news
கவிதை
அணையா விளக்கே அன்னை எலிஸ்வாவே!

கேரள மண்ணில் உதித்த கார்முகிலாம் ஒளிவிளக்கே!

கார்மல் சபையின் சிறந்த  முத்தே  மங்கா விளக்கே!

புனித தெரேசாவின்  கார்மலின் முதல் விளக்கே!

தொம்மனில் தோன்றிய முத்தான மணி விளக்கே!

இறையன்பை இதயத்தில் ஏந்திய காரிகை நீ!

ஈசன் வழியில் நிலையாய் அர்ப்பணித்த உயிர் நீ!

அன்பின் வழியே அவனியில் காட்டிய அருள் நீ!

CTC-சபையைத் தரணிக்குத் தந்த காரிகை நீ!

செபத்தைச் சபையின் மூச்சாக்கிய முகிலே!

சேவையை உலகில் சாட்சியாக்கிய முகிலே!

தாழ்மையில்  உருவெடுத்த தன்னிகரில்லா முகிலே!

தியாகமதைத் தீர்க்கமாய் வாழ்வாக்கிய முகிலே!

பெண் கல்விக்கு வித்திட்ட வித்தகியேசுடர் விளக்கே!

பின்னடைந்தோர் உயர்வடைய விடியலான அருள் விளக்கே!

இரக்கமும் எளிமையும் செறிந்த அருள் விளக்கே!

இடரிலும் அஞ்சா நெஞ்சம்  கொண்ட சுடர் விளக்கே!

அருளாளர்  அன்னை எலிஸ்வா தாயே!

புனித நிலைக்கு உயர்ந்திட வேண்டுகிறோம் யாமே!

எங்கள் செபம்  உம் பாதம் சேருமே!

அணையா விளக்காய் எம்மை வழிநடத்துமே!

news
கவிதை
கரும்பாக இனிக்கட்டும்!

சமூகத்தில் தலைவிரித்து ஆடும்

சாதி மத மோதல்கள்...

இளையோரை வலைவிரித்து நாடும்

மாயைத் தரும் பிம்பங்கள்...

சிறுவர்களைச் சீரழித்துப் பாயும்

போதை வினைக் கேடுகள்...

சமூக வலைத்தளங்களில் சீறும்

தீங்கு தரும் வன்மங்கள்...

போகியோடு எரியட்டும்! போலியாக ஒழியட்டும்!

சமத்துவம் சகோதரத்துவம் சங்கதிகள் யாவும்

வெறும் ஏட்டில் மட்டுமல்லாது - ஒவ்வொருவர்

மன வீட்டிலும் பொங்கட்டும்!

சொல் செயல் எல்லாமும்

கரும்பாக இனிக்கட்டும்!

செல்வச் செழிப்பு எல்லாம்

போதும் என நிறையட்டும்!

தை பிறந்தால் வழி பிறக்கும்

எனும் மொழி மெய்யாகட்டும்!

மொத்தத்தில் எல்லாருக்கும்

எல்லாமும் கிடைக்கட்டும்!

news
கவிதை
சென்னை – மயிலை உயர் மறைமாவட்டத்தின் முதல் பெண் ஊழியர்

திருவள்ளூர் கீழ்ச்சேரி

திசையறியா சிற்றூரில்

ஆதரவிலா மாதருக்கு

அன்புக்கரம் தந்தாயே!

வழிதெரியா மக்கட்கு

வழிகாட்ட வந்தாயே!

வாழ்வளிக்க வேண்டுகிறேன்

வரமீந்து காப்பாயே!

பெண்களுக்குக் கல்விவேண்டிப்

பெருமுயற்சி எடுத்தாயே!

பெண்கல்விபெருமைபெற

பெரும்பாடு பட்டாயே!

கைம்பெண்ணாய்இருந்ததாலே

காயங்கள் ஏற்றாயே!

ஞாலத்தில் இருள்நீக்கி

நல்விளக்காய் ஒளிர்ந்தாயே!

நினைவென்னும் மண்டபத்தில்

நித்தமும்யான் செபித்திடவே

நீண்டுவரும் தேவைகளை

நித்தியமும்                 தருவாயே!

உன்பார்வை ஒளிகண்டு

உன்னருகில் வருதற்கு

புன்சிரிப்பால் அழைப்பாயே!

புத்தொளியால் அணைப்பையே!

அம்மாவுன் நினைவிடத்தில்

அன்புமணம் வீசுதம்மா!

கருணைமிகு கண்களிலே

இரக்கவொளி பாயுதம்மா!

அருட்பார்வை நாற்புறமும்

அலையலையாய்த் தாவுதம்மா!

வறியவனாய் நிற்கின்றேன்

வாழ்வளித்துக் காப்பாயே!

அம்மாநின் அருகினிலே

ஆதரவிலாப் பிள்ளைகளை

அன்பாக அனைவரையும்

அரவணைத்து மகிழ்வாயே!

எப்பக்கம் பார்த்தாலும்

எழில்தவமும் உன்முகமே!

எந்நாளும் வருவோரை

இருக்கரத்தால் காப்பாயே

உவமையிலா நற்றாயே!

உன்னையான் போற்றுகிறேன்

கண்ணொளியால் காப்பதற்கு

கருணையொலி காட்டிடம்மா!

நன்னெறியில் நிற்பதற்கு

நாளுமுனை வேண்டுகிறேன்

நன்மைபல பலர்க்கீந்து

கண்ணிமையாய்க் காப்பாயே!

தனிமரமாய் நின்றன்று

கனிமரமாய்ச் செழித்தாயே!

பணிச்சுமையை ஏற்றவர்க்குப்

பக்கபலம் ஆனாயே!

அணிகள்பல இன்றமைய

அன்றேநீ உழைத்தாயே!

அப்பப்பா! உன்னுழைப்பால்

அகிலமெலாம் நிலைத்தாயே!

ஞானம்நிறை ஒளிநீயே!

மனவானின் குளிர்நீயே!

வானொளிரும் மதியாக

வலம் வந்த தாய்நீயே!

திக்கெட்டும் ஓங்கிநிற்கும்

தீந்தமிழின் சுவை நீயே!

தினமுன்னை வேண்டுகிறேன்

வேண்டுவரம் ஈவாயே!

news
கவிதை
பேறுபெற்ற பெத்லகேம்!

பேறுபெற்ற பெத்லகேமே- நீ

வேறுபட்ட பெத்லகேமே!

பேரருளின் பெட்டகமானாய் -நீ

பேரரசரின் பிறப்பிடமானாய்!

 

நாடப்படா இடமாய் கிடந்த நீ,

தேடப்படும் இடமாய் உயர்ந்தாய்!

சிறு கிராமமாகிய நீ -இயேசுவே

சிசுவான சிங்கார வனமானாய்!

 

வைக்கோலின் மணமாய் இருந்த நீ,

வான் தேவனின் பிறப்பின் கனமானாய்!

அற்பமான மாட்டுத் தொழுவத்தை நீ

ஆசிர்வாதமான இல்லமாக்கினாய்!

 

மதிக்கப்படாமல் வாழ்ந்த மேய்ப்பர்களை நீ

மாண்புமிக்க சாட்சிகள் ஆக்கினாய்!

அச்சத்துடன் வாழ்ந்த மனிதர்களை நீ

ஆச்சரியத்தால் மகிழச்செய்தாய்!

 

மாட்டுத் தொழுவம் கூட - இறைமகிமையைப்

பாட்டாக்க முடியும் எனக் கற்றுத் தந்தாய்!

இருள் சூழ்ந்து சோர்ந்த இடமதில்  நீ

இறை அருள் சூழ்ந்து ஒளிர்ந்திட வழி வகுத்தாய்!

 

உயர்ந்த மாளிகைகள் இல்லாத நீ

உன்னத தேவனின் உறைவிடமானாய்

அயர்ந்த மனிதருக்கு ஆறுதல் தந்தாய் நீ

அன்பினால் அனைவருக்கும் தேறுதல் தந்தாய்!

 

வரலாறு உன்னை மதிக்கவில்லை - ஆனால்

வானமே உன்னை வர்ணிக்கச் செய்தாய்!

ஆசிர்வதிக்கப்பட்ட நகரமானாய்-இறை

அன்பு சூழ்ந்த சிகரமானாய்!

 

புனித நகரமே, புண்ணிய பூமியே!

பூபாளங்கள் முழங்கிடச் செய்தாய்,

புன்னகை பூத்திடச் செய்தாய்

உன்னை நினைக்கையில்,

உள்ளம் குளிரச் செய்தாய்!

 

நம்பிக்கை நகரமே,

நித்தியத்திற்குத் துணை நின்றாயே!

வேதம் அறியாத நீ அமைதியில்

போதனை செய்கின்றாயே!

 

இதயத்தில் தாழ்ந்தோரை,

இன்பமுடன் வாழ அழைத்தாய்!

குறைகளால் நிறைந்தோரை

இறையருளைச் சுவைக்கச் செய்தாய்!

 

கருணை நிறைந்த தேவனை,

கண் திறக்க வைத்தாயே உன் மடியில்!

விண்ணின் ஆசிர் மண்ணில் மலர,

உன்னையே தாரைவார்த்துத் தந்தாயே!

 

அரவமற்ற இரவுதனில் - இறை

அமைதியைச் சுவைத்திட அழைப்பு விடுத்தாய்!

விண்மீன்களால் மட்டுமல்ல அந்த இரவு

மன்னவனின் கருணையாலும் ஒளிரச் செய்தாய்!

 

பொன்னோ பொருளோ அல்ல

உன்னைச் சிறப்பித்தது,

அரசனோ அறிவியலோ அல்ல

உன்னை உயர்த்தியது,

அன்பு நிறைந்த ஆன்மிகமும்

தாழ்ச்சி நிறைந்த தியாகத் திருமகனும்தான்!

 

வாரி வழங்கும் வள்ளல் தேவனைப்

பாரினில் மலரச் செய்தாயே!

பேறுபெற்ற பெத்லகேமே,

உன்னில் பூரிப்படைந்துதான் போகிறேன்!

news
கவிதை
சன்னலுக்குள் சுதந்திரம்

சிறகொடிந்த பறவை போல்

சிறையுண்டு கிடப்பவளே!

 

சுதந்திரம் கிடைத்த பின்னும்

இயந்திரம் போல் வாழ்பவளே!

 

மனம் ததும்பி வெதும்புகையில்

பழுகிக் காயும் காரிகையே!

 

உலகம் உன்னைத் தூற்றினாலும்

காலம்தந்த

வலிகள் தீர

சோகம் உன்னை வாட்டும்போது-உன்

கண்ணீர்த்துளிகள் மருந்தாகும்!

 

பீறிட்டு ஒழுகும் குருதி போலப்

பொங்கியெழு பொற்சிலையே!

 

இச்சைக்கு இரையானாய் - பரத்தைப் பட்டம் நீ பெற்றாய்

செல்வம் பணம் பகட்டின்றி - புகலிடம் என்று

இன்று உண்டோ?

 

தென்றலாக இருப்பவளே

கொடும் புயலாக

எழுந்து வா!

 

மெழுகாயுருகி

அழுதது போதும்

சுட்டெரிக்கும் கதிராய்

சுடர்வீச வா!

 

பாலைவனமாக

இருந்தது போதும்

விளைச்சல் நிலமாகச்

செழித்திட வா!

 

ஜன்னலுக்குள்

தோன்றி மறையும்

நிலவைப் போல்

வாழ்க்கையடி!

 

சாதிக்க மனம் இருந்தால்

அகிலமே உன் வசமாகுமடி

நமக்கும் உண்டு சமநீதி

நாமும் பெறுவோம் பொதுநீதி!

 

எழுத முடியாப் புத்தகமாய்

முற்றின்றி முடியாத்

தொடர்கதையாய் முட்டி மோதிப்

பிழைத்தாலும் - தலையில்

குட்டிக் குட்டித் 

தாழ்த்துவோன் யார்?

 

வார்த்தையால் மட்டும்

சமத்துவம், சுதந்திரம்

என்று ஆகிடுவோம்?


news
கவிதை
தேசம் கடமைப்பட்டிருக்கும்

அவன் மனத்தைப் போல் உறுதியுடனும்

தைரியத்துடனும் நிறைந்தவன்!

முகமூடி போன்ற

அந்தத் திடீர் புயலைத்

தன் கண்களில் கொண்டு தாங்கினான்!

உலகையே இழந்த

மனைவி ஒரு பக்கம்!

அவனது நினைவுகளைப் பேணும்

ஐந்து வயது மகளோடு

தன் பக்கம்!

இந்த வலிகளைத் திருந்தி,

தன் கடமையில் உறுதி காட்டும்

ஓர் இராணுவ அதிகாரி

தன் துயரத்தை வானிற்கே

அழுது காட்ட விரும்பினாலும்

தன் தோளில் இருக்கும்

அந்தப் பட்டம்,

கண்ணீர் வண்டல் நொறுங்கும்

இதயத்தின்போது மரியாதையுடன்

நிற்கச் சொல்கிறது.

ஒரு தாயாய்,

ஒரு மனைவியாக,

ஓர் இராணுவ அதிகாரியாக,

உள்ளுக்குள்

எண்ணற்ற போராட்டங்களைக் கொண்டவர்.

தாங்க இயலாத

வலியும் வேதனையும்

ஒரே நேரத்தில்

கண்டுபிடிக்க முடியாத

அளவில் அனுபவித்தவர்.

அவன் காதலித்த மனைவி,

அன்பு மகள்,

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கான

மரியாதையைச் செலுத்தி

விடையேற்றிய வான் வீரனே,

உனக்கு என்றும்

இந்தத் தேசம் கடமைப்பட்டிருக்கும்!