திருத்தந்தை வரைந்த ‘எதிர்நோக்கு ஏமாற்றம் தராது’ என்னும் யூபிலி ஆண்டு ஆணை மடலில் எதிர்நோக்கின் அடையாளங்கள் குறித்து (எண்கள் 7-15) விவரிக்கும்போது, காலத்தின் அறிகுறிகள்தான் எதிர்நோக்கின் அறிகுறிகள் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
‘உலகில் அமைதிக்கான விருப்பம் எதிர்நோக்கின் முதல் அறிகுறி’ என்று தொடங்கும் திருத்தந்தை அவர்கள், தொடர்ந்து திறந்த மனத்தோடு வாழ்க்கையைப் பகிர்கின்ற அறிகுறியையும், கைதிகளை, நோயுற்றவரை, இளையோரை, புலம்பெயர்ந்தோரை, முதியோரை, வறியவர்களை எதிர்நோக்குக்கான அடையாளங்களாகத் தந்து நமது கவனத்தை அவர்கள்மீது திசை திருப்ப அழைப்பு விடுக்கிறார்.
அகில
உலக நோயாளர் தினத்தைப் பிப்ரவரி பதினொன்றாம் தேதி சிறப்பிக்கக்கூடிய இக்காலத்தில் நோயாளர் கவனிப்புப் பற்றித் திரு அவைக்குக் கூறும் சிந்தனைகளைச் சற்று அலசிப் பார்ப்போம்.
‘அனைவரும் நன்கு கவனிக்கிறார்கள்’ என்னும்
நேர்மறை நம்பிக்கை, எதிர்நோக்கின் அறிகுறியாக நோயுற்ற அனைவருக்கும் காண்பிக்கப்பட வேண்டும்.
தலையணைகளைக்
கண்ணீரால் நனைக்கும் நோயாளர்கள் நமது நெருக்கத்தாலும் உடனிருப்பாலும் ஆறுதல் பெற வேண்டும். நோயுற்றோருக்கு நன்றிக் கடனைச் செலுத்தும் அற்புதத் தருணங்களாக அவர்களோடு உடன் இருக்கும் தருணங்கள் மாற வேண்டும்.
தன்
வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியாத நிலைமையில், கண்கள் கண்ணீரால் நிரம்பி வழியும் பொழுதுகளில், கை-கால்கள் அசையா
நிலையில் அவர்களின் கண்பார்வையும், புலம்பல்களும், முனகல்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டு நன்றிப்பெருக்கின் செயல்பாடுகளாக நமது கவனிப்பு அமைய வேண்டும்.
தனிமை
என்கிற உணர்வை நோயாளர்களுக்குக் கொடுக்காமல், நமது அருகாமை அனுபவம் வழியாகப் புன்னகையை வழங்கலாம். வாழ்நாள்களைக் கூட நமது உடனிருப்பு நீட்டித்துச் செல்லும்; இருளுக்கு அப்பாலும் ஒளியைத் தரிசிக்க முடியும் என்னும் நம்பிக்கையை நம் அருகாமை அனுபவம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும் (எ.ஏ.த.4). பல
நேரங்களில் ஏழ்மை நிலையில் பெற்றோர் தங்களைக் கவனிக்க முடியாமல் பிள்ளைகள் தவிக்கிறபோது, மருத்துவமனைகளுக்குச் செல்லாமலேயே நோய்களை இழுத்து வைத்துக்கொண்டு அப்படியே படுக்கையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் அவலங்களையும் இச்சமூகத்தில் பார்க்கிறோம். திரு அவை ஒருபோதும் பொறுத் க்கொள்ளாத கருணைக் கொலையைப் பல பேர் மறைமுகமாகச்
செய்யும் அவலமும் இச்சமூகத்தில் நடைபெறுகிறது.
இந்நேரத்தில்
நோயாளர் நலம் பேணும், செவிலியர்கள், உடனிருப்பாளர்கள், பராமரிப்பவர்களை நம் சமூகம் உற்சாகப்படுத்தி, அமைதியான வழிகளில் அவர்களும் பணிவிடை செய்ய நாம் உதவ வேண்டும்.
இரத்ததானம்,
உறுப்பு தானம் வழியாக நோயாளர் நலம் காக்கும் பணிகளில் இறங்கினால் எதிர்நோக்கு ஏமாற்றம் தராது என்பதை உரக்க இச்சமூகத்திற்குச் சொல்ல முடியும்.
பெரும்பாலும்
நோயாளருக்கெனத் தம்மையே அர்ப்பணித்த இயேசுவின் அடிச்சுவட்டை நாமும் பின்பற்றி, போட்டிப் போட்டுக் கொண்டு நல்ல சமாரியனைப் போல, நம் தகுதிக்கு ஏற்றவாறு காயங்களைக் கட்டவும், அதன் மருத்துவச் செலவுகளை ஏற்கவும் முன்வந்தால், நோயாளர் கவனிப்பு மாண்புக்கான மற்றும் எதிர்நோக்குக்கான பாடலாகவும் அமையும்.
இரக்கத்தின்
தூதர்களான நாம், எதிர்நோக்கு மிகுதியாகச் சோதிக்கப்படும் இடங்களான சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், மக்களின் மாண்பு சிதைக்கப்படும் இடங்கள் இவைகளைச் சந்தித்து நம்பிக்கையூட்டுவதற்கு முன்வர வேண்டும். நொறுங்கிய உள்ளத்தைக் குணமாக்க இந்த யூபிலி ஆண்டில் நாம் செயல்படுவது நல்லது என்று எண் 23-இல் திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
காலங்களை
வீணடிக்காது, அருமையான இந்த யூபிலி ஆண்டைப் பயன்படுத்தி நோயாளர்கள் மனங்களில் நலம் கொண்டு வரும் தூதர்களாக வாருங்கள்; நோயாளர் உள்ளங்களில் பிரகாசத்தைப் பரப்புவோம்.
சனவரி 20 அன்று அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார். அமெரிக்க சனநாயகத்தின் வரலாற்றில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு ‘குற்றவாளி’ தண்டனையைத் தலையில் சுமந்துகொண்டு அதிபராகப் பதவியேற்பது இதுவே முதல்முறை.
சனநாயக
விழுமியங்கள், பாராளுமன்ற மரபுகள், காலங்காலமாகப் பின்பற்றி வருகின்ற நடைமுறைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், ‘தான்’ என்ற ஆணவத்தோடு, ‘தன்னை’ மட்டுமே முன்னிறுத்திச் செயல்படும் டிரம்ப், தனது நடவடிக்கைகள், செயல்முறைகள், அணுகுமுறைகள் என எதையும் மாற்றிக்கொள்ளாமல்
அமெரிக்க நாட்டை மீண்டும் ஆட்சி செய்கிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், உலகின் மிகப்பெரிய இராணுவம், உலகின் மிகப்பெரிய சந்தை, அறிவியல்-தொழில்நுட்ப ஆற்றலின் சிகரம்... இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிகப்பெரிய சனநாயகம் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டு அங்கீகாரம் பெற்றிருக்கும் அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றுள்ளது அமெரிக்க மக்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் ஏதாவது ஒருவகையில் பாதிக்கக்கூடிய ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை.
‘தான்’ என்ற அகங்காரத்தையும், ‘தங்களிடம் இல்லாதது எதுவும்
இல்லை’ என்ற
தற்பெருமையும், உலக நாடுகள் அனைத்தையும் மேலாண்மை செய்து, உலகை ஒழுங்குபடுத்தும் தகுதி தங்களிடம் மட்டுமே இருக்கிறது என்ற அகம்பாவமும் சராசரி அமெரிக்கரின் மரபணுக் குணங்கள். மேனாள் அமெரிக்க உள்துறை செயலர் கூறியது போல அவர்களைப் பொறுத்தவரை “அமெரிக்கா உலகின் எந்த நாட்டாலும், யாராலும் தவிர்க்க முடியாத ஒரே நாடு.”
தங்களது
நாட்டைப் பற்றிய பெருமிதமும், தங்களது தகுதிகளின் மீது தன்னம்பிக்கையும், தாய்நாட்டுப் பற்றும் அனைவருக்கும்
இயற்கையானதே! ‘தன்னால்
முடியும்’ என்பது
தன்னம்பிக்கை; ‘தன்னால் மட்டுமே முடியும்’
என்பது ஆணவம்! இந்த ஆணவமே ஒரு நாட்டின் தலைவரை வழிநடத்தும் கொள்கையாக இருந்தால், அந்த நாட்டின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பதைப்
பதவியேற்பதற்கு முன்னரே டிரம்ப் வெளிப்படுத்தத் துவங்கிவிட்டார்.
அமெரிக்கக்
குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் ‘ஓவல்’ அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் டிரம்ப்பின் கைகளில் இருக்கும் அதிகாரங்கள் சாதாரணமானவையல்ல. கடந்த முறை அவர் ஆட்சியில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்குப் போதுமான பெரும்பான்மை இருக்கவில்லை. இந்த முறை அவருக்குப் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை உள்ளது. நமது நாட்டைப்போல நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்ற கட்டாயமும் அங்கே இல்லை. அவருக்குப் பிடித்தமான யாரையும் அவர் அமைச்சராக வைத்துக்கொள்ளலாம். நமது வீட்டுக் குழந்தைகளுக்கு ‘பீசா’ ஆர்டர் செய்து அனுப்புவதைவிட, வேகமாக அவரால் உலகம் முழுவதையும்
கண்ணிமைக்கும் நேரத்தில் இருபது முறை எரித்துச் சாம்பலாக்கும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களைத் தாங்கிய 5044 அதிவேக ஏவுகணைகளை எந்த நாட்டை நோக்கியும் ஏவமுடியும்.
இறுமாப்பு
உடையவன் கைகளில் அதிகாரமும் ஆயுதமும் கிடைத்தால் எப்படிப்பட்ட
விபரீதங்கள் நிகழக்கூடும் என்பதை உலக வரலாற்றின் பல பக்கங்களில் பார்த்துள்ளோம்.
தங்கள் கரங்களில் இருக்கும் அதிகாரத்தை வைத்து அடுத்த நாட்டவர்களது நிலங்களையும் வளங்களையும் கைப்பற்றுவதுதான் அவர்களது முதல் நோக்கமாக இருக்கும்.
ஆட்சியில்
அமர்ந்தவுடன் அண்டை நாடான கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டதோடு மட்டுமில்லாமல், அப்படி இணைத்துக்கொள்ள கனடா உடன்படவில்லையென்றால், அந்நாட்டின்மீது பல பொருளாதாரத் தடைகளை
விதிக்க இருப்பதாகவும் மிரட்டுகிறார்
டிரம்ப். டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான கிரீன்லாந்து தீவினைத் தங்களுக்கு விற்றுவிட
வேண்டும் என்று கேட்கிறார். ஆர்ட்டிக் துருவப் பிரதேசமான இந்தத் தீவு அமெரிக்காவுக்கு அருகில் உள்ளது. அமெரிக்காவுக்கு இங்கே ஒரு விமானத்தளம் இருக்கிறது. 57,000 மக்கள் மட்டுமே வாழும் இந்தத் தீவில் சமீபத்தில் நடத்தப்பட்ட புவியியல்
ஆய்வு, மின்சார வாகனங்கள் மற்றும் அதற்கான பேட்டரிகள் செய்ய அவசியமான 34 மூலப்பொருள்களில், 25 பொருள்கள் ஏராளமாக இந்தத் தீவில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தீவைச் சுற்றி 28,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் பனிப்பாறைகள் உருகத் துவங்கியுள்ளன. அதற்குக் கீழே ஏராளமான பெட்ரோலிய கச்சா எண்ணெயும் எரிவாயுவும் மண்டிக்கிடப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. “அமெரிக்காவின் பாதுகாப்புக்காகவும், உலக நாடுகளின் நன்மைக்காகவும் கிரீன்லாந்து அமெரிக்காவுக்குச் சொந்தமானதாகவும், அதன் ஆட்சியிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது” என்று
டிரம்ப் அறிவித்த சில நாள்களில், டிரம்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் கிரீன்லாந்துக்குச் சென்று சில ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சார்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் அதிகாரத்தை டிரம்புக்கு வழங்க ஒரு சட்ட முன்வடிவைத் தயார் செய்து, சக நாடாளுமன்ற உறுப்பினர்களின்
பார்வைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது டிரம்ப்
பனாமா கால்வாயின் நிர்வாகத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஒப்படைக்கத் தவறினால் இராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்ற நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
‘மெக்சிகோ வளைகுடாவை’
இனிமேல் ‘அமெரிக்க வளைகுடா’ என்று அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ், கலிபோர்னியா, நேவடா, ஊட்டா, கொலராடோவின் பெரும்பகுதி, நியூ மெக்சிகோ, அரிசோனா ஆகிய நிலப்பரப்புகள் அனைத்தும் ஒரு காலத்தில் மெக்சிகோ
நாடாகவே இருந்தன. அந்நாட்டின்மீது யுத்தம் நடத்தி அந்நாட்டின் பரப்பளவில் 55% பகுதிகளை ‘சமாதான
ஒப்பந்தம்’ என்கிற
பெயரில் அமெரிக்கா அப்பகுதிகளைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. அதற்காக அமெரிக்கா மெக்சிகோவுக்கு 15 மில்லியன் டாலர்களை வழங்கியது. ஓர் ஏக்கருக்கு 5 சென்ட்
என்ற ஈனக்கிரயத்தில் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் போன்ற நாடுகளையெல்லாம் சேர்த்து ‘அகண்ட பாரதம்’ அமைக்க வேண்டும் என்று சில சங்கிகள் நம் நாட்டில் பேசிவருவது போல, கனடா, மெக்சிகோ, கிரீன்லாந்து போன்ற பகுதிகளைச் சேர்த்து ‘அகண்ட அமெரிக்கா’
அமைத்திட வேண்டும் என்பது டிரம்பின் பேராசை.
அந்நிய
நாடுகளின் நிலங்களின் மீதும், வளங்களின் மீதும் கண்வைத்துவிட்ட டிரம்ப், அவைகளை வளைத்துப்போட தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரி வசூலுக்காக ‘IRS’ (Internal revenue service) என்ற அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரவேண்டிய வரிகள், கட்டணங்கள், ஈவு தொகைகள் ஆகியவற்றை வசூலிக்கத் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் ERS (External revenue service) என்ற அமைப்பை உடனடியாகத் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியைச் செய்யும் நாடுகளோடு கடந்த காலங்களில் போடப்பட்ட வணிக
ஒப்பந்தங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்குச் சாதகமாகவும் அமெரிக்க நலனுக்குப் பாதகமாகவும் இருக்கிறதாம். இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் அதிகமான வரிகளைக் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகவும் அதனைக் குறைப்பதற்காக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்பவர்களிடம் இருந்து அதிகக் கட்டணங்களையும் வரிகளையும் வசூலிப்பதே டிரம்பின் திட்டம். இதனால் கனடாவும் மெக்சிகோவும் மிக அதிகமாகப் பாதிக்கப்படும். கனடாவின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குச் சென்றுவிடும். ஏற்கெனவே பல பொருளாதாரச் சிக்கல்களில்
மூழ்கித் தவிக்கும் மெக்சிகோ திவாலாவதைத் தவிர வேறு வழியில்லை. சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஜப்பான் மற்றும்
இந்தியாவும் இந்த நடவடிக்கையால் வெகுவாகப் பாதிக்கப்படும். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் டிரம்பின் இந்தத் தாக்குதலைச் சமாளிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அமெரிக்க ஏற்றுமதியை அதிகரித்தும், அமெரிக்க இறக்குமதிகளுக்கு மிக அதிகமாக வரி விதித்தும் தங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் ‘வணிக உபரித் தொகையினை’
(trade surplus) குறைக்க
டிரம்ப் திட்டமிடுகிறார். இத்தகைய நடவடிக்கைகள் உலகப் பொருளாதார விநியோகச் சங்கிலியில்
(world economic supply chain)
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதனால் உலகம் தழுவிய பொருளாதார மந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அநேகம்.
“மீண்டும் அமெரிக்காவைப் பிரம்மாண்டமாகக் கட்டமைப்போம்” (Make America great again) என்ற
டிரம்பின் திட்டத்தைச் செயல்படுத்த அவர் எடுக்க இருக்கும் பல முன்னெடுப்புகளால் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் வெகுவாக மாறும். அமெரிக்க உற்பத்திகளைப் பாதுகாக்க அதனைச் சுற்றி அவர் அமைக்க உத்தேசித்துள்ள ‘பாதுகாப்பு வளையம்’ உலகளாவிய வணிகச் சுதந்திரத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தரும். புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலம் நிரந்தரமற்றதாக மாறிவிடும். புவிவெப்பமயமாக்குதலைத் தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கிப்போகும் அபாயத்தைத் தவிர்க்க முடியாது. டிரம்பைப் பொறுத்தவரை புவிவெப்பமயமாதல் என்பது ஓர் அறிவியல் மோசடி. அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளிடம் இருந்து பணம்
கரக்க விஞ்ஞானிகள் சிலர் தயாரித்துள்ள கட்டுக்கதை.
ஐக்கிய
நாடுகள் சபை, சர்வதேச சட்டம் போன்ற அனைத்து நாடுகளின் உறவுகளைப் பேணி வளர்க்கின்ற எந்த அமைப்புகளிலும் டிரம்புக்கு நம்பிக்கையில்லை. அமெரிக்க நலன் மட்டுமே முக்கியம். உலக நன்மைகளைப் பற்றிச் சிந்திக்கவும், அதற்காகப் பணம் செலவழிக்கவும் அமெரிக்கா இனிமேல் முன்வராது என்பதே அவரது நிலைப்பாடு.
இந்தியாவைப்
பொறுத்தவரை பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் தனிப்பட்ட நட்பு இருப்பதால் டிரம்பின் பதவிக்காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அமெரிக்காவில் இருக்கும் சங்கிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அவரது நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவழி அமெரிக்கர்களைக் காண்பித்து, இந்தியர்களை டிரம்ப் மிகவும் நம்பி நேசிப்பவர் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வரை பொருளாதார ரீதியாக இந்தியாவுக்குப் பெரும் நன்மைகள் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
டிரம்ப்
அரசு பின்பற்ற இருக்கும் ‘பி-1À’ விசா
நடைமுறைகளைக் காரணம் காட்டி பல இந்தியத் தொழில்
விற்பன்னர்களைப் பல நிறுவனங்கள் வேலைகளிலிருந்து
நீக்கத் துவங்கிவிட்டன. பல பெரிய அமெரிக்கக்
கம்பெனிகள் இந்தியத் தொழில்நுட்பவியலாளர்களை வேலைகளில் அமர்த்தி, அதற்கான உத்தரவாத கடிதங்களையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்ததால் அவர்களும் அமெரிக்க வேலைவாய்ப்பினை நம்பி ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த வேலைகளில் இருந்து விலகிவிட்டனர். இப்போது அவர்களுக்கெல்லாம் வழங்கப்பட்டிருந்த வேலை வாய்ப்புகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகம் எடுக்க இருக்கின்ற கொள்கை முடிவுகளைச் சுட்டிக்காட்டித் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துவிட்டனர்.
‘அமெரிக்க டாலருக்குச் சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்குக் காய்ச்சல் வரும் என்பார்கள்! இப்போது ஜன்னியே வந்துவிடும் என்று பயமாக இருக்கிறது’ என்று
இந்திய ஏற்றுமதியாளர் ஒருவர் அச்சப்பட்டார்.
மதம்
பிடித்த யானை வெண்கலப் பாத்திரக் கடைக்குள் புகுந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. எலான் மஸ்க், விவேக் இராமசாமி போன்ற இதயமற்ற உலகக் கோடீஸ்வரர்களின் கூட்டு முயற்சியே டிரம்பின் வெற்றி. நவீனத் தொழில்நுட்பங்களும் பெரும் பணமும் கலப்படமற்ற சுயநலமும் ஒன்றுசேர்ந்து பொய்யான தகவல்களையும், தவறான பிரச்சாரங்களையும் பயன்படுத்தி பொதுமக்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் தங்களுடைய விருப்பத்திற்கிணங்க வளைக்க முடியும் என்பதற்கு நடந்து முடிந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு.
உலகப்
பணக்காரர்களின் பெரும் செல்வத்தையும், வரைமுறையில்லாத பொருளாதாரச் சுரண்டல்களையும் பாதுகாப்பது மட்டுமே டிரம்ப் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். தங்களது இந்த முயற்சியில் வெற்றியை ருசித்துவிட்ட இவர்கள், தற்போது உலகம் முழுவதும் இருக்கின்ற இடதுசாரி சனநாயக அரசுகளைக் குறிவைக்கத் துவங்கிவிட்டனர்.
உலகெங்கிலும்
வலதுசாரி, பாசிச அரசுகளைச் சனநாயகத்தின் முகமூடியில் அமைப்பதே டிரம்ப் - எலான் மஸ்க் பாவக்கூட்டங்களின் நோக்கம். சனநாயகம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கைக் கொடை அரசியல் சக்திகள், உலகம் முழுவதும் கவனமாக இருக்க வேண்டும்.
“ஊடகம் என்பது சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் அதன் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அங்கம்; மனிதகுலத்தின் செயற்பாட்டின் கருவி; ஒரு சமூக நிறுவனமான ஊடகம். அச்சமூகத்தின் அறிவையும் அதன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கக்கூடியது” - ‘உலகை ஆளும் ஊடகம்’ நூலில் அருள்முனைவர் இராஜசேகரன்.
நம்
வாழ்வின் பொன்விழா மலருக்குக் கட்டுரை ஒன்று எழுதக் கேட்டபோது, நம் வாழ்வின் முதன்மை ஆசிரியரின் ஊடகம் பற்றிய நூல் ஒன்றைப் படிக்க நேர்ந்தபோது அச்சு ஊடகமான நம் வாழ்விற்கும் அவரின் கருத்து பொருத்தமாயிருக்கும் என்பதனால் இக்கட்டுரையில் எடுத்தாள நேர்ந்தது.
சமூகச்
செயல்பாடுகளை, அச்சமூகத்தின் கலாச்சாரத்தை, சமூகத்தின் அரசியல்-பொருளாதார வாழ்வை, எண்ணங்களை உலகுக்குத் தந்து உலகைச் செம்மைப்படுத்தும் பணியைச் செய்வது ஊடகங்கள். இன்றைய வணிகக் கலாச்சாரத்தால் குடிமக்கள் வெறும் நுகர்வோராய் மாறிவிட்ட நிலையில், உலகமயம், தாராளமயம் என்னும் பொருளாதார முழக்கங்கள் மக்களைக் கீழ்ப்படுத்தி அடிமையாக்கி, சிந்திக்கும் திறனை மழுங்கடித்து வரும் சூழலில், ஊடகங்கள் தமக்குரிய பணியைச் செய்திட முடியுமா? என்ற கேள்வியும் எழத்தானே செய்யும்!
‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று பாரதி பாடிய பாட்டின் இன்றைய பொருத்தம் என்ன? பாரதி கண்ட சக்தி யாரை அடிமைப்படுத்த? யாரைக் கவ்விக் குதறலாம்? என்று வலம் வரும் சூழலில், ‘நம் வாழ்வு’ என்னும் எளிய ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் இளமை மாறா எழிலோடு உலா வருதல் உண்மையிலேயே சிறப்புக்குரியதே.
‘நம் வாழ்வு’ என்ற இதழ் தோற்றுவிக்கப்பட்டமைக்கு நம் திரு அவையின் தொலைநோக்குப் பார்வை காரணமாய் இருந்திருக்கலாம்; மறைமாவட்டந்தோறும் நடத்தப்பட்ட பல்வேறு இதழ்கள் இருந்த காலத்து, ஒரு பொது இதழ் வேண்டும் என்ற எண்ணம் திரு அவையாருக்கு எழுந்தபோது ‘நம் வாழ்வு’ உதயமானது. ‘நம் வாழ்வு’ என்ற இவ்விதழ் கத்தோலிக்கர் வாழ்வுக்காக மட்டுமானதாக இருந்திருக்க முடியாது. ‘நம்’ என்று உள்ளடங்கிய பதம் இச்சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்திருக்கும் என்பது உண்மையாக இருக்கும் என நம்பலாம்.
ஆயர்
பேரவையின் அதிகாரப்பூர்வ இதழ், கிறித்தவ வாழ்வு பற்றி மட்டும் பேசி முடித்துவிடலாமா? கிறித்தவ மறையை உள்ளீடாக மட்டும் வைத்து நடத்திவிடலாமா? மறை சார்ந்த செய்திகளைத் தாண்டி, மக்கள் அறிவுறுத்தும் கடமை இல்லையா? ஆயர் பேரவையால் நடத்தப்பெறும் காட்சி ஊடகம் இன்று பக்திமார்க்கமான வழியை மட்டுமே காட்டி நடத்தி வருகையில், ‘நம் வாழ்வு’ என்ற அச்சு ஊடகமும் அப்படியே இயங்கலாமா?
கத்தோலிக்கத்
திருமறை அல்லது கிறித்தவத்துள் இயங்கும் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் தனித்த அடையாளங்களுடன் செயல்பட்டாலும், இவை அனைத்தும் தனித்தீவுகள் அல்ல; இவை அனைத்துமே இச்சமூகத்தில்தான் இயங்குகின்றன. சமூகத்துள் இயங்கும் திரு அவை சமூகத்திற்காக இயங்கும்போதுதான் கிறித்தவம் உலகிலே தோன்றியதற்கான ஏற்புடைமை புலனாகும். மதங்கள் பேசும் ஆன்மிகம் வெறும் அரூபமானது அல்ல; மாறாக, மக்களிடம் முன்வைக்கப்பெறும் ஆன்மிகம் பன்முகப் பரிமாணங்களை உடையது. ஆன்மிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு நபர், தான் சார்ந்த சமூகம் பற்றிய அனைத்து வகை பண்புகளை, அச்சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளை, அச்சமூக வரலாற்றுத் தடங்களை, அச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்த பெரியோரை, சமூக வளர்ச்சிக்கு எதிராக நிற்கும் சக்திகளைப் பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும். ‘வையத்து வாழ்வாங்கு வாழ்வோர்’
என்போர் இப்புரிதல்களைப் புரிந்து கொண்டோர் என்பதுதான்.
‘நம் வாழ்வு’ நமக்குத் தந்தது
என்ன?
‘நம் வாழ்வு’ மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கப் பெற்றாலும், தொடக்கக் காலத்தில் மிகப்பெரிய அளவில் சமூக-அரசியல் பிரச்சினை பற்றிய கட்டுரைகள் வெளிவரவில்லை. சென்னையைச் சேர்ந்த திரு. இராணி சேவியர் அவர்கள், மிகுந்த அரசியல் பற்றியத் தெளிவு பெற்றவர்கள் எல்லாம் ஆரம்பக் காலங்களில் மிகப்பெரிய பங்களிப்புச் செய்தார்கள். மறைந்த பேராயர் ஆரோக்கியசாமி அவர்கள் காலத்தில் ‘நம் வாழ்வு’ குமரி மாவட்டத்தின் நாகர்கோவிலுக்கு இடம்பெயர்ந்தபோது நம் வாழ்வின் உள்ளடக்கத்தில் சிறு தொய்வு ஏற்பட்டது. எண்பதுகளுக்குப் பின்பு ‘நம் வாழ்வு’ அரசியல் பற்றிய பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
எண்பதுகளின்
துவக்கத்தில் குமரி மாவட்டத்தின் மண்டைக்காட்டில் வெடித்த மதக்கலவரம்! இக்கலவரத்தில் பத்து மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை... தொடர்ந்து குமரி மதவாதிகளின் தொடர் கருத்தியல் பரப்பலால் வகுப்புவாதிகளின் தேர்தல் சோதனைக்கூடமாய் மாறிப்போனமை... கிறித்தவர்களை அரசியல் பக்கம் இழுத்துச் சென்றது. குமரி மண்ணில் தூவப்பட்ட வகுப்புவாதத்தின் பின்பு சமூக, அரசியல், பண்பாடு என்ன என்பது பற்றிய கேள்விகள் எழுந்தபோது, இவை பற்றிய கேள்விகளுக்கு ‘நம் வாழ்வு’ விளக்கம் அளித்தது.
இதே
காலகட்டத்தில் நம் வாழ்வின் ஆசிரியராக இருந்த அருள்பணி. வின்சென்ட் சின்னதுரை அரசியல், சமூகம், கலாச்சாரக் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளித்தார். திரு அவை பற்றிய விமர்சனங்கள் கூட நிறைய வெளிவர வாய்ப்பு இருந்தது. தொடர்ந்து பணியேற்ற அருள்பணி. ஆனந்தம் (இன்றைய மேதகு சிவகங்கை ஆயர்) அவர்கள், கொடைக்கானலில் பங்குப் பணியாளராகப் பணியாற்றிய காலத்தில்கூட மதவாத அரசியலுக்கு எதிராகவும் சிறுபான்மையினர் நலம் பேணவும் சில முன்னெடுப்புகளை எடுத்தார் என்பது வரலாறு.
இதே
காலகட்டத்தில்தான் இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. ஈழத் தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் எழுந்த ஆதரவு நிலை தொடர்பாக ‘நம் வாழ்வு’ தன் பங்கை அளித்தது. தமிழ்நாடு எல்லை தாண்டி, பல சர்வதேசப் பிரச்சினைகளும்
எழுப்பப்பட்ட நிலையில் அவையெல்லாம் நம் வாழ்வில் பிரதிபலித்தன.
தேர்தல்
காலங்களில் மதச்சிறுபான்மையினரை, மதவாத சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைக்க வேண்டியது கட்டாயம் என்பன பற்றிய செய்திகளெல்லாம் நம் வாழ்வில் இடம்பெற்றபோது, ‘நம் வாழ்வு’ நம் மதச் சிறுபான்மையினரின் அரசியல் நிலைப்பாட்டுக்கான வழிகாட்டும் இதழாயிற்று.
இக்காலகட்டத்தில்
நம் வாழ்வின் முதன்மையாசிரியர்களாகப் பணியாற்றிய தஞ்சை டோமி, மற்றும் குடந்தை ஞானி இருவருக்கும் மதவாத அரசியல் பற்றிய தெளிவு அதிகமாக இருந்தது.
இந்திய
மதவாத அரசியல் மதச் சிறுபான்மையினரை முன்வைத்து நடத்தப்பட்டது என்பதால், வகுப்புவாத
கருத்தியல், அது ஏற்படுத்தப்போகும் விளைவு, மதவாதத்தின் இலக்காகிய மத அடிப்படைவாதம் என்பன
பற்றியெல்லாம் நான் எழுதிய கட்டுரைகள் ஏராளம் வெளிவந்தன. மதவாதம், குறிப்பாக பெரும்பான்மை மதவாதம் இந்தியச் சமூகத்திற்குள் ஊடுருவி என்ன செய்யும் என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் வெளிவந்தன.
2014-இல் எழுந்த
மோடியின் ஆட்சி ‘நம் வாழ்வு’ கட்டுரைகளால் மிகவும் விமர்சிக்கப்பட்டன. வகுப்புவாதம், அதன் விளைவு வகுப்புவாத அரசியல் பாசிசமாக வளர்த்தெடுக்கப்பட்ட முறை ‘நம் வாழ்வு’ போல் எந்த ஊடகமும் ஏன் இடதுசாரிகளின் ஊடகங்கள், சமயச் சார்பற்ற இயக்கங்கள் என்பன எவையும் மிகத் தைரியமாக மக்கள் அறிவுறுத்தும் வண்ணம் எழுதவில்லை. சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. இப்பிரிவினரின் அரசியல் பங்கேற்பை மறுத்தது. அவர்தம் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டன; வழிபாட்டுரிமை கேலி செய்யப்பட்டது; நாளும் அச்சுறுத்தப்பட்ட மக்களிடம், சமய உரிமை என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றெனவும், இவை சிறுபான்மை மதம் சார்ந்த, மக்களின் மாண்பு சார்ந்த செய்திகள் எல்லாம் ‘நம் வாழ்வு’ கட்டுரைகள் மூலம் மக்களுக்குத் தரப்பட்டன.
இந்துத்துவம்
என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் பெரும்பான்மைவாதம், கலாச்சாரத் தேசியம் என்பனவெல்லாம், இந்திய அரசு உறுதி செய்த சனநாயக விழுமியங்களுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டங்களுக்கும் எதிரானது என்ற உண்மையை ‘நம் வாழ்வு’ கட்டுரைகள் உரக்கவே எடுத்துரைத்தன.
இந்தியக்
கிறித்தவர்கள் அரசியல்படுத்தப் பெறாதவர்கள் என்ற குறை உண்டு. இஸ்லாமியர்கள் போன்று நாம் தாக்கப்படுகின்ற போதெல்லாம் வெகுண்டெழும் குணம் கிறித்தவர்களுக்கு இல்லை. ஆயினும், அநீதிக்கு எதிராக, உண்மையின் சார்பாக நாம் எப்போதும் குரல் கொடுக்க வேண்டும் என ‘நம் வாழ்வு’ வலியுறுத்தத் தவறியதில்லை.
இவ்வாறாக,
நம் மக்களைச் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார வழியில் முறைப்படுத்த ‘நம் வாழ்வு’ சிறிய முயற்சியை மேற்கொண்டது என்பதனை எவரும் மறுக்க இயலாது.
தென்னிந்திய திருச்சபை
மேனாள் பேராயர் தேவசகாயம் அவர்கள் ‘நம்
வாழ்வு’ வார
இதழுக்கு அளித்த வாழ்த்துச் செய்தி!
முதலாவதாக, அனைவருக்கும் என்னுடைய பொன்விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான்
‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத் தலைவராக இருக்கின்ற ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களை ‘நம் வாழ்வு’ அலுவலகத்தில் சந்திக்க வந்தபோது, நம் வாழ்வின் முதன்மை ஆசிரியர் இராஜசேகரன் அவர்கள் ‘நம் வாழ்வு’ இதழை எனக்குக் கொடுத்தார். நான் இவ்விதழை என் இல்லத்திற்குக் கொண்டு சென்று படித்தபோது, ‘இவ்வளவு சிறப்பான இதழ் வந்து கொண்டிருக்கின்றதே!’ என்று நான் வியந்துபோனேன். எல்லா இதழ்களும் மிக உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றவைகள். அடித்தட்டு மக்களுடைய கரிசனைகளை ஆழமாக எடுத்து இயம்புகின்ற கட்டுரைகள். தொடர்ந்து ஐம்பது ஆண்டு பயணத்திலே சமுதாயத்திற்கும் திரு அவைக்கும் மிகச் சிறப்பான பங்களிப்புச் செய்துவருகின்ற இந்த ‘நம் வாழ்வு’ இதழ் மென்மேலும் வளர வேண்டும், இன்னும் சிறப்பாகப் பலருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். முதன்மை ஆசிரியரையும், உதவி ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன்.
எல்லாருக்கும்
தெரிந்த ‘என் ஆன்மா...’ பாடல் அல்லது ‘மரியன்னையின் பாடல்’ என்று சொல்லப்படுகின்ற பாடல்களிலிருந்து ஒரு சில சிந்தனைகளைச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். நான் பேராசிரியராக இருந்தபோது, ஒரு கத்தோலிக்க நண்பர் என்னைப் பார்த்து கிண்டலாகச் சொன்னார். அதில் வருகின்ற சில வரிகளில் “From Now on all generation shall
call me Blessed” என்று
வரும். அதை அவர் “From Now on All
generations expect the protestant
shall call me Blessed” என்று
கூறினார். அதாவது, புரோட்டஸ்டன்ட் திருச்சபையினர் மரியன்னைக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை என்பதைப் போன்று கருத்து நிலவுகிறது. இந்தப் புரோட்டஸ்டன்ட் திருச்சபையினை நிறுவின மார்டின் லூதர் சொல்வார், “We must honor the Mother of God, and through her we Should reach
Jesus who is the center of
all powers”. அதாவது,
“இறைவனுடைய தாயை நாம் மதிக்க வேண்டும்; ஏனென்றால், அவர் வழியாக ஆற்றலின் மையமாக இருக்கின்ற இயேசுவை அடைய முடியும்”
என்று அவர் குறிப்பிடுவார்.
இன்றைக்கு
நாம் இயேசுவைப் புகழ்கிறோம்; அன்னை மரியா மட்டும் இல்லையென்றால், இயேசுவைப் புகழ்வதற்கான வாய்ப்போ அல்லது இயேசுவின் வழியாக நாம் பெற்றிருக்கின்ற ஆன்மிகக் கொடைகளுக்கோ வாய்ப்பே இருந்திருக்காது. இயேசுவின் சிறப்பைப் பற்றி நாம் கூறும்போது, அவர் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும்
பெற்றிருக்கிறார். எனவே, இறைத்தன்மையைப் பெற்றதனால் நம் மீட்பராக இருக்கிறார்; மனிதத்தன்மையைப் பெற்றதனால் நமக்கு உதவி
செய்யக்கூடிய நிலையைப் பெற்றிருக்கிறார். எப்படி இவரால் இந்த இரு தன்மைகளையும் பெற முடிந்தது? அன்னையின்
வழியாக மனிதத்தன்மையிலே இயேசு பங்கேற்கிறார். இயேசுவின் வழியாக அன்னை இறைத்தன்மையில் பங்கேற்கிறார். ஆகவேதான், மரியாவை ‘இறைவனுடைய
அன்னை’ என்று
திரு அவை போற்றிப்
புகழ்கிறது.
இந்த
அன்னையைப் பற்றிப் பொதுவாக, கிறிஸ்துமஸ் நாடகங்களிலெல்லாம் ஓர் அமைதியான அன்னையாக மட்டுமே சித்தரிக்கின்றோம். ஆனால், அவரைப் பற்றி படிக்கப் படிக்க அவருடைய புரட்சிகரமான ஆளுமையை நாம் திருமறையிலே பார்க்கிறோம். கபிரியேல் சந்திப்பிலே அவருடைய சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறார். ‘நான் என் அப்பாவிடம் கேட்க வேண்டும், அம்மாவிடம் கேட்க
வேண்டும்’ என்றெல்லாம்
அவர்கள் சொல்லவில்லை. குழந்தையையும் அதே சுதந்திரத்தோடு வளர்க்கிறார்கள். காணாமற்போன நிகழ்ச்சியில் அவரைத் தேடிக்கொண்டு செல்கிறார்கள். அன்றைக்கு மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் ‘தேடுபவர்களாகவே’ வாழ்கிறார்கள்.
எனவே, அவர் தேடுகின்ற ஒருவர்; தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்கின்ற ஒருவர். குறிப்பாக, அன்னை மரியா எலிசபெத்தைச் சந்திப்பதாக இருக்கட்டும், கானாவூர் திருமணமாக இருக்கட்டும், எல்லாச் சூழலிலும் உதவிபுரிபவராக இருக்கிறார். மேலும், எல்லாவற்றிலும் துயரப்படுபவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்பவராகவும் இருக்கிறார். எனவேதான், சிலுவை அடியிலே நிற்கிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின்னால் சிதறிப்போன சீடர்களையெல்லாம் ஒன்றுசேர்த்து தூய ஆவியைப் பெறுகின்ற இடத்திலே அனைவரையும் கூட்டிச் சேர்த்தவர் அன்னை மரியா. ஆகவே, இவர் மிகப் புரட்சிகரமான ஒரு பெரிய ஆளுமையாகத் திருமறையிலே காட்டப்பட்டிருக்கிறார். அவருடைய சிறப்பான ஆளுமையின் வெளிப்பாடாக இந்த Magnificat பாடல்
அமைகிறது. இந்தப் பாடலை ‘மரியன்னையின் பாடல்’ என்பர்.
இது தென்னிந்தியத் திருச்சபையிலும் (protestant) அதிகமாக
வழிபாட்டிலே பாடப்படுகின்ற ஒரு பாடல். பழைய ஏற்பாட்டுத் திருமறைப் பகுதி முடிந்த பிறகு இந்தப் பாடல் வரும். இப்பாடலின் பொருள் என்னவென்றால், பழையதையும் புதியதையும் இணைப்பது இம்மரியன்னையின் பாடல் என்று அது மிக மிகச் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
Magnificat என்பது
இலத்தீன் மொழியில்
முதல் வார்த்தை Magnificat Anima mee Dominum (My Soul magnifies the Lord). இதை
நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று யோசித்தபோது இது ‘நம்
வாழ்வின்’ பாடலாகவே
இருக்கிறது என்று தோன்றுகிறது. ஏனென்றால், அன்னை அவர்கள் ஒரு கவிஞர்; ஒரு சிறப்பான உயர்ந்த சிந்தனையாளர்; திருமறை ஆராய்ச்சியாளர். இதில் வருகிற திருமறைகள் எல்லாமே
பழைய ஏற்பாடு என்று சொல்லப்படுபவற்றில் ஆழமாக வேரூன்றி எடுக்கப்படுகின்ற ஒரு பாடல். அதாவது, எலிசபெத்தைச் சந்திப்பதற்கு அன்னாவினுடைய பாடலைச் சிந்தித்துக் கொண்டே சென்றிருப்பார் என்று நம்பப்படுகிறது. ஆகவே,
அவர் ஒரு திருமறை வல்லுநர்; எதார்த்தத்தோடு தொடர்புடையவர். எனவே, ஏழைகள் சார்பிலே இருந்து இந்தப் பாடலை எழுதுகிறார். ஆகவே, தன்னுடைய பாடலை, அவருடைய விடுதலை நோக்கோடு அவர் எழுதுகிறார். ‘நம் வாழ்வு’ பற்றி என்னவெல்லாம்
சொல்ல நினைக்கின்றோமோ அவற்றையெல்லாம் இப்பாடல் வழியாகப் பெற்றுக்கொள்கிறோம். அவர்
எளியவர்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்வது, அவருடைய விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணிப்பது, எல்லாவற்றிற்கும்
மேலாக உலக முழுமைக்கும், ஒரு நம்பிக்கை ஊட்டுவது என்கின்ற நிலையிலே அவர் இருக்கிறார். இதில் ‘என் ஆன்மா’ பாடலும், ‘நம் வாழ்வு’ பணியும் ஒத்திருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
இந்த
‘என் ஆன்மா’ பாடல் இரண்டு பெண்களின் உரையாடலின் பின்னணியில் நடைபெறுகின்றது.
இரண்டு பேரும் இறையருளைப் பெற்றவர்கள், இறையனுபவத்தைப் பெற்றவர்கள். ஆனால், அதே நேரத்தில் அவர்கள் மற்றவர்களோடு தங்களின் வாழ்வை மிகவும் வெளிப்படையாகப் பெருமையாகப் பகிர்ந்துகொள்ள முடியாதவர்கள். ‘நம் வாழ்வு’ இப்படிப்பட்டவர்களை இணைக்கின்ற
ஒரு பாலமாக அமைகிறது. அதாவது, இறையருளைப் பெற்றவர்கள், இறையனுபவத்தைப் பெற்றவர்கள், ஒரு வகையில் சமுதாயத்தால் ஏற்கப்படாதவர்கள், அப்படிப்பட்டவர்கள் இங்கே வந்து அவர்களுடைய கருத்துகளை எல்லாம் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்கின்ற மேடையாக இந்த ‘நம் வாழ்வு’ அமைகிறது.
அவர்கள்
பேசும்போது என்ன நடக்கிறது? இந்த அம்மையார்களின் சிறப்பு என்னவென்றால், இருவரும் தன்னலமற்றவர்கள். ‘தான்’ என்ற உணர்வு சிறிதும் இல்லாதவர்கள். இப்போது அன்னை மரியா ஆண்டவருடைய தாயார்; அவரின் வயிற்றில் இருக்கின்ற கருவினால் மிக மிக உயர்ந்த நிலைக்குப் போய்விட்டார். ஆண்டவருக்கு அடுத்தபடியாக இந்த உலகத்தில் இன்று வழிபாட்டுத்தலங்கள் அவருக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன.
அம்மையார் நினைத்திருக்கலாம், “நான் எதற்கு
யோவானின் தாயாரைப் பார்க்க வேண்டும்? She is less them my Lord; அல்லது
எலிசபெத்து நினைத்திருக்கலாம், “அன்னை மரியா ஒரு சாதாரண எளிய ஏழைப்பெண்; நான் ஓர் ஆசாரியரின் மனைவி; சமுதாயத்திலே உயர்ந்த நிலையிலே இருக்கிறவள்; வயதிலே மூத்தவள்; நான்
எப்படி இவரை மனதாரப் பாராட்டுவது?” ஆனால், இந்த இரண்டு பேருமே, ‘தான்’ என்ற உணர்வு அற்றவர்களாக மற்றவர்களைப் பாராட்டுகிறார்கள்.
இது இருவரும் பாராட்டுகின்ற வாழ்த்துச் செய்தியாக இங்கே வருகிறது. They Speak and they empower others to speak. They Speak and they enable each others to praise. I think this is the task of Nam
Vazhvu. Helping people to speak through
their writings, which will create more people to
write in order that they will
also be empowered in their own
personality and commitment
for Christ’s service.
இந்தப்
பாடல் பெண்களுடைய ஆற்றலை அங்கீகரித்து அதைப் பாராட்டுகின்ற பாடல். அந்தக் காலத்துப் பெண்களுடைய நிலைமையை உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. அதுவும் இப்படிப்பட்ட பெண்களைப் பற்றி விளக்கவே தேவையில்லை.
ஆனால், ஆண்டவர் இப்படிப்பட்ட பெண்களைத் தம்முடைய மீட்பின் பணியில் இணைத்துக் கொள்கிறார். அவர்கள்தாம் இறைவனுடைய மீட்பின் பங்காளிகள். இயேசுவினுடைய தொடக்கத்தில் அவர்கள்தான் கானாவிலே மீட்புப் பணியினைத் தொடங்கி வைக்கிறார்கள். இப்படியாக இவர்கள் இருவரும் தங்களை இந்த மீட்புப் பணியிலே இணைத்துக் கொள்கிறார்கள். நம்முடைய சமுதாயம் இன்றைக்கு மறுமலர்ச்சி பெறவேண்டுமானால் அவர்களுடைய இப்படிப்பட்ட பங்களிப்புகள் இப்போது மிக மிகத் தேவை. ஆண்களுடைய வாழ்வும் இதயமும் பெண்களுடைய கரங்களிலேதான் உள்ளது, அது தாயாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம். அவர்களுடைய கரத்திலேதான் ஆண்களுடைய வாழ்வு அமைந்திருக்கிறது. ஆகவே, யாரெல்லாம் சாதாரணமானவர்கள் என்று எண்ணுகின்றோமோ, அவர்கள் இறைவனின் மீட்பின் பங்காளிகள் என்பதை உறுதிப்படுத்துவது இந்த ‘நம் வாழ்வு’ இதழினுடைய மிக முக்கியக் கடமையாக நான் கருதுகிறேன்.
தனிப்பட்ட
அனுபவம், திருச்சபை அனுபவம் என நீண்டு இது
உலக அனுபவ மீட்பின் அனுபவமாக இது பரிணாமம் எடுக்கிறது. இந்த ‘நம் வாழ்வு’ இதழில் அதனை நான் அதிகம் பார்த்தேன். இது தனி கிறித்தவ அனுபவத்தை விளக்குகின்றது. திரு அவையினுடைய வாழ்வையும் இது பிரதிபலிக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, முழு மனுகுலத்திற்குமான மீட்பையும் எடுத்தியம்புகிறது.
இறுதியாக, Transformation - from humiliation to exalt. அதாவது, தாழ்மையானவர்களை உயர்த்துவது; பசியுள்ளவர்களை நன்மைகளால் நிரப்புவது. எப்படி நம்மால் செய்ய முடியும்? என்றால், நம்முடைய எழுத்தின் வழியாக இப்படிப்பட்ட பெரிய காரியங்களைச் செய்ய முடியும். கத்தோலிக்கத் திரு அவையிலிருந்து புரோட்டஸ்டன்ட் திரு அவையின் வரலாறு மிக முக்கியமான அடிக்கல் வைத்ததற்கான காரணம் என்னவென்றால், திருமறை மொழிபெயர்ப்பு. அதில் கத்தோலிக்க மிஷனரிகள் முன்னால் வந்திருந்தாலும், முதலாவது தமிழ்மொழியில் மொழிபெயர்த்தவர் சீகன் பால்க் என்பவர். ஏன் அவர்கள் மொழிபெயர்த்தார்கள் என்றால், அந்தக் காலத்தில் பிளவுபட்ட சமூதாயத்தில் சாதியத்தின் அடிப்படையில் எல்லாரும் எங்கும் போக முடியாது. ஆனால், எழுதப்பட்ட நூல்கள் எல்லா இடத்திற்கும் செல்ல முடியும். எல்லாருடைய வாழ்விலும் இந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்படிப் போகும் போது அங்கே மகிழ்ச்சி பெருகுகிறது. இந்த மகிழ்ச்சியினுடைய அடையாளம் என்னவென்றால் புகழ் பாடல்கள் அங்கே எழும்புகின்றன.
நம்முடைய
‘நம் வாழ்வு’ மக்களிடையே மகிழ்ச்சியைப் பரப்புகின்ற ஒன்றாக இருக்கிறது. இதோ அனைத்து மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றதும் இடையர்கள் துதிக்கத் தொடங்கினர். அவ்வாறே, அந்த மகிழ்ச்சி வரும்போது நாம் துதிக்க ஆரம்பித்து விடுவோம். புகழ் பாட ஆரம்பித்துவிடுவோம். அதேபோல ‘நம் வாழ்வு’ இதழ் எழுத்துகள் வழியாக மக்களுக்கு மகிழ்ச்சியைத் தற்போது கொடுக்கிறது.
கடந்த
ஐம்பது ஆண்டுகளாக நல்ல பணிகளைச் செய்து வருகின்ற ‘நம் வாழ்வு’ தொடர்ந்து மிக மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வாழ்கின்ற,
வளர்கின்ற, வாழ்வு ஊட்டுகின்ற ‘என் ஆன்மா’ பாடலாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒரு நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது அந்த நாட்டு மக்களின் வரலாற்றையும், எதிர்காலத்தை நோக்கியக் குறிக்கோள்களை மையமாக வைத்தும் உருவாக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் உள்ளடக்கியதாகும். நம்முடைய இந்திய அரசமைப்புச் சட்டமும், நம் நாட்டு மக்கள் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் சட்டங்களையும் கொண்டுள்ளது என்ற சிறப்பைப் பெற்றது.
இத்தனை
புகழ் மிகுந்த நம்முடைய அரசமைப்பை மாற்றுவதற்கான பல முயற்சிகளைத் தற்போதைய
ஒன்றிய அரசு சில ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்கின்றது. ஆனால். சனநாயகத்தை வலியுறுத்தும் அனைவரும் இதை மிகவும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஏனெனில், தற்போது நம்மிடத்தில் உள்ள அரசியலமைப்புச்
சட்டம் அனைத்துச் சாராருக்கான உரிமைகளை உள்ளடக்கிய கூறுகளையும் தன்னகத்தில் கொண்டுள்ளதாகப் பெரும்பான்மை மக்கள் நம்புகின்றனர். அத்துடன், அரசமைப்பை முழுமையாக மாற்றுவது என்பது நாட்டில் எண்ணற்றக் குழப்பங்களை ஏற்படுத்தும் என்ற அச்சமும் நம்மைச் சூழ்கின்றது.
இதுவரை
நம்முடைய அரசமைப்புச் சட்டம் 106 முறை திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதனுடைய அடிப்படை அமைப்பானது மாற்றத்திற்குரியது அல்ல என்று 1973-இல் கெசவனாந்த பாரதிக்கும் கேரள அரசுக்கும் நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற நம் அரசமைப்பு உருவான விதத்தையும் அதன் சாராம்சங்களையும் அறிந்து கொள்வதே அதைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.
பிரித்தானிய
ஆதிக்கத்தின் பிடியிலிருந்து ஆகஸ்டு 15, 1947-இல் விடுதலை பெற்ற இந்தியாவிற்கென்று தனித்த அதிகாரம் பெற்ற அரசமைப்புச் சட்டம் என்றும் எதுவும் இல்லை. பிரித்தானிய ஆட்சிக் கலத்தில் பின்பற்றப்பட்ட சட்டங்களை அடிப்படையாக வைத்து, இந்திய அரசமைப்பை உருவாக்குவதற்காகத் தற்போதைய பாராளுமன்றம் போல், பல்வேறு இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
389 பிரதிநிதிகள் அடங்கிய அரசமைப்புச் சபையானது கூட்டப்பட்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகிய டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள், அரசமைப்பு அமைப்பு சபையின் தலைவராகவும், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகவும் இந்தியாவின் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். அச்சமயத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் பிரதமராகவும், சர்தார் வல்லபாய் பட்டேல் துணைப் பிரதமராகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர்
26, 1949 - இல் அரசமைப்புக் குழுவால் இந்திய அரசமைப்புச் சட்டமானது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 -இல் நடைமுறைக்கு வந்தது. அந்நாளை நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு இந்தியத் தாய்த் திருநாடானது தன்னுடைய 76-வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. இவ்வுலகிலேயே மிக நீளமான அரசமைப்பைக் கொண்ட நம் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் அனைத்துக்
கூறுகளும் இந்திய அரசமைப்பின் முகவுரையில் மிகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி என்.ஏ. பால்கிவாலா அவர்கள்
முகவுரையை அரசமைப்புச் சட்டத்தின் அடையாள அட்டை என்று வர்ணிக்கின்றார். இந்திய அரசமைப்பின் சட்டத்தையும், அதை உருவாக்கியவர்களின் மனத்தையும் அதனுடைய முகவுரையின் வெளிச்சத்துடன் அணுகும் போது, அதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, அரசமைப்பின் முகவுரையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.
“இந்திய மக்களாகிய நாம்” என்ற சொல்லாடலுடன் தொடங்கும் முகவுரை மக்களாட்சி சார்ந்த இறையாண்மையைத் தெளிவாக ஏற்கின்றது. இந்திய அரசின் அதிகாரம் அனைத்தும் மக்களிடமிருந்து பிறக்கின்றது. இதை மையப்படுத்தும் விதமாக, “அரசமைப்பு அதன் வேர்களை, அதிகாரத்தை, இறையாண்மையை மக்களிடமிருந்து பெற வேண்டும்”
என்று டாக்டர் அம்பேத்கர் கூறுகின்றார். எனவே, நம்முடைய அரசமைப்புச் சட்டம் மக்களை முன்னிறுத்துகின்றது என்பதை இவ்வார்த்தைகள் தெளிவாக விளக்குகின்றன.
இதையடுத்து
வரும் இறையாண்மை, சமநலச் சமுதாயம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி மற்றும் குடியரசு ஆகிய வார்த்தைகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களும் அடக்கப்பட்டு விட்டன. இதில் சமநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட பொழுது முகவுரையில் இடம்பெறவில்லை. 1976-இல் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தில் இவ்விரு வார்த்தைகளும் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
இந்தியா
இறையாண்மை (Sovereign) கொண்ட
நாடு, இதன் ஆட்சி அதிகாரம் எந்த ஒரு வெளிநாட்டிடமிருந்தோ, அமைப்பிலிருந்தோ தரப்படுவதில்லை. விடுதலைக்கு முன்பு பிரிட்டானிய முடியின் பிரதிநிதியாக இந்தியாவில் வைஸ்ராய்கள் இருந்தார்கள். ஆனால், தற்போது இந்தியாவில் வைஸ்ராய் என்ற பதவியே கிடையாது. இந்த இடத்தை மக்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் குடியரசுத் தலைவர் நிரப்புகின்றார். இவர் இந்தியாவின் முதல் குடிமகனாக மக்களைப் பிரதிபலிக்கின்றார். நாட்டின் இத்தனை உயர் மதிப்பு கொண்ட குடியரசுத் தலைவரை அழைக்காமல், நம்முடைய தற்போதைய நாடாளுமன்றக் கட்டடம் மே, 28 2024-இல் திறக்கப்பட்டது. இது இந்தியாவின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய செயல் என்றுதான் கருதப்பட வேண்டும்.
1976-இல் 42-வது
திருத்தச் சட்டத்தின் மூலம் சமநலச் சமுதாயம் (Socialist) என்ற
சொல் அரசமைப்பில் சேர்க்கப்படும் முன்பே, அரசின் இயக்கநெறிக் கோட்பாடுகள் வழியாக அரசமைப்பில் சமத்துவக் கொள்கை நிலவியது. அதுவரை மறைமுகமாக இருந்த கருத்துகள், தற்போது வெளிப்படையாகவும் சட்டப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும்
சரிநிகர் வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு நம் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்டது. இந்தியா சனநாயக சமத்துவ முறையைப் பின்பற்றுகின்றது. இந்தியாவின் சமத்துவக் கொள்கை பொதுவுடைமை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றைச் சம அளவீட்டில் கொண்ட
கலவையான பொருளாதாரத்தைக் கொண்டது. இந்தியாவின் வளங்கள் மற்றும் இன்ன பிற முக்கியமான துறைகளை அரசு தன் கையில் வைத்திருக்கும், மற்ற துறைகள் தனியாரின் வசம் இருக்கும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அரசுத் துறை நிர்வாகத்தில் வளர்ச்சி இல்லை என்று கூறி, அரசின் முக்கியத் துறைகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. இந்திய மக்கள் போக்குவரத்திற்கு அதிகம் பயன்படுத்தும் இரயில்வே துறையிலும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிட்டன. இந்தத் துரிதமான தனியார்மயமாக்கல், இந்தியாவைச் சமவுடைமைத் தத்துவத்திலிருந்து நகர்த்தி முழுமையான முதலாளித்துவத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் அபாயம் உள்ளது.
இந்திய
சனநாயகச் சமத்துவத்தின் முக்கிய நோக்கம் ஏழ்மை, அறியாமை, நோய் மற்றும் சமவாய்ப்புக்கு எதிராக எழும் சிக்கல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். இதைத்தான் நம் அரசமைப்பின் ஆசான்கள் நாம் பயணிக்க வேண்டிய பாதையாகக் காட்டுகின்றார்கள்.
இந்தியா
ஒரு சமயச்சார்பற்ற நாடு. இந்தக் கருத்தை தற்போது மத்தியில் ஆளும் அரசின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் முழுமையாக ஏற்க மறுக்கின்றனர். 2015-இல் மத்திய செய்தி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சமூகநலச் சமுதாயம் மற்றும் சமயச்சார்பின்மை ஆகிய வார்த்தைகள் தவிர்க்கப்பட்டன. சிறுபான்மை மக்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவின் அரசியல் ஆட்சிமுறை எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதியாக இருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், அரசமைப்பில் சுதந்திரம் குறித்த அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் 25 முதல் 28-ஆம் கட்டுரைகளை நம்முடைய அரசமைப்பின் பிதாக்கள் இடம்பெறச் செய்தனர். இது இன்றைய பொழுதில் நம் நாட்டின் சமயச் சார்பின்மையைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றது.
இந்திய
அரசின் முடிவுகள் எந்த ஒரு மதத்தைச் சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது. ஆனால், ஆளும் பா.ச.க.வின் ஆட்சியில் இது நடைமுறையில் உள்ளதா? என்றால், அது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது.
மேலும்,
இந்தியா ஒரு சனநாயகக் குடியரசு நாடாகும். நம் நாடு பாராளுமன்ற சனநாயகத்தைப் பின்பற்றுகின்றது. சனநாயகம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் நம்முன் வந்து நிற்பது ‘மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி’ என்ற ஆபிரகாம் லிங்கனின் வார்த்தைகள்தாம். பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதனால்தான் நம் நாட்டில் தேர்தலானது அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றது.
மத்தியில்
பாராளுமன்றமும், மாநிலத்தில் சட்டமன்றமும் அரசின் கொள்கைகளை வடிவமைக்கின்றன. எனவே, இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவம் நிலவுகின்றது. இருப்பினும், இன்றுவரை அது முழு வடிவை எட்டவில்லை. நம்முடைய கூட்டாட்சித் தத்துவம் அமெரிக்காவின் மாகாணக் கூட்டாட்சியைப் போலல்லாமல், சற்று சிக்கல் நிறைந்தது. இந்தக் கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாக வேரறுக்கவும், மக்களின் சிந்தனைகளை மாநிலத்தை விடுத்து மத்தியை நோக்கித் திருப்பவும் ‘ஒரே நாடு! ஒரே தேர்தல்!’ என்ற திட்டத்தை நம்முடைய ஆளும் அரசு கொண்டு வந்துள்ளது. இது நமது நாட்டின் சனநாயகப் பண்புகளையும் அதன் இயல்புகளையும் மட்டுப்படுத்துகின்றது.
நம்முடைய
அரசமைப்பு ஆசான்கள் சமத்துவம், நீதி பரவலாக்கல், தனிமனித உரிமைகள், வழிபாட்டு உரிமைகள் ஆகியவற்றை நிலைநிறுத்துவதை மையமாகக் கொண்டு நம்முடைய அரசமைப்பை வடிவமைத்தனர். ஆனால், நம்முடைய ஆளும் அரசு அந்த அரசியலமைப்பின் அம்சங்களுக்குத் தொடர்ந்து ஊறு விளைவிக்கிறது. இறுதியாக, நம் அரசமைப்பையே மாற்ற எத்தனித்து விட்டது. எனவே, நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது.
நம்முடைய
வாக்குரிமை நமக்குத் தேர்தலின் போது மட்டும்தான்; ஆனால், நம்முடைய அரசமைப்பு அனுதினமும் நமது உரிமைகளைக் காத்திட நமக்குத் துணை நிற்கின்றது. அம்பேத்கரின் வார்த்தைகளின்படி அரசமைப்பைக் கற்று, அதைப் பிறருக்குக் கற்பித்து, அரசமைப்பையும், நம்முடைய உரிமைகளையும் காப்பதற்கு ஓரணியில் திரள்வோம்! வளமான சமதர்ம, சமயச் சார்பற்ற சனநாயகத்தைக் கட்டி எழுப்புவோம்!
இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய ஆதிக்கச் சக்தியால் அடிமைச் சக்கரத்தில் சுழன்ற இந்தியா, பலரது அகிம்சைவழித் தொடர் போராட்டங்கள், எதிர்ப்புகள் வழியாக 1947, ஆகஸ்டு 15-ஆம் நாள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது. மக்களே தங்கள் நாட்டை ஆளப்போகிறவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றது - தன்னாட்சி நிலையை அடைந்தது. அப்பொழுது சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளுக்கிடையேயும், நல்லுள்ளம் கொண்டோர் மனத்திலும் எழுந்த கேள்விகள் பற்பல. யார் இந்த நாட்டை ஆள்வது? அவர்களை எப்படித் தேர்வு செய்வது? அவர்களுக்குரிய அதிகாரங்கள், கடமைகள் என்னென்ன? மக்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவுகள், உரிமைகள், கடமைகள் என்ன? இந்திய மக்களிடையே நிலவும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, சமத்துவத் தன்மையை எப்படி நிலைநாட்டுவது? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? அவர்களை எவ்விதப் பாகுபாடுமின்றி பாதுகாப்பது எப்படி?
இதுபோன்ற
பல கேள்விகளுக்குப் பதிலாக உதயமானதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆவண நூலாகும். இது உலகிலேயே நீண்டு எழுதப்பட்ட சட்ட ஆவணமாகும். இது 22 பகுதிகளையும் 395 பிரிவுகளையும் உள்ளடக்கியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின்
வார்த்தையில் கூற வேண்டுமென்றால், “இது வெறும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமல்ல; மாறாக, ஒரு யுகத்தின் உணர்வையே உள்ளடக்கிய வாழ்க்கை வழிகாட்டியாகும்.”
இது
இந்திய அரசியலுக்கு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது. உலகில் வேறு எந்த ஓர் அரசியலமைப்பும் தராத பொதுநலன் மற்றும் சமூகச் சீரமைப்பிற்கான முக்கியத்துவத்தை இது தந்திருக்கிறது என்றால், இது எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பதை ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது
‘இந்தியாவின் ஆன்மா’ என்று அழைக்கப்படுகிறது. இது சட்டத்தின் ஆட்சியின் முறைப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்று
வலியுறுத்துகிறது. இந்தியாவின் முதல் குடிமகனாக/மகளாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரும், நாட்டின் பிரதமரும், மற்ற எல்லா அதிகாரத்திற்குள்ளவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கீழ்தான் வருகிறார்கள்; அதற்கு மேல் அல்ல. இதுதான் இந்திய நாட்டின் குடியாட்சி முறைக்கு முதுகெலும்பாகும். இது முறிக்கப்பட்டால், மாற்றப்பட்டால் நாடு சிதறும்.
இது
300-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினரைச் சரிசமமாக உள்ளடக்கிய இந்திய அரசியல் சாசன உருவாக்கக் குழுவின், அயராத மூன்று ஆண்டுகள் கடின உழைப்பால், சனநாயக முறையில் கலந்துரையாடல் செய்து, வாக்குவாதம், வாக்கெடுப்பு நடத்தி, ஒப்புதல் பெற்று உருவாக்கப்பட்ட ஆவணம். இது முறைப்படி ஆழ்ந்து சிந்தித்து, அர்ப்பணிப்புணர்வுடன் உருவாக்கப்பட்ட ஆவணம். இக்குழுவின் அச்சாணியாகச் செயல்பட்டவர் டாக்டர். அம்பேத்கர் அவர்கள். இன்று அவரை அவமானப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமானப்படுத்துவதற்குச் சமம். இது 1949, நவம்பர் 26-ஆம் நாள் உருவாக்கப்பட்டு, 1950, சனவரி 24-ஆம் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, 1950, சனவரி 26-ஆம் நாள் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளைத்தான் நாம் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
2025, சனவரி 26, 75-வது
குடியரசு தினமாகும். அப்படியென்றால், இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினமாகும்.
இந்திய
மக்களாகிய நமக்கு இந்த ஆவணம் பற்றிய போதிய அடிப்படை அறிவு இருக்கிறதா? இது தருகின்ற சனநாயக விழுமியங்கள் சாமானியர்கள், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடி மக்களைச் சென்றிருக்கிறதா என்றால்... சென்றடையவில்லை என்பதுதான் சற்றுக் கடினமான உண்மை நிலையாகும். இதனைத் தெரிந்துகொள்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இந்திய
அரசியலமைப்பின் ஆன்மாவாக / மையமாகத் திகழ்வது அதன் முகவுரையாகும். இதுதான் இந்தியா எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்? எப்படிப் பயணிக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறது. இப்பயணத்தில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் கனவான இறையாண்மை, சனநாயகம், குடியாட்சி, சோசலிசம், சமயச்சார்பின்மை மதிப்புகளை உள்வாங்கி சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவக் கோட்பாடுகளை வாழ்வாக்க வேண்டுமென அழைக்கிறது. இக்கட்டுரையின் மூலம் குடியாட்சி என்றால் என்ன? அது எப்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது? இவை பற்றிய சில அரசியல் சிந்தனைத் துளிகளை வழங்க முயற்சிக்கிறேன்.
அரசியல் சாசனம்
என்றால்
என்ன?
ஓர்
அமைப்பு அரசு நிறுவப்பட வேண்டிய முறைகளைப் பற்றியும், அதன் அதிகாரங்களைப் பற்றியும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும், அரசுக்கும் குடிமக்களுக்குமுள்ள உறவுகள் மற்றும் இணைந்த செயல்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறும் சட்டம் மற்றும் வழிகாட்டும் நெறிமுறை ஆவணமாகும். இதுதான் அந்நாட்டில் உருவாக்கப்படும் மற்ற சட்டங்களுக்கெல்லாம் அடித்தளமாகவும் மையமாகவும் அமைகிறது.
அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறான சட்டத்தை இயற்ற முடியாது. இயற்றினாலும் சட்டமாகாது. இதைக் கண்காணிக்க வேண்டிய தலையாயப் பொறுப்பு நீதிமன்றத்திற்கும் குடிமக்களுக்கும் உள்ளது. அரசு சமயத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அதன்படி செயல்பட்டால் அதனை நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கும் நீதிமன்றத்திற்கும் உண்டு.
(தொடரும்)