slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
அருள்திரு. எட்மெண்ட் பெக்கர் MEP: இந்தியத் திரு அவையில் காட்சி ஊடகத்தின் முன்னோடி!
சிறப்புக்கட்டுரை
அருள்திரு. எட்மெண்ட் பெக்கர் MEP: இந்தியத் திரு அவையில் காட்சி ஊடகத்தின் முன்னோடி!

தென்னிந்தியத் திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் பங்கு அளப்பரியது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத நிலையிலும் MEP அருள்பணியாளர்களின் அரிய முயற்சியால், தியாகத்தினால் உருவானதுதான் இம்மறைப்பணித்தளம். ஊடகங்களின் தாக்கம் பெரிதளவு இல்லாத சூழலிலும் அவற்றின் வழியாக ஒரு பெரும் தாக்கத்தை இம்மண்ணில் உருவாக்கியவர்கள் இவர்கள். காட்சி ஊடகத்தின் வழி நற்செய்தியைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்ற பெருமை இவர்களையே சாரும்.

1951-ஆம் ஆண்டு திண்டிவனம் நடுநிலையத்தின் மேலாளராகப் பொறுப்பேற்றார் அருள்திரு. பெக்கர். இவரின் ஆர்வத்தைக் கண்ட அன்றைய பேராயர் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 1957-இல் மறைக்கல்வியில் சிறப்புப் பயிற்சி பெற்றுவர பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்டார். பயிற்சி முடித்து வந்த அருள்திரு. பெக்கர், பேராயரிடம் ஏழு முன் மொழிவுகளைச் சமர்ப்பித்தார். அவற்றில் ஒன்றுதான் பொதுமக்கள் தொடர்புக்கான நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி நற்செய்திக் கல்விப்பணி நிலையம் ஒன்றை நிறுவுதல். அவ்வாறு 1960-இல் திண்டிவனத்தில் உருவானதுதான்  தமிழ்நாடு ஒலி-ஒளி கல்வி நிலையம். இதன் வழியாக மறைப்பணி, உலகியல் கல்வி, தொழில்வளம், சமுதாய நலம், உழவு, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் திரைப்படங்கள், ஒளிப்பட வில்லைகள் (Flim Slides), ஒலிப்பதிவு நாடாக்கள் ஆகியவற்றைத் தயாரித்து, அதன் வழியாக மக்களின் அறியாமையை நீக்க முனைந்தனர்.  

அருள்திரு. எட்மெண்ட் பெக்கர் MEP

இருபதாம் நூற்றாண்டின் நற்செய்தி அறிவிப்புப் பணியில், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மிக ஆழமாக உணர்ந்த ஓர் இறைவாக்கினர் அருள்திரு. எட்மண்ட் பெக்கர் ஆவார். பிரான்ஸ் நாட்டின் மெட்ஸ் (Metz) நகரில் 1921-ஆம் ஆண்டு பிறந்து, 1947-இல் குருவாக அருள்பொழிவு பெற்ற இவர், பாரிஸ் மறைபரப்புச் சபையின் (Missions  Etrangeres de Paris) வழியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.  1948 முதல் 1968 வரை புதுச்சேரி - கடலூர் உயர்மறைமாவட்டத்தில் இவர் ஆற்றிய பணிகள் இந்தியத் திரு அவையின் தகவல் தொடர்பு வரலாற்றில் ஒரு பொற்காலமாகும்.

நற்செய்தி அறிவிப்பும், ஊடகப் புரட்சியும் (Mobile Mission)

அருள்திரு. பெக்கர் புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்டத்திற்கு வந்த காலகட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு நற்செய்தியையும் கல்வியையும் கொண்டு சேர்ப்பது பெரும் சவாலாக இருந்தது. திண்டிவனத்தில் புகழ்பெற்ற மறைக்கல்விப் பள்ளியை (Catechist School), அருள்திரு ஆன்ரூ காரோஃப் (Fr. Andru Carof) அவர்களுடன் இணைந்து வழிநடத்திய இவர், திண்டிவனத்தை மையமாகக் கொண்டு புதிய ஊடகப் புரட்சியைத் தொடங்கினார். அதுதான் நடமாடும் மறைபரப்புப்பணி.

அருள்திரு. தாமஸ் காவன் டஃபி அவர்களால் தொடங்கப்பட்ட இப்பள்ளியை, பெக்கர் ஒரு நவீன ஊடகப் பயிற்சி மையமாக மாற்றினார். தந்தை பெக்கரின் பணியின் மற்றோர் அம்சம் என்னவென்றால், இவரும், இவரது குழுவும் மறைக்கல்வி முறைகளைக் காட்சி - கேள்வி ஊடகங்களுக்கு ஏற்பப் புதுப்பித்தனர். அதற்குத் தேவையான புத்தகங்களைத் தயாரித்து திருவிவிலிய மற்றும் வழிபாட்டுப் போதனைகளை ஊக்குவிப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். மறைக்கல்வி, திருவிவிலியம் மற்றும் வழிபாடு ஆகிய மூன்றும் இவரது சிந்தனையில் ஒன்றாகவே இருந்தன.

நடமாடும் சினிமா (Mobile Cinema)

அருள்திரு. பெக்கர் ஒரு தனிப்பட்ட வாகனத்தை வடிவமைத்து, அதில் படம் ஒளிபரப்பும் கருவிகள் (Projector) மற்றும் ஒலிபெருக்கிகளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் தோறும் சென்றார். இரவில் திறந்த வெளிகளில் கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தமிழ் மொழியில் ஆன்மிக மற்றும் சமூக விழிப்புணர்வுப் படங்களைத் திரையிட்டார். மேலும், திண்டிவனத்தில் புத்தகங்கள், சிறப்பு இதழ்கள், குரல் பதிவு விளக்கங்களுடன் கூடிய ஸ்லைடுகள் மற்றும் பல்வேறு திரைப்படங்களை உள்ளடக்கிய மறைக்கல்வி வள மையத்தை அமைப்பதில் தந்தை பெக்கர் வெற்றி பெற்றார். இந்தப் பொருள்கள் அனைத்தையும் தென்னிந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் உள்ளநடமாடும் மறைப்பணிகுழுக்கள் கடனாகப் பெற்றுப் பயன்படுத்த முடிந்தது.

இந்திய இறையியலாளர்களின் வழிகாட்டி

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிந்தைய இந்தியத் திரு அவையின் மிக முக்கியமான இறை யியலாளரான அருள்திரு. D.S. அமலோற்பவதாஸ்  அவர்களுக்கு அருள்திரு. பெக்கர் ஆரம்ப காலத்தில் சிறந்த வழிகாட்டியாக விளங்கியிருக்கிறார். அருள்திரு. பெக்கரின் ஊடகப் பணிகளால் ஈர்க்கப்பட்டே அருள்திரு. அமலோற்பவதாஸ் பிற்காலத்தில் பெங்களூரில் புகழ்பெற்ற NOCLC மையத்தை நிறுவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சி ஊடகப் பணியின் முன்னோடி

சாதாரண மக்களுக்கு எழுத்துகளைவிட, காட்சிகளும் ஒலிகளும் மிக வேகமாகச் சென்றடையும் என்பதை அருள்திரு. பெக்கர் உறுதியாக நம்பினார். வெறும் திரைப்படங்களைக் காண்பிப்பதோடு நின்றுவிடாமல், அவரே சொந்தமாகத் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். திண்டிவனத்தில் ஒரு சிறிய திரைப்படக் குழுவை உருவாக்கி, உள்ளூர் இளைஞர்களுக்கும், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கும் புகைப்படக் காட்சி, ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினார்.

தன் வாழ்நாளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் மற்றும் குறும்படங்களை அருள் திரு. பெக்கர் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் திருவிவிலியக் கதைகளை மையமாகக் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இவரது ஊடகப் பணியின் வெற்றியைப் பார்த்த உலகத் திரு அவை,1968-ஆம் ஆண்டு இவரை மீண்டும் ஐரோப்பாவிற்கு அழைத் தது. அங்கு சர்வதேச கத்தோலிக்கத் திரைப்பட அமைப்பில் (OCIC - International Catholic Office for Cinema) இணைந்து, உலகளாவிய கத்தோலிக்க ஊடகப் பணிகளுக்குத் தலைமை தாங்கினார்.

பாரிஸ் IRFA ஆவணக்காப்பகமும், பெக்கரின் வரலாற்றுச் சுவடுகளும்

அருள்திரு. பெக்கர் 1981-இல் மறைந்தபோதிலும், அவர் விட்டுச் சென்ற ஊடகச் சொத்துகள் இன்றும் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் உள்ள பிரான்ஸ் - ஆசியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRFA - Institute de Recherche France-Asia) பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அருள்திரு. பெக்கர் பயன்படுத்திய அரிய 16 சுருள்படங்கள், தமிழ்நாட்டுக் கிராமங்களில் அவர் பதிவு செய்த மக்கள் மற்றும் மண் சார்ந்த வழிபாட்டுப் பாடல்கள் மற்றும் 1950-களின் தமிழ்நாட்டு வாழ்வியலை விவரிக்கும் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் இந்த ஆவணக்காப்பகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அருள்திரு. எட்மண்ட் பெக்கர் வெறும் ஒரு மறைபரப்பாளர் மட்டுமல்லர்; அவர் ஒரு சிறந்த கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் மற்றும் புதுவை - கடலூர் உயர் மறைமாவட்டத்தின் நவீன ஊடகத் தந்தை. இன்று நாம் திரு அவையில் பயன்படுத்தும் நவீன சமூகத் தொடர்பு சாதனங்கள் அனைத்திற்கும், 70 ஆண்டுகளுக்கு முன்பே திண்டிவனம் மண்ணில் விதையிட்டவர் இந்த உன்னத இறைப்பணியாளர்.

புதுவை மறைப்பணித்தளத்தில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் கல்விப்பணி
சிறப்புக்கட்டுரை
புதுவை மறைப்பணித்தளத்தில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் கல்விப்பணி

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டென்றால் அது கல்விதான்என்றார் நெல்சன் மண்டேலா. கல்வியறிவு இல்லாமல் எந்த ஒரு சமூகமும் பண்பட்டச் சமூகமாக வளர முடியாது என்பதைப் புதுவை மறைப்பணித்தளத்தில் கிறித்தவ மறையைப் போதிக்க வந்த பாரிஸ் மறைபரப்புச் சபையினர் (MEP) நன்கு உணர்ந்திருந்தனர். எனவே, அவர்கள் தங்கள் கையில் எடுத்த மாபெரும் ஆயுதம் கல்விப்பணியே.

பிரெஞ்சு அரசுக் கல்லூரி: பிரெஞ்சுப் பகுதியில் இயங்கி வந்த அரசுக் கல்லூரியில் பணியாற்றிய மிஷனரிகளைத் திருத்தூதுப் பணியில் ஈடுபடுத்த விரும்பிய ஆயர் ஹெபர்ட் அவர்கள், அக்கல்லூரியை ஆளுநர் தெஸ் பாசிடம் ஒப்படைத்தார். மீண்டும் 1847, ஜனவரி முதல் தேதி இந்த அரசுக் கல்லூரி பாரிஸ் மறைபரப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1852-ஆம் ஆண்டு வீராம்பட்டினத்தில் இருந்த பழைய குருமடம் இக்கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியாக்கப்பட்டது.

இக்கல்லூரியின் பொறுப்பை ஏற்ற பிறகு மிஷனுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டானபோதிலும், இப்பணியைப் பங்குகளில் பணியாற்றிய மற்ற மிஷனரிகள் பெரிதும் வரவேற்கவில்லை. 1889-ஆம் ஆண்டுவரை இக்கல்லூரி மிஷனரிகளின் கண்காணிப்பில் இயங்கிவந்தது. மறைபரப்புச் சபையிடம் ஒப்படைப்பது, மீண்டும் அரசே ஏற்று நடத்துவது என்று இக்கல்லூரி நிர்வாகம் மாறிக்கொண்டே இருந்ததாலும், திருத்தூதுப் பணிக்குப் போதிய குருக்கள் இல்லாமையாலும்உண்மையில் இக்கல்லூரிப் பொறுப்பு இவர்களுக்குப் பெரும் சுமையாகவே இருந்தது.

பெத்தி செமினேர் பள்ளி: ஆண்களின் கல்விக்காக 1846 மார்ச் 19-இல் வெளி மாணவர்களையும் உள்விடுதி மாணவர்களையும் கொண்ட பெத்தி செமினேர் பள்ளி தொடங்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் பயின்ற 200 மாணவர்களில், 40 பேர் குருமட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1855-ஆம் ஆண்டு காரைக்கால் மக்கள் மேதகு பொனான் ஆண்டகையிடம் தங்கள் ஊரிலும் ஒரு பள்ளியைத் திறக்கக் கோரிக்கை வைத்ததன் பேரில், அவ்வாண்டு செப்டம்பர் 10-ஆம் நாள் அருள்திரு. திகார்ட் அவர்களின் தலைமையில் காரைக்காலில் ஒரு பெத்தி செமினேர் பள்ளி, புதுவை பெத்தி செமினேர் பள்ளியின் கிளையாகத் தொடங்கப்பட்டது.

1895 முதல் 1900 வரை புதுவை பெத்தி செமினேர் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய அருள்திரு. லெரோய் அவர்கள் முதல் முறையாக இங்கு ஐரோப்பிய மாணவர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களையும் சேர்த்தார். இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. பேராயர் காந்தி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார். எனவே, இப்போராட்டம் 48 மணி நேரம் மட்டுமே நீடித்தது.

1900 முதல் 1933 வரை இப்பள்ளியின் முதல்வராக இருந்த அருள்திரு. பியர் எஸ்காந்த் அவர்கள் இதன் பெரும்பாலான கட்டடங்களைத் தனது சொந்த செலவிலேயே கட்டினார். 1905-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு மதச்சார்பின்மைச் சட்டத்தின் விளைவால் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு உள்ளானது. ஆனால், அருள்தந்தை அவர்களின் சாதுரியத்தால் அந்நிலையிலிருந்து தப்பியது. 1925-ஆம் ஆண்டிலேயே இப்பள்ளியில் 1200 மாணவர்கள் பயின்றது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் இப்பள்ளி பாண்டிச்சேரியின் அடையாளமாகத் திகழ்கிறது.

புனித சூசையப்பர் பள்ளி: மேதகு லவுனான் ஆண்டகையின் முயற்சியால் 1868-ஆம் ஆண்டு அருள்திரு. ரெனெவியர் அவர்களை முதல்வராகக் கொண்டு, கடலூர் புதுநகரில் புனித சூசையப்பர் பள்ளி தொடங்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு இப்பள்ளி கல்லூரியாக உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய நிதி ஆதாரமின்மையாலும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கொணர்ந்த புதிய ஒழுங்குமுறைச் சட்டங்களாலும் இது மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, 1911-ஆம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்புகள் நீக்கப்பட்டு, மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. பேராயர் லவுனான் ஆண்டகையின் காலத்தில் 1879-ஆம் ஆண்டு அரசாங்கம் கல்விப்பணியில் கொண்டு வந்த சீர்திருத்தங்களாலும், விதித்த நிபந்தனைகளாலும் மறைப்பணியாளர்களின் கல்விப்பணி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானது.

மகளிர் கல்வி: ஆண்கள் கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்களோ அதே அளவு பெண்கள் கல்வியிலும் பாரிஸ் மறைப்போதகச் சபையினர் கொண்டிருந்தனர்பொதுவாக, பெண்களுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு அருள்சகோதரிகளிடம் விடப்பட்டது. புதுவை ஆளுநர் தெஸ்பாசின் வேண்டுகோளின்படி, 1827-ஆம் ஆண்டு புதுவையில் பணிபுரிய அழைக்கப்பட்ட புனித சூசையப்பர் குளூனி சபைச் சகோதரிகள், வெளி மாணவர்களைக் கொண்ட பள்ளி ஒன்றையும், உள்விடுதி ஒன்றையும், இலவசப்பள்ளி ஒன்றையும் விரைவில் நிறுவினர். மேதகு பொனான் ஆண்டகையின் ஏற்பாட்டினால் 1844, பிப்ரவரியில் இக்கன்னியர்கள் காரைக்காலில் அடுத்தடுத்து தொழில் வகுப்பு ஒன்றையும், இளம்பெண்களுக்கு ஒரு பள்ளிளையும், சிறுவர்களுக்கு ஒரு பள்ளியையும் ஏற்படுத்தினர்.

மேதகு பொனான் ஆண்டகையின் வழிகாட்டுதலில், அருள்திரு. லூயிஸ் சவீனியன் துப்புய் அவர்களின் முயற்சியால் 1844, அக்டோபர், 16-ஆம் நாள்தூய மாதா இதயச் சபைதொடங்கப்பட்டது. அடுத்த நாளே பெண்கள் கல்விக்கென்று சிறிய பள்ளி ஒன்றும் திறக்கப்பட்டது. 1892-ஆம் ஆண்டில் இச்சபையினர் புதுவையிலும் கடலூரிலும் மூன்று பள்ளிகளையும், மற்ற இடங்களில் 17 பள்ளிகளையும் நடத்தி வந்தனர். அருள்திரு. லெகோத் மற்றும் பெத்தி செமினேர் பள்ளியில் பணியாற்றிய குருக்களின் உதவியால் தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு புனித ஞானப்பிரகாசியார் சபை அருள்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. பெரியநாயகம் கம்ப்ரோன் தனது சொந்தச் செலவில் இச்சபைக்குச் சம்மனசுகள் தெருவில் ஒரு வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்தார். தொடர்ந்து 1853, மார்ச் முதல் நாளில் ஒரு பள்ளி திறக்கப்பட்டது. 1903-ஆம் ஆண்டில் இவர்கள் புதுவையில் ஒரு பள்ளி மற்றும் தங்கும் விடுதியையும், நெல்லித்தோப்பு, உழவர்கரை, வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு பள்ளியையும் கண்காணித்து வந்தனர்.

சிறிய பள்ளிகள்: 1844-ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 13-வரை நடைபெற்ற பாண்டிச்சேரி முதல் மறைமாநிலப் பேரவையின் விளைவாக, 1892-ஆம் ஆண்டு புதுவை மறைப்பணித்தளத்தில் 161 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. இச்சிறிய பள்ளிகள் மறைபரப்புக் கண்ணோட்டத்தில் பெரிய கல்லூரிகளைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மேலும், மக்களிடையே மறைப்பணியாளர்களுக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தன. எனவே, மிகுந்த உற்சாகத்தோடு மறைப்பணியாளர்கள் தங்களின் மறைப்பணித்தளங்களில் சிறிய பள்ளிகளை அதிகமாகத் தொடங்க முயற்சி செய்தனர்.

கடலூர் புதுநகர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்கள் அனுமதிக்கப்படாததைக் கண்டு வேதனையுற்ற அருள்திரு. J. துருஹின் அவர்கள், 1908-ஆம் ஆண்டு இம்மாணவர்களுக்காகத் தனது இல்லத்திலேயே புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். இப்பள்ளியே பாரிஸ் மறைபரப்புப் பணித்தளத்தில் உள்ள சிறிய பள்ளிகளுக்கு மாதிரிப்பள்ளியாக அமைந்தது. இப்பள்ளியில் தரமான கல்வி அளிக்கப்பட்டதாலும், அருள்தந்தை அவர்களின் சீரிய முயற்சியினாலும் புனித மரியன்னைப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்த அனைத்து மாணவர்களும் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் உயர் வகுப்புகளுக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பாரிஸ் மறைபரப்புப் பணியாளர்கள் தொடங்கியது மிக மிகச்சிறிய பள்ளிகள்தான்; ஆனால், அவையே புதுவை மறைமாநில மக்களின் சமூக-பொருளாதார விடுதலைக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும், முழுமனித உருவாக்கத்திற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாவும் இருந்தன.

புதிய கல்வித் திட்டம்: அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி இருவரும் இணைந்து பேராயர் மோரெல் அவர்களிடம் புதுவை மறைப்பணித்தளத்தில் கல்விப்பணிக்கான ஒரு முன்னோடித் திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர். இவர்களது புதிய கல்வித்திட்டம் பின்வருமாறுபுதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள அனைத்துச் சிறிய பள்ளிகளும் ஒரே மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்; அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படவேண்டும்; பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் உயர்த்தப்படவேண்டும்; 500-க்கு மேல் கிறித்தவர்கள் வாழும் ஊர்களிலும் சிற்றூர்களிலும் ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்படவேண்டும்; அனைத்து மாணவர்களுக்கும் சாதிப் பாகுபாடின்றி இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும். பேராயர் மோரெல் அவர்கள் இப்புதிய கல்வித்திட்டத்திற்கு உடனடியாக மனமுவந்து ஒப்புதல் வழங்கினார்.

மறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்பு (DGS): பேராயர் மோரெல் அவர்கள் 1918-ஆம் ஆண்டு கடலூர் புதுநகர் பங்கினையும், கிராமப்புறங்களில் தனித்தனியே இயங்கி வந்த சிறு பள்ளிகளை  ஒருங்கிணைக்கின்ற மைய அமைப்பை உருவாக்கும் பொறுப்பையும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களிடம் ஒப்படைத்தார். மறைப்பணித்தளத்தில் இருந்த மறைப்பணியாளர்களின் முயற்சிகளை ஒன்றுசேர்க்கமறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்புநிறுவப்பட்டது.

இக்கூட்டாண்மை நிர்வாகத்தின் முதல் தலைவராக பேராயர் மோரெல் அவர்களும், இதன் முதல் இயக்குநராக அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களும் செயல்பட்டு வந்தனர். உடனடியாகஆரம்பக் கல்விக்குழுஒன்று அமைக்கப்பட்டது. 1920-இல் திண்டிவனத்திற்கு மாற்றப்பட்ட கல்வி வாரியம், தந்தையின் மறைவிற்குப்பின், 1944 முதல் மீண்டும் கடலூரில் இயங்க ஆரம்பித்தது.

சிறுவர்களின் தோழன்இதழ்: புதிய கல்வித் திட்டத்தினைச் செயல்படுத்த முனைப்புடன் நின்று செயல்பட்டவர் அருள்திரு. J. துருஹின் ஆவார். 1916-ஆம் ஆண்டுசிறுவர்களின் தோழன்என்ற இதழை அவர் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு வாரமும் கற்பிக்கப்படவேண்டிய பாடங்கள் வாராந்திரப் பாடத்திட்டமாக வெளியிடப்பட்டன. 1916-ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விதழ் 1941-ஆம் ஆண்டு வரை அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அவரது மறைவிற்குப்பின், அவ்வப்போதுஆசிரியர்களின்  தோழன்என்ற பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1959-ஆம் ஆண்டு முதல் இவ்விதழ் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இறையியல் மாத இதழாகதோழன்என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

திண்டிவனம் கல்விப்பணியின் மையமாதல்: அருள்திரு. தாமஸ் கவான் டஃபி தனது கல்விப் பணியின் தலைமையிடமாக  1920-ஆம் ஆண்டு திண்டிவனத்தைத் தேர்வு செய்தார். அங்கிருந்த புனித கபிரியேல் சபைச் சகோதரர்களிடம் தங்கி, புதிய கல்வி வாரியத்தின் பணிகளைத் தொடங்கினார். DGS பள்ளிகளின் இயக்குநருக்கு உறுதுணையாகபள்ளிகளின் ஆய்வாளர்என்ற  பதவி உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆய்வாளராக அருள்திரு. J.H. கஸ்தோன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை உயர்த்தவும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்கள் பின்வரும் புதிய தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்டினார்.

திண்டிவனத்தில் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைத்தல். பயிற்சியில் சேரும் மாணவர்கள் உரிய கல்வித்தகுதியை அடைய தயாரிப்புப் பள்ளி நிறுவுதல்; தனது கல்விக்கொள்கைகளைச் சோதனை செய்ய ஒரு மாதிரிப் பள்ளி  நிறுவுதல். பயிற்சி காலத்திலேயே மாணவர்களுக்கு வேதியர் பயிற்சியும்  அளித்தல். பயிற்சி பெற்றவர்களையே ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்.

மேற்கண்ட புதிய  கல்வித்திட்டத்தின்படி 1921-இல் திண்டிவனத்தில் 22 மாணவர்களுடன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பயிற்சிப் பள்ளிக்குப் போதுமான மாணவர்களைச் சேர்க்க புனித அன்னாள் ஆரம்பப்பள்ளி, சகோதரர் கிளோத்தின் தலைமையில் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கத்தோலிக்க நிறுவனம்: திண்டிவனத்தில் மாதிரிப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அனைத்தும் ஒன்றுசேர்ந்தகத்தோலிக்க நிறுவனம்அமைக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டு அருள்திரு. A.S. கோலாஸ் அவர்கள் அந்நிறுவனத்தின் முதல் தலைவரானார். 1930-ஆம் ஆண்டு இவர் பேராயரானதும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களை இந்நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்க தந்தை அவர்கள் கற்பித்தலில் தொடர்பு மையமுறை, உளவியல் முறை, செயல்வழிக் கற்றல் முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலைப் புரிந்துகொள்ள, நேரடியாகக் களத்திற்குச் சென்று திறனாய்வு செய்யஉலாவரச் செய்தல்என்னும் முறை நடைமுறையில் இருந்தது. மேலும், பள்ளியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கமாணவர் பாராளுமன்றம்முறையாக நடத்தப்பட்டது. இவர் 1933-ஆம் ஆண்டு கத்தோலிக்கச் சாரணிய இயக்கத்தை உருவாக்கினார்.

புதுவை மற்றும் பிற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளின் நலன் மற்றும் நிர்வாகம் சார்ந்த உரிமைகளை அரசிடம் முறையாகப் பெற்றிட 1931-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில்கத்தோலிக்கக் கல்விக்கழகம்ஒன்றை, திண்டிவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கி, அதன் முதல் இயக்குநராகச் செயல்பட்டார். தற்போது இக்கழகம் சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கல்விப்பணியில் அவர் அரசாங்கத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவருடைய அயரா உழைப்பாலும் முயற்சியாலும் 1941-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது  ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட ஆசிரிய - வேதியர்கள் உருவாக்கப்பட்டு மறைப்பணித்தளத்தில்  மிகுந்த உற்சாகத்தோடு  பணிசெய்து வந்தனர்.

புதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள கிராமப் புறங்களிலும் அடிப்படைக் கல்வியைத் தரமாகத் தந்திட புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, கல்வியில் வியத்தகு மாற்றங்களைச் செய்த பெருமை மேதகு மோரெல் ஆண்டகை அவர்களையும், அவரது வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்திய அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களையுமே சாரும்.

பேராயர் A.S. கோலாஸ் அவர்கள் தனது பணியை நிறைவு செய்து இந்திய ஆயரான மேதகு அம்புரோஸ் ஆண்டகையிடம் தனது மந்தையை ஒப்படைத்தபோது, புதுவை மறைமாநிலத்தில் 157 ஆரம்பப்பள்ளிகள், 30 நடுநிலைப்பள்ளிகள், 13 உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. பாரிஸ் மறைபரப்புச் சபையினர் விதைத்த கல்விப்பணியின் பலனாக இன்று பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டத்தில் மூன்று கல்லூரிகள், ஒரு தொழிற் பயிற்சிப் பள்ளி, ஒரு COSE பள்ளி, 19 மேல்நிலைப் பள்ளிகள், 16 உயர்நிலைப்பள்ளிகள், 22 நடு நிலைப்பள்ளிகள், 85 ஆரம்பப்பள்ளிகள், 4 மழலையர் பள்ளிகள் அக இருள் அகற்றி, அறிவு புகட்டிக் கொண்டிருக்கின்றன.

ஏணியாய் தோணியாய்... ஆசிரியர்கள்!
சிறப்புக்கட்டுரை
ஏணியாய் தோணியாய்... ஆசிரியர்கள்!

ஆசிரியர்கள் ஆணிவேர்கள்! வேலை செய்வது வெளியில் தெரியாவிட்டாலும், மாணவர் இனம் பூக்களாய் மலர்வதும், பூமியில் கனிவதும் ஆசிரியர்களால்தான்.

ஆசிரியர்கள் மெழுகுவர்த்திகள்! உருகி உருகி உருக்குலைந்து போவதை உலகம் உணராவிட்டாலும் மனிதர்கள் ஒளிர்வதும் மடமையிருள் அகல்வதும் ஆசிரியர்களால்தான்.

ஆசிரியர்கள் ஏணிகள்! இளைய சமுதாயத்தை இமயத்தில் ஏற்றி வைப்பதும், இனிய சமுதாயம் படைக்க கருவியாய் அவர்களை ஆக்கி வைப்பதும் ஆசிரியர்கள்தாம்.

ஆசிரியர்கள் தோணிகள்மூளையின் செயல்கள் மூழ்கிவிடாமல்அறிவின் பயணத்தை அக்கரைக்குக் கொண்டு சேர்க்கிற அரும்பணியை ஆசிரியர்கள் மட்டும் செய்யாதிருப்பின், சர்க்கரை வாழ்வைச் சந்திக்க முடியுமா இச்சமூகம்?

ஒழுக்கநெறி வளர்க்கும் விளக்கவுரை ஆசிரியர்கள்! ஆளுமைத்திறன் வழங்கும் தோழமைக் கரம் ஆசிரியர்கள்மாணவர் இதய மேடைகளில் மகத்தான அன்புணர்வைச் சுரக்கச் செய்யும் உதய கீதங்கள் ஆசிரியர்கள்! மென்மையான உணர்வுகளை மலர்ப்பிக்கும்  உண்மையான உழவர்களும் கூட ஆசிரியர்கள்தாம்.

செய்கின்ற சேவையைத் தொய்வின்றிச் செய்வதால்தான் தெய்வங்களுக்கு முன்னுள்ள இடத்தை ஆசிரியர்களுக்குக் கொடுத்துமாதா, பிதா, குரு, தெய்வம்என வரிசைப்படுத்தினர் முன்னோர். ஒரு கண்ணில் கண்டிப்பு; மறு கண்ணில் கற்கண்டின் இனிப்பு. உளியின் உரசல்களைத் தாங்கிக்கொள்ள முடிகிற சிக்கிமுக்கிக் கற்களால் மட்டுமே சீர்மிகுந்த சிலைகளாக உருமாற முடியும்.

கண்டிப்பு என்னும் கடிவாளங்கள் போட ஆசிரியர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்காவிட்டால்கண்டிப்பாகப் பண்பின் அடையாளங்கள் கல்வி நிலையங்களிலிருந்து காணாமலே போய்விடும். அரசு சிந்திக்கவேண்டும்.

யானைக்குப் பலம் தும்பிக்கை; மாணவர்க்குப் பலம் ஆசிரியர்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை. எழுதுகோல் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வல்லவன். ஏழையின் அளவுகோல் தெரிந்து மாணவர்களிடம் அன்பு காட்டும் ஆசிரியர் நல்லவன். தாய்மடி இழந்த குழந்தைகளையெல்லாம் தாங்கும் மடி ஆசிரியர்கள்தானே!

அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு; ஆசிரியர்கள் மட்டுமே இரண்டும்! ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்பது வாழும் முறைக்கு அலங்காரம்; சாதி, மத, பேதம் என்பனவெல்லாம் சமுதாயத்தைச் சீரழிக்கும் அலங்கோலம். சின்னப் பிள்ளைகள் அணிந்துவரும் சீருடைகள் மட்டுமே சமத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அடையாளம். அமர் அக்பர் அந்தோணி மூவரையும் அருகருகே அமர்த்தி அழகு பார்ப்பவை வகுப்பறைகள்தானே!

மாடியின் குழந்தையும், சேரியின் பிள்ளையும் கூடி உறவாடி ஓடும் மைதானம் பள்ளிக்கூடங்கள் தவிர வேறென்னஎனவே, ஆசிரியர்கள் என்பவர்கள் ஒருமைப்பாட்டின் கொடியை ஏந்தி வரும் தூதுவர்கள். வேற்றுமை இருள் அகற்ற வேர்வை சிந்தும் தூயவர்கள்.

எதிர்கால இந்தியா வகுப்பறையில் இருக்கிறதுஎன்றது கோத்தாரி கமிஷன். தேசப்பற்றும் தெய்வப் பற்றும் பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் பால்சோறு. தேசப்பற்றை ஊட்டி வளர்க்கிறது தேசிய மாணவர் படைநல்ல பல சேவைகளைச் செய்ய ஊக்குவிக்கிறது நாட்டு நலப்பணித் திட்டம். சுற்றுச்சூழல் தரும் சுகவாழ்விற்குப் பாதை அமைத்துத் தருகிறது பசுமை இயக்கம். வஞ்சம் தீர்க்கும் மனிதர்களைக் கூட நெஞ்சில் ஏற்கும் உள்ளம் தருகிறது சிறுவர் செஞ்சிலுவைச் சங்கம். இப்படி இயக்கங்களை வழி நடத்தும் என்ஜின்களே ஆசிரியர்கள். இந்தியாவை வலுப்படுத்தும் இரும்பு மனிதர்களும் அவர்கள்தாம்.

உடுக்கை இழந்தவன் கைக்கும், படிப்பை மறந்தவன் வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒருவகையில் ஆசிரியர்கள் மனிதர்களின் மானம் காக்கப் போராடும் மன்னர் பரம்பரைகள்.

மாணவர் எதைக் கற்கிறார் என்பது முக்கியமல்ல; எப்படிக் கற்கிறார் என்பதுதான் முக்கியம் என்கிறார் முற்போக்குக் கல்வியை முன்மொழிந்த ஜான் டூபே.

சாக்பீஸ் கோடு - அது மாணவர்கள் தங்கள் கனவு வாழ்வைக் கண்டுபிடிக்க ஆசிரியர்கள் அமைத்துக் கொடுக்கும் ரோடு! அது வெறும் கோடல்ல; வெளிச்சக்கீற்று. அக்கீற்றை அறவொளியாய்  உண்டுதானே மகசூல் செய்கிறது மாணவ நாற்று! புத்தகங்களை ஆசிரியர்கள், பூமிக்கு அறிவின் ஆயுதங்களாக அறிமுகப்படுத்தியிராவிட்டால் நூற்றாண்டுகால நூல்கள் கூட நூலாம்படையிடம் சிக்கிச் சிதைந்து போயிருக்குமே!

வகுப்பறையும் வாத்தியார்களும் வேறு பணி செய்திருந்தால், அணாவுக்கும் பேனாவுக்கும் இங்கே வேலை இல்லாமல் போயிருக்கும். ஆண்டு விழா மேடைகளில் அரிதாரம் பூசாமல், ஆளான ஹீரோக்கள் அரிது அரிதுஉடற்கல்வி ஆசிரியர் உரம் போட்ட காரணமே விளையாட்டு வீரனுக்கு விருது.

தமிழ் வளர்த்தது சங்கப் பலகை. கல்வி வளர்ப்பது கரும்பலகை. ஆகவே தலைமைப்புலவன்  நக்கீரனும், தரணி புகழும் நல்லாசிரியனும் போற்றப்படவேண்டிய பொக்கிஷங்கள்தானே!

சிற்பிக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. மரத்தைச் செதுக்கி மயக்கும் சிலை வடிப்போர் ஆசாரிகள். மனிதர்களை உருக்கி மாணிக்கங்களாய்ச் சமைப்போர் ஆசிரியர்கள்.

ஆசிரியப் பணி குறைப்பணியுமல்ல, அரைப் பணியுமல்லஅறப்பணி! ஆகவே ஆலயப்பணிக்குத் தங்களை அர்ப்பணிப்போரை விடவும், ஆசிரியப் பணிக்குத் தங்களை அர்ப்பணம் செய்யும் ஆசிரியர்கள்தான் உண்மையான அறங்காவலர்கள்.

அரியாசனங்களும் அறியாச்சனங்களும் சொந்தக் காலில் நிற்கும் திறனை நினைவில் கொண்டது ஆசிரியர்களால்தான். சட்டம் பேசுவோரும், சட்டசபையில் பேசுவோரும் பள்ளிக்கூடங்களில் பயிற்சி பெற்றிராவிட்டால் ஒலிப்பெருக்கி முன் நின்று ஓலம்தான் விட்டுக் கொண்டிருப்பர்.

எலிக்கறி உண்ணும் ஏழையின் பிள்ளையும்வழிப்பறி செய்து கொண்டு வாழ்ந்தவன் குழந்தையும், கணிப்பொறி இயக்கும் காலம் கனிந்துள்ளதென்றால் அதற்குக் காரணம் ஆசிரியர்கள்தானே!

ஸ்கூல் படிப்பைச் சுத்தமாய் மறந்திருந்தால், ஸ்கேல் பிடிக்கும் அழகை அறிந்திருப்பானா அந்தப் பொறியாளன்நாட்டின் முதல் குடிமகனானாலும், மூத்த குடிமகனானாலும் கலைமகனாம் ஆசிரியர்கள் கல்வி போதித்திராவிட்டால் காணாமலே போயிருப்பரே! ஆசிரியர்கள் மட்டும் உபதேசம் உரைத்திராவிட்டால்உலகில் ஒரு தேசமும் உருப்பட்டே இருக்காது. குருத்துவம் மருத்துவம் இவைகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணம் ஆசிரியர்களின் நிபுணத்துவம். ஆகவே ஆசிரியர்கள்தாம் மண்ணுலகின் மகத்துவம்.

படிப்பறிவு கொள்ளாமல் பகுத்தறிவு ஏது? ஓர் அரிஸ்டாட்டில் இல்லாமல் அலெக்சாண்டர் யாரு? இயேசுவும் அல்லாவும் கிருஷ்ணரும் புத்தரும் நல்லொழுக்க வாழ்விற்கு நற்செய்தி போதித்ததால் அவர்களும் தெய்வங்கள் வடிவில் வாழ்ந்த ஆசிரியர்களே!

குடியரசுத்தலைவர் அளவுக்கு உயர்ந்த டாக்டர் கலாம், ஒவ்வொரு மேடையிலும் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கே முதலில் வைக்கிறார் சலாம்! பிஞ்சு வயதில் பின் பெஞ்சில் அமர்த்தி, பென்சில் வரையக் கற்றுக்கொடுத்த நினைவுகளிலிருந்து நீங்க முடியாமல்தான் மற்றவர்கள் கூட மறந்தவர்களாகிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களின் நெஞ்சில் நிறைந்தவர்களாகிறார்கள்.

ஆசிரியர்கள் ஏணிகள்தாம். ஓய்விற்குப்பின் ஏங்கிப்போய்க் கிடக்கிறதே அந்த ஏணிகள்! ஆசிரியர்கள் தோணிகள்தாம். கடைசிக் காலங்களில் கண்ணீர்க் கூடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறதே அந்தத் தோணிகள். பெற்ற பிள்ளைகள் கைகழுவலாம்; கற்றப் பிள்ளைகள் கைவிடலாமா? முன்வந்து, முகம் பார்த்து, மேனாள் மாணவனெல்லாம் ஒருமுறை தன் குரல் காட்டிச் சென்றால், கண்மூடும் முன்னே களிப்படைய மாட்டானாடா உன் ஆசிரியன்!