news
சிறப்புக்கட்டுரை
பொது வீட்டுச் சிந்தனைச் சிற்பி!

மது வாழ்வுஉறவு, ‘உலகுஎனும் இரு கூறுகளின் சங்கமத்தில்இருத்தல்கொண்டது. இவ்விரு தளங்களையும் ஒழுங்குபடுத்தும் போதும் அவற்றை நேரிய வழியில் பேணிக்காக்கும் போதும் இறைவனின் ஒட்டுமொத்தப் படைப்பும் பேருவகை கொள்ளும். இப்பேருண்மையை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தனது பணிக்காலத்தின் முதல் நாள் தொட்டு, இறுதி மூச்சு வரை அதைத் தன் போதனையாகவே கொண்டிருந்தார். காலம் கரைந்தாலும், கனவுகள் சிதைந்தாலும் திருத்தந்தையின் சிந்தனைக் கதிர்கள் அதிர்வலைகளை இனி எப்போதும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதே என் நம்பிக்கை.

அக்கறைஎன்பது உறவின் மீதும் உலகின் மீதும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய வாழ்வியல் நியதி. Man is not only a rational being, but also a relational being. உறவுச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதும், உலகு எனும் பொது இல்லத்தைக் கட்டியெழுப்புவதும் நமது இயல்பாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும் என்னும் அவருடைய சிந்தனையை இவ்வுலகோருக்கு வாழ்வியல் சிந்தனையாக விட்டுச் சென்றிருக்கிறார்.

நாம் வாழும் இவ்வுலகின் மீது அக்கறை கொள்வது நம்மீதே நாம் கொள்ளும் அக்கறையாகும்எனக் குறிப்பிடும் திருத்தந்தை, “நாம் அனைவரும் இவ்வுலகின் பொது இல்லத்தில் (common home) வாழும் ஒரே குடும்பத்தினர் எனச் சிந்திப்பது அவசியமானதொன்றுஎனவும் வலியுறுத்துகிறார்.

நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு மறைந்து வரும் இன்றைய உலகில், நீதி மற்றும் அமைதிக்காக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்ஆகவே, ஏமாற்று மாயையின் பின்னணியில் பிறக்கும் பாராமுகமாய் உலகமயமாக்கப்பட்ட, நேச உணர்வற்ற அலட்சியப் போக்கினால் அனைவரும் சக்தி வாய்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஒவ்வொரு மதமும், கடவுளின் குழந்தையாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் மீது கொண்ட மரியாதையின் அடிப்படையில் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் சமூகத்தில் நீதியைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வழிகாட்டுகிற திருத்தந்தை, சகோதரத்துவம் மற்றும் சமாதானத்தை நோக்கியப் பயணத்தில் அடிப்படை மனித உரிமைகள் மறக்கப்படக்கூடாது என நினைவூட்டினார். இதுவே பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கக்கூடியது.

ஆகவேதான், திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்நாள் முழுவதும் இறையரசின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அறைகூவலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தார்எனவே, “மனிதர் அனைவரையும் உரிமைகள், கடமைகள் மற்றும் மாண்பில் சமமாக உருவாக்கி, அவர்களைச் சகோதர, சகோதரிகளாக ஒன்றாக வாழவும், உலகை நிரப்பவும், நன்மை, அன்பு மற்றும் அமைதி ஆகியவற்றின் மதிப்புகளை அறியவும் கடவுளே நம்மை அழைத்துள்ளார்என வேண்டுகிறார்இத்தகைய கொள்கையில், கருத்தியலில், வாழ்வியலில் உறுதியான நிலைப்பாடு கொண்டதால்தான், “ஒருவரைக் கொல்பவன், முழு மனிதகுலத்தையும் கொல்பனைப் போன்றவன்; ஒரு நபரைக் காப்பாற்றுகிறவன், முழு மனிதகுலத்தையும் காப்பாற்றுகிறவனைப் போன்றவன்என அவரால் உறுதிபடக் கூறமுடிந்தது.

ஆகவே, ஏழைகள், ஆதரவற்றவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிகவும் தேவையிலிருப்பவர்கள், அனாதைகள், விதவைகள், அகதிகள், வீடுகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் நாடு கடத்தப்பட்டவர்கள், போர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள், அநீதிகளால் பாதிக்கப்பட்ட அனைவரின் பெயரால் பலவீனமானவர்கள், பயத்தில் வாழ்பவர்கள், போர்க் கைதிகள் மற்றும் உலகின் எந்தப் பகுதியிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்கள்... எப்போதும் அவர் கண்முன் நின்றனர். எனவே, அவர்களின் பாதுகாப்பை, அமைதியை மற்றும் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்பை உறுதி செய்து, எல்லாரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்லும் புது சமுதாயத்தைக் காண வழிகாட்டினார்.

அமைதியில் மலரும் கலந்துரையாடலே இத்தகைய விடியலுக்கான விடிவெள்ளி என்பதை உணர்ந்தவர். உரையாடல் கலாச்சாரத்தைப் பாதையாகவும் பரஸ்பர ஒத்துழைப்பை நடத்தை நெறிமுறையாகவும் ஒருவருக்கொருவர் இடையேயான புரிதலை வழியாகவும் தரச்சான்றாகவும் அறிவித்துள்ளார்.

சுருங்கக்கூறின், உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்துவதன் வாயிலாக உலகோடு உறவையும், உலகின் படைப்பனைத்தோடும் நல்லிணக்கத்தையும் இரு கண்களாக அவர் கொண்டிருந்தார்; நம்மையும் அவ்வாறே கொண்டிருக்க அழைத்தார். உலகோர் அனைவருக்கும் சகோதரனாக விளங்கிய அவர், இறுதிவரை இந்தபிரபஞ்சத்தின் சகோதரனாகவேவாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை!

ஆகவே,… “ஆண்டவரே, மாந்தர் அனைவரின் தந்தையே, நீர் மனிதர் அனைவரையும் ஒரே மாண்புடன் படைத்துள்ளீர்; ஒரு சகோதரத்துவ ஆவியை எங்கள் இதயங்களில் ஊற்றவும் புத்துணர்வுப் பெற்ற உரையாடல், நீதி மற்றும் அமைதி குறித்தக் கனவை எங்களுக்குள் ஊக்குவித்தருளும். மேலும், கண்ணியமான உலகத்தை, பசி, வறுமை, வன்முறை மற்றும் போர் இல்லாத ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க எங்களையே நாங்கள் மாற்றிட அருள்புரியும். எங்கள் இதயங்களைப் புவியின் எல்லா மக்களுக்கும் தேசங்களுக்கும் திறந்திருக்கச் செய்யும். நீர் எங்கள் ஒவ்வொருவரிடமும் விதைத்துள்ள நன்மையையும் அழகையும் அடையாளம் காணவும், இதன் மூலம் ஒற்றுமையையும் பொதுவான திட்டங்களையும் கனவுகளையும் பகிர்ந்திடச் செய்தருளும்.

உம் இறைமையின் ஆழமான ஒற்றுமையிலிருந்து, சகோதர அன்பினால் எங்களை நிரப்பும். நாசரேத்தின் குடும்பத்தில், தொடக்ககாலக் கிறித்தவச் சமூகத்தில், இயேசுவின் செயல்களில் பிரதிபலித்த அன்பை எங்களுக்கும் தாரும். கிறித்தவர்களாகிய நாங்கள் நற்செய்தியை வாழ்வாக்கவும், ஒவ்வொரு மனிதனிலும் கிறிஸ்துவைக் காணவும், கைவிடப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் படுகின்ற துன்பங்களில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவையும், ஒரு புதிய தொடக்கம் காணும் ஒவ்வொரு சகோதர, சகோதரியிலும் உயிர்த்த இயேசுவையும் கண்டடையும் அருள்தாரும்.

வாரும் தூய ஆவியே! புவியின் எல்லா மக்களிலும் பிரதிபலிக்கும் உம் அழகை எங்களுக்குக் காட்டும். இதனால் அனைவரும் முக்கியமானவர்கள், அவசியமானவர்கள், கடவுள் அதிகம் அன்பு செய்யும் மனித குலத்தின் வெவ்வேறு முகங்கள் என்பதை நாங்கள் அறியச்செய்யும்!” எனFratelli tutti’ (‘சகோதரத்துவமும் சமூக நீதியும்) என்ற தனது திருத்தூது மடலில் அவர் தரும் செபம் என்றென்றும் நம் வாழ்க்கைப் பாடமாகட்டும்.

 

news
சிறப்புக்கட்டுரை
AI-யின் பலவீனங்கள் (உலகம் உன் கையில் - 4)

இன்று நாம் சில சமயங்களில் கணினி சார்ந்த அலுவலக அல்லது வணிகச் சந்தேகங்களுக்கு அல்லது சரியில்லாத விவரங்களுக்கு விளக்கம் தேவைப்படின், நமக்குக் கிடைக்கும் ஒரு பதில் கணினி (computer). அப்படியிருக்க, நாம் காலெடுத்து வைத்திருக்கும் .. யுகத்தில், தொழில்நுட்ப அல்லது தயாரிப்புக் கோளாறுகளினாலோ (manufacturer defects) அல்லது தவற்றினாலோ (Negligence) ஏற்படும் விபத்துகள், நட்டங்கள், சேதங்கள், தொழில் இழப்புகளுக்கு யார் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்பது? என்பது தெளிவாக்கப்படாமல் இருக்கிறது. இதற்கான காப்பீடு (insurance) அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU GDPR) செயல்பட்டாலும் முழு அளவில் இல்லை என்று கருதப்படுகிறது.

நீதித்துறையில்அல்கோரித தொழில்நுட்பம்அணுகுமுறையில் பாரபட்சமின்மையுடையதாகக் கருதப்படுவதும்மனித நீதி அரசரைவிட (Human judge) இயந்திரம் திறனாகக் கருதப்படுவதும் அதில் நம்பிக்கை வைப்பதைக் காட்டுகிறது. இந்தப் போக்கு ஒருநாள் ரோபோக்கள் இவ்விதச் செயலாற்றலைப் பெற்று (Intelligence) சமுதாயத்தில் பல துறைகளில் நடமாடுமோ என்ற எண்ணமும் எழுகிறது. சிவில் - குற்றவியல் வழக்குகளில் உள்நோக்குடன் குற்றமிழைத்தல் (Civil and criminal cases -intentional and culpability are the criteria) என்பது அளவுகோலாக உள்ளதென்பதை அறிவோம். .. கணினியைப் பொருத்தவரை, இயந்திரமென்பதால் உள்நோக்கம் (intent) என்பதை நிரூபிக்க இயலாமலிருக்கிறது. இதை நிரூபிக்க வேண்டுமென்றால், தவறான நோக்கத்தினால் தயாரித்து உபயோகத்திற்குக் கொண்டு வந்தவர் (Human individual) பின்செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. ஆனால், இவை செயல்முறைக்கு வராமலிருப்பதற்குத் தொழில் வளர்ச்சியில் ஆர்வம் காட்டும் அரசமைப்புகளுக்கும் போட்டியில் முண்டியடித்துச் செல்லும் நிறுவனங்களுக்கும் இடையே சொல்லப்படாத உடன்பாடு இருப்பதைப் போன்று தோன்றுகிறது. இது ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் சிக்கல்களுக்கும் இழப்புகளுக்கும் சரியான தீர்வில்லாமை, நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்நிலையில், உலகம் .. கணினியின் பின் செல்லும் வேகம், வரும் நாள்களில் ஒரு கட்டத்தில் மனித அறிவாற்றலும் (human intelligence), செயற்கை அறிவாற்றலும் (artificial intelligence) ஒன்றுசேரும் நேரம் நெருங்கிவிட்டதா? என்ற மற்றொரு கேள்வியும் நம்முன் நிற்கிறது. பெரும்பாலான உலகளாவிய மனித உரிமைச் சட்டங்கள் டிஜிட்டல் சகாப்தத்திற்கு முன்பு எழுதினதும், பிரகடனப்படுத்தப்பட்டவைகளாகும் (Before the age of digitalisation).

இப்போது உலகில் டிஜிட்டல் ஊடகங்கள், சிலரால் தேவைக்கென்றும் சமுதாயத்திற்குக் கேடு உண்டாக்கும் வழியிலும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு டிஜிட்டல் காலத்திற்கு (pre Digital age) முன்பு இயற்றப்பட்ட மனித உரிமைச் சட்டங்கள் எவ்வகையில் டிஜிட்டல் காலத்திற்கு ஏற்றதாயிருக்குமென்ற கேள்வி எழுகிறது. இயந்திர வாழ்க்கைக்கு எதைச் செய்வது? எதை உண்பது? என்று நம்மை மெதுவாக நகர்த்திச்செல்வது ஒரு வேளை நமக்கு வசதியாக அமையலாம். அதே நேரத்தில் அல்கோரிதம் சார்ந்த இத்தொழில்நுட்பம், மனிதராகிய நாம் உணவைச் சாப்பிடும்போது தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து அதிலே நம்மை மறந்துவிடும் நிலை, இயந்திரம் நம்மை வழிநடத்துவது, மனித கண்ணியத்திற்கு (human dignity) கேள்வியாகவும் அமைகிறதல்லவா?

சில பணிகளில் இயந்திர (Algorithm) வழிமுறைகள் மனிதரிடையே பாகுபாட்டை (bias) உண்டு பண்ணுவதையும் நிறுவனங்களும், அரசும் தனி மனித சுதந்திரம், இரகசியம் (Privacy) என்பவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் பறிப்பதையும், அரசு சில குற்றங்களைக்  கண்டுபிடிப்பதில் (Investigation) இயந்திரங்கள் பின் செல்வதும், சிக்கலான சூழலில் அந்த இயந்திரங்களை உருவாக்கிய நிறுவனங்கள் ஒத்துழைக்காமலிருப்பதும், போர்க்களங்களில் தானியங்கிப் போராயுதங்கள் தன்னிச்சையாகச் (Autonomous) செயல்படுவதும் மனித உரிமை மீறல்களுக்குச் சான்றாக இருப்பது மட்டுமன்றி, இவைகளுக்கு விடை காணாத நாள்களில் வாழ்கிறோம்.

.. இயந்திரங்களை அறிவாற்றலடையச் (Intelligence) செய்து, அந்த அறிவாற்றல் சூழலுக்கேற்ப எதிர்நோக்குடன் செயலாற்றச் செய்வதாகும். .. மனித அறிவாற்றலை மிஞ்சுவதென்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ஒருவேளை, இது திரைப்படம் போன்று அல்லது அறிவியல் கற்பனை (Science fiction) அலைகளாகக் கூட தோன்றலாம். இன்று இவ்வெண்ணத்தைக் கருத்தாழமாக (Serious) எடுத்துக்கொள்வதா? அல்லது மாயை என்று தள்ளிவிடுவதா? (Dismiss these ideas as fantasy).

உலகளாவிய இப்புதிய தொழில்நுட்பத்தில் பெருமளவிலான வணிக மதிப்பீட்டைப் பெற்றுப் பங்குதாரராயிருக்கும் அரசுகளையும் அல்லது பெரும் நிறுவனங்களையும் இப்போது கட்டுப்படுத்த முடியுமா? ஒருவேளை சமீபத்திலோ அல்லது பின்வரும் நாள்களிலோ இத்தொழில்நுட்பத்தின் வருங்காலச் சந்ததி மனித இனத்தை மீண்டு வரமுடியாத அழிவிற்கு அழைத்துச் செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா?

தொழில்நுட்பம் தலைமுறைகளாக மனித வாழ்க்கைக்கு வளத்தைப் பெருக்கியது மட்டுமல்லாமல், ஒரு தொடர்ச்சியாகவும் இருந்து வருகிறது. இதன் பின்னிருந்து இயக்கும் நிறுவுநர்களும் (Entrepreneurs) உலகின் முன்னேற்றத்திற்குக் காரணமாயிருந்தனர். எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிற்கும் காரணமாயிருப்பவர், நாளடைவில் தன் கண்டுபிடிப்பு எத்திசையில் செல்கிறதென்றும், அது செல்லும் பாதையைக் கட்டுப்படுத்த அவர் இயலாதவராகி விடுகிறார் என்பதும் வரலாறு. தொழில்நுட்பமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். பல உதாரணங்களில் ஒன்று: எரி எண்ணெய் மோட்டார் வாகனங்களைக் கண்டுபிடித்தவர், ஒருநாள் உலக வெப்பமயமாத லுக்கு அவை முக்கியக் காரணமாகிவிடும் என்று சற்றும் நினைக்கவில்லை; அதைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சென்ற நூற்றாண்டின் அணு ஆயுதப் பிரயோகம், இரண்டாம் உலகப் போருக்குப் பின் தணிந்துவிட்டது என்ற எண்ணம் இன்றுவரை உலகளவில் வெளித்தோற்றத்தைத்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், எப்போது என்பதை விட, எந்த நேரத்தில் என்ற பயம் எல்லார் மனத்திலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இதுவரை சரித்திரம் கண்டிராத வேகத்தில் .. தொழில்நுட்பம் சென்றுகொண்டிருக்கிறது. இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் ரோபோ, அதன் வருங்காலத் தொழில்நுட்ப வளர்ச்சி, அதேபோன்று குவாண்டம் கணினியின் (Quantum computer) முதிர்ந்த நிலை, அதன் பயன்பாடு என்பவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறதென்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

.. என்ற தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டில் மனித இனத்திற்குத் துணையாய்ப் பயணிக்கப் போகிறதா? இல்லை மனித அறிவாற்றலை மிஞ்சியதாய், ஒருவேளை மனித ஆற்றலுக்குச் சவாலாய் அல்லது மனிதனை எதிர்த்து நிற்குமா? என்ற திகில் மனத்தில் எழாதவரை சற்று நிம்மதியாய் இருப்போம்.

மனிதனின் பயணம் பல பேரழிவுகளைச் சந்தித்து வருகிறதென்பது வரலாறு.

போலித் தீர்க்கதரிசிகளும் (False prophets), அழிவை முன்மொழிபவரின் (Doomsayer) கணிப்பும் பொய்யாகிப் போனது ஒருபுறமிருக்க, இப்போது நாம் எதிர்கொள்ளவிருப்பது ஏன் வேறு விதமாக இருக்கக்கூடாது என்றும் எண்ணலாம் அல்லவா!

news
சிறப்புக்கட்டுரை
கரும்பலகை (வலையும் வாழ்வும் – 10

அகிலனின் பெயர் பள்ளியின் கரும்பலகையில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இதுவரையில் அகிலன் என்ற பெயர் பள்ளியில் ஒருசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஓட்ட டௌசர், கருவண்டு, கூமுட்ட, ஊமை என்று பள்ளியில் பல பெயர்கள் அவனுக்கு உண்டு. கரும்பலகையில் அவன் பெயர் இடம்பெற்றதால், அவன் ஏதோ மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டான் என்று நினைத்துவிட வேண்டாம். பள்ளி அரையாண்டுத் தேர்வில் பக்கத்திலிருந்தவனைப் பார்த்துக் காப்பி அடித்துவிட்டான். இரண்டு மாணவர்களின் தேர்வுத் தாள்களிலும் ஒரே மாதிரியான விடை எழுதப்பட்டிருந்தது. ஒருவன் ஒரு பிழை போட்டிருந்தால், மற்றவனும் அதே பிழையை எழுதியிருந்தான். தலைமையாசிரியர் எடுக்கின்ற பாடம் என்பதால் இந்தப் பெரிய தவறு வெளிச்சத்திற்கு வந்தது. இதில் யார் யாரைப் பார்த்துக் காப்பி அடித்தனர் என்பது இன்னும் முழுமையாக அறியப்படாத நிலையில் விமல், “அகிலன்தான் என்னைப் பார்த்து எழுதினான்என்று கூறிவிட்டான்.

அகிலன் வழக்கம்போல் வாய் பேசவில்லை. எல்லார் முன்பாகவும் கூனிக்குறுகித் தலையைக் தொங்கவிட்டு அப்படியே கைகளைக் கட்டிக்கொண்டு வெறிநாய் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட முயலைப்போல அசையாது அழுதுகொண்டே நின்றான். தலைமையாசிரியர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்நீ உன் பேரன்ட்சைக் கூட்டிட்டு வரும் வரை உன் பெயர் ஸ்கூல் மெயின் பிளாக் போர்ட்லகாப்பி அடித்தவன் அகிலன்னு எழுதப்பட்டிருக்கும்.”

அகிலன், வீட்டில் இதைப் பற்றி வாய் திறக்கவில்லை. வகுப்பாசிரியர் அகிலனிடம் கேட்டேவிட்டார்அதான் உன் பேரன்ட்சைக் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காருல ஹெட்மாஸ்டர்... கூட்டிட்டு வரவேண்டியதுதானே.”  அகிலன் பேசாதிருந்தான். அவனுடைய இதயத்தின் மௌன அறைக்குள் வலிகள் நிறைந்த கதைகள் அடைப்பட்டுக் கிடந்தன.

அகிலன் ஏழாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவன். அவனுக்குக் கிராமமே இல்லை. அவனிடம்உன் ஊர் பெயர் என்ன?’ என்று கேட்டால், அவனால் சொல்ல முடியாது. ஏனெனில், அவன் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு செங்கல் சூளைக் குடியிருப்பில்தான். குடிசை வீடுகளாலும் பிளக்ஸ் கூரை வீடுகளாலும் அந்த வெட்டவெளிக் குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் கொத்தடிமைகளாக அவனுடைய குடும்பமே மீசைக்காரனிடம் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தது. அகிலனுடைய அக்கா, அம்மா, அப்பா ஆகியோர் மற்றவர்களைப்போல அந்தச் செங்கல் சூளையில்தான் வேலை பார்த்து வந்தனர். அகிலனுக்கு மூத்தவன் கைக்குழந்தையாக வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டு இருக்கும்போது எலி கடித்து இறந்துவிட்டான். இதனால் மீசைக்காரனுக்கு ஒரு குற்றவுணர்வு கொஞ்ச நாள் இருந்தது. அகிலனின் அப்பா மீசைக்காரனிடம் மன்றாடி தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பச் சம்மதம் வாங்கினார்.

டேய் ராசா! நல்லா படிச்சு, நல்ல பெயர் வாங்கணும்டாஎன்று அவர் அடிக்கடி அகிலனிடம் கூறுவார். அகிலனின் அக்கா அகிலாவுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தும். “ஆம்பளனா என்ன அவனுக்குக் கொம்பா மொளச்சிருக்கு? அவன மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, என்ன இந்த வெயில் காட்டுல மீசைக்காரனுகிட்ட கஷ்டப்பட வைக்கிறீங்க?” என்று அடிக்கடி அழுதுகொண்டு குறைபடுவாள்.

இரண்டு மூன்று நாள்களாகியும் அகிலனின் பெயர் அழிக்கப்படாமல் கரும்பலகையில் இடம்பெற்றிருந்தது. இதுவரை அகிலனைப் பாவம் என்று பார்த்தவர்கள், இப்போதெல்லாம் அவனை ஏளனமாக ஒரு குற்றவாளியாகப் பார்த்தனர். இது அகிலனுக்குப் பிடிக்கவே இல்லை. இப்போதெல்லாம் அவன் அருகில் வந்தால் கூட யாரும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. ‘காப்பி அடித்தவன் அகிலன்என்ற கரும்பலகை வாக்கியமும், ‘டேய் ராசா! நல்லா படிச்சு நல்ல பெயர் வாங்கணும்டாஎன்ற தன் அப்பாவின் வார்த்தைகளும் அகிலனின் மனத்தில் வந்து வந்து சென்றன. தன்னால் தன் பெயரைக் காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணி வருந்தித் தவித்தான் அகிலன்.

அன்று பள்ளி முடிந்து ஓட்டம் பிடித்தவன்தான்... அதன் பிறகு பள்ளிக்கூடம் பக்கமே அவன் வரவில்லை. பள்ளியிலிருந்து யாரும் அவனைத் தேடவுமில்லை. பள்ளிக்கூட கரும்பலகை மட்டும் அவனுடைய வருகைக்காக மழை, வெயில் பாராது காத்துக்கிடந்தது.

பள்ளியின் கரும்பலகைபோல இன்று சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் சிலரின் வாழ்வைக் கெடுக்கின்றது. சிலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது. ஒருவருடைய பெயரை அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்போடு பலர் இணையத்தளங்களையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர். யாருக்கும் தெரியக்கூடாது என்று பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தனிப்பட்ட வங்கி விவரங்களையோ, போன் நம்பர்கள் அல்லது இமெயில் விவரங்களையோ, புகைப்படங்கள் அல்லது காணொளிகளையோ, ஆவணங்களையோ அந்த மனிதருக்கோ நிறுவனத்திற்கோ ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் வலைத்தளங்களில் பகிரும் செயலைடாக்சிங் (Doxing or Doxxing) என்கிறோம்.

டிசம்பர் 2024-ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டஎப்..ஆர்.’ வலைத்தளங்களில் அனுமதியில்லாமல் பகிரப்பட்ட நிகழ்வை டாக்கிங்கிற்கான சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் தலைவர்களில் ஒருவர் முன்னணி நடிகர் ஒருவரின் சமயப் பின்னணியைச் சுட்டிக்காட்டும் விதத்தில் அவருடைய முழுப்பெயரை அப்போதையடுவிட்டர்பக்கத்தில் வெளியிட்ட செயலையும்டாக்சிங்எனலாம்.

டாக்சிங்ஒரு சைபர் குற்றமாகும். நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பணியாளர், காதல் முறிவால் புறக்கணிக்கப்பட்ட காதலன், பண மோசடியால் ஏமாற்றப்பட்ட நண்பர்களில் ஒருவன், சக நிறுவனத்தின் வளர்ச்சியைச் சகித்துக்கொள்ளாத போட்டி நிறுவனம்... என்று இப்படி யார் வேண்டுமென்றாலும்டாக்சிங்என்னும் குற்றச் செயலில் ஈடுப்படுவதுண்டு.  

டாக்சிங்என்னும் சைபர் குற்றத்தை எதிர்கொள்ள நாம் நம் சைபர் பழக்கத்தை (Cyber-etiquette) ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். தெரியாத நபர்களின் மின்னஞ்சல் லிங்கைகிளிக்செய்யாமல் இருப்பது, தனிப்பட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பது, ‘டிஜிட்டல் செக்யூரிட்டிக்குஅதிக முக்கியத்துவம் கொடுப்பது, ஆன்லைன் சர்வேக்களைத் தவிர்ப்பது போன்ற பழக்கவழக்கங்கள்டாக்சிங்போன்ற சைபர் குற்றங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடும். பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ அல்லது சைபர் கிரைம் காவல்துறையிடமோ தகுந்த ஆதாரத்தோடு தங்களின் நிலையை எடுத்துரைக்க முன்வர வேண்டும்.

கரும்பலகை ஒன்றுதான்; ஆனால், அது பலரையும் கல்வியாளர்களாக, அரசியல்வாதிகளாக, அறிவியல் மேதைகளாக, தொழில்நுட்பக் கலைஞர்களாக மாற்றியுள்ளதுபோல, சமூக ஊடகப் பலகையினைச் சரிவரப் பயன்படுத்தினால் அதுவும் நம்மை உயர்ந்த இடத்திற்கே கொண்டு செல்லும். பள்ளியை விட்டு ஓடிய அகிலனைப்போல, இன்று யாரும் வாழ்க்கையை விட்டு ஓடிவிடாமல் இருக்க வழி செய்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
பறிபோகும் மாநில உரிமைகள்

இந்தியா என்பது ஒரே நாடல்ல; அது பல்வேறு இனக்குழுக்களை, பல்வேறு தேசிய இனங்களை, பல்வேறு மொழி பேசுபவர்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். தேச விடுதலைக்குப் பின் புது இந்திய தேசமாகஒரே நாடாகஉருபெற்றது. தேசிய இனங்களுக்கான மொழிவாரி  மாநிலங்கள் அமைந்தன. மாநிலத்தில் சுய ஆட்சியும், மத்தியில் கூட்டாட்சி என்ற ஆட்சி முறையும் அமலானது. ஒன்றிய அரசுக்கான  அதிகாரம், மாநில அரசுக்கான அதிகாரம், இரு அரசுகளுக்கான ஒருங்கிணைப்புப் பட்டியல் அதிகாரம் என அதிகாரப்  பகிர்வுகள் உருவாக்கப்பட்டன.

மாநில அரசுகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்மாநில சுயாட்சிஎன்ற வலுத்தக் கோரிக்கையைப்  புயலாய்க் கிளப்பியது. பேரறிஞர் அண்ணா முழங்குகிறார்: “ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா மந்திரியிடம்  கேட்பார், ‘மந்திரியே, நமது மாநகரில் மும்மாரி பொழிகிறதா?’ (இராஜா மழை பெய்வது கூட தெரியாமலே மாநகரில் இருப்பது  பெரும் அபத்தம் தானே!). அதேபோல மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்களை டெல்லியில் கூட்டி, ‘பள்ளிக்கூடங்களில் கல்வி எப்படி இருக்கிறது?’ என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்தத் தர்பார் பேச்சுப் பேசும் பொறுப்புதான் டெல்லிக்கு இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமில்லை. மக்களின் சுக துக்கத்தோடு, பின்னிப் பிணைந்திருப்பது மாநில  அரசுதானே தவிர, மத்திய அரசு அல்ல.”

மாநில சுயாட்சி என்ற கோரிக்கையை 1970-இல் அன்றைய ஆளும் தி.மு.. உயர்த்திப் பிடித்தது. 1969-இல்   ஒன்றிய, மாநில அரசுகளின் உறவு, உரிமை குறித்த  இராசமன்னார் குழு, தமிழ்நாடு அரசால் உருவகம் பெற்றது. 1971-இல் அக்குழு  தன் பரிந்துரைகளைத் தந்தது. மாநில அரசிற்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே தேசத்தின் கூட்டாட்சி முறை வலுப்பெறும்; அதற்கேற்ப அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதற்கு முன்பே ஒன்றிய அரசிடம் மாநில உரிமைகளைப் பெற தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜரும், கர்நாடகத்தில் நிஜலிங்கப்பாவும் பெரும் போராட்டங்கள் நடத்தினார்கள் என்பதே வரலாற்றுப் பதிவு.

பாராளுமன்றத்தில் மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறன், எல். கணேசன், வைகோ போன்றவர்களின் முழக்கம், தமிழ்நாடு மக்களின் குரலாகப் பதியப்பட்டுள்ளது. பஞ்சாப், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் எனத் துவங்கிய மாநில சுயாட்சி  இன்று கர்நாடகா, கேரளா என விரிவுபெற்றுள்ளது. இம்மாநில  சட்டசபைகள், மாநில சுயாட்சிக் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றி  உள்ளார்கள். உதாரணமாக, 1976-ஆம் ஆண்டு தேசத்தில் நெருக்கடி நிலை அமலான காலம். கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து, அன்றைய ஒன்றிய அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுகிறது. இன்றையநீட்விவகாரம், பல்கலைத் துணை வேந்தர் நியமனம் என அடிப்படைப் பிரச்சினைகளின் ஆணிவேர் இந்த மாற்றமே  எனக் கூறலாம்.

தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் நடத்துகிறார், உத்தரவுகள் போடுகிறார். இது குறித்து  சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய 2007-ஆம் ஆண்டு மேனாள் தலைமை நீதிபதி பூஞ்சித் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையப் பரிந்துரை, ‘அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படக்கூடாதுஎன்றது. குஜராத், தெலுங்கானா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தேடுதல் குழு அமைத்து, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் நடைபெறுகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கல்வி  என்பதில் ஒன்றிய அரசு தமிழ் நாடு அரசை நெருக்குகிறது. ஒன்றிய அரசின் திட்டம் சார்ந்து செயல்படும் கல்வி திட்டங்களுக்கான ஆசிரியர்களின் ஊதியங்களைத் தர மறுக்கிறது. ஒன்றிய அரசின் காவிக்கொள்கை முடிவுகளை மாநில அரசுகள்மீது திணிக்கிறது.”

குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, மாநில உரிமைகள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து முழங்கியவைசூழலைத்  தீப்பற்ற வைப்பதாக இருந்தது. விவசாயிகள் புதுடெல்லி தெருக்களில் வாட்டும் குளிரில் வருடக்கணக்கில் போராடியும், மோடியைப் பார்க்க முடியவில்லை. மோடி பாலிவுட் திரைநாயகிகளின் விழாக்களில் கலந்து மகிழ்ந்தது, தேசத்தின் கடந்த காலக் கண்ணீர் நிலை.

எல்லாக் காலங்களிலும் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு பேணப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. 1983-இல் அமைக்கப்பட்டு, 1985-ஆம் ஆண்டு சர்க்கரியா ஆணையமும் பல்வேறு பரிந்துரைகளைத் தந்தது. ஆனால், காலம் எதிர் பாதையில் ஒன்றிய அரசைத் திசைதிருப்பி விடுகிறது.

திட்டக்குழு கலைக்கப்பட்டு விட்டது. ஆனால், பரிந்துரைப்படி அனைத்து இந்தியத் தேர்வுப் பணிகள் ஆணையம் கலைக்கப்பட எந்த நடவடிக்கையும் இல்லை. முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஆள்களை இந்திய அரசின் அனைத்துத் துறைகளிலும், அனைத்துவகைப் பணிகளிலும் முழுமையாக நுழைத்துவிட்டனர்

356-ஆம் சட்டப்பிரிவால் 134 மாநில அரசுகள், ஒன்றிய அரசால் கலைக்கப்பட்ட நிலை மட்டும் மாறிவிட்டது. 1994-ஆம் ஆண்டுஎஸ்.ஆர். பொம்மை எதிர்த்தரப்பு இந்திய  ஒன்றிய அரசுஎன்ற வழக்கில், ஆட்சிக் கலைப்பு என்பதற்குக் கடுமையான வழிகாட்டி நெறிமுறைகள் உச்சநீதிமன்றத்தால் தரப்பட்டு விட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், அதன்பின் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே ஆட்சிக் கலைப்பு நடந்துள்ளது.

இன்று  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு  முறையால், தமிழ்நாடு  அதிக அளவு வரி வருவாயை ஒன்றிய அரசிற்கு வழங்குகிறது. ஆனால், ஒன்றிய அரசோ, தமிழ்நாடு அரசு உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் ஆள்கிற மாநில அரசுகளுக்கு இயற்கைச் சீற்றங்களுக்கான நிதி, திட்டங்களுக்கான நிதியென உரிய வரிப் பகிர்வைத் தருவதில்லை. பா... மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆள்கின்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் குறித்த சட்டங்களை ஒன்றிய அரசுதான் கொண்டுவர முடியும் என்ற கட்டாயம் களையப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் மாநில அரசுகளின்  உறுப்பினர்கள் தலையாட்டிப் பொம்மைகள் என்ற அவலம் களையப்பட வேண்டும். இன்று மாநில அரசுகள் உள்ளாட்சி வருவாய்கள், பத்திரப் பதிவு வருவாய், மது வருவாய் என முடங்கிக் கிடப்பது பெரும் ஆபத்து.

பேரறிஞர் அண்ணாஉரிமை மிக்க மாநிலங்களே வலிமை மிக்க நாட்டை உருவாக்க முடியும்என்றார். உள்ளாட்சி அமைப்புகளாகச் செயல்படும் மாநில அரசுகள் எதற்கு? அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மாகாணக் கவுன்சில்களுக்குப் பெரும்  அதிகாரம் அளித்துள்ளது. ஆனால், பா...வின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே குடும்ப அட்டை, ஒரே தேர்தல், ஒரே தலைவன், ஒரே வரிசையில், ஒரே அரசு என்ற நீண்டகாலத் திட்டமும் ஒளிந்துள்ளது.

பேரறிஞர் அண்ணா ஒற்றை வரியில் கூறுகிறார்: “தேசப் பாதுகாப்பைத் தவிர மற்ற அனைத்திலும் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டும். இதுவே உண்மையான கூட்டாட்சித் தத்துவமாக அமையும்.”

2024-ஆம் ஆண்டு நீண்ட காலமாகத் தேர்தல் நடைபெறாத ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிற தேசிய மாநாட்டுக் கட்சி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர்  உமர் அப்துல்லாவுக்குத் தமிழ்நாடு முதல்வர் வாழ்த்துச் செய்தியில் கூறுகிறார்: “மாநில உரிமைகளுக்காக வடமுனை காஷ்மீரும், தென்முனை தமிழ்நாடும் தொடர்ந்து போராடும்.” ஆம், தொடர்ந்து ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் மெல்லப் பறிக்கப்பட்டு, இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற இறுதி நிலையில்  நிற்கிறது.

காலத்தே ஆறுதல்எனும் கலங்கரை விளக்கு ஒளிர்கிறது. காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் இராகுல் காந்தி சமூக நீதி, சிறுபான்மையோர் நலன், விலைவாசி உயர்வு, இடஒதுக்கீடு, ஆர்.எஸ்.எஸ். அபாயம், மாநில உரிமைகள் எனப் பொதுமக்கள் குரலைப் பொதுவெளியில் எதிரொலிக்கிறார்.

மாநிலங்கள் என்ற வேர் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே, தேசமெனும் பெரும் மரம் உறுதி பெறும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் பெரும் முழக்கத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்.

news
சிறப்புக்கட்டுரை
சைபர் காதல் (வலையும் வாழ்வும் – 09)

கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் திடீர் பரபரப்பு. ‘மஞ்சும்மல் பாய்ஸ் (Manju mmel Boys) திரைப்படத்தைப் பார்த்துவிட்டுகுணாகுகைக்கு அலைமோதியக் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தவே காவல்துறையினருக்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் மதுரை மாவட்டப் பள்ளி ஒன்றிலிருந்து வந்திருந்த மாணவி ஒருவரைக் காணவில்லை என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேடி அலைந்தனர். அவர்களின் முகத்திலே பயமும் சோர்வும் ஒட்டிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பாக ஆடிப்பாடிசெல்பிஎடுத்து மகிழ்ந்திருந்த பள்ளி மாணவர்கள் கொடைக்கானல் மாலைநேர குளிரிலும் வியர்வையில் குளித்திருந்தனர்.

நண்பர்களாகச் சுற்றுலா சென்றிருந்த நாங்களும் காணாமல் போன அந்த 12-ஆம் வகுப்பு மாணவியின் அடையாளங்களை ஓர் ஆசிரியரிடம் கேட்டறிந்து கொண்டு தேடித் திரிந்தோம். வானம் முட்டி வளர்ந்திருந்த யூக்கலிப்டஸ் மரங்களும், கொண்டை ஊசி வளைவுகளும் பள்ளமேடுகளும் இருட்டேறிய பாறைப் பிளவுகளும் சிவப்பேறிய மாலைப்பொழுதும் ஆரவாரமில்லாச் சாலைகளும் திகில் படங்களை நொடிப்பொழுதில் ஓட்டிக்காட்டின.

ஆசிரியர்களும் சில மாணவர்களும் அங்கிருந்த போலீஸ் ஸ்டேசன் சென்று கம்பிளைன்ட் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தனர். சுற்றுலாப் பேருந்திலேயே காணாமல் போன மாணவிக்காகக் காத்திருந்த பிற மாணவ-மாணவிகள் செய்வதறியாது நகத்தைக் கடித்துக்கொண்டும் இருளை வெறித்துப் பார்த்துக்கொண்டும் இருந்தனர். பேருந்து சன்னல் கம்பிகளுக்கு வெளியே ஆசிரியர்களோ தலைமை ஆசிரியருக்கும் மாணவியின் பெற்றோருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமலேயே விழி பிதுங்கி நின்றனர். அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது.

சார் கவலைப்படாதீங்க. மாணவி கிடைத்து விடுவாள்என்று ஆறுதல் கூறி விட்டு அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றோம். சில நேரம் கழித்து அந்தப் பள்ளிப் பேருந்து நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலுக்கு முன்பாக வந்து நின்றது. பேருந்திற்குள் மாணவ-மாணவிகள் மின்னித் தெறிக்கும் கலர் வெளிச்சத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிச் சாலையோரங்களில் சிலிர்த்து நிற்கும் மரங்களைப்போல மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டனர். சற்று நேரத்தில் சாப்பிட வந்த ஆசிரியர் ஒருவரிடம் பேரார்வத்தில் கேட்டேன்மாணவி கிடைத்துவிட்டாளா?” என்று. இருக்கையை அருகிலே இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டு மெல்லிய குரலில் அவர், “சார்! அது ஒரு பெரிய கதை. அந்த மாணவி யாரையோ ஒரு பையனை இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறாளாம். சுற்றுலாவிற்கு வருவது தெரிந்து தற்கொலைப் பாறை இருக்குல... அங்க சந்திப்பதாக அவனுக்கிட்ட சொல்லியிருக்கிறா. நாங்க காலையில தற்கொலைப் பாறைக்குப் போயிருக்கும்போது அவங்க யாருக்கும் தெரியாம சந்திச்சுப் பேசியிருக்காங்க.” அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே மற்ற மாணவ-மாணவிகள் பேருந்திலிருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சாப்பிட வந்து கொண்டிருந்தார்கள். ஆசிரியர் தொடர்ந்தார்பேருந்தை எடுக்கும்போது நாங்க சரியா அந்த மாணவிய கவனிக்காம விட்டுட்டு வந்துவிட்டோம். அவ பிரண்ட்ஸ் கூட ஆட்டம்பாட்டத்துல அவளக் கவனிக்காம விட்டுட்டாங்க. குணா பாறையில வச்சுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

நண்பர்களில் ஒருவர்இப்போ அந்த மாணவிக்கு என்ன ஆச்சு? திரும்பி வந்துட்டாளா?” என்று கேட்டுக்கொண்டே மாணவர் கூட்டத்தில் காணாமல் போன மாணவியைத் தேடினார்.

அவ எங்க திரும்பி வந்தா? அவ அவளுடைய பாய் பிரண்டோட எங்களைத்  தேடி அலைஞ்சிருக்கிறாங்க, நாங்கதான் அங்க இருந்து கிளம்பிட்டோமேபிறகு போலீஸ்காரங்கதான் அந்தப் பொண்ணுடைய யூனிபார்மைப் பார்த்துவிட்டு நாங்க கம்ப்ளைண்ட் கொடுத்த மாணவி அவதானு தெரிஞ்சிக்கிட்டு அந்தப் பையனுங்க பெயர், அட்ரசை எழுதி வாங்கிட்டு இவளை எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. இப்போதான் சார் போன உசிரு திரும்பி வந்திருக்குஎன்று சொல்லும்போது அந்த ஆசிரியரின் மனம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.

எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியாக அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். காணாமல் போய் திரும்பி வந்த மாணவியை எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த ஆசிரியரிடமும்அந்த மாணவி யார்?’ என்று கேட்க நாங்கள் துணியவில்லைமாணவி திரும்பி வந்ததே சந்தோசமாக இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் சைபர் உலகத்தில் கத்தரிக்காயும் கிடைக்கிறது, காதலும் கிடைக்கிறது. ‘காதல்என்ற போர்வையில் ஏராளமான சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. சமீபத்தில் குஜராத்தைச் சார்ந்த 10 வயது சிறுமிக்கும் 16 வயதான சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம் வழியாகக் காதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்காக வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியச் சூழலில், காவல் துறையினர் அருகாமையில் இருக்கும் கிராமம் ஒன்றில் இவர்களைக் கண்டறிந்து பெற்றோரிடம் சேர்த்துள்ளனர்.

கொல்கொத்தாவில் 2016-ஆம் ஆண்டு 19 வயது இளைஞன் 15 வயது சிறுமியைப் பேஸ்புக்கில் காதலித்து, அச்சிறுமியைத் தனியாக வரவழைத்து, தன் நண்பரோடு சேர்ந்து அச்சிறுமியைப் பலாத்காரம் செய்திருக்கிறான். இதேபோன்ற செயல்கள் இன்று பத்திரிகைகளில் தினச்செய்தியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சைபர் குற்றவாளிகள் சிறார்களைக் குறிவைத்துச் சமூக ஊடகம் வழியாகக் காதல் வலைவீசி, அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் செயலைசைபர் குரூமிங் (Cyber-grooming) என்கிறோம். இது பல்வேறு வகைகளில் அரங்கேறுகின்றன. சைபர் தளங்கள் வழியாகச் சிறார்களுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்புவது, ஆபாசப் படங்களை அனுப்புவது, காதல் மொழி பேசி வீட்டை விட்டு வெளியே தனியாக வரவைத்துப் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்குவது போன்றவை சைபர் குற்றங்களே. தேசியக் குற்ற ஆவணப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau) தரவுப்படி, இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு மட்டும் 1376 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராகச் சைபர் வலைத்தளங்களில் அரங்கேறியுள்ளன.

சிறார்கள் இத்தகைய சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டால் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் முறையிடவோ அல்லது 1930 என்ற உதவி எண்ணையோ அழைக்கலாம். இத்தகைய சைபர் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள குழந்தைகளோடு பெற்றோர்கள் தொடர்ந்து உரையாட வேண்டும். அவர்களின் இணைய ஆர்வத்தைக் கண்காணிக்க வேண்டும். இணைய ஆபத்துகளிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்னும் படிப்பினையைக் குழந்தைகளுக்கு எளிய வழியில் கூற வேண்டும். குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதையும், அதில் அவர்களின் புகைப்படம் அல்லது தனிப்பட்டத் தரவுகளைப் பதிவேற்றம் செய்வதையும் தவிர்க்க உதவி செய்ய வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உடனடியாகப் பெற்றோர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.

இணையமும் சமூக ஊடகங்களும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானமில்லை; அங்கு உலவுகின்ற பொம்மைகள் உண்மையில்லை; சைபர் தளங்களில் அன்பொழுகப் பேசுபவர்கள் உறவுகளுமில்லை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
நூற்றாண்டு விழாக் காணும் சென்னை குட்ஷெப்பர்ட் கான்வென்ட்

1924 முதல் 2024 வரையிலான நூற்றாண்டு கால அன்புச் சேவையை, ஆழமான அர்ப்பணிப்பைப் பெருமையுடன் நினைவு கூரும் வகையில் சென்னை குட் ஷெப்பர்ட் கான்வென்ட் தன் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை இத்தருணத்தில் கொண்டாடுகிறது.

1835-ஆம் ஆண்டு புனித மேரி யூப்ரேசியா பெல் லெட்டியர் அவர்களால் பெண்களுக்கான நல்மேய்ப்பரின் சபை (Congregation of Good Shepherd Sisters) பிரான்சில் நிறுவப்பட்டது. அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் மறைபரப்புப் பணியின் ஆர்வத்தால் இச்சபை இந்தியாவில் - பெங்களூரில் ஆகஸ்டு 15, 1854 அன்று தனது பணியை விரிவுபடுத்தியது. அன்று முதல் கல்வி, சமூக சேவை, மருத்துவம், இளம்பெண்களுக்கான குடியிருப்பு வசதிகள், சிறைத்துறை, திருமணமாகாத தாய்மார்களுக்கான வீடுகள், இளம் பெண்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கான விடுதிகள், நீதி - அமைதி முன்னெடுப்புகள், மிகவும் பாதிப்புக்குள்ளான தாழ்த்தப்பட்ட பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு ஆகியவற்றில் சகோதரிகள் தங்களையே அர்ப்பணித்து வருகின்றனர்.

மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு தெரியாத போதிலும், அன்றைய சென்னை-மயிலை ஆயர் டி காஸ்ட்ரோவின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் 21, 1924 அன்று லஸ் தேவாலயத்தில் பங்குப் பராமரிப்பு மற்றும் மேய்ப்புப் பணிகளைத் துணிவுடன் தொடங்கிய அருள்சகோதரிகள், பின்னர் மூரட்ஸ் கார்டனுக்குக் குடிபெயர்ந்து, 1930-இல் நுங்கப்பாக்கத்தில் தங்கள் முதல் இல்லத்தை உருவாக்கினர்

உலகம் முழுவதையும் விட ஒரு நபர் மிகவும் விலைமதிப்புள்ளவர்என்ற தங்கள் நிறுவுநரின் ஆழ்ந்த நம்பிக்கையால் வழிநடத்தப்பட்டு, தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இளம்பெண்கள் மற்றும் பெண்களுக்குக் குட் ஷெப்பர்ட் கான்வென்ட் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின் சரணாலயமாக மாறியது. அவ்வகையில் கடந்த பல ஆண்டுகளாக, இது ஒருங்கிணைந்த முழுமையான கல்வி, ஒழுக்கம், மதிப்பீடுகள் மற்றும் ஆற்றல்படுத்துவதன் வாயிலாக எண்ணற்றவர்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளது.

நூற்றாண்டு விழாச் சிறப்புகள்...

நன்றி தெரிவிக்கும் ஓர் ஆண்டு: குறிப்பிடத்தக்க இப்பயணத்தில் துணையிருந்த அருள்சகோதரிகள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு நன்றி தெரிவிப்பது.

அருட்கொடைகளின் ஆண்டு: இவ்விடத்தால் வாழ்வில் ஏற்றமும் சிறப்பும் கண்டவர்களைக் கௌரவித்தல்.

நம்பிக்கையின் ஆண்டு: சேவை மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் தழுவுதல்.

புதிய முயற்சிகளின் ஆண்டு: இக்காலச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பணியை விரிவுபடுத்துதல்.

மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரு பார்வை:

சமூகப் பணிகள்: மேரியன் ஹோம் - பள்ளி இடை நிற்றவர்களுக்கான திறன் பயிற்சிக்கூடம். சென்னையிலுள்ள குட் ஷெப்பர்ட் கான்வென்ட், இளம்பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பின்னணியில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரிந்த உறவுகளிலிருந்து வரும் பெண்கள் மற்றும் குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பங்கள் உட்பட சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, 1924-இல் இவ்வில்லத்தை அருள்சகோதரிகள் நிறுவினர். இந்த இல்லம் 1952-இல் மேரியன் ஹோம் என்று பெயரிடப்பட்டது. சிறுமிகள் மற்றும் பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பேக்கரி, கேன்டீன் சேவைகள், தையல் மற்றும் வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்சார் பயிற்சிகளை வழங்குகிறது. இளம்பெண்களைத் தன்னிறைவு மற்றும் நிதிச் சுதந்திரத்திற்கான நடைமுறைத் திறன்களுடன் உருவாக்குகிறது.

நூற்றாண்டு காணும் சிறப்பான கல்விப்பணி:

வில்லியம் பட்லர் யீட்ஸ் கூறுவதுபோல, ‘கல்வி என்பது ஒரு பாத்திரத்தை நிரப்புவது அல்ல: மாறாக, நெருப்பை மூட்டுவதாகும்.’ கல்வியே குட் ஷெப்பர்ட் பணியின் மூலைக்கல்லாகும். கற்றல் தனிநபர்களை மேம்படுத்துகிறது மற்றும் சமூகத்தையே மாற்றுகிறது என்ற நம்பிக்கையில், 1925-ஆம் ஆண்டு முதல், இப்பள்ளி இளம் மனங்களை வளர்த்து, வலுவான மதிப்பீடுகளை ஊக்குவித்துக் கல்விப்பணியில் சிறந்து விளங்குகிறது.

நீங்கள் செய்வதையெல்லாம் நன்றாகச் செய்யுங்கள்என்ற சபை நிறுவுநர் புனித மேரி யூப்ரேசியா பெல்லெட்டியர் வகுத்துக்கொடுத்தக் கொள்கையின் வழியில், அன்று எளிமையான தொடக்கம் கொண்ட இப்பள்ளி, இன்று கலங்கரை விளக்கமாக உயர்ந்து, சிறந்து விளங்குகிறது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, முழுமையான கற்றல், உறுதியான அர்ப்பணிப்பு, அறிவார்ந்த வளர்ச்சி, தார்மீக ஒருமைப்பாடு மற்றும் யாவரையும் அரவணைக்கும் அணுகுமுறை ஆகியவற்றைக் கொண்டு, ஞானம் நிறைந்த உயர் நோக்கத்துடன் இளம்பெண்களைத் தொடர்ந்து இப்பள்ளி வழிநடத்தி வருகிறது.

குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு நினைவுப் பள்ளி

100 வருட அர்ப்பணிப்பு மற்றும் சேவையைக் கொண்டாடும் வகையில், CICSE பாடத் திட்டத்தைப் பின்பற்றிக் குட் ஷெப்பர்ட் நூற்றாண்டு பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை ஜூன் 10, 2024 அன்று அருள்தந்தை ராஜ் மரியசூசை SDB அர்ச்சிக்க, எம் சபைத் தலைவி ஜோன் லோபஸ் மற்றும் அவரது ஆலோசகர் குழுவினர் ஜூன் 14, 2024 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். கடந்த காலத்தின் ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலச் சாத்தியக்கூறுகளால் ஈர்க்கப்பட்டு, நூற்றாண்டு காணும் இப்பள்ளி, பள்ளிக் கல்வித்தளத்தில் சிறப்பான அடையாளமாகவும் புதுப்படைப்பாக்கும் கருவியாகவும் திகழ்கிறது.

பின்தங்கிய குழந்தைகளுக்கான தங்குமிடம்

மொட்டுகள்: வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள், ஆதரவற்றக் குழந்தைகள் மற்றும் பின் தங்கிய பெண் குழந்தைகளுக்குத் தங்குமிடம் மற்றும் அரவணைப்பும் வழங்கும் வண்ணம்மொட்டுகள்எனும் இவ்வில்லம் 1996-இல் நிறுவப்பட்டது. குறுகிய காலத் தங்கும் வசதிகள், ஆலோசனைகள், கல்வி ஆதரவு, குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில் பயிற்சி ஆகிய உதவிகளை  இவ்வில்லம் வழங்குகிறது.

குடிசைப்பகுதி செயல்திட்டங்கள்: சென்னை குடிசைப்பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டக் குழந்தைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், குறிப்பாக, வீடுகளை விட்டுக் குழந்தைகள் வெளியேறுவதைத் தடுக்கவும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீடுகளை விட்டு வெளியேறிய சிறுமிகளைக் குறுகிய காலப் பாதுகாப்பிற்குப்பின் மீண்டும் அவர்களை அவர்களின் குடும்பத்தோடு ஒருங்கிணைக்க இந்தத் திட்டம் உதவுகிறது.

பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்குப் பாதுகாப்பான புகலிடம்

ரோஷினிவாஸ் விடுதி: பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்குவதற்காக ரோஷினிவாஸ் விடுதி 2000-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது 74 நபர்களுக்குத் தனிப்பட்ட வழிகாட்டுதல், பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் முழுமையான ஆதரவுடன் தொழில்முறை வளர்ச்சியையும் அவர்களுக்கு வழங்குகிறது.

உடன்பணியாளர்கள்: நல்மேய்ப்பன் பணிகளை முன்னெடுப்பதில் பல உடன்பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பவர்களாக எம்மோடு பயணிக்கின்றனர். அருள்சகோதரிகளுடன் பணியில் உடனிருப்பதுடன் ஆலோசனை தரும் வழிகாட்டிகளாக ஒத்துழைத்து, இரக்கம், நீதி மற்றும் சேவை போன்ற மதிப்பீடுகள் சமூகத்தில் தொடர்ந்து செழித்து வளர்வதை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

பாதுகாப்புக் கொள்கை: குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குட் ஷெப்பர்ட் சபை உறுதியாக உள்ளது. உலகில் 68 நாடுகளில் பரவியுள்ள இச்சபை எல்லா இடங்களிலும் இப்பாதுகாப்புக் கொள்கையைச் செயல்படுத்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திப் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நூற்றாண்டு விழாக்கள்:

நவம்பர் 11, 2024 அன்று சிறப்பு நன்றித் திருப்பலியுடன் நூற்றாண்டு விழா தொடங்கியது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 2024 முதல் ஜூலை 2025 வரை ஒவ்வொரு மாதமும் செபம் மற்றும் நன்றியுணர்வுடன் ஒரே சமூகமாகப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த கால நினைவுகளைக் கொண்டாடக் குட் ஷெப்பர்ட் முன்னாள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட லெகசி காலா (Legacy Gala), ஏறக்குறைய 700 முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்தது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். கூடுதலாக, பிப்ரவரி 15, 2025 அன்று மேரியன் ஹோம் மொட்டுகள் 350 சிறுமிகளை ஒன்றிணைத்து, அவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு 2025 இல், நிறைவுக் கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளன.

100 ஆண்டுகால அர்ப்பணிப்பு மற்றும் சேவையை நினைவுகூரும் நாங்கள், அன்பு, இரக்கம் மற்றும் ஊக்கமளித்தல் ஆகியவற்றின் நோக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்துக்கொள்கிறோம். ஆழ்ந்த நன்றியுணர்வுடன், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். வரவிருக்கும் தலைமுறைகளுக்குக் குட் ஷெப்பர்ட் நிறுவனத்தின் வளமான மரபுகளை எடுத்துக்கூறி அவர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்வதை உறுதிசெய்கிறோம். ‘ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா 107:1). இதயம் நிறைந்த நன்றியுடன் எங்கள் பயணம் தொடர்கிறது...

நல்மேய்ப்பன் பணியில்,

அருள்சகோதரிகள்குட் ஷெப்பர்ட் கான்வென்ட்

சென்னை