news
இந்திய செய்திகள்
ஜலந்தர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்!

ஜூன் 7, சனிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இந்தியாவிலுள்ள ஜலந்தர் மறைமாவட்டத்திற்கு ஜோஸ் செபாஸ்டின் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். 1962, டிசம்பர் 24 அன்று கேரளாவில் உள்ள பாலை மறைமாவட்டத்தின் களக்கட்டி என்னும் ஊரில் பிறந்த இவர், 1991, மே 1 அன்று ஜலந்தர் மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். உரோம் உர்பானே திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் திரு அவைச் சட்டத்தில் முதுகலைக் கல்வி கற்றார். ஜலந்தர் மறைமாவட்டத்தின் துணைவேந்தர், மறைக்கல்வி இயக்குநர், ஜலந்தரிலுள்ள தமத்திருத்துவக் கல்லூரியின் தத்துவவியல் துறையின் தலைவர், கிறிஸ்து அரசர் பள்ளி இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் தனது பணிகளை ஆற்றியவர் புதிய ஆயர்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

பூமி கிரகத்தைக் காக்கவும், வளங்களைப் பாதுகாக்கக் கூட்டாக உழைக்கவும் மக்கள் மீண்டும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமைப் பூமியை உருவாக்க வழி வகுக்கும்.”

- மாண்புமிகு திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறு வரையறையும் தற்செயலானவை இல்லை. தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து, நம் வாசற்படிவரை வந்துவிட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. நமது மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ள ஒரே காரணத்திற்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”

- மாண்புமிகு மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ் அல்லாத ஒரு மொழி, திராவிட மொழிகளுக்குத் தாயாகத் தமிழுக்கு முற்பட்டு இருந்ததே இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் 73 மொழிகள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் இலக்கிய வழக்கும், பேச்சு வழக்கும் உள்ள மொழிகளாகும். மற்றவை யாவும் வெறும் பேச்சு வழக்கில் உள்ள மொழிகள்தாம். இந்த நான்கு மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்களைத் தமிழ் கொண்டுள்ளது.”

திரு. பழ. நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தைக்கான நன்றிப் பெருவிழா!

2025, ஜூன் 1 அன்று புதுதில்லி உயர் மறைமாவட்டம், கடவுளின் கொடையாம் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களுக்காக நன்றிப் பெருவிழா திருப்பலி ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் திருத்தூதர் லியோ போல்டோ ஜெரல்லி திருப்பலிக்குத் தலைமையேற்று இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மேலும், பேராயர் அனில்குட்டோ, ஆயர் தீபக், அருள்தந்தையர்கள்,  அருள்சகோதரிகள்  மற்றும் இறைமக்கள் ஆகியோர் இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.

news
இந்திய செய்திகள்
சீரோ-மலங்கரா தலத் திரு அவைக்குப் புதிய ஆயர்

திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலம் சீரோ- மலங்கரா மாவேலிக்கரா மறைமாவட்டத்திற்கு, மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்களைப் புதிய ஆயராக நியமித்துள்ளார். ஆயர் மேத்யூஸ் போலிக்ராப்ஸ் அவர்கள் 1955-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி மணக்காரகாவில் பிறந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2022, மே 15 அன்று ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர் திருவனந்தபுரம் துணை ஆயராகவும்  பணியாற்றியுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

சட்டங்களை இயற்றுவதும், அவற்றில் திருத்தங்கள் செய்வதும்தான் சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தின் மையமாக இருக்கிறது. நாடாளுமன்றம், மாநிலச் சட்டப் பேரவைகள் இயற்றும் எந்தவொரு சட்டத்தையும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது.”

- உச்ச நீதிமன்றம்

நீதித்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள், நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த நீதித்துறையின் நேர்மையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கும் சாத்தியக்கூறு உள்ளது. நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைப்பதாகவும் அது உள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் தீர்க்கமான, விரைவான, வெளிப்படையான நடவடிக்கைகளின் மூலம் நம்பிக்கையை நாம் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். மேலும், நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றவுடன் அரசின் மற்றொரு நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காக நீதிபதி பதவியை இராஜினாமா செய்வது நீதித்துறைமீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது.”

- உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக அனைவரும் பெருமையாகக் கூறி வருகின்றனர். ஆனால், எனக்கு அவற்றில் பெரிதளவு உடன்பாடு கிடையாது. நமது நாட்டில் வெறும் 10 சதவிகித நிறுவனங்கள்தாம் 50 சதவிகிதப் பொருளாதாரத்தை ஈட்டுகின்றன. இப்படிப் பணக்கார நிறுவனங்கள், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதால் யாருக்கும் எந்தப் பயனும் கிடையாது. இங்குக் கிராமங்களில் உள்ள சாதாரண விவசாயிகளுக்கு உடுத்த உடை, தினமும் மூன்று வேளை சாப்பாடு, அவர்களது குழந்தைகளைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும் அளவு பொருளாதார வசதி ஆகியவை கிடைக்கும்போதுதான் நாம் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவோம்.”

- மாண்புமிகு அமைச்சர் மனோ தங்கராஜ்

news
இந்திய செய்திகள்
புதிய திருத்தந்தை இந்திய நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு

வத்திக்கானில் நடந்த ஒரு கூட்டத்தில் CBCI தலைவரான திருச்சூர் பேராயர் ஆண்ட்ரூஸ் தாழத் அவர்கள் திருத்தந்தையை இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்திய மக்கள் அனைத்துச் சடங்குகள் மற்றும் சமயங்களைக் கடந்து  திருத்தந்தை லியோ அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறிய பேராயர், “திருத்தந்தையின் வருகை நம்பிக்கையாளர்களுக்கு ஓர் ஆழமான ஆசிராகவும், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒற்றுமையின் வலுவான அடையாளமாகவும் இருக்கும்என்றும் தெரிவித்தார்.