news
இந்திய செய்திகள்
‘சவால்களைத் துணிவுடனும் ஞானத்துடனும் எதிர்கொண்டவர்!’

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி

முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்குத் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக அதன் தலைவரும், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் இரங்கல் செய்தி:

அனைவருக்கும் பேரிழப்பாய் மாறிப்போன டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியப் பொருளாதாரத்தின் சிற்பிஎன்று பெருமையுடன் அழைக்கப்படும் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுடைய மறைவு இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, குறிப்பிடும்படியாக, தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஒரு பேரிழப்பாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, பொருளாதாரப் பேராசிரியராய் தன்னுடைய பணியை ஆரம்பித்த மன்மோகன் சிங் அவர்கள், பொருளாதார மேதையாய் சிறந்து விளங்கி, ஒன்றிய அரசு சார்ந்த பதவிகளை வகித்தவராய் பயணித்து, நம் நாட்டின் நிதி அமைச்சராய் (1991-1996) விளங்கி, அதன் பின்பு இந்திய நாட்டின் பிரதமராய் (2004-2014) பணியாற்றியது நம் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது.

நிதி நிர்வாகத்திலும் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் இந்தியாவைச் சரியான பாதைக்கு அழைத்து வந்த பெருமை இவரையே சாரும். அளப்பரிய விதத்திலே அறிவார்ந்த நபராய் இருந்தாலும், அனைத்துக் காரியங்களிலும் தன்னடக்கத்தோடு நடந்து கொண்டது இவருடைய பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. இந்திய நாட்டின் பிரதமராக இவர் இருந்த காலத்தில் ஏற்படுத்திய பொருளாதாரச் சீர்திருத்தம், பல ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்துச் சென்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாட்டினுடைய பல்வேறு சவால்களை இவர் அமைதியுடனும் அதேசமயத்தில், மனத்துணிவுடனும், ஞானத்துடனும் எதிர்கொண்டதற்காய் இந்திய மக்களின் நினைவில் என்றும் வாழ்வார். பலதரப்பட்ட மக்களின் அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இவர் கொணர்ந்த பல திட்டங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கின்றது. சிறுபான்மை மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் டாக்டர் மன்மோகன் சிங். பொதுநலனை அனைத்திற்கும் மேலாக முதன்மை நலனாய் வைத்து இவர் செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் மற்றவர் நலனில் இவர் காட்டிய அக்கறையை எடுத்துரைத்தன.

இவருடைய வாழ்வும் வழிகாட்டலும் வரும் தலைமுறையினருக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உண்மைக்கும் அமைதிக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கும் அதற்கான செயல்பாட்டிற்கும் அவர்களை அழைத்துச் செல்லும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இறைவன் இவர் ஆற்றிய பணிகளுக்குப் பரிசளித்து, இவருக்கு நிலைவாழ்வைத் தந்தருள தமிழ் நாடு ஆயர் பேரவையின் சார்பாக என் இறைவேண்டல்களை உரித்தாக்குகிறேன். இவரது மறைவினால் வாடுகின்ற குடும்ப உறவுகள், நட்பின் உறவுகள் இன்னும் இவர் சார்ந்த கட்சியினுடைய உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் குளத்தில் எறியப்பட்ட கல் போன்று பல அதிர்வலைகளை ஏற்படுத்தி, இந்தியாவைப் புதிய வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் செல்லட்டும். அனைவருக்கும் இறைவேண்டுதலுடன் கூடிய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி, பேராயர், சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்

news
இந்திய செய்திகள்
ஆங்கிலோ இந்தியர்கள் பேரணி

1950-ஆம் ஆண்டு இந்தியா குடியரசு ஆனபோது ஆங்கிலோ இந்திய சமூகத்திற்கான பாராளுமன்ற இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 2020-ஆம் ஆண்டு இவர்களுக்கான அந்தப் பாராளுமன்ற இட ஒதுக்கீட்டை நீக்கியது. இதனால் ஆங்கிலோ இந்தியர்கள் பாராளுமன்றத்தில் அந்த இட ஒதுக்கீட்டை மீண்டும்  தர வேண்டுமென்று நவம்பர் 28-ஆம் தேதி நியூடெல்லியில், 17-க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்தியர் அமைப்புகள் இணைந்து அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள்.

news
இந்திய செய்திகள்
மும்பை உயர் மறைமாவட்டத்திற்கு வாரிசுப் பேராயர்!

பூனா மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜான் ரோட்ரிக்ஸ் (57) அவர்கள் மும்பை உயர் மறைமாவட்டத்தின் வாரிசுப் பேராயராக, நவம்பர் 30 அன்று திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆகஸ்டு 21, 1967 அன்று மும்பையில் பிறந்த இவர்  1998, ஏப்ரல் 18 அன்று மும்பை உயர் மறைமாவட்டத்திற்காகக் குருவாக அருள்பொழிவு பெற்றார். பேராயரின் செயலர், கோட்பாட்டு இறையியல் பேராசிரியர் போன்ற பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய இவர் மே 15, 2013 அன்று மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, மார்ச் 25, 2023 அன்று பூனா மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது தனது சொந்த உயர் மறைமாவட்டத்திற்கே வாரிசுப் பேராயராக (co–adjutor) நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

news
இந்திய செய்திகள்
நாடாளுமன்ற சனநாயகத்தை பா.ச.க. மதிப்பதில்லை

மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதுதான் எதிர்க்கட்சிகளின் கடமை. மணிப்பூரில் வன்முறை கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வருகிறது. ஆனால், பிரதமர் மோடி இதுவரை அங்கு நேரில் செல்லவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். மணிப்பூரில் வன்முறையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மிக முக்கியப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தும் இடம் நாடாளுமன்றம். ஆனால், நாடாளுமன்ற சனநாயகத்தை பா... மதிப்பதில்லை. பெரும்பான்மைகூட இல்லாத சூழ்நிலையில், இவர்கள் ஏன் பதில் சொல்ல மறுக்கிறார்கள்?”

- திருச்சி சிவா எம்.பி., மாநிலங்களவை தி.மு.. குழுத் தலைவர்

news
இந்திய செய்திகள்
நீதித்துறை மீதான நம்பிக்கையை காக்க ஊழலை ஊக்குவிக்காதீர்கள்

நீதித்துறை மீது மக்கள் அலாதியான நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்குவிக்காதீர்கள். நீதித்துறையின் மாண்பு, மரியாதைக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டுவிடாமல் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் திறம்படச் செயலாற்றுங்கள். உலக நடப்புகளை அலசி ஆராய நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்பதை வாழ்நாள் இலட்சியமாக எடுத்துக்கொள்ளுங்கள். அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள கடமைகளையும், உரிமைகளையும் நிலைநாட்ட ஏழை, எளிய மக்களுக்காகச் சேவையாற்றுங்கள்.”

- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி

news
இந்திய செய்திகள்
பழங்குடியினர் வீடு கட்ட கூடுதல் நிதி

நாடு முழுவதும் பழங்குடியினத்தவருக்கு நிலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பல தலைமுறைகளாகக் காடுகளிலேயே வசித்து வரும் இந்த மக்களுக்கு காடுதான் வீடாக உள்ளது. இந்த உலகமும், காடும் இறைவன் தங்களுக்கு அளித்தவை என்று நம்பி வரும் அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் வாழும் இடத்தைத் தங்களின் பெயரில் பதிவு செய்து பட்டா பெறுவதற்குத் தவறிவிட்டனர். மேலும், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை.”

- திருமதி. திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர்