மறைந்த அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நூலொன்றின் பெயர்தான் ‘நீதி தேவன் மயக்கம்.’ நாட்டில் மக்கள் வாழும் பொதுவெளியில் வளர்க்கப்படும் நம்பிக்கைகளை, புனைவுகளை (Myths) நாட்டின் கலாச்சாரமாகக் கட்டமைத்து, கேள்விக்கு உட்படுத்தாமல் ‘தர்மம்’ என்று ஏற்க வைத்துவிடும் போக்கினை ஏற்போர் பலர் உளரெனினும், எப்போதோ சிலர் கேள்விக்குள்ளாக்கியதும் உண்டு. கேள்வி கேட்போரை, மரபுகளை, புனைவுகளை, விமர்சனத்துக்குள்ளாக்குவோரைக் கலகக்காரர்கள் என்று அழைக்கப்பெறலும் உண்டு. இக்கலகக்காரர்களை எப்போதும், எல்லாச் சமூகமும் கொண்டாடியது இல்லை; பழிக்கப்பெறும் இவர்கள் சரித்திரத்திலிருந்து ஒதுக்கப்பெறுவதும் உண்டு. மறக்கப்பெறுவதும் சாத்தியமே. எனினும், இவர்கள் உண்மையின் பக்கமே நின்றனர் என்பதனை வரலாறு நிரூபித்து வந்துள்ளது.
தமிழ்ச்சமூகம்
போற்றிய இராமாயணத்தை அண்ணா விமர்சித்தார். இராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னார் தந்தை பெரியார். நீதியின் காவலனாகக் கருதப்பட்ட இராமன்,
வாலியை மறைந்து நின்று கொன்றமையை ‘அறமற்ற செயல்’ என்று
இகழ்ந்தார் அண்ணா. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையை அக்னி பிரவேசம் செய்யச் செய்ததோடு, குழந்தைகளோடு வனவாசம் செய்ய இராமன் அனுப்பிய இயல்பை ‘என்ன வகை நீதி?’ என்று நீதிதேவனிடம் நீதி கேட்டார் அண்ணா.
அண்ணா
எழுதிய நாடக நூலான இந்நூல் அவர் காலத்தில் புதுமையானது. நீதி தேவன் அமர்ந்திருந்த நீதி அவையில், இராமனைக் குற்றவாளியாக நிறுத்தி இக்கேள்விகளைக் கேட்பார் அண்ணா. இம்மாதிரியான கேள்விக்கணைகளை எழுப்பும் வகையிலான உரிமை மதிக்கப்பட்டிருந்தது என்ற உண்மையையும் நாம் மறந்துவிடலாகாது. இராமனைக் கேள்வி கேட்போர் அல்லது விமர்சிப்போர் இன்று தேசத்தை விமர்சிப்போர் மட்டுமல்ல; நாட்டுப்பற்றே இல்லாதோர் என்றும், ‘நகர்ப்புற நக்சல்கள்’
என்றும் வர்ணிக்கப் பெறுவர் என்ற உண்மைநிலை இன்றைய நிலை.
தொன்மையென்றும்,
பாரம்பரியம் என்றும், மாறா தர்மம் என்றும், ஏன் ‘சனாதனம்’
(Eternity) என்றும்
போற்றப்பட்ட, தூக்கிச் சுமக்கப்பட்ட நம்பிக்கைகளை எப்போதும் ஒருசிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்மையை ஏற்பதும் அதே வேளை மறுப்பதுவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.
ஏனிந்த முன்னுரை?
அண்மையில்
நடந்த அல்லது நடைபெறுகின்ற நம் அரசியல் தலைவர்கள் தொடர்பான சில அறநெறி நிகழ்வுகள் இக்கட்டுரையை எழுதக் காரணமாய் அமைந்தன. சமூக அரசியல் களம் கண்ட எவரும் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவது எதார்த்தம். எக்கட்சியும் எக்கொள்கையும் கொண்டவராயினும், தனிமனித அறநெறி வாழ்வியல் விமர்சிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல; ஆயினும், தலைவர்கள் எனத் தன்னை முன்னிறுத்துபவர்கள் முன்வைக்கும் எடுத்துக்காட்டான வாழ்வியல் சமூகத்திற்கும் தங்கள் கட்சிக்கும், அத்தலைமையை ஏற்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியம்.
இன்றைய
அரசியல் களத்தில் சில கட்சித் தலைவர்களைத் தொடர்புபடுத்திப் பெண்ணிய விமர்சனம், பாலியல் குற்றச்சாட்டு, குடும்ப அறநெறி தவறிய சூழல் எனச் செய்திகள் அன்றாடங்காட்சியாவது இன்றைய-நாளைய தலைமைத் துவத்தின் அறநெறி மதிப்பீட்டைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, இளைய தலைமுறையினரிடத்தில் தவறான மதிப்பீடுகளைக் கட்டமைக்கிறதே என்பதுதான் எமது ஆதங்கம்.
இத்தகைய
தலைவர்களைத் தொடர்புபடுத்தி வெளிவரும் பாலியல் புகார்களில் உண்மையே இல்லையென்று அவர்களைப் பின்தொடரும் கூட்டத்தினர் நம்புகின்றனரா? உண்மை கொஞ்சம் கூட இல்லையென்று நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாம் நேசிக்கும் தலைவர்மீது இவ்வாறான பழிச்சொல் வந்துவிட்டதே என்ற கவலை பக்கத்தே நிற்கும் தோழர்-தோழியர்க்கும், தூரத்தே நின்று ஊடகவழி செவிமடுப்போர்க்கும் உருவானதுபோல் தெரியவே இல்லையே! ‘நாம் மதிக்கும் தலைவர் இவரா?’ என்ற வியப்பும் கூட ஒருவர் முகத்திலும் எழவில்லையே! பல மாதங்கள் ஊடக
வழி, மேடை வழி ‘இந்நடத்தை’
பேசுபொருளான போதும், ‘அய்யோ’ என்ற கவலைக்குரலும் ஆச்சரியக்குரலும் எவருக்கும் எழவே இல்லையே! தன் தலைவனைப் பற்றிய செய்தி, அது பொய்யாகவே இருக்கட்டும், அவர்களுடைய தொண்டர்கள் மத்தியில் ஓர் அதிர்ச்சியையாவது தந்திருக்க வேண்டாமா? இந்தக் கண்டுகொள்ளாமை எந்தப் பண்பாட்டின் வெளிப்பாடு? புரியவில்லையே!
அரசியலார்க்குத்
தனிப்பட்ட வாழ்வு உண்டென்பதும், அத்தனிவாழ்வின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பதும் உயர்ந்த கோட்பாடுதான். ஆனால், தனிப்பட்ட வாழ்விற்கும், ஒழுக்கக் கோட்பாட்டிற்கும் தொடர்பே இல்லையென்று கூறிவிட முடியுமா? தனிநபர் சார்ந்த ஒழுக்கம் காக்கப்பெற வேண்டுவது கட்டாயமில்லையா?
தனிமனிதக்
கவர்ச்சி மற்றும் இரசிக மனப்பான்மையோடு அரசியல் வேட்கையும் இணைவது சனநாயக வீழ்ச்சியின் அச்சாரம் என்பதே உண்மையாகும். தனிநபர் துதியும் சனநாயகமும் இணைந்து செல்ல முடியாது. தனிநபர் துதி மற்றும் வழிபாட்டில் அறிவுப் பார்வை இல்லை; அறிவியல் நோக்கமற்ற குடிகளால் சனநாயகம் வளராது. எழுபத்தைந்து ஆண்டுகாலச் சனநாயக இந்தியாவில் வளர்ந்துவரும் இத்தகைய மனநிலை நம் சனநாயகப் பண்பையே கேள்விக்குள்ளாக்குவதோடு, எம்மாதிரியான சனநாயகத்தை நாம் கட்டிக்காத்து வருகிறோம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
‘அந்தரங்கம் புனிதமானது’ என்பார்
எழுத்தாளர் செயகாந்தன். அந்தரங்கம் காக்கப்பெற வேண்டுவது அடிப்படை உரிமை. ஆனால், தனிமனித வாழ்வு மூலம் காக்கப்பெற வேண்டிய மாண்பும் மரியாதையும் காக்கப்பெறா நிலையில், பொதுவாழ்வில் தலைமை தேடி வருபவரின் ஒழுக்க விதிகளை நாம் கேள்விக்குள்ளாக்காமல் கடந்து செல்வது ‘பாவம்’ இல்லையா?
பெரும்பான்மை
மக்களின் ஒருமித்த ஓங்கு குரலில் பாவம் மரித்துப் போய்விடுமா? இது யார் வகுத்த நியதி? அய்யோ... பாவமே! இங்கு வீழ்ந்தது ஒரு தனிநபர் தலைமையல்ல; வீழ்ந்தது மாபெரும் சமூகத்தின் ஒழுக்க விதிகள். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்னும்
வள்ளுவன் வாக்கிற்கு நாம் தரும் மதிப்பு என்ன? கண்மூடித்தனமாகத் தலைமையை ஏற்றபின், தங்கள் தலைவர்களின் அனைத்து வீரசாகசங்களும் போற்றப்படுகையில், இவர்களது சுய ஒழுக்கக்கேடும் காத்தற்கரிய வாழ்வறமே என ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதூரத்தில்
இல்லை என்பதுதான் இங்குப் பெரிய சோகம்.
நியாயப்படுத்தும்
வரலாறு
தமிழ்நாட்டில்
இம்மாதிரியான நிகழ்வுகள் நியாயப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதும் வரலாறு. மகாத்மா காந்தி அவர்கள் தான் சார்ந்த அனைத்து வாழ்வியல் நிலைகளிலும் ஒழுக்கம் எனும் அறத்தைப் போதித்ததோடு வாழ்ந்தும் காட்டினார். அகிம்சையை, பிரம்மச்சரியத்தை வாழ்வறமாகப் போற்றினார். இவரைத் தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறம் பேணினர். லோக்நாயக் என்று அழைக்கப்பெற்ற செயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் இல்லற வாழ்வுப் பற்றி எத்தனை பேர் அறிவர்? மணவாழ்விலும் பிரம்மச்சரிய விரதத்தைப் பிறழாது கடைப்பிடித்தவர்.
தமிழகத்துக்
காந்திய சீடர்கள் அப்படித்தான் வாழ்ந்தனர். பெருந்தலைவர் காமராசருக்கென்று தனிவாழ்வு எதுவுமில்லை என்பதுதான்
அவர் சிறப்பு. கதராடை அணிந்த தலைவர்கள் பலர், அடிப்படைக் காந்திய சிந்தனையில் எந்தவிதச் சமரசமுமின்றி வாழ்ந்தனர். தனிமனித வாழ்வில் எளிமையையும் தூய்மையையும் கடைப்பிடித்தனர். அண்மையில் மறைந்த தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை இதற்கு நற்சான்று.
தமிழ்நாட்டின்
திராவிடர் ஆட்சித் தலைவர்களின் போக்கில் சில ஒழுக்க அதிர்வுகள் நிகழ்ந்தன. பல்திறன் கொண்ட கலைஞரின் தனி வாழ்வு மெச்சும்படியாய் இல்லை என்பதும் கசப்பான உண்மையே. த.வெ.க.
தலைவரின் அண்மை ஒழுக்கச் சிதைவைச் சிலர் கேள்விக்குள்ளாக்கியபோது, முந்தைய தலைவர்களின் வழியைத்தான் இவர் தொடர்கிறார் என்று நியாயப்படுத்தும் கலாச்சாரமாக மாறியுள்ளமையும் அசிங்கமே.
‘திமுக அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று
கவலைப்படும் எடப்பாடியின் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டமொன்றில்
கலந்துகொண்ட மேனாள் அமைச்சர், இந்நாள் மேலவை உறுப்பினர் தமிழ்நாட்டு முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ என்ற
திட்டத்தைக் கேலிசெய்யும் வகையில் ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, தன் கனவு நிறைவேறுமா? என்று கேட்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் கலாச்சாரம் தரம் தாழ்ந்து போயுள்ளது. வெட்கக்கேடு!
03.03.2026 - அது ஓர் அழகிய நாள்! ஈரான் நாட்டு மினாப் நகரத்தில் போர் பதற்றத்திற்கும் இடையில் வாழ்க்கையில் முன்னேறத் துள்ளிக் குதித்து வந்த குழந்தைகள்! இவர்களிலிருந்து எத்தனையோ வருங்காலத் தலைவர்கள், சமூகப் போராளிகள், நீதிமான்கள், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்களாக மாறவேண்டிய குழந்தைகள் இருந்திருப்பார்கள். யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் சீறிய அணுகுண்டால் சிதறிய இளம் மொட்டுகள்...
யாரோ
செய்த தவறுக்கு
ஏன் இன்று எண்ணற்ற இளம் இரத்தம் பூமியில் சிந்தின?
வெறும்
பொருளுக்காகவும் பதவிக்காகவும் அந்நியராய்ச் சண்டையிடுகின்றோம். கடவுள் தமது சொந்த இரத்தத்தினால் நம்மைத் தமதாக்கிக் கொண்டார் என்று திருத்தூதர் பணிகள் நூலில் (20:28) வாசிக்கின்றோம். அப்படி இருக்க நாம் அனைவரும் ஒன்றுதானே! அன்று கடவுளுக்குப் புகழ்ச்சியாகவும் நன்றியின் காணிக்கையாகவும் பலிப்பொருளாகவும் இரத்தத்தை வார்ப்பார்கள். இன்று நாம் எதற்கு இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்துகிறோம்?
“அவர்களின் இரத்தம் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றது” (திபா
72:14).
ஆபேலின்
இரத்தத்திற்குக் கணக்குக் கேட்ட இறைவன் இன்று இத்தனை உயிர்களுக்கும் கணக்குக் கேட்கமாட்டாரா?
இப்படிப்
பல்வேறு விதங்களில் இரத்தத் துளிகள் மண்ணில் விழுந்ததன் காரணமாகவோ திரு அவையும் புவியும் நிலைநிறுத்தப்பட்டனவோ?!
ஏழை எளியவர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த தன் விளைவு புனித ஆஸ்கரின் இரத்தமும் இயேசுவின் இரத்தமும் ஒன்றாய் கலந்தன. ஆம், திருப்பலி நிறைவேற்றும்போது தன்னுடைய எதிரிகளால் சுடப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், “என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்க வேண்டி இருப்பினும், அது எனக்கு மகிழ்ச்சியே” என்று
குறிப்பிடுகிறார். அதற்கு ஏற்றார்போல் புனித சார்லஸ் லுவாங்கோ இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினார்.
ஆப்பிரிக்காவில்
உகாண்டா நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு கத்தோலிக்க இளைஞர் கிறிஸ்துவை ஏற்று, ஓர் இளையோர் குழுவை உருவாக்கி மறைப்பணி செய்து வந்தார். அப்போது ஆட்சிக்கு வந்த மூவாங்கோ II என்ற
மன்னன், மக்கள் தன்னை வணங்காமல், மதிக்காமல் கிறிஸ்துவை மட்டுமே வணங்குகிறார்கள் என்று எண்ணி அச்சம் கொண்டான். மக்கள் அனைவரையும் கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். மீறியவர்களைச் சிறையில் அடைத்தான்.
1886-ஆம் ஆண்டு
புனித சார்லஸ் மற்றும் அவர்களது தோழர்களை அரசன் அழைத்து கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். அவர்களோ மறுத்தார்கள். 1886, ஜூன் 3-ஆம் தேதி அவர்களை நெருப்பிலிட்டான். கிறிஸ்துவுக்காகத் தங்கள் இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினர். இப்படித் திரு அவையில் எண்ணற்ற புனிதர்கள் தங்கள் இரத்தத்தை ஆண்டவருக்காக, அவரின் மாட்சிமைக்காகப் பலியாக்கினார் .
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசுவின் இரத்தம் மனிதரைக் கடவுளுடன் மீண்டும் இணைக்கிறது.” இது ஒரு புதிய உடன்படிக்கையின் அடையாளம். அதன் வழியாய் நம் அனைவருக்கும் நிலைவாழ்வை வழங்கி உள்ளார். வரவிருந்த தீங்கு அனைத்திலும் இருந்து நம்மை மீட்டார். இத்தகைய விலைமதிப்பற்ற தூய இயேசுவின் இரத்தத்தை நாம் அனுதினமும் திருப்பலியின் வாயிலாகப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவர் நமக்காக இரத்தம் சிந்தினார். நாமோ பாவத்திற்கு மேல் பாவம் செய்து பலருடைய இரத்தத்தை வாங்குகின்றோம். அமைதியில் உறையும் இறைவனைப் பல்வேறு அணுகுண்டுகளால் சிதைக்கிறோம். அவரின் இரத்தத்தின் வழியாய் நாம் ஒன்று சேர்க்கப்பட்டோம். ஆனால், இன்று மதத்தால், சாதியால், இனத்தால் பிரிந்துள்ளோம். போரினால் இறந்த உள்ளங்களுக்கு ஒரு சகோதரனாய் நமது பங்கு என்ன? இனியும் தொடர வேண்டுமா இப்போர்?
அன்று
உலக அமைதிக்காக, நம் பாவத்திற்குப் பலியாக, நம் மீட்பிற்காகச் சிலுவையில் வடிந்த இயேசுவின் இரத்தம், இன்று அர்த்தமற்றுப் போகிறது அல்லவா!
இனியும்
போர்கள் வேண்டுமா?
இரத்தம்
சிந்த வேண்டுமா?
குழந்தைகள்
துப்பாக்கிச் சூட்டினால்
மடிய
வேண்டுமா?
உலகம்
உருக்குலைய வேண்டுமா?
வேண்டாம்...
வேண்டவே வேண்டாம்...
போர்கள்
இனியும் வேண்டாம்!
கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான ‘புனித வாரத்தின்’ தொடக்கமே குருத்து ஞாயிறு. தெருக்களில் குருத்தோலைகளை ஏந்தி ‘ஓசன்னா’ என்று பாடிச் செல்வது வெறும் மதச்சடங்கல்ல; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் வீதிகளில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியின் மறுபதிப்பு. இயேசுவின் எருசலேம் பயணம் என்பது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; அது அதிகார மையங்களை நோக்கி விடப்பட்ட நேரடி சவால்! அது எளியவர்களின் அதிகாரம், நீதிக்கான வேட்கை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமைந்த ஓர் ‘அரசியல் முன்னெடுப்பு.’
கழுதை எனும்
குறியீடு...
அக்காலத்து
அரசர்கள் போர்க்குதிரைகளின் மீது அமர்ந்து, ஆயுதப் படைகளுடன் நகருக்குள் நுழைவார்கள். அது அச்சத்தையும் ஆதிக்கத்தையும் பறைசாற்றும் நுழைவு. ஆனால், இயேசு ஒரு கழுதைக் குட்டியைத் தேர்ந்தெடுத்தார். இது ஒரு குறியீடு.
குதிரை
போரின் அடையாளம்; கழுதை அமைதியின் அடையாளம். இயேசுவின் நுழைவு வன்முறைக்கு மாற்றாக அறப்போராட்டத்தை முன் வைத்தது. இது அமைதிக்கான அரசியல். கழுதை என்பது அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் விலங்கு. அது எளியவர்களின் அடையாளம். ஓர் அரசன் சாமானியர்களோடு தன்னைப் பொருத்திக்கொள்வது என்பது அன்றைய நிலப்பிரபுத்துவச் சூழலில் ஒரு புரட்சிகரமான அரசியல் செயல். இது ‘முகமற்றவர்களின் முகமாக’ அவர் மாறிய தருணம்.
உண்மைக்கும் நீதிக்குமான
பயணம்...
இயேசு
எருசலேமிற்குள் நுழைந்தது தற்காப்புக்காக அல்ல; உண்மையை உரக்கக் கூறுவதற்காக. எருசலேம் அன்றைய யூதச் சமூகத்தின் மதம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளி. அங்கு நிலவிய ஊழல்களையும் ஆன்மிகச் சுரண்டல்களையும் கேள்வி கேட்கவே அவர் அங்கு சென்றார்.
இந்தப்
பயணம் நீதிக்கான பயணம். ஆலயத்திற்குள் சென்று வியாபாரிகளை விரட்டியடித்தது ஒரு மதச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது ஏழை மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் அமைப்பிற்கு எதிரான தாக்குதல். ‘குரலற்றவர்களின் குரலாக’ அவர்
ஒலித்தார். அன்றைய உரோமானிய ஆதிக்கத்திற்கும், அவர்களுக்குத் துணை நின்ற மதத் தலைவர்களுக்கும் இந்த நுழைவு ஓர் அச்சுறுத்தலாகத் தெரிந்தது. அதனால்தான் அவர்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மனித மாண்பும்
உரிமைகளும்...
சமகால
அரசியல் சூழலில் இயேசுவின் இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அண்மையில் வெளியிட்ட ‘மக்களின் மாண்பு’ குறித்த செய்தியை நாம் நினைவுபடுத்த வேண்டும்: “ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்; எனவே, அவனது உரிமைகளைப் பறிப்பதும், அவனை அடிமைப்படுத்துவதும் இறைவனுக்கு எதிரான செயல். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான நற்செய்திப் பணி.” திருத்தந்தையின் இந்த வரிகள் குருத்து ஞாயிறின் அரசியலோடு பொருந்திப் போகின்றன. இயேசுவின் பயணம் மனித மாண்பை நிலைநாட்டும் பயணமாகும். அதிகாரம் என்பது அடக்குமுறைக்கு அல்ல; மாறாக, பலவீனமானவர்களைக் காப்பதற்கே என்பதை அவர் தமது செயல்கள் மூலம் உணர்த்தினார்.
வெறும் பார்வையாளர்களாக
அல்ல;
பங்கேற்பாளர்களாக...
இன்று
நாம் குருத்து ஞாயிறைக் கொண்டாடும்போது, வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டமாக இருக்கக்கூடாது. இயேசுவோடு இணைந்து எருசலேம் வீதிகளில் பயணிக்கும் உண்மையான பங்கேற்பாளர்களாக நாம் மாறவேண்டும். இன்றைய சூழலில் எருசலேம் பயணம் என்பது, சமூகத்தில் நிலவும் சாதிய, மதவாதச் சுவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; எளியவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்போதும், சுற்றுச்சூழல் சீரழிக்கப்படும்போதும் நீதிக்காகப் போராடுவது; அதிகார வர்க்கத்தின் பொய்களுக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசுவது.
இயேசுவின்
அரசியல் என்பது ஆசனங்களைப் பிடிப்பதல்ல; மாறாக, கடைசி வரிசையில் இருப்பவனை முதல் வரிசைக்குக் கொண்டு வருவதாகும். அது ‘சகோதரத்துவத்தின்’ அரசியல்.
இன்றைய குருத்து ஞாயிறு, நமது கைகளில் இருக்கும் ஓலைகளைவிட, நமது இதயங்களில் இருக்கும் சமூக நீதி உணர்வை அதிகம் எதிர்பார்க்கிறது.
ஆகவே,
குருத்து ஞாயிறு என்பது ஒரு வெற்றியின் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஒரு தியாகத்தின் தொடக்கம். நீதிக்காகப் பேசுபவன் சிலுவையைச் சுமக்க நேரிடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் இன்று குருத்தோலைகளை ஏந்தும்போது, ‘ஓசன்னா’ என்று முழங்கும்போது ‘இயேசுவைப்
போல நானும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பேன்; அநீதியைக் கண்டு அஞ்சமாட்டேன்; உண்மையான சனநாயகத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட எனது பயணத்தைத் தொடர்வேன்’
என உறுதிமொழி எடுப்போம்.
குருத்து
ஞாயிறு என்பது வெறும் ஒருநாள் நிகழ்வல்ல; அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு போராட்டத்தின் அறைகூவல்!
1980-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் நாள். தென் அமெரிக்காவின் எல்சால்வடார் பகுதியில் அமைந்திருந்த டிவைன் பிராவிடன்ஸ் மருத்துவமனை வளாகத்திலுள்ள சிற்றாலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்த மாலை நேரம். திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த ஆயர் ஆஸ்கர் ரொமேரோ தன் மறையுரையை முடித்துக் கொண்டிருந்தபோது ஆலயத்திற்கு வெளியே, தெருவில் ஒரு சிவப்புநிற வாகனம் வந்து நின்றது. அதனுள்ளிருந்து கையில் துப்பாக்கியுடன் வெளிப்பட்ட ஒரு மனிதன் ஆலயத்தை நோக்கி நடந்தான்.
துப்பாக்கியுடன்
வந்து ஆலயத்துள் நுழைந்தவன் ரொமேரோவின் மார்பைக் குறிபார்த்தான். ஒருசில நொடிகளில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ரொமேரோ தன் மார்பைப் பிடித்துக்கொண்டு திருப்பலி பீடத்தின் கீழே சாய்ந்தார். கல்வாரிப் பலி நிகழ்ந்து கொண்டிருந்த இடத்தில், துப்பாக்கிச் சூட்டால் ஒரு மனித உயிர் பலியானது.
அவரைச்
சுட்டது துப்பாக்கியா? மனிதனா? இரண்டுமே இல்லை... உண்மை!
உண்மை
சுடுமா? ஆம், அன்று உண்மைதான் சுட்டது. அது என்ன உண்மை?
1917, ஆகஸ்டு 15-ஆம்
நாள் பிறந்த ஆஸ்கர் ரொமேரோ தன் குடும்பத்தில் பெற்றோரின் எட்டுப் பிள்ளைகளில் ஒருவர். பள்ளிப் படிப்போடு தந்தை சாண்டோஸ் ரொமேரோவின் தச்சு வேலைக்குப் பயிற்றுவிக்கப்பட்டார். இளம்வயது பிள்ளையின் திறமையை உணர்ந்த தந்தை, தன் மகனுக்குள் வணிகத்திறனை வளர்க்க எண்ணியபோது, மகன் ரொமேரோ குருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
13 வயதில்
சான்மிகுவெல் பகுதியில் இருந்த இளங்குருமடத்தில் ரொமேரோ சேர்ந்தார். தாயார் உடல்நலமின்றிப் போனதால் மூன்று மாதங்களில் மடத்திலிருந்து வீடு திரும்பியவர் தாயின் அதிகப்படியான மருத்துவச் செலவுக்காகத் தன் இரு சகோதரர்களுடன் தங்கச்சுரங்கத்தில் வேலைசெய்து உதவினார். பட்டப்படிப்பையும் அவ்வூரிலேயே முடித்தபின் சான்சால்வடார் குருமடத்தில் சேர்ந்து குருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் உரோமை நகரில் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் இறையியல் முடித்தவர், 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் 4 அன்று குருப்பட்டம் பெற்றார். இத்தாலியில் பணி செய்து கொண்டிருந்த ரொமேரோவை, ஆயர் மீண்டும் எல்சால்வடார் திரும்புமாறு பணித்தார்.
குருவானவர்
வள்ளாடர்ஸ் என்ற நண்பரோடு இத்தாலியிலிருந்து சொந்த நாடு திரும்புகையில் இருவரும் ஸ்பெயினில் நிறுத்தப்பட்டனர். அங்கிருந்து மீண்டு வந்தாலும், பாசிச நாடான இத்தாலியிலிருந்து வருவதாக இருவரையும் கியூபாவின் எல்லையில் இராணுவத்தினர் கைது செய்து சிறையிலடைத்தனர். பல மாதங்கள் சிறை
முகாம்களில் இருந்த இருவரின் உடல்நலமும் சீர்கெட்டுப்போக, மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர். வெகு விரைவில் கியூபா இராணுவம் அவர்களை விடுவிக்க மெக்சிகோ வழியாக எல்சால்வடார் வந்தடைந்தனர்.
தென்
அமெரிக்காவின் அனமோர்ஸ் என்ற பகுதியில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய ரொமேரோ, சான்மிகுவெல் பங்குக்கு மாற்றலாக அங்கே இருபது ஆண்டு காலம் மிகவும் சிறப்பாகப் பணி செய்தார். பல்வேறு திருத்தூதுக் குழுக்களை ஏற்படுத்தினார். சான்மிகுவெல் பகுதியில் பேராலயம் அமைய பாடுபட்டார். ‘அமைதியின் அன்னை’ பக்தியைப் பெரிதும் வளர்த்தார்.
சான்சால்வடார்
மறைமாவட்டக் குருமடத்தின் அதிபராக உயர்த்தப்பட்ட ரொமேரோ, தன் இடைவிடாத பணியால் மனச்சோர்வுக்கு உள்ளாகி ஒரு தியானத்தில் கலந்துகொண்டு மனரீதியாக அமைதி பெற்றார். 1966-இல் ஆயர் பேரவைச் செயலர் ஆனார். கத்தோலிக்கக் கோட்பாடுகளைக் காப்பதற்காக மறைமாவட்டம் வெளியிட்ட ‘ஓரியண்டேஷியன்’ என்ற
பத்திரிகையின் இயக்குநராகவும் பணி செய்தார். 1970-ஆம் ஆண்டில் சான்சால்வடாரின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். நான்கே ஆண்டுகளில் மிகவும் நலிந்த, வறிய மக்கள் நிறைந்த சாண்டியாகோ டி மரியா மறைமாவட்டத்தின்
ஆயரானார். 1977-இல் சான்சால்வடார் மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார்.
ரொமேரோவின்
பேராயர் நியமனத்தை மார்க்சிய அரசாங்கம் வரவேற்றாலும், ஏழைகளுக்கு விடுதலை என்ற முற்போக்குச் சிந்தனைக் கோட்பாட்டால் மார்க்சியம் ரொமேரோவால் தகர்க்கப்படுமோ என்று அது அஞ்சியது. தான் ‘ஏழைகளின் அன்பன்’ என்பதை ரொமேரோ எண்பிக்கும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. மறைமாவட்ட அளவில் தன்னம்பிக்கைக் குழுக்களை ஏற்படுத்தி ஏழைகளுக்கு உதவிபுரிந்த இயேசு சபைக் குருவானவர் ருடில்லோ கிராண்டே 1977-இல் கொலை செய்யப்பட்டார். இப்படு கொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை ரொமேரோ கேட்டுக்கொண்ட போதும், அரசு அவர் கோரிக்கையைப் புறக்கணித்தது. பத்திரிகைகளும் மௌனமாயின. தன் நண்பரான குருவானவர் ருடில்லோ கொலை பற்றி ரொமேரோ வெளியிட்ட அறிக்கையில், எந்த நற்செயலுக்காக ருடில்லோ கொல்லப்பட்டாரோ, அதனைத் தான் தொடரப் போவதாகக் குறிப்பிட்டவர், நாட்டிலுள்ள வறுமை, சமூக அநீதி, படுகொலைகள், சித்திரவதைகள் குறித்துத் தன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
மனித
உரிமை மீறல்களுக்கும், இடதுசாரி ஆதரவாளர்கள் எதிர்ப்புக்குமிடையே புரட்சி அரசாங்கம் ஒன்று 1979-இல் ஆட்சியைக் கைப்பற்றியது. கொலைகள், சித்திரவதைகள் என அரசியல் அடக்கு
முறைகள் அதிகரித்தன. இவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும், அந்நாட்டிற்கு அமெரிக்கா இராணுவ உதவி அளிப்பதைக் கண்டு கொதித்த ரொமேரோ, அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு எழுதிய கடிதத்தில், “அமெரிக்காவின் இராணுவ உதவியானது அநீதியாலும் அமைதியின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள சால்வடார் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்கள்மீது அரசியல் அடக்கு முறையை அதிகரிக்கும்” என்று
எச்சரித்தார். அமெரிக்கா அக்கடிதத்தைப் பொருட்படுத்தாமல் இராணுவ உதவியைத் தொடர்ந்தது.
ரொமேரோவின்
மனிதாபிமான முயற்சிகளின் விளைவாக அவர் உலக அளவில் கவனிக்கப்பட ஆரம்பித்தார். 1980-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லூவென் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. அப்பட்டத்தைப் பெற ஐரோப்பா சென்ற ரொமேரோ, திருத்தந்தை இரண்டாம் ஜான்பாலைச் சந்தித்து சால்வடாரிலுள்ள அரசப் பயங்கரவாதம் மற்றும் படுகொலைகளைச் சட்டமாக்குவது குறித்துத் தெரிவித்து அந்த அரசுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
எல்சால்வடார்
ஆலயத்தில் ஒரு வானொலி நிலையத்தை உருவாக்கிய ரொமேரோ, ஞாயிறு தோறும் வானொலி மூலமாக மறையுரைகளை நிகழ்த்தினார். ஏழைகளின் சார்பாகப் பணியாற்றும் கத்தோலிக்கத் திரு அவையின்
உறுப்பினர்களின் துன்புறுத்தல்களுக்கு அரசுக்குப் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்தார்.
மூன்று
ஆண்டுகளுக்குள் ஐம்பதிற்கும் மேற்பட்ட குருக்கள் மிரட்டலுக்கு உள்ளாகி தாக்கப்பட்டனர். ஆறு குருக்கள் கொலையுண்டு மறைச்சாட்சிகளாக உயிர்விட்டனர். ‘திரு அவையின் குருக்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினார் ரொமேரோ. நாட்டில் எங்குப் பார்த்தாலும் அச்சுறுத்தல்கள், கைதுகள், சித்திரவதைகள், கொலைகள் என்ற அரசப் பயங்கரவாதத்தைக் கண்டித்தார்.
வாரம்
முழுக்க நாட்டில் நடக்கும் அநியாயங்களைப் பட்டியலிட்டு வானொலி மூலம் ஞாயிறு மறையுரைகளில் தெரிவித்தார். அவருடைய மறையுரைகளைப் பெருவாரியான மக்கள் கேட்கலாயினர். அவருடைய வானொலி சொற்பொழிவுகள் உலகப் பிரசித்திப்பெற்றன. அரசாங்கம் வானொலி நிலையத்தை இரகசியமாகக் குண்டு வைத்துத் தகர்த்தது. மறைமாவட்டப் பத்திரிகையான ஓரியண்டேஷியனிலும் இந்த அநியாயங்களின் பட்டியலை ரொமேரோ தொடர்ந்து வெளியிட்டார். உண்மைகள் உலகுக்கு வெளிச்சமாயின. எதிரிகள் கலக்கமாயினர்.
1980, மார்ச் 23 அன்று,
அதாவது ரொமேரோ கொல்லப்படுவதற்கு முன் தினம், அவர் தான் நிகழ்த்திய மறையுரையில் இராணுவ வீரர்களைக் ‘கிறித்தவர்கள்’ என்று
குறிப்பிட்டார். கிறித்தவர்களாகிய அவர்கள் ‘கொலை செய்யாதே’
என்னும் கடவுள் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் அரசாங்கத்தின் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்களுக்குத் துணைபோவதைக் கண்டித்துக் கடவுளின் கோபம் குறித்து எச்சரித்தார்.
ரொமேரோ
இதுவரையில் அரசப் பயங்கரவாதத்தின்மீது முன்வைத்த உண்மைக் குற்றச்சாட்டுகள் சுட்டதைவிட, இந்த உண்மை புரட்சி அரசாங்கத்தைப் பெரிதும் சுட்டது. ‘கிறித்தவர்களே வீரர்களாக உள்ள இராணுவத்தில் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டால் அரசாங்கத்தின் நிலை என்னவாகும்?’ என்று ஆட்சியாளர்கள் கலங்கினர். ரொமேரோ கூறிய இவ்வுண்மை அவர்களைச் சுட்டது. அவர்களோ உண்மையின் உருவான ரொமேரோவைச் சுட்டுக் கொல்லத் தீர்மானித்தனர். சதித்திட்டம் தீட்டப்பட்டது. ஆலயப்பீடத்தில் வைத்தே குருவானவர் ரொமேரோ கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது யார்? என்பதை உடனடியாகக் கண்டறிய முடியாத நிலையில், உலக நாடுகள் இப்படுகொலையைக் கண்டனம் செய்தன. இதைவிடக் கொடுமை என்னவென்றால், மக்கள் பெருமளவில் கலந்து கொண்ட இறுதி ஊர்வலத்தைப் படுகொலைக் களமாக்கிய பாவிகளின் செயல்கள்தான்.
1980-ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 30-ஆம் நாள் சான்சால்வடாரில் நடைபெற்ற பேராயர் ரொமேரோவின் இறுதி ஊர்வலத்தில் உலகெங்கிலுமிருந்து 25,000 மக்கள் கலந்துகொண்டனர். திடீரென பேராலயம் அருகே குண்டுகள் வெடித்தன. கலவரம் உருவாயிற்று. அரசாங்கப் பாதுகாப்புப் படைகள் என்ற பெயரால் பொதுமக்கள் ஏறக்குறைய 50 பேர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். கலவரத்திற்கிடையிலே பேராயர் ரொமேரோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஐக்கிய
நாடுகள் சபை மற்றும் உலகளாவிய அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளால் அபுயஸ்சனால் என்ற இராணுவ மேலதிகாரியின் தலைமையில் நான்கு படுகொலையாளர்கள் கொலையில் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் நிகரகுவா தேசியப் பாதுகாப்புப் படையோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டதும் தெரியவந்தது. பின்னர் தேசியவாதக் குடியரசுக் கூட்டணி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தாலும், இராணுவ அதிகாரிகளைக் கொண்டு திட்டமிட்டு, மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதோடு, கொலைகளையும் செய்தது.
எது
எப்படியோ... அநியாய அரசாங்கத்தின் அவலத்தை, அநீதித்தன்மையை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்த பேராயர் ரொமேரோவின் உண்மைகள் படுகொலையாளர்கள் மனங்களைச் சுட்டன. அவர்களைச் சுட்ட உண்மைகள் ரொமேரோவின் உடலைச் சுட்டுப் பழிதீர்த்தன. வெளிப்படுத்தப்படும் உண்மை எப்போதும் அடுத்தவர் மனத்தைச் சுடும். அதற்காகப் பிறர்நலம் கெடுக்கும், தானறிந்த அநீதியை வெளிப்படுத்தாது போனால், தன் மனசாட்சியே ஒரு மனிதனைச் சுடும் அல்லவா!
மார்ச் மாதம் 20-ஆம் தேதி, அகில உலக மகிழ்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதை அறிவோம். போரினை நடத்தும் நாடுகளைத் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழல் இது. மிகக் குறிப்பாக, நமது நாட்டிலிருந்து பலர் வளைகுடா நாடுகளில் பணிபுரிவதால், போரோடு தொடர்பு அல்லாத நாம் ஒவ்வொருவரும் பயத்திலேயே வாழ வேண்டி உள்ளது.
பிப்ரவரி
மாதம் 28-ஆம் தேதி தெற்கு ஈரானில் மினாப் நகரிலுள்ள மகளிருக்கான தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தாக்குதலில் மட்டும் 168 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்ததும் நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு எங்கும் மரண ஓலம், அழிவு, கோபம், பழிவாங்கல், சுயநலம், ஆதிக்க மனநிலை என எதிர்மறை எதார்த்தங்களின்
தாக்கம் வெகுவாகவே அதிகமாய் உணரப்படும் சூழலில், மகிழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? மகிழ்ச்சியின் வகைகள் என்னென்ன? மகிழ்வான வாழ்விற்கான வழிமுறைகள் எதுவாய் இருக்க இயலும்? என அலசிவிட்டு, மகிழ்வான
சூழலை எப்படி உருவாக்குவது? என்பதைக் காண்போம்.
மகிழ்ச்சியை எப்படிப்
புரிந்துகொள்கிறோம்?
மகிழ்ச்சி
என்பது தனிப்பட்ட, உயிரோட்டமுள்ள நேர்மறை உணர்வுகளையும் (மகிழ்வு, நிறைவு), ஒட்டுமொத்த வாழ்வு குறித்தான நிறைவையும் (பொருள், நோக்கம்) தன்னகத்தே கொண்ட மனத்தின் நிலையாகவே (State of mind)
பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி என்பதை மனநிலை தொடர்பான தனிநபர் விசயமாகப் பார்ப்பதைவிட, ‘நான் மகிழ்வாக இருக்கும் அதேவேளையில், இச்சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரின் மகிழ்விற்கும் நான் பொறுப்பு’
என்ற கூட்டுப் பொறுப்புணர்வுடன் மகிழ்வைப் பார்ப்பதே இன்றைய அறைகூவல்.
மகிழ்வின் வகைகள்
வால்டிங்கர்,
ஸ்கல்ஸ் ஆகியோர் இருவகையான மகிழ்வினைக் குறிப்பிடுகிறார்கள். தற்போதைய கணப்பொழுது மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, நிரந்தரமற்றது எனத் தெரிந்தும் இன்பத்தைக் கைக்கொள்ள நினைக்கும் மனநிலையை ‘Hedonic Happiness’ என்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்வின் பொருள் மற்றும் நோக்கத்தை மையம் கொண்டு, வாழ்வுக்கான நிறைவைத் தேடும் மனநிலை ‘Eudemonic Happiness’ என வகைப்படுத்தப்படுகிறது.
மகிழ்வான வாழ்விற்கான
வழிமுறைகள்
தத்துவ
மேதை அரிஸ்டாட்டில், “வாழ்வில் மனிதனுக்கு ஒரே ஓர் ஆசைதான் உண்டு; மகிழ்வாக இருப்பதற்கான ஆசை மட்டுமே அது. பிற ஆசைகள் அனைத்தும் மகிழ்வை அடைவதற்கான வழிகள்” என்கிறார். மனிதன்
நான்கு நிலைகளில் மகிழ்வை அடைய முயல்கிறான். அவை: 1. உடனடியாக அடைய முயலுதல்; 2. ஒப்பிடுதல் மற்றும் சாதித்தல் வழி; 3. நேர்மறையான பங்களிப்பைச் சமூகத்திற்குத் தருவதன் மூலம்; 4. எந்நிலையிலும் - எச்சூழலிலும் நிறைவைக் காண்பதன் வழி. மனிதன் மகிழ்வைத் தேடி அலைகிறான். பொன், பொருள், பதவி, அழகு என மனிதன் தேடி
அலைந்து விரக்தியில் தேடல் முடிகிறது. எனவே, உளவியல் அறிஞர் கத்ரீனா ஃப்ளோம், “முன்மொழிவதெல்லாம் மகிழ்ச்சி கண்டெடுக்கப்பட வேண்டியது அல்ல; மாறாக, உருவாக்கப்படவேண்டியது” என்கிறார்.
மகிழ்வான சூழலை
உருவாக்கல்
Lyubomirsky
என்பவர், மகிழ்வைத் தீர்மானிக்கும் காரணிகளாக மரபியல் (Genetics), சிந்தனைகள்
(thoughts), சூழல்கள் (Circumstances) ஆகியவற்றைக்
கண்டறிகிறார். மகிழ்வான வாழ்விற்கு ஒவ்வொரு மனிதனின் மரபியல் கூறுகளும், மனநிலைகளும் முக்கியப் பங்கு வகித்தாலும், இப்போர்க் காலச்சூழல் நமக்கு விடுக்கும் அழைப்பு: தன்னலத்தையும் வன்முறையையும் தாண்டிய அமைதிக்கான சூழலை உருவாக்குவது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
நேர்மறைச்
சிந்தனை மகிழ்வைக் கொணருமா? அல்லது நேர்மறைச் செயல்பாடுகள் மகிழ்வைத் தருமா? என்ற விவாதம் உளவியல் அறிஞர்களுக்கு மத்தியில் எழுவதுண்டு. நேர்மறைச் சிந்தனைகள் நிலையானவை அல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது என்பது டேனியல் கில்பர்ட், மேத்யூ கில்லங்ஸ் ஓர்த் இவர்களின் ஆய்வு.
நமது
சிந்தனைகள் நமது கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை. எனவே, சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகிழ்வைக் கொணர முடியாது என்பது ஒருசாராரின் வாதம். இவர்களின் முன்மொழிதல் எல்லாம், “நேர்மறை எண்ணங்களைத் தாண்டி, நேர்மறைச் செயல்பாடுகளே மகிழ்வைக் கொணரமுடியும்” என்பதுதான்.
கூர்ந்துநோக்கின், நேர்மறைச் செயல்பாட்டிற்கும் நேர்மறை எண்ணங்களே அடிப்படையாக அமைகின்றன.
எனவே,
நல்லதை எண்ணுவோம், நல்லதைச் செயல்படுத்துவோம். பொறாமை, பழிவாங்கல், துன்புறுத்தி இன்பம் காணும் எதேச்சதிகாரத் தன்னல மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, பிறரைப் பாராட்டுவதும், துன்பங்களில் உடனிருப்பதும், ஆக்கப்பூர்வமான பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே நம் செயல்பாடுகளில் மிளிரட்டும். இதுவே மகிழ்வான உலகைக் கட்டியெழுப்ப நம் அடி நாதமாக அமையட்டும்.
நிறைவாக,
திருப்பாடல் 126:3 எடுத்துரைப்பது போல, “ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் மகிழ்ச்சியுறுகிறோம்” என்ற
இறைநம்பிக்கையும் நன்றியுணர்வும் நம்மில் இருக்கும் வரை நம்முள் இருக்கும் மகிழ்வை யாரும் பறித்துவிட முடியாது.
பிரிட்டிஷ் இந்தியாவில் (1908) தமிழ்நாடு வந்து, துறவறப் பயிற்சி பெற்று, 1920-இல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 1921 முதல் ஆண்டாவூருணியின் பங்குப் பணியாளனாய்ப் பொறுப்பேற்று, 1943-ஆம் ஆண்டுவரை அரும் பணியாற்றி, சுதந்திர இந்தியாவில் (1943-56) இராமநாதபுரம், (1956-73) சருகணி எனப் பயணிக்கிறார். இக்காலகட்டத்தில் தொடர்பு சாதன வசதிகள் மிகக் குறைவு. ஆனால், அனைவரும் கையாண்டது கடிதத் தொடர்புதான்.
தம்
கைப்பட உடன்பிறப்புகள், உறவினர்கள், உபகாரிகள், பங்கு அன்பர்கள் எனப் பல தரப்பினருக்கு இவர்
எழுதத் தவறியதில்லை; அதே நேரத்தில் இவரை நோக்கி அயல்நாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. இவரது தமிழ்க் கடிதங்களை வாசித்துக் காட்டவும், தந்தை சொல்லச் சொல்லப் பதில் எழுதவும் வாய்ப்புப் பெற்ற சிறுவன் நான் (1968-71).
இயேசு
சபையினர் இறந்த பிறகு அவர்களது அரிய பொருள்களை கொடைக்கானல், செண்பகனூரில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைப்பர். அவற்றில் கடிதங்கள் பெரும்பங்கு வகிக்கும். அப்படிப்பட்ட கடிதங்கள் பெரும்பாலும் பிறரால் எழுதப்பட்டவையாகவே இருந்ததுண்டு. ஆனால், தந்தை லெவேயைப் பொருத்தவரை பிறர் எழுதிய கடிதங்களோடு, இவர்தம் உறவினர்கள், உடன் பிறப்புகள், உபகாரிகள் எனப் பலருக்கும் தன் கைப்பட எழுதிய கடிதங்களும் காணக் கிடைப்பது வியப்பிலும் வியப்பே!
இவர்
கைப்பட எழுதிய கடிதங்கள் முதன்மைக் குறிப்புகளாகும். எனவேதான் அவற்றைத் தொகுத்து நூல்களாக வெளியிட விரும்பினேன். உண்மைத் தன்மையை நிலைநிறுத்தவும், தலத்திரு அவையில் இளைய தலைமுறையினர் இறை ஊழியரின் மனநிலையைப் புரிந்துகொள்ளவும் விரும்பித் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய விழைந்தேன். அதன்படி ஆண்டாவூருணி, பாளையங்கோட்டை, இராமநாதபுரம் பணித்தளங்களில் எழுதிய கடிதங்களைப் பிரித்தெடுத்து ‘இப்படிக்கு லெவே I, II,
III’ என
மூன்று நூல்களாக வெளியிட்டேன்.
தற்போது
தந்தை லெவே ஆன்மிகக் குருவாக அனுப்பப்பட்ட சருகணியில் (1956-73) உள்ள கடிதங்களைக் கண்ணுற்றேன். 1968 முதல் 1971 வரை தந்தையின் பீடச்சிறுவனாயிருந்த எனக்கு அவர் வாழ்வின் இறுதி ஆண்டுகளான 1972-73-இல் எழுதிய 28 கடிதங்களை வாசிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அவை என்னால் புரிந்துகொள்ளக்கூடிய, உயிரோட்டமுள்ள அனுபவங்களாக இருந்தன. எனவேதான் அவற்றைத் தொகுத்து ‘இப்படிக்கு லெவே... IV’ (சருகணியின் புனிதம்:
1972-73) என்ற தலைப்பில் எழுத முற்பட்டேன். இதில் 23 கடிதங்கள் 1972-இல் எழுதப்பட்டவை; 5 கடிதங்கள் 1973-இல் எழுதப்பட்டவை. ஜனவரியில் மூன்றும் (8,24,31), பிப்ரவரியில் ஒன்றும் (14), மார்ச்சில் ஒன்றும் (14) என அமைகின்றன. மார்ச்
21-இல் விண்ணகப் பிறப்படைகிறார். எனவே, மார்ச் 14-இல் எழுதிய கடிதமே அவர் வாழ்வின் இறுதிக் கடிதமாகிப் போகிறது.
இங்குப்
பிரெஞ்சு மொழியில் எழுதிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது; முதுமையின் காரணமாக முகவரி மட்டும் தந்தை லெவே எழுதியுள்ளார். கடிதத்தை உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன் சொல்லக்கேட்டு எழுதியிருக்கிறார். கடிதக் கட்டமைப்பில் பெரிய மாற்றம் இல்லை. சாதாரணமாகக் கடித முகப்பில் இடமும், தேதியும் குறிக்கப்பட்டிருக்கும். இங்கு உதவிப் பங்குத் தந்தை அருள்பணி. இராஜசேகரன் ‘புனித சவேரியார் ஆலயம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா’ என எழுதுகிறார்.
• ‘நல்ல மலம்
கழிவதால் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. மருத்துவர் பலமுறை சோதிக்கிறார். இதயத் துடிப்பு சீராக உள்ளது.’
• ‘பழைய துணிகளை
அடுத்த கப்பல் வழியாக அனுப்பும் தேதியைக் குறிப்பிடவும்.
• புதிய மறைமாவட்டம் உதயமாகும் குறிப்பு உள்ளது. இதனடிப்படையில் தற்போதைய இல்லத் தலைவர் அருள்பணி. துரைராஜன் புதிய ஆயரை வரவேற்க முதன்மைக் குருவாக அப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
• தன் முயற்சியால் திருமண வாழ்வுக்குத் தயாராகும் இளம் தம்பதியினர் லூயிஸ் பஞ்சவர்ணம் திருமண நாளை தீர்மானம் செய்ய அமலவை அருள்சகோதரி. ஜோசப்பா ஞாயிறன்று அங்கிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.’
• ‘தற்சமயம் எனக்குப்
பசி எடுப்பதில்லை. உன் போன கடிதத்திற்கு நன்றி. என் இதய ஆழத்திலிருந்து உன்னை ஆசிர்வதிக்கிறேன்.’
அன்புடனும்
நன்றியுடனும் மாமா
லெவே
சே.ச.
என்று
எழுதுகிறார்.
இறுதி
மூச்சுவரை சமூக அக்கறை, அருள்பணியில் ஆர்வம், பாளையங்கோட்டை மறைமாவட்டம் உதயமாவதற்குப் பாராட்டு, உடல் நலன் ஒட்டிய சிந்தனைகள் என இவரின் ஒட்டுமொத்த
ஆளுமையை வெளிக்கொணரும் இக்கடிதம்போல், தான் எழுதிய நூற்றுக்கணக்கான கடிதங்கள் வழியாகப் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், வளர்ந்திருக்கிறார்கள். இருபாலரும் இறை அழைத்தலை உறுதியோடு ஏற்றிருக்கிறார்கள். இந்த அற்புதமான கடிதங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். இறை
ஊழியர் விரைவில் புனிதராக உயர்த்தப்பட இறைவனை இறைஞ்சுவோம்.