news
சிறப்புக்கட்டுரை
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)-இன் ‘மறைத்தூதுப் பணி (MISSION) மேய்ப்புப் பணித்திட்டம்

சென்ற இதழ் தொடர்ச்சி

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கான  வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

வினா 1: நமது தமிழ் நாடு ஆயர் பேரவைக்குமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்திற்கு இணையான, நமது பொதுநிலை இறைமக்கள், துறவியர், அருள்பணியாளர்கள், ஆயர்களை உள்ளடக்கிய ஒரு மேய்ப்புப் பணித் திட்டம் தேவையா? எவ்விதங்களில் அத்தகைய திட்டத்தை முன்னெடுக்கப் போகிறோம்?

தமிழ்நாடு திரு அவைக்கு இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் மேய்ப்புப் பணித் திட்டத்தோடு இணைந்த ஒரு திட்டம் கண்டிப்பாகத் தேவை. முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள்:

தற்போது மாநில, மறைமாவட்டப் பணிக் குழுக்கள் செயல்படுத்தும் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் திருத்தந்தையின் கூட்டொருங்கியக்கத் திரு அவை வழிகாட்டுதல்களின் பார்வையில் மறுவாசிப்பு, மறு ஆய்வு செய்வதும், தேவைப்படின் மறு சீரமைப்பு செய்வதும் முக்கியமான ஒன்று.

செயல்பாடுகளின் ஒவ்வொரு நிலையையும் கண்காணித்து (Monitoring), திட்டம் சரியான பாதையில் செல்வதை உறுதிசெய்வதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் திறனாய்வு செய்து, நிறை-குறைகளைக் கண்டுணர்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்வது, செயல்பாடுகளைத் தொடர்வது.

மறைமாவட்ட, மாநிலத் திரு அவைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதனடிப்படையில் குறுகிய / நீண்டகால திட்டங்களைத் தீட்டுவது.

மாநில அளவில் பணிக் குழுக்களுக்கான திட்டமிடுதல், ஒருங்கிணைப்புக் குழுவை பொதுநிலை இறைமக்கள், இருபால் துறவிகள், மறைமாவட்டக் குருக்கள், ஆயர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பாளர்களின் ஒருங்கிணைப்பாளர் (Coordinator of Coor
-dinators
) என்ற அமைப்பும் செயல்முறைகளும், மாநில அளவிலும், மறைமாவட்ட அளவிலும் தேவை.

வினா 2: நாம் நமது பணிக் குழுக்களோடும் மறைமாவட்டங்களோடும் ஒத்த கருத்துடைய அமைப்புகளோடுமுள்ள ஒருங்கிணைப்புப் பணியை எவ்விதம் வலுப்படுத்தலாம்?

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணிக் குழுக்களுக்கு இடையிலும், ஒவ்வொரு பணிக்குழுவிலும் தொடர் கூடுகைகள் மிக மிக அவசியம்.

பணிக் குழுக்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் துறவற சபை அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள் இவர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், துறவற சபைகளின் மேய்ப்புப் பணித் திட்டங்கள் மறைமாநில அருள்பணித் திட்டங்களோடு இணைந்தப்படி அமைத்துக்கொள்வது தேவை.

அனைவரிடையேயும் உறவு நிலை சமத்துவத்தையும் (Sense of Equality), உரிமை நிலை சமத்துவத்தையும் (Sense of Equal Rights) ஏற்படுத்திக்கொள்வது தேவை.

வினா 3: தமிழ்நாடு ஆயர் பேரவை வரும் பத்து ஆண்டுகளில் முன்னிலைப்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வச் செயல்பாடுகள் யாவை?

தற்போது செயல்படுத்தி வரும் தலைமைத்துவப் பயிற்சிகள், களப்பணிப் பயிற்சிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும், பயிற்சிகள் இல்லாத இடங்களில் புதிதாகப் பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்என்பதற்கேற்ப புதிய சிந்தனை, புதிய உறுப்பினர்கள், புதிய ஆற்றல்கள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு உலகியல் துறைசார் மற்றும் பணிக்குழு சார்ந்த வல்லுநர்கள், நெறியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

மறைமாவட்ட அளவில் சில சிறப்புப் பணிக் குழுக்களுக்கு முன்னுரிமை தருவதும் ஊக்கப்படுத்துவதும் வேண்டும் (.கா: சுற்றுச்சூழல் பணிக்குழு, சிறைப்பணிக்குழு, மாற்றுத்திறனாளிகள் பணிக்குழு, திருநங்கையருக்கான மேய்ப்புப் பணித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்துவது காலத்தின் கட்டாயம்). அவர்களுக்கு உரிய, உயரிய பணிகளில் பணி அமர்த்துவது தகுதியும் நீதியும் ஆகும்.

தொழில் நுட்பங்களை மேய்ப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துவது, பயிற்சிகளை அளிப்பது மிக மிகத் தேவை.

வினா 4: தமிழ்நாடு ஆயர் பேரவை இந்திய ஆயர் பேரவைக்கு அளிக்கக்கூடிய சிறப்பான பங்களிப்புகள் யாவை?

பணிக்குழுசார் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து, தமிழ்நாடு திரு அவையிலிருந்து தேசிய பணிக்குழுவை வலுப்படுத்துவதற்கான கருத்தாளர்களைத் தயார்படுத்தி அனுப்பலாம்.

பணிக்குழுக்களின் வளர்ச்சிப் பணிகள் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக இந்திய ஆயர் பேரவை தமிழ்நாடு திரு அவையை அழைப்பது, நம்மிடையே உள்ள கட்டுமான வளங்களை அளிப்பது.

புதிய முறைகளில் அனைவரையும் ஈர்க்கும்படி நற்செய்தி அறிவிப்பை உருவாக்கி ஊக்குவிப்பது, அவைகளைத் தேசிய அளவில் இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மூலம் கொண்டு செல்வது.

பொது அமர்வில் எழுந்த முக்கியக் கருத்துகள் மற்றும் உடனடிச் செயல்பாட்டுக்கான தீர்மானங்கள் அனைவரின் சம்மதத்தோடு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி...

மறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்தை நம் தமிழ்நாடு திரு அவையின் சூழலுக்கு ஏற்ப தன்னுருவாக்கம் (Personalize) செய்வது.

வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கும் பிற மாநிலங்களின் மேய்ப்புப்பணித் திட்டங்களைத் தழுவி, தமிழ்நாடு திரு அவை தனது மேய்ப்புப் பணித் திட்டத்தை உருவாக்குவது.

  மறைத்தூதுப் பணி 2033’ என்கிற அனைத்து பணிக்குழுக்களுக்குமான மேய்ப்புப்பணித் திட்டத்தை அந்தந்தப் பணிக்குழு வாரியாகப் பிரித்துக் கொடுத்து செயலாக்கம் பெறச் செய்வது.

மேய்ப்புப் பணிக்கான ஆர்வத்தை ஆயர்கள், அவரவர் மறைமாவட்டப் பணிக்குழுச் செயலர்களுக்கும், குருக்களுக்கும் ஊட்டி வளர்ப்பது காலத்தின் கட்டாயம்.

இதன் அடிப்படையில் வரும் 2025, பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அனைத்து மாநில பணிக்குழுக்களின் செயலர்கள் அனைத்து மறைமாவட்டங்களிலும், தான் சார்ந்த அந்தந்த மறைமாவட்ட பணிக்குழுக்களின் செயலர்களோடு திட்டமிடுதல், பரவலாக்கம் குறித்த கூடுகை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டது. அதைக் குறித்து ஒரு செயல்பாட்டு அறிக்கை தமிழ்நாடு ஆயர் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறு வரும் ஆண்டுகளில் இந்த மேய்ப்புப் பணித்திட்டத்தைச் சரியான விதத்தில் செயல்படுத்த நம் அனைவரின் பங்கேற்பும் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும். திரு அவையின் எதிர்நோக்கின் திருப்பயணிகளாக, புதியதாய் புலர்ந்துள்ள இந்த யூபிலி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நாம், நமது இலக்கை நோக்கிய தெளிவான மேய்ப்புப்பணித் திட்டங்களோடு இறையாட்சியின் கருவிகளாகச் செயல்படுவோம். இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனதுமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டத்தின் வழியாக மக்களின் மனங்களில் விதைத்த விதைகள் புதிய உத்வேகத்தோடு கிளர்ந்து முளைத்தெழுந்து, ஒரு சில முப்பதும், ஒரு சில அறுபதும், ஒரு சில நூறுமாகப் பலன் கொடுத்து, 2033-ஆம் ஆண்டில் நமது மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, குறிப்பிடும்படியான மாற்றத்தைத் தனி மனிதனிலும், பங்கு அளவிலும், மறைமாவட்ட, மாநிலத் திரு அவையிலும் ஏற்படுத்தியிருப்பதை நாம் கண்கூடாய்க் காண முடியும். நாம் முன்னெடுத்த இச்செயல்பாடுகள் வழியாக, ஒன்றியத் திரு அவையின் கூட்டொருங்கியக்கத்திற்குச் சான்றாகவும், கிறித்தவம் ஒரே திருஅவையாக நம் நாட்டில் வளர்ச்சி காணவும், ஒவ்வொருவரும் இறையாட்சியில் பொறுப்புள்ள உறுப்பினராகவும், தமிழ்த் திரு அவைத் தழைத்தோங்கவும், இறைவன் தம் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியாரின் ஆற்றலில் நம்மை நடத்திச் செல்லட்டும்.

- திரு. வில்லியம், திரு. ஜூட் இவர்களின் உதவியோடு 

அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப்

news
சிறப்புக்கட்டுரை
அரங்கேறும் அரசியல் சூழ்ச்சிகள்

அரசியல் சிந்தனையின் அவையச் சிதைவு; தலைவர்களின் அறிவுசார் வறட்சி; நவீன சிந்தனைக்கு ஏற்பட்ட துயர முடிவு; அரசியலில் நேர்மையும் நெறியும் குறைந்துவிட்டது. உரையாடல் சுருங்கிப்போய்விட்டது. தொலைநோக்குப் பார்வை நலிந்துவிட்டது  (யோகேந்திர யாதவ்ஆனந்த விகடனில்எழுதிய கட்டுரையிலிருந்து).

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான திரு. யோகேந்திர யாதவ் அவர்களின் கருத்தில் தொனிக்கும் இவ்வார்த்தைகள் எவையுமே மிகையானவை அல்ல; இன்றைய அரசியல் போக்கை அலசிப் பார்ப்போர் எவருக்கும் இவ்வார்த்தைகள் வியப்பைத் தராது என்பதே உண்மை.

அரசியல் களங்களில் எப்போதுமே நேர்மையும் நாணயமும் முழுமையாக இடம்பெறவில்லை எனினும், நிலவும் இன்றைய அரசியல் போக்கின் ஒவ்வொரு பகுதியும் யாதவ் அவர்களின் கூற்றை நியாயப்படுத்துகின்றன. குறிப்பாக, ஆளும் அரசியலாரின் நேர்மையற்ற, நாணயமற்ற தகிடுதத்தங்கள் நேர்மை வேண்டிநிற்கும் குடிமக்களை அரசியல் அணுகலிலிருந்தும், இவ்வரசியல் மேற்கொள்ளும் சமூகத்திலிருந்தும் எட்டி நிற்கவே செய்து விடுகிறது. அரசியலாரின், குறிப்பாக ஆளும் அரசியலாரின் அனைத்து அரசியல் வடிவங்களும் சூதும் வஞ்சமும் பொய்யும் நிறைந்தே காணப்பெறுகின்றன. வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற ஆற்றல் படைத்தோர் இப்போக்கில் காணும் பொய்மையை உணர்ந்தறிய முடியும். இவ்வாய்ப்பினைப் பெறாத புதிய சமூகம், உண்மை அறியும் வாய்ப்பினை எப்படிப் பெறும்?

தி இந்துநாளிதழில் (12, டிசம்பர் 2024) மேற்கண்ட தலைப்பு பொருந்துமாறு ஒரு செய்தி வெளிவந்துள்ளது. ஆளுநர் இரவி அவர்கள் குமரி மாவட்டத்தில்அய்யா வழி ஆய்வு மையம்ஒன்றைத் துவங்கி வைக்கிறார். இந்த அய்யா அவர்கள், தான் சார்ந்த சமயத்தை விட்டு விலகாமல், உள்ளே இருந்து புரட்சி செய்தவர். அன்றைய திரு விதாங்கூர் சமஸ்தானத்தின்மேல்சாதிஆதிக்கத்தையும், வணங்கும் கடவுளைக்கூட சாதிய மேலாதிக்கத்தார் தமதாக்கிக் கொண்டதையும், இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு எதிர்த்துக் கலகம் செய்தவர்அய்யாஎன்று அழைக்கப்பெறும் முத்துக்குட்டி.

இவ்வாறு கடவுளரைக்கூட சமநிலையில் வழிபட மறுத்த சனாதனத்தை வெறுத்தொதுக்கிய அய்யா அவர்களைப் பற்றிய ஆய்வகத்தை, முழுமையாகச் சனாதனத்தை நம்பும் ஒருவரை வைத்துத் தொடக்க விழா நிகழ்த்துவது வேடிக்கையல்லவா?! அவர் சொல்கிறார்:

பிரதமர் மோடி போன்று, இந்நாடு பற்றியிருக்கும் சனாதனத் தர்மம் பற்றித் தெளிவான புரிதல் உள்ளவர் எவரும் இல்லை. பிரதமர் மோடி அவர்கள் இந்நாட்டின் 140 கோடி மக்களையும் எந்தவிதப் பாகுபாடுமின்றி வழிநடத்துகிறார். மோடி அவர்கள் அய்யாவின் உள்ளடங்கிய கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். சனாதனத் தர்மம் என்பது அனைவரையும் சமமாகப் போற்றுவது.”

சனாதனத்தை ஆளுநர் இரவி நம்பலாம்; பிரதமர் மோடி நம்பலாம். ஆனால், அய்யா வைகுண்டர் ஏற்றுக்கொண்டவரா? இரவி எப்படி வேண்டுமானாலும் புரட்டலாம். ஆனால், இம்மனிதரை எந்த அடிப்படையில் விழா நடத்துவோர் அழைத்தனர் என்றுதான் நமக்குப் புரியவில்லை. இதில் ஏதேனும் சூதும் இருக்கலாமோ?

சூது கவ்விய புது அரசியல் வரவு

அண்மையில் நிகழ்ந்தேறிய அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீடு தொடர்பாக எழுந்த சர்ச்சையில் புகுந்த சூது எனும் கேட்டைப் பலர் புரிந்திருக்கலாம்; பலர் புரிய மறுக்கலாம். ஆனால், இந்நிகழ்வுகளில் புகுந்து நாடகமாடிய சூது என்னும் கயமையை நாம் புரிந்துகொள்ளல் இன்றைய கட்டாயத் தேவை.

மதச்சார்பற்றக் கூட்டணியுள் வலுவான ஆளுமையாக இயங்கும் திருமாவளவனின் உறுதியான நிலைப்பாட்டைத் தகர்க்கும் அளவில் நடந்த வஞ்சகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் கட்சிகள் பல தம் பகைமையை மறந்து ஒன்றுபட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் தலைமையிலான அரசையும் ஆதரித்து வருவதை நாம் நன்கறிவோம். சமீபத்தில் உருவாகியுள்ள ஒரு தாக்குதல் அணியில் புதிதாகச் சேர்ந்துள்ளவர் நடிகர் விஜய். பாசிசத்தைப் பாயாசமாகச் சித்தரித்தவர் இவர். இக்கூற்றோடு தி.மு.. அரசையும் தன் முதல் மாநாட்டில் சாடிச் சென்றவர். பல நாள்களாகக் காணாமல் போனவர் தனக்கு அறிமுகமே இல்லாத அல்லது இவரின் எந்த நிலையிலும் அறியத் தேவையில்லாத ஓர் உன்னதமான அரிய மனிதர் பற்றிய நூல் ஒன்றை வெளியிட அழைக்கப்பெறுகிறார். என்ன வேடிக்கை இது? விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனைச் சரியாக உள்ளிழுத்து, கூட்டணியைச் சிதைக்க முயன்ற சதி எப்படியோ உடைந்த பின்பும் ஏற்கெனவே திட்டமிட்ட சதி உயிர்ப்புக்குள்ளாக சதியின் வழி தொடர்ந்தது. அம்பேத்கர் பணியிலும் வாழ்விலும் அவர்தம் அர்ப்பணத்திலும் சிறிதும் தொடர்பற்ற ஒரு நடிகரிடம் நூல் வெளியிடும் வாய்ப்பு வழங்கப்பெறுகிறது. இவர் கூட்டிய முதல் மாநாட்டின் முகப்பில் இவர் வைத்த அம்பேத்கர் படம் ஒன்றே அம்பேத்கருக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு.

இம்மேடையை உருவாக்கி, நூல் வெளியீட்டை நடத்தியவிகடன்பிரசுரத்தின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை கேள்விக்குள்ளாகிறது. அம்பேத்கர் நூலை வெளியிடத் தெரிவு செய்யப்பட்ட மனிதர், அதற்கான அரங்கு எல்லாம் வணிக நோக்காய் இருப்பினும், இதன் பின்னிருக்கும் அரசியல் சூது மற்றும் வஞ்சத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆயினும், ‘ஆனந்த விகடன்என்னும் வணிக ஊடகம் விஜய் என்னும் நடிகரை வைத்து ஆடிய விஷம நாடகத்தை மக்கள் அறிந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு வருவோம்... இந்நிகழ்வில் அம்பேத்கர் பேரன் கலந்துகொள்கிறார். அம்பேத்கரின் சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட நீதியரசர் சந்துரு கலந்துகொள்கிறார். சந்துரு தன் உரையில் அம்பேத்கரைப் பற்றிப் பேசிய விசயங்கள் இன்னும் பொதுவெளிக்குப் பெரிதாக வரவில்லை. நடிகர் விஜய் பேசும் முன்னரே சந்துரு பேசி முடித்த நிலையில், விஜய் தனது நீண்ட உரையில் என்ன பேசினார்? சந்துரு அவர்கள் அம்பேத்கரின் அர்ப்பணத்தை, அவர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை, அவர் சந்தித்த சவால்களை எடுத்துக்காட்டிவிட்டு, ஒன்றியத்தை வழிநடத்தும் இன்றைய ஆட்சியாளர் என்ன செய்கின்றனர் என்று கேள்விக்குட்படுத்தினார். அம்பேத்கர் பேரன் இன்று பிணையில் இருக்கிறார். ‘உபாஎன்ற கொடிய கறுப்புச் சட்டம் மூலம் அருள்தந்தை ஸ்டேன் சுவாமி கொலை செய்யப்பட்ட நிலை பற்றியெல்லாம் அவர் பேசினார். இராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மக்களிடம் காட்டி வருவதன் அவசியத்தை எடுத்துக்காட்டினார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு சந்துரு முன்வைத்த விசயங்கள் புரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அதனை நாம் புரிந்துகொள்கிறோம். அம்பேத்கரைப் பற்றிய நூல் ஒன்றினை வெளியிடத் தகுதி பெற்றவரா இவர்? எத்தகுதியும் அற்ற ஒருவர் அம்பேத்கர் பற்றி என்ன பேசினார் என்பது இங்கு முக்கியமல்ல. ஆனால், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட்டணியை உடைக்கும் பணியைச் செய்த சதிக் கூட்டத்துள் இவரும் இணைந்துகொண்டதுதான் பெரிய அவலம்.

திருமா கூட்டணியின் அழுத்தத்தால் விழாவில் கலந்துகொள்ளவில்லைஎன்றும், ‘அவர் எங்கள் நினைவில்தான் இருப்பார். கூட்டணி பலம் மைனஸ் ஆகிவிடும்என்ற பேச்செல்லாம் யாரைக் குறி வைத்து? அரசியல் ஞானம் திரு. விஜய் அவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ... அரசியல் சூதாடிகள் வலையில் அருமையாக விழுந்துள்ளார் விஜய் அவர்கள். நடந்த அந்த நூல் வெளியீட்டு விழாவின் ஒவ்வோர் அசைவிலும் ஒரு சதியின் நிழல் இருந்தது என்பதே உண்மை.

ஊழலே பிரச்சினையாம்!

விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ச்சுனா அவர்களும் விஜய் கூட்டணியில் புதிய அவதாரம் எடுத்து சதிக்கூட்டத்துள் இணைந்துள்ளார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஊழல் நிறைந்த அரசு என்று வசைபாடினார் இவர். ஆளும் அரசுகள் எவையாக இருந்தாலும், அவை ஊழலற்ற அரசாக இருக்க வேண்டுமென்பதில் இரு வேறு கருத்தில்லை. சமூக நீதியை உள்ளடக்கமாகக் கொண்ட இந்தத்திராவிட மாடல் அரசுஊழல் கறைபடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவல். ஆனால், ஊழல் எனும் நோய் சனநாயகத்தின் பெயரால் அமைந்து வரும் அனைத்து அரசுகளின் பொது இயல்பாய் இருக்க, திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டுமே ஊழல் கறை படிந்த அரசாகச் செயல்படுவதாகக் குறிவைத்துக் குற்றம் சாட்டுதலில் ஒரு சூது இருப்பதையே அனுமானிக்க முடிகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்துள்ள கூட்டணி ஒரு கொள்கைக் கூட்டணி. ஆனால், இந்தியாவில் வளர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளின் அணியோ சனநாயகத்தையும், சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும் உருக்குலைக்கின்ற வகையில் உருவான கூட்டணி. இக்கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளும் குறைந்தபட்சபுரிதலோடுஇணைந்தவைதாம்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தலைமையேற்றுள்ள தி.மு..வைச் சாடும் எதிர்ச் சக்திகள் இக்கூட்டணியின் பலத்தைக் குலைக்கும் நோக்கிலேயே இன்று தீவிரமாகச் செயல்படுகின்றன. இச்சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே திருமாவை வெளியே கொணர்வதற்கான முயற்சி! இச்சூதாட்டத்திற்கு திருமா பங்காளியாகவில்லை என்பதுதான் இவர்களுக்கு ஏமாற்றம்.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுமீது ஊழல் புகாரைச் சுமத்தி, தலைநகரில் பெரிய அளவில் போராட்டம் நடத்தியவர் அன்னா ஹசாரே. ஊழல் புகார்களை மட்டுமே முன்வைத்து போராட்டம் நடத்திய இவர் வகுப்புவாதம் பற்றியோ, பிரிவினைவாதம் பற்றியோ, மதவாதிகள் பேசிய பொய்த்தேசியம் பற்றியோ கவலைப்படவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழ வேண்டும் என்ற மதவாதிகளின் ஒரே கனவுக்கு இந்ததியாகிதுணை போனார். ஊழலை எதிர்த்த போராளி அன்னா ஹசாரே இன்று காணாமற்போனார். பத்தாண்டு கால மோடி அரசு ஊழலற்ற அரசு என்று இவரால் இன்று கூற முடியுமா?

நாடு முழுவதும் ஒரு சித்தாந்தப் போரை முன்னெடுக்க வேண்டிய கட்டாயச் சூழல் இன்று. சனநாயகமும் சமயச் சார்பின்மையும் காக்கப்பெற வேண்டிய நிலையில், திட்டம் போட்டு நடத்தப்படும் சதிகளை, இச்சதிகளின் பின்னிற்கும் வஞ்சகர்களை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?

ஆர்.எஸ்.எஸ். துவங்கிய காலம் முதல், இதன் கிளை அமைப்புகளாகிய அனைத்துப் பரிவாரங்களும் ஒரு சூழ்ச்சியின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. இறுதியாக, தாம் கட்டமைக்க விரும்புகின்ற இந்து இராஷ்டிராவுக்கான படிக்கற்களை வெகு தந்திரமாகக் கட்டி வருகின்றனர். பாசிஸ்டுகள் சனநாயகத்தை நம்பாதவர்கள்; ஆனால், பாசிசத்தின் வெற்றி சனநாயக வழிதான் நடந்திருக்கிறது என்பதே வரலாறு. இன்றைய அரசு முன்னெடுத்த அனைத்துத் திட்டங்களும் இந்து இராஷ்டிரத்தை முன்வைத்தே செய்யப்படுகின்றன. இராமர் கோவிலுக்கான முன்னெடுப்பின் வெற்றி, காஷ்மீரின் தனித்துவம் அழிப்பு, உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு, புதிய தேசியக் கல்விக்கொள்கை என்பனவெல்லாம் இந்து இராஷ்டிரத்தை நியாயப்படுத்துவன. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம்என்பன இவர்களின் இலக்கு. ஒற்றைமயம் என்பது இந்து இராஷ்டிரத்தின் இறுதி இலக்கு. இவ்விலக்கை நாடாளுமன்ற சனநாயகம் மூலம் வென்றெடுக்க மதவாதிகள் எடுத்து வைக்கும் அடியை நாம் மறந்துவிடக்கூடாது.

1991-இல் கொண்டு வந்த ஆலயங்களின் பாதுகாப்புச் சட்டம், 1947-ஆம் ஆண்டில் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ, யாருக்கானதாக இருந்தனவோ அவைகளைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்யக்கூடாது என்ற விதி இருந்தபோதும், பாபர் மசூதி இந்துகளுக்கானதாக உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் மூலம் மீறப்பட்ட நிலையில், அவ்விடத்தில் இராமருக்கான பெரிய ஆலயம் உருவாகியது. இவ்விதி தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், இன்று .பி.யின் சம்பலில் மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. காசியின் கான்வாப்பில் மசூதியின் பாதிப்பகுதியில் இந்துகள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இவையெல்லாம் எங்கோ நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் அல்ல; அனைத்து நிகழ்வுகளும் ஒரே நோக்கில் பின்னப்பட்ட சூழ்ச்சிகளே ஆகும்.

news
சிறப்புக்கட்டுரை
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI)-இன் ‘மறைத்தூதுப் பணி (MISSION) 2033’

மேய்ப்புப் பணித்திட்டம்

தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கான வழிகாட்டு நெறிமுறை விளக்கக் கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதிகமாக வலியுறுத்திக் கூறும் கூட்டொருங்கியக்கச் செயல்முறைகளின் விளைவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டத்தை உணர்ந்துகொள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (Conference of the Catholic Bishops of India) “2033-இல் கடவுள் திரு அவையை எவ்வாறு இருக்க அழைக்கிறார்?” (Where is God calling the church to be by 2033) என்ற வினாவிற்கு விடையளிக்கும் விதமாக, 34-வது அகில இந்திய ஆயர் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒரு மேய்ப்புப் பணித்திட்டச் செயல்முறையில் தீவிரமாகக் களமிறங்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில் இந்தியா முழுவதிலும் அதற்கான களப்பயிற்சிகளும் களப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, பலருடைய கருத்துகளை உள்வாங்கி, அவைகளை ஒன்றிணைத்துமறைத்தூது பணி 2033’ (MISSION-2033) என்ற இலக்கை முன்வைத்து இந்தியா முழுவதற்குமான மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு ஒன்று உருவானது.

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை தனதுமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப் பணித்திட்டக் கையேடு அதன் தலைவர் கர்தினால் பிலிப் நேரி அவர்களால் 2024, செப்டம்பர் 11-ஆம் தேதியன்று வெளியிட்டது. ‘மறைத்தூதுப் பணி 2033’ என்று தலைப்பிடப்பட்ட இறுதி வடிவ மேய்ப்புப் பணித் திட்டம் ஆவியானவரில் மனம் திறந்த உரையாடல்களின் (Spiritual Conversation) பலன் ஆகும். எனவே, ஒவ்வொரு தனிநபரும் இத்திட்டத்தை மறைமாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் செயல்படுத்த அவர்களால் இயன்ற பங்களிப்பை உய்த்துணர வேண்டும். இத்திட்டத்தின் மையம் தேசியப் பணிக் குழுக்களின் மீது நிலைபெற்றிருப்பினும்இத்திட்டத்தின் பலன்கள் நமது மாநில மற்றும் மறைமாவட்டத் திரு அவைகளைத் தொடர்ந்து அனைத்துப் பங்குகளையும் சென்றடைந்து நன்மை பயக்கும்.

எல்லா நிலைகளிலும் நமது நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் மறைத்தூதுப் பணியின் தரத்தை ஆழப்படுத்த கடவுள் நம்மை அழைக்கிறார். 2033-ஆம் ஆண்டு நம்முடைய மீட்பின் மாபெரும் யூபிலியைக் கொண்டாடும்போது, இந்த மேய்ப்புப் பணித் திட்டத்தின் பலன்களைக் கண்டு நாம் சான்று பகர்வோம்.

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட கையேட்டில் அடங்கியுள்ள மேய்ப்புப் பணித் திட்டங்களை நமது தமிழ் நாடு திரு அவைக்கு எடுத்துச் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைக் கூட்டமானது டிசம்பர் 12, 2024 அன்று  மதுரை உயர் மறைமாவட்டத்தில் அமைந்துள்ளபில்லர்’ (PILLAR) மையத்தில்  நடைபெற்றது. இத்திட்ட விளக்கக் கூட்டத்தை தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் செயலரும்கோட்டாறு  மறைமாவட்ட ஆயருமான  மேதகு நசரேன் சூசை அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைச்செயலரும், ‘மறைத்தூதுப் பணி 2033’-இன் மாநில ஒருங்கிணைப்பாளருமான அருள்பணி. பிரான்சிஸ் ஜோசப் இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

தமிழ்நாடு மாநிலத் திரு அவையும் அதிலுள்ள ஒவ்வொரு மறைமாவட்ட தலத் திரு அவையும் இந்த மறைத்தூது பணி குறித்த மேய்ப்புப் பணித் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திரு அவையின் பணிக் குழுக்களின் செயலர்களும், மறைமாவட்டப் பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களும் இக்கூட்டத்திற்கு அழைப்பு பெற்றிருந்தனர். ஏறக்குறைய 40 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தின் கருத்தாளராகமறைத்தூதுப் பணி 2033’-இன் தேசிய ஆலோசகர் அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள் அந்நாளின் அமர்வுகளைச் சிறப்பாக வழிநடத்தினார்.

மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்கள் தனது துவக்க உரையில் கீழ்க்காணும் கருத்துகளை முன்வைத்தார்:

நமது தமிழ்நாடு திரு அவை பல சிறப்பான முன்னெடுப்புகளைச்   செய்துகொண்டிருக்கின்றது. திரு அவையின் மேய்ப்புப் பணிக்குழுக்கள் தனித்தனியே தங்களது பணிகளைப் பல்வேறு விதங்களில் செய்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பணிக் குழுக்களிடையே சரியான ஒருங்கிணைப்பும் திட்ட இலக்குகளும் இன்னும் சிறிது அதிகமாகத் தேவைப்படுகின்றன.

ஒருசில மறைமாவட்டங்களில் தங்களுடைய திரு அவை குறித்த சரியான புள்ளி விவரங்களைச் சேகரித்தும், தங்களுடைய இன்றைய நிலையைத் தெளிவாக அறிந்தும், பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தங்களுக்கான மேய்ப்புப் பணித் திட்டங்களையும் இலக்கையும் நிர்ணயித்து பயணிப்பதும் மிகவும் பாராட்டுக்குரியது.

மாநில அளவிலான செயல்திட்டங்கள் அனைத்தும் மறைமாவட்டங்கள், மறைவட்டங்கள், பங்குத்தளங்கள் என இறுதிவரை சென்று சேர்வதில்லை. இதற்கு மாநிலப் பணிக்குழுக்களின் செயலர்களுக்கும் மறைமாவட்டப் பணிக் குழுக்களின் செயலர்களுக்கும்  உள்ள தொடர்புகளும், பணிக் குழுவின்  மறைமாவட்டச் செயலர்- மறைவட்டம்-பங்கு இவைகளுக்கிடையே உள்ள தொடர்புகளும் உறுதி செய்யப்பட வேண்டியது தேவையான ஒன்று.

பணிக்குழுக்களின் திட்டமிடல், செயல்பாடுகள் மற்றும் திறனாய்வுக் கூட்டங்கள் சரியான கால இடைவெளிகளில் நடைபெறாமல் இருப்பது தெரிய வருகிறது. மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையே இணக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவது மேய்ப்புப்பணித் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வதற்கான காரணிகளுள் மிக முக்கியமானதொன்றாக இருப்பதால், மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கு இடையிலும், அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலை இறைமக்களுக்கு இடையேயும் இணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது கண்டிப்பாகத் தேவை.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் நமது திருத்தந்தை செயல்படுத்தி வரும் கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான வழிமுறையைத் தவிர திரு அவைக்கு வேறு சிறப்பான வழியில்லை. இதன் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தமறைத்தூதுப் பணி 2033’ மேய்ப்புப்பணித் திட்டத்தை உள்வாங்கி இறைமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்என்று தன் உரையை நிறைவு செய்தார்.

ஆயரைத் தொடர்ந்து அருள்பணி. ஜோ சேவியர் சே.. அவர்கள்மறைத்தூதுப் பணி 2033’ தொடர்பான வழிமுறைகளை விளக்கினார். அவர் உரையிலிருந்து எழுந்த முக்கியக் கருத்துகள்:

இந்தியக் கத்தோலிக்கத் திரு அவை தற்போது நேர்மையாகவும் உண்மையாகவும் தனது இலக்கு நோக்கிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் பல இடங்களில் திரு அவை பொது நிலை இறைமக்களை விட்டு அந்நியப்பட்டு, தொடர்பின்றி உள்ளது. இதை ஆழ்ந்து சிந்திக்கவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்தவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இளையோர், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் இவர்களுக்கான பணிக்குழுக்கள் இப்பிரிவினரோடு மிகுந்த ஈடுபாடு காட்டுவது தேவையான ஒன்றுஎன்றார்.

ஒரு நிறுவனம் எவ்வாறு தனது இலக்கு நோக்கிய செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளை எவ்வாறு இலக்கு நோக்கி துல்லியமாகத் திட்டமிடுகிறது என்பது காணொளி மூலம் விளக்கப்பட்டது.

பின்னதாக நடத்தப்பட்ட குழு அமர்வு பகிர்வில் பின்வரும் நான்கு வினாக்கள் ஆய்வுக்கு விடப்பட்டு, அவற்றின் பகிர்வு முடிவுகள் பெறப்பட்டன.                        

(தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
‘வென்டிலேட்டர் சப்போர்ட்டில்’ நாட்டின் பொருளாதாரம்!

தவளை ஒன்றைக் கொதிக்கும் நீரில் தூக்கிப் போட்டால், அது உடனே துள்ளி வெளியே குதித்து விடும். ஆனால், குளிர்ந்த நீரில் தூக்கிப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேற்றினால் அந்தத் தண்ணீரிலேயே இருந்து வெந்து செத்துவிடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறும்போது அந்த வெப்பத்தின் தாக்கத்தை தவளை உணர்வதில்லை. நம் நாட்டு மக்களும் அந்தத் தவளையைப்போல் இருக்கிறார்களோ என்று நான் அடிக்கடி நினைப்பது உண்டு.

கடந்த பத்து ஆண்டுகளாக மோடி அரசு பின் பற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களைத் தொடர்ந்து சிதைத்து வருவதால், தேசத்தின் பொதுச்சொத்துகளைப் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வரை முறையில்லாமல் சுருட்டிக் கொழுக்க அனுமதிப்பதால், சனநாயக நிறுவனங்களைச் சீரழிப்பதால், இயற்கை வளங்களைத் தனியார் கொள்ளையிட அனுமதிப்பதால், சாதிமத மோதல்களைத் திட்டமிட்டு உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுப்பதால் நாடு ஒரு பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி, மோடிமயமாக்கப்பட்டிருக்கும் முதலாளித்துவ கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து செய்து வரும் பொய்ப்பிரச்சாரம், கள எதார்த்தங்களை மக்களிடமிருந்து திட்டமிட்டு மறைக்கும் கபட விளம்பர யுக்திகள், அனைத்துப் பிரச்சினைகளையும் மதமயமாக்கும் அடையாள அரசியல் போன்ற சதிகளால் சாமானிய மக்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களது கண்களைத் திறக்க செய்து, எதார்த்தங்களைக் காணவைத்து அதர்ம அரசியலை முடிவுக்குக் கொண்டுவர உண்மைகளைத் தொடர்ந்து நாம் மக்கள் மன்றத்தில் வைப்போம்.

புயலும் சூறாவளியும் பேரழிவும் வரும்போது அது வருவதற்கான அடையாளங்களையும் சூழ்நிலைகளையும் வானிலை விஞ்ஞானிகள் முன்கூட்டியே அறிந்து அறிவிப்பதைப்போல, பெரும் பொருளாதாரப் பேரழிவு வரக் காத்திருப்பதைப் பொருளாதார அறிஞர்கள் கடந்த சில மாதங்களாகச் சில குறியீடுகளைக்காட்டி நாட்டு மக்களை எச்சரிக்கின்றனர்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களின் வாங்கும் சக்தி (purchasing power) தொடர்ந்து அதிகரித்து வருவதாக உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியை நமது பிரதமர் வாய் கூசாமல் அடிக்கடிக் கூறி வருகிறார். ஆனால், அவரது அரசின் பல துறைகள் வெளியிடுகின்ற அதிகாரப்பூர்வத் தகவல்களும், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள், சர்வதேசத் தர நிர்ணய அமைப்புகள் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களும் பிரதமர் சொல்வதற்கு முற்றிலும் முரணான தகவல்களைத் தருகின்றன.

127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா 105-வது இடத்தைப் பெற்றுள்ளது. பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. 13.7% மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடனும், 35.5% குழந்தைகள் வளர்ச்சிக் குன்றியவர்களாகவும், 18.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும், 3% குழந்தைகள் ஐந்து வயதுக்கு முன்னரே இறந்து விடுவதாகவும் அந்தப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பா... அரசின்நிதி ஆயோக்சொல்லும் தகவல்கள் இதைவிட அதிர்ச்சியானவை. வறுமை ஒழிப்பில் இந்திய விழுக்காடு 72. பட்டினி ஒழிப்பில் இந்திய விழுக்காடு 52. தரமான கல்வியை வழங்குவதில் இந்திய விழுக்காடு 61. பாலினச் சமத்துவத்தில் இந்திய விழுக்காடு 49. குறைந்த விலை, சுத்தமான ஆற்றல் குறியீட்டில் இந்தியா 68. இந்தத் தகவல்கள் வெளியான அதே நாளில், “இந்தியா கடந்த சில ஆண்டுகளில் வலிமை மிக்க தேசமாகவும், மதிப்பிற்குரியதாகவும் உருவெடுத்துள்ளதுஎன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

பொருளாதாரம்வென்டிலேட்டர் சப்போர்ட்டில்இருக்கிறது என்பதைச் சில முக்கியத் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின்நுகரு தல் (consumption) மிகவும் குறைந்து வருகிறது. உணவுப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைத் தேவைகளுக்கான பொருள்களைச் சந்தைகளில் அதிகமாக வாங்கிப் பயன்படுத்தும் இந்த மக்கள் கைகளில் பணப் புழக்கம் இல்லாததால் இப்பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கின்றன. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தொழிலாளர்களின் ஊதியங்களில் கடந்த எட்டு வருடங்களாக எவ்வித மாற்றமும் இல்லை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியச் சேவைகளின் கட்டணங்கள் கூடிக்கொண்டே வருவதால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் உணவுக்காகச் செலவிடுகின்ற தொகையினைக் குறைத்துக் கொண்டுள்ளனர். அதை மட்டும்தான் அவர்களால் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்தியப் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் என்ஜின்நடுத்தர மக்களே! (Middle Class) அவர்களது பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களது சேமிப்பு விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. வங்கிகளில் தங்க நகைக் கடன்கள் 50% அதிகமாகியுள்ளது. அது மட்டுமின்றி, அடகு வைத்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையில் அவர்கள் இருப்பதால் நகைமீது வாராக்கடனும் 30% அதிகரித்துள்ளது.

கார் விற்பனை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சரிந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதால், உற்பத்தி குறைந்து, உற்பத்தி குறைந்ததால் ஜி.எஸ்.டி. வரிவசூல் குறைந்து கொண்டே வருகிறது. வரிவசூல் குறைந்தால் மோடி அரசு சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில்தான் முதலில் கைவைக்கும் என்பது நமது கடந்த கால அனுபவம்.

வங்கிகள் வழங்கும் கடன் விகிதங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள்தாம் அதிகம் வழங்கப்படுகின்றன. தொழில் மற்றும் வியாபாரத் தேவைகளுக்கான கடன் கோரிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன. வங்கிகள் அல்லாத நிதி கம்பெனிகள் (NBFC) வழங்கி வந்த கடன்களும் இந்தக் காலாண்டில் 13.5% குறைந்துள்ளது.

குறைந்து கொண்டே வரும் மக்களின் நுகர்தலின் திறம் (Puchasing Capacity), உற்பத்திக் குறைவால் சுருங்கிப் போன முதலீடுகள், குறைந்து கொண்டே போகும் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் போன்ற துயரச் சோதனைகள் தொடரும் என்றால், அதன் விளைவுகள் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் படுமோசமாக இருக்கும்.

பேரழிவை நோக்கிச் செல்லும் வேகத்தை அதிகரிக்கும் அடுத்த முக்கியக் காரணி டாலருக்கு எதிராகச் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு. ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதிகள் அதிகரிப்பதும், சர்வதேச நாணயச் சந்தையில் இந்திய ரூபாய்க்குத் தேவையில்லாமல் இருப்பதும் ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள். பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரத்தில் முதலீடு செய்த பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பெரும் இலாபத்தோடு வெளியே எடுத்துச் செல்லும்போது டாலரின் தேவை அதிகரிக்கிறது. அதனால் அதன் மதிப்பு அதிகரிப்பதால் ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு டாலர்களைச் சந்தையில் விட்டு, டாலர்களின் தேவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நமது அந்நியச் செலாவணியின் கையிருப்பு வேகமாகச் சரிகிறது. வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு டாலரின் மதிப்பு 386-ஐத் தொடுகிறது.

நமது மறதிதானே மோடியின் பலம்! 2013-இல் 40-43 ரூபாயாக டாலர் மதிப்பு இருந்தபோது அன்றைய பா...வின் பிரதமர் வேட்பாளராக இருந்த மோடி கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கிறதா?

டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறைகிறது என்றால், நாட்டின் நிர்வாகத்தை நடத்தும் பிரதமர் கோழை என்று அர்த்தம். கையாலாகாத பேடி என்றும் சொல்ல வேண்டும். பிரதமரின் திறமையின்மையே ரூபாயின் மதிப்பு சரிவதற்கான காரணம்என்று பேசியவர்தான் மோடி.

நாம் அதே வார்த்தைகளை அவருக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், அவர் நம் தேசத்தின் பிரதமர். அப்படித் தரக்குறைவாகப் பேசும் கலாச்சாரம் நமது மரபணுக்களில் இல்லை.

பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களை அறிந்து, அவற்றைச் சரிசெய்யும் எந்த முயற்சியிலும் ஈடுபட மோடி அரசு விரும்பவில்லை. மேலும் மேலும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருடைய தோள்களில் பாரத்தை ஏற்றுகின்ற வகையில் அவர்கள் கட்டுகின்ற ஜி.எஸ்.டி. போன்ற வரிகளைக் கூட்டிக் கொண்டே வருகிறது. பாப்கார்னுக்கு மூன்று விதமான வரிகளை விதிக்கும் நிர்மலா சீத்தாராமனின் பொருளாதார அறிவைப் பற்றி சுப்பிரமணியசுவாமி சொல்வதைப் போல தரம் தாழ்ந்து விமர்சிக்க நாம் தயாராக இல்லை.

அடித்தட்டு மக்கள் கைகளிலும், நடுத்தர மக்களின் பைகளிலும் பணம் இருந்தால் அந்தப் பணம் உடனே சந்தைக்கு வந்துவிடும். மக்கள் பொருள்களை வாங்குவார்கள். உற்பத்தி கூடும். வேலை வாய்ப்புகள் பெருகும். பெரும் பணக்காரர்களிடம் பணம் மேலும் மேலும் சேர்ந்தால் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு மார்க்கெட்டில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்படும். சந்தைக்கு வராது. பொருள்களை வாங்காது. உற்பத்தியைப் பெருக்காது. வேலை வாய்ப்புகளை உருவாக்காது. இந்தக் குறைந்தபட்ச பொருளாதாரப் புரிதல் கூட இல்லாமல் மேலும் மேலும் பணக்காரர்களுக்கே அதிக வசதிகளையும் சலுகைகளையும் தொடர்ந்து செய்து வரும் மோடி அரசின் பொருளாதார பயங்கரவாதத்தை என்னவென்று சொல்வது?

எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘பெற்ற தாய் குலைப்பட்டினி; மகன் கோதானம் கொடுத்தானாம்என்று. பெற்ற தாய் வீட்டில் பட்டினியால் சாகக்கிடக்கிறாள். மகன் பசு மாட்டைத் தானம் கொடுத்தானாம். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜோ பைடனின் மனைவிக்குப் பிரதமர் மோடி பரிசாக அளித்த வைர மோதிரத்தின் விலை ரூபாய் இருபது இலட்சத்திற்கும் மேல் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் எந்த நாட்டுத் தலைவரும் அவ்வளவு விலை உயர்ந்த பரிசை அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கு இதுவரை வழங்கியதில்லையாம்!

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற மக்கள் உலகிலே மிக அதிகமாக இருக்கும் ஒரு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் மக்களின் வரிப் பணத்தைச் செலவிடலாமா?’ என்று நாம் கேட்டால், ‘அவர்கள்நம்மைதேசவிரோதிகள்என்று அழைப்பார்கள். நம் மக்களைப் போல நாமும் கண்களை மூடிக் கொள்வோம்; அவர்கள் பார்வையில் அப்போதுதான் நாம்தேசபக்தர்கள்.’ இதுதான் மோடி காணும்புதிய இந்தியா!’

news
சிறப்புக்கட்டுரை
புனித பிரான்சிஸ் அசிசி ஆலயத்தின் வரலாறு

1972-ஆம் ஆண்டு கோவை மாநகரத்தில் உள்ள கணபதி பகுதியில் 25 கத்தோலிக்கக் கிறித்தவக் குடும்பங்கள் வசித்து வந்தன. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாத்திமா அன்னை ஆலயத்திற்கு அவர்கள் இறை வழிபாட்டிற்குச் சென்று வந்தார்கள். கப்புச்சின் அருள்பணியாளர்களின் ஆன்மிக வழிகாட்டுதலின்படி, கணபதி பகுதிவாழ் கத்தோலிக்கக் கிறித்தவ மக்கள் வழிநடத்தப்பட்டார்கள்.

மேனாள் ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களின் பெரும் முயற்சியால் கத்தோலிக்க ஆலயம் கட்ட கணபதி, அத்திபாளையம் பிரிவில் உள்ள அசிசி நகரில் 50 செண்ட் நிலம் 1980-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. பின்பு அந்த இடத்தில் கணபதி இறைமக்களின் ஆன்மிகத் தேவைகளை உணர்ந்து சிற்றாலயம் கட்டிட முடிவு செய்யப்பட்டு 03-05-1987 அன்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பணி நிறைவுற்றது. கோவை கணபதி பகுதி தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வந்தது. இறைமக்கள் கணபதி பகுதியில் குடியேறும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கணபதி பகுதியில் கத்தோலிக்கக் குடும்பங்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. சிற்றாலயம் போதவில்லை. ஆலய விரிவாக்கம் தேவைப்பட்டது. கோவை கணபதி பங்கில் உள்ள முக்கியஸ்தர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களை அணுகினர். ஆயர் அவர்கள் ஆலய விரிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கி, மேலும் ஆலயம் அருகில் இடம் வாங்குவதற்கும் அனுமதி வழங்கினார்.

01-06-1990 அன்று கோவை காந்திபுரம் பாத்திமா அன்னை ஆலயத்திலிருந்து கணபதி பகுதி இறைமக்களைப் புகழ்மிக்க புனிதர் பிரான்சிஸ் அசிசி அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு தனிப்பங்காக உருவாக்கி ஆலய விரிவாக்கப் பணியும் தொடங்க அனுமதி வழங்கினார். 09-10-1994 அன்று ஆலய விரிவாக்கம் நிறைவு பெற்று மேனாள் ஆயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொழில்களில் மேலும் வேகமாக வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாறியதால், வெளியூர் வாழ் மக்கள் குடியேறும் எண்ணிக்கை மென்மேலும் வேகமாக அதிகரித்தது. 1500 குடும்பங்களுக்கு மேல் புகழ்மிக்க புனித பிரான்சிஸ் அசிசியாரின் பாதுகாப்பில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இறைவழிபாட்டுக்காக வருகின்றார்கள். விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலயத்தில் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, திருப்பலியில் கலந்து கொள்பவர்களில் 50 சதவிகிதம் பேர் வெளியில் நின்று திருப்பலி காணும் நிலை ஏற்பட்டது. அருள்பணியாளர் மற்றும் இறைமக்கள் கோவை மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களை அணுகி புதிய ஆலயம் கட்ட அனுமதி கேட்டனர். முறையான அரசாங்க அனுமதி பெற்று உறுதித் தன்மையுடன் ஆலயம் கட்டிட அறிவுறுத்தி, ஆயர் அனுமதி வழங்கினார்.

2014 ஆம் ஆண்டு பழைய ஆலயம் முற்றிலும்  இடிக்கப்பட்டு புதிய ஆலயத்தின் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக கட்டட உறுதித்தன்மையில் தடங்கல் ஏற்பட்டதால் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் ஆலயக் கட்டுமான பணிகளை உடனே நிறுத்தக் கட்டளை பிறப்பித்தார். உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளையும் விதிமீறல்களையும் கண்டறிய ஏழு அருள்தந்தையர்கள் கொண்ட சிறப்புக் குழுவையும், அரசாங்கக் கட்டடப் பொறியாளர்களையும் நியமனம் செய்தார். அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட  பின்னர், உறுதித் தன்மையில் உள்ள குறைபாடுகளும் விதிமீறல்களும் உறுதி செய்யப்பட்டன. கட்டடத்தைத் தாங்கக்கூடிய உறுதித்தன்மை இல்லாததால் ஆயர் அவர்கள் ஆலயப் பணிகளை முற்றிலுமாக உடனே நிறுத்த அருள்பணியாளர்களுக்கு மீண்டும் கட்டளை பிறப்பித்தார்.

திருவழிபாட்டிற்காக ஆலயம் இல்லாமல் கணபதி பிரான்சிஸ் அசிசி பங்கு மக்கள் பெரும் வேதனையை அனுபவித்து வந்தனர். ஆன்மிக வழிபாடின்றி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்களின் உறவுகள் சிதையத் தொடங்கின. இறைமக்களின் அடிப்படைத் தேவையான மகிழ்ச்சி முற்றிலும் குறைந்தது.

புனித பிரான்சிஸ் அசிசி ஆலய புதிய அருள்பணியாளராக ஜான்பால் வின்சென்ட் அவர்களை, புதிய ஆலயக் கட்டுமான பணிகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடனும், இறைவேண்டலோடும் மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்கள் 2016-ஆம் ஆண்டு நியமனம் செய்தார். கோவை மறைமாவட்ட மேதகு ஆயர், முதன்மை அருள்பணியாளர், பொருளாளர் அருள்பணியாளர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர், பங்கு முக்கியஸ்தர்கள், இறைமக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் புதிய ஆலயக் கட்டுமான பணிக்கான அனைத்துக் காரியங்களும் இறையருளால் புதியதாகத் தொடங்கப்பட்டது. குறைபாடுகளுடன் கட்டப்பட்ட கட்டடம் முழுவதும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அரசாங்கக் கட்டட அனுமதி, ஆலயம் கட்ட முறையாகப் பெறப்பட்டது. 09-12-2018 அன்று மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. உறுதியான முறையில் நடைபெற கட்டுமான பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங் (130 x 130), ஆலய உட்புறம் (100 x 100), பால்கனி (50 x 100) என்று இறைவனுக்கு நன்றி செலுத்த, இறைமக்கள் திருப்பலியில் செபித்திட பிரமாண்டமான புத்தம் புதிய ஆலயம் உருவாகியுள்ளது.

இறைவனது உடனிருப்பாலும், இறை அன்னையின் பரிந்து பேசுதலாலும் கோவை ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் ஆண்டகை அவர்களின் அறிவுத்தெளிவாலும், நிர்வாக ஆளுமையாலும் தொலைநோக்குப் பார்வையாலும் கோவை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் ஜான் ஜோசப் ஸ்தனிஸ் அவர்களின் முழு முயற்சியாலும் கோவை மறைமாவட்டப் பொருளாளர் அருள்பணியாளர் அந்தோணி செல்வராஜ் அவர்களின் முழு ஒத்துழைப்பாலும் கோவை கணபதி அசிசி நகர், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய அருள்பணியாளர் ஜான் பால் வின்சென்ட் அவர்களின் அர்ப்பணிப்பாலும், புனித பிரான்சிஸ் அசிசி ஆலய இறைமக்கள் அனைவரின் நம்பிக்கை நிறைந்த இடைவிடாத செபத்தாலும், ‘நமது வாழ்வு கடவுளால் உயர்த்தப்பட்டதுஎன்ற உண்மையான எண்ணம் கொண்ட நன் கொடையாளர்களாலும் கோவை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளின் பங்கு அருள்பணியாளர்கள், இறைமக்கள், பிற மத சகோதர-சகோதரிகள் வாரி வழங்கிய பொருளுதவியால் பிரமாண்டமான புனித பிரான்சிஸ் அசிசி ஆலயம் இறைவனின் மகிமைக்காகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அசிசி ஆலயக் கட்டுமான பணிக்காகக் கடுமையாக உழைத்தவர்கள், திறமையாக உழைத்தவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் நன்றிகள்.

நம் வாழ்வுவாசகர்களும் இறைமக்களும் ஆலய அர்ச்சிப்பு விழாவில் குடும்பமாகக் கலந்துகொண்டு இறை வரங்களைப் பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கின்றோம்; அழைப்பில் மகிழ்கின்றோம்.

news
சிறப்புக்கட்டுரை
தந்தை பெலிக்ஸ் வில்பிரட் இறையியல் ஒளி

தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின் இறுதிப்பயணத் திருப்பலியில் தஞ்சை மறைமாவட்ட மேதகு ஆயர்  . சகாயராஜ் ஆண்டகை அவர்கள் ஆற்றிய மறையுரை:

அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே!

சொல்லொண்ணா மனத்துயர், விவரிக்க முடியாத மனநிறைவு; இரண்டும் ஒருசேரக் கலந்து இருக்கிற தருணம் இது. ஒரு பக்கம் பிரிவாற்றாமை; மற்றொரு பக்கம் நன்றி நிறைந்த மனநிலை. கண்ணீர் கலங்குகிறது; ஆனாலும்கூட கரங்கள் நன்றி சொல்ல இணைந்து உயர்கின்றன. நமது பாசமிகு தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களை நினைத்து அவர்களுக்கு முன்னால் நின்று, ‘நன்றிஎன்று சொல்லக்கூடிய தருணமாக இருக்கிறது. திரு அவைக்கும் இந்தச் சமூகத்திற்கும் தந்தை அவர்கள் தனது நெடிய 76 வயதில் செய்திருக்கிற எல்லா மேலான பணிகளுக்காக இவரை நமக்கு மிகப்பெரிய கொடையாகக் கொடுத்த திரு அவைக்கும் சமூகத்திற்கும் கடவுளுக்கு முன்னாலும் இன்று கரங்களை உயர்த்தி நன்றி சொல்லி மனம் நிறைந்திருக்கிறது.

திருவள்ளுவர் கூறுவார்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று. ஒன்றைச் சொல்ல மறந்தார், ‘இறப்புக்கா எல்லா உயிருக்கும்என்று. பிறக்கிற போது எல்லாரும் சமநிலையிலேயே பிறக்கிறோம். உயர்வு-தாழ்வு இன்றி. ஆனால், இறக்கிறபோது ஒரு சிலர் உயர்ந்த மனிதர்களாய், சிறந்த மனிதர்களாய், சான்றோராய் வாழ்ந்து இறக்கிறார்கள். அவர்கள் மேன்மக்களே! அந்த வகையில் ஒரு மிகப்பெரிய சான்றோராய் வாழ்ந்து மரித்திருக்கிறார் நம்முடைய தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள். ஒருசிலரைக் குறித்து மட்டுமே நாம் சொல்ல முடியும், ‘God does not create many of his kindஎன்று. தந்தை அவர்களைப் பார்த்து நாம் எப்போதுமே தயக்கமின்றி சொல்லலாம்God does not create many of your kindஎன்று.

இரவீந்திரநாத் தாகூர்கீதாஞ்சலிஎன்கிற தன்னுடைய கவிதை நூலில் ஒரு சிறு கதையைக் கவிதையாக வடித்து இருப்பார். மாலை நேரம், சூரியன் மறையப் போகிற நேரம். சூரியனுக்குக் கவலை, நான் மறைந்த பிறகு யார் இந்தப் பூமிக்கு ஒளி தருவார் என்று. படைப்பு அனைத்தையும் பார்த்துக் கேட்கிறது, ‘எனக்குப் பின்னால் ஒளி கொடுக்க யார் முன்வருவீர்கள்?’ என்று. அமைதி! யாரும் பேசவில்லை. ஒரு சிறு அகல் விளக்கு சொன்னது: ‘நான் இருக்கிறேன், நீ போய் வா. நீ வருகிற வரை ஒளி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னால் இயன்ற அளவு, இயன்றவரை ஒளி கொடுத்துக் கொண்டே இருப்பேன்என்று. எரிந்துகொண்டிருக்கிற இந்தப் பாஸ்கா திரிபோல, எரிந்து ஒளி கொடுத்து, அணைந்திருக்கிற ஒரு தீபமாக தந்தை அவர்களை நாம் பார்க்கலாம். ஆசியத் திரு அவையில் வானில் ஜொலித்த ஒரு நட்சத்திரமாய் இவர் ஒரு பேராளுமை. அறிவுநிறை பேராளுமை. அதேபோல் ஆசிய இறையியல் என்றால் அதற்கான ஒரு தனிச் சிறப்பு மிகுந்த, ஆகச்சிறந்த திசை காட்டியாக வாழ்ந்திருக்கிறார்.

குறைந்தபட்சம் கடந்த 40 ஆண்டுகளாக, ஆசிய இறையியல் குரலாக, இந்திய இறையியலின் குரலாக, தமிழ்நாட்டு இறையியலின் குரலாக, ஏழைகளது இறையியல் குரலாக, விடுதலை இறையியலின் குரலாக, பெண்ணியத்தின் இறையியல் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் இறையியல் குரலாக, விளிம்புநிலை மக்களின் இறையியல் குரலாக, தலித் மக்களின் இறையியல் குரலாக ஓங்கி ஒலித்த இந்தக் குரல் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

தந்தை அவர்கள் என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன், “இறையியல் மொழி என்பது அறிவு சார்ந்ததல்ல; அது அறிவு மொழி அல்ல; அது இதயத்து மொழிஎன்று. இதயத்தோடு இதயம் பேசுவதே சரியான, முறையான இறையியல் மொழியாக இருக்கும். அப்படி இதயத்தால் நம்மோடு இறையியல் மொழி பேசிய இந்த இதயம் இன்று அமைதியாக இருக்கிறது. ஓர் இறையியல் இயக்கமாகவே இயங்கிக் கொண்டிருந்த இந்த மாபெரும் இறையியல் இயக்கம், இன்று தனது இதயத்துடிப்பை நிறுத்தி இருக்கிறது என்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுக்கிறது.

ததும்பாத நிறைகுடமாய், ஆர்ப்பாட்டம் இல்லாது, ஆரவாரம் இல்லாது, நெடும் ஆழத்தோடு அமைதியாகப் பயணித்துக் கொண்டே இருக்கும் வற்றாத நதியாகப் பயணித்தவராக தந்தை அவர்களை நாம் பார்த்து உணர முடியும்.

தந்தை அவர்களது வாழ்வு நேற்று முன் தினம் மாலை எட்டு நாற்பது போல அடங்கியது என்று கூறக் கேட்டேன். என்னால் உறுதியாய்க் கூற முடியும், அவரை அறிந்தவரை அந்த மாலை 8:39 மணி வரைக்கும் இந்த இதயம் இறையியலையே சிந்தித்து இருக்கும். இறையியலை யாரோடாவது உரையாடி இருக்கும். அந்த இறையியல் கருத்துகளையே எழுத்தாகவோ, கணினியிலோ அது பதிவு செய்து கொண்டிருக்கும் என்று. ஆக, எப்போதுமே இயங்கிக் கொண்டிருந்த ஓர் இயக்கம் என்று பார்க்கிறோம்.

அருள்பணியாளர்களின் வாழ்வு என்று பார்க்கிற போது சிந்தனைத் தளம், செயல்பாட்டுத் தளம் என்று இரண்டுமே அவசியம் என்று உணர்வோம். பல நேரங்களில் நானும் உணர்ந்திருக்கிறேன். உங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். பெரும்பாலும் சிந்தனைத் தளத்திலேயே தனது பெரும் வாழ்வை இவர் நடத்தி இருக்கிறாரோ என்று. ஆனால், என்னைப் பொருத்தவரை நம்மையெல்லாம் சிந்திக்கத் தூண்டிய ஓர் இறையியல் அனுபவத்தை நமது மக்களுக்குக் கொடுக்கக்கூடிய சிந்தனைத் தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலும் ஒருசேரக் கடுமையாக உழைத்த ஒரு மனிதராக இவரைப் பார்க்க முடியும்.

இப்படிச் சொல்வார்கள்Work ethicsஎன்று; ‘Mission ethicsஎன்று. அவரிடம் நான் கற்றுக் கொண்ட அருமையான வாழ்க்கைப் பாடம். எந்த ஒரு காரியத்தையும் முழுமையான, நூறு விழுக்காடு அர்ப்பணத்தோடு, ஆரவாரமின்றி செய்யக்கூடிய பணிகளாக அவரை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த நாளில் மறையுரை சிந்தனைகளாக தந்தை அவர்களது சிந்தனைகளையே மூன்று சிறு கருத்துகளாக உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒன்று, தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்பது; இரண்டாவது, இந்தத் தலத் திரு அவைகள் மக்களை மையப்படுத்திய திரு அவைகளாக வளர வேண்டும் என்பதுமூன்றாவது, இந்தத் தலத் திரு அவைகள் விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவையாக இருக்க வேண்டும் என்பது.

முதலாவது, தலத் திரு அவைகள் உருவாக்கப் பட வேண்டும் என்பது தந்தை அவர்களது நெடிய கனவு, நெடிய ஆசை. ஆக, மேற்கத்திய அந்தப் பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து, அந்த மேலாண் மைத்தனத்திலிருந்து, மேட்டிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து ஆசியத் திரு அவைகளாக, இந்தியத் திரு அவைகளாக, தமிழ்நாட்டுத் திரு அவையாக, கன்னியாகுமரி திரு அவையாக, தஞ்சாவூர் திரு அவையாக திரு அவைகள் வளர வேண்டும் என்று விரும்பியவர் தந்தை அவர்கள். தங்களது பண்பாட்டில் வேரூன்றி, தங்கள் தாய்மொழி பேசி, அந்தத் திரு அவைகள் எல்லாம் வளர வேண்டும் என்று விரும்பியவர் அவர். தமிழ்நாடு என்றால் குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும் பாலையும் ஆன இந்தப் புழுதி மண்ணிலிருந்து (From the dusty soil) அந்த இறையியல் உருவாக வேண்டும், அந்தத் தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்று சொல்வார். ஆக, நாம் பேசுவது எல்லாம் மனுவுரு இறையியல் எனில், அந்த மண் வாசனையோடு, அந்த மண்ணின் நிறத்தோடு அந்த இறையியல் மகிழ்ந்து திரு அவையாக வளர்வது தானே முறையாக இருக்க முடியும் என்று வாதிடுவார் தந்தை அவர்கள்.

இரண்டாவதாக, மக்களை மையப்படுத்திய தலத் திரு அவைகளாக அவையெல்லாம் வளர வேண்டும் என்று சொல்வார். அவர் சொல்வார்The Laity are the primary stakeholders of the Catholic Churchஎன்று. ஆக, கத்தோலிக்கத் திரு அவையின் அடிப்படை உரிமைதாரர்களும் பங்குதாரர்களும் இந்தச் சாமானிய இறை மக்களே. இவர்களுக்குப் பணி செய்வதற்காகத்தான் இங்கு ஆயர்கள் இருக்கிறார்கள், அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள், துறவியர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆதிக்க மனநிலையில் இருந்து, தங்களது மேட்டிமைத்தன்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மக்களுக்கான பணியாளர்களாகவே அவர்கள் எந்நாளும் திகழ வேண்டும் என்பதை எப்போதுமே சொல்வார். The clericalism என்பதற்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்த ஒரு கலகக்காரராகவே தந்தை அவர்களை நாம் எப்போதுமே பார்க்க முடியும்.

மூன்றாவதாக, விளிம்புநிலை மக்களை நோக்கிய இறையியலாக இது மிளிர வேண்டும் என்று விரும்பியவர்கள் தந்தை அவர்கள். அவர்களது எழுத்துகளைக் குருமாணவராக இருந்த போது ஓடி ஓடி படித்த காலத்திலும் சரி, அவருக்குக் கீழே ஓர் ஆய்வு மாணவனாகப் படித்த காலத்திலும் சரி, அவரது பேச்சுகளில் இருந்து, அவரது எழுத்துகளிலிருந்து நான் அதிகமாகக் கேட்ட இரண்டு வார்த்தைகள்: ஒன்று, The Subaltern; மற்றொன்று the people at the periphery. மிக அதிகமாக உச்சரித்த இரண்டு வார்த்தைகள். ஆக, அதிகாரம் பெற முடியாத சமுதாயத்தின் அதிகார நிலையில இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற சாமானிய மனிதர்கள் அவர்களது முதல் நோக்காக இருந்தார்கள். இரண்டாவது, விளிம்புநிலையில் இருக்கக்கூடிய மக்கள் பல நூறு காரணங்களுக்காக விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது - மக்கள் குறித்து எப்போதும் பேசுவதாக அவரது குரல் ஒலித்தது என்று நாம் பார்க்கிறோம்.

அவரைப் பொறுத்தவரை நம் கடவுள் விடுதலை அளிக்கிற கடவுள். நமது திருவிவிலியம் ஒரு விடுதலை உடன்படிக்கையின் ஏடு. அவரைப் பொறுத்த வரை நாம் பேச வேண்டிய மொழியெல்லாம் விடுதலை மொழியாகவே இருக்க வேண்டும். ஏனெனில், நாம் பேசுகிற இறையியல் விடுதலையை முன்வைக்கக்கூடிய இறையியலே என்று பேசுவார். இந்த இறையியலைப் பேசுவதற்காக எந்த ஒருவரையறைகளையும் எல்லைகளையும் தாண்டிச் செல்ல தயங்காத ஓர் ஆளுமையாக அவர் இருந்தார்.

அவரைப் பொறுத்தவரை இறையியல் கலந்துரையாடல்கள் எல்லாம் இறையியல் வகுப்பறைகளிலோ அல்லது இறையியலாளர் ஒன்றுகூடி அமர்ந்து பேசக்கூடிய அரங்குகளிலோ அமைந்து போவது கிடையாது. அவரைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரைகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்தப் படகுகளில் அந்த இறையியலாக்கம் நடைபெற வேண்டும்; அவர்களது உரையாடல் இறையியல் உரையாடல்களாக இருக்க வேண்டும். அந்த இறையியலின் கரு அந்த மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். ஆக, கன்னியாகுமரியின் கடற்கரையிலே மீன்களை உலர வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும், தங்கள் வலைகளைக் காய வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும் பேசக்கூடிய ஒன்றாக நமது இறையியல் வளர்ந்து போக வேண்டும் என்று சொல்வார்.

எனது மறைமாவட்டத்தை அவரது சிந்தனையில் எடுத்துக்கொள்வது என்றால் தஞ்சை தலத் திரு அவை அல்லது தஞ்சை தலத் திரு அவையில் இறையியல் என்றால் அது அந்தக் கழனிகளில், நெல் வயல்களில், நெல் நாற்றுகளை நடுகிற போதும், களை பறிக்கிற போதும், அறுவடை செய்கிற போதும் விளைந்த நெல்லை சந்தைப் படுத்துகிற போதும் அந்த மக்களது உரையாடலாக அந்த இறையியல் இருக்க வேண்டும். அந்த இறையியல் கரு என்பதும், உள்ளீடு என்பதும் மக்களது வாழ்வு சம்பந்தமானதாக இருக்க வேண்டும். அது போன்றே எப்போதும் விரும்பி வாசித்து, அதையே தனது இறையியல் முன்மொழிவாகக் கொண்டிருந்த தந்தையாக அவர்களை நாம் பார்க்க முடியும்.

அவர் கடைசி காலத்தில் அதிகமாகப் பேசிய சூழலியல் இறையியல் ஆக இருக்கட்டும் அல்லது பொதுவெளி இறையியலாக இருக்கட்டும் அத்தனையும் இறையியலாக விவாதிக்கப்பட வேண்டும், வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய தந்தையாக நான் அவரைப் பார்க்கிறேன். ஆக, இந்தத் தந்தை அந்தக் கடவுளுக்கு முன்னால் இப்படித்தான் சொல்லி இருக்க வேண்டும்; ‘எனது பிறப்பில் கடவுளே எனது வாழ்வு நீ கொடுத்த ஒரு கொடை. இப்போது எனது இறப்பில் எனது வாழ்வு நான் உனக்குக் கொடுக்கிற காணிக்கை.’

ஓர் அழகிய காணிக்கையாகக் கடவுள் முன் சென்றிருக்கிறார் நம்முடைய தந்தை என்று என்னால் உணர முடிகிறது. யோவான் நற்செய்தி 16 -ஆம் அதிகாரம் 22-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம், இயேசு தமது இறப்பு குறித்து பேசும்போது சொல்வார்: “நான் தந்தையிடமிருந்து வந்தேன், இப்போது மீண்டும் தந்தையிடம் போகிறேன்.” அந்தத் தந்தையிடமிருந்து வந்த நம் தந்தை இப்போது நம் தந்தையாம் கடவுளிடமே திரும்பப் போய் இருக்கிறார் என்று உணர முடிகிறது. அதே இயேசு தமது இறப்புக்கு முன்னால் பேசிய மற்றோர் இறைவார்த்தை யோவான் நற்செய்தி 16- ஆம் அதிகாரம் 33-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம்: “நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்என்று. ஆக, நம் தந்தையின் இறப்பு என்பது இந்த உலகின்மீது, உலகின் தீமையின்மீது, நமது இயலாமையின்மீது, நமது பாவ இயல்பின் மீது நாம் கொண்டிருக்கக் கூடிய வெற்றி என்று உணர்கிறபோது இயேசுவைப் போல வெற்றி அடைந்த மனிதராய் அந்தக் கடவுளிடம் சென்றிருக்கிறார் என்று உணர முடிகிறது. புல்டன்ஷீன் சொல்வார்: “இவ்வுலகில் வாழ்கிறபோது கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நாம் அந்தக் கடவுளோடு இருக்க போகிறோம்என்று. எப்போதும் வாழ்க்கை என்றால் அது கடவுளும் நாமும் இணைந்த, இயைந்த வாழ்வு என்று. தந்தை அவர்கள் தந்தையாம் கடவுளிடம் சென்று இருக்கிறார். சென்று வாருங்கள் தந்தையே. bye…bye…till we meet again……-