பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சபையின் (FSAG) 250-வது யூபிலி விழா மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் உள்ளது.
இந்த
எனது உரையில் சபையின் தோற்றம், நிறுவுநரின் அர்ப்பணிப்பு, இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் உள்ள ஆழமான உறவு மற்றும் ஏழை எளியோருக்காகச் சபையினர் ஆற்றும் பணி ஆகியவற்றை எடுத்துரைக்க விரும்புகிறேன். 250-வது யூபிலி விழா வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்!
தலைமை
அருள்சகோதரி மோ. தெரேசா ஞானமணி உள்பட அனைத்து அருள்சகோதரிகளுக்கும் மாநிலத் தலைவிகள், நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உடன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் யூபிலி விழா வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயேசு
சபை துறவிகள் மற்றும் கொன்சாகா சபை (FSAG) உறவு
இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் இடையேயான பிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு சபைக்கும், கொன்சாகா சபைக்கும் இடையே உள்ள உறவு தொப்புள் கொடி உறவாகும்.
கொன்சாகா
சபையை நிறுவியவர் இளம் வயதில் இந்தியாவுக்கு வந்த ஓர் இயேசு சபை அருள்பணியாளரான இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ ஆவார். இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகத்தை அடித்தளமாகக் கொண்டு, ‘எதைச் செய்தாலும் இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்’
என்ற உந்துதலுடன் சபையின் பணிகளைத் தொடங்கினார். இந்த இயேசு சபையின் வேகமும் துடிப்பும் இன்றும் கொன்சாகா சகோதரிகளிடம் நிலைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இயேசு சபையினரும் சகோதரிகளும் இணைந்து பணியாற்றும் இந்த உறவு எதிர்காலத்திலும் ஆழமாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அன்சால்தோ அவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொன்சாகா சகோதரிகள் தங்களின் வாழ்வாக மாற்ற வேண்டும்.
1773-ஆம் ஆண்டில்
இயேசு சபை தடை செய்யப்பட்ட போதும் தந்தை அவர்கள் துவண்டு
விடாமல் புதுச்சேரியில் ஆழமான ஆய்வு செய்து தனது ஆன்மிக வாழ்வை அடித்தளமாகக் கொண்டு, சமூக அக்கறையுடன் செயல்பட முடிவெடுத்தார். சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஓர் இல்லத்தை அமைத்து அவர்களுக்கான பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். சபை மற்றும் பிற ஆதரவுகள் இல்லாத சூழலிலும், கடவுளின் துணையையும் ஓர் இந்து நண்பரின் உதவியையும் மட்டுமே நம்பி கார்மேல் கான்வென்ட் கொன்சாகா இல்லம் மற்றும் போன் செக்கர்ஸ் இல்லம் ஆகியவற்றைத் தொடங்கினார். பெண்களுக்குக் கைத்தறி, நெசவு
போன்ற தொழில்களைக் கற்றுக்கொடுக்க நிறுவனங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
36 வயதில்
சபையை ஆரம்பித்து, 34 ஆண்டுகள் நம் தாய் மண்ணில் பணியாற்றி, 66 வயதில் காலமானது தந்தை அவர்களின் அயராத உழைப்பையும், இந்தியா மீதான அன்பையும் காட்டுகிறது.
கொன்சாகா
சபையினர் ‘ஏழைகளுக்கு நற்செய்தி’
என்பது வெறும் வாக்கியத்தில் மட்டுமல்ல, ஏழைகளுக்கு இதயத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதக் கொள்கையைத் தங்கள் பணிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.
மீண்டும்
ஒருமுறை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது ஆண்டு யூபிலி விழாவைக் கொண்டாடும் அனைத்துக் கொன்சாகா சகோதரிகளுக்கும், உடன் உழைப்பாளர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
1775-இல் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம் என்று இத்தாலி தேசத்தின் செசிலி தீவிலுள்ள மெசினாவின் அன்பு மகன் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட எம் சபை,… இன்று ‘பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபை’ என்ற பெயரைத் தாங்கி, ‘கொன்சாகா’ என்ற பெருங்குடும்பமாய், இதில் உள்ள எல்லாரும் கொன்சாகாவின் புதல்வியராய் ஒருங்கிணைந்து பணிசெய்து வருகின்றோம்.
250-ஆம் ஆண்டினைத்
தொட்டிருக்கும் எம் சபை, நன்றிப்பெருக்குடன் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகன்று வருகின்றது. இந்த 250-ஆண்டுகளில் எம் சகோதரிகளின் அர்ப்பணிப்பு, தன்னல மறுப்பு, கடின உழைப்பு, இறை-மறை பக்தி, கறைபடியா எளிய உள்ளம், எளிய வாழ்வு, வளர்ச்சி இவற்றை எண்ணும்போது என் உள்ளம் பேருவகை கொள்கின்றது. இறைவனின் அபரிமிதமான பராமரிப்பை நினைக்கையில் ‘நன்றி... நன்றி’ என்று மட்டும் என் நெஞ்சம் இறைவனை நோக்கிப் புகழ்ச்சிக் கீதம் இசைக்கின்றது.
எம்
நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ எம் சபையை இப்புதுச்சேரி மண்ணில் தோற்றுவிப்பதற்கான அடிப்படைக் காரணமாய் அமைந்தது சமூகத்தின் பல்வேறு விதமான அடக்கு முறைகள், சாதிய வேறுபாடு, உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்ற பிரிவினைகள், ‘தாழ்த்தப்பட்டோர்’ தலித்
மக்களை ‘தீண்டத்தகாதோர்’ என
முத்திரையிட்டு ஒதுக்கி வைத்தது. இளம் விதவைகள், பெண் குழந்தைகள் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட நிலை. பெண்களுக்குக் கல்வி மறுப்பு, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளான நிலை, பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டு, தெருவோரங்களில் அபலைகளாய் திரிந்த நிலை. இந்த
இழிநிலைகளைக் கண்ணுற்ற இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்ய தன் தாயகம் மறந்தார், தன் தாய் மொழி மறந்தார், தன் பண்பாடு மறந்தார். ஒடுக்கப்பட்ட,
விளிம்புநிலை மக்களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
தன்
மனநிலையைக் கொண்டவர்களாய் தனது உள்ளுயிரை புனித அலோசியஸ் கொன்சாகாவைப் பாதுகாவலராக வைத்து புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்
(இல்லம்) என்ற பெயரில் எம் சபையை உருவாக்கினார். அப்போது அவரோடு இணைந்து பணிசெய்ய விரும்பிய இளம்பெண்களைக் கொண்டு முகவரியற்றோரின் முகங்களாய் சுயநலம் விடுத்து வாழ, அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காய் விடுதலைக் குரலாய் குரலெழுப்ப வீரப்பெண்களாக உருவாக்கினார். ஆரம்பம் முதலே இளம்பெண்களை, குழந்தைகளை உருவாக்கும்
உருவாக்குநராகச் செயல்பட்டார்.
பாதிக்கப்பட்ட மகளிர், பெற்றோரை இழந்த குழந்தையர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மகளிர் என எல்லாருக்கும் வாழ்வு
வழங்கும் கற்பக விருட்சமாய் தந்தை திகழ்ந்தார்.
எம்
நிறுவுநர் தந்தை இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபை அவர் எமக்கு வகுத்தளித்த தனிவரத்தையோ, உள்ளுயிரையோ நீர்த்துப்போகச் செய்யவில்லை. மாறாக, கொன்சாகா சகோதரிகள் தங்கள் வாழ்வால், பேச்சால், மூச்சால், இருப்பால், பணியால் அதற்கு ஒவ்வொரு நாளும் உயிர் கொடுத்து வருகின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல; மாறாக, எம் சகோதரிகள் கல்லும் முள்ளும் நிறைந்திருந்த, வசதியற்ற, வாழ்வாதாரம் சொற்பமாகக் கிடைத்த இடங்களிலேயே பணிசெய்ய முன்வந்தனர். எங்கெல்லாம் போக்குவரத்து வசதியில்லையோ, மின்வசதி இல்லையோ, தண்ணீர் வசதி இல்லையோ, அடிப்படை வசதிகள் இல்லையோ... குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒதுக்குபுறமாய் வாழ்ந்த பகுதிகளில் அவர்களோடு அவர்களுக்காக அவர்களாகவே மாறிப்போய் வாழ்ந்தார்கள். அவர்களுக்காக தம்மைத் துறந்தார்கள், தம் சுகம் மறந்தார்கள், தம்முயிர் இழக்கவும் துணிந்தார்கள். அப்போதே எங்கள் பணி கண்டு, எங்கள் வாழ்வு கண்டு அரசு, கொன்சாகா அருள்சகோதரிகள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என்று அழைப்பு விடுத்தது. இதுவே எங்கள் பணிக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம்.
இன்றைக்கு
எங்கள் கொன்சாகா பெருங்குடும்பம் இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், வட மாநிலம் எனப்
பல்வேறு இடங்களிலும், ஐரோப்பாவில் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் எனப் பல இடங்களில் தன்
கிளைகளைப் பரப்பி எம் நிறுவுநர் தந்தையின் உள்ளுயிருக்கு உயிர்ப்பு அளித்து வருகின்றது.
திருத்தூதுப்பணியை
அதன் மதிப்பீடுகளான அன்பு, இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை உணர்ந்து செயல்படுத்திய நாங்கள் சமூகப்பணி, சமூக மாற்றப்பணி, நலவாழ்வுப்பணி, கல்விப்பணி என எங்கள் பணிகளை
விரிவுபடுத்தி ஒடுக்கப்பட்டோர் சார்பாக, எளியோர் சார்பாக ஓரணியில் இணைந்து பணிசெய்து வருகிறோம்.
‘ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம்’ என்பதை
எம் சகோதரிகள் தங்களது தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுகின்றனர் என்பது உலகறிந்த உண்மை.
இனிவரும்
காலங்களிலும் முன்பிருந்ததுபோல் எம்மவரின் பணி இம்மண்ணில் தொடரும். வசதியின்மைகளையும் வலிகளையும் இழப்பையும் இகழ்ச்சிகளையும் அவமானத்தையும் அவமதிப்பையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இயேசு ஆண்டவரின் உண்மைத் தொண்டர்களாய் எம் நிறுவுநர் தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எம் முன்னோர் வாழ்ந்து சென்ற பாதையில் ஆழமாய் எம் தடம் பதிப்போம்.
நாங்கள்
செய்யும் எல்லாப் பணிகளிலும் இறை அன்பும் பிறரன்பும் இரு கண்களென ஒளிர்ந்திடச் செய்வோம். தியாகமிக்க அன்னையர் போல் தியாகம் செய்யத் துணிவோம்.
எங்கள்
பணி எங்கு தேவையோ சிறப்பாக, பட்டி தொட்டிகளில், குக்கிராமங்களில் பணிசெய்ய வாய்ப்பு வரும்போது அதனைப் புறக்கணிக்காமல் அன்பாய் ஏற்றுச் செயல்படுவோம்.
250-ஆம் ஆண்டின்
அற்புதமான கொண்டாட்டத்தில் ‘புனிதத்தில் நிறைவைக் காண’ என்ற யூபிலி விழாத் தயாரிப்பு எங்களுக்குக் கொடுத்த உன்னதமான அழைப்பை ஏற்று, அதனை உணர்ந்து எங்கள் வாழ்வு, சொல், செயல், சிந்தனை எல்லாம் புனிதம் நோக்கியதாய் அமைய உறுதி ஏற்போம். அதனைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டுவோம். மக்கள் எங்களைத் தேடி வரட்டும் என்றில்லாமல், மக்களைத் தேடியதே எங்கள் வாழ்வு என்பதை எங்கள் முன்னோர் போன்று உணர்ந்து, மக்களைத் தேடி நற்செய்தியாய் நாங்கள் இருந்து, மகிழ்வின் செய்தியை வழங்கி எம் கடமைகளைக் கருத்தாய் செய்வோம்.
2025-ஆம் ஆண்டு
தாய்த் திரு அவை ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. தாய்த் திரு அவையின் யூபிலி ஆண்டின் சிறப்பில் எம் கொன்சாகா சபையும் 250-ஆம் ஆண்டு யூபிலி விழாவைச் சிறப்பிக்கின்றது என்பது இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெருங்கொடை. எனவே, இலக்கு மக்களோடு உள்ள எங்கள் பயணத்தில் எப்போதும் தடையிராது, தொடர்ந்து பணி செய்வோம். தடை வந்தாலும், இறைவன் துணை செய்வார். இதுவே எம்மவரின் நம்பிக்கை. நம்பிக்கை இழக்க மாட்டோம்; ஏனென்றால் கண்ணீரோடு விதை விதைப்பவர்கள் மகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்!
அன்புநிறை சகோதரிகளுக்கும், பிரான்சிஸ்குவின் குடும்பத்தினருக்கும், விழாவில் கலந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்! இந்த இனியதொரு நாள், நமது பிரான்சிஸ்கன் சகோதரிகள் 250 ஆண்டுகாலத் தன்னலமற்ற சேவைப் பணியை நிறைவுசெய்து, ஆண்டவருக்கு நன்றி செலுத்தும் யூபிலி நிகழ்வாக அமைவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நானும் ஒரு பிரான்சிஸ்கனாகக் கலந்துகொள்வது மிகுந்த பெருமையைத் தருகிறது. சபை அன்னை மோ. திரேசா ஞானமணி, மாநிலத் தலைவிகள் உள்பட அனைத்துக் குழுவினரின் அர்ப்பணிப்பும், அரும்பணியும் போற்றுதலுக்குரியவை. உங்களுடைய பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தியாக
வாழ்வின் சுவடுகள் 250 ஆண்டுகள் என்பது வெறும் கால அளவு அல்ல. அது தொடர்ச்சியான தியாகத்தின் சிகரம். இது நமது சபையின் பணியானது ஒருபோதும் தொய்ந்துவிடக்கூடாது என்பதற்கான உத்வேகத்தை அளிக்கும் ஒரு பெரிய மைல்கல் ஆகும். பணியின் தொடக்கம் மட்டுமல்ல, எதிர்காலச் சிந்தனை என்ற இலக்கோடு இந்த விழா அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
ஏழைகளுக்கான
நற்செய்தி “மறைவானவை வீட்டின் மேற்கூறையிலிருந்து அறிவிக்கப்படும்” என்ற
இறைவாக்குக்கு ஏற்ப, நீங்கள் மறைவாகச் செய்த பணி இன்று வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படுகிறது என்பதைக் காணும் போது மெய்சிலிர்க்கிறது. ‘Gospel To The Poor’(ஏழைகளுக்கு நற்செய்தி) என்ற உன்னத நோக்கத்தை, நீங்கள் மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறீர்கள். 1775 - இல் கொன்சாகா இல்லமாகத் தொடங்கி, 1886-இல் ‘பிரான்சிஸ்கள் சிஸ்டர்ஸ் ஆப் செயின்ட் அலோசியஸ் கொன்சாகா’
என்ற பெயரில் திரு அவையின் வடிவம் பெற்றது, உங்கள் சபையின் வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. புனித அசிசியார் தன் போதனைகளால் அல்லாமல், எடுத்துக்காட்டான வாழ்வுமுறையால் பலரைப் பின்பற்றுமாறு செய்தார். அவர் காட்டிய வழியில், மைக்கேல் அன்சால்தோ அவர்களால் உருவாக்கப்பட்ட சகோதரிகளாகிய நீங்கள், திருத்தந்தை லியோ XIV கூறியதுபோல, “Poor church
For The Poor” என்ற
இலக்குக்கேற்ப “poor Gonzaga for the poor” ஆகச் சேவை செய்கிறீர்கள். கல்விப்பணி, சமூகப்பணி, சட்டப்பணிகள் என உங்கள் சேவையின்
அனைத்துத் துறைகளிலும் நீங்கள் தொடர்ந்து சிறந்து விளங்க உளமார வாழ்த்துகிறேன். இறைப்பணி மென்மேலும் தொடரட்டும்! நற்செய்தி ஏழைகளைச் சென்றடையட்டும்! உங்கள் பணிக்கு இறைவன் எப்போதும் பரிசளிக்கட்டும்!
“அனைத்தும் கடவுளாலேயே உண்டாயின. அனைத்தும் கடவுளுக்காகவே இருக்கின்றன. அந்தக் கடவுளுக்கே புகழும் மாட்சியும் உரித்தாகுக” (உரோ 11:36). இவ்வசனம் இப்போது மிகப் பொருத்தமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தலைமை அன்னை கூறியது போன்று 250 ஆண்டுகளுக்கு முன்பாக மடம் என்ற நிலையில் இருந்த ஓர் அமைப்பு இன்று பெரும் குடும்பமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட
விருட்சத்தன்மை என்பது கடவுளால் மட்டுமல்லாமல், வேறு யாராலும் நமக்குக் கிடைத்திருக்காது. அலோசியஸ் கொன்சாகா சபை கடவுளால் தரப்பட்டது.
சத்தம்
இல்லாமல் சாதனை புரிகின்ற அற்புதமான அருள்சகோதரிகளால் சபை இன்று வளர்ந்து நிற்கின்றது. கடவுளுக்கு மட்டுமே இந்தச் சபை பணிபுரிந்து கொண்டிருக்கிறது.
தொடக்க
காலத்திலிருந்து இயேசு சபைக்கும் கொன்சாகா சபைக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. மைக்கேல் அன்சால்தோ என்ற இறை ஊழியர் மட்டுமல்ல, ஞானப்பிரகாசியார் என்ற பாதுகாவலர் மட்டுமல்ல, அன்று தொடங்கி இன்றுவரை உள்ள இயேசு சபையினர் எல்லாருக்கும் பங்களிப்பு புரிவதற்கான வாய்ப்பைக் கொன்சாகா சபை எங்களுக்குத் தந்திருக்கிறது.
நவதுறவு
நிலை கல்லூரிகளிலும், இன்னும் பல துறைகளிலும் பொறுப்பேற்று
இயேசு சபையினர் கொன்சாகா சபைக்கு உதவி புரிந்திருக்கின்றார்கள். ஆன்மிக ரீதியாக, சட்ட ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாகத் தெளிவுகளைத் தந்திருக்கின்றார்கள். இயேசு சபையினரோடு உறவினை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பினைக் கொன்சாகா சபை தந்திருக்கின்றது. எனவே, சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இயேசு
சபை என்ன பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றதோ அந்தப் பணிகளிலும் கொன்சாகா சபை பங்காளிகளாக இருக்கின்றார்கள்.
1986-ஆம் ஆண்டில்
வீதி நாடகம் வழியாக மக்களுக்குச் சமூக சேவை புரியும் நிலையில் நாங்கள் இருந்தபொழுது, சகோதரி அல்போன்சா அவர்கள் எங்களுடன் வந்து மக்களுக்கு உதவி செய்ய முன் வந்தார். கரிசல் என்ற பகுதியிலே துப்புரவு தொழிலைச் செய்கின்ற மக்களைக் கண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பணியில், பணியின் தோழர்களாகக் கொன்சாகா சபையினர் பணிபுரிந்து இருக்கின்றார்கள்.
பல
துறைகளில் பண்டித்துவமும் தெளிவும் பெற்றிருந்தாலும், சத்தம் இல்லாமல் சாதனை புரிகின்ற சபையாகக் கொன்சாகா சபை இருக்கின்றது. இதைத்தான் சபையின் பெரும் வரமாக நாங்கள் பார்க்கின்றோம்.
ஏழையாகத்
தாழ்ச்சி நிறைந்த இயேசுதாம் நம்மை ஏழைகள் வாழும் தெருக்களில் நடக்க வைக்கின்றார். ஏழ்மையும் தாழ்ச்சியுமான இயேசு நம் ஒவ்வொருவருக்கும் தூண்டுதலாக இருந்து நாம் பணியாற்ற உதவி செய்வாராக!
தாழ்ச்சியால்
நிறைந்திருந்த இயேசு பல சகாப்தங்களைக் காண
உங்களுக்கு அருள்புரிய வேண்டும். சகாப்தங்களைப் படைக்கின்ற காட்சிகளில் நாங்களும் உங்களுடைய சாட்சிகளாக இருப்போம். எனவே, இவ்வேளையிலே உங்களை வாழ்த்துகின்றோம்; உங்களுக்காகச் செபிக்கின்றோம்!
‘நற்செய்தியின் இதயம் ஏழைகள்’ என்பது நம் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகள்.
ஏழைகளை
நற்செய்தியிலிருந்து நாம் எடுத்துவிட்டால் அது இதயமற்ற செய்திகளாகத்தான் இருக்கும்.
ஏழைகள்
நற்செய்தியின் மையம் மட்டுமல்ல, ஆண்டவர் இயேசு கனவு கண்ட இறையாட்சி என்கிற இலட்சியச் சமுதாயத்தின் மையமாகவும் இருக்கின்றனர்.
விளிம்புகளில்
இருக்கிறவர்கள் மையத்திற்கு அழைத்து வரப்பட வேண்டும்; அப்பொழுதுதான் இறையாட்சி மலரும். விளிம்புகளில் இருக்கின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்ற பணியைப் பல்வேறு சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முட்டுக்கட்டைகளுக்கும் மத்தியில் இத்தனை ஆண்டுகளாகச் செய்து வருகின்ற FSAG சகோதரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொன்சாகா
சகோதரிகளின் தலைமை அன்னை அவர்களுக்கும் ஆலோசகர் சகோதரிகளுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு ‘உங்கள் பணி தொடரட்டும்; உங்களுடைய பணி திரு அவைக்கும் சமுதாயத்திற்கும் தேவை; ஆகவே, நீங்கள் சோர்வடையாமல் பணி செய்யுங்கள்’ என்று
வாழ்த்துகின்றேன்.
எங்கள் ‘கொன்சாகா’ பெருங்குடும்பம் இம்மண்ணில் இருநூறு ஆண்டுகளைக் கடந்து, மூன்றாவது நூற்றாண்டை நோக்கி 250 ஆண்டுகள் உயிரோட்டம் உள்ளதாய்த் தொடர்ந்து பயணித்து, தன் இருப்பாலும் வாழ்வாலும் பணியாலும் சாட்சியம் பகர்ந்து கொண்டிருக்கின்றது என்று எண்ணும் போதே, என் உள்ளம் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி இருகரம் குவிக்கின்றது, கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன, பேச்சற்று மெய்சிலிர்த்து நிற்கின்றேன்.
சீராக்கின்
ஞானநூல் 17:21-இல் கூறுவது போல், “ஆண்டவர் நல்லவர்; அவர் தம்முடைய படைப்புகளை அறிவார்; அவற்றை அவர் அழித்துவிடவில்லை; மாறாக, அவற்றை அவர் பாதுகாத்தார்.” ஆம், இம்மண்ணில் 250 ஆண்டுகள் துறவற அர்ப்பணம் வழி கொன்சாகாவின் துறவிகளாய் நாங்கள் பணிசெய்ய எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பிற்காய் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.
“நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள், ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள், திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள், கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்” (எசா
1:17) என்ற இறை வார்த்தைகளும், “ஏழையருக்கு
நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை
விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” (லூக்
4:16-18) என்ற நற்செய்தியின் மறைவாக்குகளும் எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல்
அன்சால்தோவுக்கு வாழ்வூற்றாய் அமைந்தன போன்று, எம்மவர்க்கும் ஒளிவிளக்காய் அமைந்தன என்றால் அது மிகையில்லை.
தந்தை
மைக்கேல் அன்சால்தோவிடம் கனன்று கொண்டிருந்த கனலின் நெருப்பினை ஒவ்வொரு கொன்சாகா சகோதரியும் பெற்று இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று பணிசெய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை.
கி.பி. 1771-இல் இந்தியாவின் புதுச்சேரி அரிக்கமேடு பகுதிக்குக் கடல் வழியாக இத்தாலியிலுள்ள செசிலி தீவிலுள்ள மெசினா நகரிலிருந்து வந்த இயேசு சபை அருள்பணியாளர் மைக்கேல் அன்சால்தோ, அன்று தன் அன்பான பணியால், இரக்கப் பார்வையால், கருணைமிக்க உள்ளத்தால் ‘மைக்கேல் நாதர்’ என்றழைக்கப்பட் டார். கி.பி. 1775-இல்
தந்தை அவர்கள் தனது முதல் பயணத்தில், முதல் பார்வையில், முதல் சவாலாய் உருவாக்கிய மடம்தான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்.
‘தீண்டத்தகாதவர்’ என்று
ஒரு சாராரைப் புறக்கணித்த சாதியப் பிளவு, பிரெஞ்சுப்
போரின் தாக்கத்தி னால் பெற்றோரை இழந்து திக்கற்றவர்களாய் அனாதைகளாக்கப்பட்ட குழந்தையர், கணவனை இழந்து தவித்த இளம் விதவை, கணவனால் கைவிடப்பட்ட திக்கற்ற மகளிர், தாழ்த்தப்பட்ட மகளிர் போன்றோர் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை, சுரண்டலுக்கு ஆளாகும் நிலை இருந்தது. இதுபோன்ற அடிமைத்தன அவலத்தைப் போக்க பாதிக்கப்பட்டவர்களோடு, புறக்கணிக்கப்பட்டவர்களோடு தோழமை கொண்டு, அவர்களின் மனிதம் காக்க உருவாக்கப்பட்டதுதான் புனித லூயிஸ் தே கொன்சாகா மடம்
- பேரன்பின் இல்லம். இன்று இது இறையருளாலும் பராமரிப்பாலும், எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் செபப் பரிந்துரையாலும், எமது முன்னோர்களின் தியாக வாழ்வாலும் பெரிய விருட்சமாய் வளர்ந்திருக்கிறது. திக்கற்றவர்களுக்கு அடைக்கலமாய், உறைவிடமாய் இருந்து வருகிறது.
ஆரம்பத்தில்
இயேசு சபை கலைக்கப்பட்ட போது இயேசு சபைக்கு மட்டும் இருண்ட காலம் அல்ல; இயேசு சபை கலைக்கப்பட்ட வேளையில் மறைப்பணியாளராக இந்தியா வந்து, தனது கொள்கையில் உறுதியாக நின்ற அருள்பணி. மைக்கேல் அன்சால்தோவால் உருவாக்கப்பட்ட எம் சபைக்கும் அது இருண்ட காலமே. அதனால் எம் சபை அமைதியான, ஆடம்பரமில்லா ஒரு வரலாற்றை தன்னகத்தே கொண்டு, மறைக்கப்பட்ட உலகிற்குத் தெரியாத ஒரு சபையாக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. ஆனாலும், கைவிடப்பட்ட இயேசு சபை அருள்தந்தையாக இருந்தாலும், மாற்று வாய்ப்புகள் இருந்தாலும், சொந்த நாட்டிற்குச் செல்லாமல், தான் விரும்பி ஏற்ற மறைப்பணியைச் செய்வதிலேயே அதிமிகு ஆர்வம் கொண்டார். அதோடு நின்றுவிடாது மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை வேரறுக்கவும்,
சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்டு ‘கடைநிலையினர்’ என்று
முத்திரை குத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவைப் புகட்டவும், மகளிரின் அடிமைத்தன விலங்கொடித்து, சுயமாய் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, சுயதொழில் செய்து முன்னேற அவர்களுக்கான நெசவுத் தொழிற்கூடங்களை உருவாக்கியும் எனப் பல்வேறு சமூக அக்கறையுள்ள பணிகளை ஈரமுள்ள நெஞ்சுரம் கொண்டவராய் செய்தார். தான் மட்டும் செய்யாமல், தன் அர்ப்பணிப்புப் பணியில் இயேசுவின் அடியொற்றி அர்ப்பணிப்புடன் தன்னலம் மறுத்து வாழ்ந்த ஆர்வமுள்ள மகளிரையும் இணைத்துக்கொண்டார். இவர்களைக் கொண்டு ஆதரவற்ற சிறார்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை குழந்தையருக்குக் கல்வி புகட்டினார். கைம்பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான மகளிருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கினார்.
சுயமாகப்
பொருள் ஈட்டும் வகையில் தொழிற் கல்வி அளித்து, சுயமரியாதையோடு வாழ வழி செய்தார். பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போன்று, தந்தையோடு இணைந்து பணியாற்றிய சகோதரிகளுக்கும் ஆழ்ந்த இறைநம்பிக்கையும் சமூக அக்கறையும் ஒடுக்கப்பட்டோர்மீது பரிவிரக்கம் காட்டுவதும் இயல்பாகிப் போனது.
கி.பி. 1778 முதல் கி.பி. 1903 வரை
125 ஆண்டுகாலம் வரை 8 தலைமைத் தாயார் நியமனம் பெற்று, தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த பிள்ளைகளை, இளம் சகோதரிகளைக் கொண்டு பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். சகோதரிகளுக்கென்று ஒழுங்குகளும், தினசரி செபிக்கும் செபங்களும், அவர்கள் அணிந்துகொள்ளும் உடைகள் குறிப்பிட்ட நிறங்களைக் கொண்டதாய் சீருடையாய் வடிவமைத்துத் தரப்பட்டன. 1858 முதல் துறவு உடை அணியத் தொடங்கினர். பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையோடு இணைக்கப்பட்டதோடு, திருப்புகழ்மாலை செபிக்கவும் பழகிக் கொண்டனர். பல்வேறு அன்னையர்கள், சகோதரிகள் பாண்டி தவிர பிற இடங்களில் பணி செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர். பாண்டிச்சேரியில் பொதுப்பள்ளியில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. 18.07.1886 முதல் திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் திரு அவை அங்கீகாரம் பெற்ற சபையாக வளர்ச்சி கண்டது. 1903 முதல் தேர்தல் வழி சபை தலைமைச் சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமைச் சகோதரி அன்னை கிளாரம்மாள்.
1903 முதல் 1964 வரை
தேர்வு செய்யப்பட்ட தலைமைச் சகோதரிகள் கல்விப்பணி, மறைப்பணியோடு பல்வேறு அருள்பணிகளைத் தங்கள் பணிகளாக இணைத்துக் கொண்டனர். பல்வேறு இடங்களில் புதிய புதிய பணித்தளங்கள் உருவாயின. 1929-இல் மியான்மரில் பணி செய்ய சகோதரிகள் அனுப்பப்பட்டனர். சிறிது நிலங்கள் வாங்கப்பட்டன. குழந்தையர் பராமரிப்பைச் சீரிய முறையில் செய்ய பால்வாடிகள் தொடங்கி நடத்தப்பட்டன. செவிலியர் படிப்பு, தட்டச்சுப்படிப்பு போன்றவை
சகோதரிகளுக்கு உயர் படிப்பாக வழங்கப்பட்டன. தொடக்க நிலையிலிருந்து சகோதரிகள் சிறிது முன்னேற்றம் கண்டனர். ஆனால், சகோதரிகளிடமிருந்து இறைப்பக்தி, சமூக அக்கறை, ஒடுக்கப்பட்டோர்மீது காட்டிய பரிவிரக்கம் கொஞ்சமும் குறைவுபடவில்லை.
1899 முதல் 1922 வரை
மூன்று முறை தலைமை அன்னையாய் விளங்கிய காணிக்கை மேரி, தவ வாழ்வின் மணிமகுடமாய்
விளங்கினார். இரவு நேரங்களில் விழித்திருந்து செபித்தவர் இவர்.
1935-1958 வரை மூன்று
முறை சபைத் தலைவியாய் உயர்த்தப்பட்ட அன்னை பெர்க்மான்ஸ் மேரி, நற்கருணையில் வாழ்வு உள்ளது என்பதை உணர்ந்து நற்கருணைப் பக்திக்கு அனைவரையும் உந்தித் தள்ளியவர் என்பது எம் சபைக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
1959-1964 வரை சபைத்தலைவியாக
இருந்து வழிகாட்டியவர் அன்னை ழாந்தார்க் மேரி. இவர்கள் ஒழுங்குகளை அனுசரிப்பதால் மட்டுமே உயர்வடைய முடியும் என்பதை எண்பித்துக் காட்டினார்.
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு எம் சபையிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகள், ஏற்றங்கள், உயரங்கள் எட்டப்பட்டன. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று அழைக்கப்பட்டவர் அன்னை டென்னிஸ் மேரி. இவர் 1965-1976 வரை இரண்டு முறை சபைத்தலைவியாகத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். சமகாலத்தை உணர்ந்து, சபையின் வளங்களைக் கண்டறிந்து, செயல்திட்டம் தீட்டி, சபையைச்
சார்ந்த பணிகளைச் செழுமையாக்கினார்.
அன்னை
பார்பரா மேரி அவர்கள் 1977-1982 வரை சபையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரலாற்றில் இடம்பெறச் செய்தார். தனித்து விடப்பட்ட பர்மா சகோதரிகள் மீண்டும் நம் தாய்ச் சபையோடு இணைக்கப்பட இணைப்புப் பாலமாய்ச் செயல்பட்டார். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்கிட 1978-இல் ஆந்திராவில் உள்ள இராப்பூரில் பணி செய்ய வாய்ப்பைப் பெற்று மனிதநேயத்தை வென்றெடுத்தார்.
சிகரங்களை
நோக்கி கொன்சாகா பெருங் குடும்பத்தைப் பயணிக்க வைத்தவர், 1983 - 1994 வரை சபையை வழிநடத்திய அன்னை நம்பிக்கை மேரி. சபையானது வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு, வட்டாரத் தலைவியர் ஓராண்டு நிர்ணயிக்கப்பட்டும், பிறகு தேர்தல் முறையிலும் தேர்வு செய்யப்பட்டு ஆளுகையில் உடன் பணியாளர்களாக மிளிர்ந்தார்கள். சகோதரிகளிடம் அளவு கடந்த அன்பும், இறை நம்பிக்கையில் ஆழமாய் வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தாய்க்குரிய பாசமும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் மிளிர்ந்தது. தவறு காணும் இடத்தில் கண்டித்துத் திருத்தும் தந்தையாகவும், மன்னிக்கும் இடத்தில் வானகத் தந்தையாகவும் செயல்பட்டு அனைவருக்கும் முன்மாதிரிகையாய் திகழ்ந்தார்.
சமூக
சீர்திருத்தவாதியாய்,
சமூகத்தின்மீது அக்கறை கொள்வதே நம் நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோவின் உள்ளுயிர் என்பதை ஒவ்வொரு சகோதரியரும் உணரச் செய்தவர் 1995-2000 வரை சபையை நிர்வகித்த அன்னை L.C. மரியா.
விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு அழைத்து வருவதே நம் பணி என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். எம்மவர் உள்ளத்தில் சாதனையாளராய் எப்போதும் மிளிர்கின்றார். இவர் காலத்தில்தான் கொன்சாகா சபையின் புகழ் திருச்சபையெங்கும் பரவத் தொடங்கியது. ஏனென்றால், இவரது அயராத முயற்சியால் 1996 அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் எம்
சபை திருத்தந்தையின் நேரடி ஆளுகைக்குட்பட்ட சபையாக உயர்த்தப்பட்டது. இது திரு அவையால் எம் சபைக்குக் கிடைக்கப்பெற்ற மாபெரும்
அங்கீகாரம். இவரின் இந்தப் பணி எம் சபை உள்ளவரை மறக்கப்படாது. 1997-இல் வட்டாரங்கள் தன்னிறைவோடு கூடிய மாநிலங்களாய் உயர்ந்திட வழிகாட்டி நின்றார்.
எல்லாரும்
நலம் பெற்றவராய், வளங்கள் பல சபைக்குரியதாய் மாற்றப்பட,
சபை பல உயரங்களை எட்டிட
வித்திட்டவர்
2000-2012 ஆண்டுகள் சபைத் தலைவியாக அரும்பணியாற்றிய அன்னை நோயல் ராணி அவர்கள். உயர் கல்வி அளிப்பதற்காக நிறுவுநரின் பெயரால் கல்வியியல் கல்லூரியையும், சபையின் பெயரால் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் உருவாக்கி, சபையைப் பல உயர்ந்த சபைகளின்
வரிசையில் நிலைநிற்கச் செய்தார். சபை அமைப்புச் சட்டம் மற்றும் வழிநூலைத் தொகுத்து, அதற்குரிய திரு அவை அங்கீகாரம் பெறச்செய்து அனைத்துச் சகோதரிகளும் துறவற அர்ப்பண வாழ்வில் ஆழம்பெறச் செய்தார். அசுர வளர்ச்சியைச் சபையும், சபை சகோதரிகளும் பெற்றிட வழி செய்தார். இவரின் காலத்தில் சபைக்கென்று ‘வாழ் வகம்’ என்ற நற்செய்திப் பணிமையம் உருவாக்கப்பட்டு, அதில் பல பொதுநிலையினர், சகோதரிகள்
இன்றும் பயிற்சிபெற்று
வருவது திரு அவைக்காகப் பல நற்செய்திப் பணியாளர்களை
உருவாக்குவது எம் சபைக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வரம்.
நமது
பணிகளை இந்தியாவின் இதயமாம் தில்லியை நோக்கி, வட மாநிலங்களை நோக்கி
நகரச் செய்தவர், 2012-2018 வரை சபையை வழி நடத்திய அன்னை மேரி ஸ்டெல்லா. வட மாநிலத்தில் நம்
சிறகை விரித்துக் கிளை பரப்பிட அயராது உழைத்தார். சகோதரிகளைத் தன்னிறைவு கொண்டவர்களாய் உருவாக்கிட மேற்படிப்புப் படித்திட வழிகாட்டினார். தொழில்நுட்பங்களைச் சகோதரிகள் கற்றுத் தேர்ந்திட வாய்ப்பு வழங்கியதோடு, இசை குறுந்தகடுகளை உருவாக்கிட ஆர்வம் உடையவராய் அனைத்துச் சகோதரிகளையும் ஈடுபாடு உடையவராக்கினார். மேலும், சபைக்கென கொன்சாகா அனிமேஷன் மையத்தை உருவாக்கிய பெருமை இவரைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் 120 நபர்கள் இதில் தங்கிப் பயனடையும் ஒரு தளமாக இது இருப்பது கூடுதல் சிறப்பு
சபை
நிறுவுநர் மைக்கேல் அன்சால்தோ புனிதராவதற்குத் தகுதி உடையவர். அவரது புனிதர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள தடையேதும் இல்லை என்பதை உலகறியச் செய்து, இறை ஊழியர்
மைக்கேல் அன்சால்தோ என எல்லாராலும் அழைக்கப்பட
சிறப்பான முயற்சியைச் செய்தவர் 2018-2024 வரை சபைத் தலைவியாக இருந்து செயல்பட்ட அன்னை G. ராஜாமணி
அவர்கள். வட மாநிலத்தைத் தனி
வட்டாரமாக உயர்த்தியும், புனித வளனாரின் பெயரில் புதிய கல்லூரியை உதயம் பெறச் செய்தும், வளங்களை அதிகப்படுத்தியும் எனப் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி சரித்திரத்தில் கொன்சாகாவை இடம்பெறச் செய்தார். மேலும், நிறுவுநருக்காக மணிமண்டபம் அமைத்து, இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோவின் வழி அனைவரும் இறைவனின் பதமலரைப் பற்றிக் கொள்ள வழிவகுத்தார்.
சபையின்
250 ஆண்டுகால அசுர வளர்ச்சியைப் பார்க்கையில், முகவரியற்றவர்களின் முகமாய் சகோதரிகள் மாறிப் போயிருக்கிறார்கள். சமூக அவலங்களைக் கண்டு சமரசம் செய்துகொள்ளாமல், சாட்டை எடுத்து எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்திய இயேசுவைப் பின்பற்றி, சமூகத்தின் சீர்கேடுகளைத் தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களாய் உருமாறியிருக்கிறார்கள். மானுடத்தின் மாண்பு சிதைக்கப்படும்போதெல்லாம் மறு கிறிஸ்துவாய் தங்களை உருமாற்றி, மானுடத்தைத் தலைநிமிரச் செய்திருக்கிறார். புனித அலோசியஸ் கொன்சாகாவின் தூய்மையான வாழ்வையும் இறைநம்பிக்கையையும் தம்மிரு கண்களாகக் கொண்டு ஈரமுள்ள நெஞ்சம் கொண்டவர்களாய் இயேசுவின் பார்வை கொண்டு, எளியோரை உற்றுப்பார்த்துப் பணிவிடை செய்திருக்கிறார்கள்.
‘வானகத் தந்தையே தன் தந்தை, இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் தன் சகோதரர், சகோதரி’ என நினைத்து, எல்லாவற்றையும்
இழந்து நிர்வாணமாய் நடுத்தெருவில் நின்ற புனித பிரான்சிஸ் அசிசியைப் போன்று ஆடம்பரம் விடுத்து, அந்நியராய் யாரையும் எண்ணாமல், சாமானியர் போன்று சாமானியரோடு கைகோர்த்து எளிய வாழ்வே ஏற்றமிக்கது என்பதை ஏற்று யாரும் பணி செய்ய முடியாத இடங்களைத் தேர்வு செய்து, அங்கே அன்பு ஒன்றை மட்டும் ஆடையாக அணிந்து பணி செய்திருக்கிறார்கள்.
எம்
மூத்த அன்னையரின், அவர்தம் புனிதம் நிறைந்த புண்ணிய வாழ்வை நினைத்துப் பார்க்கையில், அன்பும் அடக்கமும் அமைதியும் தவழ்ந்திட, ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத வாழ்வை இலைமறை
காய்போல் ஈரக்கசிவைக் கண்களில் பனிக்கச் செய்து, உண்மையை உரக்கப் பேசி, உள்ளதை எல்லார்க்கும் பகிர்ந்தளித்து, ஊனமில்லா இதயம் கொண்டு, எளிய மனம், எளிய பணி, எளிய வாழ்வு என்பதில் ஏக்கம் கொண்டு, இயேசுவின்
அடிச்சுவட்டைப் பின்பற்றுவதே எங்களின் உன்னதப் பணி என்று எண்ணி, ஐயம்
களைந்து ஒற்றுமையைத் தங்கள் பாடமாக்கி, ஒவ்வொரு பேச்சும், விடும் மூச்சும் ஒடுக்கப்பட்டோருக்காய்
அமைய வேண்டுமென, ஓராயிரம்
இடர்களை எதிர்கொண்ட போதும் இடிந்து போகாமல், தடைகள் வந்த போதும் தளர்ந்து போகாமல், அவமானங்கள் பல சந்தித்த போதும்
உடைந்து போகாமல், சறுக்கல்கள் பல வந்த போதும்
சஞ்சலம் கொள்ளாமல், சோகங்கள் வந்த போதும் வேதனை கொள்ளாமல், சோதனை வந்த போதும் சோம்பித் திரியாமல், நலிவுற்ற போதும் வேதனை கொள்ளாமல், நலிவுற்ற போதும் நடுங்கிப் போகாமல், நாணயத்தையும் நேர்மையையும் கடின உழைப்பையும், நிறுவுநரின் கனவையும் நெஞ்சுரமாக்கிக் கொண்டு எல்லாக் காலங்களிலும் நேரங்களிலும் எம்மவரின்
ஒவ்வோர் அசைவும், எம் பணிகளுக்கான இசைவும் நாங்கள் பயணிக்கும் திசையும் ஒடுக்கப்பட்டோர் உரிமை பெற்று வாழ என்பதைத் தாரக மந்திரமாய்க் கொண்டு, நிறுவுநரின் உள்ளுயிரை நனவாக்க கனவு
கண்டால் மட்டும் போதாது; நிறைவேற்றுவதில்
எம்மவர்க்கு முழுப் பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட உண்மைத் தொண்டராய் வீறு
கொண்டு எழவேண்டும்
என்பதை உணர்கின்றோம்.
சிறகு
கிடைத்தவுடன் பறப்பதற்காக அல்ல; மாறாக,
சிலுவை கிடைத்தவுடன் சுமப்பதுதான் உண்மையான
பணி வாழ்வு என்பதை உணர்ந்து, ஒருங்கிணைந்து
செயல்பட ஒன்று கூடுகின்றோம். எம் அன்னையர், மூத்தவர், முன்னோர் போன்று சவால்கள் மேல் சவாரி செய்து சாதனை படைத்திடவும், சரித்திரத்தில் இடம்பிடித்து இன்னும் பல நூறு ஆண்டுகள்
எம் சபை நிறுவுநரின் பாதையில் தீரமாய்ப் பயணித்திட உழைப்பை மட்டும் தானமாய் கொடுக்க இருக்கின்றோம்.
இவ்வீரக்
காவியங்களில் துயரங்களையும் துக்கங்களையும் தூர எறிந்துவிட்டு, தொடரவிருக்கும் பயணத்தைச் சலிப்பின்றி-களைப்பின்றிக் கடப்பதற்கு, எம் அன்னையர்களின் அனுபவப்
பாடங்களை எங்களுடையதாய் மாற்றிக்
கொள்கின்றோம். தலை சாயும் நிலையே வந்தாலும் தன் மானத்தை ஒரு போதும் இழந்து போகாமல், தியாகத் தாய்களாய் கொன்சாகா பெருங்குடும்பத்தை 250 ஆண்டுகளைக் கடக்க உதவிய அன்னையரை ஒரு போதும் மறந்து போகாமல், நெஞ்சுரத்தின் ஆழத்தில் நிலைநிறுத்தி நெஞ்சுரம் பெறுகின்றோம்.
விடியல்
தேடிய பயணத்தை வீறுகொண்டு தொடர்கின்றோம். வீண் பேச்சகற்றி விவிலிய பேச்சாக மட்டுமே எம் பேச்சை மாற்றிக்கொண்டு, சுவாசிக்கும்
மூச்சும் யாசிக்கும் கரங்களும் யோசிக்கும் மூளையும் எம் இலக்கு மக்களுக்குரியதாய் மட்டும் அமையும் என எம் முன்னோரின்
வாழ்வை மாதிரியாக்கி, எங்களுடையதாய்
உருமாற்றிக் கொள்கின்றோம்.
நாங்கள்
தொடர இருக்கும் பயணம் எம் அன்னையர் தொட்டு விட்டப் பயணத்தின் தொடர்ச்சியே என்பதை மறந்து போகாமல், வலிகளை வலிந்து பற்றிக்கொண்டு வாழ்வு நெறிகளைக் கருத்தாய்ப் பின்பற்றி, சமூகத்தின் இழிநிலைகளுக்கு எங்களது வாழ்வால், பணியால், ஆன்மிக உறவால், பதிலிறுக்கத் தெடர்ந்து காலம் காட்டும் திசை நோக்கிப் பறக்கத்
தொடங்கியிருக்கின்றோம்.
தூரம் அதிகம் என்றாலும் பாரமாய் எண்ணாமல் சாரம் கொடுத்த இயேசுவையும் இயேசுவைப்
பின்பற்றிய எம் பாதுகாவலர் புனித அலோசியஸ் கொன்சாகா, புனித பிரான்சிஸ் அசிசி, எம் நிறுவுநர் இறை ஊழியர் மைக்கேல் அன்சால்தோ, இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பு, மீட்பின் திட்டத்தில் பங்கெடுத்த அன்னை மரியா... இவர்களின்
வாழ்வின் அனைத்துப் புண்ணியங்களை, புண்ணிய முயற்சிகளை, தியாகங்களை எங்களுடையதாய் மாற்றிக்கொண்டு, புனிதத்தில் நிறைவு காண புதுப் பார்வையோடு, புதிய உத்வேகத்தோடு புறப்பட்டிருக்கின்றோம்.
இதோ
இன்று முதல் எங்கள் பேச்சு, நாங்கள் விடும் மூச்சு, எங்கள் பணி இயேசுவின் உண்மை சீடத்திகளாய் மட்டுமே எங்களை
அடையாளப்படுத்தும். அதற்காய் எங்களை இழப்போம். எம் நிறுவுநரின் கனவினை நனவாக்க முன்னோரின் வழிகளில் எம் இலக்கு மக்களுக்காய் தொடர் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்வோம். இதுவரை காத்தவர் இனியும் காப்பார், வழிநடத்துவார் என்பதே எங்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை நங்கூரத்தை இதயத்தில்
இறக்கி வைத்துள்ளோம். இறையாசிர் எங்கள் ஒவ்வொருவர் மீதும், எங்கள் சபை மீதும், நாங்கள் பணி செய்யும் மக்கள் மீதும், எங்களை வழிநடத்தி, ஆலோசனைகள் அளித்து வரும் திரு அவையின் ஒவ்வொரு தலைவர்கள் மேலும் என்றும் தங்கட்டும்.
காரிருளில்
ஒளிக்கீற்றல் மின்னுவதுண்டு. முட்டும் சந்துகளில் முன்னேற்றத்திற்கான புதிய
பாதை தெரிவதுண்டு (கிடைப்பதுண்டு). முடிந்து விட்டது என்றெண்ணும்போது, வெற்றியின்
புதிய தொடக்கங்கள் பிறப்பதுண்டு. அதற்கு உயிருள்ள சாட்சி எம் தாயாம் பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா. புனித லூயிஸ் தே கொன்சாகா மடமாய்
மண்ணில் விழுந்த சிறிய விதை பெரும்
விருட்சமாய்க் கிளைப்பரப்பி எம் நிறுவுநரின், முன்னவரின், மூத்தோரின், அன்னையரின், அன்புப் பணிகளுக்குச் சாட்சி சொல்கிறது.
இதோ
இன்று நாங்களும் கிறிஸ்துவின் அன்புக்குச் சாட்சி சொல்ல வேர்களைத்
தேடிய புனிதப் பயணத்தில் எங்களை இணைத்துக் கொண்டு, இன்னும் பல பிரமாண்டங்களை,
இறை விருப்பத்தில் பல அதிசயங்களைக் காண
இறையோடு எம் கரம் சேர்த்துப் பலம் பெறுகின்றோம்.
வாழ்க
எம் தாயாம் கொன்சாகா! எம்மவரின் இலக்கு மக்கள் பணியால் இறைவன் புகழ் எட்டுத்திக்கும் பரவட்டும்.
இறைவன்
என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக!