news
சிறப்புக்கட்டுரை
‘அம்மூ’ (வலையும் வாழ்வும் - 27)

செந்தில்நாதன் அவன் பெயர். அவன் ஓர் ஆட்டு இடையன். அவனை எல்லாரும்செந்தில்என்றே அழைப்பர். செந்தில் அந்தக் கறுப்பு நிற ஆட்டுக்குட்டியை விட்டு எப்போதும் பிரிவதேயில்லை. எப்போதும் அதைத் தன் மார்பிலும் மடியிலும் சுமந்து திரிந்தான். எத்தனையோ ஆடுகளை அவன் ஓட்டிச்சென்றாலும், அந்த ஆட்டுக்குட்டி மட்டும் அவன் கண்பார்வையிலேயே இருக்கும். சில மனிதர்களை நமக்கு ஏன் பிடிக்கும் என்று நாம் சொல்ல முடியாததுபோல, அந்த ஆட்டுக்குட்டி ஏன் அவனுக்குப் பிடித்துப்போனது என்று அவனால் சொல்ல முடியவில்லை. அதற்குஅம்மூஎன்று பெயரிட்டான்.

அந்தக் கூட்டத்திலிருந்த நாற்பத்திரெண்டு ஆடுகளில் வேறு எந்த ஆட்டிற்கும் அவன் பெயர் வைத்ததில்லை. செந்திலுக்குப் பல ஆண்டுகளாக ஓர் ஆட்டுக்குட்டி சொந்தமாக வளர்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘இந்தமுறை வூடுப் போகும்போது எப்படியாவது எசமானிடம் சொல்லி இந்த அம்மூவ வீட்டுக்கு இட்டுச் செல்லணும். அத புள்ள மாதிரி வளக்கணும்என்று செந்தில் எண்ணிக் கொண்டான்.

செந்தில் ஒரு மேய்ப்பன் அவ்வளவுதான்; அந்த நாற்பத்திரெண்டு ஆடுகளின் உரிமையாளன் அல்ல. பரம்பரைப் பரம்பரையாக ஆடு மேய்ப்பது அவன் தொழில் என்றாகிப்போனதால், வேறு எந்தத் தொழிலையும் பற்றி அவன் சிந்தித்ததே இல்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேவநேசன் என்பவரின் செம்மறி ஆட்டு மந்தையை மேய்த்து வந்தான். இப்போது கவுண்டமணி என்பவரின் வெள்ளாடுகளை மேய்த்து வருகிறான். வாரத்திற்கு ஒரு முறை தன் முதலாளியிடம் எல்லா ஆடுகளையும் ஓட்டிச்சென்று எண்ணிக்கை சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். முதலாளி கவுண்டமணி மிகவும் கோபக்காரர். ஆடுகளின் எண்ணிக்கை குறைந்தால் அவ்வளவுதான். ஏற்கெனவே கவுண்டமணியிடம் வேலை பார்த்த பொத்தன் என்பவன் ஆடு ஒன்றைக் களவாடிவிட்டுஆடு வழி தவறிடிச்சுஎன்று நாடகமாடி கையும் களவுமாகப் பிடிபட்டதும், முதலாளியின் செருப்பு பிய்ந்து பொத்தனின் கன்னம் பழுத்தக் கதையைப் பலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் செந்தில். அதனால்இந்தக் குட்டி ஆடு அம்மூவைக் கூலியாக எப்படிக் கேட்பது? இல்லை அம்மூவை ஒளித்து வைத்துவிட்டு தொலைந்து போனது என்று சொல்லிவிடலாமா?’ பயம் ஒருபுறமும், தயக்கம் மறுபுறமும் ஆட்டின் இரண்டு கூரியக் கொம்பாக மார்பில் பாய்ந்து செந்திலின் இதயத் துடிப்பை அதிகரித்தது.

கவுண்டமணி ஐயா கைலி ஒன்றைக் கட்டிக் கொண்டு திறந்த மேனியாய் அந்த மச்சு வீட்டின் வெளியே வந்தார். ‘என்னடே செந்தில், ஆடுகளெல்லாம் நோஞ்சானாய் போச்சு? புல்லு, தண்ணி காட்டுறியாடே?’ என்று கேட்டபடி மடியில் மடித்து வைக்கப்பட்டிருந்த மூக்குப்பொடி டப்பாவைக் கையில் எடுத்தார். மூக்குப்பொடியை மூக்கில் வைத்து வேகமாக உறிஞ்சிக்கொண்டே ஆடுகளை எண்ண, அதனருகிலே வந்தார். எப்படியாவது அம்மூவைக் கேட்டு வாங்கிடவேண்டும் என்ற எண்ணத்தில் சரியான வார்த்தைக்காகத் திணறினான்.

ஐயா!’ என்று தொடங்கும்போது வாய்க்கு வந்த அந்த வார்த்தை வெளியே வராமல் தொண்டைக் குழிக்குள்ளேயே வழுக்கி விழுந்தது. பலமுறை தனியாக இருக்கும்போதெல்லாம் எப்படி ஆட்டுக்குட்டி அம்மூவை முதலாளியிடம் பேசிப்பெறுவது என்பதைப் பல கோணத்தில் பேசி பயிற்சி எடுத்திருந்தும், அவர் முன்னால் அவனுக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. ஆடு மேய்ப்பவன் அத மேய்க்கணுமே தவிர, சொந்தம் கொண்டாடக்கூடாது என்பது வைக்கப்படாத விதி போலும்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டுஐயாஎன்று தொடங்கும்போதே, “டேய் செந்திலு! என்னடா இந்த ஆட்டுக்குட்டி மட்டும் வடிவா சதையா இருக்கு?”

ஐயா! இது புதுகுட்டிங்க. கொஞ்சம் நோய்ங்க. முரட்டு வேறு பிடிக்குதுங்க. நான் வேணும்ணா அத எடுத்துக்கட்டுமா?’ என்று தயக்கத்தோடு மூஞ்சில் வெளிப்பட்ட வேர்வையைத் துடைத்துக்கொண்டே சொல்ல நினைக்கும்போதே, “என் மவளும் அவ பிள்ளையளும் டவுணுலயிருந்து லீவுக்கு வாராங்க, அவங்களுக்குக் கறி சமச்சிப்போடணும். இந்த ஆட்ட மட்டும் விட்டுட்டு மத்தத ஓட்டிக்கிட்டுப்போடேஎன்றார் கவுண்டமணி ஐயா.

செந்திலுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ‘எப்படியாவது இந்த வருசமாவது ஐயாகிட்டப்பேசி. ஓர் ஆட்ட வூட்ல வைச்சி புள்ளையா வளக்கலாமுணு பார்த்தா... இப்படி ஆயிடுச்சேஎன்று எண்ணி வருத்தத்தோடே நாற்பத்தியொரு ஆடுகளோடு அடுத்த வார மேய்ச்சலுக்குத் தயாரானான் செந்தில்.

இரண்டு மாதங்கள் கழித்து, தன் கிடையிலிருந்த சினையாட்டில் ஒன்று ஒரே ஒரு குட்டி ஈன்றது. இந்தத் தடவையாவது இந்த ஆட்டுக்குட்டிய முதலாளியிடம் சொல்லி நம்ம வூட்டுக்குக் கொணர்ந்திடணும்என்ற எண்ணத்தோடே அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து தன் மடியில் வைத்து அதற்குஅம்மூஎன்று பெயரிட்டான். இது இந்த மூன்று ஆண்டுகளில்அம்மூஎன்று பெயர் பெறும் ஐந்தாவது ஆட்டுக்குட்டி.

எந்தவகை ஆடுகள் கொடுக்கப்பட்டாலும், அவ்வகை ஆடுகளைக் கேள்வி கேட்காமல் மேய்த்துத் தரும் செந்திலைப்போல, கேள்வி கேட்காமல் இக்காலகட்டத்தில் அதிகமாக நுகரப்படுவது ‘OTT’ (Over-The-Top) தளங்கள் எனலாம். இன்றைய காலத்தில் இணைய உலகில் அதிகமாகப் பேசு பொருளாக மாறியிருப்பது நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime viedo), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney +Hotstar) போன்ற OTT தளங்களே ஆகும். உலகத் திரைப்படங்களிலிருந்து இணையத் தொடர்கள் (Web-series) மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் விரும்பிப் பார்க்கும் தளமாக அது விளங்குகிறது. பல ஆண்டுகளாகக் கேபிள் டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் குறிப்பாக, இளைய தலைமுறையினர் இந்தத் தளங்களையே விரும்புகின்றனர்.

செயற்கைக்கோள் ஒளிபரப்பு (satellite transmission) மற்றும் கேபிள் வழி ஒளிபரப்பு (cable transmission) முறைமைகள் இன்று மாற்றம் கண்டுள்ளதை, ‘காரட் கட்டிங்(Cord-cutting) என்கின்றனர். புற்றீசல்போல அதிகரிக்கும் O.T.T. தளங்கள் ஒரு தனிமனித விருப்பத்திற்கேற்ப (Personalized Viewing Experience) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. யார், எதை, எப்போது பார்க்க விரும்புகின்றார்களோ, அதை அவர் அப்போது பார்க்க முடியும். பல்வேறு மொழிபேசும் பயனர்களுக்கு அவர்களின் மொழியிலேயே காணொளிகளைத் தயாரித்துக்கொடுக்க முடிகிறது. இதனால் பல்வேறு மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. நமது பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரச் செழுமைகள் உலகத்தின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

O.T.T. தளங்களைக் காலத்தின் கொடை என நம்பி அப்படியே ஏற்றுக்கொள்வதிலும் சிக்கல் இருக்கின்றது. மொழி, கலாச்சார, பண்பாட்டுத் திணிப்பு, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க விடாமல் பல மணி நேரமாகத் தொடர்ந்து பார்க்க வைப்பது (Binge-watching), தணிக்கையற்ற வெளியீடுகள் (lack of regulations), குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகள் போன்ற கூறுகள் OTT தளங்களை ஆய்வுக் கண்ணோட்டத்தோடும் விமர்சன அணுகுமுறையோடும் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

ஒவ்வொரு மக்கள் தொடர்பு ஊடகத்திலும் நன்மையும் தீமையும் புதைந்திருப்பதுபோல, இணையதள OTT தளங்களிலும் அவை காணக்கிடக் கின்றன. OTT தளங்கள் மனித மாண்பைப் போற்றுவதிலும், சமூக நீதியை நிலைநாட்டுவதிலும், ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை மையப்படுத்துவதிலும் கருத்தாய் இருந்தால், அதுவே வளங்குன்றா வளர்ச்சியை (sustaina bility of life) நோக்கி மனிதனை அழைத்துச்செல்ல உதவும் மிகச்சிறந்த தொடர்புக் கருவியாக இருக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
வேகக் கலாச்சாரம்: காலத்தின் ஓட்டத்தில் மனிதனின் போராட்டம்!

வேகம் நல்ல அடிமை;

ஆனால், மோசமான எஜமானன்.’

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் இன்றுவேகம்என்ற சொல்லால் நிரம்பி வழிகிறது. மொபைலைத் திறந்தால் ‘10 நிமிடத்தில் டெலிவரி, பேருந்து ஏறினால்கொஞ்சம் சீக்கிரமா போங்க டிரைவர், அலுவலகத்தில்இப்போதே முடிவு தெரிய வேண்டும்என்று மேலாளர் - இப்படி நாம் வாழ்வது அல்ல, ஓடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. ஆனால், ஓர் உண்மை என்னவென்றால்மலர் மலர வேகம் இல்லை; ஆனால், மலர்ந்ததும் மணம் என்றும் நிலைக்கும். விதை முளைக்கப் பொறுமை தேவை; ஆனால், அது முளைத்தால் வாழ்க்கையைத் தாங்கும். அதுபோல, நம் வாழ்க்கைக்கும் வேகத்திற்கும் பொறுமைக்கும் சமநிலை தேவை.

வேகக் கலாச்சாரத்தின் முகங்கள்

1. சாலைகளில்: சிக்னலை மதிக்காமல் பாயும் வாகனங்கள். ‘ஐந்து நிமிடம்தானே தாமதம்?’ என்று சிந்திக்காமல், பல உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கும் ஓட்டங்கள்.

2. பணியிடங்களில்: உடனடி இலாபம், உடனடி முடிவு - மனிதர்களின் உழைப்பைவேக இயந்திரம்போலப் பயன்படுத்தும் அழுத்தம்.

3. கல்வியில்: ‘இன்னும் வேகமாப் படி, இன்னும் அதிகமா ரிசல்ட் எடுஎன்று குழந்தைகளின் சிறு வயதையே பறிக்கும் சூழல்.

4. சமூகத்தில்: பொறுமையில்லாப் பேச்சு, அவசர முடிவுகள் - உறவுகளையே உடைக்கும் நிலை.

வேகம் - நன்மையும் தீமையும்

வேகம் நம்மைக் கட்டுப்பாட்டுடன் முன்னேற்றும்போது அது வளர்ச்சி.

வேகம் நம்மை அவசரத்தில் இழுக்கும்போது அது அழிவு.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு. உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காலமுண்டு  (சஉ  3:1).

வேகக் கலாச்சாரத்தின் ஆபத்துகள்

1. விபத்துகள் - தினமும் சாலையில் உயிர்கள் பறிபோகின்றன.

2. மன அழுத்தம் - ‘வேகமா முடிக்கணும்என்ற அழுத்தம் மனநோயை உண்டாக்குகிறது.

3. குடும்பத் தகராறு - அவசரத்தில் பேசிய வார்த்தைகள் உறவுகளை உடைக்கிறது.

4. சுற்றுச்சூழல் சீர்குலைவு - வேகத்தில் வளர்ச்சி தேடி இயற்கையை அழிக்கும் உலகம்.

வேகம் ஒரு தீப்பொறி!

வாழ்க்கையை ஒளிரச் செய்யும்!

ஆனால், அதையே தவறாகப் பயன்படுத்தினால்,

அது வீட்டையே எரித்துவிடும்.

பொறுமை ஒரு மழை!

மெல்ல மெல்ல விழுந்தாலும்,

வேர்களை ஆழமாக வலுப்படுத்தும்.

அதனால், வேகத்திலும் பொறுமையிலும்

இணக்கத்தைக் கற்றுக்கொள்வோம்.

நாம் என்ன செய்ய வேண்டும்?

சாலைகளில்: விதிகளை மதித்து, மற்றவர்களின் உயிரை மதிப்பது.

வாழ்க்கையில்: சிறிது தாமதம் பரவாயில்லை என்று மனத்தை வளர்த்துக்கொள்வது.

குடும்பத்தில்: குழந்தைகளுக்கு ஓடாமல், வளரும் இடத்தை வழங்குவது.

சமூகத்தில்: வேகத்துக்குப் பதிலாகத் தரமும் அமைதியும் முன்னிலைப்படுத்துவது.

இன்றைய மனிதன்சில நிமிடம் கூட காத்திருக்க முடியாதுஎன்ற நிலைக்கு வந்துவிட்டான். ஆனால், உண்மையில் நேரம் குறைவதில்லை; பொறுமை குறைகிறது. வேகக் கலாச்சாரம் வாழ்வை  வசதியாக்கலாம்; ஆனால், நம் மனத்தையும், நம் உறவுகளையும், நம் உயிரையும் சிதைக்கக்கூடியது.

அன்புள்ளோர்களே.... வேகமும் பொறுமையும் இணைந்தால்தான் வாழ்க்கை அழகாக மலரும். பொறுமையைக் கற்றுக்கொண்டால்தான் வாழ்வு நிலைத்திருக்கும். “அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும் (பிலி 4:7).

news
சிறப்புக்கட்டுரை
காவி அரசியல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனித்த கிளை; அது தன் பிள்ளைகளை அதிகமாகப் பெற்றெடுக்கும். அவ்வாறான நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குடையின் கீழ் கிளை துணை அமைப்பாகச் செயல்படும். ஆர்.எஸ்.எஸ். அமைப்புமுஸ்லிம் இராஷ்ட்ரிய மன்ஞ்என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமியரையும் விடவில்லை. தன் அடிப்படை அமைப்புகளுக்குக் குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே தரும். விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பு கோவில்களை மட்டுமே கவனித்துக் கொள்கிற அருமையான வேலை. இரத யாத்திரை தொடங்கி, பாபர் மசூதி இடிப்பு வரை வி.எச்.பி. வழி ஆர்.எஸ்.எஸ். தன் கைவன்மையைக் காட்டியது. கடந்த மாதங்களில் வி.எச்.பி. அமைப்புஅவுரங்சீப் கல்லறைஎன்ற பெயரில் மகாராஷ்டிரா மாநிலத்தையே கலவர பூமியாக்கியது.

வி.எச்.பிஅமைப்பு இராம ஜென்ம பூமி  பிரச்சினை முடிந்தவுடன்  கிருஷ்ண ஜென்ம பூமி  பிரச்சினையைக் கையில் எடுத்தது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஹாஜி இத்கா மசூதி, பதானிலுள்ள ஷம்சி ஜனா மசூதிகளில் வி.எச்.பி. அமைப்பு பிரச்சினை செய்கிறது. வி.எச்.பி. அமைப்பு இதுகுறித்த முன்னெடுப்புகளுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற உயர் மத்திய அரசு அதிகாரிகளை அழைத்து ஓர் ஆலோசனைக் கூட்டமும் நடத்தியது.      

வி.எச்.பி. அமைப்பு தன் எதிர்காலச் செயல்திட்டம் குறித்த ஒரு பெரும் அறிக்கையைத் தயாரித்து, ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் ஒப்புதல் வாங்கிவிட்டது. அவ்வறிக்கை இந்தியா முழுவதும் உள்ள இந்து கோவில்கள் புதிதாக உருவாக்கப்பட்டு சுதந்திரமான தன்னாட்சி கொண்ட ஒரு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்; அவ்வாரியம் ஆலயங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களை நடத்திக் கொள்ளலாம், ஆகமக் கல்வியைப்  போதிக்கலாம், வேதகல்வி என்ற பெயரில் வேதங்கள், இதிகாசங்கள், சோதிடம், வாஸ்து, ஆயுர் வேதம் கற்றுத்தரலாம். உச்சபட்சமாகச் சமஸ்கிருதம்மொழி கற்பித்தல்என்ற வடிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இலட்சம்-கோடிகளிலுள்ள கோவில் சொத்துகளை உயர்சாதி பூசாரிகள் கொள்ளையடிக்கச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இவ்வாறு  வழங்கப்படும்.

வி.எச்.பி. அமைப்புசன ஜாக்குருதி சமிதிஎன்ற ஒரு துணை அமைப்பை உலகெங்கும் தன் செயல் துணையாக வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இந்து முன்னணி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பு கோவில் கலவர வேலைகளைச் செய்கிறது. மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டு காணொளிக் காட்சியில் அவர்கள் தங்களை இப்படியே அடையாளப்படுத்தினர். தமிழ்நாட்டில் இந்து மக்கள் கட்சியும், அதன் தலைவர் அர்ஜூன் சம்பத் போன்றோரும் இக்குழுவைச் சார்ந்தவர்கள்தாம். சாந்தோம் பேராலயத்தில் நுழைந்து அர்ஜூன் சம்பத் சத்தமிட்டது இன்றும் காமெடியாகப் பேசப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் கருத்துருவாக்கப் பணியைச் செய்ய வலதுசாரிகளுடன் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ், அர்ஜூன் முர்த்தி, இரவீந்திரன் துரைசாமி போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. ‘தினமலர்பத்திரிகையும் ஆர்.எஸ். எஸ். அமைப்பின் செயல்திட்டங்களை மக்களிடம் பூசி மெழுகிக் கொண்டு செல்கிறது.

தமிழ்நாட்டில் 1925-இல் நீதிக்கட்சி ஆட்சியில் கோவில் கொள்ளைகளைத் தடுக்க தமிழ்நாடு கோவில் வருமானங்கள் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாகச் செலவிடஇந்து சமய அறநிலையத் துறைஉருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான்கு இலட்சம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு, பயனுள்ள காரியங்களான பள்ளிகள், கல்லூரிகள், வருவாய் இல்லாத கோவில்களுக்கு நிதி பகிர்வு செய்ததால் அடிப்படைக் காரியங்கள் நடக்கின்றன.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்பாரும் இல்லை, நகை திருடுபவர்களும் இல்லை. உபயோகப்படுத்தாத நகைகள் உருக்கப்பட்டு அந்தப்  பெருந்தொகைகள் வங்கி வைப்பு நிதியாகி வருவாய் பெருகுகிறது. இவ்வாறான தமிழ்நாடு இந்து கோவில்களை என்ன செய்வது? தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையை என்ன செய்வது? மதுரையில்ஆன்மிக மாநாடுஎன்ற பெயரில் நடந்த மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழ்நாட்டில் ஆர்.எஸ். எஸ். செயல்திட்டத்தைப் பொதுவெளியில் வெளிச்சம் போடுகிறது.

மாநாடு தீர்மானம் 1-இன்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தீர்மானம் 2 - திருப்பரங்குன்றம் குமரனுக்கே சொந்தம்; தீர்மானம் 3 - தமிழ்நாடு கோவில்களிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும். இவ்வாறாக, அவாள் மடியிலிருந்து பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.

இவர்கள் சனாதனத் தர்மப்படி அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராகப் பணிபுரிவதை எதிர்ப்பவர்கள்; தமிழில் அர்ச்சனை வழிபாட்டு முறையை எதிர்ப்பவர்கள்; தமிழ்க் கடவுள் பெயரில் மாநாடு நடத்தி, தமிழ் பக்தர்களுக்கு எள்முனையளவும் முருகன் மாநாட்டில் அசைக்கவில்லை. இவர்கள் சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரையும் வைகுண்டரையும்சனாதனவாதிகள்எனப் பொய் உரைத்தவர்கள். திருவள்ளுவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் சிலைகளுக்குக் காவித் துண்டு, காவிச்சாயம் பூசி மக்களிடம் அவமானம் அடைந்தவர்கள். அவர்களுக்கு உள்ளூர் முகமூடி தேவைப்படுகிறது. அதனால் .தி.மு..வைத் துணைக்கு அழைத்து வருகிறார்கள்.

திராவிடத்தை வீழ்த்த வேல் கொண்டு வாஎன்ற மாநாட்டுச் சுவரொட்டிகளைப் படிக்கத் தெரியாமல் முருகன் மாநாட்டிற்கு உள்ளே சென்ற நான்கு முன்னாள் .தி.மு.. அமைச்சர்கள் வசமாக மாட்டிக் கொண்டார்கள். உள்ளூர் செய்தியாளர்கள் தென் மாவட்ட முன்னாள் .தி.மு.. அமைச்சர்கள்தான் முருகன் மாநாட்டிற்கு ஆள்பிடித்துக் கொடுத்தார்கள் எனப் பின்னணியை வெளியே  போட்டு உடைத்தார்கள். முருகன் மாநாட்டில்மதமாற்றத் தடுப்புஎன்ற பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. .தி.மு.. இன்றுவரை மதமாற்றம் குறித்து, அந்த உறுதிமொழி குறித்து வாய்திறக்க மறுக்கிறது. ‘மதமாற்றத் தடைச்சட்டம்என்ற பெயரால் செல்வி ஜெயலலிதா காலத்தில் .தி.மு.. ஆட்சி இழந்த வரலாறு மறந்திருக்கலாம். .தி.மு..விற்கு உள்ள மென்மையான இந்து மதப்போக்கு வெளிவந்தது. 2025, ஜூன் 23 அன்று பேளூர் ஆதீன விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் கலந்துகொண்ட .தி.மு.. முன்னாள் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களின் கிடுக்கிப்பிடி கேள்விகளால்ஜகாவாங்கினார்.

02.12.2022-இல் ஐந்து மசூதிகள் குறித்து வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வழிபாட்டுத்தலங்களில் 1947-ஆம் ஆண்டின் நிலையே தொடரவேண்டும். அதன் அடிப்படையில் மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள் ஒன்று மற்றும் மூன்று அடிப்படை இல்லாதவை, வெற்றி கொள்ளாதவை என்பதே கற்றறிந்தோரின் இறுதி முடிவாகும். தமிழ்நாட்டில் ஏன் பா... அல்லது அவர்களின் அடிமைகள் ஆட்சி வரக் கூடாது? என்பதற்கு ஒரே பதில், இந்து சமய அறநிலையத் துறையைக் கலைப்பது ஓர் ஆதிக்கச் சாதியின் சனாதனத்திற்கு உள்பட்ட வருணாசிரம தர்மத்திற்குக் கோவில்கள் வழி மீண்டும் புத்துயிர் அளிப்பதாகும்.

காவி அரசியல் தமிழ்நாட்டில்  கண்டறியப்படும். தமிழ்நாடு மக்கள் என்றும் மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். சமத்துவம், சகோதரத்துவம் பேணுபவர்கள். தமிழர்கள் தங்கள்  வாக்குகள் வழி தம் இன ஒற்றுமையை உலகறியச் செய்வார்கள்.

news
சிறப்புக்கட்டுரை
‘சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்...’ - சொன்ன சொல் மாறாத மூன்று பெண்கள்! (பேராளுமைகள் பேசும் பகுதி)

ஒரு குறிப்பிட்ட சம்பவமோ அல்லது ஒரு குறிப்பிட்ட அனுபவமோ, தனிமனிதரோ என்னுடைய வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை, ‘இன்றியமையாதஒன்றை ஏற்படுத்தினார்கள் என்றால், அது நான் எப்போதும் நன்றியுடன் நினைத்து, மனதார வணங்கி பலரோடும் பகிர்ந்து வாழும் மூன்று பெண்கள்தாம்.

பெற்றோர், பள்ளிப்பருவம் முதல் பயிற்றுவித்த ஆசிரியர்கள், உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும் பரிவுகாட்டிய நண்பர்கள், உறவினர் என்று பலருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

Existential philosophy-யில் Exclamatory Awareness and Existence என்று ஓர் அற்புதமான படிப்பினை உண்டு. ‘இந்தத் தருணத்தில் நான் இப்படி இருக்கிறேன்என்பதை முழுமையான பரவசத்துடன் உணர்கின்ற உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும், தன்னிலை உணரும் நிலையும் ஒருங்கே சேரும் அனுபவம் அது. அத்தகைய ஒரு மன எழுச்சியை நினைக்கும் தோறும் எனக்குத் தந்து என்னை நன்றியுடன் கரம் கூப்பச் செய்கின்றவர்களே நான் விவரிக்கப்போகும் மூன்று பெண்கள்.

டீன் மகதலேன் வில்லியபா

கும்பகோணத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கிருந்த நிலையில், அதை இடை முறித்து மேற்கொண்டு படிக்க 1978-இல் என் தந்தையாரும், வேரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பணி தலைவருமான மறைந்த திரு. எம்..சாமி என்னை பிலிப்பைன்சின் மணிலாவுக்கு அழைத்துச் சென்றார். முதலில் சேசு சபையாரின் அத்தனயே டி மணிலா பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் படித்து பட்டம் வாங்க ஆயத்தமான நிலையில், எனது இந்தியப் படிப்பையும், சில பாடங்களையும் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு, எதிர்காலம் கேள்விக்குறியானது. என் தந்தையார் தனது சக மாணவராக இருந்த டாக்டர் மகதலேனா வில்லியபாவிடம் இதுபற்றிக் கவலையுடன் பேசியபோதுஎன்னிடம் அழைத்து வாருங்கள், நான் டீன் ஆகப் பணியாற்றும் இராயல் போன்டிப்பிக்கல் யூனிவர்சிட்டி ஆகிய சாந்தோ தோமாஸ் பல்கலைக்கழகத்தில் மேலும் சில பாடங்களைப் படிக்கச் செய்து பட்டம் வாங்குகிறேன்என்று வாக்குறுதி அளித்தார் அவர்.

அங்கேயும் அதே சிக்கல். இந்திய மாணவனை இடைநிலையில் சேர்த்து, முன்னர் படித்த படிப்பை அங்கீகரிக்க முடியாது என்று சிலர் மறுப்பு தெரிவித்தபோது, “நான் கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். என்னை நம்பி வந்து விட்டார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமை டீன் நான். நான் அளித்த வாக்குறுதி இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையாகும்என்று என்னை ஏற்று, பட்டமளித்து வாழவைத்த பெருந்தகை என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் டீன் மகதலேன் வில்லியபா. அந்த நன்றியின் வெளிப்பாடாக என் மூத்த மகளுக்கு அவர் பெயரையே வைத்திருக்கிறேன்.

திருமதி. அனுராதா டிடிவி தினகரன்

அது போராட்டமான வாழ்க்கைக்குள் நான் நுழைந்திருந்த காலம். ஊடகத்துறையில் பெரிய அனுபவம் ஏதுமின்றி, முக்கிய முடிவுகளை எடுப்பதில் அனுபவம் பெற்றவர்களின் வழிகாட்டுதல் ஏதுமின்றி, நான் எதிர்நீச்சல்  போட்டுக்கொண்டிருந்த நேரம். ஒரு வேலையில் உட்கார்ந்திருந்தோமா? மாதம் முடிந்தால் சம்பளம் வாங்கினோமா? என்று வாழ்க்கைக்குள் பழக்கப்பட்டிருந்த பின்னணியிலிருந்து, சென்னைக்குக் குடியேறி வாழத் தொடங்கியிருந்த எனக்குசாண் ஏறினால் முழம் சறுக்கும்நிலை அப்போது. எந்தப் பின்னணியும் இன்றி வந்து உழைப்பாலும், தந்தையிடம் பெற்ற பயிற்சியாலும் ஊர் உலகம் தெரிந்தவனாக மாறி இருந்த எனக்கு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களும், சமூகம் செயல்படும் விதங்களும் தெரிந்திராத நேரம் அது. காரணமே இல்லாமல் நமக்கு எதிராகப் பேசியவர்களும், நம்முடைய இருப்பையும் வளர்ச்சியையும் பிடிக்காத பலரும் வாழ்க்கையில் வந்து போவார்கள்; நம்முடைய ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பொருள் சொல்லி நம்மைத் தூக்கி எறிவதில் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகையோர் எல்லார் வாழ்விலும் உண்டு. என் வாழ்விலும் இருந்தனர்.

தாய்லாந்து நாட்டில் தமிழ் ஈழ அமைதிப் பேச்சு வார்த்தையில் என்னைத் தொடர்புபடுத்தி என்னை வீழ்த்த முயன்ற சிலரை எதிர்த்து நின்று பெரும் சிக்கலிலிருந்து என்னைப் பாதுகாத்தவர் திருமதி. அனுராதா டிடிவி தினகரன். அவரோடு 13 ஆண்டுகள் ஜெயா டி.வி.யில் பணியாற்றி, நான் பெற்ற அனுபவங்கள் மிக நேர்த்தியானவை.

நான் திடீரென மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அதிர்ச்சியான சூழலில் மருத்துவமனைக்கு வந்து என் மனைவியிடம், “நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதீர்கள்என்று தைரியமூட்டிய பேருள்ளம் கொண்டவர். என்னைவிட பலமடங்கு இளையவராய் இருந்தபோதும், ஒரு நல்லாசிரியராக எனக்கு இருந்த பெண்மணி அவர். கண்ணுக்குக் குலமேது? கருணைக்கு இனமேது?

அம்மா செல்வி ஜெயலலிதா

முதன்முதலாக 1997-இல் சந்தித்தபோதிலிருந்து கடைசியாகச் சந்தித்த 2016-வரை ஒரே மாதிரியான மரியாதையையும் உபசரிப்பையும் கௌரவத்தையும் எனக்கு அளித்தவர் அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள். அவருடனான எனது அனுபவங்களை ஏராளமாகக் கூறலாம். என்னை ஏன் எப்படி நாடாளுமன்ற உறுப்பினராக்கினார்? என்பதை மட்டும் இப்பொழுது கூறுகிறேன்.

2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல்களுக்கான .. .தி.மு.. கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நாள். அன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.

வாங்க... திரு. பெர்னார்ட்என்று வழக்கம் போல இன்முகத்துடன் என்னை அழைத்தார் அம்மா.

உங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று நான் எத்தனையோ முறை முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் அரசியல், சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்டு எனது முயற்சி தோல்வியுறும். இன்றைக்கும்கூட நமது கட்சியின் இரண்டு வேட்பாளர்களை நான் அறிவிக்கப் போகின்றேன். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் இந்த இருவரில் ஒருவரை இராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அந்த இடத்திற்கு உங்களை அனுப்புவேன். நான் இதை ஏன் இப்போது உங்களிடம் சொல்கிறேன் என்றால், இது எனக்கு நானே செய்து கொடுக்கும் சத்தியப் பிரமாணம். அப்போதுதான் எந்த நிர்ப்பந்தம் வந்தாலும் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன்; மீற முடியாது என்று என்னால் சொல்ல முடியும்என்று மடமடவென ஆங்கிலத்தில் கூறினார்.

அதேபோல ஆட்சிக்கு வந்த உடனேயே என்னை நாடாளுமன்றத்திற்கு அறிவித்துவிட்டு என்னை முதலமைச்சரின் அறைக்குள் அழைத்துச் சென்று, “என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றிஎன்று உள்ளம் நெகிழ்ந்து கூறினார் அம்மா.

நான் என்ன மதம், என்ன சாதி, என்ன உட்பிரிவு? என்று எந்தக் கேள்வியும் கிடைக்காது, “உனக்கு உதவ நான் நினைத்தேன், அந்தச் சிந்தனையை கடவுள் என் மனத்தில் வைத்தார், வாக்குக் கொடுத்தேன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றிஎன்று என் வாழ்க்கையின் திசையை மாற்றியவர்கள் இவர்கள்.

இந்த மூன்று பெண்களுக்கும் நானும் எனது குடும்பமும் தலைமுறைத் தலைமுறையாக நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.

செயற்கரிய செய்வர் பெரியர்!

news
சிறப்புக்கட்டுரை
தர்மம் எப்போது வெல்லும்?

காசாவில் வாழும் பாலஸ்தீனிய மக்கள்மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தும் மனிதாபிமானமற்றப் போர் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கிறது. ‘ஹமாஸ்அமைப்பின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அழித்து ஒழிக்கவும், அவர்கள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேல் நாட்டினரை மீட்டெடுக்கவும் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்ட இஸ்ரேல் அரசின் இராணுவ நடவடிக்கைகள், தற்போது காசாவில் வாழும் பாலஸ்தீனியர்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றி, முழுமையாக அழித்தொழிக்கும்இன அழிப்புப் போராகமாறியுள்ளது.

இதுவரை 60,000 பாலஸ்தீனியர்களுக்கு மேலாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் 18,000 பேர் குழந்தைகள். காசா மக்கள்தொகையில் சுமார் 10% மக்கள் ஊனமாக்கப்பட்டிருக்கின்றனர். இருபது இலட்சம் மக்கள் அவர்களது  வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு சாலையோரங்களிலும் திறந்த வெளிகளிலும் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்கள் முழுமையாகச் சிதைக்கப்பட்டு, பயிர்களே விளையாத கந்தகப் பூமியாக மாற்றப்பட்டு வருகின்றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்ற உணவு, மருந்துகள் போன்ற நிவாரணப் பொருள்களை எடுத்துச்செல்ல சர்வதேச நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் இஸ்ரேல் இராணுவம் அனுமதிக்காத காரணத்தால், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் முதியவர்களும் நோயாளிகளும் பசியாலும் பட்டினியாலும் இறந்து வருகின்றனர். சர்வதேச உதவி மையங்களில் உணவு  வாங்க வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறோம் என்று கூறி இதுவரை ஆயிரம் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேல் இராணுவத்தின் அடாவடி நடவடிக்கைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் சர்வதேச ஊடகவியலாளர்களையும் உதவி செய்வதற்காக வந்துள்ள தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்களையும்கூட இஸ்ரேல் இராணுவம் சுட்டுத்தள்ளுகிறது.

இத்தனை அநியாய அக்கிரமங்களுக்கும் பகிரங்கமாக உதவி செய்பவர்உலகச் சமாதானத்தின் காவலராகதன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசை வாங்கத் துடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இந்த மரணக் கச்சேரிக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் பணக்கார ஐரோப்பிய வல்லரசுகள். இந்த அபஸ்வரக் கச்சேரியைக் காசு கொடுத்து அமைதியாகக் கேட்டு இரசிக்கும் இரசிகர்களாகப் பணக்கார அரபு நாடுகள் மாறிப்போனது மற்றுமொரு கொடுமை. பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரத்தினை முதன்முதலில் வழங்கிய இந்தியா போன்ற நாடுகளும், அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கிய இரஷ்யா-சீனா போன்ற நாடுகளும் இன்று அவர்களுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு, அவர்களுடைய எல்லைகளிலிருக்கும் பதற்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக டிரம்ப் எனும்அநியாயமான பேராசைக்காரர்சர்வதேச நாடுகளின்மீது தொடுத்திருக்கும் அநியாய வரிவிதிப்புப் போர் போன்ற பிரச்சினைகளால் பாலஸ்தீனியர்களுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க முடியவில்லை.

இதுபோன்ற தருணங்களில் நியாயம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பாதுகாப்புக் கவுன்சிலும் அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டால் செயலிழந்து நிற்கின்றன.

பாலஸ்தீனம் முழுவதும் மரண பயம். குடியிருப்புகளில் எல்லாம் பிணவாடை. முன்னறிவிப்பின்றிப் பறந்துவரும்ட்ரோன்கள்வீசும் அமிலக் குண்டுகளால் அடையாளமே தெரியாமல் சிதைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண அவர்களது உடல்களில் குழந்தைகளின் பெயர்களைப் பச்சை குத்தி வைக்கும் தாய்மார்கள். அடையாளம் தெரிந்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தங்கள் கைகளில் தங்களது பெயர்களைப் பச்சை குத்திக்கொள்ளும் இளைஞர்கள். பெண்கள் தங்கள் பெயர் பொறித்த வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. மொபைல் போன்களின் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் அவலம். மயக்க மருந்துகளின் தட்டுப்பாட்டால் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம். ஆண்களுக்கு இரண்டு வேலைகள்: ஒன்று, இறந்தவர்களுக்கான இறுதிச்சடங்குகளைச் செய்வது; இரண்டு, மற்ற நேரங்களில் உதவி மையங்களில் வழங்கப்படும் உணவுக்காகக் காத்திருப்பது. பெண்களுக்கு இரண்டு வேலைகள்: இறந்துபோன தங்கள் பிள்ளைகளை, உறவினர்களைக் கட்டிப்பிடித்து அழுவது; மற்ற நேரங்களில் உதவி விமானங்கள் வந்து கீழே வீசும் உணவுத் தானியங்களை மண்தரைகளிலிருந்து பொறுக்குவது. இவ்வளவு கொடுமைகளையும் உலகம் முழுமையும் பார்த்தும் அறிந்தும் எதுவுமே தெரியாததுபோல இருப்பதை இஸ்ரேல், சர்வதேச நாடுகள் தனக்குத் தெரிவிக்கும் ஆதரவாகப் பார்க்கின்றது.

அமெரிக்காவின் ஆயுத உதவிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளும் இஸ்ரேலின் மீது பாயாத அளவுக்கு அமெரிக்கா தருகின்ற பாதுகாப்பும், ஐரோப்பிய நாடுகளின் வணிகத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இல்லாமல் இஸ்ரேல் ஒரு மணிநேரம்கூட போர்க்களத்தில் நிற்க முடியாது. தெற்கு ஆசியப் பகுதியில் செயல்படும் ஒரே சனநாயக நாடு என்ற முறையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக்கொள்ளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் கடைந்தெடுக்கப்பட்ட சுயநலமும், கலப்படமில்லாத வணிக ஆதாயமும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. முக்கியமாக, எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க இஸ்ரேல் என்றரௌடி நாடுஅவர்கள் கைவசம் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றன. நாகரிகம் மிக்க, சனநாயக உணர்வுள்ள, மனிதநேயம் மிக்க நாடுகள் என்று எப்போதும் தங்களைப்பற்றிப் பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் தங்களால் நேரில் செய்யமுடியாத அயோக்கியத்தனங்களை இஸ்ரேல் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இத்தகைய அயோக்கியத்தனங்களைச் செய்வதற்கான வசதிகளையும் தொழில்நுட்பங்களையும் இஸ்ரேல் உருவாக்கி வைத்துள்ளது இவர்களுக்குப் பெரும் வசதியாக உள்ளது. இதற்கான நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசு நாடுகளும் இஸ்ரேலுக்குச் செய்து வருகின்றன.

இன்று காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புப் போரின் மூலம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எவ்வளவு இலாபம் சம்பாதிக்கின்றனர் என்பது குறித்து, பாலஸ்தீனத்திற்கான .நா. சிறப்புப் பிரதிநிதியான பிரான்செஸ்கா ஆல்பனீஸ் அம்மையார் விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். போரின் மூலமாகப் பயனடைந்த பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களின் பட்டியலையும் அதில் இணைத்திருந்தார். இந்நிறுவனங்கள் தங்களது புதிய தொழில்நுட்பங்களையும் ஆயுதக் கண்டுபிடிப்புகளையும் சோதனை செய்து பார்க்கும் ஆய்வுக்களமாக காசாவை மாற்றியிருந்ததை விளக்கியிருந்தார்.

ஆல்பனீஸ் பட்டியலிட்டிருந்த நிறுவனங்களில் அமேசான், மைக்ரோசாப்ட் உள்பட பெரும்பாலானவை அமெரிக்க நிறுவனங்களாகும். மற்றவை ஐரோப்பிய நிறுவனங்கள். இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஆல்பனீஸ் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர்மீதுயூதர்களின் விரோதிஎன்றும், ‘பயங்கரவாதத்தின் ஆதரவாளர்என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்மீது பல தடைகளை விதித்து, அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் முடக்கி வைத்துள்ளன.

சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமாகவும், .நா. சபையின் தீர்மானங்களுக்கு எதிராகவும் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்ளும் இஸ்ரேல் குறித்த இந்திய நிலைப்பாட்டில் தெளிவு இல்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இப்போதுதான் தெளிவு பிறந்துள்ளது. ஆனால், இந்தியா அரை நூற்றாண்டுக்கு முன்னரே செய்துகாட்டியது.

வாஜ்பாய் பிரதமரானதும், அத்வானி இஸ்ரேல் சென்றார். அது முதற்கொண்டு இஸ்ரேலோடு இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேலிடம் ஆயுதங்கள் வாங்குவதும், உளவு வேலைக்கான உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவதும் என்று நெருக்கம் பல மடங்குகள் அதிகமாயிற்று. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பைப்போல நமது பிரதமரின் நெருங்கிய நண்பர். இதனால் கடந்த அக்டோபர் 26 அன்று .நா. பொது அவையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தபோது, 120 நாடுகள் தீர்மானத்தினை ஆதரித்த வேளையில், இந்தியா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் நவம்பர் 21 அன்று நடந்தபிரிக்ஸ்நாடுகள் கூட்டத்தில் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று சீன அதிபர் முன்மொழிந்த தீர்மானத்தினை இந்தியா வழிமொழிய மறுத்துவிட்டது. ஆனால், நமது வெளியுறவுத்துறை அமைச்சர் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்குத் தனது எதிர்ப்பினை மட்டும் பதிவு செய்தார். பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக மோடி எத்தனை நாள் நடிப்பார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

போர் நிறுத்தத்திற்கும், பிணையக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஹமாஸ் அமைப்பினர் தயார் என்று அறிவித்த பின்னரும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தயாராக இல்லை. அவரது பதவியைக் காப்பாற்றவும், தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் இந்த யுத்தம் அவருக்கு அவசியம் தேவை. போர் நின்றுவிட்டால் உடனடியாக அங்கே தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்நாட்டில் கடுமையான மக்கள் எதிர்ப்பை மீறி அவரால் வெற்றிபெற இயலாது. அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை, யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் விசாரணை தொடரும். தண்டனை நிச்சயம் என்று சொல்கிறார்கள். எனவே, யுத்தத்தின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்த நெதன்யாகு முயற்சிக்கிறார்.

பத்து இலட்சம் மக்கள் வாழும் காசா நகரையும், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் நாட்டின் பகுதி என்று அறிவிக்கும் தீர்மானத்தை அவரது அமைச்சரவை சில நாள்களுக்கு முன் நிறைவேற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மக்களை அங்கே குடியமர்த்தும் பணியையும் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளைக் கட்டத் தொடங்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 60,000 இராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று இரு நாடுகளே இல்லை; இனி இஸ்ரேல் மட்டும்தான்என்று இஸ்ரேல் நிதி அமைச்சர் கொக்கரிக்கின்றார். காசா நகரின் நகர்மன்றத் தலைவர் முஸ்தபா குவாசத், “இது பேரழிவு; ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக் கருதி நகரை விட்டுப் பீதியுடன் ஓடுகின்றனர். தங்க இடமின்றித் தரிசு நிலங்களில் மேற்கூரைகூட இல்லாமல் தங்கியுள்ளனர். உலக நாடுகளே, இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்களேன்!” என்று கதறுகின்றார்.

அரபு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளும் வெறும் கண்டனங்களோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக மௌனம் காக்கிறார்கள். டிரம்ப் உலகச் சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காகக் காத்திருக்கின்றார். நெதன்யாகு, ‘அப்பரிசு பெற தகுதியான ஒரே நபர் டிரம்ப் மட்டும்தான்என வழிமொழிகிறார். டிரம்புக்கு நோபல் பரிசினை வழங்காவிடில் நோபல் பரிசு தலைமைச் செயலகத்தை டிரம்பும், நெதன்யாகுவும் சேர்ந்து குண்டுகள் போட்டு அழித்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்!’ என்று அடிக்கடி சொல்கிறார்களே... அந்தத் தர்மம் எப்போது வெல்லும்? பாலஸ்தீனக் குழந்தைகளின் மரண ஓலம் எப்போது நிற்கும்?

news
சிறப்புக்கட்டுரை
ஆசிரியர்களைப் பெருமைப்படுத்துவோம்!

இந்தியாவில்ஆசிரியர் தினம்செப்டம்பர் 5-ஆம் நாள் டாக்டர் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளைக் குறிக்கிறது. அவர் புகழ்மிகு அறிஞர். பாரத இரத்னா விருதாளர். முனைவர், பேராசிரியர். சுதந்திரத் திருநாட்டில் முதல் துணைக் குடியரசுத் தலைவர். தமிழ்நாட்டின் இரண்டாம் குடியரசுத் தலைவர். தத்துவமேதை, சிறந்த கல்வியாளர்.

1888-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம்  நாள் பிறந்தார். இராதாகிருஷ்ணனின் நண்பர்களும், பல மாணவர்களும் அவரது பிறந்த நாளைக் கொண்டாட விரும்புவதாக அவரை அணுகியபோது, “எனது பிறந்த நாளைத் தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்என்றார். 1967-ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை செப்டம்பர் 5-ஆம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவையும் ஞானத்தையும் பரப்புவதற்காக ஆசிரியர் தொழிலைத் தேர்வு செய்கின்றனர். படித்த மக்கள் தொகை உள்ள நாடுதான் பெரும் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களிக்கிறது. ஒரு நாடு பொருளாதார ரீதியாக வெற்றிபெற சரியான வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் வேண்டும். பாடத்திட்டத்தின்படி பாடம் நடத்துவது மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடும்ப மக்களாக, குடும்பங்களாக அவர்களை வடிவமைக்கிறார் ஆசிரியர்.

இந்த நாள் தரமான கல்வியைப் பெறுவதற்காக ஆசிரியர்கள் எடுக்கும் முயற்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. இந்நாள் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமானது. ஏனெனில், இந்தக் குறிப்பிட்ட நாளில் அவர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் மாணவர்கள் மற்றும் புகழ்மிக்க அமைப்புகளால் கௌரவிக்கப்படுகின்றார்கள். ஆசிரியச் சான்றோரைப் பெருமைப்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரால் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் தினம் ஆசிரியர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் இடையிலான தூய்மையான பிணைப்பைக் கொண்டாடும் அற்புதமான நாள். ஆசிரியர்களுக்கான கூட்டங்கள் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை ஏற்பாடு செய்து, இந்தச் சிறப்பு நாளை மறக்க முடியாததாக மாற்றுகின்றார்கள். எவ்வளவு பாராட்ட, வாழ்த்த, போற்ற முடியுமோ அத்தனையும் செய்து பெருமைப்படுத்துகின்றார்கள்.

ஒன்றிய அளவில் உள்ள கல்விப் பட்டியலை மாநில அரசுக்கு மாற்றி, அந்தந்த மாநில அரசுகளே செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளவேண்டும். தமிழ்நாடு, கேரளம் போன்ற தென் மாநிலங்கள் கல்வியில் நாட்டில் பெரும்பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வியில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகப் பணி வாய்ப்பிலும் சரி, எல்லாத் துறைகளிலும் உள்ளது. இதற்கு மூலகாரணம் ஆசிரியர்களே. மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் தன்னை எவ்வாறு ஆசிரியச் சான்றோர் உருவாக்கினார்கள் என்பதைப் புத்தக வடிவில் வெளியிட்டு ஆசிரியச் சான்றோர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

நமது நாட்டில் உயர் பதவிகளில் இருந்த பலரும் ஆசிரியர்களே! பல்துறை சேர்ந்த பரந்த அறிவையும் மாணவர்களுக்கு வழங்குபவர்களும் ஆசிரியர்களே!

இந்நாளை நாம் கொண்டாடும்போது ஆசிரியர்கள் தன்னலமற்ற சேவையை நினைத்து அவர்களைப் பெருமைப்படுத்தத் தவறக்கூடாது. ஆசிரியர்கள் தாங்கள் செய்யும் பணியைப் போற்றி அவர்கள் தங்கள் பணியை மேலும் சிறப்பாக ஆற்றிட அவர்களை வாழ்த்துவோம்.