news
இந்திய செய்திகள்
காஷ்மீரில் தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்கர் நல்லடக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 57 வயதான கத்தோலிக்கர் சுஷயீல் நத்தனியேல் உள்பட 27 பேர் கொல்லப்பட்டனர். இந்தோர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் விடுமுறையில் இருந்தபோது, பயங்கரவாதிகள் இவரைச் சுட்டுக்கொன்றனர். ஏப்ரல் 24 அன்று இந்தோர் மறைமாவட்ட ஆயர் தோமஸ் மேத்யூ குட்டிமக்கல் தலைமையில் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. நத்தனியேலின் மனைவி ஜெனிபர், பயங்கரவாதிகள் அவரை மதம் கேட்டுச் சுட்டதாகத் தெரிவித்தார். இவரது குழந்தைகள் தப்பியோடியபோது காயமடைந்தனர்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

அனைத்துத் தொழில் துறைகளும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான செயல்திறன் மிக்க தொழில்நுட்ப அறிவாற்றல் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை வடிவமைக்க தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் இயந்திரவழிக் கற்றல், தரவு அறிவியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உறுதுணை புரிகின்றன. தொழில்நுட்பங்களைப் படைப்பாற்றலுடன் ஒருங்கிணைத்து உருவாக்கும் புத்தாக்கத் திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.”

- பேராசிரியர் டேனியல் சந்திரன், சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை முதல் தலைமுறை உரிமைகள் என அழைக்கிறோம். அடுத்து சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை இரண்டாவது தலைமுறை உரிமைகள் என்கிறோம். பின்னர் வளர்ச்சி, சுகாதாரச் சூழலுக்கான உரிமைகள் போன்ற கூட்டுரிமைகள் மூன்றாவது தலைமுறை உரிமைகள் எனப்படுகின்றன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் நான்காவது தலைமுறை உரிமைகள் உருவாகியுள்ளன. இது பாலினத்தை மாற்றும் உரிமை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல், இனப்பெருக்க உரிமைகள் போன்ற தனிப்பட்ட சுயாட்சி உள்ளிட்ட உடலியல் சார்ந்த உரிமைகளாகவும் இணைய உரிமை, அந்தரங்க உரிமை, எண்ம ஆளுமைக்கான உரிமை போன்ற எண்ம மற்றும் தகவல் உரிமைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் புதிய உரிமைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை நம்முடைய பழைய உரிமைகளுக்கும் விழுமியங்களுக்கும் சவாலாக உருவாகியுள்ளன.”

- நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன், தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர்

மனிதர்களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரங்களால் செய்ய முடியும் என்பது உண்மைதான். அதேநேரம், இதனால் வேலைவாய்ப்பே இல்லாமல் போவதற்கு இன்னும் காலம் அதிகம் இருக்கிறது. முன்பு கம்ப்யூட்டர் வந்தபோதும் வங்கிகள், இரயில்வே துறைகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால், அது பலுகிப் பெருகி இருக்கிறது. மக்கள்தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி இருக்கும் வரை ஒரு வேலை போனாலும், புதிய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.”

- திரு. சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

news
இந்திய செய்திகள்
திருத்தந்தையின் மறைவுக்குக் குடியரசுத் தலைவர் அஞ்சலி!

ஏழைகளை அரவணைத்து, ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாத்து, விளிம்புநிலை மக்களின் இறைவாக்கினராக வாழ்ந்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு வத்திக்கானில் இந்திய அரசின்  சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற அடக்கத் திருப்பலி நிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.

news
இந்திய செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளார்!

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!

நமது அன்பிற்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை எண்ணி மீளாத் துயரிலும் வருத்தத்திலும் இருக்கின்றோம். அவரது மறைவு நமக்கு மாபெரும் இழப்பாகும்.

உண்மையான மக்களின் மேய்ப்பராகத் திருத்தந்தை பிரான்சிஸ் தனது வாழ்க்கையை நற்செய்தி அறிவிப்பதிலும், ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனுக்காகப் போராடுவதிலும், இரக்கம், நீதி மற்றும் இயற்கையின்மீது அக்கறை கொண்டு வாழ்வதிலும் தன்னையே இந்த உலகிற்கு அர்ப்பணித்தார். கத்தோலிக்கர்களின் ஆன்மிகத் தலைவராக அவர் திரு அவையை ஞானத்துடனும் தாழ்மையுடனும் திறந்த இதயத்துடனும் வழிநடத்தினார். மக்களை இறைவனுக்கு அருகில் அழைத்துச் செல்லவும், அன்பும் ஒற்றுமையும் நிலவவும் எப்போதும் பாடுபட்டார்.

பேதுருவின் வழித்தோன்றலாக 2013 முதல் 2025 வரை திரு அவையை வழிநடத்தியவர் என்ற நிலையில், அவரது படிப்பினைகள் என்றென்றும் மதிப்புடன் நினைவுகூரப்படும். ஒன்றிப்பின் சமூகமாகத் திரு அவையை மாற்றவேண்டும் எனும் அவரது பார்வை, அதாவது செவிமடுத்தல், தேர்ந்து தெளிதல், ஒருங்கிணைந்து பயணித்தல், ஒன்றிப்பை ஏற்படுத்துதல் எனும் அவரது பார்வை திரு அவையில் அனைத்து நிலைகளிலும் அழியாத் தடங்களை விட்டுச் சென்றுள்ளன. ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்தோர்மீது அவர் கொண்டிருந்த ஆழமான இரக்கம் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். மேலும், நாடுகளுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவித்த அவரது பங்களிப்பும் மிகச் சிறப்பானதாகும்.

சமயங்களுக்கு இடையிலான உரையாடலில் அவர் காட்டிய உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கதும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் உள்ளது. ‘இறைவா உமக்கே புகழ் (‘Laudato Si’) என்ற திருத்தூதுஊக்க உரை மூலம், இயற்கையைப் பாதுகாக்க அவர் விடுத்த அழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

நம் நாட்டை மிகவும் அன்பு செய்த திருத்தந்தை இந்தியாவிற்கு வருவதற்கு மிகவும் விரும்பினார். ஏழைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கவனிக்க வேண்டும் என்பதையும், ஒன்றிப்பின் திரு அவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதையும் தொடர்ந்து நினைவூட்டினார். 2025, சனவரியில் புவனேஸ்வரில் நடைபெற்ற 36-வது இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின்போது, திருத்தந்தை இந்திய ஆயர்களுக்கு அனுப்பிய செய்தியில், அவர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையிலிருப்போருக்கு முதன்மை இடம் கொடுத்துஆலயத்தின் கதவுகளைத் திறந்துவிடக் கேட்டுக்கொண்டார். மேலும், அவர் திரு அவையில் ஒன்றிப்பின் பயனை ஒவ்வொரு திரு அவையும் மேம்படுத்தி, இணைந்து பயணித்தலின் கனியைப் பெற்றுக்கொள்ள ஆயர்களை ஊக்குவித்தார். திருத்தந்தை தன் பணிக்காலத்தில் புனித குரியாகோஸ் எலியாஸ் சவாரா, புனித எப்ரேசியா எலுவதிங்கள் (2014), புனித ஜோசப் வாஸ் (2015), புனித மரியம் திரேசியா சீராமெல் (2019), புனித தேவசகாயம் (2022) ஆகிய ஐந்து இந்தியர்களைப் புனிதராக உயர்த்தியுள்ளார்.

இந்தப் பெரும் துயரத்தை நாம் அனுபவிக்கும் இவ்வேளையில், எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், துறவற இல்லங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்பது நாள்கள் துக்க அஞ்சலியை அனுசரிக்கவும், திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்பு இறைவேண்டல்களை நடத்தவும் நான் அழைக்கிறேன். நாம் அனுபவிக்கும் துயரத்தின் அடையாளமாக, அனைத்து ஆலயங்களிலும் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யக் கேட்டுக்கொள்கிறேன். இது நம் துயரத்தையும், நம் உன்னதத் திருத்தந்தையின் மறைவையும் அறிவிக்கும் செயல்பாடாக அமையும். திருத்தந்தையின் நினைவால் தங்கள் வசதிக்கேற்ப ஒருநாள் அனைத்து மறைமாவட்ட அருள்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் தங்கள் பேராலயத்தில் கூடி திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காகச் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றக் கேட்டுக்கொள்கிறேன். இது உலகமெங்கும் உள்ள திரு அவையுடன் நம் ஆழ்ந்த ஒற்றுமையின் வெளிப்பாடாக இருக்கும். அன்பும் இரக்கமும் நிறைந்த ஆண்டவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நிலையான இளைப்பாற்றியை அருள்வாராக! இக்கடினமான சூழலில் புனித கன்னி மரியாவின் பரிந்துரையால் திரு அவை அமைதியும் வலிமையும் பெறுவதாக!

 

news
இந்திய செய்திகள்
இந்திய அருள்சகோதரிகளுக்கு விழிப்புணர்வு தரும் பயிற்சிப் பட்டறைகள்

இந்தியாவில் உள்ள கத்தோலிக்க அருள்சகோதரிகள் பாலியல் முறைகேடுகள், மனநலப் பாதிப்புகள் மற்றும் தற்கொலைப் போக்குகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சிப் பட்டறை ஒன்று அண்மையில் கோவாவில் நடைபெற்றது. இந்தியக் கத்தோலிக்கப் பெண் துறவு சபைகள் அமைப்பானது (CRWI) பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிப் பட்டறையில் 50 அருள்சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றுள்ளனர். மனநலம், கடுந்துன்ப மதிப்பீடு, ஆற்றுப்படுத்துதல், அறநெறிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் வழியாக அருள்சகோதரிகள் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், மனநலம் மற்றும் நலவாழ்வு குறித்த இந்தப் பயிற்சித் திட்டத்தால் ஏறக்குறைய 350 அருள்சகோதரிகள்  பயனடைந்துள்ளனர் என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

news
இந்திய செய்திகள்
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவில் முதல் பெண் இணைச் செயலர்!

கர்நாடகப் பிராந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (KRCBC) தலைவரும், பெங்களூரு உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான பீட்டர் மச்சாடோ, டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் அவர்களை ஏப்ரல் 7 அன்று பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (SC\\ST\\BC) பணிக்குழுவின் புதிய இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.

டாக்டர் இசபெல்லா பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக் குழுவில் இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்பதால், இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதன் செயலராக இருந்த அருள்பணி. யாகப்பா அவர்களுக்குப் பதிலாக இணைச் செயலாளரான திரு. ஆல்பன்ஸ் ஜி. கென்னடி தற்போது இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் இப்பணியில் அமர்த்தப்படும் முதல் பொதுநிலையினர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

டாக்டர் இசபெல்லா செல்வராஜ் சேவியர் மனித உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்புபவர். தார்வாடில் (Dharwad) இவர் நிறுவியுள்ளசாதனாமகளிர் மற்றும் குழந்தைகள் நலச்சங்கம் மற்றும் மனித உரிமைகள் மையம் 2001-ஆம் ஆண்டிலிருந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், மனிதக் கடத்தல், குழந்தைத் திருமணம், சுரண்டல் போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராடி வருகிறது. திறமைமிக்கக் கல்வியாளரான இவர் உளவியல், இந்தி, சமூகவியல் மற்றும் சமூகப் பணியில் முதுகலைப் பட்டங்களும், வாஷிங்டன், D.C.-இல் ஆன்மிகம் மற்றும் தலைமைப் பணி குறித்து முனைவர் பட்டமும் (Ph.D.) பெற்றவர்.

2005-ஆம் ஆண்டு முதல் சமூகச் சேவைக்காக இவர் 11 விருதுகளைப் பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு இவர் இந்திய ஆயர் பேரவையின் கீழ் (CBCI) இயங்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் ஒரு பகுதியான தலித் கிறித்தவப் பெண்களின் மாற்றத்திற்கான (Dalit christian women for change) இயக்கத்தின் தேசியத் தலைவராகப் பணியாற்றியவர்