news
இந்திய செய்திகள்
முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அருள்சகோதரி பிரான்சிஸ் காலமானார்!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பட்டுவம் கிராமத்தில், கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான அருள்சகோதரி பிரான்சிஸ் டிசம்பர் 30 அன்று 74 வயதில் இறந்தார். அருள்சகோதரி பிரான்சிஸ் 1969 -ஆம் ஆண்டு அவர் சபையில் சேர்ந்த பிறகு, தனக்குப் பிடித்த புனிதரான புனித பிரான்சிஸ் அசிசியின் பெயரை தனது பெயராகத் தேர்ந்தெடுத்தார். 1975 -ஆம் ஆண்டில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பேட்ஜைப் பெற்றவர் தன் வாழ்க்கையில் பல மாவட்டங்களில் மருத்துவப் பணியாற்றினார். நள்ளிரவில் கூட ஏழை நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர் தயாராக இருந்தார். அருள்சகோதரியின் இறப்பு பெரும் இழப்பாகக் கருதப்படுகின்றது.

news
இந்திய செய்திகள்
அரசின் வனச்சட்டங்களில் மாற்றம் - எதிர்ப்பு!

சீரோ-மலபார் திரு அவையின் ஆயர்கள் கேரள மாநிலத்தில் வனச்சட்டங்களில் மாற்றங்களை எதிர்த்துக் குரல் எழுப்பியுள்ளனர். புதிய திருத்தங்கள், காடுகளுக்குச் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் தலைமையிலான கேரள அரசு, 1961 -ஆம் ஆண்டின் வனச்சட்டத்தைத் திருத்துவதன் மூலம், சிறந்த வனப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றது. எனினும், இந்த மாற்றங்கள் மனித-விலங்கு மோதல்களைக் கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு அதிக பிரச்சினைகளை உருவாக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வன அதிகாரிகளுக்குக் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குவது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், இந்தத் திருத்தங்களை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காடுகளுக்கு அருகில் வாழும் மூன்று மில்லியன் விவசாயிகள், அத்துடன் மனித-விலங்கு மோதல்கள் காரணமாகத் தங்கள் உயிரையும் பயிர்களையும் காப்பாற்றத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 2017 முதல் 2021 வரை இந்த மோதல்களில் 445 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

news
இந்திய செய்திகள்
உயிருள்ள மருத்துவமனையாக!

திரு அவை வளர வேண்டுமானால் குரலற்றவர்களின் குரலையும், விளிம்புநிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் அணுக வேண்டும்என்று இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட், சீரோ-மலபார் திரு அவை ஆயர்களின் கூட்டமைப்பில் தனது முதல் உரையில் கூறியுள்ளார். மேலும், திரு அவை போர்க்களத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்றும் மருத்துவமனையாக மாற வேண்டும் என்று கூறினார். இந்த உரை கேரளாவில் நடைபெறும் திருவழிபாடு பிரச்சினையின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.

news
இந்திய செய்திகள்
புத்தகங்களை விரும்பிப் படிப்பதனால் ஒருவரது வாழ்க்கை மாறும்

புத்தகங்களை வாழ்க்கையின் அங்கமாக நேசிப்பவருக்கு, அவை வாழ்க்கையை மாற்றும். புத்தகங்கள்தான் நமது அறிவுக்கண்ணைத் திறக்கும். அவை உன்னத நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். புத்தகம் என்பது ஒரு பொருள் அல்ல; அவை ஒருவரை அவருக்கே அடையாளப்படுத்தும் அற்புதம்; அறிவுசார் கருவி.”

உயர்திரு. அரங்க மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

news
இந்திய செய்திகள்
கருத்துரிமையின் உண்மையான நோக்கம் காக்கப்பட வேண்டும்

கருத்துரிமை என்பது மனித குலத்துக்குக் கிடைத்த பெரும் பேறு! அறிவுப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்து, ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டியது அவசியம். மாறாக, விவாதங்களை முடக்கினால் கருத்துரிமையின் உண்மையான நோக்கம் முழுமை அடையாது. சனநாயகக் கோவில் என்னும் நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தை, விவாதம், ஆலோசனை, கருத்துப் பரிமாற்றம் என அனைத்தும் தேவையற்ற இடையூறுகளால் பாதிக்கப்பட்டு, அதன் புனிதத்தன்மையைச் சீரழிக்கிறது.”

மாண்புமிகு. ஜெகதீஷ் தன்கர், குடியரசுத் துணைத் தலைவர்

news
இந்திய செய்திகள்
புத்தகத்தைப் படித்து அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுதல் வேண்டும்

புத்தகங்களைப் படிப்பவர்கள் அதில் உள்ள கருத்துகளை உள்வாங்கி வாழ்க்கையில் செயல்படுவதில்லை. படித்தவர்கள், தாம் கொண்ட கருத்தில் மாற்றுக்கருத்து உடையவர்களையும் கேட்டுச் செயல்படுவதற்கு வள்ளுவர் வழிகாட்டியுள்ளார். ஆனால், தற்போது மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையுள்ளோர் குறைந்துவிட்டனர். புத்தகம் படிக்கத் தெரிந்தவர் மனிதராகவும் படிக்கத் தெரியாதவரை விலங்காகவும் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தகத்தைப் படித்தால் மட்டும் போதாது, அதில் கூறும் அறத்தின் வழி செயல்படுவதே சிறந்ததாகும்.”

- பேச்சாளர் திரு. சுகி சிவம்