slider slider slider
நம் வாழ்வு
நம் வாழ்வு இதழின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நம் வாழ்வு
நம் வாழ்வு - நல்லவர்களின் நாடித்துடிப்பு
நம் வாழ்வு
நல்லவர்களின் நாடித்துடிப்பு
அண்மைச் செய்திகள்
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6: 22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21
ஞாயிறு தோழன்
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6: 22-27; கலா 4: 4-7; லூக் 2: 16-21

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புள்ள சகோதர-சகோதரிகளே! 2025-ஆம் ஆண்டு முழுவதும் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறி, 2026-ஆம் ஆண்டு மகிழ்வின் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு உங்களை வாழ்த்தி திருப்பலிக்கு அன்போடு அழைக்கிறோம்அன்னையாம் திரு அவை இன்றுஅன்னை மரியா கடவுளின் தாய்என்ற விழாவைக் கொண்டாடி மகிழ நமக்கு அழைப்புவிடுக்கிறது.

அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர்; அழகு நிறைந்தவர்; இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை; வாழ்வோர் அனைவரின் தாய்; மீட்பு வரலாற்றின் உன்னத உயிர்! இம்மாபெரும் தாயின் அரவணைப்பு ஆண்டு முழுவதும் தொடர அன்னையின் பரிந்துரையை நாடுவோம். இப்புத்தாண்டில் இரட்டிப்பான அருள்வரங்களைப் பெற்று நலமோடு வாழ நம்பிக்கையோடு இறைவனை வேண்டுவோம்.

இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கட்டும். ஆண்டவர் எல்லாத் தீமையினின்றும் நம்மைப் பாதுகாப்பார்; அனைத்து வளங்களையும் நலன்களையும் கொடுத்து நம்முடன் பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு இந்த 2026-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்வோம். அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி மகிழ்வோடும் உற்சாகத்தோடும் இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்மைப் பாதுகாக்கும் ஆண்டவர் இந்தப் புத்தாண்டு முழுவதும்  நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும்தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நலன்களாலும்  நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். வாழ்வு தரும் இறைவனின் ஆசிரைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இந்த உலகில் வாழும் அனைவருமே கடவுளின் குழந்தைகள். ‘அப்பா தந்தையேஎன்று அழைக்கும் உரிமையையும் கடவுள் நமக்குக் கொடுத்துள்ளார். தேவையான நேரத்தில் குறிப்பறிந்து கொடுக்கும் தந்தையின் பேரன்பைச்  சுவைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

மன்றாட்டுகள்.

1. ஆசியளிக்கும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவருக்கும் நல்ல உடல் சுகத்தையும், ஆற்றலோடு பணி செய்வதற்கு மனவலிமையையும் ஞானத்தையும் தந்து காத்திடவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வல்லவரான ஆண்டவரே! இப்புதிய ஆண்டில் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் தேவையை அறிந்து உதவி செய்து ஆசியை வழங்கும் மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! அன்னை மரியை எமது தாயாகக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் எம் தாய் மரியைப் போன்று இறைத்திட்டத்திற்குப் பணிந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்முடன் வாழும் ஆண்டவரே! இப்புத்தாண்டில் நாங்கள் ஒருவர் மற்றவருக்கு ஆசி நிறைந்த மக்களாக வாழவும், எல்லாச் சூழலிலும் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கையில் வளரவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6:22-27; கலா 4:4-7; லூக் 2:16-21 - தரணியின் தன்னிகரில்லா உறவு அன்னை மரியா!
ஞாயிறு மறையுரை
சனவரி 01, 2026, புனித மரியா கடவுளின் தாய் - எண் 6:22-27; கலா 4:4-7; லூக் 2:16-21 - தரணியின் தன்னிகரில்லா உறவு அன்னை மரியா!

2025-ஆம் ஆண்டு நன்றியோடு விடைபெறுகிறது. 2026-ஆம் ஆண்டு கனவுகளோடும் மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் புதிதாய்ப் பிறக்கின்றது. இறைவனுக்கு நன்றிகூறி இப்புதிய ஆண்டை வரவேற்போம்.

ஆண்டின் முதல் நாள் நமக்கு மூன்று முக்கிய விழாக்களை நினைவூட்டுகின்றன. முதலில், அன்னையின் மகிமையை எண்ணிப்பார்த்து, அன்னை மரியாவை ‘ஆண்டவரின் தாய் என்று அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம். இரண்டாவதாக, இன்று ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளையும்; மூன்றாவதாக, உலக அமைதி நாளையும்  நினைவு கூர்கிறோம்.

ஆண்டின் முதல் நாளான இன்று பெற்றோரிடம் பிள்ளைகள் ஆசிபெறுவதுபோல, நாம் நம் விண்ணக அன்னையிடம் ஆசிபெறுவோம். அன்னை மரியா மீட்பு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் உன்னதமான உயிர். மனித மீட்பில் அவரது பங்களிப்பு தலைமுறைதோறும் (லூக் 1:48) நினைவுகூரப்படுகிறது. அன்னை மரியா இறைமகன் இயேசுவின் தாயாக இருப்பதால் அவர் நமக்கும் தாயாகிறார். அவரே நம்பிக்கையின் தாய்! அவர் பராமரிப்பின் தாய். மென்மையின் தாய். உதவிபுரிய எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தாய். அத்தகைய தாய் இப்புதிய ஆண்டில் நமக்கு இறைவனின் ஆசிரையும் அருளையும் பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கையோடு இவ்வாண்டை அன்னையின் கரம்பற்றித் தொடங்குவோம்.

அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள மதிப்பிற்குரிய தலைப்பு அல்லது பட்டம் ‘மரியா-கடவுளின் தாய்.’ அன்னை மரியாவுக்குத் திரு அவை வழங்கியுள்ள ‘மரியா கடவுளின் தாய், ‘மரியா என்றும் கன்னி, ‘மரியா அமல உற்பவி, ‘மரியாவின் விண்ணேற்பு ஆகிய நான்கு மறைக்கோட்பாடுகளிலும் (Dogma) மிகவும் தொன்மையானது ‘மரியா கடவுளின் தாய் என்ற உயரிய பட்டம்தான். அன்னை மரியாவைக் ‘கடவுளின் தாய் என்று அழைப்பது பொருத்தமாக இருக்குமா? அன்னை மரியாவில் மனு உருவெடுத்த இறைமகன், நம்மைப்போல் மனித நிலைகளை எடுத்துக்கொண்டார். அன்னை மரியாவை ‘இறைவனின் தாய் என நாம் அழைக்கும்போது, கடவுள் மனிதகுலத்திற்கு அருகில் உள்ளார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. காலங்களைக் கணித்து, யுகங்களை நொடித்து அவரவர் வினையின் விளைவை அறுக்கச்செய்யும் இறைவன் நம்மோடு இருப்பதற்கென, நம்மைப்போல் உருவெடுத்தார். ‘கடவுள் மனிதரானார் (யோவா 1:14), ‘கடவுள் நம்மோடு (மத் 1:22-23), ‘கடவுள் வடிவில் விளங்கிய அவர்  அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2:6,7) என்பதில்தான் அவரது பேரன்பு வெளிப்பட்டது. எனவே, ‘மரியா கடவுளின் தாய் என்னும் கோட்பாடு ‘இயேசு கிறிஸ்துதாம் உண்மையான கடவுள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

கி.பி. 4-ஆம் நூற்றாண்டிலேயே ‘மரியா கடவுளின் தாய் என ஏற்றுக்கொள்வதில் திரு அவைக்குள் கருத்துமோதல்களும் பிரிவினைகளும் ஏற்பட்டன. இயேசு கடவுளா? மனிதனா? அவரில் மனித- இறைத்தன்மைகள் இருந்தனவா? போன்ற மோதல்கள் தொடர்ந்தன. குறிப்பாக, கான்ஸ்டாண்டி நோபிளின் பேராயராக இருந்த நெஸ்டோரியஸ் என்பவர் ‘மரியா கடவுளின் தாய் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். ‘மனித உயிர் கடவுளை எப்படிப் பெற்றெடுக்க முடியும்? மரியா, இயேசு என்ற மனிதனின் தாய் மட்டுமே. கடவுளின் தாய் அல்லர் என்றார். இவரது இந்தக் கருத்தியல்தான் ‘நெஸ்டோரியனிசம்’ (Nestorianism) என்று அழைக்கப்பட்டது. இந்தச் சிக்கலைத் தீர்க்க கி.பி. 431-இல் எபேசு நகரில் அலெக்சாண்டிரியாவின் ஆயர் சிரில் தலைமையில் ஒன்றுகூடிய பொதுச்சங்கம், ‘மரியா, கடவுளின் தாய்  என உறுதிபட அறிவித்தது. ஆகவே, நாமும் அன்னை மரியாவை ‘நம் தாய் எனப் புகழ்ந்து பாடி இப்புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

இன்றைய வழிபாட்டில் மிக முக்கியமாக, நாம் ஆண்டவருடைய பிறப்பின் எட்டாம் நாளைக் கொண்டாடுகிறோம். இந்த நாள் இறைவனின் தாய் இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நாளாக, அதாவது, மோசேவின் சட்டப்படி கோவிலுக்கு எடுத்துச் சென்று விருத்தசேதனம் செய்த நாளாக, குழந்தைக்கு வானதூதர் அறிவித்தபடியே ‘இயேசு என்று பெயரிட்டு மகிழ்ந்த நாளாக இருக்கிறது. இயேசு என்ற பெயருக்கு ‘கடவுள் நம்மை மீட்கின்றார், நமக்கு உதவுகின்றார், நம்மை வாழ்விக்கின்றார், நம்மோடு உடனிருக்கின்றார் என்று பொருள். இயேசு எனும் பெயர் வல்லமையுள்ள பெயர். மண்ணகமும் விண்ணகமும் மண்டியிடும் பெயர். இப்பெயர் இயேசுவே இறைச்சாயல், ஒவ்வொருவருக்கும் அனைவருக்குமான ஆசிர் மற்றும் உலகின் அமைதி என்ற இறைவெளிப்பாட்டின் நிறைவாகும். எனவே, இயேசு என்ற பெயர், அவர் வாக்களித்த அமைதி (யோவா 14:27) நமக்கு உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இன்று நம் உள்ளங்களில் விதைக்கிறது.

மூன்றாவதாக, இந்த நாளை உலக அமைதி நாளாகக் கொண்டாட திரு அவை நம்மைப் பணிக்கின்றது. 1968-ஆம் ஆண்டில் புனித திருத்தந்தை 6-ஆம் பவுல் சனவரி முதல் நாளில் உலக அமைதி நாள் சிறப்பிக்கப்பட வேண்டுமென அழைப்புவிடுத்தார் (எண் 5).  இறைவன் வழங்கிய இந்தப் புதிய ஆண்டின் முதல் நாளான இன்று நமக்குத் தரப்பட்டுள்ள முதல் வாசகம், இறைவன் மோசேவுக்கு வழங்கிய ஆசி, ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாகத் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து நமக்கும் வருகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது. “ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!\" (எண் 6:25,26). இன்று ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் இறைவன் நிறைவான ஆசியையும் அருளையும் பொழிகிறார். இறையமைதியே இறைவன் நமக்கு வழங்கும் ஆசி. இந்த ஆசியை முழுமையாக மனிதர்களுக்குப் பகிர்ந்தளிப்பதே நமது முக்கியப் பணியாகும்.

இவ்வாண்டு, திருத்தந்தை லியோ “உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக; ஆயுதங்களற்ற அமைதியை நோக்கி...” (யோவா 20:19) என்பதை உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளாகத் தந்துள்ளார். அவர் தன்னுடைய செய்தியில், வன்முறை மற்றும் போரினை நிராகரித்து, அன்பு மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியைத் தழுவ உலக அமைதி நாளானது மனிதகுலத்தை அழைக்கிறது என்றும், இந்த அமைதியானது ஆயுதங்களற்ற அமைதியாக இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளார். நல்லிணக்கம், நம்பிக்கை, அக்கறை, பரிவு மற்றும் பற்றுறுதியை உருவாக்கும் திறன் கொண்டதாக அமைதி இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதி என்பது இறைவனின் கொடை. இயேசு நமக்கு வழங்கிய பிறரன்பின் முதற்கனி அமைதி. அதுவே இறைவனுடனான நம் ஒப்புரவு அமைதி. வன்முறை மற்றும் தீமைகளின் விதையைவிட வலிமை நிறைந்தவை. உலக அமைதித் திருநாளான இன்று அன்னை மரியின் திரு உருவின் முன்னால், அமைதியின் கொடைக்கான பரிந்துரையை வேண்டுவோம். அன்னை மரியாவின் கைகளில் இருக்கும் இயேசு பாலனைப்போல், நாமும் இந்த அன்னையின் கைகளில் குழந்தையாக உள்ளோம். இந்த அன்னையிடம் நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும் ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும் அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும் அவரிடம் ஒப்படைப்போம். நேர்மறை எண்ணங்களுடன் நன்மைகளை நினைத்து, நன்மைகளையே ஆற்றுவோம்.

இந்த ஆண்டில் நமது எண்ணங்கள், நமது சொற்கள், நமது செயல்கள், நமது வாழ்வுமுறை இறைவனுக்குத் தகுதியானவைகளாக மாறிட... இறைவனுடைய ஆசியும் அருளும், நம் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியம், நிறைவான மகிழ்ச்சி, உழைப்புக்கேற்ற ஊதியம், மன அமைதி, நிபந்தனையற்ற அன்பு, உண்மையான உறவுகள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைத்திட நாம் ஒருவர் மற்றவருக்காக வேண்டிக்கொள்வோம். இனிமையும் பராமரிக்கும் தன்மையும் கொண்ட இத்தாய், இறைவனிடமிருந்து மனிதகுலம் முழுமைக்கும் ஆசிரைப் பெற்றுத்தருவாராக!

இறுதியாக, நம் இறைவன் இரக்கமும் கனிவும் உடையவர். வாக்கு மாறாதவர். முக்காலமும் கடந்து நம்மை அன்பு செய்பவர். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்துக் கொடைகளுக்காக நன்றிகூறுவோம். இயேசுவின் ஆதரவும், அவரது அன்பும் நமக்கு நிறைவாக உண்டு என்ற நம்பிக்கையோடு இந்தப் புதிய ஆண்டை எதிர்கொள்வோம். இறைவனின் தாயும், நம் தாயுமான அன்னை மரியா நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் நாடுகளுக்கிடையிலும், அமைதி என்ற கொடையை இறைவனிடமிருந்து பெற்றுத்தருவாராக!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23
ஞாயிறு தோழன்
டிசம்பர் 28, 2025, திருக்குடும்ப விழா - சீஞா 3:2-7,12-14; கொலோ 3:12-21; மத் 2:13-15,19-23

திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பும் அருளும், தூய கன்னி மரியின் எளிமையும் தாழ்ச்சியும், புனித யோசேப்பின் உழைப்பும் நேர்மையும் உங்கள் குடும்பங்களிலும் ஒளிர்ந்திட வாழ்த்தி, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு வாஞ்சையோடு அழைக்கிறோம்.

குடும்பம் உறவுகளின் இருப்பிடம், அன்பின் சங்கமம், நகைச்சுவை மைதானம், அறிவுப்பள்ளி, இன்பத்தோட்டம், மகிழ்ச்சியின் ஊற்று, நம்பிக்கையின் விளைநிலம், பண்புகளைக் கட்டியெழுப்பும் பல்கலைக்கழகம். குடும்பம் என்ற குட்டித் திரு அவையே திரு அவைக்கும் நாட்டிற்கும் அடித்தளமாக உள்ளதுதிருக்குடும்பத்தில் அன்னை மரியும் புனித யோசேப்பும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள், தனிமை அனைத்திலும் இறைவனின் திட்டத்தை அறிந்து அமைதியோடு வாழ்ந்தார்கள். தன்னலமற்ற அன்பையும் தன்னிகரற்ற அமைதியையும் திருக்குடும்பம் உலகில் வாழ்ந்துகாட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தின் புனிதம் காத்தது. இறுதிவரை கடவுளோடு ஒன்றித்திருந்தது. எனவேதான் திருக்குடும்பம் சிறந்த முன்மாதிரியான குடும்பம் என்று அழைக்கப்படுகிறது

இன்றைய நாளில் திருக்குடும்பத்திடம் விளங்கிய புனிதமான அர்ப்பணமும் முழுமையான தியாகமும் ஆழமான புரிதலும் நிறைவான அன்பும் நமது குடும்பங்களிலும் நிலைத்திருக்க வரம் வேண்டி இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தந்தை, தாய் மற்றும் பிள்ளைகளின் கடமையைப் பற்றி முதல் வாசகம் தெளிவாகக் கூறுகிறது. பெற்றோரைப் பேணிக்காப்பது நமது கடமை. பெற்றோரை மதிக்காமலும் பாதுகாக்காமலும் இருந்தால், நாம் ஆசியை இழந்துவிடுவோம் என்று கூறி பண்போடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய ஆவியின் கனிகளான இரக்கம், கனிவு, பொறுமை மற்றும் இயேசுவின் நற்பண்புகளான அன்பு, பரிவு, நல்லெண்ணம், மனத்தாழ்மை, ஆகியவற்றால் நம்மை அணிசெய்து, குடும்பத்திலும் சமூகத்திலும் புதிய மனிதர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! நீர் உருவாக்கிய திரு அவை என்ற குடும்பத்தின்  உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் திரு அவை எமக்குக் காட்டுகின்ற நெறிகளில் வாழவும், எங்கள் திரு அவைத் தலைவர்களோடு இணைந்து செயல்படவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எமது குடும்பங்களில் அன்பு, அமைதி, பொறுமை போன்ற பண்புளைக் கடைப்பிடித்து, குடும்பம் என்ற குட்டித் திரு அவையைப்  பேணிப்பாதுகாக்கவும், வயது முதிர்ந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் தேவையான நல்மனதை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எமது குடும்பத்தில் பலவிதமான நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நற்சுகத்தைத் தந்து காத்திடவும், புரிதல் இல்லாமல் பிரிந்திருக்கும் குடும்பங்களில் அமைதி ஏற்படவும், குடும்பங்கள் சிறக்க தேவையான ஆசிகளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் பெற்றோருக்கும், வயதில் மூத்தோருக்கும் மதிப்புக் கொடுத்து வாழவும், மெய்ஞானமாகிய கிறிஸ்துவை அறிவதிலும் அன்பு செய்வதிலும் ஆர்வம் கொள்ளவும் தேவையான மனப்பக்குவத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.