news
இந்திய செய்திகள்
தொடரும் மணிப்பூர் கலவரம்!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி கிறித்துவர்களுக்கும் பெரும்பான்மை இந்துகளுக்கும் இடையே நடந்து வரும் வகுப்புவாத வன்முறைகளுக்கு மத்தியில், மூன்று குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட கடத்தப்பட்ட ஆறு நபர்களின் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. நவம்பர் 12 அன்று 11  இந்துகள் கடத்தப்பட்டதற்குப் பழங்குடி கிறித்துவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்களில் 5 நபர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஆயுதக் குழுக்களின் பிடியிலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்..க்கள் வீடுகளுக்குத் தீ வைத்த போராட்டக்காரர்கள் முதல்வரின் வீடு, அரசு சொத்துகள்மீது தாக்குதல் நடத்தினர். வன்முறையைக் கட்டுப்படுத்த இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

news
இந்திய செய்திகள்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு

மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நோட்டுப் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடிய ஸ்டேஷனரிக் கடைகளைத் தவிர வேறு எந்தப் பெட்டிக் கடைகளையும் அமைக்க அனுமதிக்கக்கூடாது. இதை முழுமையாகக் காவல்துறை கட்டுப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்தக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும். இதற்காகப் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி, சி.பி.. அதிகாரி அடங்கிய சிறப்புக் குழுவை மத்திய-மாநில அரசுகள் நியமித்துக் கண்காணிக்க வேண்டும்.”                                                

- சென்னை உயர் நீதிமன்றம்

news
இந்திய செய்திகள்
‘வாழ்நாள் முழுவதும் கற்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்’

வாழ்வில் சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் இளைஞர்கள் எதிர்வரும் சவால்களை விடாமுயற்சியுடன் சமாளித்து, தொடர்ந்து கற்பதன் மூலம் தங்களை மேம்படுத்திக் கொள்வதை வாழ்வின் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ளாமல், நேர்மையுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும்.”

- பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) முன்னாள் இயக்குநர்

news
இந்திய செய்திகள்
சாலை விபத்துகளால் இரத்ததான சேவை அதிகரிப்பு

சாலை விபத்துகளால் இரத்தத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இரத்ததானம் செய்ய பல இளைஞர்கள் இன்றைக்கு முன்வருகின்றனர். ஆனால், இயந்திரமயமான உலகம், வேகமான வாழ்க்கையில் அவசரத் தேவைக்காக அவர்களைத் தொடர்புகொள்வது எதிர்காலத்தில் கடினமாக இருக்கலாம். எனவே, தொடர்ந்து இரத்ததான முகாம்களை நாம் சிறப்பாக நடத்த வேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

- திருமதி. சுதா சேஷய்யன், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்

news
இந்திய செய்திகள்
வரிவிலக்குக் கிடையாது!

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் கத்தோலிக்க அருள்பணியாளர்களுக்கும், அருள்சகோதரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளம் வருமான வரி விதிகளின் கீழ் வருகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 93 மறைமாவட்டங்கள் மற்றும் சபைகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், பள்ளிகளில் பணிசெய்யும் அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் தங்கள் வருமானத்தை முழுவதுமாகத் தங்கள் மறைமாவட்டத்திற்கும், சபைகளுக்கும் கொடுத்து விடுகின்றார்கள். அதன் மூலம் மக்களுக்குச் சேவை செய்யப்படுகின்றது. அதனால், வருமான வரிவிலக்குத் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நவம்பர் 7 அன்று வரி செலுத்துவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படாது என்று தீர்ப்பளித்துள்ளார்கள்.

news
இந்திய செய்திகள்
இந்தியத் திரு அவைக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

இந்தியாவின் நான்கு மறைமாவட்டங்களான தமிழ்நாட்டின் வேலூர், மும்பையின் வசை, கொல்கத்தாவின் பாக்டோக்ரா ஆகியவற்றுக்குப் புதிய ஆயர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயரையும் நவம்பர் 9 அன்று திருத்தந்தை  பிரான்சிஸ் நியமித்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டற்குப் புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களையும், மும்பையின் வசை மறைமாவட்டப் புதிய ஆயராக அருள்தந்தை தாமஸ் டிசோசா அவர்களையும், கொல்கத்தாவின் பாக்டோக்ரா மறைமாவட்ட ஆயராக ஆயர் பால் அவர்களையும், ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்குத் துணை உதவி ஆயராக அருள்தந்தை அந்தோணி தாஸ் பிள்ளை அவர்களையும் நியமித்துள்ளார்.