தொழில்நுட்பமயமான புதிய சகாப்தத்தை (Era) விரைவில் காணவிருக்கிறோம். இவ்வாறு, உலகில் ‘ஏஐ’-யின் மூலம் அடையப் போகும் பெரும் மாற்றத்தில் எவ்வாறு நம்மை இணைத்துக்கொள்ளப் போகிறோம் என்ற கேள்வி இன்று நம் முன் நிற்கிறது.
‘ஏஐ’-யின் மின்னல் வேகம் ஒரு கட்டத்தில், மனித அறிவாற்றலுக்குச் சமமாக உருவெடுக்க எவ்வளவு காலமெடுக்கும் என்ற கேள்வி பலரின் மனத்தில் எழுந்தது; சில ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதற்குச் சிலர் அடுத்த சில பத்து ஆண்டுகள் ஆகலாம் என்றனர்; ஒருசிலர் 100 ஆண்டுகள்; சிலர் இது இயலாத ஒன்று என வேறுபட்ட கருத்துகளைக்
கூறினார்கள். இந்நிலையில், 2060/2070-இல் முடியலாமென்பது
பரவலாகக் கருதப்பட்டாலும், சிலர் அதற்கு முன்பே நிகழலாம் என்கின்றனர்.
1903-இல் மனிதன்
ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதை முதலில் பறந்த விமானிகளான வில்பர் ரைட், ஆர்வில் ரைட் செய்து காட்டினர். ஆனால், 1901-இல் வில்பர் தன் சகோதரரான ஆர்வில்லிடம் இச்சாதனை நடைமுறைக்கு வர இன்னும் 50 ஆண்டுகள்
ஆகலாமென்று கூறினாலும், அடுத்த இரு ஆண்டுகளில் அது நிகழ்ந்துவிட்டது.
வரலாற்றில்
இவ்வாறு பல வெளியில் வராத
நிகழ்வுகள் இருப்பதால், புதுமைப் படைப்புகளுக்குக் காலத்தைக் கணிக்க முடியாமலிருக்கிறோம். இன்று மூலைமுடுக்குகளெல்லாம் தொழில்துறை, வணிகம், மருத்துவம் என்று எல்லாவற்றிலேயும் ஊடுருவிக் கொண்டிருக்கும் ‘ஏஐ’,
70 ஆண்டுகளுக்கு முன் நம்மில் பலரிடையே ஒரு பகல் கனவாக இருந்தது.
50 ஆண்டுகளுக்கு முன் ‘கால்குலேட்டர்’ இருந்தது. மனிதரைவிட துரிதமாகவும் துல்லியமாகவும் பிழையின்றி முடிவுகளைக் கொடுக்கும் ஆற்றல் படைத்து, பெரும்பாலானோரின் அலுவலக மேஜைகளை அலங்கரித்தும், பலரின் கணிதம் சார்ந்த வேலைகளுக்கு நண்பனாகவும் இருந்ததை அறிவோம். இதன் வேகம், தனித்தன்மை, மாறிடும் அமைப்பு பொருத்து அதன் செயல்பாட்டினை மதிப்பிடும்போது கால்குலேட்டரை அறிவாற்றல் (Intelligent) என்ற பெரிய தொகுப்பின் வரிசையில் இடம்பெறுவதாகவும் கருதப்பட்டது.
கைப்பேசியின்
ஆரம்ப காலத்தில், சிலரின் கழுத்தைச் சுற்றி மாலையாக அணிவதைப் பெருமையாக உணர்ந்தனர் என்பதைப் போன்று, அதற்குமுன் கால்குலேட்டர் சிலரிடமே இருந்தது. ஆனால், இதனை இன்று நாம் காணும் அறிவாற்றல் திறவு வாசலான ‘ஏஐ’-க்குச் சமமாகக் கருத முடியுமா? ஏனென்றால், ‘ஏஐ’ ஒவ்வொரு நாளும் புதிய தோற்றத்தையும் ஆற்றலையும் பெற்று உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் கல்விக்காக மட்டும் போதுமானது என்று பயின்ற நாள்கள் சென்று, இத்தொழில்நுட்பம் 21-ஆம் நூற்றாண்டில், அன்றாட வாழ்க்கையின் பயன்பாட்டிற்கும் தேவை என்று உணரப்படுகிறது.
இன்று
‘ஏஐ’
தொழில்நுட்பத்தினால்
ஒருவருடைய முகத்தையோ அல்லது பொருளையோ அறிந்துகொள்ள முடியும். ஒருவரின் பேச்சை எழுத்து வடிவில் பெற்றிடவும், உடனடியாக மொழிபெயர்ப்பு செய்திடும்படியான தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறோம்.
ஒருசில
தூண்டுதல் (Prompts) மூலம் ‘ஏஐ’ மாடல்களிடமிருந்து வரைபடங்களை (Images) மற்றும் தெளிவான, விளக்கமான தகவல் தொகுப்புகளை உருவாக்க முடியும். ‘ஏஐ’ வழிமுறைகள் சிறிதும் மாறாத குரல்களை உருவாக்கவும், வியத்தகு இசையை அமைத்திடவும் திறன் பெற்றவைகளாக உள்ள நாள்களில் வாழ்கிறோம்.
இன்று
பலர் ஸ்மார்ட் ஃபோன் மூலம் தொட்டுப் பேசுவதைக் காண்கிறோம். ‘ஏஐ’-யின் கிளைப் பிரிவில் உருவானதே நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணினிப் பார்வை (Computer Vision). ஆன்லைன் மூலம்
கல்வி என்பது ‘ஏஐ’-யின் மற்றொரு பிரிவு.
பொழுதுபோக்குக்கென்று
தொடங்கி, ஓட்டுநர் இல்லாத கார் ரோபோட்ஸ் (Robots), ட்ரோன்ஸ்
(Drones) என்று,
2030 போல் ‘ஏஐ’ போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, என்று பல துறைகளில் அன்றாடப்
பயன்பாட்டிலிருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஏஐ’-யின் ஊடுருவல் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சமுதாயம் இதன்மூலம் பயன்பெறத் தயார்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உள்ளது.
பொருளாதாரத்தின்
வலிமை முன்பு, ஒரு நாட்டின் நிலம், வேளாண்மை அதனை நிர்வகிக்கும் திறன் இருந்தது; இது உலகளவில் பரந்து விரிந்திருந்துமிருந்தது. காலத்திற்கேற்ப பொருள்களின் முக்கியத்துவமும் மாறிக்கொண்டிருப்பதற்குத் தரவு (Data) ஓர்
எடுத்துக்காட்டு. இன்று நாம் பயன்படுத்தும் தரவுகள் வலிமையும் வேகமும் கொண்டதாய் உள்ளன. தனிமனிதனின் அனைத்துத் தரவுகளையும் இயந்திரம் வைத்திருப்பது ஒருவரின் வாழ்வின் முறையைக் கணிக்க, வசப்படுத்த உதவிடும் என்பதோடு இல்லாமல், ‘ஏஐ’ எது சரி? எது இல்லை? (Redefine what is right
and wrong) என்பதைத்
தீர்மானிக்கும் இடத்தையும் பெற்று விடுகிறது.
‘ஏஐ’ என்பது இயந்திரங்களை அறிவாற்றலடையச் (Intelligent) செய்து, அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். ‘ஏஐ’ மனிதர்களைவிட மேன்மையாக, குறைந்த செலவில் தன்னிச்சையாகச் செயலாற்றும் இயந்திர உருவாக்கமும் கூட. (Unaided machines being
able to accomplish every task better and more cheaply than human).
‘ஏஐ’ இயந்திரங்களான ரோபோக்கள், ட்ரோன்கள் இயங்குவது மட்டுமன்றி, ஒன்றுக்கொன்று இணைந்து செயலாற்றும் (Collective Intelligence)
திறன் பெற்றிருப்பதை அவைகளின் சில செயல்களான ஜோடிகளாகப் பறப்பதில் (Flying formation)
காணமுடிகிறது. எதிர்காலத்தில் இன்னும் பல ‘ஏஐ’ இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வது நடைமுறையில் வருவது தொலைவில் இல்லை.
இன்று
கணினி உலகில் பரவலாகப் பேசப்படும் அல்கோரித தொழில்நுட்பத்திற்கு அதிக இடம் (Space) ஒன்றும்
தேவைப்படாது. ஒரு நாட்டிலிருந்தே பொறியாளர்கள் ‘கோட்’
(Code), அல்கோரித
சாவியை (Keys) வைத்து
அனைத்துலக நிலைமையைக் கண்காணிக்கலாம். இதனால் ஏழ்மை நாடுகள் ஒதுக்கிவிடப்பட்ட நிலையிலும், வலிமையான நாடுகள் மேலும் வலிமை பெறவும் வழிவகுக்கும். இதே நிலைதான் உலகளவில் தொழிலாளர்களுக்கும் ஏற்படும். இந்த டிஜிட்டல் வளர்ச்சி எங்கு கொண்டு சேர்க்கும் என்று திகைக்கும் நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இயந்திரம்
தரவுகளைத் தன் வசம் வைத்து, உலகளவில் அனைவரின் சொந்தத் தகவல்களைப் பெற்றிருப்பது எந்த நாட்டில் யார் வாழ்வது? ஒரு வேளை நாம் டிஜிட்டல் நாட்டில் வாழ்கிறோமா? என்பதாகக்கூட இருக்கும்.
இந்த
ஓட்டத்தில் சேர்ந்துகொள்ள இயலாதோர் சமுதாயத்தில் தானாகவே ஒதுங்கி நிற்கும் சூழலும் ஏற்படலாம்.
அனிதாவிற்குக் காலை படுக்கையிலிருந்து எழும் போதே ‘இந்த நாள் நன்றாக இருக்கும்’ என்று தோன்றவில்லை. அவளின் உள் மனம் ஏனோ எச்சரிக்கை மணியை ஒலித்தது. அவசரம் அவசரமாகக் காலை வீட்டு வேலை, அசௌகரியமான பேருந்துப் பயணம், கல்லூரி மாணவர்களின் அலப்பறைகள் இவையெல்லாம் மிடில் கிளாஸ் அனிதாவிற்குப் புதிதல்ல. தனியார் கல்லூரிப் பேராசிரியைப் பணி என்றபோதும், அதிலே அனிதாவிற்கு மகிழ்ச்சியில்லை. தந்தையை இழந்த பிறகு குடும்பம் வறுமையில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காக அவ்வேலையினைத் தொடர வேண்டியிருந்தது. அதிலும் குறிப்பாக, தேர்வில் சில சீனியர் மாணவர்கள் ‘பிட்’ அடித்ததைக் கண்டுபிடித்து ‘ரிப்போர்ட்’ செய்ததிலிருந்து அவர்களின் பகையைச் சம்பாதிக்க நேர்ந்தது. அவர்களின் குறுகுறு பார்வை, இரட்டை அர்த்த கமெண்ட்ஸ்கள், நரிகளைப் போன்று அவளுக்குத் தெரியாமலே பேருந்தில் பின்தொடர்வது, வீட்டிற்கு முன்பாகக் கூட ஆக்ஸ்சிலேட்டரை முறுக்கிக்கொண்டு பைக்கில் வலம் வருவது... இவையெல்லாம் அப்பாவை இழந்திருந்த அனிதாவிற்குத் தர்மசங்கடத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன.
வீட்டிலிருந்து
அனிதா இளமஞ்சள் நிற சேலை உடுத்தி வெளியேறும்போதே சூரியன் தன் காலைக் கதிர்களால் அச்சேலையைப் பட்டாடையாக்கியிருந்தது. வெண்டைக்காயை நிரப்பியிருக்கும் அதன் விதைகளைப்போல பள்ளி- கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் என்று பேருந்தே நிரம்பியிருந்தது அன்று. கூட்டத்தில் யாரோ தன்னைத் தவறாகச் சீண்டியது அனிதாவிற்குத் தெரிந்தது. கூட்டத்தில் யாரைக் குற்றப்படுத்துவது? வழக்கம்போல பல்வேறு சீண்டல்களுக்கு ஆளாகும் பல பெண்களைப்போல மௌனம்
என்னும் முகம் அணிந்திருந்தாள் அனிதா.
வியர்த்து
விறுவிறுக்க நிறுத்தத்தில் வந்து நின்றது பேருந்து. அனிதா பேருந்தை விட்டு இறங்கி நடக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா!” அனிதா யாரோ கூப்பிட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். ஒரு நடுத்தர வயது பெண், “எனக்கு ஊரு கோவில்பட்டியாக்கும். என் வீட்டுக்காரர் இங்கதான் வேலை செய்றார். பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கால் பண்ணச் சொன்னார். ஆனா, யாரோ கூட்ட நெரிசலில் என் போனைத் திருடிட்டாங்க. உன் போன் கிடைக்குமா? ஒரு கால் பேசிக்கிட்டு குடுத்திடுறேன்.”
அனிதாவிற்கு
அந்தப் பெண்ணைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “இதோ, பேசிக்கிட்டு கொடுங்கம்மா” என்று
பாசத்தோடு கொடுத்தாள். அந்த நடுத்தர வயது பெண்மணி யாருடனோ பேசி விட்டுப் போனைத் திருப்பி அனிதாவிடமே தந்தாள். “ரொம்ப தேங்க்ஸ்மா...” என்று சொல்லி விட்டுச் சென்றாள். யாருக்கோ உதவி செய்திருக்கிறோம் என்ற மனமகிழ்ச்சியில் கல்லூரி நோக்கி உற்சாகமாக நடந்தாள் அனிதா.
அன்று
கல்லூரி நுழைவாயில் வழியாகச் செல்வது என்பது ஏதோ பிளந்து திறந்திருக்கும் ஹிப்போ பொட்டாமசின் வாய்க்குள் நுழைவதுபோல் இருந்தது. வழியில் மரத்தடியில் அமர்ந்திருந்த சில சீனியர் மாணவர்கள் அனிதாவைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். ஒருவரோடு ஒருவரின் காதில் ஏதோ கிசு கிசுத்துக்கொண்டனர். அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அனிதா தொடர்ந்து நடந்தாள்.
பேராசிரியர்கள்
அறையில் வந்து தனது இருக்கையில் அமர்ந்ததும் அனிதாவிற்குத் தெரியாத நபரிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது.
“நான் நீங்க ஒரு பெண்ணோடு பஸ்சில் வந்தீங்கல, அவங்க கணவர் பேசுறேன்.”
“சொல்லுங்க சார்” என்றாள் அனிதா.
“இந்த நம்பரிலிருந்துதான் அவள் எனக்குப் போன் பண்ணினா. ஒரு பெண்பிள்ளை கிட்ட போன் வாங்கிப் பேசுறேன்னா. ஆனா, நான் வந்து பஸ் ஸ்டாண்டுல பாக்குறேன், அவளைக் காணல. சுத்திச் சுத்தி அலைஞ்சு தேடி பாத்தாச்சு. எங்கயும் அவளைக் காணல. எனக்கு உன்மேலதான் சந்தேகமா இருக்கு. என் பொண்டாட்டிய எங்க கடத்தி வச்சிருக்க?”
அனிதாவிற்கு
ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. கல்லூரி மாணவர்கள் வராந்தாவில் இங்கும் அங்குமாக நடக்கும்போது எழும் காலடிச் சத்தம் கூட மனத்தைத் தொடர்ந்து உலக்கையால் இடித்ததுபோல் இருந்தது அனிதாவிற்கு.
“சார்! என் போனை வாங்கித்தான் பேசினாங்க. ஆனா, அவங்க எங்க போனாங்கன்னு எனக்குத் தெரியலை.” அனிதாவின் பதில் அந்தக் கரகர குரல் மனிதருக்கு நம்பக்கூடியதாய் இல்லை.
“இப்படி எத்தனை பேரு கிளம்பியிருக்கிறீங்க? என் பொண்டாட்டி வீடு வரலனா உன்னைத் தேடி வந்து சாகடிக்கிறேன் பாரு.”
அனிதா
இதுபோல் கெட்ட வார்த்தை அர்ச்சனைகளைக் கேட்டதில்லை. உடனேயே அந்த நம்பரை ‘பிளாக்’ செய்தாள். உதவி செய்யப் போய் இப்படி ஆகிவிட்டதே என்று யோசிக்கும்போதே மற்றொரு போன் அழைப்பு வந்தது. இப்போது அது வேறு நம்பர். “வீட்டுக்கு வாரேன் என்று சொன்ன என் பொண்டாட்டியைக் காணல. இந்த நம்பர்ல இருந்துதான் அவ பேசினா. பஸ்
ஸ்டாண்டுல இருக்கேன்னு சொன்னா? என் பொண்டாட்டி மட்டும் வீடு வரல உனக்குச் சங்குதான்.”
இப்போது
பேசிய குரல் ‘கீச்’சென்றிருந்தது. அனிதா தான் ஒரு மோசமான கும்பலிடம் மாட்டிக் கொண்டதைப் புரிந்துகொண்டாள். அவளுடைய கண்கள், கதவைக் குடைந்து வெளியே பார்த்தன. தூரத்தில் மரத்தடியில் சில சீனியர் மாணவர்கள் அவள் அறையை உற்றுநோக்கிக் கொண்டே நின்றனர். அனிதாவின் கண்களுக்கு அவர்கள் நரிக்கூட்டமாகத் தெரிந்தனர்.
ஒரு
பெண்ணின் விருப்பம் இல்லாமல் அந்தப் பெண்ணை ஓர் ஆணோ அல்லது ஒரு கும்பலோ நிழல்போல பின்தொடர்வது, அவரைக் குற்றப்படுத்தி எதற்கேனும் கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது மற்றும் தொடர் தொல்லை கொடுப்பதை ‘ஸ்டாக்கிங்’ என்கிறோம்.
இத்தகைய செயல் இணையம், சமூக ஊடகம் அல்லது திறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழியாக நடந்தால் அதனை ‘சைபர் ஸ்டாக்கிங்’ என்கிறோம்.
காதல் வயப்பட்டவன், பழி வாங்கும் உணர்வுள்ளவன், பொறாமைக்காரன், வக்கிரப்புத்திக்காரன், மனநோயாளன் ஆகியோர் வசதியாகச் சைபர் தளங்களில் தங்களை மறைத்துக் கொண்டு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தொடர் துன்புறுத்துதலை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேசியக்
குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்புடி, இந்தியாவில்
2020 முதல் 2023 வரை 2,051 சைபர் ஸ்டாக்கிங் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவுகள் 66E, 67 மற்றும்
இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354D -இன்படி
சைபர் ஸ்டாக்கிங் குற்றமாகக் கருதப்படுகின்றது.
பெண்களுக்கு
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றமாக மட்டும் சைபர் ஸ்டாக்கிங்கை நாம் இன்று பார்த்துவிடக் கூடாது. ஆண்களும் இளம் மாணவர்களும் கூட பல்வேறு விதங்களில் பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆபாசமாகப் பேசுவது, நிர்வாணமாகச் சித்தரித்து போட்டோ அல்லது வீடியோ மார்ஃபிங் செய்து அச்சுறுத்துவது, தெரிந்தவர்களாக இருப்பின், ஏற்கெனவே நெருக்கமாய் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ அல்லது வீடியோக்களைக் காட்டி “பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டானு போட்டு உன் பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க எல்லாருக்கும் சென்ட் பண்ணுறேன் பாரு” என்று மிரட்டிப் பணம் பறிப்பது அல்லது தேவைக்கு இணங்க வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்விலோ அல்லது நம் நண்பர்களின் வாழ்விலோ தினந்தினம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய
அமில வீச்சும், பாலியல் அத்துமீறல்களும் இன்று சமூக ஊடகங்களில் அரங்கேறுகின்றன. களமும் கருவியும் வேறென்றாலும், காரணம் ஒன்றாகவும் அது ஏற்படுத்தும் வலி அதிகமாகவும் இருக்கின்றது.
நரிகள்
இருக்கும்வரை அவற்றின் ஊளைச் சத்தமும் இருக்கத்தான் செய்யும் என்னும் மனநிலை கொண்டிராமல் பெண்களும் குழந்தைகளும் சைபர் ஸ்டாக்கிங்கினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றவர்களும், அதனை மனத்திலேயே அடைகாத்திடாமல் பெற்றோரிடம், நண்பர்களிடம், ஆசிரியர்களிடம் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம், தான் பாதிக்கப்பட்டிருப்பதைக் கூற வேண்டும். தேவை ஏற்படின், சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறையிடுதல் அவசியம்.
அனிதாக்களும்
அமுதாக்களும் மௌனித்திருக்கும் வரை நரிகளின் எண்ணிக்கையும் அதன் ஊளைச்சத்தமும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.
இந்திய சனநாயகத்தில் சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கை நீதி மன்றங்கள். அங்கு நீதிபதிகள், எவ்வளவு மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவு நீர் இருந்தாலும், அதில் மிதக்கும் தாமரையின் இலையில் விழும் தண்ணீர்போல், எதிலும் ஒட்டாமல் இருக்க வேண்டும். ஒட்டுறவு இல்லாது வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா போன்றோரை அடையாளம் கண்டதே பேரழகு! நீதியரசர் குன்ஹா அவர்கள் இறை வார்த்தையின்படி உலகிற்கு உப்பாகவும், ஒளியாகவும் வாழ்ந்து காட்டியவர்.
இன்று
இக்கட்டுரையைத் தட்டச்சு செய்யும்போது கேட்கிற தொலைக்காட்சி செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதுதில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹோலி பண்டிகை கொண்டாட வெளியூர் சென்று விடுகிறார். எதிர்பாராத விதமாக அவரது வீடு தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்போது கட்டுக்கட்டாகப் பணம் எரிகிறது. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அக்காட்சி வீடியோவில், தீயணைப்பு வீரர் ‘காந்தி எரிகிறார்’
என்கிறார். தீயணைப்புத் துறையினர்
வழங்கிய பட்டியலில் எரியாத நிலையில் 26 கோடி ரூபாய் இருந்ததாக அறிக்கை தரப்படுகிறது. அது மறுநாள் தீயணைப்புத் துறை தலைவரால் மறுக்கப்படுகிறது. குறிப்பிட்ட நீதிபதி விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக மாற அவரது வயது மூப்பு 9 என்பதிலிருந்து 2-ஆக மாற்றவே, அவரது
பணிமாற்றம் புதுதில்லிக்கு நடந்தது எனவும் கூறப்படுகிறது. அவருக்கான பெரிய தண்டனைகள் எதுவும் இதுவரை இல்லை.
இதே
அலகாபாத் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், பெங்களூரின் ஒரு பகுதியைப் பாகிஸ்தான் என வர்ணிக்கிறார். உச்ச
நீதிமன்றம் அவரைக் குட்டுகிறது. பல உயர் நீதிமன்ற
நீதிபதிகள் திறந்த நீதிமன்றக் கூடத்தில் சொந்தக் கருத்து என்ற பெயரில், வழக்கிற்குச் சம்பந்தப்படாத செய்திகளைப் பேசுவதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. பல வழக்குகளில், பட்டியலிடப்படாமல்
அன்றே வழக்கை எடுத்துக்கொள்ளுதல், ‘சுமோட்டா’
என்ற பெயரில் தானே வலிந்து வழக்குகளை எடுப்பது, ‘பிரேயர்’ எனப்படும் கோரிக்கை இல்லாமல் தீர்ப்பு வழங்குவது, திரைப்படங்கள், திரைப்பாடல்களை மேற்கோள்காட்டுவது, புராண இதிகாசங்களைத் துணைக்கு அழைப்பது என நீதி பரிபாலன
முறைக்கு உட்படாத ஒவ்வாத செயல்களைச் செய்கிறார்கள்.
இதே
அலகாபாத் நீதிமன்றம் சமீப நாள்களில் வழங்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் பெண்களின் ஓர் உடல் பகுதி தீண்டல் குற்றமல்ல எனத்¹ தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து வழக்கைத் தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை ‘திறன் குறைபாடு உள்ளவர், மனிதாபிமானம் அற்றவர்’ எனக் கூறிவிட்டு, ‘இத்தீர்ப்பு அதிர்ச்சி தந்தது’ என்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும்
இதுபோன்ற நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. ‘மதமாற்றம்’
எனச் சோடிக்கப்பட்ட வழக்கு ஒன்று நீதிபதி ஒருவரிடம் போகிறது. அந்த வழக்கில் வாதிடும் வழக்குரைஞரை மையப்படுத்தி, அந்த வழக்கு நடைபெற்ற ஊர், பெயர் பற்றி நீதிமன்றத்தில் நீதிபதி
ஆராய்ச்சி நடத்துகிறார்.
அத்துடன் கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம் உள்பட்ட, வலதுசாரிக் கருத்துகளைத் தன் தீர்ப்பில் பதிவிடுகிறார். இருப்பினும், இவ்வழக்கில் மத்திய புலனாய்வுத் துறை எந்த மதமாற்றமும் நடக்கவில்லை எனத் தற்போது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது,
மேலும்,
எச். இராஜாவின் தந்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், காஞ்சி விஜேயந்திரர் தமிழ்த்தாய் வணக்கத்திற்கு எழுந்து நிற்காததற்கு விலாவாரியாக வியாக்கியானம் செய்து, தியானத்தில் இருப்பது தவறல்ல என்று நியாயப்படுத்துவது, முட்டுக்கொடுப்பது நீதிமன்றப் பாரம்பரியம் மீறியதாகும். விஜயேந்திரரும் சட்டத்திற்கு உட்பட்டவர்தான் எனத் தமிழ்நாடு அரசு யாராக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் எனச் சட்டம் போட்டுவிட்டது. செல்வி ஜெயலலிதா ஜெயேந்திரர் வழக்கில் காட்டிய துணிவுதான் அவரை ‘இரும்புப் பெண்மணி’ எனக் கூறவைத்தது என்பதையும் நாம் வலுவாகச் சொல்ல வேண்டும்.
நீதிமன்றத்
தீர்ப்புகளுக்கு உள்ளர்த்தம் கற்பிக்கக்கூடாது, தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் தேடக் கூடாது, தனிமனித விமர்சனங்கள் கூடாது, அது ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபுதான். ஒரே நீதிபதி அளித்த தொடர் தீர்ப்புகள் ஒரு பக்கம் சார்ந்தவை என்ற பின் குரல்கள் எழுப்பக்கூடாதா? மூட நம்பிக்கை குறித்து கவலைகொள்ளாமல், சட்ட விதிகளைப் பாராமல், பழைய உச்ச, உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மதியாமல், மதநம்பிக்கை என்ற பெயரில் எல்லாவற்றிலும் தனி நீதிபதியே முடிவெடுத்தால்,
மக்கள் எங்கே போவது?
ஒரு
நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார். அவர் “கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா? மசூதிகள் மற்றும் தேவாலயங்கள்மீது அரசு அதே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டாமா? அவ்வாறு வாதிடுவதில் நியாயம் இல்லையா?” என்று கேட்கிறார். சில சமூக, மதநல்லிணக்க விரோதிகள், வழக்கு நீதிமன்றம் போகட்டும்; பார்த்துக்கொள்ளலாம் என்ற ஏகாந்த மனநிலைக்கு வந்துவிட்டனர். இந்த மனநிலை சட்டத்தின் ஆட்சியின் முன் சாபம் அல்லவோ? ஒரு சமயச் சார்பற்ற நாட்டில், இவ்வாறான நீதி பரிபாலனையை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்?
ஓய்வுபெறும்
நாளில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் கூறுகிறார், “என் வாழ்வின் கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்து கற்றுக்கொண்டேன். எனக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தொடர்பு இருக்கிறது.” நான் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகளை எவ்வாறு விமர்சிப்பது? மேலும், உச்ச நீதிமன்ற பார்கவுன்சில் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல், “நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன், தாங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றும், அங்கேயே திரும்பச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறார்கள்” என்ற
உண்மையைப் பொதுவெளியில் போட்டு உடைக்கிறார்.
விசுவ
இந்து பரிஷத் அமைப்பின் சட்டப்பிரிவு 1) காசி,
மதுராவில் பள்ளி வாசல்கள் இருக்கும் இடத்தில் இந்துக் கோவில்கள் கட்டுவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகள், 2) வக்ஃப்
சட்டத் திருத்தம், 3) மதமாற்றத் தடைச்சட்டம் என
மூன்று முக்கிய
மதவாத பிரச்சினைகளை விவாதிக்கிறது. மத்திய சட்ட அமைச்சர் இதில் கலந்துகொள்கிறார். இக்கூட்டத்தில் காவி சால்வை அணிந்து, 30 முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டனர். இதைத்தான் தந்தை பெரியார் அன்றே கூறினார்... “நாம் போராடி சட்டங்கள் கொண்டு வரும் நாளில், ஒரு சாரார் நீதிமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர்”. ஆம்,
நீதித்துறை சார்ந்த ஒரு புள்ளி விவரம் அதை உறுதிப்படுத்துகிறது.
உயர்
நீதிமன்றங்களில் 650 நீதிபதிகள். அதில் உயர் சாதியினர் 75.69% 492 பேர், ஓ.பி.சி.
11.7% 76 பேர், எஸ்.சி. பிரிவினர் 3.54%
23 பேர், எஸ்.டி. பிரிவினர் 1.54% 10 பேர். இதைத்தான்
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் காட்டமாகப் பேசுகிறார்: “பார்ப்பனியத்தின் அதிகார மையங்களைத் தகர்க்காமல், சமூக நீதியைப் பெற முடியாது.” சமூகத்தின் வெறும் 3% மக்கள் எப்படி அனைத்து அரசு உயர் பணிகளிலும் பெரும்பான்மை பெற்றார்கள்? என்று கேட்கிறார்.
இங்கேதான்
நம் சமூக நீதியின் குரல் ஒலிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 124/217 மற்றும் 224-இன்படி, நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இச்சட்டம் திருத்தப்பட்டு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை
முன்னெடுக்கப்பட வேண்டும்.
அக்காலத்தே ஆர்.எஸ்.எஸ். நீதிபதிகள் முடிவுக்கு வருவார்கள். வருங்காலத்தில் தேசத்தில் சமூக நீதிக்கு உள்பட்டே நீதி
பரிபாலனம் வலுப்பெறும்.
அதுவே சிறந்த சனநாயகம்.
உணவு முறை என்பது கடந்த 10,000 ஆண்டுகளை விடவும், கடைசி 50 ஆண்டுகளில் பெரிதும் மாறிப்போயிருக்கிறது என்ற கசப்பான உண்மைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, ஓர் உணவு அரசியல். இந்த அரசியலைக் கையிலெடுத்து, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது ‘கார்ப்பரேட் வேளாண்மை’ என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் வெளியான ஓர் ஆவணப்படம்.
விவசாயிகளை
அடிமையாக்கி, சந்தையில் மக்களின் உடல் நலனுக்குக் கேடுதரும் உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் தேவையைச் செயற்கையாக உருவாக்கி, ஓர் எளிய மனிதனின் வாழ்வியல் தேவையான ஒரு கைச்சோற்றைத் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட் புத்தி.
பிறகு
ஏன் விவசாயிகள் இவர்களுக்காகத் தங்கள் நிலத்தில் விளைவிக்கிறார்கள்? அவர்களுக்குப் புத்தி இல்லையா? என்று நாம் நினைக்கலாம். இந்தக் கேள்வியை விவசாயியிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணினால், அவர்கள் பதில் என்ன தெரியுமா? “இதைத்தான் நாங்கள் விளைவித்துத் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம்;
இயற்கை விதைகள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களின்
கைகளுக்குள் போய்விட்டன; இவர்களின் பிடியில் மொத்த அரசும் சிக்கியிருக்கிறது” என்கிறார்கள்.
இதைக் கூறியவர் ஓர் அயல்நாட்டு விவசாயி. அவர்களுக்கே நிலைமை
இப்படி என்றால், ஓர் எளிய இந்தியக் கிராமத்து விவசாயியின் நிலைமையை என்னவென்பது?
உணவு
ஓர் அரசியல் ஆகிப்போனது பற்றிய எந்த உண்மையும் தெரியாமல் நாமும் விழிப்பற்றுத் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தாம் குடிக்கின்ற கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெங்காயம் இருந்தால் போதும் என்ற மனநிலையோடு கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், உணவரசியல் செய்யும் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள், எளிய மனிதர்களின் உணவு உரிமையைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலக
அளவில் சந்தைச் சூதாடிகளின் உணவரசியல் ஒரு பக்கம் என்றால், உள்ளூர் அளவில் மாட்டுக்கறியை வைத்து அரசியல் செய்கிறது
மற்றொரு கூட்டம். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தனிமனிதனின் உணவு உரிமை சந்தி சிரித்து நிற்கிறது.
உணவு
என்பது அவரவர் விருப்பம். என்ன சாப்பிடுவது? எதைச் சாப்பிடுவது? சாப்பிடாமல் இருப்பது என்பது எனது விருப்பம்; அந்த விருப்பத்தை, உரிமையைத் தடுத்து நிறுத்தி, அதில் ஒரு வக்கிரத் திருப்தி அடைவதற்கு, அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள் அதிகாரம்
படைத்தவர்கள் சிலர்.
வட
மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் அப்பாவி
மனிதர்கள் உண்ணும் உணவைக் குறிவைத்து நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவின் உணவரசியல். மறக்க இயலாத அளவுக்குக் காணொளியில் சாட்சிகள் குவிந்து கிடக்கின்றன. நல்லவேளை, தமிழ்நாட்டில் பிறந்துவிட்ட காரணத்தால், நாம் தப்பிப் பிழைத்து விட்டோம் என்று இதயம் கூறுகிறது. இப்படிப்பட்ட அநீதிகள் இந்த மண்ணில் நிகழ்ந்துவிடாத அளவிற்கு நமது கலாச்சாரப் பண்புகள் நம்மை வளர்த்தெடுத்திருக்கின்றன.
ஆனாலும்,
தமிழ்நாட்டின் மீது கார்ப்பரேட்டுகளின் கவனம் இன்றும் அதிகரித்திருக்கிறது. ஏனென்றால், நாம் உணவை மருந்தாக உண்டவர்கள். மருந்தை விஷமாக்கினால்தானே காசு பார்க்க முடியும் என்பது அவர்களின் கணக்கு.
உணவும்
உடலும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இயங்கும் வாழ்வியலைக் கொண்ட நமது நாட்டில் இன்று உணவைத் தனியாகவும், உடல்நலத்தைத் தனியாகவும் பிரித்து வணிகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பல பன்னாட்டு நிறுவனங்கள்.
இந்தப்
பன்னாட்டு நிறுவனங்களுக்காகச் சொந்த நாட்டின் வளத்தைச் சூறையாடி, உழைக்கும் மக்களின் உணவை அரசியலாக்கி, உழைப்பைச் சுரண்டி, அவர்களின் நலனைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைத்து, மேட்டுக்குடி நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு உலகெங்கிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.
என்றைக்கு
உலகமயமாக்கல் என்ற மாயக்கரம், நம் நாட்டு மக்களுக்குப் பீட்சா, பர்கர், KFC, டோமி
னோஸ் என்ற மோகத்தைக் காட்டி வீழ்த்தியதோ, மேட்டுக்குடியினரின் சமையலறைக்குள் வெளிநாட்டு உணவு வகைகளை உலவவிட்டு பரவலாக்கியதோ, அன்றே உணவுக்கான அரசியல் இங்கே வந்து அமர்ந்து விட்டது. ‘உணவே மருந்து’ என்பது, ‘உணவே விஷம்’ என்றாகிவிட்டது. விளைவு, இதற்கு விலையாக வளரும் நம் இளைய சமுதாயம் வலுவற்ற, நோயுற்ற புதிய தலைமுறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சர்க்கரை நோய், இதயநோய் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டு
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிருக்கும் இந்த உணவுதான் காரணம் என்றால் நம்ப மறுக்கிறது அவர்களின் மூளை. நம்ப விடாமல் செய்கிறது அவர்களின் நாக்கு. அறிவியலை உணவியலுக்குள் புகுத்திவைத்து, பணமுதலைகளும் சுயநலச் சக்திகளும் ஆடும் இந்த அரசியல் ஆட்டம், நம் கிராமங்கள் வரை ஊடுருவி இருக்கிறது.
இன்று
பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், பன்னாட்டுக் குளிர்பானங்கள், இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள், பயிர்களை நாசமாக்கும் பூச்சிக்கொல்லிகள் என்று அனைத்தும் வரிசை கட்டி நின்று, நம் அன்றாட வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உணவரசியல் சங்கிலித் தொடர் உலகைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டிருக்கின்றது.
கார்ப்பரேட்டுகளின்
பிடியில் அகப்பட்டுள்ள நம் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் மீண்டும் நம் உலகத்தைப் பஞ்சத்தை நோக்கியும் பட்டினிச் சாவை நோக்கியும் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். ஆனால், நீண்ட கால இலாபத்தை, ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியைக் கைப்பற்றுவதன் வழியாக அறுவடை செய்துகொள்ளலாம் என்ற கனவைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ABCD நிறுவனங்கள்.
‘யார் இந்த ABCD நிறுவனங்கள்?’
என்கிறீர் களா? உலக அளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், Archer Burge Cargill
Daniels Midland Dreyfus ஆகியவைதான்
இந்த நிறுவனங்கள்.
ஒட்டுமொத்த
விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. நிலத்தின் மீதான சொத்துரிமை, இரு பொருள்கள், அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை அனைத்தையும் அதன் உரிமைகளையும் தங்களின் கீழ் இணைத்துக்கொள்ளப் போகிறார்கள்.
‘என்னென்னவோ கூறுகிறீர்கள், இதற்கும் நான் உண்ணும் உணவிற்கும் என்ன சம்பந்தம்?’ என்று இனி நீங்கள் கடந்து போய்விட முடியாது. எளிய
மனிதனின் விருப்பமான
மாட்டுக்கறி தொடங்கி, உயர்தர நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மட்டுமின்றி, கணிசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கீழ் நடுத்தர வர்க்கம் வரை, தங்களின் சங்கிலித்தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்தப் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள்.
ஒரு
தனிநபர் என்கின்ற வகையில், அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களை வாங்கி, அவற்றின் சொந்தக்காரராக இருப்பவர் யார் தெரியுமா? கணினி உலகின் கதாநாயகன் பில்கேட்ஸ்!
நம்ப
முடிகிறதா? உணவரசியல் எங்கிருந்து தொடங்கி இருக்கிறது என்பது!
இப்போது
ஓரளவுக்கு நீங்கள் யூகிக்க முடிந்தால், நீங்கள்தான் அறிவாளி!
(வாழ்வியல்
அரசியல் தொடரும்)
என் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் ஒவ்வொருவருக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நல்வாழ்த்துகள்!
இலங்கை
- இந்திய நாடுகளின் நட்புறவுக் கொண்டாட்டமாக இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இறைவனுடைய ஆசிரின் அடையாளமாக இருப்பதோடு, இரண்டு நாட்டு மக்களையும் ஒன்று கூட்டுகிற நபராகப் புனித அந்தோணியார் திகழ்கிறார். இராமேஸ்வரம் பகுதியில் வாழ்ந்த சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் அன்றிலிருந்து விழா கண்டு வருகிறது. தற்போது, தவக்காலத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தத் திருவிழா இங்குச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வேளையில்,
நம் எல்லா மக்களும் குறிப்பாக, இலங்கை - இந்திய நாட்டு மக்களும் இதன் கடற்கரைப் பகுதிகளிலே வாழ்கிற மீனவர்களும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும், ‘இல்லாமை இல்லாத நிலை வேண்டும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்ற
செபத்தோடு புனித அந்தோணியார் நமக்குத் தரும் செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக்
கூடுகை என்பது தவக்காலத்தினுடைய திருப்பயணமாக அமைகிறது. இவ்விழாவை இந்தத் தவக்காலத்தில் கொண்டாடுவது பெரிதும் பொருத்தமானதாக அமைகிறது. எபேசியர் 1:4-இல் புனித பவுல், “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்று
குறிப்பிடுகிறார். எனவே, கிறித்தவ வாழ்வுக்கான அழைப்பு என்பது புனிதத்திற்கான அழைப்பு; அதனால்தான், தொடக்க மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒவ்வொரு கிறித்தவரும் ‘புனிதர்’ என்றே அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு கிறித்தவரும் இறந்தவுடன் அவரிடம் மற்ற கிறித்தவர்கள் செபித்தார்கள். ஆனால், கி.பி. 313-ஆண்டிலேயே
கான்ஸ்டான்டைன் மன்னர் திரு அவைக்குச் சுதந்திரம் கொடுத்த பிறகு, நமது ஆடம்பர வாழ்வின் காரணமாகப் பல்வேறு பாவங்கள், பலவீனங்கள் கிறித்தவர்களை ஆட்கொண்டன. ஒரு கிறித்தவர் இறந்தார் என்றால், அவருக்காக, அவருடைய பாவ மன்னிப்புக்காகச் செபிக்கிற வழக்கம் திரு அவையிலே ஆரம்பமானது. எனவே, நாம் அனைவரும் புனிதர்களாக வாழ்வதற்கும் இறுதியாக, புனிதத்தின் உச்சமான இறைவனை மறுவுலகில் சென்று தரிசிப்பதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய நம்பிக்கை அறிக்கையிலே ‘புனிதராம் கடவுள் மனிதரைப் புனிதராக்க மனிதரானார்’ என்று
நாம் பாடுகிறோம். மனிதரைப் புனிதராக்கப் புனிதராம் கடவுள் மனிதரானார். எனவே, நாம் புனிதத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இந்தப்
புனிதம் என்பது என்ன? இறைவனை நெருங்கி வருவதாகும். இறைவனை நெருங்கி வருவது என்பது கடினமான ஒன்றாக எப்பொழுது இருக்கும்? என்று சொன்னால், பாவங்கள் நம்மைச் சூழ்ந்தபொழுது நாம் இறைவனை நெருங்க இயலாது. இந்தப் பாவம் என்பது இருளுக்குச் சமம். இருளில் இருந்துகொண்டு நாம் ஒளியைக் காண இயலாது. ஒளிக்கு வருகிறோம் என்று சொன்னால், இருள் மறைந்துவிடும். எனவே, நாம் இருளைத் துறப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். இந்த இருள் என்பது என்ன? பாவத்தின் ஆட்சியே! பல்வேறு ஆசைகளே இதற்குக் காரணம் என்கிறது புத்த சமயம். “எல்லாப் பாவங்களுக்கும் ஆசையே காரணம்!” என்று கூறினார் புத்தர் பெருமான். “ஆசை அறுமின், ஆசை அறுமின், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்” என்றார் புத்தர். ஆகவே, இந்த ஆசைதான் மனிதனுடைய பாவங்களுக்குக் காரணமாக இருக்கின்றது.
ஆசை
மட்டுமல்ல, பேராசைப்படுகின்ற மனிதர்களும் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வுக்குத் தேவையானது மட்டுமல்ல, அதற்கு மேலும் மேலும் வசதிகள் குவிய வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். கவிஞன் பாடுகிறான்… “மேகங்கள்
மோதி வானங்கள் காயம் அடைவதில்லை; வண்டுகள் மோதி மலர்கள் காயமடைவதில்லை. அலைகள் மோதி பாறைகள் காயம் அடைவதில்லை. பனித் துளிகள் மோதி புற்கள் காயம் அடைவதில்லை! அந்தோ பரிதாபம், மனித மனத்தை ஆசைகள் மோதும்போது, மனிதன் காயப்பட்டுப் போகிறான்”
என்று பாடுகிறான். இதில் ஆசை என்று சொல்லுகிற பொழுது கெட்ட ஆசை இருக்கிறது, நல்ல ஆசையும் இருக்கிறது. நல்ல ஆசை நல்லதுதான்; நான் நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும், என் மனைவிக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் பிரமாணிக்கம் உடையவனாக இருக்க வேண்டும், கடினமாக உழைப்பவனாக இருக்க வேண்டும், எல்லாரிடமும் நல்லவன் என்று பெயர் பெறுபவனாக இருக்க வேண்டும், கடவுளுடைய ஆசைக்கு உகந்தவனாக இருக்க வேண்டும்...… என்பன போன்ற நல்ல ஆசைகள் இருப்பதில் தவறில்லை. ஆனால்,
நம்மிடம் தீய ஆசைகள்தான் அதிகமாக நம்மை வந்து சூழ்ந்துகொள்கின்றன. இந்தத் தீய ஆசைகள்தான் ஒரு கெட்ட சக்தியாக நம்மில் இருந்துகொண்டு பாவங்களைச் செய்ய வைக்கின்றன.
இளங்குருவாக
நான் இருந்தபொழுது சிறைச்சாலைகளிலே சென்று கைதிகளுக்கு உதவி செய்வதுண்டு. அவர்களுடைய குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுப்பதுண்டு.
அப்பொழுது ஒரு கைதி சொன்னார், “ஒரே ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக நான் என்னுடைய நண்பனையே கொன்றுவிட்டேன் ஃபாதர். அதனால் இப்பொழுது இருபது வருடங்களாக இந்தச் சிறைச்சாலையில் வாடுகிறேன்” என்று.
ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக, நம்முடைய தீய குணங்கள், தீய இச்சைகள் தீய சக்திகளாக மாறிவிடுகின்றன. அவைதான் நம்மைப் பாவம் செய்ய வைக்கின்றன. எனவே, இந்தப் பாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.
‘இனி நான் இந்தப் பாவத்தைச் செய்ய மாட்டேன்’
என்று பலமுறை உறுதியெடுக்கின்றோம்; ஆனால், மறுநாளே அதே பாவத்தைச் செய்வதுண்டு. பாவச் சூழல் என்பது இயல்பாக நம்மைத் தொடர்கிறது. எனவேதான், இந்தப் பாவங்களால், தீய நாட்டங்களால் நாம் கவரப்படுகிறோம்.
ஏன்
இப்படித் திரும்பத் திரும்ப நாம் பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், அதற்கு இந்திய மரபில் வருகிற ஒரு கதை உண்டு. ஒரு மனிதரை முனிவர் ஒருவர் “நீ பன்றியாகப் போவாய்…” என்று
சபித்து விடுகிறார். அவர் வீட்டிற்கு வந்ததும் தன் மகனிடம், “நான் பன்றியாக மாறிவிட்டால்,… நீ
என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடு. ஏனென்றால், மனிதனாக வாழ்ந்த நான் பன்றியாக வாழ விரும்பவில்லை” என்று
சொன்னார். ஆகவே, மகன் ஒரு பெரிய வாளை எடுத்துக்கொண்டு அப்படியே சுற்றி வருகிறான். சென்னை கூவம் சாக்கடைக்கு வந்தபோது, அப்பா பன்றி ஒரு பெண் பன்றியுடன் 10 குட்டிகளை அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நீந்திக்கொண்டிருந்தது. மகன் உடனே வாளை எடுத்து வெட்ட வருகிறான். அப்போது அந்த அப்பா பன்றி, “என்னை வெட்டாதே!” என்றது. அதற்கு மகன், “மனுசனா வாழ்ந்த நான், பன்றியா மாறி வாழ விரும்பல, கொன்னுடுன்னு சொன்னியே? இப்ப என்னடான்னா ‘கொல்லாதே’
என்று சொல்கிறாயே” என்று
மகன் கேட்டான். அதற்கு அப்பா பன்றி, “அப்போ கூறியது உண்மைதான். ஆனால், இப்போ இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. அது மட்டுமில்ல, இது உங்க சித்தி, இதெல்லாம் உன் தம்பி, தங்கைகள்”
என்று கூறியது.
ஏன்
நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், இந்தப் பாவம் ஒரு கெட்ட சுவையை நம்மிடம் விட்டுச் செல்கிறது. பாவத்திற்கு என்று ஒரு சுவை இருக்கிறது. அந்தக் கெட்ட சுவையின் காரணமாகத்தான் நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம். எப்படி இந்தக் கெட்ட சுவையை மாற்றுவது? நல்ல சுவையை நாம் நாட ஆரம்பித்து விட்டோம் என்றால், இந்தக் கெட்ட சுவை காணாமல் போய்விடும்.
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு’
(குறள் 350)
என்கிறார்
வள்ளுவர். கெட்ட பற்றுகளான ஆசைகளை விடுத்து, பற்றற்றவரான கடவுளை நாம் பற்றிக்கொண்டோம் என்று சொன்னால், நாம் நிச்சயமாக நன்றாக வாழ்வோம். குறிப்பாக, நம்முடைய தீய நாட்டங்கள், தீய இச்சைகள், தீய பாவங்கள் நம்மை அணுகாமல் தூரமாகப் போய்விடும். நாம் கடவுளைப் பற்றிக்கொண்டோம் என்றால், நல்லவரைப் பற்றிக் கொண்டோம் என்றால் அல்லவை எல்லாம் அழிந்துவிடும், தூரமாகப் போய்விடும். ஆகவேதான், இத்தகைய ஒரு புனிதத்தை அடைபவர்கள் எப்பொழுதும் பாவத்திலிருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,… புனிதம் வந்த பிறகு புனிதத்தின் அடையாளங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவைதான் புதுமைகள்!
எத்தனையோ
புனிதர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ பேர் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இறந்தும் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் பதுவை
புனித அந்தோணியார் மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கக் காரணம் என்ன? இவரிடம் அவ்வளவு ஓர் ஆழமான இறைநம்பிக்கை காணப்பட்டது. இவருடைய உணர்வு நாளங்கள் முழுவதும் இறை நாளங்களாக மாறிவிட்டன. அதனால்தான் அவர் வாழும் காலத்திலேயே நிறைய புதுமைகள் செய்தார். அவருடைய வார்த்தைக்கு ஆற்றல் இருந்தது. அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்றால், இறைவனிடமிருந்து வருகிறது. புனித அந்தோணியார் செபத்திலே இறைவனோடு முழுமையாகக் கலந்திருந்த காரணத்தினால், அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ஆற்றல்கள் கிடைத்தன. அதன் காரணமாகத்தான் அவர் நிறைய புதுமைகள் செய்தார்.
துறவு
வாழ்வில் கடினமான ஒன்று இருக்கிறது என்று சொன்னால், குருக்களுக்கு, துறவிகளுக்குத் தெரியும்... பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவது என்பதுதான். அந்தோணியார் புதுமை செய்து மிகவும் அறியப்பட்ட காரணத்தினால் அப்பொழுது ‘ஒரு நாளைக்கு ஏழு புதுமைதான் செய்ய வேண்டும். அதுக்கு மேல் செய்யக்கூடாது’ என்று
இல்ல அதிபர் கட்டளையிட்டார். ஒருநாள் காலையிலேயே ஏழு புதுமைகளையும் செய்துவிட்டார். அன்று மாலை அவர் இல்ல வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார். அந்தத் துறவு மடத்தின் மேல் மாடியில் ஒரு கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் அந்தச் சாரம் சரிந்து விழுவதைப் பார்க்கிறார். அவரை அப்படியே ஆகாயத்தில் நிறுத்திவிட்டு, இல்ல அதிபரிடம் சென்று அந்தக் கொத்தனாரைக் காப்பாற்ற எட்டாவது புதுமை செய்ய அனுமதி கேட்கிறார். அப்போது அந்த இல்லத்தின் அதிபர், “நீங்கள் ஏற்கெனவே எட்டாவது புதுமை செய்துவிட்டீர்கள். அவரை அங்கேயே நிறுத்திவிட்டீர்களே!… இருந்தாலும், நீங்கள் கீழ்ப்படிந்து அனுமதி கேட்க வந்தது மிக்க மகிழ்ச்சி. இனிமேல் உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை” என்று கூறினார்.
இப்படியாக
புனித அந்தோணியார் மிகச்சிறந்த ஒரு நபராக, நல்ல புனிதராக வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்வில் நல்லவராக இல்லாதவர்கள், கடவுளுக்கு நல்லவராக இருக்க முடியாது. கடவுளுக்கு நல்லவராக இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் ஆற்றல்மிகுந்த செயல்களைச் செய்ய முடியாது.
நீங்கள்
எந்த அளவிற்குக் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறீர்களோ, கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெற்றிருக்கிறீர்களோ அவர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும்;
நினைத்ததெல்லாம் கைகூடும். எனவே, அத்தகைய ஒரு புனிதராக நம்முடைய புனிதர் இருந்த காரணத்தினால், புனித அந்தோணியார் என்றும் மிகச்சிறந்த புனிதராகப் போற்றப்படுகிறார். புனித அந்தோணியாரிடம் வந்து மன்றாடிய மன்றாட்டுகள் வீண்போனதே இல்லை. எனவே, கோடி அற்புதர், புதுமை வள்ளல், அழியா நாக்கு படைத்த மாமுனி என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கக் கூடிய புனித அந்தோணியாரின் பக்தர்களாகிய நாம், இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாக இவ்விழாவில் கலந்துகொள்வது தொடர வேண்டும். நமது நல்லுறவு தொடர்ந்து வளர வேண்டும். இரண்டு நாடுகள் மட்டுமல்ல, உலக நாடுகள் முழுவதும் சமாதானமாக இருக்க வேண்டும். போர்கள் ஒழிய வேண்டும். நட்புறவு திகழ வேண்டும். வறுமை, வேலையின்மை ஆகிய தீமைகள் அகல வேண்டும். இளம் பருவத்தில் வேலைவாய்ப்பை, திருமணத்தைத் தேடி நிற்கிற பிள்ளைகளுக்கு அவை விரைவிலே கைகூட வேண்டும். பெரியவர்கள் உடல் சுகம், மன சுகம் பெற்று
வாழ வேண்டும் என்று புனித அந்தோணியார் வழியாகத் தொடர்ந்து மன்றாடுவோம்!
கடந்த ஒரு மாதத்தில் சமூக ஊடகங்களில் அதிகம் ‘அடிபட்டது’ போப் பிரான்சிஸ் பெயராகத்தான் இருக்கும். பிப்ரவரி 14-ஆம் நாள் மூச்சுக்குழாய் பிரச்சினை ஏற்பட்டு அவர் ஜெமெல்லி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டவுடன், புதிய ‘கன்டென்ட்’ கிடைத்த உற்சாகத்தில் உரோம் நகரில் களமிறங்கிய உலக ஊடகங்கள், பிரான்சிஸின் உடல் பிரச்சினை என்ன? அவர் பிழைப்பாரா? மாட்டாரா? அடுத்த போப் யார்? இப்போது யார் வத்திக்கானை நிர்வாகம் செய்வது? ‘கான்க்ளேவ்’ என்றால் என்ன? சுவிஸ் கார்டுகள் ஒத்திகை பார்ப்பது உண்மையா? என்றெல்லாம் பலவற்றை ஆராய்ச்சி செய்து செய்திகள் வெளியிட, இரவில் தூக்கம் வராத நம் ஊர் சமூக ஊடகர்கள் ‘போப் இறந்து விட்டார் - கண்ணீர் அஞ்சலி’ என்றும், ‘இல்லை, இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்-கடவுளுக்கு நன்றி’ என்றும் மாற்றி மாற்றி உளறிக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் பல நாள்களுக்கு முன்பே அமேசான் கிண்டிலில் தரவிறக்கம் செய்து, பிறகு படிக்கலாம் என்று கிடப்பில் போட்டிருந்த ‘Hope: The Autobiography’ என்ற பிரான்சிஸ் அவர்களின் தன் வரலாறு நூலைப் பொறுமையாக வாசித்து முடித்தேன்.
இது
போப் பிரான்சிஸ் ‘Carlo Musso’என்கிற இத்தாலிய
பத்திரிகையாளரோடு இணைந்து எழுதியது. வெளியீடு: Randon House. ஜனவரி 25 அன்று
வெளியான Hope, பதவியில்
இருக்கும் ஒரு போப்பாண்டவர் வெளியிடும் முதல் தன் வரலாறு நூல் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
80 நாடுகளில், பல்வேறு மொழிகளில் இந்நூல் கிடைக்கிறது. மூலமொழி இத்தாலி. நான் வாசித்தது Richard Dixon மொழிபெயர்ப்பில்
வந்துள்ள ஆங்கிலப் பதிப்பு.
கடந்த
ஆறு வருடங்களுக்கும் மேலாக திருத்தந்தை பிரான்சிஸ், பத்திரிகையாளர் கார்லோவுடன் நிகழ்த்திய பல்வேறு உரையாடல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ‘Hope’ ஒரு முழுநீள
தன் வரலாறு நூல் அல்ல; இதை ‘Memoir’ என்று வகைப்படுத்துகிறார்கள்.
அதாவது, சில ஆதார வாழ்க்கை நிகழ்வுகளின் நினைவுகூரல்கள் அல்லது
டைரி குறிப்புகள் என்று சொல்லலாம் - selective life story.
பிரான்சிஸின்
குடும்பம் அர்ஜென்டினாவுக்குக் குடிபெயர்ந்தது, அவரின் குழந்தைப் பருவம், தந்தையின் இறப்பு, இறை அழைத்தல், இயேசு சபைத் துறவியாக வார்த்தைப்பாடு, Buenos Aires ஆயர்
பணி, திருத்தந்தையாகத் தேர்வு போன்ற முக்கிய நிகழ்வுகளுடன் அவரின் சிறுவயது ஆசை கள், வருத்தங்கள், ஆர்வங்கள், தடுமாற்றங்கள், ஆன்மிகச் சிந்தனைகள், நிலைப்பாடுகள் போன்ற human interest அம்சங்களையும் சரிவிகிதத்தில்
சேர்த்து, ஒரு நாவலுக்குரிய கதைமொழியில், விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ள ‘Hope’-ஐ வாசிக்கும்
கத்தோலிக்கர்களுக்குத்
திருத்தந்தை பிரான்சிஸின் papacy ஆட்சிக்காலத்தைப் புரிந்து கொள்ள சில சன்னல்கள் திறக்கும்.
திருத்தந்தை
பிரான்சிஸ் தன் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கடவுளின் செயல்பாட்டைப் பார்க் கிறார். நூலின் முன்னுரையில் அவரே கூறுவது போல, “I don’t recall anything in which You are not there.” திருத்தந்தை பிரான்சிஸின் வாழ்க்கை நூல் ஓர் எதிர்நோக்குப் பயணத்தின் கதை (The book of my life is
the story of a journey of hope). இறந்த பின் posthumous ஆக வெளியிடத் திட்டமிட்டு
ஆரம்பித்த ‘Hope’ தன்
வரலாறு நூலைத் திருத்தந்தை பிரான்சிஸ், ‘எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு 2025’-இன் தொடக்கத்தில், தான் உயிரோடு இருக்கும்போதே வெளியிட முடிவெடுத்ததில் ஆச்சரியமில்லை.
‘Hope’ நூலை ஒட்டி
‘National Catholic Register’ என்னும் அமெரிக்க இணையப் பத்திரிகையில், Matthew McDonald என்பவர்
எழுதியுள்ள ‘ஏன் பிரான்சிஸ் பீட்சாவை விரும்புகிறார்? டிவியை வெறுக்கிறார்? - போப் பற்றி 12 தகவல்கள்’
என்ற கட்டுரையை விரும்பி வாசித்தேன். அதில் ஆறு தகவல்களின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம், ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்காக இங்கே. மீதம் 6 அடுத்த கட்டுரையில்.
1. கசாப்பு - மருந்து - சாக்லேட்
போப்
பிரான்சிஸின் இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ. ஹோர்கே ஒரு சாதாரண குடியேறி குழந்தை. A migrant child. எதிர்கால
மேன்மையின் ஆரம்ப அடையாளங்கள் எதுவும் அவரின் வளர் பருவத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. நம் குழந்தைகளுக்கு JCB இயந்திரம்
போல, பல எளிய விசயங்கள்
அவரைக் கவர்ந்திருக்கின்றன. மார்க்கெட்டில் வெள்ளை மேலுடை தரித்து, நிதான கரங்களால் கறிகளை வெட்டிப் போடும் கசாப்புக்கடைக்காரர் அவருக்கு ஒரு ஹீரோவாகத் தென்பட்டிருக்கிறார். ‘எதிர்காலத்தில் நான் ஒரு கறிக்கடை வைத்து நிறையப் பணம் சம்பாதிக்கப் போகிறேன்.’ சற்று வளர்ந்த பிறகு மருத்துவம். மாநில வேதியியல் நிறுவனத்தில் ‘உணவு அறிவியல்’
படித்த காலத்தில், படிப்பின் ஒரு பகுதியாகச் சாக்லேட்டுகளின் rancidity - கெட்டுப்போகும் தன்மையைச் சாப்பிட்டுப் பார்த்து சோதிக்க வேண்டும் என்று கூறியபோது, ஹோர்கேவின் தலையில் பல்பு எரிந்து, ‘கண்ணா, லட்டு தின்ன ஆசையா?’ என்று யோசித்து, ‘நான் சாக்லேட்
அனலிஸ்ட்டாகப் போகிறேன்’
என்று கூறியிருக்கிறார்.
2. சண்டைக்காரர்
இளம்பருவத்தில், ஹோர்கே
சண்டை விரும்பியாக இருந்துள்ளார். வேதியியல் நிறுவனத்தில் பயின்றபோது, அவர் வகுப்பில் இரண்டு மக்குப் பையன்கள் இருந்தார்கள். வாத்தியார் எது கூறினாலும், தலையில் ஏறாத கேசுகள். எப்போதும் மற்ற மாணவர்கள் அவர்களை வம்பிழுத்துக் கொண்டிருப்பார்கள்... ஹோர்கே உள்பட. ஒருமுறை அவர்களில் ஒருவனுக்கும் ஹோர்கேவுக்கும் சண்டை வந்து விட்டது. சண்டை என்றால் தண்ணீர்க் குழாயடி வகை கிடையாது. படத்தில் பார்ப்பது போன்ற ஆக்ஷன்! ஹோர்கே வாட்டசாட்டமான ஆள். ஒரே அடியில் அவனைத் தரையில் வீழ்த்திவிட்டார். ‘அவனுக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அவன் சிறிது நேரம் எந்த உணர்வும் இல்லாமல் மயக்கமாகக் கிடந்தான். என்
செயலை நினைத்து நான் அவமானப்பட்டேன்.’
அன்று
மாலை ஹோர்கேவின் தந்தை அவரை அந்த மாணவனின் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல, அங்கே ஹோர்கே அவனிடம் மன்னிப்புக் கேட்டார்.
பின்னாள்களில்
அவர் Buenos Aires பேராயராக
இருந்தபோது, அந்த மாணவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவர் ஒரு பிரபல நற்செய்தி ஊழியர். ஐந்து குழந்தைகள். ‘அவர் மிகவும் கனிவுள்ள மனிதராக இருந்தார்’
என்று ஹோர்கே தன் ஒரு கால ‘சண்டையாளனை’ நினைவுகூர்கிறார்.
3. இரண்டு இடது கால்கள்
ஹோர்கேவுக்குக்
கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. அர்ஜெண்டினாவில் கால்பந்து பிடிக்கவில்லை என்று சொன்னால் தூக்கில் போட்டு விடுவார்கள். கோல் கீப்பராக விளையாடியிருக்கிறார். ஆனால், அவ்வளவு பிரமாதமான ஆட்டக்காரர் கிடையாது. ‘என் போன்ற ஆள்களை Pata dura என்று
அழைப்பார்கள்’ என்று
ஹோர்கே சொல்கிறார். Pata dura என்றால் ‘இரண்டு இடது கால்கள் கொண்ட கால்பந்து ஆட்டக்காரர்’ என்று
அர்த்தம். அவர்களுக்கு என்ன ஆட வரும்? பந்தை
கிழக்கே அடித்தால், அது மேற்கே போகும். ‘எனக்கு ஒழுங்காக விளையாட வராது என்பது எனக்கு ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை. கால்பந்து விளையாடுவதை நான் மிகவும் விரும்பினேன்’ என்கிறார்.
4. திருப்புமுனை
1953-ஆம் ஆண்டு
செப்டம்பர் 21-ஆம் நாள். பதினாறு வயது ஹோர்கே, அம்மா கொடுத்த ஒரு வேலையை நிறைவேற்ற போய்க்கொண்டிருந்தார். வழியில் ஆலயம். ஹோர்கே உள்ளே போனார். அங்கே ஓர் அருள்பணியாளர் ஒப்புரவுத் தொட்டிலில் அமர்ந்திருந்தார். “அந்தக் கோவிலுக்கு நான் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலிக்கும் செல்வேன். ஆனால், அவரை நான் முன்பு அங்குப் பார்த்ததில்லை.” உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, ஹோர்கே அவரிடம் ஒப்புரவு அருளடையாளம் செய்தார். அருள்பணியாளர் மிகக் கனிவுடன் ஹோர்கேவை நடத்தினார்.
“அதன்பிறகு, நான் பழைய ஹோர்கே அன்று என்று எனக்குத் தோன்றியது. அன்று கோவிலை விட்டு வெளியேறியபோது, நான் நிச்சயம் ஓர் அருள்பணியாளராகப் போகிறேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”
5. இறை அழைத்தல்
ஹோர்கேவின்
குடும்பத்தினர் சராசரி கத்தோலிக்கர்கள். எல்லாச் சமயக் கடமைகளையும் செய்தார் கள். ஆனால், ரொம்ப ஈடுபாடுள்ள கிறித்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஹோர்கே பிறந்து ஒன்றரை வருடம் கழித்துதான் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது.
ஹோர்கேவுக்கு
18 வயது இருக்கும்போது, அவர் படுக்கையறையைத் தூய்மை செய்யச் சென்ற அவர் அம்மா அங்கே ‘காணக்கூடாத’ சிலவற்றைக்
கண்டு அதிர்ந்து போனார் - இறையியல் புத்தகங்கள்! அதுவும் சில புரியாத இலத்தீன் மொழியில்.
“மருத்துவர் ஆகப் போகிறேன் என்றுதானே நீ என்னிடம் சொன்னாய்?”
“ஆம் அம்மா, ஆன்மாக்களின் மருத்துவன்.”
ஹோர்கே
மறைமாவட்டக் குருகுலத்தில் சேர்ந்தபோது, அம்மா அவரைக் கொண்டுவிடச் செல்லவில்லை. அங்கு இருந்தபோது ஒருமுறை கூட அவரைச் சந்திக்க வந்ததில்லை. பின்னாளில் ஹோர்கே மறைமாவட்டக் குருகுலத்தை விட்டு விலகி, இயேசு
சபையில் சேர்ந்தபோது, இந்த முறை அவருடைய அம்மா உடன் சென்றார். ஆனால், ஹோர்கே அருள்பணி வாழ்வைத் தேர்ந்தெடுத்ததில் அவர் அம்மாவிற்கு முழு சம்மதம் என்று சொல்ல முடியாது.
6. தொடரும் வருத்தங்கள்
சிறு
வயதில் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் ஹோர்கேவின் சைக்கிளைக் கடன் வாங்கி, எங்கோ கொண்டு போய்விட்டு, வண்டிக்குச் சிறிய பாதிப்பைச் செய்துவிட்டான். ஹோர்கேவுக்கு பயங்கர கோபம். ‘வண்டியைச் சரிசெய்ய முழு தொகையையும் கொடு’ என்று சொல்லி அவனைக் கட்டாயப்படுத்தி வசூலித்தார். இது ஒரு பெருந்தன்மையற்ற, அநியாயச் செயல் என்ற எண்ணம் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.
59 ஆண்டுகளுக்குப்
பின் 2009-இல், அவர் Buenos Aires - பேராயராக இருந்தபோது, அந்த முன்னாள் வகுப்புத் தோழனை அழைத்து, “நான் அன்று செய்த செயலுக்காக என்னை மன்னித்து விடு” என்று கூறினார்.
இரண்டு
இடது கால்களும், ஒன்றரை நுரையீரல்களும் கொண்ட ஒரு மனிதர்தான், 2000 ஆண்டு பழமையான ஒரு நிறுவனத்தின் சிந்தனைகளை நவீனப்படுத்தி, அதன் அக்கறைகளையும், முன்னெடுப்புகளையும் உத்தரவாதமாக மாற்றி அமைத்துள்ள மகத்தான திரு அவைத் தலைவர் என்று உணரும்போது, இந்தக் கடவுளை வியக்காமல் இருக்க முடியவில்லை.
நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)