news
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துவின் மதிப்பீடுகளில் லெவே அடிகளாரின் புனிதம்!

மனித வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த லெவே அடிகளாரின் வாழ்வில் புனிதம் மிளிர்கின்றது. அவரது வாழ்க்கை ‘அன்பும் சேவையும் என்ற இரண்டு தூண்கள் மேல் தழைத்து நின்றது. அடிகளார் கிறிஸ்துவின் போதனையை உள்வாங்கி, தன்னை ‘ஒடுக்கப்பட்டோரின் தோழன் எனக் கருதி வாழ்ந்தார். சமத்துவம், அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றையே உயர்ந்த மதிப்பீடாகக் கொண்டார்.

சொல்லில் வலிமை, செயலில் மேன்மை

லெவே அடிகள் சொல்வது போலவே செயலிலும் மேன்மை விளங்கும். சொல்லால் மட்டுமல்ல; தன் தியாகத்திலும் அவரின் புனிதம் வெளிப்பட்டது. அவர், தான் கடவுளின் கருவி என்றே வாழ்ந்தவர்; கடமையைத் தியாகமாக மாற்றியவர். தான் பார்த்த ஒவ்வோர் ஏழையிலும் இயேசுவின் திருமுகத்தைக் கண்டவர். பசியோ, நோயோ, துயரோ அனைத்தும் தந்தை அவர்களுக்கு இறைவனின் அழைப்புப் போல இருந்தது. ஏழைகளோடு பேசுவதால் மட்டுமல்ல; அவர்களின் துயரைத் தன் தோளில் சுமந்ததால் அவரின் சேவை ஒரு புனித மொழியாக மாறியது.

தந்தை லெவே மக்களிடம் பெறுவதில் இல்லை; கொடுப்பதில் மகிழ்ச்சி கண்டார். சிறு உதவியிலும் கூட மிகுந்த மகிழ்ச்சி பெற்றார். ஒரு பசியாளன் வயிறு நிறைந்தால், ஒரு குழந்தை எழுத்து கற்றால், ஒரு நோயாளன் குணமானால் அத்தகைய மகிழ்ச்சி அவருடைய கண்களை ஒளிர வைத்தது. யாருக்கும் தெரியாமல் உதவி செய்யும் பண்புள்ளவர். ஏழை ஒருவர் துன்புற்றால் அது அவருக்குப் பெரிய அழைப்பு.  யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கும் பண்பு அவரிடம் இல்லை. அதுபோல் அவர் செய்த உதவிக்கு எங்கும் அவர் பெயர் எழுதப்படவில்லை. ஆனால், சென்ற பங்குகளில் மக்களின் வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருந்தது.

அன்பில் மலர்ந்த ஆன்மிகம்

தந்தை லெவேயின் வாழ்க்கையின் மிகப்பெரிய சக்தி சொல்லிலும் இறைவேண்டலிலும் தளராத நம்பிக்கையிலும்தான் இருந்தது. எந்த ஒரு செயலுக்கு முன்னும் இறைவேண்டல் என்பதே வாழ்வானது.  அவருக்குச் செபமே சுவாசமாயிருந்தது; அதுவே மக்களுக்கு வாசமாயிருந்தது. லெவே தந்தையில் இறைத்தந்தையின், இயேசுவின், தூய ஆவியாரின் உடனிருப்பு ஒளிர்ந்ததால், இறைவனை முழுமையாக நம்பியதால் மனித முயற்சியைத் தாண்டி அற்புதங்களை நிகழ்த்தும் சக்தியைக் கொண்டிருந்தார். அவருடைய செபம் காயங்களை ஆற்றும் மருந்தாயிற்று. குறிப்பாக, 1920-ஆம் ஆண்டில் காலரா கொள்ளைநோய் தாக்கியபோது நோயுற்ற பிள்ளைகளைப் பெற்றோரும், தொற்றுப் பற்றிக்கொண்டோரை அவர்களது உறவினர்களும் கைவிட்டு ஓடிப்போனபோது, லெவே அடிகள் ஊரிலேயே தங்கி நோயாளிகளைப் பராமரித்து, உதவிகள் செய்தும், இறந்தோரை நல்லடக்கம் செய்தும் அருந்தொண்டாற்றினார்.

 தந்தை லெவே விவசாயிகளின் தோழன். கால்நடைகள், ஆடு மாடுகள் நோயுற்றபோது அவர்கள் தந்தையிடம் ஓட்டிவர, அவர் செபம் செய்து புனித நீரை ஊற்றிட, கால்நடைகளின் நோய் நீங்கியன. ஒருமுறை மழையில்லாமல் பயிர்கள் கருகிட, தந்தை நடுப்பகலில் சுட்டெரிக்கும் தரையில் முழந்தாளிட்டு நீண்ட நேரம் கைகளை விரித்து வானை நோக்கிச் செபம் செய்ய, மக்கள் வியக்கும் வண்ணம் பெருமழை பெய்தது.  விவசாயிகளின் பயிர்களைப் பூச்சிகள் நாசம் செய்யும்போது தந்தையிடம் வர, பனை ஓலையில் செபத்தை எழுதி அதை வயலின் நடுவில் ஒரு சிலுவையைக் கம்பில் கட்டி வைக்கச் சொல்வார். தந்தை மந்தரித்துக் கொடுத்த தீர்த்தத்தை வயலில் தெளிக்கப் பூச்சிகள் ஒழிந்து போனது, விவசாயம் நல்ல பலனைத் தந்தது.

லெவே அடிகளாரின் உள்ளம் எப்போதும் குறைவுகளைக் காணாதது. அவர் பார்த்த ஒவ்வொரு மனிதரிடமும் நல்லதையே கண்டவர். ஒருவர் எவ்வளவு எளியவராக இருந்தாலும், எவ்வளவு வறுமையில் இருந்தாலும், எத்தனை குறைகளுடன் வாழ்ந்தாலும், அவர்களிடம் இருக்கும் சிறு நம்பிக்கையையே அவர் பெரிதாகக் கண்டார்.

அவரின் அளவில்லாக் கருணை புரிதல் அன்பு! எவரைக் கண்டாலும் அவர்களை முழுமையானவர் போலவே பார்க்கும் நெறியை உருவாக்கியது. எல்லாரையும் நிறைவான படைப்பாகக் காணும் அந்தத் தூய பார்வையே அவரின் புனிதத்தை உலகிற்கு உணர்த்தியது. லெவே தந்தையின் உள்ளத்தில் பிறரின் பாதுகாப்பு என்பது ஒரு பணி அல்ல; ஒரு பொறுப்பு; ஓர் அர்ப்பணிப்பு!

அவர் இருந்த இடத்தில் யாராவது அபாயத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டால், அதை அவர் தனது வலியாக உணர்ந்தார். சருகணியில் ஒருமுறை மழைநீர் பெருகி, பள்ளிக்குச் செல்லும் சிறுமிகள் பயந்து நின்றனர். நீர் ஆறு போல ஓடியதால் பெற்றோரும் குழந்தைகளை அனுப்பத் தயங்கினர். அதை அறிந்த லெவே தந்தை, அந்தச் சாலையிலே தானே நின்றார். எதுவும் சாப்பிடாமல், மழை நனைத்தாலும் கவலைப்படாமல் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகக் கடந்து செல்லும்வரை அவர்களுடன் நடந்தார். அவரை நனைந்த உடையுடன் பார்த்த ஒரு கிராம முதியவர் கேட்டார்; “தந்தையே! இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்?” அவர் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, “அவர்கள் பாதுகாப்பாக இருந்தால், அதுவே எனக்கு உண்மையான ஆசிர்வாதம்.” இந்த நிகழ்வு கிராமத்தில் யாராலும் மறக்கமுடியாத நினைவாகி, மக்கள் அனைவரின் மனத்திலும் அவரின் கருணை பசுமரத்து ஆணியைப் போலப் பதிந்தது.

இளையோரும் பெண்ணிய மாண்பும்

லெவே அடிகள் பணியாற்றிய பகுதிகளில் இளம்பெண்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல வேண்டிய சூழல்கள் இருந்தன. அந்தப் பகுதிகளில் தெரு விளக்குகள் குறைவாக இருந்தன. சில இடங்களில் குடிபோதையில் நடமாடும் மனிதர்களும் இருந்தனர். பெண்களுக்கு இது பயத்தை உண்டாக்கும் சூழல். இந்த நிலையை மாற்றவேண்டியதை லெவே அடிகள் ஆழமாக உணர்ந்தார். பாதுகாப்பாக  அவர்கள் இரவு திரும்ப பாதை அமைத்தார். அவர் கிராமத் தலைவர்களையும், ஆலயக் குழுவினர்களையும் அழைத்து, இளம் பெண்கள் பள்ளி அல்லது தையல் பயிற்சி மையங்களில் இருந்து திரும்பும் நேரத்தில் தன்னார்வப் பாதுகாப்புக் குழு அமைத்தார். அதாவது சில நம்பகமான இளைஞர்கள் அவர்களுடன் நடந்து செல்ல ஏற்பாடு. அதற்கு லெவே அடிகள் வழிகாட்டினார்.

இளைஞர்களைப் பொறுப்புள்ளவர்களாய் வளர்த்தார். “ஒரு பெண் பயப்படாமல் நடக்க முடிகிறதா? அது உங்கள் மனிதநேயத்தின் அளவு என்று அவர் இளைஞர்களிடம் அடிக்கடிக் கூறுவார். இதனால் அந்தக் கிராமத்தில் இளைஞர்கள் பெண்களை மதிக்கும் மனப்பான்மை வலுவடைந்தது.

மனிதரை மனிதராகப் பார்க்கின்ற, மதிக்கின்ற மகத்துவத்தில்தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும். மற்றவர்களின் குறைகளைப் பொறுத்துக்கொள்ளும் கருணை; துயரிலும் கூட மனம் தளராமல் நிற்கச் செய்யும் நம்பிக்கை இவை அனைத்தும் மனித முயற்சியால் மட்டுமல்ல, இறைவன் தரும் உள்ளார்ந்த அமைதி என்பதால்தான் வருகிறது.

மனிதரை மதிக்கும் மனமே, உண்மையான இறை அறிவு. ஒருவன் யார் என்பதைப் பார்த்து அல்ல; இவன் இறைவனின் படைப்பே என்பதால் தந்தை லெவே அனைவரையும் மதித்தார். இதுதான் ஆன்மிகத்தின் உச்சம். பொறுமை மனிதனின் மனத்தைத் தெய்வீகமாக்கும்; கனிவு அவரது உள்ளத்தை ஒளியாக்கும். மற்றவரை மதிக்கும் பண்பு அவரது வாழ்க்கையை இறைவனின் சாயலாக்கியது. தந்தை லெவே வாழ்வில் கிறிஸ்துவின் இதயத்துடிப்புடன், கிறிஸ்துவின் கண்களால் உலகைப் பார்த்தார். இதற்கு அவரின் வாழ்க்கையே ஒரு சாட்சி.

மக்களை நேசித்த மகான் - மனித மனங்களில் என்றுமே வாசம்

மக்களை நேசித்த தந்தை லெவேயின் வாழ்க்கை மரணத்தால் முடிவடையாது. அவர் உடல் மண்ணில் கலந்தாலும், அவர் செய்த எண்ணற்ற நன்மைகளால் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவலைகளாய் வலம் வருகிறார். அன்பு கொண்டவரின் வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கொண்டு, அவர் விதைத்த அன்பினால் ஒவ்வொரு நெஞ்சிலும் ஓர் உயிராகவே தொடர்ந்து வாழ்கிறார். செய்த சேவையை மரணம் அழிக்காது, அழிக்க முடியாது. நோயாளிகளுக்கு மருந்தாகவும், ஏழைகளுக்கு முதல் நம்பிக்கையாகவும், கல்வியில்லாக் குழந்தைக்குத் தூண்டுதலாகவும் வாழ்ந்தவர். ஒருவர் தன் உயிரை மட்டும் இழக்கிறார்; ஆனால், அவர்தம் அன்பு பல ஆயிரக்கணக்கான உள்ளங்களில் பதிந்து விடுகிறது. நினைவாக அல்ல விளக்காக வாழ்கிறார். ‘அவர் இன்றும் நம்மோடு உள்ளார் என்று உணர்கிறார்கள். காரணம் அவர் காட்டிய மனிதநேயம் அவர்களை, அவர்களின் வாழ்வை மாற்றத் துண்டுகிறது.

சிறந்த வாழ்க்கை மரணத்தை வெல்லும். தந்தை வாழ்வில் தூய்மை, தியாகம், கருணை இவையனைத்தும் காலத்தால் அழிக்கப்படாத அடையாளங்கள். மண்ணில் கலந்த உடல் மட்டும் மறைந்து போகும். ஆனால், மனிதர்களின் இதயங்களில் அவர் நிலையாக வாழ்கிறார். அவரின் ஆன்மாவின் ஒளி எண்ணற்ற மனங்களில் தினமும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

லெவே அடிகளின் வாழ்க்கை என்பது ஒரு மனிதனின் பயணம் அல்ல; ஓர் ஒளியின் பிறப்பு. பேச்சைவிட செயலின் மேன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஏழைகள் தன் மக்கள் என்று எண்ணி அவர்களின் நெஞ்சில் இறைவனைக் கண்டவர். யாரும் பார்க்காத இடத்தில் உதவிபுரிந்து, யாரும் கேட்காதபோதும் செபித்து, யாரும் துணை நின்றிடா நேரங்களில் ஆதரவாக நின்ற புனித ஆன்மா. பொறுமை, கனிவு, கருணை, அன்பு இவை அனைத்தையும் கலந்த ஒளிமிகு செயல்களால் மண்ணில் மாய்ந்தாலும் மக்களின் மனங்களில் மறையாத மகான் அவர்! அன்பை விதைத்து மனிதனை உயர்த்திய லெவே அடிகள் தன் வாழ்வால் அதைக் கற்றுக் கொடுத்தார்.

இறைவனைக் காணவேண்டுமெனில் மனிதனை நேசிக்கவேண்டும் என்ற அவரின் செம்மையான சேவையின் ஒளி இன்றும் எண்ணற்ற உள்ளங்களில் வழிகாட்டும் தீபமாகத் தொடர்ந்து எரிகிறது. தந்தை லெவே அவர்களின் தாரக மந்திரம், “இயேசுவே அன்பின் அரசே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்.” இதையே அவர் தானும் செபிப்பதோடு மற்றவர்களையும் இச்செபத்தைச் சொல்லி இறை எழுப்புதல் செய்வார்.

லெவே அடிகள் ஒரு கிறித்தவத் துறவியாக மட்டுமல்ல; ஒரு மனிதநேயப் புனிதராக வாழ்ந்தவர். அவர் செய்த கல்வி சேவை, மீனவர் நலப்பணி, சமத்துவப் போராட்டம் ஆகியவை இன்றும் சமூகத்தில் நம்பிக்கை விதையாக உள்ளது. தந்தை லெவே அவரின் வாழ்விலிருந்து அன்புடன் பணிபுரியவும், நல்லெண்ணத்துடன், வாழவும்  ஒடுக்கப்பட்டோருக்குக் குரல் கொடுக்கவும் கற்றுக் கொள்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
தொடர் பார்வை பெரும் போதை! (வலையும் வாழ்வும் – 41)

அன்று ஊரே பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையென்றாலும், கிழடு கட்டைகளுக்கு அன்று அலுவல் நாள்.

ஏதோ கட்சி மாநாடாம்! நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம். திண்ணையில உக்காந்து விட்டத்தை அண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்கிறதுக்குப் போயிட்டுதான் வாயேன்.”

சுந்தரியின் குடைச்சலைக் காதில் போட்டுக் கொண்டாலும், வாயில் போட்டிருந்த வெற்றிலையை ஐயாகண்ணு இரசித்து மென்றுகொண்டிருந்தார். நீல வானத்தில் வெள்ளைக்கோடு போட்டுக்கொண்டே பாகப்பிரிவினை செய்யும் விமானத்தைப்போல, வறுமையென்னும் சிவப்புக்கோடு சுந்தரியையும் ஐயாகண்ணுவையும் மற்றவர்களிடமிருந்து எப்போதும் பிரித்தே வைத்திருந்தது.

நல்லது கெட்டதற்குக் கூப்பிடாதவங்க கூட, இந்தக் கட்சி கூட்டத்துக்கு மட்டும் கூப்பிடுறாங்க என்று சுந்தரி ஐயாகண்ணுவிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவதுண்டு.

சேலத்துல ஏதோ கட்சிக் கூட்டமாம். பெரிய சினிமா நடிகர்களெல்லாம் வராங்களாம். வீடு வீடா அந்த ராசாத்தி மகன் அழகேசன் கூப்பாடு போட்டுட்டு இருக்கான் என்று சுந்தரி சொல்லி முடிப்பதற்கு முன்பாக, “சரி தாயே, நிறுத்து உன் ஒப்பாரியை. நான் சும்மா இருந்தா உனக்கு ஆகாதே. போய் தொலையிறேன் என்று சொல்லிக்கொண்டு காய்ந்துபோன மரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் கடைசி இலையைப்போல, கம்பிக்கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார் ஐயாகண்ணுகாரிப்பட்டி கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பெரிய வண்டி நிறைய சனங்க அந்தக் கட்சிக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லாம் அங்கு வந்திருந்த நடிகரைப் பார்த்தவுடனே முண்டியடித்துக் கொண்டு மேடையின் பக்கத்திலேயே சென்றுவிட் டனர். ஐயாகண்ணு மட்டும் அந்தப் பெருங்கூட்டத்தில், இரும்புக்கடையில் இனிப்பைத் தேடி அலையும் எறும்பைப்போலத் தனித்து விடப்பட்டிருந்தார். ஐயாகண்ணுக்குக் கொஞ்சம் காது கேட்காது வேறு. தலைவர்கள் கட்சி மேடையில் பேசியதில் பாதிகூட அவர் காதுவரை சென்று சேரவில்லை. அவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்குத் தமிழ் தெரியாதாம்; ஏதோ இந்திக்காரர்களாம். ஆடலும் பாடலும், அரசியல் பேச்சும் திரைப்பட வசனங்களும் அங்கிருந்த கூட்டத்தையே கட்டிப் போட்டிருந்தது. கூட்டம் குதூகலித்திருந்தபோது, பனை மரம் சரிவதுபோல ஐயாகண்ணு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். கட்சிக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்த ராசாத்தி மகன் அழகேசனும், அவன் கூட்டாளிகளும் வந்து சேருவதற்குள் ஐயா கண்ணுவின் உயிர் போயிருந்தது.

எத்தனையோ ஆயிரம் பேர் கூடியிருக்கும் இடத்தில், ஐயாகண்ணுவின் மரணம் ஒரு சிறு சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை; யாரையும் திரும்பியும் பார்க்க வைக்கவும் இல்லை. கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர், நடிகர்கள் பாடல் பாடி கூட்டத்தை உசுப்பிவிட்டனர். கூட்டம் ஆர்ப்பரித்தது. குதூகலத்தின் உச்சத்திற்குச் சென்று ஆடிப் பாடியது. காரியப்பட்டி கிராமத்தில் ஐயாகண்ணுவின் மனைவி சுந்தரி, ஐந்நூறு ரூபாயும் பிரியாணியும் எப்போது வீடு வரும் என்ற எண்ணத்தில், வானத்தில் காத்திருக்கும் நிலவு போலத் தூங்காது திண்ணையிலேயே காத்திருந்தாள்.

ஒரு நடிகர் அல்லது அரசியல்வாதியின்மேல் கொண்ட பற்றினால், எப்படி ஒரு பெருங்கூட்டம் அந்த மனிதரையே கடவுளாகப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறதோ, அதேபோலத் தனக்குப் பிடித்த திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடரை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதால்தான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் ஏராளமானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், நம்மைபிஞ்ச்-வாட்சிங் அறிகுறியுள்ளவர்கள் எனலாம்

பிஞ்ச்-வாட்சிங் (Binge-watching) என்பது ஒரு தொலைக்காட்சித் தொடர் அல்லது .டி.டி. தொடர்களின் எபிசோடுகளை வரிசையாகத் தொடர்ந்து பார்க்கும் செயலாகும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, ஹாட் ஸ்டார் போன்ற .டி.டி. பிளாட்பார்ம்கள் வந்தபிறகு, இந்தப் பிஞ்ச் வாட்சிங் என்றதொடர் பார்வை முறை அதிகமாகப் பேசப்படுகிறது. அன்றாட சவால்களை எதிர்கொள்ளாமல் எதார்த்த வாழ்விலிருந்து தப்பிச்செல்லவே இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். அதற்கு ஒரு வடிகாலாக இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கைப் பயன்படுத்துகின்றனர். மிகவும் விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் தொடங்குகின்ற இந்த இடைவிடாத தொடர் பார்வை மெதுவாக அடிக்சனாக, போதையாக மாற வாய்ப்பிருக்கின்றது என்கின்றனர் அறிஞர்கள்.

அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் ஹாசியாபாத் என்னும் இடத்தில், மூன்று சிறார்கள் அவர்களின் பெற்றோர் அவர்களைக்கொரியன் தொடர்கள் பார்க்க அனுமதிக்காததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர்கள் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இணையவழி தொடர்களின் ஒவ்வோர் எபிசோட் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் (Cliffhanger) வைப்பார்கள். அதனால் நாம் நினைத்தாலும் நம்மால் நிறுத்த முடிவதில்லை. இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கின் தீவிரத்தன்மை என்பது உறவுகளிடமிருந்து அல்லது உறவினர்களிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துகின்றது. தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளை வருவிக்கின்றது.

யூடியூப் அல்லது நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே தொடங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே நம்மைத் தூங்கவிடாமல் பார்க்க வைக்கும் முக்கியக் காரணம். எனவே, செட்டிங்ஸில் (Settings) சென்றுAutoplay next video என்ற வசதியை நிறுத்தம் செய்யவும்.

மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைலைத் தூரமாக வைப்பது (Digital Detox) மிகவும் நல்லது. ‘இன்னும் ஒரே ஒரு எபிசோட் மட்டும் என்று சொல்லிக்கொண்டே இரவு முழுவதும் பார்ப்பதைத் தவிர்க்க சுய கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

சிறார்கள் இத்தகையபிஞ்ச் வாட்சிங்குக்குப் பழகிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்களைப் பெற்றோர் அன்புள்ளத்தோடு ஆற்றுப்படுத்தி வழிநடத்திடவேண்டும். பிஞ்ச் வாட்சிங்குக்கு மாற்றான படைப்பாற்றலோடு கூடிய செயல் பாட்டிற்குச் சிறார்களை ஊக்குவிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

news
சிறப்புக்கட்டுரை
தலையாட்டி பொம்மையும்! விளையாட்டுப் பிள்ளைகளும்!

தேர்தல் அரசியலில்கூட்டணி  என்பதே வெற்றிக்கான அடிப்படைச் சூத்திரம். எந்தக் கட்சி பிற கட்சிகளைக் கவர்கிறதோ, அந்தத் தலைமைக் கட்சி அமைக்கிற கூட்டணியே வெற்றிபெறும். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் பெரும் முடிச்சு; இடியாப்பச் சிக்கல்; தீர்க்க முடியாத பெரும் பிரச்சினை. புதிதாய்ப் பிறந்த குழந்தையான .வெ.., ஆடி மாத ஜவுளிக்கடை தள்ளுபடி போல,  ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குஎனக் கூவி அழைத்தது. ‘கடை விரித்தேன், கொள்வாரில்லைஎன்பதைப்போல .வெ.. தமிழ்நாடு தேர்தல் களத்தில் தற்போது தனித்து நிற்கிறது.

முன்னொரு காலத்தில் இயக்குநர் எஸ்.. சந்திரசேகர், தனது மகன் விஜய் அரசியலில் ஈடுபட இரசிகர் மன்றங்களை வலுவாகக் கட்டமைத்தார். கிளிக்கு இறக்கை முளைத்தவுடன் தனியே பறக்க நினைக்குமாம்! கட்சி ஆரம்பித்த தனது தந்தைக்கும் அக்கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை  என்று நடிகர் விஜய் அறிவித்தார். பின் தனது முதல் கொள்கை அறிவிப்பு மாநாட்டிற்குத் தனது பெற்றோரை அழைத்துச் சமாதானம் செய்தார். ‘எனது மகனின் அரசியல் கனவுகள் முட்டுச் சந்தில் நிற்கிறதே...’ என இயக்குநர் சந்திரசேகர் கவலை கொள்கிறார். அவர் பொதுவெளியில் தனது மகனின் .வெ.. கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி சேரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், ஒரு படி மேலே சென்று, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இழந்த பலத்தை .வெ.. கூட்டணியால் மீண்டும் பெறமுடியும்என காங்கிரஸ் கட்சிக்கு ஆசை காட்டினார், வலை விரித்தார்.

.வெ.. தலைவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாகிய நிலையில், தேர்தல் காலத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகிற  காலத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே மக்களைச் சந்திக்கிறேன் என்கிறார். தனது மகனின் - நடிகர் விஜய்யின் அடிப்படைக் குறைபாட்டை, இயக்குநர் சந்திரசேகர் உணர மறுக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த மூன்று மாதங்களாகச் சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கிறார்கள்; பரபரப்பாகப் பேசுகிறார்கள்; உறக்கம் தொலைக்கிறார்கள்; வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள்.

இயக்குநர் சந்திரசேகருக்கு இராமாயணத்தில் வரும் தூக்க வரம் பெற்ற கும்பகர்ணன் பற்றித் தெரியும். அவராவது ஆறு மாதம் நித்திரையும், ஆறு மாதம் விழித்திருப்பும் பெறுவார். அதுபோலவே, நடிகர் விஜய்யும் தேர்தல் காலத்திலும்கூட களம் காணமாட்டேன் எனத் தூங்கியே அடம்பிடிப்பது அதிர்ச்சி தருவதோடு, அதை அவர் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

அவர் தப்பித் தவறி வெளியே வரும்போது கூட, பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்ட .வெ.., மூடநம்பிக்கைகளில் மூழ்கித் தவிக்கிறது. .வெ.. தலைவரோடு  நாள் குறித்து, திசை சொல்கிற  மூடத்தனத்தில் ஜோதிடர் ஒருவர் சுற்றுப் பயணங்களில் உடனிருக்கிறார். நடிகர் விஜய் தமிழ்ச் சமூகத்தில் நடந்துள்ள சமத்துவ, அடிப்படைச் சமூக சீர்திருத்தங்களை, சமூக நீதிக் கொள்கைகளை அறிந்துள்ளாரா? என்பது பெரும் கேள்வி. அவர், தான் முதல்வராகி விட்டால் அனைத்தையும் ஒரே இரவில் மாற்றிவிடலாம் எனக் கனா காண்கிறார்.

தமிழ்நாட்டை நசுக்கும் ஒன்றிய டெல்லி ஏகாதிபத்தியம் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றுள்ளாரா? என்பது ஐயப்பாடாகும்.      நடிகர் விஜய் தான் என்ன செய்யப் போகிறேன்? தனது மாற்று அரசியல் எவ்வாறு இருக்கும்? போன்ற செயல்திட்டங்கள் ஏதுமில்லை. சில  நிகழ்வுகளில் .வெ.. கட்சிக்குக் கருத்து இல்லாதபோது, மூத்த இரு நிர்வாகிகள் மாறுபாடான கருத்துகளை வைக்கிறார்கள். இதை நடிகர் விஜய் அறிவாரா? என்பதே தெரியாத அதிர்வாகும்.

தேர்தல் காலப் பணிகள் - வாக்குச் சாவடி முகவர்கள் என்பதில் .வெ.. 68,000 முகவர்களை வைத்துள்ளது. ஆனால், ஆளும் தி.மு..வோ இதைவிடப் பத்து மடங்கு வாக்குச் சாவடி முகவர்களைக் கொண்டுள்ளது. .வெ..வுக்கும் தி.மு..வுக்கும்தான்  போட்டி என்கிற விஜய், தேர்தல் களத்தில் பலமற்றத் தன்  நிலைக்கு மாற்று என்ன செய்யப் போகிறார்? எழுதிக் கொடுத்த வசனங்களை ஒரு வாரம் உட்கார்ந்து மனப்பாடம் செய்து, இருபது நிமிடங்கள் பேசுவதல்ல அரசியல். மக்களின் பிரச்சினைகளைக்  கண்டுணர்ந்து, மாற்றுத் தேடப் பாடுபடுவதே அரசியல்.

கரூர் பெருந்துயரத்திற்குப் பிறகு 72 நாள்கள்  .வெ..வும், நடிகர் விஜய் அவர்களும் தலைமறைவானது, பதுங்கியது மக்கள் மனத்தில் வெகுஜன அபிப்பிராயத்தைக் குலைத்து, குற்றுயிராக்கி விட்டது. சமூக ஊடகங்களில் மட்டும் வாழும் .வெ..வினர், கரூர் பெருந்துயர நாள்களில், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களை மூடிவிட்டு ஓடினர் என்பதும் நடந்த நிகழ்வே. அரசியல் என்பது திரைப்படங்களைப் போலக் கற்பனையில் கோட்டை கட்டுவதல்ல.

திரைப்படக் கதாநாயகனாக  வாழும்போதுகேரவனில்பதுங்கிக்கொள்ளலாம்; அரசியல் என்பது பாமர மக்களின் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டிய இடமாகும். பல ஊர்களில் பொதுமக்கள் அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறக் கேட்டிருக்கிறேன்: “வா மாப்பிள்ளை, எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவே? எலெக்சன் வரட்டும், ஓட்டுக் கேட்க வீதி வீதியாய், வீடு வீடாக வருவாய் அல்லவா... அப்ப வச்சுக்கிறேன்எனச் செய்த சம்பவங்களும் உண்டு. நடிகர் விஜய் இவைகளை அறிவாரா? இல்லை, தான் ஒரு கூட்டுப்புழு அரசியல்வாதி, நுனிப்புல் மேய்கிற கருத்தாளன் என்ற நிலையிலே தொடர்வாரா என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.

ஒரு தேர்ந்த அரசியல்வாதி நடப்பு அரசியலை அறிந்தவராக, அது குறித்துச் சக நபர்களிடம் உரையாடுபவராக, அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுபவராக இருப்பார். இதில் எதிலும் பொருந்திப் போகாத அரசியல்வாதியாக நடிகர் விஜய் இருக்கிறார். அவரது வெற்றி-தோல்வியை விட தேர்தல் ஆட்டத்தைக் குலைப்பராக விஜய் இருப்பார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கணிப்பாக அமைகிறது.

நடிகர் விஜய் இரசிகர்கள் எந்த அரசியல் தெளிவும், அடிப்படை நாகரிகமும் அறியாத இரசிக வெறியில் மிதக்கிறார்கள். இரசிக மனப்பான்மையில், விஜய்யைத் திட்டிய பொதுக்கூட்டத்தில் திட்டிய பேச்சாளரை அடித்துத் தவறு செய்கிறார்கள். எட்டு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு, இராணுவத்தில் சேரும் கனவுகள் கலைந்து கதறுகிறார்கள். நடிகர் பின் செல்லும் இளைஞர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். நடிகர் விஜய் அவர்களை அவரது வார்த்தைகள் வழி, இளைஞர்கள் அடையாளம் காணலாம்.

.வெ.. கட்சி, அதன் தலைவர் விஜய் அவர்களின் தமிழ்நாடு முதல்வர் குறித்த விளிப்புகள், தமிழ்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. சவால்கள் என்ற பெயரில் ஆணவப் பேச்சு, விஜய்யின் வெறுப்பு  அரசியலின் அவரது உளப்பாங்கை வெளிக்காட்டியது. மக்களின் மரபார்ந்த சனநாயகக் கடமை என்பது மக்கள் நலன் காக்கிற, மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்பதாகும்.

news
சிறப்புக்கட்டுரை
உறவா? ஊடகமா?

சில வாரங்களுக்கு முன் ஓர் அருள்தந்தையுடன் நடந்த ஒரு சிறிய உரையாடல் என் உள்ளத்தில் நீண்ட சிந்தனையின் கதவைத் திறந்தது. அவர் சாதாரணமாக உச்சரித்த இரண்டு ஆங்கிலச் சொற்களான Communication மற்றும் Communion. இந்த இரண்டு வார்த்தைகள் என் மனத்தைத் தொட்ட விதம் வித்தியாசமானது.

சிமியோன் மரியாவிடம் கூறிய வார்த்தைகள் அவரது இதயத்தை ஊடுருவியதைப்போல, அந்தச் சொற்கள் என் சிந்தனைகளைத் துளைத்தன. ஓடும் நதியில் உருண்டு வரும் கற்கள் காலப்போக்கில் மெருகேறுவது போல, அந்த இரண்டு வார்த்தைகள் என் எண்ணங்களையும் மெதுவாக வடிவமைத்தன.

Communication - தொடர்புCommunion - ஒன்றிணைவு, உறவு. உறவிலிருந்துதான் தொடர்பு பிறந்தது. ஆனால், இன்று தொடர்புகள் பெருகி வரும் உலகில் உறவுகள் குறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்காக நேரத்தைத் தேடினார்கள். இன்று பேசாமல் இருக்க தொழில்நுட்பமே பல காரணங்களை உருவாக்கிவிட்டன. இன்றைய உலகம் மின்னணு இணையத் தொழில்நுட்பத்தின் வலையில் சுருங்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்களைக் கொண்ட மனிதன் கூட, தன் வீட்டில் இருக்கும் மனிதர்களுடன் பேச நேரமின்றி வாழ்கிறான். ஒரே வீட்டில், ஒரே மேசையில், ஒரே உணவைப் பகிர்ந்துகொள்ளும் குடும்பம் கூட இன்று அமைதியாக அமர்கிறது. ஆனால், அந்த அமைதியில் அன்பு இல்லை; அது திரை உலகின் அமைதி. ஒவ்வொருவரின் கண்களும் அலைப்பேசி திரையில்! ஒவ்வொருவரின் மனமும் வேறு உலகங்களில்! அப்போது மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது.

ஊடகம் உறவுகளை இணைக்கும் பாலமா? அல்லது உறவுகளைப் பிரிக்கும் சுவரா? இந்தக் கேள்வி வெறும் சிந்தனை அல்ல; அது நம் காலத்தின் ஒரு காயம். முதியோர் இல்லங்களின் அமைதியான அறைகளில், அனாதை இல்லங்களின் வெறுமையான வழித்தடங்களில், மறக்கப்பட்ட பெற்றோரின் அமைதியான கண்ணீரில் இந்தக் கேள்வியின் பதில் ஒலிக்கிறது. ஒரு காலத்தில் குழந்தைகள் பெற்றோரின் கைகளைப் பிடித்து நடந்தார்கள். இன்று அவர்கள் மொபைல் போன்களைப் பிடித்தபடி உலகத்தைச் சுற்றுகிறார்கள்.

திரு. இறையன்பு தனதுஓடும் நதியின் ஓசைஎன்ற நூலில், ஓர் இடத்தில் மனிதநேயம் வற்றிப் போகும் சமுதாயத்தைப் பற்றி வேதனையுடன் எழுதுகிறார். மனிதநேயம் குறைந்தால் சமூகம் உயிரற்ற உடலாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். ஆனால், இன்று மனிதநேயம் வற்றுவதற்கான காரணங்களில் ஒன்று மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் டிஜிட்டல் உலகம்.

திருவிவிலியம் மனித உறவுகளின் ஆழத்தை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறது. “இருவர் ஒருவரைவிட மேலானவர்... ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிவிடுவார் (சஉ 4:9-10). மனிதன் தனிமைக்காகப் படைக்கப்படவில்லை. அவன் உறவுகளுக்காகப் படைக்கப்பட்டவன். ஒரு மனிதன் விழும்போது அவனைத் தூக்குவதற்காக மற்றொருவர் இருக்கவேண்டும். அதேபோல், நாம் பேசும் வார்த்தைகளின் வலிமையையும் இறைவார்த்தை நினைவூட்டுகிறது: “கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரலாகாதுகேட்பவர்களுக்கு அருளை அளிக்கும் வகையில், தேவையறிந்து அவர்களைக் கட்டியெழுப்பத் தகுந்த நல்ல வார்த்தைகளையே பேசுங்கள் (எபே 4:29).

ஒரு வார்த்தை ஒரு மனிதனை உடைக்கவும் முடியும்; அதே வார்த்தை ஒரு மனிதனை உயிர்ப்பிக்கவும் முடியும். அன்பின் உண்மையைத் திருவிவிலியம் இன்னும் தெளிவாகக் கூறுகிறது: “நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையாக அன்பு செலுத்தவேண்டும் (1யோவா 3:18).

சமூக வலைதளங்களில் ஆயிரம்Likesகிடைத்தாலும் ஒரு மனிதனின் உண்மையான அன்பை அது மாற்றமுடியாது. திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை கூறினார்: “இன்று தகவல் பரிமாற்றம் அதிகமாக இருக்கிறது. ஆனால், உண்மையான உரையாடல் குறைந்து வருகிறது. நாம் திரைகளைப் பார்க்காமல், மனிதர்களின் கண்களைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித முகங்களை மறந்து திரைகளை மட்டுமே நோக்கும் உலகமாக நாம் மாறிவிடக் கூடாது.”

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியது இன்னும் ஆழமானது: “ஊடகங்கள் மனித மாண்பைப் போற்றவேண்டும்; குடும்ப உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.” ஊடகங்கள் மனிதனை உயர்த்தவேண்டும்; அவரைத் தனிமையில் தள்ளக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் உலகத்தை நெருக்கமாக்கியது. ஆனால், இதயங்களை அந்நியமாக்கிவிட்டது. தூரத்தில் இருந்தவர்கள் இன்று நெருக்கமாகிவிட்டார்கள். ஆனால், நெருக்கத்தில் இருந்தவர்கள் இன்று தூரமாகி விட்டார்கள். இதுவேடிஜிட்டல் தனிமை.’

சில நேரங்களில் நாம் திரைகளிலிருந்து நோன்பு ஏற்கவேண்டும். அலைப்பேசியை விட்டு மனிதர்களுடன் பேசவேண்டும். குடும்பத்துடன் சிரிக்கவேண்டும். நண்பர்களுடன் மனத்தைப் பகிரவேண்டும். இணையத்தில் வெறுப்பை விதைப்பதற்குப் பதிலாக அன்பையும் உண்மையையும் விதைக்கவேண்டும்

ஊடகங்கள் நம் வாழ்க்கையின் எஜமானர்கள் அல்ல; அவை நம் வாழ்க்கைக்கு உதவும் கருவிகள் மட்டுமே. ஆகையால், ஊடகங்கள் உறவுகளுக்குப் பாலமாக இருக்கட்டும்; ஆனால், அவை உறவுகளைப் பிரிக்கும் சுவராக மாறவிடக்கூடாது.

தொழில்நுட்பம் வசதிகளைத் தரலாம்; ஆனால், மனிதநேயம் மட்டுமே ஒரு சமூகத்திற்கு உயிர் கொடுக்க முடியும். அதனால்தான் ஒரு சிந்தனையாளர் கூறினார்: “அன்பு என்பது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல; இருவரும் ஒரே திசையை நோக்கிப் பார்ப்பது.”

news
சிறப்புக்கட்டுரை
Aiயும் மக்களாட்சியும் (உலகம் உன் கையில் – 18)

உலகில் பனிப்போர் (1991) காலத்திற்குப் பின், மக்களாட்சி அலை பன்மடங்கு அதிகரித்து, பல நாடுகள் மக்கள் அரசியல் அமைப்புகளை ஏற்படுத்தி, அரசியல் கட்சிகளும் வாக்களிப்பு முறை மூலம் தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைத்தன. என்றாலும், சர்வாதிகாரத்தின் சாயல் இல்லாத ஆட்சி அமைப்புகள் வெகு சிலவென்றே கூறலாம். மக்களாட்சிக்கும் மக்களாட்சி அல்லாதவைக்கும் உள்ள வேறுபாடின்மை அல்லது தெளிவற்ற நிலைக்கு இந்நூற்றாண்டின் அரசியல் நிகழ்வுகளே சான்று பகர்கின்றன.

சுதந்திரத்தோடு, வெளிப்படையான தேர்தல்கள், அதற்கு மேலாக மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பாக மக்களாட்சி முறையிருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், உலக அளவில்ஹைபிரிட்அரசுகளுக்கும் (Hybrid regime என்பது - மக்களாட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சி இரண்டும் கலந்த ஆட்சி முறை சாயல்களைப் பெற்றிருத்தல்) சர்வாதிகார அரசுகளுக்கும் குறைவில்லை என்பதுதான் இன்றைய நிலை. இச்சூழல் உலக அளவில் மக்களாட்சிமுறை  (Democracy) பலவீனமான நிலையில் இருப்பதைப்  (fragile) பிரதிபலிக்கிறதென்கிறது ஓர் ஆய்வு.

மக்களாட்சி என்பது தனிமனிதனின் குரல் அல்லது பெரும்பான்மையோரின் முடிவென்பதில்லை. இது சட்டத்திற்கான ஒழுங்கு முறை, மக்களுக்கான ஆட்சியின் உதாரணம். மனித அதிகார எல்லையின் வரையறை, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பவைகளைப் பிரதிபலிக்கும் அடையாளமாகும். உலகளவில் இன்று மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ள மக்களாட்சி சமுதாயம், அரசியல் தேவைகளான உரையாடல், தகவல் பரிமாற்றம் என்பவைகளுக்கு டிஜிட்டல் முறை, ..யின் தொழில்நுட்பம் போன்றவற்றைச் சார்ந்திருக்கவேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க இயலாமலிருக்கிறது.

மக்களாட்சியில் ..யின் பங்கு

நவீன அரசியல் உலகில் .. மக்களாட்சி முறை (AI and Democracy) சந்திப்பு என்பது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளின் ..யின் ஆராய்ச்சி, 21-ஆம் நூற்றாண்டில் கற்கும் இயந்திர  (Machine Learning) முறை மூலம் தரவுகள் அடிப்படையில் முன்கணிக்கும் திறனைப்பெற்றது. மேலும் வளர்ந்து, நரம்பு வலை (சூநரசயட நேவறடிசம) தொழில் நுட்பம், அதாவது ஏராளமான தரவுகளைக் கொண்டு பயின்று, கற்கும் முறையான, இயந்திரச் சிந்தனை (Neural network) நிலையை அடைந்தது. 2017-இல் நரம்பு வலைக்கு ஈடாக ட்ரான்ஸ்ஃபார்மர்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் இயந்திரச் செயலாற்றலில் இணைச் சொற்கள், வாக்கியங்கள் அமைவது சுலபமும் சாத்தியமுமானது. இதுவே 2022-இல் இன்றைய நவீன மொழி பேசும் இயந்திரங்கள் (LLMs) உருவெடுக்கவும் வழியமைத்தது. இந்த வரலாற்று மைல்கற்களைக் கடந்த .. பல புதுமைகளையும் நன்மைகளையும் உலகிற்கு அளித்தாலும், இதனால் சூழலியல், சமுதாயம்  (ecology, society),  இதற்கு மேல் மக்களாட்சித் தத்துவத்திற்கான விளைவுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்களாட்சியும் மக்களவையும் .. பயன்பாட்டினால் ஏற்படும் நெறிமுறை மற்றும் அரசியல் சவால்களை மேற்கொள்ளும் மக்களாட்சி முறையில் அரசு தலைவரைக் (Presidential) கொண்டுள்ள நாடுகளைவிட, மிக வலிமையான பாராளுமன்ற-அரசியல் அமைப்பு (Parliamentary) பெற்ற நாடுகளே ..யின் சவால்களைச் சமாளிக்கும் திறன் பெற்றவைகளாக இருக்கிறதென்பது நடைமுறை.

.. ஒரு சிக்கலான மற்றும் சவால்களைக் கொண்ட தொழில்நுட்பம். இதனைச் சமுதாயம் ஏற்று மாற்றியமைத்துக்கொள்கிறதுஇதற்கு அப்பால் இத்தொழில்நுட்பத்தின் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல் (adaptable and accountable) என்ற அனைத்தையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு மக்களாட்சி முறையான நாடாளுமன்றமாகத்தான் இருக்கும் என்கிறது ஓர் ஆய்வு.

ஒரு சந்தேகம் எழலாம்; .. அல்லது அரசியல், இதில் எது மக்களாட்சி முறைக்கு ஏற்புடையது அல்லது வசப்படுத்தும் தன்மை வாய்ந்ததென்று, பல நாடுகளில் .. மக்களாட்சியின் செயல்பாடுகளைக் குறித்து ஆய்வும் நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அரசியலே முக்கியப் பங்கு வைக்கிறதென்று அறியப்பட்டது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. .. தொழில்நுட்பம் என்பது கருவி மட்டுமல்ல, நாளுக்கு நாள் புதிய அவதாரமெடுக்கும் திறன் பெற்றதும்கூட. பாராளுமன்ற ஆட்சிமுறையில் அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள் மூலம் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளை அறியும் வாய்ப்பும் கண்காணிப்பும் உள்ளதென்பதை அறிவோம். இந்நிலையில், ஆட்சி அதிகாரத்திலிருப்போர் அரசியல் அமைப்புகளை மறைமுகமாகக் கண்காணிக்கவும், தரவுகளைச் சேகரிக்கவும் .. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, குடியாட்சித் தத்துவத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாயிருக்கும்? என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

மக்களாட்சியில் தனிமனிதச் சுதந்திரம் மற்றும் சட்டப் பாதுகாப்பு (civil liberties) என்பவை அடிப்படை உரிமைகள். வலிமையிழந்த பாராளுமன்றங்களைப் பயன்படுத்தி, அதிகாரத்திலிருப்போர் தங்களுக்குச் சாதகமாக ..-யை வளைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதென்பதும் மற்றொரு பார்வை. பொதுவாக, பொருளாதார முன்னேற்றம் (GDP) என்பது, மக்களாட்சியின் உயர் நிலையைக் காட்டுகிறதென்பதை அறிவோம். ஆனால், வளமான பொருளாதாரம் மட்டுமே மக்களாட்சி முறை அல்லது அதைச் சார்ந்த குடியாட்சி நிறுவனங்களுக்கு ..யின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்குமா? என்ற கூற்றும் நிலவுகிறது. .. ஒவ்வொரு நாளும் புதிய உருவையும் வலிமையையும் பெற்று வரும் நுட்பமென்பதால், குடியாட்சிக் கண்காணிப்பு நிறுவனங்களின் திறனும் அதற்கு இணையாகவும் இருக்க எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் உலகில் ..

நாளுக்கு நாள் குவிந்து வரும் தரவுகள், இயல்பாக ..யின் பயன்பாட்டிற்குப் பணிக்கப்படுகின்றன. இவ்வாறு, தகவல்கள் ஒரு சிலரிடம் அல்லது அமைப்புகளிடம் சிக்கியிருப்பது மக்களாட்சிக்கு ஆபத்தானதென்பதும், அதிகாரத்தைத் தவறுதலாகப் பயன்படுத்துதலைத் தவிர்க்க தகவல் பரவலாக்கம் அவசியமென்பதும் பொதுவான கருத்து. கடந்த கால ஆட்சி அமைப்புகள் முன்பு சந்தித்த தொழில் புரட்சிகளால், தங்களை மாற்றி அமைத்துப் பயணித்தன என்பது வரலாறு.

-(டிஜிட்டல்) மக்களாட்சி (Digital Democracy- e Democracy)

மக்களாட்சி வழியைப் பின்பற்றவும் நடைமுறைப்படுத்தவும் அரசியல் தேவைக்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டிஜிட்டல் ஊடகம் மூலம் தொலைத்தொடர்பைப் பயன்படுத்துவதுடிஜிட்டல் மக்களாட்சி முறைஎனப்படுகிறது. 1980-1990 காலகட்டத்தில் தனி கணினி, இணையதளம் என்பவை ஊடகம் மற்றும் அரசியல் துறைகளை மாற்றியமைத்து, அதற்கு மேலாகச் சமுதாயத்தில் மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தின. அவ்வாறே, இன்று நாம் காணும் இத்தொழில்நுட்பம் மக்கள் பரவலாக அரசியலில் பங்கேற்க உதவுகிறதென்பதில் ஐயமில்லை.

-மக்களாட்சி என்பது ஒரு வழிமுறையாகத்தானிருக்க முடியும். மக்களாட்சி முறை சீர்திருத்தங்களைச் செய்து முடிப்பதாய் இருக்க இயலாது. எனவே, இது நூதன டிஜிட்டல் மக்களாட்சி மாடல்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, அடிப்படை மக்களாட்சித் தத்துவங்களுக்கு ஆதாரமாயிருக்கவே எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் புதுமையான தொழில் புரட்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமான மக்களாட்சி முறைகள் நிலவவும், அதனைக் காத்திடவும் வளமான சமுதாயமே பெரிய மூலதானமாக இருக்கமுடியும்.

news
சிறப்புக்கட்டுரை
வைராக்கியத்தால் விளைந்த இசை! மாநில விருது வென்ற ஜோ சுகந்தின் வெற்றிப் பயணம்!

சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த 13.02.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கானசிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர்மாநில விருதினைத் திரு. ஜோ சுகந்த் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நம் வாழ்வுஇதழின் துணை ஆசிரியர் ஜெ. ஞானசேகரன் அவர்கள் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல்:

சார், வணக்கம்! முதலாவதாக, உங்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தைநம் வாழ்வுவாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம்! நான் ஜோ சுகந்த். தற்போது எனது குடும்பத்துடன் சென்னை சின்மயா நகர் பங்கிற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு தம்பியும், ஓர் அண்ணனும் உள்ளனர். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். என் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் பெற்றோர் எப்போதும் ஒரு கருத்தைச் சொல்வார்கள்: ‘நாங்கள் இருக்கும் வரை இந்த வீட்டில் ஒரே அடுப்புதான் எரியவேண்டும்என்று. அந்தப் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் இன்றுவரை சிதையாமல் கட்டிக் காத்து வருகின்றோம். நாங்கள் மகிழ்ச்சியோடும் ஒருமித்த கருத்தோடும் வாழ்வதற்கு அடிப்படையே எங்கள் பெற்றோரின் ஆழ்ந்த இறைப்பற்றுதான். குறிப்பாக, என் தாய் ஒருநாளும் ஆலயம் செல்லாமல் இருந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இறைநம்பிக்கையில் ஊறியவர். அந்த நற்பண்புகளே எங்களையும் வழிநடத்துகின்றன.”

உங்கள் இசைப் பயணத்தின் தொடக்கம் எப்படி அமைந்தது? இசைத்துறையில் ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்த தருணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

ஆரம்பத்தில் என் தாயார் ஆலயப் பாடகர் குழுவில் (Choir) பாடி வந்தார். அப்போது எனக்குள் ஓர் அழகான ஆசை இருந்தது. அம்மா பாடும்போது, நான் அவருக்குப் பின்னணியில் கீபோர்டு வாசிக்கவேண்டும் என்பதுதான் அது. ஒருமுறை தற்செயலாக அங்கிருந்த கீபோர்டைத் தொட்டதற்காக, அந்த இசை ஆசிரியர் என்னைக் கடுமையாகக் கண்டித்துவிட்டார். அந்தத் தருணம் எனக்குள் ஒரு பெரிய வைராக்கியத்தை ஏற்படுத்தியது. ‘கண்டிப்பாக இசை பயிலவேண்டும்என்ற வேட்கையை அந்தத் திட்டுதான் எனக்குள் விதைத்தது.

அப்போதுதான் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த கலைஞர் திரு. அலெக்ஸ் மானுவேல் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரிடம் இசை பயிலத் தொடங்கினேன். ஆச்சரியமாக, ஒரே மாதத்தில் இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். எந்த இடத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டு, இசைக்க முடியாமல் நின்றேனோ, அதே இடத்தில் என் தாயார் பாட, நான் கீபோர்டு வாசித்தேன். அது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இன்று நான் இசை பயிற்றுவித்த ஏராளமான குழந்தைகள் பல்வேறு ஆலயங்களில் கீபோர்டு வாசிப்பதைக் காணும்போது, என் மனத்திற்கு மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.”

உங்கள் திரைத்துறைப் பயணம் எப்படி நிகழ்ந்தது? உங்களை இந்தத் துறைக்கு அடையாளம் காட்டி வழிநடத்தியவர் யார்?

ஆலயங்களில் நான் கீபோர்டு வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், பட்டாபிராம் பங்கைச் சேர்ந்த திரு. கிளமண்ட் அவர்கள் எனது திறமையைக் கவனித்தார். அப்போது அவர்சன்தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். தற்போதும் அங்குதான் பணியாற்றி வருகிறார். ‘உன்னால் முடியும்; நீ சின்னத்திரைத் தொடர்களுக்கு இசையமைக்க முயற்சி செய்என்று அவர்தான் என்னை முதன் முதலில் ஊக்கப்படுத்தினார். அவர் விதைத்த அந்த நம்பிக்கையான வார்த்தைகள்தான், இன்று என்னை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்று துணிந்து சொல்வேன். அன்று தொடங்கிய எனது இசைப் பயணம், இன்று ஏறத்தாழ 10,000 அத்தியாயங்களுக்கு (Episodes) பின்னணி இசையமைக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் தொடர்களுக்கு நான் இசையமைத்துள்ளேன். குறிப்பாக, மகராசி, செவ்வந்தி, பூவே உனக்காக, இலட்சுமி ஸ்டோர்ஸ், அருந்ததி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பிரியாத வரம் வேண்டும், நாச்சியார்புரம் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் தொடர்கள் எனது இசையில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.”

அண்மையில் நீங்கள் பெற்ற உயரிய மாநில விருது பற்றி உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கானசிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர் விருதுஎனக்கு அறிவிக்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 700-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், ‘திருமகள்தொடருக்காக இந்த மாநில விருதினைப் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம். இந்த வெற்றியை எனது அன்பிற்குரிய தந்தை மற்றும் தாய்க்கு அர்ப்பணிக்கிறேன்.

என் வாழ்க்கை ஒரு காலத்தில் பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ‘இவன் என்ன செய்துவிடப் போகிறான்?’ என்றுதான் உறவினர்களும் சுற்றத்தாரும் என்னைப் பார்த்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் எனக்குஅப்துல் கலாம் விருதுவழங்கப்பட்டபோது கூட, ‘இந்த விருது வாங்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?’ என்று என் குடும்பத்தாரிடமே ஏளனமாகப் பேசியவர்கள் உண்டு. ஆனால், இன்று அதே நபர்கள் என் இல்லத்திற்கு நேரில் வந்து, ‘உன்னால் நம் குடும்பத்திற்கே பெருமைஎன்று பாராட்டுகிறார்கள். என் தாயிடம் சென்று, ‘உன் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறோம்என்று அவர்கள் சொல்லும்போது, என் கண்கள் கலங்கிவிட்டன.

இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். எனது இசைப் பயணம் இறைவனுக்காகவே தொடங்கியது. ஆலயங்களில் நான் இசை மீட்டியபோது யாரிடமும் கைம்மாறு கருதியது இல்லை. ஒருமுறை வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு ஆலயத்தில் சிலுவைப் பாதையில் இசை மீட்டியபோது, திரைத்துறையில் நுழைய வேண்டும் என்று அந்தச் சிலுவைநாதரிடம் மனமுருகி வேண்டினேன். ஆச்சரியமாக, நான் கேட்ட ஒரே வாரத்தில் சின்னத்திரையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்று நான் அடைந்துள்ள இந்த வளர்ச்சியும், இந்த மாநில விருதும் முழுமையாக அந்த இறைவனின் அருள்தான்.”

சின்னத்திரையில் பின்னணி இசையமைப்பது என்பது எளிதான காரியம் அல்ல; இதில் நீங்கள் சந்திக்கும் நடைமுறைச் சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்துப் பகிருங்களேன்.

திரைப்படத்திற்கும் சின்னத்திரைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. திரைப்படத்திற்கு ஒரு தெளிவான தொடக்கமும் முடிவும் இருக்கும். ஆனால், சின்னத்திரை என்பது ஒரு நீண்ட நெடும் பயணம். ஒவ்வொரு நாளும் நேயர்களின் வரவேற்பிற்கு ஏற்ப கதையோட்டம் மாறும்; அந்த மாற்றத்திற்கு ஏற்ப, நொடிப்பொழுதில் இசையையும் மாற்றியமைக்க வேண்டியது பெரும் சவால்.

உண்மையைச் சொல்லப்போனால், ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பதைக் காட்டிலும் சின்னத்திரைப் பணி அதிக அழுத்தம் நிறைந்தது. இன்று படமாக்கப்படும் ஒரு காட்சி, நாளை அல்லது அடுத்த சில தினங்களிலேயே ஒளிபரப்பாக வேண்டும். தினமும் 20 முதல் 30 நிமிடக் காட்சிகளுக்குப் பின்னணி இசை (BGM) கோர்க்க வேண்டியிருக்கும். இதற்காக வாரத்தின் ஏழு நாள்களும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரு தொடர் ஆயிரம் அத்தியாயங்களைக் கடந்து செல்லும்போது, ஒரே மாதிரியான உணர்ச்சிகரமான காட்சிகளுக்குத் திரும்பத் திரும்ப இசையமைப்பது ஒரு கலைஞனுக்குச் சலிப்பைத் தரக் கூடும். ஆனால், நேயர்களுக்கு அந்தச் சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். சோகம், மகிழ்ச்சி என உணர்வுகள் மாறும்போது, ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையைப் புகுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான இசை (Character theme) இருக்கவேண்டும்; அது கதையின் போக்கிற்கு ஏற்ப உருமாறவும் வேண்டும். இவ்வளவு கடின உழைப்பு இருந்தபோதிலும், திரைப்பட இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சின்னத்திரை கலைஞர்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவுதான் என்பது ஒரு கசப்பான உண்மை.”

இன்றைய டிஜிட்டல் உலகில் .. (Artificial Intelligence) தொழில்நுட்பம் இசைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சின்னத்திரை இசையமைப்பாளர்களுக்கு இது எந்த மாதிரியான சவால்களை உருவாக்குகிறது?

நிதர்சனமாகச் சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவை (AI) நான் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறேன். ஏனெனில், இது பல கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி வருகிறது. மெகா சீரியல்களைப் பொறுத்தவரை, தினமும் 20 நிமிடக் காட்சிகளுக்கு இசையமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்றுள்ள .. மென்பொருள்கள் சோகம், மகிழ்ச்சி அல்லதுத்ரில்லர்என நாம் கேட்கும் உணர்வுகளுக்கு ஏற்ப, நொடிப்பொழுதில் ஓர் அடிப்படை இசையை உருவாக்கித் தந்துவிடுகின்றன. ஆனால், .. உருவாக்கும் அந்த இசை பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. ஒரு மெகா சீரியலில் வரும் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை ..-ஆல் துல்லியமாகப் பிரதிபலிக்க முடியாது. உதாரணமாக, ஒரு தாய்-மகன் பாசம் அல்லது ஒரு துரோகத்தின் வலி போன்ற உணர்ச்சிகளுக்கு உயிரோட்டமான இசை தேவை. இரத்தமும் சதையுமான ஒரு கலைஞன் தனது ஆன்மாவை வருத்தித் தரும் அந்த இசைநயத்தை, எந்தவொரு மென்பொருளாலும் ஒருபோதும் தந்துவிட முடியாது.

இன்று தயாரிப்பாளர்கள் தங்களின் பட்ஜெட்டைக் குறைப்பதற்காக .. தொழில்நுட்பத்தை நாடத் தொடங்குவது மிகுந்த கவலையளிக்கிறது. மனித உழைப்பைத் தேடாமல், இலவச அல்லது குறைந்த விலை மென்பொருள்களை இயக்குநர்கள் பயன்படுத்த முற்படும்போது, திறமையுள்ள பல இளம் கலைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. தொழில்நுட்பம் வளரலாம், ஆனால் அது ஒரு கலைஞனின் இடத்தைப் பிடிப்பது ஆரோக்கியமானதல்ல.”

நிறைவாக, உங்கள் எதிர்காலக் கனவு என்ன? இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

என்னுடைய மிகப்பெரிய கனவு என்பது வெறும் புகழைத் தேடுவது மட்டுமல்ல; இந்தத் துறையில் நான் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு, வசதி வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்பதுதான். இசை மீது அதீத ஆர்வம் இருந்தும், ஒரு கீபோர்டு வாங்கக் கூடப் போதிய வசதியில்லாத திறமையான குழந்தைகள் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். அவர்களைப் பயிற்றுவித்து, இந்தச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதையே எனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.

இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: ஏதேனும் ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொள்வதில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் (Social Media) போன்ற கவனச்சிதறல்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உங்களால் முன்னேற முடியும்.”

மிக்க நன்றி... திரு. ஜோ சுகந்த் அவர்களே! உங்களது பொன்னான நேரத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கும், உங்கள் வாழ்வின் வெற்றிப் பயணத்தைத் திறந்த மனத்தோடு விவரித்ததற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் இசைத்துறையில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்து, பல சிகரங்களைத் தொடநம் வாழ்வுஇதழின் சார்பாக மனமார வாழ்த்துகிறோம். நன்றி!