அசிங்கம் - ‘இது என்ன புதியதும் புதிருமான தலைப்பு?’ என்ற வினா வாசகர்களுக்கு எழுந்தால் அவ்வினாவில் வியப்பு எதுவும் இல்லை.
அண்மையில்
ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், அவர் மகன் மருத்துவர் அன்புமணியின் அரசியல் நடவடிக்கை பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில், ‘அசிங்கம் என்று ஒரே வார்த்தையில் பதில் கூறாமல் ‘அ-சி-ங்-க-ம்’ என்று பிரித்துப் பிரித்துக் கூறிய பதிலே இது.
மருத்துவர்
அய்யா, தான் பெற்ற மகனின் அரசியலுக்கு ‘அசிங்கம்’
என்ற அடைமொழியைத் தந்தார். நமக்கு எழும் கேள்வியெல்லாம் அன்புமணியின் அரசியல் மட்டுமே ‘அசிங்கம்’
என்ற அடைமொழிக்குள் அடங்குமா?
கடந்த
பல மாதங்களாக, அதுவும் கடந்த ஒரு மாதமாக நாம் அனுபவித்து வரும் தேர்தல் சூட்டில் குடிமக்கள் எத்தனை வகை அசிங்கங்களைக் கண்டு வருகின்றனர்? கண்டும்
காணாதிருக்கின்றனரா? அல்லது அரசியல் என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமோ? இதுதான் நியாயமான அரசியலோ? இதைத் தாண்டிய ஒரு நிலையை எதிர்பார்ப்பது அறியாமையின் விளைவோ? என்று கூட எண்ணத் தோன்றினாலும் வியப்பில்லை.
உலகில்
தோன்றிய அரசமைப்புள் (Political System) குறைந்த
அளவு குறைபாடுகளை உடையதாகச் சனநாயக அரசியலைக் குறிப்பிடுவர். குடிகளைக் குடிமக்களாக்கிய சனநாயகம், குடிகள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையில் (Fact) உருவானது.
குடிமக்களை ஆற்றல்படுத்தும் கருவியுள் ஒன்றான தேர்தல், மிகப்பெரிய மதிப்பீட்டை உள்ளடக்கமாகக் கொண்டது. ஆனால், என்ன நடக்கிறது? சனநாயகத்தைக் கிஞ்சித்தும் நம்பாத அரசியல் கட்சிகள், சனநாயகத்தை உறுதி செய்யத் தரப்பட்ட தேர்தல் சனநாயகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதன் காரணம் என்ன?
பன்மையைப்
போற்றும் சனநாயகத்தை, பன்மைச் சமூகங்களின் சமப்பங்கேற்பை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் சனநாயகத்தின் உள்ளார்ந்த மகோன்னத்துவத்தைப் புரியாமலே பெறும் வாக்குகளைக் குறிவைத்து நடத்தப்பெறும் தேர்தல் முறை அசிங்கமில்லையா?
மதம்,
இனம், மொழி என்ற அடையாள வழி மக்களை ஒருங்கிணைத்து, ஆட்சியதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் போக்கை ‘அசிங்கம்’
என்று தானே அழைக்க முடியும்!?
மதரீதியாக
மக்களை அணிதிரட்டி, மதப்பெரும்பான்மையில் உருவாகும் அரசு மதவாத அரசாகும் போது, அது மதப்பெரும்பான்மைவாத அரசாகத்தான் இருக்கமுடியுமென்றால், இப்போக்குச் சனநாயகத்திற்கே அசிங்கமில்லையா? இலங்கையில் சிங்களப் பேரினவாதமும் - இப்படிக் கட்டமைக்கப்பட்ட நாசியின் செர்மனி சொல்லும் கதையும் இதுதானே!
மதச்சிறுபான்மையினரைத்
தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி, ஒடுக்கி வரும் நிலையைச் சமயசார்பற்ற சனநாயகச் சக்திகள் ஓயாது எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தபின்பும், கேளாக் காதினராய், தமிழ்நாட்டுக் கட்சிகள் பல கூடா வகையில்
ஒன்றியத்தை ஆளும் கட்சியோடு கூட்டணி வைப்பது அழகா? அசிங்கமா? ஆதிக்கம், ஆட்சி அதிகாரம் எனும் இவற்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டொழுகுதல் அரசியல் அறமா? அசிங்கமா?
நடைமுறை
வாழ்வில் சாதாரண மக்கள் வாழ்க்கையில் கட்டாயமாக, எவ்விதச் சமரசமுமின்றிக் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகள் பல உள்ளன. தீமை
கண்டு அஞ்சும் மக்கள் வாழ்கின்ற சமூகத்தில், இச்சமூகத்தை ஆளும் உரிமையைப் படைத்தவனே அருளியதாக எண்ணிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் வீற்றிருக்கும் அரசியல் தலைவர்கள், மக்களின் பார்வையில் எப்போதும் ஏதோ ஒரு வெளியில் மக்கள் கண்களுக்குத் தெரிபவர்கள். சமூக ஊடக வழி உலகோர் கண்களில் எப்போதும் காட்சியளிப்பவர்கள். இவர்கள் ஒருவகை ஒளிவட்டத்தில் இருந்தபோதும், உண்மை எனும் உயர் பண்பு இவர்களில் வெளிப்படவே இல்லையே!
அண்மை
நிகழ்வொன்றை இந்த அசிங்கப் பண்பிற்கு எடுத்துக்காட்டாய் காட்ட முடியும். அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தொகுதி வரைவுக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்ட அறிமுகத்திற்குப் பின் எத்தனையோ தந்திரங்கள் இருந்தன என்று பார்க்கையில், ஆளுங் கட்சியினரின் அசிங்க, அறமற்றப் போக்கினை நாம் அறியமுடியும்.
முதிர்ந்த
அரசியலாளருக்குரிய எச்சாயலுமின்றி, எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ள முடியுமோ அவ்வளவு கேவலமாக ஆள்வோர் நடந்துகொண்ட போக்கைக் காணமுடிந்தது. ஏற்கெனவே 2023-இல் நிறைவேறிய பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவைக் கிடப்பில் போட்டுவிட்டு, தொகுதி வரையறைக்கான அரசியல் சாசனத் திருத்தச் சட்டத்தைப் பெண்கள் இடஒதுக்கீட்டோடு இணைத்து ஒன்றிய அரசு நடத்திய நாடகத்தைச் சரியாகக் கணித்த எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து முறியடித்தனர்.
தொகுதி
வரையறையின் மூலம் தென்னகம் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பைக் காட்ட, ஒன்றிய அரசின் காவலர்களாம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் கிடைத்தத் துருப்புச் சீட்டை எடுத்து, நன்றாகவே விளையாடினர். பா.ச.க.
அரசின் நரித்தனம் அம்பலமாகவே, ‘எதிர்க்கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தனர்; பெண்களின் சனநாயகப் பங்கேற்பின் எதிரிகள் இவர்கள்’ என்றெல்லாம் பொய்யாகப் பேசி, அவதூறு செய்து வருகின்றனர்.
தொகுதி
வரையறை மூலம் வட மாநிலங்களில் குறிப்பாக,
உத்திரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை கடுமையாக உயரும் என்பதைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் சுட்டிக்காட்டியதால், இரண்டு நாள்களுக்கு முன், உத்திரப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாதலை எதிர்ப்பதாகப் பேசுகிறார்கள். இது என்ன அரசியல்?
தமிழ்நாட்டின்
உதயநிதி சில வருடங்களுக்கு முன் சனாதனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த போது, ‘தமிழ்நாட்டு ஆளும் கட்சி, இந்துகளுக்கு எதிரானது’
என்று திட்டமிட்டு பரப்புரை செய்தனர்.
நமது
ஊரகங்களில், அண்டை வீடுகளில்கூட இவ்வளவு தூரம் திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்மைகளை நாம் காண்பதில்லை. அன்றாட வாழ்வில் இரு நபர்களுக்கிடையே அல்லது இரு சமூகங்களுக்கிடையே பகை எழுவதும், பகை முரண்களால் சச்சரவு எழுவதும் உண்டு. இம்முரண்களில் உருவாகும் சஞ்சலங்கள் எளிதில் தீர்ந்து போவதையும், தீர்க்கப்பட்டு விடுவதையும் நாளும் நாம் காணும் நடைமுறைகளே. ஆனால், ஒரு நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவர்கள் குடிமக்களிடையே சண்டை மூட்டுவதும், அந்தச் சண்டை எனும் தீயை அணையாமல் காத்து, அதில் அரசியல் இலாபம் காண முயல்வதும் அசிங்கமில்லையா?
இவ்வகையான
அரசியல் அசிங்கங்களை நாம் நாளும் சந்தித்து வருகின்றோம். அண்மை வரவான விஜய் அவர்களை ‘ஜோசப்’ விஜய் என்று அடையாளப்படுத்திய மதவாதிக்கு அன்று ஒரு நோக்கம் இருந்தது. விஜய்க்கும் ‘ஜோசப்’ ஆதாயமானதால் தன் பெயரை ‘ஜோசப்’ என்று அழுத்திக் கூறினார். ஜோசப் ஒரு கிறித்தவப் பெயராக இருந்தமையால் கிறித்தவர் வாழும் ‘கிழக்கை’ தெரிவு செய்கிறார். கிழக்கில் கிறித்தவத் தேவாலயத்தில் இட்ட முழந்தாளின் ஈரம் காயும்முன்னே திருச்செந்தூருக்குத் தனி விமானப் பயணம், அப்படியே மகாராஷ்டிரத்தின் சீரடி பாபா தரிசனம்... ஜோசப் இப்போது கிறித்தவர் மட்டுமல்லர்; சர்வ சமய யோகி! இது என்ன அரசியலோ?
நமது
நாட்டில் நம் தலைவர்கள் நடத்தும் கூத்துகளை வெறும் ‘அசிங்கம்’
என்று கேலிசெய்து, அதன் பின்னுள்ள அரசியலைக் கண்டும் காணாதிருப்பது மாபெரும் தவறு. இதைச் சாதாரணமாக எண்ணி விட்டுவிடமுடியாது; விட்டுவிடவும் கூடாது.
இயேசுவின் திரு இருதய சபையின் நிறுவுநர் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா ஒரு மாபெரும் சகாப்தம். ஒரு புதிய வரலாறு. எண்ணற்றவரின் வாழ்வை, பயணத்தை, பாதைகளை இன்றும் மிக நெருக்கமாகப் பாதித்து வழிநடத்தும் உன்னதக் கொடை!
ஒரு
குறுகிய காலத்தில் ஆண்டவன் மீதுள்ள அணையாத தாகத்தால் ஒரு மாபெரும் சபையை ஆரம்பித்துப் பணிசெய்தவர். இன்று தென்னகம் போற்றும் தேவதையாக எல்லார் முன்பும் உயர்ந்து, எண்ணற்றவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து நிற்கிறார். இவரது வாழ்வும் நற்பண்புகளும் அசாதாரணமானவை என்பது பலரும் பாராட்டும் நிதர்சனமான உண்மையும், மிகையேதும் இல்லாத தரவுமாகும்.
இந்தியத்
துணைக் கண்டத்தின் தென்முனை குமரி மாவட்டம் எழிலானது; கடலும் குன்றுகளும் வயலும் குளங்களும் நிரம்பியது. இந்த அழகிய நிலத்தின் மையம் நாஞ்சில் நாடு. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நிலத்தில் உள்ளது அன்னை பிறந்த ஊரான பட்டரிவிளை. 1917-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் திருவாளர் சவரிமுத்து-சவரியாயி தம்பதியரின் நான்காவது கனியாக அன்னை பிறந்தார்.
அன்னையின்
குடும்பம் பெரியது. ஏழு குழந்தைகள். பங்கு ஆலயத்தை அடுத்த, இதய ஆண்டவர் ஆட்சி செய்யும் அழகான இல்லம் இவர்களுடையது. இளமையிலிருந்தே கல்வி, ஆலயம், வழிபாடு, பிறருக்கு உதவுதல் போன்றவை அன்னையின் வாழ்வை அழகு செய்தன.
உயர்
கல்வி முடிந்ததும் இறைவன் இவரை அழைத்தார். 1939-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற அன்னையைப் புனித அகுஸ்தினார் சபை அன்போடு அரவணைத்தது. 1941-ஆம் ஆண்டு முதல் வார்த்தைப்பாடு முடிந்தது. தொடர்ந்தது ஆசிரியர் பணி, நற்செய்தி அறிவிப்புப் பணி, ஆலயப் பணி, அன்புப்பணி. ஏழையர் பணியில் இறைவனைக் கண்டு இன்புற்று மகிழ்ந்தது அன்னையின் துறவு வாழ்வு.
தூய
அகுஸ்தினார் சபைத் துறவியாக வாழ்ந்த காலத்திலேயே அன்னையிடம் மிளிர்ந்தது அசாதாரண தலைமைப் பண்பு. பள்ளியாடி தொடக்கப்பள்ளி இதற்கு ஒரு சிறந்த சான்று. திடீரென அங்குத் தொடங்கியது ஒரு பெரிய மாணவர் பிரச்சினை. ‘கிறித்தவப் பள்ளிகளில் மற்ற மதத்தினரைச் சேர்க்கக்கூடாது’ என்று
ஒரு புதிய சட்டம். பல பிள்ளைகளின் பெற்றோர்
தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதைத் தவிர்த்தார்கள். ஏற்கெனவே சேர்ந்தவர்கள் பள்ளியில் இருந்து விலகினார்கள். திணறியது பள்ளியின் தலைமை நிர்வாகம். உடனே அன்னையின் உதவியை அணுகினார்கள். விரைவில் மீண்டும் பள்ளியாடியில் பணியமர்த்தப்பட்டார் அன்னை. அன்னையின் பேச்சும் கனிவும் அனைவரையும் கவர்ந்திழுத்தன. சில வாரங்களிலேயே பிரச்சினைக்குத் தீர்வு கண்டார் அன்னை. அனைவரும் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அன்னையின் உதவியால் பள்ளி மீண்டும் வேகமான வளர்ச்சியில் வெற்றி நடைபயின்றது.
புதிதாக
வந்தது ஒரு பெரும் புயல். அதன் வேகம் கட்டுக்கடங்காதது. இந்திய விடுதலையும் ஐரோப்பியர் வெளியேற்றமும் இதற்குக் காரணங்கள். ஐரோப்பியர் அதிகமாக ஆக்கிரமித்திருந்த புனித அகுஸ்தினார் சபையில், இந்தியச் சகோதரிகளின் நிலை இரண்டாம் நிலை. வெளியேறலாம், வேறு சபையில் சேரலாம், இல்லை இருக்கும் நிலையில் தொடரலாம் என்ற ஒரு பரிதாப நிலை.
இறைவனை
நாளும் நெஞ்சில் சுமந்து பணி வாழ்வு பற்றிப் பல கனவுகள் கண்ட
இந்தியச் சகோதரிகளின் துறவு வாழ்வு பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்தப் பேரிடி அன்னையின் உள்ளத்தில் ஏற்படுத்திய மீளாத் துயரம் பெரிதானது. புயலடித்தபோது தோன்றிய புதிய கனல்தான் புதிய சபை. அது அணையாத தீபமாக இன்று அவனியையே ஆட்கொண்டு இதய சபையாக, இதய ஆண்டவரின் அன்பு ஆட்சி, அரசு வளர உலகின் பல பாகங்களில் பணியாற்றி
வருகிறது.
(தொடரும்)
அன்புக்குரிய சகோதரர்களே, சகோதரிகளே!
நமது
முகங்களும் குரல்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மை வாய்ந்தவை. இவை மீண்டும் உருவாக்க இயலாத அவரது ‘தான்மையை’
வெளிப்படுத்துகின்றன.
இவை அவர் பிறரோடு உறவுகொள்ளும் விதங்களின் கூறுகளை நிர்ணயிக்கின்றன. நம் முன்னோர் இதனை நன்கு அறிந்திருந்தனர். ஒரு மனிதனை வரையறுக்க பழங்காலக் கிரேக்கர்கள் ‘புரோசோபோன்’ (Prosopon) முகம் என்ற
சொல்லைப் பயன்படுத்தினர். இச்சொல்லின் மூலச் சொல்லானது, தனக்கு முன்னால், தன் பார்வையில்படும்படி இருப்பதையும், அதன் இருப்புத் தன்மையையும், அதனோடு உறவுகொள்ளுதலையும் குறித்துக் காட்டுகிறது. அதற்கு மாறாக ‘ஆள்’
(per-sonare) என்னும் இலத்தீன் மொழிச் சொல், ஒலி என்பது ஏதோ ஒரு சத்தத்தையல்ல; மாறாக, ஒருவருடைய குரலோசையைத் தவறின்றி ‘இது அவரது குரலே’ எனக் குறித்துக்காட்டுகிறது.
முகங்களும்
குரல்களும் புனிதமானவை. தமது உருவிலும் சாயலிலும் நம்மைப் படைத்த கடவுள், தமது திருவார்த்தையால் நம்மை உயிருடன் உண்டாக்கியபோது, நமக்குத் தனித்தனியான முகங்களையும் குரல்களையும் கொடுத்தார். ஆண்டுகள் பலவாக, இறைவாக்கினர்களின் குரல்கள் வழியாக ஒலித்த இறைவனின் வார்த்தை காலம் நிறைவேறியபோது மனிதர் ஆனார். நாமும் இந்த வார்த்தையைக் கேட்டும் கண்டும் இருக்கிறோம் (1யோவா 1:1-3). கடவுள் தமது ‘தான்மை’யையே நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏனெனில், கடவுளின் திருமகனாகிய இயேசுவின் குரல் மற்றும் முகத்தின் வழியாக இவற்றை நாம் அறியச்செய்கிறார்.
நாம்
படைக்கப்பட்டபோதே ஆண்களும் பெண்களும் தம்மோடு உரையாடுபவர்களாக இருக்க கடவுள் விரும்பினார். புனித நீசா நகர் கிரகோரியார் (குறிப்பு 1) கூறுவதுபோல, “தமது இறையன்பின் பிரதிபலிப்பை நமது முகங்களில் அவர் பதித்துள்ளார். இதனால் நாம் நமது முழுமையான மனிதத்தன்மையை அன்பின் வழியாக வாழ முடியும். எனவே, மனித முகங்களையும் குரல்களை யும் பாதுகாப்பது படைப்பில் நமது முகங்களிலும் குரல்களிலும் கடவுள் பதித்துள்ள அழிக்க முடியாத இறைவனின் அன்பைப் பாதுகாப்பது ஆகும்.”
மனிதராகிய
நாம் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட உயிர் - வேதியியல் விதிகளால் உருவாக்கப்பட்ட இனம் அல்ல; நாம் ஒவ்வொருவரும் மாற்றியமைக்க முடியாத தனித்துவமான அழைத்தலைக் கொண்டுள்ளோம். இந்த அழைத்தல் நமது வாழ்வின் அனுபவங்களிலிருந்து தோன்றி, பிறரோடு நாம் கொள்ளும் உறவாடல்களில் வெளிப்படும்.
மனிதரின்
முகங்களையும் குரல்களையும் பாதுகாக்கும் இப்பணியைச் செய்யத் தவறினால், எப்போதும் நிலைத்திருக்கும் என அலட்சியமாக நாம்
கருதும் மனிதப் பண்பாட்டின் அடித்தளத் தூண்கள் சிலவற்றை முழுமையாக மாற்றிட எண்ணிமத் தொழில்நுட்பம் அச்சுறுத்துகிறது. இது மனிதரின் குரல்கள், முகங்கள், அறிவு, ஞானம், உணர்வுநிலை, பொறுப்புணர்வு, இரக்கம், நட்பு போன்றவற்றைச் செயற்கை நுண்ணறிவு அமைப்பு முறையில் உருவகப்படுத்துகிறது. தகவல்களின் சுற்றுச்சூழல் அமைப்புமுறையில் தலையிடுதலோடன்றி, மனித தொடர்பாடலின் அடித்தளமான மனித உறவுகொள்ளுதலில் அத்துமீறிக் குறுக்கிடுகிறது. இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த சவால் மட்டுமல்ல; மாறாக, இது மானுடவியல் சார்ந்த சவாலாகும். நமது முகங்களையும் குரல்களையும் பாதுகாப்பது நம்மையே பாதுகாப்பதாகும். துணிவோடும் உறுதியோடும் அறிவுக்கூர்மையோடும் செயற்கை நுண்ணறிவும், எண்ணிமத் தொழில்நுட்பமும் அளிக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வது என்பது, முக்கியப் பிரச்சினைகள், சிக்கல்கள், பேரிடர்கள் போன்றவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல.
உங்கள் சிந்திக்கும்
ஆற்றலைக்
கைவிட
வேண்டாம்
சமூக
ஊடகங்களில் ஈடுபாட்டை அதிகரிக்க உருவாக்கப்பட்ட நெறிப்பாட்டு முறைகள் (Algorithms) பல்வேறு
தளங்களில் உணர்ச்சிப்பூர்வமான உடனடிப் பலன்களைத் தந்தாலும் சிந்திக்கவும் புரிந்துகொள்ளவும் போதுமான நேரம் எடுக்கும் மனிதச் செயல்பாடுகளை மிகவும் பாதிக்கின்றன. இந்த நெறிப்பாட்டு முறைகள் மனிதரை எளிதில் ஒத்துப்போகும் அல்லது எளிதில் ஒத்துப்போகாத எண்ணிமக் குமிழிகளாகப் பிரித்து வைக்கின்றன. இந்த நெறிப்பாட்டு முறைகள் செவிமடுக்கவும், விமர்சித்துச் சிந்திக்கவும் மனிதருக்குள்ள ஆற்றலைக் குறைத்து, சமூக துருவப்படுத்துதலை அதிகரிக்கின்றன.
அனைத்தும்
அறிந்த ‘நண்பனாகவும்’ அறிவு
அனைத்திற்கும் ஊற்றாகவும் ஒவ்வொரு நினைவகத்தின் காப்பகமாகவும் எல்லா அறிவுரைக்கும் ‘தெய்வ வாக்காகவும்’ இன்று
கருதப்படும் செயற்கை நுண்ணறிவை (AI) கேள்விக்குட்படுத்தாமல்
சார்ந்திருப்பது இன்று தீவிரப்படுத்தப்படுகிறது. மேலும், இது நமது படைப்பாற்றலோடும் பகுப்பாய்வுத் திறனோடும் சிந்திக்கும் திறனையும், ஒரு கருத்தின் தொடரியலுக்கும் சொற்பொருளுக்குமிடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ளும் மனித ஆற்றலையும் இது படிப்படியாக அழித்து விடுகிறது.
தொடர்பாடலின்
செயல்பாட்டு மேலாண்மைக்குச் செயற்கை நுண்ணறிவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தாலும், காலப்போக்கில் நமது சிந்திக்கும் ஆற்றலைக் குறைத்து, செயற்கைப் புள்ளியியல் தொகுப்புகளைச் சார்ந்திருத்தலையும் அறியும் திறனையும் உணர்வாற்றலையும், தொடர்பாடல் திறன்களையும் குறைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவு செயல்முறைகள், புத்தகங்கள், இசை, காணொளி போன்றவற்றின் தயாரிப்பைத் தன்வசப்படுத்தியுள்ளது. இது படைப்பாற்றல் கொண்ட தொழில்முறைகளை மாற்றியமைக்கும் ஆபத்தைத் தோற்றுவிக்கிறது. இதனால் எல்லா உற்பத்திகளும் செயற்கை நுண்ணறிவினால் இயக்கப்பட்டது (Powered by AI) என்ற
பதாகையுடன் மனிதர்களைச் சிந்திக்க இயலாதவர்களாகவும், அன்பும் உரிமையும் இல்லாத செயலற்ற நுகர்வோராகவும் மாற்றுகின்றது. இந்நிலையில் மாமேதைகளின் தலைசிறந்த இசை, கலை, இலக்கியம், படைப்புகள் ஆகியவை இயந்திரங்களின் பயிற்சிக் களமாக மாறி, தமது மாண்பை இழந்துவருகின்றன.
இயந்திரங்கள்
என்ன செய்யும்? அல்லது அவற்றால் என்ன செய்ய இயலும்? என்று கேட்பதைவிட, நம்மிடமுள்ள ஆற்றல்மிக்க இயந்திரங்களை அறிவுத்திறனோடு பயன்படுத்தி மனித நேயத்தை வளர்க்க இயலுமா? எவ்வாறு அதைச் செய்ய முடியும் என்பதே இன்றைய முக்கியக் கேள்வியாகும். இன்று மனிதர்கள் போதிய உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆய்வு, தனிமனிதப் பொறுப்புணர்வு ஆகியவை இல்லாமல், அறிவு வளர்ச்சியின் பயன்களை அடைய முயன்றுவருகின்றனர். இருப்பினும், மனிதன் தன் படைப்பாற்றலைக் கைவிட்டு நமது அறிவின் ஆற்றல்களையும் கற்பனைத் திறனையும் இயந்திரங்களுக்குள் சரணடையச் செய்வது, கடவுளோடும் மனிதரோடும் உறவுகொள்ள நமக்குக் கொடுக்கப்பட்ட நமது திறமைகளைப் புதைக்கும் செயலாகும். இது நமது முகங்களை மறைக்கும் மற்றும் குரல்களை அமைதியாக்கும் செயலாகும்.
இருத்தல் அல்லது
இருத்தல்
போல
நடித்தல்
- எதார்த்தத்தையும்
உறவுகொள்ளுதலையும்
போலியாக
உருவகப்படுத்துதல்
கணினித்
திரையில் தரவுகளை நகர்த்தும்போது ‘நாம் தொடர்புகொள்வது உண்மையான மனிதரோடா? அல்லது மெய்நிகர் செல்வாக்குடைய தானியங்கி நிரல்களோடா?’ என்று நிர்ணயிப்பது மிகவும் கடினமாகிறது. வெளிப்படைத்தன்மை குறைவான இந்தத் தானியங்கி முகவர்களின் தலையீடு, மக்களின் பொது விவாதங்களையும் தேர்வுத் திறனையும் மிகவே பாதிக்கிறது. பெரிய மொழி மாதிரிகளின் (LLMs) அடிப்படையில்
செயல்படும் தானியங்கி உரையாடிகள் (Chatbots) மனிதரின்
எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தைகளை அவர்கள் அறியாமலேயே கையாளுதல் மூலம் ஒருவரை யோசிக்காமலேயே எதையும் ஒப்புக்கொள்ளவைக்கும் செயல்முறைகள் இன்று மனிதரின் தனிப்பட்ட தொடர்புகளில் ஆச்சரியத்திற்குரிய அளவில் இருப்பதைப் பார்க்கிறோம்.
உரையாடல்
சார்ந்த சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மையும், நகலெடுக்கும் தன்மையைக் கொண்ட பெரிய அளவிலான மொழிமாற்றிகள் மனிதரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆற்றல் உள்ளவையாதலால், மனித உறவுகளைப் பாவனை செய்யவல்லனவாக உள்ளன. இந்த மனிதப் பண்பேற்றல் (Anthropomorphization) செயல்பாடுகள்
நல்ல, ஆர்வத்தைத் தூண்டும் பொழுதுபோக்காக இருப்பினும், இது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களையும்,
பிறரை ஏமாற்றும் வகையிலும் செயல்படுகின்றன. தானியங்கி உரையாடிகள் பலரால் அதிகம் ‘விரும்பப்படுவனவாகவும்’, எப்போதும்
எல்லாருக்கும் எளிதில் அணுகக்கூடியனவாகவும் இருப்பதால், இவை நமது உணர்வு நிலைகளை மறைமுகமாக உருவாக்கும் கட்டடக் கலைஞர்களாகச் செயல்பட்டு, நமது தனிமனித நெருக்கத்தில் அத்துமீறி நுழைகின்றன.
நமது
மனித உறவுகளின் தேவையைத் தொழில்நுட்ப வளர்ச்சி தவறாகப் பயன்படுத்துதல் தனி மனித வாழ்க்கையில் துயரமான விளைவுகளுக்கு இட்டுச்செல்வதோடு சமுதாயத்தின் சமூக, கலாச்சார, அரசியல் கட்டமைப்புகளையும் அழிப்பதாகும். மனித உறவுகளுக்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கருவிகள் நமது எண்ணங்களைப் பட்டியலிட்டு, நம்மைச் சுற்றிப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி உலகை உருவாக்குகிறது. இதனால் நம்மைச் சுற்றியுள்ளவை எல்லாமே ‘நமது சாயலாகவும் பாவனையாகவும்’ தோன்றச்
செய்கின்றன. இதனால் நாம் நம்மிலிருந்து வேறுபட்டவர்களையும், நாம் கட்டாயம் உறவுகொள்ள வேண்டிய பிறரையும் சந்திக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன. மற்றவர்களை நேரில் அரவணைத்துச் செல்லாதபோது உறவுகள், நட்புகள் இருக்க இயலாது.
மற்றுமொரு
மிகப்பெரும் சவால் என்னவெனில், புதிதாகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளால் சார்பு நிலையும் பாகுபாடும் எழுகின்றன. இதனால் எதார்த்த நிலையை நமக்குத் தருபவரின் அல்லது நம்மிடமிருந்து பெறுபவரின் மனநிலைக்கேற்ப மாற்றப்பட்ட பார்வையில் எதார்த்தத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் உருப்படிவங்கள் அவற்றை உருவாக்குகின்றவர்களின் பார்வைக்கும் நோக்கத்திற்கும் ஏற்ப அமைகின்றன. இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தரவுகளிலிருந்து ஒரே மாதிரியான படிவார்ப்பு அமைப்புகளையும், முன்சார்பு எண்ணங்கள் கொண்ட சிந்தனை முறையையும் நம்மீது திணிக்கின்றனர். வெளிப்படைத் தன்மையில்லாத நெறிப்பாட்டுமுறைச் செயல்பாடுகளாலும், சமூகம் சார்ந்த தரவுகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதபோதும், நமது சிந்தனைகள் சூழ்ச்சித் திறத்துடன் கையாளப்பட்டு, நம்மைச் சரியில்லாத வலைப்பின்னல்களில் சிக்கவைக்கின்றன. இதனால் ஏற்கெனவே உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அநீதியையும் அதிகமாகத் தீவிரப்படுத்துகின்றன.
இதனால்
பெரும் ஆபத்து அடுத்துள்ளது. இத்தகைய ஒப்புருவாக்குதல் மிகவும் ஆற்றல் கொண்டது. செயற்கை நுண்ணறிவு உண்மையான எதார்த்தத்திற்கு இணையான, போலியான ‘எதார்த்தங்களை’ உருவாக்கி
நம்மை ஏமாற்ற வல்லது. இது நமது முகங்களையும் குரல்களையும் அபகரிக்கிறது. நாம் பல்வேறு பரிணாமங்கள் கொண்ட இன்றைய உலகில் உண்மைக்கும், புனைக் கதைகளுக்குமுள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிப்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகின்றது.
இந்தத்
துல்லியமற்றத்தன்மை இப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துகிறது. புள்ளியியல் நிகழ்த் தரவுகளையே தருகின்ற இந்தச் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் முழு உண்மைக்குப் பதிலாகத் தோராயமான கணிப்புகளையே தருகின்றன. இவை உண்மைக்கு மாறான மாயையை உருவாக்குகின்றன. தரவுகளின் மூலங்களைச் சரிபார்க்கத் தவறுதல், நிகழ்விடங்களில் அறிக்கை தயாரிப்பதில் ஏற்படும் நெருக்கடிநிலை, நிகழ்விடங்களில் செய்தி மற்றும் தரவுகளைச் சேகரிப்பதிலும், அவற்றைச் சரிபார்ப்பதிலும் உள்ள சிக்கல்கள் முதலியன தவறான தகவல்களைத் தரும் பேராபத்தைக் கொண்டுள்ளன. இதனால் மனிதரிடையே அவநம்பிக்கை, குழப்பம், பாதுகாப்பின்மை போன்றவை தோன்றச் செய்கின்றன.
(தொடரும்)
“என்ன மூப்பு, உம்ம பத்தி எல்லாவனும் ஏதேதோ சொல்லுரானுவ. எடுத்தியருனா குடுத்திடும். எதுக்குத் தேவ இல்லாத சண்ட சச்சரவு...”
மிக்கேல்
தன் சொந்தக்காரன் என்றாலும் தன்னைத் திருடன் என்று முடிவே செய்துவிட்டது யாகப்பனுக்குப்
பிடிக்கவில்லை. அமைதியாகவே ஊர்க் கூட்டத்தில் உட்கார்ந்திருந்தார். யாகப்பனை ஒரு காலத்தில்
‘கடல் ராசா’னுதான் எல்லாரும் சொல்வார்கள். கடல்
பற்றிய அறிவு அவரைப்போல யாருக்கும் இருந்ததில்லை. 1964 இராமேஸ்வரம் புயலால் பாதிக்கப்பட்டு,
தனுஷ்கோடியிலிருந்து பாம்பன் வந்து தொழில் பாக்குற குடும்பம்தான் யாகப்பனுடைய குடும்பம்.
கரையான்கள் சேர்ந்து மண்கோபுரம் கட்டுவதுபோல யாகப்பனுடைய குடும்பம் சேர்ந்து ஒரு பெரிய
மீன்பிடி படகு ஒன்றை வைத்து தொழில் பார்த்துக்கொண்டிருந்தது. யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை;
ஒருநாள் இலங்கைக் கடற்படை, எல்லைகடந்து மீன் பிடித்ததற்காக யாகப்பனுடைய படகைப் பறிமுதல்
செய்து, ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கியது.
படகை
இழந்தது என்பது, பறவை ஒன்று தன் சிறகை இழந்த வேதனையைக் கொடுத்தது. அன்று உடைந்துபோன
அந்தக் குடும்பம் இதுவரை எழுந்திருக்கவே இல்லை. ஏதோ வயிற்றுப் பிழைப்பிற்காக அவர் கையில்
இருந்தது ஒரு சிறிய பழைய படகு ஒன்றுதான். கடல் தொழிலுக்குப் போகும் ஆள்களையும், வலை
போன்ற பொருள்களையும் ஏற்றிக் கொண்டு ஆழ்பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் பெரிய படகிற்குக்
கொண்டு சேர்ப்பதற்கானது அது. ஒரு காலத்தில் கடல் ராசா, இன்று கடல் சேவகன். இந்தச் சூழலில்தான்
யாகப்பனுக்கு இந்தத் திருட்டுப் பட்டம்.
“என்
போட்ல இருந்த ஜி.பி.எஸ். கருவிய அந்தக் கிழவன்தான் எடுத்தான்னு எல்லாரும் சொல்றானுவ.
அந்தக் கிழட்டு மூதிகிட்ட மருவாதயா ஒப்படைக்கச் சொல்லுங்க” என்று
ஊர்க் கூட்டத்தில் பாதர் முன்னிலையில் கோபத்தில் கொப்பளித்தான் சைமன்.
“அந்த
ஜி.பி.எஸ்ஸை வச்சிக்கிட்டு நான் என்னய்யா பண்ணப் போறேன்? அத வித்துச் சாப்பிடணுங்குற
நிலையில அந்த மாதா என்னய வச்சுக்கல” என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
யாகப்பன் சார்பா பேசுறதுக்கு அங்கு யாரும் இல்லை. பிணம் இருக்கும் இடத்தில் கழுகுகள்
கூடுவதுபோல, பணம் இருக்கும் மனிதர்களோடுதான் உறவுகளும் ஒட்டிக்கொள்கின்றன. யாகப்பனுக்கு
அவமானமாக இருந்தது. தன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் ஒன்று கூடியிருக்கிற இடத்தில்,
தன்னை அவமரியாதையாகப் பேசுவது ஏதோ போலிருந்தது. அந்த வேதனையை முகத்தில் காட்டிக்கொள்ளாமலேயே
இருந்தார்.
“சரி,
நேரமாகுது. யாகப்பரே, எதா இருந்தாலும் பாதர் முன்னாடி உண்மையைச் சொல்லிடுங்க. நாளைக்கு
உன்மேல போலீஸ் கேஸ் வந்தா நாங்க யாரும் வரமாட்டோம்” என்று
ஊர் பெரியவர் ஒருவர் தீர்ப்பெழுதாத குறையாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
அன்று
இரவு முழுவதும் யாகப்பனுக்குத் தூக்கமே வரவில்லை. கடற்கரை வலை பழுதுபார்க்கும் கூடத்திலேயே
படுத்துக்கிடந்தார். அதிகாலை மூன்று மணி இருக்கும். கடலில் ஒரு வினோதமான மாற்றம் தெரிந்தது.
காற்றின் வேகத்தில் கடல் அலைகள் கரையை நோக்கித் தள்ளப்படும் விதம் மாறுபட்டு இருந்தது.
கடற்கரை ஓரத்தில் நின்றிருந்த அவருக்கு ஏதோ விபரீதம் வரப்போவது தெரிந்தது. தன் அனுபவ
அறிவில் அச்சூழல் அவரின் இதயத்துடிப்பை எகிறச் செய்தது.
யாகப்பன்
ஊர் முழுக்க ஓடிச் சென்று ஒவ்வொரு கதவாகத் தட்டினார். “எல்லாரும் எந்திரியுங்க! எல்லாரும்
உயரமான இடத்துக்கு ஓடுங்க! ஆழிப் பேரலை வருது!” என்று கத்தினார்.
சைமனின்
வீட்டு முன் நின்று, “சைமா! உன் படகை அப்புறப்படுத்து! பெரிய சுழி வருது, சீக்கிரம்
ஓடு!” என்று எச்சரித்தார். முதலில் யாரும் நம்பவில்லை. சைமன் ஏளனமாக, “இந்தக் கிழவன்
பைத்தியம் புடிச்சு அலையுறான்” என்று சொன்னான். ஆனால், அடுத்த பத்தே
நிமிடங்களில் கடல் உள்வாங்கத் தொடங்கியது. யாகப்பனின் கண்கள் பொய்யுரைக்காது என்பதை
உணர்ந்த சில மீனவர்கள் பதறியடித்துக்கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடினர். பேரலை வந்து
அந்தக் கிராமத்தையே புரட்டிப்போட்டது.
மறுநாள்
காலை, கடற்கரையில் அனைவரும் கூடினர். சைமனின் பெரிய படகு நங்கூரமிட்ட இடத்திலிருந்து
விலகி, பாம்பன் பாலத்தில் மோதிச் சிதைந்து கிடந்தது. கடல்கரைக்கு அடித்து வரப்பட்ட
பல பொருள்களில் சைமனின் ஜி.பி.எஸ். சும் அடங்கும். பாதர் மெதுவாக யாகப்பனிடம் வந்து,
“யாகப்பரே, உங்களைத் திருடன்னு இந்த ஊர் சொல்லிச்சு. ஆனா, நீங்க இன்னைக்கு எல்லாரையும்
காப்பாத்தியிருக்கீங்க. எங்களுக்கு நீங்கதான் ஜி.பி.எஸ்.” என்றார். காட்டுப் பன்றி
ஒன்றை விழுங்கிவிட்டு அசைய முடியாமல் கிடக்கும் மலைப்பாம்பைப்போல எதுவும் நடக்காததுபோல
இவ்வளவு சேதத்தை அரங்கேற்றிய பிறகு அசைவின்றிக் கிடந்தது கடல்.
யாகப்பர்
தாத்தாவைப்போல இன்றைய உலகில் முதியோரின் அனுபவம் பல வேளைகளில் உதாசீனப்படுத்தப்படுகிறது. இணைய உலகம் முதியோருக்குப் பல வசதிகளைக் கொண்டு
வந்தாலும், அதே உலகம் புதிய அபாயங்களையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பத்தை
முழுமையாக அறியாத முதியவர்கள் பலர் போலியான அழைப்புகள், வங்கி மோசடிகள் மற்றும் ஆன்லைன்
ஏமாற்றுகளின் இலக்காக மாறி வருகின்றனர்.
இந்தியா
ஒரு வேகமான மக்கள்தொகையில் மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டில் 100 மில்லியனாக
இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 2036-ஆம் ஆண்டிற்குள் 230 மில்லியனுக்கும்
அதிகமாக, அதாவது இரண்டு மடங்கிற்கும் மேலாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
பெருந்தொற்றுக்குப் பிறகு சிறாரைப் போல முதியோரும் அதிகமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும்
பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வங்கிப் பரிவர்த்தனைகள், இணைய வழி ஷாஃப்பிங், உடல்நலப்
பராமரிப்பு மேலாண்மை, பொழுதுபோக்கு, சமூக ஊடகங்கள் மற்றும் இதரச் செயல்பாடுகளுக்காக
இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
முதியவர்கள்
தனிமையில் இருப்பது, அவர்கள் ஒருவர்மீது வைக்கும் அதிகளவிலான நம்பிக்கை, நினைவாற்றல்
குறைபாடு, ஏமாற்றத்தை வெளியே சொன்னால் பலரும் கிண்டல் செய்வார்களோ என்ற பயம், தொழிற்நுட்பத்தைப்
பயன்படுத்துவதில் போதிய அனுபவம் இல்லாதது போன்ற காரணங்களே சைபர் குற்றவாளிகள் முதியோரைக்
குறிவைப்பதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. முதியவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட
மொத்த சைபர் குற்ற வழக்குகளில் ‘அடையாளத் திருட்டு’
(identity theft) 33 விழுக்காடாகவும், ‘மெய்நிகர் ஆள்மாறாட்டம்” (அதிகாரிகளைப்போல நடித்து நம்பவைப்பது - virtual impersonation) 62 விழுக்காடாகவும் உள்ளது. இந்தியாவில்
பல முதியவர்கள் இத்தகைய குற்றங்களுக்கு இரையாவதற்கு டிஜிட்டல் விழிப்புணர்வு இல்லாமையே
மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
‘உங்களுடைய
வங்கிக் கணக்கு முடக்கப்பட உள்ளது’ அல்லது ‘உங்கள் KYC காலாவதியாகி விட்டது’ என்று
கூறி யாராவது போன் செய்தால், அதை நம்பாதீர்கள். வங்கிகள் ஒருபோதும் போனில் உங்களுடைய
SMS அல்லது கடவுச்சொல்லைக் (Password) கேட்காது. அப்படி யாராவது கேட்டால், உடனடியாக இணைப்பைத்
துண்டித்துவிடுங்கள். வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். (SMS) மூலம்
வரும் அரசின் இலவச உதவித்தொகை, பென்சன் உயர்வு அல்லது ‘விலை உயர்ந்த பரிசு விழுந்துள்ளது’ போன்ற செய்திகளை நம்பி அதில் இருக்கும் லிங்குகளைக் (Link) கிளிக் செய்யாதீர்கள். சில நேரங்களில் உங்கள் உறவினர்
அல்லது தெரிந்தவர் போலப் பேசி, “நான் அவசரமாக மருத்துவமனையில் இருக்கிறேன், எனக்குப்
பணம் அனுப்புங்கள்” என்று மெசேஜ் வரலாம். பணம் அனுப்புவதற்கு
முன், அந்த உறவினருக்கு நேரடியாகப் போன் செய்து பேசி உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
முதியவர்களுக்கு
எதிரான சைபர் குற்றங்களில், குற்றவாளிகள் பெரும்பாலும் அரசு அதிகாரிகள், காவல்துறை
அதிகாரிகள், வங்கிப் பிரதிநிதிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் போன்ற அடையாளத்தோடு அல்லது
பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் போல நடித்து ஏமாற்றுகிறார்கள். எனவே, முதியவர்கள் இணையதளங்களைப்
பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; ஏனென்றால், சைபர் குற்றவாளிகள்
பெரும்பாலும் அவர்களின் பயம் அல்லது அறியாமையைப் பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். முதுமையிலும் தனிமையிலும் தவிக்கும் முதியவர்கள்
தங்கள் அனுபவத்தாலும் ஞானத்தாலும் இந்தச் சைபர் ஆபத்துகளை எதிர்கொள்ளத் தங்களைத் தகுதிப்படுத்திக்
கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆட்சியில் இருப்பவர்கள் அரக்கக் குணம் கொண்டவர்களாக, நியாயமற்றவர்களாக இருந்தால், நீதிநூல்கள், சட்டங்கள், சாத்திரங்கள் கூட தர்மத்தை இழந்து தவறுக்குத் துணை போகும். அதாவது, அதிகாரம் கெட்டவர்கள் கையில் சிக்கினால், புனிதமான அமைப்புகள் கூட பிணம் தின்னும் பேயாக மாறிவிடும் என்பதே நடப்பு. இதை மகாகவி பாரதியார், ‘பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்றார்.
தன்
மதவாதக் கொள்கையால் ஆட்சி நடத்தும் ஒன்றிய பாசிச பாரதிய சனதா கட்சி, 2024 தேர்தலில் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை
பலம் பெறவில்லை. காரணம், தென்னிந்தியாவில் போதிய தொகுதிகளில் பா.ச.க.
வெற்றி பெறமுடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக பா.ச.க.வைப் புறக்கணித்தார்கள். பீகாரின் நிதிஷ்குமார், ஆந்திராவின் சந்திரபாபு தயவில் என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி நடக்கிறது.
என்.டி.ஏ. என்ற
கூட்டணியில் 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அகாலிதளம் என்ற 16 நடுநிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூழலுக்கு ஏற்ப வாக்களிப்பார்கள். ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் 234 பேர் வலுவாக இன்றும் களம் காண்கிறார்கள். அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்றால், மூன்றில் இரு பங்கு வாக்குவேண்டும். அதைப் பெற பா.ச.க.
எல்லாத் தில்லுமுல்லுகளையும் செய்யும். இரவில் திருடர்களைப் போலச் சட்டங்களை நிறைவேற்றுவார்கள்.
ஐந்து
மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்த நேரம், 131-வது அரசமைப்புத்
திருத்தச் சட்டம் கொணர சிறப்பு மக்களவை அமர்வைக் கூட்டியது. 70 தமிழ்நாடு
மற்றும் மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தனர். அவர்கள் முழுவதும் அவைக்கு வரமாட்டார்கள்; மம்தாவும் ஸ்டாலினும் தேர்தலில் கவனமாக இருப்பார்கள் எனத் தப்புக்கணக்குப் போட்டார்கள். தொகுதி மறுவரையறையை உள்ளடக்கிய 33% மகளிர்
இடஒதுக்கீட்டு மசோதாவை 2026 ஏப்ரல் 17 அன்று மக்களவையில் கொண்டு வந்தார்கள்.
மசோதா
வாக்கெடுப்பிற்கு விடும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வருகை 211 ஆக இருந்தது. ஆளுங்கட்சி மற்றும்
ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 309 ஆக இருந்தாலும், 31 பேர் அவைக்கு
வரவில்லை. 278 பேர் அவையில் இருந்தனர். மொத்த வருகை 211+278=489 உறுப்பினர்கள். 489-இல் மூன்றில் இருபங்கு 326 உறுப்பினர்கள் வாக்களித்தால் மசோதா நிறைவேறும். ஆனால், 48 வாக்குகள் குறைந்து, மசோதா தோற்றுப்போனது. தமது 13 ஆண்டுகாலக் காவி ஆட்சி அதிகாரத்தில், மோடி மற்றும் அமித்ஷா கண்களில் முதல்முறையாகத் தோல்வி பயம் தெரிந்தது. ‘இந்து இராஜ்ஜியம்’, ‘ஒரே
நாடு, ஒரே தேர்தல்’,
‘ஒரே மதம், ஒரே தலைவன், ஒரே மொழி’ என்பதில் முதல் மண் விழுந்தது. பிறர் விழ குழி தோண்டிய குதிரை, தான் தோண்டிய குழியில் தானே குப்புற விழுந்தது.
தொகுதி
வரையறை என்ன என்பதைக் காண்போம். இந்தியாவின் மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளை, மக்கள்தொகை அடிப்படையில் மறு சீரமைப்பதையே ‘தொகுதி மறு சீரமைப்பு’
என்கிறோம்.
பா.ச.க. 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின்படி தொகுதி சீரமைப்பு செய்கிறது. இதன்படி, மாநிலங்களில் 835 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களில் 35 தொகுதிகளும் எனப் புதிதாக மக்களவை
தொகுதிகளை உருவாக்குகிறது. இதன்மூலம் சுமார் 850 தொகுதிகள் எனக் கூறப்படுகிறது. வரையறை குறித்த செய்திகளையும், அனைத்து ஆவணங்களையும் ஒன்றிய அரசு இரகசியமாக உள்துறையில் வைத்திருக்கிறது. அதுவே பல ஐயங்களை
எதிர்க்கட்சியினர் எழுப்பக்
காரணமாக உள்ளது.
மசோதா
பற்றிய விவரங்களை விவாதிக்கும் உறுப்பினர்களுக்கு, வழங்கவில்லை என்பதும் பெரும் குற்றச்சாட்டு. அதாவது, உத்தரப்பிரதேசம், பீகார் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை, தென்னிந்திய அனைத்து மாநிலத் தொகுதிகளுக்கு இணையாக இருக்கும். தென்மாநிலப் பிரதிநிதித்துவம் இல்லாமலே ஒன்றிய அரசு அமையும். 543 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும்போதே தென் மாநில உறுப்பினர்கள் பலருக்குப் பேச வாய்ப்புக் கிடைப்பது அரிது.
தொகுதி
சீரமைப்பில் தொகுதிகள் 850 ஆக
உயரும்போது, சில உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேச வாய்ப்புக் கிட்டும். சிலர் பதவியேற்புடன் பார்வையாளராக மாறிவிடுவர். இவர்கள் எப்படி மக்கள் குரலை எதிரொலிப்பர்? மக்கள் குரல் ஒலிக்காத மக்களவையாக மாறிவிடும். பிறகு ‘வடக்கு வாழும், தெற்கு தேயும்’ என்பது வரலாறாகி விடும். தேசத்தின் கூட்டாட்சித் தத்துவம் முடிந்துவிடும்.
தென்
மாநிலங்களில் நெருக்கடி நிலை காலம் தொட்டு குடும்பக் கட்டுப்பாட்டு முறை சிறப்பாக நடைபெறுகிறது. கல்வி, சுகாதாரம், குடும்பத் திட்டம் போன்ற துறைகளின் முன்னேற்றம் காரணமாக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது. ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தொகுதி வரையறை என்ற பெயரில் ஒன்றிய அரசில் பிரதிநிதித்துவம் குறையும். தற்போது 7.8 விழுக்காடாக உள்ள தமிழ்நாட்டுப் பிரதிநிதித்துவம் 5 விழுக்காடாகக் குறைய வாய்ப்புகள் உள்ளன.
தொகுதி
சீரமைப்புக் குறித்து விழிப்பு கொண்ட தமிழ்நாட்டு முதல்வர் 05.03.2025 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை சென்னையில் நடத்தினார். 22.03.2025 அன்று கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்பட்டது. 2026 தேர்தல் களத்தில், மசோதாவிற்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களைத் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டினார். பறக்கும் தனது தேர்தல் பரப்புரையில் கருப்புச் சட்டை அணிந்து, மக்களிடையே எதிர்க்கருத்தை வலுவாய் உருவாக்கினார். தேர்தல் பரப்புரையில் இருந்த தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று,
எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டினர்.
வட
இந்தியாவில் புகழ்பெற்ற இளம் தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவும், பீகாரின் தேஜஸ்வி யாதவும், காங்கிரஸ் கட்சியின் இராகுல் காந்தியோடு கைகோர்த்தனர். கூடவே உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, சீத்தாராமையா எனப் பெரும் படை திரண்டது. மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது.
அடிப்படை
அறமும், மரபு சார்ந்த அரசியலும் இருந்தால், தோற்ற அரசு தார்மிகப் பொறுப்பேற்று நீதிக்குத் தலை வணங்கவேண்டும். பா.ச.க.
மாற்று வழியில் தானும், தன் கூட்டணியும் ஆளும் மாநிலச் சட்ட சபைகள் மூலம் பயணிக்கப் புதுவழி தேடுகிறது.
2051-ஆம் ஆண்டு
வரை தொகுதி மறு வரையறையைத் தள்ளிவைக்கவேண்டும். 2023-இல் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாப்படி, தற்போதைய 543 தொகுதிகளில் 33 விழுக்காடு மகளிர் இடஒதுக்கீடுவேண்டும் என முடிவாய் நிற்கின்றன
எதிர்க்கட்சிகள்.
பாரதிய
சனதா கட்சி மக்கள் விரோத, சிறுபான்மை விரோதச் சட்டங்களைப் பின்வாசல் வழியே நிறைவேற்றியதைப்போல், தொகுதி வரையறை மசோதாவையும் நினைத்தது, தோற்றது. தேச நலனில் இன்று ஒருங்கிணைந்துள்ள தலைவர்கள், நாளை தேர்தல்
களத்திலும் சேர்ந்திருந்தால் பாசிச பா.ச.க.
ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படும்.
இது முதல் தோல்வி. இனி வருங்காலங்களில் பா.ச.க.
வுக்குத் தோல்விகள்
தொடர்கதை ஆகலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், திருத்தந்தை லியோ அவர்களின் போர் எதிர்ப்பைக் கண்டித்துக் குரல் எழுப்பியபோது, இறை இயேசுவின் வேடமிட்டு நோயுற்றவருக்குக் கருணைக் கரம் காட்டுவது போன்று படம் ஒன்றை வெளியிட்டு எதிர்ப்பைத் தெரிவித்த காட்சியை உலகம் பார்த்தது.
திருத்தந்தை என்னதான்
கூறினார்?
“அமைதிக்காக வாழ்வோர் ஆசிர்வதிக்கப்பட்டோர்; மத நம்பிக்கைகளைத் தன்னலத்திற்காகச்
சுரண்டுவோர், தன் இராணுவப் பலத்தைப் பெருக்கிடவும், பொருளாதார மற்றும் அரசியல் இலாபம் கருதியும் புனிதங்களை இருட்டிற்கும் அழுக்கிற்கும் இழுத்துச் செல்வோருக்கும் ஐயோ கேடு!”
“இன்றைய உலகு மிகச்சிறிய எண்ணிக்கையிலான கொடுங்கோலர்களால் ஆளப்பட்டு வருகிறது; இவ்வாட்சி முறையையும் நம் சகோதர-சகோதரிகளால் அங்கீகரிக்கப்படுவதோடு ஆதரிக்கப்பெறுதலும் கண்கூடு.”
“கிறிஸ்து இயேசு அமைதியின் அரசர்; அவர் போரை மறுக்கிறார்; இக்கடவுளைக் காட்டி எவரும் போரை நியாயப்படுத்தக் கூடாது. இறைவன் போரை முன்னெடுக்கும் எவர் குரலுக்கும் செவிசாய்க்க மாட்டார்.”
டிரம்பின் எதிர்வினை
“அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் திருத்தந்தை நமக்குத் தேவையில்லை; இத்திருத்தந்தை லியோ குற்றங்களைச் சாடுவதில் பலமற்றவர்; வெளிநாட்டுக் கொள்கையில் பயங்கரமானவர்” என்று
எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபருக்குத் திருத்தந்தை லியோ அளித்த பதில் என்ன தெரியுமா? “இன்றைய திருத்தந்தை அமெரிக்கராகப் பிறந்திருக்கலாம்; ஆனால், இவர் அமெரிக்காவில் பிறந்து உலகிற்காக வாழ்கின்றவர்” (Not an American Pope; But a pope from America
for the world).
‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் இரண்டில் திருத்தந்தையின் போர் பற்றிய எதிர்வினைகள் பற்றி வெளியான செய்திகளை இங்கே தொகுத்தமைக்கு என்ன காரணம்? திருத்தந்தையின் இக்குமுறல் சரியா? தவறா?
உலக
அமைதிக்கு நாசம் விளைவித்து வருகின்ற அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுச் சதியைக் கண்டிக்கும் திறனற்றுப்போன நிலையை, உலக நாடுகள் பல கண்டும் காணாதிருக்கும்
நிலை ஒரு பக்கம்; அல்லது துணை போகும் நிலை மறுபக்கம். இந்நிலையில் திருத்தந்தை ஒருவர், இறைவேண்டலோடு செபிப்பதை மட்டும் செய்துவிட்டு, மௌனியாய் வாழ்தல் சரி தாமோ? போர்வெறியில் உலகைத் தன் ஆளுமையின்கீழ் கொணரவேண்டி, பல்லாயிரக்கணக்கிலான மக்களின் குருதியில் தம்மை நனைத்து, வெற்றிப் புன்னகையாளர்களைக் கண்டுகொள்வது எப்படி? கண்டுகொள்ள மறுத்து மௌனிப்பதும், போர் வெறிபிடித்த இவர்களை ஆதரிப்பது என்பதும் ஒன்றுதானே!
பகை
வளர்க்கும் இச்சுயநலத்தின் தலைவர்களைக் கண்டுகொள்ளாமை மிகப்பெரிய பாவமில்லையா? திருத்தந்தை அவர்களின் இத்தலையீட்டை ஏற்போமானால், தமிழ்நாடு தேர்தலில் ஆயர்களின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டாமா? தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களின்போது, தமிழ்நாட்டுத் திரு அவை ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கியமைக்குக் காரணமும் வரலாறும் உண்டு. தென்குமரியில் கிளைத்த அரசியல் நோக்காட்டினால் எண்பதுகளில் நடத்தப்பட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்; இதனிமித்தம் திட்டமிட்டு நடத்தப்பட்ட மண்டைக்காடு மதக்கலவரம்; மதக்கலவரம் நிகழ்த்தப்பெறும்போதெல்லாம்
அதன் விளைவாக உருவாகும் மதரீதியான ஓர்மை (Polarise)
பிரிவினை; சமூக நல்லிணக்கமின்மை... எனும் விளைவுகளைக் கண்டறிந்த கிறித்தவத் தலைமை குறிப்பாக, அன்றைய கோட்டாறு ஆயர் மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்கள் மதுரை உயர்மறைமாவட்டப் பேராயராகப் பொறுப்பேற்றபின், தமிழ்நாடு ஆயர் பேரவை, நடைபெறும் தேர்தல்களை வெறுமனே கடந்து போகும் தேர்தல்களாகக் கருதிவிடக்கூடாது என்ற நோக்கில் சில நிலைப்பாடுகளை மேற்கொள்ள முனைந்தது.
பேராயர்
அவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நமக்கென்று ஒரு நிலைப்பாடுவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டதோடு, மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துச் சிறுபான்மையினர் பேரவையை உருவாக்கினார். பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த கிறித்தவச் சபைகளை ஒருங்கிணைத்து, கிறித்தவர் ஐக்கியப் பேரவையை உருவாக்கினார். தமிழ்நாட்டுக் கிறித்தவர்களை மதுரையில் ஒன்றுகூட்டி, கிறித்தவர் மாநாடு ஒன்று நடத்தினார். மதுரை பேராயர் முன்னெடுத்த இம்முயற்சிகள்தாம் அம்மையார் செயலலிதா அறிமுகப்படுத்திய மதமாற்றுத் தடைச்சட்டத்தை எதிர்க்கவும் வெற்றி பெறவும் காரணமாயிற்று. இந்தியாவில் வேகமெடுத்து வளர்ந்து வந்த மதவாத அரசியலுக்கு எதிர்ப்பைக் காட்டவும், இந்த எதிர்ப்பை மதச்சிறுபான்மையினரின் ஒருங்கிணைப்பு மூலம் எடுத்துக்காட்டவும் முனைந்த வேளை, தேர்தல் மூலம் சில நிலைப்பாடுகளை எடுத்து, மதச்சிறுபான்மையினரை வழிநடத்தும் கடமையைத் திரு அவை உணர்ந்தது.
அரசியலாக்கத்
தேவை
கிறித்தவர்கள்
அரசியலாக்கப்பெறாத ஒரு பக்த கூட்டமாக இருந்தமையால், ‘ஆயர் - மந்தைகள்’
என்ற கருத்து வலுப்பெற்றிருந்த நிலையில், கிறித்தவத் தலைமையை எப்போதும் போற்றி வந்த மக்களைத் தேர்தல் நேரத்தில் நெறிப்படுத்தும் கடமையை தமிழ்நாடு ஆயர் பேரவை உணர்ந்தது. ஆனால், எவ்விடத்தும் கிறித்தவ மதச்சிறுபான்மையினரை ஓர் அரசியல் கட்சியாக மாற்றவேண்டும் என்று எவரும் கருதவில்லை. வகுப்புவாதம் அல்லது மதவாதம் எந்த மதவடிவில் உருவானாலும், அதுவும் மதவாதமே என்பதில் திரு அவையின் தலைவர்கள் தெளிவாக இருந்தனர். கிறித்தவருக்கென்று ஒரு கட்சி உருவானால், அது மதவாதக் கட்சியாகவே இருக்கும் என்பதால்தான் கிறித்தவச் சிறுபான்மையினரை ஒருங்கிணைத்து, ‘கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கம்’ உருவாக்கப்பட்டது.
இத்தேர்தலில்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் தேர்தல் நிலைப்பாடு, கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்துடன் இணைந்து எடுக்கப்பட்டதே. இதேவேளை, தமிழ்நாடு ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுவும், பொதுநிலையினர் உருவாக்கப் பணியில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்தது. குறிப்பாக,
இரண்டாம் வத்திக்கான் சங்கம் பற்றிய பல அமர்வுகள் நாடு
முழுவதும் நடத்தப்பட்டன. திரு அவை தன் எல்லை தாண்டி, சமூகத்துள் தலையீடு செய்யவேண்டுவதன் தேவையை எடுத்துத் தரும் பணி நிறையவே நடந்தது.
திரு
அவையின் முன்முயற்சிகள் ஆங்காங்கே நிறையவே இருந்தாலும், மக்கள் முழுமையாக அரசியலாக்கப்படுத்தப்பட்டார்கள்
என்று கூறிவிட முடியாது. நாம் நம் திரு அவை மூலம் இன்றைய மதவாதத் தாக்கத்தை மக்களுக்குத் தொடர்ந்து கூறினாலும், கூற மறந்தாலும் இன்றைய ஊடகப் பெருக்கத்தில் மக்கள் அறியாமல் இல்லை என்பதுதான் உண்மை.
புதிதாய் எழுந்த
பிரச்சினை
என்ன?
இன்றைய
தமிழ்நாடு தேர்தலின்போது, தமிழ்நாடு ஆயர்கள் ஒரு வழிகாட்டுத் திசையைக் காட்டியபோது, ‘ஏன் இந்தத் தலையீடு?’ என்று கிறித்தவர் மத்தியில் கேள்வி எழுந்ததைப் பார்க்க முடிந்தது. பொதுநிலையினர் வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டிவரும் இறையியலாளரும் இவர்கள் கூட்டத்தில் உள்ளனர். புதிய அரசியல் வரவான நடிகரின் ஆதரவாளர் பலர் அருள்பணியாளர்களை மிரட்டியது கண்கூடு. எப்போதுமே திரு அவையின் பணிகளை, அருள்பணியாளர்களை விமர்சிப்பதாலேயே புரட்சியாளர் என்று காட்டிக்கொள்ளும் சிலர், ஊடகவழி தமக்கு இருக்கும் வெளியைப் பயன்படுத்திக் கொச்சைப்படுத்தியோரும் உண்டு.
திரு
அவையின் அருள்பணியாளர் பலரும் இதே நிலைப்பாடு கொண்டுள்ளதாக அறிகிறோம். திரு அவையைச் சார்ந்த குருமட மாணவர்கள், துறவியர் பலரும் ஆயர் பேரவையின் அறிக்கையை, நிலைப்பாட்டை ஏற்க மறுப்பதோடு, விமர்சனமும் செய்கின்றனர்.
காலத்தின் அறிகுறியை
அறிவோம்
இந்திய
நாட்டின் பன்முகத்தன்மை, சமயச்சார்பின்மை, இவை காக்க உருவான அரசமைப்புச் சட்டம் மிகக் கேவலமாகப் பறிக்கப்பட்டு வரும் நிலை கண்டு கவலைகொள்ள வேண்டிய நிலை.
‘¹நாம்’,
‘அவர்கள்’ என்று
சமூகத்தை மதரீதியாகப் பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயன்றுவரும் மதப்பெரும்பான்மை வாதிகளின் கட்டுக்கடங்காத் தீவிரப்போக்கு ஒருபுறம்.
மதச்சிறுபான்மையினர்
பாதுகாப்பு நாளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, நாளும் அவர்தம் வழிபாட்டு உரிமை, வழிபாட்டுத் தலங்கள், அவர்தம் நிறுவனங்கள் கொச்சைப்படுத்தப்பெறும் நிலை; அழிக்கப்பெறும் நிலை.
இசுலாமியரை,
அரசியல் ரீதியாக ஓரளவு ஒழித்துக்கட்டிய நிலையில், இந்நாட்டில் இன்னும் 2.3 என்ற விழுக்காட்டைத் தாண்டாத நிலையிலும், கிறித்தவம் மீதான தாக்குதல் தொடரும் நிலை.
மதப்பாசிசம்
கட்டுக்கடங்கா நிலையில் வளர்ந்து விட்ட நிலையிலும், இன்னும் இந்நாட்டில் இந்த நாசக்காரச் சக்திகளின் போக்கை அம்பலப்படுத்திவரும் அறிவுசீவிகள், மனித உரிமை காப்போர், சமயச்சார்பற்ற இடதுசாரி அமைப்பினர் பலர் நமக்கு நம்பிக்கை தந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் தலையீடுகள்தாம் கிறித்தவச் சிறுபான்மையினருக்கு நம்பிக்கை தரும் மருந்தாயுள்ளது என்பதைப் புரிந்துகொள்வோம்.
கிறித்தவம் ஒரு
குடிமைச்
சமூகமே
கிறித்தவம்
உலகில் செயல்படுவது, உலகத்திற்காகச் செயல்படுவது. மானுடரின் முழுவிடுதலையே இதன் முதன்மை நோக்கம். இம்முழுமையில் ஆன்மிகம் மட்டும் உள்ளடக்கமல்ல; சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார விடுதலையும் உள்ளன.
எனவேதான் ஆலயங்களை எழுப்பிய திரு அவை, அருகே பள்ளிக்கூடங்களையும் கட்டியது. ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு தருதல் வேண்டி மருத்துவப் பணிகள், சமூக நிறுவனங்கள், வளர்ச்சிப் பணிகள் எனக் கண்ணுக்குத் தெரிகின்ற (Visible)
அளவுக்கான பணித்தளங்களை ஏற்படுத்தியது. இன்றைய மதவாதக் கட்சி இப்பணிகளை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகின்றது? இந்திய அரசமைப்புச் சட்டம் 25 முதல் 30 வரை தரப்பட்ட உரிமைகள் எப்படியெல்லாம் மீறப்படுகின்றன?
இந்தியக்
கிறித்தவத்தை இந்நாட்டின் மூன்று எதிரிகளுள் மிக முக்கியமான எதிரியாகக் கோல்வால்க்கர் கருதுகிறார். திரு அவை உருவாக்கிய சமூக நிறுவனங்கள் தாக்கப்பெறுகின்றபோது, மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள் தடைசெய்யப்படுகின்றபோது, பாதிப்பு திரு அவைக்கல்ல! யாருக்காக இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டனவோ, அவர்களைச் சென்றடையவிடாது தடுக்கின்ற சூழ்ச்சியே இது என்பதை மக்களுக்குக் கூறவேண்டிய கடமை திரு அவைக்கு உண்டு.
திரு
அவை மக்களுக்கான பணிகளை முன்னெடுத்திருப்பது உண்மையானால், இப்பணிகளின் பயன், உரிய மக்களைச் சென்றடையவிடாமல் தடுக்கின்ற சக்திகளின் சதி அரசியலை மக்களிடம் கொண்டு செல்வது திரு அவை எனும் குடிமைச் சமூகத்தின் கடமையல்லவா! திரு அவையின் வழிபாட்டுரிமை, அறிவிக்கும் உரிமை, மத உரிமைகள் தாறுமாறாக
மீறப்பட்டு வரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அரசியலை முன்னெடுத்து, பிற மதச்சுதந்திரத்தை நசுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளப்படுத்தும் உரிமை கிறித்தவத்திற்கும் கிறித்தவத் தலைமைக்கும் உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது, மறுக்கவும் கூடாது.
சனநாயகம்
குடிமக்களுக்கு அளித்துள்ள தெரிவு செய்யும் உரிமை உன்னதமானது; இது உரிமை! கருணையல்ல. சனநாயகம் அளித்துள்ள இவ்வுரிமை குடிமக்கள்மீது சனநாயகம் அளித்துள்ள மிகப்பெரிய நம்பிக்கை (Faith)
ஆகும்.
குடிமக்கள்
குடியுரிமை பெற்றவர்கள். சுதந்திரம், உரிமைகள், சட்டத்தின் ஆட்சி என்பன இவர்தம் ஆயுதங்கள். குடிமக்கள் சமமானவர்கள். இவர்களது தெரிவு செய்யும் உரிமைகளில் வாக்களிக்கவும், விரும்பியவரைத் தெரிவு செய்யும் உரிமை மட்டுமல்ல; குடிமக்கள் விரும்பும் மதத்தைத் தெரிவு செய்யும் உரிமையும் உண்டு. குடிமக்களால் தெரிவு செய்யப்பட்ட இம்மதம் சார்ந்தோரில் நாம் மதச்சிறுபான்மையினர்; ஆனால், சம உரிமை பெற்ற
குடிமக்கள்.
இக்குடிமக்களின்
ஆற்றலை வளர்த்தெடுக்கும் கடமையும் பொறுப்பும் கிறித்தவம் எனும் குடிமைச் சமூகத்திற்கு உண்டு. “கிறித்தவம் சார்ந்த குடிமக்கள், சனநாயகம் தந்த தேர்தல் எனும் கவசத்தை எப்படி முறையாகப் பயன்படுத்தவேண்டும்?” என்ற நெறியைக் காட்டிடும் கடமை இருப்பதால், சரியான கட்டமைப்பும் இலக்கும் (Mission)
கொண்ட திரு அவையின் ஆயர்கள், தங்கள் கடமையைச் சரியாகவே செய்துள்ளனர்.
தேர்தல்
வெற்றிக்காக மட்டும் முழந்தாளிடுவோரை அடையாளம் காட்ட இவர்களைத் தவிர வேறு யாருக்குத் தகுதியும் உரிமையும் இருக்கிறது?
திசை
அறியாத கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் ஒரு வெற்றுக் கூட்டத்தில் திரு அவை சார்ந்த இளையோர்
நிறையவே உள்ளனர். இவர்களை, தமிழ்நாடு ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு கண்டுகொள்வது காலத்தின் கட்டாயம்.