“கலைப் படைப்புகள் மக்களைப் பகுத்தறிவு பாதையிலிருந்து மடைமாற்றி மடையர்களாக மாற்றுகின்றன” (The Republic) என்ற பிளேட்டோவின் வலிமையான வார்த்தைகளின் வலியை தமிழ்நாடு இன்று உணர்ந்து கொண்டிருக்கின்றது. தற்சமயம் தமிழ்நாட்டின் பேசுபொருளாக இருக்கும் கரூர் சம்பவம் நமக்கு வலிகளோடு சேர்ந்து சில கசப்பான உண்மைகளையும் கற்றுத் தந்திருக்கின்றன.
‘அறிவுடையார் எல்லாமுடையார்’ (குறள்
430) என்ற புரட்சிக் கோட்பாட்டை இவ்வுலகிற்குக் கற்பித்த தமிழர்களின் பகுத்தறியும் தன்மையை எண்ணி இவ்வுலகமே இன்று எள்ளி நகையாடுகின்றது. ஏனெனில், கரூரில் ஏற்பட்ட 41 நபர்களின் இறப்புக்கு அரசியல் வட்டாரத்தில் பல காரணங்கள் எடுத்துரைக்கப்பட்டாலும்,
முதன்மையான காரணம் தமிழரின் சினிமா மோகமாகும். பலரின் சினிமா மோகமும் சிலரின் அரசியல் ஆசைகளும் 41 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்ச்சங்கம், நடிகர் சங்கங்களில் மாட்டித் தவிக்கின்றது. இந்நிலை மாறவேண்டும். கரூரில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இறப்பானது திரைக் கவர்ச்சியால் ஏற்பட்ட முதல் இழப்பல்ல; ஆனால், இதுவே இறுதி இழப்பாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின்
மக்களும் அரசியலும் இன்று திரைத்துறை வசம் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. ஆனால், ஆரம்பத்தில் சினிமா என்பது தலைவர்களின் அரசியல் கோட்பாடுகளை எளிய மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியாக இருந்தது. சினிமாவின் முந்தைய வடிவமான மேடை
நாடகங்கள் சமுதாய விழிப்புணர்வின் ஆயுதமாகக் கருதப்பட்டது. எழுத, படிக்கத் தெரியாத எளியவர்களிடத்திலும் புரட்சிகர கருத்துகள் சென்றடைவதற்கான சிறந்த வழியாக இருந்தது. பக்தியையும் அரசியலையும் புரட்சியையும் கொண்டு சேர்த்த நாடகங்கள் அத்துடன் சேர்ந்து அதில் நடிக்கும் நடிகர்களின் மீதான ஈர்ப்பையும் காலப்போக்கில் கொண்டு சேர்க்க ஆரம்பித்தது.
சினிமா
பெரும் பொருளாதார வர்த்தகமாக மாறிய பின்பு சினிமாவின் போக்கும் மாறியது. இன்றைய சினிமாவில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகக்
கருத்துகளைத் தவிர்த்து, கவர்ச்சிகளை அதிகமாக்கிவிட்டனர். இந்தக் கவர்ச்சிகள் கலைஞர்களின் மீதான ஈர்ப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இதை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கென இரசிகர் மன்றங்களைத் தொடங்குகிறார்கள். இதன்மூலம் சினிமாத்துறையின் வளர்ச்சியும், தனிப்பட்ட கலைஞர்களின் வருவாயும் பன்மடங்கு பெருகியது. இதன் காரணமாகவே, உடல் வருத்தி உழைக்கும் உழைப்பாளிகளின் ஊதியம் நூறுகளில் இருக்க, பாடல் வரிகளுக்கு வாயசைக்கும் நடிகர்களின் ஊதியம் பல கோடிகளில் உள்ளது.
இந்த
உழைப்புக்கு மிகுதியான ஊதியத்தைத் தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களின் கதாநாயகர்கள் மேற்குறிப்பிட்டதைப்போல இரசிகர் சங்கங்கள், இசை வெளியீட்டு விழாவின் அதிரடி வசனங்கள் போன்ற பல உத்திகளை மேற்கொள்கின்றனர்.
நாளடைவில் ஒரு நடிகரின் மீதான ஈர்ப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் நபர்களின் மீதான வெறுப்புக்குக் காரணமாகின்றது. இதன் காரணமாகவே, அரசியலில் ஈடுபடும் நடிகர்களின் இரசிகர்கள், அவர்களுடைய நாயகனுக்கு எதிராக, கண்ணியமான முறையில் அரசியல் விமர்சனம் வைப்பவர்களைக் கூட மிகத் தரக்குறைவான வகையில்
சமூக ஊடகங்களில் கேலி செய்கின்றனர். திரையின் கதாநாயகர்களை, நிஜ வாழ்விலும் கதாநாயகர்களாகக் கருதுகின்றனர்.
சமூக
ஊடகங்களின் மாபெரும் வளர்ச்சி இந்நிலையை மேலும் மோசமடையச் செய்துவிட்டன. பல கோடிகளைச் சம்பளமாக
ஈட்டி, வரிகட்டாமல் ஏய்க்கும் நடிகர்களுக்காக இரசிகர்கள் சமூக ஊடகங்களில சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதன் காரணமாக, சமூகத்தின் முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. சினிமாவின் வர்த்தக அரசியலின் வலையில் வீழ்ந்து கிடக்கும் இரசிகர்களும் மக்களும் தங்களின் வாழ்க்கைத் தேவையை மறந்து திரைப்
பிரபலங்களின் பட வெற்றியைப் பெரிதாகப்
பார்க்கின்றனர்.
இப்படிச்
சினிமாத்துறையே மக்களுடைய வாழ்வின் பெரும் பகுதியை அபகரித்துவிட்டதால், இரசிகர்கள் மட்டுமில்லாமல், பெரும்பாலும் மக்களும் நடிகர்களை நேரில் பார்க்கவேண்டும் என்று ஏங்குகின்றார்கள். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர்.
மறுபுறம்,
நடிகர்கள் சினிமாவின் மூலம் தங்களுக்குக் கிடைத்த பெரும் இரசிகர் கூட்டத்தையும், மக்களிடத்தில் உள்ள திரை வெளிச்சத்தையும் கருத்தில் கொண்டு நேரடியாகப் பதவிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தங்களுடைய இரசிகர் சங்கத்தைக் கட்சியாக மாற்றுகின்றனர். இரசிகர்
சங்கத்தைக் கட்சியாக மாற்றும் நடிகர்கள், தங்களுடைய இரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றுவதில்லை; அவர்களை அரசியல்படுத்துவதில்லை; அவர்களை இரசிகர்களாக ஒரு மாய உலகில் தொடர்ந்து வைத்திருக்கின்றனர். இதை அறியா இரசிகர்கள் தங்கள் தலைவர் அவருடைய வாழ்வையே தங்களுக்காகத் தியாகம் செய்துவிட்டு வந்துவிட்டதாக நினைத்து, தங்கள் தலைவரைத் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனர்.
இந்த
நடிகர்களுக்குத் தெளிவான கொள்கை என்று எதுவும் இருப்பதில்லை. தங்கள் மீதான கவர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள திரைப்படங்களில் எப்படி வசனங்களால் தங்கள் இரசிகர்களைத் திருப்திப்படுத்துகின்றார்களோ
அதேபோல் அரசியல் மேடைகளிலும் தன்னைத் தவிர அனைத்துத் தலைவர்களையும் திறனற்றவர்களாகவும்
நேர்மையற்றவர்களாகவும்
உருவகப்படுத்துகின்றார்கள்.
குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டும் மக்களிடையே தோன்றி, நடிகரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைச் செயற்கையாகத் தூண்டி மக்களை அரசியல் சதுரங்கத்தின் காய்களைப்போல் பயன்படுத்துகின்றார்கள். தரம் குறைந்த வசனங்களைப் பயன்படுத்தி மக்கள்
முன்னிலையில் கொள்கை முனைப்புடன் செயல்படும் பிற தலைவர்களின் அரசியல் அனுபவத்தைக் கேலிக்கூத்தாக்குகின்றார்கள். இதனால்
கொள்கை சார்ந்த அரசியலை மென்மேலும் பல வீனமடையச் செய்கின்றனர்.
கொள்கை என்பது வளர்ச்சியை நோக்கி மட்டுமல்ல, அது முழு மனிதச் சுதந்திரத்திற்கானதாக இருக்க வேண்டுமென்று பொருளாதார நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென் கூறுகின்றார். நாம் செயல்படுத்தும் கொள்கைகளால்தான் நம் உயர்வும் தாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறுகின்றார். ஒரு கட்சி கொள்கையை மையமாக வைத்துச் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான், வியாபார அரசியல் குறைந்து மக்கள் நலன் மீதான அக்கறை கொண்ட அரசு அமையும்.
கொள்கையற்ற
அரசியல் செய்யும் நடிகர்கள் மக்களின் பிரச்சினைகளான பொருளாதாரச் சிக்கல்கள், ஊழலின் பாரம், வேலையில்லாத் திண்டாட்டம், தரமற்றக் கல்வி போன்றவைகளைப் பின்னுக்குத் தள்ளுகின்றனர். இவற்றைத் தங்கள் பேச்சுகளில் பெயரளவிற்குச் சேர்த்துக்கொண்டு தங்களைக் கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்திக் குறுக்கு வழிகளில் அரியணை ஏற முயற்சிக்கின்றனர்.
பொருளாதாரத்
தளமே ஒரு சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பு. அந்த அடிப்படைக் கட்டமைப்பின் மீதே கலை, பொழுதுபோக்கு, மதம் என்ற பிற தளங்கள் அமைய வேண்டும் என்று காரல் மார்க்ஸ் கூறுகின்றார். ஆனால், மக்களின் பொருளாதார வாழ்வானது சினிமா மோகத்தை மையமாக வைத்துக் கட்டியெழுப்புவது என்பது மிகவும் பேராபத்தானது. மக்களின் வலிகளை உணரச் செய்து தனிமனித ஒழுக்கத்தையும் அரசின் படிநிலைகளையும் சரிவரப் பொருத்தினால் மட்டுமே இங்கு வலிமையான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். ஆனால், நடிகர்கள் மற்றும் பெரும்பாலும் அரசியல்வாதிகள் இதைச் செய்வதில்லை; ஏனெனில், மக்களை விழிப்படையாமல் வைத்துக்கொள்வதே அவர்களுடைய முதன்மையான பணியாகும். முதலில், மக்கள் அனைவரும் நடிகர்களைத் தங்களைப் போன்ற சாதாரண மனிதர்களாகக் கருதவேண்டும். அதற்கு மதிப்பெண் அடிப்படையிலான கல்வி மட்டும் போதுமானதல்ல; பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டும் தலைவர்களின் சிந்தனைகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். தேர்தல் அரசியலில் ஈடுபடாத பொதுநலக்கட்சிகள் இன்னும் அதிகமாகத் தோன்றி, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சுய பகுத்தறிவுச் சிந்தனைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்.
இங்குப்
புரட்சியென்பது நடிகர்களிடமிருந்தோ, தலைவர்களிடமிருந்தோ பிறக்கப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் ஊழலால் சுரண்டப்படுவதில்லை, வீதிகளில் உறங்கியதில்லை, ஊதியத்தின் பாதியை வரியாகக் கட்டியதில்லை. இவை அத்தனையையும் அனுபவிப்பவர்கள் மக்களே. எனவே, புரட்சி என்பது அவர்களிடமிருந்துதான் பிறக்கவேண்டும்.
நடிகர்கள்
மதம், இன மற்றும் சாதிவெறி
கொண்ட கும்பல்களின்மீது நாம் பெரிதும் நம்முடைய அக்கறையைச் செலுத்துவதால் மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் காணாமல் போகின்றார்கள். அவர்களை மக்கள் மிளரச் செய்தால் மட்டுமே தமிழ்நாடு மிளிரும். இல்லையேல்...?
நவம்பர் மாதம் என்பது நம் திரு அவையின் பாரம்பரியப்படி, இறந்து போன நம் அன்புக்குரியவர்களின் ஆன்மாக்களை நாம் நினைவுகூர்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அழகான மாதம். இம்மாதத்தில் இறந்தவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பதும், இறந்தோரின் கல்லறைகளுக்குச் சென்று இறைவேண்டல் செய்வதும் பலரது வழக்கம். இந்நாள்களில், நமக்கு முன்னால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களை இறைவன் இறுக அணைத்துக்கொண்டார் என்ற உறுதிப்பாட்டோடு தொடர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்வது நம் கடமை. இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களின் நினைவை நாம் கொண்டாடக் கொடுக்கப்பட்டிருக்கிற ஓர் அற்புதமான தினம்தான் நவம்பர் 2.
அண்மையில்
நடந்த ஒரு கருத்தரங்கில் இறந்தோருக்காக இறைவேண்டல் செய்வது மற்றும் அவர்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுப்பது ஆகியவற்றின் பின்னணியில் இருக்கிற காரணம் குறித்து ஒரு நபர் கேள்வி எழுப்பினார். எனவே, இன்று இந்தச் செபங்களைக் குறித்து அறிந்துகொள்வதும், அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கப்படுகிற திருப்பலியின் அளப்பரிய பலன்களை உணர்ந்துகொள்வதும், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலை (உத்தரிக்கிற ஸ்தலம்) இருக்கிற ஆன்மாக்களுக்காக இறைவேண்டல் செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
இறந்தோருக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கமானது பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலைமீது நாம் கொண்டிருக்கிற நம்பிக்கையோடு நெருங்கிய தொடர்புடையது. ஒரு நபர் இறைவன்மீது நம்பிக்கை கொண்டவராக இறந்திருந்தாலும், அவர் அற்பப் பாவங்களோடு இறந்திருப்பின் கடவுளின் அன்பாலும் இரக்கத்தாலும் தூய்மையாக்கப்படுவார் என்பது நமது நம்பிக்கை. இப்படித் தூய்மையாக்கப்பட்ட ஆன்மா விண்ணகத்தில் இறைவனை முகமுகமாய் காணத் தகுதியான புனித நிலையை அடையும். ஆனால், பாவங்களைப் போக்குகிற தூய்மை பெறும் நிலை அல்லது கழுவாய் நிலையில் இருக்கிற ஆன்மாக்களைப் பொறுத்தவரை அவர்கள் இத்தகைய எந்த ஒரு பலனையும் நேரடியாக அடைய முடியாது, ஏனெனில், அந்த ஆன்மாக்கள் மெச்சத்தக்க எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய தகுதியோடு இல்லை. இந்த ஆன்மாக்கள் மீட்கப்பட்டிருந்தாலும், அவற்றால் புனிதத்தில் உயர முடியாது. மாறாக, மாட்சி பொருந்திய நிலையை அடைய தடையாய் இருக்கிற குறைகளைக் களைய மட்டுமே முடியும்.
இறந்தவர்களுக்காகத்
திருப்பலி ஒப்புக்கொடுக்கிற வழக்கம் ஒன்றும் புதிது இல்லை. திரு அவையின் மறைக்கல்வி நூல் எண் 1032 இதைப் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது: ‘தொடக்கக் காலத்தில் இருந்தே திரு அவை இறந்தோரின் நினைவைக் கொண்டாடியிருக்கின்றது, அவர்களுக்காக இறைவேண்டல்களை ஏறெடுத்திருக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் தூய்மையாக்கப்பட்டு இறைவனை முக முகமாய் காணும் பேற்றினைப் பெற திருப்பலி ஒப்புக்கொடுத்திருக்கிறது.’ இது
பழைய ஏற்பாட்டில் வேரூன்றி வளர்ந்த ஒரு பாரம்பரியம். திருச்சட்டம் தடைசெய்திருந்த வேற்றுத் தெய்வங்களின் அடையாளங்களை அணிந்து, இறந்திருந்த யூத படைவீரர்களுக்காக யூதா மக்கபே செபங்களையும் பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இதையே மக்கபேயர் இரண்டாம் புத்தகத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்: “அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம் மன்றாட்டில் ஈடுபட்டார்கள்” (12:42); “ஆகவே
இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் (யூத மக்கபே) அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்” (12:45).
தொடக்கத்
திரு அவையின் வரலாற்றிலும் இறந்தோருக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுக்கப்பட்டதற்கான
வலுவான ஆதாரங்களை நாம் காண முடிகின்றது. இது இறந்தவர்களை நினைவுகூர்வது மற்றும் அவர்களுக்காக இறைவேண்டல் பரிந்துரை செய்வது ஆகியவற்றில் திரு அவை கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமை நிலத்தடிக் கல்லறைகளின் மீது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. கல்லறைமீது காணப்பட்ட கல்வெட்டில் ஃபிரிஜியாவில் உள்ள ஹைரோபோலிஸினுடைய ஆயர் அவர்கள், புனித அபேர்சியுஸ் அவர்களுடைய ஆன்ம இளைப்பாற்றிக்காகச் செபிக்க வேண்டுகோள் விடுத்தது பொறிக்கப்பட்டிருக்கின்றது
(கி.பி. 180). கி.பி. 211-இல்
புனித தெர்த்துலியன் மரித்தவர்களின் ஆண்டு நினைவானது செபங்களோடு அனுசரிக்கப்பட்டதற்குச் சான்றளித்து இருக்கின்றார். ஹிப்போலிட்டஸ் வகுத்து வழங்கிய சட்டநெறிமுறைகளும் திருப்பலியின் போது இறந்தவர்களுக்காக இறைவேண்டல் ஒப்புக்கொடுப்பதை வலியுறுத்துகின்றன (கி.பி. 235).
திரு
அவைத் தந்தையர்களின் சாட்சியங்களும் இந்த அழகான நம்பிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் அமைகின்றன. ஜெருசலேம் நகர் சிரில் அவர்கள் திருப்பலியில் எவ்வாறு உயிரோடு இருப்போரும் இறந்தோரும் நினைவுகூரப்படுகின்றார்கள்?
என்றும், எவ்வாறு இந்தத் திருவிருந்து உயிரோடு இருக்கிற அல்லது பாவத்தோடு இறந்த மனிதர்களுக்குப் பலன்தரக் கூடியதாக அமைகின்றது? என்பதைக் குறித்தும் தனது மறைக்கல்வி போதனையில் விளக்கமளித்திருக்கின்றார்.
கி.பி. 397-இல் புனித அம்புரோஸ் பின்வருமாறு போதிக்கின்றார்: “அவர்கள் வாழ்ந்தபோது அவர்களை நேசித்த நாம், அவர்கள் இறந்த பிறகு நம் செபங்களின் வழியாய் அவர்களை விண்ணக வீட்டில் சென்று சேர்க்கும் வரை அவர்களைக் கைவிட்டுவிடக் கூடாது.”
புனித
மோனிகா தன் மகனான புனித அகுஸ்தினிடம் தன் இறப்பிற்குப் பிறகு திருப்பீடத்தில் தன்னை எப்போதும் நினைவுகூரும்படி கேட்டுக் கொண்டார். கி.பி. 407-இல்
புனித ஜான் கிறிஸ்தோஸ்தம் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றார்: “அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு உதவி புரிவோம். யோபுவினுடைய பிள்ளைகள் அவர்களுடைய தந்தை செலுத்திய பலியால் தூய்மையாக்கப்பட்டார்கள் என்றால், இறந்தவர்களுக்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலியும் இறைவேண்டல்களும் அவர்களுக்குத் தேற்றரவாக அமைவதைக் குறித்து நாம் ஏன் சந்தேகிக்கவேண்டும்?”
திருத்தந்தை
புனித கிரகோரி பின்வருமாறு கூறுகின்றார்: “இறந்தவர்களுக்கு உதவி செய்ய, அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய, திருப்பலி ஒப்புக்கொடுக்க நாம் எப்போதும் தயங்கக்கூடாது.”
‘Mirae Caritatis’ என்ற தனது சுற்றுமடலில் திருத்தந்தை 13-ஆம் லியோ, “அற்புதமான திருப்பலி இறைவனுக்கு மட்டுமே ஒப்புக்கொடுக்கப்படவேண்டும்
என்று நம் நம்பிக்கையின் படிப்பினைகள் நமக்கு எடுத்துக் கூறினாலும், நம் பரிந்துரைகளைப் பெற்றுத்தரும் விதத்திலும் மேலும் திருத்தூதர்கள் மரபுப்படி கிறிஸ்துவில் இறந்திருந்தும் இன்னும் தூய்மையாக்கப்படாமல் இருக்கும் சகோதர, சகோதரிகளின் பாவக்கறைகளை அகற்றும் விதத்திலும் இறைவனால் முடிசூட்டப்பட்டிருக்கிற புனிதர்களின் நினைவாகவும் இதை நாம் கொண்டாடலாம்” என்கிறார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்தின் ‘Lumen Gentium’ எனும் ‘உலகின் ஒளி’ என்கிற திரு அவை கொள்கை ஏடு பின்வருமாறு கூறுகின்றது: ‘விண்ணகத்தில் இருப்போர் மற்றும் இறந்து கழுவாய் நிலையில் தூய்மையாக்கப்படாமல் இருப்போர் ஆகியோருக்கும் நமக்கும் இருக்கிற உறவு ஒன்றிப்பின்மீது நம் முன்னோர் கொண்டிருந்த போற்றுதற்குரிய நம்பிக்கையை இந்தத் திருச்சங்கம் பற்றுறுதியோடு ஏற்றுக்கொள்கின்றது.’
நம்பிக்கையாளர்கள்
இறந்து கழுவாய்நிலையில் இருக்கிற ஆன்மாக்களுக்குத் தங்களது இறைவேண்டல்கள், பரிகாரங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, திருப்பலியின் வழியாக அவர்கள் தூய்மையாக்கப்பட உதவி செய்யலாம். ஒவ்வொரு திருப்பலியும் காலம், இடம் போன்ற விசயங்களைக் கடந்து விண்ணகம்-மண்ணகம் மற்றும் கழுவாய்நிலையில் இருக்கிற நம்பிக்கையாளர்கள் யாவரையும் ஒரு புனிதம் மிக்க ஒன்றிப்பில் இணையச் செய்கின்றது. மேலும், நற்கருணை நம் அற்பப் பாவங்களைப் போக்கி, சாவான பாவங்களிலிருந்து நம்மைக் காத்து கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற ஒன்றிப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றது (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி எண். 1391-1396). எனவே, இறந்த நம்பிக்கையாளர்களின் ஆன்மாவிற்காக நாம் ஒப்புக்கொடுக்கிற திருப்பலி, இறைவேண்டல்கள் மற்றும் பரிகாரங்கள் யாவும் சரியான மற்றும் தூய செயல்கள் ஆகும்.
(தொடரும்)
1925-ஆம் ஆண்டு நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு டாக்டர் ஹெக்டேவார் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, இந்த ஆண்டு விஜயதசமியன்று அதன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது. தேசப்பற்றின் முழு அவதாரமாகக் கருதப்படும் இவ்வமைப்பின் முழுநேரப் பணியாளராக இருந்த மோடி இன்று இந்தியப் பிரதமரான நிலையில், இந்நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் தலையோடு, நூற்றாண்டு நினைவு நாணயமும் வெளியிட்டுத் தன் நன்றிக்கடனைத் தீர்த்து வைத்தார்.
சங்கப் பரிவாரங்களின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-இன் (இராஷ்டிரிய சுயம் சேவக்) நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, இவ்வமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்கள் அருளின உரைச் சுருக்கத்தினை ஊடகங்கள் தாராளமாகவே வெளியிட்டிருந்தன. நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குப் புகழாரம் சூட்டியவர்களின் செய்தியின் உள்ளடக்கம் என்னவாயிருந்தது? “நாட்டிற்கான தொண்டு (discipline), மக்களின் தேவையின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செய்யும் மனிதாபிமானப் பணி (Humanitarian) இரண்டும் போற்றுதற்குரியன” என்று புகழ்ந்து வாழ்த்தும் சந்திரபாபு நாயுடு, இவரையொட்டி ஆந்திரப் பிரதேசத்தின் பவன் கல்யாண் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காட்டும் ஒழுக்கம், தொண்டு மனப்பான்மை, தேசத்தின் மீதான அர்ப்பண உணர்வு வியப்பானது” என்றெல்லாம் புகழும் பவன் கல்யாண் மேலும் கூறுகிறார்: “இவ்வமைப்பு இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆரவாரமில்லாமல் காட்டிய ஆதரவு புகழ்வதற்குரியது.”
“தேசாபிமானம், பாரம்பரியம் காக்கும் ஒழுங்கு, சுய ஒழுக்கம், சமூக விழிப்புணர்வு இவையெல்லாம் நெகிழவைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர் பண்புகள்” என்று வியந்து பாராட்டுகிறார் மராட்டியத்தின் மேனாள் முதல்வரின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே. இந்த ஆர்.எஸ்.எஸ். பற்றிய புகழ் குறிப்புகள் அனைத்தும் ‘இந்து’ நாளேட்டில் (அக் 13, 2025) இடம்பெற்றவை.
தேசப்பற்று, ஒழுக்கம், மனிதாபிமானம், தேசியம் எனும் அனைத்துப் பண்புகளுக்கும் கொள்கலனாகும் ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசால், அரசின் தலைமை அமைச்சர்களால் கொண்டாடப்படுவது அவர்களைப் பொறுத்தவகையில் சரிதான்! இதே நாளிட்ட ‘இந்து’ நாளிதழில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இன்றைய தலைவர் மோகன் பகவத் அவர்களின் உரையும் வெளியாகியுள்ளது. அவர் என்ன கூறுகிறார்: “கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்நாட்டிற்குள் குடியேறிய அந்நிய நாட்டினர் பலர் இந்நாட்டை விட்டு வெளியேறியபோது சிலரை இந்நாட்டிலேயே விட்டுச்சென்றனர். பாரதக் கலாச்சாரம் கற்பிப்பதற்கு ஏற்ப அந்த அந்நியர்களை நாம் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டோம். அவர்களை அந்நியராக நாம் கருதவில்லை. ஆனால், வேறுபட்ட அடையாளங்களுடைய இவர்கள், இந்நாட்டில் பிரிவினைக்கு (Division) காரணமாய் அமைதல் கூடாது” (இந்து, அக்.5, 2025).
ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் செதுக்கப்பட்டு, இந்தியத் தலைமை அமைச்சராகும் அளவிற்கு வளர்ந்த மோடி அவர்கள், இந்தியாவின் விடுதலைப் பெருவிழா மேடையில் இந்திய ஒருமைக்கும் ஒற்றுமைக்கும் உருவகமாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாகவும், இந்திய எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் ஆதாரமாக நின்று செயலாற்றி வருவதாகவும் பாராட்டிய மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்கு வாழ்த்தும் கூறினார்.
இன்றைய இந்தியா அன்று காலனி ஆதிக்கத்தை எதிர்த்துத் தேசிய இயக்கம் கண்டபோது, துரும்பளவு பங்குகூட இடம்பெறா ஓரமைப்புக்கு விடுதலை நாள் மேடையில் இப்படிப் புகழாரங்கள்!
இந்தியா விடுதலை பெறுகின்றபோது, மதம் சார்ந்த நாடாக உருவாகவேண்டும் என்ற இந்தியத் தேசியர்களின் கனவைத் தகர்க்கும் வகையில், இந்து மகாசபையும், ஆர்.எஸ்.எஸ்.-சும் செயல்பட்டு வந்த தன் உச்சம்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சே, காந்தியின் மார்பு நோக்கி நீட்டிய துப்பாக்கி என்பதெல்லாம் கூறும் செய்தியென்ன?
ஆர்.எஸ்.எஸ். எனும் மத அடிப்படைவாத அமைப்பின் நூறாமாண்டு நாளில் இவ்வமைப்பின் உள்ளடக்கச் சிறப்பாகச் சொல்லப்பட்ட பண்புகளாகத் தேசக்கட்டுமானம், பாரம்பரியப் பாதுகாப்பு, சுயநலமின்மை, ஒழுங்கு, ஒழுக்கம், ஒருமை, ஒற்றுமை என்பன பற்றியெல்லாம் மீளாய்வு செய்யப் பெற வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. இவ்வமைப்பு நாடெங்கும் நடத்தும் ‘ஷாகா’ (Shaka) மூலம் நாட்டுப்பற்று வளர்க்கப்படுகிறது. உடற்பயிற்சி மூலம் இந்தியாவிற்கான உடற்கட்டுடன் கூடிய இளைஞர்கள் உருவாக்கப்படுகின்றனர் என்ற கட்டுக்கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனோநிலையிலிருந்து இந்தியக் குடிமக்களை மீட்டெடுக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
இவ்வமைப்பு பேசும் ஒருமை, ஒற்றுமையின் பொருள் என்ன? தேசக்கட்டுமானம் என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ். எதனை ஒழுக்கம் என்கிறது? ஒழுங்கு என்பதன் வரையறை என்ன?
மோகன் பகவத் தன் உரையில் பல ஆயிரமாண்டுகளுக்குமுன் இந்தியாவில் குடிபுகுந்தோரைப் பாரதக் கலாச்சாரம் தழுவி ஏற்றுக் கொண்டதாம். இந்நாட்டிற்குள் குடிபுகுந்து எஞ்சியிருப்போர் பலர் நம் அடையாளத்தை (Identity) இன்னும் பேணுவது சரியில்லையாம்?
இந்நாட்டில் குடிபுகுந்தோர் யார்? குடிபுகுந்தோர் யாரின் தயவில் குடிகளாக ஏற்கப்பட்டனர்? இம்மாதிரி கேள்விகளில் தொக்கி நிற்கும் அரசியல் என்ன? சனநாயக நாட்டில் யார் தயவில் யார் வாழ்வது? இந்நாட்டில் குடிபுகுந்தவர் யார்? என்ற தொல் ஆய்வுக்கு இடமில்லை என்றாலும், மதவாத ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் ‘இந்நாட்டின் முதன்மைக் குடிகள் எது?’ என்ற கேள்விக்கு விடைகாண முயன்றால், அடையாளத்தை இழக்க வேண்டிய நிலையிலிருப்போர் யாராயிருப்பர்?
வேற்று நாட்டிலிருந்து இந்தியாவில் குடிபுகுந்தோர் தம் அடையாளத்தை நிறுவக் கூடாதாம். இந்தப் பகைப் பேச்சை இந்தியப் பிரதமர் ஏற்கிறார், பாராட்டுகிறார். ஒற்றை அடையாளத்தை நாளும் நிஜமாக்கி வரும் இந்திய ஆளும் கட்சி இதனைத்தானே செய்துவருகிறது!
இந்திய நாட்டில் வாழ்வோர் இந்துக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்; இந்துமதத் தலைவர்களைப் போற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ளாதோர் இந்தியாவிலிருந்து எந்தச் சலுகையும் (Previllages) பெறத் தகுதியற்றவர்கள். இவர்கள் எவ்வித உரிமைகளையும் கோருவதற்கு (Chims) உரிமை இல்லை. ஏன் குடியுரிமைக்குக் (Citizen ship) கூடத் தகுதியில்லை; அந்நியர்கள் (Giliens) - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோல்வால்கர் முன்மொழிந்த கட்டளை இது. இந்த முன்மொழிவைக் கோல்வால்கர் முன்வைத்தார்; மோகன் பகவத் வழிமொழிந்தார்; மோடி நெகிழ்ந்துபோனார்.
ஏற்கெனவே கோல்வால்கர் முன்மொழிந்த இந்தியாவின் எதிரிகள் பட்டியலில் இசுலாமியரும் கிறித்தவரும் பொதுவுடமை இயக்கமும் இருப்பதை அறிவோமல்லவா? இம்மூன்று தரப்பினரையும் எதிரிகளாக அடையாளப்படுத்துவதற்கான காரணம் என்ன?
இந்திய மக்களை இந்து தேசியம் (Cultural nationalism) எனும் பிரிவினைவாதக் கோட்பாட்டினை முன்வைத்த ஆர்.எஸ்.எஸ். பரந்து விரிந்த நாட்டின் பன்மைத்தன்மையை அழித்து ஒற்றைப் பண்பைத் திணிக்கும் விதை கண்ட ஆர்.எஸ்.எஸ். மானுடத்தின் உயர் மாண்பினைச் சிதைக்கும் வண்ணம் ‘நாம்’ (We) - ‘அவர்கள்’ (they) என்ற பேதத்தினை வகுப்புவாதக் கருத்தியலின் அடிப்படையில் கட்டமைத்து, சிறுபான்மையினரின் மத அடையாளங்களைப் பகை அடையாளமாகத் திட்டமிட்டு, அதில் வெற்றியும் கண்ட வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கொண்டாடப்பட வேண்டிய அமைப்பா?
நூறாண்டு வளர்ச்சியின் அடையாளம் ஒன்றியத்தில் இன்று ஆட்சிப் பொறுப்பு! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று 36 கிளை அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், இந்து முன்னணி, பாரதிய சனதா கட்சி என்ற பல்வேறு அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. தமிழ்நாட்டின் இந்து முன்னணியாயினும், இந்து சாமியார்களை மூலவர்களாகக் கொண்டு இயங்கும் விசுவ இந்து பரிஷத் ஆயினும் பெயர்கள் தாம் வெவ்வேறே தவிர, இலக்கும் இயக்கமும் ஒன்றே. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தொண் டர் பேசும் மொழியும், கடைக்கோடி இந்துத்துவ உறுப்பினர் பேசும் மொழியிலும்-கருத்தியலிலும் எந்தவிதக் குழப்பமும் காண இயலாது. காலந்தோறும், இடம்தோறும் மாறுபட்டுப் பேசும் முறை இவர்களிடம் இல்லை.
ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கப்பரிவாரங்கள், எவையெல்லாம் இந்தியாவுக்கான கொள்கை, முதன்மை (Priority) என்று கூறிவந்ததோ, நடைமுறைக்குச் சாத்தியமற்றவை என்று மறுக்கப்பட்டும்-ஏளனப்படுத்தப்பட்டும் வந்தனவோ... அவையெல்லாம் படிப்படியாகச் சாத்தியமாகியே வருகின்றன. அயோத்தியில் இராமருக்கான ஆலயம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு, பொதுச் சிவில் சட்டம், வக்பு உரிமை மறுப்பு, மதமாற்றத் தடைச்சட்டம், இந்தியைத் தேசிய மொழியாக அறிவிக்கத் துடிக்கும் போக்கு, மாநில உரிமைகளைப் பறித்தல் என்பனவெல்லாம் ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுதிமொழிகள். இவற்றில் பெரும்பான்மையும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
‘சாத்தியமற்றவை’ எனக் கருதப்பெறும் கொள்கைகள் பல சாத்தியமாகி வருதலை நாம் காண தவறிவிடக்கூடாது. மதரீதியாகக் குடிமக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, தேர்தல் சனநாயகம் முழுமையாகத் திருடப்பட்டு, மத அடிப்படையிலான பெரும்பான்மை உருவாகும் நிலையில் பெரும்பான்மை வாதம் ஆட்சியேற்கும். பெரும்பான்மைவாதம் மத ரீதியான பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், மதச் சிறுபான்மையினர் நிலை அப்போது என்னவாகும்? தனித்த இயல்புடைய தேசிய இனங்களின் கதி என்னவாகும்? பெருமுயற்சியோடும் பெருங் கனவோடும் நம்பிக்கை தரும் வகையில் தரப்பட்ட அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும் என்னவாகும்?
உச்ச நீதிமன்ற நீதியரசர் மீது ‘சனாதனத்தை இகழ்ந்தார்’ என்ற பெயரில் வழக்குரைஞர் ஒருவர் செருப்பைத் தூக்கி எறிகிறார்! சனாதனமும் சனநாயகமும் இணைந்து செல்லமுடியாது என்பதே உண்மையாயிருக்க, சனநாயகம் தரும் உரிமைவழி உருவாக்கப்பட்ட நீதி பரிபாலன அமைப்பின் வழக்குரைஞர் உயர்வு பெற்ற ஒருவர், சனாதனக் கோட்பாட்டை இகழ்ந்தார் என்ற பெயரில் நீதிமன்றத் தலைமை நீதிபதியை எப்படி அவமானப்படுத்த முடியும்?
‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (அக்டோபர் 6) உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கேவலமான நிகழ்வொன்று நடந்துள்ளதைச் செய்தியாக அறிவித்தது. ‘கருவுற்ற முஸ்லிம் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க இந்து டாக்டர் மறுப்பு’, ‘மதத்தின் அடிப்படையில் மருத்துவ மறுப்பை அனுமதித்த கொடுமை.’ இந்நிகழ்வு பற்றி அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மசூத், “இந்நிகழ்வுகள் அடங்கிய பாகுபாடும் சமூகத்தை மதவாரியாகப் பிரித்துப் பிரிவினைவாத அரசியல் நடத்தும்போக்கும் ஆளும் பாரதிய சனதாவின் கை வந்த கலை” என்கிறார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கும் இனப்படுகொலைக்கெதிரான அமைப்பின் இயக்குநர் கிரகோரி ஸ்டார்டன் அவர்கள், “உலக வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய இனப்படுகொலை (Genocide) நாடாக மாறும் நிலை உருவாகி வருகிறது” என்கிறார். இதுபோன்ற கணிப்புகள் வெறும் கற்பனைகள் அல்ல; இந்திய விடுதலைக்கு முன்பும் பின்பும் இந்தியாவில் நடந்தேறிய மதக்கலவரங்களால் ஏற்பட்ட மனித இழப்புகள் அனைத்திலும் சங்கப் பரிவாரங்கள் பெரும்பங்கு வகித்தன என்பதைப் பல விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் தந்துள்ளன.
“நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண் டிய உண்மை என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு பாசிச மனப்பான்மையை (Mentality) உள்வாங்கிய ஒன்று என்பது. இவ்வமைப்பை ‘பாசிசம்’ என்றே அழைப்பேன். இவ்வமைப்பின் பாதையைப் புரிந்துகொண்டோர் ஹிட்லரின் பாசிசம் ஐரோப்பாவில் என்ன கோரத்தை நிகழ்த்தியது என்பதை அறிவர். இந்திய நாடு ஹிட்லர் காட்டிய வழியைப் பின்பற்றாது என்பதை நம்புவோம்” -ஜவஹர்லால் நேரு (Nehru’s India, Aditya Mukherjee, பக். 83).
பாசிசத்தை எப்போது, எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து கொண்டிருக்கின்றது. வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், கலாச்சாரமும் பண்பாடும், இந்த வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் நலிந்து கொண்டிருக்கின்றது. கரடுமுரடாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த உலகில், கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் அர்த்தம் பெறுவதில்லை. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னிறுத்துகின்ற கொண்டாட்டங்கள் இன்று கடமைக்காகக் கொண்டாடப்படும் வெற்றுத் திருவிழாக்களாக மாறிவிட்டன.
இதில்,
தீபாவளிப் பெருவிழாவும் விதிவிலக்கல்ல. தீபாவளிப் பெருவிழா ஒரு மகிழ்ச்சியின் விழா மற்றும் அன்பின் விழா. இது பாரம்பரியமாக இந்து மதத்தைச் சார்ந்த மக்களால் கொண்டாடப்பட்டாலும், இன்று இப்பெருவிழா சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து ஒவ்வோர் இந்தியராலும் கொண்டாடப்படுகிறது. இப்பெருவிழா மக்களோடு மக்களாக எல்லாக் கலாச்சாரங்களிலும் ஊறிவிட்டது. கத்தோலிக்கத் திரு அவையும் கூட தீபாவளி என்னும் இந்த ஒளித் திருவிழாவைக் கிறித்தவத்தின் கடவுளான இயேசு கிறிஸ்துவோடு இணைத்து ‘இயேசு கிறிஸ்து உலகின் ஒளி’ என்னும் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
தீபாவளிப்
பெருவிழா என்பது இராவணனை வீழ்த்தி இராமர் அயோத்திக்குத் திரும்பிய தினமாகவும், நரகாசுரனை வென்று கிருஷ்ண பெருமான் உலகிற்கு மகிழ்ச்சியைப் பரிசளித்த தினமாகவும், விக்ரமாதித்ய மன்னர் முடிசூட்டப்பட்டதன் தினமாகவும் கொண்டாடப்பட்டாலும், இப்பெருவிழாவின் முக்கிய நோக்கம், எப்போதும் நன்மையே வெல்லும் மற்றும் எப்போதும் இருளுக்கு ஒளியும்-பொய்மைக்கு மெய்மையும் அடிபணியாது என்பதாகும்.
தீபாவளிப்
பெருவிழா ஒருநாள் கொண்டாட்டம் அல்ல; மாறாக, தீபாவளிப் பெருவிழா ஐந்து தினங்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் ஒரு பெருவிழா!
‘தன்தேரஸ்’
என்ற பெயரில் முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் முன்னிறுத்தி தொடங்குகின்றது. இந்தத் திருநாளில் ஆரோக்கியத்திற்குச் சான்றாக ஒவ்வொரு வீடுகளிலும் விளக்கு ஏற்றப்படுகின்றது. செல்வத்திற்குச் சான்றாக மக்கள் இன்றைய நாளில் அணிகலன்கள் முதலிய பொருள்களை வாங்குகிறார்கள்.
அசுரன்
நரகாசுரன் அழிக்கப்பட்ட தினம் எண்ணெய் குளியலோடு தீபமேற்றி நரக சதுர்த்தசி என்னும் பெயரில் இரண்டாம் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
மூன்றாம்
நாளில் முக்கியத் திருநாளான தீபாவளிப் பெருவிழா வீடுகளில் விளக்கேற்றி இனிப்புகள் பரிமாறி பட்டாசுகளோடு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணபெருமான்
கோவர்த்தன மலையைத் தூக்கி மக்களைப் பாதுகாத்த நாள் அறுசுவை உணவோடு நான்காம் நாள் கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாய் தூஜ் என்னும் சகோதர-சகோதரிகள் மற்றும் இதர உறவுகளைச் சிறப்பிக்கும் தினமாக ஐந்தாம் நாள் கொண்டாட்டத்தோடு இப்பெருவிழா முடிவடைகின்றது. இந்த விஞ்ஞான உலகில் சொத்து முதல் சொந்தங்கள் வரை அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற அருமையான ஒரு திருவிழாவைச் சொத்தை விற்று, சொந்தங்களைத் தொலைத்து வெறும் வெற்றுச்சடங்காக கொண்டாடுவது நாகரிக உலகின் அநாகரிகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
மகிழ்ச்சியின்
பிறப்பிடமாக இருக்கவேண்டிய தீபாவளிப் பெருவிழா, இன்று தீரா வலிகளை வருவிப்பதாக மாறிவிட்டது. ஐந்து தினங்களில் பெயர்கள்தான் மாறவில்லை. ஆனால், அதன் விழுமியங்கள் அனைத்தும் காற்றோடு போய்விட்டன. செல்வத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற முதல் நாள் கொண்டாட்டம் செல்வத்தைச் சேர்க்கின்ற பெயரில் அடமான கடன்களையும், உத்தரவாத கடன்களையும் சேர்த்து விடுகின்றது. சமவட்டித் தவணைகள் (EMI) கூட
இன்று பல குடும்பங்களின் மன
அழுத்த அசலாக மாறிக் கொண்டிருக்கின்றது. புதுப்பொருள்களோடு கடனும் மன அழுத்தமும் அதன்
சலுகைகளாக நம்மோடு சேர்ந்துகொண்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
நீர்நிலைகளில்
குளிக்கின்ற ஆரவாரமான ஆனந்த எண்ணெய் குளியல்கள் இன்று குளியல் அறைகளோடு முடங்கிவிட்டன. இனிப்புகள் செய்வதற்கான மூலப்பொருள்களையே விளைவிக்கின்ற நம்முடைய சமூகம், இன்று இனிப்பு பலகாரங்களையே இணையதளத்தில் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. பாரம்பரிய உணவுகள் இன்று பார்ப்பதற்கே அரிதாகிவிட்டன. ஆரோக்கியமாக வீட்டில் சமைக்கப்பட்டு வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகள், இன்று ஆடம்பரமான கடைகளில் ஆரோக்கியமின்றிச் சமைக்கப்பட்டு இலையின் வடிவில் இருக்கின்ற நெகிழிக்காகிதங்களில் பரிமாறப்படுவது வேதனையைத் தருகின்றது. குடும்பங்களில் உறவினர்கள் ஒன்றுகூடி உண்டு களித்து, அன்போடு பகிர்கின்ற உறவுப் பரிமாற்றம் இன்று முகநூல் இணைய குறுஞ்செய்திகளோடு முடிந்துவிடுகின்றன.
முன்னேற்றம்
என்ற பெயரில் நல்லவற்றைத் தொலைத்துவிட்டு நாளைய சமூகம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைய தீபாவளிப் பெருவிழா அர்த்தமுள்ள ஒரு விழாவாக இருக்க வேண்டும் என்றால், அது எதற்காகக் கொண்டாடப்படுகின்றது என்பதன் அர்த்தத்தை உணர்ந்து, அதை ஓர் ஆடம்பரத் திருவிழாவாக மட்டுமின்றி, அதை ஒரு கலாச்சாரப் பண்பாட்டின் வெளிப்பாடாகக் கொண்டாடுவது சாலச்சிறந்தது.
அறிவியல்
விஞ்ஞான வளர்ச்சி, மூடநம்பிக்கைகளை அழித்து, மனிதனின் வாழ்க்கைமுறையை மேம்படுத்துகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அதே அறிவியல் விஞ்ஞான வளர்ச்சி கலாச்சாரப் பண்பாடுகளைச் சீரழிக்கின்ற பொழுது, அதைத் தகுந்த முறையில் கையாண்டு நம்முடைய கலாச்சாரப் பண்பாடுகளை அறிவியல் வளர்ச்சியோடு மேம்படுத்தி நம்முடைய வாழ்க்கையைச் சீரமைப்பது நம்முடைய கடமையாக இருக்கின்றது.
எனவே,
இந்தத் தீபாவளி பெருவிழா கலாச்சாரப் பண்பாடுகளைச் சிதறடித்து நம்முடைய வாழ்வில் உடல் மற்றும் உள்ளத்திற்குத் தீராவலி தருகின்ற, கடமைக்குக் கொண்டாடப்படும் விழாவாக இல்லாமல், நம்முடைய வாழ்வில் ஒளி ஏற்றுகின்ற தீப ஒளியாகிய இறைவனின் ஆசிரையும், உறவுகளின் அன்பையும் அள்ளித் தருகின்ற உன்னதத் திருவிழாவாக அமைய ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். தீபாவளி ஒளித் திருவிழா நம்முடைய வாழ்வில் ஒளியேற்றுவதாக!
அன்று காலை வழக்கத்திற்கு மாறாக, பேருந்தில் கூட்டம் அலைமோதியது. பேருந்து என்னும் ஒற்றையடிப்பாதை கொண்ட உருளும் உலகத்திற்குள்தான் எத்தனை முகங்கள்! மகிழ்ச்சியோடு சில முகங்கள்; மௌனத்தில் சில முகங்கள்; கடுகு பொட்டித்தெறிக்கும் எரிச்சலோடு சில முகங்கள்; சன்னலோரத்தில் காற்று வாங்கும் சில முகங்கள்; பேருந்து மேற்கம்பியைப் பிடித்தநிலையில் சில சோர்ந்த முகங்கள்; கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்கக் காத்திருக்கும் சில திருட்டு முகங்கள்... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எத்தனை
விதவிதமான முகங்களாக இருந்தாலும், நடத்துநர் சங்கரனின் சிரித்த முகப்பொலிவிற்கு முன்பாக
அனைத்து முகங்களும் மனித முகங்களாகவே மாறிப்போயின.
“இடையன்குடி
யாராவது இருக்கீங்களா? இறங்குங்க...”
விசில்
ஊதி பேருந்தை நிறுத்தினார் நடத்துநர் சங்கரன். சிலர் அந்த நிறுத்தத்தில் இறங்க, மேலும்
சிலர் அந்த நிறுத்தத்திலிருந்து பேருந்துக்குள் ஏறிவந்தனர். மீண்டும் விசில் ஊதப்பட்டு
பேருந்து நகர்ந்தது.
“டிக்கெட்
டிக்கெட்! யாரும் படியில நிக்காதீங்க. உள்ள வாங்க” என்று
கூறிக்கொண்டே நடத்துநர் சங்கரன் அந்தப் பேருந்தின் முன்பக்கமாகக் கூட்ட நெரிசலுக்குள்
நகர்ந்து சென்றார்.
சங்கரனுக்கு
ஒவ்வொரு நாளும் எத்தனை நகர்வுகள் - பழைய காலப் பெண்டுலக் கடிகாரம் போல இங்கும் அங்குமாக.
“யோவ்!
பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” கோபத்தில் கர்ச்சித்தாள்
நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். அவளுடைய கண்ணாடியும் சுடிதார் காஸ்டியூமும்
அவளுக்கு ஒரு படித்த வேலைக்குப் போகும் பெண்ணுக்குரிய தோற்றத்தைக் கொடுத்தன.
ஒரு
நிமிடம் சங்கரன் நிலைகுலைந்து போனார். தனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் இப்படியோர்
அவமானத்தை அவர் சந்தித்ததில்லை.
“மன்னிச்சிடுமா.
இந்தக் கூட்ட நெரிசலில் தெரியாமப்பட்டிருக்கும்” என்று
கூறியபோதும் அந்தப் பெண் விடுவதாகத் தெரியவில்லை. அவருடைய சட்டைக் காலரைப் பிடித்து
அவரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுவதுபோல மூர்க்கமாகி நின்றாள். சங்கரன் அவமானத்தில்
கூனிக்குறுகி நின்றார்.
“வண்டிய
போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்க. பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரமாப் போச்சா?” அந்தப் பெண்ணின்
சப்போர்ட்டுக்குச் சில ஆண் ஹீரோக்கள் தங்கள் குரலை உயர்த்திப் பேசினர். “அவர எங்களுக்கு
நிறைய வருசமாத் தெரியும். அவர் அப்படித் தப்பா நடக்கிறவரில்லை” என்று சங்கரனுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்காமலில்லை.
இந்த
நிகழ்வுகளையெல்லாம் சில இளைய நெட்டிசன்கள் தங்கள் மொபைல் போனில் பதிவு செய்து தங்களால்
முடிந்த அளவிற்குச் சமூகப்பற்றினை வெளிப்படுத்தினர்.
பேருந்து
ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தினார். சில நிமிட உச்சக்கட்டக் குழப்பத்திற்குப்
பிறகு கொஞ்சம் அமைதி திரும்பியது. சில அன்றைய நாளுக்கான பேருந்து நாட்டாமைகள் பிரச்சினையைச்
சுமூகமாகத் தீர்த்து வைத்தன. பாதிக்கப்பட்டதாகக் கூறிய அந்தப் பெண்ணும் அமைதியானாள்.
அவளுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிப் போனாள். இதற்கிடையில் பலரும் பல நிறுத்தங்களில்
இறங்கிப் போயிருந்தனர். சங்கரன் தன் முகத்தின் பொலிவை இழந்திருந்தார். ஆயினும், அவருடைய
விசில் ஒலியெழுப்பாமலில்லை. பேருந்தும் திசையன்விளை நோக்கிச் சென்று சேர்வதற்குள் அவரைப்பற்றிய
செய்தி இணையம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது. சங்கரன் சில நொடிப்பொழுதினிலேயே சமூக
விரோதியானார்.
“அய்யோ!
என் செயினைக் காணவில்லை” என்று ஒரு பெண் கதறிக்கொண்டிருக்கும்போதே,
“என் பர்சையும் காணல” என்று மற்றொருவர் கூற மீண்டும் குழப்பத்தின்
நெடுஞ்சாலையில் பயணித்தது அந்தப் பேருந்து. ‘யார் திருடியது?’ என்று யாருக்கும் தெரியவில்லை.
‘எப்படி நடந்தது?’ என்பதும் புரியவில்லை.
போலீசில்
புகார் கொடுக்கப்பட்டது. திருட்டு கொடுத்தவர்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டாலும்,
தங்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றார்கள். சங்கரனுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும்
இந்தக் குழப்பத்திற்கெல்லாம் காரணம், “யோவ்! பார்த்துப் போகத் தெரியாது. பொம்பளைங்கள
இடிச்சிக்கிட்டுதான் போவியோ?” என்று அந்தப் பெண் வேண்டுமென்றே ஏற்படுத்திய களேபரமும்,
அவளுடைய கூட்டாளிகளின் கைவரிசையும் என்று புரிய தொடங்கியபோது பேருந்து காலியாக இருந்தது.
தங்கள்
பணத்தை இழந்தவர்கள் காவல்துறையிடம் முறையிட்டார்கள். தன்மானத்தையும் தன்மரியாதையையும்
இழந்த சங்கரன் யாரிடம் முறையிடுவார்?
ஊடகம்
ஒரு சனநாயக நாட்டின் நான்காவது தூண். அரசியலை, சமூகத்தை, தொழில்நுட்பத்தை, வாழ்க்கையைக்
கற்பிக்கின்ற கல்விச்சாலை. அதே ஊடகம் ஊதாரியாய்ப் போனால் அது சமூகத்திற்குப் பெரும்
ஆபத்தை விளைவிக்கும். சமீப காலமாக ஊடகங்கள் நீதிமன்றம் செய்கின்ற விசாரணையைச் செய்யத்
தொடங்கியிருப்பதை ‘ஊடக விசாரணை’ (Media
Trail) என்கின்றனர். டி.ஆர்.பி.-க்காகத்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாகக்
காணப்படுவதை நாம் காண்கின்றோம்.
இந்திய
அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) குடிமக்களுக்குப் பேச்சு மற்றும்
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை வழங்குகிறது. இந்திய அரசியலமைப்பு கருத்துரிமை
அல்லது பேச்சுரிமையை (Freedom to Speech) நமக்குக் கொடுத்திருந்தாலும், அது
ஒரு வரையறைக்குள்ளும் வரைமுறைக்குள்ளும் செயல்படவேண்டும். இன்று பேச்சுரிமை என்ற போர்வையில்
சமூக ஊடகங்களிலும், வெகுசன ஊடகங்களிலும் ‘ஊடக விசாரணை’ நடத்தப்பட்டு
ஒருவரின் ‘தனியுரிமைக்கான உரிமை’ (Right
to Privacy) மறுக்கப்படுகின்றது.
‘தனியுரிமைக்கான உரிமை’ என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது
பிரிவின்கீழ் வருகிறது. உதாரணமாக, ஒருவரின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது,
தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது அல்லது அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிடுவது
போன்ற செயல்கள் தனியுரிமை மீறல்களாகக் கருதப்படுகின்றன.
‘ஊடக
விசாரணை’ என்பது நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கும்
நியாயமான விசாரணை போக்கைத் திசைதிருப்புவதோடு, ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்மீது
ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அந்த நபர் குற்றவாளி
என்ற ஒரு கருத்தை உருவாக்குகிறது. ஒரு விசாரணையின் முடிவில் குற்றவாளி என்று நீதிமன்றம்
அறிவிக்கும் வரை, ஊடகங்கள் ஒருவரைக் குற்றவாளி என்று முடிவு செய்வது சட்டத்தின் ஆட்சிக்கு
எதிரானது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், 1971-இன் பிரிவு 12-யின் அடிப்படையில் ஊடக
விசாரணையில் ஈடுபடும் வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.
ஊடகங்கள்
நீதியைப் பாதுகாப்பதே தவிர, நீதியை வழங்குகின்ற தளம் அல்ல; ‘எல்லாரும் ஊடகம், எல்லாரும்
நேயர்கள்’ என்ற இக்காலச் சூழலில், ஊடகங்கள் இன்னும்
அதிகமாகப் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
ஊடகங்கள்
விசிலாக இருக்கட்டும், விஷமாக அல்ல!
தமிழ்நாடு அரசியல் களத்தில் தேர்தல் அனல் பறக்கிறது. 2026-ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு மேடை தயாராகி விட்டது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில் 6.36 கோடி வாக்காளர்களை வசியம் செய்யும் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் வியப்பூட்டுகின்றன. மாநாடுகள், யாத்திரைகள் என வாணவேடிக்கைகள் தினமும் நடக்கின்றன.
தி.மு.க. மற்றும்
அ.தி.மு.க.-வின் இரு துருவ அரசியல், மாற்று அரசியல் எனப் பரபரப்பு கூடுகிறது.
மூன்றாவது அணியான ‘நாம் தமிழர் கட்சி’யும், நான்காவது அணியாகத் தமிழக வெற்றிக் கழகமும் எதிர்களம் காண்கிறார்கள். தமிழ்நாடு வாக்காளப் பெருங்குடிகளை வகை தொகை பிரித்து ஆய்வோம்.
தமிழ்நாடு
வாக்காளர்களில் 3.11 கோடி ஆண்கள், 3.24 கோடி பெண்கள், 9,120 பேர் மூன்றாம் பாலினத்தவர், 3,740 வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்காளர்கள், 4.78 இலட்சம் வாக்காளர்கள் மாற்றுத்திறன் படைத்தோர், 85 இலட்சம் வாக்காளர்கள் இளையோராக அடையாளம் காணப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின்
ஒட்டுமொத்த வாக்காளர்களையும் வேறு வகையாகப் பிரிக்கலாம். 40 இலட்சம் வாக்காளர்கள் மொழிவாரி சிறுபான்மை மக்கள். 80 இலட்சம் வாக்காளர்கள் மதவாரி சிறுபான்மை மக்கள். இவர்கள்தாம் தமிழ்நாடு தேர்தல் களத்தில்
வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்கள். இவர்கள் வாக்குகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், அ.தி.மு.க. எனும்
அரசியல் கட்சி, பா.ச.க.வோடு கூட்டணி அமைத்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரு துருவ அரசியலில் ஏற்படப் போகும் பெரிய சம்மட்டி அடி அது.
2031-தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலை நோக்கிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்திட்டம் நிறைவேறிவிட்டது. ‘திராவிடக் கட்சிகள் இல்லா தமிழ்நாடு’
என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வைச் சிதைக்கப்
போட்ட திட்டம் கண்கூடானது.
2024-மக்களவைத் தேர்தலில்
‘இந்தியா’ கூட்டணி
221 சட்டமன்றத் தொகுதிகளில் முதலிடம் பெற்றது. அ.தி.மு.க. 8, தே.தி.மு.க.
2, பா.ம.க. 3 சட்டமன்றத்
தொகுதிகளில் முதலிட வாக்கை அள்ளின. விழுக்காட்டில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘இந்தியா’ கூட்டணி 48% வாக்கையும், அ.தி.மு.க. கூட்டணி 21%
வாக்கையும், பா.ச.க.
கூட்டணி 18% வாக்கையும், நாம் தமிழர் கட்சி 8% வாக்குகளையும்
பெற்றன. கூட்டணிகளைப் பொறுத்தவரை ‘இந்தியா’ கூட்டணியினர் 2017 முதல் ஒருங்கிணைந்து வலுவாக உள்ளனர். கூடவே தே.மு.தி.க.
மற்றும் பா.ம.க.
இராமதாஸ் அணிக்கு தி.மு.க.
வலைவீசுகிறது. தமிழ்நாடு முதல்வரின் 50-வது திருமண நாள் விருந்து என்று அழைத்து, இவ்விவரங்களைத் தோழமையோடு பேசி முடித்தார்கள்.
மக்களவைத்
தேர்தலில் அ.தி.மு.க.-வுடன் கூட்டணியில்
இருந்த தே.மு.தி.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ.
போன்ற இயக்கங்கள் ‘நன்றி’,
‘வணக்கம்’ எனக்
கூறி வெளியேறிவிட்டன. ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற நடிகர் விஜய் அவர்களுக்கும், கூட்டணிக்கு ஆளில்லாத நிலையாக 2026 - தேர்தல் களம் உள்ளது.
அண்மைக்
காலங்களில் சாதி வாக்குகளை அடிப்படையாகக் கொண்ட மண்டலவாரி மக்களின் மனநிலை பேசப்படுகிறது. வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், டெல்டா பகுதி, சென்னை, திருவள்ளூர் எனப் பகுதிப் பிரிப்பு உள்ளன. சாதிக்கட்சிகள், தலித் வாக்கு வங்கி எனக் குறிவைத்த வாக்குகள் தனி இரகம். அங்கும் எல்லாக் கூட்டணிகளும் முட்டி மோத வேண்டும். மக்கள் மனநிலை தேர்தலுக்கு முன், தேர்தல் காலத்தில், தேர்தலுக்குக் கடைசி வாரத்தில்... என மாறி மாறிப்
பிரதிபலிப்பதாகும்.
‘இந்தியா’ கூட்டணி வலுவாக இருந்தாலும், தினமலரின் திண்ணைப் பிரச்சாரம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொய்ப்பிரச்சாரம்
பெரிய அளவில் வெற்றி கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சட்டம்-ஒழுங்கை உள்ளடக்கிய, பெண்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் கலாச்சாரம் என்பதில் உருப்பெற்றுள்ளது. அது அடையாளங் காண முடியாத மாநிலங்களைத் தாண்டிய ஒரு வேளை குறி வைத்த அரசியல் சதியாகவும் இருக்கலாம். அதற்கும் வாய்ப்புகள் அதிகம். காவல்துறைப் பணிகள் சிறப்பாக இல்லை; அது வேகாத பருப்பாக உள்ளது. தமிழ்நாடு காவல்துறை, தேர்தல் காலத்தில் கவனமாக இல்லாவிடில், பழி முழுவதும் ஆளும் அரசின் தலையில் விழும். தற்போதும் இதே நிலைதான்.
தமிழ்நாடு
தேர்தல் களம் இரண்டு முக்கிய முழக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஒன்று, ஆளும் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது;
இரண் டாவது, யார் அடுத்த தமிழ்நாடு முதல்வர்? அந்தோ பரிதாபம்! எதிர்க்கட்சிகள் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்துப் பேசவில்லை. விலைவாசி உயர்வு, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின், நெசவாளர்களின், மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து வலுத்தக் குரல் தரவில்லை. சிறு குறு தொழில்கள் இல்லாத தமிழ்நாடு எனக் கவலைப்படவில்லை.
ஆரியத்திற்கு
எதிரான திராவிடம் என்ற அடிப்படை அறமின்றி, அ.தி.மு.க. கூட்டணி உருப்பெற்றது
தமிழ்நாட்டின் சாபக்கேடு. திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆரிய அரசியல் என்ற கோட்பாட்டு விதிகளுக்கு உட்பட்ட ஆட்டமாக, தமிழ்நாடு தேர்தல் களம் இருந்தால் அது நல்லது; நலம் தரக்கூடியது. அது மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை அணுகும் புதிய பாதையாகவும்
அமையும் .
தேர்தல்
களத்தில் கருத்துக் கணிப்புகள் என்ற மந்திரம், வாக்காளர்களின் வெற்றி பெறும் கட்சியைத் தேடும் ஓட்டத்தில் முதன்மைப் பெறுவது. அது வானவில்லாகத் தோன்றி மறைந்தாலும், அரசியல் கட்சித் தொண்டர்களை ஓடவும் சோம்பிக் கிடக்கவும் வழிவகை செய்யும். தமிழ்நாடு அளவிலான முடிவுகள், ஆளும் ‘இந்தியா’ கூட்டணிக்குப் பலம் சேர்ப்பதாக வெளியாகிறது,
2026 - தேர்தல் முடிவுகளில்
கருத்துக் கணிப்புகளின் உண்மைத் தன்மை தெரியும். இதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. அது சமூக ஊடகங்கள்! ஒரு நடிகரின் வீடியோ, ஒரு நாளில் 10 கோடி பார்வைகளும், ஒரு கோடி விருப்பங்களும் பெற்றதாக அறிகிறோம். எண்ணியல், கணினித் தொழில் நுட்பங்கள்... தெரியாதோர் வேண்டுமெனில் இதை ஏற்றுக்கொள்ளலாம். விவரம் தெரிந்தோர் வாய்விட்டுச் சிரிப்பார்கள். ஓர் ஆண்ட்ராய்டு செல்லிடைப்பேசி இருந்தால், எதையும் செய்யலாம். அதில் பொய்யை வலியக் கூறலாம் என்பதே எதார்த்தம். தமிழ்நாடு தேர்தல் களத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
தமிழ்நாடு
தேர்தல் ஆணையம் தன் பணியை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேசிய,
மாநிலக் கட்சிகளில் 11 கட்சிகளுக்கு தமிழ் நாட்டில் பொதுச்சின்னம் ஒதுக்குகிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சியாகச் செயல்பட்டு, பொதுச்சின்னம் இல்லாத கட்சிகளின் எண்ணிக்கை 15. தமிழ்நாட்டில் பதிவு செய்து தேர்தலில் நிற்காத 22 கட்சிகளை 2025, ஆகஸ்டில் தேர்தல் ஆணையம் அடையாளம்
கண்டு, அக்கட்சிகளின் பதிவை இரத்து செய்தது.
தனிக்கட்சிகளைவிட
கூட்டணிகளே வெற்றிக்கு அடிப்படைக் காரணி. 2026, சனவரி முதல் மார்ச் வரை உருவாகிற புதுப்புதுக் கூட்டணிகளால் தமிழ்நாடு தேர்தலில்
சடுகுடு ஆட்டம்
புதிய மாற்றம் பெறலாம். 15 முதல் 20 விழுக்காடு உள்ள சிறுபான்மையின மக்களின் முடிவே, தமிழ்நாடு தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும்; கள எதார்த்தமும் இதுவே.