news
கவிதை
வானம் வசப்படும்!

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய கல்லூரி மாணவ-மாணவியருக்கான கவிதைப் போட்டியில் சிறந்த கவிதையாக முதலிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு ரூ. 10,000 பரிசு பெற்ற கவிதை இது! அருள்சகோதரி அபிசா SAP அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

வசப்படும் வசப்படும் வானம் வசப்படும்

- நன்று வாழ்ந்தால் நாளும் வசப்படும்!

தமிழைச் சுவாசிக்க சுவாசிக்க!

தரணியை நேசிக்க நேசிக்க!

புத்தகங்களை வாசிக்க வாசிக்க!

புதிய சிந்தனைகளை யோசிக்க யோசிக்க!

வசப்படும் வானம் வசப்படும்!

முயற்சி செய்திடச் செய்திட!

பயிற்சி பயின்றிடப் பயின்றிட!

முன்னேற்றம் அடைந்திட அடைந்திட!

பண்போடு வாழ்ந்திட வாழ்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வள்ளுவனைப் போல் வல்லவனாய்

வாழ்ந்திட வாழ்ந்திட!

வட்டவடிவத்தைப் போல் சமமாய்

அணைத்திட அணைத்திட!

வண்ணங்களைப் போல் அழகாய் மாறிட மாறிட!

வல்லினங்களைப் போல்

வலிமையாய் உயர்ந்திட உயர்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

ஆசானை மதித்திட மதித்திட!

ஆன்றோரைப் புகழ்ந்திட புகழ்ந்திட!

ஆர்வமாய்ச் செயல்பட செயல்பட!

ஆயனைப் போல் அணைத்திட அணைத்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

தாய் தமிழுக்காய் உழைத்திட உழைத்திட!

தாமரை போல் மலர்ந்திட மலர்ந்திட!

தாகமாயிருப்போரின் தாகம் தணித்திட தணித்திட!

தாகத்தோடு தமிழை நாடிட நாடிட!

வசப்படும் வானம் வசப்படும்!

அச்சமென்ற மடமையைப் போக்கிட போக்கிட!

அறியாமை என்ற அவலத்தை அகற்றிட அகற்றிட!

அறமென்ற அன்பனை நோக்கிட நோக்கிட!

அகம் என்ற அமுதத்தைக் காத்திட காத்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வெற்றிக்கனியைச் சுவைத்திட சுவைத்திட!

வெற்றுக்காகிதங்களை நிரப்பிட நிரப்பிட!

வெட்கத்தைத் தினம் வென்றிட வென்றிட!

வெண்மையான நிறம் போல் மாறிட மாறிட!

வசப்படும் வானம் வசப்படும்!

ஞாயிறைப் போல் உதித்திட உதித்திட!

ஞானத்தை நாளும் போற்றிட போற்றிட!

ஞாலம் போல் பரந்த மனம் கொண்டிட கொண்டிட!

ஞாபகமாய் எதிர்காலத்தை நோக்கிட நோக்கிட!

வசப்படும் வானம் வசப்படும்.

ஏழைகளுக்காய் ஏங்கிட ஏங்கிட!

ஏற்றத்தாழ்வுகளை நொறுக்கிட நொறுக்கிட!

ஏடுகளைச் சுமந்திட சுமந்திட!

ஏமாற்றங்களை எதிர்த்திட எதிர்த்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

தினமும் ஒரு குறள் படித்திட படித்திட!

திருவள்ளுவரைப் போல் வாழ்ந்திட வாழ்ந்திட!

தித்திக்கும் தேனாய் மாறிட மாறிட!

திறமையோடு செயல்பட செயல்பட!

வசப்படும் வானம் வசப்படும்!

திறமைகளை அறிந்திட அறிந்திட!

திடமான மனம் கொண்டிட கொண்டிட!

திட்டங்களை வகுத்திட வகுத்திட!

தீபமாய் ஒளிர்ந்திட ஒளிர்ந்திட!

வசப்படும் வானம் வசப்படும்!

வார்த்தைகளில் மட்டும் அல்ல அல்ல!

வாழ்க்கையாய் மாற்றிட மாற்றிட!

வாடும் உள்ளங்களை அன்பு செய்திட செய்திட!

வானமளவு இரக்கம் காட்டிட காட்டிட!

வசப்படும் வானம் வசப்படும்!

வானம் வசப்படும் வசப்படும் - இதன்படி

வாழ்ந்தால் மட்டுமே வசப்படும்

வானமும் வசப்படும் ஞானமும் வசப்படும்!

news
கவிதை
அருள்செய் லூர்தம்மே...!

விண்முடிசூழ்  நீள்()க்கச்சை தேவமகளாகி

                தாளடியால் மண்ணளந்து விண்ணரசியாய்

தண்குளிரும் வான்உடுகுகள் கதிர்நிலவை

கால்பதித்து செங்கைஇரு குவித்தவளாய்

கண்ணுயர்த்தி கைதொழுதிட்டபெர்ந்தெத்தெனும்

                அருமகளைக் காட்சிக்கண்  தருகற்பகமே!

விண்ணவர்கள் படைசூழ குன்றணையாய்

                வானரசியே! எனக்கருள்செய்லூர்தம்மே

மல்லிகையும் முல்லையும் மணக்கும் மலைமுடி

                மருமலரே! அருங்கொடியே லூர்துஅம்மே

அள்ளித்தரும் அருளூற்றை அளிக்கும் பாங்கில்

                ஆங்காங்கேகெபிகொண்ட அன்னைப் பேறே

துள்ளிவந்தபெர்ந்தத்திடம்செபிக்க வேண்டி

                துடிக்குமிதயம் மகிழவேண்டி காட்சி தந்தாய்.

புள்ளிகொண்ட லூர்தன்னையே! பண்பின் அம்மே!

                பக்தர்எம் வேண்டல்கள் தீரு மம்மே!

news
கவிதை
ஆறாக ஓடும் வற்றாத உழைப்பு!

இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமா

                இவ்விதழ் வழி கூறினால் ஏற்புடையதாகிடும்.

                மலர்களின் இதழ்கள் விரியவிரிய இரசிக்கத்

                தூண்டி  மனம் இலகுவாகிடும் இவ்விதழ்களின் ஏடுகள்/ விரிய

உச்சரித்து சுவைத்து சுவைதரச் செய்யும்/

                இதன் பிறப்பு 1975 சிறப்போ 2025/

                கிறித்தவத்திற்கு மட்டுமல்ல படைப்பனைத்திற்கும் ஏதுவாக/

                ஓருலகப் பார்வையில் உருவான இறைத் திட்டம்/

ஆகச்சிறந்த ஆளுமைகள் உள்ளத்துள் உதித்தது/

                இறைஇயேசு இராஜாவின் இலட்சியக்கனவை நிறைவேற்ற /

                கருவுருவாகி ஆய்வாளராக ஆட்சியாளராக சட்டமன்ற/

                நாடாளுமன்ற உறுப்பினர்களாக மிகுதியாகப் பங்கேற்று/

சமநீதி சமத்துவம் உலகளவில் மலர்ந்து /

                மனிதம்காத்து மக்கள்நலன் கருதும் அரசமைய/

                மலர்ந்தின்று பணி இராஜன் இயக்கத்திதழ்/

                நல்லவர்களின் நாடித்துடிப்பாக அமைய கூர்முனை/ கொண்டு

புரட்சி சீர்மிகுலகாக மறுமலர்ச்சியகமாக மாற்ற/

                இடையில் பணி ஆனந்தானந்தமாக மனிதம் உயர்வடைய/

ஆனந்தமடைய பல உருவாக்க படைப்புகளில்/ செயல்களில்/

                எழுத்தாளர் பயிற்சிபட்டறையுமொன்று ஒருகருவி நானும்/

இதுவரை இவையெல்லாம் ஒரு முன்னுரை இனி கவிதையின் வாயிலில்

உரோ: 5:5-இல் உள்ளது போல் யூபிலியாண்டின் எதிர்நோக்கு இதழ்

                யோவா: 10:09 உரைத்த வாயிலாக எதற்கு வாயில்?

                இறைஇயேசுதாம் அமைதியின் கதவு உள்ளே நுழைய துணிவில்லை

                இனி கடந்து ஆன்ம பரிசோதனை செய்து சவால் விட்டு

                பயணிக்கும் பாதை நீயாக உர்பி எத் ஓர்பி யூபிலி டிசம்பர் 6, 2025

ஒருசாராருக்கு உபதேசம் உரைத்தவர்  பேறுபெற்றுயர்ந்தவரெனில் /

                உருளுகின்ற உலகத்து மாந்தரெல்லாம் உவந்தேற்கும் /

                அருங்கருத்தை உரைத்த எம்பெருமான் இறைவார்த்தைக்கேற்ப

                தரணிக்கெல்லாம் பெருவிருந்து அருமருந்தான இதழிது/

உதிக்கின்ற ஆதவனைப் பின்னிறுத்தி உறக்கமெழுந்து/

                கொதிக்கின்ற பொதிசுமக்குமுன் கையேந்தும் இதழிது/

                விதியென்றெண்ணாதே விதையாகப் பிறப்பெடுமெனும் இதழ்/

                மதிகொண்டு மாசின்றி நானிலம் போற்றும் / இதழ்

விழுவிட்டு விசாலமாக நெடுந்துயர்ந்து இதழ்/

                எழுதுவதும் பேசுவதும் மனிதத்தின் எழுச்சிக்காக/

                பழுதான உள்ளங்கள் வழக்கமென்பதைத் தவிர்த்து/

                ஒழித்து அழுமக்கள் துயர்துடைக்கும் இதழ்/

கண்ணுற்றுப் பார்ப்பதற்குக் கவின்மிகு விருந்து/

                மின்னேற்றி தன்னகத்தே முன்னேற்றும் ஒளி/

                எல்லோரா ஓவியத்திற்கீடாய் ஓங்கின எழிலோவியம்/

                நல்லறிவுகளைப் படைப்பாக்கி நாடேற்றும் கலைக்கோயில்/

சொல்லாற்றல் மிகுதிங்கு செழுங்கருத்து ஊற்றிது/

                மெய்யுணர்வு நுண்ணறிவு தூண்டிடும் நெறிபிழகாதிங்கு/

                ஆறாக ஓடியது வற்றாத எமது உழைப்பு /

                நூறில் நிச்சயம் தடம் பதிப்பேன்/

வேரறுந்து வீழ்வேனோ தேரேறிச் செல்வேன் / மனத்தேரேறிச் செல்வேன்/

                இதழேந்துவோம் வாசிப்போம் யோசிப்போம் நேசிப்போம்/

                தரணியெங்கும் விடுதலை நாயகனின் புகழ் / பரப்புவோம்

                நறுமணம் பரவிவர பரவலாக்கம் செய்வோம்!

news
கவிதை
கனவு நனவாகும்

எள்ளளவும்  ஏற்றம் தராமல் இரக்கமின்றி

                கல்லான இதயமேந்தி கடுகளவும் கருணையின்றி

                வரையறுத்து வதைக்கப்பட்டு வாடி நிற்கவைத்து

                சிறைவைத்து சித்ரவதைக்குள்ளாக்கி மேல்குடி நானே!

 

உடல்நைந்தோர் உள்ளம் உடைந்தோர் உருக்குலைந்தோராக்கி

                மங்கையர்கள் மனம் நொந்து பேசாமடைந்தகளாக்கி

                நலங்கொழிய வைத்து நற்சிந்தனை யின்றி கொல்வர்

                தொடுகின்ற எண்ணமெல்லாம் தீதாய் ஓங்கி!

 

விடுகின்ற மூச்செல்லாம் கொடுமைக் காற்றாய்

                வில்லொத்த பார்வையில் கொள்ளித் தீயாய்

                பாவச் சேற்றில் புழுவாய் நெளிவர்

                இந்தக் காலத்தில் இருளான சூழலில்

 

மருந்தாக விலங்கொடியாதோ விடுதலையொளி வாராதோ

                எண்ணுவது உயர்வு ஏற்றமென்பதும் திண்ணம்

                பெண்ணே நீயின்று பேறுபெற்றாயெனும் பேரொளி

                கண்ணான எனதுருவாக்கம் இனிதாகத் தொடர்வாய்!

 

மண்ணுலகில் மனிதம் தழைத்து ஓங்கிடவே

                என்றுதித்தாய் இறைமகனே இருள் போக்கிடவே

                அன்றலர்ந்த முல்லையாகக் கொள்ளை இன்பமானாய்

                சுமையான துயரத்தைச் சுகமானதாக்கும் ஒளியானாய்!

 

விலங்கொடிக்கும் விடுதலையாக வந்துதித்த வெளிச்சமே

                எல்லையில்லா ஏற்றமிகு நம்பிக்கை தந்தாய்

                வில்லாகத் தொடர்வோம் உமது வழியில்

                ஆராரோ பாடி உறங்கவிடோம் உறங்கமாட்டோம்

                உமது கனவு நிறைவேறும் நாள்வரைப் பயணிப்போம்!

news
கவிதை
கண்வளராய்!

வாடைக் குளிரினிலே

வந்திருக்கும் பாலமுதே

கோடைப் பலாச் சுளையைக்

கொண்டு வாரேன் - கண்வளராய்!

 

செம்மறியன் பாலெடுத்து

செந்தேனில் குலைத்தெடுத்து

அம்மணிகள் கொண்டுவாரார்

அழாமல்நீர் கண் ணுறங்கு!!

 

தோள் சுமந்து குட்டிகளுடன்

தொல்லிடையார் குடும்பத்தார்

பாலூட்ட வாரார்கள்

பால் மண()மே! கண்வளராய்!

 

சிங்கார வீடின்றி

சின்னஞ்சிறு முன்னிட்டினில்

வந்ததிரு மாஞ்சிட்டே

வளர்மதியே, கண்வளராய்!!

 

அன்னை மரி வடிவழகே

அன்புதிர்க்கும் தேனடையே

பொன்னானமணிப்புரிகள்

பூரிக்கவே கண்வளராய்!

 

பெத்தேலிக மா மணியே

பேரின்ப நல்லூற்றே

பெற்றம்நீ பிறந்த மண்ணில்

பெருமகிழ்ச்சிக்காய் கண்வளராய்!

 

பட்டினிலே தூங்கவைத்தால்

பலதோஷம் பாயுமென்று

கொட்டிலிலே தூங்கவைத்தார்

ஈசாயின் தளிரே கண்வளராய்!

 

மெத்தையிலே புரண்டெழுந்தால்

மேனியெல்லாம் நோகுமென்று

கந்தையிலே பொதிந்து படுக்கவைத்தாய்

கற்பகமே, மரிக்கொழுந்தே கண்வளராய்!

news
கவிதை
புதிதாய்ப் பிறப்போம்

புதிய எண்ணம் கொண்டிடுவீர்

புதிய சொல்லைப் பேசிடுவீர்

புதிய செயலில் இறங்கிடுவீர்

புதிய வாழ்வைத் தொடங்கிடுவீர்!

 

உனக்கும் பிறர்க்கும் நன்மைதரும்

உத்தம னாக வாழநினை!

உன்னைப் போலுன் அயலானை

உண்மை யுடனே அன்புசெய்!

 

புதிய உலகைப் படைப்பதற்குப்

புதிய சிந்தனை வேண்டுமன்றோ!

எதிலும் புதுமை கண்டிடவே

எழுச்சி யுடனே செயலாற்று!

 

கள்ளம் இல்லா உள்ளத்தைக்

கட்டி எழுப்பு எந்நாளும்!

எள்ளும் நிலையில் வீழாதே!

ஏற்றம் காண முனைந்துவிடு!

 

இழுக்கில் லாமல் வாழ்வதற்கு

என்றும் உனது மனத்திலுள்ள

அழுக்கை அகற்றி நற்செயலால்

ஆன்மா மகிழ செயல்படுவாய்!

 

வஞ்சனை என்றும் வேண்டாமே!

வாய்மை ஒன்றே போதுமன்றோ!

நெஞ்சம் நிறைந்து தீங்கிழைக்கும்

நிலையை மாற்றி மனம்மாறு!

 

சமூக நீதியைக் காக்கின்ற

சமத்துவ எண்ணம் தனைக்கொள்ளு!

அமைதி வழியில் பயணிக்க

அச்ச மின்றி நடைபோடு!

 

மனித நேய மீட்பரது

மாண்பு மிக்கப் பிறப்புவழி!

இனிதே வாழ இறங்கிடுவாய்!

இன்பம் பொங்க நின்றிடுவாய்!

 

பெண்மைப் பேணு எந்நாளும்!

பெருமை பேசா நாவைக்கொள்!

அண்மைச் செய்தி அன்பென்று

ஆண்டவர் வழியை நீதேடு!

 

சாதி வெறிகள் எதற்கையா?

சமய வெறிகள் வேண்டாமே!

ஆதி காலத் தேவனருள்

அண்டி வந்திட நீபாடு!

 

நாட்டைக் காத்தில் கடனன்றோ!

நாளும் உழைத்தல் பயனன்றோ!

வீட்டைக் காக்க விடியலினை

விரைந்து சென்று நீதேடு!

 

புதிய மனித ராகிடுவீர்!

புத்தொளிப் பெற்று வாழ்ந்திடுவீர்!

சதிக்கும் எண்ணம் உதிக்காமல்

சமாதா னத்தை நீதேடு!

 

உலகில் அமைதி உருவாக

உன்னத தேவன் பிறந்தாரே!

கலகம் இல்லாப் புத்துலகை

கவன முடனே உருவாக்கு!

 

மனிதர் புதிதாய்ப் பிறந்திட்டால்

மண்ணில் என்றும் மகிழ்ச்சிநிலை!

அநீதர் வழியில் சேராமல்

அமைதி வழியில் பணியாற்று!