news
சிறப்புக்கட்டுரை
யூபிலி ஆண்டின் கிறிஸ்துமஸ்!

காரிருள் மறைய பேரொளி உதித்தது!

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளதுஎன்னும் எசாயாவின் இறைவாக்குப் பகுதி (எசா 9:2) கிறிஸ்துமஸ் நள்ளிரவன்று எல்லாத் திருவழிபாடுகளிலும் அறிவிக்கப்படும். அன்றைய இஸ்ரயேல் மக்களின் இருண்ட காலச்சூழல் போன்றே நம்முடைய இன்றைய உலகச் சூழலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அடிமைத்தனமும் சந்தர்ப்பவாதங்களும், நாடுகளிடையே போர்களும் ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும், பேரழிவுகளும் அவற்றினால் புலம்பெயர்ந்து வாழ்வோரின் அடிமைத்தன வாழ்க்கை நிகழ்வுகளும், எதார்த்தங்களும் இவ்வுலகைச் சூழ்ந்திருக்கும் காரிருளாக, இருண்ட மேகங்களாக அமைந்திருப்பதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அனைவரும் உடன்பிறந்தோர்என்னும் சமூகச் சுற்றுமடலில் குறிப்பிடுகிறார்.

எசாயாவின் இறைவாக்கு இஸ்ரயேல் மக்களின் இருளான, நம்பிக்கையற்ற, சோர்வான, மகிழ்ச்சியற்ற வாழ்விற்குப் புதிய விடியலைக் கொணர்ந்தது. ‘இருள்என்றாலே நம் அனைவருக்கும் மிகுந்த பயத்தை உருவாக்கும் சூழலில்காரிருள்என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் எசாயா, இஸ்ரயேல் மக்கள் மிகவும் துன்பமான வேதனை மிகுந்த சூழலில் வாழ்ந்தனர் என்றே உருவகப்படுத்துகின்றார். காரிருளை மறைக்க, பேரொளி அவசியமாகின்றது. அது சாதாரண ஒளி என்று குறிப்பிடாமல்பேரொளிஎன்று குறிப்பிட்டு மெசியாவின் மீட்பின் செயலானது இஸ்ரயேல் விரும்பும் விடுதலையை, நம்பிக்கையை, முழுமையான, நிறைவான வாழ்வை வழங்கிடும் என உறுதிப்படுத்துகிறார்.

காரிருள் இவ்வுலகின் இருண்ட சூழல்கள்

காரிருள் நம்மைச் சூழும்பொழுது நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நாம் அறிவதில்லை. அச்சூழல் நமக்கு மிகுந்த அச்சத்தைத் தருகின்றது. உள்ளத்தில் பதைபதைப்பும், அமைதியற்ற சூழலும் உருவாகின்றது. வாழ்வின் அடுத்த நகர்வை எப்படி அமைப்பது எனக் குழப்பமும் தெளிவின்மையும் உள்ளத்தை ஆட்கொள்கின்றது. குற்றங்களும், வன்முறைகளும், போர்க் குண்டுகளின் வீச்சுகளும் காரிருளில்தான் நடந்தேறுகின்றன. போர்ச்சூழலில் சிக்கியிருப்போர், புலம்பெயர்ந்தவர்கள், வீடுகளின்றித் தவிப்போர், சாலைகளில் உறங்குவோர், அடுத்த உழைப்பினை எதிர்நோக்கி உறங்குவோர் என அனைவரும் இவ்விருள் எப்பொழுது கடந்து செல்லும் எப்பொழுது வாழ்வு விடியும் எனக் காத்திருப்பது நிதர்சமான உண்மையே. காரிருள் எதிர்நோக்கைத் தருகிறது.

பேரொளி-இயேசு நம்பிக்கையின் கீற்று

யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய முன்னுரைப் பாடலானவாக்கு மனிதரானார்என்னும் இறைவார்த்தைகளில், இயேசுவை உண்மையான ஒளியாகப் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றார். “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டாயிற்று (யோவா 1:9-10). உண்மையான ஒளியான இயேசுதாம் நம் கடவுள் யார் என்பதை நமக்குக் காட்டுகிறார்.

இறைவனின் முகம் இரக்கத்தின் முகம் என அறிவிக்கின்றார்; கடைநிலையில் இருப்போரைக் கண்ணுற்று, மனிதப் பார்வையை ஒளியேற்றி, எல்லா மனிதர்களையும் இறைவனின் சாயலாகக் காணும் உள்ளொளியை  வழங்குகின்றார். காரிருள் சூழ்ந்த இடத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக, இரவின் இருளை அகற்றிட இயேசு கன்னி மரியின் மகனாக மனுவுடல் எடுக்கிறார் என்கிறார்எத்தகைய இருள் சூழ்ந்த நிலையிலும் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு உள்ளார் என்னும் நம்பிக்கையை விதைக்கிறார்.

இவ்வுலகின் காரிருளில் உள்ள பிரிவினைகளைவிட கிறிஸ்துவின் ஒளி மிகவும் பிரகாசமானது; இவ்வுலகை ஒளிர்விக்கக் கூடியதுஎனக் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் அனைவரின் உள்ளத்திலும் சமூகத்திலும் இருள் சூழ்ந்திருந்தாலும், இயேசுவின் ஒளியானது அவற்றினை முற்றிலும் வெல்லும். நமது குடும்ப உறவுச் சிக்கல்களினால், பொருளாதார ஏற்றத்தாழ்வினால், அரசியல் சூழ்நிலைகளால், சுற்றுச்சூழல்களின் சீரழிவினால் ஏற்படும் இருள் சூழ்ந்த சூழமைவைவிட இயேசுவின் ஒளி பிரகாசமானது என நம்பிக்கைகொள்வதுதான் கிறிஸ்து பிறப்பின் செய்தியாக அமைகிறது. எல்லாக் கருமேகங்களுக்கு இடையேயும் வெள்ளிக் கோடு  ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவோம். இவ்விருள் சூழ்ந்த போராட்டங்களும், பிணக்குகளும், அச்சுறுத்தல்களும் அகன்றிட, அகற்றிட முயற்சி மேற்கொள்வோம். யூபிலி ஆண்டில் இயேசுவின் பேரொளியைத் தேர்ந்தெடுப்போம், வளர்த்திடுவோம், வழங்கிடுவோம்.

இயேசுவின் பேரொளியே இவ்வுலகின் இருளை அகற்றிவிடும் மாபெரும் சக்தி. அப்பேரொளியின் பாதை உண்மையை, அமைதியை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை, மன்னிப்பை, இரக்கத்தை, சகோதரத்துவத்தை வழங்கும் வாழ்வின் பாதையாக விளங்கிடும். ஆகவே, இறைநம்பிக்கையின் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

நாம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகக் கொண்டாடவிருக்கும் யூபிலி 2025 -ஆம் ஆண்டில் நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கியவர்களாக அதனை இறுகப்பற்றியவர்களாகப் பிறரையும், இவ்வுலகையும் ஒளிர்விப்போம்.

இருள் சூழ்ந்த சூழலிலும் இயேசு என்னும் நம்பிக்கையின் ஒளி நம்மைத் தேடி வருகின்றது. அவரை வரவேற்போம். நம்முடைய வாழ்வு  புத்தாக்கம் பெறவும், இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பொருள்படவும், இயேசு என்னும் பாலகனை மையப்படுத்துவோம். அவரின் பேரொளியினால் ஒளிர்விக்கப்பெற்று, சகோதரத்துவத்தினால், சமத்துவத்தினால், அமைதியினால் நிரப்பிடுவோம்!

news
சிறப்புக்கட்டுரை
சட்டம் ஓர் இருட்டறைதானா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மெகர் சந்த் மகாஜன், தன் சொந்த வாகனத்தில் டார்ஜிலிங் செல்கிறார். போக்குவரத்துச் சிக்னலைக் கவனிக்காமல், நீதிபதியே தவறு இழைக்கிறார். போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அபராதம்  விதிக்கிறார். நீதிபதியும் தவறை உணர்ந்து அபராதம் செலுத்த முனைகிறார். காவலர் சொல்கிறார்: “நீங்கள் நீதிமன்றத்தில்தான் நாளை அபராதம் கட்ட வேண்டும்.”

நீதிபதியும் மறுநாள் கூண்டு ஏறுகிறார். வழக்கம் போல் பெயர், தொழில் கேட்டவுடன், நீதிமன்றமே அதிர்ந்து, எழுந்து  நின்று வணங்குகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அனைவரையும் கையசைத்து அமரச் சொல்கிறார். வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி முதல் முறையாக அறியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கும்  தன் அதிகாரம் கொண்டு தலைமை நீதிபதியை விடுவிக்கிறார். இதுபோல சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர்நிலை மனிதர்களை வரலாறு அடையாளங்காட்டியுள்ளது.

ஒருநாள் பெரும் வணிக வளாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தேன். பின் இருக்கைக் கார் கண்ணாடி திறக்கப்பட்டு, முகம் அறியாத ஒருவர் வணக்கம் கூறி, நகர்ந்து உட்கார்ந்து, ‘காருக்குள் வாருங்கள்என்றார். நாம் குழப்பத்தோடு பார்க்க, அவர் சொன்னார்: “நான் இந்த ஊரில் நீதிபதியாகப் பணியாற்றுகிறேன். நீங்கள் உள்ளே செல்லும் போது என் ஒட்டுநர் என்னிடம் சொன்னார், நீங்கள் தினகரன் நாளிதழில் விரும்பிப் படிக்கும் கட்டுரைகளை எழுதும் நம்மூர்காரர் இவர்தான்என்றார். நாம் சிரித்தவாறே அருகே அமர்ந்திருந்தோம். நீதிபதி சொன்னார்: “நாங்கள் நீதிபதியாக இருப்பதால் பொதுச் சமூகத் தொடர்புகளை அறுத்துக்கொள்வோம்.”

நாம் கை கூப்பி விடைபெற்றோம். அந்த நீதிபதி பணிமாறுதல் பெற்று, தொலைதூரம் சென்று விட்டார். அப்படிப்பட்ட அவர் தன் விடுமுறை முடிந்து, தான் பணியாற்றும் ஊருக்கு இரவு நேர அரசுப் போக்குவரத்துக் கழகப்  பேருந்தில் பயணிக்கிறார். பயணத்திலே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிகிறது. அவர் ஒரு நீதிபதி என்று அவரது உடலை அடையாளம் காண வந்த காவலர்கள் அதிர்கிறார்கள். இவ்வாறான நீதிபதிகள் சாமான்ய மக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கைகளை உறுதி செய்தனர்.

டான்சிவழக்கு அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  வரும்வரை எல்லாம் நீர்த்துப் போய், எந்த அடிப்படை அறனுமின்றி முதல்வராகத் தொடர்ந்தார் ஒத்தை ரூபாய் சம்பளம் வாங்கிய  செல்வி ஜெயலலிதா. அவரது சொத்துக் குவிப்பு வழக்குகூட ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ற நல்ல கிறித்தவ நீதிபதியிடம் சென்ற பின் நியாயம் கிட்டியது. நீதிபதி குமாரசாமியின் ஜெயலலிதா  குவித்த  சொத்துக் கணக்கீடு நகைப்பை நாடெங்கும் உண்டாக்கியது. நீதிபதி குன்ஹா, தன் குடும்ப நபர்களைத் தவிர, தன் மாமனாரிடம் மட்டுமே பேசக்கூடிய ஆளுமையாக இருந்தார். அவரது மாமனாரிடம்ஜெவுக்காகத் தூது போனது யார் என்பதை நாடறியும்.

இராமர் கோவில் வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்து தீர்ப்பானது, இராமர் கோவில் ஐந்து நூற்றாண்டுகளாக இராமரை அவ்விடத்தில் வைத்து வழிபட்டார்கள் என்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்ப்பு  வழங்கப்பட்டது. நீதிபதி சந்திர சூட் சொல்கிறார்: “நான் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு வழங்குவது என என் பிரார்த்தனையின்போது இறைவனிடம் கேட்டேன்இறைவனின் வழிகாட்டுதலில் தீர்ப்பு கிடைத்ததுஎன்கிறார். பொதுவெளியில் இறைவனே தீர்ப்புக்கு வழிகாட்டுவார் எனில், எதற்காக நீதிபதி சந்திர சூட் ஹார்வோர்டு சட்டப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று  சட்டம்  படித்தார் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ் யந்த் தாவே ஒரு நேர்காணலில், “எனது  46 வருட சட்டப்பணி அனுபவத்தில் அதிகம் வெளியே தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் அவர்களைப் பார்க்கிறேன். அவர் சுய விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். தனது வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப் பிரதமர் மோடியை அழைத்து விளம்பரம் தேடுகிறார்என்கிறார்.

மேலும், “நீதிபதிகள் தங்கள் மதம் மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொது வெளியில் பிரதிபலிப்பதின் மூலம், அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். பிரதமரைத் தன் வீட்டிற்கு அழைத்ததன் பேரில், நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசின் தாக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழலாம். இதனால் நீதிபதி சந்திர சூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தைச் சிதைத்து விட்டார்என்கிறார். ஆனால், பிரதமர் அலுவலகமோ, தலைமை  நீதிபதி சந்திர சூட் அவர்களின் துணைவியாரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார் என அறிக்கை தருகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தேர்தல் பத்திர வழக்கில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. தரவுகளைத் தர மறுத்த, தாமதப்படுத்திய, பாரத ஸ்டேட் வங்கி குறித்து, எந்தக் கண்டனங்களும் இல்லை. பணம் கொடுத்ததற்கும், வாங்கியதற்குமான உள்நோக்கம் ஆராயப்படவில்லை.

சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியைகிரிமினல்என வருணித்து விட்டு, அவர்மீது  எந்த நடவடிக்கையும் இல்லை; ஷிண்டே - பட்னாவிஸ் அரசாங்கத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்ததற்கும், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அறிவித்ததற்கும், அதன்பின் எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல் அரசைத் தொடர அனுமதித்ததற்கும், சட்டத்திற்குப் புறம்பாக சபாநாயகரிடம் திருப்பி அனுப்புவதையும், சட்டத்திற்குப் புறம்பான முடிவுகளை எடுக்க அனுமதித்ததையும் மறக்க முடியவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ்மீது  ஹிண்டன்பர் U.Sநீதிமன்றங்களில் வழக்குத் தொடரக் கேட்பதற்குப் பதிலாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை விசாரணையில் ஒரு பங்காக்கி அதானியைக் காப்பாற்றியதையும் பதிவு செய்ய வேண்டும். 370 சட்டப் பிரிவை நீக்க இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கலந்து ஆலோசிக்க வித்தியாச சூழ்நிலையை உருவாக்கிய சூட்  என்றும் நினைவில் இருப்பார். பீமா கோரேகான் வழக்கு, ஸ்டான் சுவாமி வழக்கு எனத் திருத்திய தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ்மிக்கவை.

தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறடி நீதி தேவதையின் சிலையில், கண்களில் கட்டப்பட்டுள்ள கறுப்புத் துணியை அகற்றி விட்டார். இதை நாம்  ஒரு புதிய குறியீடாகவும் புரிந்துகொள்ளலாம். இது குறித்து  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (எஸ்.சி.பி..) ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபில், “இந்த மாற்றத்திற்கான பின்னணி தெரியவில்லை. இது குறித்த முன்மொழிவு, எங்கள் கவனத்திற்கு  வரவில்லைஎன்கிறார்.

நீதிமன்றங்களின்  மீதான நம்பிக்கையைக் குடிமக்கள் மெல்ல இழப்பதால், நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. நீதித்துறை மீண்டெழுந்து, நீதியரசர்கள் அறம் சார்ந்த  தீர்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புவோம். நாம் நம் சனநாயகத்தின் நான்காவது தூண் வலுப்பெற தொடர்ந்து குரல் கொடுப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
காலத்தால் மறக்க முடியாத இருபெரும் ஆளுமைகள்! (நம் வாழ்வு 50 காலச்சுவடுகள் 1975 – 2025)

1. அருள்பணி. தாமஸ் கவான் டஃபி (நிறுவுநர் - திண்டிவனம் முப்பணி நிலையம்)

(22.01.1989)

அருள்பணி. தாமஸ் கவான் டஃபி சுவாமிகளின் பிறப்பு நூற்றாண்டு விழா 1989 ஜனவரி 5, 6 ஆகிய இரு நாள்களில் திண்டிவனம் கத்தோலிக்க நடுநிலையத்தில் எல்லா நிறுவனங்கள், பங்குகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான ஜனவரி 5-ஆம் தேதி பிற்பகல், 1000 ஆசிரியருக்கும் 300 வேதியருக்கும் கருத்தரங்கு  முப்பணி நடுநிலையத்தில்  (TNBCLC) தொடங்கியது.

தொடக்க உரையில் மேதகு ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள், அயர்லாந்து நாட்டில் பிறந்த தாமஸ் கவான் டஃபி உண்மையை நேசித்தவர் என்றும், அதற்கு அடுத்தபடியாகத் தமிழகக் குழந்தைகளை நேசித்தார் என்றும் கூறினார். ஆசிரியர் பணியும் வேதியர் பணியும் இணைந்த விதத்தில் கல்வித்திட்டத்தை அமைக்கவும், அதற்கென ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தவும் அவர் பாடுபட்டார் என்றும் தெரிவித்தார். அவருடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் அருள்பணி. மைக்கேல் கர்ட்டின் சுவாமிகளும், அருள்பணி. மரிய குழந்தை சுவாமிகளும் டஃபியின் வலது கரம்போல் விளங்கினர் என நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகவே அயர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் அண்ணன் மகள் மோரா கவான் டஃபி பேசுகையில் விழாவில் தான் கலந்துகொள்வது பற்றி அளவற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தார். வேதியர் கிறிஸ்துவின் பிரதிநிதி என்ற தாமஸ் கவான் டஃபியின் எண்ணத்தைப் பிரதிபலித்தார். அருளாளர் டஃபி காலத்தில் ஆசிரியப்பணி செய்தவர்களும், அப்போது மாணவர்களாக இருந்தவர்களும் டஃபி அடிகளுடன் தங்களுக்கு இருந்த அன்பின் உறவை, அவருடைய பண்புகளை இனிமையாகப் பசுமை உணர்வுடன் பகிர்ந்துகொண்டனர்.

மாலை 5.30 மணிக்கு ஆசிரியர்கள், வேதியர்கள், மாணவர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர், அருள்சகோதரர்கள், அருள்பணியாளர்கள்ஆயர்கள் அனைவரும் கையில் எரியும் மெழுகுதிரியுடன் பங்கு கோவிலிலிருந்து புறப்பட்டு புனித அன்னாள் உள்விடுதி வளாகத்திற்கு வந்து நற்கருணைப் பவனியில் கலந்துகொண்டனர்.

நற்கருணைப் பவனியில் முன்னரே மதியத்தில் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி ஆர்.சி. ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது. டஃபியின் மிஷனரி பணி, கல்விப் பணி, சாரண இயக்கத்தில் ஈடுபாடு, ஆசிரியர்-வேதியர் பணி, அவர் ஏற்படுத்திய நிறுவனங்களின் மாதிரி அமைப்புகள், அவர் எழுதி வெளியிட்ட நூல்கள், பொன்மொழிகள் ஆகிய அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றன. அத்துடன் பூவிருந்தவல்லி விவிலிய நடுநிலையத்தினர் அமைத்த திருவிவிலியக் கண்காட்சியும் விழாவில் இடம் பெற்றது.

அடுத்த நாள் ஜனவரி 6-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4.30 வரை முப்பணி நடுநிலையத்தில் தியானமும் கருத்தரங்கும் நடைபெற்றன. கருத்தரங்கில் அருள்திரு. மு. வல்தாரிஸ், இன்றைய நடைமுறை வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளையும், அவற்றை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் கூறினார்.

மாலை ஐந்து மணிக்கு புனித அன்னாள் உள் விடுதி வளாகத்தில் மேதகு கர்தினால் சைமன் லூர்துசாமி ஆண்டகை அவர்கள் தலைமையில் ஒரு பேராயர், ஐந்து ஆயர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலியில் சேலம் ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள் மறையுரை நிகழ்த்தினார். திருப்பலிக்குப் பின்னர் இரவு 7 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவின் சிகரமாய்டஃபி முன்னோடிஎன்ற ஒலி - ஒளிக்காட்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களைச் சார்ந்த நடிகர்களும் கலைஞர்களும் பங்கேற்றனர். இறைவன் இயேசுவின் மீட்புப்பணியுடன் அருள்பணி. தாமஸ் கவான் டஃபியின் வாழ்வைப் பின்னிப் பிணைக்கப்பட்டது அருமையான கலைவிருந்தாக இருந்தது.              

- குழந்தைசாமி

2. தந்தை காண்டிடோ வல்லோஜியா

மானுடத்தை நேசித்த மாண்புமிக்கவர்!

(05.06.1988)

1988 - ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 20-ஆம் நாள் மதியம் சுமார் 1.40 மணியளில் ஒரு வரலாறு வீழ்ந்தது! பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் ஏறக்குறைய 46 வருடங்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து, தாய்த் திரு அவைக்கு நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களை உருவாக்கிக் கொடுத்த இதயத்தந்தை காண்டிடோ வல்லோஜியாவின் கரங்கள் இறுதியாக அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்தது அந்தக் கணத்தில்தான். அவரது இறுதிச்சடங்கிலே அவர் உருவாக்கிய குரு செல்வங்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களில் நீர் மல்க கல்லறையில் அவருக்கு இறுதிவிடை கொடுத்தார்கள். அவர் நேசித்த ஏழைகள், ஒரு நாள் முழுவதும் அவரது பூதவுடலைச் சந்திக்கக் கொண்டு வந்த பூமாலைகள் அவரது கல்லறையை நிறைத்துவிட்டன. அவர்மானுடத்தை நேசித்தார்; மனித மாண்பைப் போற்றினார்.”

இத்தாலி நாட்டிலே பிறந்து, சொந்தபந்தங்களையெல்லாம் துறந்து, இந்திய நாட்டில் புகுந்து பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தைத் தனது பணிவீடாகக் கொண்டு, மருத்துவமனைப் படுக்கையில் இருந்துகொண்டேஎன்னை எனது குருமடத்திற்கு அழைத்துப் போங்கள்என்று இறுதி மூச்சுவரை, நொடிக்கு மூன்று தடவை ஒரு மனிதர் சொன்னார் என்றால், அவர் தனது இதயத்தையே அந்த நிறுவனத்தில்தான் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

இருக்கின்ற இடத்தில் இயன்றதை, இயன்ற வரைக்கும் செய்ய வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவமே அவரை வாழும் வரை வளர விட்டது!

குருகுலம் என்ற நிறுவனத்தோடு மட்டும் தனது பாசப்பிணைப்பை நிறுத்திக் கொண்டவரல்லர் அவர். அந்த நிறுவனத்தில் உருவான ஒவ்வொரு குருவின்மேலும் அதே பாசத்தை வைத்திருந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சில நூற்றுக்கணக்கான குருக்களும், ஐந்து ஆயர்களுமே அதற்கு இறுதி சாட்சியம் தந்தனர். தான் பேராசிரியராக, அதிபராக, பொறுப்புகள் பலவற்றில் இருந்தபொழுதும் அவற்றையெல்லாம்அதிகாரங்களாகபார்த்து ஆட்டிப் படைத்தவர் அல்லர்; மாறாக அன்பால் அரவணைத்து, அழைத்து வழிநடத்திச் சென்ற ஓர் அன்னையைப் போன்றவர்.

திரு இருதயக் குருமடத்தின் ஒவ்வொரு கல்லும், மரமும் அவரது கடின உழைப்புக்கு, அவை அழியும் வரைக்கும் அத்தாட்சிப் பத்திரங்கள்!

அவர் குருமடத்திற்கு மட்டுமே குலவிளக்காய் திகழ்ந்து, தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் குறுக்கிக்கொள்ளவில்லை. அவரின் பார்வை பாமர மக்களின் பாடுகளை நோக்கித் திரும்பியது! சுற்றியுள்ள கிராமங்களில் வீடின்றித் தவித்தவர்களுக்காய் தந்தையின் கரங்களே குடிசை போட ஆரம்பித்தன! சமுதாயத்திலே ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்ட தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி அவர்களுக்காகவே ஒரு காலனி! ஏழை மக்களின் உடல் பிணி போக்க இலவச மருந்தகம்! வேலை வாய்ப்பற்ற இளம்பெண்களுக்காக அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையில் தையல்பயிற்சி நிலையமும், தட்டெழுத்துப் பயிற்சி நிலையமும்! வருடா வருடம் மும்மாரி தவறினாலும் ஏழைக் குழந்தைகளுக்குத் தவறாமல் சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள்! ஆலயமின்றி தவித்த இடங்களிலெல்லாம் அழகிய ஆலயங்கள்! குற்றவாளிகளையும், குற்றவாளிகளாக்கப்பட்டவர்களையும் சிறையில் சென்று அணைத்துக் கொண்ட அவரது சிறை சந்திப்புகள்! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்!

ஆக, மனிதர்கள் பிறந்து கொண்டேயிருப்பார்கள்! சந்ததிகள் தோன்றிக் கொண்டேயிருக்கும்! இறந்த பிறகு பலரின் வாழ்க்கை வரலாறாக எழுதப் படும். ஆனால், வாழும் பொழுதே வரலாறு படைப்பவர்கள் ஒருசிலரே! அந்த ஒருசிலரில் இந்த மாமனிதர் முதல் மனிதர்!

- வில்லியம் சந்தானம்

news
சிறப்புக்கட்டுரை
ஆழ்கடலைச் சுரண்டும் திட்டம்

நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1,36.596 சதுர கிலோ மீட்டர் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்திற்கான கொள்கையின் கீழ் 9-வது ஏல அறிவிப்பை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 03.01.2024 அன்று வெளியிட்டிருக்கிறது. இந்த ஏல அறிவிப்பு திறந்தவெளி அனுமதிக் கொள்கையின் (Open Acreage Licensing Policy) கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 2014 -ஆம் ஆண்டு திறந்தவெளி அனுமதி என்ற புதிய அனுமதி வந்தது. இதுவரை 8 சுற்று ஏலங்கள் விடுக்கப்பட்டிருந்தன. அது டெல்டா பகுதிகள், விழுப்புரம், இராமநாதபுரம் பகுதிகளில் ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த 9-வது ஏலத்தில் தமிழ்நாட்டின் நான்கு வட்டாரங்களில் 32,485 சதுர கி.மீட்டர் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆழமற்ற கடற்பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும், ஆழமான இந்தியக் கடற்பகுதிகளில் 95 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் மூன்று தொகுதிகளும், சென்னைக்கு அருகே ஆழ்கடல் பகுதியில் ஒரு தொகுதியும் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆழ்கடல் தொகுதிகளையும் கபளீகரம் செய்வதற்கு ரிலையன்ஸ், வேதாந்தா, .என்.ஜி.சி., பாரத் பெட்ரோலிய நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன.

சட்ட விதிகளிலிருந்து விலக்கு: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (Environmental Impact Assessment) அறிக்கை 2020- இல் கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி) ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவையில்லை) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை) சுற் றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தேவையில்லை. நில அதிர்வு சோதனையால் ஏற்படக்கூடிய தீங்குகளை மதிப்பிடல் வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் எப்படி எடுக்கப்படுகிறது?

ஹைட்ரோ கார்பன் நீரியல் விரிசல் முறை (Hydraulic fracturing) என்ற மிக ஆபத்தான முறையில் எடுக்கப்படுகிறது. பூமியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பம்தான் கடலுக்கடியிலும் பயன்படுத்தப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைத் தேடுவதற்கு நில அதிர்வு (Seismic Surveys), ஏர் துப்பாக்கிகள் (Air Guns) கடல் நீரில் 250 டெசிபல்களில் வெடிக்கும் பயன்பாடுதான் இந்தச் சோதனை. மேப்பிங் தொழில்நுட்பம் இது வரை வந்துவிட்ட நிலையில், கடல்நீரில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் பெரிய அளவிலான துல்லியமற்ற முறைகள் ஏன் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு ஒரே பதில் இலாபமும் இலாப வெறியுமே. கடலின் அடியில் மணலுக்குக் கீழே பத்து கி.மீட்டரில் ஏர் துப்பாக்கிகள் செலுத்தப்படுகின்றன. மிகப்பெரிய இரைச்சலுடன் அவை அதிர்வலைகளை ஏற்படுத்தும். பத்து கி.மீட்டருக்குள் அவை புவியின் தன்மை, எண்ணெய் மற்றும் வாயு இருப்புகளை உறுதிப்படுத்தும். கனிமங்களின் இருப்பை உறுதிசெய்து திருப்பும் அதிர்வலைகளை அளவிடும் கருவிகள் ஏற்கெனவே அளவிடும் கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும். உள் வாங்கும் (Receiver) கருவிகள் பெற்றுக்கொள்ளும். இந்தச் சோதனையில் ஒவ்வொரு 4 மற்றும் 10 வினாடிகளிலும் 24 மணி நேரத்தில் வாரத்தின் 7 நாள்களும் சத்த அலைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தச் சோதனை ஒரு வாரமோ அல்லது ஒரு மாதமோ நீடிக்கலாம்.

திறந்தவெளிக் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீட்டர் தூரம் இந்த இரைச்சல் அதிர்வுகள் இருக்கும். இதனுடைய இரைச்சல் அளவைப் பொறுத்து பாலூட்டிகள், திமிங்கலங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் கேட்கும் திறன், ஒலி எழுப்பும் திறன், தன் இணையை, தனது உறைவிடத்தைத் தேடும் திறன் குறைந்தோ, முழுமையாகவோ பாதிக்கப்படும். இந்த அதிர்வுகளுக்கு முதலில் இரையாவது மிதவை வாழிகள் (Plankton).  ஒட்டு மீன்கள் (Crustaceans) இதனால் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறைந்த சத்த அதிர்வுகளை எழுப்பி தொடர்புகொள்ளும் உயிரினங்கள் 100 மீட்டருக்கு அப்பால் கடலில் மேற்பரப்பிலிருந்து கடலுக்குள் விழும் உணவுகளைத் தனது உணர்திறன் ஆற்றலால் (sensitive acoustic system) புரிந்துகொள்ளும் கடல் உயிரினங்கள் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உட்படும். இது போன்று கடலுக்கு அடியில் பயன்படுத்தப்படும் வெளிச்சம், பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அந்த வட்டாரத்தின் ஒட்டுமொத்த மீன் வளங்களையே அழித்துவிடும்.

பொதுவளங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயல்பாடும் எதிர்காலத் தலைமுறையினரின் உணவுச்சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நில அதிர்வுச் சோதனையிலிருந்து வெளிவரும் இரைச்சல் ஆய்வு கப்பலிலிருந்து 4000 கி.மீ. வரையிலும் கேட்பதாக அறியப்படுகிறது. நுண்புழுக்கள் மற்றும் கடல் நத்தைகளில் வளர்சிதைவு, உடல் குறைபாடுகள் இதனால் ஏற்படுகின்றன. பல்லுயிர் வகைகளின் செயல்பாடுகள் இதனால் மிகப்பெரிய பாதிப்படைகின்றன. தொடர்ந்து வெளிப்படும் ஒலிமாசால் செங்குத்தாக இடம்பெயரும் மிதவை உயிரினங்களின் (plankton) இடப்பெயர்ச்சி பாதிக்கப்படும்.

இந்தியாவின் அரபிக் கடலோரத்தில் கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை 22 மிக முக்கியமான மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டுகள் அல்லது மீன்பிடித்தளங்கள் இருக்கின்றன. வெட்ஜ்பேங்க் பவளப் பாறைத்திட்டு (7 00’- 8 20’ N, 76 30’- 78 00 E) கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்காக 36 மைல்தூரத்தில் 10,000 சதுர மைல் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. இலங்கையின் கொழும்பிலிருந்து 115 கடல் மைல் தொலைவிலிருக்கிறது. உலகின் மூன்றாவது மீன் வளமிக்கப் பரப்பாக இருக்கிறது.

வெட்ஜ்பேங்கில் மீன்பிடிக்கச் சிறந்த காலம் ஜூலை முதல் அக்டோபர் வரை. இந்தக் காலகட்டத்தில் நெய்மீன், கலவா, சேமீன், சுறா போன்ற மீன்கள் அதிகமாகக் கிடைக்கும். வெட்ஜ்பேங்க் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்குச் சிறந்த இடம். இங்கே மீன்பிடிக்க வெளிநாட்டுக் கப்பல்களுக்கும் இழுவை மடிகளுக்கும் தடையில்லை.

வெட்ஜ்பேங்கை ஒட்டியே மேற்கொள்ளப்போகும் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளால் எண்ணெய் கசிவோ, கடல் மாசுபாடுகளோ, விபத்துகளோ ஏற்படின் அது  சென்னையைப் போல 15 முதல் 20 பரப்பளவுள்ள நிலப்பரப்பு கொண்ட வயல்வெளிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதற்குச் சமமாகும்.

வெட்ஜ்பேங்க் ஒரு நிரந்தர மீன்வங்கி. கடலன்னை அளித்திருக்கும் ஓர் அமுதசுரபி. முட்டாள்தனத்தினாலும் பேராசையினாலும் இந்த அமுதசுரபியை அழித்திட ஒன்றிய அரசு முயல்கிறது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காக மூன்று எண்ணெய் மற்றும் எரிவாயு தொகுதிகளை வழங்குவதற்கான ஒன்றிய அரசின் முன்மொழிவிலிருந்து வெட்ஜ்பேங்க் எதிர்கொள்ளப்போகும் அச்சுறுத்தல் புலப்படும்.

வெட்ஜ்பேங்கைச் சார்ந்திருக்கும் இரண்டு இலட்சம் மீனவர்களும் தற்கொலை செய்ய நேரிடும். ஏற்கெனவே 100 வருடங்கள் நமக்குச் சொந்தமான வெட்ஜ்பேங்க் மீன்தளத்திலிருந்து இலங்கையும் வெளிநாட்டுக் கப்பல்களும் மட்டுமே இழுவை மடியைக் கொண்டு நமது மீன்வளத்தை வேட்டையாடி, பவளப்பாறைகளை அழித்துக் கொண்டிருக்கின்றன.

மீன்பிடித்தல் சம்பந்தமான அனைத்துத் தொழில் வளர்ச்சிக்கும், மீன்வள வளர்ச்சிக்கும், மீன் பிடித்தத்திற்கும் ஆய்வுகளை மேற்கொள்ள மறுக்கும் அரசு, கடல்வளங்களைச் சுரண்டி ஆழ்கடல் கனிமங்களை, எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாயுக்களை எடுப்பதற்கு அதீத ஆர்வம் காட்டுவதிலிருந்தே இதன் உண்மை புலப்படும். இத்தகைய திட்டங்கள் எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்திற்காகவே அன்றி, இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக அல்ல!

news
சிறப்புக்கட்டுரை
உள்ளங்கவர் நண்பர்!

எங்கள் வகுப்புத் தோழர்கள் 24 பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலையில் உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக, பன்முகத் திறமைகள் கொண்டவர்களாக இருந்து, தாயாம் திரு அவைக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு பணிகளில் உயர்ந்து, சிறந்து விளங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் வகுப்புத் தோழர்களில்  முதலாவதாக, தற்போதைய அந்தமான் போர்ட்பிளேயர் ஆயர் மேதகு விசுவாசம் செல்வராஜ் அவர்கள் 21.08.2021 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

எங்கள் வகுப்புத் தோழர்களின் குழுவின் மற்றொரு மணிமகுடம் வேலூர் மறைமாவட்டப் புதிய ஆயர் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.

1981-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து ஆயர் அவர்களோடு தோழராகப் பயணித்தது உண்மையிலேயே மறக்க முடியாத நாள்கள், வருடங்கள் நல் அனுபவங்கள்!

சென்னை திரு இருதயக் குருகுலத்தில் இருக்கும்போதிலிருந்தே பல முக்கியப் பொறுப்புகளையும், பதவிகளையும் ஏற்று, சீரும், சிறப்புமாய்ப் பணியாற்றி, தனது தனித்துவத்தை, தலைமைப் பண்பை உயர்த்திப் பிடித்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். அந்தக் காலகட்டத்தில் நண்பராம் இவரது சொல், செயல்பாடுகளைக் கண்டு, அனுபவித்து, பெருமைப்பட்டு, பாராட்டி மகிழ்ந்த காலங்கள், நேரங்கள் என்னால் மறக்க முடியாதது.

மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் எளிமையை விரும்புகிறவர். அத்துடன் பொறுமையோடு, சீரிய சிந்தனையோடு காரியங்களைத் திட்டமிட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகரமாக முடிக்க வல்லவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். பல இடங்களில் கருத்தரங்குகளை, வகுப்புகளை, கலந்தாய்வுகளை வழிநடத்தியவர்தத்துவவியலில்  அதிக நாட்டமும், ஆர்வமும்  கொண்ட இவர், தனது முனைவர் பட்டத்தை முடித்து, தனது சிந்தனையைச் சீரிய சிந்தனையாகக் கூர்மைப்படுத்திக் கொண்டு சிந்திப்பதோடு மட்டுமல்லாது, குருமடத்திலும், மறைமாவட்ட மக்கள் பணியிலும் அனைவரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற, உரிய ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை அளிப்பவர். அதனால் பலன் பெற்ற பலருள் நண்பராகிய நானும் ஒருவன்.

குடும்பத்திலும் சரி, பங்குத்தளங்களிலும் சரி, பாராட்ட வேண்டிய நேரங்களில் பாராட்டியும், உற்சாகப்படுத்தியும், கண்டிக்க வேண்டிய சமயங்களில் திருத்தம் செய்து பலரது உள்ளங்களையும் கவர்ந்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். ‘அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பு இருக்கும்என்பது உண்மையே! சில நேரங்களில் தனிப்பட்ட என் வாழ்வில் நண்பர் என்ற நிலையில் நான் இதை அனுபவித்திருக்கின்றேன்.

வேலூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்கும் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களோடு 1981-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை 43 ஆண்டுகள் நண்பராகப் பயணிப்பது மறக்க முடியாதவை. பல நற்குணங்களை, பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆயர் அவர்கள் நிச்சயமாக வேலூர் மறைமாவட்டத்தில் குருக்கள், துறவறத்தார், இளைஞர் மற்றும் இறைமக்கள் உயர்வுக்காகஇரக்கமும் எதிர்நோக்கும்என்னும் குறிக்கோளோடு தன் ஆயர் பணியை ஆரம்பித்து ஆண்டவர் அருளோடும், மறைமாவட்டப் பாதுகாவலி கிறித்தவர்களின் சகாய அன்னையின் பாதுகாவலோடும் சீரும் சிறப்புமாய் பணியாற்றிட வகுப்புத் தோழர்கள் நாங்கள் உளமார வாழ்த்தி செபிக்கிறோம்!

news
சிறப்புக்கட்டுரை
நட்பின் இலக்கணம்!

இறைவன் தம் மக்களுக்காகப் பணி செய்ய நம்மிடமிருந்து அவரது பணியாளர்களாக  ஆயர்களை ஏற்படுத்துகிறார். இவ்வரிசையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் குருமட வாழ்விலும், குருத்துவப் பணியிலும் கைகோர்த்து நடந்த பாசமிகு நண்பர் பேரருள்திரு. அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் ஆயர் நிலைக்கு உயர்த்தப்பட்டது கண்டு பெருமகிழ்வோடு வியந்து பாராட்டுகிற இவ்வேளையில், அவரோடு பழகின மற்றும் அவரில் கண்ட நற்பண்புகளை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

பங்குத்தளங்களில் சிறந்த மேய்ப்பனாய் விளங்கியவர் இவர். சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த போதும், செங்கை மறைமாவட்டத்தில் ஒரகடம், படப்பை மற்றும் மறைமாவட்டப் பேராலயப் பங்கில் பணிபுரிந்த போதும், நிர்வாகியாகவும் மனிதநேயமுள்ள தந்தையாகவும் பற்பல தேவையிலிருந்த மக்களைச் சந்தித்தும், பக்தசபை மற்றும் பொதுநிலையினர் இயக்கங்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் தனித்துவத்தை மதித்து வாழ்ந்தவர்.

பங்குகளில் வீடுகள் சந்திப்பு, பொதுநிலையினருக்கான பயிற்சி, அத்தோடு தியானங்கள், தவக்காலத்தில் ஆன்மிக எழுச்சிக்கான முயற்சிகள், உதாரணமாக, செங்கை புனித சூசையப்பர் பேராலயத்தில் தவக்காலத்தின் 40 நாள்களும் மாலையில் 8.00 மணி முதல் 9.00 மணி வரைஆண்டவரோடு ஒரு மணி நேரம்என்ற மௌன செபமுயற்சியை ஏற்படுத்தி, மக்கள் தங்களது வேலை முடித்து ஆலயத்திற்கு வந்து செலவிடவும், வீடுகளில் இருப்பவர்கள் தங்கள் குடும்பப் பணிகளையெல்லாம் முடித்துவிட்டு இறைவனில் இணையவும் பேராலயத்தில் இம்முயற்சியை உருவாக்கினார்.

நட்பிற்கும், உறவுகளுக்கும் கைகோர்ப்பவர் இவர். “நட்பிற்காக எந்தவிதமான நெருக்கடியையும் துன்பத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்...” (We can take any Risk for Friendship) என்பவர். இப்படி நட்பை மதிப்பதற்கும், அதற்கு நாம் எந்த அளவிற்குச் சென்று நேரம், பொருள் இவற்றையும், எந்தச் சுணக்கமும் இல்லாமல் கொடுக்கலாம் என வாழ்பவர் நண்பர் அம்புரோஸ். இதற்கு எடுத்துக்காட்டாக நட்பிற்காகக் கடைக்கோடிப் பகுதிகளில் பணி செய்தாலும், என்னை வந்து சந்தித்து, என்னோடு தங்கி எனது பணியில் என்றென்றும் துணை நின்றவர்.

உடன் பணிபுரியும் உதவித் தந்தையர்கள் மற்றும் அவர் வயதொத்த குருக்கள், அவரைவிட மூத்த குருக்கள், அவரிடம் பயின்ற இளம்குருக்கள், மறைமாவட்டம் அதையும் தாண்டி உள்ள மற்ற குருக்கள் எனக் குருக்களின் தோழமையைப் போற்றுகிறவரும், உற்சாகத்துடன் அவர்களுக்கு வழிகாட்டியாக, அதோடு பொருளாதார உதவிகள், உளவியல் வழிகாட்டுதலையும் செய்து, அவர்களின் பணி சிறக்க எப்போதும் இணைந்து நின்று செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்

பெரியோர்களை மதிக்கும் பாங்கும், தனது ஒத்த வயது நண்பர் குருக்களுடன் இனிமையாகப் பழகுதலும், வயதில் இளையவரோடு நகைச்சுவை கலந்த நல்ல உறவுகளில் கைகோர்த்தும் சிறந்து விளங்குபவராகக் கண்ணியமான மனிதராகத் திகழ்கிறார்.

மென்மையும், எளிமையும் கொண்டவர் இவர்வட இந்தியாவில் பணிபுரிகின்ற ஓர் அருள்பணியாளர் கடந்த வாரம், இவர் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து, ‘இவர்தான் தகுதியான மனிதர்என்று தெரிவித்து, அவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது:

நான் வட மாநில மறைமாவட்டத்தில் மறைபரப்புப் பணியின் பொறுப்பாளராகப் பணிபுரிகிறபோது, அலுவலக ரீதியாகத் தொலைப்பேசியில் அவரைத் தொடர்புகொண்டேன். அவரது தொலைப்பேசி உரையாடலில் மிகவும் மென்மையாகவும், அதிகாரத் தொனி இல்லாமலும் நட்புறவுடன் பேசினார். அதைப் பார்த்து வியந்தேன். ஏனெனில், இப்படிப்பட்ட அணுகுமுறையை நான் எதிர்பார்க்கவில்லை. எப்படியும் இதுபோன்ற மனிதரை நேரில் பார்த்தாக வேண்டும் என்று முயற்சி செய்து பெங்களூருக்குச் சென்றபோது, அவரது அலுவலகம் மற்றும் அவருடனான தனிப்பட்ட உரையாடல் ஓர் எளிய மனிதரைச் சந்தித்த அனுபவத்தை எனக்குக் கொடுத்ததுஎன்று தெரிவித்திருந்தார்.

புதிய ஆயர் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்வு வாழ்பவர். தன்னுடைய மேற்படிப்பு மற்றும் கற்றுத் தேர்ந்த கல்வி உயர்வில் பேராசிரியராக, நல்லதொரு தத்துவவியல் விளக்க உரையாளராகப் பல வருடங்கள் தத்துவவியல் மற்றும் இறையியல் பாடப்பிரிவுகளில் கல்வி அறிவை ஊட்டுகிறவர். குருமடம் மற்றும் மறைமாவட்டங்களில் பல்வேறு உயர் பொறுப்புகளும், பதவிகளும் இவரை அலங்கரித்தாலும், என்றைக்கும் ஆடம்பரமோ, தற்பெருமையோ எதையும் வெளிப்படுத்தாத எளிய வாழ்க்கை முறையைத் தனது ஆளுமையின் சாட்சியாகக் கொண்டவர். தனது பணி வாழ்வில் பலபேருக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறவர். இப்பண்புகள்தாம் அவரை இந்நிலைக்கு உயர்த்தியது என நான் கருதுகிறேன்.

இவரது ஆன்மிக ஆழமும், நிர்வாக நேர்மையும் சிறப்பு மிக்கவை. தனது ஆன்மிக வாழ்வில் ஆழ்ந்த படிப்பு, கல்விப் பணி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள், அவற்றைச் சார்ந்த தொடர்புகளில் அதிகமான நேரம் ஈடுபட்டாலும், ஆன்மிகத்தில் தனக்கெனச் சிறந்த வழியைக் கைக்கொண்டு வாழ்கிறவர். தனிசெபம், குழுமச் செபங்கள் என அடுத்தவரை ஆன்மிகத்தில் கொண்டு செல்வதில் முனைப்பாய் இருப்பவர். குருமாணவர்களை நெறிப்படுத்தும் வழிகாட்டியாக இருந்து வளர்த்தெடுத்தவர். நிர்வாகம் மற்றும் மேய்ப்புப் பணியில் தன்னுடைய ஆளுமையினால் சிறந்த திட்டமிடுதலும் தெரிவிக்க வேண்டிய கருத்துகளில் தெளிவும் தனக்கே உரிய பாணியில் அதனை வெளிப்படுத்தும் விதமும் இவருக்கு நிகர் இவரே!

சமூக நீதி, சமூக அக்கறை மற்றும் சமுதாயத்தை மேம்படுத்துகிற முன்னேற்றப் பாதையில் அதிகம் கவனம் செலுத்துகிற பணியாளராக, இவற்றோடு தன்னை அர்ப்பணித்த குருத்துவத்தில் என்றும் மகிழ்ந்து எச்சூழ்நிலையிலும் அதிராமல், பதறாமல் சமநிலையோடு பணிசெய்கிற ஒருவராகத்தான் இவரை என் நட்புறவில் பார்த்து இருக்கிறேன்; வியந்திருக்கிறேன்!