news
கவிதை
தரணி போற்றும் தந்தை லெவே!

விண்ணகப் பிறப்பு முடிவல்ல - வெற்றி தானே!

ஐம்பத்து மூன்று ஆண்டுகள் நினைவுகள் அல்ல - அது

அர்ப்பணத்தின் உயிரோவியமே; அருள்நிறை காவியமே!

1921- இல் இந்தியா நோக்கிய பயணம்

அழைப்பால் கொண்ட தியானம்!

1943 - இல் ஆண்டாவூரணி பங்குப்பணி

மறைநிறை கல்விப்பணி!

 

வானம் மூடியதால் வறண்டு போன நீர் நிலைகள்

வாடியது பயிர்கள் மட்டுமல்ல, மக்களும்தான்! தந்தை

வாஞ்சையோடு கைவிரித்துச் செபிக்கக் கண்டு,

வான்மழை கொட்டியதே; மகிழ்ச்சியெங்கும் கிட்டியதே!

மழைச்சாமிவேண்டியதால் இறைச்சாமி அருள்பொழிந்தார்!

 

பதினைந்து கிராமங்கள் பக்தியுடன் பாத யாத்திரை!

ஓரியூரின் திருத்தலத்தில் ஒற்றுமையில் ஒருங்கிணைப்பு;

வயிற்றுப் போக்கு, காலரா வலிநோய்கள் நீங்கிடவே

அன்பின் மருந்து ஆறுதலே அவர் விருந்து!

அற்புதங்கள் நிகழும் ஆற்றல்மிகு வல்லமையாய்!

 

கிராமந்தோறும் பணிகள் கால்நடந்த பயணம்;

ஆண்டாவூரணியில் ஆண்டுகள் இருபத்திரண்டு!

ஆற்றலுடன் ஆர்வமுடன் ஆண்டவனின் மகிமைக்காக!

இராமநாதபுர மண்ணிற்கு இடமாற்றம் கண்டதனால்

இறைப்பணிகள் தொடர்ந்தனவே பதின்மூன்று ஆண்டுகளாய்!

 

பெரும்புயல் வீசியதால் பெயர்ந்தனவே நம்பிக்கையும்

வீடுகள் இடிந்தனவே, மனங்களும் உடைந்தனவே.

உயிரான பயிர்களும் பூச்சியினால் அழிந்தனவே!

உணவும், உடையும், ஆறுதலும் ஓயாத நம்பிக்கையும்

ஓலைகொண்ட இறைவார்த்தை தீர்த்தம் சுகம் தந்தனவே!

 

சருகணி பங்கினிலே பணிக்காலம் 17 ஆண்டுகள்

புன்னகை பூத்த மனம் பூரிப்பில் திளைத்த குணம்

வளமில்லா இடத்தில் வளம் சேர்ந்ததங்கே!

பலமில்லா இடத்தில் பலம் சார்ந்ததங்கே!

ஒளியினிலே நாளெல்லாம் மிளிர்ந்ததங்கே!

 

உயிரோடு இருந்தபோதும் ஓயாத அற்புதங்கள்!

மண்ணில் அவர் ஓய்ந்தாலும் மறையாத சொற்பதங்கள்;

அன்பின் வாசமலர் அவரே! அருள்நிறைந்து - இறைப்

பண்பில் ஒளிர்ந்த திருச்சுடர் தந்தை லெவே!

வாழிய வாழியவே; நின்புகழ் என்றும் வாழியவே!

news
கவிதை
மீட்புப் பாசனம் - பாடுகளின் கல்வாரிக் கேள்விகள்

1. ஓர் எச்சில் தீர்ப்பு

தம்மை இறைமகன் என்று சொன்னாரா?”

ஆம்!”

ஆலயத்தை மூன்று நாளில் கட்டுவேன் என்றாரா?”

ஆம்!”

பாவிகளை மன்னித்தாரா?”

ஆம்!”

ஏழைகளின் சக்தியைத் திரட்டினாரா?”

ஆம்!”

இவைதாம் இயேசுவின் பாவங்களா?”

இல்லை. பணிகள்!”

2. ஒரு சிலுவைத் தோள்

தொட்டாயா?”

ஆம்!”

முத்தமிட்டாயா?”

ஆம்!”

சுமக்காமலே கனக்கிறதா?”

ஆம்!”

உன் பெயர்தானா சீடன்?’

இல்லை... பக்தன்

3. ஒரு வீழ்ச்சி மண்!

தரையில் விழுந்தாயா?”

ஆம்!”

மண்ணை முத்தமிட்டாயா?”

ஆம்!”

கல்லையும் முள்ளையும் பார்க்கிறாயா?”

இல்லை மண்ணுக்குள் வேர்களை!”

4. ஒரு சந்திப்புக் கண்!

பேசவில்லையா?”

ஆம்!”

அழவில்லையா?”

ஆம்!”

ஆறுதல் சொல்லவில்லையா?”

ஆம்!”

பிறகு ஏன் பார்த்தாய்?”

இல்லை. சந்தித்தேன்.”

5. ஓர் உடன்-பாதம்

உதவி செய்யப் போறியா?”

ஆம்!”

கட்டாயப்படுத்தினார்களா?”

ஆம்!”

சிலுவை சுமக்க மனமிருக்கா?”

இல்லை. சிலுவையில் பூட்ட சக்கரங்கள் இருக்கு.”

6. ஒரு நட்புத் துணி

கோடை காலமா?”

ஆம்!”

செடிகள் வாடுகின்றனவா?”

ஆம்!”

மழை மேகத்திடம் கெஞ்சலா?”

இல்லை. நானே நீர் பாய்ச்ச வேண்டும்!”

7. ஒரு நடை இரத்தம்!

தோல்வியா?”

ஆம்!”

முயற்சி செய்தாயா?”

ஆம்!”

மற்றொரு முயற்சி செய்யும் முனைப்பு இருக்கிறதா?”

ஆம்!”

அப்ப... இன்னும் நீ தோற்கல

8. ஒரு சோகக் கண்ணீர்

கைக்குட்டை தயாரா?”

ஆம்!”

துண்டு தயாரா?”

ஆம்!”

கண்ணீரைத் துடைப்பதற்குத்தானே?”

இல்லை வியர்வையை!”

9. ஒரு சரிவு வியர்வை!

பாதை தயாரா?”

ஆம்!”

பயணம் தயாரா?”

ஆம்!”

சிலுவை தயாரா?”

ஆம்!”

பிறகு என்ன தயக்கம்?”

வாடகை இயேசு கிடைக்கவில்லை!”

10. ஒரு மிச்ச ஆடை...

பிச்சைக்காரியா...?”

ஆம்!”

சேலை கிழிந்துவிட்டதா?”

ஆம்!”

தூக்கி எறியப் போகிறாயா?”

இல்லை, தங்கச்சிக்குத் தாவணி!”

11. ஒரு காய ஆணி

ஆகாயம் அழகா?”

ஆம்!”

பூமி அழகா?”

ஆம்!”

வாழ்க்கை அழகா?”

ஆம்!”

அப்ப... கையில் நிறைய காசிருக்குதுபோல?”

இல்லை. காயங்கள்!”

12. ஓர் இழப்பு மூச்சு

விளம்பரமா...?”

ஆம்!”

மீட்புப் பணியா...?”

ஆம்!”

சம்பளம் என்ன?”

இழப்பு!”

13. ஒரு பூரிப்பு மடி!

புனித மரியாவே...”

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித அந்தோணியாரே...”

எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித செபஸ்தியாரே...”

..............................”

பதில் சொல்ல மாட்டியா?”

மாட்டேன். நீ எப்ப எனக்காக வேண்டப் போற?”

14. ஒரு விதைப்புக் கல்லறை

சாவுப் பூசைக்குப் போனியா?”

ஆம்!”

கல்லறைக்குப் போனியா?”

ஆம்!”

மலர் வளையம் வைத்தாயா?”

ஆம்!”

அது சரி... அவன் வாழும்போது நீ ஏன் செத்துப் போயிருந்தாய்?”

15. ஓர் உயிர்ப்பு வெளிச்சம்

கல்லறைக்குத்தானே போறோம்?”

ஆம்!”

வாசலில் பெரிய கல் இருக்குமே?”

ஆம்!”

நமக்காகக் கல்லைப் புரட்ட ஆள் தேடுவோமா?”

வேண்டாம். நாமே புரட்டுவோம்!”

கல்லுக்குள் இருக்கும் சிற்பம் வெளியில் வந்தால் - உயிர்ப்பு!

இலாசரே! வெளியே வாஎன்ற சாகாத் தன்மையே வாழ்வதே உயிர்ப்பு! வெளிச்சம் நிரந்தரம்

அழைப்பைஆராதிப்பவன் பக்தன். ‘அழைப்பைஅடைபவன் சீடன்.

இறந்த இயேசுவை அல்ல - உயிர்த்த இயேசுவைத் தேடிக்கொண்டே...

பாடுகள் தொடரும். பாசனங்கள் படரும். இறையாட்சி இலட்சியம் முழுமை பெறும் வரை.

  வெளிச்சம் நம்மில்!

news
கவிதை
பூமிப் பந்தின் புழுதி துடைப்போம்!

காற்றின் முகத்தில் கரிபூசி விட்டாய்!

பருகத் துடிப்பது

அமுத மழையா? அமிலத்துளியா?

ஓசோன் பேர்வையில்

ஓட்டைகள் துளைத்து

சூரியச் சூட்டைச் சுவிகரித்த நீ

தென்றலின் முத்தத்தில்

தேன் சுவைப்பாயோ?

 

மேகக் குடங்களைப்

பூமிக்குச் சுமந்து வரும்

தாவரக் கரங்களைத் தரைமட்டமாக்கி விட்டாயே!

சோலைவனங்களையெல்லாம் சூனியமாக்கிவிட்டு

பாலைவனங்களிலா

பல்லுயிர் பெருக்குவாய்?

 

குருவியின் குரல்வளை நெரித்துவிட்டாய்!

அருவியின் அருமை

குலைத்து விட்டாய்!

மலைகளின் பெருமையைச் சிதைத்து விட்டாய்!

நதிகளின் பயணம் தடுத்துவிட்டாய்!

 

பின்னர் உயிரின் வனப்பை

எந்த ஓவியத்தில் இரசித்து விடப்போகிறாய்?

குளத்தின் வயிற்றில் விசம்;

நிலத்தின் வளத்தில் கசம்;

அழிவின் வசம் உலகில் நிசம்!

 

உயிரினங்களைப் பயிரினங்களைக்

கொலை செய்துவிட்டு நீங்கள்

கொண்டாடப் போவது யாரை?

சுகம் தரும் காட்டையா?

இல்லை சுடுகாட்டையா?

இயற்கை செத்து எதற்குச் சொத்து?

 

குடும்ப உறவுகளைக்

கூகுளில் தொலைத்துவிட்டு

அவர்கள் கல்லறைக்குள் புகுந்த

பின்பா கன்னத்தோடு கன்னம் உரசி

கருணை காட்டப் போகிறீர்கள்?

 

அலைப்பேசியில்

நேரத்தைப் புதைத்துவிட்டு

கடைசியில் கட்டியிருக்கும்

கடிகார முள்களையா

கடிந்து கொள்ளப்போகிறீர்கள்?

 

கல் ஆனாலும் கணவன்

புல் ஆனாலும் புருஷன்

ஆக மொத்தம்

போதையிலே கணவன்

வீதியிலே குடும்பம்

தாலியில்லா மனைவி

நாதியில்லாக் குழந்தை

தோள் கொடுப்பான் தோழன்

அதுவன்றோ பழமொழி!

 

மைக்கில் மட்டும் பெண்ணியம்

மற்றபடி எங்கே கண்ணியம்?

கருப்பையில்

நெருப்பைக் கொட்டியவன்

வெறுப்பை உமிழ்ந்து

பொறுப்பை மறந்து

இணைப்பை மாற்றுவது

விடுதலைக் காதலா?

தறுதலைக் காதலா?

 

குளத்தில் வழுக்கி விழுந்தால்

தண்ணீரில் பாசமாம்!

குடும்பத்தில் தடுக்கி விழுவதென்னவோ

நாள்தோறும் தாய்ப் பாசம்தானே!

 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

சேய்களின் மனத்தில் ஈரமுமில்லை!

உற்றார் துரத்திய

பெற்றோர் ரோட்டில்!

தந்தை சொல் மிக்க

மந்திரம் இல்லை இன்றோ!

 

மைந்தனின் சிந்தையில்

தந்தையே இல்லை எனில்

நாளைய பூமி நலம் பெற வழி?

உறவின் சிறப்பையும்

உலகின் வனப்பையும்

யாவரும் சேர்ந்து

அழகுறச் செய்வோமே!

கிழிசலை நெய்வோமே!

புத்தம் புது பூமி புறப்பட்டு வரும்!

news
கவிதை
பெண்ணே பேசும் தெய்வம்!

பெண்மை என்பது பேசுந்தெய்வம்

உண்மை இதனை உணருக நன்கு

ஆண்மை பெண்மை ஆண்டவன் படைப்பு

பேணுதல் என்பது பெண்மையின் சிறப்பு

ஆணின் வெற்றிக்கு அடிப்படை அவளே

வானினும் உயர்ந்தது வஞ்சியவர் பெருமை

தேனினும் இனிக்கும் தெளிவுறு சொல்லால்

ஊனில் வளர்த்து உயிரினைப் பேணும்

பெண்மை ஓங்கிட பேரினம் வளரும்

கண்ணினும் இனிய கற்பினைப் பேணுவாள்

மண்ணில் அன்னையாய் அவளே திகழ்வாள்!

மாதொரு பாகனாய் மகேசன் காட்டும்

தீதிலா வடிவத் திருவுரு பெண்ணே!

கோதிலா அன்பினைக் குறைவிலாது தனித்து

மேதினி யதனில் மேன்மைகள் சேர்ப்பாள்

கனிவுடன் பேசி காதலை வளர்ப்பாள்

கருவினில் சுமந்து கண்ணெனப் போற்றுவாள்!

தாய்ப் பாலொடு தமிழ்ப்பால் ஊட்டுவாள்

நோயில் படுத்தால் நொந்தே போவாள்

உயிரினைத் தந்தும் உலகினைப் புரப்பாள்!

பேசும் தெய்வம்  அவள்தான் பெண்ணே!

news
கவிதை
தவக்காலம் ஆண்டவர் அருள்பொழியும் காலம்!

ஆண்டவர் அருள்பொழியும் காலம் அதுவே தவக்காலம்!

மாண்பினை நாம்பெறும் காலம் மீட்பரே அருளிய காலம்!

உன்னத மாந்தராய் வாழ ஒறுத்தலைப் புரிந்திடும் காலம்!

விண்ணக வாழ்வினில் செல்ல மன்னிப்பு ஏற்றிடும் காலம்!

 

பல்வகை திறனிருந்தாலும் உள்ளத்தை உருக்கிடவேண்டும்!

நல்லிசை போல் நாம் வாழ நம்மையே உணர்ந்திடவேண்டும்!

பாவத்தின் கவர்ச்சியைவெல்ல பரமனில் இணைந்திடவேண்டும்!

சாபத்தின் மோகத்தைக் கொல்ல திருநூல் செபம் செய்யவேண்டும்!

 

ஒப்புரவாவோம் நாமே; எப்பிழை பொறுப்போம் தாமே!

தப்பறை கொள்கைகள் தீங்கே; இப்புவிவாழ்வோம் பாங்கே!

ஒப்புயர்வற்ற மறையை உயிரென எண்ணி வளர்ப்போம்!

இப்புவிவாழ் எளியோர் ஏற்றம்பெற்றிட உழைப்போம்!

 

தனக்கென வாழ்ந்திட வேண்டாம்;

                         பிறர்க்கென வாழ்ந்திட பார்ப்போம்!

பிணக்குகள் வழக்குகள் தவிர்ப்போம்; பிழைகளை,

                         குறைகளைப் பொறுப்போம்!

நாற்பது நாள்களும் இணைவோம்; நல்லறம் புரிந்திட நினைப்போம்!

பயனுள்ளதில் படிப்பதை நிலைப்போம்;

வாழ்வதில் கொடுத்து மகிழ்வோம்!

news
கவிதை
இலக்கியத் தமிழே வணக்கம்!

எழுத்துகளின் அழுத்தங்களினால்

செழித்து நிற்பவை செந்தமிழ் இலக்கியம்- தமிழன்னை

கழுத்து மாலைப் பொன்னின் மணிகளாய் 

கறுத்துப் போகாது மிளிர்பவை இலக்கியம்!

பழுத்த பண்பாடு, வரலாறு, கலாச்சாரம்

அனைத்து நிலைகளை விளக்கிடும் இலக்கியம்!

ஒழித்துப் போட ஒருபகை வரினும்

உயிர்த்தே நிற்பவை நம் தமிழ் இலக்கியம்!

               

வாழ்க்கையின் பல்வேறு கூறுகளனைத்தையும்

வழுவாது வடித்து அளிப்பவை இலக்கியம்!

வாழ்வாங்கு வாழ்ந்தோர் பெருமையால் நமக்கு

வழிகாட்ட எழுதப் பட்டவை இலக்கியம்!

வீழ்வேது நம் தாய்மொழிக்கென்றே

வீரமுடன் மார்தட்டிச் சொல்வது இலக்கியம்!

வீரமும் காதலும் விளைந்த வரலாற்றை

வெளிச்சமிட்டுக் காட்டிடும் இலக்கியம்!   

 

முன்னோர்கள் வாழ்ந்த வரலாறு அறியலாம்-அவர்

முழுமூச்சாய் உயர்ந்த பின்னணி அறியலாம்

நடையுடை பாவனை நாகரிகம் அறியலாம்

நல்மனத்தோரவர் நற்குணம் அறியலாம்

அன்னார் பெற்ற அதிசயங்கள் அறியலாம்

ஆற்றலோ டவற்றில் மீண்டதை அறியலாம்

எந்நாளும் நம் தாய்த் தமிழ் மண்ணுக்கு

எப்படிப் புகழ் சேர்ந்ததென அறியலாம்

     

சங்க இலக்கியமும் நீதி இலக்கியமும்

பழங்கால இலக்கியப் பெருமையைக் கூட்டும்

பக்தி காப்பியம் உரைநடை புராணம்

தல புராணம் மற்றும் இசுலாமிய இலக்கியம்  

இடைக்கால இலக்கியப் பட்டியல் காட்டும்

கிறித்தவ இலக்கியம் புதினம் கட்டுரை

சிறுகதை புதுக்கவிதைகளோடு

ஆராய்ச்சிக் கட்டுரைகள் இக்கால ஏற்றம்!

 

எழுத்துகளெல்லாம் தொகுக்கப்பட்டு

எழுத்துக் கலையால் இலக்கியமாயிற்று

எடுத்துப் படிக்கும் நூல்களுக்குள்ளே

இழந்திடும் மனத்தினால் இரசனை கூடிற்று

அலுத்துப்போன தொலைக்காட்சித் தொடர்களால்

அன்றாட மணித்துளிகள் வீணாய்ப் போயிற்று    

அறிவும் ஆன்மிகமும் வளர்த்த நூல்களே

ஆன்றோர்கள் தோன்ற அடித்தளமாயிற்று!