news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வாவின் பாதையில் மருத்துவப் பணியில் எம் மாண்பு!

மருத்துவப் பணி என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, அது மனித வாழ்க்கையை மதிக்கும் ஒரு புனித அழைப்பு! அந்த அழைப்பின் ஆழமான அர்த்தத்தை எனக்கு உணர்த்தியவர் அன்னை எலிஸ்வா அவர்கள்.

ஏழை, எளிய, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வலியைத் தன் இதயத்தில் சுமந்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைக்கவேண்டும் என்ற அவரது கனவே, எங்கள் சபை  மேற்கொண்டு வரும் மருத்துவப் பணிகளின் அடித்தளமாக அமைந்துள்ளன.

அன்னை எலிஸ்வா அவர்கள் மருத்துவச் சேவையை ஒரு தொழிலாக அல்ல; மாறாக, மனித மரியாதையைக் காக்கும் அருள்சேவையாகவே பார்த்தார். நோயால் வாடிய ஏழை மக்களைப் பார்த்தபோது, ‘சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக்கூடாதுஎன்ற அவரது உறுதியான எண்ணமே, எங்கள் சபையின் முதல் மருத்துவப் பணியைத் தொடங்குவதற்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த எளிய தொடக்கமே காலப்போக்கில் வளர்ந்து, இன்று பல உயிர்களைக் காக்கும் பரந்த மருத்துவச் சேவையாக மலர்ந்துள்ளது.

அன்னை எலிஸ்வாவின் கனவுகளின் பயனாக இன்று எங்கள் சபையில் மொத்தம் 50 மருத்துவத் துறைகள் (Medical Departments) செயல்பட்டு வருகின்றன. இதில் மருத்துவமனைகள், மருந்தகங்கள் (Dispensaries), சுகாதார மையங்கள், மறுவாழ்வு மற்றும் மது விடுவிப்பு (De-addiction) மையங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நோய்களை மட்டுமல்லாமல், நம்பிக்கையிழந்த மனித வாழ்க்கையையும் குணப்படுத்தும் சேவையாக விளங்குகின்றன.

இந்த மருத்துவப் பணிகளில், விமலா மறைமாநிலம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இம்மறைமாநிலத்தில் செயல்பட்டு வரும் மொத்தம் எட்டு மருத்துவ மையங்கள், மருந்தகங்கள், பெரும்பாலும் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ளன. மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத இந்தப் பகுதிகளில், இந்த மையங்கள் பல மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ள உயிருள்ள சேவை மையங்களாகத் திகழ்கின்றன.

என் மருத்துவப் பணி

என் வாழ்க்கையில் மருத்துவப் பணியில் ஈடுபடுவது ஒரு பெரும் அருள்பேறாக நான் உணர்கிறேன். குறிப்பாக, மதுப்பழக்கத்திலிருந்து விடுவிக்கும் மறுவாழ்வு (Rehabilitation / De-addiction) பணியில் ஈடுபடுவதன் மூலம், பல மனிதர்களின் வாழ்க்கை முழுமையாக மாற்றம் பெற்றதை நான் நேரில் கண்டுள்ளேன். மதுப்பழக்கம் காரணமாகச் சிதைந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதும், நம்பிக்கையிழந்தவர்கள் புதிய பாதையில், மகிழ்ச்சியான மற்றும் பொறுப்புள்ள வாழ்க்கையை வாழத் தொடங்குவதும் இந்தப் பணியின் உயிருள்ள சாட்சிகளாக உள்ளன.

news
சிறப்புக்கட்டுரை
பெண்களில் வீரம் விதைத்த அன்னை

கல்வி என்பது மனிதனை அறிவாளியாகவும் நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும் வளர்க்கும் ஒரு சமூக அமைப்பு. கல்விப் பணியில் ஏழை எளியோர் நலன்பெற எண்ணற்ற சபைகள் இந்தியாவில் கால்பதித்து, கல்விப் பணி ஆற்றினாலும் 19-ஆம் நூற்றாண்டில் தனது 20-ஆம் வயதில் ஒன்றரை மாதக் குழந்தையுடன்  தன் வாழ்விலும், செப வாழ்விலும், ஆழ்தியானத்திலும் தன்னையே முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணித்து, துறவு வாழ்வு வாழப் பல முயற்சிகளை முன்னெடுத்து, கேரளாவில் பெண்களுக்கான துறவு மடத்தினைத் தனது சகோதரி தெரேசியா மற்றும் மகள் அன்னா ஆகியோருடன் 1866-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் நாள் அன்னை அருளாளர்  எலிஸ்வாவால் துவங்கப்பட்டதுபாதுகை அணியா மூன்றாம் நிலை கார்மல் சபை.’ இச்சபையே கேரளாவில் பெண்களுக்காக நிறுவப்பட்ட முதல் சபை.

சிறு பருவத்தில்களரி  என்று அழைக்கப்படும் திண்ணைப் பள்ளி பள்ளியிலும், தனது சொந்த முயற்சியினாலும் தன் சகோதரர்களின் வழிபெற்ற கல்வியினை உலகினர் காணச் செய்ய மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க முடியாத பெண்களின் நிலையினை உணர்ந்து, விளிம்பு நிலைப் பெண்கள் வெளிச்சம் பெறவிழி இழந்தோருக்கு  வழியாக, ஒளி இழந்தோருக்கு வாழ்வில் ஒளியேற்ற 1868,  ஜூலை 20 அன்று  கேரளாவில் கூனமாவு என்ற இடத்தில் பெண்கள் கல்வி அறிவு பெற, வீர மங்கையர்களாய் வாழ்வில் வளம்பெறத் தொடங்கப்பட்டதே  கேரளாவில் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடம். தொடர்ந்து பல பள்ளிகளை நிறுவினார் அன்னை எலிஸ்வா.

பார் போற்றும் நிலையில் பார்ப்போர்  வியக்க 1400 சகோதரிகளையும், 220 இல்லங்களையும் 11 மறைமாநிலங்களாகக் கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு எல்லையில்லா வழி பல வகுத்து, திறம்படக் கல்வியில்  வீரமங்கையர்களைக் காணப் பணியாற்றி வருகிறது எம் சபை.

எம் நிறுவனங்களில் கல்வி பயின்று, சமூக வாழ்விலும் சீர்பெற்று, பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்குகின்றனர்  என்று கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட எண்ணற்ற பணிகளை எம் சபை முன்னெடுத்திருக்கிறது.

பள்ளிக் கல்வியாக இருக்கலாம்; எதிர்நோக்கிய கல்வியாக இருக்கலாம்; சேமிக்கக்கூடிய கல்வியாக இருக்கலாம்; உடல் நலத்தைப் பாதுகாக்கக்கூடிய கல்வியாக இருக்கலாம். ஒட்டுமொத்த ஆளுமையிலும் வளர்ந்து வாழ்வாய் வாழ்ந்திட வழித்தடம் பதிக்கின்றது எம் சபை.

பெண்களுக்கான பள்ளிக்கூடமும், பெண்களுக்கான கல்லூரிகளும், பெண்களுக்கான மருத்துவமனைகளும், பெண்களுக்கான விடுதிகளும் அமைத்து எண்ணற்றப் பெண் குழந்தைகள் ஏட்டுக்கல்வி பெற்று, அதன் மூலம் வாழ்க்கையில் கல்வியில் சிறந்து, சமூக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்திட வழிகாட்டியாய்த் திகழ்கிறது எம் சபை!

வளர்க எம் சபையின் கல்விப்பணி!

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வா: ஆழ்மனச் செபத்தின் அருள்கனி!

ஆழ்மனச் செப அனுபவம் என்பது ஆண்டவருக்கும் தூய ஆவியாருக்கும் முழுமையாக, திறந்த மனத்துடன் இருத்தலாகும். வாழ்வின் ஒவ்வோர் அனுபவத்திலும் நிகழ்விலும் இறைவனின் உடனிருப்பை உணர்தலும், அனைத்திலும் இறைவனைக் காணும் உளக்கண்களைப் பெறுதலும் இதன் மையப்பொருளாகும். இவ்வாறு இறைவனுக்குத் தொடர்ந்து திறந்த மனநிலையில் வாழ்ந்ததுதான் அன்னை எலிஸ்வாவின் ஆளுமையின் மிக முக்கியமான பண்பாக விளங்கியது.

திருமணம்தாய்மை, விதவையாதல் என வாழ்வில் நிகழ்ந்த எல்லா நிலைகளிலும் அந்த மனநிலையை அவர் கலையாமல் காத்தார். ஒரு மனைவி, தாய் மற்றும் விதவை என்ற நிலைகளுக்குரிய அனைத்துக் கடமைகளையும் கடுகளவும் பிறழாது நிறைவேற்றினார். அதேசமயம், இறைப்பிரசன்னத்தை எப்போதும் உணரவும், தன் இறையனுபவத்தை மேலும் ஆழப்படுத்தவும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். தன் வாழ்வில் ஏதோ ஓர் உயர்ந்த, அர்த்தமுள்ள செயலைச் செய்யவேண்டும் என்ற உள் அழுத்தம் எப்போதும் அவரது உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

நாம் நமது அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றாற்போல் எல்லாச் செயல்களையும் செய்து வந்தாலும், இன்னும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதை உணர்த்தும் ஒரு வலி என் உள்ளத்தில் இருக்கிறதுஎன்று அவர் தன் சகோதரர் அருள்திரு. லூயிஸ் OCD அவர்களிடம் கூறிய வார்த்தைகள் இதற்குச் சான்றாகின்றன.

கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள் (உரோ 8:14) என்ற இறைவாக்கிற்கேற்ப, அன்னை எலிஸ்வா தனிப்பட்ட முறையில் இறைத்தூண்டுதலுக்குத் திறந்த மனத்துடன் செவிமடுத்தார். ஆழ்ந்த நம்பிக்கை, ஆழமான தாழ்ச்சி, பற்றற்ற நிலை, தைரியமான மனப்பான்மை ஆகிய நற்குணங்கள் அவரை ஒரு வித்தியாசமான, ஒளிரும் பெண்மணியாக மாற்றின.

தாழ்ச்சியில் தூய ஆவியாருக்கு முழுமையாகப் பணிந்திருந்ததால், தன் உள்ளத்தில் உண்மை மற்றும் நேர்மையின் மூல காரணத்தைத் தேடும் ஆன்மிகப் பயணத்தில் அவர் ஈடுபட்டார். கார்மல் ஆன்மிகத்தின் மையக் கருப்பொருளான ஆழ்மன செபம் அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் இளம் வயதிலிருந்தே இடம்பிடித்திருந்தது. தொல்லைகளுக்குத் துணை போகும் தேவையற்ற பேச்சுகளை அவர் தயக்கமின்றித் தவிர்த்து வந்தார். உள்மன அமைதியும், ஒப்பற்ற தனிமையும் ஆன்மிக உயர்வுக்கு அழைத்துச் செல்லும் சிறந்த வழி என அன்னை உறுதியாக நம்பினார்.

என் முன் பழுதின்றி உன்னைக் காத்துக்கொள்வேன்; உன்னைப் பெரும் குலமாகப் பெருகச் செய்வேன்என்ற இறைவாக்குறுதிக்கேற்ப மண்ணின் ஆசைகளை மனத்திலிருந்து நீக்கி, விண்ணின் ஆசையில் விருப்பம் கொண்டு வாழ்தலே ஆழ்மன செபத்தின் அடித்தளம் என அவர் போதித்தார்.

இறைச் சேவைக்கு ஆன்மாவை முழுமையாக அர்ப்பணித்தால், தேவையான ஆறுதல்கள் அனைத்தும் அவரிடமிருந்தே கிடைக்கும் என்ற அசையா நம்பிக்கை அன்னையிடம் இருந்தது.

ஆகவே, செபத்தில் நிறைவும், பணியில் பணிவும், உதட்டில் உண்மையும், இதயத்தில் குழந்தைத் தன்மையும், நல்லதையே பேசும் மனநிலையும் நம்மில் இருந்தால், நாம் உண்மையில் அன்னை எலிஸ்வாவின் அன்புக் குழந்தைகளாக வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வா கேரளாவின் முதல் பெண் துறவி!

துன்ப துயரங்கள் இல்லாத கிறித்தவ வாழ்வைத் தேடுகிறது இன்றைய உலகம். இத்தகையோருக்குச் சவாலாக, தூய உதாரணமாக கேரளாவில் மலர்ந்து நறுமணம் வீசும் துறவியாக வலம் வந்து, எம் கார்மல் தோட்டத்தை அலங்கரித்தவர்தான் எம் சபை நிறுவுநர் அன்னை எலிஸ்வா.

கேரள மண்ணில் மலர்ந்த தூய மலர்

ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று தளிர்விடும். அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனி தரும் (எசாயா 11:1).

கேரள மாநிலத்தில் ஓச்சன்துருத்துவிலுள்ள குருஸ்மிலாகிரிஸ் பங்கில் தொம்மன் மற்றும் தாண்டா என்பவர்களுக்கு 15.10.1831-இல் பக்தியுள்ள குடும்பத்தில் எட்டு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர்தான் அன்னை எலிஸ்வா. ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்என்பதற்கிணங்க சிறுவயதிலேயே பக்தி முயற்சிகள், ஏழை எளியோருக்குச் செய்யும் சேவை ஆகியவற்றில் மகிழ்ச்சி கண்டார்.

துறவறப் பயணத்திற்குள் புனித நிலை

சிறுபிள்ளைகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கேரளாவில் இருந்த சூழ்நிலையில் பிறரன்பு, தன்னடக்கம், இரக்கம் ஆகிய போற்றுதற்குரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் ஏழைகளில் இயேசுவைக் கண்டு அவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்பெற்றோரின் விருப்பத்தால் இல்லற வாழ்வில் இணைந்து அழகான பெண் குழந்தையை ஆண்டவர் வழங்க தன்னுடைய வாழ்க்கைத் துணையின் பிரிவால் துறவறப் பயணம் மேற்கொண்டார். செபம், அமைதி மற்றும் தனிமையில்நிலையிலா இன்பம் கண்டேன், நிலத்திடை எதுவும் வேண்டேன், நலமெல்லாம் நல்கும் இயேசு நாதனுக்குரிமை நானே, என்பது இத்துறவியின் அசையாத அன்பு நிலை.

எதிர்கால நலனைக் கொண்டு துறவற வாழ்வு

துறவற வாழ்வு என்பது மகிழ்ச்சியின் பயணம் அல்ல; 19-ஆம் நூற்றாண்டில் கேரளத் திரு அவையின் அவசரத் தேவையாக இருந்த பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதநேயம் மற்றும் பற்றின்மை ஆகியவற்றைக் கண்முன் கொண்டு எல்லாவற்றையும் கடவுளுக்காக விட்டுவிட்டு, பல மடங்கு கடவுளிடமிருந்து பெற்று கடவுளின் பராமரிப்பினால் TOCD இலத்தீன் கிளையின் வளர்ச்சியை, தூய தெரசாவின் கார்மல் சபை (CTC) என்ற பெயரில் தொடர்கிறது.

அன்று கேரள மண்ணில் மலர்ந்து மணம் வீசிய துறவியின் புனித வாழ்வு எம் CTC தெரேசாவின் கார்மல் சபை துறவிகளுக்குப் பாதை காட்டும் கலங்கரை விளக்கு என்பது உண்மை. அதிலும், எம் விமலா மறைமாநிலத் துறவிகளுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஊட்டுகிறது (மத் 7:24). நல்ல சமாரியனைப் போல் இயேசுவைப் பின்பற்ற ஆற்றல் அளிக்கிறது. இம்மனநிலையில் இயேசுவைப் பின்பற்ற விரைந்து வருவோம், நம் தமிழ் மண்ணில் புனிதம் மலரட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
அன்னை எலிஸ்வாவின் தனிச்சிறப்புகள்

அன்பென்னும் மழையில் மலர்ந்தவர்!

கருணை மணம் வீசும் தாய்மையின் இசை அவர்!

பெண்களின் வாழ்வில் ஒளியாய் நின்று,

வீழ்ந்த மனங்களுக்கு விடியலைத் தந்து,

மௌன சேவையில் மகத்துவம் காட்டி,

சுயநலமற்ற சேவையை அவள் சுவாசமாக,

வார்த்தையினால் அல்ல; தன் வாழ்க்கையினால்

பிரதிபலித்தவர்தான் நம் அன்னை எலிஸ்வா!

சிரிப்பில் சாந்தம், செயலில் தியாகம்,

ஒவ்வோர் அடியிலும் மனிதநேய இராகத்தை

இசைத்த அன்னையின் தனிச்சிறப்புகள் இதோ...

செப வாழ்வு: செபம் நம் அன்னையின் வாழ்வின் உயிர்மூச்சாக இருந்தது. துன்பங்கள் அன்னையை விடாது துரத்திய தருணத்திலும், கடினமான சூழல்கள் அன்னையைச் சூழ்ந்திட்ட வேளையிலும் அன்னை எலிஸ்வா தன் சொந்த அறிவில் நாட்டம் கொள்ளவில்லை; மாறாக, சிறு குழந்தைபோல் இறைவன் முன் தவழ்ந்து, செபத்தின் மூலம் இறைவனிடமிருந்து சக்தியையும் மன வலிமையையும் பெற்று, சோதனைகளைச் சாதனைகளாகவும், தடைக்கற்களைப் படிக்கற்களாகவும் மாற்றினார்.

தாழ்ச்சி: தாழ்ச்சியே அன்னை எலிஸ்வாவின் வாழ்வில் முக்கிய எழுச்சி. சபையின் தோற்றுவிப்பாளர், பல உயர்ந்த பணிகள் மற்றும் பல சவால்கள் இருந்த பொழுதிலும், அவர் எப்போதும் தன்னைச் சிறியவர் எனக் கருதி, பிறரின் தேவைகளை முதன்மையாகக் கருதினார். இவ்வுலகப் புகழும் பெருமையும் வெறும் மாயையே என்பதை இறைஞானத்தால் அன்றே உணர்ந்து, மறுவுலக வாழ்வு ஒன்றே தனது இலக்கு என்பதில் கவனத்தைச் செலுத்தி, தாழ்மையான உள்ளத்தோடு வாழ்ந்தார்.

அன்பும் கருணையும்: குழந்தைப் பருவம் முதல் பெறுவதில் அல்ல, கொடுப்பதில் இன்பம் கண்டவர் அன்னை எலிஸ்வா. ஏழைகளுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல், நோயாளிகளை அரவணைத்துச் சேவை செய்தல், ஒதுக்கப்பட்டவர்களிடம் நல்லன்புடன் உறவாடுதல் எனத் தனது சக அருள்சகோதரிகளின் நலனில் முழுமையான அக்கறை காட்டினார். குறிப்பாக, பெண் கல்விக்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் எடுத்த பல முயற்சிகள். இவை யாவும் அன்னையின் அன்பினையும் கருணையையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

மனவுறுதி மற்றும் பொறுமை: சவால்களும் போராட்டங்களும் சூறாவளியாய்த் தன்னைப் புரட்டிப்போட்ட நேரத்திலும் அன்னை எந்தவொரு பயமும் படபடப்பும் இன்றி, மனம் தளராமல் பொறுமையுடன் அமைதியாகச் செயல்பட்டார். புரியாத சூழ்நிலைகளிலும் எதிர்ப்புகளிலும் குறிப்பாக, காலத்தின் சூழ்நிலையால் தனது சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நேரத்திலும் அவர் உறுதியுடன் இந்நாள்வரை வழிநடத்திய இறைவன் இனிவரும் நாள்களிலும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் வீறுநடை கொண்டு பயணித்து, பலருக்கு வாழும் சாட்சியாகத் திகழ்ந்தார்.

சமூகச் சேவை: ஏழைகளிடம் அன்பு, நோயாளிகளிடம்  நேசம், புறக்கணிக்கப்பட்டவர்களிடம் பாசம், பெண் கல்வி இவை யாவும் இவரது அன்பின் ஆழமான வெளிப்பாடாக இருந்தது. ‘அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு?’ என்ற காலகட்டத்தில் பெண்களுக்குக் கல்வி வழங்கியது இவரது சமூகச் சேவையின் உச்சக்கட்டம். ஆம், கேரளாவில் முதன் முதலாகப் பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட துறவற சபையின் முதல் தோற்றுவிப்பாளர் அன்னை எலிஸ்வா. மேலும், அன்னை எலிசுவா கேரளத் திரு அவை வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறார். இவரது வாழ்க்கை இன்றும் கிறித்தவர்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இறைவனிடம் அன்னை எலிஸ்வா வழியாக மன்றாட்டுகளை எழுப்பிய பலர் மகிழ்வுடன் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதை எண்ணி மகிழ்ந்து சாட்சி சொல்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவேதான் நம் தாயாம் திரு அவை நம் அன்னை எலிஸ்வாவைஅருளாளர்நிலைக்கு உயர்த்திப் பெருமைப்படுத்தியுள்ளது.  

news
சிறப்புக்கட்டுரை
கார்மலின் தனிச்சிறப்பு

கார்மல் மலைத்தோட்டம்

கார்மல் என்பது திருவிவிலியக் கூற்றுப்படி எலியா இறைவாக்கினர் இறைவனைச் சந்தித்த புனிதமிகு சிறப்புமிக்க இடமாகும். இறைவனின் திராட்சைத் தோட்டம் என்றும், கார்மல் அன்னையின் பாதுகாப்பை உணர்த்தும் இடம் என்றும் கூறப்படுகிறது, வனவாசம் செய்தவர்கள் வணங்கி வாழ்ந்த இடம் என்றும், உண்மைக் கடவுளை மக்களுக்கு உணர்த்திய உன்னதமான உயர்ந்த இடம் என்றும், இறையன்பில் பற்றி எரிந்து, இறைவனுக்காகக் காத்திருந்த புனித எலியா இறைவனைச் சந்தித்த இடம் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மிகச் சிறப்பு

12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் இறையன்பால் பற்றியெரிந்து மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த துறவிகள் ஒன்றுகூடி தியானம், இறைவேண்டல், தனிமையில் இறையன்பில் இணைந்திருத்தல், ஆழ்ந்த அமைதியான சூழலில் இறைவனோடு  இணைந்திருத்தல், இவற்றிற்காகக் கார்மல் அன்னையின் பாதுகாப்பில் குழுவாக இணைந்து வாழ்ந்த சிறப்புமிக்க ஆன்மிகத் தொட்டிலே கார்மல்!

உத்தரியம்

கார்மல் சபையினர்  துன்பப்படுத்தப்பட்டபோது புனித சைமன் ஸ்டாக்  என்பவர் பாதுகாப்பு வேண்டி அன்னையை அணுகி வந்தபோது 1251, ஜூலை 16 அன்று உத்தரியத்தை அளித்து வாக்குறுதி அளித்தார் அன்னை மரியா.

உத்தரியத்தின் சிறப்பம்சம்

இந்த உத்தரியத்தை அணிபவர் எவரும் அழியா நெருப்பில் இருந்து காக்கப்படுவர்.

அகால மரணம் அடையமாட்டார்.

பேயின் பிடியும் பாவச் சூழலும் அகலும்.

எந்த ஆபத்திலும் பாதுகாப்புக் கேடயமாக அமையும்.

இறைப்பக்தியில் வாழ வழிகாட்டும்.

இறுதியில் அவர்கள் நல்ல மரணம் அடைவர் என்பது உத்தரியம் அணிவோருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி.

கார்மல் அன்னை

கார்மல் மலையில் காட்சி தந்த அன்னையின் பெயரில் விளங்கும் துறவற சபைகள் அன்னையை இராணியாக, பாதுகாப்புப் பெட்டகமாக, இறையன்பிலும் செப-தவ வாழ்விலும் வழிகாட்டி வழிநடத்தும் அன்னையாகக் கொண்டுள்ளனர். புண்ணியங்களின் சிகரமாம் கார்மலில் தோன்றிய அன்னையின் பரிந்துரையால் உண்மையான கிறித்தவ வாழ்வும், பாவங்களுக்கு மன்னிப்பும், விண்ணகப் பேரின்பமும் அளிக்கவல்ல துன்பங்களில் அரவணைக்கும் அன்னை! தூயோராய் வாழ வழிநடத்தும் அன்னை!

கார்மல் சபையின் தனிச்சிறப்பு

ஆழ்நிலை தியானம், தவம், செபம் இவற்றிற்கு முதலிடமும், அதிலிருந்து உருவாகும் இறையன்பால் உந்தப்பட்டு பிறரன்புப் பணிக்குத் தங்களை இட்டுச் செல்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதும் இன்றுவரை மக்களின்  நம்பிக்கை. இதுவே கார்மலின்  தனிச்சிறப்புநாமும் இவ்வன்னையின் பாதுகாப்பில், அரவணைப்பில், வழிகாட்டலில், வழிநடத்துதலில் நம்மையும் இணைப்போம். அன்னையின் அருள்வரங்களால் நம்மை நிரப்புவோம்.