news
சிறப்புக்கட்டுரை
வரலாற்றில் இருக்கின்றவராக இருக்கின்றவரின் மானுடப் பிறப்பு!

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; மாறாக, அது முக்காலத்தையும் இணைக்கும் காலக் கண்ணாடி. ஒரு புள்ளியைச் சென்றடையும் திட்டமிடாத பயணம் அல்ல; விடுதலையை நோக்கியத் திட்டமிடப்பட்ட மனிதப் பயணம். வரலாற்றிற்கு ஒரு தனித்துவமான உயிர் உள்ளது. ஏனெனில், வரலாறு நிறைவின்மையிலிருந்து நிறைவை நோக்கி முன்னேறுகிறது. அந்த நிறைவை நோக்கி மனிதகுலத்தை நகர்த்த, கடவுள் இறைத்திட்டத்தை ஏற்படுத்தி, அதற்காகத் தம் ஒரே மகனை வரலாற்றில் பயணிக்கும் நபராக இந்த உலகத்திற்குத் தருகிறார்.

இஸ்ரயேலர்களின் வரலாற்றுக் கடவுள்

இஸ்ரயேல் மக்களின் வாய்மொழி உரையாடலாக இருந்த இறையனுபவ நிகழ்வுகள் எழுத்து வடிவம் பெறும்போது, அது உயிரோட்டமுள்ள வரலாறு கொண்ட புனித நூலாக மாறுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில்தான் கடவுள் தம்மை மோசேவுக்குஇருக்கின்றவராக இருக்கின்றவர் (விப 3:14) என்று வெளிப்படுத்துகிறார். கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நபராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். மோசேவுடன் பயணித்த கடவுள் அவருக்குப் பின் வந்த யோசுவாவுடனும் பயணிக்கும் கடவுளாக இருக்கிறார். “மோசேவுடன் இருந்தது போல் நான் உன்னோடு இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன் (யோசுவா 1:5) என்கிறார் கடவுள்.

மோசேவுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை யோசுவா வழிநடத்தினார். இஸ்ரயேல் மக்களின் வரலாற்று வழிநடத்துதலில் மோசேவைப் போலவே யோசுவா கடவுளுடன் நெருக்கமாக இருந்தார். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டு பாலைவனத்தில் மோசே வழிநடத்தியதுபோல, புதிய நாட்டைக் கைப்பற்றுவதில் வீரராக யோசுவா இருந்தார். நாடோடி இனமாக அலைந்த இனத்தை, தேசிய இனமாக மோசே மாற்றியது போல, இஸ்ரயேல் மக்களை நாட்டின் குடிமக்களாக யோசுவா உருவாக்கினார்.

மோசே நாட்டை உளவு பார்க்க ஒற்றர்களை அனுப்பியதுபோல, யோசுவா ஒற்றர்களை அனுப்பினார். மோசேவைப்போல யோசுவா இஸ்ரயேல் மக்களை யோர்தான் ஆற்றைக் கடக்கவும், உடன்படிக்கைப் பேழைக்கு முக்கியத்துவமும் கொடுத்தார்.

யோசுவாவிற்குப் பின் வருகின்ற நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாகக் கடவுள் தொடர்ந்து வரலாற்றில் பயணித்துள்ளார்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் வரலாற்றுச் சான்றுகளுடனும், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுடனும் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் இறைவன் காலத்திற்கும் அழியாத நபராக நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இறைத்திட்டத்தில் வரலாற்று நபர்களாக மரியா-யோசேப்பு

அன்னை மரியாவும் வரலாற்றில் பயணித்த நபராக இருந்தார். அவரும் இறைவனின் திட்டத்தில் வரலாற்று நபராக இருந்து இறைத்திட்டத்திற்கு ஓர் ஊடலாகச் செயல்பட்டார். அந்த ஊடல் பணியில் என்றும் கன்னியாக இருந்து தன் வாழ்வைப் புனிதமாக்கிநாமே அமல உற்பவம்என்று வெளிப்படுத்தினார். மரியாவும் பத்து மாதம் கடவுளின் குழந்தையைச் சுமந்து, பேறுகால வேதனையுற்று, இயேசுவை இந்த உலகத்திற்குக் கொடுத்தார்.

யோசேப்பும் கடவுளின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். அவர் அன்னை மரியாவைப் போன்று இறைத்திட்டத்தின் ஊடலாகச் செயல்பட்டார். யோசேப்பு, இயேசுவைத் தன் வயிற்றில் கருத்தரிப்பதைத் தவிர்த்து மற்ற எல்லாச் செயல்களிலும் நிகழ்வுகளிலும் மரியாவைப் போன்று செயல்பட்டார். அவரும் மரியாவைப் போன்று என்றும் இயேசுவின் தந்தையாக இருந்து தன் முழு பங்களிப்பையும் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குக் கொடுத்தார்.

இதன்வழியாக வரலாற்றில் வாழும் நம் அனைவரையும் இறைவனின் திட்டத்திற்கும், இயேசு விரும்பிய இறையாட்சி சமுதாயத்தை உருவாக்கும் கருவியாகவும் செயல்பட இந்தக் கிறிஸ்து பிறப்பு நம்மை அழைக்கிறது.

கட்டமைக்கப்படும் வரலாறுகள்

தத்துவவியலாளர் ஹெகல், “வரலாற்றாளருக்குச் சான்றுகள் இருந்தால் மட்டும் போதாது; சான்றுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை வழங்கும் தத்துவப் பார்வையும் அவசியம்என்கிறார்.

இன்று வரலாற்று வழியாகத் தெரிந்த உண்மைகள் ஒவ்வொன்றாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய போலியான சிந்தனைகளை இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து நம் நாட்டில் ஊடகங்கள் வழியாகவும், சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகளாலும் மறைமுகமாகத் திணித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு கேள்வித்தாளில், ‘காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

காலங்காலமாகத் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி வந்த இடத்தில் இன்று புதிய வரலாறாகப் போலியான கருத்தை அந்த அமைப்பு விதைக்கிறது. ‘வந்தே மாதரம்என்ற நமது தேசியப் பாடலின் 150-ஆம் ஆண்டு விழாவில் போலியான கருத்துகளை முன்வைத்து தற்பொழுது ஆளும் தலைவர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.

மேலும், மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி புதிய கட்டமைப்பை உருவாக்க இந்துத்துவா முனைந்து செயல்படுகிறது.

தொடக்கத்தில் யூதர்களில் ஒரு நபர்கூட காசா பகுதியில் வாழ்ந்ததில்லை. ஆனால், ‘அந்த நாடு எமக்குக் கொடுத்ததுஎன்று இஸ்ரயேல் பிரதமர் புதிய வரலாற்றை முன்வைத்து பல இலட்சம் மக்களின் உயிர்களைப் போர்கள் மூலம் பறித்துக் கொண்டிருக்கிறார்.

வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், நம் நம்பிக்கையும் நம் வாழ்க்கையும் பொருளற்றுப் போய்விடும். அறியாமை மக்களிடம் எளிமையான பிளவை உண்டாக்கி வலது சாரிகளை ஆதரிப்பதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் உதவியாக மாறிவிடும்.

எனவே, வரலாற்றில் இருக்கின்றவராக இருக்கின்றவரை உணர்ந்து, அவரது மீட்புத் திட்டத்தின் பதிலிருப்பாகப் பிறக்கப் போகும் வரலாற்று இயேசுவை நம் உள்ளத்தில் பிறக்கவைத்து, வரப்போகும் புதிய ஆண்டில் புத்துலகம் படைக்க முற்படுவோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துமஸ் புத்தாண்டை நோக்கி வீசும் எதிர்காற்று!

ஆண்டிற்கு ஒருமுறை வரும் விழாக்களின் வரிசையில் கடைசியில் நிற்கிறது கிறிஸ்துமஸ். இவ்விழா இயேசுவின் பிறப்பு விழா கொண்டாட்டம் மட்டுமே  என்று எண்ணி நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். உலகம் முழுவதிலும் ஆண்டின் மிகப்பெரும் செலவு விழா இது.

ஐரோப்பிய நாடுகளில் அக்டோபர் முதலே விழாக்காலம் தொடங்குகிறது. முன்பு இல்லாதது போல இப்போது ஆண்டு முழுவதும் புதுத்துணிகளை வாங்கிக்குவித்த நமக்கு, ஏன் வேண்டும் மற்றொரு சோடி புதுத்துணிகள்? குடும்பமே புத்தாடைக் கொண்டாட்டத்தில் கடன் வாங்கிப் பொருள் வாங்கும் நோயிலிருந்து (Shopaholics)இந்த ஆண்டு நலம் பெறலாமா?

குடும்பமாக, குழுவாகக் கொண்டாடி மகிழ்வதில் யாருக்கும் தடையில்லை. ஆனால், கூட்டங்கூட்ட மாகச் சத்தத்தை மிகுதியாக்கிக் கொண்டுநாங்கள் கொண்டாடுகிறோம்என்பதையும், தீபாவளி யைவிட அதிகப்படியான பட்டாசு வெடிகளை உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் - புத்தாண்டு நாள்களில் கொளுத்துகிறோம் என்றெண்ணும்போது, தலைநகர் டெல்லி போன்ற காற்று மாசுபாடு கூடிடும் நகரங்களில் இன்னும் பெரு கிட நம்மால் முடிந்த தீமை யையும் செய்துவிடுகிறோம் என்பதை எண்ணிப் பார்ப் போம்.

எப்படித் திடீரென வந்து விடுகிறது-கிறிஸ்துமஸ்-புத்தாண்டு நாள்களில் குதூகலம்? நமது கடன்கள் தீரவில்லை; நமது திட்டங்கள் நிறைவேறவில்லை; நமது உறவுகள் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நிறைவைத் தரவில்லை; நமது இலக்குகள் நெடுந்தொலைவில் உள்ளன (செலவின் சுமையைத் தாங்க விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குரல் போல உள்ளதே!)

அதிகப்படியான மக்காத குப்பைகள் (நெகிழி போன்றவை) அதிகரித்திடும் காலம் ஆண்டின் இறுதி பத்து நாள்கள் என்றால் அவற்றைக் குறைப்பதும், பரிசுப்பொருள்களை உறைகளில் போடும் பழக்கத்திலிருந்து விடுபட்டு, உள்ளவாறே பரிசுகளை அடுத்தவரோடு பகிர்ந்திடும் நற்செயலை கிறிஸ்துமஸ் - புத்தாண்டிலிருந்து நாம் தொடர்ந்திடுவோமா?

கிறிஸ்துமஸ் என்றவுடன் கேக் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றுகிறதே! இக்காலத்தில் வீட்டிலேயே கேக் தயாரிப்பது எப்படி? என்று பல காணொளிகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்களுக்கும் நண்பர்களுக்குமான சிறிய அளவில் கேக் செய்வதை ஆண்டிற்கு ஒருமுறை கற்றுக்கொள்ளலாமே! இதனால் செலவு குறைவதோடு மட்டுமில்லாமல், பதப்படுத்தப்படும் ஊக்கிகள் கேக்கில் சேர்க்கப்படும்போது, அது உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் கவனத்தில் கொள்வோம்!

கிறித்தவ ஆலயங்களில் பயன்படுத்தப்படும் அலங்காரப் பொருள்கள் கொண்டாட்ட உணர்வைப் பெற்றுத்தரும் என்றாலும், மொத்தக் கோவில் வளாகத்தை அலங்காரத்தால் நிறைத்துக் குப்பைகளை ஏற்படுத்துவது, தெர்மோகோல் போன்ற சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை அதிகம் பயன்படுத்துவது - இவற்றிலிருந்து நம்மை விடுவிக்கப்போவது யார்? கிறிஸ்துமஸ் குடில் என்பது இயேசுவின் பிறப்பு வரலாற்றை அழகுற எடுத்துக்காட்ட அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பின் எளிமை என்பது ஒன்றுமில்லாமையிலிருந்து, ஆண்டவர் உலகத்தைப் படைத்ததை மீண்டும் நமக்கு அறிவுறுத்துவது என்ற எண்ணம் மறந்துபோய், இலட்சக்கணக்காய் பணத்தைக் குடில் செய்வதில் வீணடிப்பது கிறிஸ்து பிறப்புச் செய்திக்கு நேர் எதிரானது என்பதை நமது ஆலயப் பொறுப்பாளர்களிடமும் இளையோரிடமும் கூறுவது யார்?

சரி, இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கிறிஸ்துமஸ் விழா கூறும் எளியோரிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்வதை எங்கிருந்து ஆரம்பிப்பது?

வசதியில் குறைவுள்ளோர், நலிந்தவர், வீதியோரங்களில் வாழ்வோரைச் சந்திக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்வுகளை, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்பது போல வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடலாமா? உடன் அமர்ந்து, அவர்களின் கண்களைப் பார்த்து உரையாடி, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, முடியுமானால் இயன்ற உதவிகளைச் செய்வோமே!

இல்லாதவருக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து விடுவதால் நாம் வள்ளலாகிவிட முடியாது. நாம் கொடுப்பது அவர்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை, நாம் ஏதோ ஒருவகையில் பறித்ததைத்தான் என்று எண்ணிப் பார்ப்போம். கொடுப்பது நமக்கு முதலில் தாழ்ச்சியைக் கொடுக்கட்டும்.

சூழலியல் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கொண்டாட்டத்தைப் பற்றிய கட்டாயத் தேவை நமது பூமிப் பந்தை அண்டவெளியில் இன்னும் சிறிது காலம் வாழத் துணை செய்யும்.

வீசும் எதிர்காற்று நமது செயல் வேகத்தைச் சற்றே வீரியமாக்கட்டும்!

news
சிறப்புக்கட்டுரை
“தலை சாய்க்க இடமில்லை...”

அப்பத்தின் வீடுஎனப்படும் பெத்லகேம், தாவீது குலத்துத் தாய்மண். தலைமுறைகளுக்கான பூர்வீகப் பூமி. தாவீது அரசருக்குத் திருப்பொழிவு செய்யபட்ட அரச நகரம். பழைய ஏற்பாட்டு நூல்களில் இறைவாக்கினர்களால்  முன்னறிவிப்பு செய்யப்பட்ட  புண்ணிய பூமி. மீட்பரின் பிறப்பிற்கான பரிசுத்த பூமி. சூசை, மரியாவின் குடிக்கணக்கெடுப்பிற்கான அவர்களின் பயணம் - வாகன வசதிகள் இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் அக்காலத்தே நெடுந்தூர நடைபயணம்.

புதிய ஏற்பாட்டு நூலில் பாலஸ்தீன நாடு என்ற நிலப்படம் திருவிவிலியத்தில் உண்டு. கலிலேயாவின் நாசரேத்துக்கும், யூதேயாவின் பெத்லகேமுக்கும் உள்ள தூரம் அதிகம். அது வியக்க வைக்கும் நெடுந்தூரம்.

பெத்லகேம் எருசலேமிருந்து தொட்டுவிடும் தூரமே. தெற்கே 10 கிலோ மீட்டர்தான். பாலஸ்தீன நாடு முழுவதும் மலைப்பிரதேசம், பாலைவெளிகள், கடற்கரைகள் என்று பயணிக்கக்கூடிய கரடுமுரடான அமைப்பு கொண்ட நிலப்பரப்பு.

நிறைமாத கர்ப்பிணியான மனைவி மரியாவுடன் பெத்லகேம் சென்ற யோசேப்பு தங்கும் விடுதிகளில் தங்க இடம் தேடினார்; இடம் கிடைக்கவில்லை. திருவிவிலியம் கூறுகிறது... “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.” ஊரில் யாரும் உதவ முன்வரவில்லை. எளியோர் என்றும் பிறர் துன்பம் அறிவார்கள். அவ்வகையில் இடையர்கள் உதவ, ஒரு சிறு மலைக்குகையில்- மாட்டுக்குடிலில் மனுமகன்  பிறக்க இடம் கிடைத்தது.

நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லைஎனும் இறைவாக்கை எண்ணிப்பார்க்கிறேன். எம் சிந்தனைகளோதலை சாய்க்கக்கூட இடமில்லைஎன்ற வார்த்தைகள் காலங்களில் தொக்கி நிற்கிறது.

இஸ்ரேல் அல்லது பாலஸ்தீன நாடுகளில் எந்த நாட்டில் பெத்லகேம் உள்ளது? பெத்லகேம் குறித்த தெளிவான  அரசியல் மற்றும்  வரலாற்றுப் பார்வை நம்மிடம் இல்லை. இதற்கு விடையாக இன்றைய பெத்லகேம் குறித்து செப்டம்பர் 25 தேதியிட்டநம் வாழ்வுமின் நாளிதழில் நமது ஆசிரியர் அருள்முனைவர் இராஜா அவர்கள் எழுதிய சிறப்புச் செய்திக் கட்டுரை வரலாற்றை வாசிக்க வைக்கிறது; அதைப் பகிர வைக்கிறது.

1967-வரை பெத்லகேமின் மேற்குக் கரை இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் பகுதியாக இருந்தது. 1967-இல் இஸ்ரேலுக்கும்  பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் பெத்லகேம் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால், தற்போது பெத்லகேம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

வரலாற்றுப் பதிவுகளின்படி, பெத்லகேம் அரபு நாடுகளில் கிறித்தவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பகுதியாக இருந்தது. பெத்லகேமில் 1950-களில் அரபு நாடுகளின் கிறித்தவர்களில் 86 விழுக்காட்டினர் இருந்தனர். 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 10 சதவிகிதமாகக் குறைந்து விட்டது. இஸ்ரேலின் நிலக் கையகப்படுத்தல் எனும் கட்டாயத்தால் புலம்பெயரும் அவசியம் பெத்லகேம் கிறித்தவர்களுக்கு உருவானது. பெத்லகேமில் கிறித்தவ மக்கள் 2017-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி  28,591  என்ற எண்ணிக்கையில் மட்டுமே   வாழ்கிறார்கள். 2023, அக்டோபர் 7 அன்று தொடங்கியப் போருக்குப் பின்பு, சுற்றுலாவை நம்பியிருந்த பெத்லகேமின் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்தது. பரிசுப் பொருள்கள், அங்காடிகள், அழகான ஆலிவ் மர வேலைப்பாடுகள், முத்து மற்றும் நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறைத் தொழில்கள் என எல்லாமே முடங்கின, மூடப்பட்டன. அரசின் தடை உத்தரவுகளால் மக்கள் வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டது. நகரெங்கும் இருந்த 134-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம், பணி சார்ந்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக குடிநீருக்குப் பஞ்சம், தண்ணீருக்கு ரேசன் என நிலைமை மோசமானது. பாலஸ்தீனிய மக்கள்  தங்கள் சொந்த இடத்தில் தண்ணீரைத் தோண்டியெடுக்க அனுமதி மறுக்கப்பட்டது. பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலிய மக்களிடம் தண்ணீரை வாங்கியதால் ஒரு நபருக்கு ஒருநாள் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே அவர்கள் தந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலஸ்தீனக் கிறித்தவர்கள் மற்றும் பெத்லகேம் கிறித்தவர்கள் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளால் பாதிப்பு அடைகிறார்கள். பாலஸ்தீனியக் கிறித்தவர்களை - மண்ணின் மைந்தர்களை இயற்கை வளப் பகிர்வில் தரப்படும் அழுத்தங்கள் வழி அகதிகளாக உலகம் முழுவதும் தள்ளுகிறது. நான்கு மில்லியன் என்ற எண்ணிக்கையில் உள்ள பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் இன்று 1,68,000 என வெகுவாகக் குறைந்துள்ளார்கள். கடந்த ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு 1000 பாலஸ்தீனியக் கிறித்தவர்கள் குடிபெயர ஒப்புதல் பெற்றுள்ளார்கள். பாலஸ்தீனத்திலும் காசாவிலும் உள்ள அரசியல் சூழல்கள் மாறும்போதுதான் பாலஸ்தீனியக் கிறித்தவர்களைக் காக்க முடியும்; அவர்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படும்; புனித பூமியான பெத்லகேமைக் காக்க முடியும் என்பதே நடப்பு நிலை.

சமகால நிலையில் திருத்தந்தை மற்றும் இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும்புனித பூமியைக் காப்போம்என்ற மீட்புக் குரல்கள் பிறக்கின்றன. 2000-2005-ஆம் ஆண்டுகளில்  இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் உச்சம் தொட்டபோது, 2002-இல் தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குவதைத் தடுக்கும் வகையில்  மேற்குக்கரை சுவர் கட்டப்பட்டது. இது இஸ்ரேலின் நிறவெறியின், இனவெறியின் அடையாளமாகவும், மேற்குக்கரை பிரிவினை தடைச்சுவராகவும்  கூறப்படுகிறது.

இந்தத் தடுப்புச்சுவர் பெத்லகேமை அதன் இதயமான எருசலேமிருந்து பிரிக்கிறது. இது    பெத்லகேமியர்கள் எத்தகைய  பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதன் அடையாளமாக உள்ளது என்று பெத்லகேம் மேயர் மஹர் நிக்கோலா கன்வத் அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும், பெத்லகேம் ஆயர் திருத்தந்தையிடம்புனித  பூமியில் அமைதி மற்றும் ஒற்றுமைக்காகச் செபிக்கவும், போர் நிறுத்தம்  ஏற்படவும், புனித பூமியில் உள்ள கிறித்தவர்களைப் பாதுகாக்கவும் வழிவகை காண வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலஸ்தீனிய ஒழுங்குமுறைப்படி, மரபாக பெத்லகேமின் மேயர் கிறித்தவராக இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் பெத்லகேம் கிறித்தவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதே நடப்புநிலை; இது மேலும் நமக்குக் கவலை தருகிறது.

மரபார்ந்த மானுடச் சமூகம், தேசத்தலைவர்கள் புனித பூமி குறித்த தங்களது வலிமையான கருத்துகள் வழி, மத வழிபாட்டு உரிமையைக் காக்க குரல் எழுப்பவேண்டும். எருசலேம் அழிவுகளிலிருந்து மீண்டு, அமைதிப் பூங்காவாக மாற போதிய அரசியல் சமரசங்கள் தேசங்களிடையே ஏற்படுத்தவேண்டும். எருசலேம் மதங்களின் தலைநகரம் என்பதால், அதன்  புனிதத்தன்மை போற்றப்பட அரசியல் தீர்வுகளுக்கு  உட்படுத்துதல் காலத்தே அவசியமானது.

பாலஸ்தீனத்திற்காக, எருசலேமிற்காக, பாலஸ்தீனிய, பெத்லகேம் கிறித்தவர்களுக்காகச் செபிப்போம்.

news
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துமஸ் மென்மைப் புரட்சி!

கிறிஸ்து பிறப்பு விழா என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்றில் நடந்தேறிய ஓர் அழகான நிகழ்வினை நினைவுகூரும் கொண்டாட்டமாக மாறிவிடக்கூடாது. அது இறைமகன் இயேசு விருப்பத்துடனும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் இவ்வுலகில் ஏழ்மையில் வாழ்வோரின், நொறுக்கப்படுவோரின், வெறுக்கப்படுவோரின், ஒடுக்கப்படுவோரின், மென்மையானவர்களின், பலம் இழந்தவர்களின் வாழ்வில் பங்கெடுக்க எடுத்த நிலைப்பாட்டின் கொண்டாட்டம்! உடனிருப்பின் கொண்டாட்டம்! இயேசு மனுவுடல் ஏற்ற மறைபொருளை, தூரத்தில் நின்றுகொண்டு அதனை வியந்து பார்க்கவேண்டிய இறைவனின் செயலாக நாம் கடந்து செல்லக்கூடாது. மாறாக, அவரது மனுவுடல் ஏற்பினை நாமே நமது அன்றாட வாழ்வில் வாழ்ந்திட, நமக்கு வழங்கப்பட்டுள்ள சவால் மிகுந்த அழைப்பாக ஏற்கவேண்டும், அதனை வாழ்ந்திடவேண்டும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இறைவன் பிறந்த மாட்டுத்தொழுவத்தை நாம் அழகுபடுத்தி, ஒளிமயமாக்கி, மிகுந்த வண்ணங்கள் நிறைந்த இடமாக மாற்றி, அதன்மீது வழக்கமாக நமது கண்களைப் பதியவைப்போம். அவற்றைக் கடந்து மாட்டுத்தொழுவம் போன்று ஏழ்மையை, துன்பத்தை, புறக்கணிப்பை அன்றாட கசப்பான நிகழ்வாக-நிதர்சனமாகச் சந்திக்கும் மனிதர்கள்மீது நமது கண்கள் பதியட்டும்.

மனுவுடல் ஏற்பில்-ஏழ்மையே இறைவெளிப்பாடு

பெத்லகேமில் பிறந்த பாலன் இயேசுவிற்கு வசதியும், கவர்ச்சியான கண்கவர் பொருள்களும், சிறந்த மெத்தையும், சிறப்பு அரியணையும், சிவப்புக் கம்பள வரவேற்பும் வழங்கப்படவில்லை. சமுதாயம் புறக்கணித்த இயேசுவின் மனுவுடல் ஏற்பில் அவர்  தேர்ந்துகொண்ட இடமும், அப்பிறப்பினைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளும் அவரது தாழ்ச்சியின் வெளிப்பாடுகள். மனுவுடல் ஏற்பின் தாழ்ச்சி என்பது அன்று நடந்திட ஒரு சாதாரண சம்பவம் அல்ல; மாறாக, அதுவே இயேசுவின் நிலைப்பாடு. மனுவுடல் ஏற்பில் அவரின் ஏழ்மையும் தாழ்ச்சியும் இறைமையின் வெளிப்பாடுகள். அங்குதான், அம்மனநிலையில்தான் இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

மனிதகுலத்தின் துன்பத்தை - தமது ஏழ்மையில் பகிர்ந்த இயேசு

அகிலத்தையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவன் ஒரு சிறிய, பலவீனமான, ஏழ்மையான குழந்தையாக இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நம்மிடம் வருகின்றார். திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் திருத்தூது ஊக்கவுரையானநான் உன்னை அன்பு செய்தேன்என்னும் ஆவணத்தில்நமது மனித இயல்பின் வரம்புகளையும் பலவீனங்களையும் பகிர்ந்துகொள்ளவே இயேசுவைச் சிறிய குழந்தையாகக் காண்போம். அவரே சிலுவையில் நமது வறுமையையும் இறப்பையும் பகிர்ந்துகொண்டார்எனக் குறிப்பிடுகிறார்.

இயேசுவின் மனுவுடல் ஏற்றல் என்பது சமூகத்தில் பலம் இழந்து நிற்பவர்கள், உரிமையும் மாண்பும் மறுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் சார்பாக அவர் இருக்கின்றார். அவர்களுக்காகவே மாபெரும் நற்செய்தியாகப் பிறந்திருக்கின்றார். அவர்களின் இருளைப் போக்கும் பேரொளியாக உதிக்கின்றார் (பிலி 2:6-9) என்பதை உணர்த்துகின்றது. உடனிருக்கும் இயேசுவின் இத்தகைய நிலைப்பாட்டினைத் தியானிக்காமல் நம்மால் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட இயலாது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைநான், ‘எனதுஎன்னும் சிறிய வட்டத்தில் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் பிறப்பினைக் கண்டு நான் மட்டும் மகிழ்வது அல்ல; அவர் நேசித்து, உடனிருக்க விரும்பும் மக்களுடன் நாமும் உடன் பயணிக்க வேண்டும்.

ஆண்டில் சில திருவிழா நாள்களில், யூபிலிக் கொண்டாட்டங்களில் மட்டும் இத்தகைய மனிதர்களுக்கு உதவிட திரு அவை நம்மை அழைக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவுகளிலும் இத்தகையோருடன் உடனிருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

உடனிருப்பது - உணர்வுநிலை அல்ல; வாழ்வு முறை

இயேசு மனிதராகப் பிறந்து, நம்மிடத்தில் வாழ்ந்தார். இயேசுவின் உடனிருப்பு என்பது உணர்வுநிலை அல்ல; அது வாழ்வுமுறை. உணர்வு நிலையாக இருந்தால் காலச்சூழலுக்கு ஏற்ப மங்கிவிடும், மறைந்துவிடும்.

உடனிருத்தல் என்பது கடைநிலை மனிதருக்கு ஒருசில நேரங்களில் உதவுவது மட்டுமல்ல; மாறாக, சமூகமாகச் சிந்தித்து, சமூகமாக இத்தகையோருக்காகச் செயல்படுவது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைவரும் உடன்பிறந்தோர், 116). “நமது அன்றாடச் செயல்பாடுகளில், அலுவல்களில் அதிக முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு, எனது இத்தகைய பொறுப்புகளால், பணிகளால், வாழ்வு முறையால் ஏழைகள்மீது கவனம் செலுத்தவும், அவர்கள் அருகில் இருக்கவும் என்னால் இயலவில்லை என ஒருபொழுதும் நாம் கூறக்கூடாது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 201). இதுவே கிறிஸ்து பிறப்பின் அழைப்பு!

ஏழைகளே இயேசுவைத் தாங்கி நிற்கிறார்கள்

ஏழைகளே கிறிஸ்துவைத் தாங்கி நிற்பவர்கள். அவர்களே நமக்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்கள். அவர்களின் துன்பமான வாழ்வின் சூழலிலும் வெளிப்படும் இறைநம்பிக்கை, எதிர்நோக்கு, மனவுறுதி, விடாமுயற்சி... இவைகளெல்லாம் நமக்கு அவர்கள் கற்பிக்கும் பாடங்கள். எனவே, ஏழைகளே நமது கிறிஸ்துமஸ் ஆசான்கள்.

ஏழைகளில் நாம் கிறிஸ்துவைக் காண, கண்டுபிடித்து, அவர் கரம்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நம் இறைவன் அவர்கள் வழியாக வெளிப்படுத்தும் மறைபொருளை, ஞானத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது குரல்கள் அவர்களுக்காக ஒலிக்க வேண்டும். அவர்களை நண்பனாக்கி, அவர்களின் குரலுக்குச் செவிமடுத்து, இறைவன் அவர்கள் வழியாக உரையாடுவதை உணரவேண்டும். அது ஒருவரின் தனிவிருப்பச் செயல்பாடு அல்ல; மாறாக, இதுவே நற்செய்தியின் மையம் (திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்ச்சியின் நற்செய்தி).

இயேசுவின் மனுவுடல் ஏற்பு - ஒரு மென்மைப் புரட்சிக்கு, ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 88). அவரது மனுவுடல் ஏற்புஅவரது மென்மையின் வெளிப்பாடு. ஆனால், அது பலவீனம் அல்ல; அது துணிவின் வெளிப்பாடு. இயேசுவின் மனுவுடல் ஏற்பு ஒரு துணிவான முடிவு. அவரே இன்னும் பலமிழந்த எளியவர்கள், புறம்பே தள்ளப்படுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்வினை மாற்றிட மென்மையான குழந்தையாகப் பிறக்கின்றார். அவர்கள் மத்தியில் பிறக்கும் இயேசுவைக் காண்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.

கிறிஸ்துமஸ் காலத்தின் சில கேள்விகள்

கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் முன்பாக நாம் குனிந்து முழந்தாளிட்டு பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம்.

நான் பாலன் இயேசுவை அழகான, ஆடம்பரமான, வசதியான இடங்களில் மட்டும் தேடுகின்றேனா? அல்லது துன்பப்படுவோரின் முகங்களில், இருப்பிடங்களில் தேடுகின்றேனா?

என் பங்கில், நகரில், கிராமத்தில், அருகாமையில், வாழ்விடங்களில் மறக்கப்பட்டவர்கள் யார், யார்? நான் அவர்களிடம் சென்று உரையாடி, மனுவுடல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

என் கிறிஸ்துமஸ் பகிர்வும், வெளிப்படுத்தும் அக்கறையும் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மட்டும் உள்ளனவா? அல்லது அவர்கள் மீதான ஆழமான அன்பாக, நிலைப்பாடாக மாறுகின்றதா?

இறுதியாக...

கிறிஸ்துமஸ் விழாவின் ஆன்மாவிற்குள் சென்று அதனைக் கொண்டாடிட அன்னை மரியாவுடனும் யோசேப்புடனும் உடன் நடந்து, மேய்ப்பர்களின் அருகில் நாமும் முழந்தாளிட்டு, கைவிடப்பட்டோரின், புறக்கணிக்கப்பட்டோரின் நம்பிக்கையாக, எதிர்நோக்காக, விடிவெள்ளியாக மனுவுடல் ஏற்கும் இயேசுவைக் கண்டு, அவரைத் தாங்கிக்கொள்வோம். இயேசு தம்மை வெளிப்படுத்த விரும்பும் இடத்தில் அவரைத் தேடுவோம்! கண்டு கொள்வோம்!

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் இரண்டாவது பொதுப்பேரவை - 2025

புனித யூஜின் டி மாசனெட் துறவற சபையின் (SDM) இரண்டாவது பொதுப்பேரவைக் கூட்டம் கடந்த அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய நாள்களில் சென்னை, புனித தோமையார் மலையில் அமைந்துள்ள DMI தேசிய மையத்தில் நடைபெற்றது.

சபையின் நிறுவுநர் நினைவில் வாழும் மதிப்புமிகு பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின் நினைவுகளுடன் தொடங்கிய இக்கூட்டத்தில், பேரவைக்கான ஆன்மிகத் தயாரிப்பை அருள்பணி. ஜெரி சே.. வழிநடத்தினார். அவருடைய உரையாடலும், ஆன்மிகச் சிந்தனைகளும் சபை உறுப்பினர்கள் தூய ஆவியாரின் தூண்டுதலுக்குத் திறந்த மனநிலையுடன் தங்களையே அர்ப்பணிக்க உதவியாக அமைந்திருந்தன.

இப்பேரவையை ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக, செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயரும், இச்சபையின் திரு அவைசார் ஆலோசகருமான ஆயர் மேதகு நீதிநாதன் அவர்கள், செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி. அருள்ராஜ் மற்றும் மறைமாவட்ட நிதி மற்றும் சொத்துகளின் கண்காணிப்பிற்கான திருத்தூது நிர்வாகி அருள்பணி. டேவிட் குமார் OMI ஆகிய இருவரையும் நியமித்தார். இவர்களின் வழிகாட்டுதலுடன் பேரவை அமர்வுகள் சகோதரத்துவ உணர்வு, தியானம், இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழியாகச் சபையின் நோக்கத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தின. ஆழமான இறைவேண்டல் மற்றும் தூய ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி இந்தப் பேரவை சபையின் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது.

இரண்டாவது பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிர்வாகம்:

பேரருள்பணி. அந்தோனி அடிமை பிரான்சிஸ், SDM  - சபை தலைவர்

பேரருள்பணி. மரிய இராபர்ட் செபாஸ்டின், SDM - முதன்மை அருள்பணியாளர்

அருள்பணி. ஆன்ட்ரூ கஸ்பார், SDM - பொது ஆலோசகர்

அருள்பணி. ஸ்டீபன் குழந்தைசாமி, SDM - பொது ஆலோசகர்

அருள்பணி. கிரண்குமார் பட்டு, SDM - பொது ஆலோசகர்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மேனாள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு நிறைந்த பணிக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள பணியை மிகுந்த நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனும் செய்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டைப் புதுப்பித்தனர். சிறப்பாக நடைபெற்ற இந்தப் பொது அமர்வு, தங்கள் சபை நிறுவுநரான பேரருள்பணி. ஜெரார்டு பிரான்சிஸ் OMI அவர்களின் அர்ப்பணிப்பையும், அவரின் எதிர்கால முன்னுரிமைகளையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

பேரருள்பணி. அந்தோனி அடிமை பிரான்சிஸ், SDM, சபை தலைவர், புனித யூஜின் டி மாசனெட் துறவற சபை

news
சிறப்புக்கட்டுரை
ஒரு ‘திலெக்சிட் தே’ கிறிஸ்துமஸ்!

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவரின் கிறிஸ்துமஸ் செய்தி

நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல்வேறு மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களினாலும், பளிச்சிடும் அலங்காரங்களாலும், விற்பனை சார்ந்த நுகர்வுகளாலும் தனது அடிப்படைத்தன்மையை இழக்கும் அபாயத்தில் இருக்கும் இக்காலத்தில், திருத்தந்தை லியோ அவர்கள் அண்மையில் வெளியிட்ட திருத்தூதருக்குரிய ஊக்கவுரையானதிலெக்சிட் தேகிறிஸ்து பிறப்புத் திருநாளின் அர்த்தத்தைத் தெளிவூட்டுகிறது.

கிறிஸ்துமஸ் என்பது வசதியாக வாழ்பவர்களுக்கான அமைதியான இரவு அல்ல; அது ஒரு தீவனத்தொட்டியிலிருந்து முழங்கும் புரட்சிகர அறிவிப்பு. ஏழைகள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் துன்புறுத்தப்படுபவர்கள்மீது கடவுள் கொண்ட அற்புதமான அன்பின் சாட்சியம். கொண்டாட்டத்திலிருந்து ஒன்றிப்பிற்கும், வழிபாட்டிலிருந்து சாட்சியத்திற்கும் நம்மை அழைக்கும் அழைப்பாக அது விளங்குகிறது. முதலில், இச்செய்தி நமக்கு நினைவூட்டுவது, கிறிஸ்துமஸ் நிகழ்வின் மையத்தில் இறைவன் ஏழைகளைத் தேர்ந்தெடுத்ததன் சிறப்பினைக் கொண்டாடுவது. அதிகாரமும் பெருமையும் கொண்ட சத்தத்தால் நிரம்பிய உலகில், எல்லாம் வல்லவரான இறைவன் தமது வருகையைப் பிலாத்துவின் அரண்மனையிலும், எருசலேம் கோவிலின் முற்றங்களிலும் அறிவிக்கவில்லை; மாறாக, மனித வடிவத்தை ஏற்று, தம்மைத் தாழ்த்திக்கொண்டு, தீவனத்தொட்டியில் படுத்திருக்கும் ஒரு குழந்தையின் எளிய நிலையையே அவர் தேர்ந்தெடுத்தார் (பிலி 2:7). ‘திலெக்சிட் தேஇந்த அதிசய உண்மையைத் திடமாக உறுதிப்படுத்தி, “ஏழைகளின்மீது கூர்ந்த கருணை காட்டப்படுவதிலேயே தேவனின் இரக்கமிக்க அன்பு வெளிப்படுகிறதுஎன்று கூறுகிறது.

மேலும், ஏழைகள் நம்முடைய இரக்கப்பணியைப் பெறுபவர்கள் மட்டுமல்லர்; அவர்கள் இறைவார்த்தையைத் தாங்குபவர்களும் ஆவர் என்பதைதிலெக்சிட் தேவலியுறுத்துகிறது. இந்த ஆவணம் அவர்களைநற்செய்தி அறிவிக்கும் ஆசிரியர்கள் (எண் 79) என அழைக்கிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை அவர்கள் தங்கள் பண்பாட்டை வடிவமைக்கத் தகுதியான உள்ளடக்கமானவர்கள் என நாம் அறிந்துகொள்ளவேண்டும் (எண் 100). துன்பங்களில் வழிநடத்தப்பட்ட அவர்களின் அனுபவங்கள்மற்றவர்கள் காணாத மேலான ஞானத்தைஅவர்களுக்கு அளிக்கிறது (எண் 102). இந்த அன்றாட உறுதிமொழியும், கடினச் சூழ்நிலைகளில் இறைவனைத் தேடும் நிலையும், அவர்களின் பற்றும் அவர்களை உண்மையானநற்செய்தி பரப்புபவர்கள்ஆக்குகிறது. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளத்துடன் வந்த ஞானிகள், திருக்குடும்பத்தின் வறுமையிலே தமது உண்மையான செல்வத்தைக் கண்டதுபோல, ஆலயத் தொன்மையான போதனைகள் கூறுவதைப் போலவே ஏழைகளிடம் சமுதாயத்திற்குக் கற்பிக்க வேண்டியவை இருப்பதை உணர்கிறோம். முழுமையாக மனிதப் பிரிவினை சார்ந்திருந்த குழந்தை இயேசுவே இந்த முதல் ஆசிரியர். பலவீனத்தில் இறைவனின் வல்லமை வெளிப்படுவதை வெளிப்படுத்துபவர். பெத்லகேம் காட்சியே நமது மனத்தை அசைக்கிறது; அதிகாரத்திற்கு முன் அல்ல; அன்பால் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வறுமையின் ஞானத்திற்கு முன் நம்மைத் தாழ்த்த அழைக்கிறது.

கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய அன்புச்செயலும் தீவனத்தொட்டியின் முன் வைக்கப்பட்ட காணிக்கைகளின் தொடர்ச்சியே. ஆகவே, நமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடிவாக அல்ல; ஆரம்பமாகக் காணும்படி இந்த மடல் நம்மை அழைக்கிறது. இறைவன் மனிதரான மறையுண்மையை, ஒருவர் மற்றவர் மீதுள்ள அன்பின் மூலம் எதிரொலிக்குமாறு உற்சாகப்படுத்துகிறது. இந்தக் கிறிஸ்துமஸில்திலெக்சிட் தேதீவனத்தொட்டியை நமது கைகளில் ஒப்படைக்கிறது. அது ஓர் அலங்காரம் அல்ல; நம்பிக்கையின் மாறாத அளவுகோல். இங்கே நாம் வசதியானோருக்கான தாலாட்டுகள் கேட்பது இல்லை; ஏழைகளுடன் நிற்க வேண்டிய இறைவனின் முழக்கத்தையே கேட்கிறோம். இந்த எளிய மாட்டுத்தொழுவத்தில் சமுதாயத்திற்கு இறைவார்த்தையைக் கற்பிக்கும் தகுதியைப் பெற்றவர்களையும், அதனை உலகனைத்திற்கும் பரப்புபவர்களையும் கண்டடைகிறோம். இங்கு கிறிஸ்துமஸ் ஒரு செயற்பாட்டு வினையாகிறது. உலகில் இயங்கும் கிறிஸ்துவைக் காண அழைக்கிறது. நம் கிறிஸ்துமஸ் கீதங்களில் பாடப்படும் அன்பு, ஆடையின்றி இருப்போரை உடுத்துவிக்கவும், பசித்திருப்போருக்கு உணவு கொடுக்கவும், புலம் பெயர்ந்தோரை வரவேற்கவும் வேண்டும்; ஏனெனில், அவர்களிலே ஒரு காலத்தில் வீடற்றிருந்த குழந்தையாகிய கிறிஸ்துவையே நாம் வரவேற்கிறோம் என்பதை உலகிற்கு மெல்ல உரைக்கிறதுதிலெக்சிட் தே.’

அனைவருக்கும் ஆசிர் நிறைந்த கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துகளையும், அருள் மிகுந்த 2026-ஆம் ஆண்டின் இறையாசிரையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.