காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் இராகுல் காந்தி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தன் பரப்புரையில் ‘கருத்தியல் யுத்தம்’ என்ற முழக்கத்தை முன்வைத்துப் பேசியமை நினைவிருக்கலாம். கருத்தியல் (Ideology) எனும் சொல்லாக்கம் உள்ளடக்கிய கருத்தை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. கருத்தியல் சார்ந்த ஒரு போரினை இன்று முன்னெடுக்க வேண்டிய காலகட்டாயத்தில் உள்ளோம்.
கேரளத்தில்
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடது முன்னணி சார்பில் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு கம்யூனிஸ்ட் தோழர் பாரதிய சனதாவில் இணைந்துள்ளாராம். அசாம் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பாரதிய சனதாவில் சேர்ந்துள்ளார். சமூக நீதியை அச்சாரமாகக் கொண்ட திராவிடத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றான அ.தி.மு.க.வின் மொத்த
உறுப்பினர்களுமே புது
டெல்லியின் துதிபாடிகளாக மாறிப்போயினர்.
இத்தேர்தல்
‘தமிழ்நாடா? டெல்லியா?’ என்ற கேள்விக்குப் பதிலாக அமையவேண்டும் என்பதை நெடுகச் சொல்லிவரும் முதலமைச்சரின் நியாயமான கேள்விக்குப் பதிலளிக்காத நிலையில், பாரதிய சனதாவோடு கொண்ட கூட்டைத் தெருவெங்கும் நியாயப்படுத்தி வரும் எடப்பாடியாரைக் கருத்தியல் பார்வையில் எங்கு நிறுத்தப் போகிறோம்? ‘பாரதிய சனதாவோடு கூட்டணி கொள்வதைக் கேள்வி கேட்க இவர் யார்?’ என்று கேட்கும் எடப்பாடியார் போக்கை எந்தக் கருத்தியலுக்குள் முடக்குவது? இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அறிவிக்கப்பட்ட தேசிய சனநாயக முன்னணி வேட்பாளர்களின் கருத்தியல் என்ன?
இந்தியா
சமயச் சார்பற்ற சனநாயக நாடு என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனரா? சனநாயகம் காக்க உருவாக்கப்பட்டுள்ள சனநாயக நிறுவனங்களின் வீழ்ச்சியை இவர்கள் அங்கீகரிக்கின்றனரா? இந்திய அரசமைப்புச் சட்டம் முன்னிறுத்தும் மதச் சுதந்திரம், கருத்துரிமை என்பன பற்றியெல்லாம் இவர்கள் நிலைப்பாடு என்ன?
பா.ச.க. ஆளும்
மாநிலங்கள் அனைத்திலும் கட்டாய நிகழ்வாக நிறைவேற்றப்பட்டு வரும் மதமாற்றத்
தடைச்சட்டங்கள் பற்றிய இவர்கள் நிலைப்பாடு என்ன?
வெறும்
அடையாள ரீதியாக, கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, கிறிஸ்து பிறப்பன்று நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கிறித்தவருக்கு எதிரான வன்முறையைக் கண்டு கொள்ளா யுக்தியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்?
இது
என்ன புதிர்? இந்தியா எனும் புவியியல் அமைப்பு
இந்துகளின் நாடு! இந்துகளே இந்நாட் டின் தேசம் என்று அறிவித்த சவார்க்கரின் கொள்கையை என்றுமே மறுக்காத இந்துத்துவர்கள் ஒரு புறம்; இவர்களின் கொள்கைக்குத் தலைவணங்கி மௌனமாக ஏற்றுக்கொள்ளும் வலதுசாரிகள் மறுபுறம். தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இந்த வலதுசாரிகளின் அராஜகப் போக்கை நியாயப்படுத்தும் அசிங்கப்போக்கையும் சந்தித்து வருகிறோம்.
“இப்போதைய தேர்தலில், எந்தக் கட்சியும் மதச்சார்பின்மை எனும் முகமூடியை அணிந்துகொண்டு வாக்கு கேட்பதில்லை. மதச்சார்பின்மையும் பன்மைத்துவமும் இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளாக அலங்கரிக்கப்பட்ட நிலையிலும், மோடியின் ஆட்சி இந்திய அரசியல் கட்சிகள், இவ்விரு முக்கியக் கொள்கைகளையும் உதட்டளவில் கூட உச்சரிப்பதைத் தடுத்து வைத்துள்ளது. அரசியல் சாசன மதச்சார்பின்மையைப் புறந்தள்ளும் பணியை நமது ஊடகங்களும் செவ்வனே செய்து வருகின்றன. 2002-இல் குசராத் படுகொலைகளுக்குப் பின்பும் இப்படியே நடந்தது. இப்போக்கை ‘மோடி விளைவு’
(Modi effort)
என்றழைக்கலாம்.” - ஆகர் பட்டேல் (Price of the Modi Years பக்.3).
மேற்கண்ட
நூலின் ஆசிரியர் ஆகர் பட்டேல், மோடி அரசால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட உலகளாவிய
பொது மன்னிப்பு சபையின் (Amenity International) இந்திய
இயக்குநர்.
ஏன்
நாம் இப்போது மதச்சார்பின்மையைப் பேசத் தயங்குகிறோம்? மாபெரும் கருத்தியல் யுத்தம் ஒன்றை முன்னெடுக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் வாழ்கின்ற நிலையில், மதச்சார்பற்றக் கூட்டணி சார்ந்த எத்தனை தலைவர்களுக்கு, எத்தனை கட்சித் தொண்டர்களுக்கு
இக்கருத்தியலில் புரிதல் இருக்கிறது?
அரசமைப்புச்
சட்டம் முன்னெடுக்கும் இவ்வடிப்படைக் கோட்பாடுகள்தாம், இவைதரும் வெளிதாம் (space) மதம் சார்ந்த நிறுவனங்களை, மத அடையாளங்களை, மதச்
சுதந்திரத்தை, மதம் கடந்தும் செயல்படும் மானுட மாண்பைக் காக்கும் கவசங்களாயுள்ளன. 1992-ஆம் ஆண்டு 400 ஆண்டுகால பாபர் மசூதி இந்துத்துவ கரசேவகர்களால் தகர்க்கப்பட்ட நிலையில், அப்போது உ.பி. மற்றும்
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்த பாரதிய சனதா அரசு கலைக்கப்பட்டது. கலைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடிய பாரதிய சனதாவினருக்கு நீதிமன்றம் இந்திய அரசின் உயிர்க்கொள்கையாம் மதச்சார்பின்மையைச் சுட்டிக்காட்டி ஆட்சிக் கலைப்பை நியாயப்படுத்தியது நினைவிருக்கலாம். “இந்நாடு மதச்சார்பின்மையை ஏற்றால் வாழும் அல்லது மடியும்”
(Secularise or Perish) என்பார்
கிருஷ்ணய்யர். இன்று அதே நீதிமன்றம் இராம சென்ம பூமி வழக்கை எப்படிக் கையாண்டது? என்பதனையும், இன்று நியாயப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் மதவழி தேசியம் (Religious Nationalism) மதச்சார்பின்மை
எனும் உயிர்க்கொள்கையைச் சிதைத்து வருதலையும் அறிவோம்.
மதச்சார்பின்மை
மதங்களை, மத நம்பிக்கையை மறுப்பதில்லை
என்பதே உண்மையெனினும், காங்கிரஸ் அரசு போற்றிய மதச்சார்பின்மையைப் போலி மதச்சார்பின்மையென்றும், இந்நாட்டின் பெரும்பான்மை மதத்தவருக்கு (இந்து) எதிரானது என்றும் மதச்சிறுபான்மையினரைத் திருப்தி செய்யவே (Appeasement) இக்கொள்கையென்றும்
விடாப்பிடியான ஒரு பொய்ப் பரப்புரையை மேற்கொண்டு வெற்றியும் பெற்றுள்ளது; ஆளும் அரசு, எவையெல்லாம் உயிர்க்கொள்கை ஏற்றுக்கொண்டிருக்கின்றனவோ,
இக்கொள்கைகள் எப்போதும் சாத்தியப்படுவதில்லை என்றே அறிவுடைய மாந்தர் அனைவரும் எண்ணியிருந்தனரோ, அவை அனைத்தும் இந்திய மதவாதிகளுக்குச் சாத்தியமாகி வருதலைக் காண்கிறோம். இதுதான் இன்றைய இந்தியாவின் பெரும் சோகம்.
இந்தியாவில்
வளர்த்தெடுக்கப்பட்ட பார்ப்பன சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் பெரியாரியம் தன் சமூக நீதிக்கொள்கையால் எதிர்கொண்டது; ஓரளவு வெற்றியும் கண்டது. ஆனால், திராவிடப் பெயர் கொண்ட கட்சிகளே, வடவாரியத்தைத் தூக்கி நிற்கும் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதைப் பார்க்கிறோம். இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தன் ஆட்சியை நிறுவியிருக்கும் பாரதிய சனதா கட்சி, தமிழ்நாட்டின் முதன்மை எதிர்க்கட்சியுடன் 27 இடங்களோடு நிறைவு கொள்கிறதெனில் நோக்கம் என்ன? தேசிய சனநாயகக் கூட்டணி என்ற பெயரில் அணிசேர்ந்துள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருநாள் கபளீகரம் செய்யப்படும் என்ற உண்மையை அறியாரோ?
கூட்டணிக்
கட்சிகள் புடைசூழ நடுவில் அமர்ந்து, வேட்பாளர் பட்டியலைப் பெருத்த மகிழ் வோடு அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்ற எடப்பாடியார் எனும் இவர் யார்? இவர் என்னவாகப் போகிறார்? தி.மு.க.
எனும் கட்சியை அழிப்பது இவர் நோக்கமாக அறிவித்திருக்கலாம். இவர் நோக்கம் ஒருவேளை நிறைவேறலாம். பாரதிய சனதாவின் நிழலில் இவர் பெறும் வெற்றி, எதிர்கால இந்தியருக்கு, இந்நாட்டின் சனநாயகத்திற்கு, மதச்சார்பின்மைக்கு, மதச்சிறுபான்மையினருக்குக் கலாச்சாரப்பன்மை எந்தவிதப் பாரதூர விளைவுகளைத் தரும் என்ப தனை உணர்ந்துள்ளாரா? இவ்வரசின் உள்ளார்ந்த மதச் சிறுபான்மையினர் மீதான வெறுப்பை இவர் அறியாதவரா?
குசராத்
படுகொலை, குடியுரிமை திருத்தச் சட்டம், வாக்குரிமை சீர்திருத்தச் சட்டம், ‘ஊடுருவலாளர்’ என்று
பெயரிட்டு இசுலாமியரை ஒதுக்கும் நடவடிக்கைகள், ஒரு சிறிய மதச்சிறுபான்மையினரைத் தேசத்தின் எதிரிகளாகச் சித்தரித்தல், ‘காஷ்மீர் டைரி’ என்றும், ‘கேரளா ஸ்டோரி’ என்றும், ‘புல்வாமா தாக்குதல்’
என்றும், ‘சிந்தூர் ஆப்ரேஷன்’
என்றும் இவர்கள் சூட்டும் பெயர்களில், திட்டமிட்ட சூழ்ச்சி வலைக்குள் புதைந்திருப்போர் யார்? உழைக்கும் மக்களுக்கு ஆதரவானோர் ‘நகர்புற நக்சல்கள்’
என நாமகரணம் சூட்டப்படுவர்; பழங்குடி மக்களுக்காய் ஓயாது உழைத்த வீரத் துறவி ஸ்டேன் சுவாமி சிறையில் அமரத்துவம் அடைகிறார். எளிய மக்களின் இறைநம்பிக்கையை ஆதாயமாக்கி, வாக்குகளைத் தேடி திருப்பரங்குன்றம் வருகை தந்து, சமயச்சார்பற்ற நாட்டின் பிரதமர் ஆற்றிய உரையின் தொடக்கமே ‘வெற்றிவேல், வீரவேல்’ என்றாகிறது.
நமக்கு
எழும் மிகவும் கவலையான கேள்வி என்னவெனில், சனநாயகத்திற்கு ஆதரவான போரில், சனநாயகத்திற்கு எதிரான சனாதன எதிர்ப்புப் போரில், பன்மை அழித்து ‘ஒற்றை’ எனும் எதேச்சதிகார எதிர்ப்பில் வர்ணத் தர்மத்தைக் காத்து, பார்ப்பன மேலாதிக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கினை எதிர்க்கும் போரில் நாம் எங்கிருக்கிறோம்? நம் குருகுலம், குருகுல முதல்வர்கள், பொதுநிலையினருள் தலையாயவர் எங்கிருக்கிறோம்?
திராவிட
மாடலைத் தூக்கிப் பிடிப்போர் எத்தனை பேரிடம், இடதுசாரி அமைப்புகள் எத்தனை பேரிடம், இந்தியப் பெரும்பான்மைவாத அரசியலால் நேரடி பாதிப்புக்குள்ளான மதச்சிறுபான்மையினர் மற்றும் அவர்தம் தலைவர்கள் எத்தனை பேருக்கு இந்துத்துவக் கருத்தியல் பற்றித் தெரியும்?
இக்கருத்தியலில்
எனக்கும் என் சமூகத்திற்கும் இடம் எதுவுமில்லை; இக்கருத்தியல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இது சம உரிமைக்கு உத்தரவாதமளிக்காதது.
இக்கருத்தியல் பிரிவினைக்கு வழிவகுப்பது; பாரதிய சனதாவின் சீடர்கள் இதனை ஏற்பதில்லை; ஆனால், ஏனையோரிடம் திணிக்கின்றனர். இக்கருத்தியலின் மீது எனக்கு நிறையக் கேள்விகள் உள்ளன. இக்கருத்தியல்தான் மகாத்மாவின் படுகொலைக்கு வித்திட்டது. இக்கருத்தியல்தான் அம்பேத்கரை ‘Littleput’ என்று அவமதிக்க
அனுமதித்தது. இதே கருத்தியல்தான் இன்றைய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மனுநீதியை அரசமைப்பாக மாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுக்கக் காரணமாயிருந்தது. இதே கருத்தியல்தான் உச்ச நீதிமன்ற நீதியரசர் மீது செருப்பைத் தூக்கி எறிய வைத்தது.
“சில காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடினால் இந்து வாக்குகள் கிடைக்காதோ என்று அஞ்சுகின்றனர். இது ஓர் அரசியல் தற்கொலையே”
- கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே (‘Front line’ டிசம்பர்
15, 2025).
நம்மில்
எத்தனை பேருக்கு இத்தெளிவு இருக்கிறது? யோசிப்போமா!
தமிழில் வெளிவந்திருக்கும் கிறித்தவ இலக்கியங்களுள் தேவ அருள் வேதபுராணம் முதல் இயேசு காவியம் வரை பத்தொன்பது காப்பியங்கள் தோன்றியுள்ளன. தேவ அருள் வேதபுராணம் கி.பி.1725-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து யாகோம் கொன்சால் வசு அடிகளார் எழுதியதாகும். விவிலிய நூலை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் வாழ்வியலையும், அவர்தம் வாழ்வையும் இவை எடுத்துரைக்கின்றன.
தேம்பாவணி:
வளன் என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை. அவரது வாழ்வை அழகுற வழங்கும் காப்பியமே தேம்பாவணி. வீரமாமுனிவர் இயற்றிய இக்காப்பியம் 36 படலங்களையும், 3615 பாக்களையும் உடையது. தமிழில் அச்சேறிய முதல் கிறித்தவக் காப்பியம் என்னும் பெருமைக்குச் சொந்தமானது தேம்பாவணி.
திருச்செல்வர்காவியம்:
தெல்லிச்சேரி பூலோக சிங்க அருளப்ப நாவலர் கி.பி.1741-ஆம்
ஆண்டு எழுதி வெளியிட்ட காவியம் இது. இருபத்து மூன்று படலங்களும், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தாறு விருத்தங்களும் கொண்டதாக அமைந்துள்ளது. இது இலங்கையில் கி.பி.1896-ஆம்
ஆண்டு அச்சிடப்பட்டுள்ளது.
யோசேப்புப் புராணம்:
கூழங்கைத் தம்பிரான் கி.பி. 1765-ஆம்
ஆண்டு உருவாக்கிய யோசேப்புப் புராணம் 1203 விருத்தங்களுடன் விளங்குகிறது.
கிறிசுதாயணம்:
திருவனந்தபுரம் ஜான் பால்மர் (கி.பி. 1812-1883) இயேசுவின்
வரலாற்றையே கிறிசுதாயணம் என்று எழுதி கி.பி. 1865-இல்
வெளியிட்டார். பாலகாண்டம், கிரியாகாண்டம், அவசுதாகாண்டம், ஆரோகணகாண்டம் என நான்கு காண்டங்களும்,
842 விருத்தங்களும் இக்காப்பியத்தில் உள்ளன.
திருவாக்குப்
புராணம்:
யாழ்ப்பாணத்துக் கனகசபைப் புலவர் பாடிய திருவாக்குப் புராணம் கி.பி.1866-ஆம்
ஆண்டு வெளிவந்தது. பதிகத்தில் 111 விருத்தங்களும், முதற்பகுதியில் பழைய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய இரு காண்டங்களும், இரண்டாம் பகுதியில் புதிய ஏற்பாட்டுச் செய்தியை உள்ளடக்கிய எட்டு காண்டங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆதிநந்தவனப் பிரளயம்:
வேதக்கண் என்பவர் கி.பி. 1868-ஆம்
ஆண்டு வழங்கிய ஆதிநந்தவனப் பிரளயம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ளது. மில்டனின் ‘வீடு பேறு இழப்பு”
(Paradise Lost) என்னும்
ஆங்கிலப் படைப்பின் தமிழாக்கமே இந்நூலாகும். வேதக்கண் தொடர்ந்து வழங்கிய மற்றொரு காப்பியம் ஆதிநந்தவனப் பிரளய மீட்சியாகும்.
பூங்காவனப் பிரளயம்:
மில்டன் ஆங்கிலத்தில் எழுதிய ‘வீடுபேறு இழப்பு’ எனும் நூலின் முதலிரு காண்டங்களையே கி.பி.1872-ஆம்
ஆண்டு சாமுவேல் வேதநாயகம் தாமசு ‘பூங்காவனப் பிரளயம்’ என வெண்செந்துறை யாப்பில்
பாடியுள்ளார். பாதாள காண்டம், யாத்திரை காண்டம் என வரும் இரு
காண்டங்களும், 2626 அடிகளும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.
ஞானானந்த புராணம்:
ஈழத்து தொம்மைப்பிலிப்பு கி.பி. 1874-ஆம்
ஆண்டு திருவிவிலியத் திருநூலின் விளக்கமாக ‘ஞானானந்த புராணம்’ என்னும் காப்பியத்தை விருத்தப்பா யாப்பில் வழங்கியுள்ளார். உற்பத்தி, உபத்திரவம், உத்தானம் ஆகிய மூன்று காண்டங்களும், இருபத்து நான்கு சருகங்களும் உடையதாக இக்காப்பியம் விளங்குகிறது.
ஞானாதிக்கராயர்
காப்பியம்:
சாமிநாதர் கி.பி. 1876-இல்
எழுதிய ‘ஞானாதிக்கராயர் காப்பியம்’
ஞானாதிக்கன் கிறிஸ்துவின் வரலாற்றை 2222 பாடல்கள் கொண்ட 30 படலங்களில் கூறுகிறது.
இரட்சணிய யாத்திரிகம்:
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
என்பவர் பதினான்கு ஆண்டுகள் (கி.பி. 1878-1892) ‘நற்போதகம்’ இதழில் தொடர்ந்து எழுதி வந்த ‘இரட்சணிய யாத்திரிகம்’ இதழ்
ஆசிரியராலேயே பதிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த முற்றுருவகக் காப்பியமாகும். 47 படலங்களும், 3776 பாக்களும் கொண்ட இந்நூல் திருப்பயணியான கிறிஸ்துவைக் காப்பியத் தலைவனாகப் பெற்றுள்ளது.
கிறிஸ்து மான்மியம்:
சுதோச ஐயர் கி.பி. 1891-இல்
தரங்கம்பாடி லூத்தரன் திருச்சங்க அச்சகத்தில் பதிப்பித்த கிறிஸ்து மான்மியம் முப்பத்தொன்பது சருக்கங்களுடன் திகழ்கிறது. இது கிறிஸ்து பெருமானின் மாட்சியைப் புகழ்கிறது.
சுவர்க்க நீக்கம்:
வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்
‘மில்டனின் வீடுபேறு இழப்பு’ என்னும் ஆங்கில நூலை மொழிபெயர்த்து, இரு காண்டங்கள் கொண்ட செய்யுள் நூலாகச் ‘சுவர்க்க நீக்கம்” என்னும் பெயரில் கி.பி.1895-ஆம்
ஆண்டு வெளியிட்டார். விருத்தப் பாக்களாலாகிய இந்நூலுக்கு அவரே அருமையான விளக்கவுரையும் தந்துள்ளார்.
சுவிசேட புராணம்:
மதுரையில் அரசுப்பணி புரிந்து வந்த சுகாத்தியர் (Scott) புதிய
ஏற்பாட்டு நிகழ்ச்சிகளை 3360 விருத்தப்பாக்களாக எழுதியுள்ளார். இக்காப்பியம் கி.பி.1896-இல்
வெளிவந்தது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அப்போஸ்தலர் காண்டங்கள் என ஐந்து பெரும்
பிரிவுகள் கொண்ட இந்நூல், பன்னிரு பகுதிகளையும், பகுதிக்கு ஏழு பாடல்களும், படலத்திற்கு எட்டுப்பாக்களும் கொண்டுள்ளது.
திரு அவதாரம்:
மாணிக்கம் ஆசிர்வாதம் ‘நற்போதகம்’
இதழில் ஒன்பது (1936-1944) ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவந்த சிறப்பான காவியம் ‘திரு அவதாரம்’.
இது பாலகாண்டம், உத்தியோக காண்டம், செய காண்டம், ஆதிராகண காண்டம் என்னும் நான்கு பகுதிகளும், 2367 பாக்களும் கொண்டுள்ளது.
சுடர்மணி: இயேசுபெருமான் வழங்கிய நற்செய்தியினையும், அவர் நிறுவிய இறையரசினையும் பற்றி இனிய எளிய தமிழ்நடையில் ‘சர்வ வியாபி’ வார இதழ் வாயிலாக ஆரோக்கியசாமி என்பவர் வழங்கிய காப்பியம் ‘சுடர்மணி’
ஆகும். இது 1976-இல் வெளிவந்தது. இப்படைப்பு நான்கு காண்டங்களும், 47 படலங்களும், 1201 பாடல்களும் கொண்டுள்ளது. ‘சேசு கிறித்து நாதரின் சீவிய சரித்திரம்’ என்னும்
உரைநடை நூலை அடியொற்றி விருத்தப்பாவால் இந்நூல் உருவாகியுள்ளது.
கிறிஸ்து வெண்பா:
புலவர் மரியந்தோணி என்பவர் நற்செய்தியின் அருள்மொழிகளைப் பன்னிரு பகுதிகளும், 1006 வெண்பாக்களும் கொண்டது. அரிய பல உண்மைகளை அனைவரும்
தெரிந்து கொள்ளும் வகையில் வெண்பா யாப்பில் 1978-ஆம் ஆண்டு வெளிவந்த இக்காப்பியம் இயேசுவின் புகழ் பாடுகிறது. தோமையார், சவேரியார் ஆகிய அருளாளர்கள் வாழ்வியலும் இக்காப்பியத்தின் இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
இயேசு காவியம்:
கவிஞர் கண்ணதாசன் பதினைந்து நாள்களில் ஒன்பதாயிரம் அடிகள் கொண்ட இயேசு காவியத்தை 1981-ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வர் அருளிய நற்செய்தியின் அடிப்படையில் இயேசு பெருமான் வாழ்வுடன் தொடர்புடைய 148 நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இயேசுவின் மலைப் பொழிவை ‘மக்கள் உயிர் காக்கும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார்.
உவமை
வளமும், சொல் நயமும் விளங்க மக்கள் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் எளிமையும் தெளிவும் கொண்டதாக இக்காப்பியம் துலங்குகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் வழக்கம் போல மாணிக்கம் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள திரைப்படப் போஸ்டர்களை எடுத்துக்கொண்டு சாலையோர சுவர்களில் ஒட்டுவதற்காகச் சென்றான். தனக்குப் பிடித்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ போஸ்டர்கள் என்பதால் அப்படப் போஸ்டர்களை ஒட்டுவதில் அவனுக்குக் கூடுதல் ஆர்வமும் பொறுப்பும் இருந்தது.
“டேய் மாணிக்கம்! தலைவர் படமாக்கும். நீ பாட்டுக்குக் கழிவறை
சுவற்றிலெல்லாம் ஒட்டி வைக்காத. ஆள் நடமாட்டமுள்ள முக்கியமான இடத்தப் பார்த்து ஒட்டு. காலையில பஸ்ல போறவன், நடந்துபோறவன் எல்லார் கண்ணிலயும் அது படணும்.” சக்தி தியேட்டர் ஓனர் நாகேந்திரன் ரொம்பவே கறாராகச் சொல்லிச் சென்றது மாணிக்கத்தின் நினைவிற்கு வந்தது.
சென்னை
நாகேஸ்வரா பார்க் எதிர்புறமிருந்த அந்த முக்கியமான சுவருக்குப் பெரும் போட்டியிருக்கும். அன்று என்னவோ ஆச்சரியமாக யாரும் அந்தச் சுவற்றில் புதிதாகப் போஸ்டர் ஒட்டியதாகத் தெரியவில்லை. மாணிக்கம் தன் பஜாஜ் எம் 80 பைக்கை ஓரமாகச் சாய்த்து நிற்கவைத்தான். சாலையோரத் தெருவிளக்கின் வெளிச்சத்தில் ஒன்றிரெண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் எங்கோ தொலைவில் வேலை செய்துகொண்டிருந்தது தெரிந்தது. போர்வைக்குள் உடல் முழுவதையும் திணித்துக்கொண்டு படுத்துறங்கும் சில பிளாட் பார வாசிகளையும் பார்க்க முடிந்தது.
இளம்பெண்
தன் நாட்டிய நாடகத்தின் முடிவில் தன் அலங்காரங்களைக் கழற்றியெடுப்பதுபோலப் பழைய போஸ்டர்களைக் கவனமாகக் கிழித்து அப்புறப்படுத்தினான். ஏற்கெனவே காய்ச்சி கூழாக்கி வைக்கப்பட்டிருந்த மைதா மாவினைக் கையிலே வாரி சுவற்றிலே ஓவியன் படம் வரைவதுபோலக் கவனமாகப் பூசினான். துண்டு துண்டாக இருந்த ‘படையப்பா’
போஸ்டர் ஒன்றையெடுத்து மனித முகத்தை ஒன்றிணைத்தால் அடுத்தப் பக்கத்திலிருக்கும் இந்திய மேப் ஒன்றிணைக்கப் போராடும் பள்ளிக் குழந்தைகளைப்போல மிக ஆர்வமாக அப்போஸ்டரை இணைத்து அச்சுவற்றில் ஒட்டினான்.
கொஞ்சம்
தூரமாக நின்றுகொண்டு தான் ஒட்டிய தன் தலைவன் ரஜினிகாந்தின் சுவரொட்டியைப் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
அன்று
காலையிலேயே சக்தி தியேட்டர் ஓனர் நாகேந்திரன் மாணிக்கத்தைக் கூப்பிட்டுத் தன் அலுவலகத்தில் சரமாரியாகத் திட்டிக் கொண்டிருந்தார். “உங்கிட்ட ஒரு வேல கொடுத்தா உருப்படியா செய்றியா? நாகேஸ்வரா பார்க் சுவர் எவ்வளவு முக்கியமான இடமுணு உனக்குத் தெரியுமுல்ல. பிறகு ஏன் அங்கப் படையப்பா போஸ்டர் ஒட்டல?”
அங்கு
வேலைசெய்து கொண்டிருந்தவர்கள் முன்பாக மோசமாகத் திட்டியது மாணிக்கத்திற்கு அவமானமாய் இருந்தது. மாணிக்கம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால், நாகேந்திரன் நம்புவதாகத் தெரியவில்லை. திட்டையும் வாங்கி, தினக்கூலியையும் வாங்கிக்கொண்டு மாணிக்கம் வெளியேறினான்.
நேராகச்
சென்று நாகேஸ்வரா பார்க் எதிர்புறச் சுவற்றின் முன்பாகப் பைக்கை நிறுத்தினான். தியேட்டர் ஓனர் சொன்னதுபோல அங்கு படையப்பா போஸ்டரைக் காணவில்லை. மாணிக்கத்தால் நம்பவே முடியவில்லை. போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கான அறிகுறிகூட இல்லை. ‘நான்தான் ஒட்டினேனே, பிறகு எப்படிச் சுவற்றில் போஸ்டர் இல்லாமல் போகும்? ஒருவேளை பீச் சாலையில் போஸ்டர் ஒட்டக்கூடிய ரகு காழ்ப் புணர்ச்சியில தியேட்டர் ஓனரிடம் பொய் சொல்லியிருப்பானோ? இல்லை, அந்தத் துப்புரவு வேலை செய்த பொம்பளைங்க கிழித்தெடுத்திருப்பார்களோ?’
என்று பல்வேறு எண்ணங்கள் தேனீக்கள் விரட்டியடிப்பதுபோல பஜாஜ் எம் 80 பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை விரட்டியடித்துக் கொண்டிருந்தன.
கொஞ்சம்
தூரம் சென்று கொண்டிருந்தபோது கருஞ்சிவலைப் பசுமாடு ஒன்று படையப்பா சுவரொட்டி ஒன்றைத் தன் நீண்ட நாக்கால் சுரண்டியெடுத்துக் கொண்டிருந்ததை மாணிக்கம் பார்த்துக்கொண்டே போகும்போது, எதிரே வந்த லாரி ஒன்றில் மோதி இறந்துபோனான்.
நாகேஸ்வரா
பார்க் எதிர்புறச் சுவரில் மாணிக்கத்தின் பெரிய புகைப்படத்துடன் ‘பிறப்பு: 11.12.1959 இறப்பு: 10.4.1999’ என்ற போஸ்டர் இடம்பெற்றிருந்தது.
திரையரங்குகளின்
நவீனத்தன்மையும் அளவும் மாறியிருந்தாலும், திரைப்படங்களின் மீது மக்கள் கொண்டிருக்கின்ற மோகம் மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கின்றது. பெரிய வெள்ளித்திரையிலிருந்து கைப்பேசித் திரைக்குத் திரைப்படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்
யாரும் திரைப்படங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. திரைமொழியும் திரைக்கதையும் திரைநாயகர்களும் அதற்கு மிக முக்கியமான காரணம் எனலாம். ஆனால், மாறிவரும் டிஜிட்டல் உலகிலே இன்று திரைப்படத்தின் மீது கொண்ட அதீத மோகத்தாலும், தந்திரப் புத்தியினாலும் மனிதர்கள் இலவச இணையத் தளங்களிலிருந்தும், டெலிகிராம் பாட்டுகள் வழியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகத் திரைப்படங்களைத் தங்கள் சுமார்ட் போனில் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து கண்டு களிக்கின்றனர்.
இந்திய
அரசு 2026-இல் சினிமாட்டோகிராப் சட்டத்தில் (Cinematograph Act) கடுமையான
திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, எவரேனும் அனுமதியின்றித் திரைப்படங்களை வெளியிடுவது அல்லது பதிவிறக்கம் செய்வது நிரூபிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல், சட்டவிரோத இணையத்தளங்கள், டெலிகிராம் பாட்டுகள் மற்றும் இலவச ஓ.டி.டி.
தளங்கள் மூலம் திரைப்படங்கள் பதிவிறக்கம் செய்யப்படும்போது, சில கொடிய வைரஸ்கள் திரைப்படத்தோடு இணைந்து பயனர்களின் கணினி அல்லது மொபைலுக்குள் நுழைவதால், பல்வேறு சைபர் கிரிமினல்வாதிகளின் வலையில் சிக்கித் தங்கள் பணத்தையும் தனிப்பட்ட தரவுகளையும் இழக்கின்ற ஆபத்து நேரிடுகின்றது.
தமிழ்நாடு
சைபர் கிரைம் பிரிவு, அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூன்றாம் தரப்பு இணைய தளங்கள் (Third-party websites),
டெலிகிராம் குழுக்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என்று எச்சரித்திருக்கின்றது. மேலும், பயனர்களின் மொபைல் போன்களில் அல்லது கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொடர்புகள் (Contacts), புகைப்படங்கள்
மற்றும் குறுஞ்செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை இந்தச் சட்டவிரோதச் செயலிகள் திருடக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவ்வாறு திருடப்படுகின்ற தரவுகளைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’
(Digital Arrest) மோசடிகள்,
போலி முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் போலி வேலைவாய்ப்புச் செய்திகள் போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆன்லைன்
உலகில் இலவசமாகக் கிடைக்கும் எதுவும் உண்மையில் இலவசம் அல்ல; உங்கள் தனிப்பட்ட தரவுகளே (Data) அங்கு
விலையாகக் கேட்கப்படுகின்றன.
‘If you are
not Paying for the Product, then You are the Product.’
ஒரு கொடிய விலங்கு முதலில் அப்பாவி ஆடுகளைக் கடிக்கும். இரத்தவெறியின் ருசி ஓட்டத்தில் படிநிலை மாறும். இறுதியில் மனிதர்களைக் கடித்துக் குதறும். பா.ச.க. எனும் கொடிய அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு சட்டத் திருத்தம் எனும் ஆடு, மாடுகளைக் கடித்தது. இன்று வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2026 என்ற பெயர்களில் கிறித்தவர்களைக் கடித்துக் குதறத் திட்டமிடுகிறது.
இந்தியக்
கத்தோலிக்க ஆயர் பேரவை இதை ‘ஆட்சியாளர்களின் வரம்பு மீறிய செயல்’ எனச் சாடுகிறது. வட மாநிலங்களில் சட்ட
விரோதக் குடியேற்றம் உள்ளது. குறிப்பாக, பா.ச.க.வின் எதிர்க்கட்சி ஆளும் மேற்குவங்கத்தில் என்றது. இசுலாமிய எதிர்வாக்கு வங்கியைப் பா.ச.க.
குறி வைத்தது. குடியுரிமையை மறுத்தது. அதைக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்றது.
வக்ஃபு
சட்டம் என்பது வக்ஃபு தன்னாட்சியைப் பறித்தல், வக்ஃபு சொத்துகளை கபளீகரம் செய்தல் போன்ற நீண்டகால ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்திற்குத் திசையானது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, வெளிநாட்டு நிதிகளை வாரிக்
குவித்தாலும் காலங்காலமாகக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது அக்னிப் பார்வை கொண்டு இருந்தது. காலம் வரக் காத்திருந்தது.
1975-ஆம் ஆண்டு
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் வலுத்த அரசியலால் என பிரதமர் இந்திராகாந்தி
அம்மையாருக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. தனக்கு இருந்த நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் தேசத்தில் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார். அக்கறுப்புக் காலத்தில் தன் அதிகாரத்தைத் தக்கவைக்கும் எல்லா நடவடிக்கைகளையும் இந்திரா காந்தி மேற்கொண்டார். 1976-இல் தேசவிரோத சக்திகள் வெளிநாட்டிலிருந்து நிதிகளைப் பெற்று, உள்
நாட்டில் கலவரங்கள் செய்வதாகக் கூறி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். அது தனி நபர்கள், சங்கங்கள் வெளிநாட்டிலிருந்து பெறும் நிதியை ஒழுங்குபடுத்துதல், தேசிய நலனுக்கு, தேச விரோத நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு கொண்டு வருதல் எனக் கூறப்பட்டது.
1984-ஆம் ஆண்டு
அனைத்து அமைப்பு சாரா நிறுவனங்களும் உள்துறை அமைச்சகத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்படவேண்டும் என்ற திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கறுப்புச்
சட்டத்தின் தொடக்ககாலக் கட்டத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. கான்பூர்
உள்பட்ட எட்டு தேசியப் பல்கலைக் கழகங்கள் பெரும் சவாலைச் சந்தித்தன. அவற்றின் வெளிநாட்டு நிதி உதவிகள் தடுக்கப்பட்டன. அவர்களது உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன. இறுதியில், தேவையான கணக்குகள், ஆவணங்களைச் சமர்ப்பித்து ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகம் தன் நிலையை மீட்டெடுத்தது. இதிலும் உள்துறை அமைச்சகத்தில் சட்ட விரோதச் செயல்கள் அரங்கேறின. நிறுவனப் பதிவு, கணக்கு வழக்குப் பார்த்தல் என்பதில் தொடங்கி, போலி நிறுவனங்கள் பதிவுவரை நடந்தது. இதில் உள்துறை
அமைச்சக அதிகாரிகள் ஆறு பேர் கைது, கோடிக்கணக்கான பணம் கைப்பற்றுதல் என சி.பி.ஐ. நடவடிக்கைகள் கசப்பான
மறுபக்கங்கள்.
1976-இல் வடிவாகி,
2010-இல் இச்சட்டம் முழு
வடிவு பெற்றது. பின் அது 2016, 2018, 2020 என பா.ச.க. அரசால் திருத்தம்
செய்யப்பட்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சியால் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் இரண்டு முதல் மூன்று விழுக்காடு எதிர்மறைத் தாக்குதல் உள்ளது. இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் சட்டம் பல முறை மாற்றப்பட்டது.
மத வன்மம் கொண்டு, வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை)
திருத்தச் சட்டம் 2026 எனப் புதிய வடிவம் தரப்பட்டது. இச்சட்டம், கிறித்தவச் சிறுபான்மை மக்களை, கிறித்தவத் தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து அச்சுறுத்துகிறது.
கொடுங்கோல்
ஆட்சியின் கறுப்புச் சட்டமான இந்தச் சட்டத் திருத்த முன் வடிவு, மதச் சிறுபான்மைத் தொண்டு நிறுவனங்களைக் குறி வைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் என உறுதிபடக் கூறலாம்.
ஆர்.எஸ்.எஸ். கிறித்தவத் தேவாலயங்கள், கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள்மீது வைத்துள்ள ஆத்திரம் சட்ட முன்வடிவாக அதிரடியாக மாறியுள்ளது.
ஒன்றிய
உள்துறை அமைச்சகம் தன் மட்டற்ற அதிகார வரம்பை இச்சட்ட வடிவில் உள்ளடக்கி உள்ளது. உரிமம் பெறுதல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
புதுப்பித்தல் என அனைத்து அதிகாரங்களையும்
கேள்வி கேளா நிலையில் வைத்துள்ளது. உரிமங்களை இரத்து செய்யும் அதிகாரத்தையும் இச்சட்டத்தால் உள்துறை அமைச்சகம் பெறுகிறது. எந்நேரத்திலும், எந்தவித அறிவிப்புகளும், எந்தவிதக் காரணங்களும்
இல்லாமல் உரிமம் இரத்து செய்யப்படலாம். அவ்வாறு இரத்து செய்யப்படுகிற அல்லது ஒப்படைக்கப்பட்டுள்ள உரிமங்களைக் கொண்ட, காலாவதியான பதிவு எண்களைக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளைப் புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிகார அமைப்பு கையெடுக்கும். அந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு எல்லாக் கிறித்தவத் தொண்டு நிறுவனங்களையும் முடக்க வழி செய்கிறார்கள்.
மார்ச்
2025-2026 அன்று வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்கு
முறை) திருத்தச் சட்டம் 2026-இன் முன்வடிவு மக்களவையில் வைக்கப்படுகிறது. ஆளும் பா.ச.க.
தரப்பு, ‘இச்சட்ட முன் வடிவு அரசு சாரா நிறுவனங்களின் சொத்துகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை மையம் செய்தல், நிர்வாகச் செலவுகளைக் குறைத்தல், வெளிநாட்டுப் பங்களிப்புகள் மீதான மேற்பார்வைகளை அதிகரித்தல் என அரசின் பிடியை
உறுதிப்படுத்தல்’ என்று
கூறுகிறது. எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை உடனே பதிவு செய்தன. விழித்த பா.ச.க.
அரசு சட்டத்தை நிறைவேற்றவில்லை; திரும்பவும் பெறவில்லை. அடுத்த பரிசீலனையில் எனக் காத்திருப்புப் பட்டியலில் போட்டது. எந்த நேரமும் ஒருவேளை சிறப்பு அமர்வு வழியாகக்கூட இந்தக் கறுப்புச் சட்டம் பின்வாசல் வழியே வர வாய்ப்புகளே அதிகம்
என விவரம் அறிந்தோர் கூறுகிறார்கள். இணைய வழி கருத்துப் பகிர்வில் பலரும் ‘பிரதமரின் குடிமக்கள்
உதவி அவசர கால நிவாரண
நிதி (பி.எம்.கேர்)
இச்சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா?’ என வாதம் வைக்கிறார்கள்.
தமிழ்நாட்டு
முதல்வர், “இலாப நோக்கமற்ற அமைப்புகளால் வழங்கப்படும் கல்வி, மருத்துவம் மற்றும் தொண்டு சேவைகளுக்கு மாற்றாக, புதிய சேவை வழங்கும் திறன் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இல்லை” என்ற உண்மையை இவ்விவாதத்தின் ஊடே பொருத்துகிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின், “இது ஒரு
கொடுங்கோல் மசோதா. அது ஒன்றிய அரசுக்கு அதன் விருப்பப்படி எந்தவொரு முறையான
சட்ட நடைமுறையும் இன்றி ஒரு தேவாலயம், பள்ளி, மருத்துவமனை போன்ற அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ. பதிவை
இரத்து செய்யவும், அதன் சொத்துகளைக் கையகப்படுத்தவும் அதிகாரம் அளிப்பதன் மூலம் தொண்டு நிறுவனங்களைச் சிதைக்க முயல்கிறது” எனத்
தன் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்.
பா.ச.க. அரசின்
நெருக்குதல்களால் இன்றைய நிலையில் 18,000-க்கும் மேற்பட்ட தொண்டு, அமைப்பு சாரா நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை இழந்துள்ளன. அவர்களுடைய சொத்துகளை இந்தக் கறுப்புச் சட்டம் வழியே ஆர்.எஸ்.எஸ். மறைமுகமாகக் கையில் எடுக்கும். அது கல்வி, மருத்துவச் சேவை நிறுவனமாக இருந்தால், அது பின்தங்கிய பகுதியில் இருந்தால், தன் காவி வேலையைக் காட்டும். அது நாட்டின் அடிநிலைச் சமூக அமைப்பிற்கு அச்சுறுத்தலாக முடியும்.
பா.ச.க. என்பது
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் குழந்தை. அது தன் தாயின் வழிகாட்டலுக்கும் செயல்திட்டத்திற்கும் ஆதரவாகவே செயல்படும். மதச்சார்பற்ற சக்திகளான நாம்
அதை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதே இந்திய அரசியலின் சவால்மிகு நாளைய பக்கங்களாகும்.
ஒரே பரபரப்பான சூழல்! ஒருபுறம் தேர்வு, மறுபுறம் தேர்தல். சில நேரங்களில் வாழ்க்கை நம்மை அமைதியாக நிறுத்தி வைக்கிறது. அந்த நேரங்களில், நாமே நம்மைக் கேட்டுக்கொள்ளும் கேள்வி: “நான் எடுக்கும் முடிவுகள் சரியானவையா?”
பெரிய
முடிவுகள் மட்டுமல்ல; சிறிய தேர்வுகளும்கூட நம்மை வடிவமைக்கின்றன. ஒரு வார்த்தை பேசுவதா? மௌனமாக இருப்பதா?… ஒரு வழியைத் தேர்வு செய்வதா? திரும்பிப் போவதா? இவ்வளவு சாதாரணமாகத் தோன்றும் சிறிய முடிவுகளில்தான் நம்முடைய வாழ்க்கையின் உண்மையான வாழ்வு வடிவமைக்கப்படுகிறது.
ஒவ்வொருவருடைய
வாழ்க்கையும் ஓர் அழைப்பு. அதை நாம் சில நேரங்களில் ‘பணி’ என்று நினைப்போம். ஆனால், அது அதைவிட ஆழமானது.
கடவுள்
நமக்குக் கொடுத்த வாழ்க்கை, ஓர் அர்த்தமுள்ள பதிலை எதிர்பார்க்கிறது. ஒரு மாணவன் படிக்கிறான், முயற்சிக்கிறான், தவறுகளைச் சரிசெய்கிறான். அவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; அவனுக்குக் கொடுக்கப்பட்ட திறமைகளை நம்பிக்கையுடன் வாழ்வதற்காக. அதேபோல், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நம்முடைய வாழ்க்கை அழைப்பிற்கு நாம் தரும் பதிலாக மாறுகிறது.
மனசாட்சி - அமைதியாகப்
பேசும்
குரல்
நம்முள்
ஒரு குரல் இருக்கிறது. அது சத்தமாகப் பேசாது;… ஆனால், அது உண்மையை மட்டும் பேசும். சில நேரங்களில் அது நம்மைக் கடினமான பாதைக்கு அழைக்கும். ஆனால், அந்தப் பாதைதான் நிம்மதியைத் தரும்.
திருவிவிலியம்
மெதுவாக நினைவூட்டுகிறது: “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” (1சாமுவேல்
16:7). அதனால்தான் வெளியில் நல்லதாகத் தோன்றுவது எல்லாம் சரியானதல்ல; உள்ளத்தில் அமைதியைத் தருவதுதான் உண்மையானது.
சுதந்திரம் -
ஒரு
பரிசும்,
ஒரு
பொறுப்பும்
நமக்குச்
சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எதை வேண்டுமானாலும் செய்யும் உரிமை மட்டுமல்ல; சரியானதைத் தேர்வு செய்யும் வாய்ப்பு. சில நேரங்களில், எளிதானதைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கும். ஆனால், நல்லதைத் தேர்வு செய்வதற்குத் தைரியம் தேவை. அந்தத் தைரியம்தான் ஒரு மனிதனை உள்ளிருந்து வலுப்படுத்துகிறது.
சிறிய முடிவுகள்
- பெரிய
தாக்கம்
நாம்
எடுக்கும் சில முடிவுகள் சிறியதாகத் தோன்றலாம். ‘இதில் என்ன இருக்கிறது?’ என்று நாமே நினைக்கலாம். ஆனால், வாழ்க்கை அப்படியில்லை. சிறிய விதைகள்தான் பெரிய மரங்களாக வளர்கின்றன.
திருவிவிலியம்
கூறுகிறது: “மிகச் சிறியவற்றில் நம்பத்தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்”
(லூக்கா 16:10).
நம்முடைய
சிறிய நேர்மைகள் ஒருநாள் பெரிய நம்பிக்கையாக மாறும். நாம்
எடுக்கும் முடிவுகள், நம்மை மட்டும் பாதிக்காது. அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தொடும்.
ஒரு
குடும்பம்… அல்லது
ஒரு சமூகமும் கூட, ஒரு மனிதனின் சரியான முடிவால் வளம் பெற முடியும். அதனால்தான், நாம் எடுக்கும் ஒவ்வொரு தேர்வும் ஒரு தனிப்பட்ட செயல் மட்டுமல்ல; ஒரு சமூகப் பொறுப்பும்கூட.
வாழ்க்கை
எப்போதும் நமக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. சில நேரங்களில் அவை பெரியதாக இருக்கும்; சில நேரங்களில் மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால், ஒவ்வொரு தருணமும் ஒரு கேள்வியை நம்மிடம் கேட்கிறது: “நீ எதைத் தேர்வு
செய்கிறாய்?”
இந்தக்
கேள்விக்கான பதில்தான் நம் வாழ்க்கையின் பாதையை உருவாக்குகிறது. சரியானதைத்
தேர்வு செய்வது எப்போதும் எளிதாக இருக்காது; ஆனால், அந்த ஒரு நேர்மையான தேர்வு, நம்முள் ஒரு நல்ல மனிதனையும், நம்மைச் சுற்றி ஒரு நல்ல உலகத்தையும் உருவாக்கும்.
நமது சமூகத்தில் சாதாரணமாகப் பேச்சு வழக்கிலும் வாழ்விலும் இருக்கும் ஒரு சொல்லாடல் ‘சாதாரணமாக’ எனலாம். நாம் ஒவ்வொருவரும் தினமும் ஒருமுறையாவது ‘சாதாரணமாக’ என்ற சொல்லினை நமது உரையாடல்களிலும் உறவாடல்களிலும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம்.
‘சாதாரணம்’
என்ற சொல்லானது நமது சமூகத்திலும், நமது வாழ்விலும் இயல்பாக நடைபெறும் நிகழ்வு போன்ற அர்த்தத்தை நமக்குத் தருகிறது. ‘அசாதாரணம்’
என்பது அரிதான அல்லது வழக்கத்திற்கு மாறான நிகழ்வு என்ற அர்த்தத்தில் சமூகத்தால் புரிந்துகொள்ளப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
இன்று
சாதாரணம் என்ற சொல்லின் புரிதல் ‘இயல்பாக நடப்பது’ என்ற புரிதலைக் கொண்டு இயங்கினாலும், தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 30 கொலை நிகழ்வுகள் பதிவாகின்றன, அனுதினம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இன்னும் போதை, தீண்டாமை, ஊழல், வன்முறை, சுரண்டல், ஏமாற்று, ஆதிக்கம் போன்ற மனிதநேயமற்ற நிகழ்வுகள் கட்டுக்கடங்காது நடைபெறுகின்றன. விளம்பர அரசாட்சிகள் கண்மூடிக் கொள்கின்றன. இவற்றையெல்லாம் ‘சாதாரணம்’
என்று கடந்துபோக, நம் மனம் ஏனோ தயங்குகிறது.
நாம்
சாதாரணமாகக் காணும் இந்தச் சமூக எதார்த்தங்கள் இயல்பானவையா? அல்லது ஏற்கெனவே யாரோ ஒருவரால் தீர்மானிக்கப்பட்டவையா? என்ற கேள்வி எழுகிறது.
கிராமத்தில்
இதெல்லாம் சாதாரணம், நகரத்தில் இதெல்லாம் சாதாரணம், விடுதியில் இதெல்லாம் சாதாரணம், அலுவலகத்தில் இதெல்லாம் சாதாரணம், திரையில் இதெல்லாம் சாதாரணம், அரசியலில் இதெல்லாம் சாதாரணம்... என்று மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளையும் சாதாரணமாகக் கருதி, சாதாரணமாகக் கடந்துபோகப் பழகும் சமூகமாகி, நாம் இன்று வரம்புகளற்று வாழ்கிறோமோ என்று எண்ணத் தூண்டுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், மனித அறம் மழுங்கிப் போன நடைபிணங்களாக மாறிவிட்டோமோ? என்று சொல்லத் தோன்றுகிறது.
எல்லாமே
இன்று சாதாரணம்தான். சமூகத்தின் தறிகெட்ட வீச்சிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், சமூகப் பொறுப்பிலிருந்து தப்பிக்கவும் ஒரு தனிநபர் பயன்படுத்தும் பதமே ‘சாதாரணம்’
என்ற சொல்லாடல் போலத் தெரிகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சமூகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது சமூகம், அறநெறிகள், மனித நியமங்கள், நியதிகள், உரிமைகள் தொடங்கி விழுமியங்கள், குடும்ப உறவுகள், பழக்கவழக்கங்கள், அரசியல், சமூக அக்கறை, அதிகாரம், நம்பிக்கைகள், வாணிபம், பொது உளவியல், வாழ்க்கை குறித்த பார்வை, பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் வாழ்வியல் என அனைத்தும் ஓர்
அசாதாரண விதத்தில் வேகமாகத் தீமையை விளைவிப்பதாக மாற்றமடைந்து வருவது உங்களுக்குத் தெரிகிறதா? ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பழக்கத்தில்
நிலவிய அறம் பயக்கும் சாதாரணங்கள் உருக்குலைந்து, சிதைந்து, அரிதாகிப்போனதே என்று சிந்தித்ததுண்டா? புதிதாக ஓர் அசாதாரண அறமற்ற சூழல் இன்று சாதாரணமாக மாறியிருக்கிறது. ஆனால், நாம் இதெல்லாம் சாதாரணம் என்ற ஒற்றை வார்த்தையில் உரைத்து அனைத்தையும் கடந்து செல்கிறோம்.
உதாரணமாக,
சில மாதங்களுக்கு முன், அரசியலில் வெற்றிபெற இயங்கும் நடிகனைப் பார்க்கச் சென்ற 40 பேர் - பச்சிளம் குழந்தைகள், பெண்கள் முதல் நடுத்தர வயது ஆண்கள் என அநியாயமாகக் கூட்ட
நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர் என்பது நமது சமூகத்தால் சாதாரணம் என்ற போர்வையில் கடந்து சென்றுவிட்டதைப் பார்க்கிறோம். சில வாரங்களுக்கு முன்னர், தனியாகப் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகளை வன்முறைக் கொண்டு மிரட்டி அந்த இளம் பெண்ணை விடிய விடிய பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, பெண்ணியத்தின் மாண்போடு சேர்த்து அந்த இளம்பெண்ணைத் தூக்கி வீசிச் சென்ற நிகழ்வும், காப்பீட்டுத் தொகைக்காகத் தனது தந்தையைக் கொலை செய்யும் அவலங்களும் ஒரு சாதாரண செய்தியாகக் கடந்து சென்றுவிடுவதைப் பார்க்கிறோம். அண்மையில் திருமணமான பெண் தனது காதலனோடு இணைய, தான் பெற்ற குழந்தையையே கொன்றுவிட்டதும் சாதாரணமான செய்தியாகக் கடந்து செல்லப்படுகிறது.
இன்றைய
நமது தமிழ்ச் சமூகத்தில் சாதாரணமாகக் கடந்து செல்லப்படும், ஊடக வெளிச்சம் பற்றிக்கொண்ட நிகழ்வுகள் இந்த அளவுக்கு மனிதத்தன்மையற்றதாக இருக்கிறது எனில், ஊடக வெளிச்சம் எட்டாத, பொதுப்புத்திக்குத் தெரியாத, வெளியில் சொல்ல முடியாத எத்தனை எத்தனை ஈனச் செயல்பாடுகள் நமது சமூகத்தில் சாதாரணமாக நடந்துகொண்டே இருக்கின்றன என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பார்த்தால், நமது தமிழ்ச் சமூகத்தின் அசாதாரண நிலை நமக்குப் புரியும். எப்ஸ்டீனும் நாமும் சமகாலத்தவர்தானே? இன்று வளரும் தலைமுறையினர், இத்தகைய நிகழ்வுகளைக் குறித்து எப்படி இயங்குகிறார்கள் என்பதும் இத்தகைய நிகழ்வுகளைச் சாதாரண செய்தி என்ற அடிப்படையில்தான் புரிந்துகொள்கிறார்கள் என்றும் நமக்குத் தெரியும்.
‘எது சாதாரணம்?’ என்று நமது மனத்தில் ஒரு நாளும் கேள்வி எழுவதில்லை. ஏனெனில், சமூகத்தில் நடப்பது அனைத்தும் சாதாரணமே என்ற மன நிலை சமூகத்தின்
பொதுப்புத்தியில் பல்வேறு வடிவங்களிலும் அடையாளங்களிலும் உளவியல் வருணனைகள் கொண்டும் உருவாக்கப்படுகிறது என்று காண்கிறோம்.
பிரபல
சினிமாவிலும் இன்றைய கதாநாயகன்கள் கடத்தல்காரனாகவும் கொலைகாரனாகவும் அநீதி இழைப்பவனாகவும் சமூகப் பொறுப்பு இல்லாத சுயநலவாதியாகவும் தொடர்ந்து சித்தரிக்கப்படுவதும், இளம் பருவத்தில் வன்முறைகளை மனத்தில் பதிக்கும் வகையிலும், இரக்கமற்ற முறையில் கொன்று வெற்றியடையும் விதத்திலும் அலைப் பேசியை நிறைக்கும் இணைய விளையாட்டுகளும், சமூகத்தில் அனுதினம் சாதாரணம் என்ற போர்வையில் நாம் கடந்து செல்லும் இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து காட்டும் சமிக்ஞை என்ன?
“உண்மையல்ல என்று நமக்குத் தெரிந்த கருத்துகளையும்கூட நம்பும் ஆற்றல் நம் அனைவருக்கும் உண்டு. பின்னர், நாம் தவறு என்று இறுதியாக நிரூபிக்கப்படும்போது, நாம்தான் சரி என்று காட்டுவதற்காக உண்மைகளைத் துணிச்சலுடன் திரித்துக்கூறும் இயல்பும் நமக்கு இருக்கிறது” என்ற
ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்று இன்றைய,
அநீதியைச் சாதாரணமாக்கும் சமூகக் கட்டமைப்பு குறித்த நமது நிலைப்பாடுகளில் உண்மையாவதைக் காண்கிறோம்.