news
கவிதை
திருத்தந்தையே திரும்பி வாரும்! திரு அவையில் திருத்தங்கள் தாரும்!

திருத்தந்தையர்களில்

நீர் ஒரு திருப்புமுனை!

 

ஏழைகளுக்காகப்

போராடிய போராளியே!

ஏழைகளை நேசித்த

இயேசுவின் தாசரே!

மரபுகளை உடைத்தெறிந்த

மகாத்மாவே!

 

பெண்ணியம் போற்றியதோடு

ஆட்சிப்பீடத்தில்

அதிகாரம் கொடுத்த

அருள் வள்ளலே!

 

எளியோரின் நலனில்

இயேசுவாகவே வாழ்ந்தீரே!

சுவாசம் உள்ளவரை

ஏழைகளைச்

சுவாசித்த சுதனே!

 

முதியவர்களைச் சுமையாகக் கருதியவர்கள்

மத்தியில்

தாத்தா-பாட்டி

தினமாகக்

கொண்டாட வழிவகுத்தீரே!

 

ஏழைகளுக்காக

உதித்த உதய சூரியனே!

 

கூட்டொருங்கியக்கத்

திரு அவையின்

கொள்கைத்

திறவுகோலே!

 

மனிதமே புனிதம் என்பதனை

மானுடத்திற்குச் சொல்ல வந்த

மகா காவியமே!

 

பெண்களின்

பாதங்களைக் கழுவிய

பெருந்தகையாளரே!

 

விளிம்பு நிலை மக்கள்

வெளிச்சம் பெற வந்த விடியலே!

 

சிறையில் இருப்போரையும்

சிநேகித்தவரே!

 

உலகில் அமைதி நிலவ

அதிபர்கள் காலில் விழுந்த

திருத்தந்தைகளில்

நீர் ஓர் அதிசயமே!

 

என் சீலைகளைத் தவிர்த்து

ஏழைகளுக்கு உதவ

ஒப்பனை அறைகள்

கட்டப் பணித்தவரே!

 

இரக்கம் நிறைந்தவர் என்பதாலோ

இறை இரக்க ஞாயிறு(க்)குமுன்

இரக்கமிக்க ஆண்டவர் அழைத்தாரோ!

திரு அவையின்

திருப்புமுனை

திருத்தந்தையே!

திரும்பி வாரும்!

(சீர்)திருத்தம்

தாரும்!

news
கவிதை
உலகம் உய்ய செபித்தவரே!

எமதருமை திருத்தந்தையே!

உலக மாந்தரை நேசித்தவரே!

உலகத் தலைவரைச் சந்தித்தவரே!

உலகினர் உள்ளங் கவர்ந்தவரே!

பாவம் வெறுக்க பரிந்துரைத்தவரே!

பாவப்பரிகாரம் புரிய சொன்னவரே!

அனைவரையும் ஈர்க்க முயன்றவரே!

அனைத்தையும் தாழ்ச்சியுடன் ஏற்றவரே!

சமாதானம் நிலைக்கப் போராடியவரே!

சமத்துவம் காணத் துடித்தவரே!

சிறாரைக் கனிவாய் அணைத்தவரே!

சிறார் கொடுமை சாடியவரே!

குறையுள்ள யாவரையும் நேசித்தவரே!

குறையில்லா வாழ்வு வாழ்ந்தவரே!

திருப்பயணிகளாக்கித் திருப்பயணமானவரே!

வருடமொரு ஒன்றிப்பை நல்கியவரே!

வல்ல இறைவனால் வழிநடத்தப்பட்டவரே!

இந்திய நாடு காணாத பேரன்பரே!

இந்திய மக்களைக் காண ஏங்கியவரே!

நம்பிக்கை தரு நல்வாக்கினரே!

நம்பி வரும் எளியோர் பாதுகாவலரே!

ஓரங்கட்டப்பட்டோரின் நண்பரே!

ஓரிடம் நில்லாது சுற்றிச் சுழன்றவரே!

போர்களை நிறுத்தப் போராடியவரே!

வேர்களை உறுதியாக்கச் சிந்தித்தவரே!

உம் விழுமியங்களை வாழ்வாக்குவோம்!

உம் நற்செயல்களை நாளும் நினைப்போம்!

உம் ஆன்மா இறைவனில் இதம் காண

தொடர்ந்து செபிக்கிறோம்!

 

news
கவிதை
கவிதைச் சாரல்

உயிரோடு  இருக்கையில்

செல்லமாய் செல்வமாய்

உரிமையில்  பதவியில் 

ஆயிரம் பெயர்கள் !

உணர்வற்றுப் போய் உயிர் பிரிந்திடின்

ஒற்றைப்பெயரில்  உலவும்  உயிர் சுமந்த உடல்

பிணமென்று!

 

வல்லினம் மெல்லினம்

கலந்த இடையினமே அவள்!

கொஞ்சம் கண்ணீரும்

கெஞ்சும் குறுநகையும்

பூக்கும் புன்னகையும்

உயர்ந்த பெண்மையின்

உன்னதத் தாய்மையின்

உரு தரும் அடையாளமும்

உருவாக்கும்

உறவுக் குழாமும்

பெண்மையின்

பெரும் பேறே!

 

ஆயிரமாயிரம் வரிகள்!

பாயிரந்தோறும்

பொருந்தும் கவிகள்!

வாசல் தோறும் பொருந்தாத

தோரணங்களாய்

வீணில் திரியும்

விட்டில்பூச்சிகளாய்

விலை கொடுத்து

வாங்கி விலையில்லாமல்

விலை போகும் மனிதர்கள்!

தேர்தலுக்கு முன்னும்

தேர்தலுக்குப் பின்னும்!

 

சில தடங்களும்

பல தழும்புகளும்

அழித்திட இயலாதவை!

ஆற்றிட ஆறாதவை!

அதை நம்மிடம்

விட்டுச் சென்றவர்களின்

அழுத்தங்களே

அதன் வலிக்கோட்பாடு!

 

மின்மினிப் பூச்சிகளின்

மினுக்குகள் அல்ல நீ!

கண்மணி சொடக்குகளின்

அசைவுகள்  அல்ல நீ!

ஏய்க்கப்படுகிறாய்  என்பதை

அறியாப் பத்தரையாய் நீ

பயணிப்பதில் பயனேதும் உண்டோ?

முத்திரை பதிக்கும்

சித்திரைப் பூவாய் தரைக்கும் தாலிக்கும்

தொடர்பென்றே தூர நிறுத்தும்

தரையர்களைத் தரைமட்டமாக்கிடத்

துணிந்து வா பெண்ணே!

 

எல்லாம் ஆனவனையும்

ஆணாய்க் கருவில் தரித்துக்

கனியாக்கியக் கன்னியவள்!

யாதுமாய் யார்க்கும்

யாத்தும் தாயுமானவள்!

பிரபஞ்சப் புள்ளியின்

உட்கருவாகி உருவாக்கி

உரு தந்து உருக்குலைந்து

புது உரு ஏற்கும் உலகின்

இயக்கச் சக்தி அவள்!

அவளின்றி அவனசையான்!

பெண்மையைப் போற்றுவோம்!

 

மறையும் நிலவைத் தேடி

மறையாத வானோடு

மற்போர் புரிகிறது

மேகக் கூட்டங்கள்!

 

வரிகள் இல்லா வலிகள்!

உடையிலும் நடையிலும்!

மானம் காப்பதற்கே!

தானம் வாழ்வதற்கே!

 

எல்லைகள் தாண்டிடத்

தொல்லைகள் மீறு!

 

இலக்கு மறவாமல்

ஓடுபவனுக்குப் பல வழிகள்!

துரத்துபவனுக்கு ஒரே வழி!

வழிகள் மாறலாம்!

இலக்கு மாறாது!

news
கவிதை
நாமும் உயிர்ப்போம்!

பாரோர் பாவம் போக்கிடவே

பாடு பட்டவர் உயிர்த்தாரே!      

யாரும் நினையா ஆன்மாக்களை!

என்றும் காக்க உயிர்த்தாரே!

சாவை வென்று உயிர்த்தாரே!

சரித்திர மாகி உயிர்த்தாரே!

பாவம் இன்றி உயிர்த்தாரே!

பட்டொளி வீசி உயிர்த்தாரே!

இயேசு வழியில் உயிர்ப்போமே!

இன்னல் நீங்கி உயிர்ப்போமே!

மாசு இன்றி உயிர்ப்போமே!

மாண்பு நிறைந்து உயிர்ப்போமே!

அயலான் அன்பில் உயிர்ப்போமே!

அலகை விட்டு உயிர்ப்போமே!

தயவுகாட்டி உயிர்ப்போமே!

தன்னலம் விட்டு உயிர்ப்போமே!

இறைவழி சென்று உயிர்ப்போமே!

இன்பம் பொங்க உயிர்போமே!

நிறைவாய் வாழ்ந்து உயிர்ப்போமே!

நிம்மதி அடைந்து உயிர்ப்போமே!

தீமை விட்டு உயிர்ப்போமே!

திடமனம் பெற்று உயிர்ப்போமே !

ஊமை இன்றி உயிர்ப்போமே!

உன்னத ராகி உயிர்ப்போமே!

திரு அவை வழியில் உயிர்ப்போமே!

திருந்தி வாழ்ந்து உயிர்ப்போமே!

அருமறை மகிழ உயிர்ப்போமே!

ஆண்டவர் அருளால் உயிர்ப்போமே!

பாவ மின்றி உயிர்ப்போமே!

பக்குவம் பெற்று உயிர்ப்போமே!

ஆவல் கொண்டு உயிர்ப்போமே!

அகிலம் போற்ற உயிர்ப்போமே!

தன்னைக் காக்க உயிர்ப்போமே!

தன்மொழி காக்க உயிர்ப்போமே!

தன்இனம் காக்க உயிர்ப்போமே !

தாழ்ச்சி பெற்று உயிர்ப்போமே!

பிறருக் காக உயிர்ப்போமே!

பகுத்தறி வுடனே உயிர்ப்போமே!

அறவழி வாழ உயிர்ப்போமே!

அன்பு வழியில் உயிர்ப்போமே!

புனிதர் வழியில் உயிர்ப்போமே!

புத்துயிர் பெற்று உயிர்ப்போமே!

புன்னகை சிந்தி உயிர்ப்போமே!

புகழின் உச்சியில் உயிர்ப்போமே!

அன்னைமரி வழி உயிர்ப்போமே!

அன்றாட பணிவழி உயிர்ப்போமே!

பெண்மையைப் பேணி உயிர்ப்போமே!

பேரின்பம் அடைய உயிர்ப்போமே!

news
கவிதை
கல்வாரிப் பயணம் புகட்டும் பாடம்!

உலகிற்கு உண்மையும்

நன்மையும்

வேப்பங்காய்தான்...

பதவியும் பணமும் மனிதனைப்

பீடித்திழுக்கும் பேய்தான்!

உண்மையைக் கைகழுவியவன்

மனசு அழுக்கானது!

காட்டிக் கொடுத்தால் காசு கிடைக்கும்

எட்டப்பன் குரு யூதாசு!

மணிமகுடம் சூடும் தலையில்

முள்முடியும் சூடப்படும் தலைபத்திரம்!

ஆடையைத் தொட்டாலே

அற்புதங்கள் மகிழாதே...

ஆடை முழுவதும் அகற்றப்படும்?

வாழ்க - வாழ்த்தும் ஒழிக - வசையும்

நீர்க்குமிழிதான்!

தவறுகிறவன் மனிதன்

மனம் மாறுகின்றவன்

மாபரனின் மைந்தன்!

அவமான சின்னம்கூட

மாமனிதன் கரங்களில்

அற்புதப் பாத்திரமாகும்!

சாட்டையால் அடித்தவன்

சிலுவை சுமத்தியவன்

ஈட்டியால் குத்தியவன் யார்? தெரியாது!!

ஆனால், எல்லா வலியும் தாங்கியவன்...

சரித்திரம்  படைக்கிறான்!

வாழ்வில் விழுந்து, எழுகிறவன்தான்...

வெற்றி சிகரம் ஏறுவான்!

பிறர் துயர் துடைப்பவரும்

பிறர் சுமையைத் தாங்குவோரும்

பிறருக்காய் கண்ணீர் வடிப்போரும்

கடவுளின் வடிவங்கள்!

வாள் எடுத்தவன்

வாளாலே சாவான்...

வாழ்க்கையையே

கொடுப்பவன்

வரலாறாய் வாழ்வான்!

மனிதன் இறப்புக்குப் பின்னும்

உயிர்ப்புடன் வாழ்கின்றான்

தான் வாழ்ந்த வாழ்வால்!

news
கவிதை
பேராற்றலே பெண்டீர்!

ஒரு பெண்ணாக இருப்பது தெய்வீகப் பரிசு;

அவள் இதயம் மென்மையானது, ஆனாலும் வலிமையானது!

அருளுடனும் திடத்துடனும் அவள் உயர்ந்து நிற்கிறாள்;

ஆன்மாவில் தளர்ந்து போகாமல் அனைத்திலும்

                                வெற்றி கொள்கிறாள்!

அவளுடைய கருணை ஒரு நதியைப் போல பாய்கிறது;

இரக்கமும் ஞானமும் அவள் பக்கத்தில் நடக்கின்றன!

சோதனைகளில் தன்னை அவள் புடமிட்டுக் கொள்கிறாள்;

அன்பிலும் நம்பிக்கையிலும் அவளுடைய

                                பலம் காணப்படுகிறது!

அவள் ஒரு பெரும் சுடருடன் வழியை ஒளிரச் செய்கிறாள்;

இயற்கையின் ஆற்றல் அவள்; இதமான ஆன்மா அவள்!

ஒரு தாயாக, தலைவியாக, உண்மையுள்ள தோழியாக

அவள் செய்யும் அனைத்திலும் நேர்த்தியும்

                                அக்கறையும் கொள்கிறாள்!

அவள் குடும்பத்தின், சமூகத்தின் முதுகெலும்பு;

அவள் மரபு, நீண்ட வரலாறாய் எதிரொலிக்கிறது!

கடும் போராட்டங்களால் அவள் மேலே உயர்ந்தவள்;

அவளுடைய நம்பிக்கை ஆழம் கொண்டது!

                                உள்ளம் அன்பு கொண்டது!

வலிகளால் அவள் பயணம் செதுக்கப்பட்டது;

ஆனாலும் மகிழ்வோடு வாழ்வைத் தழுவிக் கொண்டவள்!

அவளுடைய ஆற்றல் வானமளவு; அசைவு பூமியளவு;

அவளே ஆற்றல்; அவளே விடியல்;

                                புதியன காட்டும் வைகறை வானம்!