news
சிறப்புக்கட்டுரை
வலையும் வாழ்வும் (புதிய தொடர் - 01)

உழவும் உழைப்பும் வாழ்வின் அச்சாணிஎன்று நினைத்திருந்தபோது திடீரென்று உருவான சகாரா பாலைவனப் பெரு வெள்ளம் போல வலைதளமும் சமூக ஊடகமும் குறைந்த கால கட்டத்திலேயே நமது அன்றாட வாழ்வினை முழுவதும் ஆக்கிரமித்து விட்டன. இதயமும் இதயத்துடிப்பும் போல நம் வாழ்வியலோடு இரண்டறக் கலந்துவிட்ட எண்ணிம (Digital) உலகைப் பற்றிய  அறிதலும் புரிதலும் இன்று நமக்குத் தேவைப்படுகின்றது.

நம்மில் பலர் எண்ணிம உலகில் குடியேறுபவர்களாக (digital immigrants) அல்லது எண்ணிம உலகின் பிறப்பாளர்களாக (digital natives) இருக்கக்கூடும். இந்த இரண்டு பிரிவினர்களுக்கான தலைமுறை இடைவெளி அல்லது உறவுச்சிக்கல்களுக்குத் தீர்வு வேண்டுமெனில், எண்ணிமத் தொழில் நுட்பத்தினையும், அதன் தன்மையையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘வலையும் வாழ்வும்என்னும் இத்தொடர் மூலம் எண்ணிம உலகின் மொழியினை நாம் தெரிந்துகொள்ள உதவுவதோடு, அதன் ஆழத்தையும் அகலத்தையும் ஆபத்தையும் அபத்தத்தையும் காட்சிப்படுத்தும் நிலைக்கண்ணாடியாக விளங்க வருகிறது இத்தொடர். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்...

1. வாட்ஸ் அப் யூனிவர்சிட்டி

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு நண்பர்களோடு சென்றிருந்தேன். வளாகமே வண்ண விளக்குகளாலும் பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கண்டிருந்தது. சிலர் அங்கு அமைக்கப்பட்டிருக்கின்ற பேச்சாளர் அரங்கிலே அமர்ந்து, அந்நாளுக்கான பேச்சை ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தனர். அறியாததை அறிந்துகொள்வதிலும் புரியாததைப் புரிந்துகொள்வதிலும் எப்போதுமே மனிதர்களுக்குத் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இருப்பினும், ஒருசிலர் நண்பர் கூட்டமாய்க் கூடிசெல்பிஎடுத்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல ஒவ்வொரு புத்தக அரங்கிலும் சிறார்-பெரியோர் எனப் பெருங்கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதில் சிலர் குளத்து நீரில் பட்டும் படாமலும் தொட்டுச் செல்லும் தட்டானைப் போல புதிய புத்தகத்தின் மணத்தை மட்டும் நுகர்ந்து ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல் வீடு திரும்பியதையும் காண முடிந்தது. பிளாஸ்டிக் டப்பாக்களைச் சேகரித்துவிட்டு, ஒன்றையும் பயன்படுத்தாமல் சுமந்து செல்லும் சாலையோர மனநலம் குன்றிய மனிதரைப் போல பேரார்வத்தில் வாங்கப்பட்ட புத்தகங்கள் பல வாசிக்கப்படாமலேயே வீட்டில் அட்டைப் பெட்டிக்குள் அடைக்காத்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது? கோடைகாலத்திலே காட்டு யானைகள் நீரோடைகளைத் தேடி அலைவது போல அறிவு அரங்குகள், கருத்துரைகள், விவாத மேடைகள், புத்தகப் பகிர்வுகள், தத்துவ தர்க்கங்கள், நல்ல புத்தகங்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றை நாடித் தேடுகின்ற ஆர்வம் இந்த டிஜிட்டல் மனிதர்களிடம் இல்லை

1980 முதல் 1994 -க்குள் பிறந்தவர்களை Gen Yஎன்றும், 1995-லிருந்து 2009-க்குள் பிறந்தவர்களைGen Zயினர் என்றும், 2010 முதல் 2024-க்குள் பிறந்தவர்களைGen Alphaஎன்றும், இனிமேல் பிறக்கின்ற தலைமுறையினரை Gen Betaஎன்றும், ‘டிஜிட்டல் சமூகம்அழைக்கின்றது. மனித வாழ்வில் சமூக ஊடகங்களின் ஊடுருவல்களுக்குப் பிறகு குறிப்பாகGen Y, ‘Gen Zமற்றும்Gen Alphaதலைமுறைகளைச் சார்ந்த பெரும்பான்மையினர் ஆழப் படிப்பதிலும், அகல அறிவதிலும் ஆர்வம் இல்லாதிருக்கின்றனர். மழைக்காலத்தில் ரீங்கரிக்கும் புற்றீசல்கள் உதிர்த்துச் செல்லும் ஒன்றுக்கும் பயன்படாத சிறகுகளைப் புத்தகங் களில் சேகரித்து வைப்பது போல, சமூக ஊடகங் களில் பகிரப்படும் மேம்போக்கான பொழுதுபோக்கு வீடியோக்களையும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நுகர்வதிலே அதிக ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இத்தலைமுறையினரைவாட்ஸ் அப் யூனிவர்சிட்டி மாணவர்கள்என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ்என்னும் அமைப்பு 2024-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாகபிரைன் ராட் (Brain rot) என்று அறிவித்தது. இந்த வார்த்தை அறிவிக்கப்பட்டதிலிருந்தே பேட்டரியில் ஓடும் கார் பொம்மையை ஓரிரு நாளில் உடைத்துப் பார்த்து, உள்ளே என்ன இருக்கின்றது என்று பார்க்கும் குழந்தையின் ஆர்வத்தைப்போலபிரைன் ராட் (Brain rot) என்னும் இந்த வார்த்தைக்குள் அப்படி என்ன இருக்கின்றது என்ற தேடலும் இணையத்தில் அதிகமானது. அப்படி ஆர்வம் கொண்டு தேடலில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன். ‘பிரைன் ராட் (Brain rot) என்பது அதீத மேம்போக்கான இணைய நுகர்வினால் ஏற்படும் மன நலச்சிதைவு அல்லது அறிவாற்றலை வற்றிப்போகச் செய்யும் நிலை என்று சொல்லலாம். எல்லாரும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறோம்; தனக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை எப்படி அறிந்துகொள்வது? ஒன்றும் பிரச்சினை இல்லை. அதற்கான சில வழிமுறைகள் இருக்கின்றன. காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போதும் நீங்கள் தூங்குவதற்கு முன்பாக உங்கள் இன்டர்கிராமில் பூனை பாடுவதிலிருந்து, பாப் பாடகர் நாலுகாலில் நடப்பது வரையிலான ஏராளமான ரீல்ஸ்களை அதிகாலை 2 மணி வரை பார்ப்பவர்களா நீங்கள்? காலை 6 மணிக்கு ஸ்மார்ட் போன் மூஞ்சியில் விழித்த பின்பும் அதிகமான நேரங்களில் கைக்குப் பதினொன்றாம் விரலாக உங்கள் செல்போன் உள்ளதா? புத்தகத்தில் வாசித்த ஒரு பத்தி கூட நினைவில் இல்லாமல், எதையுமே நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மூளை மந்த நிலையில் இருப்பதை உணர்கின்றீர்களா? இணையத்தில் உலாவுகின்றீர்கள். ஆயினும், எதுவும் உருப்படியாகக் கற்றதாக இல்லை. நுனிப்புல் மேய்ந்ததாகவே இருக்கின்றது என்று உணர்கின்றீர்களா? நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டி அடுப்படிக்குச் செல்போனைப் பார்த்துக்கொண்டே வருகின்றீர்கள், வந்த பிறகுஎதற்கு அடுப்படிக்கு வந்தோம்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்கின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்குபிரைன் ராட் (Brain rot) அறிகுறி இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.

இரவானால் விட்டில்பூச்சிக்கு அதன் பின்பகுதியில் ஒளி அரும்புவதைப்போல இன்றைய மனிதர்களின் முகம் எப்போதும் ஸ்மார்ட்போன் ஒளிபட்டு சுவாலித்துக்கொண்டே இருக்கின்றது. இரவில் அந்த முகங்களில் பல வண்ண ஒளிக்காட்சிகளைச் சற்று கூர்ந்து நோக்கினால் இலவசமாகவே காணலாம்.

பிரைன் ராட்டிலிருந்து (Brain rot) எப்படி வெளி வருவது? முதலிலே வெளிவருவதற்கான ஆர்வம் இருக்க வேண்டும். ‘தாவரக்குடுவைஎன்னும் வகை தாவரங்கள் பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டது. பூச்சிகளுக்குத் தேனாசைக் காட்டி அருகில் வரச்செய்து கொன்று விழுங்கும். அதேபோன்று ஸ்மார்ட் போனும் ஆசைக்காட்டி மனிதனின் உயரிய சிந்திக்கின்ற தன்மையைச் சிதைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தப் பேராபத்திலிருந்து விடுபட சில வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது சுமார்ட் போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது அல்லது தேவைக்கு மட்டும் பயன்படுத்துவது. இதனைடிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detox) என்று சொல்கிறார்கள். புத்தகங்களை வாசிப்பது, மூளைக்கு வேலை கொடுக்கும் புத்துணர்வுப் புதிர்களில் (Puzzles) பங்கேற்பது, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசுவது, தோட்ட வேலை மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, சரியான உணவு, சீரான தூக்கம் பிரைன் ராட்டிலிருந்து நமக்கு விடுதலை தரும் என்பது உறுதி.

மனிதனின் தனித்துவமே சிந்திக்கின்ற ஆற்றல்தான். எனவேதான் அவனைஅறிவுஜீவி (Rational Being) என்கின்றோம். இந்தச் சிந்திக்கின்ற ஆற்றலை இழந்துவிட்டோமெனில், மனிதனுக்கான முக்கிய அடையாளத்தையே நாம் இழந்துவிட்டோம் என்றாகிவிடும்.

சமூக ஊடகம் நுனிப்புல் மேய்ச்சல் அல்ல; மாறாக, வாழ்க்கையிலிருந்தும் வாய்ப்புகளிலிருந்தும் அதிகமாகக் கற்றல், ஆழக் கற்றல், அகலக் கற்றல் மட்டுமே நம் சிந்தனையைத் தீட்டும் சாணைக்கல் ஆகும்.

சிந்திக்கின்ற ஆற்றலை இழப்பதில் அல்ல; சிந்திக்கின்ற ஆற்றலைக் கடப்பதில் இருக்கின்றது மனித ஞானம்!

news
சிறப்புக்கட்டுரை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த மனித வாழ்வில்அடுத்து என்ன நடக்கும்?’ என்ற புதிரும், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்ற வழியும் வாழ்வைச் சுவாரசியம் நிறைந்ததாக மாற்றுகின்றன. குழந்தையாய் பிறந்து, மழலையாய் தவழ்ந்து, இளமையில் நிமிர்ந்து, முதுமையில் நாணலாய் வளையும் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்தால் நலமாயிருக்கும் என்ற பட்டியலை நிச்சயம் வைத்திருப்பார்கள்.

எனக்கு எந்த ஆசையும் இல்லை, நான் எதையும் எதிர்பார்ப்பது இல்லைஎன்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில், எதன் மீதும் பற்றில்லாத புத்தர் கூடபற்றில்லாமையில் பற்றுக் கொண்டிருந்தார்என்று கூறுவார்கள். மனிதன் பிறக்கும் நொடியில் அவனோடு பிறக்கும் அவனுடைய தேவைகள் வாழ்க்கை முழுவதும் அவனை இயங்க வைக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் விருப்பமும் ஒருவரையொருவர் பொறுத்து மாறுபடலாம்; ஆனால், அனைவருக்கும் விருப்பம் இருக்கும் என்ற உண்மை ஒருபோதும் மாறுபடாது. ஏனெனில், தேவைகளே மனித குல வளர்ச்சிக்கு அடிப்படை. இதைத்தான் ஆங்கிலத்தில்necesscity is the mother of inventionஎன்பார்கள். இதை மையமாக வைத்துச் சிந்திக்கும் பொழுது, மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் வாழ்க்கையா? என்று தோன்றும். உண்மையில் மனிதன் வாழ்வதற்கான காரணத்தை அவனுடைய தேவைகளும் ஆசைகளுமே அளிக்கின்றன.

நம்முடைய இலட்சியமும், அதை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளில் நாம் அடையும் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் தொகுப்புமே வாழ்க்கையாகும். இலட்சியமில்லாத மனிதர் என இவ்வுலகில் யாரும் இருக்கவே முடியாது. கேலியாகக் கூற வேண்டுமெனில், எதன் மீதும் ஆர்வம் இல்லாத ஒரு மனிதன்கூட சோம்பித்திரிவதை இலட்சியமாகக் கொண்டுள்ளார் என்று கூறலாம். எனவே, இலட்சியமும் அதை மையமாக வைத்து ஏற்படும் ஆசைகளும் விருப்பங்களும் அனைவருக்கும் பொதுவானவை. அதேவேளையில், நம்முடைய தனிப்பட்ட சுய ஒழுக்கமே நம்முடைய இலட்சியத்தை மதிப்புமிக்கதாக மாற்றுகின்றது. நம்முடைய இலட்சியம் எத்தனை உயர்வானதாக இருக்கின்றதோ, அத்தனை மதிப்பை அது நமக்குப் பெற்றுத்தரும். நம்முடைய கனவுகளும் எண்ணங்களும் எப்பொழுதும் நம்மைச் சுற்றி மட்டும் இருக்குமெனில், அதனால் பிறருக்கு என்ன பலன்? சில சமயங்களில் பிறருக்குப் பயனளிக்காத இதுபோன்ற இலட்சியங்கள் பிறருக்கு ஆபத்து அளிக்கவும் நேரிடும். நாம் நமக்காகக் கனவு காணும்பொழுது மனிதனாகின்றோம்; பிறருக்காகச் சிந்திக்கும் பொழுது தலைவனாகின்றோம். எனவே, நமக்கும் நம் சுற்றத்திற்கும் பயன் அளிக்கும் வகையில் வாழ வேண்டும் என முனையும் பொழுது, நம்முடைய இலட்சியம் நலமானதாக இருக்கும்; நம் பாதையும் சிறப்படையும்.

அப்துல் கலாம் விண்வெளி வீரராக ஆசை கொண்ட பொழுது, தன்னுடைய ஆசையைத் தனக்கானதாக மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நம் தேசத்தின் கனவாக அதை தகவமைத்தார். அதன் பலனை நாம் அனைவரும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். நாமும் நம்முடைய தனிப்பட்ட கனவுகளைப் பிறருக்கு உகந்ததாக மாற்றும் பொழுது அளப்பரிய மாற்றங்களை இச்சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றோம்.

இலட்சியம், கனவுகள், விருப்பங்கள், ஆசைகள் என நம்முடைய நிகழ்காலத்தைத் தொட்டுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கும் இந்த வார்த்தைகள் அனைத்தும் ஒரே அர்த்தம் கொண்டவையாகத்  தோன்றினாலும், இவற்றுக்கிடையில் பெரிய வேறுபாடு உள்ளது. கனவுகள் ஒரு மனிதன் தனது வாழ்க்கையை எப்படி உருவாக்க விரும்புகிறான் என்பதைக் குறிக்கும் கற்பனை உலகம். ஆசைகள் என்பது மனத்தின் ஆழ்ந்த உந்துதல். இது மனத்தின் உள்ளார்ந்த தேவைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கின்றன. விருப்பங்கள் ஒருவரின் இப்போதைய தேவைகளையும், மனத்தின் இச்சைகளையும் பிரதிபலிக்கும். இலட்சியம் என்பது தெளிவான ஒரு பயணத்திற்கான இறுதி இடம். இது மனிதன் தனக்காகத் தீர்மானித்த நோக்கத்தைக் குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட நம்முடைய வாழ்வின் நான்கு எதிர்காலப் பாதைகளில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதே நம்மைத் தலைநிமிர்த்துகின்றது.

நாம் நம்முடைய கனவுகள், ஆசைகள் அல்லது விருப்பங்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் அலைந்து நம் வாழ்வைச் சிறுமைப்படுத்துவதும், உயரிய இலட்சியத்தின் மூலம் நம் வாழ்வைப் பெருமைப்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது. நம்முடைய இலட்சியம் உயர்ந்ததாக இருந்ததால், நம்முடைய பாதை தெளிவடையும். நாம் பயணிக்கும் பாதை தெளிவானால், நம்முடைய அன்றாடத் தேவைகள் நடைமுறைக்கு உகந்ததாக இருக்கும்இதன்மூலம் நம்முடைய அன்றாடத் தேவைகளும் எதிர்கால நோக்கமும் ஒன்றிணைந்து, ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவுக்கு வரமுடிகின்றது.

நம் வாழ்வில் நாம் நினைப்பவையெல்லாம் நடக்க, நம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறை நம்முடைய இலட்சியத்திற்கு உறுதுணையாக இல்லாததால்தான் நாம் நினைப்பவையெல்லாம் நம் வாழ்வில் நடைபெறவில்லை. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி, பொருளாதார நிலை மற்றும் சமூக வாழ்வு என அனைத்துத் தளங்களுக்கும் ஏற்றவாறு நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறை மாற வேண்டும். தினமும் குடும்பத்தாருடன் நேரத்தைச் செலவழித்தல், சிக்கனமாகச் செலவு செய்தல், தினமும் படித்தல், நேர மேலாண்மையில் கவனமாக இருத்தல் போன்ற சில தினசரி ஒழுங்குமுறைகளுக்கு நாம் பழகும் போது, நம்முடைய இலட்சியப் பாதையில் எவ்வித இடையூறும் இருக்காது. நம் வாழ்வில் நாம் என்னவெல்லாம் நினைக்கின்றோமோ, அவையெல்லாம் நடக்கும்.

நடைமுறைக்குத் தகுந்தவாறு நம்முடைய உயரிய இலட்சியத்தை நோக்கி நேர்மையுடன் பயணித்து, நம் அன்றாட வாழ்வின் தேவைகளை நம் வாழ்க்கை பயணத்திற்கு ஏற்றார்போல் தகவமைக்கும் பொழுது, நாம் நினைத்தவை எல்லாம் நடக்கும். நாம் நினைக்காதவை நடக்கும் பொழுது அதை எதிர்கொள்ளும் சக்தியும் நம்மிடம் இருக்கும். நம்மை இயக்கும் நம் வாழ்வின் தேவைகளை நாம் இயக்கி, நாம் நினைப்பதையெல்லாம் செய்வோம்! ‘ஆகாயமே எல்லைஎனக் கொண்டு இவ்வுலகை வெல்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
ஒன்றுபட்டால் வெற்றியுண்டு!

மக்கள் இயக்கமாக ஒன்றுபட்டுப் போராடும்போது வெற்றி கிடைக்கும் என்பது அரிட்டாப்பட்டி மக்களின் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராட்ட வெற்றியில் மீண்டும் உண்மையாகியுள்ளது.

நவம்பர் 7, 2024 மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா மேலூர் தெற்குத் தெரு, அரிட்டாப்பட்டி, . வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம்மாங்குளம், நாயக்கர்பட்டி, கொட்டாம்பட்டி, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி மற்றும் கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டமானது டங்ஸ்டன் தாதுக்களில் ஒன்றான சீலைட்டை எடுப்பதாகும். இந்தத் தாதுப்பொருளானது பொதுவாக உயர் வெப்பநிலை, நீர் வெப்ப நரம்புகள் மற்றும் தொடர்பு-உருமாற்றமடையும் அரிட்டாப்பட்டி போன்ற மலையடுக்குகளில் காணப்படுகிறது. இதனால்தான் அரிட்டாப்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான நீர் ஆதாரமாக, பெரியாறு நீர்ப்பாசனமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

டங்ஸ்டன் சுரங்கம் உருவாக இருந்த இடங்கள் அனைத்தும் வளமான விளைநிலங்களாகும். அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பெரியாறு பாசனத்தை நம்பியே உழவுத் தொழில் செய்கின்றனர். இந்த நீர்ப்பாசனம் சுரங்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் விளைநிலங்கள் நீர்ப்பாசனமின்றி தரிசுகளாக மாறியிருக்கும். மேலும், அழகர்கோவில் காப்புக் காடுகள் அழிவது மட்டுமின்றி 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் மூன்று தடுப்பு அணைகள் சுரங்கத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் காட்டு விலங்குகள் அழிவதோடு, அரிட்டாப்பட்டி மலைப்பகுதியில் உள்ள 250 பறவை இனங்கள் காணாது போயிருக்கலாம்.

இவற்றை உணர்ந்த மக்கள் விழித்துக் கொண்டவர்களாகத் தங்களுக்குள்ளிருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக, ஒரே உணர்வுடன் டங்ஸ்டன் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து பலகட்டப் போராட்டங்களைத் தொடர்ந்தனர்.

டங்ஸ்டன் ஏலத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் டிசம்பர் 9 அன்று டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் இரத்து செய்யும் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அரிட்டாப்பட்டியிலுள்ள பல்லுயிர் தலங்களைத் தவிர்த்து மீதி இடங்களில் சுரங்கத்திற்கு மறுஆய்வு செய்யவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

தற்காலிக நிறுத்தத்தில் மக்கள் நிறைவுகொள்ளவில்லை. அதோடு மட்டுமல்லாது ஒன்றிய அரசு அறிவித்த மறு ஆய்வையும் எதிர்த்து,  “எங்கள் வாழ்விடங்களில் எங்குமே ஆய்வு செய்யக் கூடாதுஎனத் தெரிவித்தனர். இதன் நீட்சியாக, மாபெரும் நடைபயணப் போராட்டத்தைவேண்டாம் டங்ஸ்டன்என முழக்கமிட்டு முன்னெடுத்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜனவரி 7-ஆம் தேதி நரசிங்கம்பட்டியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரம் நடை பயணமாக மதுரை வந்து தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தன்னெழுச்சியாக ஒன்றுபட்ட மக்களின் தொடர் போராட்டம் மாற்றத்தைக் கொணர்ந்தது. 24 ஜனவரி, 25 அன்று ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை இரத்து செய்தது. இந்த அறிவிப்பால் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் உற்சாகம் அடைந்த மேலூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தமிழ் நாட்டில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து நீண்ட காலமாக நடைபெற்ற போராட்டங்களைப் போல அல்லாமல், மூன்று மாதங்களுக்குள் தீர்வு கிடைத்திருப்பது கவனத்திற்குரியது. இதற்குக் காரணம் மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக, ஒருமித்த உணர்வுடன் போராடியதேயாகும்.

ஒருமித்தப் போராட்டத்தோடு சுரங்கங்கள், கனிமங்கள் (வளர்ச்சி ஒழுங்குமுறை) 1957 சட்டமும் டங்ஸ்டன் திட்டம் இரத்து செய்யப்பட ஒரு காரணமாகும். இச்சட்டத்தின்படி, ஒன்றிய அரசின் சுரங்க அமைச்சகம் நேரடியாக ஏலம் விட முடியும். ஆனாலும் சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும். அதேபோல நில விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எந்தக் கருத்தும் இல்லை என்பதும்சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க முடியும் என்பதாலும், மாநில அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ஏலத்தில் இறங்கியது தவறாகும். தனது தவறை உணர்ந்த ஒன்றிய அரசு இத்திட்டத்தை இரத்து செய்துள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுஎன்பது வெறும் பழமொழியல்ல; மாறாக, தமிழர்களின் வரலாற்று அனுபவம். இன்று அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள மக்களும் அந்த வரலாற்று அனுபவத்தை நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். தமிழர்களாகிய நாம் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டுப் பங்கெடுக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பானது மக்கள் தொடங்கி, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல்வாதிகள் வரை நீண்டு ஒருமித்த தீர்மானத்தை வெளிப்படுத்தியதும் நமக்கான உரிமைகளைப் பெற எல்லாரும் கேட்கும் வகையில் குரல் எழுப்ப வேண்டியதும் இன்று காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
திராவிடம் எனும் நெருப்பு

திராவிடம் என்பது புனைவு, திராவிடம் என்பது மாயை. திராவிடம் என்பது நிலப்பரப்பா? திராவிடம் என்பது இனமா? திராவிடம் என்பது மொழியா? தற்குறிகளால் இவ்வாறான கேள்விகள் இன்று எழுப்பப்படுகின்றன. இது குறித்த கற்பனை வாதங்கள் அடுக்கப்படுகின்றன.

திராவிடம் என்பது இனம்; திராவிடம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை உள்ளடக்கியது; திராவிடம் என்பது  ஒரு மொழிக்குடும்பம் சார்ந்தது; திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவக் கருத்தியலை உள்ளடக்கியது. இன்று  திராவிடம் என்ற மொழிவாரிக் குடும்பம், பெருங் கலாச்சாரச் சமூகமாக உலக அரங்கில் உயர்ந்து  நிற்கிறது என்பதே உண்மை.

வேட்டையாடுதல்  எனும் கற்காலம் முடிந்து, நதிக்கரை நாகரிகங்களாகச் சமூக அமைப்பு உருபெற்ற காலம். மனிதர்கள் இயற்கை வழிபாட்டை முன்னெடுத்த பொழுதுகள்; எதை, எவற்றைக் கண்டு பயந்தார்களோ, அவைகளை வழிபட்ட முற்காலம். பாம்பைக் கண்டு பயந்தார்கள். நாகத்தை வழிபட்ட மக்கள் நாகர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுக்கிறார்: “நாகர்களும் திராவிடர்களும் ஒருவரே!” இந்திய வரலாறு என்பதே  ஆரிய, திராவிடப் போராட்டம் என்பதுதான் (அம்பேத்கர் எழுத்துகள், பேச்சுகள் நூல்கள், தொகுப்பு 14  பக்கம் 78 முதல் 95 வரை).

இந்திய நிலப்பரப்பில் வட இந்தியாவில், தென்னிந்தியாவில், நேபாளம் தொடங்கி பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்களே நாகர்கள்; அவர்களே பிற்காலத்தில் திராவிடர்கள். தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது புதிய கட்டுரையில் எழுதுகிறார்: திராவிடம் என்பது மரபினம். அது  தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, தமிழராகப் பிரிந்து, திராவிடராக ஒருங்கிணைகிறார்கள்.”

சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதே! அது திராவிடத்தின் பழமையை வெளிப்படுத்துவதாகும். ஆகவே, சிந்து சமவெளி  நாகரிகம் திராவிட நாகரிகம் அல்ல  என மடைமாற்ற நடந்த வலதுசாரிக் கருத்தியல்கள், தொல்லியல் ஆய்வாளர்களால் முறியடிக்கப்பட்டன.

சிந்து சமவெளி நாகரிகம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் சர். ஜான் மார்ஷல் தன் ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்து அறிவிக்கிறார்: “சிந்து சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் திராவிடர்களே!” திராவிடம் மூத்த முதல் நாகரிகம். இன்றுவரை இந்தியாவில் பல பழங்குடி மக்களின் பேச்சு மொழிகளில், திராவிட மொழிகளின் வேர்ச்சொற்கள் விரவிக் கிடப்பதே ஆதாரம்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து போன லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம் திராவிடர்கள் தோன்றிய நிலப்பகுதி  என அறியப்படுகிறது. அது அழிந்துபோன பழைய திராவிட நாடு. பின் ஆரியர்களின் வருகைக்கு முன்னே இந்தியாவெங்கும் பரவி வாழ்ந்த ஆதிக் குடிமக்களே திராவிடர்கள். இது மரபணுச் சோதனை அடிப்படையில் 65,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மூத்த இனம் என  ஹார்வேர்டு பல்கலைக் கழகம் மரபணுக் குறியீடு, உயிரியல் மொழியியல் ஆய்வுகள் அடிப்படையில் அறிவிப்பு செய்தார்கள். உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களின் ஒப்புதலின் பேரில் திராவிட இனம் மூத்த முதல் இனம் என இறுதி முடிவு எட்டப்பட்டது.

தொன்மையான மரபணு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் பிச்சப்பன் அவர்கள்திராவிட புதிர்என்ற நூலில், திராவிடர்கள் ஆதிகுடிகள் என்றும், அவர்கள் மரபணு ரீதியாகத் தென்னிந்தியா முழுவதும் வாழ்கிறார்கள் எனவும் உறுதிபட உரைக்கிறார். 2008-ஆம் ஆண்டு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த 18 பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அதில்திராவிடம் என்பது மொழி வழிக் குடும்பம்; அது ஒரு பழமையான கலாச்சாரம்என உறுதிபட அறிவிக்கப்பட்டது.

4,500 ஆண்டுகள் தொன்மைமிக்கது திராவிட மொழிக் குடும்பம். அது 86 மொழிகளை உள்ளடக்கிய  215 மில்லியன் மக்கள் பேசுகிற தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சில  சிறு அளவிலான பழங்குடி  மக்கள்  பேசும் மொழிகளை  உள்ளடக்கியதாகும். திராவிட மொழிகள் தென்னிந்திய  திராவிட மொழி பேசும் மாநிலங்களில் அலுவல் மொழியாகவும், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் தமிழ்  அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் பெருமை கொள்கின்றன.

திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகள் குறித்த தொன்மையை நிலைநாட்டினார். இக்காலத்தே, தமிழ்நாடு ஆளுநர்  ‘ஆரிய ரவிஅவர்கள் கால்டுவெல் மேல் சீறி பாய்ந்த கடந்தகால நிகழ்வை வாசகர்களுக்கு நினைவூட்டுவது என் தார்மீகக் கடமையாகும்.

அது ஆரிய, திராவிட யுத்தத்தின் சிறு பகுதியாகும். ஒரு மொழியியல் அறிஞரை, ஆளுநர்ஆரிய ரவி  அடிப்படைக் கல்வி மட்டுமே கற்றவர் என்று கூறியது ஆரிய மோகத்தின் உச்சம். தமிழிற்கு இலக்கணம், இலக்கியம் எனக் கிறித்தவர்களின் சீரிய தொண்டை நினைவுகூர்வது இவ்விடத்தில் சாலச் சிறந்தது.

18 -ஆம் நூற்றாண்டு. மொழியியல் குறித்த ஆய்வுகள் தேசத்தில் இல்லாத காலம். கால்டுவெல் மொழியியலில் ஆர்வம் கொண்டவர். 15 ஆண்டுகள் கடுமையாகத் திராவிட மொழிகள் குறித்து (தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், படுகா, கொரகா, கொடலா, கொடகு, துளு, கோண்டி, பிரஹஜ்ய், குருக், சௌரியா, புனியா, குரும்பா மற்றும் சில  திராவிட மொழிகள்) ஆய்வுகள் மேற்கொண்டார். 1856 -ஆம் ஆண்டுதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்என்ற நூலை வெளியிடுகிறார். இன்றுவரை திராவிட மொழிக்குடும்பம்  குறித்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற அந்த நூலைக் கால்டுவெல் எழுதிப் பெருமை பெற்றார்.

எதுவாயினும், காலங்காலமாகத் திராவிடம் குறித்த வாதங்களும் விவாதங்களும் எழுவதுண்டு. நாம் திராவிடப் பரப்பு, மரபணுத் தொன்மை, மொழித் தொன்மை குறித்து  விவரித்து விட்டோம். இருப்பினும் அன்று .பொ. சிவஞானம், ஆதித்தனார், .வெ.கி. சம்பத், பொதுவுடமை கல்யாண சுந்தரம் போன்றோர் திராவிடம் என்பதை மறுத்து தமிழ் தேசியம் பேசினார்கள். இன்று இவர்கள் இனம், மொழி  என்ற திராவிட வாதத்தை மறுக்கிறார்கள். தேவை இல்லை; எளிதானது இதுதான். நாம் தேசத்தால் இந்தியர்கள். நாம் இனத்தால் திராவிடர்கள். மொழியால் தமிழர்கள்!

news
சிறப்புக்கட்டுரை
அரசியல் இல்லாத வாழ்வியலா? - அரசியல் எனும் கருத்தியல் - 01

தற்கால தமிழ் அகராதியானக்ரியாஅரசியல் பற்றி பின்வருவாறு குறிப்பிடுகிறது: நாடு, நாட்டில் வாழும் மக்கள், மக்களின் வாழ்க்கைத்தரம் போன்ற உள்கூறுகளைப் பொதிந்திருக்கும் ஆட்சி, அதிகாரம் பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளுமே அரசியல் எனப்படுவது என்று.

நீதி இலக்கியங்களுள் திருக்குறள், அரசியல் பற்றிப் பேசும் பொழுது மொழி, இனம், மதம், நாடு போன்றவற்றைச் சாராமல்,

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

என்னும் ஓர் அரசின் அரசியல் பற்றி, உலகப் பொதுமையாய் எல்லாருக்கும் பொருந்துவனவாய் பேசுகிறது.

இதன் பொருளைச் சற்று உற்றுப் பார்த்தால், அரசுக்குச் சொல்லியிருக்கும் இந்த அரசியலின் நெறிமுறைகள் ஓர் அன்றாடங்காய்ச்சியான தனி மனிதருக்கும், அவர் சார்ந்த வாழ்க்கைக்கும் பொருத்தமுடைய அரசியலாக விளங்குவதை மறுக்க இயலாது.

வாழ்கின்ற தனது வாழ்க்கைக்கான பொருளைச் சேர்க்க வேண்டும்; அப்படிச் சேர்த்த பொருளைச் சேமிக்க வேண்டும்; அவற்றைத் தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டும்; பாதுகாத்தவற்றைத் தக்க செலவுகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று, ஓர் அரசுக்குப் பொருந்தும் அரசியலை, ஒரு தனி மனிதனின் வாழ்வியலுக்கும் பொருந்தும் வகையில் அமைத்துத் தந்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

நான் அரசியல் பேசமாட்டேன். அரசியல் எனக்குப் பிடிக்காது. அரசியலுக்கும் எனக்கும் வெகு தூரம்என்பவர்கள், தாங்கள் பொய்பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள வள்ளுவர் தந்த வாய்ப்பு தான் மேற்கண்ட குறளின் பொருள்.

வானமே இல்லாத இடத்தில் வாழப்போகிறேன்என்று சொல்வதற்கு நிகர்தான், அரசியல் இல்லாத வாழ்வியல். அன்றாட மனித வாழ்க்கையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத தத்துவம் அல்லது கருத்தியல்தான் அரசியல்.

நமது கலாச்சாரத்திலும் நமது பண்பாட்டிலும் நமது பாரம்பரியத்திலும் ஊடுருவி நிற்கிறது ஒரு நுட்பமான அரசியல். ஆனால், வாழ்வியலில் இந்த நுட்பமான அரசியல் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையோடு ஓர் இரும்புச் சங்கிலியாய் பிணைக்கப்பட்டிருக்கிறது.

எங்கும், எதிலும் அரசியல் என்பது ஒரு சித்தாந்தமாகவே பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. அந்தஎங்கும்என்பதிலும், ‘எதிலும்என்பதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது நம் வாழ்வியல் நடைமுறைகள். எப்படியெனில், கடற்கரைமீது மணலில் நின்று கொண்டிருக்கும் உங்கள் பாதத்தின் அடிமண்ணை ஒரு மென்மையான அலை வந்து உங்களையும் அறியாவண்ணம் இழுத்துச் செல்வதைப் போன்றுதான் அரசியல் உங்கள் வாழ்க்கையில் உங்களைத் தழுவிச் சென்று கொண்டிருக்கிறது. வாழ்க்கைக் கரையின் எந்த ஓரத்திற்கு நீங்கள் சென்றாலும் இது நிகழும். நீங்கள் அதை அலட்சியம் செய்ய முடியாது, அதை மறந்து விடவும் முடியாது. உங்களின் அன்றாட வாழ்வில் நிகழும் பல பணிகளில் எல்லாம், அது உங்கள் தோள்பற்றித் தொற்றிக் கொண்டிருக்கும்.

அரசியலே ஒரு வாழ்வியல்தான் என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். மனிதன் ஓர் அரசியல் விலங்கு என்றே தத்துவஞானி சாக்ரடீஸ் குறிப்பிடுகிறார்.

ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு மழலையின் பாதம் இந்த மண்ணைத் தொட்ட அடுத்த நொடியிலிருந்து உங்கள் அரசியல் சாதகம் கணிக்கப்படுகிறது.

ஒரு தனிமனிதனின் மற்றும் மனிதக் கூட்டத்தின் செயல்பாடுகள், உளவியல் தேவைகள், உறவாடல்கள், வேலை, குடும்பம் என்ற வாழ்வியல் சுழற்சிகளின் மையப்புள்ளியே அரசியல்தான். தீய மனிதர்களின் பேராசையும் சுய நலமும் முறைகேடுகளும், நல்லவர்களின் நீதியும் நேர்மையும் பொதுநலமும் இந்தச் சமுதாயத்தில் எப்படி இரண்டறக் கலந்து நிற்கின்றனவோ, அப்படியே இவை அனைத்தும் அரசியல், வாழ்வியல் களங்களிலும் இரண்டறக் கலந்து நிற்கின்றன. அந்த அளவிற்கு இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமை இன்றைய சமூகத்தில் ஊறிக்கிடக்கின்ற காலம் இது.

அடிப்படைச் சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மக்களின் கண்களுக்கு எட்டிய வரை அது தென்படாதபோது, தங்களின் அன்றாட வாழ்வியலின் அரசியலைத்தான் ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைப் பெரும்பான்மை மக்கள் உணர்வதற்கு வாய்ப்பில்லை. அதன் வெளிப்பாடுதான்அரசியல் வேறு, வாழ்வியல் வேறு, அரசியல் ஒரு சாக்கடைஎன்ற வெற்று வாதங்கள்.

இந்த வாதங்களில் உண்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை அலசிப் பார்ப்பதற்கான முன்னுரைதான் இந்த முதல் கட்டுரை. ‘அரசியல் இல்லாத வாழ்வியலா?’ என்ற இந்த அர்த்தம் பொதிந்த தலைப்பை வைத்துதான், இனி வரும் எழுத்துகள் பூக்கும். ‘எதுவெல்லாம் அரசியல்?’ என்ற கேள்விக்குஎல்லாமே அரசியல்தான்என்ற பதில் கிடைக்கும்.

இலக்கிய அழகியல், இயற்கையின் அரசியல் என்பதைப் போல, வாழ்வியலின் பல அழகியல்கள்தான் மனிதர்களின் அரசியல். இப்படிப்பட்ட அழகியல் கூறுகள் என்பது இல்லாததை இருப்பதாக்குவதல்ல; இருப்பதை உணர்த்துவதாகும்.

கலாச்சார அரசியல் தொடங்கி

காறித்துப்பும் அரசியல் வரை...

குடும்ப அரசியல் தொடங்கி,

குழிதோண்டும் அரசியல் வரை...

உணவு அரசியல் தொடங்கி

உடை அரசியல் வரை...!  

(பயணம் தொடரும்)

news
சிறப்புக்கட்டுரை
குடியாட்சி - அரசியல் அறிவோம்! -02

குடியாட்சி (Republic) என்றால் என்ன?

இதன் பொருள்பொது அலுவல்சம்பந்தப்பட்டதாகும். இந்தியாவை ஆள்வோருக்கு அதிகாரம் யாரிடமிருந்து வருகிறது? அந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியவர்கள் யார்? கடவுளா? அல்லது அவர்களது பண பலமா? அல்லது சமூக அந்தஸ்தா? அல்லது அவர்களே உருவாக்கியதா?

குடிமக்களாகியநாம்தான்அந்த வாக்கு செலுத்துவதன் மூலம் வழங்கியுள்ளோம். ஐந்தாண்டிற்கு ஒருமுறை அந்த அதிகாரத்தைக் கொடுப்பதும் பறிப்பதும் யார் கையில் இருக்கிறது? மக்களாகிய நம் கையில்தான் உள்ளது. அப்படியென்றால், நமது வாக்கு எவ்வளவு மதிப்பு மிக்கது? சக்தி படைத்தது! அது விலை பேசப்படலாமா? அல்லது வாக்கு இயந்திரங்கள் வழியாகத் திருடப்பட அனுமதிக்கலாமா? மக்களாகிய நாம் இது குறித்து அமைதியாக இருந்தால், குடியாட்சி முறையில் நாம் ஆள்படவில்லை என்பதுதான் உண்மை.

குடியாட்சி என்பது மன்னர் ஆட்சி போல் பரம்பரை பரம்பரையாக வாரிசுவழி வருவதல்ல; குடியாட்சியின் தத்துவத்தில் ஆட்சியாளர்கள் அதிகாரத்தோடு பிறப்பதில்லை; மாறாக, மக்களால் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதியாக ஆட்சியில் பணியாற்றுபவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றும் பணியாளர்கள். மக்கள் யாரை வேண்டுமானாலும் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கலாம். ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், ஏழைகள், சமூகத்தில் பின் தங்கியவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், குடியாட்சி முறையில் வாரிசு அரசியல் எல்லாக் கட்சியிலும் நடத்தப்படுகிறது. இதுவா உண்மையான குடியாட்சி முறை?

குடியாட்சியில் யார் மையமாக இருக்கிறார்கள்? மக்கள்தானே! அப்படியென்றால் அவர்களது குரல்கள், அடிப்படைத் தேவைகள், அனைத்து வகை நலன்கள் அடிப்படை உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இன்று மக்கள் வாக்களிப்பதைத் தவிர அரசுக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே அரசு தனது விருப்பம்போல் செயல்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் காட்டும் வழிகாட்டும் நெறிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு, கட்சிக் கொள்கைகளை முன்னுறுத்தி ஆட்சி செய்கிறது. மத அடிப்படைவாதக் கொள்கை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களின் கொள்கையல்ல; இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் நெறிமுறைகளும் அல்ல; மதச்சுதந்திரம் என்பது எல்லாருக்கும் உண்டு என்பதை அரசியல் சட்டம் கூறுகிறது.

இந்தியாவில் மக்கள் தாங்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை நம்பி மூன்று நிலையில் - ஒன்றிய, மாநில, பஞ்சாயத்து - உள்ளவர்களுக்குப் பகிர்ந்தளித்திருப்பதால் அவர்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களோடு கலந்தாலோசித்து, கருத்துகளைப் பகிர்ந்தளித்து, விவாதம் செய்து ஆட்சி நடத்த வேண்டும். இதுதான் குடியாட்சி நடைமுறையாகும்.

எனவே, அரசு அதன் நிர்வாகம், உருவாக்குதல் போன்ற அனைத்திலும் மக்களின் பங்கேற்பு, கலந்துரையாடல், விவாதங்கள் அவசியம் நடைபெற வேண்டும்.

குடியாட்சி முறை சந்திக்கும் சவால்கள்கள்

இன்று பாராளுமன்றத்தில் இயற்றப்படும் பல சட்டங்கள், மசோதாக்கள் மக்களிடம் எந்த ஒரு கலந்துரையாடலும் செய்யாமல், இது மக்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமானதா? சனநாயகக் குடியரசு ஆட்சி முறையை வலுப்படுத்துவதாக உள்ளதா? என்றெல்லாம் கேட்காமல், அவசரம் அவசரமாக நிறைவேற்றுகிறார்கள்.

அண்மையில் இயற்றப்பட்டஒரே நாடு, ஒரே தேர்தல்மசோதா எந்த ஒரு கலந்துரையாடலும் செய்யாமல், மக்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் போதிய கால அவகாசம் தராமல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேபோல தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகளின் விவரங்களைப் பெறுவதற்கான வெளிப்படைத்தன்மைக்கு எதிராகத் தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைத்தது. இரண்டுமே குடியாட்சி முறைக்கு எதிரான செயலாகும். இதில் வருந்த வேண்டியது என்னவென்றால், மக்களுக்கு இதுகுறித்து தெரியாது, அக்கறையும் இல்லாதது. எது நடந்தாலும் அது குறித்துப் பேசாமல் அமைதியாக இருத்தல். எனவே, அரசு தவறாகச் செயல்படுவதற்கு, இன்னும் அதிகமாக அவர் சனநாயகத்திற்கு எதிராக இருப்பதற்குக் காரணம் மக்கள் பேரமைதியில் வாழ்வதுதான்.

குடியாட்சி முறையை உயிர்பிப்பது எப்படி?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களாகிய நாம் நமக்கென்று உருவாக்கியது. அதனால்தான்மக்களாகிய நாம்என்று முகவுரையே தொடங்குகிறது. மக்கள்தான் அரசின் மையம்; எனவே, மக்கள்தான் அதிகாரம், மக்களுக்காகத்தான் அரசு. மக்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குடியாட்சி முறைக்கும் எதிரானது என்ற விழிப்புணர்வு தேவை.

இது குறித்த விழிப்புணர்வுக் கல்வியை எல்லாத் தலங்களிலும், எல்லா நிலையினருக்கும் - குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சிவில் சமூகத்தினர், சமயவாதிகள் கொடுக்க வேண்டும். சுருங்கக்கூறின், ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று.

குடிமக்களின் இணைந்த இயக்கமான குடிமைச் சமூகத்தின் (Civil Society) பங்களிப்பு என்பது முக்கியமானதாகும். அவர்கள் அரசைக் கண்காணிப்பதும், அவர்களைக் கேள்விக்குட்படுத்துவதும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிர்ப்பந்திப்பதும், புதிய மக்கள் மையக் கொள்கைகளை உருவாக்கச் செய்வதும், அரசு செய்யும் தவறுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதும் அதன் தலையாயக் கடமையாகும்.

குடிமைச் சமூகம் அரசியல் கட்சியல்ல; மாறாக, அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து, சனநாயகத்தை, குடியாட்சியை, மனித உரிமைகளை, மக்கள் நலவாழ்வை உறுதி செய்கிற அமைப்பாகும். இதன் பங்களிப்பானது இன்றைய உலக அரசியலரங்கில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதை ஐக்கிய நாட்டு சபையும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.

இறுதியாக...

திரு அவை மற்றும் அதன் உறுப்புகளான மறைமாவட்டம், பங்கு, கல்வி நிலையங்கள், சமூக செயல்பாட்டுத் தலங்கள் அனைத்தும் ஒரு குடிமைச் சமூகமாகச் செயல்பட குடிமைச் சமூகங்களைத் தங்கள் பகுதியில் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும். அருகில் உள்ள குடிமைச் சமூகங்களை இணைக்க வேண்டும். இணைந்து வருதல், விவாதித்தல், செயல்படுதல் குடியாட்சி முறையை உயிர்ப்பிக்கும்.

எனவே, கற்றுக்கொள்வோம் - இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களைக்  கண்காணிப்போம் - அரசு என்ன செய்கிறது, எப்படிச் செய்கிறது? அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுகிறதாவன்முறையற்ற, சமத்துவ அமைதி சமூகத்தை - மகிழ்வும் ஒற்றுமையும்-பன்மைத்துவமும் நிறைந்த சமூகத்தை உருவாக்குவோம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்ட ஆவணம் நமது புனித நூலாகட்டும்; பாராளுமன்றமும் சட்டமன்றமும் நமது கோவில்களாகட்டும்; மனித உரிமைகளும் கடமைகளும் நமது வாழ்க்கை முறைகளாகட்டும்; அப்பொழுதுதான் பிரிவினை வாதத்திற்கும் அனைத்து வன்முறைகளுக்கும் முடிவு கட்ட முடியும்.