் செயலர் அருள்தந்தை சந்தியாகப்பன் அவர்கள் தொடக்க உரையாற்றிய கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ‘எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்கள் எழுச்சி உரையாற்றினார். இறுதியில், ஒன்றிய அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எழுப்பப்பட்டன.

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் அவர்களின் வழிகாட்டுதலில், முதன்மைக்குரு பேரருள்தந்தை குழந்தைசாமி தலைமை தாங்க, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.செ. சிந்தனைச் செல்வன் எழுச்சியுரை வழங்கினார்.              

கோயம்புத்தூர் மறைமாவட்டம்

அருள்பணி. டெல்லிஸ் ரோச் ஒரு நுண்ணறிவு மிக்க உரையை நிகழ்த்தினார். சம உரிமைகளைக் கோருவதில் தொடர்ந்து வாதிடுதல் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை அவர் விரிவாகக் கூறினார். எதிர்ப்பின் அடையாளமாக அருள்பணி. ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் ஒரு கறுப்புக் கொடியை ஏற்றினார்.   விழிப்புணர்வை ஏற்படுத்த தலித் கிறித்தவர்களின் போராட்டங்களைக் கோடிட்டுக் காட்டும் துண்டுப் பிரசுரங்களும் பரப்பப்பட்டன.

மேலும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் SC/ST பணிக்குழுத் தலைவர் ஆயர் ஜீவானந்தம் மற்றும் செயலாளர் அருள்தந்தை நித்யா OFM. Cap அவர்களால், அனைத்து மறைமாவட்ட ஆயர்களின் தலைமையில் SC/ST ஆணையச் செயலாளர்கள் மற்றும் பணியாளர்களின் வலையமைப்பின் மூலம் ஏனைய மறைமாவட்டங்களிலும்  தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டப் பேரணியானது ஒருங்கிணைக்கப்பட்டது.  ‘தலித் கிறித்தவர்களுக்குச் சம உரிமை வேண்டும், ‘தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி போன்ற முழக்கங்களுடன் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

news
சிறப்புக்கட்டுரை
வழியோர உணவு!

ஒருநாள் மாலை நானும் என் நண்பர்களும் மகாபலிபுரம் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். பல்லவர்கள் கட்டிய கற்கோவில் மற்றும் கடற்கரையில் மகிழ்ச்சியாக எங்கள் நேரத்தைச் செலவழித்துவிட்டு மீண்டும் எங்கள் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். உணவு நேரமானதால், ஓர் ஓரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு அணுகுச்சாலையில் (Service Road) அமர்ந்து நாங்கள் எடுத்துச் சென்றிருந்த உணவை எங்களுக்கே உரித்தான நகைப்பு நையாண்டிகளோடு உண்டு முடித்தோம். மீதமிருந்த உணவை அருகில் வழியோரத்தில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த மக்களிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம்.  நாங்கள் அங்கு வாகனத்தை நிறுத்திய உடனேயே உரிமையோடு மீதமிருக்கும் உணவை அவர்களுக்குத்தான் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அந்த நாள் பயணம் மகிழ்வாகவும் நிறைவாகவும் அமைந்தது. அது ஒரு நல்ல அனுபவம் என்றே எண்ணினேன். ஆனால்...!

அனுபவம் எழுப்பிய அதிர்வுகள்

மறுநாள் முழுவதும் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் என் மனத்தில் வந்துகொண்டே இருந்தது. ஆம், நாங்கள் வழியோரத்தில் உணவுண்டு முடிக்கும்போது, மழை தூறத் தொடங்கியது. நாங்கள் முன்பே உறுதியளித்ததுபோல, உணவைப் பெற்றுக்கொள்ள சாலையோரம் வசிக்கும் அந்த மக்களை அழைத்தோம். அவர்கள் அங்கு வந்த பொழுது மழையும் அதிகமானது. மீதமிருந்த உணவைக் காலி செய்துவிட்டு வாகனத்தில் ஏறி, மழையிலிருந்து தப்பிப்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது. உணவைப் பெற என்முன் நின்ற அந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கு அதிக உணவு கிடைத்துவிடாதா? என்ற ஆவலில்எனக்குக் கொடுங்கள், எனக்குக் கொடுங்கள்எனக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் மழையிலிருந்து தப்பிக்கும் எண்ணத்தோடு உணவை அவர்களது பாத்திரங்களில் கொட்டிவிட்டுப் பேருந்தில் ஏறினேன். இந்த நிகழ்வு என்னில் மீண்டும் மீண்டும் நினைவாடிக்கொண்டே இருந்தது.

இடைவெளியைக் களைவது எப்படி?

வழியோரம் விழிவைத்துக் காத்திருந்து, எங்களிடம் மீந்த உணவைப் பெற்றவர்களின் அவலத்தையும், என் மனத்தில் எழுந்த வலியையும் பின்வரும் கவிதை வரிகளில் இவ்வாறு எழுத முயற்சித்தேன்:

இடைவெளி!

மீந்ததை அவள் தட்டில் கொட்டும்

என் கண்களில் ஓர் அவசரம்.

அதுதான் அன்றைய விருந்தென வாங்கும்

அவள் கண்களில் ஓர் ஏக்கம்.

என்று தீரும் இந்த இடைவெளி?’

எழுதிய கவிதையைப் புலனப் பதிவாகவும், சமூகவலைதளப் பதிவாகவும் வெளியிட்டேன். பார்த்த பலர் வாழ்த்தினார்கள். சிலர்இது எங்கு நடந்தது?’ எனக் கேள்வி எழுப்பினர். ஆனாலும், என் மனம் அமைதியடையவில்லை. என் கவிதையில் எழுப்பிய கேள்வி என் உள்ளத்திலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

உறுதியாக என்னால் உலகெங்கும் இருக்கும் இடைவெளியைச் சரிசெய்ய இயலாது. ஏன் உணவை என்னிடமிருத்து பெற்ற அந்தக் குழந்தைகளை மீண்டும் சந்திப்பதுகூட அவ்வளவு சாத்தியம் இல்லை. ‘பின்பு வேறு வழியே இல்லையா! இந்த இடைவெளியைக் களையஎன என்னுள் இருந்த கேள்வி இன்னும் ஆழப்பட்டது. தொடர்ந்து சிந்திக்கத் தொடங்கினேன், சற்றுத் தெளிவு கிடைத்தது. ஒரு மாற்றுவழி எனக்குத் தென்பட்டது. அந்த வழி எல்லாச் சூழலிலும் எல்லாருக்கும் சாத்தியம் என்றே தோன்றியது.

மனித மாண்பின் மதிப்பை உணர்தல்

அங்கு நான் கொடுக்கும் இடத்தில் இருந்தேன்; அவர்கள் பெறும் இடத்தில் இருந்தார்கள். அங்கு என் எண்ணமெல்லாம், அவர்கள் பாத்திரத்தில் உணவைக் கொட்டிவிட்டு என்னை மழையிலிருந்து தற்காத்துக்கொள்வதன் மீது மட்டுமே இருந்தது. ஆனால், என்முன் நின்ற மனிதர்களும் மாண்பிற்குரியவர்கள்; நான் எத்தகைய மரியாதைக்குரியவனோ அதே அளவுக்கு அவர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் உணரவில்லை. ஆம், அந்தச் சிறு மழைச்சாரல் நிச்சயம் என்னைப் பெரிதாய்ப் பாதித்திருக்காது. அதேநேரத்தில் நான் அந்தக் குழந்தைகளை உரிய மரியாதையுடன் நடத்தியிருந்தால், அது அவர்களின் உள்ளத்தில் ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும்.

மனிதர் என்ற ஓர் அடையாளம் போதும், ஒரு மனிதரை மனிதராக மதிப்பதற்கு. வேறு எந்த அடையாளமும் தேவையில்லையே! இந்தப் புரிதல் நிச்சயம் அந்த இடைவெளியைக் களையும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அது எனக்கு மன அமைதியையும் தெளிவையும் தந்தது.

ஞானிகள் தரும் உள்ளொளிகள்

இன்னும் சற்று ஆழமாய்ச் சிந்திக்கும்போது, இது நான் ஒன்றும் புதிதாய் அறிந்துகொண்ட ஞானமல்ல; சமூகத்தின் வெவ்வேறு நிலையில் உள்ளவர்கள் இதை ஏற்கெனவே கூறியுள்ளார்கள் என்ற தெளிவு கிடைத்தது. அவற்றுள் சிலவற்றை இங்குப் பகிர விரும்புகின்றேன்:

மனித வாழ்வின் மதிப்பு, சாதனை அல்லது செல்வத்தில் இல்லை; அது உயிர் என்றதிலேயே உள்ளது.” - மகாத்மா காந்தி

ஒருவரின் மதிப்பு, அவர் பிறந்த சமூகத்தில் அல்ல; அவர் ஒரு மனிதராக இருக்கின்றதில்தான்.” - பாபாசாஹேப் அம்பேத்கர்

அனைத்து மனிதர்களும் மனிதராகப் பிறந்த காரணத்தினாலே, ஒரே மரியாதைக்குரியவர்களாக இருக்கின்றனர்.” - நெல்சன் மண்டேலா

மனிதர்களுக்கு மரியாதை என்பது அவர்கள் பலன் தருகிறார்களா இல்லையா என்பதால் அல்ல; அவர்கள் மனிதராக இருப்பதாலே வழங்கப்பட வேண்டியது.” - மார்த்தா நஸ்பாம் (Philosopher)

மனிதனின் பண்பும் மரியாதையும் அவர் கடவுளின் உருவிலும் ஒப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளதில்தான் அடங்கியுள்ளது.” - கத்தோலிக்கத் திரு அவைப் போதனைகள் (Catechism of the Catholic Church), பிரிவு 1700

இடைவெளி தகர்ப்பிற்கான மாற்று வழிகள்

என்முன் நின்றவர்களை, என்னைப் போன்ற சக மனிதனாகப் பார்த்தால் எப்படி அங்கிருக்கும் இடைவெளி குறையலாம்? என நம்முள் ஒரு கேள்வி எழலாம். இதுபோன்ற சூழல்களில் இடைவெளியை ஏற்படுத்துவது பொருளாதாரப் பாகுபாடு மட்டுமன்று, சக மனிதரும் மாண்புடையவரே என்பதை உணர மறுப்பதே! என்முன் நின்ற குழந்தைகளை மாண்பு நிறைந்த சக மனிதர்களாகப் பார்த்திருந்தேன் என்றால், அங்கு அந்த இடைவெளியே இருந்திருக்காது. அவர்களைப் பாதிக்காத அந்த மழை என்னையும் பாதித்திருக்காது. மாறாக, அவர்களின் வாழ்க்கை நிலை என்னை வெகுவாகப் பாதித்திருக்கும்.

மழையைத் தவிர்த்துப் பேருந்தில் ஏறுவதைவிட, என்முன் நிற்கும் மனிதத்தின் பசி, அவர்களின் கண்களில் இருந்த உணவிற்கான ஏக்கம், இன்னும் கொஞ்சம் அதிகமாக எனக்குக் கிடைத்துவிடாதா? என அவர்களின் உள்ளத்தில் இருந்த ஆவல், பின்னர் அங்கிருந்த வெற்றுப் பாத்திரத்தில் ஏதேனும் இருந்துவிடாதா! எனப் பார்த்த அவர்களின் ஏக்கம் என அவர்களின் வாழ்க்கை நிதர்சனம் என் உள்ளத்தில் ஆழமாய் உறைந்திருக்கும். இவை யாவற்றிற்கும் நான் பதில்தர முடியாமல் போயிருந்தாலும், எனது அணுகுமுறையால் அவர்கள் என்னைப் போன்ற மனிதர்கள்தான், அவர்கள் மாண்பிற்குரியவர்கள் என அவர்கள் தெளியும்படி அவர்களின் உள்ளத்தில் உணர்த்தியிருப்பேன். நானும் இந்தச் சிந்தனையில் ஆழப்பட்டிருப்பேன். அவ்வாறு நடந்திருந்தால் அங்கு உணவு கொடுக்கப்பட்டிருக்காது; மாறாக, பகிரப்பட்டிருக்கும்.

மனிதத்தை மதிப்போம்

கொடுப்பது ஒருவரை உயர்த்தி, மற்றவரைத் தாழ்த்துகிறது. இங்கு ஒருவர் மட்டுமே பெறுகிறார். பகிர்வது, இருவரையும் சமமாக வைக்கிறது. இங்கு இருவருமே பெறுகின்றனர். ஆம், தவறிவிட்டேன்; ஆனால், அதே இடத்தில் நிற்க விரும்பவில்லை. இனி நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிலும், மனிதத்தைக் காணத் தீர்மானித்திருக்கிறேன். நீங்கள்?

news
சிறப்புக்கட்டுரை
சைபர் திருமணங்கள் (வலையும் வாழ்வும் – 25)

அது என்னவோ தெரியவில்லை, விமலுக்கு முப்பத்தி நான்கு வயதான பிறகும் திருமணம் ஆகவில்லை. அவன் ஓர் எலக்ட்ரீசியன். அந்தப் பகுதியில் எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முன்பாகவும் அவனிடம் முன்கூட்டியே சொல்லி வைத்து விடுவார்கள். அவ்வளவுடிமாண்ட்அவனுக்கு! அவன் வேலையில்லாமல் வீட்டில் இருந்ததே இல்லை. ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடுவான். குடும்பச் சூழல் அப்படி! நோய்வாய்ப்பட்ட தாய், பொறுப்பில்லாத அப்பா, ஒரு தங்கை என்று செக்குமாடுபோலத் தன் குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வந்துவிட்டான் விமல்.

தங்கை திவ்யாமீது அதீத அன்பு கொண்டிருந்தான் விமல். புரியாத பிரியம்! பிரிவில் புரியும் என்பதுபோல தன் தங்கைக்குத் திருமணம் என்ற பேச்சு வரும்போதே உடைந்துபோனான் அவன். ஆயினும், தன் அன்புத் தங்கைக்குத் தானே முன்னின்று கடன் வாங்கித் திருமணத்தைத் தடால் புடலாக நடத்தினான். திருமணத்தில் எந்தக் குறையும் நடந்துவிடக்கூடாது என்பதில் கருத்தாய் இருந்தான். கடனை எல்லாம் தீர்த்துத் தனக்கென்று அவன் யோசிக்கத் தொடங்கும் நேரத்தில் அவனுக்கு வயது முப்பத்தி நான்கு.

சில கல்யாணப் புரோக்கர்களிடமும் வரன் தொடர்பாகச் சொல்லிவைத்திருந்தான். அவனுடைய உருவம், படிப்பு, வேலை, குணநலம் எல்லாம் பலருக்குப் பிடித்தாற்போன்றுதான் இருந்தது. ஆனாலும், ‘ஏன் இன்னும் திருமணம் கைகூடவில்லை?’ என்பது ஒரு புதிர்தான்.

யாராவது பக்கத்து வீட்டுக்காரங்க இல்லாதது பொல்லாதது சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்காமச் செய்றாங்களோ?’ என்ற நினைப்பில் விமலின் தாய் பக்கத்து வீட்டுல யாரிடமும் பேசுவதில்லை.

டேய்! இன்னும் எத்தனை நாளுக்குத்தான் சிங்கிளாகவே இருப்ப? எப்ப கல்யாணச் சாப்பாடு போடப்போற?’ என்று மறக்காமல் எல்லாக் குடும்ப நிகழ்விலும் சொல்லிவைத்ததுபோல எல்லாரும் கேட்பதுண்டு.

உன் உடம்புக்கு ஒன்றும் பிரச்சினையில்லையேஎன்று அவனிடம் சிலர் சூசகமாகக் கேட்பாரும் உண்டு. அப்போதெல்லாம் விமலுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். இதுபோன்ற குண்டூசி வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு இப்போதெல்லாம் பழகிவிட்டது அவனுக்கு.

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணியளவில் திருமணப் புரோக்கர் ஒருவர் விமலுக்கு வரன் கொண்டுவந்திருந்தார். விமலுக்கும் அவன் தாய்க்கும் பெரும் மகிழ்ச்சி. புரோக்கரின் செல்போனில் பெண் பொலிவோடு காட்சி தந்தாள். பார்த்தவுடனேயே விமலுக்கு அப்பெண்ணைப் பிடித்துவிட்டது. “பெயர் சுவேதா, வயது 26, தனியார் பள்ளியில் வேலை, நல்ல குடும்பம்என்று புரோக்கர் பெண்ணைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டிற்கு முன்பாக ஓர் ஆட்டோ வந்து நின்றது. விமலின் தங்கை திவ்யா கையில் பெரிய சூட்கேசும், இடுப்பில் ஒரு குழந்தையுமாக வந்து இறங்கினாள்.

என்னமா இந்த நேரத்தில்? வீட்டுக்காரர் வரலியா?” என்று அவளின் தாய் அடுக்கிக் கொண்டுபோன கேள்விகளுக்கு திவ்யாவின் ஒப்பாரி அழுகையே பதிலாக இருந்தது. யாரிடமும் எதுவும் பேசாமல் கண் கலங்கிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் திவ்யா.

புரோக்கர் கொண்டுவந்த புதுப்பெண் சுவேதாவைச் செல்போனில் பார்த்துப் பரவசமடைந்து திருமணம், புதிய வீடு, பிள்ளைப்பேறு என்று விமல் கனவில் திளைத்திருந்தபோது, இஸ்ரயேல் குண்டு மழையில் தரைமட்டமாகிப்போன காசா வீடுகள்போல அவன் கனவுகளும் நொடிப்பொழுதில் புழுதியில் புதைந்து போயின.

தன் தாய், தந்தை, தங்கை, அவளின் குழந்தை என்று மறுபடியும் பம்பரமாகத் தன் குடும்பத்திற்காகச் சுற்றத்தொடங்கினான் விமல். காலச் சக்கரத்தில் ஆண்டுகள் பல கடந்தாலும், “டேய்! இன்னும் எத்தனை நாளுக்குதான் சிங்கிளாகவே இருப்ப? எப்ப கல்யாணம்? ‘உன் உடம்புக்கு ஒன்றும் பிரச்சினையில்லையே?” என்ற கேள்விகள் மட்டும் கடந்துபோகாமலேயே விமலை மீண்டும் மீண்டும் சுற்றி வந்துகொண்டிருந்தன.

விமலைப்போலவும், அவனின் தங்கை திவ்யாவைப்போலவும் இன்று ஏராளமானவர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது பல கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளையும் கொண்டிருக்கும் சுருக்குப்பை என்றே சொல்லலாம்.

சைபர் திருமணங்கள் பற்றிக் கொஞ்சம் பேசுங்கள்என்று வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டதனால் இப்பதிவு சைபர் திருமணங்களையும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் பற்றிப் பேசுகிறது.

இந்தியக் கலாச்சாரத்தில் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம். இன்று திருமணத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்கக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைய  திருமணங்களில் பல குழப்பங்கள் மற்றும் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதிகரிக்கும் விவாகரத்துகள், தற்கொலைச் செய்திகள், வரதட்சணைக் கொடுமைகள், கௌரவக் கொலைகள் என்று நீண்டுகொண்டு போகின்ற குற்றப் பட்டியலே இதற்குச் சான்று. எனினும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைசிறப்புத் திருமணச் சட்டம் - 1954’ அடிப்படையில் சைபர் திருமணத்தைச் சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு அங்கீகரித்திருக்கிறது.

2022-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த வாஸ்மி சுதர்சனிக்கும், அமெரிக்காவைச் சார்ந்த இராகுல் மதுவுக்கும் சைபர் திருமணம் மூன்று சாட்சிகள் முன்னிலையிலும், மணவாளக் குறிச்சி துணைப்பதிவாளர் முன்னிலையிலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.

சைபர் திருமணங்கள் ஒருபுறமிருக்க, இணைய வழி திருமணச் சேவைகள் (Globle Matrimonial Sites) மழைக்காலப் புற்றீசல்களைப்போல அதிகரித்திருக்கின்றன. இன்று திருமணச் சேவைத்தளங்கள் இணையத்தில் காணக்கிடக்கின்றன. இணையச் சேவை வழியாக நடைபெறும் திருமணங்கள் மற்றும் அதன் நீடித்தத்தன்மை குறித்த ஆய்வு இன்று தேவைப்படுகின்றது.

சைபர் திருமணத் தளங்கள் இன்று பல்வேறு சைபர் குற்றங்களின் விளைநிலமாகவும் உள்ளன என்று இந்திய உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளதோடல்லாமல், அவற்றை எவ்வாறு கவனமாகப் பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. ஒரு மேட்ரிமோனியல் இணையத்தளத்தில் தங்கள் தரவுகளைப் பதிவு செய்வதற்கு முன்பாக அத்தளத்தின் உண்மைத்தன்மையை மறுசீராய்வு செய்து பார்க்கவேண்டும். இத்தளங்களின் வழியாகச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கின்றவர்களை மறைமுகமான இடத்தில் தனிமையில் அல்லாமல், பொது இடங்களில் துணையாளர் ஒருவரின் உடனிருப்போடு சந்திப்பது நல்லது. இவ்வகை இணையத்தளங்களில் அறிமுகமாகின்ற மனிதர்கள் பற்றிய விவரங்களை நண்பர்களோடும் அல்லது பெற்றோரோடும் பகிர்ந்துகொள்ளலாம்.

மேட்ரிமோனியல் இணையத்தின் வழியாகச் சந்திக்கும் மனிதர்களிடம் பணத்தையோ அல்லது அந்தரங்கப் புகைப்படங்களையோ பரிமாறிக் கொள்ளக்கூடாது. இணையத்தள மோசடிகள் எந்த வகையிலும் வரலாம்; எனவே, மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இணையம் ஒரு மனிதனின் வாழ்வில் எந்நாளும் நீடித்திருக்கின்ற உறவுகளை ஒன்றிணைக்கின்றது. முகம் தெரியாத இரண்டு பேரை அறிமுகப்படுத்தி, அவர்களைத் திருமணம் என்னும் உறவில் இணைக்கின்றது. எனினும், இதயங்களை இணைக்கின்ற இணையம் மோசடியில் ஈடுபடுவதை என்னவென்று கூறுவது?!

news
சிறப்புக்கட்டுரை
மோடி 75 பதவி விலகுவாரா?

பா... கட்சி என்பது ஆர். எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு; இது இந்திய அரசியலின் இந்துத்துவா முகமும் முக மூடியுமாகும். மோடியும் அமித்ஷாவும் தன் தாய்வீடான ஆர்.எஸ். எஸ். அமைப்பிற்கு இணங்க மறுக்கிறார்கள்; பதவி மோகத்தில் பிடிவாதம் பிடிக்கிறார்கள். “75 வயதானால் புதியவர்களுக்கு வழிவிட அமைப்பு, கட்சி, ஆட்சி என அனைத்துப் பொறுப்புகளிலிருந்து தானே விலக முன்வரவேண்டும்என்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமைப்பீடம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதிகள் பா...வுக்குப் பொருந்தாது என மோடியின் துதிபாடிகள் வியாக்கியானம் பேசுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். பெரியதா? பா... பெரியதா?’ என்ற கேள்விக்கான விடை, ‘ஆர்.எஸ்.எஸ். பெரியதுஎன்றே முடிவாகும். இராமர் கோவில் திறப்பு விழாவில் முதல் மரியாதை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்குத் தரப்பட்டது. இரண்டாம் மரியாதை உத்தரப்பிரதேச முதல்வர் யோகிக்குக் கொடுக்கப்பட்டது. மூன்றாம் மரியாதை இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரசாதத் தேங்காயைத் தவறுதலாக மோடிக்குத் தர நீண்ட கரம் இழுக்கப்பட்டது. அது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சென்றது.

பா...வில் 75 வயதானால் பதவி விலக வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விதி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், ஜஸ்வந்த் சிங், கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு இது செயல்முறையானது. இவர்கள் 75 வயதை எட்டும்முன் வயதைக் காரணம் காட்டிசீட்மறுக்கப்பட்டது. நம்மூர் ஹெச். இராஜாவுக்கும் இவ்விதி பொருந்தியது. இல. கணேசன் அவர்களுக்கு மட்டும் அவர் தீவிர ஆர்.எஸ்.எஸ். என்பதால் ஆளுநராகப் பதவி தொடர்கிறார்.

75 வயதானால் தானாகப் பதவி விலகவேண்டும், மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும்என்று ஜூலை 09 அன்று நாக்பூரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுகிறார். இதைக் கூறுகிற மோகன் பகவத் அவர்களுக்குச் செப்டம்பர் 11-இல் 75 வயதாகிறது. பகவத், தான் பதவி விலகும்முன் புதிய ஆர்.எஸ்.எஸ். தலைவரையும், பா... தேசியத் தலைவரையும், புதிய பிரதமரையும் அடையாளம் காணவேண்டிய பெரும் பொறுப்பு அவருக்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய தலைவராக கர்நாடகாவைச் சேர்ந்த தத்தாத்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதே மேல் மட்டத்தில் கசியும் தகவல். இவர்தான் சனவரி 2025-இல் இந்திய அரசியல் சாசனச் சட்ட முகப்பில்சமதர்ம சமயச் சார்பற்றஎன்ற வரிகளை நீக்கவேண்டும் எனப் பேசி பரபரப்பு ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா... கட்சிக்கு நட்டாவுக்குப் பிறகுயார் அடுத்தத் தலைவர்?’ என்ற போட்டி நடக்கிறது. மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணி அதிரடியாக நடக்கிறது. அதன் முடிவில் பா... தேசியத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்நிதின் கட்காரி அல்லது நிர்மலா சீதாராமன் என்ற இருவர் பெயரும் ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பேசப்படுகிறதுசரி, ‘மோடிக்குப் பின் அடுத்தப் பிரதமர் யார்?’ என்ற கேள்விக்கு இராஜ்நாத் சிங் பெயரை ஆர்.எஸ்.எஸ். முன்மொழிகிறது. அடுத்த 2029 மக்களவைத் தேர்தலுக்கு ஆர்.எஸ்.எஸ். தன் செல்லப்பிள்ளையான உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை முன்நிறுத்தத் திட்டம் தீட்டுகிறது.

பிரதமர் மோடி செப்டம்பர் 17-இல் தனது 75 வயதில் ஓய்வு பெறவேண்டும். மோடி ஓய்வு பெறுவாரா? என்பது பெருங்கேள்வி. பா... மூத்த தலைவர்கள், ‘மோடியின் முகமே பா...வை மூன்று முறை ஆட்சிக் கட்டிலில் ஏற்றியது. அவரே தொடர்வார்என்கிறார்கள். மகாராஷ்டிரா முதல்வர் பட்னா விஸ் ஒரு படி மேலே சென்று கூறுகிறார்: “அப்பா உயிரோடு இருக்கும்போதே அடுத்த வாரிசு யார்? என்ற பேச்சு தேவை இல்லை; இது அடிப்படையில் மொகலாயர்களின் கலாச்சாரம்என்கிறார்.

வாருங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா...வின் 75 வயது ஓய்வு பற்றிய வரலாற்றைப் புரட்டுவோம்.

2014-2016-களில் குஜராத் முதல்வராக இருந்தவர் ஆனந்தி பென் பட்டேல். அவருக்கு 2016, நவம்பரில் 75 வயதாகிறது. ஆனந்தி பென் ஆகஸ்டு மாதமே பதவி விலகுகிறார். அவரது அறிவிப்பு ‘75 வயதாகி விட்டது, கட்சி விதிகளின்படி விலகுகிறேன்என்பதே. அப்போது அமித்ஷாஎல்லாருக்கும் ஆனந்தி பென் சிறந்த வழிகாட்டலை உருவாக்கிவிட்டார், இது எல்லாருக்கும் பொருந்தும்என்றார்.

சவுகானின் மத்தியப்பிரதேச அமைச்சரவையிலும், மந்திரி சபை மாற்றம் என்ற பெயரில் 75 வயதான மூத்த அமைச்சர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். 2019-இல்தி வீக்பத்திரிகைக்கு அமித்ஷா அளித்த நேர்காணலில் “75 வயதைத் தொடும் மூத்த தலைவர்களுக்குச்சீட்தரமாட்டோம்; இது எங்கள் கட்சியின் விதிஎன்கிறார். 2024  மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில்ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடியின் 75 வயது பணி மூப்பு பதவி விலகல் பற்றிப் பேச 2029-லும் மோடியே பிரதமர் வேட்பாளர் என பா... முட்டுக்கொடுத்தது.

மோடியின் வெளிநாட்டுப் பயணங்களையும், உயரிய விருதுகள் என்ற பெயரில் வீண்பெருமை தேடுவதையும் ஆர்.எஸ்.எஸ். இரசிக்கவில்லை. பொதுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனிமனித வழிபாட்டையும், தனிமனித காட்சி அரங்கேற்றத்தையும் விரும்புவதில்லை. இந்துத்துவா குறித்த பொதுச் சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், குடியுரிமைச் சட்டம் என்பதில் பா...வின் வேகம், மோடியின் செயல்திறன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் கொதி நிலைக்குத் தள்ளியுள்ளது.

மூன்றுமுறை நடந்த மோடி-மோகன் பகவத் சந்திப்புகளும் பயனற்றுப் போயின. மதவாதத்தை வைத்து நீண்ட நெடிய அரசியல் நடத்த முடியாது என்று உணர்ந்த பா...வின் எதார்த்தம் ஆர்.எஸ். எஸ். தலைவர்களுக்கு எரிச்சல் மற்றும் கோபமூட்டுகிறது. மோடி பதவி விலக செப்டம்பர் 11-இல், 75 வயதாகும் மோகன் பகவத் பதவி விலகி நெருக்கடி கொடுப்பார் எனப் பேசப்படுகிறது.

2024 - மக்களவைத் தேர்தலின்போதே ஆர்.எஸ்.எஸ். - பா... மோதல் உச்சம் பெற்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேர்தல் வேலையைச் செய்ய மறுத்தது. அதன் விளைவாக உத்தரப்பிரதேசத்தில் பா... 43 தொகுதிகளை இழந்து பெரும்பான்மை இல்லாத அரசாக உருவானது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா...வைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கத் திட்டமிடுகிறது. அமித்ஷா போன்றோர் 75 வயதில் பதவி விலகல் என்பது பா... கட்சியின்  சட்ட விதிகளில் இல்லை என அடம்பிடிக்கிறார்கள். ஏனெனில், அமித்ஷாவும் ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்டார்.

மோடிக்கும் மோகன் பகவத் அவர்களுக்கும் தன் முனைப்பு (ஈகோ) பிரச்சினை உச்சம் பெற்றுள்ளது. அது எதில் முடியும்? என்பதே வரும் நாள்களின் இந்திய அரசியல். இதில் அதிகபட்சமாக ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது.

பிரதமர் மோடியும் பா...வும் தங்கள் பதவி ஆசைகளைத் துறந்து, இந்துத்துவா தவிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து விலகி, மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? என்பதே ஆதங்கமும், நடுநிலையாளர்களின் கேள்வியுமாகும்.

news
சிறப்புக்கட்டுரை
திண்ணைவாசி (வலையும் வாழ்வும் – 24)

இராமையாவிற்கு முதுமை என்ற தீராத நோய். நாட்டு வைத்தியம் முதல் ஆங்கில மருத்துவம் வரை பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. முதுமைக்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால், அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு முதுமை என்பது ஒரு நோய். முதியவர் என்பவர் ஒரு நோயாளர்.

இராமையா அந்த ஊரில் மிக முக்கியமானவர். வசதியாக வாழ்ந்தவர். அந்த ஊரிலேயே பெரிய வீடு ஒன்றைக் கட்டினார். யார் கண் பட்டதோ தெரியாது, தன் மனைவி சரோஜாவின் திடீர் மரணம் இராமையாவைத் தடுமாறச்செய்தது. இராணித் தேனி இல்லாத தேன்கூடு கலைந்துபோகும் என்பதுபோல சரோஜா இல்லாத அந்தக் குடும்பம் நிலைகுலைந்துப் போனது. எல்லாவற்றையும் இழந்தாலும் தாயில்லாத தன் மகன் அகிலனை ஒரு தாயைப்போல பராமரித்து, படிக்கவைத்து திருமணமும் செய்து வைத்தார் இராமையா.

மருமகள் கீதா கெட்டிக்காரிதான். ஈரோடு டவுனில் பிறந்து வளர்ந்தவள். கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்திருக்கிறாள். தொடக்கத்தில் புல்லாணி கிராம வாழ்க்கை அவளுக்குச் சிரமமாகதான் இருந்தது. நிறையவே சுத்தம் பார்ப்பாள். இராமையாவின் முதுமையும் சுத்தமின்மையும் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. வெற்றிலைக்கறைப் பற்கள், மஞ்சள் குளித்த ஆடை, வேப்பெண்ணை நெடி... கீதாவிற்கு அவரைப் பார்க்கும்போதே எரிச்சலைத்தான் தந்தது.

தனக்குப் பிறந்த மகனை அவள் இராமையாவிடம் இதுவரை கொடுத்ததில்லை. ஆசையாய் கடைத்தெருவிலிருந்து மிட்டாய் வாங்கி குழந்தைக்குக் கொடுப்பார். “மாமா! அவனுக்கு நீங்க ஒண்ணும் வாங்கித் தரவேண்டாம். இட்ஸ் நாட் ஹைஜீனிக் என்பாள் கீதா.

ஒருமுறை குழந்தை, தாத்தாவின் மடியிலே புரண்டு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையிடமிருந்து பஞ்சுமிட்டாயைப் பறித்தெடுப்பதுபோல தன் மாமனாரிடமிருந்து குழந்தையைப் பறித்தெடுத்தாள். இராமையாவால் இந்தத் ‘தீண்டாமைக் கொடுமையை யாரிடமும் கூறமுடியவில்லை. ‘சரோஜா போனபிறகு அகிலனை நான்தான் சிறிய வயதிலிருந்து ஒரு தாயா வளர்த்தேன். நீ எனக்கே பிள்ளை வளர்க்க சொல்லித்தாரியா?’ என்று சில நேரங்களில் மருமகளிடம் கேட்க வேண்டும்மென்று தோன்றும். ஆனாலும், மனதிற்குள்ளேயே எல்லா உணர்வுகளையும் மறைத்துவைப்பார்.

அப்பா! நீங்க உங்க ரூம்ம கொஞ்சம் சுத்தமா வச்சிகோங்க. அங்கிருந்து ஸ்மெல் வருதாம். குழந்தைக்கு அது அலர்ஜி ஆகுதாம் என்று ஒருநாள் தன் மகன் அகிலனே தன்னிடம் கூறியதை இராமையாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அன்றே பெட்டிப்படுக்கையை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு வந்துவிட்டார். “நாமளா அவர அனுப்பினோம். அவர்தானே போனார்! இனி அங்கேயே கிடக்கட்டும் - கீதாவின் கடுஞ்சொல்லை வழக்கம்போல அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அந்த நாளிலிருந்து இராமையா தன் வீட்டுத் திண்ணையில்தான் வசிக்கிறார். அவரே வெளியே தனியாகச் சமைக்கிறார். இரவில் திண்ணையில் படுத்துக்கொள்கிறார். இப்போதெல்லாம் அந்தச் சிறு பையன்கூட தாத்தா பக்கம் வருவதில்லை. மாட்டுவண்டியின் சக்கரம் கழன்று சாலையில் கட்டுப்பாடின்றி ஓடுவதுபோல ஆண்டுகளும் பல கட்டுப்பாடின்றி வேகமாக ஓடின. முதுமையில் வாடிய அந்தக் கிழவன், தான் கட்டிய வீட்டுத் திண்ணையில் பல ஆண்டுகளாய் தீண்டத்தகாதவனாகவே கிடந்தான். குளிரிலும் மழையிலும் நோயிலும் வேதனையிலும் அங்கேயே கிடந்தான். மகனும் மருமகளும் மன்னிப்புக் கேட்டுவிட்டு அடுத்த நாளே வீட்டிற்குள் அழைப்பார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டுவிட்டார் போலும்! அது நடக்கவேயில்லை. இனியும் நடப்பதற்கான சாத்தியக்கூறு ஒன்றும் தென்படவில்லை.

ஒருநாள் காலைக் கதிரவன் எழும்போது அவர் மட்டும் திண்ணைப் படுக்கையிலிருந்து எழவே இல்லை. அடக்கச்சடங்குகள் எந்தக் குறைபாடும் இல்லாமல் ஆடம்பரமாக நடந்து முடிந்தன. எந்தக் குற்றவுணர்வுமில்லாமல் அகிலன் இராமையாவின் புகைப்படத்தை அந்த மச்சுவீட்டில் மாட்டப்பட்ட தன் தாய் சரோஜாவின் பக்கத்திலே மாட்டிவைத்து மாலையிட்டான். இத்தனை ஆண்டுகள் திண்ணையிலேயே மக்கிக்கிடந்தவர் புகைப்பட வடிவிலே மச்சுவீட்டு மகாராசரானார். தீண்டத்தகாதவர் இன்று தீட்சிதர் ஆனார்!

அகிலன், அவன் மனைவி கீதா மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் அந்தப் புகைப்படத்தின் முன்பாக நின்றுகொண்டு ஒரு ‘செல்பி எடுத்துக் கொண்டார்கள். ‘வீ மிஸ் யூ அப்பா!’ என்று தன் ‘பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுத் தன் நண்பர்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பெற்றுக்கொண்டான் அகிலன். நடந்ததனைத்தையும் அந்த வீட்டுத் திண்ணை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. இராமையா சுத்தமில்லாதவர், அழுக்கு மூட்டை என்றெல்லாம் கதைகட்டி அவரைத் தன் கணவரிடமிருந்தும் மகனிடமிருந்தும் பிரித்து வீட்டை விட்டு வெளியேறச் செய்து திண்ணைவாசியாக்கிய கீதா இன்றைய ஊடக மொழியில் ஓர் ‘இன்புளுவன்சர் (Influencer).

இன்றைய வலைத்தள உலகில் செல்வாக்காளர்கள் (Influencers) அதிகம் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கிறோம். பத்து இலட்சத்திற்கும் மேல் ‘பின் தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர் கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மெகா இன்புளுவன்சர்ஸ் (Mega-influencers) என்று அழைக்கிறோம். அதுவே ஓர் இலட்சம் முதல் பத்து இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) கொண்டிருப்பவர்களை ‘மேக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Macro-influencers) என்று அழைக்கிறோம். மேலும், ஆயிரம் முதல் ஓர் இலட்சத்திற்குள்ளாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers)  கொண்டிருப்பவர்களை ‘மைக்ரோ இன்புளுவன்சர்ஸ் (Micro-influencers) என்று அழைக்கிறோம். இதுவே ‘நேனோ இன்புளுவன்சர்ஸ் (nano-influencers)  என்றும் ஆயிரத்திற்கும் குறைவாக ‘பின்தொடர்பவர்கள் (Followers) அல்லது ‘சந்தாதாரர்கள் (Subscribers) என்று அழைக்கிறோம்.

உற்பத்தியாளர்களோடு கைகோர்த்துக்கொண்டு பொருளைச் சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துவதில் சமூக ஊடகச் செல்வாக்காளர்களின் (Influencers) பங்கு மிக அதிகமாகவே உள்ளது. டிஜிட்டல் உலகில் இதனையே செல்வாக்காளர்வழி சந்தைப்படுத்துதல் (Influencer- Marketing) என்கின்றனர்.

சமூக ஊடகங்களில் ‘இன்புளூவன்சர்கள் என்று அறியப்படுபவர்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, ஒருவருடைய அல்லது ஒரு கட்சி சார்ந்த கருத்தியலையும், தன்னைப் பின்தொடர்பவர்களிடம் சந்தைப்படுத்துகின்றனர். இதனை ‘சோசியல் இன்ஜினியரிங் (Social Engineering) என்கிறோம். நாம் எதைப் பேச வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எதைப் பார்க்கவேண்டும்? யாருக்கு வாக்களிக்கவேண்டும்? எங்குச் செல்லவேண்டும்? என்ன படிக்கவேண்டும்? எதை உண்ணவேண்டும்? என்பதைப் பல நேரம் நமக்குத் தெரியாமலேயே தீர்மானிப்பவர்களாகவும் திணிப்பவர்களாகவும் இந்த ‘இன்புளூவன்சர்கள் இருக்கின்றார்கள்.

சமூக ஊடகங்களில் வரும் இன்புளூவன்சர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; விமர்சனப் பார்வையோடு அவர்களையும் அவர்களின் கருத்துருவாக்கத்தையும் அணுகுவது நல்லது!