news
சிறப்புக்கட்டுரை
12 தந்திரங்கள் (கண்டனையோ... கேட்டனையோ... 33)

சிறு வயதில்அந்திக் கிறிஸ்துஎன்று சொல்லிக் கேட்டது, நான் அப்பொழுது ஒருவேளை சூரியன் சாய்ந்த பின்னால்அந்தியில்வருவானாக்கும் என்று நினைத்தேன். பின்னர்தான்அந்திஎன்பதுantiஎன்ற இலத்தீன் முன்னொட்டின் ஒலி பெயர்ப்பு என்று தெரிந்தது. பொது மொழிபெயர்ப்புத் திருவிவிலியம் அறிமுகப்படுத்தியஎதிர்க் கிறிஸ்துஎன்ற சொல்லாடல் இப்போது ஓரளவு எல்லாராலும் பயன்படுத்தப்பட்டு நிலைத் தன்மை பெற்றுவிட்டது. இன்னமும்அந்திக் கிறிஸ்துஎன்று சொல்பவர்களை அவனிடமே பிடித்துக்கொடுக்க வேண்டியதுதான்.

யார் இந்த எதிர்க் கிறிஸ்து?

திருவிவிலியத்தில் பல நூல்களில் இக்கருத்து வெளிப்பட்டாலும், ‘எதிர்க் கிறிஸ்துஎன்ற சொல்லாடல் யோவானின் மடல்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு இடங்களில் வருகிறது. அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைத் தொகுத்தால், எதிர்க் கிறிஸ்து குறித்துப் பின்வரும் சித்திரம் கிடைக்கிறது.

எதிர்க் கிறிஸ்து ஒரு பொய்யன். இயேசு கிறிஸ்து மெசியா இல்லை என்று பரப்புவதே அவனுடைய முழுநேர வேலை (1யோவா 2:22).

எதிர்க் கிறிஸ்து எதிர்காலத்தில் தோன்றக்கூடிய ஓர் ஆள் அல்ல; அது எல்லாக் காலகட்டத்திலும் செயல்பாட்டில் இருக்கும் கடவுளுக்கு எதிரான ஒரு கொள்கை, சிந்தனைப்போக்கு (1யோவா 4: 3).

எதிர்க் கிறிஸ்து ஒரு தனித்த ஆள் கிடையாது. இயேசு கிறிஸ்து மனிதராக வந்தார் என்ற உண்மையை (Incarnation - மனுவுரு) மறுதலிக்கும் எல்லாருமே எதிர்க் கிறிஸ்துகள்தாம் (1யோவா 2:18; 2யோவா 1:7).

பவுலின் கடிதங்களில் எதிர்க் கிறிஸ்து என்ற பிரயோகம் இல்லை. ஆனால், 2தெசலோனிக்கர் 2:3-12 பகுதியில் அவர் பேசும்நெறிகெட்ட மனிதன்எதிர்க் கிறிஸ்து பிம்பத்திற்கு மிக அருகில் வருகிறான். அவன் தன்னை உயர்த்திக் கொள்வான். கோவிலில் அமர்ந்துகொண்டு தன்னைக் கடவுள் என்று காட்டிக்கொள்வான் (2தெச 2:4) என்று பவுல் கூறுகிறார். எதிர்க் கிறிஸ்து செய்வதும் இதுதான். அவன் வலிமை இந்தப் பொய்த் தோற்றமே. அவன் நல்லவன்போல நடிக்கிறான்; கிறிஸ்து போலத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். அவன் பெயரிலேயேகிறிஸ்துஇருக்கிறது. அதனால் பலர் ஏமாந்து போகிறார்கள். இரண்டு கொம்புகள் வைத்துக்கொண்டு, பெயின்ட் அடித்த இரப்பர் நாக்கு வெளியே தொங்க, நம் நாடகங்களில் வருவதுபோல தலை விரிக்கோலமாகத் தோன்றினால்அய்யோ பேய்என்று நாம் பதறி விலகிவிடலாம். ஆனால், பேய் ஷூ, பேண்ட் சட்டை எல்லாம் போட்டு, நம் பக்கத்து வீட்டுப் பையன் போல அல்லவா வருகிறது!

எதிர்க் கிறிஸ்துவை அடையாளம் காண்பது கடினம். நெறிகெட்ட மனிதன் ஓர் ஏமாற்றுக்காரன்அவன் போலி அருஞ்செயல்கள் கொண்டும், பொய் கொண்டும்  மக்களை வீழ்த்துகிறான் என்று 2தெச 2:9-12 கூறுகிறது. ‘எதிர்க் கிறிஸ்து, ‘நெறிகெட்ட மனிதன்என்ற இரு வேறு சொல்லாடல்களில், யோவானும் பவுலும் ஒன்றையே குறிப்பிடுகிறார்கள். கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்கச் செயல்படும் ஒரு நுட்பமான தீய ஆற்றல். திருவெளிப்பாடு 13-ஆம் பிரிவில் யோவான் குறிப்பிடும் விலங்கு பல நேரங்களில் எதிர்க் கிறிஸ்துவோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த விலங்கு குறித்துத் திருவெளிப்பாடு ஆசிரியர் கொடுக்கும் தரவுகளைச் சற்று ஆராயலாம்.

அது கடலிலிருந்து எழும்பி வருகிறது (திவெ 13:1). இதுதான் விலங்கு குறித்து யோவான் தரும் முதல் முக்கியத் தகவல். திருவிவிலியத்தில் கடல் என்பது கடவுளுக்கு எதிரான பிற இன அரசுகளை, சக்திகளைக் குறிக்கும் படிமம். லிவியத்தான் கடலில் வாழ்ந்த ஒரு பெருமிருகம். “நீர் உமது வல்லமையால் கடலைப் பிளந்துவிட்டீர். லிவியத்தானின் தலைகளை நசுக்கியவர் நீரேஎன்று திபா 74:13-14 கூறுகிறது. எதிர்க் கிறிஸ்து கடவுளுக்கு எதிரான ஆற்றல்களிலிருந்து கிளம்பி வருவான். அவர்களின் பதிலாளாகச் செயல்படுவான்.

அது ஒரு கலவை விலங்கு. ‘Mongrelஎன்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சிறுத்தையின் தோற்றம் - கரடியின் கால்கள் - சிங்கத்தின் வாய் (திவெ 13:2). புராணங்களில்தான் இதுபோன்ற விலங்குகள் உலாவும். அர்த்தம் - எதிர்க் கிறிஸ்து, உலகில் உள்ள பேராபத்துக் கொண்ட அனைத்துத் தீய ஆற்றல்களின் தொகுப்பாக இருப்பான்.     

அந்த விலங்கு ஒரு புதுமையை நிகழ்த்துகிறது. அதன் ஏழு தலைகளில் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்தது. எல்லாரும் விலங்கு செத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்தக் காயம் அவர்கள் பார்க்கப் பார்க்க அதிசயிக்கத்தக்க வகையில் குணமாகிறதுA medical miracle! இதனால் வியப்புற்று மக்கள் அவ்விலங்கைப் பின்தொடர்கிறார்கள். அதை வணங்கத் தொடங்குகிறார்கள் (திவெ 13:3-4). எதிர்க் கிறிஸ்து ஒரு பெரிய வித்தைக்காரன். இது போன்ற போலி அருஞ்செயல்களைக் கொண்டு மக்களை வீழ்த்துவதில் அவன் கில்லாடி!

விலங்கின் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் காணப்பட்டன  என்று திவெ 13:1 பகுதியும், அது வாய் திறந்து கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது என்று திவெ 13:6 பகுதியும் சொல்கின்றனஎதிர்க் கிறிஸ்துவின் முக்கியப் பணி, கடவுளுக்கு எதிராகப் புறணிகளைப் பரப்புவது. To give God a bad press. சொல், செயல் இரண்டிலும் அவன் அந்தக் காரியத்தை நிறைவேற்றுவதை இங்குக் காணலாம். கடவுளுக்கு எதிரான பழிப்புரைகளின் நடமாடும் அடையாளம் அவன்.

அந்த விலங்கு உலகின்மீது 42 மாதங்கள் அதிகாரம் செலுத்த விடப்பட்டது என்று திவெ 13:5 கூறுகிறது. இது ஒரு முக்கியமான காலத்தொகுப்பு. இதன் மூன்று வடிவங்களைத் திருவிவிலியத்தில் காணலாம். சில இடங்களில் 42 மாதங்கள் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, திவெ 11:5 மற்றும் திவெ 13: 5. சில இடங்களில் மூன்றரை வருடங்கள். உதாரணத்திற்கு, திவெ 12:14 மற்றும் தானியேல் 7:25. சில இடங்களில் 1260 நாள்கள். உதாரணத்திற்கு, திவெ 11:3 மற்றும் 12:6. மூன்று வடிவங்களும் ஒரே அளவு காலத்தையே குறிக்கின்றன. அதாவதுமூன்றரை வருடங்கள். 3.5 என்பது 7-இல் பாதி. 7 என்பது திருவிவிலியத்தில் முழுமையைக் குறிக்கும் ஓர் எண். அதில் பாதியான 3.5 ஒரு முழுமையற்ற எண். இது சொல்லும் அர்த்தம் என்ன? எதிர்க் கிறிஸ்துவின் அதிகாரம் முழுமையானது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே அவன் ஆட்சி நீடிக்கும். பவுலடியார் கூறுவதுபோல, “ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார். அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும் (2தெச 2:8). God is the ultimate conqueror.

இறை ஊழியர் ஃபுல் டன் ஷீன் 1947-ஆம் ஆண்டுஎதிர்க் கிறிஸ்துவின் 12 தந்திரங்கள்என்ற தலைப்பில் கொடுத்த ஒரு மறையுரையின் ஒலி வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. ஷீன் ஓர் அமெரிக்க ஆயர். பிரபல மீடியா மறைப்பணியாளர். ரேடியோ, டி.வி. என்று அக்காலத்துத் தகவல்பரப்புச் சாதனங்களை நற்செய்தி அறிவிப்புக்காகப் பெரிய அளவில் பயன்படுத்தியவர். 80 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட ஒரு மறையுரையை ஆயர் ஷீனின் சொந்தக் குரலில் இன்றும்  துல்லியமாகக் கேட்க முடிவதைவிட ஆச்சர்யம் தருவது, அவர் குறிப்பிட்ட எதிர்க் கிறிஸ்துவின் தந்திரங்கள் இப்போதும் வழக்கில் இருப்பதும், தீவிரமாகச் செயல்படுவதும்.

எதிர்க் கிறிஸ்து தன்னை ஒரு மாபெரும் மானுட வாதியாகக் காட்டிக்கொள்வான். அமைதி, பொருளாதார வளம், தன்னிறைவு பற்றி வாய் கிழியப் பேசுவான். அவற்றைக் கடவுளைச் சென்றடையும் வழிகளாக அல்லாமல், வாழ்வின் இலக்குகளாக நிலைநாட்டுவான்.

மக்கள் வாழும் வாழ்க்கைக்கு ஏற்றதுபோல, கடவுளைப் பற்றிப் புதிய புதிய கருத்துகள் கொண்ட புத்தகங்களை எழுதுவான். ‘எதுவும் பாவம் இல்லைஎன்பதே அவன் கொள்கை.

சோதிடத்தில் நம்பிக்கை கொள்ள மக்களைத் தூண்டுவான். ‘மனிதன் செய்யும் பாவங்களுக்குப் பொறுப்பாளி மனிதன் அல்லன், நட்சத்திரங்கள்என்று எல்லாரையும் நம்ப வைக்க முயல்வான்.

குற்றவுணர்ச்சி என்பது ஒரு பெரிய விசயம் அல்ல; அது வெறும் அடக்கப்பட்ட பாலுணர்வு என்று கற்பிப்பான்.

சரி, தவறு என்பது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே உண்மையான சகிப்புத் தன்மை (tolernace) என்று சொல்வான்.

திருமண முறிவுகள் அதிகமாகும். ஓர் ஆணுக்கும்-ஒரு பெண்ணுக்கும் இடையில் இருப்பதுதான் திருமணம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. இன்பமான வாழ்விற்கு இதரத் தொடர்புகளும் தேவை என்ற சிந்தனையைப் பரப்புவான்.

அன்புஎன்கிற கருத்தின்மீது  பெரிய கிளர்ச்சியை (love for love) உண்டு பண்ணி, பிற மனிதர்கள் மீது நாம் காட்ட வேண்டிய உண்மையான அன்பு குறையும்படி பார்த்துக்கொள்வான்.                

ஒரு மதத்தின் பெயரைக் கூறி மற்றொரு மதத்தை அழிப்பான்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கூட பேசுவான். ‘இவ்வுலகில் வாழ்ந்த மிகச் சிறந்த மனிதர் இயேசுஎன்று சொல்வான். ‘அவர் கடவுள் அல்லவா?’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், ஓடிவிடுவான்.

மூடநம்பிக்கை, சர்வாதிகாரம் போன்றவற்றின் பிடிகளிலிருந்து மனிதர்களை விடுவிப்பதே தன் பணி என்று சொல்வான். ஆனால், எது மூட நம்பிக்கை, எது சர்வாதிகாரம் என்று விளக்கமாட்டான்.

அன்பு, விடுதலை, சமத்துவம் என்று கலர் கலர் வார்த்தைகள் கொண்டு பேசினாலும், தன்னுடைய ஒரு முக்கிய இரகசியத்தை யாரிடமும் சொல்ல மாட்டான். அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதர்களின் சகோதரத்துவத்தைப் பற்றி (Men’s Brotherhood) பெரிய உரைகள் நிகழ்த்துவான். கடவுளின்தந்தைமை (God’s Fatherhood) குறித்து வாய் திறக்கமாட்டான்.

ஓர் எதிர் திரு அவையை உருவாக்குவான். அதில் உறுபினர்களாகும் ஆசையை நம்பிக்கையாளர்களிடம் விதைப்பான். பாவத்தை ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை, மனமாற்றம் அவசியமில்லை, இந்தக் கூட்டத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டுமே போதும், வாழ்க்கை அர்த்தம் பெற்றுவிடும் என்று சொல்லி ஏமாற்றுவான்.

மேலே கூறப்பட்ட எல்லாமே நல்லவை போன்ற தோற்றம் கொண்ட ஆபத்துச் சிந்தனைகள். அதுதான் எதிர்க் கிறிஸ்துவின்  உத்தி. அவன் வெற்றியின்  இரகசியமும் இதுவே.

யோசிக்கும்போது இன்றைய உலகில் ஓர் எதிர்க் கிறிஸ்து அல்ல; ஓராயிரம் எதிர்க் கிறிஸ்துகள் செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

அப்படித்தானே?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

news
சிறப்புக்கட்டுரை
ஊழல் என்னும் வெற்று முழக்கம்

இந்தியாவில் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பற்றிய நினைவு நம் குடிமக்கள் மனத்தில் இன்னும் குடியிருக்கிறதா? என்றால், கொஞ்சம் குழம்பிய நிலையில்தான் நம்மவர்கள் பதில் அளிப்பர். ‘இந்தியா ஒளிர்கிறது (India shining) என்ற பொய்ப் பரப்புரையை நாளும் விடாது பரப்பி வந்த அன்றைய தேசிய சனநாயக அரசின் முகமூடி கிழிக்கப்பட்டு, சோனியாகாந்தி அவர்களின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் கட்டிலேறியது. இராஜீவ் காந்தியின் துணைவியாரான திருமதி. சோனியாகாந்திமீது தூவப்பட்ட அந்நியத் தேசத்தவர்; கிறித்தவ மறையைச் சார்ந்தவர் போன்ற கொடுந்துயர அவதூறுகளை மக்கள் அப்புறப்படுத்தி, எளிய ஒரு பெண்மணியை அரியணையில் அமர்த்திப் பார்த்தப் பெருமை இந்த மண்ணுக்கு உண்டு.

சோனியாகாந்தி இந்தியப் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், முழுநேரப் பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் அவர்கள் சோனியா அவர்களால் கைகாட்டப்பட்டார். இவர் பதவி வகித்த பத்து ஆண்டுகளில் இந்தியா கண்ட வெற்றிகள் பற்றி அவர் மரணத்திற்குப்பின் நிறையவே நாடு பேசியதுஅவர் பதவி வகித்த நாள்களில் அவரின் நேர்மை பேசப்பட்டது; நாணயம் பாராட்டப்பட்டது. அதேவேளை, இன்றைய ஆட்சியாளர்களால்வலிமைக் குன்றியவர்எனவும் அவர் இகழப்பட்டார். தனக்குத் தரப்பட்ட பதவியை Accidentalஎன்று ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.

இன்றைய மதவாதிகள் பல ஆண்டுகளாகத் திட்டமிட்டுக் கட்டமைத்த பொய்மைகளைத் தாண்டியும் பத்தாண்டுகள் ஆட்சி நடத்திய பெருமை அவருக்கு உண்டு. அவரின் பத்தாண்டு கால ஆட்சியில் அவர்மீதுஊழல்குற்றச்சாட்டுகள் எவையுமில்லை. ஆனால், நிறையப் படித்திருந்த இம்மேதையின் ஆட்சிஊழல்எனும் பொய்மையால் கட்டமைக்கப்பட்டுக் கவிழ்க்கப்பட்டது.

இந்தியாவில் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட வகுப்புவாதக் கருத்தியல்இராமசென்ம பூமிஎனும் அடையாள அரசியலால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, வாஜ்பாய் தலைமையில் ஆறாண்டுகள் ஆட்சி நடத்தப்பட்ட பின்பும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றி கண்டமை வியப்பைத் தருவதே! ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்த வெற்று முழக்கம் எது? கவிழ்க்கப்பட்ட ஆட்சியை மீண்டும் வென்றெடுக்க முடியாமல் மோடி அரசில் வாழ வேண்டிய சூழலை உருவாக்கியது எது?

மும்பையைச் சேர்ந்த அன்னா ஹசாரே என்பவர் ஒரு சிறந்த சமூகச் செயற்பாட்டாளர். மராட்டியத்தின் மும்பை அரசின் ஊழல் பிரச்சினைகளைத் தெருவுக்குக் கொணர்ந்தவர். இவருடைய நோக்கம் பற்றியோ, எடுத்துக்கொண்ட பிரச்சினைகளின் கனம் பற்றியோ நாம் சந்தேகப்பட வேண்டியது இல்லை. இவரோடு அணி சேர்ந்தவர் கெஜ்ரிவால், கிரண்பேடி, இன்னும் பலர். இவர்கள் மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் ஊழல் பிரச்சினைகளைப் பெரிதாக்கி தலைநகரைக் குலுக்கி வந்தார்கள். நாடு முழுவதும் இவர்கள் எழுப்பிய ஊழலுக்கு எதிரான முழக்கங்களே முதன்மை பெற்றன.

அன்னா ஹசாரே தலைமையிலான போராட்டம் மக்களின் மனத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியை அசைத்துப் பார்த்தது. இந்தியத் தலைநகர் ஊழலுக்கு எதிரான முழக்கங்களால் திகைத்து நின்ற நிலையில் மதவாதக் கருத்தியலால் வளர்ந்து, ஆறாண்டுகள் ஆட்சியும் நடத்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் தன் ஆட்சிப் பொறுப்பை இழந்து நின்ற மதவாதிகள் என்ன செய்தனர்? எரியும் நெருப்பில் தாமும் குளிர் காய்வது மட்டுமின்றி, எரிக்கும் நெருப்புக்கு உரமிட்டுத் தம் தோழமையைக் காட்டிக்கொண்டனர்ஊழல் என்ற ஓர் ஆயுதத்தைக் கையில் எடுத்த அன்னா ஹசாரேக்கள்  தலைநகர் ஜந்தர் மந்தரைப் போராட்டத்தளமாக முன்னெடுத்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கொஞ்சம் அசைந்துதான் போயிற்று. இன்று நேர்மையானவர் என்று போற்றிப் புகழப்பெறும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் இச்சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கப்பட்டார். உரிய காலத்திற்காகக் காத்திருந்த மோடி பரிவாரங்கள், அன்னா ஹசாரே விதைத்த விதையை ஆட்சி அதிகாரத்தால் அறுவடை செய்தது.

ஆளும் அரசுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிற்கான ஆதாரமாக ஊழலை முன்னெடுத்தவர்கள் காணாமற்போக, நீண்ட பெரிய திட்டத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின்மதவாதம்பெரும் வெற்றி பெற்றது என்பதுதான் இதில் காணப்பெறும் பெரிய முரண்பாடாகும்.

இன்றைய ஆளும் ஒன்றிய அரசு ஊழலின் அனைத்துப் பரிமாணங்களையும் வழுவாமல் ஏற்றுக் கொண்டிருப்பதோடு, ஊழலின் ஊற்றுக் கண்ணை மௌனம் எனும் சூழ்ச்சி கொண்டும், வளர்ச்சி என்னும் பொய் முழக்கம் கொண்டும் மக்களிடம் நாடகமாடி வருவதோடு, பெரும்பான்மைவாதம் எனும் கொடிய நாசக்காரக் கருத்தியலால், பொதுமக்களிடம் பொய்யான அங்கீகாரத்தையும் பெற்று வருகிற அவலத்தை மக்கள் நாளும் சந்தித்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அன்னா ஹசாரே தலைமையில் முன்னெடுத்தவர்கள், இன்று இந்திய அரசியல் அரங்கில் எங்குள்ளனர்? ஊழல் என்னும் பெருச்சாளி இன்னும் சாகா நிலையில், ஊழலையும் தாண்டிய மிகப்பெரும் பாசிசக் கோரத்துள் இந்தியா சிக்கித் தவிக்கையில், இன்று இவர்கள் எங்கே போனார்கள்?

அன்னா ஹசாரே எனும் காந்தியார் வழிவந்தவர்க்கு முதல் சீடனாய் வளர்ந்து நின்ற கெஜ்ரிவால் என்னும் ஊழலுக்கு எதிரான போராளி, ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வலுப்பெற்றார். எந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் இவருக்கு ஆட்சியைத் தந்ததோ அதே வகையான ஊழல் குற்றச் சாட்டினால் சிறை சென்றவரும் இவரே. முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போதே, இன்றைய மதவாத ஒன்றிய அரசின் சூழ்ச்சி வலையால் விசாரணையின்றிச் சிறையிலடைக்கப்பட்ட பெருமையைப் பெற்றவர் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கண்ட இவர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியேற்ற மதவாதிகளின் பிரித்தாளும் மதவாதக்கொள்கையை என்றுமே கேள்விக்குள்ளாக்கவில்லை. அது மட்டுமல்லாது, தனது ஆட்சியைக் காப்பாற்ற மெல்லிய இந்துத்துவக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தவும் இவர் தயங்கியதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் இசுலாமியருக்கு எதிரான சட்டம் என்பதனால் எழுந்த போராட்டத்திற்கு இவர் துணை நிற்கவில்லை. டெல்லி மாநகரில் இசுலாமியப் பெண்கள் ஒன்று திரண்டு நடுங்க வைக்கும் குளிரில் இரவும் பகலுமாய்ப் போராடியபோது, டெல்லி முதலமைச்சரான கெஜ்ரிவால் கண்டுகொள்ளவும் இல்லை. அயோத்தியில் இராமருக்கான கோவில் எழுப்பப்பட்டது பற்றியோ, சமயச் சார்பற்ற இந்திய அரசின் தலைமை அமைச்சர் தலைமைப் பூசாரியாக நின்று பூஜை செய்ததெல்லாம் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. ஆனால், அரியானா தேர்தலில்இந்தியாகூட்டணிக்கு எதிராக அனைத்துத் தொகுதிகளிலும் களம் கண்டு காங்கிரஸ் தோல்விக்குக் காரணமானார்.

ஊழல் (Corruption) நம் சமூகத்தைப் பற்றி நிற்கும் ஒரு நோய். வலுவான அரசுக் கட்டமைப்பை உடைய பொதுவுடைமை அரசுகள் கூட இந்நோயை அகற்றிட முடியவில்லை என்பதே உண்மை. இப்படியிருக்க, பாராளுமன்ற சனநாயக அரசியல் ஆட்சியுள் ஊழலுக்கான வெளி எப்போதுமே பெரிது என்பதுதான் உண்மை. இது வளர்ந்த நாடுகளிலும் சரி, வளர்ச்சி பெறாத நாடுகளிலும் சரி, நாட்டின் தன்மைக்கேற்ப பரந்து விரிந்த அளவில் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும், தவிர்க்கவியலா வகையிலும் தன் சதிராட்டத்தை ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியப் பிரதமராக ஆட்சி செய்த திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்திலும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமதி. இந்திராகாந்தி அவர்கள் அப்போது அளித்த பதில் இப்போதும் நினைவுகூரத்தக்கது. அதாவது, “ஊழல் ஒரு குறிப்பிட்ட ஆட்சி சார்ந்த பிரச்சினை அல்ல; மாறாக இது உலகு தழுவிய பிரச்சினை (Universal Phenominal)” என்றார். ஊழலின் நியாயப்படுத்துதல் பொருட்டு முன்வைக்கப்படும் கருத்தல்ல; ஊழல் எனும் நோய் ஒழிக்கப்பெற வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகுந்த இந்தியச் சமூகத்தில் ஊழல் வரைமுறையின்றி ஊடுருவி, இச்சமூக அமைப்பை அரித்துவிடும் கரையானாக மாறுமாயின், இச்சமூக அமைப்பின் கடைத்தட்டு மக்களைக் காக்கின்ற ஆயுதம் எதுவுமே இல்லை என்றாகிவிடும்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தோர்ஊழல் ஆட்சிஎன்று முத்திரை குத்தி, ஓர் ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதில் வெற்றி கண்டனர். ஆனால், நாம் நாளும் சந்திக்கும் பொருள் ரீதியான ஊழலைத் தாண்டி, நம் சமூகத்தைச் சீரழித்து வரும் வகுப்புவாதம், மதவாதம், மத அடிப்படைவாதம், மதவழி தேசியம், பிரிவினைவாதம் என்பனவெல்லாம் ஊழலின் பரிமாணங்கள் இல்லையா? கையூட்டு என்னும் ஊழலின் வெளிப்பாடு (Manifestation) மட்டுமே நாம் நேரடியாக அனுபவிக்கும் தீமை என்பதால், மேற்கண்ட வாதங்கள் ஒப்புமையில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தி விடுமா? ஊழல் எனும் ஒரு நோயை மட்டுமே சுட்டிக்காட்டி ஓர் அரசின் இருப்பை அல்லது தரத்தை நிர்ணயிக்க முடியுமா?

நமக்கு எழுகின்ற கேள்வியெல்லாம், ஊழல் மட்டுமே ஒரு கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அளவுகோலாக இருக்க முடியுமா? சுதந்திரம் பெற்ற இந்தியா இன்று சந்தித்து வரும் சவால்களைப் புரிந்துகொள்ள முயன்றால், ஊழல் மட்டுமே அளவுகோலல்ல!

இந்நாட்டின் சனநாயகத்தைக் காக்கும் பணியில், சமூக நீதியைச் சமரசமின்றி காக்கும் வகையில், இந்தியக் கூட்டாட்சியின் மகத்துவம் பேணும் வகையில், நாட்டின் உயிர்மூச்சாம் சமயச் சார்பின்மையைப் போற்றும் வகையில் நம் அரசியல் நிலைப்பாடு இருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட இந்நிலைப்பாடுகள் ஊழல் ஒழிப்பைக் காட்டிலும் உன்னதமாகப் போற்றப்படக் கூடியவை.

ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவு என்பது, அக்கட்சி மேற்கொண்ட கொள்கையில் காட்டும் உறுதியில் அமைவது. ஆனால், இவ்வேளையில் மக்கள் சார்புக் கொள்கையில் உறுதியாக நாம் நிற்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும்  உண்டு. நிதர்சனக் கண்ணோட்டத்தோடும், தெளிந்த பார்வையோடும் நாம் முன்னெடுக்கப்பட வேண்டிய பார்வை இது. இது முற்றுப்பெறும் கட்டுரை அல்ல; தொடர்ந்து எடுத்துச்செல்ல வேண்டிய முயற்சி.

news
சிறப்புக்கட்டுரை
வீதிக்கு வருவோம்! விளையாடுவோம்! (வலையும் வாழ்வும் – 08)

எப்போதும் பச்சைப் பசேலென இருக்கும் அந்த வாகை மரம், ஊருக்கே மணி மகுடம் போல ஊர் நடுவே இருந்தது. நானூற்றுக்கும் மேற்பட்ட கைகளை அகல விரித்த மரக்கொம்புகள், கிளைகள் பெற்றெடுத்த தேன்கூடுகள், பூக்களால் சீவிச் சிங்காரித்த இலைமுடிகள், தென்றலுக்கு மணிக்கிலுக்கும் காய்கள், பம்பரமாய்ச் சுற்றி நின்ற ஆணி வேர் என்று எம் ஊர் வாகை மரம் பிரமிக்கத்தக்க ஓர் ஓவியம் எனலாம்.

முதியவர்கள் அதன் அடியில் அமர்ந்து, அயர்ந்து தூங்கும்போது, அது ஒரு தாய்மடி. சிறுவர்கள் அதன் நிழலில் ஓடியாடி விளையாடும்போது, அது ஒரு விளையாட்டு மைதானம். அதன் கொம்புகளைப் பிடித்துக் குரங்காய்த் தாவி விளையாடும்போது, அது ஒரு சர்க்கஸ் கூடாரம். பள்ளிப் பருவ காலத்தில் விடுமுறை நாள்களில் அந்த வாகை மரத்தடியில்தான் நாள்கள் கழிந்தன.

ஒவ்வொரு சீசனுக்கும் விளையாட்டுகள் மாறிக் கொண்டே இருந்தன. பம்பரம், கோலிக்குண்டு, புளியம் முத்துகளை வைத்து பாண்டி விளையாடுதல்கிட்டிப்புள், கபடி, கிளியாந்தட்டு, அவ்வப் போது கிரிக்கெட்... இப்படி எல்லா விளையாட்டுகளும் அந்த வாகை மரத்தடியில்தான் நடந்தன. பிள்ளைகள் வாகை மரத்தடியில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரிந்திருந்ததால், பெற்றோர் நிம்மதியாய் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்தனர்.

கல்லூரி போகும் பருவம் அது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலைப் பொழுது ஊர்க்காரர்கள் ஆண், பெண் என்று பலரும் அந்த வாகை மரத்தடியில் கூடியிருந்தனர். “ஏல செல்லத்துரை! ஒவ்வொருத்தனும் ஒவ்வொருத்தனுங்க மூஞ்ச பாத்துக்கிட்டு இருக்கீங்க. சட்டுப் புட்டுணு ஒரு முடிவுக்கு வாங்கலேஎன்று ராஜாமணி தாத்தா மௌனத்தைக் கலைத்து வைத்தார்.

நான் என்ன சொல்லுறது? ஊரு திருவிழா வருது. இந்தக் கோவில் கட்டி ஐம்பதாவது வருசம் வேற. அந்தோணியாருக்குப் பெரிய தேர் ஒண்ணு செய்யணும். திருவிழாவை ஜாம்ஜாம்முணு கொண்டாடணும். அவ்வளவுதான்செல்லத்துரை சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தேர் செய்ய நிறைய செலவாகும். இந்த வருசமும் கூடுதல் வரி போட்டு வயித்த அடிக்காதிங்கடே...” விரக்தியில் சொன்னாள் விக்டோரியா பாட்டி.

அதுக்கெல்லாம் அவ்வளவு செலவாகாது. அதுதான் நம்ம வாகை மரம் இருக்குலா. அத வெட்டி தேர் செஞ்சிட வேண்டியதுதான். நம்ம ஊர் இளந்தாரிங்ககிட்ட அந்த வேலைய கொடுத்திடலாம். என்னடே சொல்லுறீங்க எல்லாரும்...” செல்லத்துரை பெரியப்பா எங்களைப் பார்த்துக் கேட்டார். வாகை மரத்தை வெட்டி தேர் செய்யும் முடிவே எங்களுக்குப் பிடிக்கல.

ஏன் வாகை மரத்த வெட்டணும், தேர் செய்யணும்? அந்தோணியார் வந்து தேர் செய்யுணு கேட்டாரா?” எப்போதாவது பேசுற ரீகனே தைரியமா கூட்டத்துல கேட்டுட்டான்.

லே! பக்கத்து ஊர்க்காரப் பயலுக போன வருசம் அவன் ஊர் திருவிழாவுல புத்தம் புதிய தேர செஞ்சிஷோகாட்டுனானுக பாத்தியா? நம்ம அவனவிட எதுலல கொறஞ்சிட்டோம்?” இப்போ தொண்டை கிழியக் கேள்வி கேட்டது சின்னப்பன் தாத்தா. வாகை மரத்தை இனி காப்பாற்றவே முடியாது என்று நினைக்கும்போது, மனம் பானை தண்ணீர் போல அலம்பி அடங்கியது.

சில நாள்களிலேயே பொக்லைன் இயந்திரம் ஊருக்குள் ஊர்ந்து வந்தது. வாகை மரத்தை வேரறுத்தது. தும்பிக்கையைக் கொண்டு அழுத்தித் தள்ளும் யானையைப்போல தன் கையால் அந்தப் பெரிய மரத்தை முட்டி மோதியது. மரத்தைக் கீழே தள்ளியபோது காக்கை முட்டைகள் விழுந்து உடைந்து தெறித்தது போல, சில நொடிப் பொழுதுகள் எங்கள் ஊர் அடையாளமே விழுந்து நொறுங்கியது போலிருந்தது. ஊரும் எங்கள் உணர்வும் வெறுமையை உணர்ந்தது. வாகை மரம் இல்லை, வாகை மரத்தடி விளையாட்டும் இல்லை. அந்த ஊர்ல இருக்கவே மனம் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் படிப்பிற்காக, வேலைக்காகவெனச் சிதறிப் பறந்தோம்.

ஆண்டுகள் பல கடந்து ஊர் திரும்பும்போது ஊரே புதிய வீடுகள், காம்பவுண்டு சுவர்கள், கீல் சாலைகள், மெட்ரிக் பள்ளி, பாழடைந்த கிணறு, வெட்டாந்தரை, ஆரவாரமற்ற வீதிகள் என்று முற்றிலுமாக மாறியிருந்தது. வீடுகளில் டி.வி. சத்தம், சிறுவர்கள் கைகளில் மொபைல் போன். ஒன்று மட்டும் புரிந்தது. வாகை மரம் வெட்டப்பட்டு தேரானதுபோல, எங்க ஊரு தெரு விளையாட்டுகளும் மொபைல் போனுக்குள் வெவ்வேறு பெயர்களில் தஞ்சம் புகுந்தன.

இன்று விளையாட்டு நேரங்களை இணையத் தள விளையாட்டுகள் ஆக்கிரமித்துவிட்டன. இயற்கையும் விளையாட்டுகளும் இணைந்தே அழிக்கப்படுகின்றன. விடுமுறை நாள்களில் வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் சூழல் இன்று கிராமங்களில் கூட இல்லை. குழந்தைகள் முதல் சிறார் வரை போனிலேயே விளையாடுகின்றனர். ஒரு காலத்தில் வெளியே விளையாடப் போனால் பெற்றோர் விடுவதில்லை. இப்போதுவெளியே போய் விளையாடுஎன்று குழந்தைகளைப் பெற்றோர்களே வற்புறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே பெற்றோரின் துணையில்லாமல் போனில் விளையாட்டுச் செயலிகளைத் தரவிறக்கம் செய்து விளையாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆன்லைன் விளையாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கங்களும் சைபர் குற்றங்களும் ஏராளம் என்பதை நாம் அறிவதில்லை.

இன்று ஆன்லைன் விளையாட்டுகள் பல விதங்களில் உள்ளன. மேசிவ் மல்டி ப்ளேயர், ஆன்லைன் ரோல் பிளே விளையாட்டுகள் (Massive Multiplayer and online role playing games) என்னும் விர்ச்சுவல் விளையாட்டுகளை விளையாடுபவர்கள் தங்களை அந்த விளையாட்டின் கதாப்பாத்திரங்களாகச் சித்தரித்து ஒருவர் மற்றவரோடு சண்டையில், பந்தயத்தில், போட்டியில் ஈடுபடுகின்றனர். இதனால் ஆன்லைன் மைதானத்தில் மட்டும் இல்லை, ஆப்லைன் வாழ்விலும் சண்டைகளும் ஆபத்துகளும் நீள்கின்றன என்கின்றனர் நிபுணர்கள்.

ஆன்லைன் கேசினோ விளையாட்டுகள் (Online casino Games) வழக்கமான கேசினோ விளையாட்டுகளைப்போல ஆன்லைனில் விளையாடுவது. இது பணம் வைத்துச் சூதாடுவது. தமிழ்நாட்டில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2023) 40 பேர் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ‘பர்ஸ்ட் பெர்சன் சூட்டர் (First Person Shooter) என்னும் ஆன்லைன் விளையாட்டுகள் முப்பரிமாண விர்ச்சுவல் தளத்தில் ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட்டு விளையாடுவது. இவ்வகை விளையாட்டை விளையாடும் போது நாமே விளையாடுகின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது. தான் விளையாட்டில் வீழ்த்தப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் பல்வேறு மனநல நோய்களுக்கு விளையாடுபவர் தள்ளப்படுகின்றார்.

ஆட்டக்காரருக்கு எதிராக சுற்றுச்சூழல் (Player Vs Environment) என்னும் வகை விளையாட்டு ஆட்டக்காரர்களைச் செயற்கை நுண்ணறிவோடு செயற்கையான ஆன்லைன் களங்களில் விளையாட வைப்பது. இதில் மல்லுக்கட்டி விளையாடி வெல்வது கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது. இன்னும் இதேபோன்ற பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் விளையாட்டுச் சந்தை 25 முதல் 30 சதவிகிதம் அதிகரித்திருக்கின்றது என்றும், ஆன்லைன் விளையாடுபவர்கள் 42 கோடியிலிருந்து 50 கோடியாக அதிகரித்திருக்கின்றார்கள் என்று புள்ளி விவரம் ஒன்று ஆன்லைன் விளையாட்டின் அசுர வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டுகின்றது

பல மணி நேர விரயம், ஒரே இடத்தில் பல மணி நேரம் அசைவில்லாமல் இருப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம், மனப்பிறழ்வு, பண மோசடி (Phishing), சைபர் அடக்குமுறை (Cyber-Bullying), அந்தரங்கத் தரவுகள் களவாடப்படுதல் (Data Breach), கொந்துதல் (Hacking), வைரஸ் தாக்குதல் (Malware), தனிமையுணர்வு போன்றவைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகளும் காரணமாய் இருக்கின்றன.

இத்தகைய விளையாட்டு விபரீதங்களிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் பாதுகாப்பது நம் கடமை. வீட்டிலே குழந்தைகள் கேட்கும் ஆன்லைன் விளையாட்டுகளைப் பெரியவர்களே சரியான தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்து தருவது நல்லது. ஏதாவது விபரீதம் நடந்தால், அதனைஸ்கிரீன் ஷாட்எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்களை அல்லது சொந்த விவரங்களை வெளியிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் நேரத்தை மேலாண்மை செய்யவும், குழந்தைகள் நண்பர்களோடு மைதானங்களில் விளையாடும் பழக்கத்தை உருவாக்கவும், வீட்டுத்தோட்ட வேலைகளில் அவர்களைப் பழக்கப்படுத்தவும் பெற்றோர்கள் முனையவேண்டும்.

வாகை மரமோ அல்லது வாகைமர நிழலோ இன்று நமக்கு எட்டுக் கடல்கள், எட்டு மலைகள் தாண்டிக் கிடைக்கும் அனுபவமாகிவிட்டது. நிழல் படங்களோடு விளையாடுகிறோமே தவிர, நிஜங்களோடு விளையாடுவதில்லை. வாகை மரம் போன்று ஆயிரக்கணக்கான மரங்களின் நிழல்களே ஆயிரமாயிரம் விளையாட்டுகளின் கருவறைகள். ஆன்லைனோடு நம்மை இணைத்துக் கட்டிப் போட்டிருக்கும் டிஜிட்டல் வலைகளை அறுத்தெறிந்துவிட்டு வீதிக்கு வருவோம்! மரங்களோடும் மனிதர்களோடும் விளையாடுவோம்!  

news
சிறப்புக்கட்டுரை
விளம்பர அரசியல் (அரசியல் இல்லாத வாழ்வியலா? - 03)

வாடிக்கையாளர்கள், தங்கள் பிராண்டுகளை ((Brand) அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகளை அல்லது சேவைகளை அதிக அளவில் மக்கள் வாங்குவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு தொடர்பு கருவியே விளம்பரங்கள். ஆனால், அடிக்கடி விளம்பரங்களுக்காக அதிக பணம் செலவழிக்கும் நிறுவனங்கள், அதில் ஒரு நுட்பமான அரசியலை ஊடுருவச் செய்து, உண்மை அல்லாதவற்றைக் கூறி தங்களின் பொருளை விற்பதற்கான முயற்சிதான் விளம்பர அரசியல் என்பதாகும்.

இவர்களின் இத்தகைய இழிசெயலை நிறுத்துவதற்கென எந்தச் சட்டமும் இல்லை என்பதே எதார்த்தம். அப்படியே இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடித்து அதன் வழியே வெளியே வந்துவிடும் அளவிற்குக் கிரிமினல் தனம் கொண்டவர்கள்தான் இந்த விளம்பர அரசியலை முன்னெடுப்பவர்கள்இதனால் பாதிக்கப்படுவது இந்தச் சமுதாயத்தின் மக்கள்தாம் என்ற உண்மையை உணரக்கூட மறுப்பவர்கள் இவர்கள்.

21-ஆம் நூற்றாண்டின் புதிய இயல்பு நிலையாக உருவெடுத்து வரும் இணையக் குற்றங்கள் என்றசைபர் கிரைமுக்குஅடிப்படைக் காரணம் இந்த மயக்கும் போலி விளம்பர அரசியல்தான். ஒவ்வொரு மனிதனையும் இடம், பொருள், ஏவல் தேடிக் குறி பார்த்து அலைந்து கொண்டிருக்கிறது இந்த விளம்பர அரசியல். மின்னஞ்சல் மற்றும் இணைய மோசடி, அடையாள மோசடி, கிரெடிட் கார்டு, மிரட்டிப் பணம் பறித்தல், சேவை மறுப்புத் தாக்குதல்கள் போன்ற இணையக் குற்றங்களின் வழியாகப் பொய்ப்பிரச்சாரத்தால், போலி கருத்துகளால் மக்களை மயக்கி ஏமாற்றுவதில் இவை முதல் இடம் வகிக்கின்றன. இவையெல்லாம் ஒரு பக்கம் என்றால், மற்றொரு வகையான விளம்பர அரசியல், மக்களின் மூளையை மழுங்கடித்து, அதன் வழியாகப் பொருள் ஈட்ட, மக்களின் அன்றாடத் தேவையான ஒவ்வொன்றிலும் கைவைத்து கல்லாக் கட்டி வருகிறது.

ஒரு பொருளை வாங்குவதற்கு உங்கள் விழிகளின் வழியே பொருளைக் காட்சிப்படுத்தி, ஆசையைப் புகுத்தி, இதயத்தைக் கவர்ந்திழுத்து, செவிகளின் வழியாகத் தேன்துளிகளாய் பொய்யுரைத்து, மூளையைக் கரைத்து அந்தப் பொருளை எப்படியும் வாங்கியாக வேண்டும் என்ற நுகர்வு வெறியை உண்டாக்குபவை இந்த ஊடகவழி அரசியல் விளம்பரங்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களைப் பார்ப்பதற்காகவே படைக்கப்படுகின்றன இல்லத்தரசிகளின் கனவுக்கோட்டையான சீரியல் தொடர்கள். சீரியலின் நேரத்தைவிட, விளம்பரங்களின் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக வணிக அரசியலால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்என்கின்ற போலித் தத்துவத்தைக் கொஞ்சம் மெருகேற்றி, ‘கறுப்பாக இருக்கின்ற பெண்கள் எங்கள் நிறுவனத்தின் கிரீமைத் தடவினால் வெள்ளையாகி விடுவாங்கஎனப் பொய் சொல்கின்றன இந்தப் போலி விளம்பரங்கள். அது மட்டுமா? இந்தப் பற் பசையில் பல் துலக்கினால் பொண்ணுங்க மயங்கிடுவாங்கன்னு இளைஞர்களையும், ‘இந்தச் சிப்ஸ் சாப்பிடுறது உங்க இளமையின் அடையாளம்என்று இளம்பெண்களையும், கையில் ஸ்மார்ட் போனும், ஏர்டெல் இணைப்பும் இணையமும் இருந்தால் சோம்பேறியாக இருந்தாலும் பரவாயில்லை என்றும், பல முட்டாள்தனமான விளம்பரங்களில் ஊடுருவிக் கொண்டிருக்கும் அரசியலால் இந்தச் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கின்றது.

அறிவுள்ள இளைய தலைமுறையை அறிவிலிகளாக மாற்றும் போக்கை இந்த விளம்பர அரசியல் தொடர்ச்சியாகச் செய்வதன் பின்னணியில் ஒரு பயங்கரமான மூளைச்சலவை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்றாலே அது குஜராத்தும், .பி.யும்தான் என்று கிடைத்த கேப்ல, விளம்பர அரசியலை இப்போது கொஞ்சம் பொய்ப் பிரச்சாரம் வேற காலடி எடுத்து வச்சிருக்கு. இதுக்குப் பெயர் அரசியல் விளம்பரமாம். நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவோரைப் பன்மொழி வித்தகர்களாகவும், கோட்டு-சூட்டுப் போட்ட முட்டாள்களைக்கூட அறிவாளிகளாகவும் காட்டுகிறது இந்த விளம்பர அரசியல். நுகர்வோரின் பகுத்தறிவுத்திறனை மழுங்கடித்து, உணர்ச்சி சார்ந்த செய்திகளை நச்சு விளம்பரங்களாக்கி அதிலும் பணம் பார்க்கிறது ஒரு கூட்டம்.

இந்த விளம்பரக் கூட்டம் இரத்தமும் சதையும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களையும் சமூகத்தையும் ஏன் இந்த நாட்டையும் முதலாளித்துவப் பொருள்கள் வாங்கும் ஒரு சந்தைக் கூட்டமாக மாற்றி வைத்திருக்கிறது. தலை முடி இல்லாத அல்லது முளைக்காத தலைக்கு எர்வாமேட்டினை அமேசான் காட்டிலிருந்து வாங்கி, அதனை தேய்த்துக் கொண்ட தலைகள் இன்றைக்கு வரையில் வறண்டுபோய் அலைந்து கொண்டிருப்பதை நேரில் பார்த்தும் அதனை நம்ப மறுக்கிற அளவுக்கு விளம்பர அரசியல் என்பது ஆழமானது; ஆபத்தானது. இவைகளோடு இணைந்து மக்களை வாட்டி வதைக்கும் மற்றொரு முகம்தான் வணிக அரசியல். வணிக அரசியலின் வில்லனாக வந்து முளைத்திருப்பவை வரிகள் என்று மேலோட்டமாகக் கூறிவிட முடியாது. ஜி.எஸ்.டி. (GST) என்னும் சரக்கு மற்றும் சேவை வரிகள் இன்று வணிகர்களின் பார்வையில் எமனாகத் தெரிகின்றன.

அரசியல் கட்சிகளுக்கு இடையிலான காழ்ப்புணர்வு, பிளவு, எதிர்ப்பு போன்றனவற்றால் வணிகங்களில் நேரடித் தாக்கம் ஏற்படுகிறது என்றும், அதிகாரத்துவம், ஊழல், வரிக்கொள்கைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள் என்பவை இவற்றில் முதன்மை வகிப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நலம் தரும் ஜி.எஸ்.டி. (GST) என்றார் நம் பிரதமர். ஆனால், நடப்பதென்னவோ எதிர்மறையாக இருக்கிறது என்றார்கள் மக்கள்.

பலவிதமான மறைமுக வரிகளை இரத்து செய்துவிட்டு, இப்போது ஒரே முனையாக்கப்பட்டுள்ளது வரி. ஆனால், பொருள்களின் விலைகள் முன்பிருந்ததைவிட அதிகரித்ததுதான் மிச்சம். சமையல் எரிவாயு, வீட்டு உபயோகக் குடிநீர், பள்ளி மாணவர்களின் நோட்டுப் புத்தகம், பெண்களின் நாப்கின்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகள் என எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மேலும், கிரைண்டர், நீர் இறைக்கும் பம்பு, திரையரங்குகள், சில்லறை வேலைகளில் ஈடுபடும் கடைகளும், நிறுவனங் களும், உணவுப் பண்டங்களிலும் ஈக்களைப் போல் ஒவ்வொரு பொருள்களின் மீதும் வந்தமர்ந்திருக்கிறது ஜி.எஸ்.டி. (GST);  மக்களின் ஓட்டு என்ற மருந்து தெளித்துதான், அந்த ஈயை ஓட்ட வேண்டும் போல் தெரிகிறது.

நாட்டின் தலைநகரங்களில் தொடங்கி, வணிக உலகில் நுழைந்து, நம் வீட்டு வாசலில் வந்து முடிகிறது இந்த விளம்பர மற்றும் வணிக அரசியல். நுகர்வோரின் நுகர்த்தலே விளம்பர அரசியலை முடிவுக்குக் கொண்டு வரும் காய் நகர்த்தல். நகர்த்துவார்களா, நுகர்வோர்?

news
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: மக்கள் ஆதரவு யாருக்கு?

ஒரு காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் நம் வீட்டு வரவேற்பு அறைகளில் வந்து அமர்ந்தன. இன்று அலைப்பேசி நமது கைகளில் மூன்றாவது கையாக மாறிவிட்டது. மின்னணு ஊடகங்கள் நொடிக்கு நொடி பரபரப்புச் செய்திகளை வாரித் தெளிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2026-ஆம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இது அரசியலமைப்பு சார்ந்த காலகட்டாயம். தேர்தல் காலத்தில் தமிழ்நாடு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும். யார் தீர்வைத் தருவார்? என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பேண உறுதி வழங்கப்படுதல் மிக மிக அவசியம். ஆனால், இன்று இங்கு வருந்தத்தக்க விதமாய், ‘யார் அடுத்த முதல்வர்?’ என்ற இசை நாற்காலிப் போட்டி  நடக்கிறது.

1967-இல் உணவுப் பஞ்சம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வி, உட்கட்சிப் பூசல்கள் என ஆளும் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்த காலம். பேரறிஞர் அண்ணாதுரை, இராஜாஜியின் சுதந்திரா கட்சி, .பொ.சி.யின் தமிழரசுக் கழகம், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளோடு  வலுவான கூட்டணி அமைத்தார். 1967-இல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

58 ஆண்டுகளாகத் திராவிட இயக்கங்கள் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்கின்றன. தற்போது ஆளும் தி.மு..வும் 2019 முதல் பலமான கூட்டணியைத் தக்கவைத்து, தொடர் வெற்றிகளைக் குவிக்கிறது. எதிர்முகாமில்யார் முதல்வர்?’ என்ற ஒற்றைக் கேள்வியால் தேர்தல் களம் ஐந்து அணிகளைக் கொண்டதாய் அமைகிறது. நாளது தேதி வரை தமிழ்நாடு ஆளுங்கட்சிக்கு  எதிரான  வாக்குகள்யார் முதல்வர்?’ என்ற எதிர்க்கட்சிகளின் போட்டியால் பிரிகிறது. ஆளுங்கட்சியும் ஆட்சிக்கு எதிரான  மக்களின் மனநிலையை மாற்ற, குறைந்தபட்ச செயல்களைக் கூட செய்ய முன்வரவில்லை என்பது கவலைக்குரியதாகும்.

.தி.மு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசிய பின்பு கூறுகிறார், “தேர்தலுக்கு 15 மாதங்கள் இருக்கின்றன; அப்பொழுது கூட்டணி முடிவு செய்யப்படும்என்று. அமித்ஷாவோ, எடப்பாடி பழனிச்சாமி அவரது அறையிலிருந்து வெளிவந்த பின்பு தன்எக்ஸ்வலைதளப் பக்கத்தில் ‘2026-இல் தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையும்எனப் பிரகடனம் செய்கிறார். தமிழ்நாடு தேர்தல் களத்தைப் பொறுத்த வரை 10 விழுக்காடு சிறுபான்மை வாக்குகளே முடிவை மாற்றும் காரணி என்பதால் தன் பா... கூட்டணி குறித்து எடப்பாடியார் ஒளிவு மறைவு காட்டலாம். அது அவரது அரசியல். இரண்டாவதாக, காலத்தே சிறுபான்மையினரைச் சமாதானப்படுத்த சாக்குபோக்குகளைத் தேடலாம். மூன்றாவதாக, மூத்த தலைவர்களின் பிற கட்சி செல்லும் தன் இலையுதிர் காலத்தைக் கட்டுக்குள் வைக்கலாம் என்பதும் அவரது அரசியல் கணக்கு. தமிழ்நாடு தேர்தல்களில் வெற்றிபெற அடிப்படைக் கட்டமைப்பு உள்ள கட்சிகளால் மட்டுமே முடியும். மேலே ஒரு படி சென்று விளக்கலாம் எனில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தங்கள் கட்சியினரை வாக்குச்சாவடி முகவராக நியமிக்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும். ஆளும் தி.மு.. மற்றும் எதிர்க்கட்சி .தி.மு..வுக்கு மட்டுமே ஊர் தோறும் உடன் பிறப்புகளாக, இரத்தத்தின் இரத்தங்களாகத் தொண்டர் படை உள்ளன. தமிழ்நாட்டில் பிற கட்சிகள் இந்த அடிமட்ட அடிப்படை ஆட்டத்திலேயே இல்லை.

சமீப காலத்தில் நடந்த ஈரோடு கிழக்கு  சட்டமன்றத் தேர்தலில், எதிரணி வாக்குச் சாவடி முகவர்கள் பிற்பகலுக்குப் பின் பெரும்பான்மையோர்  காணப்படவில்லை என்கிறது தேர்தல் கள அறிக்கைகள்.

தமிழ்நாடு தேர்தல் புள்ளி விவரங்களில் தி.மு.. மற்றும் .தி.மு..வைத் தவிர்த்த கட்சிகள், இரட்டை இலக்க வாக்கு சதவிகிதம் கொண்டவைகளாக இல்லை. பா... கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தாமரையில் நின்ற சிறு சிறு கட்சிகளின் வாக்குகளைத் தங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, தாங்களும் இரட்டை இலக்க வாக்கு விழுக்காடு என மார்தட்டுகிறது. எல்லாப் பலமும் உள்ள .தி.மு.. கூட பாராளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் கட்டுத்தொகை இழந்தது வரலாறு.

தமிழ்நாட்டில் சில கட்சித் தலைவர்கள் தொலைக்காட்சியில் தினம் பேட்டி கொடுக்கிறார்கள்; சிரிக்கிறார்கள்; சவால் விடுகிறார்கள்; கோபத்தில் கொப்பளிக்கிறார்கள்; காலை  ஒன்று, மாலை  ஒன்று என முரண்பாடுகளை அடுக்குகிறார்கள்; மாற்றி, மாற்றிப் பேசி  மக்களைக் குழப்புகிறார்கள்.

இவர்களில் ஒருவர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலமாகவே தங்கள் கட்சியை வளர்த்துவிடலாம், முதல்வராகி விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். இந்த  விளம்பர வெளிச்சம் பட்டாசாக வெடித்துச் சிதறுமே ஒழிய, வாக்குகளாக மாறாது. இன்னும் சிலரோ மின்னணு ஊடகங்கள் வழி மாயவித்தை நடத்தி, தேர்தல் வெற்றி குறித்துக்  கற்பனை கோட்டைகள் கட்டுகிறார்கள்.

ஆளுநர்  என்பவர் ஆட்சிக்கான வழிகாட்டி என்பதைக் காட்டிலும், ஒன்றிய அரசின் கொள்கை பரப்புச் செயலாளராக ஆளும் அரசிற்குக் குடைச்சல் கொடுப்பது தமிழ்நாடு அரசியலில் நடப்பு பெருங்கொடுமை!

தேர்தல் காலத்தே சாதிக்கட்சிகள் மாநாடு போடலாம். ஏதாவது ஒரு கூட்டணியில் சீட் வேண்டி துண்டு போடலாம். 2011 தேர்தலில் அரசியல் சாணக்கியர் எனப்படும் திரு. கருணாநிதி அவர்கள் சாதிக்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அமைத்து தோல்வி கண்டிருக்கிறார். தமிழ்நாடு மக்கள் சாதி வாரி ஓட்டுக்குத் தயார் இல்லை என்பதும் வெள்ளிடைமலை.

ஊடகங்கள் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தம் சார்பு கருத்துகளைத் திணிக்கலாம். அது வெற்றி பெறும் கட்சிக்கே தனது ஓட்டு என்கிற சிறு விழுக்காட்டினரை அசைக்குமே தவிர, பெரும் மாற்றம் ஏற்படாது. நாம் மக்கள் பிரச்சினைகளை அறிந்தவர்களுக்கு அதைத் தீர்க்க முனைவோருக்கு வாக்களிப்பதே உரிய  சனநாயக  நடைமுறையாகும். தமிழ்நாடு தேர்தல் ஆணையமும்  வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 2026-இல்  தேர்தலுக்கான தன் பங்காகச்  செய்துவிட்டது.

2026-இல் தமிழ்நாடு தேர்தல் களம், தமிழ்நாடு மக்களின் வாழ்வுரிமை குறித்துப் பேச வேண்டும். மத வாதம் முற்றிலும் அழித்தொழிக்கும் வழி, மதச் சுதந்திர  உத்தரவாதம், மாநில உரிமைகள், மறுக்கிற ஒன்றிய அரசு, உரிய நிதி பகிர்வு, கல்வி உரிமை, மொழியுரிமை, நீதியுரிமை இதை முன்னெடுக்கிற ஆட்சியாளர்களே ஆள வரவேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள், முனைப்புகள், நம் பங்களிப்புகள் என்பதே இடைப்பட்ட காலத்தில் நம் செயல் திட்டமாக இருக்கலாம். வாருங்கள்... நல்லாட்சி அமைப்போம்!

 

news
சிறப்புக்கட்டுரை
சைப்ரஸ் சர்ப்ரைஸ் (கண்டனையோ... கேட்டனையோ... – 32)

கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து இன்னும் ஆறு சுவாரசியத் தகவல்கள் இங்கே:

1. மனவாட்டம்

நொஸ்டால்ஜியாஎன்று சொல்லப்படும் பழைய காலத்திற்கான தீவிர ஏக்கம் இளம் பருவத்தில் திருத்தந்தை பிரான்சிஸை அலைக்கழித்திருக்கிறது. துக்கம் இல்லை. ஒருவித மன வாட்டம் (Melancholy). எனக்கும்கூட  அவ்வப்போது வரும். ஏதாவது  பழைய நட்புகள், படித்த இடங்கள், பணித்தளங்கள் பற்றி நினைக்கும்போது திடீரென்று பெரிய அலை மாதிரி வயிற்றில் சோகம் வந்து தாக்கி அந்தக் காலங்களை, அந்த மனிதர்களை இனி திரும்பப் பெறவே முடியாது என்ற நிச்சயத்தில் நெஞ்சம் அடைத்துக் கொண்டு, மூச்சு முட்டுவது மாதிரி ஆகி...  உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா? இதுபோன்ற ஏக்கப் படலங்களிலிருந்து, பெரிய பிரயத்தனம் செய்தே மீள்வேன். ஏதாவது ஒரு நிகழ்காலப் பணியில் மனத்தையும் உடலையும் செலுத்தி அதை வெல்ல வேண்டும். சரியாகக் கையாளப்படாத ஏக்கம், உளச்சோர்வுக்கு இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது.

பிரான்சிசுக்கு இந்தப் பிரச்சினை இருந்துள்ளது. அதற்காக அவர் ஓர் உளநல மருத்துவரைப் பார்த்துள்ளார். நம்ப முடிகிறதா? அதுவும் ஒரு வருடத்திற்கு!

அவர் ஒரு யூதர். மிகக் கனிவுடன் என்னை நடத்தினார். அவர் கொடுத்த ஆலோசனைகள் இன்றும்கூட எனக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றனஎன்று பிரான்சிஸ் கூறுகிறார்.

2. சிரிப்பு மருந்து

துக்கம் ஒருவரைக் கடவுளிடம் கூட்டிச் செல்லாது. துக்கமாய் இருப்பதும் கோபப்படுவதும் புனிதத்தின் அடையாளங்கள் என்று யாராவது கூறினால், அது பொய்த்தகவல். அவரைத் தயங்காமல் போலீசில் பிடித்துக் கொடுத்து விடலாம். ‘மகிழ்ச்சியே கிறித்தவப் பண்புஎன்று பிரான்சிஸ் கூறுகிறார். சிரிக்கத் தெரிந்த சில மிருகங்களில் மனிதன் ஒருவன். சிம்பன்சி, நாய், எலி போன்ற விலங்குகள் மனிதச் சிரிப்பை ஒத்த ஒலிகளை எழுப்பினாலும், அவை மனிதன்  போன்று மகிழ்வு, நகைச்சுவை, உறவு போன்ற மதிப்பீடுகளை வெளிப்படுத்தச் சிரிப்பதில்லை.

நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளோம். கடவுள் சிரிக்கிறார்எனவே, நாமும் சிரிக்க வேண்டும். கடவுளோடு சேர்ந்து சிரிக்கலாம். சில நேரங்களில், கடவுளைப் பார்த்துக் கிண்டலடித்தும் சிரிக்கலாம். தப்பில்லை. நம் வீட்டில் உள்ள பெரியவர்களை எப்போதாவது, விளையாட்டாகக் கேலி செய்து சிரிக்கிறோம் அல்லவா! அதுபோல.”

புனித தாமஸ்மூர் (St Thomas More) எழுதிய  ‘நல்ல சிரிப்புக்கான மன்றாட்டுஎன்ற ஓர் அழகிய இறைவேண்டல் இருக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பிரான்சிஸ் அதை ஒவ்வொரு நாளும் சொல்கிறாராம். அந்த இறைவேண்டலின்  ஒரு பகுதி இங்கே...

நான்என்ற எண்ணம் உருவாக்கும் கவலைகளிலிருந்து எனக்கு விடுதலை தாரும். அலுப்பும் முணுமுணுப்பும் பெருமூச்சும் புலம்பலும் அறியாத ஆன்மாவைத் தாரும். நல்ல நகைச்சுவை உணர்வைத் தாரும். ஒரு கேலியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனம் தாரும். வாழ்வின் சிறு மகிழ்வுகளைக் கண்டுகொள்ளவும், அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் வரம் தாரும்.”

நல்ல இறைவேண்டல்! எல்லாரும் இதைச் சொல்ல வேண்டும். குறிப்பாக, எப்போதும்கொயர்சரியில்லை, ‘வயர்சரியில்லை என்று மைக்கில் புலம்பும் அருள்பணியாளர்கள்.

3. பீட்சா விரும்பி

இரண்டு காரணங்களால்பீட்சாதமிழில் பிரபலம். ஒன்று, அந்தப் பெயரிலேயே வந்து கலக்கிய விஜய் சேதுபதி நடித்ததிகில்படம். நான் அறையில் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு, பத்து பேர் நடுவில் அமர்ந்து அப்படத்தைப் பார்த்தேன். இரண்டாவது, 2014-இல் அறிமுக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில், ‘பீட்சாஎன்ற உணவைக் குறியீடாக வைத்து, எளிய குடும்பத்துக் குழந்தைகளின் வாழ்வை, ஆசைகளை, போராட்டங்களை ஒரு கவிதை போல சொன்னகாக்கா முட்டைதிரைப்படம். கடைசியில் அதைத் தின்ன வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு கடி கடித்து விட்டு, ‘அய்ய... வே... கொளகொளனு நல்லாவே இல்ல; இதுக்கு ஆச்சியோட தோசையே நல்லா இருந்துச்சிஎன்று சொல்லும்சின்ன காக்கா முட்டைகட்சி நான். பீட்சா எனக்கு ஆகாது.

எல்லாருக்கும் பிடித்த உணவு இருக்கிறது. எனக்கு இட்லி உப்புமா...  மூன்று வேளைகள் கொடுத்தாலும் ஓகே! பிரான்சிசுக்குப் பிடித்த உணவு பீட்சாவும், நத்தைக் கறி வறுவலும். Buenos Aires நகரின் பிரபல சான் லோரென்சோ கிளப் கால்பந்து ஆட்டங்களுக்குப் போவதும், ஆட்டம் முடிந்த பின்பு ஹோட்டலுக்குப் போய் பீட்சா சாப்பிடுவதும் பெர்கோலியோ குடும்பத்தினரின் முக்கியப் பொழுது போக்குகளில் ஒன்று.

அந்தப் பீட்சாவின் மணத்தை இப்போது கூட என்னால் நுகர்ந்து பார்க்க முடிகிறது. உண்மையில் திருத்தந்தையாக நான் இழந்த விசயங்களில் ஒன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு கடைக்குப் போய் அமர்ந்து பீட்சா சாப்பிடுவது.”

4. நாயக வழிபாடு

ஹீரோ ஒர்ஷிப்என்று சொல்லப்படும்நாயக வழிபாடுபிரான்சிசுக்கு அறவே பிடிக்காத ஒன்று. ஜான் F. கென்னடி அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க அதிபர். 65 ஆண்டுகளுக்கு முன் அவர் வெள்ளை மாளிகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள கத்தோலிக்கர்கள் அதைக் கொண்டாடினார்கள். கென்னடி அவர்களின்New Frontier (புதிய எல்லைகள்) வாக்குறுதி, இனி உலகில் வறுமை இருக்காது, எல்லாருக்கும் விடுதலை, வான் வெளி முழுக்க நம் கைவசமாகி, ‘பொள்ளாச்சிக்குப் போய் வருவதுபோல், நிலாவுக்குப் போய் வரலாம்என்றெல்லாம் மக்கள் கனவு கண்டார்கள். கென்னடி ஒரு நவீன மெசியா போலத் தோன்றினார். பிரான்சிஸ் அதை நம்பவில்லை.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடன் வாழ்ந்த அருள்பணியாளர் ஒருவர், கென்னடியின் வெற்றியை ஏதோ போப்பாண்டவரே அமெரிக்காவின் அதிபர் ஆகிவிட்டதுபோல் கொண்டாடினார். அதுபோன்ற பாமரத்தனம் எனக்குக் கோபத்தைத் தந்தது.”

அமெரிக்க ஷூ, அமெரிக்க பர்கர், அமெரிக்க விசா... என இன்றைக்கும் கூட  அமெரிக்காவிற்காக மக்கள்ஆலாய்பறக்க, பிரான்சிசைப் பொறுத்தமட்டில் அது மற்றொரு நாடு. அமெரிக்கா பற்றிய மிதம் மீறிய கற்பனைகளோ, அங்குப் போக வேண்டும் என்ற பேராவலோ அவருக்கு எப்போதும் இருந்ததில்லை. டாலர்மீது அவருக்கு மயக்கம் இல்லை. கர்தினால் ஆகியும், அமெரிக்கா போகாதவர் பிரான்சிஸ் ஒருவராகத்தான் இருப்பார். அமெரிக்காவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம், அவர் திருத்தந்தையாகி, இரண்டு வருடங்கள் கழித்து, 2015-இல்தான் நடந்தது.  

5. டிவிக்குநோ...நோ...’

1990-ஆம் ஆண்டு ஒருநாள் பிரான்சிஸ் சக இயேசு சபை அருள்பணியாளர்களோடு அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டிவியில் ஒரு மோசமான காட்சியைக் காட்டினார்கள்அது பிரான்சிஸை மிக ஆழமாகப் பாதித்தது. உடனே பிரான்சிஸ் எழுந்து வெளியே போய்விட்டார். “ஏதோ கடவுளே எனக்குக் கூறுவது போல இருந்தது. டிவி உனக்குச் சரியானது அல்ல; அதனால், உனக்கு எந்த நன்மையும் இல்லை.”

ஒரு திருப்பலியின்போதுஇனி நான் டிவி பார்க்கப் போவதில்லைஎன்று அன்னை மரியாவுக்கு வாக்குறுதி கொடுத்து, அதற்கு இதுவரை 1999-இல் Buenos Aires நகரில் பெரிய விமான விபத்து ஏற்பட்டபோது ஒருமுறை 2001-இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபோது ஒருமுறை என இரண்டு முறை மட்டும் விலக்கு அளித்துள்ளார். தன் விருப்பத்திற்குரிய சான் லோரன்சோ கிளப்பின் கால்பந்து ஆட்டங்களைக் கூட பிரான்சிஸ் டிவியில் பார்ப்பது இல்லை.   முக்கியமான மேட்ச்சுகள் நடக்கும்போது, ஒரு சுவிஸ் கார்டு பாதுகாவலர், போட்டி அட்டவணையையும், ஆட்டத்தின் ஸ்கோர்களையும் எழுதி, திருத்தந்தையின்  மேசையில் வைத்து விடுவாராம். பாவம், பிரான்சிஸ்!

6. அடக்கமான அடக்கம்

பெரும்பாலான நவீன காலத் திருத்தந்தையர்கள் உரோம் நகர் புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரான்சிஸ்  தன்னை St. Mary Major பேராலயத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மரியாமீது பிரான்சிசுக்கு உள்ள அன்பும் பற்றுமே இதற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், மஞ்சள் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தன்மை. வசதியான போப் மாளிகையைத் தவிர்த்து, ‘மார்த்தா இல்லம்என்கிற எளிய விருந்தினர் இல்லத்தில் கடந்த 12 வருடங்களாக வாழும் பிரான்சிஸ், ‘அடக்கத்தில் பேதுரு ஆலயம்என்ற ஆடம்பரத்தைத் தவிர்க்க விரும்புவதில் ஆச்சர்யம் இல்லை. இறுதிப்பயண வழிபாடுகளும் மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று பிரான்சிஸ் கேட்டுள்ளார்.

திருத்தந்தையர்களின் அடக்க நிகழ்வுகள் மிக நீண்டதாகவும் விரிவானதாகவும் உள்ளது. வழிபாடுகளின் ஒருங்கிணைப்பாளரிடம் அதை எளிமைப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். அது போல, என் அடக்கத்தில் சைப்ரஸ் மரத்தால் ஆன சவப்பெட்டி மட்டுமே பயன்படுத்தப்படும். அதை மற்றோர் உலோகப் பெட்டியில் வைப்பது, பிறகு அது இரண்டையும் மூன்றாவதாக ஒரு  ‘Oakபெட்டியில் வைப்பது போன்ற பாரம்பரிய விசயங்கள் இருக்காது. ஒரே பெட்டி! சைப்ரஸ் போதும்.”

எல்லாக் கிறித்தவர்களையும் போல எளிமையாக, அதே நேரத்தில் மாண்போடு புதைக்கப்படவே நான் விரும்புகிறேன். உரோமின் ஆயர், ஆதாரமாக ஓர் அருள்பணியாளர், ஒரு சீடர், அவ்வளவுதான். நான் உலகின்தாதாகிடையாது.”

இந்த நல்ல மனிதர், எளிய திரு அவைத் தலைவர், விரைவில் முழுநலம் பெற வேண்டும் என்றும், அவர் தொடங்கி வைத்து நடைபெற்று வரும் சீர்திருத்தத் திட்டங்கள் முழுமைபெற வேண்டும் என்றும்  பெரியநாயகியிடம் வேண்டுகிறேன்.

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)